ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
தம்மை நிர் ஹேதுகமாக அங்கீகரித்து -கர்மங்களைப் போக்கின படியை அனுசந்தித்தார் கீழ்
இப்பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தார்க்கு-பிரபத்தி நிஷ்டை தொடங்கி-
ஸ்ரீ பரமபதம் பர்யந்தமாக கொடுத்து அருளுவாரே ஆகிலும் –
நான் அவர்கள் குணங்களை ஒழிய ஒன்றையும் விரும்பி புஜியேன் -என்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
தம்மை நிர்ஹேதுகமாக அங்கீ கரித்து அநாதியான பாபங்கள் மறுவலிடாதபடி தம்முடைய கிருபை யாகிற கடாக்ஷத்தாலே
சேதித்து அத்தாலே பிரபன்ன ஜன கூடஸ்தரான ஸ்ரீ எம்பெருமானார் லோகத்திலே அபசித்தாந்தங்களை
வேதார்த்தங்களாக பிரமிப்பிக்கும் குத்ருஷ்டிகளை நிரசித்த உபாகரகர் என்று கொண்டாடினார் – கீழ்ப் பாட்டில் –
இப் பாட்டில் –
அந்த ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்க்களுக்கு சர்வோத்தரக ஹேதுவான பிரபத்தி உபாயத்தையும் –
தத் உத்தர கால க்ர்த்யமான கைங்கர்ய ரூப சம்பத்தையும் – சரீர அநுரூப சம்பந்தத்தை அறுத்து பொகட்டு –
பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் அடைவே கொடுத்து அருளுவரே ஆகிலும் -அடியேன் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறொன்றை ஆதரித்து புஜியேன் என்று ஸ்வ அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
காரணம் இன்றி தம்மைக் கைக் கொண்டு -கன்மங்களை கழலச் செய்தமையைக் கூறினார் கீழே –
இப்பாட்டில்
ஸ்ரீ எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி திவம் முடிய அளிப்பரே யாயினும்–நான்
அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பிஅனுபவியேன்-என்கிறார் –
தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –
பத உரை –
தீது இல் -தீமை இல்லாத
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
தன்னை சார்ந்தவர்கட்கு -தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு
தவம் தரும் -சரணாகதி நிஷ்டையை கொடுத்து அருளுவார்
செல்வம் -பின்னர் -பக்திச் செல்வத்தை
தகவும் -பெரும் பேற்றினுக்கு பொருத்தமாகவும்
தரும் -கொடுத்து அருளுவார்
சரியா – அதற்கு மேல் -சரிந்து விழாத
பிறவிப்பவம் -பிறப்பினால் ஏற்படும் சம்சாரத்தை
தரும் -உண்டாக்கும்
தீவினை -கொடிய கர்மங்களை
பாற்றித் தரும் -தூள் தூளாக்கி கொடுத்து அருளுவார்
பரம் தாமம் என்னும் -கடைசியாக -ஸ்ரீ பரந்தாமம் -சிறந்த இடம் -என்று சொல்லப்படுகிற
திவம் -பரம ஆகாசமான ஸ்ரீ வைகுண்ட லோகத்தை –
தரும் -கொடுத்து அருளுவார்
யான் அவன் சீர் அன்றி -ஆயினும் -நான் அந்த ஸ்ரீ எம்பெருமானார் உடைய குணங்களைத் தவிர
ஒன்றும் -வேறு ஒன்றையும்
உள் மகிழ்ந்து -மனம் மகிழ்வுற்று
உவந்து -விரும்பி
அருந்தேன் -அனுபவிக்க மாட்டேன்
வியாக்யானம் –
ஆஸ்ரயித்தவர்களை-அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட ப்ராப்திகளில் ஒன்றினுடைய அலாபத்தாலே –
துக்கப்பட விட்டு இருக்கும் -குற்றமில்லாத -ஸ்ரீ எம்பெருமானார் –
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு-முதல் பூர்வ வாக்கியத்தில் சொல்லுகிற சரணாகதி நிஷ்டையை கொடுத்து அருளுவார் –
அநந்தரம் – உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு ருசி வேண்டுகையாலே
பக்தி யாகிற சம்பத்தை ப்ராப்ய அநு ரூபமாகவும் கொடுத்து அருளுவர் –
பின்பு -சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து -ஸ்ரீ திருவாய் மொழி 1-5 -10- –என்கிறபடியே
ஒரு சர்வ சக்தி சரிக்கில் ஒழிய சரியாததாய் –
ஜன்ம பிரயுக்தமான சம்சாரத்தை மேன்மேலும் உண்டாக்கா நிற்கும் க்ரூர கர்மங்களை –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -ஸ்ரீ கண்ணி நுண் – 7-என்கிறபடியே சூத்திர தூளியாம் படி பண்ணிக் கொடுப்பர்-பின்பு
பரந்தாமாஷர பரமவ்யோமாதி சப்திதே -என்கிறபடியே
ஸ்ரீ பரம்தாமம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீ வைகுண்டத்தை கொடுப்பர் –
இப்படி அவர் எல்லாவற்றையும் தந்தாலும் -நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் மனப் ப்ரீதியோடு விரும்பி புஜியேன் –
தரும் என்றது -கொடுக்கும் என்றபடி
சலியாப் பிறவிப் பவம் தரும் தீவினை -என்று பாடம் ஆன போது
சலிக்கையாவது -நிலை பேருகையாய்-நிலை பேர்க்க வரிதாய்-சம்சார ஹேதுவான -துஷ்கர்மம் -என்றபடி –
பவம் – -சம்சாரம்
பாறு -பொடி
பாற்றுகை -பொடியாக்குகை
மகிழ்ந்து என்று ப்ரீதி வாசக சப்தம் உண்டாகையாலே -உவந்து -என்கிற விது விருப்பமாய்-ஆதர வாசியாகிறது .
விசுவாசம் பிறப்பித்து -பரம புருஷார்த்தம் பர்யந்தமாக உபகார பரம்பரைகள் -தீதில் இராமானுசன் –
தபஸ் -பிரபத்தி -செல்வம் -பக்தி-ருசி பெருக்கி – தகவு -கைங்கர்யம் – நிஷ்டை ருசி வேண்டுமே –
சரியா சலியா -பிறவி -பாட பேதம் -ஐந்து தரும் சப்தங்கள் -ஓன்று மட்டும் வினை எச்சம் -சரியா பிறவிப் பவம் தரும்
தீ வினை —தீ வினைக்கு –விசேஷணமாக -நமக்கு கர்தவ்யம் இசைகையே-தானே அனைத்தையும் அருளிச் செய்வார் –
செல்வம் தகவும் -சரம பர்வ -பாகவத கைங்கர்யம் -தரும்–
நான்கும்-1- சரணாகதி நிஷ்டை –2-கைங்கர்யத்துக்கு தேவையான பக்தி –3-பிரகிருதி அறுத்து –
4-பரம புருஷார்த்த லக்ஷணமான கைங்கர்ய சாம்ராஜ்யத்தையும் க்ரமேண அருளி –
இவற்றை நினைத்து மகிழ்ந்து இல்லாமல் இவற்றை நிர்ஹேதுகமாக அருளிய ஸ்வாமி யுடைய சீரையே உண்டு களிப்பேன்
ருசி ஜனகத்வம் -சொல்லி -சரணாகதி ஸ்ரீ ஆழ்வார் -இங்கு கிரமத்துடன்-ஸ்ரீ ஆச்சார்யர் அருளுவதால்
யான் -நானே செய்ய மாட்டேன் -ஸ்ரீ ஸ்வாமியே தலை மேல் இவற்றை வைத்து சூட்டினால் -மலர் இட்டு நாம் முடியோம் -போலே –
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் எல்லாரும் அங்கே தானே நித்ய கைங்கர்யம் இன்றும் –
காண்டலுமே விண்டே -பிரதம பர்வம் -இங்கு பாற்றி பொடி பொடியாகும் -உருப்பட வாய்ப்பு இல்லாமல்
தீதில் -உபாயம் உபேயம் அத்யாவசித்து ஆஸ்ரயிப்பார்க்கு -இரண்டும் உபாயம் புருஷகாரம் –
குணம் ஹானி -தோஷம் -இரண்டும் இல்லை என்று இருந்தால் இரண்டும் இருக்குமே -இருக்கும் என்று இருந்தால் இரண்டும் போகுமே
தீதில் இராமானுசனை –
தோஷ குண ஹானிகளை கசித்தது அங்கீகரியாதே இருந்தார் என்ற குற்றமில்லாத ஸ்ரீ எம்பெருமானார் –
ஆஸ்ரயேண உன்முகராய் வந்த சேதனரை கடாஷித்து -பரீஷ்ய விவிதோபாயை – என்னும் விசேஷ வாக்கியம் இருக்க
இது குற்றமாய் தலைக் கட்டுமோ எனில் –
இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில் இரண்டுக்கும் இரண்டும் உண்டாய்த்தாம் -என்று ஸ்ரீ வசன பூஷணத்தில்
சொல்லுகையாலே -தோஷ குணா ஹானிகளை கணிசிக்கிறது பிரபத்தவ்யனுக்கு குற்றமாய் தலை கட்டும் இறே-
த்யஜ்ய தேயதி தோஷேன குணென ந பரிக்ரகயதே -ஏதத் சாதாரணம் பந்தா ஆஸ்ரித ஸ்யகுதம் பலம் -என்னக் கடவது இறே –
தீதாவது –
தம்மை ஆஸ்ரயித்தவர்களை-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்திகள் இரண்டினுடையவும் அலாபத்தாலே
துக்கப்பட விட்டு இருக்கை யாகிற குற்றம் -அது இல்லாதவரை -என்றபடி –
தீது இல் இராமானுசன்
தன்னை சார்ந்தவர்கட்கு அநிஷ்டத்தை தொலைக்காமலோ இஷ்டத்தை கொடுக்காமலோ
வருந்தும் படி வாளா விட்டு இருத்தல் தீது –
அது அறவே இல்லாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்றபடி –
ஸ்ரீ கேசவன் திருவடியில் பக்தி -பக்தர் சேர்க்கை இரண்டில்- கதா சித் -இது தான் வேண்டும் –
இது இல்லா விடில் அது என்பர் ஸ்ரீ ஸ்வாமி
மகிழ்ந்து –வுவந்து =விருப்பும் ஆதரவும்-
வாக்கு- குண கீர்த்தனை செய்கை கைங்கர்யம் மனசு ஸ்வாமி நினைந்தே இருக்க ஸ்ரீ மா முனிகளும் பிராதித்தாரே –
தீதில்- அனகன்-ஸ்ரீ சத்ருக்னன்- அமலன் விமலன் நிமலன் நின்மலன் போல -மூவர் அனுபவம்-
தன்னை சார்ந்தவர்கட்கு –
இப்படி பட்ட வைபவைத்தை உடைய தம்மை -உபாய உபேய பாவேன அத்யவசித்து ஆஸ்ரயித்தவர்களுக்கு
முந்துற முன்னம்
தவம் தரும் –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-என்கிறபடியே சர்வோ உபாய விலஷணமாய்
ஸ்வரூப அனுரூபமாய் -த்வயத்தில் பூர்வ வாக்ய பிரதிபாதகமான -கைங்கர்யத்துக்கு -போஜனத்துக்கு ஷூத்து போலே
பூர்வ பாவியாய் இருந்துள்ள -ருசி ரூப பக்தி யாகிற சம்பத்தை ப்ராப்ய அநு ரூபமாக கொடுத்து அருளுவர் –
தகவு -தகுதி -அன்றிக்கே
தவம் தரும் –
ஸ்ரீ எம்பெருமானார் -தம்மை சார்ந்தவட்கு தரும் தவமாவது -சரணாகதி -நிஷ்டையே -என்க –
ஸ்ரீ எம்பெருமானார் கொடுக்கும் பயன்களுடைய அடைவு பேசப்படுகிற இடமிது ஆதலின்
உடலை ஒறுத்தல் -காயகிலேசம் -ஆம் தவம் இங்குக் கூறப்பட வில்லை
கேசித் பாக்யாதிகா புன –என்றபடி –சரணாகதி நிலையில் நிற்பதே -உறு பாக்கியம் என்று உணர்க –
ஆதலின் அது தரும் பயனாக பேசப்படுகிறது –
சரணாகதி நிஷ்டையாவது -ஸ்ரீ த்வய மந்த்ரத்தில் முதலாவது வாக்யத்தில் சொன்ன படி இருத்தல்-
திருவடிகளே தஞ்சம் என்னும் துணிவும் –
உபயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமையும் –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் —–சரணா கதி நிஷ்டை -என்க .
செல்வம் தரும் –
சது நாக வர ஸ் ஸ்ரீ மான் –லஷ்மனோ லஷ்மிசம்பன்ன -என்னும்படியான கைங்கர்ய
சம்பத்தையும் கொடுத்து அருளுவர் –
தகவும் தரும் –
அந்த கைங்கர்ய செல்வத்தை பெறுவது எப்போதோ என்கிற ப்ராப்ய த்வரையையும் கொடுத்து அருளுவர் –
அங்கனம் அன்றிக்கே செல்வம் தகவும் தரும் –
உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யம் சரம பர்வ பர்யந்தமாக இருப்பது ஆகையாலும் –
அது பரம தர்மம் ஆகையாலும் – பரம தர்மமான சரம பர்வ பர்யந்தமாய் இருக்கும்
கைங்கர்ய ஸ்ரீ லஷ்மியை கொடுத்து அருளுவர் என்னவுமாம் –
இந்த யோஜனையில்
தகவு ஆவது தர்மம் –
செல்வம் தகவும் தரும் –
த்வய மந்த்ரத்தில் பிந்திய வாக்யத்தினால் சொல்லப்படுகிற கைங்கர்யத்துக்கு முன்பு –
சாப்பாட்டுக்கு முன்பு தேவைப்படும் பசி போலே -அவசியம் ப்ரீதி தேவைப்படுவதாதலின் –
அந்த ப்ரீதி ரூபமான பக்தியை தருகிறார் —
இங்கு செல்வம் என்பது அத்தகைய பக்தியை –
சரணாகதி நிஷ்டன் பெறத்தக்க பயன் அதுவே யன்றோ –
தனமாய தானே கை கூடும் -ஸ்ரீ முதல்-திருவந்தாதி – 43- என்று கைங்கர்யத்துக்கு முன்பு தேவப் படுகின்ற
பக்தி தனமாகப் பேசப்பட்டு இருப்பதும் காண்க –
செல்வம் தருவதும் தக்க முறையிலே தருகிறாராம் -பெரும் பேறாகிய கைங்கர்யத்துக்கு தக்கவாறும்
அமைய வேண்டும் அன்றோ பக்தி செல்வம் -.
செல்வம் தருகிறார் –அது பொருந்தவும் தருகிறார் -என்னும் கருத்துடன் –
செல்வம் தகவும் தரும் -என்கிறார் .
இங்கு பக்தி செல்வம் தருவதை மட்டும்தகவும் -பொருந்தும் படியாகவும் -தருவதாக விசேஷித்து இருப்பது குறிக் கொள்ளத் தக்கது .
ஸ்ரீ எம்பெருமானாரை சார்ந்தவர்கள் சரம பர்வ பர்யந்தமான ஆசார்ய கைங்கர்யத்தை தான் பேறாக கருதுவர் ..
கருதவே அவர்களுடைய பக்தி -அவ் ஆசார்ய கைங்கர்யத்துக்கு தக்கதாக அமைதல் வேண்டும் அன்றோ –
பேற்றின் எல்லை நிலமான ஆசார்ய கைங்கர்யதிற்கே தக்கதாக பக்திச் செல்வத்தையும் தருகிறார் -என்றதாயிற்று .
ஆகவே வழி பாட்டிற்கு தக்கதாக பயன் அமையும் –
யதோபாசனம் பலம் -என்றபடி –
இவர்களுடைய சரணாகதி நிஷ்டையும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் -என்னும் துணிவாகவே –
கொள்ளப்படுதல்-ஏற்ப்புடைதாகும் .
இனி ஸ்ரீ த்வய மந்திரத்தின் முதல் வாக்யத்தில் சொன்ன –
ஸ்ரீ நாராயணன் திருவடிகளே தஞ்சம் –என்னும் துணிவாகிய சரணாகதி நிஷ்டைக்கும் –
பிந்தின வாக்யத்தில் சொன்ன ஸ்ரீ நாராயண கைங்கர்யத்துக்கும் -ஸ்ரீ எம்பெருமானாரைச் சார்ந்தார் நிலைகள் மாறுபடாவோ-எனில் கூறுதும் –
ஸ்ரீ த்வய மந்திரத்தில் -இரண்டு வாக்யங்களாலும் -முறையே கூறப்படும்
சரணா கதி நிஷ்டைக்கும் – கைங்கர்யத்துக்கும் சரம பர்வமான ஸ்ரீ எம்பெருமானார் அளவும் விஷயமாக கொள்ளுகையால்
மாறுபாடு இல்லை -என்க –
இனி ஸ்ரீ எம்பெருமானாரை சார்ந்த சரம பர்வ நிஷ்டர் ஆனவர்கள் –
அவரையே நேரே த்வய மந்த்ரத்தின் பொருளாக அனுசந்திக்கையாலே -மாறுபாட்டினை சங்கிப்பதர்க்கும் இடமே இல்லை என்னலுமாம் .
ஸ்ரீ எம்பெருமானாரை த்வயத்தின் பொருளாக அவர்கள் எவ்வாறு அனுசந்திக்கின்றனர் என்பதை சிறிது விளக்குவாம் –
ஸ்ரீ பிராட்டி புருஷகாரத்தாலே தூண்டப்பட்ட வாத்சல்யம் முதலிய குணங்கள் வாய்ந்த சித்தோ உபாயத்தின் உடைய –
ஸ்ரீ நாராயணன் உடைய -திரு மேனியாக அவர்கள் நம் ஆழ்வாரை அனுசந்திக்கின்றனர் –
திரு மேனி ஸ்ரீ பகவானுடைய குணங்களை பிரகாசப் படுத்துவது போலே
ஸ்ரீ நம் ஆழ்வாரும் பிரகாசப் படுத்துவதனால் அவர் திரு மேனி யாயினார் –
கல்யாண குணங்கள் உறைந்து திரு மேனியில் விளங்குவது போலே –ஸ்ரீ நம் ஆழ்வாரிடத்திலும் வண் புகழ் நாரணன் விளங்குவதால்
அவரை திரு மேனியாக அனுசந்திப்பது பொருந்து கின்றது –
அத்தகைய ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திருவடி ஸ்ரீ எம்பெருமானார் —
அவரைத் தஞ்சமாக பற்றுகின்றேன் என்று த்வய மந்த்ரத்தின் முதல் வாக்யத்தின் பொருளை அனுசந்தானம் செய்கின்றனர்
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிய ஸ்ரீ மன் நாராயணனின் திரு மேனியின் திருவடிகளை உபாயமாக கொண்டால் –
உபேயமாக வுமான அந்த திருவடிகளுக்கே கைங்கர்யம் செய்ய வேணும் என்று பிந்திய வாக்யத்துக்கும் –
அவர்கள் பொருள் கொண்டனர் -என்க –
விஷ்ணுச் சேஷீ ததீ யச்சுப குண நிலயோ விக்ரஹா ஸ்ரீ சடாரி ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத-கமல யுகம் பாதி ரம்யம் ததீயம-என்று
விஷ்ணு சேஷி யானவன் .அவனது நற் குணங்களுக்கு இருப்பிடமான திரு மேனி ஸ்ரீ நம் ஆழ்வார் –
ஸ்ரீ மான் ஆகிய ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ நம் ஆழ்வாருடைய அழகிய இணைத் தாமரை யடியாக விளங்குகிறார் –
என்னும் பூர்வாசார்யர் ஸ்ரீ ஸூக்தி இங்கு அனுசந்திக்கத் தக்கது .
சிலர் செல்வம் தகவும் தரும் -என்று புதுப்பாடம் கற்பித்தும் அதனுக்கு உரை வரைந்தும் உள்ளனர் ..
சரியா பிறவி பவம் தரும் தீ வினை பாற்றி தரும் –
அநந்தரம் -சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து –என்கிற படியே ஒரு சர்வ சக்தி கழிக்கில் ஒழிய –
அனுபவத்தாலும் பிராயசித்தத்தாலும் சரியாததாய் -பல யோனிகள் தோறும் பலபடியாக பிறக்கை ஆகிற சம்சாரத்தை
மேன்மேலும் கொழுந்து விட்டு பண்ணக் கடவதான க்ரூர கர்மங்களை
பண்டை வல் வினை பாற்றி அருளினான் -என்கிறபடியே சூத்திர தூளி யாம்படி பண்ணிக் கொடுப்பார் –
காற்று அடித்தவாறே தூள் பறக்குமா போலே பறந்து போகும்படி பண்ணிக் கொடுப்பார் என்றபடி –
பவம் -பவம் -சம்சாரம் என்றபடி –
பாரு -பொடி-பாற்றுகை -பொடி யாக்குகை –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றான் இறே கீதார்ச்சார்யனும் –
சரியா பிறவி –தீவினை பாற்றித்தரும் –
சரியா என்னும் ஈறு கெட்டு -எதிர் மறைப் பெயர் எச்சத்தை தீவினை என்னும் பெயரோடு முடிக்க –
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து -ஸ்ரீ திருவாய் மொழி -1 5-10 – – -என்றபடி .
எல்லா வல்ல ஸ்ரீ இறைவனுக்கு ஒழிய -பிறர்க்கு சரிக்க ஒண்ணாத தீவினை-என்க .
சலியா -என்றும் பாடம் உண்டு .
அப்பொழுது சலித்தல்
அசைதவாய் -அசையாத -அதாவது நிலை பேராத தீவினை என்று பொருள் கொள்க –
பிறவிப்பவம் -பிறவியினாலாய பாவம் -பாவம் -சம்சாரம் –
பாற்றுதல் -பாறாகச் செய்தல் –பாறு -பொடி
சரியாதவைகளும் -பிறவினாலாய சம்சாரத்தை உண்டு பண்ணிக் கொண்டு இருப்பவைகளுமான
கொடிய கர்மங்களை பொடி பொடியாகப் பண்ணிக் கொடுப்பார் -என்றபடி .
பகவானைப் பற்றிய ஸ்ரீ நம் ஆழ்வார் -தம் வினைகள் கமலப் பாதம் காண்டலும் விண்டே ஒழிந்தன -என்றார் .
ஸ்ரீ நம் ஆழ்வாரைப் பற்றிய ஸ்ரீ மதுர கவிகள் -பண்டை வல் வினை பாற்றி யாருளினான் -கண்ணி நுண் – 7- என்றார் .
விண்டிடில் மீண்டும் உருப்படியாதலும் கூடும் .பாறு ஆக்கி விட்டாலோ தீ வினைகள் மீண்டும் தலை தூக்க வழி இல்லை
ஸ்ரீ ஆசார்ய அபிமானத்தின் வீறுடைமை இது.
ஸ்ரீ மதுர கவிகளை அடி ஒற்றி –பாற்றித் தரும் -என்கிறார் ஸ்ரீ அமுதனாரும் .
பவம் தரும் -என்னும் இடத்தில் உள்ள –தரும் -என்னும் எச்சம் தீ வினை என்னும் பெயரோடு முடிந்தது .
பாற்றித் தரும் -என்பது ஏனைய இடங்களில் போலே வினை முற்று
பரம் தாம் என்னும் திவம் தரும் –
அநந்தரம் -பரந்தாமாஷர பர ப்ரஹ்ம வ்யோமாகதி சப்திதே -என்று ஸ்ரீ கத்ய த்ரயத்தில் அருளிச் செய்தபடி –
பரம் தாமம் –என்று சொல்லப்படுகிற –திவம் –பரமாகாசம் –ஸ்ரீ வைகுண்டம் என்றபடி -அத்தைக் கொடுத்து அருளுவர் –
பரந்தாமம் என்னும் நிலம் தரும் –
பரம் தாமம் -என்பதற்கு சிறந்த இடம் என்பது பொருள் .
திவம் -என்பதற்கு வான் -என்பது பொருள் .
சிறந்த இடம் எனப்படும் வான் என்பது ஏனைய தேவர்கள் உள்ள வாளினின்றும் வேறுபட்ட தான
பரம ஆகாசம் எனப்படும் ஸ்ரீ வைகுண்டமே யாகும் -என்க –
இங்கே முதலில் த்வய மந்த்ரத்தின் முதல் வாக்யத்தில் சொன்ன சரணாகதி நிஷ்டையும்
பின்னர் -பிந்திய வாக்யத்தில் சொன்ன -அதன் பயனாகிய கைங்கர்யத்துக்கு பொருந்தும்படி யமையும்
பக்தியும் -அதன் பிறகு –
நமஸ் சப்தார்த்தமான அநிஷ்ட நிவ்ருத்தி யாகிய தீவினை பாறுதலும்
அதனை யடுத்து சதுர்த்தியின் அர்த்தமான கைங்கர்யத்திற்கு பாங்காக அமையும் இஷ்டப் ப்ராப்தி யாகிற திவம் பெறுதலும் –
முறையே பேசப்பட்டு உள்ள அழகு காண்க –
இப்படி பிரபத்தி நிஷ்டை தொடங்கி -ஸ்ரீ பரம பத்தைத் அளவும் கொடுத்து அருளுவரே ஆகிலும் –
அவன் சீர் அன்றி யான் -என்று
கீழ் சொன்ன படி சர்வ பிரகாரத்தாலும் உத்தாரகரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை ஒழிய
நான் மற்று ஒரு விஷயத்தை-
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன் –
மனஸ் சந்தோஷத்தோடு ஆதரித்து அனுபவிக்க கடவேன் அல்லேன் –
அருந்துதல் -உண்டல் –
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம் -என்னும்படியான ஸ்ரீ பரம பதத்தையும் கூட –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் போலே காற்கடை கொள்ள வேண்டும்படி ஸ்ரீ அமுதனார்க்கு இருந்தது காணும் –
ஸ்ரீஎம்பெருமானார் உடைய– பாலே போல் சீர் -என்னும்படியான கல்யாண குணங்களின் உடைய போக்யதை –
இத்தால் -ப்ரீத மனஸ்கராய் -அவருடைய கல்யாண குணங்களையே விரும்பி புஜிப்பேன் -என்கிறார் –
மகிழ்ந்து -என்று
ப்ரீதி வாசக சப்தம் உண்டாகையாலே –
உவந்து -என்கிற இது -விருப்பமாய் -ஆதர வாசியாய் இருக்கிறது –
சலியா பிறவியென்ற பாடமான போது – சலிக்கையாவது நிலை பெயர்க்கையாய் -நிலை பேர்க்க அரியதாய் –
சம்சார ஹேதுவான துஷ் கர்மங்கள் என்றபடி –
நித்யம் யதீந்திர -இத்யாதி ஸ்லோகத்திலே ஸ்ரீ ஜீயரும் அத்தையே பிரார்த்தித்து அருளினார் இறே –
உவந்தருந்தேன் ..உள் மகிழ்ந்து
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன் -என்று கூட்டுக
மகிழ்வு மேலே கூறப்படுதலின் -உவந்து என்பதை விரும்பி பொருளில் வந்ததாக கொள்க –
ஆதரவும் ப்ரீதியும் -உவந்து மகிழ்ந்து -இரண்டு சப்தங்கள் –
உவந்து அருந்தேன் -விரும்பி அனுபவியேன் -என்றபடி
யான் அவன் சீர் அன்றி ஒன்றும் அருந்தேன் –
ஸ்ரீ எம்பெருமானார் தரும் அவையான தவத்தில் இருந்து -திவம் உட்பட -யாதொன்றையும் மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிக்க மாட்டேன் –
அவருடைய கல்யாண குணங்களையே மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிப்பேன் -என்றதாயிற்று –
அவைகள் வலுவிலே என் மடியில் கட்டப்படில் தவிர்க்க ஒண்ணாது -நானாக மனம் மகிழ்ந்து விரும்பி அவற்றுள் ஒன்றினையும்
விரும்பி அருந்தேன் -என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானார் கல்யாண குணங்கள் அவ்வளவு இனிக்கின்றன அமுதனார்க்கு –
ஸ்ரீ நம் ஆழ்வார் செங்கண் மாலை நோக்கி –நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 53- என்று-
அவன் தரும் ஸ்ரீ வைகுந்தத்தினும் அவன் குணங்கள் இனிப்பதாக கூறுவதை இங்கே நினைவு கூர்க-
——————–
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -கண்ணி நுண் – 7-
தனமாய தானே கை கூடும் -முதல்-திருவந்தாதி – 43-
நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -பெரிய திருவந்தாதி – 53-
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-
தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-