ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –90-நினையார் பிறவியை நீக்கும் பிரானை- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இவர் -அஞ்சுவன் -என்றவாறே இவர் பயம் எல்லாம் போம்படி குளிரக் கடாஷிக்க
அத்தாலே நிர்பீகராய் -கரண த்ரயத்திலும் -ஏதேனும் ஒன்றால்-இவ் விஷயத்தில் ஓர் அநு கூல்யத்தை பண்ணி-
பிழைத்து போகலாய் இருக்க சேதனர் ஜன்ம கிலேசத்தை அனுபவிப்பதே என்று இன்னாதாகிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் உடைய மதிப்பையும் -அவரை ஸ்தோத்ரம் பண்ணாமைக்கு-தமக்கு உண்டான
அயோக்யதையும் அனுசந்தித்து -இவ் விஷயத்திலே -நான் ஸ்துதிப்பதாக போர சாஹாச-கார்யத்துக்கு உத்யோகித்தேன்
என்று அணாவாய்த்து -இவர் அஞ்சினவாறே -ஸ்ரீ எம்பெருமானார் –
இவருடைய அச்சம் எல்லாம் தீரும்படி குளிர கடாஷிக்க -அத்தாலே நிர்பரராய் -ஸ்தோத்ரம் பண்ண ஒருப்பட்டு –
இதில் லௌகிகர் படியை கடாஷித்து –
ஸ்ரீ எம்பெருமானார் யோக்யா அயோக்யா விபாகம் அற சர்வரையும்-கடாஷிக்கைக்காக வந்து அவதரிக்கச் செய்தே –
இந்த லௌகிகர் தம்மை ஒருக்கால் ப்ராசுரிகமாக-நினைத்தவர்களுடைய -சோஷியாத பவக்கடலை சோஷிப்பிக்குமவரான –
இவரை நினைக்கிறார்கள் இல்லை –
என்னை ரஷிக்கைக்காக நான் இருந்த இடம் தேடி வந்த இவரை -ஈன் கவிகளால் ஸ்துதிக்கிரார்கள் இல்லை –
அப்படி ஸ்துதிக்கைக்கு அதிகாரம் இல்லை என்றாலும் ஸ்துதிக்கும் அவர்களுடைய திருவடிகளை-ஆராதிக்கிறார்கள் இல்லை –
ஐயோ இவற்றுக்கு எல்லாம் உறுப்பான ஜென்மத்தை பெற்று இருந்தும் அறிவு கேட்டாலே
ஜன்ம பரம்பரைக்கு அது தன்னை ஈடாக்கி கிலேசப்பட்டு போனார்களே என்று இன்னாதாகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற ஸ்ரீ அமுதனார் –மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான-செயலில் ஈடுபட்டு உய்யலாமே –
அங்கன் உய்யாமல் மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்துகிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார்

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

பத உரை –
மாந்தர் -மக்கள்
பிறவியை -நினைப்பவர்களுடைய பிறப்பை
நீக்கும் -போக்கடிக்கும்
பிரானை-உபகாரம் புரியுமவரான இவரை
நினையார் -நினையாது உள்ளனர்
எனை யாள -என்னை ஆட் கொள்ள
இந் நீள் நிலத்தே -இந்த நீண்ட பூ மண்டலத்தே
வந்த -நான் இருக்கும் இடம் தேடி -எழுந்து அருளின –
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி
இரும் கவிகள் -பெரிய கவிகளை
புனையார் -தொடுத்து ஏத்தாதவர்களாய் உள்ளனர்
புனையும் -அவரைப் பற்றி கவி தொடுக்கும்
பெரியவர் -பெருமை வாய்ந்தவர்களுடைய
தாள்களில் -திருவடிகளில்
பூம் தொடையல் -பூ மாலைகளை
வனையார் -சமர்ப்பிக்காதவர்களாய் உள்ளனர்
மருள் சுரந்து -அந்த மாந்தர் அறிவு கேடு மிகுந்து
பிறப்பில் -பிறப்பினால் நேரும் இன்னல்களில் அழுந்தி –
வருந்துவர் -துன்புருவர்களாய் உள்ளனரே

வியாக்யானம் .- –
தம்மை நினைத்தவர்களுடைய ஜன்மத்தைப் போக்கும் உபகார சீலரான இவரை நினைக்கிறார்கள் இல்லை
நிகரின்றி நின்ற நீசதையை – 48- உடைய என்னை அங்கீகரித்து-
தம்முடைய குணங்களுக்கு தேசிகனாய் வாசகம் இடும்படி பண்ணி -இப்படி யாளுகைக்காக –
இப் பூமி பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே -நான் கிடந்த விடம் தேடி வந்த ஸ்ரீ எம்பெருமானாரைத்-
தத் குண பிரகாசமான பெரிய கவிகளை தொடுக்கிறார்கள் இல்லை .
தாங்கள் கவி புனைய மாட்டுகிறிலர்கள் ஆகில் அவர் விஷயமாக கவிகளைத் தொடுக்கும்-மகா ப்ராபாவருடைய திருவடிகளிலே
பூ மாலைகள் சமர்ப்பிக்கிறார்கள் இல்லை .
இத்தனைக்கும் யோக்யமான ஜென்மத்தை பெற்று இருக்கிறவர்கள் -அறிவு கேடு மிக்கு
ஜன்ம மக்னராய் துக்கப்படா நின்றார்கள் -ஐயோ -இவர்கள் பாக்ய ஹீநதை யிருந்த படி என் – என்று கருத்து –

நினைவார் பிறவியை நீக்கும் பிரானை -என்று பாடம் சொல்லுவார்கள்
புனைதல் -தொடுத்தல்
வனைதல்-செய்தல் -இத்தால் சமர்ப்பிக்கைக்கையை சொன்னபடி –
வருந்துதல்-துக்கித்தல்

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை நினைத்தாலே போதுமே -தம் பெருமை மறை முகமாக சொல்லிக் கொள்கிறார்-
என்னை ஆளவே வந்தார் -என்னைக் கொண்டு இப்பிரபந்தம் பாடுவிக்கவே -ஆவிர்பவித்தார் –கடாஷித்தே -ஆள்பட வைத்து அருளினார் –
மாந்தர் -மந்த புத்தி –
நினைவார் பிறவியை நீக்கும் பிரான் –பிறவியை நீக்கும் பிரானை நினையார் -என்றுமாம் –
நினைத்தாலே -ஒன்றை நூறாக்கி -அருளும் பிரான் அன்றோ –
நிகர் இன்றி இருந்த நீசனை ஆண்டு -அவனே அவதரித்து வந்தாலும் கலங்க வைக்கும் பிரகிருதி -இந்த நீணிலத்தே –
கங்கணம் கட்டி வந்து என்னை ஆள் கொண்டாரே-நீணிலத்தே -ஆளுவதன் அருமை –சொல்லிற்று -இருள் தரும் மா ஞாலம் –
பண்டங்கள் கிடக்குமா போலே கிடந்தேன் -கிடந்த இடம் -அரங்கன் கிடந்த இடம் -இருந்த இடமாக்கி –
ஆச்சார்யர் இருந்த இடத்துக்கு மாற்றி அருளி -இரும் கவி -பெரிய கவி -உண்மையான கவி -உன்னைப் பாடுவதால் -உயர்ந்ததாக ஆகுமே –
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி -நீராடுவாரையும் ஸ்வாமி ஆக்கும் -ஸ்ரீ பெரும் தேவி -ஸ்ரீ பெருமாளுக்கு தக்க -அதே போலே குணம் காட்ட வல்ல கவி –
ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் அடைய பல வகைகள் உண்டே -ஸ்ரீ பாஷ்யம் கற்று கற்றுவிப்பது மட்டும் இல்லையே –
பஞ்ச சம்ஸ்காரம் போதுமே -அடியேன் -ராமானுஜ தாசன் சொன்னாலே போதுமே
தெருளுற்ற வர்களாக ஆகாமல் மருளுற்று பிறவியில் அழுந்துகிறீர்களே -கர்ப்ப ஸ்ரீ மான்களாக இருக்க வேண்டியர்கள் —

நினையார் பிறவி நீக்கும் பிரானை –
நம்மை ஒருக்கால் நினைக்கை யாகிற ஆபிமுக்யத்தை பண்ணினார்கள் ஆகில் –
பக்த தரனுப்யுபா ஹ்ர்தம் ப்ரேம்னா பூர்யேவமேபவேத் -என்று சொல்லப் படுகிறவனைப் போலே-அத்தை ஓன்று நூறாகி –
பபாத்வாந்த ஷயாயச -என்கிறபடியே அவர்களுடைய ஜன்ம மரண ஆதி துக்கங்களை-அவர்கள் அருகே செல்லாதபடி
நீக்கும் உபகாரகரான இவரை அறிந்து நினைக்கிறார்கள் இல்லை –
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதானாம் -என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ ஜீயரும்-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை –
நினைத்த அளவில் பிறவியை நீக்குமவராய் இருக்க -மாந்தர் நினையாது இருக்கின்றனரே –
ஆயாச ஸ்மாரனே கோச்ய-இவன் நினைப்பதில் என்ன ச்ரமம்-என்றபடி –
ச்ரமம் இல்லாது நினைந்து இருக்க -பிறவாமை என்னும் பேற்றைப் பெறலாமாய் இருக்க -இழக்கின்றனரே –
இது என்ன பாக்யமின்மையோ -என்று வருந்துகிறார் .
பிறவியை நீக்குதல் -மோஷம் அளித்தல் –
பிரான் -உபகரிப்பவர்
ஏதேனும் ஒரு வகையில் தம்மோடு தொடர்பு உடையோர் அனைவருக்கும் வீடு கருதி –
ஸ்ரீ பெரிய பெருமாளை சரணம் அடைந்து -கருதிய வரத்தை -பெற்று உள்ளமையின் -வீடு அளிப்பாராக –
தம்மை நினைவாருக்கு எல்லாம் -பிறவியை நீக்கும் -உபகாரத்தை -செய்ய வல்லவரானார் ஸ்ரீ எம்பெருமானார் -என்கை –

நினைவார் பிறவியை நீக்கும் பிரானை -என்றும் பாடமுண்டு
ஸ்ரீ பெரிய பெருமாளை சரணம் அடைந்து -கருதிய வரத்தை -பெற்று உள்ளமையின் -வீடு அளிப்பாராக –
தம்மை நினைவாருக்கு எல்லாம் -பிறவியை நீக்கும் -உபகாரத்தை -செய்ய வல்லவரானார் ஸ்ரீ எம்பெருமானார் -என்கை –

இந் நீணிலத்தே எனை யாள வந்த இராமானுசனை –
நிகரின்றி நின்ற நீசதையை உடைய அடியேனை-அபிமானித்து -தம்முடைய குணங்களுக்கு தேசிகனாய் வாசகமிட்டு
குண அனுகுணமாக ஸ்தோத்ரம் பண்ணி –
அது தன்னை பிரபந்தீகரிக்கும்படி அமைத்து கொண்டு -என்னை இப்படி ஆளுகைக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து-அவதரித்தாலும்
அவனையும் கூட மோகிப்பிக்குமதாய் விச்தர்தமான இருள் தரும் மா ஞாலத்திலே –
ஏக லஷ்யமாக -அடியேனை ஒருவனையுமே ரஷிக்க வேண்டும் என்று க்ரத தீஷிதராய் –
இந்த பூமிப்-பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே அடியேன் இருந்த இடம் தேடி வந்து –
ஸ்ரீ கோயிலிலே அடியனை அகப்படுத்திக் கொண்ட ஸ்ரீ எம்பெருமானாரை –

இந் நீள் நிலத்தே எனை யாள வந்த இராமானுசனை –
இவ்வகன்ற நிலப் பரப்பிலே ஸ்ரீ எம்பெருமானார் -மற்ற எந்த இடத்திற்கும் போகாதே –
தாம் உள்ள-ஸ்ரீ திருவரங்கத்திற்கு எழுந்து அருளியது -தம்மை ஆட் கொள்வதற்காக தான் -என்று கருதுகிறார் -ஸ்ரீ அமுதனார் .
நிகரின்றி நின்ற நீசனான தன்னை இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஆள்வதில் உள்ள அருமை தோற்ற-
இந் நீள் நிலத்தே –என்றார் ஆகவுமாம்-
நிகரின்றி நின்ற நீசனான தான் -ஸ்ரீ எம்பெருமானார் அருளுக்கு இலக்காகி பண்டைய அந்நிலை தவிர்ந்து-
அவர் குணங்களை அனுபவிக்க வல்லனாய் அவ அனுபவத்தை இந்நூல் வடிவத்தில்-அடிவத்து தரும்படி பண்ணினதை நினைந்து –
எனை ஆள –என்கிறார் .

இரும் கவிகள் புனையார் –
இவருடைய விஷயீ காரத்தை பெற்ற பின்பு ஸ்தோத்ர-நிர்மாணத்தில் தங்களுக்கு அதிகாரம் உண்டாய் இருக்கச் செய்தேயும் –
செஞ்சொல் கவிகாள் -என்கிறபடியே-அதி போக்யங்களாய் -தத் குணங்களை சுருக்க மொழிய
பிரதிபாதிக்குமவையான கவிகளை தொடுக்கிகிறார்கள்-இல்லை –
அவருடைய கல்யாண குணங்களை விஸ்தரித்து ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற
வாசா கைங்கர்யத்தையும்-பண்ண மாட்டிற்று இலர் -என்றபடி –
புனைதல் -தொடுத்தல் –

இரும் கவிகள் புனையார் –
இரும் கவிகள் -பெரும் கவிகள்
கவிக்கு பெருமை யாவது -துதிக்கப் படுவதன் கண் உள்ள குணங்களை உள்ளபடியே புலப்படுத்தலாம் .
புனைதல் -தொடுத்தல்
புனைதலாக கூறவே கவிகள் பூக்கள் எனபது பெற்றோம்
இது ஏக தேச உருவகம்
மகிழ்வு ஊட்டுவதாலும் மென்மையாலும் கவிகள் பூக்களாக உருவகம் செய்யத் தக்கன -என்க.

புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வனையார் –
தாங்கள் கவி புனைய மாட்டிற்று இலர்கள் ஆகிலும்-
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் –
கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம்-பாதானு சிந்தனபர -என்கிறபடி கரண த்ரயத்தாலும் அவர் பக்கலிலே அதி பிரவணராய் கொண்டு –
நசேத் ராமானுஜேத் ஏஷா -என்றும் –
புண்யம் போஜ விகாசாய -என்றும் –
நம பிரணவ மண்டனம் -என்றும் –
எதி ராஜோ ஜகத் குரு -என்றும் இத்யாதிகளான கவிகளைத் தொடுக்கும் மகா பிரபாவத்தை உடையவர்களான-
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ ஆச்சான் முதலானவர்களுடைய திருவடிகளிலே பரிமள பிரசுரமான புஷ்பங்களை
கொண்டு வந்து மாலைகையாக தொடுத்து சமர்ப்பிக்கிறார்கள் இல்லை –
புனைதல் –செய்தல்-இத்தால் சமர்ப்பிக்கையை-சொன்னபடி –
கூராதி நாத குருகேச முகத்யு பும்ஸாம் பாதா நு சிந்தன பரஸ் சத்தம் பவேயம்-என்றும் –
யதீஸ்வர சரஸ்வதீ ஸூரபிதா சயானாம் சதாம் வஹாமி சரணாம் புஜம் ப்ரணத சாலிந மௌலிந -என்னக் கடவது இறே –

புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வளையார் –
கவித் தொடையல் புனைதற்கு இயலாதவர்கள் பூம் தொடையலாவது சமர்ப்பிக்கலாமே –
அதுவும் செய்யாது இருக்கின்றனரே என்கிறார் .
கவித் தொடையல் -புனைதல் தானே இயல்பாக சிலர்க்கு மட்டும் அமைவது ஒன்றாதலின் –
எல்லாருக்கும் இயல்வது ஓன்று அன்று –
பூம் தொடையல் வனைவதாயின்-யாவர்க்கும் எளிதே -அது கூடச் செய்யலாகாதா -என்கிறார் .

நினைத்தலும் புனைதலும் ஸ்ரீ எம்பெருமானார் திறத்து செய்ய வேண்டியவைகளாகவும்
பூம் தொடையல் வளைதல் -ஸ்ரீ எம்பெருமானாரை கவி பாடும் பெரியவர் திறத்து செய்ய வேண்டியதாகவும்
ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்வது குறிக் கொள்ளத் தக்கது .
உத்தாரகரான ஆசார்யர் ஸ்ரீ எம்பெருமானார் ஒருவரே ஆதலின் பிறவியை நீக்குவதற்காக அவரே நினைக்க தக்கவர் ஆகிறார் ..
ஸ்ரீ எம்பெருமானார் காலத்தில் மற்றவர்கள் தங்களைப் பற்றி இரும் கவிகள் புனைதற்கு இசையார்கள் ஆதலின் –
அவர் ஒருவரைப் பற்றியே இரும் கவி புனைய வேண்டியது ஆகிறது

பூம் தொடையல் ஸ்ரீ எம்பெருமானார் தாள்களிலே வனையலாமாயினும் –
ஸ்ரீ திருவரங்கத்தில் அன்றி மற்ற-மற்ற இடங்களில் இருப்பவர்களுக்கு அது இயலாதாய்–
எல்லா இடத்திலும் ஸ்ரீ எம்பெருமானாரை கவி புனையும் பெரியவர் இருத்தல் கூடுமாதலின் –
அவர்கள் தாள்களிலே மாந்தர் அனைவரும் வனைதல் கூற வேண்டிய தாயிற்று .

இங்குப் புனையும் பெரியவரை மட்டும் கூறி நினையும் பெரியவரை குறிப்பிடாதது கவனித்தற்கு உரியது
நினைத்தால்- பிறர் அறியாது தனித்து செய்யப் படுவதாதலின் நினையும் பெரியவரை-அறிதல் அரிதே –
புனையும் பெரியவரையோ அவர்கள் இரும் கவியே காட்டும் ஆதலின் அவர் தாள்களில்-பூம் தொடையல் வளைவது
யாவர்க்கும் எளிதாகி விடுகிறது .

இங்கு நினைத்தல்- புனைதல்- வனைதல்கள் -முறையே
மனம் வாக்கு காயம் என்று மூன்று-கரணங்களின் செயல்களாக கூறப்பட்டு உள்ளன
இம் மூன்று செயல்களில் ஏதேனும்-ஓன்று போதும் மாந்தர் பிறப்பில் வருந்தாமைக்கு -அது தோன்ற –
நினையார் -புனையார் -வனையார் -என்று தனித் தனியே பயனிலையோடு வாக்கியங்கள் அமைக்கப் பட்டன என்று அறிக .

இங்கே ஸ்ரீ எம்பெருமானாரை நேரே நினைப்பவர்க்கும் -நேரே கவிகளை புனைபவர்க்கும் –
ஸ்ரீ எம்பெருமானாரை கவி புனையும்-பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வனைவாருக்கும்
பிறப்பினில் வருந்துவது இல்லை –என்பது தோன்ற ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்தமையால் –
ஸ்ரீ எம்பெருமானாரோடு நேர் தொடர்பு உடையார்க்கும் மற்றவர் வாயிலாக-தொடர்பு உடையார்க்கும் பேற்றில்
வேறுபாடு இல்லை எனபது தெரிகிறது .
முக் கரணங்களின் செயல்களில் ஏற்றத் தாழ்வு இருப்பினும் பேற்றினில் ஏற்றத் தாழ்வு இல்லை-
அதற்கு காரணம் இவை பேற்றுக்கு ஹேது வாகாமை-பேற்றுக்கு அடி ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தமே -என்று உணர்க –

பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே –
அஞ்ஞானத்தாலே ஆவ்ர்த்தராய்-கொண்டு த்யாஜ்ய உபாதேய விவேகம் இல்லாதே ஜன்மாதிகளிலே அநாதியாக கிலேசப்படா நின்றார்கள் –
வருந்துதல் -துக்கித்தல் –
அஞ்ஞானே நாவ்ர்தம் ஜ்ஞானம் ததோ முஹ்யந்தி சந்தவ -என்னக் கடவது இறே –
ஐயோ இத்தனையும் பண்ணுக்கைக்கு யோக்யமான ஜென்மத்தை பெற்று இருந்தும் இது எல்லாம்-தெளிய மாட்டாதே
அறிவு கேடு மிக்கு -ஜன்ம மக்னராய் -துக்கப்படா நின்றார்கள் –
இவர்களுடைய-கர்ப்ப நிர்பாக்யதை இருந்த படி எங்கனே -என்று இன்னாதார் ஆகிறார் காணும் –
துர்லபோ மானுஷோ-தேஹோ தேஹினாம் ஷன பங்குர -தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்றும் –
ந்ர்த்தேஹமாத்யம் பிரதி லப்ய துர்லபம் ப்லவம் ஸூ லயம் குரு கர்ணதாரம்-மயாநுகூலேந ந பஸ்வ-தேரிதே –
புவான் பவாப்த்திம் நதரேத்ச ஆத்மஹா -என்னக் கடவது இறே –
மாயவன் தன்னை வணங்க வைத்த-கரணமிவை -என்று இவர் தாமே அருளிச் செய்தார் இறே –

பிறப்பினில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்து
மாந்தர் மருள் சுரந்துய் பிறப்பினில் வருந்துவர் -என்று இயைக்க
மாந்தர் -நினைத்தற்கும் புனைதற்கும் வனைதற்கும் தகுதி வாய்ந்த மானிடப் பிறவி பெற்றவர்கள் .
மருள் சுரந்து பிறப்பினில் வருந்துவர்
மழை பெய்து நெல் விளைந்தது என்பதில் போல காரணப் பொருளில் செய்தென் எச்சம் வந்ததாக கொள்க
மருள் சுரந்தமையின் -பிறப்பினில் வருந்துவர் -என்றது ஆயிற்று
மருள்-விபரீத உணர்வு
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு -என்னும் குறளை-இங்கு நினைவு கூர்க
பிறப்பு -பிறப்பினாலாகிய இன்னலுக்கு காரண ஆகு பெயர்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்- முக் கரணங்களால் ஸ்ரீ பகவத் ஆச்ரண்யம் வேண்டும்-
ஸ்ரீ ஆச்சர்யரை ஒன்றாலே பெறலாம்
சிந்தையாலும் செய்கையாலும் நினைவாலும் -மூன்றும் வேண்டும்-அங்கு-
தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க-மூன்றும் பண்ணி எதிர் பார்த்து இருக்க வேண்டும் அங்கு–
இங்கு ஸ்ரீ ஸ்வாமி சம்பந்ததாலே தான் மோஷம் என்பதால் ஏதானும் ஒன்றாலே நிச்சயம் கிட்டும்

எனை ஆள வந்த -அன்னையாய் அத்தனாய்-என்னை ஆண்டிடும் தன்மை-
அளியல் நம் பையல் -என்று அபிமானித்து -இது தான் ஸ்ரீ ஸ்வாமி பண்ணிய உபகாரம்-ஸ்ரீ அமுதனாருக்கு-
ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் காட்டி கொடுத்து-இங்கு சரம பர்வத்தில் ஆழ்வான் மூலம் பெறுவதே ஏற்றம்-
தூமணி துவளில் மா மணி-போல நல்லவற்றை அடியவர்க்கு காட்டி கொடுத்து அருளினார்

—————–

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–-இரண்டாம் திருவந்தாதி-42–

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –பெரிய திருவந்தாதி–46-

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: