ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –85-ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க சோதியை – இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் —அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றீர் –
இரண்டில் உமக்கு ஊற்றம் எதிலே என்ன –
ஸ்ரீ எம்பெருமானாருக்கே அனந்யார்ஹ்யமாய் இருப்பார் திருவடிகள் ஒழிய
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ இராமானுசன் –தன்னை கண்டு கொண்டேன் -என்றும் –
அவர் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றும் தத் விஷயத்திலும் ததீய விஷயத்திலும் ஈடுபடா நின்றீர் –
ஆனால் இவ்விரண்டிலும் வைத்துக் கொண்டு உமக்கு எந்த விஷயத்தில் ஊற்றம் அதிசயித்து இருக்கும் -என்ன –
அருகே இருந்து கேட்டவர்களைக் குறித்து –
தாம் அதிகரித்துப் போந்த வேதத்தின் உடைய பொருளாய் கொண்டு -அந்த வேத ஸ்ரச்சுக்களான வேதாந்தங்களிலே
ப்ரதிபாத்யனான அவனே நமக்கு வகுத்த சேஷி என்று அறிய பெறாதே
அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டும் கதாகதங்களாலே இடர் பட்டும் போருகிற சம்சாரி ப்ராயருடைய அறிவு கேட்டை
விடுவித்த ஸ்ரீ எம்பெருமானாருக்கு அனந்யார்ஹரர் ஆனவர்களுடைய திருவடிகளை ஒழிய
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு அபாஸ்ர்யம் இல்லை என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் -என்றும்
அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றும் சொன்னீர்
இவ்விரண்டு விஷயங்களிலும் உமக்கு எதனில் ஈடுபாடு அதிகம் -என்பாரை நோக்கி –
ஸ்ரீ எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் –

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

பத உரை
ஓதிய -தாங்கள் அத்தியயனம் செய்த
வேதத்தின் உட் பொருளாய் -வேதத்தினுடைய கருத்துப் பொருளாய்
அதன் உச்சி -அந்த வேதத்தின் முடிவான உபநிஷத்திலே
மிக்க சோதியை -மிகுந்த பிரகாசத்துடன் விளங்குபவனை
நாதன் என அறியாது -நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர் -கண்ட கண்ட விஷயங்களில் தொண்டு பட்டு உழல்கின்ற வர்களுடைய
பேதைமை தீர்த்த -அறியாமையை போக்கி யருளின
இராமானுசனைத் தொழும் பெரியோர் -ஸ்ரீ எம்பெருமானாரைத் தொழுவதாகிய பெருமை வாய்ந்த வர்களுடைய
பாதம் அல்லால் -திருவடிகளைத் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு – எனது அருமை வாய்ந்த ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் -வேறு ஏதேனும் ஒன்றும்
பற்று இல்லை -ஆஸ்ரயிக்கும் இடம் இல்லை

வியாக்யானம் –
நாங்கள் அதிகரித்து இருக்கிற வேதத்தின் உடைய ஆந்தர ப்ரமேயமாய் –
சுருதி சிரஸிவிதீப்தே -ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே -அந்த வேத சிரச்சிலே நிரவதிகமாக பிரகாசித்து இருக்கிறவனை
நமக்கு -நாதன் -என்று அறியாதே –வ்யத்ரிக்த விஷயங்களிலே –தொண்டு பட்டு உழன்று –
(தொண்டர் -இங்கு அடியவர் என்று உயர்ந்த அர்த்தத்தில் இல்லை -)-திரிகிறவர்கள் உடைய அப்ராப்த விஷய பஜனத்துக்கு
அடியான -அஞ்ஞானத்தை போக்கி யருளின – ஸ்ரீ எம்பெருமானாரைத் தொழுகையே நிரூபகமாம் படி யான பெருமையை
உடையவர்களுடைய திருவடிகளை ஒழிய -என் ஆத்மாவுக்கு வேறு ஏதேனும் ஒரு அபாஸ்ரயமில்லை –
பேதைமை தீர்க்கும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் .

ஆர் உயிர்க்கி யாதொன்றும் -என்கிற இடத்தில்
ககரத்தின் மேல் ஏறின இகரமும் குற்றியலிகரம் ஆகையாலே -பல்லுலகியாவும் – 56- என்ற இடத்தில்
போலே வண்ணம் கெடாமைக்கு கழித்து-பூர்வாபர பாதங்களுக்கு ஒக்கப் பதினாறு எழுத்தாக எண்ணக் கடவது –

பெரியோர் -தொழுகையே காரியமாக கொண்ட பெரியோர் -முற்பட்ட –
பெரியவர் தொழுவார் -தொழுது பெரியோர் ஆனவர் பிற்பட்டவர்கள்
பேதைமை -அல் வழக்குகள் பல உண்டே -புண்யம் போக விகாசாயா -ஸ்ரீ ராமானுஜ திவாகரன்

ஓதிய வேதத்தினுட் பொருளாய் –
அஷ்ட வர்ஷம் ப்ராஹ்மன முபநயீத –ஸ்வாத் யாயோத்யதவ்ய —வேத மநூச்யா சார்யோந் தேவாசி நம நுசாச்தி –
ஸ்வாத் யாயா ந் மாப்ரமத -என்கிறபடியே
அத்யயன விதி பரதந்த்ரராய் கொண்டு தாம் அதிகரித்த வேதத்தின் உடைய அவாந்தர ப்ரமேயமாய் –
பஜேத் சார தமம் சாஸ்திரம் -என்றும் –
சர்வதஸ் சார மாதத்யாத் -என்றும் சொல்லுகிறபடி சார தமமாய் –

அதன் உச்சி மிக்க சோதியை நாதன் என அறியாது –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் –
வேத வேத்யே பரே பும்சி -என்றும் –
வேதே ராமாயனே புண்யே -என்றும்
ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே–என்றும் சொல்லுகிறபடியே-

வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் –
ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் – என்கிறபடியே
நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை –
பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே –

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் –
மறையாய் நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே -ஸ்ரீ திருவாய் மொழி – -3 -1 -10 -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .
ஓதிய வேதம் -என்றமையின்
முறைப்படி -ஸ்ரீ ஆசார்யன் இடம் இருந்து -கற்றமை புலனாகிறது .
கற்ற நூல் மறையாளர் -ஸ்ரீ பெரிய திரு மொழி -8 -1 8- -என்னும் இடத்தில்
விடு ஈடு எடுத்துக் கொண்டு அறிதல் -புஸ்தகம் பார்த்து அறிதல் -செய்வார் இல்லை -என்று வியாக்யானம் செய்துள்ள படி
முறை தவறாது -ஆசார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலே கற்ற வேதம் -என்றது ஆயிற்று .

வேதம் என்பது
கட்புலன் ஆகாதவைகளும் -அனுமானத்தால் அறிய ஒண்ணாதவைகள் -சாத்திய தர்மம் எனப்படும் ஸ்ரீ இறைவனது வழி பாட்டினையும்
சித்த தர்மம் -எனப்படும் வழி பாட்டுக்கு உரிய ஸ்ரீ இறைவனையும் -ஓதுவாருக்கு தெரிவித்தலின் வந்த பெயராகும் .
ஆயின் மேலே -அதன் உச்சி -என்று
வழி பாட்டிற்கு உரிய இறைவனைக் கூறும் வேதாந்தம் எனப்படும் உபநிஷத்துக்களை தனித்து குறிப்பிடுதலின் –
ஸ்ரீ இறைவனது வழி பாட்டின் வடிவமான கர்மங்களை பற்றிக் கூறும் பகுதியையே
ஸ்ரீ அமுதனார் இங்கு வேதம் என்னும் சொல்லினால் குறிப்பிடுகிறார் –
இந்த பகுதியிலேயே இறைவன் உட் பொருளாய் நிற்கிறான் ..
வழிபாட்டிற்கு உரியவைகளாக அக்நி-இந்திரன் -முதலிய தேவதைகள் ஓதப்பட்டு இருப்பினும் –
அவற்றின் உள்ளே அந்தர்யாமியாய் –
ஆத்மாவாக எழுந்து அருளி இருக்கும் -ஸ்ரீ இறைவனே ஒதப்-பட்டு இருப்பதாக கொள்ளல் வேண்டும்
அந்த ப்ரஹ்மமே அக்நி -அது வாயு -அது சூர்யன் -அது தான் சந்திரன் –
என்னும் உபநிஷத் வாக்கியத்தினால் -இது அறியப்படுகிறது
ஆக அக்நி -இந்திராதி ரூபமாக ப்ரஹ்மம்-கருதப் படுதலின் -அது வேதத்தின் உட் பொருளாயிற்று -என்றபடி-

அதன் உச்சி மிக்க சோதியை –
அதன் உச்சி -அந்த வேதத்தினுடைய உச்சி -மறை முடி -எனப்படும் -வேதாந்தம் -என்றபடி –
வேதாந்தத்தில் மிகுந்த சோதியாய் -பிரகாசிப்பவன் ஸ்ரீ இறைவன் –
வேதத்திலோ அங்கன் விசேடித்துப் பிரகாசியாமல் ஸ்ரீ இறைவன் அக்நி இந்திரன் முதலிய வடிவத்தில் மறைந்து தோற்றுகிறான் –
சுருதி சிரஸி விதீப்தே -வேதத்தின் உச்சியில் விசேஷித்து விளங்குவது-என்னும் ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றின படி –

உழல்கின்ற தொண்டர் –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் அச்யுதம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோப ஹதா ஜனா -என்றும் –
நமாம் துஷ்க்ர்தினோ மூடா பிரபத்யந்தே நராதமா -காமைஸ் சதஸ் தைர்கர் தாஜ்ஞான ப்ரபத்யந்தே ந்யதேவதா -என்றும் –
நாதேன புருஷோத்தமே த்ரிஜகதாமே காதிபெசெதசா-சேவ்யே ஸ்வ ச்யபதஸ் யதாதரி ஸூ ரே நாராயனே திஷ்டதி –
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமே சமல் பார்த்ததம் சேவா சயம்ர்கயா மகோநா மகோ மூகா வரா காவயம்-என்றும் சொல்லுகிறபடி –
அநாதி பாப வாசனையாலே
சூத்திர தேவதைகளுக்கும் சூத்திர மனுஷ்யருக்கும் தங்களுக்கும் என்றும் ஒக்க சேஷ பூதராய் –
அந்த சேஷ வ்ருத்தி தன்னாலே –
அதஸ் சொர்த்தஸ் வஞ்சப் ப்ரஸ்ர்தா -தஸ்ய சாகா குணா பிரவ்ர்த்தா விஷயே ப்ரவணா – என்றும்
கதா கதம் காம காமாலபந்தே -என்றும் சொல்லுகிறபடியே
கர்ப்ப ஜன்ம யாமா தூமாதி மார்கங்களிலே சஞ்சரித்து பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே
தேவாதி யோனிகள் தோறும் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து-திரியா நிற்கிற சபலர் உடைய –

நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் –
வேதத்தின் உட் பொருளும் -அதன் உச்சியில் மிகவும் பிரகாசிக்கும் ஸ்வயம் பிரகாசமான வஸ்த்வுமான ஸ்ரீ இறைவனை
வேதியர்கள் ஓதி இருந்தும் -அவர்களால் ஓதப்படுவது ஸ்ரீ இறைவனைத் தெரிவிக்கும் நூலாய் இருந்தும் –
நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று அவ் இறைவனை அறியாது புறம்பே தொண்டு பட்டு உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .
பிரதானம் ஆகிய அசித்துக்கும் -ஷேத்ரஞ்ராகிய சித்திற்கும் -அவனே பதி என்று அறியாமையாலே
புறம்பான உலகியல் இன்பங்களிலே உள்ளம் ஈடுபட்டு -அதற்காக கண்ட கண்ட வர்களுக்கு தொண்டு பட்டு
உள்ள வேண்டியதாயிற்று -வேதம் கற்றது பயன் அற்றதாய் ஆயிற்று –

ஸ்ரீ இறைவன் நாதன் -நாம் சேஷப்பட்டவர் -என்று அறிந்து -அவன் நல் தாள் தொழ வில்லையானால் –
கற்றதனாலாய பயன் என் கொல் –
சதுர்வேத தரோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி வேதபார பராக்ராந்த சவை ப்ராஹ்மண கரதப -என்று
எந்த பிராமணன் நால் வேதங்களையும் நெஞ்சில் தாங்கி கொண்டு இருப்பினும்
ஸ்ரீ வாசுதேவனை அறிய வில்லையோ –
அவன் வேதச் சுமையின் பழுவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராமணக் கழுதை யாவான் -என்றபடி
குங்குமம் சுமந்த கழுதை போல் ஆயினரே –இது என்ன பேதமையோ-என்கிறார் .

தொண்டர் –
தகுதி யற்ற விஷயங்களில் இழி தொழில் செய்யும் சபலர் –
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே -ஸ்ரீ பெரிய திரு மொழி -11 -6 3- – என்று
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இத்தகைய தொண்டர்களுடைய சிறுமையையும் கொடுமையையும் கூறியது காண்க .
ஷூத்ரமான பயன்களை விரும்புதலால் சிறுமையையும் –
அதன் பயனாக இறைவனது உறவையும் -உபகாரத்தையும் பற்றிய சீரிய அறிவுச் செல்வத்தை
பறி கொடுத்து –கவலை இன்றி -செய்நன்றி கொன்று நிற்றலால் கொடுமையும் உள்ளன –என்க–

காமைஸ் தைச்தைர் ஹ்ருதஜ்ஞானா பிரபத்யந்தேன்ய தேவதா தம் தம் நியம மாச்த்தாய
பிரக்ருதயா நியதாஸ் ச்வயா–ஸ்ரீ கீதை – 7-20 – என்று
உலகியலில் ஈடுபட்டோர் அனைவரும் தமது பிராக்ருத பொருளை பற்றிய பண்டைய வாசனையினால் இணைக்கப் பட்டவர்களாய் –
அவ்வந்த வாசனைகளுக்கு ஏற்ப -விரும்பப்படும் பலனான -பிராக்ருதப் பொருள் களினாலே
ஸ்ரீ இறைவனைப் பற்றிய அறிவு இழந்தவர்களாய் -தாம் விரும்பின பயனை பெறுவதற்காக வேறு தேவதைகளை –
அந்தந்த தேவதைகளுக்கு உரிய நியமத்தை கைக் கொண்டு பற்றுகிறார்கள்-என்று
ஸ்ரீ கண்ணன் அற்பப் பயனைக் கோரினவர்-தன்னைப் பற்றிய அறிவை இழந்து –
கோரிய பயனைப் பெறுவதற்காக -பல தேவதைகளுக்கு தொண்டு படுவதாக கூறியது -காண்க –

உழல்கின்ற தொண்டர்
விரும்பப் படுமவை பலவாதலின் அவ்வவற்றை பெற பல பேர்களுடைய காலிலே
விழுந்தாக வேண்டி இருப்பதால் –உழல்கின்ற தொண்டர் –என்றார் .
தேவர்கள் இறைவன் அல்லரோ -வேண்டிற்று எல்லாம் தருதற்கு – இன்னார் தொண்டர் என்ன ஒண்ணாது –
ஓர் இடத்தில் நிலை இல்லாமையாலே – பிறர் திறத்து தொண்டு இன்பம் தராது உழல்கையே தருவதாயிற்று –
உழல்கின்ற தொண்டர் -தொண்டால் உழல்கின்றவர் -என்று மாற்றுக

பேதைமை தீர்த்த-
தேஷா மேவா நு கம் பார்த்த மகாமஞ்ஞான ஜம் தம -நாசயாமி -என்கிற ஸ்ரீ கீதாசார்யனைப் போலே
பாப த்வான் தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூதவ் ராமானுஜ திவாகர -என்றும்
அஞ்ஞான அந்தகார நிவாகரர் ஆகையாலே அப்ராப்த விஷய பஜனத்துக்கு அடியான அஞ்ஞானத்தை
வாசனையோடு போக்கி அருளினார் – என்கிறார் –

பேதைமை தீர்த்த இராமானுசனை
வேதம் ஓதியவரும் தொண்டு பட்டு உழல்வதற்கு ஹேது அறியாமை –
அதனை தீர்க்க அறிவு ஊட்டுதல் வேண்டும் .
அவர்கள் ஓதிய வேதத்தில் ஸ்ரீ இறைவன் உட் பொருளாய் இருப்பதையும் –
அதன் உச்சியில் மிக்க சோதியாய் இருப்பதையும் -காட்டி –
அவன் ஒருவனே நீங்கள் தொண்டு பட வேண்டிய ஸ்ரீ நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து
அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

இவர்களுக்கு ஸ்ரீ இறைவன் எல்லாரையும் அந்தர்யாமியாய் நியமிக்கிறான் –-அதனால் அவன் அனைவருக்கும் ஆத்மா –
நாம் அனைவரும் அவனுக்கு சரீரமாய் சேஷப் பட்டு இருப்பவர்கள்
என்னும் அறிவு இல்லாமையே பிறருக்கு தொண்டு பட -ஹேதுவாயிற்று -என்று
அவ் அறிவினை அவர்கள் ஓதிய வேதத்தின் மூலமே ஊட்டி அருளினார் -என்க —

வேதத்தில் இந்திரன் அக்நி முதலிய சொற்களாலே அவர்களுக்கு ஆத்மாவாக இறைவன் பேசப்படுவதாலும் –
வேதாந்தத்தில் மிக சோதியாய் -ஜீவாத்மாவிலும் வேறுபட்ட -ஸ்வயம் பிரகாசனான ஸ்ரீ இறைவன் –
ஷரம் -என்னும் அசேதன பொருள்களையும் –
ஆத்மா என்னும் சேதனப் பொருள்களையும் –
ஒரு தேவன் நியமிப்பதாக -ஓதப்படுவதால் -பொருள்கள் அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவதாலும் –
ஆத்மா சரீரம் -என்று பரி சுத்த ஆத்மாவும்
ப்ருதிவீ சரீரம் -என்று பூமி முதலிய அசேதன பொருள்களும் -அவ் இறைவனுக்கு சரீரமாய் ஓதப்படுவதாலும் –
வேதத்திலும் -வேதாந்தத்திலும் -சரீரம் ஆத்மா என்னும் சம்பந்தம் காட்டப் பட்டு இருப்பதால்
உடல் உயிருக்கே சேஷப் பட்டு இருப்பது போலே –நாம் அனைவரும் நமது ஆத்மாவான
ஸ்ரீ இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால் அறிவை ஊட்டி
ஸ்ரீ எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார் –என்க .

பேதைமை தீர்க்கும் இராமானுசன் -என்பதும் ஒரு பாடம் .

இராமானுசை தொழும் பெரியோர் பாதம் அல்லால் –
இப்படி சர்வோத்தராரான ஸ்ரீ எம்பெருமானாரை தம் தாம் உகந்து ரஷகராக அத்யவசித்து இருக்கும்
மகாத்மாக்களுடைய பிராப்யமான திருவடிகளை ஒழிய-
பெரியோர் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளான் தொடக்கமானவர் என்றபடி –

தொழும் பெரியோர்-அடியைத் தொடர்ந்து
எழும் ஐவர்கள் -என்று சொல்ல வேண்டும்படி அவனை ஆஸ்ரயித்து இருந்த பாண்டவர்கள் -சிறியார் -என்கிறபடி
உருவற்ற ஞாநியராய் போந்தார்கள் –
இவரை ஆஸ்ரயித்தவர்களுக்கு அப்படிப்பட்ட குறைகள் ஒன்றும் இன்றிக்கே
அத்தாலே இப்படிப் பட்ட பெருமை ஒன்றுமே காணும் முற்பட உண்டாவது –

தொழும் பெரியோர்
ஸ்ரீ பேராளன் பேரோதும் பெரியோர் அல்லர் –
அவர்களிலும் சீரியர் ஸ்ரீ இராமானுசனை தொழும் பெரியோர் .
செயற்கரிய செய்வார் பெரியார் .
ஸ்ரீ எம்பெருமானாரைத் தொழுகை செயற்கு அரிது -இதற்க்கு நல்ல மனத் துணிவு வேண்டும்
அவர்களுக்கு வேறு பெயர் கிடையாது -ஸ்ரீ இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஸ்ரீ ஆழ்வான் -ஸ்ரீ ஆண்டான் போல்வார்கள் –

கைங்கர்யமே நிரூபகம்–ஸ்ரீ வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள்-மேகத்தை ஸ்ரீ ஆண்டாள் கூறுவது போலே –
மேகம் தன் – ஸ்ரீ நாதன் -ஸ்ரீ பதி என்று தெரிந்து கொண்டதே-

என் தன் ஆர் உயிர்க்கு –
அவன் தொண்டர்-பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்னும்படியான அத்யாவசத்தோடே போந்து இருக்கிற
என்னுடைய விலஷணமான ஆத்மாவுக்கு –

யாதொன்றும் பற்று இல்லையே –
வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை –
வாசா யதீந்திர -என்கிற ஸ்லோகத்தாலே இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –

பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானார் அளவோடு நிற்காமல் அவனைத் தொழும் பெரியோர் அளவும் சேஷத்வத்தின்
எல்லை நிலத்தில் வந்து நிற்றலால் தமது ஆத்மாவை அருமைப் பட்டது என்று கொண்டாடுகிறார்
உயிர் -ஆத்மா
ஸ்ரீ மணவாள மா முனி அமுதனார்க்கு வாய்ந்த இந்நிலைமை தமக்கும் கிடைக்க வேண்டும் என்று
வாசாய தீந்த்ர மனசா -என்று தொடங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இடம் பிரார்த்திக்கிறார் .
ஆர் உயிர் க்கியாதொன்றும் -என்னும் இடத்தில் குற்றியலிகரம் அலகு பெற வில்லை அலகிடலாகாது–

என் தன் ஆர் உயிர்-
ததீயர் பற்றியதால் ஆர் உயிர் என்று கொண்டாடுகிறார் தம் மனசை-விலக்ஷண ஆத்மா-
கண்டு கொண்டேன் எம் ராமானுசன் தன்னை சொன்னது உபாயமாக கொண்டு-
அவன் தொண்டர் பொன் தாளில் தொண்டு கொண்டேன் என்பதே பிராப்யம் என்கிறார்.

————–

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க சோதியை

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே!
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை யாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே!–3-1-10-

நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே–3-4-2-

பால் என்கோ! நான்கு வேதப் பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல மேல் என்கோ!–3-4-6-

கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3-

கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: