ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –28-நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மன பூர்வோ வாகுத்தர -என்னும் மனஸ்ஸூக்கு அநந்தரமான வாக்குக்கு
அவர் விஷயத்தில் உண்டான-ப்ராவண்யத்தை கண்டு ப்ரீதர் ஆகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே மனச்சினுடைய சம்ருத்தியைச் சொல்லி -இதிலே –
வாக்கு உள்ள சம்ருத்தியைச் சொல்ல ஒருப்பட்டு -துர் புத்தியான கம்சனை சம்ஹரித்து -அதி கோமளமான
ஸ்ரீ பாதங்களை உடைய-ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நேகியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ரீ பாதங்களை ஆஸ்ரயியாத
ஆத்மா அபஹாரிகளுக்கு அகோசரரான ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை ஒழிய வேறொரு விஷயத்தை
என் வாக்கானது ஸ்துத்திக்க மாட்டாது –ஆகையாலே இப்போது எனக்கு ஒரு அலாப்யலாபம் சேர்ந்தது என்று வித்தார் ஆகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

என் மேன்மைக்கு ஒரு குறையும் ஏற்படாது -நீர் உம் வாயாலே -கண்டு உயர்ந்தேன் -என்றீரே –
காண்டலுமே -வினையாயின எல்லாம் விண்டே ஒழிந்தன -ஏன் -உமது நெஞ்சம் தனியாய்-தளர வேண்டும் -என்று
ஸ்ரீ எம்பெருமானார் தேற்ற -தேறின ஸ்ரீ அமுதனார் –மனத்தைப் பின் பற்றி –வாக்கு அவர் திறத்து ஈடுபடுவதை கண்டு
உவந்து அருளி செய்கிறார் –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

பத உரை-
நெஞ்சில்-இதயத்தில்
கறை கொண்ட -சீற்றத்தை உடையனான
கஞ்சனை-கம்சனை
காய்ந்த -சீறின
நிமலன்-குற்றம் அற்றவனும்
நங்கள்-நம்முடைய
பஞ்சித் திருவடி -பஞ்சு போலே மெல்லிய திருவடிகளை உடைய
பின்னை தன் -நப்பின்னையினுடைய
காதலன் -அன்பனுடைய
பாதம்-திருவடிகளை –நண்ணா -ஆஸ்ரயிக்காத
வஞ்சர்க்கு -வஞ்சகர்களுக்கு
அரிய -நெருங்க இயலாத
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
புகழ் அன்றி -குணங்களை ஒழிய
என் வாய் – என்னுடைய வாக்கு
கொஞ்சி -மழலையில் குழறி
பரவ கில்லாது -ஸ்தோத்ரம் செய்ய இயலாததாய் உள்ளது
இன்று -இந்நாள்
என்ன வாழ்வு -எப்படி பட்ட வாழ்வு
கூடியது -கிட்டியது –

தீய புந்திக் கஞ்சனுன் மேல் சினமுடையன்-ஸ்ரீ பெரிய திருமொழி – -2 2-5 – -என்கிறபடியே –
ஹ்ருதயத்தில் சீற்றத்தை உடையனான கம்சனைச் சீறின ஹேய பிரத்யநீகனாய் ஆஸ்ரித ஜன அபிமானியாய்
பஞ்சிய மெல்லடிப் பின்னை -ஸ்ரீ பெரிய திரு மொழி – 3-6 4- – என்கிறபடியே பஞ்சு போலே மிருதுவான
திருவடிகளை உடையளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நிக்க்தனானவன் உடைய திருவடிகளை-ஆஸ்ரியாத
ஆத்ம அபஹாரிகளுக்கு துர்லபரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய-குணங்களை ஒழிய
என்னுடைய வாக்கானது முக்த்த ஜல்பிதமாகக் கொண்டு அடைவு கெட ஏத்தாது –
இன்று எனக்கு கூடினதொரு வாழ்வு இருந்த படி –

நிமலன் –
தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -ஜிதந்தே ஸ்தோத்ரம் -2 – என்கிற-பொதுவான சம்பந்தமும் கிடக்கச் செய்தே –
ஆஸ்ரித விரோதி என்னும் ஆகாரத்தாலே அவனை நிரசிக்கையாலே-வந்த நைர்மல்யத்தைச் சொல்லுகிறது –

கறை –
கறுப்பாய் சீற்றத்தை சொல்லுகிறது
அன்றிக்கே
கறை என்று தோஷமாய் மனசிலே தோஷத்தை உடையனான என்னவுமாம் –

பஞ்சி-
பஞ்சு

கொஞ்சுதல்-
அபூர்ண உக்தியைச் சொல்லுதல் –
மனம் மொழி மெய் மூன்றுமே சேர்ந்து ஈடுபட வேண்டுமே
உளம் தொட்டு -தீங்கு நினைந்த காஞ்சனை காய்ந்த -செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-
அடியார்க்கு ஆட் படுத்திய நிமலன் -என்றுமாம் –
கிளி போலெ கொஞ்சி பரவும் பாசுரம்
வஞ்சர் -ஆத்ம அபஹாரி – ஜனகன் கும்பனானான் என்கிறார் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
குற்றமே இல்லை என்பவள் அன்றோ ஸ்ரீ நப்பின்னை
தென்னரங்கன் தென்னத்தியூர் இருப்பிடம் வேங்கடம் சொல்லுவார் மேலே –
அவையும் ஸ்ரீ ராமானுஜர் பெருமை சொல்லவே

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை
கம்சன் அசரீரி வாணி சொன்ன வார்த்தையை கேட்ட அன்று தொடங்கி மனசிலே -குரோதத்தை வைத்துக் கொண்டு இருந்தான் –
அந்த குரோதம் தமோ கார்யம்-என்கையாலே -அத்தை கறுப்பாக அருளிச் செய்கிறார் –
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் -என்கிறபடியே
ஹிருதயத்தில் சீற்றத்தை உடையனான கம்சனை -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்-இவ் விருத்தாந்தம் பரக்க-சொல்லப்பட்டது இறே

காய்ந்த
உத்ப்லுத் யாருஹ்யதமம் மஞ்சம் கம்சம் சம்பாதயாமாச தச்யோ பரிபபாதாச
க்ருஷ்னே நத்யாஜிதப்ராணா நுக்ரசே நாத்மஜோநர்ப -என்கிறபடியே சம்கரித்த

நிமலன் –
கல்மஷ ரஹீதன் –முன்னே ஒரு மலம் இருந்து அத்தைப் போக்கி கொண்ட படி அன்று –
நைசர்க்கிகமான நைர்மல்யத்தை உடையவன் –
ஹேயப் பிரதி படன்-என்றபடி –
அன்றிக்கே
கம்சனை கொல்லுமளவும் -மாதா பிதாக்களை சிறையிலே இருக்கக் கேட்டு-பொறுத்து இருந்த தொரு மலம் உண்டு –
அவனைக் கொன்று-மாதா பிதாக்களை சிறையில் நின்று விடுவித்த பின்பு-நிர்மலன் ஆனான் என்னவுமாம் –
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோர் தோன்றல் -என்னக் கடவது இறே –
அங்கனும் அன்றிக்கே
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே தம்மை ஸ்ரீ எம்பெருமானார்
திருவடிகளிலே அனந்யாஹராம் படி பண்ணினான் ஆகையால் –நிமலன் -என்கிறார் ஆகவுமாம்-

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்–
கம்சன் அசுரப் பிறப்பாளன் ஆதலின் ஸ்ரீ கண்ணன் திறத்து என்றும் கறை கொண்டவனாய் இருந்தான் –
கறை-சீற்றம்
கறை-கறுப்பாய் சீற்றத்தைக் குறிக்கிறது
அறையோ வென நின்றதிரும் கரும் கடல் -திரு விருத்தம் -62 – என்னும் இடத்தில் இவ்வாறே வியாக்யானம் செய்து
ஆசார்யர்கள் – சிவப்பும் கறுப்பும் வெகுளிப் பொருள்-என்று மேற்கோள் காட்டுவர் –
நெஞ்சிலே படிந்து விட்டது கம்சனுக்கு -பக்தி உண்டாக வேண்டிய இதயத்தினைப் பற்றிக் கொண்டது கறை –
அது சொல் அளவிலே அமைந்து இருப்பின் கண்ணன் காய்ந்து-இருக்க மாட்டான் –
தீய புத்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் -பெரி யாழ்வார் திரு மொழி – 2-2 5- –என்றபடி
புத்தி கெட்டு விட்டது கம்சனுக்கு -கருத்து அளவும் உட் புகுந்து ஆராய்ந்து -சிறிது அளவேனும் நன்மை -அதாவது –
அனுகூலனாகும் -வாய்ப்புத் துலங்காத போது -தான் -வேறு வழி இன்றி –
ஸ்ரீ கண்ணன் காய்ந்து கை விடுவது –
தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –ஸ்ரீ திருப்பாவை -25-
அவன் கைக் கொள்ளுவதற்கு புறமே அமையும் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -ஸ்ரீ திருவாய் மொழி – 5 1-1 – என்று
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்தது காண்க –

சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து
அறிந்த பின்னரே -காய்ந்து கை விடுகிறான் ஸ்ரீ கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன
நின்ற நெடுமாலே – என்றாள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ திருப்பாவையிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என்
முன்னைக் கோளரியே -திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் –

இனி கறை -தோஷம் ஆகவுமாம்-
தோஷம் இன்னது என்று குறிப்பிட்டு சொல்ல இயலாமையாலே-பொதுப்பட தோஷம் என்கிறார் –
ஸ்ரீ ஆண்டாளும் என்ன தீங்கு என்னாமல்-தீங்கு நினைந்த -என்று-அருளி செய்தது காண்க –
கஞ்சன்-
கம்சன் என்பதன் சிதைவு –
நாய்க்குடலுக்கு நறு நெய் தாங்காதது போலே தன் அகத்தே வந்து அவதரித்த ஸ்ரீ கண்ணனை-அனுபவிக்க கொடுத்து
வைக்காமையாலே -அன்றே ஸ்ரீ கண்ணன் ஆய்க்குலம் புக வேண்டியதாயிற்று –
பணம் இருந்தும் அனுபவிக்காத கஞ்சனாயினான் என்பதும் கஞ்சன் என்னும் சொல்லாலே தோற்றும் அழகு காண்க –

காய்ந்த நிமலன் –
காய்தல்-சீறுதல்
காரணம் இன்றி சீற்றம் கொண்டான் கஞ்சன் -அது அசஹ்யா அபசாரம் -எனப்படும் –
கரணம் இன்றி பகவத் பாகவத விஷயம் என்றாலே பொறுக்க ஒண்ணாத இயல்பே அசஹ்யா அபசாரம் -என்க-
ஒழித்து வளரத் தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்தமையாலும் -சாது சனத்தை நலிகையாலும் –
கம்சன் அசஹ்யா அபசாரம் புரிந்தவன் ஆகிறான் –
தேவர்கட்கும் அசுரர்கட்கும் தெய்வம் பொதுவாய் இருந்தாலும் கம்சனைக் காய்ந்தது —
ஆஸ்ரிதர்கள் அல்லல் தவிர்க்க அசஹ்ய அபசாரம் பற்றி அளித்த தண்டனையே ஆதலின் –
தெய்வத்துக்கு அது குறையாகாது -என்பார் –நிமலன் –என்றார்
மலம்-தோஷம் அது அற்றவன் நிமலன்-வட சொல்-

கஞ்சன் கொண்ட கறை -பூதனை முதலியவர்களை ஏவுதல் முதலிய தீங்குகளை விளைத்தது
நிமலன் காய்ந்தது -கம்சனை வதம் செய்தல் -என்னும் நல் செயலை விளைத்தது –
கஞ்சன் கறை காரணம் அற்றது -ஆதலின் அது தோஷம் ஆயிற்று
நிமலன் காய்தல் ஆஸ்ரிதர்கள் நலி உற்றமை யடியாக வந்தது –
ஆதலின் அது தோஷம் ஆகாது -குணம் ஆயிற்று -என்க-
அவுணன் பொங்கவாகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் –ஸ்ரீ பெரிய திருமொழி 1-7-1–

அமரேஷு மமாவஜ்ஞா ஜாயதேதைத்ய புங்க்வா
ஹாஸ்யம் மே ஜெயதே வீரா தேஷூயத் நப ரேஷ்வபி
ததாபி கலு துஷ்டா நாம் தேஷாமப்ய திகம்மயா
அபகாராய தைத் யே ந்தரா யாத நீயம் துராத்மா நாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்லோகம் –
அசுரத் தலைவர்களே -தேவர்கள் விஷயத்தில் எனக்கு அலஷ்யம் ஏற்படுகிறது – அவர்கள் என்ன முயற்சி-செய்திடினும்
எனக்கு சிரிப்பு வருகிறது -ஆயினும் கெட்ட மனம் படைத்த அக்கொடிய அமரர்க்கு-அதிகமான அபகாரங்களை செய்ய
நாம் முயல வேண்டும் -ஆஸ்ரிதர்கள் இடம் கம்சன் அபசாரப் படுவது முதலியவற்றை நாம் காணலாம்-

இனி வாளியினால் மாள முனிந்து -எனபது போல் அல்லாமல்-கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் போலே ஆளிட்டு -ஸ்ரீ அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –குஞ்சி பிடித்து இழுத்து –
மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-வதம் செய்தமையால் –
ஸ்ரீ கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம் –
இவ்விடத்தில் -பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நங்கள் பஞ்சித் திருவடி பின்னை தன் காதலன் –
நங்கள் பஞ்சித் திருவடி –
பஞ்சிய மெல்லடி பின்னை –என்கிறபடியே -பஞ்சு போலே சுகுமாரமான திருவடிகளை உடையாளான –
அன்றிக்கே
அத்யந்த-புஷ்பகாச சுகுமாரி ஆகையாலே -கடினமான பூமியிலே -திருவடிகளை வைத்தால் வாடும் என்று நினைத்து –
பஞ்சு மேல் அடியை இட்டு திரியும்படியான திருவடிகளை உடையாள் -என்னவுமாம் –

பின்னை தன் –
இப்படிப்-பட்ட சௌகுமார்யத்தை உடையளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு
பின்னை தன் காதலன் –
என் போல்வார் எல்லார்-உடையவும் ஈஸ்வர நிக்ரஹ ஹேதுவான அபராதங்களை -அவனாலே பொறுப்பித்து நம்மை ஆஸ்ரயிப்பைக்காக
அவனோடு அநேக அவதாரங்களை பண்ணினாள் ஆகையாலே -நமக்கேயாய் இருக்கிறாள் என்று நினைத்து –நங்கள்-என்கிறார் –
ஆக ஆஸ்ரிதர் ரஷண அர்த்தமாக அவதரித்து -அதி சௌகுமார் யத்தை வுடையளான
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி தனக்கு ஸ்நிக்தனான-என்றபடி –

ஸ்ரீ ஜனக ராஜன் -தன் பூமியில் உள்ள இடையர்க்கு எல்லாம் தலைவனாய் -கும்பன் என்னும் பேரை உடையவன்
ஆனவன் -இடையர் கோஷ்டியிலே ஏழு வ்ருஷபங்கள் -அசூரா வேகத்தாலே மகா பல வீர்யவத்துக்களாய் கொண்டு –
இருந்த ராஜ்யங்களை எல்லாம் பாதிக்கத் தொடங்கினவாறே -அவன் கும்பனை அழைத்து பயப்படுத்த –
அவனும் நப்பின்னை பிராட்டி என்று எனக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு -இந்த வ்ருஷபங்களை சம்ஹரித்தவனுக்கு
இந்தப் பெண் பிள்ளையை கொடுக்க கடவன் என்று பிரதிக்ஜை பண்ணினேன் -என்ன –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் கும்பன் மாதூலன் ஆகையாலே இந்த வ்ருத்தாந்தைக் கேட்டு சடக்கென –
அங்கே சென்று ஸ்ரீ நப்பின்னை பிராட்டியைப் பார்த்து –
அவள் திறத்திலே அதி வ்யாமுக்தனாய் கொண்டு -அவளோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தங்களான
சப்த வ்ருஷபங்களையும் -ஒருக்காலே ஊட்டியாக தழுவி -சம்ஹரித்தான் என்று புராணங்களிலே பிரதிபாதிகமான
இந்த அபதாநத்தைக் கொண்டு -காதலன் -என்று அருளிச் செய்கிறார் –
தள வெழ் முறுவல் பின்னைக்காய்-வல்லானாயர் தலைவனாய் – இள வேறு ஏழும் தழுவிய எந்தாய் – என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –இப்படிப் பட்ட ஸ்ரீ கிருஷ்ணனுடைய-

நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் –
பஞ்சிய மெல்லடிப் பின்னை -பெரிய திரு மொழி – 3-4 4- -என்றும்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம்-பெரிய திரு மொழி – 3-7 7- – என்றும்
ஸ்ரீ திரு மங்கை மன்னன் அருளிய திரு மொழியை அடி ஒற்றிய படி –
தன் வடிவு அழகாலே கண்ணனை துவக்கி -நம் குற்றம் அவன் கண்ணில் படாதவாறு செய்து –
குற்றவாளராகிய நாம் சற்றும் கூசாது -ஸ்ரீ கண்ணனைப் பற்றும் படி செய்து தன் அபிமானத்தை நம் மீது-காட்டலின் –
நங்கள் பின்னை-என்கிறார்-

என் திரு மகள் சேர் மார்பன் போல ஸ்ரீ தாயார் திருவடியில் ஒதுங்குவார்கள்
ஆஸ்ரித ஜன அபிமானி இவள் தான்-
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

இறைவனுக்குத் தேவிமார் மூவர்-
திருமகள்-பூமி-பின்னை-என்பவர் அம் மூவர் –
இவர்கள் இறைவனோடு உயிர் இனங்களை இணைப்பவர்கள் –
குற்றம் புரியாதவர் எவரும் இலர் -என்று இறைவனது சீற்றத்தை ஆற்றி இணைத்து வைப்பவள் திரு மகள் –
சீற விடாது பொறுமைக்கு உள்ளாக்குபவள் பூமி தேவி –
காண்பதும் பொறுப்பதும் எதற்காக -குற்றத்தை காண ஒட்டுவானேன் என்று தன்
அனுபவத்தில் மூழ்கி மயங்கும்படி பண்ணி அவன் கண்ணில் குற்றம் படாதபடி செய்து இணைப்பவள் ஸ்ரீ பின்னை –
இதனை வேதாந்த தேசிகன் -தயா சதகத்தில் –
நிசாமயதுமாம் நீளா யத்போக பட லைர்த்ருவம் பாவிதம் ஸ்ரீ நிவாசச்ய பக்த தோஷஷ் வதர்சனம்-என்று
எவளுடைய போக படலங்களாலே -போகத்தால் உண்டான கண் ரோகத்தினாலே –
போக படலங்க உடைய சமூஹங்களாலே -ஸ்ரீ நிவாசனுக்கும் பக்தர்கள் உடைய தோஷங்களில்- பார்வை இல்லாமை -ஏற்பட்டதோ
அத்தகைய ஸ்ரீ நீளா தேவி -ஸ்ரீ நப்பின்னை-என்னைக் கடாஷித்து அருள்க –என்று அழகு பட வருணித்து உள்ளார் –
இங்கனம் மூவருள் ஸ்ரீ பின்னை முன்னைய இடத்தை பற்றி நிற்பவள் ஆதலின் -அவள் காதலன் பாதம் நண்ணுவது மிகவும் எளிது –
ஆயினும் இழக்கின்றனரே என்னும் இரக்கம் தோற்ற-
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா -என்கிறார் –

பஞ்சித் திருவடி –
பஞ்சு போன்ற மெல்லிய திருவடி-செம் பஞ்சியை உடைய திருவடி ஆகவுமாம்-
நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –
பகை களைதலும் -நலம் பேணுதலும் முறையாக பேசப்படுகின்றன
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு இங்குப் பிறந்ததும்
விண்ணோர்கள் தூபம் தரா நிற்க ஓர் மாயையினால் அடலாயர் தம்கொம்பினைக் காதலித்து
வல்லானாயர் தலைவனாய் வந்ததும் -முறையே இதுகாறும் பேசப்பட்டன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு –
திருவடிகளை ஆஸ்ரயியாத வஞ்சகருக்கு –
யோந்யதா சந்தமாத்மான மன்யதா ப்ரதிபத்யதே -கிம்தே ந ந கிர்தம் பாபாம் சோரேணா த்மாபஹாரிணா -என்கிறபடியே
த்வம் மே என்றால் அஹம் மே -என்னும்படியான ஆத்மா அபஹாரிகளுக்கு –
நமாம் துஷ்க்ர்தி நோ மூடா –ப்ரபத்யந்தே நராதம -மயாயாப ஹ்ர்தஜ்ஞானா ஆசூரிம் யோநி மாஸ்ரிதா -என்றான் இறே ஸ்ரீ கீதாசார்யானும் –
அப்படிப் பட்ட வஞ்சகருக்கு –

அரிய இராமானுசன் –
ஆஸ்ரயிக்கைக்கு கடிநராய்-சூதுர்லபரான ஸ்ரீ எம்பெருமானாருடைய-புகழ் அன்றி –
கீழ்ப் பாட்டிலே -வஞ்சகமான என் மனசிலே -என்னுடைய தோஷத்தை பாராதே அதுவே போக்யமாக அங்கீகரித்து புகுந்து நிற்க –
அத்தாலே -பிரகாசிதங்களான வாத்சல்ய சௌசீல்யாதி-கல்யாண குணங்களை ஒழிய-

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
கல் நெஞ்சினராய் -ஸ்ரீ கண்ணனுக்கே உரிய தம்மை தமக்கே உரியராக மாறுபடக் கொண்டு-
அக்கண்ணனையும் நண்ணாத வஞ்சர்கட்கு -கிட்டுதற்கும் அரியர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் –
பிறர் பொருளை தம்மதாக கொள்வது வஞ்சம்-என்க –
பின்னை தன் பஞ்சுத் திருவடியால் தனக்கு காதலை விளைவித்தது போலே -அவளது தாய் உள்ளத்தை களிப்பிக்க –
கருதிய ஸ்ரீ கண்ணனும் -மக்களுக்கு தன் மீது பக்தி உண்டாக்கி இன்புருவதற்காக தன் அழகிய திருவடிகளை –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மீன்-என்று காட்டிக் கொடுத்த விடத்தும் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது ஸ்ரீ கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –
தன்னை -ஆத்ம ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே ஸ்ரீ எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –எனபது கருத்து –

என் வாய் –
இத்தனை நாளும் பிரதி கூலனாய் போந்த என்னுடைய வாக்கானது –

கொஞ்சிப் பரவ கில்லாது –
அந்ய விஷய ஸ்தோத்ரத்துக்கு சங்கோ சித்து -அத்தை ஸ்தோத்ரம் பண்ண மாட்டாது –
முக்த்த ஜல்ப்பமாய் கொண்டு அறிவு கெட மாட்டாது -கொஞ்சுதல்-அபூர்ண உக்தியாய் சொல்லுதல் –

என்ன வாழ்வு இன்று கூடியதே –
இப்போது இந்த சம்ருத்தி நமக்கு சேர்ந்தது கண்டீரே -இது பெறாப் பேறு-என்று வித்தர் ஆகிறார் –

இராமானுசன் புகழ் அன்று
என்கையாலே –பகவத் குணங்களையும் ஸ்தோத்ரம் பண்ண மாட்டாது என்று
தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் -என்றது ஆய்த்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –ஸ்ரீ பொய்கையார் ஸ்ரீ ஸூக்தி
ஸ்ரீ அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
ஸ்ரீ எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
ஸ்ரீ பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

கில்லாது -முயலிலும் இயலாமை தோற்றுகிறது –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப் போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன்,
மாய மனிசரை என் சொல வல்லேன் என் வாய் கொண்டே?–3-9-8-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-
அவன் பேர் ஒதுவதே நாவினால் உள்ளு –இரண்டாம் திருவந்தாதி -44-
எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம் –மூன்றாம் திருவந்தாதி -73-
நாரணனை நம் ஏழு பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –நான்முகன் -64-
நாக்கொண்டு மானிடம் பாடேன்–நான்முகன் -75-
உரைப்பு எல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய் –பெரிய திருவந்தாதி -77-

என்ன வாழ்வு இன்று கூடியதே –
பாதம் நண்ணா வஞ்சரில் சேர்ந்த நான் -ஸ்ரீ எம்பெருமானார் அளவும் வந்து –
அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-வியக்க தக்கது என்பது கருத்து –

இளைய புன் கவிதை போல- எம்பிராற்கு இனியவாறே-ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
ஸ்ரீ எம்பெருமானார்க்கு இனியவாறே -என்கிறார் அமுதனார்
ஸ்ரீ பின்னை தன் காதலன் புகழையே பாடாது. எனக்கு கிடைத்ததே என்ன வாழ்வு பெறா பேறு–

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: