ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –6- இயலும் பொருளும் இசையத் தொடுத்து இத்யாதி ..-

ஸ்ரீ பெரிய ஜீயர் உரை-அவதாரிகை-
பத்தி ஏய்ந்த வியல்விதென்று என் பாவினக் குற்றம் காண கில்லார் -என்றார் கீழ்.
அந்த பக்தி தான் தமக்கு உண்டோ என்று பார்த்த இடத்தில் -அதுவும் விஷய அனுகுணமாக-தமக்கு இல்லாமையாலே-
ஸ்தோத்ர யுக்தரான தம்மை கர்ஹிக்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் அருளிய உரை அவதாரிகை –
கீழில் பாட்டிலே மந்த மதிகள் -பழி சொன்னார்கள் ஆகில் -அதுவே தமக்கு பூஷணம் என்றார் –
இப்பாட்டிலே -என்னைப் பார்த்து-கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்துதரான அஞ்ஞர் சொல்லும் பழிக்கு ஒரு படி-சமாதானம் பண்ணிக் கொண்டு போன தாம் –
என்னைப்பார்த்தால் -சர்வ லோக பிரசித்தரான எம்பெருமானார் உடைய வைபவத்துக்கு தகுதியாய்-இருந்துள்ள
பக்தி பிரேமங்களில் ஒன்றாகிலும் என் பக்கலிலே இல்லை -ஆனாலும் -அவர் தம்மை-ஏத்துவதாக உத்சாஹியா நின்றேன் –
எத்தனை சாஹசம் பண்ணத் தொடங்கினேன் என்று – கர்ஹிக்கிறார் –

அமுது உரை அவதாரிகை-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்
அன்பர் பக்தி பாட்டு என்று என் பாவினக் குற்றம் காணகில்லார் –ஆதலின் புகழ் முழுதும் உள் பொதியத் துதிப்பேன் என்று ஊக்கம் மிக்கவராய்
முற்பட்டுத் துதிக்கப் பட-வேண்டிய எம்பெருமானாருடைய ரூப குணாதிகளிலே நாட்டம் செலுத்தினார் –
அவை எம்பெருமானார்-அருளால் அளவிடற்கு அரியனவாய் விரிந்து கிடந்தமை தெரிந்தது இவர்க்கு -பீடு வாய்ந்த இவற்றை பற்றிப் பாடுவதற்கு
ஏற்ற பக்தி தம்மிடம் உண்டோ என்று பார்த்தார் –
பாட வேண்டிய விஷயமோ மிகப்பெரியது .பாடுவதற்கு வேண்டிய பக்தியோ இல்லை என்று சொல்லலாம்படி மிக சிறியது .
அங்கனம் இதனை ஆராய்ந்து என் நெஞ்சம் இதனில் ஈடுபட்டது என்று தம்மை இகழ்ந்து-துதிப்பதினின்றும் மீளுகிறார் –

இனிய கவிஞர்கள் கூட நேரே நின்று பேச இயலாது –அன்பினால் மயங்கி வாழ்த்த தொடங்கி-விடுகின்றனரே –
அத்தகைய எம்பெருமானார் புகழையோ
பக்தி இல்லாத நான் பேசத் துணிவது ?-இது சாஹசச் செயல் அன்றோ என்பது கருத்து .
இதனில் துணிந்து இறங்கிய நான்- செய்யத் துணியாத செயல் உண்டோ -எனபது குறிப்பு எச்சம் –

சாகசச் செயல் என்று கை வாங்குகிறார்–மீண்டும் கலக்கம் ஆசை வளர வளர –தன்னை பார்க்கில்-விலகி- அவரை பார்க்கில் உந்த-
இது யாவதாத்மா பாவி -ஞானம் வளர விலகி பக்தி வளர பாட-ஆழ்வார்கள் போலே -பலம் தேற மீண்டும் வருவார்.

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே – 6 –

பத உரை –
ஈன் கவிகள் -இனிய கவி வாணர்கள்
இயலும் -சொல்லும்
பொருளும் -அச் சொல்லின் பொருளும்
இசைய -பொருந்தும்படி
தொடுத்து -வரிசைப் படுத்தி
அன்பால்-அன்பினாலே
மயல் கொண்டு -மயங்கி
வாழ்த்தும் -பல்லாண்டு பாடும்
இராமானுசனை -எம்பெருமானாரை
பயிலும் -பேசி செறிந்து இருக்கும்
கவிகளில் -பாடல்களில்
பக்தி இல்லாத -பக்தி இல்லாமல் இருக்கிற
என் பாவி நெஞ்சால்-எனது கொடிய நெஞ்சால்
அவன் தன் -அவ் எம்பெருமானாரை சேர்ந்த
பெரும் கீர்த்தி -பெரும் புகளை
மொழிந்திட -பேசி விடுவதாக
மதி யின்மையினால்-அறிவு இல்லாதபடியால்
முயல்கின்றனன் -முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்–

சப்தமும் – அர்த்தமும் பொருந்தத் தொடுத்த் விலஷணரான கவிகள்-பிரேமத்தாலே அறிவு இழந்து ஏத்தா நின்று உள்ள எம்பெருமானாரை –

இயலும் -சப்தமும்–பொருளும் -அர்த்தமும் -சமுச்சயத்தாலே ராகமும் -இசைய -பொருந்தும்படி
தொடுத்து -பிரதிபாதகத்துக்கும் -பிரதி பாத்யத்துக்கும் -ஒரு குறை இல்லாதபடி சந்தர்ப்பித்து –
ஈன் -அவதரிப்பித்து -பிரபந்த நிர்மாணம் பண்ணுகிற கவிகள் -விலஷணமான கவிகள் –அன்பால்-பிரேம பிரகர்ஷத்தாலே –
மயல் கொண்டு -அறிவு அழிந்து -ஞான விபாக கார்யமான-அஞ்ஞானம் தலை எடுத்து
வாழ்த்தும் –
வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார்
தாழ் இணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –என்றும் –
அறு சமய செடி யதனை அடி அறுத்தான் வாழியே -என்று தொடங்கி-அதில் மிகு நல் பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே -என்றும்
சீராரும் எதிராசார் திருவடிகள் வாழி -என்று தொடங்கி-இனி திருப்போடு எழில் ஞான முத்தரை வாழியே -என்றும் –
வாழியரோ தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர் முக்கோல் பிடித்த முனி -என்றும்
இப்படி அவர்களாலே மங்களா சாசனம் பண்ணப்படும் –இராமானுசனை –எம்பெருமானாரை

இயலும் பொருளும் இசையத் தொடுத்து –
அந்தந்த இடத்தில் கூறப்படும் பொருளுக்கு ஏற்ப சொற்கள்
இன்புற அமையும் ஈன் கவிகள்-தம் கவிதைகளிலே –இன் கவி பாடும் பரம கவிகளான-முதல் ஆழ்வார்கள் கவிதைகளிலே-இதனை நாம் காணலாம்
பெருகு மத வேழம் -என்று தொடங்கும் பாசுரத்தை நாம் இதற்க்கு-உதாரணமாக கொள்ளலாம்-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை–இரண்டாம் திருவந்தாதி–75-

ஊடல் கொண்ட பிடிக்கு -அது திரும்பும் பக்கம் எல்லாம் தான் போய் முன் நின்று-பெருகு மத வேழம் இள மூங்கிலை அருகில் இருந்த தேனில்
கலந்து ஊடல் தீர்க்க கொடுப்பதற்காக-கெஞ்சி கை நீட்டி கொண்டே இருப்பதாக கூறும் பொருளுக்கு ஏற்ப அங்கே சொற்கள் அமைந்து
இருக்கும் அழகு அறிந்து இன்புறத் தக்கது –
ஊடலின் வன்மை தோன்ற பிடிக்கு முன் நின்று நீட்டும்-என்னும் சொல் தொடரில் வல் எழுத்து மிக்கும்
கெஞ்சிக் கொடுக்கும் பாவம் துலங்க இரு கண் இள-மூங்கில் வாங்கிப் பெருகு மத வேழம் அருகு இருந்த தேன் கலந்து –என்னும் சொல் தொடரில்
மெல் எழுத்து மிக்கும் அமைந்துள்ள அழகு கண்டு இன்புறுக-
குற்றம் இன்றி அழகு வாய்ந்த சொற்களும் பொருள்களும் இயைந்து நிற்றலே காவியத்தின் இலக்கணமாம் –

சமத்க்ருதி ஜனக சப்தார்த்த காவ்யம் என்பர் -வட நூலார் -மனத்துக்கு இன்பம் பயக்கும் சொல் பொருள் காவியம் -என்றபடி ..
தொடுத்து என்னும் சொல் –
வல்லவன் மாலையில் பூத் தொடுப்பது போலச் சொற்கள் யையும் படி-கோப்பதை கூறுகிறது ..
நறிய நல் மலர் நாடி -என்று நம் ஆழ்வாரும் சொற்களை மலராக கூறினமை காண்க –
பாடிக் கொடுத்தாள் நல் பா மாலை சூடிகே கொடுத்தாள்-நாச்சியாரும்
கலியன் ஒலி மாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –
இப்பாசுரத்திலே சொல் என்னும் பொருளில் இயல் என்னும் சொல்லை அமுதனார் தொடுத்து இருப்பதைக் காண்க .
இச் சொல் அன்றி வேறு எந்தச் சொல்லை வழங்கினும் இங்கு இசையாமை காண்க .

ஈன் கவிகள் அன்பால் மையல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் —
கேட்கும் பொழுதே சுவை ததும்ப பாடும் அவர்கள் ஈன் கவிகள்…இன் கவிகள் என்பதன் நீட்டல் விகாரம் .-இனி
ஈனுகின்ற கவிகள் என்று வினைத் தொகை-ஆகலுமாம் ..-ஈனுதல்-உண்டு பண்ணுதல் -அதாவது அழிவற்ற காவிய உலகினைப் படைத்தல் .
ஈன் கவிகள் ஆழ்வான் போன்றவர்கள்..அவர்கள் எம்பெருமானாரை பாடுகின்றனர் ..
வள்ளல்களை ஏனைய கவிகள் செல்வம் பெறுவதற்காக பாடுவதைப் போலே அவர்கள் பாடவில்லை-அன்பினாலே பாடுகின்றனர் –
ஏனையோர்களை செல்வம் பாடுவிக்கிறது ..அன்பு பாடுவிக்க திருமாலை பாடினர் ஆழ்வார்கள் என்னும் கவிகள்–
அவ் அன்பினால் அவர்கள் அதிகம் கலங்கி விட வில்லை.ஆகையால் அவாவில் அந்தாதிகள் ஆயிரம் பாட முடிந்தது .
உலகம் படைத்தான் கவியாய அவர்கள் உலகம் படைத்தவன் புகழ் மேல-மருள் இன்றி தெருள் கொள்ள சொன்னது ஆயிரம்.
ஈன் கவிகளாகிய ஆழ்வான் போல்வார்களோ -அன்பு பாடுவிக்க -எம்பெருமானாரை பாடினர் –
அவ் அன்பு மேன்மேல் பெருகா நின்று ஆழ்வார்களைப் போல் பாடி முடிக்க இயலாமல் செய்து விடுகிறது .
மயல் கொண்ட அவர்கள் ஆசார்யனாய் தம்மை காத்து அருளும் எம்பெருமானாரை தாம்-காப்பதாக கருதத் தொடங்கி விடுகின்றனர்
தொடங்கவே -குழந்தைகளை பெற்றோர்-ஆசீர்வதிப்பது போலே வாழ்த்த தலைப் படுகின்றனர் -அன்பு படுத்தும் பாடு இது —
தொடங்கின புகழ் பாட்டை வாழ்த்துப் பாட்டாக தலைக் கட்ட செய்கிறது .அது.

எம்பெருமானாரை ஆர்த்தி உடன் துதிக்க புகுந்த மணவாள மா முனிகளை
இவ் அன்பு-தொடக்கத்திலேயே வாழ்த்திக் கொண்டு போய் நிறுத்தும் விசித்திரம் இங்கு நினைவிற்கு வருகிறது –
வாழி எதிராசன் வாழி எதிராசன்-வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாள் இணையில்-தாழ்த்துவார் விண்ணோர் தலை -ஆர்த்தி பிரபந்தம்
இங்கே அன்பு பெருகிப் பரம பக்தியால் மயங்கி வாழ்த்துச் சுழியில் அகப்பட்டு-
அடியார் அடியார் அடியார் தம் வாழ்த்துவரை ஆழ்ந்து ஒருவாறு வெளிப்பட்டு தெளிந்து திரும்பி விடும் அதிசயம் கவனிக்க தக்கது –
பெரியோரை சிறியோர் வாழ்த்தும் போது மயங்கித் தானே யாக வேண்டும் .ஆகையால் -மயல் கொண்டு வாழ்த்தும் -என்கிறார்
மயல் கொண்டவர்கள் கவிகள் -கட்குப் புலன் ஆகாதவையும் அறிவுக் கண் கொண்டு-காண வல்லார் அல்லீரோ கவிகள் ?
அத்தகைய அறிஞர்க்கு மயக்கம் எங்கனம் பொருந்தும் ?
இதற்க்கு விடை அளிக்கிறது –அன்பால்-என்பது-
அன்பினால் வந்த மயக்கம் -வினைப் பயனால் வந்தது அன்று என்பது குறிப்பு –
அறியாத பிள்ளைகளும் அன்பினால் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே –
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-உன் அழகாலே என்னை உருக்குகின்ற நீ கண் வளர்ந்தருளக் கண்டேன்;

பயிலும் கவிகளில் –
இராமானசனைப் பயிலும் கவிகளில் என்று கூட்டுக –கவி இங்கே கவிதை -பாட்டு
ஈன் கவிகள் என்னும் இடத்தில் கவிகள் என்றது கவி புனைபவர் என்றபடி –
இன் கவி பாடும் பரம கவிகள் -என்னும் இடத்தில் இரு பொருளினும் கவி என்னும் சொல்-வழங்கப் பட்டுள்ளமை காண்க –

பெரிய ஆழ்வார் ஜடாயு போல்வார் பொங்கும் பரிவால் பல்லாண்டு ஸ்ரீமான் அருளியது போல்
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான்–கண்டதும் சேவித்து பல்லாண்டு என்றாரே
ஜடாயு-ஆயுஷ்மான்-முதலில்..பிராணன் போய் கொண்டு இருக்கும் பொழுது .
இயம் சீத மம சுதா தர்ம சாரித வர்தந்தாம் -சொல்ல வந்தவர் நடுவில் -பத்ரந்தே–ஜனகன் –. பிரேமத்தின் கார்யம் -தட்டு மாறி கிடக்கும்
காயம் பட்ட உடம்பை காட்ட வந்த ரிஷிகளும் சக்கரவர்த்தி திருமகனை கண்டதும் –மங்களானாம் – உண்ண வந்து வாயை மறந்தார்களே
அன்பால் -பிரேமத்தால்.. மயல் கொண்டு -அறிவு அழிந்து-அறிவு முதிர முதிர பக்தி வரும்– பக்தி மிக அறிவு அழியும்.
ரஷகனை ரஷிக்க பாரிப்பார்கள் – ஞான முதிர்ந்த நிலை-மயல் கொண்டு-ஞானம் கனிந்து தானே பக்தி..
அல்லாதாருக்கு சத்தா சம்ருத்திகள் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே-இவர்க்கு மங்களா சாசனத்தாலே -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சுக்தி 257- –
பெரும் கீர்த்தி மொழிய வர மாட்டார்கள்….அறு சமய செடி அறுத்து வைத்தான் வாழியே–
இயல் சாத்து பல்லாண்டு ..பாடிக் கொண்டு இருக்கிறோம் நாமும்-

வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை
வாழி திரு மல்லி வள நாடு -வாழி
சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை
வழி பறித்த வாளன் வலி–ஸ்ரீ வகுளா பரண பட்டர் அருளிச் செய்த தனியன்

திரு நாடு வாழி திருப் பொருநல் வாழி
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி திரு நாட்டுச்
சிட்டத்தமர் வாழி சடகோபன்
இட்டத் தமிழ்ப் பா விசை–ஸ்ரீ பராங்குச தாசர் அருளிச் செய்த தனியன்

வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை
வாழியரோ தென் குறையல் மா நகரம் -வாழியரோ
தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
முக்கோல் பிடித்த முனி–ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் அருளிச் செய்த தனியன்-

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த தனியன்

தஞ்சமாக பற்றுகையும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் பேற்றுக்கு துவரிக்கையும் போல..
சப்தம் கேட்கும் பொழுதே ஆனந்தம் பூர்வாசார்யர் வியாக்யான சொல் -இசைய தொடுத்தார்கள்..கோர்த்து இல்லை
தொடுத்து-ரத்னம் கோர்த்தல் புஷ்பம் தொடுத்தல் போலே -கவிகள் புனைந்து –
ஸ்ரீ வசன பூஷணம் -கோர்தாரே-பூர்வர்கள் அருளிய வசனங்கன்களைக் கொண்டே -உடைக்க முடியாது
ஆச்சார்ய ஹிருதயமும் அப்படியே ஸ்ரீ சூக்திகளை கொண்டே புனையப் பட்ட பிரபந்தம்
பாசுரப்படி ஸ்ரீ ராமாயணமும் அப்படியே அருளி செயல் ஸ்ரீ சூக்திகள் கொண்டு புனைய பட்டது

இயலும் பொருளும் இசைய தொடுத்து –
சொல்லும் பொருளும் பொருந்தும் படி வரிசைப் படுத்தி
வாக் அர்த்தம் போல பார்வதியும் சிவனும் -உள்ளார்கள்– என்றானே – காளிதாசன்
இசையும் -சங்கீதமும் அமைத்து என்றுமாம்

————-

பிரதிபாதகத்வேன செறிந்து இருப்பதான கவிகளில் பக்தி இன்றிக்கே இருக்கிற-என்னுடைய பாபிஷ்டமான மனச்சாலே-அவருடைய நிரவதிக கீர்த்தியை
பேசுவதாக அறிவு கேட்டாலே உத்சாஹியா நின்றேன் .இப்படி துச்சக பிரவ்ருதியிலே-இழிந்த மூர்கனான நான் இனி எத்தை செய்யேன் என்று கருத்து –
பாவி நெஞ்சால் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திட -என்றது இப்படி இருந்துள்ள-மனசோடு கூடிக் கொண்டு அவருடைய கீர்த்தியை பேசுவதாக என்கை-
பயிலுதல் -செறிதல் / முயல்தல் -உத்சாஹித்தல்-

சப்த ஸ்வரம் –இயல் பொருள் கானம் -/மாஸாஹாச பறவை
பெரும் கீர்த்தி -அளவு படுத்தி பாட வந்த மதியின்மை -வாழ்த்தாமல்-

மதி இன்மையால் –
அவருடைய கல்யாண குண வைபவத்தை அறியாமல்
பயிலும் –அடைவு கெடச் சொல்லும்
கவிகள்-கவிளிலே -பாட்டுக்களில்
அன்றிக்கே –பயிலும் கவிகள்-
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களையே-
சர்வ காலமும் அனுபவியா நிற்கும் ஆழ்வான் ஆண்டான் எம்பார் தொடக்கமானார்-திறத்திலே என்னவுமாம்-
மங்களாசாசனம் பண்ணாமல் கீர்த்திமை பாட வந்த மதியின்மை யும் உண்டே
பக்தி இல்லாத –
சம்யஜ்ஞானம் இல்லாவிடிலும் மூட பக்தி தானே என் மனசிலே உண்டோ என்னில் —அந்த பக்தியும் என் மனசில் இல்லை –
பாவி நெஞ்சால்
ஞான பக்தியாதிகள் இன்றிக்கே ஒழிந்தாலும்-மனச்சு பரி சுத்தமானால்-க்ரமேன இவற்றை உண்டாக்கிக் கொள்ளலாம் இறே –
அந்த சுத்தி இல்லாமையாலே என் மனசு-அத்யந்தம் பாபிஷ்டமாய்த்து இருப்பது -இப்படிப் பட்ட மனசிலே

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன்
மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலார் இன் சொல் இல்லை –

மதியின்மையினால்-
மதியின்மையினால் முயல்கின்றனன்-என்று இயையும்–
ஈன் கவிகளே மயங்கும் போது-நான் இதனில் இறங்குவது அறியாமையினாலே தானே என்கிறார் .
இனி -பெரும் கீர்த்தி மொழிந்திட என்று மேலே சொல்லுவதால் –
அளவற்ற கீர்த்தியை என் பேச்சினால் அளவு படுத்த முயல்வது அறியாமையினால் அன்றோ ? என்னலுமாம்.
இனி வாழ்த்தும் இரமானுசனைக் கீர்த்திமை பாட முயல்வது அறியாமையாலே -என்னலுமாம்-
இனி பக்தி உள்ள நெஞ்சினால் அன்றிப் பக்தி இல்லாத பாவி நெஞ்சால் முயல்வது அறியாமையாலே-என்றது ஆகலுமாம் –
மதியின்மை வெட்கம் இன்மைக்கும் உப லஷணம் –
மஹ்யம் ந மோஸ்து கவயே நிரபத்ரபாய -என்று-வெட்கம் கேட்ட கவியான எனக்கு நமஸ்காரம் -என்று ஆளவந்தார் ஸ்ரீ சூக்தியை நினைவு கூர்க –
பக்தி இல்லாத என் பாவி நெஞ்சால்-
பக்தி இருந்தால் பெரும் கீர்த்தியை மொழிந்திட நெஞ்சு இடம் தந்து இராது-அது இன்மையால் முயல வேண்டியது ஆயிற்று
நெஞ்சில் பக்தி இல்லாமைக்கு ஹேது அது பாவியாய் இருத்தல்
ஆல் என்பது ஓடு என்னும் பொருளில் வந்ததாக கொண்டு நெஞ்சோடு என்னலுமாம் ..

ஈன் கவிகள் அன்பினால் வாழ்த்துவர்
பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய யானோ -பெரும் கீர்த்தியை மொழிந்திட முயல்கின்றேன் –
அன்பினாலான மயல் ஈன் கவிகள் உடையது –
இயல்பான அறியாமை என்னது –
வாழ்த்தல் அன்பினால் ஆகிய மயலால் வந்தது
மொழிந்திட முயலுதல் பக்தி இல்லாத நெஞ்சுடன் கூடிய என் அறியாமையால் வந்தது -என்றபடி –

அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே
அவன்தன் –
அடையார் கமலத்தலர் மகள் கேள்வன்
கை யாழி என்னும் -படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சாரங்க வில்லும்-புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனி யாயின-இந் நிலத்தே -என்று தம்மாலேயும் –
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த-இதத்தாய் இராமானுசன் -என்று மற்றும் உள்ள
ஆசார்யர்களாலும் கொண்டாடப்பட்டு பிரசித்தரான வருடைய –
பெரும் கீர்த்தியும் –
அவருடைய கீர்த்தியும் அவருக்கு உறுதியாக காணும் இருப்பது
ஏய்ந்த பெரும் கீர்த்தி –எண் திசையும் ஏத்தும் எதிராசன் -என்கிற படியே-மகா தனமான கீர்த்தியை
மொழிந்திடவே –
ஞான பக்திகள் இல்லாத என் மனசிலே -வாசா கைங்கர்யமாக -க்ரந்தீகரித்து
சமர்ப்பிக்க கடவேன் என்று -முயல்கின்றனன் -உத்சாஹியா நின்றேன்
எத்தனை சாஹசம் பண்ணா நின்றேன் என்று ஸ்வ நைச்யத்தை அனுசந்திக்கிறார் ஆய்த்து –

அவன் தன் பெரும் கீர்த்தி –
அவன் கீர்த்தி என்னாது அவன் தன் கீர்த்தி -என்றது -எம்பெருமானார் ஒருவர்க்கே பெரும் கீர்த்தி-சொந்தமானது என்றபடி-
பெரும் கீர்த்தி –
பேசி அளவிட முடியாத கீர்த்தி –திக்குற்ற கீர்த்தி என்பர் பின்னும் இவரே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி -என்றதும் காண்க –
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான ராமானுஜன் கீர்த்தி அன்றோ –
இந்த பெரும் கீர்த்தியினால் அன்றோ ஏன் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் இராமானுசன் -77-
பஞ்ச ஆயுதங்களே வந்து அவதரித்து
ஆதி சேஷன் தானே
விஷ்வக்சேனரும் இவரே
பார்த்த சாரதியே தானே
இதனால் தான் அவன் தன் பெரும் கீர்த்தி –
பெரும் கீர்த்தி- பெரிய கோவில் பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார்
பெரிய தளிகை பெரிய திருநாள் எல்லாம் ஸ்ரீ ரெங்கத்தில்..அது போல் பெரும் கீர்த்தி –
தன்னுடைய அனைத்தும் எம்பெருமானாருக்கு அருளி -உடையவர் -பட்டமும் சாத்தி-பள்ளி கொண்டு அருளி இருக்கின்றானே
எண் திசையும் அறிய இயம்புகேன்-என்கிறார் ஆழ்வார் பெருமையை மதுர கவி ஆழ்வார்
சுவாமியை பார்த்துக் கொண்டே அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமே -அனுபவித்து பேச முடியாது

முன்னர்ப் பேரியல் நெஞ்சு-என்று கொண்டாடப் பட்ட நெஞ்சு -இப் பொழுது
பக்தி இல்லாத என் பாவி நெஞ்சு -என்று இகழ்ந்து உரைக்கப் படுகிறது
பூரியர் தொடர்பை நீக்கிச்-சீரிய பேறு உடையார் அடிக் கீழ் சேர்த்தது பேரியல்வாகத் தோன்றி முன்னர் அங்கனம் கூறினார் –
எம்பெருமானாரோடு அன்றி அன்பர் அளவும் செலுத்தும் பக்தியும் எம்பெருமானார் பெருமையை-பார்க்கும் பொழுது ஒரு சரக்காக தோற்றாமையாலே
பக்தி இல்லாத பாவி நெஞ்சு -என்கிறார் இங்கு –
அஞ்சிறைப்புள் என்றும் வெஞ்சிறைப்புள் என்றும் என்று அருளிச் செய்வது போலே-
வயிறிலாள் என்னும் இடத்தில் போலே பக்தி இல்லாமை சொற்ப பக்தி என்னும் கருத்தில் கூறப்பட்டது –
தகுதி அற்ற தான் மொழிந்திட முற்பட்டதன் மூலம் -பக்தி இல்லாத நெஞ்சாலும் பேசும் திறத்தது-எம்பெருமானார் பெருமை -என்னும் இழுக்கை
தேடித் தருதலின் நெஞ்சைப் பாவி என்கிறார் –இது அமுதனார் நைச்ய அநுசந்தானம் செய்து கொண்ட படி –
மதி இன்மையால்- பெரும் கீர்த்தியை முயல் கின்றேன்-குறைத்திடவே-
மதி இன்மை –வாசிக கைங்கர்யமாக பேசினேன்
மதி இல்லை பெரும் கீர்த்தி மொழிந்திட பக்தி இன்மை பாவி- சேர்த்து சேர்த்து பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும்

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–திரு மாலை – 31 பாசுரத்தில்-உன்னுடன் சேர மாட்டேன் என்கிறார்.

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –-35-அயோக்யன் என்று அகலாதபடி தன நீர்மையைக் காட்டி சேர விட்டுக் கொண்டான்

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36–இதில் –தம்முடைய அயோக்யதை கழிந்தவாறே
ப்ராப்யத்தில் த்வரை மிக்கு
யோக்யரைக் கொண்டு போய் அடிமை கொள்ளும் தேசத்து ஏறக் கொடு போக வேண்டி இருந்தார்
அது செய்யக் கண்டிலர்
அதுக்கடி இவரை அகலாமே சேர விடுக்கைக்கு தான் பட்ட பாடு அறியுமவன் ஆகையாலே
ஆமம் அற்றுப் பசி மிக வேணும் என்று பேசாது இருந்தான் –
விஷயங்கள் நடமாடும் தேசத்தில் இருந்து கிலேசப்பட்டே போம் இத்தனை ஆகாதே -என்று
பிராப்யத்தில் த்வரையாலும்
விரோதியில் அருசியாலுமாக
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருள அரிதாம்படியாகவும்
கேட்டார் எல்லாரும் நீராம்படியாகவும் பெரும் மிடறு செய்து கூப்பிடுகிறார் –

வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1—நித்திய ஸூரிகட்கு -அனுபாவ்யனானவனை –
அனுபவிக்கப்படும் பொருளானவனை,மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், –
தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;
தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;-‘யாங்ஙனம்?’ எனின்,
சண்டாளன் ‘ஒத்து -வேதம் போகாது’ என்று தான் சொல்லப் பெறுவனோ?
அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்?
ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!
‘நான் தப்பச் செய்தேன்- என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று,
கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்.

மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்;
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்;
‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும்
சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில்,
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே;
சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

அர்ஜுனன் .காண்டீபம் கீழ போட–கீதாசார்யன் 700 ஸ்லோகங்கள் பாட வேண்டி இருந்தது அங்கு
இங்கு ஆழ்வான் கீர்த்தியால் அடுத்த பாசுரம் தொடங்கி வருத்தம் நீங்கப் பட்டார்-
உபாய ஸூந்யதையை வெளியிட்டு அருளி -ஆழ்வான் அபிமானத்தாலே இந்த திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றதை அருளிச் செய்கிறார் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: