ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ ஸூந்தர காண்டம் – —

ஸ்ரீ சீதா ராம ஜெயம்

கடவுள் வாழ்த்து

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் – ‘கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!’–
ஷட்பாவ விகாரம் -தேவாதி பிறப்பு ஒழிக்க -வேதாந்த ஸித்தமான ஸ்ரீ ராமபிரானை சரண் அடைவோம் –

————–

மாவொடு மரனும், மண்ணும், வல்லியும், மற்றும் எல்லாம்,
போவது புரியும் வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின; கீழும் மேலும் தூர்த்தன; சுருதி அன்ன
சேவகன் சீறாமுன்னம் சேதுவும் இயன்ற மாதோ! –கடல் தாவு படலம்–19-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

ஏறு சேவகனார் -எதிரிகள் மேலிட்ட வீரப்பாட்டுக்குக் குறை சொல்ல முடியாத -வீரர்கள் கொண்டாடிய வீரம் அன்றோ –

———-

ஊறு கடித்து உறுவன ஊறு இல் அறம் உன்னாத்
தேறலில் அரக்கர் புரி தீமை அவை தீர
ஏறும் வகை யாண்டைய இராம வென எல்லாம்
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான்–கடல் தாவு படலம்-88-

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தநமே தக்க உபாயம் –

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தேயுமே
இம்மையே ராம என்று இரண்டு எழுத்தினால் –பாசுரமும் ஒப்பு நோக்குக –

———-

அருந்தவன் சுரபியே ஆதி வானமா
விரிந்த பேருதயமே மடி வெண் திங்களா
வருந்தலின் முலைக் கதிர் வழங்கு தாரையாச்
சொரிந்த பால் ஒத்து நிலவின் தோற்றமே –ஊர் தேடு படலம் –56-

ஆகாயமே அரும் தவ முனிவரான வசிஷ்ட முனியின் காம தேனு –
சந்திரன் உதிக்கும் இடம் பால் உள்ள மடி-
சாந்தன் பால் சுரக்கும் முலை
நிலவின் கிரணங்களே பாலின் தாரை –
இதே வருணனை

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே ––திரு விருத்தம்-73-

மாலைக் காலத்துக்கும் பிறைச் சந்திரனுக்கும் வருந்தும் பராங்குச நாயகியைத் தனியே விட்டு இருத்தல்
காக்கும் இயல்பினனான எம்பெருமானின் தன்மையின் பெருமையோ -என்றவாறு –

—————–

எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடைத் தங்கின போன்ற மீன் எலாம்–

திருவடி மேல் தேவர்கள் சொரியும் கற்பக மலர்கள் தரையில் விழாமல் இராவணன் இடத்தில்
அச்சம் காரணமாகவே வானத்திலே விளங்கா நிற்கின்றன -நக்ஷத்திரங்கள் –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61–

திரிவிக்ரமனாக வளர்ந்த காலத்தில் சிவந்த திருவடி மேலே தேவர்கள் கூடி மலர்களைத் தெளித்தால் போலே
வானத்தில் நக்ஷத்திரங்கள் விளங்குகின்றன –
உலகப் பொருள்களை எம்பெருமான் விஷயமாகவே காண்பர் ஆழ்வார்கள் –
நாம் அதில் இருந்து மீள இயலாமல் அழுந்திக் கிடப்பது போலே
எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டு ஆழ்ந்து மூழ்கிக் கிடப்பார்கள் என்று
ஸ்ரீ சிறியாத்தான் ஸ்ரீ -நம்பிள்ளைக்கு பணிக்கும் –

—————————————–

பெரிய நாள் ஓளி கொள் நாநாவித மணிப் புத்திப் பத்தி
சொரியுமா நிழல்கள் ஆங்குச் சுற்றலால் காலின் தோன்றல்
கரியனாய் வெளியனாகிச் செய்யனாய்க் காட்டும் காண்டற்கு
அரியனாய் எளியனாய் தன் அகத்துறை அழகனே போல் –ஊர் தேடு படலம்

ரத்தினங்கள் பதிக்கப் பெற்ற சுவர் வரிசைகள் வெளியிடும் ஒளிகள் திருவடி மேல் வீச
வெண்மை நிறம் செந்நிறம் அடைந்தாள் போலே
இராமனும் பரதனும் கருநிறம் -சத்ருக்கனன் வெண்ணிறம் -இளைய பெருமாள் செந்நிறம் உடையவர்களாயும்–இருப்பார்கள்
கிருத யுகத்தில் -சத்வ குணம் -வெண்மை -திரேதா யுகம் -ரஜோ குணம் -செந்நிறம் –
துவாபர யுகம் -ரஜோ தமோ குண மிஸ்ரம் -சிவப்பும் நீலமும் இன்றி பசுமை நிறம் -கலியுகம் -தமோ குணம் மிக்கு கரு நிறம் —
என்பதால் திருவடி நிறத்துக்கு திருமாலை உவமை சொன்னார் –
தம்மையே சிந்திப்பார்க்கு தம்மையே ஓக்க அருள் புரிபவன் ஆகையால் ஸ்ரீ ராம சிந்தனையே உடைய திருவடிக்கு
உட் கிடந்த வண்ணமே புறம்பேயும் காட்டி அருளினான் -ஆகவே திருமாலை உவமையாகக் கூறினார் –

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே ––ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–44-

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–திரு நெடும் தாண்டகம்–-3-

—————

பத்துடை அடியவர்களுக்கு எளியவன் பிரர்களுக்கு அரிய வித்தகன் –ஸ்ரீ திருவாய் –1-3-1-

என்றேனும் கட் கண்ணால் காணாத அவ்வுருவை
நெஞ்சு எனும் உட் கண்ணால் காணும் உணர்ந்து –ஸ்ரீ பெரிய திருவந்தாதி -28-

காண்டற்கு அரியனாய் எளியனாய்த் தன் அகத்துறை அழகன் போல் –காட்சிப் படலம் -234-

—————

புக்கு நீங்கினன் இராகவன் கழல் எனப் புகழோன் –எங்கும் பறந்து சென்று மீண்ட திருவடி -இராகவன் கழல் -தானே

‘பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்து, பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது’ என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.–ஊர் தேடு படலம்—134

விபீஷணஸ்து தர்மாத்மா-ந து ராக்ஷஸ சேஷ்டித–என்றதையே தர்மம் அன்னான் -என்கிறார் –

————-

கரிய நாழிகைப் பாதியில் காலனும் வெருவி ஓடும் அரக்கர் தம் வெம் பதி —

இரவு பாதி ராத்ரியை -கரிய நாழிகைப் பாதியில் என்றது

கரிய நாழிகை ஊழியில் பெரியன கலியுமாறு அறியேனே –ஸ்ரீ பெரிய திரு மொழி -8-5-6-

—————-

எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய், தன்
உள் உறையும் ஒருவனைப்போல், எம் மருங்கும் உலாவுவான்;
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்,
கள் உறையும் மலர்ச் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 232–

எங்கும் உளன் கண்ணன் -என்றும்

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-என்றும்
உள்ள பாசுரங்களை தழுவி அருளிச் செய்கிறார்

—————-

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம்
கரிய காண்டலும், கண்ணின் நீர் கடல் புகக் கலுழ்வாள்;
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டாலன்ன பிணியாள்.–காட்சிப் படலம்—7–

உருவுடை வண்ணங்கள் காணில் உலகு அளந்தான் என்று துள்ளும் -4-4-8-
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -4-4-9-
மைப்படி மேனியும் –திரு விருத்தம் -94-

————-

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.–காட்சிப் படலம்–23–

வாழி நண்பினை–நட்புக்குப் பல்லாண்டு பாடுகிறார் —

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே ––பெரிய திருமொழி-5-8-1-

அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.’–குகப் படலம்–42

‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; –குகப் படலம்–43

——————–

ஏக வாளி அவ்விந்திரன் காதல் மேல் போக ஏவி அது கண் பொடித்த நாள்
காக முற்றும் ஓர் கண்ணில் வாக்கிய ஏக வென்றியைத் தலை மேல் கொள்வாள் –காட்சி படலம் —

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் -3-10-6-

——————–

கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்

அணங்கு அனாளை கண்ண நீர்க் கடலில் கண்டேன்

மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்;
ஆவதே; ஐயம் இல்; அரவணைத் துயிலின் நீங்கிய
தேவனே அவன்; இவள் கமலச்செல்வியே.-காட்சிப் படலம்– 62-

அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே அவன்–ஷீராப்தி தானே அவதார கந்தம்
வேரி மாறாத பூ மேல் இருப்பவளாகிய திருமகளின் அவதாரமே இவள் —

———

‘”கேழ் இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்,
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள,
ஊழியின் இறுதி வந்துறும்” என்று உன்னினேன்;
வாழிய உலகு, இனி வரம்பு இல் நாள் எலாம்! 67-

ஆழியான் ஆழி அமரர்க்கு அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் -10-4-8-

————–

பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று, ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றில, அவன் கமலக் கண்களே! 69–

இராம பிரானின் திருக்கண்கள் இவளது தவக் கோலத்தை காண பாக்யம் பெறவில்லையே -என்றவாறு

மையார் கருங்கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

ஸ்ரீ யப்பதியை திவ்ய ஆயுத திவ்ய ஆபரண விசிஷ்டமாக சேவிக்கப் பெற்ற
பராங்குச நாயகியுடைய திருக்கண்களின் அத்விதீயம் –

கண்ணைக் கொண்டே கண்ணைக் காண இருக்குமா போலே –
காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே –

கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் –

—————–

அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்-இலங்கை

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –பெரிய திரு -1-7-1-

——————–

கரு மேக நெடும் கடல் காரணையான்
தருமே தனியேன் எனது ஆருயிர் தான்
உருமேருமிழ் வெஞ்சிலை நாண் ஒலி தான்
வருமே உரையாய் வழியே விதியே –உருக்காட்டு -3 —

கரு ஞாயிறு போல்பவர்

கண் தாமரை போல் கரு ஞாயிறு என

திருமேனிக்கு இருள் உவமை -நாண் ஒலி இவை ஆழ்வார் பாசுரங்களில் –

தானோர் இருள் அன்ன மா மேனி –பெரிய திருவந்தாதி -26-

இருள் விரி நீலக் கரு ஞாயிறு –திரு விருத்தம் -17-

பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும் சாரங்க வில் நாண் ஒலியும்
தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –நாச் -9-9-

————————-

என நினைத்து, எய்த நோக்கி, ‘இரங்கும் என் உள்ளம்; கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்;
நினைவுடைச் சொற்கள் கண்ணீர் நிலம் புக, புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்’ என்னா, ‘வீர! நீ யாவன்?’ என்றாள்.–உருக் காட்டு படலம்- 28

புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றி யான் அடியேன் தன்னை வேறு கொண்டு இருந்து கூறி,
“தென் திசைச் சேறி” என்றான்; அவன் அருள் சிதைவது ஆமோ? –உருக் காட்டு படலம்–34–

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

திக்குகள் தோறும் முதலிகளைப் போக விடா நிற்கச் செய்தே திருவடி கையில் திருவாழி மோதிரம்
கொடுத்து விட்டாப் போலே காணும் -அவற்றிலும் இவ்வண்டினங்கள் இவள் பக்கலிலே தாழ நிற்பவனே வாயிற்று –
வேறு கொண்டு இவற்றை இரக்க வேண்டுவான் என் என்னில்
பதஸ்தம் ஆகையால் -அந்த மற்றப் பஷிகளை விட கால்கள் அதிகமானதால்
வேறு கொண்டு இவற்றைத் தூது போக இரக்கிறாள்–ஈடு –

—————-

‘முத்தம் கொல்லோ? முழு நிலவின் முறியின் திறனோ? முறை அமுதச்
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்கொல்? வேறே சிலகொல்? மெய்ம் முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்? –உருக் காட்டு படலம்–53–

என்று நின்றே திக ழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக் கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங் கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

————–

நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்
பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ? –உருக் காட்டு படலம்–57–

திரண்டு எழு தழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3-6 9- –

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பம் புதுவைக் கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 6-11 – –

————-

‘”மீட்டும் உரை வேண்டுவன இல்லை” என, மெய்ப் பேர்
தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது” என, நேர்ந்தனன்’ எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள்.–உருக் காட்டு படலம்- 63–

வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள்
வீங்கினள்; மெலிந்தனள், குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே? –உருக் காட்டு படலம்– 66

மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர்
நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்
நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். –உருக் காட்டு படலம்–67-

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே––ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -3-10-8-

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-10-9-

க்ருஹீத்வா ப்ரேஷமானா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம்ப்ராப்தா
கீஜான முதிதா ஸ்வத் –ஸூந்தர -என்கிறபடியே
அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –
பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் -அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் –
அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு
அவ்வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து
ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று
ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் -ஆல்-ஆச்சர்யம் —

க்ருஹீத்வா ப்ரேஷமானா சா–ராவணன் மாயையால் வந்ததோ என்னும் பயத்தால் வந்ததோ என்னும் -முற்படக் கண்
வைக்க மாட்டாதே இருந்தாள்-
அத்தலையாலே வந்தது என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படியாய் இருந்தாள்
சா ப்ரேஷமானா பஸ்ய தேவி -என்று கொண்டு முன்பு பார்வைக்கு க்ருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள்
தானே கண் மாற வைகைக்கு கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தாள் –
பர்த்து கர விபூஷணம் -அணி மிகு தாமரைக் கை இறே–ஆபரணத்துக்கு ஆபரணம் காணும் –
இத்தோடு சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள் –
அந்நினைவு அவர் அக்கரையில் ஆளாகவும் இடையிலே கடல் கிடக்கிறதாதாகவும் அறிந்திலள் –
ஒரே படுக்கையிலே கூட இருந்ததாகவே நினைத்தாள்-ஒரு சூது சதுரங்களிலே தோற்றுத் தன் கையிலே இருந்ததாக நினைத்தாள்
பர்த்தாராம் இவ–நநீத சமாதியாலே இவள் உணர்ந்தாள் என்படக் கடவள் என்று வாலமீகி இவ என்கிறான்
ஜானகி -சோக ஹர்ஷங்களுக்கு விளையாத குடிப்பிறப்பு
அப்படியேயாயிற்று இவனும் இவற்றைப் பெற்ற பின்பு
சம்சாரி முக்தன் ஆனால் அவனுக்குடைய லீலா உபகரணமும் போக உபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது –நம்பிள்ளை ஈடு –

–——————-

‘பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி’ என்றாள். 72–

சிரஞ்சீவியாக பிராட்டி ஆசீர்வாதம் –
பாழி-இடமுடைமை விசாலம் என்றும் வலிமை என்றும் –

பாழி யம் தோளுடைப் பற்ப நாபன் –

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

——————-

தேண்டி நேர் கண்டேன்; வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே போக, அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை; அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய்; ஆண்டு, அங்கு, எவ் உயிர் விடும் இராமன்? — 77–

பொங்கும் பிரிவால் பல்லாண்டு வாளி என்கிறார் திருவடி –
அங்கு எவ்வுயிர் விடும் இராமன் -இன்றியாமை –

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே-6-1-10-

மாஸாதூர்த்தவம் ந ஜீவிஷ்யே
ந ஜீவேயம் க்ஷணம் அபி –

———————

தன்னை ஒன்றும் உணர்ந்திலாதான் -86-

தனக்கும் தன் தன்மை அறிவரியான்-8-4-6-

ஸ்வத சர்வஞ்ஞனான தன்னாலும் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது

—————-

‘சுருங்குஇடை! உன் ஒரு துணைவன் தூய தாள்
ஒருங்குடை உணர்வினோர், ஓய்வு இல் மாயையின்
பெருங் கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்,
கருங் கடல் கடந்தனென், காலினால்’ என்றான். 97–

திருவடி பற்றிய மஹிமையினாலே கடலைக் கடந்தேன் -திருவடி —

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடி சேராதார் -திருக்குறள் –

தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14-

—————

அண்ணற் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான், ‘அருந்ததியே!
வண்ணக் கடலினிடைக் கிடந்த மணலின் பலரால்; வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன். 114

நினைப்பான் புகில் கடல் எக்கலின் பலர்
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழித்தவர் -4-1-4–

கடலின் மணலை உவமை –

—————–

பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரை ஆகிலதேஎனின்,
இற்பிறப்பும், ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்? –சூடாமணிப் படலம்–17–

‘விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன். –திருவடி தொழுத படலம்—29–

—————-

‘அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். –சூடாமணிப் படலம்—18–

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந
மாம் நயேத்யதி காகுத்ஸதா தத் தஸ்ய சத்ருசம் பவேத் –ஸூ ந்தர -39 –40-

வேறும் உண்டு உரை; கேள் அது; மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால், இடை
ஆறும் ஐம் பொறி நின்னையும், “ஆண்” எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ? 19-

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே -6-1-10-

ஏறு சேவகன் -சத்ரு கோஷ்டியிலும் ஏறும்படியான ஆண் பிள்ளைத்தனம் -சத்ரோ பிராக்யாத வீரஸ்ய

—————-

தீர்விலேன் இனி இது ஒரு பகலும் சிலை
வீரன் மேனியை மானும் இவ்வீங்கு நீர்
நாரா நாண் மலர்ப் பொய்கையை நண்ணுவேன்
சோருமாருயிர் காக்கும் துணியினால் -25-

பொய்கை உவமை ஒப்புமை –

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர–
அக்ஷம்–சரீரம் என்றும் இந்திரியம் நிகண்டு -இந்திரிய காயயோ —

கமலம் போலும் இந்திரியம் -கண் -அக்கமலத்தின் இலை போலும் திருமேனி –

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

—————

அரசு வீற்று இருந்து ஆளவும் ஆய் மணி
புரசை யானையின் வீதியில் போகவும்
விரத கோலங்கள் காண விதியிலேன்
உரை செய் தென் பல ஊழ் வினை உன்னுவேன்–

எந்தை, யாய், முதலிய கிளைஞர் யார்க்கும், என்
வந்தனை விளம்புதி; கவியின் மன்னனை,
“சுந்தரத் தோளனைத் தொடர்ந்து, காத்துப் போய்,
அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு” என்பாய். 38-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–நாச்சியார் திரு மொழி – –6-10-

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ––நாச்சியார் திரு மொழி – 9-1-

—————-

எந்தை நின் சரணம் சரண் என்ற இதனால்
முந்து நின் குறையும் பொறை தந்தன முந்துன்
சந்தம் ஓன்று கொடித் திரள் கண்கள் தமக்கே
வந்த ஓர் நல் மணி வந்து நிற்க என வைத்தும் வைப்பாய் –சூடாமணிப் படலம்

ஏக வாளி யவ் விந்திரன் காதல் மேல்
போக ஏவி அது கண் பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர் கண்ணில் ஆக்கிய
ஏக வென்றியைத் தன் தலை மேல் கொள்வாள் –காட்சி படலம் –28-

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

————–

ஐயனும், அமைந்து நின்றான், ஆழியான் அளவின் நாமம்
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக,
மொய் மயிர்ச் சேனை பொங்க, முரண் அயில் உகிர்வாள் மொய்த்த
கைகளே கைகள் ஆக, கடைக் கூழை திரு வால் ஆக.–சம்புமாலி வத படலம்-21-

திரு மண் காப்புக்கு நெய்யாகவும் தீப ஜ்வாலை ஸ்ரீ சூரணமாகவும் உருவகப்படுத்தி
அருளிச் செய்கிறார் கம்பநாட்டாழ்வார்-

அண்ணல் அவ்வரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணினவர் எனும் பொருள் நவையறத் தெரிப்பான்
மண்ணினும் விசும்பிலும் மருங்கிலும் வலித்தார்
கண்ணிலும் மனத்தினும் தனித்தனி கலந்தான் –36-சாம்யா மோக்ஷம் பொருளில் அருளிச் செய்கிறார்

—————-

வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்

ஈண்டுப் பிறந்தான் தன் பொற் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் —

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாயா துஷ்க்ருதாம் -தர்ம சமஸ்தான நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8–

———

‘அஞ்சலை, அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே,
வெஞ் சின வாலி; மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே;
அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன்; எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல்’ என்றான். 79-வாலி மடிந்த செய்தியை அனுமன் தெரிவித்தல்

நொய்ய பாசம் புறம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா
ஐயன், விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல், அவிஞ்சை எனும்
பொய்யை மெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான். 117–அகமகிழ்வுடன் அனுமன் அவர்க்கு அடங்கி, உடன் போதல்-

————–

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான். 22-

பிராட்டி உள்ள திசையை நோக்கி தொழுதனன் திருவடி –
பரதனும் திசை நோக்கித் தொழுகின்றனன் -சித்ரகூடத்தில் இராமனைக் காண வரும் பொழுது
இன்றும் மஞ்சள் குழி உத்சவத்தில் திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் தென் திசை தொழும் வைபவத்தை சேவிக்கலாம்

————–

சீதையைக் கண்டு வந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறுதல்

‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்: 25

‘உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் –
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்-
என் பெருந் தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி’ என்பான்: 26′

பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என, பொறையில் நின்றாள்,
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு என; தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என, நினக்கு நேர்ந்தாள்;
என் அலது இல்லை என்னை ஒப்பு என, எனக்கும் ஈந்தாள். 27

‘உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய
தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான்
வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து,
என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது, எம் மோய்? 28

‘விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன். 29

சூடாமணி பெற்ற இராமனது நிலை

பை பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
மெய்யுற வெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான்;
ஐயனுக்கு, அங்கி முன்னர், அங்கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே – கை புக்க மணியின் காட்சி! 47

பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்
துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;
மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்
தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்? 48

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: