ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –95-உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து – இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு வேண்டுவது எல்லாம் தாமே உண்டாக்கி
உஜ்ஜீவிப்பித்து விடுவர் என்றார் கீழ்
இப்படி இருக்கிறவருடைய ஜ்ஞான சக்தியாதிகளை அனுசந்தித்த வாறே -இந்த லோகத்தில் உள்ளார்படி யன்றிக்கே –
வ்யாவ்ருத்தமாய் இருக்கையாலே –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவர் பரார்தமாக சம்சாரத்தில் அவதரித்தாராகவே நினைத்து அருளிச் செய்கிறார் -இதில் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரித்தவர்களுக்கு உத்தாரண ஹேதுவான உபாய விசேஷத்தையும் –
அத்தாலே உண்டாக கடவ -ஸ்ரீ பகவத் ப்ரீதி ரூப சம்பத்தையும் -ப்ராப்தி பிரதி பந்தகமான பாப விமோசனத்தையும் –
தத் அனந்தர பாவியான பரம பத ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுப்பாரே யாகிலும் –
நான் அவருடைய கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒன்றை விரும்பி அனுபவியேன் -என்று அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டிலே –
இப்பாட்டிலே –
சகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமியாய் -அவர்களுடைய சகல பிரவர்த்தி நிவ்ருத்திகளையும் பண்ணிக் கொடுக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
இவரைப் போலே ஆஸ்ரித வ்யாமுக்தன் அல்லன் என்னும் படியாயும் –
ஞான வைராக்யாதிகளாலே சம்சாரிகளைக் காட்டில் அத்யந்த வ்யாவ்ர்த்தர் என்னும் படியாயும் இவர் தான் இருக்கையாலே –
ஸ்ரீ பரம பதத்தின் நின்றும் அந்த பரம ப்ராப்யத்தை எல்லார்க்கும் கொடுப்பதாக அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரில் ஒருவர் பரார்த்தமாக
இந்த லோகத்தில் -ஸ்ரீ எம்பெருமானாராய் அவதரித்து -சர்வ காலமும் வேதார்த்தத்தை ப்ரவர்த்திப்பித்தார் என்று அருளிச் செய்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தம்மை சார்ந்தவர்கட்கு உய்வுற வேண்டுமாவை யாவும் தானே உண்டு பண்ணி உதவி ஸ்ரீ எம்பெருமானார் உய்விப்பதை கூறினார் கீழே .
இங்கனம் உய்விக்கும் அவருடைய அறிவாற்றல்களைக் கண்டு உலகத்தாருக்கு உள்ளவை போன்றவைகள் அல்ல இவை –
தனிப்பட்டவையாய் விளங்குகின்றன -ஆதலின் இவர் இவ் உலகத்தவர் அல்லர் .
சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய சூரிகளில் ஒருவர் –வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம்
செய்தவராய் இருத்தல் வேண்டும் –என்று தீர்மானித்து -அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –
இந்தப் பாசுரத்திலே –

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

பத உரை –
உள் நின்று -அந்தர்யாமியாய் -உள்ளே இருந்து
உயிர்களுக்கு -ஆத்மாக்களுக்கு
உற்றனவே செய்து -தகுந்தவைகலையே -உய்வதற்கு உறுப்பாக -பண்ணி
அவர்க்கு உயவே பண்ணும் -அந்த ஆத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தையே செய்யா நிற்கும்
பரனும் -ஸ்ரீ பரம புருஷனும்
பரிவு இலன் ஆம்படி -ஸ்ரீ எம்பெருமானாரின் நிலையினை நினைத்துப் பார்க்கும் போது -உயிர்களிடம்
அன்புடையன் அல்லன் என்று சொல்லலாம் படி
பல் உயிர் க்கும் -எல்லா ஆத்மாக்களுக்கும்
வீடு -மோஷத்தை
அளிப்பான் -கொடுப்பதற்காக
எம் இராமானுசன் -எங்கள் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று -பரம ஆகாசமான ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும்
மண்ணின் தலத்து -பூமியின் பிரதேசத்திலே
உதித்து -அவதாரம் செய்து
உய மறை நாலும் -உஜ்ஜீவன சாஸ்த்ரமான நான்கு வேதங்களையும்
வளர்தனன் -வளரும்படி செய்து அருளினார் .

வியாக்யானம்
யஆத்மா ந மந்தரோயமயதி -ப்ருஹ -என்கிறபடியே சத்தா நிர்வாஹர்த்தமாக உள்ளே நின்று இவ்வாத்மாக்கள் யாதொரு வழியாலே –
உஜ்ஜீவிக்கும் -அதுக்கு ஈடான க்ருஷிகளையே பண்ணி அவர்களுக்கு -உஜ்ஜீவனத்தையே பண்ணா நின்றுள்ள –
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதனான சர்வ ஸ்மாத் பரனும் –
ஆத்மாக்கள் அளவிலே இவரோபாதி ஸ்நேஹமுடையவன் அல்லன் -என்னும்படியாக -சகல ஆத்மாக்களுக்கும் –
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -தாடீபஞ்சகம் -என்கிற படியே
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை கொடுத்து அருளுவதாக நம்முடைய நாதரான ஸ்ரீ எம்பெருமானார் –
நாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே
விண்ணின் தலையான ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் பூதலத்திலே தக்கத தோஷ ஸ்பர்சம் அற அவதரித்து –
சர்வ உஜ்ஜீவன சாஸ்த்ரமான -ருகாதி சதுர் வேதத்தையும் அசங்குசிதமாக நடத்தி யருளினார் .
இப்படிச் செய்து அருளுவதே! -என்று கருத்து

உற்றனவே செய்து -என்றது தக்கனவே செய்து என்றபடி
பரிவு –ச்நேஹம் -பஷபாதகமாகவுமாம் .
பல்லுயிர்க்கும்–புல்லுயிர்க்கும்–என்று பாடமானாலும் பொருள் ஒக்கும் .

இவர் பரிவுடன் ஒப்பிட்டால் ஸ்ரீ எம்பெருமானுக்கும் ஒப்பாகாதே-அதி மானுஷ சேஷ்டிதங்கள் -மோக்ஷ ஏக ஹேதுவாக
இந்த மண்ணின் தோஷம் தட்டாமல் -செய்த உபகாரங்கள் -வேதம் வளர்த்து -இதுவே -தர்மம் சமஸ்தானம் –
ஆத்ம யதாம்யா ஞானம் வந்து ருசி பிறந்து -கர்மங்களை போக்க பிரபத்தி பண்ண வைத்து -இத்யாதி
அவன் உள் நின்று -இவர் வெளியில் பயம் இல்லாமல் -இரா மடம் ஊட்டுவரைப் போலே -அவன்–
இவரோ சேதனருடைய ஸ்வா தந்த்ரயதிற்கு அஞ்சாது கண் காண வந்து உய்விக்கிறார் .
அவனோ பரன் -அந்நியன் -இவரோ எம் ஸ்ரீ இராமானுசன் –அவன் சர்வ வியாபகம் -உள் நின்று -அதிசயம் இல்லையே –
இவரோ விண்ணின் தலை நின்று உதித்து –விலை பால் போல அவன் பரிவு தாய் போல் ஸ்ரீ ஸ்வாமி பரிவு-
அது தத்வ வசனம் இது தத்வ தரிசினி வாக்கியம்-அன்னமாய் அற மறை நூல் பயந்தான்-கொடுத்தான் அவன்– வளர்த்தார் ஸ்ரீ ஸ்வாமி-
பெற்ற தாய் அவன் வளர்த்த இதத் தாய் ஸ்ரீ ஸ்வாமி –
பல் உயிர்– புல் உயிர் -பாட பேதம்-

உள் நின்று –
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்த்தா ஜநாநாம் சர்வாத்மா -என்றும் –
அந்த பிரவிஷ்டம் கர்த்தாரமேதம் – என்றும் –
அந்தரப் பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்திதத-என்றும் –
ய ஆத்ம நிதிஷ்டன் ய ஆத்மா ந மந்தரோயமயதி – என்றும் –
சர்வஸ்யசாஹம் ஹ்ர்தி சந்நிவிஷ்ட-என்றும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் -என்றும் –
பரந்த தண் பரவையுள்-நீர் தொறும் பரந்து உளன் -என்றும் -சொல்லுகிறபடியே
அந்தர்யாமியாய் -சத்தா நிர்வாஹனாய் கொண்டு-இருந்து –
அநாதி மாயாயா ஸூப் தோயதா -என்கிறபடியே –
அநாதி அசித் சம்பந்த நிபந்தனமான அஞ்ஞான- அந்தகாரத்திலே -தத்வ ஹித புருஷார்த்த ஜ்ஞான சூன்யரான
சேதனருக்கு -அத்தை அறிவிக்கைக்காக
அருகே வந்து கண் காண நிற்கில் -ஞான ஏக ஆகாரத்தாலே உன்னோடு நானும் துல்யன் என்று ஆணை இட்டு
தள்ளி விடுவார்களோ என்று – அதி சங்கை பண்ணி -இரா மடம் ஊட்டுவாரைப் போலே –அவர்களுக்கு தெரியாதபடி
சத்தையை நோக்குவதற்காக உள்ளே புகுந்து நின்று -என்றபடி –

உயிர்கட்கு உற்றனவே செய்து –
ஸ்வேதர சமஸ்த பிராணிகளுக்கும் -அவரவர் விதி வழி அடைய நின்றனரே – என்கிறபடியே –
தத்தத் பூர்வ கர்ம அனுகுணமாக பிரவர்த்தி நிவர்த்திகளை பண்ணிக் கொடுத்து –
அன்றிக்கே
ஸ்வரூப மானவற்றை க்ரம க்ரமேன விரகாலே ஏறிட்டு தத் அனுரூபமாய் இருந்துள்ள ப்ரவர்த்திகளிலே மூட்டுவித்து என்னுதல்-
இவ் ஆத்மாக்கள் யாதொரு வழியால் உஜ்ஜீவிப்பார்களோ அதற்க்கு ஈடான க்ர்ஷிகளைப் பண்ணி என்னுதல் –

உற்றனவே செய்து -என்றது தக்கனவே செய்து என்றபடி –
பவந்தி பாவ பூதானாம் மத்த ஏவ பிரதக்விதா -என்றான் இறே –அவர்க்கு உய்யவே பண்ணும் பரனே –
த்ரிபா தூர்த்த்வ உதைத் புருஷ – என்றும் –
தமஸ பரஸ்தாத் -என்றும் சொல்லுகிறபடியே –
சர்வோத்தமான பரம புருஷார்த்தத்தை பிராபிக்கையாகிற உச்சாராயத்தை பண்ணா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
பதிம் விச்வச்ய – என்றும் –
யஸ்மாத் பரன் நாப ரமஸ்தி கிஞ் சித் -என்றும்
அதயததாபர -என்கிறபடியே
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவர்த்தி பேதகனாய்-சர்வ ஸ்மாத் பரனான –ஸ்ரீ சர்வேஸ்வரனும்-

உண்ணின்று –பரிவிலனாம்படி –
பரன் உள் நின்று உற்றனவே செய்து –உயவே பண்ணுகிறான் -என்கை –
படைத்தவற்றுள் அநு பிரவேசம் செய்து -உட் புக்கு -சத்தும் -ஆத்மாவும் -த்யத்தும் அசேதனப் பொருள்களும் –ஆனான என்றபடி –
ஆத்மாவை ஒரு பொருளாக நினைக்கும் படி செய்வதற்காக அதன் உட் புக்கு நிற்கிறான் ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இதனையே அந்தர்யாமித்வம் -என்கிறோம் –அந்த அந்தர்யாமித்வத்தை உண்ணின்று -என்கிறார் .
உயிர்களுக்கு உள் நின்று -என்கை-
ஆத்மாவை உள்ளே இருப்பவனே நியமிக்கிறான் -என்னும் சுருதியை பின் பற்றி இங்கனம் கூறுகிறார்

பரிவிலனாம்படி -சேதன சம்ரஷணம் பண்ணும் அளவில்
இவ் எம்பெருமானாரோ பாதி சிநேகத்தை-உடையவன் அல்லன் என்னும்படியாக –
பரிவு —ஸ்நேஹம் -பஷபாதம் -என்னுதல் -இலன் -இல்லாதவன் –
துர்லபம் உபாசதே -என்றும்
ஷிபாமி -ந ஷமாமி -என்றும் –
சித்திர் பவதி வாநேதிசம் சயோசித்த சேவிதாம் –
என்றும் சொல்லுகிறபடியே-சர்வேஸ்வரன் துர்லபனாய் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவானவனாய் –
பலம் சித்திக்குமோ சித்தியாது ஒழியுமோ என்று சந்தேக்கிக்க வேண்டியபடி இருக்கையாலும் –

இவர் சுலபம் ஸ்வ குரும்-என்றும் –
ந சம்சயச்து தத் பக்த பரிசர்யாரதாத்மனாம் -என்றும் சொல்லுகிறபடியே
சுலபராய் -அனுக்ரஹ சீலராய் -நிஸ் சம்சையை சபல ப்ரதராய் இருக்கையாலும்
இருவரையும் பார்க்கும் அளவில் இவரே அவனைக் காட்டிலும் சேதனர் பக்கலில் அதி ஸ்நேஹி என்னும் இடம் தோற்றுகிறது இறே

உயிர்களுக்கு உற்றனவே செய்து –
ஆத்மா வர்க்கங்கள் தம் தமது கர்மங்களுக்கு ஏற்ப -எந்நிலையில் இருந்தாலும் -அந்நிலைக்கு தக்கவாறு –
எதனைச் செய்தால் அவர்கள் உய்வதற்கு வழி ஏற்படுமோ -அதனை பரன் -கைக் கொண்டு முயலுகிறான் -என்கை-
உற்றன -தக்கன
ஆத்மா வர்க்கங்கள் தீய செயல்களில் இறங்கினால் தடுக்காது வாளா இருந்து -அதனின் நின்றும் மீட்க மாட்டாது -அனுமதித்து –
மீட்பதற்கு உரிய தறுவாய் வாய்த்த போது –
என் ஊரைச் சொன்னாய் –
பேரைச் சொன்னாய் -என்பது போல இவன் அறியாது செய்யுமவற்றை நற்செயலாக கற்பித்து
அவற்றை மேலும் மேலும் பெருக்கி உய்விற்கு வழி ஏற்படும்படி-ஸ்ரீ பரன் முயலுகிறான் -என்பது கருத்தாகும் .

உயவே பண்ணும் பரனும் பரிவிலனாம் படி –
ஸ்ரீ பரன் இவ்விதம் உயிர்களுக்கு உய்வினையே பண்ணா நிற்கும் . பரன் -யாவரிலும் மேம்பட்டவன்
பக்தர் முக்தர் நித்யர் -என்னும் மூ வகைப் பட்ட சேதனர்களுக்கும்-
சுத்த சத்வம் மிச்ர சத்வம் சத்வ சூன்யம் – என்னும் மூ வகை பட்ட அசேதன பொருள்களுக்கும்
ஸ்வரூபம் -இருத்தல் -செயல் யாவும் தன வசத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் பரன் -என்கை –

அவன் உட் புக்கு நியமிப்பவனாய் இருந்தாலும் தன் நியமன சக்தியாலே -அவர்களை உய்வித்தல் சுவைப் படாது –
உய்வு –மோஷம் –
புருஷார்த்தமாக வேணுமே -விரும்பி பெறுவது அன்றோ புருஷார்த்தம்
ஆகவே –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -என்றபடி –
சிறிது சிறிதாக அவர்கள் புத்தியை திருத்தி
உய்யும் வழிக்கு இசையும் படியாக செய்து -மெல்ல மெல்ல படிப் படியாக தான் திருத்தி
பரனும் உய்விக்க வேண்டி உள்ளது -என்னும் கருத்துடன் –பரனும் உற்றனவே செய்து உயவே பண்ணும் -என்கிறார் ..

இனி –பரனும் -என்னுமிடத்து –
உம்மை -அன்புடைமையில் சிறப்பை காட்டலுமாம்-
நெருங்குதற்கும் அருவருக்கத் தக்க -குற்றங்கள் மலிந்த உயிருக்குள் புகுந்து -நிரந்தரமாய் நியமித்துக் கொண்டு
அருவருப்பின்றி ஆனந்தமாய் எழுந்து அருளி இருப்பது -அன்பின் முதிர்வினாலாகிய வாத்ச்யத்தால் அன்றோ –
உயிர் இனங்கள் எக்கேடு கெட்டாயினும் தொலையும் படி யாக விட மாட்டாது –
அந்தர்யாமியாக அவற்றுக்கு உற்றனவே செய்து உயவே பண்ணுவதும் அன்பினாலாய செயல் அன்றோ –

அத்தகைய பரிவு வாய்ந்தவனும் ஸ்ரீ எம்பெருமானோரோடு சேர்த்து பார்க்கும் அளவில்
ஸ்ரீ எம்பெருமானாரது பரிவு எங்கே-பரந்து பரிவு எங்கே –
அந்தப் பரிவுக்கு ஸ்ரீ பரன் பரிவு அற்பமாய் -இல்லை என்னலாம்படி உள்ளது என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானார் பரிவுடைமையை விளக்கு காட்டுகிறார் –பல்லுயிர்க்கும் -என்று தொடங்கி –

விண்ணில் தலை நின்று –
நாகஸ்யப்ரஷ்டே -என்கிறபடியே ஸ்வர்க்காதி லோகங்களுக்கு எல்லாம் மேலாய் –
பரமாகாச சப்த வாச்யமான ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் –

பல் உயிர்க்கும் வீடு அளிப்பான் –
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ ராமானுஜோ விஜயதே எதிராஜராஜ -என்கிறபடியே –
சகல ஆத்மாக்களுக்கும் -அந்தமில் பேரின்பம் ஆகையாலே பரம புருஷார்த்தமான மோஷத்தை கொடுத்து அருளுவதாக –

புல் உயிர்க்கு– என்ற பாடமான போது-
புல் உயிர் என்றது ஷூத்ரர் -என்றபடி –

எம் இராமானுசன் –
எங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானார் –

மண்ணின் தலத்து உதித்து –
பிரக்ரதிம் ச்வாமதிஷ்டாய சம்பவாமி -என்றால் போலே அவதரிப்பது பூமியிலே ஆகிலும் –
தத்கததோஷ ரசம் அச்பர்ஷ்டராய் அஜகத ச்வாபராய் – கொண்டு அவதரித்தார் காணும்
மண்ணின் தலத்து உதித்து இருள் தரும் மா ஞாலமான இந்த பூமியிலே இதனுடைய தோஷம் ஒன்றும் தட்டாதபடி திருவவதரித்து –

மறை நாலும் வளர்த்தனனே –
ரிசோ யஜும் ஷி சாமானி ததைவாதர்வணா நிச – என்கிறபடியே ரிகாதி பேதேன நாலு வகைப்பட்டு இருக்கிற வேதத்தையும்
லோகம் எல்லாம் வியாபித்து அசங்குசிதமாக நடத்தி யருளினார் –
சிரந்த ந சரஸ்வதி சிகுர பந்து சை ரந்தரிகா – என்னும்படியான
ஸ்ரீ ஸூக்திகளாலே நிர்மித்து அருளின ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த வியாக்யானம் பண்ணிக் கொண்டே இந்த
வேத சதுஷ்டத்தையும் -தடையற நடப்பித்து அருளினார் என்றபடி –

இத்தால் –ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாப நாச்சார்யா -உபய -வேதாந்தாசார்யர் -என்றது ஆய்த்து-

பல்லுயிர்க்கும் –வளர்த்தனான் –
பலவகைப் பட்ட உயிர் இனங்கள் உள்ளே அந்தர்யாமியாய் மறைந்து இருந்து அவர்களுக்கு
தக்கவைகளைப் பண்ணி உய்விக்கிறான் –ஸ்ரீ பரன் –
ஸ்ரீ எம்பெருமானாரோ பல்வகைப் பட்ட உயிர் களுக்கு எல்லாம் நேரடியாக வீடு அளிப்பதற்காகவே
விண்ணகத்தின் நின்றும் இம் மண்அகத்துக்கு நேரே வந்தருளினார் –
ஸ்ரீ பரன் எங்கும் வியாபித்து இருப்பவன் ஆதலின் அவனுக்கு வரும் அருமை இல்லை –
நித்ய ஸூரிகளில் ஒருவராகிய இவரோ –குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை
இகழ்ந்து உயிர் களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்
இதனாலும் ஸ்ரீ பரனை விட இவரது அன்புடைமை யின் சிறப்பு விளங்குகிறது .
ஸ்ரீ பரன் கண் காண நிற்கில் ஆணை யிட்டு விலக்குவார்கள் என்று – அஞ்சி அந்தர்யாமியாய் தன்னை ஒளித்து நிற்கிறான் –
இவரோ சேதனருடைய ஸ்வா தந்த்ரயதிற்கு அஞ்சாது கண் காண வந்து உய்விக்கிறார் .
இதனாலும் இவருடைய அன்புடைமையின் சிறப்பு விளங்குகிறது –
சலித்தான நலம் -அன்பு -உடையார்க்கு அச்சம் தோன்றாதன்றோ –
பரிவு உடையவன் ஆயினும் ஸ்ரீ பரன் ஆகையாலே -நேரே நிற்க அஞ்சி ஒளிந்து உள் நின்றான் .
இப்பொழுது பரன் என்பதற்கு அந்யன் என்பதும் பொருள்
இவர் அந்யர் அல்லாது உயிர் இனங்களை சேர்ந்தவர் ஆதலின் நேரே நிற்க அஞ்சாது -வந்து நிற்கிறார் .
இந்தக் கருத்து -பரன் -அந்யன் –
எம்மிராமானுசன்-என்னும் சொல் அமைப்பிலே மிளிருவதைக் கண்டு களிக்க .-

விண்ணுளாரிலே ஒருவர் இம் மண்ணிடை வரினும் இதன் குற்றம் அவரைப் பற்றாது என்பது தோன்ற –
பிறந்த என்னாது –உதித்து -என்றார் .
கிழக்குத் திசையில் சூர்யன் உதிக்கும் போது அத்திசைக்கும் சூர்யனுக்கும் எங்கனம் யாதொரு தொடர்பும்
உண்மையில் இல்லையோ -அங்கனம் இம் மண்ணின் தலத்திற்கும்-அவருக்கும் யாதொரு தொடர்பும்
உண்மையில் இல்லை என்றது ஆயிற்று –

தோஷம் தட்டாதவர் ஸ்ரீ ஸ்வாமி உதித்தாலும்/ஸ்ரீ ராம திவாகரன் ஸ்ரீ அச்சுத பானு ஸ்ரீ வகுளாபர திவாகரன் ஸ்ரீ ராமானுஜ திவாகரன்-

வீடளிப்பான் உதித்தவர் –
நம்மைப் போல் கன்ம பலம் துய்ப்பான் பிறந்தவர் அல்லர் அவர் என்பது கருத்து .
உயிர்களின் உள்ளே நிற்றலால் ஸ்ரீ பரனுடைய வாத்சல்யமும் –
உயிர்களின் குற்றங்கள் தன்பால் ஓட்ட ஒண்ணாது நிற்றலால் அவனுடைய ஆற்றல் உடைமையும் தோன்றுகின்றன –
உயிர்களின் இடையே தோள் தீண்டி நிலவுலகிலே கால் பாவி நிற்றலால் அளவு கடந்த வாத்சல்யமும்
அங்கனம் நின்றும் நிலத்தின் குற்றங்கள் தன்பால் ஓட்ட ஒண்ணாது நிற்றலால்
அளவிறந்த ஆற்றலுடைமையும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் தோன்றுகின்றன .
உயிர்கள் கூடவே அந்தர்யாமியாய் இருக்கும் ஸ்ரீ பரன் உய்விப்பதற்கும் –
பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் பட்ட ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் வந்து நேரே உதித்தவர் உய்விப்பதற்கும் –
எவ்வளவு வாசி பாரீர் –

உய் மறை நாளும் –வளர்த்தனன்
உயிர்கள் எல்லாம் உய்கிற சாஸ்திரங்கள் நான்கு வேதங்களாகும்
அவைகளின் பொருளை குறிப்பிட்ட சிலரே அறிந்து உய்ந்தனர் என்று இல்லாமல் நால் வேதப் பொருளையும்
நானிலத்தோர் அனைவரும் அறியும்படி உபதேசித்து – மறை நான்கும் வளர்ச்சி யுறும்படி செய்தார் -என்றபடி
சிலர் அளவில் பயன் படின் மறை சுருங்கி நின்றதாகும் – அனைவர்க்கும் பயன்படினோ அது வளர்ச்சி உற்றதாம்
இதனாலும் பரன் உய்விப்பதனினும் ஸ்ரீ எம்பெருமானார் உய்விப்பதன் சிறப்பு காட்டப் படுகிறது

அந்தர்யாமி வேதப் பொருளை உபதேசித்து உய்விப்பதற்கு வழியே இல்லை
இனி வலுவிலே ஒருவனுக்கு சாஸ்திர ஞானம் உண்டாகும்படி செய்தாலும் எல்லாருக்கும் அந்த ஞானம் உண்டாக வழி இல்லையே –
ஸ்ரீ எம்பெருமானாரோ தமது அறிவின்-வீறுடைமையால் மண்ணின் தலத்தில் உள்ளோர் எல்லார்க்கும் சொல்லி -எல்லோருக்கும்
சாஸ்திர ஞானத்தை உண்டாக்கி மறை நான்கையும் வளர்த்து உய்வித்து அருளுகிறார் -என்க

மண்ணின் தலத்து உதித்த -என்றதில்-மண்ணின் தோஷம் தட்டாத ஆற்றல் உடைமையும் –
உய் மறை நாளும் வளர்த்தனன் – என்றதில் வளர்க்க வல்ல அறிவுடைமையும் தோன்றுகின்றன –

இனி அந்தர்யாமியாய் இருந்து சாஸ்திர ஞானத்தை பரப்ப முடியா விடினும்
ஸ்ரீ பரன் -ஸ்ரீ எம்பெருமானார் போலே அவதரித்து பரப்ப முடியும் அன்றோ -எனின் அதுவும் ஆகாது என்க –

அன்னமாய் அவதரித்து அன்று அங்கு அருமறை பயந்தானே அன்றி வளர்த்தான் அல்லன்-
இனி ஸ்ரீ கண்ணனாக அவதரித்து ஸ்ரீ கீதை செப்பி மறை நாளும் வளர்த்திலனோ எனில் -அன்று -என்க
நான் மறைகளின் பொருள் எளிதில் எல்லோருக்கும் விளங்காதது போலே
ஸ்ரீ கீதையின் பொருளும் எல்லோருக்கும் எளிதில் விளங்காததாகவே யாயிற்று –
அவன் உபநிடதங்களின் பொருளை சாரமாக எடுத்து சொல்ல வேணும் என்று நினைத்து சொன்னானாலும் அவன் நினைப்பு
நிறை வேற வில்லையே-
ஆசை இருக்கலாம் அவனுக்கு – அதனை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் வேண்டாமா –
ஸ்ரீ எம்பெருமானாருக்குப் போலே விளங்கச் சொல்லும் வல்லமை வாய்ப்பது அரிது அன்றோ –
ஆதல் பற்றியே ஸ்ரீ கீதையினைப் பரிஷ்கரித்து அதன் பொருளை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய
ஸ்ரீ கீதா பாஷ்யம் -அருளிச் செய்வதற்கு என்றே ஸ்ரீ எம்பெருமானார் பாரினில் அவதரிக்க வேண்டியதாயிற்று .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ கீதா பாஷ்யத்தை
பரபணிதி பரிஷ்கார வ்ருத்யாசமேதம் -ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயம் -2 -22 – – என்று
பர -ஸ்ரீ கண்ணனுடைய வாக்காகிய ஸ்ரீ கீதைக்கு பரிஷ்காரம் -செம்மை படுத்துதல் -செய்யும் செயலோடு கூடியது -என்று
ஸ்ரீ கீதா பாஷ்யத்தை குறிப்பிட்டு இருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது .
இப்படி எல்லாம் வல்ல பரனிலும் சீரிய முறையிலேயே அவதரித்து வேதார்த்த ஞானத்தை பரப்பி
உயிர்களை எல்லாம் உய்வித்து அருளுவதே -என்பது கருத்து –

ஆழ்வாரையும் ஆச்சார்யர்களையும் தன்னை விட உயர்ந்தவர் என்று அருளி செய்ய வைத்து உகக்கிறான்
ஸ்ரீ வடுக நம்பி/ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்/ஸ்ரீ சத்ருக்னன்/ஸ்ரீ அமுதனார் இவர்களுக்கும் –
அந்தர்யாமித்வமும் வ்யாபகத்வமும் ஸ்ரீ எம்பெருமான் தானே –
அனைத்தும் அவர் தான் என்பதால் -நின் திரு எட்டு எழுத்தும் கற்றதும் உற்றது உன் அடியார்க்கு அடிமை-
இதையும் கேட்டு உகக்கிறான் –

——————

வண் புகழ் நாரணன்-நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்–உடல் மிசை உயிர் என கரந்து-மறைந்து – எங்கும் பரந்துளன்–

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான்

குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை
இகழ்ந்து உயிர்களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: