ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –17-முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் எல்லாம் ஸ்ரீ ஆழ்வார்களை இட்டே ஸ்ரீ எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -ஸ்ரீ திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிடினும்
இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான ஸ்ரீ எம்பெருமானாரைப்-பற்றினவர்கள்
இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

பத உரை –

கலை-சாஸ்திரங்கள்
பரவும் -துதிக்கும்
தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
உலகில் -உலகத்தில்
இனியானை -அன்பரான
எங்கள் -எங்களுடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
வந்து -அடைந்து
எய்தினர் -பற்றினவர்கள்
துயரங்கள் -துன்பங்கள்
முந்திலும் -முன் முன்னாக வரினும்
முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
இன்பங்கள் -சுகங்கள்
மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த செருக்கை உடையனாய் கொண்டு –
ஸ்ரீ திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி பிரதிபாத்யார்த்த
கௌரவத்தாலே சாம்சாரிக சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-
எங்களுக்கு நாதரான – ஸ்ரீ எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் –
துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும் இது வந்ததே என்று வெறார்கள்–
சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும் பக்வபலம் போலே மனசு இளையார்கள் –
ஆன பின்பு நீங்களும் இவற்றால் வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு
பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து அருளும் என்றவாறு –
கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —ஸ்ரீ கண்ண மங்கையுள் நின்றான் –
நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –ஆடினவன் நின்றான் —

ஸ்ரீ பெரும் புறக்கடல் -ஸ்ரீ பிருஹத் பஹு சிந்து -ஸ்ரீ திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த –
முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -ஸ்ரீ பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
பத்தர் ஆவி ஸ்ரீ பத்தராவி -பெருமாள் -ஸ்ரீ கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் –
ஸ்ரீ திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூக துக்க சமம் –
திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
ஸ்ரீ பராங்குச முகத்தாமரை ஸ்ரீ ராமானுஜர் என்றாலே மலரும் –

கலை பரவும்
சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-

தனி யானையை
த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் –
சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–திரு நெடும் தாண்டகம்–10-

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்—திருப்பாவை–15

கண்ண மங்கையுள் நின்றானை –
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -ஸ்ரீ திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -ஸ்ரீ பத்தராவியை –

கண்ண மங்கை நின்றானை –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள ஸ்ரீ எம்பெருமானுக்கு
ஸ்ரீ பத்தராவி -எனபது திரு நாமம்

தண் தமிழ் செய்த
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
சகல தாபங்களும் மாறும்படி -ஸ்ரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின

கலை பரவும் தனி யானையை –
பரவுதல்-துதித்தல்
சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி
வேதம் அனைத்தும் துதிக்கும் நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
தோற்றம் அளிக்கிறான் –
அவ் வெம்பெருமான் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு –
வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து இருக்கும் மதம் போன்று உள்ளது –
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி – 7-10 8-
வெஞ்சினக் களிற்றை – -என்று
வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -என்பது அதன் கருத்து –

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–1-7-1-

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன்-1-7-9-

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி -7-1-

கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய ஈடு இல்லாத
தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் –
வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத் தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக
காட்டுவது வியப்பூட்டுவதாக இருந்தது அவ் எம்பெருமானுக்கு .
வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில் இறங்கினான் –
தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை –
வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும்
கற்றே அறிய வேண்டும்படியாக அமைந்து இருந்ததாம்
இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10–என்கிறார் ஆழ்வார் –
உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய் உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று
இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –

தமிழ் –
தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவது கவி வாணர் நோக்கம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் –
தன்னையே தான் தருவது இது – தன்னைத் தந்த கற்பகம் -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க-

கண மங்கை கற்பகத்தை -என்பது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –

தண் தமிழ்-
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே கற்பவர் மனத்தில் பதியும் படியும் –
உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் – செய்து –
சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
நீலன்-
திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
நீலன் தனக்கு உலகில் இனியானை-
இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –

நீலன் தனக்கு –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று
ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –

உலகில் இனியானை –
இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான –
ஸ்ரீ பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –

எங்கள் இராமானுசனை –
என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானாரை –

வந்து எய்தினரே
ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து –
சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்-

அக்கரை என்னும் அநர்த்தக்கடல் -சம்சாரம் / இக்கரை ஏறி-என்று பரமபதத்தையும் அருளிச் செய்வார்களே –

வந்து எய்தினர் –
சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
தாம் எப்பொழுதும் பிரியாது ஸ்ரீ எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் – எய்தினர் –
வினையால் அணையும் பெயர் –
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் –
காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே இன்பமாகவும் கொண்டு இருத்தலின் –
ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
ஸ்ரீ எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

முனியார் துயரங்கள் முந்திலும் –
துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள்-
முனிவு -வெறுப்பு .

இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே –
மனசிலே ஏகாகாரங்களாய்
மொய்த்தல் -திரளுதல் –
ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே ஸ்ரீ கீதாசார்யரும் .
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப் பெற்று களிப்புறலாகாது –
விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது இங்கு நினைவு உரத்தக்கது –
ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து அதனைப் பெற முயல்வானாய் –
உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் –
அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும் அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த ஸ்ரீ கீதா ஸ்லோகம் –
ஸ்ரீ எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு உரிமை பட்டு இருத்தலே
ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு
படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின்
அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -என்க –

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே–திருவாய்மொழி-2-9-5-

இங்கு –
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: