ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –88-கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை கலி தோஷம் நலியும் என்றார் கீழே .
அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து அவதரித்த படியை யனுசந்தித்து –
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி
பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி -இதில் -அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்
உபதேசிக்கைக்காக –அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து –செந்நெல்
விளையா நின்றுள்ள வயல்களை உடைய ஸ்ரீ திருக் குறையலூருக்கு ஸ்ரீ ஸ்வாமியான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடைய
திவ்ய பிரபந்தமாகிற ஸ்ரீ பெரிய திரு மொழியை அனுபவித்து களித்து – பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –
பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக
இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி –லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்
தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்
நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை

ஸ்ரீ எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் நல் ஞானத்தில் சேராதாரைக் கலி நலியும் என்றார் கீழ் –
யாவரும் சேர்ந்து கலியை விலக்கலாம் படியான –அத்தகைய நல் ஞானத்தை உபகரிப்பதற்காக-அவர் இவ் உலகில் வந்து
அவதரித்த படியை அனுசந்தித்து -அதனால் இத்தகைய வைதிக ஞானம் உலகினருக்கு கிடைக்க ஒண்ணாதபடி
வேதத்திற்கு -அவப் பொருள் கூறும் குத்ருஷ்டிகள் தொலைந்தமை கண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

பத உரை –
கலி மிக்க -ஆரவாரம் மிகுந்த
செந்நெல் -செந்நெற்கள் விளையும்
கழனி -வயல்களை உடைய
குறையல் -திருக் குறையலூருக்கு தலைவரும்
கலைப் பெருமாள் -சாஸ்திர நூல்களாய்-அமைந்ததிவ்ய பிரபந்தங்களை அருளி செய்யும்
பெருமை வாய்ந்த வருமான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடைய
மிக்க -மிகுந்த
ஒலி -ஓசையை உடைய
பாடலை -பாசுரங்களை
உண்டு -அனுபவித்து
தன் உள்ளம் -தனது திரு உள்ளம்
தடித்து -பூரித்து
அதனால்-அந்தக் காரணத்தினால்
வலி மிக்க -பலம் மிகுந்த
சீயம் -சிம்மமாக ஆன
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
மறை -வேதத்தில் கூறும் பொருள்களில்
வாதியராம் -அவப் பொருள் சொல்லி வாதம் செய்கிற குத்ருஷ்டிகள் ஆகிற
புலி மிக்கது என்று -புலிகள் நிறைந்து விட்டன என்று
இப்புவனத்தில் -இந்த உலகத்தில்
வந்தமை -அவதரித்த படியை
போற்றுவன் -புகழுவேன் .

வியாக்யானம்
உழுவது -நடுவது -அறுப்பதாக செல்லுகிற ஆரவாரத்தால் மிக்க செந்நெற்கள் விளையா நின்றுள்ள
வயல்களை உடைய -ஸ்ரீ திருக் குறையலூருக்கு நிர்வாஹகராய் –
இரும் தமிழ் நூல் புலவராகையாலே -பெரிய திரு மொழி -1- 7-10 -சாஸ்திர ரூபமான
பிரபந்தங்களை செய்து அருளின வைபவத்தை வுடையரான -ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடைய –
ஒலி கெழு பாடல்-ஸ்ரீ பெரிய திரு மொழி -11-4 10- -என்னும்படி மிக்க த்வனியை உடைத்தான
ஸ்ரீ திருமொழியை தாரகமாகவும் -போக்யமாகவும் -அனுபவித்து –
தம்முடைய திரு உள்ளம் பூரித்து -அத்தாலே
பிரதி பஷ தர்சநத்தை சஹியாதபடி – – அதி பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
பாஹ்யரைப் போல் அன்றிக்கே -வேதங்களை அங்கீகரித்துக் கொண்டு நின்று – வாதங்களைப் பண்ணி –
லோகத்தை நசிப்பிக்கிற குத்ருஷ்டிகள் ஆகிற புலிகள் மிக்கதென்று -சாது மிருகங்களை நலியா நின்றுள்ள –
துஷ்ட மிருகமான புலி மிக்க காட்டிலே அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப் படுமாலே –
சன்மத தூஷகரான குத்ருஷ்டிகள் வர்த்திக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் வந்து அவதரித்த
பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்

கலி -ஆரவாரம் -மிடுக்குமாம்-
அப்போது பூ சரத்தை சொல்லுகிறது
கழனி -வயல்
சீயம் -சிம்ஹம்
போற்றுதல் -புகழ்தல்–
ஒலி மிக்க பாடல் கலியன் -கலி மிக்க -புலிகளை ஓட்ட ஸ்ரீ ராமானுஜ சிம்மம் –
கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –

வேழம்-ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளால் -/ கஜ சிம்ம கதி விசாரம் –
ஸ்ரீ மாறன் பசும் தமிழ் ஸ்ரீ எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே ஸ்ரீ கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
அடையார் சீயத்தின் பாடல் ஸ்ரீ ஸ்வாமியை வலி மிக சீயம் ஆகிற்று –
மறை வாதியர்களை மறையும் படி -மறையை கொண்டே-மறைத்தார் ஸ்ரீ ஸ்வாமி-
நர சிம்ஹம் ராகவா சிம்ஹம் யாதவ சிம்ஹம் ஸ்ரீரங்கேச சிம்ஹம் போல- பராங்குச சிம்ஹம் பரகால சிம்ஹம் யதிராஜ சிம்ஹம் –
ஸ்ரீ குறையல் பிரான் அடி கீழ் இன்றும் ஸ்வாமி சேவை ஸ்ரீ திருவாலி திருநகரி
திருவடி வந்ததை கண்டே மகிழ்ந்த முதலிகள் போலே -இந்த சிம்மம் வந்தமை கண்டு போற்றுவோம் –
ஸ்ரீ மாறன் கலை உணவாகப் பெற்றோம் -ஸ்ரீ மா முனிகள்
பசும் தோல் போர்த்திய புலிகள் குத்ருஷ்டிகள் -ஆம்னாய சர்ச்சா கவசம்-கோ முகம் -ஸ்ரீ சங்கல்ப சூரியோதயம் -ஸ்ரீ தேசிகன் –
மறை -மறைத்து சொல்வதால் -தப்பாக -அருளிச் செயல்கள் இப்படி இல்லையே -பிரசன்ன புத்தன் வேஷத்தை கொண்டு –
சர்வ சூன்யத்தில் -சின் மாத்ர ப்ரஹ்மம் மட்டும் சொல்லும் அத்வைதிகள் போல்வார் –
உபய வேதாந்த ஐக கண்டம் -இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார் –

கலி மிக்க செந்நெல்
கழனி -உழுவது நடுவது அறுப்பதாய் கொண்டு சர்வ காலத்திலும் செல்லுகிற
ஆரவாரத்தாலே மிக்க செந்நெல்லை உடைத்தான கழனி களுடைய –
கலி–ஆரவாரம் –
அன்றிக்கே –கலி -என்று மிடுக்காய்-சாரவத்தானே பூமியிலே விளைந்த செந்நெல் என்னுதல் –

கழனி –
வயல் –

குறையல் கலை பெருமான் –
இப்படிப் பட்ட செந்நெல் களோடு கூடின வயல்களை உடைத்தாய் ஆகையாலே –
மன்னிய சீர் தேங்கும் ஸ்ரீ குறையலூர் –என்கிறபடியே
சகல சம்பத்துக்களையும் உடைத்தான ஸ்ரீ திருக் குறையலூருக்கு நிர்வாஹராய் –
இரும் தமிழ் நூல் புலவன் –என்கிறபடியே
சாஸ்திர ரூபங்களான திவ்ய பிரபந்தங்களை செய்து அருளி -உபகரித்த மகா உபகாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடைய
குறையல் பிரான் அடிக் கீழ் -என்று
இப் பிரபந்தத்திலேயும் இவருடைய உபகாரத்தை அனுசந்தித்தார் இறே –
செய்த வம்சத்தில் கிருதஜ்ஜராய் போருகிறவர் இவரும் அவருமே
(அமுதனாரும் ராமானுஜரும்-/ராமானுஜரும் கலியனும் / கலியனும் நம்மாழ்வாரும் ) காணும்

ஒலி மிக்க பாடல் –
இம்மாகா உபகாரத்தால் அருளிச் செய்யப்பட திரு மொழி -திரு குறும் தாண்டகம் திரு நெடும் தாண்டகம் -தொடக்கமான
திவ்ய பிரபந்தங்களை –
இன்பப் பாடல் -என்கிறபடியே
அனுசந்திக்கப் புக்கவர்களுக்கு -அர்த்த ரசத்தாலும் போக்யதையாலும் ஆனந்தம் மிகுதியாய் கரைபுரண்டு இருக்கையாலே மிகுந்து –
கலியனது ஒலி மாலை -என்கிற படியே
பெரு மிடறு செய்து அனுசந்திக்க வேண்டுகையாலே மிக்க த்வனி யை உடைத்தான திவ்ய பிரபந்தங்கள்
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூறுவதாக பண்ணி அருளின திவ்ய பிரபந்தங்கள் என்றபடி –
ஒலி த்வனி -அந்த பிரபந்தங்களை தாரகமாகவும் போஷகமாகவும் போக்யமாகவும் நினைத்துக் கொண்டு
முற்றூட்டாக அனுபவித்து –

தன்னுள்ளம் தடித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதியாலே தம்முடைய திரு உள்ளம் பூரித்து –
இவ் வனுபவத்தாலே காணும் பிரதி பஷ நிரசனத்துக்கு தகுதியான மிடுக்கு அவருக்கு உண்டானது –
தடித்தல் -பூரிக்கை-

அதனால் வலி மிக்க சீயம் –
அந்த பரி பூர்ண ஞானம் ஆகிற மிக்க பலத்தை உடையராய் -சிம்ஹம் போலே இருக்கிற

கலிமிக்க —வலி மிக்க சீயம்
ஸ்ரீ திருக் குறையலூர் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அவதரித்த ஸ்தலம் .-அங்குள்ள வயல்களில் கலி மிகுந்து உள்ளதாம் –
கலி-ஆரவாரம்
உழுவதாலும்-நடுவதாலும் -அறுப்பதாலும்-உண்டாகும் ஆரவாரங்களில் ஏதேனும் ஓன்று அவ் வயல்களில் மிகுந்து உள்ளது -என்க –
கலி -பலமாகவுமாம்-வயல்களுக்கு பலம் பூமியின் சாரம் -என்க –
செந்நெல் கழனி –
செந்நெற்கள் பயிராகி விளைகின்ற வயல் .
பூமியின் சாரத்தினால் செந்நெற்பயிர்கள் நன்கு விளைவது போலே –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு நிலத்தின் மாண்பினால் ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் ஆகிற பயிர் நன்றாக விளைந்த இடம் ஸ்ரீ திருக் குறையலூர் -என்க .

கலைப் பெருமான் –
கலைகளை வழங்கிய பெருமை உடையவர் என்றபடி -கலை -சாஸ்திரம்
இரும் தமிழ் நூல் புலவன் -பெரிய திருமொழி – 1-7 10- -என்றபடி
இரும் தமிழ் நூலாகிய திருவாய் மொழி -முதலிய திவ்ய சாஸ்த்ரங்களில் புலவர் ஆகையாலே அவற்றை விளக்குமவையான
சாஸ்த்ரங்களாய் அமைந்த பெரிய திருமொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்த பெருமை வாய்ந்தவர் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -என்க –

இரும் தமிழ் நூல் புலவர் ஆகையாலே -அவர் அருளிச் செய்த சாஸ்திரங்களும் தமிழாய் அமைந்தன –
இரும் தமிழ் நூல் என்பது-ஸ்ரீ திருவாய் மொழி முதலிய ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தங்களையே -.இதனை
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து –திருவாய் மொழி – 10- 6-4 –
என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாக்கினால் அறியலாம் –
அறியவே -நம் ஆழ்வாருடைய திவ்ய பிரபந்தங்கள் ஆகிய சாஸ்த்ரங்களில் புலமை பெற்றவரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
அவற்றை விளக்கும் வகையில் தமிழ் சாஸ்த்ரங்களான திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்த பெருமை உடையராய் இருப்பது புலனாம் .

தமிழ் மறை நாம் ஆழ்வார் திவ்ய பிரபந்தங்கள் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவற்றை விளக்குமவைகளாக அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் அவற்றுக்கு அங்கமான சாச்த்ரங்களாக அமைந்தன –
வேதங்கள் நான்கு -அங்கங்கள் ஆறு –
தமிழ் மறைகளும் நான்கு -திரு விருத்தம் -திருவாசிரியம் -பெரிய திருவந்தாதி -திருவாய் மொழி -என்பவை அவை .
அவற்றின் அங்கங்களும் -பெரிய திருமொழி தொடங்கி-திரு நெடும் தாண்டகம் ஈறாக ஆறு .
அவை ஆறும் கலைகள் –
அவற்றை அருளிச் செய்த பெருமை தோற்ற –கலைப் பெருமாள்-என்கிறார் .

வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2 என்பதையும் –
பரம்பின கலைகளை உடைத்தான நால் வகைப் பட்ட வேதங்கள்-என்னும் அதன் வியாக்யான ஸ்ரீ ஸூக்தி யையும் காண்க – –
பரம்பின கலைகளை உடைத்தான -என்பது விரிவான சாஸ்திர ரூபங்களான அங்கங்களை உடைத்தான -என்றபடி .
அமுதனார் அதனை அடி ஒற்றி -அங்கங்களான திவ்ய பிரபந்தங்களை –கலை –என்னும் சொல்லாலே குறிப்பிடுகிறார் .

ஒலி மிக்க பாடல் –
மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம்
நிலையிடமெங்குமின்றி – 11-4 –என்னும் ஸ்ரீ திரு மொழியில் இவ்வோசை மிகுந்து இருப்பதனால்
ஒலி கெழு பாடல் -11 4-10 –என்று அவரே குறிப்பிட்டு இருப்பது கவனிக்கத் தக்கது .

உண்டு தன் உள்ளம் தடித்து –
பாடலை உணவாக கூறினமையின் -அதுவே ஸ்ரீ எம்பெருமானாருக்கு தாரகம் -என்றது ஆயிற்று-
மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்றார் ஸ்ரீ மணவாள மா முனிகள் –
உண்டு உள்ளம் தடித்ததாக -மகிழ்ச்சியினால் மனம் பூரித்ததாக -கூறினமையின் அதன் இனிமை தோற்றுவதால்
பாடல் போக்யமாய் இருத்தலும் புலனாகின்றது –

அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –
பீம சேனன் துர்யோதனனால் கங்கையில் போடப் பட்டு -பாதாள லோகம் சென்று –
கலசம் கலசமாக அம்ருத பானம் பண்ணினதன் பயனாக பதினாயிரம் யானையின் வலுவைப் பெற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் -நல்ல அமுதமான ஒலி மிக்க பாடல்களை ஆயிரக் கணக்கில் உண்டு -அதன் பயனாக
வலு மிகுந்த சீயமாய் விளங்குகின்றார் -என்க –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
பிரதி பஷ தர்சனத்தை சகியாதே அவர்களை பக்னராய் பண்ணுமவர் ஆகையாலே –வலி மிக்க சீயம் –என்கிறார்
வலி -பலம் -சீயம் -சிம்ஹம் –

மறை வாதியராம் –
வேத அப்ராமான்ய வாதிகளான பௌத்தாதிகளை போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாண மாக அங்கீ கரித்து வைத்து –
அதுக்கு அபார்த்தங்களை சொல்லி -இவற்றைக் கொண்டு துர்வாதம் பண்ணி லோகத்தார் எல்லாரையும் பிரமிக்க பண்ணி
நசிப்பித்து கொண்டு போகிற குத்ர்ஷ்டிகள் ஆகிற –

புலிமிக்கதென்று –
புலிகள் மிக்கது என்று -நிவாரகர் இல்லாமையாலே அவை தனிக்கோல் செலுத்தா நின்றன என்று –

இப்புவனத்தில் வந்தமை-
சாது ம்ர்கங்ககளை நலியா நின்றுள்ள துஷ்ட ம்ர்கமான புலி மிக்க காட்டிலே
அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப்படுமா போலே –
சந்மத தூஷிகரான குத்ர்ஷ்டிகள் வர்த்தித்து தனிக்கோல் செலுத்துக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் கொண்டு –

விண்ணின் தலை நின்று –
வந்து அவதரித்த பிரகாரத்தை

போற்றுவனே –
ஸ்துதிக்க கடவேன் –
போற்றுதல் -புகழ்தல் –
குரும் பிரகாச எத்தீ மான் – என்கிறபடியே
அவர் தம்முடைய குண–கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –சேஷ்டிதங்களை புகழக் கடவேன்
என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

மறை வாதியராம் புலி –போற்றுவன் –
இயல்பினில் மிகவும் கொடியவைகளான புலிகள் மிகுந்து சாதுவான ஏனைய மிருகங்கள் நலிந்து திரியா நிற்க –
வலி மிக்க சீயம் வந்து வனத்தை காக்க முற்படுவது போலே –
மிகவும் கொடியவர்களான மறைவாதியர் என்னும் புலிகள் மிகுந்து -சாதுக்களான உலகினரை நலிந்து திரியா நிற்க
அப் புலிகளை தொலைக்க வல்ல – வலி மிக்க சீயமாய் வந்து புவனத்தை காக்க முற்படுகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

மறையைப் பிரமாணமாக மதிக்காத புறச் சமயிகள் போல் அல்லாமல் – அதனை பிரமாணமாக ஏற்று இருந்தும் –
அம்மறை கூறும் நேரிய பொருளை ஏற்காமல் – அவப் பொருள் சொல்லி வாதம் புரிந்து -சாதுக்களான உலகினரை கலங்கச் செய்து –
மறை நெறிக்கண் நடந்து உய்ய விடாது நலிகின்றமையின் மறை வாதியார் கொடியவர்கள் ஆயினர் -என்க –
மறை வழி ஒழுகும் மாந்தர் புறச் சமயிகளின் நின்றும் எளிதில் தப்பலாம் –
மறை வாதியரின் மாற்றம் ஏமாற்றம் விளைவிப்பதாய் இருத்தலின் பசுத்தோல் போர்த்த புலி போன்ற அவர்கள் இடம் இருந்து
தப்ப வழி இன்றிப் படு நாசத்திற்கு உள்ளாக நேரிடுகின்றது .
இங்கனம் தப்ப வழி இன்றி மறை முகமாக பாய்ந்து மாய்ந்து போகும்படி செய்தலினால் -மறைவாதியர் -புலி யாயினர் -என்க .

இங்கு ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் –2 36- –
அந்யைராம் நாயா சர்ச்சா கவசத்ருதி கனத் கோமுகைர் த்வீபிபிச்ச -என்று
வேதத்தை பற்றிய ஆராய்ச்சி என்னும் கவசம் அணிந்தமையினால் விளங்குகின்ற பசுவின் முகம் கொண்ட மற்றவர்கள் ஆகிற –
மறை வாதியர்களாகிற – புலிகளினாலும் -என்று வேதாந்த தேசிகன் வருணித்து இருப்பது நினைத்தற்கு உரியது
பசு முகமாய் இருப்பதில் ஏனைய பசுக்கள் தம்மில் ஒன்றாக கருதி -அவற்றைக் கிட்டுகின்றன –
அவை அவற்றை உண்மையில் புலி யாதலின் நலிகின்றன –
இங்கனமே மறையும் ஆராயும் மாண்புடையோர் என்று மயங்கி தம்மிடம் வந்த உலகினரை கலங்க வடித்து -நலிகின்ற்றனர்
மறை வாதப் புலிகள் -என்க –

மறை வாதியர் -சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் -மதத்தை சார்ந்தவர்கள் –
புலிகள் மிக்கு இருப்பினும் –வலி மிக்க ஒரு சீயம் அவற்றை தொலைத்து விடுவது போலே –
எம்பெருமானார் என்றும் ஒரு சீயம் -மறை வாதியராம் புலிகள் மிக்கு இருப்பினும் அவற்றைத் தொலைப்பதாயிற்று
மறை வாதியர்கள் மீண்டும் தலை எடுக்க ஒண்ணாதபடி –
அவர்கள் மதங்களைக் கண்டித்து -ஒழித்து அருளுவாராய் -இவ் உலகத்தில் அவதரித்தமையை அனுசந்தித்தபடி –

இவ்வாறு மறை வாதியரை வெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
ஸ்ரீ எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று–
இப்பாடல்களினால் மறைப் பொருள் இது தான் என்னும் முடிவுக்கு வந்து மறை வாதியரையும்-அம்முடிவுக்கு வரச் செய்து –
அவர்களை வென்று அருளினார் -என்பது கருத்து .

ஸ்ரீ மாறன் பசும் தமிழ் ஸ்ரீ எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே ஸ்ரீ கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
தமிழ் மறையும் ஆறு அங்கங்களும் -வட மொழி மறையின் பொருளை தெளிவுற உணர்த்துவனவாய் அமைந்துள்ளன –
இங்கனம் மறை வாதியரை மறைந்து ஒழிய செய்து மறைப் பொருளை நிலை நிறுத்துமாறு –
எம்பெருமானார் அவதரித்த விதத்தை போற்றுவேன் -என்கிறார் —

—–

மின் உருவாய் முன் உரு பொன் உரு -வேதம் நான்காய் -தத்வ த்ரயங்களையும் காட்டினார் இத்தால்-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -மெய் மதிக் கடல் –

மூன்று முக்ய உத்சவங்கள்-

தாம் உகந்த உத்சவம் -மங்களாசாசன -கருட சேவை-உத்சவம்

தமர் உகந்த உத்சவம் -வேடு பரி உத்சவம்

தானான உத்சவம் -திருக் கார்த்திகை உத்சவம்

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–பெரிய திருமொழி–3-4-10-

கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே -பெரிய திருமொழி–11-4-10-

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே -பெரிய திருமொழி–7-8-2-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—பெரிய திருமொழி–1-7-10-

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே—திருவாய் மொழி -10-6-4-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: