ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –8-வருத்தும் புற இருள் மாற்ற-இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை —அவதாரிகை —
ஆழ்வான் திருவடிகளில் சம்பந்த பலத்தை அனுசந்தித்து -இது உண்டான பின்பு
நமக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று சமாஹிதராய் நின்றார் கீழ் –
இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் —
பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை திரு உள்ளத்திலே வைத்து கொண்டு இருக்கும்
பெருமையை உடைய எம்பெருமானார் எங்களுக்கு நாதன் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை -அவதாரிகை –
இவ்வளவும் ஸ்தோத்ர உத்போகாதம் –இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் –
லோகத்தாருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்திப்பித்து –அவர்களுக்கு ஹேய உபாதேய விவேகத்தை உண்டாக்கி –
உபகரிப்பதாக ஞான தீபத்தை எடுத்து பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய பிரபந்தத்தை –
தம்முடைய-திரு உள்ளத்திலே ஸூ பிரதிஷ்டிதமாம்படி வைத்த பெருமை உடையரான எம்பெருமானார்-நமக்கு நாதர் என்கிறார் –

ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் அருளிய உரை -அமுத விருந்து —அவதாரிகை –
எம்பெருமானார் பெருமைகளில் ஆழ்வார்கள் சம்பந்தமே சிறந்து விளங்குவது ஆதலின்
அதனைப் பேச முற்பட்டு பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை தம்
சிந்தையிலே அனுசந்தித்து கொண்டே இருக்கும் பெருமையை கூறி –
அத்தகைய எம்பெருமானார் எங்களுக்கு இறைவர் -என்கிறார் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

பத உரை –
வருத்தும் -வருத்தத்தை உண்டு பண்ணும்
புற இருள் -புறத்தே -வெளியே -உள்ள பொருள்களை பற்றிய அறியாமையை
மாற்ற -போக்க
எம் பொய்கை பிரான் -எங்களுடைய பொய்கை ஆழ்வார் என்னும் உபகாரகர்
மறையின் குருத்தின் -வேதாந்தனுடைய
பொருளையும் -அர்த்தத்தையும்
செம் தமிழ் தன்னையும் -செவ்விய தமிழ் சொல்லையும்
கூடி -இணைத்து
ஒன்ற -ஒன்றாய் சேரும்படியாக
திரித்து -திரியாக்கி
அன்று -திருக் கோவலூர் இடை கழியிலே நெருக்குண்ட வேளையில்
எரித்த -எறியும் படி செய்த
திரு விளக்கை -வையம் தகளியா என்று தொடங்கும் திவ்ய ப்ரபந்தம் ஆகிய திரு விளக்கை
இருத்தும் -வைத்து கொண்டு இருக்கும்
பரமன் -பெருமை வாய்ந்தவரான
இராமானுசன் -எம்பெருமானார்
எம் இறைவன் -எங்களுக்கு தலைவர் ஆவார் –

———-

பீஷ்ச்மாத்வாத பவதே பீஷோதேதி சூர்யா –இத்யாதிப் படியே -பகவத் ஆக்ஜாஅனுசாரிகளாய் இருக்கிற-வஸ்துக்களிலே
ஸ்வதந்திர புத்தியைப் பண்ணுவித்து -அவ் விஷயமான பாதகத்வ பிரதிபத்தியாலே-
சேதனரை வருந்த பண்ணுமதாய்-ப்ரத்யக்கான ஆத்மாவும் -தத் அந்தராத்மாவான ஈஸ்வரனும் –போல் அன்றிக்கே –
சஷூர் விஷயமாக கொண்டு -புறம்பே தோற்றுவிக்கிற விபூதியை விஷயீ கரித்து-இருக்கும் -அஞ்ஞான அந்தகாரத்தை போக்கும்படியாக –
பிரபன்ன குல உத்தேச்யராய் பரம உபகாரகரான பொய்கையார் –
வேதாந்தினுடைய அர்த்தத்தையும் –நடை விளங்கு தமிழான சொல்லையும் –கூட்டித் தன்னிலே சேரும் சம்பந்திப்பித்து
திரு விடை கழியிலே -சர்வேஸ்வரன் வந்து –நெருக்கின போது –
வையம் தகளியா -முதல் திரு வந்தாதி – 1-என்று தொடங்கி பிரகாசிப்பித்த-திரு விளக்கை தம்முடைய திரு உள்ளத்தில்
வைத்து கொண்டு இருக்கும் நிரதிசய பிரபாவரான-எம்பெருமானார் எங்களுக்கு நாதர் –

பொற் கால் இட்ட ஆழ்வார் அன்றோ பொய்கை ஆழ்வார் –கரும்பு -தேசிகன் -சாறு தானே மூன்று அந்தாதிகள் –
வருத்தும் இருள் -பிராவண்யம் விஷயாந்தரங்களில் விளைத்து பகவத் திரோதானம் -தமஸ்-அல் வழக்கு –
தேவதாந்த்ர -பிரயோஜனாந்தர -அல்பம் அஸ்திரம் -பகவத் அனுபவம் அநந்தம் ஸ்திரம் –

வருத்தும் புற இருள் மாற்ற –
வருத்தும் -என்கிறது இருளுக்கு விசேஷணம்-வருத்தத்தை பண்ணக்-கடவதான இருள் என்றபடி –
பகவத் ஸ்வரூப திரோதானம் -ஆயிரம் சூரியன் ஒளி பரம பதம் -அத்தை இருளாக்கும் திரு வாழி –
அத்தை இருளாக்கும் அவன் தேஜஸ் -அத்தையே மறைக்க வல்ல புற விருள் –
வருத்தும் புற இருள் –
பராக் விஷயம் காட்டும் உள்ளே உள்ளவனை மறைக்கும் –
பாஹ்ய விஷய ப்ராவண்யத்துக்கு உடலான அஞ்ஞானம் –
அது தான் லோகத்தில் வருத்தங்களைப் பண்ணக் கடவதாய் இருக்குமே
நிஷித்த விஷயங்களில்-சந்தனானவன் அவனுக்கு அவற்றை பெறும் போதும் -பெற்ற பின்பும் –
ஐஹிக ஆமுஷ்மிகங்களிலும் சில துக்கங்கள் உண்டு இறே –
ஒரு வேச்யா சந்தனானவன் –அவளுக்கு ஒரு வியாதி ப்ராப்தமாய்
பிராண சம்சயம் வந்தவாறே -இவள் பிழைத்தால் ஆகில் நான் அக்னி பிரவேசம் பண்ணுகிறேன்
என்று சூத்திர தேவதை காலில் விழுந்து -அப்படியே செய்தான் என்று லோக பிரசித்தம் இறே –
சில ஐஹிக பலங்களைக் குறித்து சூத்திர தேவதைகளை ஆராதிக்கப் போனால் –
ஆட்டை அறுத்து தா என்றும் -உன் தலையை அறுத்து தா என்றும் -செடிலாட்டம் பண்ணச் சொல்லியும் –
அதி கோரமான பூஜைகளை அபேஷிக்க -அப்படியே அவனும் பண்ணிக் கண்டு போவான் இறே –
ராவணன் தன் தலைகளை அறுத்து ருத்ரனை ஆராதித்தான் என்றும் பிரசித்தம் இறே –
ராஜாவுக்கு ஒருவன் புத்ரனைக் கொடுத்து -அந்த புத்ரனை விநாசம் பண்ணி -யாகம் பண்ண வேண்டும் என்று சொல்ல –
அந்த ராஜாவும் அப்படியே பண்ணி அபதானம் பிரசித்தம் இறே –
மோத்தூளன ஜடாதாரண மலலேபன சூராகும்பச்ஸ்தாபன நக்னத்வோர்த்த்வ பாஹூத்வாதி ரூபமான வருத்தத்தை த்ருஷ்டத்திலும்
நரக அனுபவ ரூபமான வருத்தத்தை ஆமுஷ்மிககத்திலும் -பண்ணக்-கடவதாய் இறே -பாஹ்ய விஷய
ப்ராவண்யத்துக்கு உடலான அஞ்ஞானம் இருப்பது –புற இருள் –
பிரத்யஷமான ஆத்மாவையும் -தத் அந்தர்யாமியான ஈஸ்வரனையும் போல் அன்றிக்கே –
அவ் இருவரிலும் காட்டிலும் -பாஹ்யராய் -பிரகிருதி வித்தராய் -அபரிசுத்தராய் -சர்வேஸ்வரனாலே-பிராப்தமான ஐஸ்வர்யத்தை பெற்றும் –
ரஜஸ் தமோத்ரேகத்தாலே-அத்தை மறந்தும் –அஹங்கார க்ரச்தராய் போருகிற சாமான்ய தேவதைகளை சூத்திர பலங்களுக்காக ஆராதித்தவாறே –
சாபேஷரானவர்களை யாசிக்கப் பண்ணும் அஞ்ஞான அந்தகாரம் என்னவுமாம் –

மாற்ற -அத்தை சாவசனமாக போக்குகைக்காக –

வருத்தும் புற இருள் மாற்ற –
இருள் எனபது இருட்டு போலப் பொருள்களை உள்ளவாறு அறிய ஒட்டாத அஞ்ஞானத்தை –
மேல் பாசுரத்தில் –இதயத்து இருள் -என்று இதயத்தில் உள்ள உள் பொருளைப் பற்றி பேசுவதால்
இங்கு வெளியே உள்ள கட்புலனாகும் பொருளைப் பற்றி இருளைப் –புற இருள் -என்று கொள்ளல் வேண்டும் –
பொய்கையார் எரித்த திரு விளக்குக்குப் போவது இருட்டு அன்று –
புறத்தே உள்ள பொருளைப் பற்றிய இருள் என்று தான் கொள்ளல் வேண்டும் –
அறியாமை-உள்ளே இருக்கும் ஆத்மாவினிடத்தில் உள்ளதே அன்றி -புறத்தே இருத்தற்கு உரியது ஆகாது –
இங்கனம் இதயத்து இருள் -என்னும் இடத்திலும் அறியாமை இதயத்தில் இருப்பது அன்று –
இதயத்தில் உள்ள ஜீவ பரமாத்மாக்களைப் பற்றிய அறியாமையே அது என்று கொள்ள வேண்டும் –
கொள்ளவே கண்ணுக்கு புலனாகும் அசேதனப் பொருளைப் பற்றிய அறியாமை -புற இருள் -என்றும் –
நெஞ்சு என்னும் உள் கண்ணுக்கு புலனாகும் ஜீவான்மையையும் -அதனுள் உள்ள பரமான்மாவையும்
பற்றிய அறியாமை அக இருள் -அதாவது –இதயத்து இருள்-என்றும் கூறப் பட்டது ஆகிறது –
கட்புலனாகும் கதிரவன் முதலிய பொருள்களை இறைவன் ஆணைக்கு உள்பட்டு இயங்கும்
அவையாய் இருப்பினும் -தாமாகவே இயங்கும் சுதந்திரப் பொருள்களாக கொள்வதே புற இருள் -என்க-

காற்று இறைவனுக்கு பயந்து வீசுகிறது -சூர்யன் பயந்தே உதிக்கிறான் -என்று வேதம் ஓதுகிறது –
அறியாமைக்கு உள் பட்டவர்கள் இறைவன் ஆணை இன்றிச் சுதந்திரமாக காற்று முதலிய வற்றால்
கேடு நேருவதாக கருதி வருந்துகின்றனர் –
அங்கனம் வருந்துவதற்குப் புற இருள் காரணமாய் இருத்தல்-பற்றி –வருத்தும் புற இருள் -என்கிறார் –
பொய்கை ஆழ்வார் பூமியை நெய் உடைய விளக்கின் அகலாகவும் -கடலை நெய்யாகவும் –
கதிரவனை விளக்காகவும் -தாம் கண்டு -அவற்றை இறைவனால் படைக்கப் பட்டு அவன்
ஆணைக்கு உள்பட்ட பொருள்களாக காட்டி -புற இருளை போக்கடித்து விடுகிறார் –
தகளி போலே ஒருவனால் ஆக்கப் பட்டு இருத்தல் வேண்டும் -என்று வையமும் தன்னைப் படைத்தானைக் காட்டுகிறது –

கடல் நீர் பெருக்கு வந்து சேரினும் -சேராவிடினும் -தந் நீர்மை குன்றாது இருத்தலானும் -கரை கடவாது கட்டுப் பட்டு இருத்தலானும் –
ஒருவனால் ஆக்கப் பட்டு அவன் ஆணைக்கு உள்பட்டு இருப்பது தெரிகிறது –
கதிரோன் காலம் கடவாது உதித்தளால் ஒருவன் கட்டளையை கடவாமல் இருப்பது தெரிகிறது –
விளக்கு -தன்னையும் காட்டி -பிற பொருளையும் காட்டுவது போலே
இந்த விளக்கு -தன்னைப் படைத்து ஆணைக்கு உள்படுத்திய இறைவனையும் காட்டுகிறது –
காட்டவே படைக்கப் பட்டவைகள் படைத்தவனுக்கு உரியவை -தாமாகவே இயங்கும் திறன் அற்றவை –
ஆகவே -இறைவன் ஆணை இன்றி எந்தப் பொருளும் நமக்கு கேடு பயப்பன அல்ல -என்னும் தெளிவு நமக்கு பிறக்கிறது –
பிறக்கவே எந்தப் பொருளினாலும் நேரும் கேடு பற்றி வருந்துவதற்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது –
இதனை சொல்லுகிறார் -வருத்தும் புற இருள் மாற்ற -என்று-

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —முதல் திருவந்தாதி- -91-

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே––ஸ்ரீ திருவாய் மொழி–10-5-10-

காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்–-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்—சூர்ணிகை 1..

அறிவில்லா மனுஷர் -திருமாலை பாசுரம்
அஞ்ஞான தமோ உக்தரான சேதனர்-தமஸ்-இருளை போக்கும் பொருட்டு –
பிரகிருதி ஆத்ம விவேகம் போன்றவை இல்லாமல் –அநாதி அவித்யா -அஞ்ஞான அந்தகாரத்தாலே அபிபுத்தராய் -சம்சாரத்தில் உழன்று

உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி —
உணர்வு என்னும் விளக்கு ஏற்றி -என்றும்
சுடர் விளக்கு ஏற்றி என்றும் பிரித்து –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி வலைப் படுத்தேன் –மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து -மூன்றாம் திரு அந்தாதி -94-
பாசுரப்படி உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் -இரண்டாம் திரு அந்தாதி -1-
பாசுரப்படி– ஞான சுடர் விளக்கு ஏற்றி-

ஞானமாகிய விளக்கு தன்னையும் பர பிரகாசம் -எண்ணெய் திரி -இவற்றால் உண்டான அழுக்கு இல்லாமல்
ஞானம் ஆகிற கொழுந்து விட்டு எரியும் விளக்கு -என்றவாறு-
தினிங்கின தேஜஸ் -ஞானம் ஆகிற உத்கல தீப பிரகாசம்
ஸ்வ பர பிரகாசத்வம் -விளக்குக்கு -ஞானம் நம்மையும் பிறரையும் காட்டும் -ஸ்வ பாவ சாம்யம்

——————————

பிறங்கு இருள் நீங்கி –
தொல்லை நான் மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட-
ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே –பெரிய திருமொழி-5-7-3-
பாசுரப்படி-பிறங்கு இருள் நிறம் கெட – என்றும்-

துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின்னிவுலகினில் பேர் இருள் நீங்க
அன்று அன்னம் தானானே அச்சோ வச்சோ அருமறை தந்தானே அச்சோ வச்சோ –பெரியாழ்வார் — 1-8-10-
பாசுரப்படி-பேர் இருள் நீங்க-என்றும்
சொல்லுகிற படியே மிகுந்த அஞ்ஞான அந்த காரம் போய்-

——————————

மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு –

மாலிருஞ்சோலை என்னும் மலையையுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடல் அமுதை மேலிரும் கற்பகத்தை
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -பெரிய ஆழ்வார்-4–3–11-
பாசுரப்படி -மேல் இருந்த விளக்கு -என்றும் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
இமையோர் பரவும் இடம் —-நாங்கூர் மணி மாடாக கோயில் வணங்கு என் மனனே -பெரிய திருமொழி -3-8-1-
பாசுரப்படி -நந்தா விளக்கு -என்றும் –

மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவனே –திருவாய் -4-7-10-
பாசுரப்படி -வேத விளக்கினை -என்றும் –

வேதாந்தங்களில்
சர்வ ஸ்மாத் பரனாக பிரகாசியா நிற்ப்பானுமாய்
நித்தியமாய்
ஸ்வயம் பிரகாசமான
ஞானத்தை ஸ்வரூபமாக உடையவனுமாய்
வேதை க சமதி கம்யனுமான தன்னை
என் தக்க ஞானக் கண்களால் கண்டு
என்கிற படியே ஞான சஷுசாலே தர்சித்து-

எம் பொய்கைப் பிரான்
பொய்கையில் அவதாரம் செய்தமை பற்றி பொய்கை ஆழ்வார் என்று பேர் பெற்றார் –
தம் ஒருவர் பொருட்டு அன்றிக்கே -தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் பொருட்டும்-வந்து அவதரித்தார் என்று காணும் இவருடைய அபிநிவேசம்
எம் பொய்கை –
என்னுடைய-கோடியான பிரபன்ன ஜனங்களுக்காக –காஞ்சி நகரத்திலே -பொய்கை என்னும் பேரை உடைத்தான
புண்டரீக சரஸ்சிலே – அவதரித்து -அது தன்னையே நிரூபகமான திரு நாமமாக உடையரான
அஞ்ஞான அந்தகார நிவர்த்தகமாய் -ப்ரதீபம் போலே தத்வார்த்த பிரகாசமாய் இருக்கிற
திவ்ய பிரபந்தத்தை நிர்மித்து உபகரித்த உபகாரகர் –
செம் தமிழில் -வேதாந்த பொருளை -தந்து உபகரித்தலின்-பிரான்-எனப்பட்டார் –
பிரான்-உபகாரகன்
அவ் உபகாரத்தின் பயனைத் துய்த்தலின் -பிரபன்ன குலத்தவர் அனைவரையும்
தம்மோடு சேர்த்து கொண்டு –எம் -பொய்கைப் பிரான் என்று நன்றி தோற்றக் கூறுகிறார்-

மறையின் குருத்தின் பொருளையும்
வேதாந்த அர்த்தங்களையும்-
மறை-வேதம் -அதன் குருத்து -உபநிஷதம்
மரத்தில் குருத்து போலே -வேத மரத்தில் உண்டான -குருத்து முக்கியப் பகுதியான வேதாந்தம் -என்க –
வேதத்தின் பிரிவுகள் உலகில் -சாகை -கிளைகளாகப் பேசப் படுதலின் வேதம் மரமாக உருவகம்-செய்யப் படுகிறது –
மகாதோ வேத வ்ருஷச்ய மூல பூதஸ் சநாதன-ஸ்கந்த பூதா ருகா த்யாஸ் தே சாகாபூதாஸ் ததாபரே -கீதை -15 1- – என்று
கிருத யுக வேதம்-பிரிவு படாத ஒரே வேதம் ஆதலின் பெரிய மரமாகவும் -கிருத யுக தர்மத்தை கூறும் பகுதி மூலமாகவும் –
அதாவது -வேராகவும்-ருக் முதலானவை அடித் தண்டாகவும் –
மற்றவை கிளைகளாகவும் -கூறப் படுவதும் இங்கு நினைவுறத் தக்கது –

செந்தமிழ் தன்னையும் –
இவருடைய பிரபந்தத்துக்கு செம்மையாவது -தத்வ ஹித புருஷார்த்தங்களை-அடைவே பிரதிபாதிக்கும் அளவில்
ஆதி மத்திய அவசானங்களிலே ஏக ரூபமாய் இருக்கை –
தமிழ் தன்னையும் -திராவிட ரூபமான திவ்ய ப்ரபந்தம் தன்னையும்-கூட்டி -வேதாந்த அர்த்தங்களையும் –
நடை விளங்கு தமிழான சொல்லையும் தன்னிலே சேரும்படி சந்தர்ப்பமாக்கி-
செம்மையான தமிழ் –
தமிழுக்கு செம்மையாவது -எளிதில் பொருள் விளங்கும் படி யாய் இருத்தல் –
மறையின் குருத்தின் பொருளையும் -செம் தமிழ் தன்னையும் -ஒன்றாய் இணைத்து –திரியாக்கி எடுத்ததாகக் கூறுவதின் கருத்து –
வடமொழி வேதத்தின் பொருள் வேறு மொழியினால் பேசப்படுகிறது என்று தோற்றாமல்-
முதல் திருவந்தாதி -என்னும் செம்தமிழ் வடிவமாகவே வேதம் அமைந்து இருக்கிறது என்று தோன்றுகிறது என்னவுமாம் –

ஒன்றத் திரித்து
அவ் இரண்டையும் ஒன்றுக்கு ஓன்று சேரும்படி ஒப்புவித்து-
பூதத் தாழ்வார் தம் விளக்குக்கு திரியாக சிந்தையை உருவகம் செய்தது போலே
பொய்கை ஆழ்வார் திரியாக எதையும் உருவகம் செய்ய வில்லை –
அமுதனார் மறைக் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாய் திரியாகத் திரித்து –
அவ் விளக்குக்குத் திரியை உபயோகப் படுத்தினதாக நயம் படக் கூறுகிறார் –

அன்று –
திருக் கோவலூரிலே-ஒரு ராத்திரி அந்தகாரத்திலே முதல் ஆழ்வார்கள் மூவரும் வந்து –
அதி சங்குசிதமான ஒரு திரு இடை கழியிலே-ஒருவரை ஒருவர் அறியாமல் நிற்க –
இவர்களை சம்ச்லேஷிக்கைக்காக -ஆயனார் வந்து மூவர் நடுவிலும் புகுந்து-அவர்களை நெருக்கின சமயத்திலே

எரித்த திரு விளக்கை
வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக -என்று
சதுர்தச புவநாத்மகமான லோகம் எல்லாம் தகளியாகப் பண்ணியும் –
ஜல தத்தவத்தை எல்லாம் ஒருபடியாக கொண்ட சப்த சமுத்ரங்களை நெய்யாகப் பண்ணியும்
தீஷன கிரணனான சூர்யனை விளக்காக சேர்த்தும்
லோகத்தில் இருந்த பதார்த்தங்கள் என்றும் பிறி கதிர் படாதபடி எல்லாவற்றையும் பிரகாசிக்கும் படி
இட்டு அருளின திவ்ய பிரபந்த ரூப தீபத்தை என்றபடி –

தம் திரு உள்ளத்தே இருத்தும் –
அத் தீபத்தை சிநேக நிர்பரமான தம்முடைய திரு உள்ளத்திலே-ஸ்தாவர பிரதிஷ்டையாம்படி நிறுத்த வல்ல

பரமன் –
என்று சொல்லப்படும் படி பெருமை உடையரான இராமானுசன் -எம் பெருமானார்
எம் இறைவனே
எம் நாதனே -ஸ்வாமி என்றபடி-

தம் உள்ளத்தே இருத்தும் பரன் –
கண்ணன் மனோவிருத்திக்கு விஷயமாய் இருந்து கொண்டு தன்னைப் பற்றிய ஞானம் ஆகிற ஒளிரும் விளக்கினால்
அஞ்ஞானம் என்னும் கர்மத்தால் விளைந்த இருளைப்-போக்கடிப்பதாக கீதையில் – 10-11 கூறுகிறான் –
அஹம் அஞ்ஞானம் தம நாசயாம் யாத்மா பாவச்த்த-ஞாநதீபேன- பாஸ்வதா -என்பது கீதை
எம்பெருமானார் பொய்கை ஆழ்வார் ஏற்றின திவ்ய ப்ரபந்தம் என்னும் பிரகாசிக்கும் விளக்கை
அணையாதபடி தன் அகத்தே வைத்து -மற்றவர்க்கும் அந்நிலையை உண்டாக்கி இருளைக் கடிகிறார்-

தன் திரு உள்ளத்தே -என்னாது -தம் -என்று பன்மையில் கூறினமையால்
தம்மை சேர்ந்தவர்களுடைய திரு உள்ளத்திலும் இருத்தினமை புலனாகிறது –
ஆகவே இருளைப் போக்கும் குருவாதலின்-எம்பெருமானாரை-பரமன் -என்கிறார் –
குருரேவ பரம் பிரம -குருவே பரம் பொருள் -என்றபடி -எம்பெருமானாரே பரமனாயினார் -என்க –
எம் இறைவன் –
தம்மைப் போன்ற சரம பர்வ நிஷ்டர்களையும் சேர்த்து -எங்களுக்கு இறையவன் -என்கிறார் –

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: