ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -16-புருஷன்,பிரகிருதி விளக்கம்–

ஶ்ரீஉத்தவ உவாச
கதி தத்த்வானி விஶ்வேஶ ஸங்க்2யாதான்யுஷிபி4: ப்ரபோ4 |
நவைகாத3ஶ பஞ்ச த்ரீண்யாத்த2 த்வமிஹ ஶுஶ்ரும || 1 ||

உலகங்களுக்கெல்லாம் தலைவராக இருப்பவரே! ரிஷிகளால் தத்துவங்கள் எத்தனை வகைகளாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
தாங்கள் இருபத்தெட்டு (9+11+5+3) தத்துவங்கள் என்று கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

கேசித்ஷட்3விம்ஶதிம் ப்ராஹுரபரே பஞ்சவிம்ஶதிம் |
ஸப்தைகே நவ ஷட்கேசிச்சத்வார்யேகாத3ஶாபரே |
கேசித்ஸப்த்த3ஶ ப்ராஹு: ஷோட3ஶைகே த்ரயோத3ஶ || 2 ||

சிலர் தத்துவங்களின் எண்ணிக்கை இருபத்தாறு என்றும், மற்றும் இருபத்தைந்து என்றும், ஏழு என்றும்,
நான்கு என்றும் பதினொன்று என்றும் பலவகையாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஏதாவத்த்வம் ஹி ஸங்க்2யானாம்ருஷயோ யத்3விவக்ஷயா |
கா3யந்தி ப்ருத2கா3யுஷ்மன்னித3ம் நோ வக்துமர்ஹஸி || 3 ||

சிலர் பதினேழு என்றும், பதினாறு என்றும், பதிமூன்று என்றும் கூறுகிறார்கள். ரிஷிகள் எதை உத்தேசித்து இத்தனை விதமாக பிரித்து
கூறியிருக்கிறார்கள் என்பதை தாங்கள் கூறியருள வேண்டும்.
ஆயுஷ்மன் – தோற்றமில்லாத, என்றும் வாழ்கின்ற பகவானே இதை விளக்க வேண்டும்.

ஶ்ரீப4கவானுவாச
யுக்தம் ச ஸந்தி ஸர்வத்ர பா4ஷந்தே ப்ராஹ்மணா யதா2 |
மாயாம் மதீ3யாமுத்3க்3ருஹ்ய வத3தாம் கிம் நு துர்க4டம் || 4 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
உத்தவா! வேத வித்தகர்களான ரிஷிகள் இது விஷயமாக கூறியிருக்கும் பலவகையான எண்ணிக்கைகள் அனைத்துமே சரியானதுதான்.
ஏனென்றால் எல்லா தத்துவங்களும் எல்லாவற்றிலும் உள்ளடங்கியிருக்கின்றன. என்னுடைய மாயையின் தத்துவத்தைத்தான்
இவ்வாறு பலவிதமாக பிரித்து கூறியிருக்கிறார்கள்.
இதில் எந்தவிதமான தவறும் கிடையாது. இந்த எண்ணிக்கையில் முக்கியத்துவம் கிடையாது.

நைததே3வம் யதா2த்த2 த்வம் யத3ஹம் வச்மி தத்ததா2 |
ஏவம் விவத3தாம் ஹேதும் ஶக்தயோ மே து3ரத்யயா: || 5 ||

ஆனால் சிலர் நீ சொல்வது சரியல்ல, நான் சொல்வதுதான் சரியென்று வாதிடுகிறார்கள். இவ்விதம் ஒருவருக்கொருவர் விவாதம்
செய்வதற்கு காரணம் என்னுடைய மாயையினால்தான்..
அதை கடக்க முடியாமல் அதன் வசத்தில் இவர்கள் இருப்பதால் இவ்வாறெல்லாம் வாதம் செய்கிறார்கள்.

யாஸாம் வ்யதிகராதா3ஸீத்3விகல்போ வத3தாம் பத3ம |
ப்ராப்தே ஶமத3மேऽப்யேதி வாத3ஸ்தமனு ஶாம்யதி || 6 ||

முக்குணங்களின் சேர்க்கையின் விகிதத்தின் மாற்றத்தால்தான் விதவிதமான வேற்றுமைகளுடன் கூடிய உபதேசம் இருக்கின்றது.
புலனடக்கமும், மனவடக்கமும், ஏற்படும்போது இந்த வேற்றுமைகள் மறைந்து விடுகிறது.
அதைத் தொடர்ந்து வாதம் செய்வதையும் விட்டுவிடுவார்கள்

பரஸ்பரானுப்ரவேஶாத்தத்த்வானாம் புருஷர்ஷப4 |
பௌர்வாபர்யப்ரஸங்க்2யானம் யதா2 வக்துர்விவக்ஷிதம் || 7 ||

உத்தவா! தத்துவங்கள் அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்திருக்கின்றது. அதனால் ஒருவர் எவ்வளவு எண்ணிக்கை சொல்ல
விரும்புகிறாரோ அதற்குத் தக்கபடி காரியத்தை காரணத்திலும், காரணத்தை காரியத்திலும் புகுத்தி கணக்கிடுகிறார்கள்.

ஏகஸ்மின்னபி த்3ருஶ்யந்தே ப்ரவிஷ்டானீதராணி ச |
பூர்வஸ்மின்வா பரஸ்மின்வா தத்த்வே தத்த்வானி ஸரவஶ: || 8 ||

ஒரே தத்துவத்தில் வேறு தத்துவங்களும் கலந்திருப்பதை பார்க்கிறோம்.
முன்னே இருப்பதில் பின்னே இருக்கின்ற தத்துவங்கள் கலந்து இருப்பதைப் பார்க்கலாம்.

பௌர்வாபர்யமதோऽமீஷாம் ப்ரஸங்க்2யானமபீ4ப்ஸதாம் |
யதா2 விவிக்தம் யத்3வக்த்ரம் க்3ருஹணீமோ யுக்திஸம்ப4வாத் || 9 ||

எண்ணிக்கையில் குறைவாக இருப்பது, அதிகமாக இருப்பது என்ற ரிஷிகளின் எண்ணிக்கையானது, எப்படி இருக்கிறதோ
அதுவே உண்மையாகும், சரியாகும். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். அது யுக்திக்கும்,உண்மைக்கும் ஏற்றவைகளாக இருக்கின்றன.

அனாத்3யவித்3யாயுக்தஸ்ய புருஷஸ்யாத்மவேத3னம் |
ஸ்வதோ ந ஸம்ப்4வாத3ன்யஸ்தத்த்வக்3ஞோ ஞானதோ3 ப4வேத் || 10 ||

ஆத்ம ஞானத்தை அடைவதற்கு மூன்று தத்துவங்கள் இருக்க வேண்டும். அவைகள் 1.ஜிவன், 2.ஈஸ்வரன், 3.ஜகத் ஆகியவைகளாகும்.
ஜீவனிடத்தில் அறியாமையானது தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. தன்னையே புரிந்து கொள்வது என்பது தானாகவே செய்ய முடியாது.
தன்னைத்தானே புரிந்துக் கொள்ள முடியாது. ஆகவே ஆத்ம ஞானத்தை அடைந்த வேறொருவர் இருக்க வேண்டும்
அவர் ஞானத்தை கொடுப்பதற்காக தேவைப்படுகிறார்.

புருஷேஶ்வாயோரத்ர ந வைலக்ஷண்யமண்வபி |
தத்3ன்யகல்பனாபார்தா2 ஞானம் ச ப்ரக்ருதேர்கு3ண: || 11 ||

ஆத்ம ஞானத்தை உபதேசிக்க இரண்டு தத்துவங்கள் போதும் என்று இதில் கூறப்பட்டிருக்கிறது.
அவைகள் ஸாங்க்2ய யோகத்தில் புருஷன், பிரகிருதி என்றும், உபநிஷத்தில் பிரம்மம், மாயா என்பதாகும்.
பிரம்மத்தை சார்ந்திருப்பது மாயா. இது முக்குணங்களை உடையது.
மாயையின் சுத்த தத்துவத்திலிருந்து வெளிப்படும்போது ஈஸ்வரன் என்றும்,
ரஜோ அல்லது அசுத்த சத்துவத்திலிருந்து வெளிப்பட்டவைகள் ஜீவர்கள், தமஸிலிருந்து வெளிப்பட்டவைகள் இந்த பிரபஞ்சம்.
அக்ஞானியாக இருக்கின்ற ஜீவனுடைய அறிவும், ஈஸ்வரனுடைய அறிவும் பிரகிருதியினுடைய குணமேயாகும்.

ப்ரக்ருதிர்கு3ணஸாம்யம் வை ப்ரக்ருதேர்னாத்மனோ கு3ணா: |
ஸத்த்வம் ரஜஸ்தம இதி ஸ்தி2த்யுத்பத்த்யந்தஹேதவ: || 12 ||

மூன்று குணங்களும் சமவிகிதத்தில் சேர்ந்திருப்பதே பிரகிருதி எனப்படுகிறது. மூன்று குணங்கள் சத்தும், ரஜோ, தமோ ஆகியவைகளாகும்.
இவைகள் முறையே காத்தல், படைத்தல், ஒடுங்குதல் ஆகிய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது.
இவைகள் பிரகிருதியினுடையதாகும், பிரம்மத்தைச் சார்ந்ததல்ல

ஸத்த்வம் ஞானம் ரஜ: கர்ம தமோऽஞானமிஹோச்யதே |
கு3ணவ்யதிகர: கால: ஸ்வபா4வ: ஸூத்ரமேவ ச || 13 ||

சத்துவ குணத்தின் லட்சணம் அறிவை அடையும் சக்தியை மனதுக்கு கொடுப்பது. ரஜோ குணத்தின் லட்சணம் செயல்படும் திறன்,
தமோ குணத்தின் வெளிப்பாடு அறியாமை, ஜடமாக இருத்தல் ஆகியவைகளாகும். குணங்களின் மாற்றத்தினால்தான் படைப்பு உருவாகிறது.
காலமாக இருக்கின்ற ஈஸ்வரனால் பிரகிருதியிலுள்ள குணங்களில் மாற்றத்தை உண்டாக்கி படைப்பு தோற்றுவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஜீவரிடத்திலும் வேற்றுமை இருப்பதற்கு காரணம் ஹிரண்யகர்ப்பன். இவர் கர்மபலன்களை ஜீவர்களுக்கு கொடுப்பவர்.
அதற்கேற்ற உடல், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஜீவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

புருஷ: ப்ரக்ருதிர்வ்யக்தமஹங்காரோ நபோ4ऽனில: |
ஜ்யோதிராப: க்ஷிதிரிதி தத்த்வான்யுக்தானி மே நவ || 14 ||

புருஷன், பிரகிருதி, வ்யக்தம்-மஹத், அகங்காரம், இவைகளைத் தவிர 5 சூட்சும பூதங்களான
ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் என்ற ஒன்பது தத்துவங்கள் முன்பே என்னால் கூறப்பட்டன.

ஶ்ரோத்ரம் த்வக்3த3ர்ஶனம் க்4ராணோ விஹ்வேதி ஞானஶக்த்ய: |
வாக்பாண்யுபஸ்த2பாய்வங்க்4ரி: கர்மாண்யங்கோ3ப4யம் மன: || 15 ||

ஐந்து ஞானேந்திரியங்களான காது, தோல், கண், மூக்கு, நாக்கு இவைகளும்,
வாக்கும், கை, கால், குதம், சிறுநீர் கழிக்கும் உறுப்பு என்ற ஐந்து கர்மேந்திரியங்களும்
இவைகளோடு இணைந்து செயல்படுகின்ற மனம் என்ற ஒன்றும் இருக்கிறது

ஶப்3த3: ஸ்பர்தோ2 ரஸோ க3ந்தோ4 ரூபம் சேத்யர்த2ஜாதய: |
க3த்யுக்த்யுத்ஸர்க3ஶில்பானி கர்மாயதனஸித்3த4ய: || 16 ||

சப்தம், ஸ்பரிசம், ரூபம், சுவை, மணம் என்ற குணங்களையுடைய பஞ்ச ஸ்தூல பூதங்கள்.
கர்மேந்திரியங்களிலிருந்து வெளிப்படுகின்ற செயல்களான நடத்தல், பேசுதல், மலம், சளி போன்ற கழிவுகளை வெளித்தள்ளுதல்.
விதவிதமான செயல்களை செய்கின்ற கைகள் ஆகியவைகளாகும்.

ஸர்கா3தௌ3 ப்ரக்ருதிஹர்யஸ்ய கார்யகாரணரூபிணீ |
ஸத்த்வாதி3பி4ர்கு3ணைர்த4த்தே புருஷோऽவ்யக்த ஈக்ஷதே || 17 ||

பிரகிருதி வெறும் காரணமாக மட்டும் இருக்கிறது. இதிலிருந்து முதலில் வெளிப்படுவது மஹத் தத்துவம்
இது காரிய-காரண ரூபமாகவும் இருக்கிறது. இதிலிருந்து அஹங்காரம் வெளிப்பட்டு ஐந்து சூட்சும பூதங்களை தோற்றுவிக்கிறது.
எனவே இதுவும் காரிய-காரண ரூபமாகவும் இருக்கிறது. இந்த ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து 16 தத்துவங்களை படைக்கின்றது.
இதுவும் காரிய-காரண ரூபம். இந்த ஏழும் விக்ருதி என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் பிரகிருதி தத்துவமானது சத்துவ குணத்திலிருந்து காரிய-காரண படைப்புக்களை தோற்றுவிக்கின்றது.

வ்யக்தாதா3யோ விகுர்வாணா தா4தவ: புருஷேக்ஷயா |
லப்3த4வீர்யா: ஸ்ருஜந்த்யண்ட3ம் ஸம்ஹதா: ப்ரக்ருதேர்ப3லாத் || 18 ||

பிரகிருதியிடமிருந்து குணமாற்றத்தினால் வெளிப்பட்ட மஹத் தத்துவத்தில் ஏழு தத்துவங்கள் புருஷனிடமிருந்து உணர்வு சக்தியைப் பெற்று,
புருஷனுடைய பார்வையினால் சக்தியை பெறுகின்றது. இவைகளெல்லாம் ஒன்று சேர்ந்து பிரகிருதியின் தன்மையுடனும் 16 தத்துவங்களை
(ஐந்து ஸ்தூல பூதங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம்) படைக்கின்றது.

ஸப்தைவ தா4தவ இதி தத்ரார்தா2: பஞ்ச கா2த3ய: |
ஞானமாத்மோப4யாதா4ரஸ்ததோ தே3ஹேந்த்ரியாஸவ: || 19 ||

தத்துவங்கள் ஏழுதான் என்று சொல்பவர்களின் கணக்குப்படி, ஆகாசம் போன்ற ஐந்து பூதங்கள், சூட்சும, ஸ்தூல பூதங்களையும் சேர்த்து சொல்கிறார்கள்.
ஆறாவது ஜீவாத்மா, ஏழாவது பரமாத்மா. இவைகளிலிருந்துதான் உடல், பிராணன், இந்திரியங்கள் அடங்கி விடுகின்ற்து.
ஜீவனுக்கும், ஜகத்துக்கும், ஆதாரமாக இருப்பது ஆத்மா

ஷடி3த்யத்ராபி பூ4தானி பஞ்ச ஷ்ஷ்ட2: பர: புமான் |
ஜைர்யுட3த ஆத்மஸம்பூ4தை: ஸ்ருஷ்டவேத3ம் ஸமபாவிஶத் || 20 ||

தத்துவங்கள் ஆறுதான் என்று சொல்பவர்களின் கூற்றுப்படி, ஐந்து பூதங்களும் பரமாத்மா ஆறாவதாகும்.
தன்னிடமிருந்து உருவான இவைகளெல்லாம் தோற்றுவித்து அதற்குள் பரமாத்மாவே பிரவேசிக்கிறார்.
இதன்படி ஜீவன் பரமாத்வாவிலும், சரீரம் போன்றவை பஞ்ச பூதங்களிலும் அடங்கி விடுகின்றன.

சத்வார்யேவேதி தத்ராபி தேஜ ஆபோऽன்னமாத்மன: |
ஜாதானி தைரித3ம் ஜாதம் ஜன்மாவயவின: க2லு || 21 ||

தத்துவங்கள் நான்கு என்று கூறுபவர்கள் குறிப்பிடுவது அக்னி, நீர், நிலம், ஆத்மா ஆகும்.
உலகத்தில் காணப்படுல் எல்லா பொருட்களும் இந்த நான்கு தத்துவத்தில் இருந்துதான் தோன்றியுள்ளன.
எல்லா காரியங்களையும் இவைகளுக்குள்ளேயே அடக்கி இருக்கிறார்கள்

ஸங்க்2யானே ஸப்தத3ஶகே பூ4தமாத்ரேந்த்ரியாணி ச |
பஞ்ச பஞ்சைகமனஸா ஆத்மா ஸப்த த2ஶ: ஸ்ம்ருத: || 22 ||

பதினேழு தத்துவங்கள் என்று கூறுபவர்கள் குறிப்பிடுவது ஐந்து சூட்சும பூதங்கள், ஐந்து ஸ்தூல பூதங்கள்,
ஐந்து ஞானேந்திரியங்கள், மனம், ஆத்மா ஆகியவைகளாகும்.

தத்3வத்ஷோட3ஶஸங்க்2யானே ஆத்மைவ மன உச்யதே |
பூ4தேந்த்ரியாணி பஞ்சைவ மன ஆத்மா த்ரயோத2ஶ || 23 ||

தத்துவங்கள் பதினாறு என்று குறிப்பிடுவது ஐந்து சூட்சும பூதங்கள், ஐந்து ஸ்தூல பூதங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள்,
ஆத்மா ஆகியவைகளாகும்.
பதிமூன்று என்று குறிப்பிடுபவகள் ஐந்து பூதங்கள், ஐந்து புலன்கள், ஜீவாத்மா, பரமாத்மா, மனம் ஆகும்.

ஏகாத3ஶத்வ ஆத்மாஸௌ மஹாபூ4தேந்திரியாணி ச |
அஶ்டௌ ப்ரக்ருதயஶ்சைவ புருஷஶ்ச நவேத்யத2 || 24 ||

பதினொன்று என்று கூறுபவர்களின் கணக்கு ஐந்தி இந்திரியங்கள், ஐந்து பூதங்கள், ஆத்மா ஆகியவைகளாகும்
ஒன்பது என்பவர்கள் குறிப்பிடுபவைகள் ஐந்து பூதங்கள், மனம், புத்தி, அகங்காரம், என்ற பிரகிருதிகளுடன்
புருஷன் என்பதையும் சேர்ந்தவைகள் ஆகும்.

இதி நானாப்ரஸங்க்2யானம் தத்த்வானாம்ருஷிபி4: க்ருதம் |
ஸர்வம் ந்யாய்யம் யுக்திமத்த்வாத்3விது3ஷாம் கிமஶோப4னம் || 25 ||

இவ்வாறு வெவ்வேறு வகையாக ரிஷிகளால் கூறப்பட்டுள்ளது. எல்லாமே சரியானவைதான். ஏனென்றால் எல்லோருடைய
கணக்கும் யுக்தியோடு கூடியதாக இருக்கிறது. தத்துவஞானிகளிடமிருந்து வரும் வார்த்தைகளில் குறையெதுவும் இருக்காது.

ஶ்ரீஉத்தவ உவாச
ப்ரக்ருதி: புருஷஸ்சோபௌ4 யத்3யப்யாத்மவிலக்ஷணௌ |
அன்யோன்யாபஶ்ரயாத்க்ருஷ்ண த்3ருஶ்யதே ந பி4தா3 தயோ: |
ப்ரக்ருதௌ லக்ஷ்யதே ஹயாத்மா ப்ரக்ருதிஶ்ச த தா2த்மனி || 26 ||

உத்தவர் கேட்கிறார்.
பிரகிருதி, புருஷன் இரண்டும் வெவ்வேறானவை என்பது உண்மையே என்றாலும் ஹே கிருஷ்ணா! இவைகள் ஒன்றையொன்று
சார்ந்திருப்பதால் இவைகளிடையே உள்ள வேற்றுமைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏவம் மே புண்ட3ரீகாக்ஷ மஹாந்தம் ஸம்ஶயம் ஹ்ருதி3 |
சே2த்தும்ர்ஹஸி ஸர்வக்ஞ வசோபி4ர்னயனைபுணை: || 27 ||

ஏனென்றால் பிரகிருதி ஸத், சித் தன்மையை எடுத்துக் கொண்டு காணப்படுகிறது. ஆத்மாவிடத்திலும் பிரகிருதி காணப்படுகிறது.
உடல் நகரும்போது ஆத்மாவும் நகர்வதாக நம்மால் உணரப்படுகிறது, எண்ணப்படுகிறது. எனவே தாமரைப்போன்ற கண்களையுடையவனே!
இந்த மனதிலிருக்கின்ற பெரிய சந்தேகத்தை எல்லாம் அறிந்தவரான தாங்கள் நீக்கி விடுங்கள்.
உங்களுடைய உபதேசத்தினாலும், யுக்தியுடன் கூடிய சக்தி வாய்ந்த வார்த்தைகளால் சந்தேகத்தை தீர்த்தருள வேண்டும்.

த்வத்தோ ஞானம் ஹி ஜீவானாம் ப்ரமோஷஸ்தேऽத்ர ஶக்தித: |
த்வமேவ ஹயாத்ம மாயாயா க3திம் வேத்த2 ந சாபர: || 28 ||

பகவானே! தங்களுடைய அனுக்கிரஹத்தால்தான் ஜீவர்களுக்கு ஞானம் ஏற்படுகிறது.
ப்ரமோஷ – மோக வசத்துடன் இருத்தல்,
தங்களுடைய மாயா சக்தியினால் ஜீவர்கள் அவரவர்களுடைய பிராரப்த்தப்படி மோக வசத்தில் வீழ்ந்து விடுகிறான்.
உங்களிடமுள்ள மாயையின் சக்தியும் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஶ்ரீப4கவானுவாச
ப்ரக்ருதி: புருஷஶ்சேதி விகல்ப: புருஷர்ஶப4 |
ஏஷ வைகாரிக: ஸர்கோ3 கு3ணவ்யதிகராத்மக: || 29 ||

பகவான் கூறுகிறார்.
உத்தவா! பிரகிருதியும், புருஷனும் வெவ்வேறுதான், முற்றிலும் வேறுபட்டவைகள். முக்குணங்களின் மாற்றத்தினால் உருவாக்கப்பட்டது
இந்த உடல்.போன்ற பிரகிருதியில் விகாரங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
புருஷன் என்றும் மாறாதது. அழியாதது. இதனால் இரண்டும் வெவ்வேறானது என்று புரிந்து கொள்வாயாக.

மமாங்க3 மாயா கு3ணமய்யர்னக்தா4 விகல்ப்பு3த்3தி4ஶ்ச கு3ணைர்வித3த்தே |
வைகாரிகஸ்த்ரிவிதோ4ऽத்4யாத்ம்மேகமதா2தி4தை3வமதி4பூ4தமன்யத || 30 |

அன்புக்குரிய நண்பா உத்தவா! என்னுடைய மாயைவானது (ப்ரக்ருதி) மூன்று குண ஸ்வரூபமானது.
இந்த முக்குணங்களின் துணைக்கொண்டு விதவிதமான படைப்புக்கள் உருவாக்கப்படுகிறது.
இந்த உலகத்தை அனுபவிப்பவனும், சிதாபாஸத்துடன் கூடிய மனமும் தோன்றியுள்ளது.
அனுபவிக்கப்படும் பொருளாக பிரிந்து இருக்கின்றது. விகாரமாக தோன்றியிருக்கின்றது.
இதை மூன்று விதமாக பிரிக்கலாம். அவைகள்
1.அத்யாத்ம – ஜீவர்களாகிய நாம், 2.அதிதைவம் – பலவிதமான தேவதைகள், 3. அதிபூதம் – கண்ணால் பார்க்கப்படுகின்ற பொருட்கள் ஆகியவைகளாகும்

த்3ருக்3ரூபமார்கம் வபுரத்ர ரந்த்4ரே பரஸ்பரம் ஸித்4யதி ய: ஸ்வத: கே2 |
ஆத்மா யதே3ஷாமபரோ ய ஆத்3ய: ஸ்வயானுபூ4த்யாகி2லஸித்3தி4ஸித்3தி4: |
ஏவம் த்வகா3தி3 ஶ்ரவணாதி3 சக்ஷுர்ஜிஹ்வாதி3 நாஸாதி3 ச சித்தயுக்தம் || 31 ||

த்ருக் – அத்யாத்மம் – பார்ப்பவன்
ரூபம் – பார்க்கப்படுக் பொருள்
அர்கம் – பார்ப்பதற்கு உதவும் சூரியன் போன்ற ஓளிதரும் தேவதைகள்
கண்ணில் இருந்து கொண்டு பார்க்கும் சக்தியை கொடுக்கிறது. இவை மூன்றும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதால் இது சாத்தியமாகிறது.
ஆனால் சூரிய தேவன் எதையும் சாராமல் இருக்கிறார். அதுபோல ஆத்மாவானது ப்ரகிருதியிலிருந்து வேறாகவும், காரண ஸ்வரூபமாகவும் இருக்கிறார்.
புருஷனுடைய இருப்புதான் எல்லாவற்றினுடைய இருத்தலுக்கு சாத்தியமாகிறது. ஆனால் அவருடைய இருப்புக்கு அவரேதான் காரணம்.
இதைப்போல தொட்டுணரும் சக்தி,கேட்கும் சக்தி, சுவைத்தல், நுகர்தல் விஷயத்திலும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் சித்தத்திற்கும் மூன்று வேற்றுமைகள் இருக்கின்றது.

யோऽஸௌ கு3ணக்ஷோப4க்ருதோ விகார: ப்ரதா4னமூலான்மஹத: ப்ரஸூத: |
அஹம் த்ரிவ்ருன்மோஹவிகல்பஹேதுர்வைகாரிகஸ்தாமஸ ஐந்த்3ரியஶ்ச || 32 ||

குணங்களின் மாற்றத்தினால் தோன்றிய விகாரங்களினால் மஹத் தத்துவம் தோன்றியது. மனத்திலிருந்து அஹங்காரம் தோன்றியது.
அதனால் இதுவும் பிரகிருதியின் விகாரமாகிறது. அஹங்காரம், சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில்
பலவகையாக இருந்து கொண்டு மோகத்துக்கும், பலவகையான படைப்புக்களுக்கும் காரணமாகின்றது.
அதாவது வைகாரிகம் என்பது சத்துவ குண பிரதான மனம், இந்திரியங்களின் தேவதை. பத்து புலன்கள்,
தாமஸம் என்பது ஐந்து வகையான மகாபூதங்களும் அவைகளின் விஷயங்களுமாகும்.

ஆத்மாபரிக்ஞானமயோ விவாதோ3 ஹயஸ்தீதி
நாஸ்தீதி பி4தா3ர்த2நிஷ்ட: |
வ்யர்தோ2ऽபி நைவோபரஸேத பும்ஸாம் மத்த:
பராவ்ருத்தி4யாம் ஸ்வலோகாத் || 33 ||

ஆத்மாவான தன்னைப்பற்றி சரியாக தெரிந்து கொள்ளாததுதான் எல்லாவகையான துயரத்திற்கும் காரணமாகிறது.
எல்லாவிதமான விவாதங்களும், சங்கடங்களும் வேற்றுமைகளில் இல்லை-இருக்கிறது என்ற விவாதத்தினால்தான் வருகிறது.
அறியாமையினால்தான் வருகிறது. இவைகள் தேவையற்றது என்று தெரிந்தாலும், பயனும் இல்லை என்று புரிந்தாலும்,
வீணான சர்ச்சை என்று தெரிந்தாலும் மனம் அமைதியடைவதில்லை. என்றாலும் தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை
உணராமல் சண்டை-சச்சரவிலிருந்து மீள முடியாது.

ஶ்ரீஉத்தவ உவாச
த்வத்த: பராவ்ருத்த்தி4ய: ஸ்வக்ருதை: கர்மபி4: ப்ரபோ4 |
அச்சாவசான்யதா2 தே3ஹான்க்3ருஹ்ணாந்தி விஸ்ருஜந்தி ச || 34 ||

உத்தவர் கேட்கிறார்.
பகவானே! ஆத்மஞானம், ஈஸ்வர ஞானம் இல்லாத அக்ஞானிகள் தங்களது உண்மை ஸ்வரூபத்தை அறிய விரும்பாதவர்கள்
தாங்கள் செய்த கர்மத்தின் விளைவாக மேலான அல்லது கீழான சரீரத்தை எவ்வாறு அடைகிறார்கள், விடுகின்றார்கள்.
ஒரு ஜீவன் எப்படி பிறக்கிறது, இறந்தபிறகு எங்கு செல்கிறது.

தன்மமாக்2யாஹி கோ3விந்த3 து3ர்விபா4வ்யமனாத்மபி4: |
ந ஹயேதத்ப்ராயஶோ லோகே வித்3வாம்ஸ: ஸந்தி வஞ்சிதா: || 35 ||

கோவிந்தா! இந்த உண்மையை எனக்கு சொல்லுங்கள். இதை சாதாரண மனிதர்கள் யாராலும் அறிய மாட்டார்கள்.
இந்த அறிவை உடையவர்கள் யாரும் இந்த உலகத்தில் பொதுவாக கிடையாது. அவர்களெல்லாம் மாயையின் வசப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.

ஶ்ரீப4கவானுவாச
மன: கர்ம மயம் ந்ருணமிந்த்3ரியை: பஞ்சபி4ர்யுதம் |
லோகால்லோகம் ப்ரயாத்யன்ய ஆத்மா த்த3னுவர்ததே || 36 ||

பகவான் கூறுகிறார்.
உத்தவா! மனிதர்களுடைய மனம் என்பது, பாவ-புண்ணியங்கள் வைக்கப்பட்டு இருக்கின்ற இடமாகும். இது புலன்களுடன் சேர்ந்து இயங்க கூடியது.
அதுதான் கர்ம பலன்களுக்கேற்றபடி ஒரு உலகத்திலிருந்து வேறொரு உலகத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கின்றது.
ஒரு உடலிலிருந்து வேறு உடலுக்கும் சென்று வந்து கொண்டு இருக்கின்றது. சூட்சும உடலும் ஜடம்தான்.
ஆனால் ஆத்மா மனதில் பிரதிபலித்து அது உணர்வு பூர்வமாக செயல்பட வைக்கின்றது. இதையே சிதாபாஸம் என்று கூறப்படுகிறது.
மனதுக்குள் சிதாபாஸன் வேறாக இருந்த போதிலும் அதனுடன் செல்கின்றது.

த்4யாயன்மனோऽனு விஷயான்த்3ருஷ்டான்வானுஶ்ருதானத2 |
உத்3யத்ஸீத3த்கர்மதந்த்ரம் ஸ்ம்ருதிஸ்த்த3னு ஶாம்யதி || 37 ||

கர்ம பலனைச் சார்ந்துள்ள மனமானது தொடர்ந்து சிந்தித்து கொண்டேயிருக்கும். மனம் எந்த விஷயத்தில் பழக்கப்பட்டிருக்கின்றதோ
அதையையும், கர்ம வாஸனைகளினால் வரும் எண்ணங்களையே சிந்தித்து கொண்டிருக்கும்.
இந்தப் பிறவியில் கிடைத்த உடலையும், உலகத்தையும் விடுவதற்கு தயாராகிறான்.
இந்தப் பிறவியில் அடைந்த அனுபவங்கள், நினைவுகள், ஆசைகள், நினைவாற்றல் மறைந்து போகின்றது

விஷயாபி4னிவேஶேன நாத்மானம் யத்ஸ்மரேபுன: |
ஜந்தோர்வை கஸ்யசித்3தே4தோர்ம்ருத்யுரத்யந்தவிஸ்ம்ருதி: || 38 ||

விஷய அபினிவேஶேன – ஜீவனுக்கு புதிய உடலின் மீது ஏற்படும் பற்றினால் பழைய சரீரத்தின் நினைவுகள் அழிந்துவிடுகிறது.
ஏதோ காரணத்தினால் நம்மால் இதுதான் என்று கூறமுடியாத காரணத்தினால்தான் முற்றிலுமாக சரீரத்தை மறந்துவிடுவது மரணம் என்று கூறப்படுகிறது

ஜன்ம த்வாத்மதயா பும்ஸ: ஸர்வபா4வேன பூ4ரித3 |
விஷயஸ்வீக்ருதிம் ப்ராஹுர்யதா2 ஸ்வப்னமனோரத2: || 39 ||

உத்தவா! ஜீவன் புதிய உடலை தன்னிடமிருந்து வேறானது என்ற உண்மையை மறந்து இது நான்தான் என்று அபிமானிப்பது
தான் பிறப்பு என்று சொல்லப்படுகிறது. கனவு, கற்பணையில் கிடைக்கும் சரீரத்தில் அபிமானம் வைத்து அனுபவிப்பது போல இது இருக்கின்றது.
ஒரு கனவில் கண்ட விஷயங்கள் வேறொரு கனவில் நினைவுக்கு வருவதில்லை மறந்துவிடுகிறோம். அதுபோல இந்த பிறப்பும், இறப்பும் இருக்கின்றது.

ஸ்வப்னம் மனோரத2ம் சேத்த2ம் ப்ராக்தனம் ந ஸ்மரத்யஸௌ |
தத்ர பூர்வமிவாத்மானமபூர்வம்சானுபஶ்யதி || 40 ||

பழைய கனவையும், கற்பணையையும் மறந்து புதிய கனவு, கற்பணைக்கு சென்று விடுவான்.
அப்போது பழைய கனவு, கற்பணை விஷயங்கள் மறந்து போகின்றது, புதிய கனவு, கற்பணையில் இருப்பவனாக நினைத்துக் கொண்டு இருக்கிறான்.
இது போல இப்போது உள்ள உடலில் விளங்கும் ஜீவன் இவ்வாறு தன்னுடைய முற்பிறவி உடலை நினைவு கொள்வதில்லை.

இந்த்3ரியாயனஸ்ருஷ்ட்யேத3ம் த்ரைவித்4யம் பா4தி வஸ்துனி |
ப3ஹிரந்தர்பி4தா3ஹேதுர்ஜனோऽஸத்தனக்ருத்3யதா2 || 41 ||

மனமானது இந்திரியங்களின் இருப்பிடமாக இருக்கிறது. ஸ்தூல உடலை ஸ்ருஷ்டித்து அதற்குள் பிரவேசித்த பிரம்மனிடத்தில்
மூன்றுவிதமான வேற்றுமைகள் தோன்றுகிறது. அவைகள்
1. அத்யாத்மம், அதிபூதம், அதிதைவம் என்ற மூன்று பிரிவுகள்,
2. உயர்ந்தவன், தாழ்ந்தவன், இடைப்பட்டவன் என்ற மூன்று பிரிவுகளும்,
3. உள்ளேயிருக்கும் வேற்றுமைகள், வெளியேயிருக்கும் வேற்றுமைகள் என்ற இரண்டு பிரிவுகளும் ஆகும்.
எவ்விதம் விழித்துக் கொண்டிருப்பவன் இல்லாத உலகத்தை, மனிதர்களை உருவாக்குகின்றானோ அதுபோல இது இருக்கின்றது

நித்யதா3 ஹ்யங்க3 பூ4தானி ப4வந்தி ந ப4வந்தி ச |
காலேனாலக்ஷ்யவேகே3ன ஸூக்ஷ்மத்வாத்தன்ன த்3ருஶ்யதே || 42 ||

பேரன்புடைய உத்தவா! உயிரினங்கள் எப்போதும் தொடர்ந்து பிறக்கின்றன, . இறக்கின்றன. காலத்தின் வேகத்தை கணக்கிடமுடியாது.
காலம் என்பது மிகவும் நுட்பமானதாக இருப்பதால் நமக்கு அதை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

யதா2ர்சிஷாம் ஸ்ரோதஸாம் ச ப2லானாம் வா வனஸ்பதே: |
ததை2வ ஸர்வபூ4தானாம் வயோ வஸ்தா2த3ய: க்ருதா: || 43 ||

யதா2 – எவ்வாறு
அர்சிஷாம் – தீபத்தின் ஜுவாலை
ஸ்ரோதஸாம் ச – நதியின் நீரோட்டம் மேலும்
ப2லானாம் வா வனஸ்பதே – காட்டிலிருக்கின்ற பழங்களும் கூட காலத்தினால் தொடர்ந்து அதன் நிலையில் மாற்றம் அடைந்து
கொண்டிருக்கின்றனவோ அது போல அனைத்து உயிரினங்களின் உடல்களும் அதனுடைய நிலைகள் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும்.

ஸோऽயம் தீ3போऽர்சிஷாம் யத்3வத்ஸ்ரோதஸாம் ததி3தம் ஜலம் |
ஸோ யம் புமானிதி ந்ருணாம் ம்ருஷா கீ3ர்தீ4ர்ம்ருஷாயுஷாம் || 44 ||

தீபச்சுவாலை ஒவ்வொரு வினாடியிலும் மாறிக் கொண்டேயிருந்தாலும், மாறுதல் தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதால்,
பார்த்துக் கொண்டிருப்பது ஒரே தீவ ஜுவாலைதான் என்றும், ஒரே நதிநீர்தான் என்றும் நினைத்துக்கொண்டிருப்போம்.
புலனுகர் இன்ப நினைவுகளில் வீணாக தன் ஆயுளைக் கழித்துக் கொண்டிருக்கும் மனிதனை அவன் இவனேதான் என்று சொல்வது உண்மையல்ல.
மனிதனுடைய உடலும், உள்ளமும், ஆரோக்கியமும், வயதும் தொடர்ந்து மாறிக் கொண்டுதான் இருக்கும்.

மா ஸ்வஸ்ய கர்மபீ3ஜேன ஜாயதே ஸோ ப்யயம் புமான் |
ம்ரியதே வாமரோ ப்4ராந்த்யா யதா2க்3னிர்தா3ருஸம்யுத: || 45 ||

ஸ்வஸ்ய கர்மபீஜேன – ஒருவன் கர்மவினைக் காரணமாகத்தான் இறக்கின்றான், பிறக்கின்றான்.
ஆனால் உண்மையில் இவனுக்கு பிறப்பு-இறப்பு என்பதே இல்லை. அப்படி நினைப்பதும், பேசுவதும் மதிமயக்கத்தினாலும்,
தன்னைப் பற்றிய உண்மையை புரிந்து கொள்ளாததாலும்தான். ஆகாசம் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது
ஆனால் நாம் இடம் இல்லை, இடம் இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில் ஆகாசம்(இடம்) இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அக்னி அழிவில்லாததாக இருந்தாலும், மரக்கட்டையுடன் சேரும்போது தோன்றுவது போலவும், இருப்பது போலவும்,
அழிந்து விடுவது போலவும் தோன்றுகிறது.

நிஷேகக3ர்ப4ஜன்மானி பா3ல்யகௌமாரயௌவனம் |
வயோமத்4யம் ஜரா ம்ருத்யுரித்யவஸ்தா2ஸ்தனோர்னவ || 46 ||

சரீரம் காலத்திற்கேற்ப ஒன்பது நிலைகளாக மாற்றம் அடைகின்றது. அவைகள் 1. கர்ப்பதானம், 2. கர்ப்பத்தில் வளர்ச்சி, 3. பிறப்பு,
4.குழந்தைப்பருவம், 5. சிறுபிள்ளைப் பருவம், 6.வாலிப பருவம், 7. நடுவயது, 8. முதுமை, 9. மரணம் என்பதாகும்.
ஆனால் ஆத்மாவுக்கு இந்த நிலைமாற்றங்கள் கிடையாது.

ஏதா மனோரத2மயீஹான்யஸ்யோச்சாவசாஸ்தனூ: |
கு3ணஸங்கா3து3பாத3த்தே க்வசித்கஶ்சிஜ்ஜஹாதி ச || 47 ||

எப்படி கற்பணையில் நாம் மேலான பிறவியாகவோ, கீழான பிறவியாக பிறக்கின்றோமோ அதுபோல சரீரத்தை சேர்ந்த இந்த
மேலான, கீழான நிலையானது உடல்மீதுள்ள பற்றின் காரணமாக ஏற்படுகிறது. ஆசையின் அளவு அதிகரித்தால் அதுவே
அவனை செயலில் ஈடுபடுத்தி அதை அடைய வைத்து விடும். யாரோ ஒருவன் விளக்கமுடியாத ஏதோவொரு காரணத்தால்
இந்தப்பற்றையெல்லம் விட்டு விட்டு அதாவது சம்சாரத்தை விட்டுவிட்டு மோட்சத்தை அடைகிறான்.

ஆத்மன: பித்ருபுத்ராப்4யாமனுமேயௌ ப4வாப்யயௌ |
ந ப4வாப்யயவஸ்தூனாமபி4க்3ஞோ த்3வயலக்ஷண: || 48 ||

தன்னுடைய பிறப்பையும், இறப்பையும் அனுமானத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
தந்தையின் மரணத்தையும், மகனுடைய பிறப்பையும் வைத்து அனுமானம் செய்யலாம்.
ஒரு பொருளின் பிறப்பையும், இறப்பையும் பார்ப்பவன், அவன் இரண்டுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கிறான்.
உடலின் பிறப்பையும், இறப்பையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்மா உடலுக்கும் வேறான்து என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தரோர்பீ3ஜவிபாகப்4யாம் யோ விஎ3வாஞ்ஜன்மஸ்ம்யமௌ |
தரோர்விலக்ஷணோ த்3ரஷ்டா ஏவம் த்3ரஷ்டா தனோ: ப்ருத2க் || 49 ||

ஒருமரத்தினுடைய விதையையும், அதனுடைய வளர்ச்சியையும், பிறப்பையும், வளர்ச்சியையும் ஒருவன் பார்க்கும் போது
அவன் மரத்திலிருந்து வேறுபட்டவனாக, சாட்சியாக பார்ப்பவனாக இருக்கிறான். அதுபோல இந்த உடலைப் பார்த்துக் கொண்டிருப்பவன்
உடலிலிருந்து வேறுபட்டவன். அதனால் உடலினுடைய மாறுபட்ட நிலைகளால், தன்மைகளால் பாதிக்கப்படுவதில்லை.

ப்ரக்ருதேரேவமாத்மானமவிவிச்யாபு3த4: புமான் |
தத்த்வேன ஸ்பர்ஶஸம்மூட4: ஸம்ஸாரம் ப்ரதிபத்3யதே || 50 ||

அக்ஞானத்தினால் அனுபவிப்பதுதான் சம்சாரம். பிரகிருதியிலிருந்து, சரீரத்தில் இருந்து தன்னை ஒருவன் பிரித்துக் கொள்ளாமல்
அபிமானத்தை நீக்காமல் இருக்கும் அறியாமையினால் உடலின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியாதவனாக இருக்கிறான்.
இந்த உடல்தான் நானென்று தவறாக புரிந்து கொண்டு இன்பத்தை எதிர்ப்பார்க்கின்றான். நாம் எதில் நான் என்ற அபிமானம்
வைத்திருக்கின்றோமோ அதில் இருந்துதான் அடைய முயற்சிப்போம். இதனால் நம்முடைய புத்தியானது மோக வசப்பட்டு
அனாத்மாவை, இன்பத்தை நாடி சென்று கொண்டிருக்கிறது..
ஸ்பர்ஶ ஸம்மூட4: – அனாத்மாவில் அபிமானம் வைத்தல், அதிலிருந்துதான் இன்பத்தை அடைய முயற்சி செய்வதனால்,
சம்சாரத்திலேயே சுழன்று கொண்டிருக்கும் முழுமுட்டாள்.

ஸ்த்த்வஸங்கா3த்3ருஷீந்தேவான்ரஜஸாஸுரமானுஷான் |
தமஸா பூ4த்திர்யக்த்வம் ப்4ராமிதோ யாதி கர்மபி4: || 51 ||

சத்துவ குணப்பற்றுடன் ஒருவன் இறந்தால் அவன் தேவலோகத்தில் வாழும் தேவனாகவோ அல்லது பூலோகத்தில் உத்தமமான
குலத்தில் ரிஷியாகவோ, உத்தம மனிதனாகவோ பிறப்பெடுப்பான். நல்ல சூழ்நிலையில் பிறப்பான்.
ரஜோ குணத்தில் பற்றுடையவனாக இறந்தால் அசுரனாகவோ, மனிதனாகவோ பிறப்பான்.
தமோ குணத்தில் பற்றுடையவனாக இறந்தால் தாவரமாகவோ, பூதகணங்களாகவோ, விலங்குகளாகவோ பிறப்பான்.
அக்ஞானி அவரவர் கர்மபலன்களுக்கேற்ப பிறக்கின்றான்.

ந்ருத்யதோ கா3யத: பஶ்யன்யதை2வானுகரோதி தான் |
ஏவம் பு3த்3தி4கு3ணான்பஶ்யன்னனீஹோऽப்யனுகார்யதே || 52 ||

நடனம் ஆடுபவர்களையோ, பாடல் பாடிக் கொண்டிருப்பவர்களையோ ஒருவன் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தால்
தானும் தன்னை அறியாமல் அதைச் செய்து கொண்டிருப்பான். அதுபோல சூட்சும சரீரத்தில் வருகின்ற விதவிதமான
எண்ணங்களும், உணர்ச்சிகளும் பார்க்கின்றவன் செயலற்றவனாக இருந்த போதிலும் அவைகளை தான் செய்வதாக உணர்கின்றான்

யதா2ம்ப4ஸா ப்ரசலதா தரவோऽபி சலா இவ |
சக்ஷுஸா ப்4ராம்யமாணேன த்3ருஶ்யதே ப்4ரமதீவ பூ4: || 53 ||

யதா2 ப்ரசலதா அம்ப4: – எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தெரிகின்ற மரங்களும் ஓடுவது போல தெரிவது போலவும். மரத்தின் பிரதிபிம்பங்களும் அசைவது போலவும்,
கண்கள் சுழலும் போது உலகமே சுழல்கின்ற போல தெரிகின்றது.

யதா2 மனோரத2தி4யோ விஷயானுப4வோ ம்ருஷா |
ஸ்வப்னத்3ருஷ்டாஶ்ச தா3ஶார்ஹ ததா2 ஸ்ம்ஸார ஆத்மன: || 54 ||

மனதினால் கற்பணை செய்யப்பட்ட உலகிலுள்ள பொருட்களை அனுபவித்தல் என்பது பொய். கனவில் காணும் அனுபவங்களும் பொய்.
அதுபோல ஆத்மாவாகிய நீ அனுபவிக்கும் விஷயங்களனைத்தும் பொய். மனதாலும், புத்தியாலும் அனுபவிக்கும் விஷயங்களும் பொய்தான்

அர்தே2 ஹ்யவித்3யமானேऽபி ஸம்ஸ்ருதிர் ந நிவர்ததே |
த்4யாயதோ விஷயானஸ்ய ஸ்வப்னேऽனர்தா2க3மோ யதா2 || 55 ||

சம்சாரமே பொய்யென்றால் எதற்காக அதிலிருந்து விடுபட வேண்டும்? ஏனென்றால் சம்சாரம் தானாக போகாது.
முயற்சி செய்தால்தான் அதிலிருந்து விடுதலை அடைய முடியும். கனவில் நாம் காணும் அனைத்தும் பொய் ஆனாலும்
அவைகளை உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அது ஸ்தூல உடம்பையும் பாதிக்கிறது.
நம்மை துயரபடுத்துகின்ற வெளி விஷயங்கள் இல்லாத போதிலும் அவைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம்.
இல்லாத பொருளுக்கு மனதில் இருப்பைக் கொடுத்து வைத்திருக்கின்றோம். அதனால் நம்மையே துயரப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
ஜீவஸ்ருஷ்டிகளினாலும் துயரத்தை, சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தஸ்மாது3த்3த4வ மா பு4ங்க்ஷ்வ விஷயானஸதி3ந்த்3ரியை: |
ஆத்மாக்3ரஹண நிர்பா4தம் பஶ்ய வைகல்பிகம் ப்4ரமம் || 56 ||

ஆகவே உத்தவா! நான் கூறப்போகும் இந்த சாதனத்தை பயன்படுத்தி சம்சாரத்திலிருந்து விடுபட முடியும்.
வைராக்கியம், மனவடக்கம், புலன்களடக்கம் என்கின்ற இந்த சாதனங்களினால் உனக்கு உறுதியான மனம், புத்தி கிடைக்கும்.
போகத்தை கொடுக்கின்ற விஷயங்களை, நம்மை ஏமாற்றுகின்ற பொய்யான புலன்களின் மூலமாக அந்த விஷயங்களுக்கு அடிமையாகி விடாதே.
உலகங்களில் கிடைக்கும் நிலையற்ற இன்பங்களில் வீழ்ந்துவிடாதே ஆத்மாவை புரிந்து கொள்ளாததினால் விளைவினால் உண்மையாக நினைக்க நேரிடுகின்றது

க்ஷிப்தோऽவமானிதோ ஸத்3பி4: ப்ரலப்3தோ4ऽஸூயிதோऽத2 வா |
தாடி3த: ஸன்னிருத்3தோ4 வா வ்ருத்த்யா வா பரிஹாபித: || 57 ||

நிஷ்டி2தோ மூத்ரிதோ வாக்3ஞைர்ப3ஹுதை4வம் ப்ரகம்பித: |
ஶ்ரேயஸ்காம: க்ருச்ச்2ரக3த ஆத்மனாத்மானமுத்3த4ரேத் || 58 ||

இந்த உலகம் யாரையும் உண்மையாக புரிந்து கொள்ளாது. எல்லோரும் அவரவர்களுடைய மனநிலை, சூழ்நிலையைப் பொறுத்து நடந்து கொள்வார்கள்.
எனவே நாம் யாரையும் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவது வீணான முயற்சி. சம்சாரத்திலிருந்து விடுபடுவது நம் கையில்தான் இருக்கிறது.
இந்த நிலையில் திதிக்ஷா என்ற சாதனத்தை பய்னபடுத்தி இவைகளை பொறுத்துக் கொண்டு அதனால் பாதிக்கப்படாமல் காத்துக் கொள்ள வேண்டும்.
அஸத்பி: – துஷ்டர்களால், க்ஷிப்தஹ – ஒதுக்கி வைத்தல்,
அவமானித – அவமதித்தல், பிரலப்த4 – வாயினால் திட்டுதல், சொல்லால் நிந்தித்தல்
அஸீயிதஹ – உன்னைப்பார்த்து பொறாமைப்படும் போதும், உன் மீது வீண்பழி சுமத்தும்போதும்
தாடிதஹ – அடித்தல் போன்ற உடலுக்கு துன்பத்தைக் கொடுத்தாலும்
நிபத்3த4ஹ – கட்டிப்போடுதல், எதையும் செய்ய விடாமல் தடைஉண்டாக்குதல்
வ்ருத்தய – செய்யும் தொழிலை கூறி அவமதித்தல்
பரிஹாபிதஹ – கிண்டல் செய்தல், பரிகாசம் செய்தல், உடலிலுள்ள அங்க குறையை கூறி பரிகாசம் செய்தல்
நிஷிடிதஹ – எச்சில் உமிழ்தல்
மூத்ரிதஹ – சிறுநீரை கழித்தல்
வா அக்ஞைஹி பஹுதா ஏவம் – இவ்விதம் அக்ஞானிகளால் விதவிதமாக
ப்ரகம்பிதஹ – நடத்தைகளால் தூண்டிவிட்டபோதிலும்
ஶ்ரேயஸ் காம – மோட்சத்தில் நாட்டமிருப்பவன், அடைய முயற்சி செய்பவன்
க்ருத்த்ரதஹ – மோசமாக நடத்தப்பட்டாலும்
ஆத்மனா ஆத்மானமுத்3த4ரேத் – இவைகளை சகித்துக் கொண்டு உன்னையே நீ உயர்த்திக் கொள்ள வேண்டும்.

ஶ்ரீஉத்தவ உவாச
யதை2வமனிபு3த்4யேயம் வத3 நோ வத3தாம் வர |
ஸுது3:ஷஹமிமம் மன்ய ஆத்மன்யஸத3திக்ரமம் || 59 ||

விது3ஷாமபி விஶ்வாத்மன்ப்ரக்ருதிர்ஹி ப3லீயஸீ |
ருதே த்வத்3த4ர்மனிரதான்ஶாந்தாம்ஸ்தே சரணாலயான் || 60 ||

உத்தவர் கேட்கிறார்
இவ்வாறு உலகம் என்னை அவமதிக்கும்போது எந்த அறிவின் துணைக் கொண்டு சகித்துக் கொள்ளமுடியும்.
எந்தவிதமான அவமானத்தாலும் பாதிக்கப்படாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்.
உபதேசம் செய்பவர்களில் மேலானவராக இருக்கின்ற பகவானே எனக்கு அந்த அறிவை கொடுக்க வேண்டும்.
இந்த உலகம் பலவிதத்தில் அவமதிப்பதை சகித்துக் கொள்வது மிகமிக கடினம் என்று நான் நினைக்கின்றேன்.
இறைவா! படித்த பண்டிதர்களுக்கும், வித்துவான்களுக்கும் கூட இந்த விஷயத்தில் தவறு செய்து விடுகிறார்கள்.
பொறுத்து கொள்ள முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு செயலில் இறங்கி விடுகிறார்கள்.

விதுஶாம் அபி – உபதேசம் செய்பவர்களில் உயர்ந்தவராக இருக்கின்ற பகவானே!
மற்றவர்கள் என்னை அவமதிக்கும்போது எந்தவிதமான சஞ்சலத்தை அடையாமல்
சகித்துக் கொண்டிருப்பது மிகவும் கடினம்
அதிக்ரமம் – மனதிற்கு வரும் அவமானத்தை
தங்களிடம் சரணமடைந்தவர்களான பக்தர்களையும், மனக்கட்டுப்பாடு உடையவர்களையும் தவிர்த்து
மற்ற யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: