ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ அயோத்யா காண்டம் – —

ஸ்ரீ சீதா ராம ஜெயம்-

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.-

சர்வமும் அவனது சரீரமே -வான் -மூல ப்ரக்ருதி –
வரம்பு இகந்து மா பூதத்தின் வைப்பொங்கும்–வரம்பு கடந்த பஞ்ச பூதங்களின் காரியமாய் பரவியுள்ள
பவ்திக பதார்த்தங்கள் தோறும் -உலகு எங்கும் உடலும் உயிரும் போலவும் உயிரும் உணர்வும் போலவும்
உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவன் –

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7-

சுரர் அறிவு அருநிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே–-ஸ்ரீ திருவாய் மொழி-1-1-8-

வான்நின்று இழிந்து–பால காண்ட நிகழ்ச்சி-ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த அவதாரம்
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,–கைகேயி சொல்லால் தொன்னகரம் துறந்த அயோத்யா காண்ட செய்தி
கானும்–ஆரண்ய காண்ட நிகழ்ச்சி
கடலும் கடந்து–ஸூந்தர காண்ட நிகழ்ச்சி
இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.-இராவண வதப் பிரயோஜனம்
யாவரும் வந்து அடி வணங்க திரு அயோத்தியில் திறல் விளங்கு மாருதியுடன் வீற்று இருந்ததை அருளிச் செய்கிறார்

—————–

புக்க பின் நிருபரும் பொருவில் சுற்றமும்
பக்கமும் பெயர்க எனப் பரிவின் நீக்கினான்
ஓக்க நின்று உலகு அளித்து யோகம் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான் —மந்திரப் படலம்–5-

சக்ரவர்த்தி தனியன் ஆனமை-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் 5-4-11-
ஆலினிலை யதன் மேல் பைய உயோகு துயில் கொண்ட பரம் பரனே –பெரியாழ்வார் திருமொழி 1-5-1-

———–

புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்தி யாவையும் காத்து அவை பின் துறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத்திறலோன் -39-

மூவர் காரியமும் திருத்தும் முதல்வன் –பெரியாழ்வார் திருமொழி–4-4-1-
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி- –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -என்றுமாம் –

———

மண்ணினும் நல்லாள் மலர்மகள் கலைமகள் கலையூர்
பெண்ணினும் நல்லாள் பெரும் புகழ்ச் சனகியோ நல்லாள்
கண்ணிலும் நல்லான் கற்றவர் காற்றிலா தவறும்
உண்ணு நீரினும் உயிரினும் அவனையே யுவப்பார் —

வலிய சிறை புகுந்தாள் அன்றோ தேவ மாதர் சிறை விலக்க-
தன்னடியார் –இத்யாதி -பெரியாழ்வார் 4-9-2-
உண்ணும் சோறு பருகு நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் 6-7-1-

——————

பெண்ணின் இன்னமுது அன்னவள் தன்னோடும் பிரியா
வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் மருங்கு இனிது இருப்ப
அண்ணல் ஆண்டு இருந்தான் கரு நற வெனத்தான்
கண்ணும் உள்ளமும் வந்து எனக் களிப்புறக் கண்டான் -சுமந்திரன் திவ்ய தம்பதிகளை கண்டமை-

வழு விலா அடிமை செய்யும் இளைய பெருமாளும் அகலகில்லேன் இறையும் என்று இருக்கும் பிராட்டி உடன்
பச்சை மா மலை போன்ற திருமேனியுடன்
நித்யர்கள் கண்டு அனுபவிக்குமா போலே அன்றோ சுமந்திரன் அனுபவித்தான் –
அவன் தவப்பயன் அன்றோ என்கிறார் –

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே––ஸ்ரீ திருவாய் மொழி–5-5-3-

————–

கண்டு கை தொழுது ஐயவிக் கடலுடைக் கிழவோன்
உண்டு ஓர் காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர்
கொண்டல் புலவன் கொடி நெடும் தேர் மிசைக்கொண்டான் -53-

கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனிவாய் கரு மாணிக்கம் 3-3-5–
திருகி செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் -8-4-7-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் –திரு விருத்தம் -45-

———–

ஏனை நிதியினையவும் வையகம்
போனகற்கு விளம்பிப் புலன் கொளீஇ
ஆணவனோடும் ஆயிர மௌலியான்
தானம் நண்ணினான் தத்துவம் நண்ணினான் -மந்தரை சூழ்ச்சிப் படலம்–22-

வையகம் போனகற்கு–சஹஸ்ர சீர்ஷா புருஷன் -இவனே பரம புருஷன் -பரம தத்வம்
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத்

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க்கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே 8-1-10-

————–

தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயிலின் மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டை நாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னுவாள்-41-

வால்மீகி அருளிச் செய்யாத விருத்தாந்தம்
ஞாநிதாசீ யதோ ஜாதா கைகேயியாஸ்து ச ஹோஷிதா
பிரசாதம் சந்த்ர ஸ்ங்காஸம் ஆருரோஹ யதிருச்சயா–அயோத்யா 7-1-
யதிருச்சயா –பகவத் சங்கல்பத்தால் வந்தாள்
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்ட அரங்கவோட்டி உள் மகிழ்ந்த நாதன் –திருச்சந்த -49-
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெரித்தாய் கோவிந்தா -1-5-5-
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி –திருச்சந்த -30-

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் அவர் பெற்றுள்ள வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய யரும் தவத்தாலும் -76-

அரக்கர் பாவமுமம் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூ மொழி மடமான்
இரக்கம் இன்மை யன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே -78-

சிறை சிறந்தவள் ஏற்றம் சொல்ல வந்த படி கொண்ட கீர்த்தி ராமாயணம் எனும் பக்தி வெள்ள அமுதம் பருகுகிறோம்

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

—————-

மூவராய் முதலாகி மூலமதாகி ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேணிலம்
காவலன் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய வாவியே -62-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் முரி நீர் வண்ணன் –முதல் திருவந்தாதி -15-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென் னிலங்கை எரி எழச் செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ–-ஸ்ரீ திருவாய் மொழி-3-6-2-

———————

என்றனள் என்னக் கேட்டான் எழுந்த பேருவகை பொங்கப்
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்
தன் திரு உள்ளத்துள்ளே தன்னையே நினையுமற்றக்
குன்றிவர் தோளினானைத் தொழுது வாய் புதைத்துக் கூறும் -80-

தான் மேற்கொண்ட அவதாரத்தையும் செய்ய வேண்டிய செயல்களையும் நினைத்து குல தெய்வமான
ஸ்ரீ மந் நாராயணனைத் தியானித்து இருந்தான் –

————-

உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும்
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார்
செயலரும் தவங்கள் செய்து இச்செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு உடையும் யாம் தக்கது என்பார் -89-

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் –திரு விருத்தம் -32-

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்–திருவாய் -4-4-4-
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும்-4-4-9-

————–

நீல மா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவும் நிற்க
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவனோ
காலமாகக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம் முன்பன் என்பார் -91- முன்பன்-முதல்வன்

கெட்டேன் -வெறுத்துப் போய்க் கையை
நெரித்துக் கூறும் துயர மிகுதியைக் காட்டும் – விஷாத அதிசயம் —

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

——————-

வேத்து அவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்தவை இசைக்கும் செம் பொன் மண்டபம் இனிதின் எய்தான்
ஒத்து அவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளவும்
பூத்தவை வடிவை ஓப்பான் சிற்றவை கோயில் புக்கான் -101-

உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளவும் பூத்தவை வடிவை ஓப்பான் –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–44-

————

விநயத்துடன் இராமன் கைகேயி இடம் இருந்தமை –

வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையில் புதைத்து மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்டா ஆன் கன்றின் அன்னான் -104-

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பி பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ –நாச் 7-1-
சர்வ கந்த சர்வரச
பச்சை மா மலை போல் மேனி பவளச் செவ்வாய் –திருமாலை -2-
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்பா நீ காண வாராய் -திருவாய் -9-2-4-
பவளம் போல் கனிவாய் சிவப்ப 9-2-5-

நின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சில்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தலாவது ஏயதே என்னில் ஆகும்;
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பதோர் உரையுண்டு’ என்றாள். 109-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஓன்று இல்லை இரும்பு போல் வலிய நெஞ்சம் –திருமாலை -17-

கரும்பன மொழியினர் கண் பனிக் கிலர்
வரம்பறு துயரினால் மயங்கியே கொலாம்
இருப்பன மனத்தினர் என்ன நின்றனர்
பெரும் பொரு விழுந்தனர் போலும் பெற்றியார் -நகர் நீங்கு படலம்–176-

—————

கையைக் கையினால் நெரிக்கும் தன் காதலன்
வைகும் ஆலிலை அன்ன வயிற்றினை
பெய்வளைத் தளிரால் பிசையும் பகை
வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குவாள் -1-கோசலையார் வருந்துதல்

ஸ்ரீ ராமபிரான் பன்னிரு திங்கள் எழுந்து அருளிய திரு வயிறு -ஆலிலை அன்னதாக்க -சாமுத்ரிகா லக்ஷணம்
வடதள தேவகீ ஜடர வேத சிரஸ் கமலாஸ்தந சடகோப வாக் வபுஷி ரங்க்ருஹ்யே சயிதம் –பூர்வ சதகம் -78-
பெய் வளைக் கைகளைக் கூப்பிப் பிரான் கிடைக்கும் கடல் என்னும் -4-4-2-

—————

என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் ஆலன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் -59-

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —-பெருமாள் திருமொழி –9-10–

பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? 65

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

—————

கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,
விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். 112-பொங்கும் பிரிவால் இளைய பெருமாள்

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து––நான்முகன் திருவந்தாதி –10-

விடம் காலும் தீவாய் அரவணையான் -இரண்டாம் திருவந்தாதி -71-
பாசுரங்களை உட்க்கொண்டே கண்ணில் கடைத்தீ உக -என்கிறார்
ஆதிசேஷன் அழல் உமிழும் சேவை இன்றும் மெய்யானைத் தடவரை மேல் கிடந்த -திரு மெய்யத்தில் காணலாமே –

—————-

பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசு” என்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி கொள்க” எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ?-
மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்! 128–

தனது குற்றமாகவே ராமபிரான் -இதில் –
ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷா ந ராஜ்ஜோ ந ச ராகவஸ்ய
மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் வந பிரவேச ராகு நந்தனஸ்ய—வால்மீகி –அயோத்யா 86-1-
என்னும் பரதாழ்வானைப் போல
நானே தான் ஆயிடுக -பாசுரக் கருத்து –

நதியின் பிழை யன்று யரும் புனல் இன்மை யன்றே
பதியின் பிழை யன்று பயந்து நம்மைப் புரந்தாள்
மதியின் பிழை யன்று மகன் பிழை யன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்னை விழுந்தது என்றான் -134-

——————-

ஆகாதது அன்றால் உனக்கு; அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை-என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள். 146

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள். 147-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –அயோத்யா -40-10-
அஹம் அஸ்ய அவரோ பிராதா குணைர் தாஸ்யம் –கிஷ்கிந்தா -4-11-

———–

வீற்றிடம் தாமரைச் செங்கண் வீரனை
உற்று அடைந்து ஐய நீ உருவி ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின் கண்ணகல்
மால் தடந்தானையான் வாழ்கிலான் என்றான் -166-

கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –பெருமாள் 9-2-
எவ்வாறு நடந்தாய் எம்மிராமாவோ -9-3-
கல் நிறைந்து தீந்து கழை உடைந்து கால் கழன்று –பெரிய திருமடல் -48-

————-

நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!’ என்றான். 152-

ந ச சீதா த்வயாஹீநா ந சாஹம் அபி ராகவா
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யா விவோத்த்ருதவ் –அயோத்யா -53-31-

————

தகவு மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர் சிலர்கள் துயர் முதுகை
அகவும் இள மயிர்களும் உயிர் அலசியன அனையார்
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் -13-

இருமலை போல் எதிர்ந்த மள்ளர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு மொழி–2 2-8 – –

—————–

தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூவியல் கானகம் புக உய்த்தேன் என்கோ?
கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ?
யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்? 20–

புகழு நல் ஒருவன் என்கோ பொருவில் சீர்ப் பூமி என்கோ –திருவாய் 3-4-பதிகத்தை
பின்பற்றி அருளிச் செய்கிறார் –

அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை
எஞ்சலில் பொன் போர்த்தன்ன இளவலும் இந்து என்பான்
வெஞ்சிலைப் புருவத்தாள் தன் மெல்லடிக்கு ஏற்ப வெண் நூல்
பஞ்சிடை படுத்தது என்ன வெண்ணிலாப் பரப்பப் போனார் -52-மூவரும் போனமை –

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
வந்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவனாகும் அவ்வளவில் இராமன் என்றாள் –சூர்ப்பனகை வர்ணனை -ஆரண்ய -மாரீச வதை படலம் -149-

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே–பெரிய திருமொழி-7-6-5-

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –பெரிய திருமொழி–9-2-6-

மைந் நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றார்க்கு -10-6-8–

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளிமணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே–4-4-5-

————–

இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி,
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி,
‘வந்தனன், எந்தை தந்தை!’ என மனம் களித்து, வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கிலா உலகத்து உய்த்தார். –தைலம் ஆட்டுப் படலம்–60-

வால்மீகி ஸ்வர்க்கம் போனதாக சொன்னதை கம்பர் வைகுண்ட மா நகரம் போனதாக அருளிச் செய்கிறார் –

————————

இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல்
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!” என்பதோர் அழியா அழகு உடையான். –கங்கைப் படலம்–1

நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –அவனுடைய ஆனந்தத்துக்கு அவதி இன்றிக்கே
ஒழிகிறதும் வடிவில் வை லக்ஷண்யத்தால் அன்றோ –
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே –பெரிய திருமொழி 1-5-9–

——————

பொழியும் கண்ணில் புதுப்புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய்ம்மலர் சூட்டினர்
அழிவில் அன்பு எனும் ஆரமிருது ஊட்டினர்
வழியின் வந்த வருத்தம் தணியவே -14-

புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே -4-3-2-

——————

காயும் காணில் கிழங்கும் கனிகளும்
தூய தேடிக் கொணர்ந்தனர் தோன்றல் நீ
ஆய கங்கை யரும் புனலை ஆடினை
தீயை ஓம்பினை செய்யமுத்து என்றனர் -15-முனிவர்கள் ராமனுக்கு உபசாரம்

காடுகளூடு போய் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கொடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 3-3 –

வருந்தித் தான் தர வந்த அமுதையும்
அருந்து நீர் என்று அமரரை ஊட்டினான்
விருந்து மெள்ளடக்குண்டு விளங்கினான்
திருந்தினார் வாயின் செய்தது தேயுமோ -27-

அமுதம் அமரர்கட்க்கு இந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீல் கடலானே -திருவாய் 1-6-5-

—————

விரி இருள் பகையை ஒட்டித் திசைகளை வென்று மேல் நின்று
ஒரு தனித் திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள் புரிந்து வீய்ந்த
செரு வலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான் -49-அஸ்தமன சூர்யன் வர்ணனை

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – திரு விருத்தம் –80 – –
சூர்ய அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு –

———–

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். 11

அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்
நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன் -73-

அங்குள கிளை காவற்கு அமையின் உளன் ஊம்பி
இங்குள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனதன்றோ உறு துயர் உறலாமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் -76-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

———–

தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன் தொடுத்த வில்லன்
வெம்பி வைந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் -54-

பொங்கும் பிரிவால் அதிசங்கை -இளையபெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதிசங்கை பண்ண –
இருவரையும் அதிசங்கை பண்ணி ஸ்ரீ குகப்பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே-
தனித்தனியே கையும் வில்லுமாய்க் கொண்டு பெருமாளை ரஷித்தது அன்றோ
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது –
ஆச சஷேத ஸத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மான
பரதாய அப்ரமேயாய குஹோ கஹந கோசர-86-1–
கழியின் பெருமையைக் கடலுக்குச் சொல்லப் போமோ –குகன் லஷ்மண பெருமையை பரதனுக்கு அறிவித்தமை –

————-

வான் புரை விழியாய் உன் மலர் புரை அடிமானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஜிமிறு இவை காணாய்
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை காணாய்
தோள் புரை இள வேயின் தொகுதிகள் இவை காணாய் -17-

ஜிமிறு -வந்து மழை மேகம் வேய் மூங்கில் தொகுதிகளை சீதைக்கு ராமன் காட்டியது
கோள் புரை இருள் என்ற தொடர் -கொள்கின்ற கோள் இருள் –திருவாய் -7-7-9-

————

இராமனை எதிர்கொள்ள பரத்துவாச முனிவர் வருதல்
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன், ‘நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று’ எனல் தெரிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப் பர முனி, பவ நோயின்
மருத்துவன் அனையானை, வரவு எதிர்கொள வந்தான். 20-

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–5-3 6-

——————–

வடம் கொள் பூண் முலை மட மயிலே மதக் கதமா
அடங்கு பேழ் வயிறு அரவு உரி அமை தொறும் தொடங்கித்
தடங்கல் தோறும் நின்று ஆடு தண்டலை அயோத்தி
முடங்கி மாளிகைத் துகில் கொடி நிகர்ப்பன நோக்கால் -4-சித்ர கூட இயற்க்கை வளங்களை காண்கிறாள்

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலார் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பது பாராய் -35-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே ––பெரிய திருமொழி–1-2-10-

—————

உவரி வாய் அன்றிப் பாற் கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணித் தடம் தோறும் இடம் தோறும் துவன்றிக்
கவரிப் பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவளமால் வரை அருவியைப் பொருவன பாராய் -5-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

சீதக் கடலில் உள்ளமுது என்றாரே பிராட்டியை பெரியாழ்வாரும்
எம்பெருமானும் பிராட்டியும் உடன் இருந்து இனிதாக மகிழ்ந்த இடமாகையாலே சித்ரகூட வளப்பங்களை
காணாய் பாராய் என்று காட்டுகிறார் –
ரசிகனானவன் நித்யவாஸம் பண்ணுகிற தேசம் திருத்தேவனார் தொகையே -பிராட்டியும் தானுமாக
சித்ரகூடத்திலே வர்த்தித்தாப் போலே -பெரியவாச்சான் பிள்ளை –

உருகு காதலின் தழை கொண்டு மழலை வந்து உச்சி
முருகு ஞாரு செந்தேனினை முலை நின்றும் வாங்கிப்
பெருகு சூழினும் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின் அழிப்பது பாராய் -10-

கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –பெரிய திருமொழி-–1-2-5-
பிரசம் -தேன் கூட்டுக்கும் மதுகரங்களுக்கும் பெயர் -வாரி -அவற்றினுடைய தேன்

இங்குள்ள முனிவர்களை விண்ணுலகம் கூட்டிச் செல்லும் விமானங்கள் வருவதும் போவதுமாக இருந்தமை –
அசும்பு பாய் வரை யரும் தவ முடித்தவர் துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான்
விசும்பு தூர்ப்பனவாம் என வெயிலுக விளங்கும்
பசும் பொன் மானங்கள் போவானா வருவன பாராய் -36-

இரு கண்களிலும் தாரைதாரையாக ஆனந்தக் கண்ணீர்
ஆஹ்லாத சீதா நேத்ராம்பு புளகீக்ருத காத்ரவான்
சதா பரகுண ஆவிஷ்ட த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி –ஸ்ரீ விஷ்ணு தத்வம்

———-

கோசலை பரதனை வாழ்த்துதல்
முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்,
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா!’ என்று, வாழ்த்தினாள்-
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள். 119-

வாளேறு காணத் தேளேறு மாயுமாப் போலே மன்னர் மன்னவா -உத்திஷ்ட ராஜன் –

————-

பரதன் காய் கிழங்கு போன்றவை உண்டு, புழுதியில் தங்குதல்
இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்,
அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். 17-

பரதன் நிலையைக் கண்ட இராமன், இலக்குவனனிடம் கூறுதல்
தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். 49-

பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். 52-

தந்தையை நினைத்து இராமன் புலம்புதல்
‘நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?’ என்றான். 60

பரதன் இராமனின் திருவடிகளைப் பெற்று முடிமேற் சூடிச் செல்லல்
விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். 135

அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்;
படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்-
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். 136–

இராமனின் பாதுகை ஆட்சி செய்ய, பரதன் நந்தியம் பதியில் தங்குதல்
பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்;
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்;
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். 139

நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். 140-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது ப்ரபத்தியும் உபாயம் அன்று –
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று
இவை இரண்டும் ஸ்ரீ பரதாழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப்பெருமாள் பக்கலிலும் காணலாம்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு நன்மை தானே தீமை யாயிற்று -ஸ்ரீ குகப்பெருமாளுக்குத் தீமை தானே நன்மை யாயிற்று

தனக்குத் திருவடி சூட்டுமாறு வீடணன் வேண்டுதல்
விளைவினை அறியும் மேன்மை வீடணன், ‘என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான். –வீடணன் அடைக்கலப் படலம்—142

பரத தத் அநு பிரார்தித்தய லேபே லாப விதம் வர
காகுத்ஸ்த்த பாதுகா காரம் மஹார்க்கம் முகுடத்வயம் –சம்பூ ராமாயணம்

அரசு அமர்ந்தான் ஆதி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேண் மற்ற அரசு தானே –பெருமாள் -10-7-
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –திருவாய் -10-3-6-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: