ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –13-செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில்
ஆதாரம் அற்று இருக்கும் எம்பெருமானார் திருவடிகளே எனக்கு ப்ராப்யம் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே திரு மழிசை ஆழ்வார் உடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –இப்பாட்டில் –
தாம் முந்துற முன்னம் தொண்டு பட்ட -பெரிய பெருமாள் திருவடிகளில் அதி ப்ரவணராய் –மற்றுமோர் தெய்வம் உண்டே -என்று
அவரை ஒழிந்த எம்பெருமான்களை விரும்பாத -பாதிவ்ரத்யத்தை உடையரான-ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் உடைய
திருவடிகள் ஒழிய வேர் ஒன்றில் ஆதாரம் அற்று இருக்கிற எம்பெருமானார்-திருவடிகளே எனக்கு பிராப்யம் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில் ஆதரம் அற்று இருக்கும்-
எம்பெருமானார் திருவடிகளே நமக்கு ப்ராப்யம் -என்கிறார் –

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

பத உரை –
செய்யும் -செய்யப்படும்
பசும் துளவம் -வாய்ந்த திருத் துழாயிலான
தொழில் -வெளிப்பாட்டை -அதாவது -தக்கவாறு அமைப்புடைய
மாலையும் -திரு மாலையும்
செம் தமிழில் -செம்மையான தமிழ் மொழியில்
பெய்யும் -செய்யப்படும்
மறை -வேதமான
தமிழ் மாலையும் -திரு மாலை-திருப் பள்ளி எழுச்சி என்னும் தமிழ் பா மாலையும்
பேராத -நீங்காது -இயல்பாய் அமைந்த
சீர் -நற் குணங்களை உடையனான
அரங்கத்து ஐயன் -திருவரங்கத்தில் கண் வளர்ய்ம் பெரிய பெருமாள் உடைய
கழற்கு -திருவடிகட்கு
அணியும் -அலங்காரம் செய்யும்
பரன் -மிக சிறந்த தொண்டர் அடி பொடி ஆழ்வார் உடைய
தாள் அன்றி -திருவடிகளைத் தவிர
ஆதரியா -ஆதரிக்காத
மெய்யன் -மெய்மையை உடையவரான
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
சரணே -திருவடிகளே
எனக்கு -எனக்கு
வேறு கதி -தனிப்பட்டு பெறத் தக்கதாம் -அதாவது ப்ராப்யமாம் .

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-
மிக்க சீர்த் தொண்டரான -பெரிய திரு மொழி -11 1-9 – தம்மாலே செய்யப்பட்டதாய் –
தம்முடைய கர ஸ்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம் நிறத்திலே காணலாம்படி இருக்கிற திருத் துழாயாலே-
வகுப்புண்டாய்ச் சமைத்த திரு மாலையையும் -ச்வார்த்த ப்ரகாசகமான தமிழிலே உண்டாக்கப் பட்டதொரு வேதம்
என்னலாம்-ஆன தமிழ் தொடையையும் –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2—வீடில் சீர் -திருவாய் மொழி – – என்கிறபடியே
நித்ய சித்தமான கல்யாண குணங்களை உடையராய் கொண்டு

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே – -திருமாலை – 39-
ஐயனே அரங்கனே -என்னும்படியே-
பரம பந்துத்வம் தோற்ற கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய திருவடிகளுக்கு-சாத்துமவராய் –
சேஷத்வ காஷ்டையில் நிற்கையாலே சேஷத்வத்துக்கும் தமக்கு மேற் பட்டார் இல்லை-என்னும்படி இருக்கிற
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் உடைய திருவடிகளை ஒழிய விரும்பாத-சத்ய சீலரான
எம்பெருமானார் உடைய திருவடிகளே எனக்கு விசேஷித்து ப்ராப்யம் –
பெய்தல்-உண்டாக்குதல் / பெறாமை -நீங்காமை-

வேறு கதி -விசேஷ ஸூ லபமான–பந்தத்துக்கு இல்லாமல் – மோக்ஷம் ஏக கதி –
பேராத சீர் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று இருக்கும் அரங்கன் —
தொண்டர்களில் பரன் -தொண்டர் தலைவர் -தாஸ்யர்களில் பரன் -பராத் பரன் மேன்மையிலே பரன் -சேஷி சேஷ பரர்கள் இருவரும் –
அரங்கன் என்றால் மயலே பெருகும் படி அருளிச் செய்த ஆழ்வார் இவரே-வனமாலை அம்சம் –
வேறு பட்ட கதி உபாயம் உபேயம் ப்ராப்யம் பிராப்பகம் ஒன்றான விலக்ஷண கதி-

செய்யும் பசும் துளபத் தொழில் மாலையும் –
மிக்க சீர் தொண்டரான தம்மாலே –வைஜயந்தீ வனமாலை என்றும் கலம்பகன் மாலை என்றும்
அனுபோக்தாக்களாலே உல்லேக்கிக்கும் படி சந்தர்ப்பிக்கப் பட்டதாய் -தம்முடைய கர ச்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம்
நிறத்திலே காணலாம் படியான பசுமை உடைத்தான -திருத் துழாயாலே வகுப்புண்டாய் சமைத்த திரு மாலையும் –
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–திருப்பள்ளி எழுச்சி–10-
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் இவர்
தம்மை தாமே நிரூபித்து கொள்ள வல்லவர் இறே –

செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை
மற்று ஒரு வகை -தமிழ் மாலை
ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-
ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்
திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –
செய்யும் துளப மாலை -என்றார் –

திருத் துழாய் அடியிலே பிறந்து திருத் துழாய் போலே பிறப்பே தொடங்கி ஞானம் மணம் கமழும் ஆண்டாளை
திருத் துழாயோடு உண்டான தொடர்பாலும் ஒப்புமையாலும் மிக இனியவளாக கருதி
அவள் சூடிய பூ மாலையை அரங்கன் தலையாலே தாங்குவான் ஆயின் –
நேரே திருத் துழாய் மாலையை தொண்டர் அடி பொடி ஆழ்வார் மிக்க ஆதரத்துடன் கையாலே தொடுத்து -சமர்பித்தது அரங்கனுக்கு
எவ்வளவு இனியதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வல்லோம் அல்லோம் –
இத்தகைய துழாய் மாலையை அரங்கன் கழற்கு அணிவிக்கிறார் ஆழ்வார் -அம்மாலை என்ன ஆயிற்று என்பதை நாம் அறிகிலோம் –
திருத் துழாய் சம்பந்தம் பெற்றவள் தந்த மாலை தலை மேல் ஏறியது –
இது சாஷாத் திருத் துழாய் மாலை –
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-
அதற்க்கு மேல் தன் பால் ஆதரம் பெருகி ஆழ்வார் தம் கைப்பட தொடுத்து சமர்ப்பித்தது
அதற்க்கு மேல் அரங்கனை பிரிந்து வருந்துவோர் -அரும் துயரைப் போக்கி -கண் உறங்கப் பண்ணுவதும் அதுவே –
முதன் முதல் இருந்து மறைந்து போன அவர்களது மாந்தளிர் நிறம் மறுபடியும் பளிச்சிட செய்வதும் அதுவே –

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத் துழாய் மாலையை கீழ் சொன்ன பூ மாலையோடு ஒப்பத் தலை மேல் தாங்கினால் போதுமா –
என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றாது –
ஆழ்வார் தாம் தொண்டர் ஆனமைக்கு ஏற்ப கழலில் அணிவித்ததும்
அவர் பத்தி கண்டு மயங்கிக் கிடக்கிறான் போலும் ஐயன் அரங்கத்திலே –
இனி ஆழ்வார் இடம் உள்ள மதிப்பினால் மாற்றாது அங்கனமே கழலில் அணிந்து இருந்தான் ஆகவுமாம்-
இனி கழலில் அணிந்தது உப லஷணமாய்-
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாளணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவினுளானே–1-9-7–திருவாய் மொழி -1 9-7 – -என்ற பாசுரப்படி
அந்த அந்த-அவயவங்களிலே புனைந்தான் ஆகலுமாம் –

திருமங்கை ஆழ்வார் -பிரிவால் வருந்தும் தலைவி நிலை எய்தி –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் போல்வார் அருகு இருந்து திருத் துழாய் சமர்ப்பிக்க –
அவ் வாசனையை வண்டு கொண்டு வந்து ஊதினால் கண்கள் உறங்கும் –
முதன் முதல் இருந்த எனது நிறம் மீண்டும் வரும் என்னும் கருத்துப்பட அருளி செய்யும் பாசுரம் இங்கு அனுசந்திக்க தக்கது –
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதுமாகிலே -பெரிய திருமொழி -11 1-9 – –
சூத்திர பலன்களை விரும்பி தொண்டு செய்பவர் -தொண்டர் –
உபயாந்தரங்கள் மூலம் சிறந்த புருஷார்தத்துக்கு அடிமை செய்பவர் -சீர்த் தொண்டர் –
ஒரு பலனும் பேணாதே ஸ்வயம் பிரயோஜனமாக அடிமை செய்பவர் மிக்க சீர்த் தொண்டர் –
இங்கு மிக்க சீர்த் தொண்டர் எனபது -தமக்கு ஒரு பயன் கருதாது -பரிவுடன் அரங்கனை பரிந்து-காப்பவரைக் குறிக்கிறது –
பூம் துளவு அவர் இட்டதாயின் வருந்த வேண்டியது இல்லை –
பிரிந்து வருந்தும் தலைவிக்கு தான் இன்பம் காண வில்லையே என்பதனால் அன்று ஏக்கம் –
தான் பிரிந்த நிலையில் தலைவனை அருகில் இருந்து பாதுகாப்பார் யாரும் இல்லையே என்பதனால் ஆயது அது –
மிக்க சீர் தொண்டர் பக்கத்தில் இருப்பது தெரிந்தால் அவ் ஏக்கம் நீங்குகிறது என்க-
அத்தகைய மிக்க சீர் தொண்டர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரே என்று கொள்ளல் தகும் –
பூத் துளவு இடுபவர் அவர் தானே –

திரு மங்கை ஆழ்வார் அரணாக அரங்கனுக்கு மதிள் கட்டும் போதும் –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருமாலை கட்டும் இடத்தை இடிக்காது -ஒதுக்கிக் கட்டினார் -என்று கூறப் படுவதும் காண்க –
அவர் கையால் தொடுத்தது என்னும் கருத்துடன் –செய்யும் துளவ மாலை -என்கிறார் அமுதனார் –
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–திரு மாலை – 45-
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி – என்று திருத் துழாய் தொண்டையே
தமக்கு நிரூபகமாக இவரே சொல்லுகையாலும் –
தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தொல் தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -என்று
பெருமாள் திரு அவயவத்துக்கு தக்கவாறு அமைந்த திருத் துழாய் மாலையுடன் கூடையைக் தமக்கு அடையாளமாக
இவரே அருளிச் செய்கையாலும் -துளவ மாலை -என்றார் –

ஏனையோர் மாலை தொடுக்கும் போது அவர் கைப்பட்டுத் திருத் துழாய் வாடும் –
இவ் ஆழ்வார் கைப் படினோ- புதுக் கணிக்கிறது திருத் துழாய் –
அதற்க்கு காரணம் அரங்கனுக்கு அணி செய்ய திருத் துழாய் வடிவத்தில் நித்ய சூரியே வந்து இருப்பதால் -தனக்கு
தொண்டு பட்ட ஆழ்வார் உடைய திருக் கரம் பட்டதும் புத்துணர்ச்சி ஏற்பட்டு புதுக் கணிப்பு உண்டாகிறது –
அது பசுமை நிறத்தாலே வெளிப்படுகிறது -அது தோன்ற -பசும் துளவ மாலை -என்கிறார் –
எம்பெருமானுடைய ஆடை ஆபரணம் ஆயுதம் மாலை இவை எல்லாம் அறிவற்ற பொருள்கள் அல்ல –
நித்ய சூரிகளே இவ்வடிவுகளில் பணி புரிகின்றனர் -எனபது நூல் கொள்கை –
ஆதலின் திருத் துழாய் மிக்க சீர் தொண்டர் திருக் கரம் பட்டதும் -புதுக் கணித்தல் கூடும் –என்க –
இவ்விடத்தில் -திரு மாலை எடுத்தால் திருக் குழலுக்கும் மார்வுக்கும் அளவாய் இருக்கை –
திரு மாலை யாயும் -திருப்-பரிவட்டமாயும் -நிற்கிறார் சேதன வர்க்கம் இறே-என்று திருப்பள்ளி எழுச்சி யில் –
தொடை யொத்த துளவமும் -என்னும் பகுதிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் அறிய தக்கது –

தொழில் மாலை –
நடுவில் பருத்தும் -வர வர சிறுத்தும் வேலைத் திறன் தோற்ற சமைத்த மாலை -என்றபடி –
அரங்கனுக்கு இவர் துளவ மாலை அணிவித்தாலும் இவர் செய்வது அரங்கன் தொண்டு அன்று -துளவத் தொண்டே –
அதாவது திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டே எனபது அறிய தக்கது –
துளவத் தொண்டரே -இவர் -துளவத் தொண்டாய் -என்று இவர் கூறிக் கொள்வது காண்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டு அவருக்கு ஆள் பட்ட தொண்டர் அனைவருக்கும் புரியும் தொண்டாய் தலைக் கட்டும் –
ஸ்வா பாவிகமான பகவத் சேஷத்வத்தின் சீமையிலே –
சஹஜ கைங்கர்யத்தின் உடைய மேல் எல்லை ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யம் இறே –
தொண்டர் அடிமையில் எல்லை நிலையில்-வந்து அபிமானம் அற்ற நிலையில் -அடிப் பொடியாக தம்மை சொல்லிக் கொள்கிறார் –
இங்கு துளவ மாலை அணியும் பணி கூறவே தன்னடைவே தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் என்பது போதரும் –
திரு மாலை கடைசி பாசுர வியாக்யானம் காண்க –

துழாய் சம்பந்தத்தால் உகந்தான் ஆண்டாள் சூடிய மாலை.-அந்த துளவதுக்கே தொண்டு புரிந்தவர் இவர்
அது போல் இவருக்கும் ஏற்றம்
புது கணிப்பு தளிர்கிறது இவர் கர ஸ்பர்சம் பட்டதால்
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-திரு நெடும் தாண்டகம்–1-
தளிர் புரையும் திருவடி -போலே
நித்ய சூரிகள் தானே இந்த புஷ்பங்கள்-கைங்கர்யம் செய்ய இங்கே வந்தவை இந்த ரூபத்திலே
கர ஸ்பர்சம் பெற்று புது கணிப்பு பெற்றதாம்
தொடை யத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றும் தோள்

செந்தமிழ் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் –
அருமறைகள் போலே த்ரை வர்ணிக அதிகாரமாய் இருக்கை அன்றிக்கே
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கலாம் படி சர்வாதிகாரமாய் –
அந்யோன்யோ பமதர்த்த வாக்யங்களாலே பிரம்மத்தை விநாசிப்பித்தும்-ஸ்வ அர்த்தத்தை அறிவதற்கும்
துரவஹாகங்களாயும் இருக்கை அன்றிக்கே
சார தம அர்த்த பிரகாசமாய் -த்ரமிட பாஷையாலே நிர்மிக்கப்பட்ட -திரு வேதம் என்று நிரூபிக்கும்படியாய் இருப்பதாய்
திரு மாலை என்னும் பேரை உடைத்தான தமிழ் மாலையும் -பெய்தல்-உண்டாக்குதல்

செந்தமிழ் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் –
துளவ மாலையை பற்றிக் கூறப்பட்டது -இனி தமிழ் மாலையை பற்றிக் கூறப்படுகிறது –
திருத் துழாயால் ஆவது அம்மாலை -இம்மாலை செம் தமிழால் ஆவது –
செம் தமிழ் ஆவது -தெளிவாக தன் பொருளை காட்டும் சொல் –
அத்தகைய சொல்களை கொண்டு செய்யப்பட்டது -தமிழ் மாலை
பெய்தல்-செய்தல்
வேலைப்பாடு அமைந்தது துளவ மாலை -இது மறை தமிழ் மாலையாய் அமைந்தது –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாக திரித்தி பாடினார் -பொய்கை ஆழ்வார் –
நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்தார் பாண் பெருமாள்-
இவரோ மற்று ஒரு பாஷையாய் இராது தமிழாகவே ஆகி விட்ட வேதம் என்னும்படியான
தமிழ் மாலையை தொடுத்து அளிக்கிறார் –
தம் சொற்களை மலராகவும் -தமது நூலை மாலையாகவும் ஆழ்வார்கள் பல இடங்களில் அருளி செய்து உள்ளனர் –
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் சொன்ன -என்றார் நம் ஆழ்வார்
இதில் சொற்களை நறிய நன் மலர்களாக குறிப்பிட்டு இருப்பது காண்க –
நூலை சங்கத் தமிழ் மாலை -என்றாள் ஆண்டாள் –

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பராஸ்ய சக்திர் விவிதை வஸ்ருயதே ஸ்வாபாவி கீஜ்ஞா நபலக்ரியாச -என்றும்
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்றும் –
நித்யஸ் சத்யோ நிஷ் களங்கோ நிரஞ்சனோ நிர்விகல்போ நிராக்யாத அச்சுதோ தேவ ஏகோ நாராயணா -என்றும் –
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-
ஈறில வண் புகழ் நாரணன் -என்றும் -சொல்லுகிறபடியே
ஹேயப் பிரதிபடங்களாய் நித்யங்களாய் இருக்கிற கல்யாண குணங்களை உடையவனாய் –
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரண சூக்ர்த் கதி -என்றும் -பிதாசி லோகஸ்ய சராசரஸ்ய -என்றும் –
பிதா ப்ராதா சமாதாச மாதவ -என்றும் -தாயாய் தந்தையாய் -என்றும் -சொல்லுகிறபடி சர்வ வித பந்துவாய்
தோற்றும் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளின பெரிய பெருமாள் –
ஐயனே அரங்கனே என்று இவரும் தம் பிரபந்தத்திலே அருளிச் செய்தார் இறே
அரங்கத்து ஐயன் –
அந்த ஸ்தலத்தை இட்டு அவர் தம்மை நிரூபிக்க வேண்டும்படி காணும் இவர் தமக்கு அதிலே ப்ராவண்ய அதிசயம் இருப்பது –
பேராமை -நீங்காமை -அப்படி பட்டவருடைய

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பேராத -நீங்காத
சீர் -கல்யாண குணங்கள்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப் பிரான் -என்றார் நம் ஆழ்வாரும்
நீங்காமல் என்றும் உள்ளவையையாய் இருத்தற்கு ஹேது -இயல்பாய் அமைந்தமை –
ஞான சக்திகள் ஸ்வபாவிகங்கள்-என்றது வேதமும் –
எளிமைப்பட்ட அர்ச்சை நிலையிலும் -பரத்வ நிலை மாறாமல் இருப்பது பற்றி –பேராத சீர் -என்றதுமாம் –
காவேரீ விரஜா ஸேயம்
வைகுண்டம் ரங்க மந்திரம்
ச வாஸூதேவோ பகவான்
ப்ரத்யஷம் பரமம் பதம் -என்று
காவேரியே விரஜை யாறு -ஸ்ரீ ரங்க விமானம் ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ ரங்க நாதன் பர வாசுதேவன் –
ஆக கண் எதிரே தோன்றும் பரம பதம் -எனபது காண்க –
முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான் முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே–திருவாய்மொழி – 7-2 10-
வடிவுடை வானோர் தலைவனே –என்று நம் ஆழ்வார் அரங்கனை நித்ய சூரிகளின் தலைவனாகக் கூறுகிறார் –
தமேவமத்வா பரவாஸூதேவம் ரங்கேசயம் ரரஜவதர்ஹநீயம்-என்று
திரு வரங்கத்தில் பள்ளி கொண்ட பர வாசுதேவனை ராஜ உபசாரத்துக்கு உரியவனாக நினைத்து
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருப் பள்ளி எழுச்சி பாடுகிறார் –

இனி சீர் ரங்கம் என்பதை ஸ்ரீரங்கமாக கொண்டு -அத் திரு வரங்கத்துக்கு -பேராத – என்பதை அடை மொழி யாக்கலுமாம் –
பேராத -நகராத
திரு அயோத்யையில் இருந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஸ்ரீ ரங்க விமானத்தை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போகும் பொழுது
இங்கு காவேரிக் கரையிலிருந்து விபீடணற்கு பேராமல் இருந்தது பிரசித்தம் –
இனி சத்ய லோகத்தில் இருந்தும் -அயோத்திக்கும் -அங்கு இருந்து விபீடணன் மூலம் காவிரி ஆற்று இடைக்கும் பேர்ந்து வந்தது போலே –
இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எக்காலத்தும் பேராமல் இருத்தல் பற்றி –பேராத சீர்ரங்கம் -என்றார் ஆகவுமாம்-
இங்கு -சத்யால்லோகாத் சகல மகிதாத் சத்தா நதொவாரகூனாம்
சங்கே மாதஸ் சமதிக குணம் சைகதம் சஹ்ய ஜாயா
பூர்வம் பூர்வம் சிரபரிசிதம் பாதுகே யத்த்ய சந்த்யா
நீதோ நாத சததி மிதரன் நீயதே நத்வா நசவ்-பாதுகா சகஸ்ரம் – 53- என்று
தாயே பாதுகையே –
அனைவரும் போற்றும் சத்ய லோகத்தை பார்க்கிலும் –
ரகு மகாராஜன் வம்சத்தவர்க்கு உறைவிடமான அயோத்யைப் பார்க்கிலும் –
காவேரியின் மணல் திடர் மிகவும் சிறப்பு உற்றது என்று நினைக்கிறேன்-ஏன் எனில்
நெடு நாட்கள் பழகின முந்தின இடத்தை விட்ட உன்னால் ஸ்ரீ ரங்க நாதன் இந்த மணல் திடருக்கு எழுந்து அருளப் பண்ணப் பட்டான் –
இவ் ரங்கநாதன் இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எழுந்து அருள பண்ணப் பட வில்லை -என்னும்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஸூக்தி அனுசந்திக்க தக்கது –

அரங்கத்து ஐயன் –
ஐயனே அரங்கனே -திரு மாலை – 33- என்று தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளியதையே முன் பின்னாக மாற்றி
அரங்கத்து ஐயன் – என்று அருளி செய்கிறார் அமுதனார் –
பெரியவாச்சான் பிள்ளை -நிருபாதிக பந்து – இயல்பாய் அமைந்த -பந்து என்று ஐயன் என்பதற்கு வியாக்யானம் அருளினார் –
அதனையே இங்கும் கொள்க –

கழற்கு அணியும் –
திருவடிகளுக்கு அலங்காரமாக சமர்ப்பித்த –

பரன் –
சேஷத்வத்துக்கு தமக்கு மேற்பட்டார் இல்லை என்னும்படி அதனுடைய சரம அவதியிலே -நிற்கையாகிற அதிகாரத்தைப் பெற்று
உத்கர்ஷ்டரான ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி-ஆழ்வார் உடைய –
தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் –
என்று சேஷத்வத்தின் உடைய சரம அவதியை இறே இவர் பிரார்த்தித்தது

பரன் –
எல்லோரிலும் மேம்பட்டவர் -தொண்டர் அடிப் பொடியாய் -உன் அடியார்க்கு ஆள் படுத்தாய் -என்று அந் நிலைமையை வேண்டி
சேஷத்வத்தினுடைய எல்லையிலே நிலை நிற்கையாலே சேதனரில் இவரிலும் மேற்பட்டவர் யாரும் இல்லை என்க-
சேஷித்வத்தின் எல்லை நிலையில் இருந்து தனக்கு மேற்பட்டவர் இல்லாமையாலே
எம்பெருமானை –பரன் -என்பது போலே -சேஷத்வத்தின் எல்லையில் இருந்து தனக்கு
மேம்பட்டவர் இல்லாமையாலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -பரன் -என்கிறார் –
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி–3-7-1-
வடிவழகிலும் குணங்களிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் போலவே இங்கும் –

சேஷியினுடைய பரத்வத்துக்கு சங்கு சக்கரங்கள் அடையாளங்கள்-
ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் -என்பது காண்க –
சேஷத்வத்தின் எல்லையில் இருக்கும் இவ் ஆழ்வார் உடைய பரத்வத்துக்கு அடையாளம்
துவளக் கூடை -கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திரு பள்ளி எழுச்சி -10 -என்பது காண்க –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–9-

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே–8-

அருளியவரை சேர்க்க தெளிவாக அருளினார் .-பதிவிரதை பூர்த்தி- அரங்கனுக்கே ஆட்பட்ட ஸ்ரீ ஆழ்வார் –
அர்ச்சா விசேஷத்தில் – மட்டும் பூர்ண ஆசை.
முனியே நான்முகனே – போலே சங்கை இன்றி அருளிய திருமாலை
மறந்தும் புறம் தொழா மாந்தர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு –

தாள் அன்றி
திருவடிகளை ஒழிய –இவர் கோடியான ஆழ்வார்கள் உடையவும்
ஸ்ரீ பெரிய முதலியார் தொடக்கமான பிரபன்னர் உடையவும்-திருவடிகளை ஒழிய -என்றபடி –

ஆதரியா மெய்யன்–
வேறொரு சாதனாந்தர நிஷ்டரை விரும்பாத சத்ய சீலரான –யதாத்ர்ஷ்டார்த்த வாதித்வம் -சத்ய சீலத்வம் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை – தாம்
அவனுக்கு பர்யங்கமாய் இருக்கிற தசையிலே -கண்டபடியே அவதாரத்திலே ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்த
சத்ய சீலர் ஆகையாலே –மெய்யன் -என்கிறார் –

பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளைத் தவிர மற்று எதைனையும் விரும்பாதவராம் எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வார் தொடர்களுடைய அடிப் பொடியை ஆதரித்து அதனையே தனக்கு நிரூபகமாக கொண்டார் -ஸ்ரீ எம்பெருமானார்
அடிப் பொடியின் அடியை அன்றி -ஆதரியாதவர் ஆனார் –
தாயின் கொங்கைகளில் அன்றி வெறும் எங்கும் கண் வையாத குழந்தை போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அடிகளில் அன்றி
வேறு எங்கும் கண் வையாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க
இனி பரனாக ஸ்ரீ ஆழ்வாரையே கொண்டமையின் –
அவன் தாள் அன்றி பரன் என்று பேர் கொண்ட ஸ்ரீ எம்பெருமான் தாள்களையும் ஆதரியார் -என்னுமாம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவரும் ஒரே சமஷ்டியாய் -ஒரே தரத்தினராய் இருத்தலின் – அவர்கள் திருவடிகளையும் –
அவர்கள் தந்த ஞானத்தால் உய்ந்த அவர்களுடைய சீடரான
ஸ்ரீ நாதமுனி முதலிய ஆசார்யர்கள் உடைய திருவடிகளையும் ஸ்ரீ எம்பெருமானார் ஆதரிப்பது இதற்கு முரண் படாது -என்க –

மெய்யன்
உண்மை கூறுபவர் –
காண்பது அனைத்துமுன்மை என்று கண்டவற்றை மாற்றாது உரைப்பவர் –
காண்பது அனைத்தும் சத்தியமே என்று வேதம் அறிந்தவரான இவர் கொள்கை –
எனவே காண்பதை இல்லை என்னும் பொய் உரையை சஹிக்காதவர் -என்க
பரன் தாள் அன்றி ஆதரியாதது போலே மெய்யை அன்றி ஆதரியாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- – என்பர் மேலும் –
ஆத்மாவினுடைய தேக பரிமாணத்வ ஷணிக ஜ்ஞானரூபத்வ ஜடத்வாதிகள் என்ன –
ப்ரஹ்மத்தினுடைய மாயா சபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாரித்வாதிகள் என்ன –
சுத்த அசத்யமாய் இருப்பதொன்றை மேன்மேலும் உபபாதியா நிற்கும் பாஹ்ய குத்ருஷ்டி மதத்தை ஒட்டி இந்த பூமியிலே
யதார்த்தத்தை பரிபாலித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார் –என்றபடி –

இராமானுசன்
ஸ்ரீ எம்பருமானாருடைய

சரணே கதி வேறு எனக்கே
திருவடிகளே -என்கிற அவதாரணத்தாலே -அநந்ய கதித்வம் சொல்லிற்று
எனக்கே -வேறு
ஒரு க்ரியா விசேஷத்தை-பண்ண மாட்டாத -அகிஞ்சனான அடியேனுக்கு -திருவடிகளே விசேஷித்து -உபாயமும் உபேயமும் -என்றபடி –
உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வ தேசிகை-சூநிச்சிதான்க்ரி பத்மாய யதிராஜாய மங்களம் – என்னக் கடவது இறே –

சரணே கதி வேறு எனக்கு –
சரண்-திருவடிகள்
ஏ-பிரி நிலையின் கண் வந்தது
சரண் அல்லாதது எனக்கு கதி அன்று -என்றதாயிற்று –
கதி -பேறு–கம்யதே -பெறப்படுகிறது -இதி -என்கிற காரணத்தால் கதி -பேறு என்க
வேறு கதி -தனி சிறப்புற்ற பேறு
ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடி -பேறு
ஆச்சார்யராம் ஸ்ரீ எம்பெருமானாருடைய திருவடியோ-சிறப்பு வாய்ந்த வேறு பேறு -என்று உணர்க –

திருத் துழாய் ஆழ்வாருக்கு ப்ராப்யம் அரங்கத்து ஐயன் திருவடி –
அணிவிப்பவரான ஸ்ரீ ஆழ்வாருக்கு பிராப்யம் திரு துழாய் ஆழ்வாருக்கு அடிமை புரிவதால் உகக்கும் தொண்டர்கள் அடி
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ப்ராப்யம் பரரான ஸ்ரீ ஆழ்வாருடைய திருவடி
ஸ்ரீ அமுதனார்க்கு ப்ராப்யம் ஆசார்யரான ஸ்ரீ எம்பெருமானார் திருவடி-என்றது ஆயிற்று-

ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ அமுதனார் -ஸ்ரீ ஆழ்வார் மூவரும் பதி விரதை.. முறையே –
ஸ்ரீ ஆழ்வாரையும் -ஸ்ரீ சுவாமியையும் -ஸ்ரீ அரங்கனையும் -மட்டுமே என்று இருந்தவர்கள்-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: