ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -19–மூன்று குணங்களின் செயல்பாடுகள்–ஸ்ரீ பகவத் கீதை 14வது அத்தியாயம் – சுருக்கம்-

ஸ்ரீபகவான் உவாச
கு3ணனாம்ஸம்மிஶ்ராணாம் புமான்யேன யதா2 ப4வேத் |
தன்மே புருஷவர்யேத3முபதா4ரய ஶம்ஸத: || 1 ||

ஒவ்வொரு குணமும் ஒருவனை எப்படி வைத்திருக்கின்றது என்பதை கூறப்போகிறார்.
குணங்கள் தனித்தனியாக இருக்கும்போது மனிதன் எந்த குணத்தின் அடிப்படையில் செயல்படுவான்,
எந்த நிலையில் இருப்பான் என்பதை நான் விளக்கப் போகிறேன். மனிதர்களில் சிறந்துவிளங்கும் உத்தவா!
இவைகளை நான் கூறப்போகும் உபதேசத்திலிருந்து அறிந்து கொள்வாயாக.

ஶமோ த3மஸ்திதிக்ஷேக்ஷா தப: ஸத்யம் த3யா ஸ்ம்ருதி: |
துஷ்டிஸ்த்யாகோ3ऽஸ்புருஹா ஶ்ரத்3தா4 ஹ்ரீர்த3யாதி3: ஸ்வநிவ்ருதி: || 2 ||

தூய்மையான சத்துவ குணம் எந்த சூழ்நிலையில், எந்த காலத்தில் மேலோங்கி இருக்கின்றதோ அந்த நேரத்தில்
எந்த மாதிரியான செயல்களில், மனநிலையில் இருப்போம் என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது
ஶமஹ – இதன் பொருள் மனக்கட்டுப்பாடு அல்லது மன அமைதி. மனமானது எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டிருக்கும், எதையாவது நினைத்து துயரப்பட்டு கொண்டிருக்கும். சஞ்சலத்தோடு இருந்து கொண்டிருக்கும். இந்த மாதிரியெல்லாம் இல்லாமல் அமைதியுடனும், நிறைவுடனும் மனதை வைத்திருத்தல்
தமஹ – புலன்களை கட்டுப்படுத்துதல், புலன்களை தூண்டக்கூடிய விஷயங்களில் இருந்து நீங்கி இருத்தல், அமைதியாக இருத்தல்
திதிக்ஷா – பொறுத்துக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை
ஈக்ஷா – தெளிவாக முடிவெடுக்கும் திறன், சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளுதல், உன்னிப்பாகவும்,சரியாகவும் கவனித்தல், ஆராய்ந்தறியும் திறன்
தபஹ – தன்னுடைய கடமையை செய்தல், குணாதீதனாக உயர்வதற்கு கடைபிடிக்க வேண்டிய அனைத்து சாதனங்கள்
சத்யம் – உண்மையை பேசுதல்
தயா – கருணை, இரக்கம் (மற்றவர்களின் துயரத்தை பார்க்கும் போது இருக்க வேண்டியவை)
ஸ்ம்ருதி – ஆலோசனை செய்து விட்டு செயலில் இறங்கும் சக்தி
துஷ்டி – போதும் என்ற மனநிறைவு
தியாகஹ – விட்டுக் கொடுத்தல், நாம் எதை உயர்வாக மதிக்கின்றோமோ அதை பகிர்ந்து கொள்ளுதல், விட்டு கொடுத்தல்
அஸ்ப்ருஹா – பற்றின்மை, எல்லாவற்றிலும வைராக்கியத்துடன் இருத்தல்
ஶ்ரத3தா4 – சாஸ்திரத்திலும், குருவிடத்திலும், இறைவனிடத்திலும் நம்பிக்கை வைத்தல், கண்ணுக்கு தெரியாத விஷயங்களில் வைக்கும் நம்பிக்
ஹ்ரீஹி – தவறு செய்யும் போது அடைகின்ற வெட்கம்
தயாதிஹி – தானம் போன்ற குணங்கள்
ஸ்வ நிவிருத்தி – தன்னிடத்திலே மகிழ்ந்திருத்தல், தனிமையிலே சுகமாக இருத்தல்

காம ஈஹா மத3ஸ்த்ருஷ்ணா ஸ்தம்ப4 ஆஶீர்பி4தா3 ஸுக2ம் |
மதோ3த்ஸாஹோ யஶ:ப்ரீதிர்ஹாஸ்யம் வீர்யம் ப3லோத்3யம: || 3 ||

ரஜோ குணம் மேலோங்கி இருக்கும்போது வெளிப்படும் குணங்கள் இதில் கூறப்படுகின்றது.
காம – ஆசை, இதுதான் நம்மை செயலில் ஈடுபடுத்துகின்றது.
ஈஹா – செயல் – தேவைக்கு மேல் செயலில் ஈடுபடுதல், பயனில்லாமல் எதையாவது செய்து கொண்டிருத்தல்
மதஹ – கர்வம், செருக்கு, தன்னைப்பற்றி உயர்வாக நினைத்துக் கொள்ளுதல்
த்ருஷ்ணா – போதுமென்ற மனம் இல்லாதது, நிறைவில்லா மனம், அதிருப்தி
ஸ்தம்பஹ – வளைந்துக் கொடுக்கும் தன்மையில்லாதவன், விட்டுக்கொடுக்காத குணம், யாரையும் வணங்காத குணம், பணிவின்மை
ஆஶிஹி – காம்ய பிரார்த்தனை, காம்ய பக்தி
பிதா3 – இருமைகளைத்தான் புரிந்து வைத்திருப்பவர்கள், ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள்.
வேற்றுமையான பாவனையுடனும், பிரிவினைவாதிகளாகவும் இருப்பார்கள்.
ஸுகம் – புலன்களால் அடையும் இன்பத்தையே நாடுவார்கள். அதுதான் குறிக்கோளாக இருக்கும்.
மத உத்ஸாஹ – கர்வத்துடன் செயல்படுபவர்கள்
யஶப்ரீதிஹி – புகழில் ஆசைப்படுதல், புகழை விரும்புபவர்கள்
ஹாஸ்யம் – மற்றவர்களை கேலி செய்து சிரிப்பவர்கள், மற்றவர்களை சிரிக்க வைப்பவர்கள்
வீர்யம் – தன்னுடைய சக்தியை வெளிக்காட்டுதல். தேவையோ இல்லையோ ஆனாலும் வெளிக் காட்டிக் கொண்டிருப்பவர்கள்
பல உத்யமஹ – மிக கோரமான செயலில் ஈடுபடுதல், மிக உக்கிரமமாக செயல்படுதல்

க்ரோதோ4 லோபோ4ऽந்ருதம் ஹிம்ஸா யாச்ஞா த3ம்ப4: க்லம: கலி: |
ஶோகமோஹௌ விஶாதா3ர்தீ நித்3ராஶா பீ4ரனுத்3யம: || 4 ||

தமோ குணம் மேலோங்கி இருக்கும்போது வெளிப்படும் குணங்களாவது:
க்ரோதஹ – வெளிப்படாத கோபம், வெளிப்படாத வெறுப்பு
லோபஹ – எதையும் பகிர்ந்து கொள்ளாத மனநிலை, கஞ்சத்தனமாக இருத்தல்
அநிருதம் – பொய் கூறுதல். உண்மையை கூறும் தைரியமில்லாத குணம்
ஹிம்ஸா – மற்றவர்களை துன்புறுத்தல், கருணையின்மை, துன்பத்தில் இருப்பவரிடம் கருணையில்லாமல் இருப்பவர்கள்
யாஞ்சா – பிச்சையெடுத்தல், உழைக்க மனமில்லாமல் இலவசமாக கிடைப்பதை பெறுதல், யாசித்தல்
த3ம்ப4ஹ – இல்லாத பெருமையை இருப்பதாக காட்டிக் கொண்டிருத்தல்
க்லமஹ – எப்பொழுதும் சோர்வாக இருப்பதாக மனதில் எண்ணுதல்
க3லி – சண்டை சச்சரவு செய்து கொண்டிருத்தல். ஏதாவது ஒரு துயர சூழ்நிலையை எண்ணி துயரப்பட்டு கொண்டிருத்தல்
ஶோகம் – தோல்வியினால் சோகமடைதல், துயரமடைதல்
மோஹம் – உலகத்தை தவறாக புரிந்து கொள்ளுதல், ஒரு பொருளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை விட அதிக மதிப்பைக் கொடுத்தல்
விஷாத – மனச்சோர்வு, காரணமில்லாமல் மனம் துயரப்பட்டு கொண்டிருக்கும். அதை நீக்க முயற்சி செய்யாமல் அந்த நிலையிலேயே இருத்தல்
ஆர்தி – தன்னை பரிதாபத்திற்குரியவன் என்று நினைத்து கொண்டிருத்தல், சுய பச்சாதாபம்
நித்ரா – அதிகமான உறக்கம், தேவைக்கு மேல் தூங்கும்பழக்கத்தை உடையவர்கள்
ஆஷா – மனதில் ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசை மட்டும் இருத்தல், கற்பணையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்,
கற்பணையில் தன்னாசைகளை நிறைவேறுவதாக எண்ணி அதிலேயே மகிழ்ந்திருப்பவர்கள்
பீ4ஹி – பயம், எதையும் செய்வதற்கு பயப்படுதல்
அனுத்யமஹ – முயற்சியின்மை, குறைவான முயற்சி செய்தல்

ஸத்த்வஸ்ய ரஜஸ்ஶ்சைதாஸ்தமஸ்ஶ்சானுபூர்வஶ: |
வ்ருத்தயோ வர்ணிதப்ராயா: ஸன்னிபாதமதோ2 ஶ்ருணு || 5 ||

சத்துவ, ரஜோ, தமோ குணங்களினுடைய வெளிப்பாடுகளை வரிசைப்படி சுருக்கமாக என்னால் விளக்கப்பட்டது.
ஸன்னிபாதம் என்றால் என்ன என்பதை விளக்கப் போகிறேன் கவனமாக கேள்

ஸன்னிபாதஸ்த்வஹமிதி மமேத்யுத்3த4வ யா மதி: |
வ்யவஹார: ஸன்னிபாதோ மனோமாத்ரேந்த்3ரியாஸுபி4: || 6 ||

ஸன்னிபாதம் – பற்று, அத்யாஸம்
உடலும்,மனமும் முக்குணங்களை உடையது. நாம் எந்த குணத்தில் அதிக அபிமானம் வைக்கின்றோமோ அதற்கு
சன்னிபாதம் என்று கூறப்படுகிறது. நாம் ஏதோ ஒரு குணத்தில் அபிமானம் வைக்கும்போது, அதனால் நம்மிடத்திலிருந்து
வெளிப்படும் செயல்களையும் சன்னிபாதம் என்று கூறுகின்றார்கள்.
உத்தவா! சன்னிபாதம் என்பது நான், என்னுடையது என்று எவைகளையெல்லாம் சொல்கின்றோமோ அவைகளை இவ்வாறு அழைக்கலாம்
வியவஹார சன்னிபாதம் – அதனால் உன்னிடமிருந்து வெளிப்படும் நடத்தையும் சன்னிபாதம் என்று கூறலாம்
மனோமாத்ரேந்திரியாஸுபி4: – மனதினால் செய்யப்படும் விவகாரங்கள், உடலில் இருந்தும், புலனகளிலிருந்தும் வெளிப்படும் விவகாரங்கள்,
பிராணனின் விவகாரங்கள் இவைகள் யாவும் சன்னிபாதம் என்றே கூறப்படுகிறது.

த4ர்ம சார்தே2 ச காமே ச யதா3ஸௌ பரிநிஷ்டி2த: |
கு3ணானாம் ஸன்னிகர்ஷோऽயம் ஶ்ரத்3தா4ரதித4னாவஹ: || 7 ||

சத்துவ குணத்தைச் சார்ந்த தர்மமும், ரஜோ குணத்தைச் சார்ந்த அர்த்தமாகிய பொருளை ஈட்டுதலும்,
தமோ குணத்தைச் சார்ந்த இன்பத்தை மட்டும் அனுபவித்தலும் ஆகிய இந்த மூன்றில் ஒன்றையேதான் மனிதன்
எப்பொழுதும் நாடிக் கொண்டிருப்பான். இது குணங்களில் மனிதன் வைத்திருக்கும் அபிமானத்தை காட்டுகிறது.
இதையே ஸன்னிகர்ஷம் என்ற கூறப்படுகிறது. தர்மத்தில் இருப்பவனுக்கு சிரத்தையை கொடுக்கும்,
காம புருஷார்தத்தில் இருப்பவனுக்கு இன்பத்தைக் கொடுக்கும். அர்த்த புருஷார்தத்தில் இருப்பவனுக்கு செல்வத்தை கொடுக்கும்.

ப்ரவ்ருத்திலக்ஷணே நிஷ்டா2 புமான்யர்ஹி க்3ருஹாஶ்ரமே |
ஸ்வத4ர்மே சானு திஷ்டே2த கு3ணானாம் ஸமிதிர்ஹி ஸா || 8 ||

ரஜோ குணம்தான் செயல்களை செய்ய தூண்டிவிடும். அதிக பொறுப்புக்கள், கடமைகள் இருப்பதாக எண்ணிக் கொள்வது தவறு.
ரஜோ குணம்தான் இந்த சூழ்நிலைகளை கொடுக்கின்றது. சூழ்நிலைகள் இதை தீர்மானிக்கவில்லை.
புமான் – சாதகன்
ப்ரவிருத்தி லக்ஷணே – வெளியே சென்று பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளுதல். கிருகாஸ்ரமத்தில் இருப்பவர்களால் இவ்வாறு செய்யப்படுகிறது.
யர்ஹி நிஷ்டா – அப்படி கடமைகள் இருக்கிறது என்று நினைத்தல்
குணானாம் ஸ்மிதிஹி – உன்னிடதிலுள்ள குணத்தின் சங்கமத்தினால் தான், பற்றினால்தான் குறிப்பாக ரஜோ குணத்தினால் தான்
இவ்வாறு கடமைகளை இருப்பதாக எண்ணிக் கொள்ளப்படுகிறது
ஸ்வதர்ம ச அனுதிஷ்டத – தன்னுடைய கடமைகளை மட்டும் செய்து கொண்டு இருத்தல். இதுவும் சத்துவ குணத்தின் அடிப்படையில்தான் சாத்தியாமகின்றது.
எனவே இதிலிருந்து அறிந்து கொள்வது வெளிசூழ்நிலைகளால் நாம் செயல்படுவதில்லை குணத்தின் அடிப்படையில்தான் செயல்கள் செய்யப்படுகின்றன.

புருஷம் ஸத்த்வஸம்யுக்தமனுமீயாச்ச2மாதி3பி4: |
காமாதி3பி4 ரஜோயுக்தம் க்ரோதா4த3யைஸ்தமஸா யுதம் || 9 ||

குணலிங்கம் என்பது குணங்களை காட்டும் அடையாளம். நாம் எந்தக் குணத்தின் வசத்தில் இருக்கின்றோம் என்பதை
இந்த ஸ்லோகத்தில் விளக்கப்படுகின்றது. நம்மிடத்திலிருந்து வரும் செயல்களின் வெளிப்பாடுதான்
நாம் எந்தக் குணத்தில் இருக்கின்றோம் என்பதை காட்டிக் கொடுக்கும்..
புருஷம் ஸத்த்வ ஸம்யுக்தம் – ஒரு மனிதனை சத்துவ குணத்தில் இருந்தால்
ஸமாதிபி அனுமீயாத் – சம, தம போன்ற குணத்துடன் கூடியவனாக இருக்கிறான் என்பதை கிரகிக்க வேண்டும்
காமதிபிஹி ரஜோயுக்தம் – ஆசை, கோபம், பொறாமை போன்ற குணங்களின் வெளிப்பாட்டை வைத்து
ரஜோ குணத்தின் இருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும்
க்ரோதாதயை தமஸா யதம் – குரோதம், சோம்பல், உறக்கம் இவைகளை வைத்து தமோ குணத்தில் இருப்பதாக அறிந்து கொள்ளலாம்.

யதா2 ப4ஜதி மாம் ப4க்த்யா நிரபேக்ஷ: ஸ்வகர்மபி4: |
தம் ஸத்த்வப்ரக்ருதிம் வித்3யாத்புருஷம் ஸ்த்ரியமேவ வா || 10 ||

பக்தியும் குணங்களின் அடிப்படையில் பிரித்து பார்க்கப்படுகின்றது. சாத்விக பக்தி, ராஜஸ பக்தி, தாமஸம் பக்தி என்று பிரிக்கலாம்.
எந்த நோக்கத்துடன் இறைவனை வழிபடுகின்றோமோ அதை வைத்து இந்த பிரிவை கண்டு கொள்ளலாம்.
யதா2 பஜதி மாம் பக்த்யா – இறைவனாகிய என்னை எப்பொழுது பக்தியுணர்வுடன் வழிபடுகின்றானோ
நிரபேக்ஷஹ – என்னிடத்தில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்தப் பலனையும் கேட்காமல் செலுத்துகின்ற பக்தி
ஸ்வகர்மபிஹி – தன்னுடைய அன்றாத கடமையையே இறைவழிபாடாக செய்யும்போது,
தம் ஸத்வ ப்ரக்ருதிம் வித்யாத் – அப்படிபட்டவர்களை சத்துவ குணத்தில் இருப்பதாக அறிந்து கொள்ள வேண்டும்
புருஷம் ஸ்த்ரியமேவ வா – ஆணோ, பெண்ணோ என்ற வேறுபாடு இதில்கிடையாது

யதா2 ஆஶிஷ ஆஶாஸ்ய மாம் ப4ஜேத ஸ்வகர்மபி4: |
தம் ரஜ:ப்ரக்ருதிம் வித்3யாதி2ம்ஸாமாஶாஸ்ய தாமஸம் || 11 ||

யதா2 ஆஶிஷ ஆஶாஸ்ய – எவ்விதம் தான் விரும்பிய பொருட்களை அடைய மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு
மாம் பஜேத ஸ்வகர்மபி: – இவைகளை அடைய செய்ய வேண்டிய செயல்களே தன்னுடைய அன்றாட கடமைகளாக கொண்டு என்னை வழிபடுகின்றவர்கள்
தம ரஜ:ப்ரக்ரிதிம் வித்யா – ரஜோ குணத்தில் இருப்பவன் என்று அறிந்து கொள்வாயாக.
ஹிம்ஸாம் ஆஶாஸ்ய தாமஸம் – தனக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் தரக்கூடிய வகையில் வழிபடுகின்றவர்கள் தாமஸகுணம் உடையவர்கள்

ஸத்தம் ரஜஸ்தம் இதி கு3ணா ஜீவஸ்ய நைவ மே |
சித்தஜா யைஸ்து பூ4தானாம் ஸத்தமானோ நிப3த்4யதே || 12 ||

சத்துவ, ரஜோ, தமோ என்கின்ற மூன்று குணங்கள் ஜீவனைச் சார்ந்தது அதாவது உடல், மனம் சிதாபாஸம் இவைகளைச் சார்ந்தது
பரமாத்மாவை சார்ந்ததல்ல. நம் மனதிலிருந்து வெளிபடுகின்ற இந்த மூன்று குணங்களில் எந்த குணத்தோடு சம்பந்தம் வைக்கின்றோமோ
அதனால் பாதிக்கப்படுகிறான். துயரத்தை அடைகிறான். ஐந்து கோசங்களில் அபிமானம் வைப்பதினால் துயரத்தை அடைகின்றான்

யதே3தரௌ ஜயேத்ஸத்த்வம் பா4ஸ்வரம் விஶத3ம் ஶிவம் |
ததா3 ஸுகே2ன யுத்யேத த4ர்மஞானாதி3பி4: புமான் || 13 ||

குண ஆதிக்யம் என்பது மனதில் மூன்று குணங்களும் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கும் ஆனால் இந்த மூன்றுமே
நம்மை ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சத்துவ குணம் மேலோங்கியிருக்க வேண்டுமானால் மற்ற இரண்டு குணங்களும் அடக்கிவைக்க வேண்டும்,
அதே போன்று தான் மற்ற இரண்டு குணங்களில் உள்ள நல்ல அம்சத்தை செயல்படுத்த வேண்டும்.
யதா2 – எப்பொழுது சத்துவகுணமானது மற்ற இரண்டு குணங்களை அடக்கி வைக்கின்றதோ,
ததா3 – அப்பொழுது சுகத்தை அடைகின்றோம். புண்ணியத்தை அடைகின்றோம், ஞானத்தை அடைகின்றோம்.
சத்துவ குணமானது ஞான ஸ்வரூபமானது, அறியும் திறனையும் (பா4ஸ்வரம்), தூய்மையையும் கொடுக்க கூடியது,
பாவத்தை கொடுக்காதது, குறைகளற்றது. மன அமைதியை கொடுக்க கூடியது (ஶிவம்)

யதா3 ஜயேத்தம: ஸத்த்வம் ரஜ: ஸங்க3ம் பி4தா3 சலம் |
ததா3 து3:கே2ன யுஜ்யேத கர்மணா யஶஸா ஶ்ரியா || 14 ||

எப்பொழுது ரஜோ குணமானது மற்ற இரண்டு குணங்களை வெற்றி கொள்கின்றதோ அப்பொழுது துயரத்தை அடைகிறோம்.
இது எதாவது ஒரு வேலையை செய்ய வைத்து கொண்டிருக்கும். புகழைக் கொடுத்துக் கொண்டிருக்கும், செல்வத்தை கொடுக்கும்.
இது பற்றை ஏற்படுத்தக்கூடியது, வேற்றுமைகளை மட்டும் பார்க்க கூடியது (பி4தா3), மனதை எப்பொழுதும் சஞ்சலத்துடனே வைத்திருக்கும்.

யதா3 ஜயேத்ரஜ: ஸத்த்வம் தமோ மூட4ம் லயம் ஜட3ம் |
யுஜ்யேத ஶோகமோஹாப்4யாம் நித்ரயா ஹிம்ஸயாஶயா || 15 ||

தமோ குணமானது செயல்படாத தன்மையை கொடுக்க கூடியது. மேலும் உறக்கம், எதையும் கிரகிக்க முடியாத மனநிலையை கொடுக்க கூடியது.
எப்பொழுது தமோ குணம் மற்ற இரு குணங்களை வெற்றி கொள்கிறதோ அப்போது சோகத்தையும், மோகத்தையும், அடைகிறோம்.
சோகம் என்பது துயரத்தை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வருந்தி கொண்டிருக்கும் நிலை.
மோகம் என்பது மனச்சோர்வு, எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்ளும் நிலை. தேவைக்கு மேல் உறங்கிக் கொண்டு இருத்தல்.
இவர்களுடைய செயல்கள் மற்றவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்க கூடியது. கற்பணையில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்,
வெறும் ஆசையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டிருப்பார்கள்.

யதா3 சித்தம் ப்ரஸீதே3த இந்த்3ரியாணாம் ச நிவ்ருதி: |
தே3ஹேऽப4யம் மனோऽஸங்க3ம் த்த்ஸத்த்வம் வித்3தி4 மத்பத3ம் || 16 ||

எப்பொழுது மனம் அமைதியுடன் இருக்கின்றதோ, மனதிலுள்ள விருப்பு-வெறுப்புக்கள் வெளிப்படாமல் இருக்கின்றதோ,
புலன்களும், அறிவுக்கு அடங்கி இருக்கின்றதோ, எல்லா சூழ்நிலைகளிலும் அடங்கி இருக்கின்றதோ,
தேகத்தை குறித்து பயம் இல்லாமல் இருக்கின்றதோ, மனம் அதிக பற்றற்ற நிலையில் இருக்கின்றதோ இந்த நிலைகளே
சத்துவ குணத்தின் வெளிப்பாடாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த சத்துவ குணம் பகவானை அடைவதற்கு உதவும் படியாக, வழியாக இருக்கும்

விகுர்வன்க்ரியயா சாதீ4ரநிவ்ருத்திஶ்ச சேதஸாம் |
கா3த்ராஸ்வாஸ்த்2யம் மனோ ப்4ராந்தம் ரஜ ஏதைர்னிஶாமய || 17 |

அதிக செயல்களினால் மனம் சஞ்சலமடைந்து, நாற்புறங்களிலும் புத்தி அலைந்து கொண்டிருக்கும்போது புலன்கள்
அமைதியில்லாமல் இருந்து கொண்டிருக்கும் போது கர்மேந்திரியங்களும் அமைதியின்மையுடன் இருத்தல்,
மனமானது எப்பொழுதும் தவறான எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
இவைகள் அனைத்தும் ரஜோ குணத்தின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸீத3ச்சித்தம் விலீயேத சேதஸோ க்3ரஹணேऽக்ஷமம் |
மனோ நஷ்ட2ம் தமோ க்3லானிஸ்தமஸ்தது3பதா4ரய || 18 ||

தமோ குணம் மற்ற இரண்டு குணங்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தும்போது மனம் சோர்வடைந்திருக்கும்.
புத்தியானது ஒரு வேலையை செய்யும்போது அதனால் சோர்வடைந்தாலும், வேறொரு வேலையை ஆர்வத்தோடு செய்வதற்கு தயாராக இருக்கும்.
மனம் சோர்வடையும்போது உறக்கத்திற்கு சென்று விடுகின்றது. ஆத்மாவின் ஸ்வரூபம் இருத்தல், அறிவு என்று சொல்லப்படுகின்றது.
இருத்தல் குணம் ஸ்தூல உடலில் வெளிப்படுவதில்லை. சத்துவ குணத்திலிருந்து மனம் தோன்றியிருப்பதால் அது ஆத்மாவை
பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்கின்றது. அதனால் உணர்வுடையதாக இருக்கின்றது.
அந்த மனம் சரீரத்தில் அபிமானம் வைத்திருப்பதால் உடலும் உணர்வுடையதாக இருப்பதுபோல் தோன்றுகின்றது.
மனமானது தமோ குணத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது சக்தியை இழந்திருக்கின்ற நிலையில் சைதன்யத்தை பிரதிபிம்பிக்கும்
தன்மையை இழந்து விடுகின்றது. அது ஜடம் போன்ற தன்மையை அடைந்து அறிவை அடையும் சக்தியை இழந்து விடுகின்றது.
தமோ குணம் மேலோங்கி இருக்கும் போது மனம் தற்காலிகமாக ஆத்மாவினுடைய சைதன்ய ஸ்வரூபத்தை பிரதிபிம்பிக்கின்ற
சக்தியை இழந்து விடுகின்றது அதனால் உணர்வை இழந்துவிடுகின்றது. எனவே ஸ்தூல உடலில் எற்படும் வலியும் தெரிவதில்லை.
தமோ குணத்தின் பிடியில் இருப்பவர்களிடம் எந்த அறிவுரையும் எடுபடாது. அந்த நிலையில் அறியாமை என்ற இருள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள்.
ஆழ்மனதில் ஏதோ ஒரு சோகம் இருக்கும். மனம் சோர்வு அடைந்திருக்கும். இந்த சோகம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்.
தமோ குணத்தில் இருக்கும் குறைப்பாட்டை மட்டுமே நீக்க வேண்டும். சோம்பல், மனச்சோர்வு, கவனக்குறைவு
போன்றவைகள் தமோ குணத்தினல் வரும் குறைபாடுகள்

ஏத4மானே கு3ணே ஸத்த்வே தே3வானாம் ப3லமேத4தே |
அஸுராணாம் ச ரஜஸி தமஸ்யுத்3த4வ ரக்ஷஸாம் || 19 ||

ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப செயல்படும். புலன்கள் தேவ, அசுர, ராட்சஸ அம்சங்கள் என
மூன்று விதமாக செயல்படுகிறது. மற்றவர்களுடைய நடவடிக்கைகள், நம்முடைய ரஜோ, தமோ, சத்துவ குணத்தை தூண்டிவிடுவதால்
அதற்கேற்ப நாம் செயல்படுகின்றோம். எனவே அசுர, ராட்சஸ அம்சத்தை தூண்டும்படி இருக்கும் சூழ்நிலைகளிலிருந்து விலகி செல்ல வேண்டும்.
சத்துவ குணமானது மேலோங்கி இருக்கும் போது தேவர்களுடைய சக்தியை அடைகின்றோம். சூட்சும,ஸ்தூல சரீரத்திலுள்ள தேவகுணம் வெளிப்படும்.
இதனால் நமக்கும் பிறருக்கும் நன்மையை கொடுக்கும் நிலையில் இருப்போம்.
ரஜோ குணமானது மேலோங்கி இருக்கும் போது அசுரத் தன்மையை வெளிப்படுத்துவோம். புலன்களையும், அந்தக்கரணத்தையும்
நம்முடைய இன்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் செயல்பட ஆரம்பித்து விடும்.
தமோ குணம் மேலோங்கும்போது ராட்சஸ தன்மையானது வெளிப்படும்.
ராட்சஸ தன்மையில் உள்ளவர்கள் மற்றவர்களின் கஷ்டத்தில் இன்பத்தை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களை இம்சைபடுத்தி அதனால் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். சொல்லாலோ, செயலாலோ, எண்ணங்களினாலோ
மற்றவர்களுக்கு துன்பத்தை கொடுப்பது, ஹிம்சை பண்ணுவது தமோகுணத்தின் வெளிப்பாடாகும்.
மற்றவர்களின் குணத்தை நான் தூண்டும் செயலில் ஈடுபடக்கூடாது.

ஸத்த்வாஜ்ஜாக3ரணம் வித்3யாத்3ரஜஸா ஸ்வப்னமாதி3ஶேத் |
ப்ரஸ்வாபம் தமஸா ஜந்தோஸ்துரீயம் த்ரிஷு ஸந்ததம் || 20 ||

மூன்று அவஸ்தைகளை முக்குணங்களோடு ஒப்பிட்டு ஆத்ம தத்துவத்தை பகவான் உபதேசிக்கிறார்.
சத்துவ குணம் ஜாக்ரத் அவஸ்தையோடும், ரஜோ குணம் கனவு நிலையோடும், தமோ குணம் ஆழ்நிலை உறக்கத்தோடும் ஒப்பிடப்படுகிறது.
சத்துவ குணம் விழிப்பு நிலையில் வைத்திருக்கின்றது. இந்த நிலையிலும் மூன்று குணங்களுக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள்.
சத்துவ குணம் அடிப்படையிலே விழிப்பு நிலையில்தான் வைத்திருக்கும். அதேபோல ரஜோகுணம் கனவு நிலைக்கு காரணமாகின்றது.
கனவிலும் முக்குணங்களின் வெளிப்பாட்டிற்கேற்ப விஷயங்களை அனுபவிப்போம். எல்லா ஜீவராசிகளுக்கும்
இந்த மூன்று அவஸ்தைகளுக்கும் மூன்று குணங்களும் பொதுவானது. நான்காவது நிலையான துரீயம் என்ற தத்துவமானது
மூன்று அவஸ்தைகளிலும் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது. இது எந்த சரீரத்திலும் அபிமானம் வைக்காதிருக்கும் சைதன்யம் தான் ஆத்மா.
நாம் எந்த உபாதியில் நான் என்ற அபிமானம் வைக்கின்றோமோ அதற்கேற்ற உலகத்தை அனுபவிக்கின்றோம்.
முக்குணங்கள் அனாத்மா விஷயத்தைச் சார்ந்தது.

உபர்யுபரி க3ச்ச2ந்தி ஸத்த்வேன ப்3ராஹ்மணா ஜனா: |
தமஸாதோ4ऽத4 ஆமுக்2யாத்3ரஜஸாந்தரசாரிண: || 21 ||

இறந்ததற்கு பிறகு நாம் இந்தக் குணங்களால் அடையும் பலன்களை இதில் கூறுகிறார்.
உபர்யுபரி கச்சந்தி – மேலுலகங்களை சத்துவ குணத்தில் உள்ளவர்கள் அதன் பலனாக அடைகிறார்கள்.
பிரம்மலோகம் வரை இதனால் அடைகிறார்கள். தமோ குணத்தில் உள்ளவர்கள் கீழான உலகங்களுக்கு செல்கிறார்கள்
அல்லது இந்த லோகத்திலே மரம், செடி, கொடி வரையுள்ள உலகங்களுக்கு செல்கிறார்கள்.
ரஜோ குணத்தில் உள்ளவர்கள் இடைப்பட்ட உலகங்களுக்கு செல்கிறார்கள் அல்லது நாம் வாழும் இந்த பூலோகத்திலேயே பிறக்கிறார்கள்

ஸத்த்வே ப்ரலீனா: ஸ்வர்யாந்தி நரலோகம் ரஜோலயா: |
தமோலயாஸ்து நிரயம் யாந்தி மாமேவ நிர்கு3ணா: || 22 ||

சத்துவ குணத்தின் ஆதிக்கத்தில் இருந்துக் கொண்டிருக்கும் போது மரணமடைபவர்கள் சொர்க்க லோகம் போன்ற மேலான
உலகத்தை அடைவார்கள். ரஜோ குணத்தில் இருக்கும் போது மரணமடைபவர்கள் மனித லோகத்தை அடைகிறார்கள்.
தமோ குணத்தில் இருக்கும் போது இறப்பவர்கள் நரக லோகத்தை அடைகிறார்கள்.
குணாதீதன் என்பவன் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் என்னையே அடைகின்றான், மோட்சத்தை அடைகின்றான்.

மத2ர்பணம் நிஷ்ப2லம் வா ஸாத்த்விகம் நிஜகர்ம தத் |
ராஜஸம் ப2லஸங்கல்பம் ஹிம்ஸாப்ராயாதி3 தாமஸம் || 23 ||

நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.
கர்மயோகம் என்பது சாத்விக கர்மம். சாஸ்திரத்தில் சொல்லியபடி தர்மப்படி செயல்பட்டால் அவைகளெல்லம் சாத்விக செயல்கள்.
காம்ய கர்மங்கள் அதாவது பலனை எதிர்ப்பார்த்து செய்யும் செயல்கள் ராஜஸ குணத்தில் இருந்து வருபவைகள்.
சாஸ்திரத்தில் செய்யக்கூடாது என்று விதித்த கர்மங்களை செய்வது தாமஸ செயல்கள்.

பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு செய்யும் செயல்களும், பலனில் பற்றில்லாமல் செய்யப்படுகின்ற செயல்களும்(நிஷ்பலம்),
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் செயல்கள், தன்னுடைய கடமைகளை செய்தல், சாஸ்திரத்தில் நமக்கு விதித்திருக்கும்
கடமைகளை செய்தல் இவைகளெல்லாம் சாத்விகமான செயல்கள். பலனை எதிர்ப்பார்த்து செய்யும் செயல்கள் ராஜஸ செயல்கள்.
ஹிம்சை பிரதானமாக செய்கின்ற செயல்கள் யாவும் தாமஸ செயல்களாகும்.
பாவத்தைக் கொடுக்கின்ற கர்மங்களே ஹிம்சையினால்தான் வருகின்றது.

கைவல்யம் ஸாத்த்விகம் ஞானம் ரஜோ கைவல்பிகம் ச யத் |
ப்ராக்ருதம் தாமஸம் ஞானம் மன்னிஷ்ட2ம் நிர்கு3ணம் ஸ்ம்ருதம் || 24 ||

அறிவானது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்றாக பிரிக்கப்படுகிறது-வேற்றுமையுடன் செயல்படுவது ராஜஸம்.
மிக கீழான அறிவாகும் தாமஸமான அறிவு. அரைகுறைவான அறிவு தாமஸ அறிவு.
ஈஸ்வரனைப் பற்றிய ஞானம் சாத்விக ஞானமென்றும் அழைக்கலாம்.

வனம் து ஸாத்த்விகோ வாஸோ க்3ராமோ ராஜஸ உச்யதே |
தாமஸம் த்3யூதஸத3னம் மன்னிகேதம் து நிருகு3ணம் || 25 ||

வசிக்கின்ற இடத்தையும் மூன்றாக பிரிக்கலாம். வனவாசம் என்பது சாத்விகமான சூழ்நிலையில் வசித்தல். இது தவத்திற்கு உகந்த இடம்,
தனிமையில் வசிக்கத்தகுந்த இடமாக இருப்பது சாத்விகமான இடம். நாட்டில் வசிப்பது ராஜஸமான இடத்தில் வசிப்பது என்று கூறப்படுகிறது.
சூதாட்டம் நடக்கும் இடம் போன்ற தீய செயல்கள் நடக்கின்ற இடங்கள் யாவும் தாமஸமான இடம்.
பகவான் இருக்கின்ற இடமான கோயில்கள் சாத்விகமான இடமாகும்.

ஸாத்த்விக: காரகோ ஸங்கீ3ऽராகா3ந்தோ4 ராஜஸ: ஸ்ம்ருத: |
தாமஸ: ஸ்ம்ருதிவிப்4ரஷ்டோ நிர்கு3ணோ மத3பாஶ்ரய: || 26 ||

கர்த்தாவையும் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகையாக கூறுகிறார்.
செயல் செய்பவன் கர்த்தா, பலனை அனுபவிப்பவன் போக்தா என்று அழைப்பர்.
கர்மயோகியாக தர்மப்படி செயல் செய்பவன் சாத்விமான கர்த்தா. காம்ய கர்மத்தை செய்பவன் ராஜஸ கர்த்தா,
கவனக்குறைவாகவும், அதர்மமாகவும் செயல்படுபவன் தாமஸ கர்த்தா.
யோசிக்காமல், அறிவை உபயோகிக்காமல் செயல்படுபவன் தாமஸ கர்த்தா.
சாத்விக கர்த்தா அடையும் பலன் புண்ணியம், மனத்தூய்மையாகும். மற்ற இருவகை கர்த்தாக்கள் அடைவது பாவமும், குற்ற உணர்வும்தான்.

சாத்வீகமாக செயல்படு கர்த்தா பற்றற்றவனாக இருப்பான். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்காது.
இது ராஜஸ கர்த்தாவின் செயல்முறை. பற்றினால், உணர்ச்சி பெருக்கினல் மதிமயங்கி செயல்படுபவன் ராஜஸ கர்த்தா.
ஏற்கனவே அடைந்த அறிவை உபயோகிக்காமல் செயல்படுபவன், சோம்பலினாலும் அறிவை உபயோகிக்காமல் செயல்படுபவன்,
கவனக்குறைவாக செயல்படுபவம் தாமஸ கர்த்தாவாகும்.
சாத்விக கர்த்தா மேலான சாத்விகமான குணாதீதனாக உயர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பான்,
மேலும் பகவானை அடைவதே குறிக்கோளாக கொண்டு செயல்படுவான். செயல் செய்ய ஆரம்பிக்கும்போது மிகுந்த கவனத்துடனும்,
உணர்ச்சிகள் அடங்கிய நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகுதான் அந்த செயலை செய்ய தொடங்க வேண்டும்.

ஸாத்விக்யாத்4யாத்மிகீ ஶ்ரத்3தா4 கர்மஶ்ரத்3தா4 து ராஜஸீ |
தாமஸ்யத4ர்மே யா ஶ்ரத்3தா4 மத்ஸேவாயாம் து நிர்கு3ணா || 27 ||

சிரத்தையும் மூன்று வகையாக பிரித்து கூறுகிறார். அவைகள் மூன்று குணங்களின் அடிப்படையில்தான் பிரிக்கப்படுகிறது.
சாத்விகமானவர்களிடத்தில் வைக்கும் நம்பிக்கை சாத்விக சிரத்தை. அவர்களின் அறிவுரை நம்முடைய நம்பிக்கைக்கு வேறாக இருந்தாலும்
அவர்கள் கூறும் வார்த்தையில் வைக்கும் சிரத்தைதான் சாத்விகமான சிரத்தை.
அதர்மத்தில் வைக்கும் சிரத்தை ராஜஸ, தாமஸ சிரத்தை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸாத்விக்யாத்யாத்மிகி ஶ்ரத்தா – சாத்விக சிரத்தை நித்திய வஸ்துவை ஏற்றுக் கொள்வதில் உள்ள நம்பிக்கை.
சாஸ்திரம் உபதேசிக்கும் பிரம்ம ஞானத்தை ஏற்றுக் கொள்வது. உபநிஷத்தின் வார்த்தைகளில் இருக்கும் நம்பிக்கை சாத்விக சிரத்தை.
கர்ம ஶ்ரத்தா து ராஜஸீ – செயலினால் வரும் பலனை நம்புவது, பலனைத் தரும் செயல்களில் மட்டும் வைக்கும் நம்பிக்கை
ராஜஸ சிரத்தை. கர்ம காண்டத்திலுள்ள வார்த்தையில் மட்டும் சிரத்தையுடன் இருப்பது ராஜஸ சிரத்தை.
தாமஸி அதர்மேயா ஶ்ரத்தா – அதர்ம மான செயல்களில் இருக்கும் நம்பிக்கை தாமஸ சிரத்தை,
அதர்மமான செயல் என்று தெரிந்தாலும் அதுதான் பலனைக் கொடுக்கும்,
திருப்தியைக் கொடுக்கும் என்று நம்புவது தாமஸ சிரத்தை.
அதர்ம வழியில் செல்ல தூண்டுபவர்களின் வார்த்தைகளில் வைக்கும் நம்பிக்கையும் தாமஸ சிரத்தையாகும்.
மத்ஸெவாயாம் து நிர்குணா – நிர்குணமான சிரத்தையானது ஈஸ்வரன், குரு சேவையை குறிக்கும்.
ஈஸ்வர வழிபாடு, மோட்சத்தை அடைய எடுக்கும் முயற்சியும் இதைக் குறிக்கிறது.

பத்2யம் பூதமனாயஸ்தமாஹார்யம் ஸாத்விகம் ஸ்ம்ருதம் |
ராஜஸம் சேந்த்3ரியப்ரேஷ்ட2ம் தாமஸம் சார்திதா3ஶுசி || 28 ||

ஆகாரமும் மூன்று விதமாக பகவான் பிரித்திருக்கிறார். ஆகாரத்தின் சுவையின் அடிப்படையிலும், தன்மையின் அடிப்படையிலும்
இந்த பிரிவு அமைந்திருக்கிறது. ஸ்தூலமானது கழிவாகவும், சூட்சுமமான உணவு உடலாகவும், அதிசூட்சுமமானது மனதை வளர்க்கின்றது.
வயதான காலத்தில் மனமானது அதிகமாக சாப்பிட வைத்து விடும் அல்லது சாப்பிடவே அனுமதிக்காது.
உணவும் சாத்விக சிரத்தை வளர்வதற்கு காரணமாகின்றது.
பத்யம் – உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்ற உணவுவகைகள்
பூதம் – தூய்மையான உணவு, சமைக்கின்ற இடம், பாத்திரம், சாஸ்திர ரீதியாய தூய்மை படுத்தி வைத்தல்,
சாஸ்திர நிஷேத உணவுவகைகள் அசுத்தமானது
அனாயஸ்தம் – எந்த உணவு எளிமையாக கிடைக்கின்றதோ, நாம் வசிக்குமிடத்தில் எது சுலபமாக கிடைக்கின்றதோ,
பருவ காலங்களில் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள்
ஆஹர்யம் சாத்விகம் ஸ்ம்ருதம் – இப்படிபட்ட உணவு வகைகள் சாத்விகமானது என்று கூறப்படுகிறது
அளவுடன் சாப்பிட வேண்டும்., பசிக்கும்போது சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுகின்ற உணவும் சாத்விகமானது
ராஜஸம் ச் இந்திரிய ப்ரேஷ்டம் – சுவைக்காக, இந்திரிய சுகத்தைக் கொடுக்க கூடிய உணவு வகைகள் ராஜஸமானது
தாமஸம் ச் ஆர்த்தம் ஶுசி – நோயைக் கொடுக்க கூடிய உணவு வகைகள், தூய்மை அற்ற உணவு வகைகளும் தாமஸ வகையை சார்ந்தது.

ஸாத்த்விகம் ஸுக2மாத்மோத்த2ம் விஷயோத்த2ம் து ராஜஸம் |
தாமஸம் மோஹதை3ன்யோத்த2ம் நிர்கு3ணம் மத3பாஶ்ரயம் || 29 ||

ஒருவருக்கு எது இன்பத்தைக் கொடுக்கின்றதோ அத்தகைய உணவுவகைகள் அவருடைய சுபாவத்தை சுட்டிக் காட்டிவிடும்.
சாஸ்திரம் கேட்பதிலோ, அதன் உபதேசத்த சிந்திப்பதிலோ, தியானம் செய்வதிலோ சுகத்தை அனுபவித்தால் அது சாத்விகமான சுகங்கள்.
எந்தப் பொருட்களினால், செயல்களினால் இன்பம் அடைகின்றோமோ அதை வைத்து எந்த வகையான சுகத்தை அனுபவிக்கின்றோம் என்று அறிந்து கொள்ளலாம்.
சாத்விகம் ஸுகம் – ஆத்ம தத்துவத்தை அறிவதனாலும், அதை அடைய எடுக்கும் முயற்சியில் கிடைக்கும் சுகமானது சாத்விகமானது.
ஞானயோகத்தை கடைப்பிடிப்பதில் கிடைக்கும் சுகம் சாத்விகமானது.
ஆமோத்தம் – அமைதிபடுத்திய மனதிலிருந்து கிடைக்கும் சுகம் நற்பண்புகளே மனதில் சுகத்தை உருவாக்குவது
விஷய உத்தம் து ராஜஸம் – ஒரு பொருளோடு புலன்கள் வைக்கும் சம்பந்தத்தால் வருகின்ற தற்காலிக சுகமானது ராஜஸ சுகம்
தாமஸம் மோஹதைனயோத்தம் – மோக நிமித்தமாக, தை3ன்ய நிமித்தமாக வரும் சுகமானது தாமஸ சுகம்
மோகம் என்பது துக்கத்தை கொடுக்க கூடிய ஒன்றின் மீது சுகத்தை காண்பது. தற்காலிகமாக சுகத்தைக் கொடுக்கும் பொருட்கள்
மீது நிலையான சுகத்தை கொடுக்கும் என்று நம்ப வைக்கும் மனநிலை
தை3ன்யம் என்பது நம்மையே நாம் பரிதாபத்துக்குரியவனாக பாவித்துக் கொள்ளுதல், சுய பச்சாதாபம் உடைய மனநிலை,
தன்னைத்தானே தாழ்த்தி கொள்ளுதல்
நிர்குணம் மதாபாஶ்ரயம் – என்னை நிமித்தமாக கொண்டு வரும் சுகம் நிர்குணம். பகவானைப் பற்றிய அறிவை அடைவதினால்
வரும் சுகம் நிர்குணமானது. என்னைப்பற்றிய ஞானத்தினால் அடையும் மோட்ச சுகம் சாத்விகமானது

த்3ரவ்யம் தே3ஶ: ப2லம் காலோ ஞானம் கர்ம ச காரக: |
ஶ்ரத்3தா4வஸ்தா2க்ருதிர்நிஷ்டா2 த்ரைகு3ண்ய: ஸர்வ ஏவ ஹி || 30 ||

த்ரவ்யம் – திடமான பொருட்கள், இங்கே உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மூன்று வகையாக பிரித்திருந்ததை பார்த்தோம்.
அதேபோல வசிக்கும் இடமும் அங்கு வசிக்கின்ற மக்களின் குணங்களைப் பொறுத்து அமைகின்றது.
நமக்கு கிடைக்கும் பலன்கள், காலம், ஞானம் இவைகளும் மூன்றாக இருக்கின்றது. நாம் செய்யும் செயல்களும், கர்த்தாவும்,
சிரத்தையும், அவஸ்தைகளும், எப்படிப்பட்ட உடல் கிடைக்கும், நிஷ்டா இவைகளெல்லாம்
மூன்று குணங்களின் அடிப்படையில்தான் அமைகிறது என்பதை அறிந்தோம்.

ஸர்வே கு3ணமயா பா4வா: புருஷாவ்யக்ததி4ஷ்டிதா: |
த்3ருஷ்டம் ஶ்ருதம் அனுத்4யாதம் பு3த்3த4யா வா புருஷர்ஷப4 || 31 ||

ஸர்வே பாவா – படைக்கப்பட்ட அனைத்தும்
குணமயா – குணமயமாகவே உள்ளது
புருஷ அவ்யக்த திஷ்டிதா – புருஷன், அவ்யக்தம் (மாயா, பிரிகிருதி) இரண்டையும் ஆதாரமாக கொண்டுள்ளது
த்ருஷ்டம் வா புத்தயா – புலன்களால், புத்தியினால் பார்க்கப்பட்டவைகள்
ஶ்ருதம் – கேட்கப்பட்டவைகள்
அனுத்யாதம் – யூகித்து அறிபவைகள்
புருஷர்ஶப – புருஷனையே ஆதாரமாக கொண்டுள்ளது

ஏதா: ஸம்ஸ்ருத்ய: பும்ஸோ கு3ணகர்மநிப3ந்த3னா: |
யேனேமே நிர்ஜிதா: ஸௌம்ய கு3ணா ஜீவேன சித்தஜா: |
ப4க்தியோகே3ன மன்னிஷ்டோ2 மத்3பா4வாய ப்ரபத்3யதே || 32 ||

ஏதா ஸம்ஸ்ருத்ய: பும்ஸஹ – மனித இனத்திற்கு இந்த சம்சாரமானது
குணகர்ம நிபந்தனா: – குணத்தாலும், செயல்களாலும் வந்துள்ளது
நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் அனைத்தும் குணத்தின் அடிப்படையில்தான் இருக்கும்.
குணத்தின் அடிப்படையில் செய்யும் செயலினால் வரும் பலனை அனுபவிப்பதுதான் சம்சாரம்
யேன ஜீவேன – எந்த ஜீவனால், எந்தவொரு சாதகனால்
குணா நிர்ஜிதா – இந்த குணங்கள் சீரமைக்கப்படுகின்றதோ, நெறிபடுத்தப்படுகின்றதோ
சித்தஜா – நம் புத்தியில் தோன்றி செயல்பட்டு கொண்டிருக்கின்ற
பக்தியோகேன – பக்தி என்ற சாதனத்தை பயன்படுத்தி
மன்னிஷ்டஹ – என்னை சரணடைந்தவன்
மத்பாவாய ப்ரபத்யதே – என்னை அடைவதற்கு தகுதியடைந்தவனாக இருக்கிறான்

தஸ்மாத்3தே3ஹமிமம் லப்3த்4வா ஞானவிக்ஞானஸம்ப4வம் |
கு3ணஸங்க3ம் வினிர்தூய மாம் ப4ஜந்து விசக்ஷணா: || 33 ||

மனித சரீரத்தின் பெருமையை கூறி, குணங்களை சீரமைத்து மோட்சத்தையடைய முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
தஸ்மாத் – ஆகவே
ஞானவிக்ஞான ஸம்பவம் – ஞானமும், விக்ஞானமும் அடைவதற்கான வாய்ப்பை உடைய
இமம் தேஹ லப்த்வா – இந்த மனித உடலை அடைந்து
ஞானம் என்பது ஆத்ம ஞானத்தையும், விக்ஞானம் என்பது ஆத்மஞான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையை குறிக்கின்றது.
குணஸங்கம்– உடலிலும், உலகத்திலும் உள்ள குணத்திலுள்ள பற்றை
வினிர்தூய – முழுமையாக நீக்கி
மாம் பஜந்து விசக்ஷணா – அறிவையுடையவர்கள் என்னை நாடி வர வேண்டும்.

நி:ஸங்கோ3 மாம் ப4ஜேத்3வித்3வான்ப்ரமத்தோ ஜிதேந்திரிய: |
ரஜஸ்தமஶ்சாபி4ஜயேத்ஸத்த்வஸம்ஸேவயா முனி: || 34 ||

இது ஒரு முக்கியமான ஸ்லோகம், இதில் முழு வேதாந்தத்தின் சாரத்தை கூறி இருக்கின்றார்.
சத்துவ குணத்தின் துணைக்கொண்டு ரஜோ, தமோ குணத்தை வெல்ல வேண்டும்.
தமோ குணத்திலிருப்பவன் முதலில் ரஜோ குணத்திற்கு சென்ற பிறகுதான் சத்துவ குணத்திற்கு செல்ல முடியும்.
குணமாற்றம் தவத்தினாலும், நற்செயல்களாலும்தான் சாத்தியமாகும். இந்த சாதனத்தை குணபரிவர்த்தனம் என்று கூறுவர்
வித்வான் – விவேகத்தை அடைந்தவர்கள் (சாத்திய-சாதன அறிவை அடைந்தவர்கள்) நித்ய-அநித்ய வஸ்து விவேகம் அடைந்தவர்கள்
மாம் பஜதே – ஈஸ்வரனான என்னை அடைவதே லட்சியமாக கொண்டு
நி:ஸங்கஹ – வைராக்கியத்தை அடைந்து
அப்ரமத்தஹ – மிகவும் எச்சரிக்கையாகவும், மிக்க கவனத்துடனும் இருப்பவன். உலகத்திலுள்ள போகப் பொருட்களிடத்தில்
இவ்வாறு இருக்க வேண்டும். பலன்கள் விவகாரம் செய்யுமிடத்தில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்
ஜிதேந்திரியஹ – புலன்களை அமைதிபடுத்தியவன்; தமத்தைப் பின்பற்றியவனாக இருப்பவன். புலன்களும், மனமும்
இன்பத்தையே நாடியே செல்லும். புத்திதான் உண்மையான லட்சியத்தை வைத்திருக்கும்.
முனிஹி – அறிவை அடைந்த சாதகன்
ஸத்வஸம்வேயா – சத்துவ குணத்தின் உதவியை எடுத்துக் கொண்டு, சத்துவ குணத்திற்கு செயல்களினால் இவைகளை வென்று
சத்துவத்திலே நிலைத்து நிற்க வேண்டும்
ரஜஹ தமஹ அபிஜயேத் – ரஜோ, தமோ குணத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

ஸத்த்வம் சாபி4ஜயேத்3யுக்தோ நைரபேக்ஷ்யேண ஶாந்த்தீ4: |
ஸம்பத்3யதே கு4ணைர்முக்தோ ஜீவோ ஜீவம் விஹாய மாம் || 35 ||

சத்துவ குணத்தை அடைந்தாலும் இதுவும் நம்மை பந்தப்படுத்திக் கொண்டிருக்கும். அந்த நிலையில் அனுபவிக்கும்
இன்பத்திற்கு அடிமையாகி விடுவோம். அமைதியான சூழ்நிலைக்கும் அடிமையாகி இருப்போம்.
எனவே இதிலிருந்து நீங்கி மேலே முன்னேற வேண்டும். இனி செயல் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.
அறிவை அடைந்தாலே போதும், அறிவினால் நான் இந்த உடலும், மனமும் அல்ல என்ற அனுபவத்தை அடைவோம்.
ஸத்வம் ச அபிஜயேத் – சத்துவத்தையும் வெற்றி கொள்ள வேண்டும்
முக்தஹ – சத்துவ நிலையிலுள்ள விவேகி
நைரபேக்ஷ்யேன – அதிலிருந்து நம்மை நீக்கி கொள்ளுதல், உடலின் மீதும், மனதின் மீதும் கொண்டுள்ள அபிமானத்தை
விடுவதன் மூலம் சத்துவத்தையே கடந்து போக வேண்டும்,
ஶாந்த்தீ4: – ஶமஹ – சாந்தமான அந்தக்கரணத்தை அடைவதனாக
குணைஹி முக்தஹ – அனைத்து குணங்களிலிருந்தும் விடுபட்டவனாக, விடுதலை அடைந்தவனாக
ஜீவோ ஜீவம் விஹாய – ஜீவன் ஜீவத்வத்தை தியாகம் செய்தவனாக, நான் ஜீவனென்கின்ற நினைவை அழித்தவனாக,
சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கியவனாக
மாம் ஸம்பத்யதே – மோட்ச ஸ்வரூபமான என்னையே அடைகின்றான்

ஜீவோ ஜீவ்வினிர்முக்தோ கு3ணைஶ்சாஶயஸம்ப4வை: |
மயைவ ப்3ரஹ்மணா பூர்ணோ ந ப3ஹிர்னாந்தரஶ்சரேத் || 36 ||

ஜீவஹ ஜீவ வினிர்முக்தஹ – ஜீவன் ஜீவனிடத்திலிருந்து விடுதலை அடைந்து
ஆஶயஸம்பவைஹி – மனதிலிருந்து வெளிப்படுகின்ற
குணை ச – குணங்களிலிருந்து விடுதலை அடைந்தவனாக
ப்ரஹ்மஃஆ பூர்ண மயா ஏவ – என் ஸ்வரூபமாக முழுமையுடன், மனநிறைவுடன் பிரஹ்ம்மனாகவே இருந்து கொண்டு இருப்பவன்
ந பஹிஹி ந அந்தஹ சரேத் – உள்ளேயும், வெளியேயும் ஆக வேண்டியது, அடைய வேண்டியது ஒன்றுமில்லாதவனாக இருப்பான்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: