ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————-
இப்படி ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தை தம்முடைய ப்ரேம அநு குணமாக பேசுகையில் இறங்கின இவர்
முதல் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலும் அவர்களும் உகந்த விஷயமான ஸ்ரீ எம்பெருமான் அளவிலும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு உண்டான ப்ராவண்ய அதிசயத்தையும்
ஸ்வ ஆஸ்ரிதற்கு ப்ராப்ய ப்ராபக பூதராய் இருக்கிற படியையும் பேசி
மேல் மூன்று ஸ்லோகங்களாலே
தமக்கு அபேக்ஷிதங்களான புருஷார்த்தங்களை அவர் திருவடிகளில் பிரார்த்தித்து
அநந்தர ஸ்லோகத்தாலே
ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும் இதர விஷய ப்ராவண்யத்துக்கும் அடியான
பாபத்தை போக்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து
மேல் ஆறு ஸ்லோகத்தாலே
பத த்ரய நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்ய கரணாதிகளையும் அபராதிகளையும் பரக்கப் பேசி
மேல் ஒரு ஸ்லோகத்தாலே
அநந்த கிலேச பாஜனமான தேகத்தோடே பொருந்தி இருக்கைக்கு அடியான பாபத்தைப் போக்க வேணும் என்று
அநந்தரம் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ யாமுனாச்சார்ய ப்ரப்ருதிகள் அருளிச் செய்த தோஷ சமூகங்களுக்கு எல்லாம் கொள்கலமான எனக்கு
ஸ்ரீ தேவரீருடைய கிருபை ஒழிய வேறு புகல் இல்லை என்று
மேல் மூன்று ஸ்லோகங்களாலே
அடியேனுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டத்தை தந்து அருள வேணும் என்றும்
அவர் தம்முடைய கார்யங்களைச் செய்ய சக்தர் என்றும்
அவர் ஸ்ரீ கத்ய த்ரயத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பண்ணின பிரபத்தியே தமக்குப் பேற்றுக்கு
உடல் என்று அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இனி மேல் இரண்டு ஸ்லோகங்களாலும்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சேவையாகிற பரம ப்ராப்யம் நித்ய அபி விருத்யமாய்ச் செல்ல வேணும் என்றும் –
அதுக்கு பிரதிபந்தகமான சஷுர் விஷய சங்கம் நசிக்க வேணும் என்றும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் பிரார்த்தித்து
இப்பிரபந்த முகேந அடியேன் விண்ணப்பம் செய்த இத்தை சாதரமாக அங்கீ கரித்து அருள வேணும் என்று
அபேக்ஷித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டி அருளுகிறார்
அதில் முதல் ஸ்லோகத்தாலே
தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற பரம ப்ராப்யமே நமக்கு நித்ய அவிவிருத்தியாம் படியாகவும்
அதுக்கு இடைச் சுவரான இதர விஷய சங்கம் அறும் படியாகவும்
தேவரீர் செய்து அருள வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானாரை பிரார்த்தித்து அருளுகிறார் –
கீழ் அல்பாபி தொடங்கி இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தையும்-
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும்
பாப நிவ்ருத்தி பூர்வக பிராப்தி லாபத்தில் அபேஷையையும்-
பாபத்தைப் போக்கி அபேஷிதம் செய்கைக்கு அத்தலையில் சக்தி விசேஷத்தையும்
நிரபேஷ உபகாரகத்வத்தையும் விண்ணப்பம் செய்தவாறே
திரு உள்ளம் உகந்து உமக்கு வேண்டுவது என் என்ன
நித்யம் யதீந்திர -என்கிற ஸ்லோஹத்தில் பிரார்த்தித்தபடியே நிரதிசய கைங்கர்யத்தைத் தர வேணும் -என்ன
அது முன்பே ஸ்ரீ திருமலை ஆழ்வார் உமக்கு தந்து அருளினாரே என்ன –
ஆகிலும் அத்தை ஸ்ரீ தேவரீர் அநு தினமும் அபிவிருத்தமாம் படி செய்து அருளி
அதுக்கு விரோதியான யாவத் விஷய ப்ராவண்யமும் போக்கி யருள வேணும் என்கிறார் –
தாஸ்யத்தை அபிவிருத்தம் ஆக்குகையாவது -ததீய பர்யந்தம் ஆக்குகை
இத்தை இறே –
உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆட்படுத்தே -107-என்று ஸ்ரீ அமுதனார் பிரார்த்தித்தது
ஆகில் -நித்யம் என்கிற ஸ்லோஹம் போம் வழி என் என்னில் –
வாசா -என்கிற ஸ்லோஹத்தில் தாம் பிரார்த்தித்த ததீய சேஷத்வம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அதுக்கு மூலமான தச் சேஷத்வமும் போனதாகக் கொண்டு அத்தை பிரார்த்தித்தார் இத்தனை போக்கி
அதில் பர்யாப்தராய் அன்று –
இப்படிக் கொள்ளாத போது-தத் தாஸ தைக ரசதா அவிரதாம மாஸ்து-என்றதோடு விரோதிக்கும் இறே
ஆனால் இது புநர் உக்தமன்றோ என்னில்
ததீய சேஷத்வம் தச் சேஷத்வ விருத்தி ரூபம் என்கையாலும்
இது தமக்கு கேவலராக பிராப்தம் அன்றிக்கே சம்ப்ரதாய பிராப்தம் என்கையாலும்
புநர் உக்தம் அன்று ப்ராப்ய த்வித்வமும் இல்லையாம் –
ஸ்ரீ மன் யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
தாமன்வஹம் மம விவரதய நாத தஸ்யா
காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –19-
பகவத் பக்தி பரீவாஹ கைங்கர்ய ஸ்ரீயை உடைய ஸ்ரீ லக்ஷ்மண யோகியே
எம் ஆசார்யர் ஸ்ரீ சைல நாதர் தயா காஷ்ட்டையாக
தந்து அருளிய உம்முடைய திவ்யமான திருவடி தாமரைகளின் சேவையான அந்த அரும் பேற்றை தினம் தோறும் எனக்கு
விசேஷமாக பெருக செய்ய வேண்டும்–
அந்த பேற்றுக்கு இடையூறான எல்லா வற்றையும் அடியோடு தொலைக்க வேண்டும் —
எல்லா காமத்தையும் போக்க வேண்டும்–
ஸ்ரீ மன்
ஸ்ரீ பகவத் அனுபவ கைங்கர்யம் ஆகிற நிலை நின்ற சம்பத்தை யுடையவரே
யதீந்திர
அந்த ஸ்வரூப அநு ரூபமான சம்பத்தை பஜிக்கும் அளவில் எனக்கு என்று நாக்கு நீட்டாதபடி இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைப் பற்ற யதீந்த்ர -என்று சம்போதிக்கிறார் –
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்ன அநந்தரம்
ஐம்புலன் அகத்து அடக்கி -என்று அதிலே ஸ்வ ப்ரயோஜன புத்தியால் ப்ரவணமாகிற இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைச் சொல்லிற்று இறே
அன்றிக்கே
தமக்கு அபேக்ஷிதமான ப்ராப்யத்தைத் தருகைக்கு ஈடான ஞானாதி சம்பத்தை யுடையவர் என்றும்
அதுக்கு விரோதியைப் போக்க வல்ல சக்தியையும் யுடையவர் என்றும் நினைத்து
ஸ்ரீ மந் யதீந்த்ர -என்று சம்போதிக்கிறார் என்னவுமாம்
ஸ்ரீ யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
தம்முடைய ப்ராப்ய வேஷம் இருக்கிறபடி –
வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமான திருவடிகளில் நிரந்தரம் அனுபவமாகிற சேவையை
ஸ்ரீ இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றும்
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி ஸ்ரீ ராமானுஜன் அடிப் பூ மன்னவே -என்றும்
ஸ்ரீ பிள்ளை அமுதனார் உபக்ரம உபஸம்ஹாரங்களிலே பேசின கிரமத்தைக் கணிசிக்கிறது
இந்த ப்ராப்யம் நீர் உம்முடைய யத்னத்தாலே சாதித்துப் பெற்றதோ என்ன
அன்று தாயப்ராப்தம் -என்கிறார் –
ஸ்ரீ மன்
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே சர்வ அபராதங்களையும் பொறுத்து சர்வ சேதனரையும் ஸ்ரீ சர்வேஸ்வரன் –
செய் தலைச் சங்கம் -75- என்கிற படியே அனுவர்த்திக்கும் படி
ஸ்ரீ பகவத் விஷயீ காரம் பெறுகையாலே வந்த ஸ்ரீயை உடையவரே என்னுதல்
ஸ்ரீ ராமானுஜாய நம இதய சக்ருத் கருணீ தேயோ மா நமத் சர மதஸ்மர தூஷீ தோபி பிரேமாதுர
ப்ரியதமாம பஹாய பத்மாம் பூமா புஜங்க சய நஸ்த ம நு பிராதி -என்கிறபடியே
தம் திரு நாமத்தைச் சொன்ன மாத்ரமே கொண்டு
ஸ்ரீ யபதியானவன் அவள் தன்னையும் விட்டு எத்தனையேனும் தண்ணியரையும்
அனுவர்த்திக்கும் படி பகவத் விஷயீ காரத்துக்கு விஷயமான ஸ்ரீ மானே என்னுதல் –
அன்றிக்கே –
ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதா நாம் -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இப்படி ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யத்தை விட்டு பர பிரவ்ருத்தி யேதங்கம் என்று இருப்பான் ஒரு அதிகாரி உண்டாவதே
என்று தம்மிடத்திலே ப்ரேமம் கரை புரண்டு இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ மன் என்கிறார்
ஆசார்யனுக்கு சிஷ்ய விஷயத்தில் ப்ரேமம் இறே பரமமான சம்பத்து –
சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் -என்று இறே ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்
ஸ்ரீ வசன பூஷணத்தில் அருளிச் செய்தது
யதீந்திர
தேவரீர் ஜிதேந்த்ரியரில் தலைவராய் இருந்தமையால் யன்றோ இவ் விஷயீ காரம் பெற்றது
ஜிதேந்த்ரியரில் தலைமை யாவது –
தமக்கு உண்டான இந்த்ரிய ஜெயம் ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் போரும்படி இருக்கை
இவ்வர்த்தம் –
ஸ்ரீ ராமானுஜாங்க்ரி சரணோஸ்மி -ஸ்ரீ வரத ஸ்தவம் -102–
பிதா மஹம் நாத முனி விலோக்ய -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -65- இத்யாதிகளிலே ஸூ ஸ்பஷ்டம்
இவர் இப்படி சம்போதித்த வாறே உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன
பவ தீய பதாப்ஜ ஸேவாம்
தேவரீர் சம்பந்திகளான திருவடித் தாமரைகளுடைய நித்ய கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்
பவதீய
புண்யம் போஜ விகாசாய -என்கிறபடியே சர்வ பாப மூலமான அஹங்காரத்தைப் போக்கி –
ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயரான ஆத்ம வஸ்துக்களை பவ தீயராக்கி அவன் திரு முக மண்டலத்தை விகசிப்பிக்கையே
பிரயோஜனமாக அவதரித்த தேவரீர் சம்பந்திகள் என்னுதல்
பரம பிராப்யரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்
பிராப்யத்துக்கு பரமத்வமாவது ஸ்வ அபேஷ அதிசயித ப்ராப்யத்வம் அன்றிக்கே இருக்கை –
ஸ்ரீ பகவத் பிராப்யத்வம் அதிசயிதம் அன்றோ என்னில் அதுவும் இதிலே அந்தர்கதம் இறே
தவ திவ்ய
என்ற பாடமான போது தவ என்றதுக்கு முன்பு சொன்னதே அர்த்தமாய் திவ்ய என்கிற பதத்துக்கு ஸ்வ ஆஸ்ரிதரை
நழுவ விடாமையாலே வந்த புகரை உடையவைகள் என்ற அர்த்தமாகக் கடவது
பதாப்ஜ
சௌகந்தியாதிகளாலே தாமரை போன்ற திருவடிகளுடைய
ஸேவாம்
கைங்கர்யத்தை
பவதீய பதாப்ஜ -என்கிற போது
பிராப்தங்களாயும் போக்யங்களாயும் இருக்கும் திருவடிகள் என்கிறது
ஆக பிராப்தங்களுமாய் போக்யங்களுமாய் இருக்கிற தேவரீர் திருவடித் தாமரைகள் உடைய
கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்-
எங்களுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை தாம் எப்போதும் அனுபவித்துக் கொண்டு போகிற இந்த பரம ப்ராப்யத்தை
யுபகரித்துக் கொண்டே நிற்க வேண்டும்படி தடையறப் பெருகுகிற தம்முடைய நிர்ஹேதுக கிருபைக்குப் போக்கு வீடாக
முலைக் கடுப்பாலே பாலைத் தறையிலே பீச்சுமா போலே எனக்கு அபேக்ஷை இன்றிக்கே இருக்க
தம்முடையது பேறாகவே சர்வ ஸ்வதாநம் பண்ணி அருளினார்
அத்தாலே எனக்கு வந்து கை கூடிற்று –
ஸ்ரீ பிள்ளை அருளாலே பேறு பெற்றீர் ஆகில் இப்போது நம் பக்கல் அபேக்ஷிக்கிறது என் என்ன
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
ஆகில் இது முன்பே ஸ்ரீ திருமலை யாழ்வார் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம் பரம
கிருபையாலே பிரசாதிக்கப் பட்டதன்றோ -என்ன
கருணா பரிணாம -என்கையாலே
அர்த்தித்த்வ நிரபேஷமாக தம் கிருபையாலே பிரசாதித்து அருளினார் என்னும் இடமும்
ஸ்ரீ சைல நாத -என்கையாலே
தான் தோன்றி யன்றிக்கே ஸ்வ ஆசார்யரால் தரப் பெற்றது என்னுமதுவும் தோற்றுகிறது
தாம்
மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்கிறபடியே
பகவத் கைங்கர்யம் சரமாவதியாக பிரசித்தமான என்னுதல் –
ஆச்சார்யா தீநோ பவ -என்றும்
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -ஸ்ரீ பெரியாழ்வார் -4-4-2-இத்யாதி
பிரமாண பிரசித்தமான என்னுதல் –
கைங்கர்யத்தின் போக்யதையைப் பார்த்தால் இயத்தா அவச்சின்னமாகையாலே தாம் என்கிறார் ஆதல்
ஆக -பிரமாண பிரசித்தமாய் பரம போக்யமாய் பகவத் கைங்கர்ய ஸீமா பூமியாய்
சம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தமான தேவரீர் உடைய திருவடித் தாமரைகளில் -கைங்கர்யத்தை –
தாமன்வஹம் மம விவரதய–என்று அருளிச் செய்கிறார்
ஸ்ரீ தேவரீர் இப்போது புதிதாக ஓன்று உண்டாக்க வேண்டுவது இல்லை –
ஸ்ரீ பிள்ளை அருளாலே உபகரித்த அத்தை நாள் தோறும் வளர்த்து அருளுகையே உள்ளது
அவரும் அப்படியே செய்யக் கடவோம்-என்னும் இடம் தோற்ற
கருணா அம்ருத பரிணாம ரூப கடாக்ஷ வ்ருஷ்டிகளாலே குளிர வழியப் பார்க்க
அத்தாலே நிரஸ்த ஸமஸ்த பாப தப்தராய் பூர்ணமாக யுபகரியா நின்று கொண்டு உத்தர உத்தர
தழைத்துச் செல்லும்படி வளர்த்து அருள வேணும் என்கிறார்
தாமன்வஹம் மம விவரதய -என்று
உபகரிக்கிற ப்ராப்யத்தின் கௌரவம் ஆதல்
இவ்வுபகாரத்துக்கு இலக்கான என்னுடைய பாவமாதல் பாராதே தம்மளவில் உபகரித்து அருளுவதே என்று
வித்தாராகிறார் தாம் என்று –
இப்படி செய்ய வேண்டும் நிர்பந்தம் என் என்ன அருளிச் செய்கிறார்
நாத
உடைமையானதின் கார்யம் செய்கை உடையவனுக்கே பரம் இறே
சர்வ ஆஸ்ரித சாதாரணாரான நமக்கு இவன் ஒருவனையே பார்த்து இருக்கப் போகுமோ என்று உபேக்ஷித்து அருளாதே
தேவரீர் திருவடிகளில் அனுபவத்தால் அல்லது செல்லாத என் பிரக்ருதியைத் திரு உள்ளம் பற்றி அருளி
எனக்கு ஒருவனுக்குமே முற்றூட்டு யாம்படி அவ்வனுபவத்தை இடைவிடாமல் வர்த்திப்பித்து அருள வேணும் என்கிறார்
இப்படி நாம் அனுபவத்தை வளர்த்துக் கொடுக்கிலும்
இதுக்கு இடைச்சுவரான விரோதியைத் தானே கழித்துக் கொள்கிறான்
என்று விரோதி நிவ்ருத்திக்கு என்னை என் கையிலே காட்டித் தர ஒண்ணாது –
அதுவும் தேவரீர் தாமே செய்து அருள வேணும் என்கிறார்
தஸ்யா காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –-
என்று -தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற இந்தப் பரம ப்ராப்யத்துக்கு விருத்தமாய் -விஷய பேதத்தாலே
பஹு விதமாய் இருந்த விஷய ப்ராவண்ய ரூபமான காமத்தை சாவாசனமாக போக்கி அருள வேணும்
இங்கனம் அன்றிக்கே இதுக்கு விருத்தமான ஐஸ்வர்ய அனுபவமாகிற காமத்தையும் ஆத்ம அனுபவத்தையும்
பகவத் அனுபவத்துக்கு பிரதிபந்தகங்கள் எல்லாவற்றையும் போக்கி அருள வேணும் என்கிறார் ஆகவுமாம் –
இதில் முற்பட்ட யோஜனைக்கு ஓவ்வித்யம் உண்டு
சப்தாதி விஷய ப்ராவண்யமே இதுக்கு பிரதிபந்தமாக கீழே அருளிச் செய்ததும்
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் தமக்கு அபேக்ஷிதமாய் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை அநாதி காலம்
இந்த புருஷார்த்தத்துக்கு இடைச்சுவராய் இப்போதும் அநு வர்த்தித்துப் போகும் அர்வாதீந விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி
பூர்வகமாகப் பல படியாகப் பிரார்த்திக்குக் கொண்டு போந்தார் –
அன்வஹம் –
சர்வ காலத்திலும் -இங்கு அஹஸ் சை இட்டுக் காலத்தைச் சொல்கிறது –
திருப் பள்ளி எழுச்சி முதலாக திருக் கண் வளர்த்தி
அளவாக உள்ள கைங்கர்யங்கள் எல்லாம் தமக்கு உத்தேச்யம் ஆகையாலே -அதில் ஒன்றும் குறையாமல்
அநு தினமும் நடக்க வேணும் என்னும் அபிப்ராயத்தாலே –
அன்வஹம் என்கையாலே தேச அவஸ்தைகளும் உப லஷிதங்கள்-
ஆக -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் என்கிறார் –
கைங்கர்யம் தமக்கு நிரூபகம் ஆகையாலும்
போக்யமாகையாலும் இதர விஷய அனுபவத்துக்கு இடம் கொடாமைக்காகவும் –
அன்வஹம் -என்கிறார் ஆகவுமாம் –
மம –
அக்கைங்கர்யமே நிரூபகமான அடியேனுக்கு -என்னுதல்-
அதில் ஆசை உடைய அடியேனுக்கு என்னுதல் –
விஷய சபலனான அடியேனுக்கு என்னுதல்
விவரதய –
அதுவே தாரக போஷக போக்யங்கள் -வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் -ஆகும் படி
செய்து அருள வேணும் என்னுதல்
அபிவ்ருத்தமாம் படி செய்து அருள வேணும் என்னுதல் –
அபிவ்ருத்தம் ஆக்குகையாவது ததீய பர்யந்தம் ஆக்குகை-இந் நிர்பந்தத்துக்கு நிதானம் என் என்னில்
நாத
தேவரீர் ஸ்வாமி யன்றோ -அடியேன் கார்யம் செய்கைக்கு என்கிறார்
நாத
யாசித்து பிறர் கார்யம் செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார்
ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ நம்பி மூத்த பிரானும் ஸ்ரீ மாலா காரரை யாசித்து பூ சூடிற்று -அவன் ஸ்வரூபம் நிறம் பெறுகைக்காக இறே-
அப்படியே செய்கிறோம் –நீர் விஷய பிராவண்யத்தைத் தவிரும் என்ன -அர்த்த ஜரதீய நியாயம் ஆகாமே
அத்தையும் தேவரீரே போக்கி அருள வேணும் என்கிறார்
தஸ்யா-காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் -இத்யாதியாலே
தஸ்யா-
அடியேனுக்கு ஸ்வரூப பிராப்தமாய் போக்யமாய் த்வதீய பர்யந்தமான த்வத் கைங்கர்யத்துக்கு
விருத்தம்-தனக்கு போக்யதயா அப்ராப்தங்கள் ஆகையாலே விருத்தமான
காமம்
சப்தாதி விஷய பிராவண்யத்தை
அகிலம் நிவர்த்தய
சிறிது அனுகூலம் என்று வையாதே நிஸ் சேஷமாக போக்கி அருள வேணும் என்கிறார் –
பிரதம பர்வத்தில் காமமும் சரம பர்வதத்துக்கு விரோதி இறே –
அ நக -என்றது இறே ஸ்ரீ சத்ருகன ஆழ்வானை
த்ருணீக்ருத விரிஞ்சாதி -என்னக் கடவது இறே
த்வம் –
இஷ்டம் செய்கைக்கு கடவரான தேவரீரே அநிஷ்டமான காமத்தையும் போக்கி அருள வேணும் -என்கிறார்
ஆக -உன் இணை மலர்த் தாள் என்தனக்குமது இராமானுசா இவை ஈந்தருளே –76-என்கிறபடியே
த்வத் கைங்கர்ய ரூப-பரம பிராப்யத்துக்கு -தேவரீரே உபாயமாக வேணும் என்று
விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு –
கீழ் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று ப்ரஸ்துதமான உபாயத்வத்தை
இஸ் ஸ்லோஹத்தாலே நிகமித்தாராய்த்து –
————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்