ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -22–ஞான யோக சுருக்கம் –

ஸ்ரீபகவானுவாச
பரஸ்வபா4வகர்மாணி ந ப்ரஶம்ஸேன்ன க3ர்ஹயேத் |
விஶ்வமேகாத்மகம் பஶ்யன்ப்ரக்ருத்யா புருஷேண ச || 1 ||

ஆத்ம ஞானத்தை யுடையவன் உலகத்தை எப்படி மனதுக்குள் பார்த்து கொண்டிருப்பான் எப்படி வெளிஉலகத்தோடு
விவகாரம் செய்து கொண்டிருப்பான் என்பதை விளக்குகின்றார்.
சம்சாரத்தில் புகழ்ச்சி, இகழ்ச்சி இவையிரண்டும் இருக்கிறது. ஞானியானவன் யாரையும் மனதால் புகழவோ, இகழவோ மாட்டான்.
பர ஸ்வபாவ கர்மாணி – மற்றவர்களுடைய செயல்களையும், குணங்களையும், இயற்கையாக நடந்து கொள்ளும்போதும்
ந ப்ரஶம்ஸே ந கர்ஹயேத் – புகழவும் மாட்டான், இகழவும் மாட்டான். அதாவது மனதில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான், நிராகரிக்கவும் மாட்டான்.
விஶ்வம் ஏகாத்மகம் பஶ்யன் – இந்த உலகத்தை அத்வைத தத்துவமாக உணர்ந்து கொண்டு, ஒன்றாகத்தான் பார்க்கின்றான்.
இவ்வாறு வேற்றுமைகளுடன் தோன்றிக் கொண்டிருக்கும் உலகத்தை ஒன்றாக பார்க்கும்போது,
ப்ரக்ருத்யா புருஷேன ச – பிரம்மன், மாயை இவையிரண்டின் சேர்க்கையாக உலகம் இருக்கின்றது. ஈஸ்வரனே இந்த உலகமாக காட்சியளிக்கிறார்

பரஸ்வபா4வகர்மாணி ய: ப்ரஶம்ஸதி நிந்ததி |
ஸ ஆஶு ப்4ரஶ்யதே ஸ்வார்தா2த3ஸத்யபி4னிவேஶத: || 2 ||

பரஸ்வபாவ கர்மாணி – யாரொருவன் மற்றவர்களுடைய குணங்களை, செயல்களைப் புகழ்ந்து கொண்டும்,
இகழ்ந்து கொண்டும் இருக்கின்றானோ அவன் உடனடியாக மோட்சத்தை அடையும் லட்சியத்திலிருந்து விழுந்து விடுகின்றான்.
அவன் மித்யாவில் சத்யத்வத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் இவ்வாறு செயல்படுகின்றான்.

தைஜஸே நித்3ரயாபன்னே பிண்டஸ்தோ2 நஷ்டசேதன: |
மாயாம் ப்ராப்னோதி ம்ருத்யும் வா தத்3வன்னானார்த2த்3ருக்புமான் || 3 ||

நம்மை பிறர் இகழும்போது அந்த வார்த்தைகளுக்கு நாம் மனதில் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதால் அதனால் பாதிப்பை அடைகிறோம்.
நிந்தனையும், ஸ்துதியும் பொய்யானது என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே யார் நம்மை நிந்தாஸ்துதி செய்தாலும்
அவர் பொய் சொல்கிறார் என்று மனதில் நினைத்தால் அதனால் பாதிக்கமாட்டோம்.
விழிப்பு நிலையில் அனுபவிக்கும் அனைத்தும் கனவு நிலையில் அனுபவிப்பதற்கு சமமாகும்.
ஆத்மஞானமானது விழிப்புநிலை அனுபவங்களனைத்தும் பொய்யானவை என்று நினைக்க வைக்கும்.
பிண்டஸ்தஹ – சரீரத்தை உடைய ஜீவன்
நித்ரயாபன்னே – உறக்கம் என்ற சக்தி ஆட்கொள்ளும்போது
தைஜஸஹ – இந்திரியங்களை, சூட்சும சரீரத்தை
நஷ்ட சேதனஹ – ஜாக்ரத் அவஸ்தையில் இழந்து
மாயாம் ப்ராப்னோதி – கனவு நிலையை அடைகின்றான். அல்லது
ம்ருத்யும் வா – ஆழ்ந்த உறக்கத்திற்கும் செல்கின்றான்
தத்3வத் – அதுபோல
புமான் – விழிப்பு நிலையில் இருக்கும் ஜீவன்
நானார்த2 த்3ருக் – அந்த நிலையிலும் கனவு கண்டுகொண்டுதான் இருக்கின்றான்
இதிலிருந்து விழிப்புநிலை அனுபவங்களும் கனவு நிலை அனுபவங்களைப் போல பொய்யானவை என்ற அறிவை அடைய வேண்டும்.

கிம் ப4த்3ரம் கிமப4த்3ரம் வா த்3வைதஸ்யாவஸ்துன: கியத் |
வாசோதி3தம் தத3ந்ருதம் மனஸா த்4யாதமேவ ச || 4 ||

அவஸ்துன: த3வைதஸ்யா – பொய்யான இந்த பிரபஞ்சத்தில்
கியத் – எவ்வளவு தூரம், எந்த அளவுக்கு
கிம் பத்ரம், கிம் அபத்ரம் வா – எது நல்லது, எது கெட்டது என்று எண்ணுகின்றோம். ஆனால்
வாசா உதிதம் – வாக்கினால் விளக்கப்படுகின்ற உலகம்
மனஸா த்யாதமேவ ச – மனதினால் கற்பணை செய்து வைத்திருக்கின்ற உலகம்
தத்3 அந்ருதம் – இவைகள் வெறும் தோற்றம்தான்,

சா2யாப்ரத்யாஹவயாபா4ஸா ஹயஸந்தோऽப்யர்த2காரிண: |
ஏவம் தே3ஹாத3யோ பா4வா யச்ச2ந்த்யாம்ருத்யுதோ ப4யம் || 5 ||

எவைகள் பயன்படுகின்றதோ அவைகள் சத்யம் என்றும், பயன்படவில்லையென்றால் அவைகள் பொய்யென்று நினைத்து வைத்திருக்கின்றோம்.
ஆனால் ஒரு பொருள் பொய்யாக இருந்தாலும் அதனால் நாம் உணர்ச்சிவசப்படுகின்றோம். கனவில் காணும் புலியைக் கண்டு பயந்து கொள்கிறோம்.
தைஜஸன் அடைந்த சுக-துக்கங்களை விஶ்வன் கொஞ்ச நேரம் அனுபவிக்கின்றான்.
எனவே உண்மையான வஸ்து மட்டுமே சுக-துக்கங்களை கொடுப்பதில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சா2யா – நிழல், பொய்யானது.
நிழல் விழும் இடம் எதுவாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவதில்லை. வெயிலில் நிற்கும்போது கீழே தோன்றும் நிழல்
மற்றவருக்கு வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவுகின்றது. இதை வைத்து நிழல் சத்யமானது என்று சொல்லமுடியாது.
ப்ரத்யாஹ்வயா – எதிரொலி – மலையிலிருந்து எதிரொலிக்கும் நம் குரலைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஆபா4ஸா – பிரதிபிம்பம் – கண்ணாடில் தெரியும் நம் முகமானது பொய்யாக இருந்தாலும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஹி அஸந்தஹ அப்யர்த அகாரிண – இவை மூன்றும் பொய்யாக இருந்தாலும் அவைகள் உண்மையான பலனை கொடுக்கின்றது
ஏவம் தோஹாதயோ பாவ்4வா – இவ்வாறு உடல் போன்ற எல்லா பொருட்களும்
ஆ ம்ருதியத் – மரண காலம் வரை
ப4யம் யச்சந்தி – பயம் போன்ற உணர்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருக்கும்

ஆத்மைவ ததி3த3ம் விஶ்வம் ஸ்ருஜ்யதே ஸ்ருஜதி ப்ரபு4: |
த்ராயதே த்ராதி விஶ்வாத்மா ஹ்ரியதே ஹரதீஶ்வர: || 6 ||

படைப்பில் அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று முதன்மையான பிரிவு உள்ளது. அனுபவிப்பவன் பலவிதமாக அனுபவிக்கிறான்.
அனுபவிக்கப்படும் பொருட்களும் பலவாக இருக்கின்றன.
ஆத்ம ஏவ இதம் விஶ்வம் – ஆத்ம தத்துவம்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்ற உலகமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
ப்ரபு: – ஈஸ்வரனே
ஸ்ருஜதி இதம் விஶ்வம் – இந்த உலகத்தை படைக்கின்றார்
ஸ்ருஜ்யதே – அவரே தன்னையே உலகமாக படைத்துக் கொள்கிறார்.
இதிலிருந்து அறிவது படைப்பவதும், படைக்கப்படுவதும் ஒன்றேதான்.
விஶ்வாத்மா – உலகத்தை காத்துக் கொண்டிருக்கின்ற தத்துவத்தை
த்ராயதே – தன்னையே காப்பாற்றபடுபவராகவும் இருக்கிறார்.
ஹரதி – அழிக்கிறார்
ஹ்ரியதே – அழிக்கப்படுபவராகவும் இருக்கிறார்.

தஸ்மான்ன ஹயாத்மனோऽன்யஸ்மாத2ன்யோ பா4வோ நிரூபித: |
நிரூபிதேऽயம் த்ரிவிதா4 நிர்மூல பா4திராத்மனி |
இத3ம் கு3ணமயம் வித்3தி4 த்ரிவித4ம் மாயயா க்ருதம் || 7 ||

ஆகவே ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இருக்கின்ற ஒன்றை நிரூபிக்கப்படவில்லை த்ரிவிதா – மூன்று விதமான உலகங்களை
ஆத்மனி பா4தி – இவைகள் எல்லாம் ஆத்மாவில் தோன்றும் வெறும் தோற்றமாக உள்ளது
நிர்மூல – அவைகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை
இதம் குணமயம் வித்தி – இவைகள் அனைத்தும் முக்குணங்களாக அறிந்து கொள்
த்ரிவிதம் மாயயா க்ருதம் – மாயையினால் இந்த முக்குணங்கள் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஏதத்3வித்3வான்மது3தி3தம் ஞானவிக்ஞானநைபுணம் |
ந நிந்த3தி ந ச ஸ்தௌதி லோகே சரதி ஸூர்யவத் || 8 ||

மத்3 உதிதம் – என்னால் இதுவரை உபதேசிக்கப்பட்ட
ஏதத்- இந்த உபதேசத்தை
வித்வான் – அறிகின்ற ஞானி;
நைபுணம் – அறிவில் நிலைபெற்றவர். அதாவது இது ஞானநிஷ்டையும், விக்ஞான நிஷ்டையும் அடைந்தவன்.
இது மற்றவராலும் அடையக் கூடியது. ஆகவே இவன் யாரையும் நிந்திப்பதில்லை, யாரையும் புகழ்வதில்லை.
இவ்வாறு இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான். எப்பதி சூரியன் சமநோக்குடன் அனைத்திற்கும்
வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது
அது போல ஞானியும் அனைத்து ஜீவராசிகளையும் சமமாக பாவித்து வாழ்ந்து கொண்டிருப்பான்.

ப்ரத்யக்ஷேணானுமானேன நிக3மேனாத்மஸம்விதா3 |
ஆத்3ய~ண்தவத3ஸஜ்ஞாத்வா நி:ஸங்கோ3 விசரேதி3ஹ || 9 ||

ஒன்றைப் பற்றிய சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் அதைக் கொடுக்க கூடிய சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்.
பிரத்யக்ஷ பிரமாணம் – நம் அனுபவத்தில் பார்ப்பவைகள் அனைத்தும் அழிந்து போகின்றது.
அதாவது தோன்றி மறையும் தன்மையுடையது என்று அறிகின்றோம்.
அனுமான பிரமாணம் – அனுமானத்தின் மூலமாகவும் இதை உறுதி செய்து கொள்ளலாம்.
0அழிந்து போன ஜீவராசிகள், கட்டிடங்கள் பார்க்கும் போது இவைகள் தோன்றி பிறகு அழிந்திருக்கிறது.
சாஸ்திர பிரமாணம் – சாஸ்திரத்தின் உபதேசங்களை பிரமாணமாக கொண்டு அதன் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீஉத்தவ உவாச
நைவாத்மனோ ந தே3ஹஸ்ய ஸம்ஸ்ருதிர்த்3ரஷ்டுத்3ருஶ்ய்யோ: |
அனாத்மஸ்வத்3ருஶோரீஶ கஸ்ய ஸ்யாது3பலப்4யதே || 10 ||

உத்தவர் கேட்கிறார்.
ஸம்ஸ்ருதிஹி – சம்சாரம்
அஸ்ய – யாரை
ஸ்யாத் – எதை
சம்சாரம் யாரை சார்ந்தது அல்லது எதைச் சார்ந்தது. இந்த உடலைச் சார்ந்தது அல்ல என்று தெரிகிறது
த்ருஶ்யம் – அனாத்மா – பார்க்கப்படுவது
த்ரஷ்டம் – பார்ப்பவன் – ஆத்மா
இவையிரண்டும் சம்சாரம் இருக்குமிடமல்ல
கிருஷ்ண பகவானே! இந்த அனாத்மவான உடலைப் பார்க்கின்ற ஆத்மாவும் சம்சாரம் அல்ல
உபலப்யதே – ஆனால் அனுபவிக்கப்படுகின்றது

ஆத்மாவ்யயோகு3ண:ஶுத்3த4: ஸ்வயஞ்ஜ்யோதிரனாவ்ருத: |
அக்னிவத்3தா3ருவத3சித்3தே3ஹ: கஸ்யேஹ ஸம்ஸ்ருதி: || 11 ||

ஆத்மா அவ்யயஹ – ஆத்மா அழிவற்றது. எனவே சம்சாரம் இதில் இருக்கமுடியாது
அகுணஹ – மூன்று குணங்களுமற்றது (சம்சாரம் குணங்களுடையது)
ஶுத்தஹ – தூய்மையானது. பாவ-புண்ணியங்களற்றது, செயலற்றதாக இருக்கிறது
ஸ்வய்ம் ஜ்யோதி – அறிவு ஸ்வரூபம், சாட்சி ஸ்வரூபம், தானே பிரகாசித்துக் கொண்டு மற்றவைகளை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
அனாவ்ருத – ஆத்மாவை எதுவும் மறைக்காது
அக்னிவத் – அக்னியைப் போல ஸ்வயம் பிரகாசம்
தா3ருவத் அசித் தேஹ: – தேகமானது மரக்கட்டையைப் போல ஜடமானது
கஸ்ய இஹ ஸம்ஸ்ருதி – ஆகவே இந்த சம்சாரம் ஆத்மாவை சார்ந்ததல்ல பிறகு யாரை சார்ந்தது? அல்லது எதைச் சார்ந்தது?

ஸ்ரீபகவான் உவாச
யாவத்3தேஹேந்த்3ரியப்ராணைராத்மன: ஸன்னிகர்ஷணம் |
ஸம்ஸார: ப2லவாம்ஸ்தாவத3பார்தோ2ऽப்யவிவேகின: || 12 ||

பகவான் கூறுகிறார்.
அவிவேகின ஸம்ஸார ப2லவாம் – அக்ஞானிகளுக்கு சம்சாரம் அனுபவமாக இருக்கிறது
ஆத்மா அனாத்மாவுக்கு இடையே உள்ள சிதாபாஸனிடத்தில்தான் சம்சாரம் இருக்கிறது. இது தன்னை மூன்று சரீரங்களாக நினைக்கலாம்
அல்லது ஆத்மாவின் பிரதிபிம்பம் என்றும் புரிந்து கொள்ளலாம், இந்த சிதாபாஸன்தான் ஜீவன் என்றும் அழைக்கப்படுகிறான்.
எது தேகத்துடனும், இந்திரியங்களுடனும், பிராணன்களுடனும் ஆத்மா அருகே இருந்து கொண்டு பிரகாசிக்கின்றதோ அதுவே சிதாபாஸன்.
இந்த சிதாபாஸன் அறியாமையில் இருக்கும்வரை சம்சாரத்தை அனுபவிக்கிறான். இது உண்மையிலேயே இல்லாத நிலையிலும் அதை மெய்யாக இருக்கிறது

அர்தே2ऽஹயவித்3யமானே பி ஸம்ஸ்ருதிர்ன நிவர்ததே |
த்4யாயதோ விஷயானஸ்ய ஸ்வப்னேऽனர்த்தா2க3மோ யதா2 || 13 ||

யதா2 – எவ்விதம் கனவில்
அனர்த்தாஅகமஹ – துயரங்களும், வேண்டாததும் வருகின்றதோ அது போல, உண்மையில் இல்லாதவைகளை அடைந்து அனுபவிப்பது போல
அவித்யமானே அர்தே2 – பிரபஞ்சம் என்ற ஒன்று உண்மையிலே இல்லாதபோதிலும் நம்மை வருத்தப்பட வைத்துக் கொண்டிருக்கும்
விஷயங்கள் உண்மையில் இல்லாத போதிலும்
ஸம்ஸ்ருதி ந நிவர்ததே – சம்சாரம் நம்மை விட்டு போவதில்லை
அஸ்ய – இந்த ஜீவனுக்கு
விஷயான் த்யாயதஹ – அந்த மித்யாவான பொருளை உண்மையென்று நினைப்பதால் சம்சாரம் அவனை விட்டு விலகுவதில்லை.

யதா2 ஹயப்ரதிபு3த்3த4ஸ்ய ப்ரஸ்வாபோ ப3ஹவனர்த2ப்4ருத |
ஸ ஏவ ப்ரதிபு3த்3த4ஸ்ய ந வை மோஹாய கல்பதே || 14 ||

யதா2 ஹி அப்ரதிபுத்தஸ்ய – விழித்துக் கொள்ளாதவனுக்கு,, அறியாமையிலிருப்பவனுக்கு
ப்ரஸ்வாபஹ – கனவானது
பஹு அனர்த2ப்4ருத – பலவிதமான துயரத்தை, சம்சாரத்தை கொடுத்து கொண்டு இருக்கும்
ஸ ஏவ ப்ரதிபு3த்3த4ஸ்ய – அவனே விழித்துக் கொண்டால்
ந வை மோஹாய கல்பதே – அதற்கு பிறகு அவனுக்கு சம்சாரம் என்பது கனவில் கிடையாது. கனவில் அடையும் சோகம்,மோகம் கிடையாது

ஶோகஹர்ஷப4யக்ரோத4 லோப4மோஹஸ்ப்ருஹாத3ய: |
அஹங்காரஸ்ய த்3ருஶ்யந்தே ஜன்ம்ம்ருத்யுஶ்ச நாத்மன: || 15 ||

சம்சாரம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற விதங்களை இதில் கூறுகிறார்.
ஶோக – சோகமாகவும்
ஹர்ஷ – நிலையற்ற மகிழ்ச்சியாகவும்
ப4ய – பயமாகவும்
க்ரோத4 – கோபமாகவும்
லோப4 – கருமியாகவும், பகிர்ந்து கொள்ளாத குணமாகவும், என்னிடத்திலுள்ளது யாரிடமும் போகக்கூடாது என்ற மனப்பாங்காகவும்
மோஹம் – மனமயக்கமாகவும், மதிமயக்கமாகவும், பொருட்கள் மீது அதிக பற்று வைக்கும் உணர்வாகவும்
ஆத3யஹ –சம்சாரமானது அனுபவிக்கப்படுகிறது.
அஹங்காரஸ்ய த்ருஶ்யந்தே – இவைகளெல்லாம் அகங்காரத்தை சார்ந்ததாக இருக்கின்றது. என்னுடைய வெளிப்பாடுகள் அல்ல
ஜன்ம ம்ருத்யு ச – பிறப்பும், இறப்பும் கூட அகங்காரத்தை சார்ந்தது
ந ஆத்மனஹ – ஆத்மாவாகிய என்னோடு சம்பந்தப்பட்டவைகளல்ல என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

தே3ஹேந்த்3ரியப்ராணமனோऽபி4மானோ ஜீவோऽந்தராத்மா கு3ணகர்மமூர்த்தி: |
ஸூத்ரம் மஹாநித்யுருதே4வ கீ3த: ஸம்ஸார ஆதா4வதி காலதந்த்ர: || 16 ||

அந்தராத்மா – சுத்த சைதன்யம், உடலுக்கு ஆதாரமாகவும், ஐந்துகோசங்களை கடந்ததாகவும் இருக்கின்ற ஆத்மா
ஜீவஹ – அதுதான் ஜீவனாக இருக்கின்றது
தேஹ இந்திரிய ப்ராண மனோபிமானஹ – ஸ்தூல உடல், புலன்கள், பிராணன்கள், மனம் இவைகளில் அபிமானத்துடன் இருக்கின்றான்
குண கர்ம மூர்த்திஹி – இது ஜீவனை குறிக்கின்றது
முக்குணங்கள் அதற்கேற்ற செயல்களை புரிய வைத்து பாவ-புண்ணியங்களை கொடுக்கின்றது.
இவைகள் அதற்கேற்ற மாதிரியான ஸ்தூல, சூட்சும உடல்களையும் மனப்பாங்கையும் கொடுக்கின்றது.
ஸூத்ரம் – ஹிரண்யகர்ப்பன்
மஹான் – மஹத் என்கின்ற தத்துவம் என்று
உருத4ஹ தேவ – விதவிதமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது
கால தந்த்ர – ஈஸ்வரனுடைய கட்டுக்குள் இருந்து கொண்டு
சம்சார ஆதா4வதி – சம்சாரத்தை அனுபவிக்கின்றான், சம்சாரத்தில் உழன்று கொண்டு இருக்கின்றான்

அமூலமேத்த்3ப3ஹுரூபரூபிதம் மனோவச:ப்ராணஶரீரகர்ம |
ஞானாஸினோபாஸனயா ஶிதேன ச்சி2த்த்வா முனிர்கா3ம் விசரத்யத்ருஷ்ண: ||17||

ஏதத் – இந்த அகங்காரம்
பஹூரூபரூபிதம் – விதவிதமான வெளிபாடுகளாக வெளிப்பட்டுள்ளது. இந்த அகங்கார தத்துவம் விதவிதமான வேஷங்களை
போட்டுக் கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அமூலம் – இது ஆதாரமற்றது, மித்யா, இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது
மனோ வச:ப்ராணஶரீர – மனம், வாக்கு போன்ற கர்மேந்திரியங்கள், ஸ்தூல சரீரம்
கர்ம – இவைகளை தன்னிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றது
ஞானம் என்கின்ற சாதனத்தின் மூலமாக அகங்காரத்தை நீக்கிக்கொள்ள வேண்டும்,
ஞானம் என்கின்ற வாளால் அகங்காரத்தை வெட்ட வேண்டும்.
ஶிதேன உபாஸனயா – அனைத்து விதமான உபாஸனைகளின் மூலம் இந்த வாளை கூர்மைப்படுத்த வேண்டும்.
மேலும் தியானம் மூலமும் மனதை அமைதிப்படுத்த வேண்டும், பக்குவப்படுத்த வேண்டும். தூய்மையாகவும், உறுதியாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
முனி – அகங்காரத்தி நீக்கி நிறைவான மனதுடைய முனிவன்
கா3ம் – இந்த உலகத்தில்
அத்ருஷ்ணஹ – எந்தப்பற்றும் இல்லாமல்
விசரத் – மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்

ஞானம் விவேகோ நிக3மஸ்தபஶ்ச ப்ரத்யக்ஷமைதிஹயமதா2னுமானம் |
ஆத்3யந்தயோரஸ்ய யதே3வ கேவலம் காலஶ்ச ஹேதுஶ்ச ததே3வ மத்4யே || 18 ||

நிகமஹ – இந்த அறிவை உபநிஷத்தின் மூலம் அடையலாம்
தபஶ்ச – உபாஸனையின் மூலமாகவும், உன்னை ஞானத்திற்கு தயார் செய்கின்ற அனைத்து தவங்களின் மூலமாகவும்
மனதை செம்மைபடுத்திக் கொள்ளலாம்
ஐதிஹயம் – குருமுகமாக சாஸ்திரத்தை கேட்கவேண்டும்
அனுமானம் – கேட்டதை சிந்தித்து, விசாரம் செய்து அறிவு தெளிவு பெற வேண்டும்
ப்ரத்யக்ஷம் – இந்த அறிவை நாம் சந்திக்கும் அன்றாட அனுபவத்தில் பயன்படுத்த வேண்டும். அடைந்த அறிவை அனுபவமாக்க வேண்டும்.
அஸ்ய – இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பும், அழிந்த பின்பும் எது இருக்கின்றதோ அதுவே இடைப்பட்ட காலத்திலும் இருக்கின்றது.
அதுவே அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றது. காலமாகவும் இருக்கின்றது.

யதா2 ஹிரண்யம் ஸ்வக்ருதம் புரஸ்தாத்யஶ்சாச்ச ஸர்வஸ்ய ஹிரண்மயஸ்ய |
ததே3வ மத்4யே வ்யவஹார்யமாணம் நானபதே3ஶைரஹமஸ்ய தத்3வத் || 19 ||

ஸு அக்ருதம் – ஆபரணங்கள் செய்வதற்கு முன்பு
யதா2 ஹிரண்யம் – எவ்வாறு தங்கமானது இருக்கின்றது
ஸர்வஸ்ய – எல்லாவிதமான
ஹிரண்மயம் – ஆபரணங்களும்
புரஸ்தாத பஶ்சாத் – உருக்கி அழிக்கப்பட்ட பின்பும்
நானா அபதே – விதவிதமான பெயர்களால் விவகாரம் செய்யப்பட்ட போதிலும் அது இருக்கிறது
ததே3வ மத்4யே – அதுவேதான் இடைக்காலத்திலும்
வ்யவஹார்யமானம் – அதே தங்கம்தான் எந்தப்பெயரோடு, எந்த உருவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றதோ அதுவாக அழைக்கப்படுகின்றது
தங்கம்தான் எல்லா நிலையிலும் இருக்கின்றது. அதுபோலவே பிரம்ம ஸ்வரூபியான நானும் இருக்கின்றேன்

விக்ஞானமேதத்ரியவஸ்த2மங்க3 கு3ணத்ரயம் காரணகர்யகர்த்ரு |
ஸமன்வயேன வ்யதிரேகதஶ்ச யேனைவ துர்யேண ததே3வ ஸத்யம் || 20 ||

ஏதத்3 விக்ஞானம் – நம் மனதில் தோன்றுகின்ற அறிவு ஸ்வரூபம், சிதாபாஸத்துடன் கூடிய மனம்
த்ரி அவஸ்தம் – மூன்று அவஸ்தைகளுடன் கூடியது
அங்க – உத்தவா!
குணத்ரியம் – நாம் மூன்றுவிதமான குணங்களின் தூண்டுதலினால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்
காரண – விவகாரத்திற்கு காரணமான பொருட்களை காரணம் என்று இங்கு பொருட்படுத்த வேண்டும்
காரிய – நம்முதைய உடல் இது இயங்குவதற்கு வெளியேயுள்ள பொருட்கள் காரணமாக இருக்கின்றது
கர்த்ரு – உடலிலுள்ள புலன்களுக்கு அதிஷ்டானமான தேவதைகள் கர்த்தாவாக இருக்கின்றது

அன்வய வ்யதிரேக நியாயத்தை பயன்படுத்தி ஜீவனையும், துரிய தத்துவத்தையும், பரமாத்மாவையும்,
இவைர்களுக்கிடையே உள்ள உறவையும் அறிந்து கொள்ள வேண்டும்.காரிய-காரண சம்பந்தம் இருக்கின்றதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
களிமண்-பானை உதாரணத்தில் எது இருந்தால் அது இருக்குமோ, எது இல்லையென்றால் அது இருக்காதோ என்ற இரண்டு
நியாயத்தை பொருத்திப்பார்க்க வேண்டும். குயவன் இல்லையென்றாலும் பானை இருக்கின்றது.
ஆனால் களிமண் இந்த இரண்டு நியாயங்களுக்கும் பொருந்தி வருவதால் களிமண் காரணம், அதுவே சத்யம், பானைகளனைத்தும் காரியம்-
ஸமன்வய வ்யதிரேக என்ற நியாயத்தை பயன்படுத்தி எந்த துரிய தத்துவத்தால் அனாத்மாக்கள் இருக்கின்றனவோ
அந்த துரிய தத்துவமே சத்யம். சைதன்யம் இருக்கும்போதுதான் சிதாபாஸம் இருக்கும், அது இல்லையென்றால் சிதாபாஸமும் இல்லாமல் போகும்

ந யத்புரஸ்தாது3த யன்ன பஶ்சான்மத்4யே ச தன்ன வ்யபதே3ஶமாத்ரம் |
பூ4தம் ப்ரஸித்3த4ம் ச பரேண யத்3யத்ததே3வ தத்ஸ்யாதி3தி மே மனீஷா || 21 ||

எது தோன்றுவதற்கு முன் இல்லையோ, அழிவுக்குப் பிறகும் இல்லையோ அது இடையிலும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இடையில் இருப்பது போல தோன்றுவது வெறும் நாம-ரூபம்தான்(வ்யபதே3ஶமாத்ரம்)
எவையெல்லாம் வேறொன்றின் துணையில்லாமல் இருப்பை அடைகின்றதோ, உதாரணமாக உடல் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது,
அதை எது பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது அதுவே மெய்ப்பொருளாகின்றது இதுதான் என்னுடைய தீர்மானமான உபதேசமாகும்.

அவித்3யமானோऽப்யவபா4ஸதே யோ
வைகாரிகோ ராஜஸ ஸர்க3 ஏஸ: |
ப்3ரஹ்ம ஸ்வயம் ஜ்யோதிரதோ விபா4தி
ப்ரஹ்மேந்த்3ரியார்தா2த்மவிகாரசித்ரம் || 22 ||

எந்தவொரு படைப்பு உண்மையில் இல்லாத போதிலும் (அவித்யமானஹ) இருப்பது போல் தோன்றிக்கொண்டிருக்கின்றதோ(அவபா4ஸதே)
இது அனுபவத்திற்கு இருக்கின்ற காரிய ஸ்வரூபம். இது ரஜோ குணத்தின் படைப்பு. மாயை ரஜோகுணத்தின் வெளிப்பாடு இந்த ஸ்ருஷ்டி.
பிரம்ம தத்துவம் சுயப்பிரகாசம் அதாவது தானாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த பிரம்மனே மாயையின் துணைக் கொண்டு இவ்வாறாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
இது மாயையின் துணைக் கொண்டு புலன்கள், மனம், சூட்சும பூதங்கள், ஸ்தூல பூதங்கள் என்றெள்ளம் தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றது.
ஸ்ருஷ்டி அனைத்தும் வரைப்படங்கள் போல இருக்கின்றது.

ஏவம் ஸ்பு2தம் ப்ரஹ்மவிவேகஹேதுபி4:
பராபவாதே3ன விஶாரதே3ன |
சி2த்த்வாத்மஸந்தே3ஹமுபாரமேத ஸ்வானந்த
துஷ்டோऽகி2லகாமுகேப்4ய: || 23 ||

இவ்விதம் தெளிவாக பிரம்ம ஞானத்தைக் கொடுக்கும் பிரமாணங்கள் (உபநிஷத், பாகவத புராணம்) மூலமாக அறிந்து
இந்த அறிவுக்கு எதிராக இருக்கும் கருத்துக்களை திறமையுடன் உறுதியாக நீக்கி ஆத்ம விஷயத்தில் இருக்கும் சந்தேகத்தை நீக்கி விடவேண்டும்.
பின்னர் தானே ஆனந்தஸ்வரூபமாக உணர்ந்து அனைத்து விஷயங்களிலிருந்தும், புலன்கள் கொடுக்கும் ஆசைகளிலிருந்தும் நீங்கி இருக்க வேண்டும்.

நாத்மா வபு: பார்தி3வமி~ண்த்3ரியாணி
தேவா ஹயஸுர்வாயுர்ஜல்ம்ஹுதாஶ: |
மனோ ன்னமாத்ரம் தி4ஶணா ச ஸத்த்வமஹங்க்ருதி:
க2ம் க்ஷிதிரர்த2ஸாம்யம் || 24 ||

பார்திவம் வபு: – பூமியை ஆதாரமாக கொண்ட இந்த உடல் ஆத்மா அல்ல. இந்த உடலை நான் என்றூ உணர்வுபூர்வமாக நினைக்கக்கூடாது.
பத்து புலன்களும் நான் அல்ல. புலன்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற தேவதைகளும் நான் அல்ல. ஐந்து பிராணன்களும் நானல்ல.
மனம் நானல்ல. புத்தியும் நான் அல்ல. சித்தமும் நானல்ல. அகங்காரமும் ஆத்மாவல்ல என்று அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்.
இதிலிருந்து எல்லா கோசங்களும், மூன்று சரீரங்களும் நீக்கப்படுகிறது. மேற்சொன்னவைகள் அனைத்தும் அன்னத்தின் மூலமாக உருவானது.
ஸ்தூலமான வாயு, நீர், அக்னி, ஆகாசம், நிலம் இந்த பூதங்களும் ஆத்மாவல்ல. ஐந்து சூட்சும பூதங்களும் ஆத்மாவல்ல.

ஸமாஹிதை: க: கரணௌர்கு3ணாத்மபி4:
கு3ணோ ப4வேன்மத்ஸுவிவிக்ததா4ம்ன: |
விக்ஷிப்யமணைருத கிம் நு தூ3ஷணம்
க4னைருபேதைர்விக3தை ரவே: கிம் || 25 ||

புலன்களையும், மனதையும் நன்கு கட்டுப்படுத்தி நற்குணங்களை எல்லாம் அடைந்து அதனால் நல்ல உறுதியான தூய்மையான
மனதை அடைந்தாலும் என்ன பலன். ஞானிக்கு இந்த மாதிரியான மனதினால் எந்தப் பலனுமில்லை.
ஸுவ்விக்ததாம்னஹ – நன்கு பிரம்ம ஸ்வரூபத்தை அடைந்தவன்
சஞ்சலமான மனதிருந்தாலும் அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேகங்களால் சூரியம் மறைக்கப்பட்டாலும்,
மறைக்காமலிருந்தாலும் அதனால் சூரியனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

யதா2 நபோ4 வாய்வனலாம்பு3பூ4கு3ணை:
க3தாக3தைர்வர்துகு3ணைர் ந ஸஜ்ஜதே
ததா2க்ஷரம் ஸத்த்வரஜஸ்தமோமலை:
அஹமதே: ஸம்ஸ்ருதிஹேதுபி4: பரம் || 26 ||

நப: – ஆகாசம்
எவ்வாறு வாயு, நீர், அக்னி பூமி முதலியவைகளின் குணகேடுகளால் ஆகாசத்திற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படுவதில்லையோ
அவ்வாறு பிரம்மமானது சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களிலுள்ள அழுக்குகளால் பாதிக்கப்படுவதில்லை.
இந்தக் குணங்கள் சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. இவைகளால் அகங்காரத்தை கடந்துள்ள பிரம்மத்திற்கு
எந்தப்பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த முக்குணங்களில் நன்மையும், தீமையும் இருக்கின்றது.
இந்த இரண்டு நிலைகளிலும் ஆத்மாவுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை

ததா2பி ஸங்க3: பரிவர்ஜனீயோ கு3ணேஷு மாயாரசிதேஷு தாவத் |
மத்3ப4க்தியோகே3ன த்3ருடே4ன யாவத்3ரஜோ நிரஸ்யேத மன:கஷாய: || 27 ||

ததா2பி – இரூந்தபோதிலும், ( மனதை அமைதிப்படுத்தவும், தூய்மைபடுத்தவும் வேண்டும்)
ஸங்க3: பரிவர்ஜனீய: – மனதிலுள்ள தோஷங்களான பற்றுக் கொள்ளுதல், உணர்ச்சிவசப்படுதல் இவைகளை
மனதிலிருந்து அறவே நீக்கி மனதை பக்குவப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும்.
குணேஷு – விஷயங்களில், புலனுகர் போகப்பொருட்களில் உள்ள பற்றை நீக்க வேண்டும்
மாயா ரசிதேஷு – மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த விஷயங்களை, இந்த பற்றை எவ்வாறு, எதன் துணைக்கொண்டு நீக்குவது?
மத் பக்தியோகேன த்ருடேன – என்னிடத்தில் உறுதியான பக்தி செலுத்துவதன் மூலமாக, பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்க முடியும்
ரஜஹ – அசுத்தம்
மன:கஷாயஹ – மனதிலுள்ள வெளிபடுத்தப்பட்ட ராக-துவேஷங்கள், மறைந்துள்ள ராக-துவேஷங்கள், வெளித்தோற்றத்திற்கு வராத அழுக்குகள்
நிரஸ்யேத – இவைகள் நீங்கும் வரை இறைவன் மீது பக்தி செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

யதா2மயோऽஸாது4 சிகித்ஸிதோ ந்ருணாம் புன: புன: ஸந்துத3தி ப்ரரோஹன் |
ஏவம் மனோऽபக்வகஷாயகர்ம குயோகி3னம் வித்4யதி ஸர்வஸங்க3ம் || 28 ||

மனித சரீரத்தில் நோய் வந்து விட்டால் அது முழுமையாக குணமாகும்படி வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
அரைகுறையாக செய்து கொண்டால் அந்த நோய் மீண்டும் உன்னைத்தாக்கும். அதுபோல போகப்பொருட்களில்
பற்றுக் கொண்டிருக்கும் மனதை, முழுமையாக பயன்படுத்தாத நிலையில் அதிலிருந்து வெளிப்படுகின்ற
செயல்கள் நம்மை துன்புறுத்தும், தாக்கும்

குயோகி3னோ யே விஹிதாந்தராம்யைர்மனுஷ்ய
பூ4தைஸ்த்ரித3ஶோபஸ்ருஶ்டை |
தே ப்ராக்தனாப்4யாஸப3லேன பூ4யோ யுஞ்ஜந்தி
யோ3கம் ந து கர்மதந்த்ரம் || 29 ||

வேதாந்த சாஸ்திரத்தை கற்றுக் கொள்ள முயற்சி செய்யும்போது தடைகள் பல வரும். நல்லதை செய்யும் போதுதான்
தடைகளை சந்திக்க நேரிடும். இந்த தடைகளை தாண்டிவிட்டால் அதிக பலன்களை அடைந்திடுவோம்.
குயோகினஹ – மோட்ச சாதனத்தை பின்பற்றிக் கொண்டிருக்கும் சாதகன், இன்றும் மனப்பக்குவத்தை முழுமையாக அடையாத சாதகன்
மனுஷ்ய பூத4 த்ரித3ஶ உபஸ்ருஷ்டை – நம்மை சுற்றியுள்ள மனிதர்கள், மற்ற உயிரினங்கள், 30 தேவர்கள் இவர்களால்
விஹித ஆந்தராய: – நம்மை நோக்கி வருகின்ற, செலுத்தப்படுகின்ற தடைகள் வந்தாலும்
தே – அவர்கள்
பூயஹ – மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
யோக: – சாதனத்தை
ப்ராக்தன் அப்யாஸ ப3லேன – ஏற்கனவே முயற்சி செய்திருந்தது, அந்தப்பலத்தைக் கொண்டு
யுஞ்ஜந்தி – ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும்.
ந து கர்மதந்த்3ரம் – மீண்டும் கர்மகாண்டத்திற்கு சென்றுவிடக்கூடாது

கரோதி கர்ம க்ரியதே ச ஜந்து: கேனாப்யஸௌ
சோதி3த ஆனிபதாத் |
ந தத்ர வித்3வான்ப்ரக்ருதௌ ஸ்தி2தோऽபி
நிவ்ருத்த த்ருஷ்ண: ஸ்வஸுகா2னுபூ4த்யா || 30 ||

சம்சாரியானவன் விதவிதமான செயல்களை செய்துக் கொண்டிருக்கின்றான். எப்போதும் கர்த்தாவாகவே இருக்கின்றான். கர்மத்தின் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான். இந்த அக்ஞானிகள் அவர்கள் அறியாமலேயே ஏதாவது காரணத்தால், சம்ஸ்கார பதிவினாலோ மற்றவர்களின் தூண்டுதலினாலோ செயல் செய்து கொண்டு இருக்கிறான். மரணம் அடையும் வரை செயல்களை செய்து கொண்டிருப்பான். ஆனால் ஞானியானவன் இந்த விஷயத்தில் அவர்கள் மாதிரி செயல் புரிவதில்லை. தன்னுடலில் இருந்து கொண்டிருந்த போதும், சூழ்நிலைகளாலும், ஸம்ஸ்காரங்களாலும் தூண்டப்படுவதில்லை. செயல் செய்ய வேண்டிய மன வேட்கையற்று இருக்கின்றான். ஏனென்றால் தன்னுடைய ஆனந்த ஸ்வரூபத்தை உணர்ந்துவிட்டதால் அவனால் இவ்வாறு வெறும் சாட்சியாக மட்டும் இருக்க முடிகிறது.

திஷ்ட2ந்தமாஸீனமுத வ்ரஜந்தம் ஶயானமுக்ஷந்தமத3ந்தமன்னம் |
ஸ்வபா4வமன்யக்திமபீஹமானமாத்மானமாத்மஸ்த2மர்தினி வேத3 || 31 ||

ஆத்மாவில் புத்தியை நிலைநிறுத்திவிட்ட ஞானி இந்த உடல் நிற்கிறது, உட்கார்ந்து கொண்டிருக்கிறது, நடக்கிறது, படுத்திருக்கிறது, மல-மூத்திரத்தை வெளிதள்ளுகிறது, உணவு உட்கொள்கிறது ஆகிய இதுபோன்ற இயல்பான பிற செயல்களை செய்து கொண்டிருக்கிறது என்பதையே அறியமாட்டான். அவன் ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கின்றான். இவையெல்லாம் இந்த உடல்தான் செய்கிறது நானல்ல என்று அவன் உணர்ந்திருக்கின்றான்.

யதி3 ஸ்ம பஶ்யத்யஸதி3ந்த்3ரியார்த2ம் நானானுமானேன விருத்3த4மன்யத் |
ந மன்யதே வஸ்துதயா மனீஷீ ஸ்வாப்னம் யதோ2த்தா2ய திரோத3தா4னம் || 32 ||
இந்திரியார்த2ம் – புலன்களுக்கு அனுபவிக்கப்படுகின்ற உலகம்
அஸத் – பொய்யானதாக இருக்கின்ற உலகம்,
நானா – விதவிதமாக இருக்கின்ற உலகம்
யதி3 ஸ்ம பஶ்யதி – எவ்வாறு பார்க்கப்படுகிறது
அனுமானேன விருத்தம் – அனுமானம் மூலமாக பார்த்தாலும், உலகம் வெவ்வேறாகத்தான் இருக்கும். இந்த நிலையில்
அன்யத் – எனக்கு வேறாக தோன்றிக் கொண்டிருக்கின்றது. அனைத்தும் பஞ்ச பூதங்களாலானது. எனவே இந்த எண்ணம் தவறானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மனீஷீ – புத்தியுடையவன், ஞானியானவன் புலன்களுக்கு தோன்றியபடி இருக்கும் உலகத்தை ஏற்றுக் கொள்வதில்லை. விழித்தவுடன் மறைந்து போகின்ற கனவு உலகத்தைப்போல பார்த்து கொண்டிருக்கின்றான்.

பூர்வம் க்3ருஹீதம் கு3ணகர்மசித்ரமஞானமாத்மன்யவிவிக்தமங்க3 |
நிவர்ததே தத்புனரீக்ஷயைவ ந க்3ருஹயதே நாபி விஸ்ருய்ய ஆத்மா || 33 ||

உத்தவா! குணங்களாலும், கர்மங்களாலும் பலவகையாக இருக்கும் சரீரம் புலன்கள் முதலியவை அக்ஞானம் காரணமாக ஆத்மாவில் இருப்பதாக முன்னர் கருதப்பட்டன. ஆனால் ஞானம் ஏற்பட்டவுடன் அக்ஞானமும் அதன் காரியங்களும் மறைந்து விடுகின்றன. இந்த ஆத்மா உடலை கிரகிக்கவும் இல்லை, நீக்கவும் இல்லை. அதாவது ஆத்மா எப்போதும் ஒரேவிதமாகத்தான் இருந்து வருகிறது. அதில் விகாரம் எதுவும் ஏற்படமுடியாது. அக்ஞானத்துடன் கூடிய மனம் சம்சாரி, ஞானத்துடன் கூடிய மனதையுடையவன் ஞானி என்று புரிந்து கொள்வாயாக

யதா2 ஹி பா4னோருத3யோ ந்ருசக்ஷுஷாம்
தமோ நிஹன்யான்ன து ஸத்3வித4த்தே |
ஏவம் ஸமீக்ஷா நிபுணா ஸதீ மே
ஹன்யாத்தமிஸ்ரம் புருஷஸ்ய ப்83த்3தே4: || 34 ||
இதில் ஞானத்தின் ஸ்வரூபத்தை பகவான் கூறியிருக்கிறார். ஞானத்தை அடைந்து விட்டால் அறியாமையானது நீக்கப்பட்டு மறைந்திருக்கின்ற மெய்ப்பொருள் தெரிந்துவிடுகிறது. எவ்விதம் சூரியன் உதிக்கும்போது மனிதர்களுடைய பார்வையை மறைக்கின்ற இருளை நீக்குகின்றதோ அதுபோல ஆத்மஞானம் பிரம்மத்தை மறைக்கின்ற அறியாமையை நீக்கிவிடும். சூரியோதயம் எந்தப்பொருளையும் உருவாக்குவது இல்லை அதுபோல ஆத்மாவைப்பற்றிய சரியான அறிவு, மிக சக்தி வாய்ந்த அறிவான, உண்மையான ஞானம் அந்த ஜீவனுக்குள் இருக்கின்ற அறியாமையை அழிக்கின்றது

ஏஷ ஸ்வயஞ்ஜ்யோதிரஜோऽப்ரமேயோ மஹானுபூ4தி: ஸகலானுபூதி: |
ஏகோ த்3விதீயோ வசஸாம் விராமே யேனேஷிதா வாக3ஸவஶ்சரந்தி || 35 ||

இதில் ஆத்மாவினுடைய ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. இந்த ஆத்மாவானது தானாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. பிறப்பற்றது,
அப்ரமேயஹ – புலன்களுக்கு விஷயமாகாதது. புலன்களுக்கு வசப்படாதது.
மஹானுபூதி – வரையறுக்க முடியாத பூரணமான சைதன்ய ஸ்வரூபம்
ஸகலானுபூ4தி – வரையறுக்கப்பட்ட எல்லா அறிவிற்கும் ஆதாரமாக இருப்பது.
ஏக – ஒன்றாக இருப்பது
அத்வீதிய – இரண்டற்றதாகவும் இருக்கிறது
வசஸாம் விராமே – வாக்கால் விளக்கமுடியாததாக இருக்கிறது
இந்த சைதன்யத்தின் இருப்பினால் வாக் இந்திரியமும், பிராண தத்துவமும் செயல்படுகின்றது.

ஏதாவானாத்மஸம்மோஹோ யத்3விகல்பஸ்து கேவலே |
ஆத்மந்ருதே ஸ்வமாத்மானமவலம்போ3 ந யஸ்ய ஹி || 36 ||

இவ்வளவுதான் ஒருவனுடைய மோஹம், தன்னைப்பற்றிய தவறான எண்ணம் தூய்மையான ஆத்மாவிடம் எல்லாவற்றையும்
ஏற்றி வைத்து அனுபவிப்பதுதான் அவனுடைய மோஹத்தின் எல்லை. தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தை தாண்டி
இந்த உடலுக்கும், உலகத்திற்கும் இருப்பு என்பது இல்ல என்று உணர வேண்டும்.

யன்னாமாக்ருதிபி4ர்க்3ரஹயம் பஞ்சவர்ணமபா3தி4தம் |
வ்யர்தே2னாப்யர்த2வாதோऽயம் த்3வயம் பண்டி3தமானினாம் || 37 ||

இதில் பூர்வமீமாம்ஸர்களின் கருத்தான் வேதத்தின் முதல்பகுதியான கர்ம காண்டம். அதுதான் பிரமாணம் என்று கருத்தானது
நிராகரிக்கப்படுகிறது இந்த ஸ்லோகம். நாம-ரூபங்களினால் எது கிரகிக்கப்படுகின்றோ, அதுவே ஐந்து பூதங்களாக உள்ளது.
அதே சமயம் உண்மையாக இருக்கின்றதோ, இருமையாக உள்ள இந்த உலகம் வேதாந்தத்தில் கூறியிருக்கும் வார்த்தைகள்
அர்த்தவாதம் என்று அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இவ்விதம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களிடம் பேசுவதினால் எந்தப் பயனும் இல்லை

யோகே3னோ பக்வயோக3ஸ்ய யுஞ்ஜத: காய உத்தி2தை: |
உபஸர்கை3ர்விஹன்யேத தத்ராயம் விஹிதோ விதி4: || 38 ||

சாதனத்தை பூர்த்தி செய்யாமல் இருக்கும் சாதகர்கள் அந்த முயற்சியில் இருக்கும் போது இந்த உடலும், மனமும்
ஒருவேளை விதவிதமான தடைகளால் தாக்கப்பட்டால் இந்த சூழ்நிலைகளில் கீழ்வரும் சாதனங்கள் கூறப்பட்டிருக்கிறது.
சாஸ்திரத்தால் வழிக்காட்டப்பட்டுள்ளது. இவைகளை பயன்படுத்தி தடைகளிலிருந்து மீள வேண்டும்.

யோக3தா4ரணயா கம்ஶ்சிதா3ஸனைர்தா4ரணான்விதை: |
தபோமந்த்ரைஷதை4: காம்ஶ்சிது3பஸர்கா3ன்வினிர்த3ஹேத் || 39 ||

சில தடைகளை யோகசூத்திரத்தில் கூறப்பட்ட தாரணை என்ற சாதனத்தின் மூலம் நீக்கிக் கொள்ளலாம்.
தாரணையுடன் கூடிய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில ஆசனங்களையும் பயன்படுத்தி நீக்கி கொள்ளலாம்.
வேறு சில தடைகளை தவத்தின் மூலமாக நீக்கி கொள்ள வேண்டும். ஆத்ம ‘ஞானத்தை அடைவதற்கான தகுதியை அடைந்துவிட வேண்டும்.
சில மந்திரங்களின் துணைக் கொண்டும், அவற்றை உச்சாடனம் செய்தும், மருந்துகளினால் உடலிலுள்ள நோய்களையும் நீக்கிக் கொள்ள வேண்டும்.

காம்ஶ்சின்ம மானுத்4யானேன நாமஸங்கீர்தனாதி3பி4: |
யோ3கே3ஶ்வரானுவ்ருத்த்யா வா ஹன்யாத3ஶுப4தா3ன்ஶனை: || 40 ||

சில விதமான தடைகளை பகவானை நினைப்பதன் மூலமாக நீக்கிக் கொள்ள வேண்டும், இதனால் இறைவன் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
பயம் நீங்கும். ஆழ்மனதில் இறைத்தியானம் செய்து பழகிவிட்டால் எல்லா சமயங்களிலும் பகவான் நாமம் அறியாமல் வாயிலிருந்து வெளிப்படும்.
விராட் புருஷனாக இறைவனை தியானம் செய்தால், உலகத்தின் மீதுள்ள ராக-துவேஷங்கள் நீங்கிவிடும்.
இறை நாம சங்கீர்த்தனம் போன்றவைகளையும் பயன்படுத்தி தடைகளை நீக்கிக் கொள்ளலாம்.
யோகேஶ்வரானுவ்ருத்த்யா – சாஸ்திர குருவுக்கு சேவை செய்தும், பணிவிடை செய்தும் நீக்கிக் கொள்ளலாம்.
இறைவன் யாருக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பு கொடுக்கிறாரோ அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,
இவைகளின் மூலமாக அசுபத்தைக் கொடுக்கும் தடைகளை படிப்படியாக நீக்கிக் கொள்ள வேண்டும்.

கேசித்3தே3ஹமிமம் தீ4ரா: ஸுகல்பம் வயஸி ஸ்தி2ரம் |
விதா4ய விவிதோ4பாயைரத2 யுஞ்ஜந்தி ஸித்3த4யே || 41 ||

சில சாதகர்கள், யோக அப்யாஸம் செய்து கொண்டிருப்பவர்கள், இந்த சரீரத்தை அதிக காலம் குறையாத சக்தி உடையதாக இருந்தால்
உற்சாகத்தினால் பல சாதனங்களை மூலமாக உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
இறுதியில் அவர்கள் அறியாமையினால் சித்திகளை அடைவதற்கு முயற்சியில் ஈடுபட்டுவிடுவார்கள்.
இதனால் முக்கியமான லட்சியப்பாதையிலிருந்து வீழ்ந்து விடுவார்கள்

ந ஹி தத்குஶலாத்ரு3த்3யம் ததா3யாஸோ ஹயபார்த2க: |
அந்தவத்த்வாச்ச2ரீரஸ்ய ப2லஸ்யேவ வனஸ்பதே: || 42 ||

ஆத்ருத்யம் – நாடுவது; குஶலா – அறிவாளிகள்
இந்த சித்திகளையெல்லாம் அறிவாளிகளால் நாடப்படுவதில்லை. இதை அடைவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி, காலம், உழைப்பு
அனைத்தும் வீணாகிப் போய்விடும். இந்த சரீரத்திற்கு முடிவு இருப்பதனால் அழிந்து போகும் நிலையையுடையது
எனவே அடையப்போகும் சித்திகள் நிலையற்றது, அழிந்து போகக்கூடியது. உதாரணமாக மரத்தில் இருக்கின்ற பழங்கள்
நன்கு பழுத்ததும் மரத்தில் இருந்து தானே விழுந்துவிடும். அதுபோல இவைகளும் நிலையற்றவைகள் காலம் வரும்போது
அழியக்கூடியவைகள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யோக3ம் நிஷேவதோ நித்யம் காயஶ்சேத்கல்பதாமியாத் |
தச்ச்2ரத்3த3த்4யான்ன மதிமான்யோக3முத்ஸ்ருஜ்ய மத்பர: || 43 ||

சித்திகள் மீதுள்ள ஆசையை விட்டுவிட வேண்டும். மோட்சத்தை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
யோகத்தை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவனுக்கு உடலும் மனமும் அதிகமான சக்திகளைப் பெற்று அதனால் சித்திகள் பல வரலாம்.
அப்பொழுது அவைகளில் ஆர்வம் காட்டாதே. அவைகள் மீது உன்னுடைய சிரத்தை இருக்கக்கூடாது. மோட்ச மார்க்கத்தை விட்டுவிட்டு
அறிவையுடையவன் என்னை இலக்காக கொண்டவன் சித்திகளின் பின்னால் சென்றுவிடக்கூடாது.
என்மீது கொண்டிருக்கும் சிரத்தையை விட்டுவிடக்கூடாது

யோக3சர்யாமிமாம் யோகீ3 விசரன்மத3பாஶ்ரய: |
நாந்தராயைர்விஹன்யேத நி:ஸ்ப்ருஹ: ஸ்வஸுகா2னுபூ4: || 44 ||

மோட்ச மார்க்கத்தில் இருக்கும் சாதகன் இதைப் பின்பற்றிக் கொண்டு எல்லா நேரத்திலும், நிலையிலும் இறைவனையே
நம்பிக் கொண்டிருந்தால், அவனுக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனால் அழிந்துவிட மாட்டான்.
தன் லட்சியத்திலிருந்து நழுவி விட மாட்டான். வைராக்கியத்துடன் இருப்பான்.
இதனால் தன்னிடத்திலே சுகத்தை அனுபவிப்பனாக உணர்கின்றான்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: