ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் –
எல்லாரும் தம்மைப் போலே தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக –
பகவத் வல்லபையான ஸ்ரீ ஆண்டாள் உடைய ப்ரஸாத பாத்ரமான ஸ்ரீ எம்பெருமானார்
லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ எம்பெருமானாரைக் கொண்டாடி –
இப்பாட்டிலே –அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாளுடைய ஸ்வபாவிக கிருபையாலே வாழ்ந்து கொண்டு –
பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு மனனம் பண்ணிக் கொண்டு போருகிற ஸ்ரீ எம்பெருமானார் –
வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம் எங்கும் ஒக்க -வியாபித்து கலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
விண்ணின் தலை நின்றும் – மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
தாழ்வு வர வழி இல்லாத வாழ்வு தமக்கு கிடைத்தது போலே எல்லோருக்கும் கிடைக்க வேணும் என்ற பெரு நோக்குடன் –
அவர்கட்கு ஸ்ரீ எம்பெருமானார் திறத்தும் -அவர் குணங்களை சார்ந்தோர் திறத்தும் -ஈடுபாடு உண்டாவதற்கு உறுப்பாக –
அரங்கற்கு இனிய துணைவியான ஸ்ரீ ஆண்டாள் அருளினால் வாழ்வு பெற்றவரான ஸ்ரீ எம்பெருமானார் மறை நெறியை
நிலை நாட்டி -கலியைக் கெடுத்து -உலகினுக்கு பேருதவி புரிந்ததை அருளி செய்கிறார்
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –
பத உரை –
அரங்கர் -திருவரங்கத்து அம்மானுடைய
மௌலி -திரு முடியில்
சூழ்கின்ற -சுற்றிக் கொள்கிற
மாலையை-திரு மாலையை
சூடி-தன் குழலிலே அணிந்து
கொடுத்தவள் -கொடுக்கும்பெருமை வாய்ந்த ஆண்டாள் உடைய
தொல் அருளால்-இயல்பான கிருபையினாலே
வாழ்கின்ற -வாழ்ந்து கொண்டு இருக்கிற
வள்ளல்-பெரும் கொடை யாளியும்
மா முனி -பெருமை வாய்ந்த முனிவர்
என்னும்-என்றும் சொல்லப்படுபவரான
இராமானுசன் -எம்பெருமானார்
தாழ்வு ஓன்று இல்லா -குறை ஒன்றும் இல்லாத
மறை-வேதம்
தாழ்ந்து -இழிவு பட்டு
அதனால்
தலம் முழுதும்– பூமி எங்கும்
கலியே -கலி புருஷனே
ஆள்கின்ற காலத்து -தனிக் கோல் செலுத்துகிற காலத்திலே
வந்து -தாமாகவே வந்து
அளித்தவன் காண்மின் -உலகத்தை காத்து அருளினவர் காணுங்கள்
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருமுடியை -சூழா நின்று உள்ள திரு மாலையை -தன்னுடைய திருக் குழலிலே சூடி
வாஸிதம் ஆக்கிக் கொடுத்த வைபவத்தை உடையளான ஸ்ரீ ஆண்டாள் உடைய ஸ்வாபாவிகமான கிருபையையே
விளை நீராக வாழா நிற்பவராய் –பரம ஒவ்தாரராய் -முனி ஸ்ரேஷ்டரான -ஸ்ரீ எம்பெருமானார் –
நித்யத்வ -அபௌருஷேயத்வ -யுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -யதாபூதவாதயாய் –
இருக்கையாலே -ஸ்வ பிரமாண்யத்தில் -ஒரு குறை வற்று இருக்கிற வேதமானது -பாஹ்ய குத்ருஷ்டிகளாலே –
அபிபூதமாய் கொண்டு -இழிவு பட்டு -தீப சங்கோசத்தில் திமிரவ்யாப்தி போலே பூமி எங்கும் கலி யுகமானது
தனிக்கோல் செலுத்துகிற காலத்திலே-அபேஷா நிரபேஷமாய் வந்து -அந்த வேதத்தை உத்தரிப்பித்து –
லோகத்தை ரஷித்து அருளினவர் காணும் கோள்–ஆதலால் நீங்களும் என்னைப் போலே அவரை அல்லாது
அறியோம் என்று இருக்கை அன்றோ அடுப்பது என்று கருத்து –
நவ நீதம் ஐயங்கவீனம் புதிதாக வரும் வெண்ணெய் -அக்கார அடிசில் பாலில் காய்ச்சி
நீரிலே இல்லாமல்-சமைத்த அன்னம் -ஸ்ரீ திருமால் இரும் சோலை -விருத்தாந்தம் -ஸ்ரீ கோதாக்ரஜர் -ஸ்ரீ கோயில் அண்ணன் –
ஸ்ரீ திருப்பாவை ஜீயர்-ஆசை உடையார்க்கு என்று அருளிய வள்ளல் தன்மை -நமக்காக சரணாகதி செய்து அருளிய வள்ளல் –
ஸ்ரீ திருப்பாவை ஜீயர் –உபாயம் அறிந்து -ஸ்ரீ கோயில் அண்ணன்–உபேயம் கைங்கர்யம் –
த்வயார்த்தம் திருப்பாவை நாச்சியார் திருமொழி மூலம் அறிந்து பெற்ற இரண்டு திரு நாமங்கள் –
அரங்கர் மௌலி
ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் தானே
ஸ்ரீ வில்லி புத்தூரிலே ஸ்ரீ வட பெரும் கோவில் உடையான் என்னும் திரு நாமத்தை உடையராய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகையாலே -அவரை -அரங்கர் -என்று அருளிச் செய்கிறார் –
அப்படி பட்ட ஸ்வாமி உடைய-உத்தமாங்கத்துக்கு-
சூழ்கின்ற மாலையை
அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்
குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும்- 4-11-
சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10-
தாழ் குழலாள் துணிந்த துணிவை -12-10-
தாழ் குழலாள்–என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னைக் களைந்து
ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய் ஆய்த்து –
சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –
அரங்கர் –
மௌலி சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் –
ஸ்ரீ அமுதனார் ஏனைய இடங்களில் போலே அரங்கன் -என்னாது அரங்கர் -என்று பன்மையில் கூறுகிறார் –
ஸ்ரீ ஆண்டாள் ப்ரணய ரோஷம் தலை எடுத்து அங்கனமே பலகாலும் பன்மையில் சொன்னதை அப்படியே கை யாண்ட படி –
இனி முக்தி அடைந்தவர்கள் தங்கள் இன்பத்துக்கு போக்கு வீடாக ஸ்ரீ எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யப்
பல வடிவங்கள் கொள்வது போலே –
ஸ்ரீ அரங்கனும் ஆண்டாள் மீது உள்ள காதல் மிகுதியால்
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள வடிவோடு அமையாது அவளது அவதார ஸ்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரிலும்
ஸ்ரீ வட பெரும் கோயில் உடையான் வடிவம் கொண்டு காத்துக் கிடத்தலின் அரங்கர் -என்று பன்மையில் கூறினார் ஆகவுமாம்-
இதனால் ஸ்ரீ வட பெரும் கோயில் உடையானுக்கு அன்றோ அவள் சூடிக் கொடுத்தது –
அரங்கர்க்கு சூடிக் கொடுத்ததாக கூறுவது எங்கனம் பொருந்தும் என்னும் கேள்விக்கு விடை இறுத்ததும் ஆகிறது –
தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் ––இரண்டாம் திருவந்தாதி – 70-
தலையரங்கம்– -என்றபடி திருவரங்கமே தலைமையகமாகவும்
ஏனைய திவ்ய தேசங்கள் கிளை யகங்களாகவும்-அரங்கனே எல்லா இடங்களிலும் எழுந்து அருளி இருந்து
அருள் புரிவதாகவும் கூறப்படும் சம்ப்ரதாயமும் இங்கு உணரத் தக்கது –
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–-நாச்சியார் திரு மொழி-4-1-
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே -அதாகிறது –கோயிலாய்த்து –
பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
தொண்டர்கள் சூடிக் களைந்தன சூடிடுவர் –
இங்கே அண்டர் கோனான ஸ்ரீ அரங்கன் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்-களைந்தன சூடும் தொண்டன் ஆகிறான் –
அவ்வளவு காதல் ஆண்டாள் மீது மண்டிக் கிடக்கிறது ஸ்ரீ அரங்கனுக்கு
நம்மது போன்று அரங்கனது தொண்டு இயல்பான தொண்டு அன்று –காதல் அடியாக வந்தது அது –
ஆதலின் அது நிறையே -குறை அன்று -என்று உணர்க –
இனி அடியாளாகிய ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுப்பது தகுமோ -எனில் கூறுவாம் –
ஆண்டாள் தான் தன அழகைக் கண்டு களிப்பதற்க்காக சூடிக் கொண்டாள் அல்லள்-
மருங்கே அரங்கன் வந்து நிற்பதை மனக் கண்ணால் கண்டு அலங்கலால் அலங்கரித்து கொண்ட நிலை
அக் குழல் அழகருக்கு இயைந்து இருக்கிறதா என்பதை அவள் பார்த்தாலே அன்றி –
தான் தன அழகை கண்டு களித்து இலள்-அம் மலரின் மணம் நுகர்ந்து மகிழ்ந்து இலள் என்று அறிக –
அவன் உகப்புக்கு உறுப்பாய் இருப்பதையே லஷ்யமாக கொண்டவள் ஸ்ரீ ஆண்டாள் என்க –
ஸ்ரீ சபரி தன் நாவுக்கு இனியனவாய் இருந்த பழம் முதலியவற்றை ஸ்ரீ இராம பிரானுக்கு என்று சேர்த்து வைத்து கொடுத்து
அவனை மிகவும் மகிழ்வித்தது போலே –
ஸ்ரீ ஆண்டாளும் தன் சுரும்பார் குழலுக்கு ஏற்ற பூக்களை சேர்த்து மாலையாக தலை மிசை வைத்து
ஸ்ரீ அரங்கருக்கு கொடுத்து அவனை மிகவும் மகிழ்விக்கின்றனள் -என்க-
இருவரும் ஆச்சார்ய நிஷ்டையை உடையவர்கள் ஆதலின் அவர்கள் கொடுத்தவைகளால் ஸ்ரீ இராம பிரானுக்கும்
ஸ்ரீ அரங்கருக்கும் -அளவு கடந்த ஆனந்தம் உண்டாகிறது –
ஸ்ரீ அகஸ்தியர் முதலிய முனிவர்கள் கொடுத்தவைகளில் அவ்வளவு ஆனந்தம் இல்லை –
ஸ்ரீ பெரியாழ்வார் உகந்து -பூச்சூட்ட வாராய் -என்று அழைத்து சூட்டிய பூக்களிலும் இவ்வளவு ஆனந்தம் இல்லை –
ஆச்சார்ய நிஷ்டை உடையளான ஸ்ரீ சபரி ருசி பார்த்தவை மிகவும் இனித்தன ஸ்ரீ இராமபிரானுக்கு –
அத்தகைய நிஷ்டை உடைய ஸ்ரீ ஆண்டாள் சூடியவை மிகவும் மணத்தன ஸ்ரீ அரங்கற்கு-
சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10-
சுரும்பார் குழல் கோதை யாதலின் இயல்பாகவே மணம் கமழுகின்றது கூந்தலிலே
உத்தம பெண்களின் கூந்தலிலே இயல்பாக மணம் உண்டு என்பதை-
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி –நறியவுமுளவோ நீ யறியும் பூவே – என்னும் குறும்தொகை செய்யுளாலும் அறியலாம்-
இச் செய்யுளை ஒத்த –
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–திரு விருத்தம் – 55-இங்கு அறியத் தக்கது –
இயல்பாய் அமைந்த கூந்தல் மனத்துக்கு மேலே –
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே––திருவாய் மொழி – 1-4 9–
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-
நாடாத மலர் – நறிய நன் மலர் நாடி- எனப்படும் ஆத்ம புஷ்பத்தின் உடைய ஆசார்ய பாரதத்ரியம் என்னும்
மணமும் கூடவே ஸ்ரீ ஆண்டாள் சூடிய மாலை-நிகரற்ற நறு மணம் கமழுவது ஆயிற்று
இங்கனம் செழும் குழல் மேல் மாலைத் தொடை ஸ்ரீ தென்னரங்கற்கு ஈயும் மதிப்பு உடையவள் ஆனாள் ஸ்ரீ ஆண்டாள் –
இதனையே -தன்னுடைய திருக் குழலிலே சூடி வாசிதமாக்கி கொடுத்த வைபவத்தை உடையவள் -என்று
இவ்விடத்திலே உரையை அருளி செய்தார் ஸ்ரீ பெரிய ஜீயர்-
ஸ்ரீ வேதாந்த தேசிகனும்
ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேச வச்யாத் காணாம்ருதை
ஸ்துதிசதை ரனவாப்த பூர்வம் தவன் மௌளிகந்த சூபகா
முபஹ்ருத்யமாலாம் லேபே மகத்தர பதானுகுணம் பிரசாதம் -என்று
தாயே உனது தந்தை சிறிது துதித்தாலும் வசப்படும் ஸ்ரீ மதுசூதனாகிற ஸ்ரீ அரங்கன் இடம் இருந்து
செவிக்கு இனிய அமுதாய் அமைந்த நூற்றுக்கணக்கான பாடல்களால் இது வரையிலும் பெற்று இடாத
மிகப் பெரியவர் -ஸ்ரீ பெரியாழ்வார் -என்னும் பதவிக்கு தக்க அனுக்ரகத்தை
நின் கூந்தல் மணத்தால் சீர்மை பெற்ற மாலையை சமர்ப்பிப்பதன் மூலம் பெற்று விட்டார் -என்று ஸ்ரீ கோதா ஸ்துதியில் அருளியதும்
இங்கு அனுசந்திக்க தக்கது –
இங்கு ஸ்ரீ பெரியாழ்வார் ஆனது கூந்தல் மணம் கமழும் ஸ்ரீ ஆண்டாள் மாலையை சமர்ப்பித்ததனால் என்றது –
சமர்ப்பித்ததன் மூலம் ஸ்ரீ அரங்கனுக்கு மாமனார் ஆகி அமரர்கள் வந்திக்கும் பெருமை எய்தியதைக் கருதி -என்க –
இது எக்காலத்தும் மற்றைய ஸ்ரீ ஆழ்வார்களுக்கு இல்லாத தனிப் பெருமை அன்றோ –
சர்வ கந்த -எல்லா வாசனை -ஸ்வரூபனாக சொல்லப்படும் ஸ்ரீ அரங்கன்
இவள் சூடிக் கொடுத்த மாலையின் கனத்தை ஆதரவுடன் ஏற்கிறான் எனின் இந்த ஆண்டாள் உடைய
வீறுடைமையை பற்றி நாம் என் என்பது –
அடியிலே வேத மணம் –
நாபியிலே தாமரை மணம்-
மார்பகத்திலே மலராள் கொங்கையில் பூசின சந்தன மணம் –
இவ்வளவு இருந்தும்
ஸ்ரீ ஆண்டாள் பேர் அவாவுடன் சூடிக் கொடுத்த மாலையை தலையாலே தாங்குகிறான் ஸ்ரீ அரங்கன் –
தலையாய மணத்தை தலையாலே தானே தாங்க வேணும் -இதனை –
தத்தே நதேனசிரசாதவ மௌலி மாலாம் -உன்னுடைய தலயில் சூடிய மாலையை
வணங்கிய தலையாலே தாங்கிக் கொண்டு இருக்கிறான் -என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் வர்ணிக்கிறார் –
தலை வணங்கி ஏற்கும் படியான மதிப்பு ஸ்ரீ அரங்கனுக்கு ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையிலே –
அத்தகைய மதிப்பு தோற்ற அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலை -என்கிறார் –
முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கதறத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து -ஞான சாரம் – 8- – என்கிறபடி
பயன் கருதாத பரமை காந்திகள் செய்வது அனைத்தையும் உச்சியால் ஏற்கும் அவன்
காதலியான காரிகை சூடிக் கொடுத்ததை தலையாலே தாங்கக் கேட்க வேணுமோ –
சூடிக் கொடுத்த மாலையை திரு முடியிலே ஒரு புறத்திலே மட்டும் தாங்கினால் போதாதாம் -திருப்தி இல்லை
ஆசை தீர முடி எங்கும் படும்படி சூழ்கின்றதாக அந்த மாலையை தாங்க வேண்டுமாம் –
அது தோன்ற-மௌலி சூழ்கின்ற மாலை-என்றார்
சூடிக் கொடுத்தவள்-என்பதையே திரு நாமமாக அமைத்தார் -அவள் பிரபாவம் அனைத்தும் தோற்றுதற்கு-
மேலே இவளது தொல் அருளால் வாழ்கின்றவராக ஸ்ரீ எம்பெருமானாரை சொல்லுவதற்கு ஏற்ப
இவளுடைய அருளின் வீறுடைமை தோற்ற சூடிக் கொடுத்தவள் -என்னும் சொல் அமைந்து உள்ளது –
பிராட்டிமார்களுடைய அருள் இறைவன் மூலமாகத் தான் பலிக்க வேண்டும் –
பயன் தருபவன் இறைவனே –
அவனை தரும்படி செய்யுமவர்கள் பிராட்டிமார்கள் –
தரும்படி செய்திடினும் கட்டுப்பாடு அற்ற இறைவன் விரும்பா விடின் என் ஆகுமோ என்று அஞ்சுவதற்கு இடம் இன்றி
சூழ்கின்ற மாலையால் கட்டுப் பட்டவன் ஆயினான் அவன் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீ அரங்கன் இங்கனம் அன்புத் தொண்டனாக இருத்தலின் பயன் தப்பாது என்னும் உறுதிப் பாட்டை
அளிக்கின்றது –சூடிக் கொடுத்தவள்-என்னும் சொல் –
நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–
ஸ்ரஜி -மாலையால்
நிகளிதம்-விலங்கிடப்பட்டவனாய் இருக்கிற
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே –
தான் சாத்திக் கழித்த மாலையாகிற விலங்காலே இவனைப் பேராதபடி -விலங்கிட்டு யாவாள் ஒருத்தி -அவனை பலாத்கரித்து புஜித்தாள்-
ஸ்வ உச்சிஷ்டமாவது –
சூடிக் களைந்தது –
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் –
க்வயோபா புக்தஸ் ரக் கந்த –உச்சிஷ்ட பஷினோ தாஸாஸ் – என்னுமது பிரணயித்வத்தால் மாறாடிக் கிடக்கிறது
இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோர்ஹ அர்ஹனாம் படி தன்னை ஒக்கி வைக்கையாலே-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமே தோற்றுகிறது –
பார் வண்ண மடமங்கை பத்தர் இறே
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் இறே
வாசம் செய் பூம் குழலிலே வாசிதமாக்கிக் கொடுத்தபடி
ஸ்ரஜி நிகளிதம் -மாலையால் விலங்கு இடப்பட்டவன் –என்கிற ஸ்ரீ பட்டர் ஸ்ரீ சூக்தியை நினைக்க –
குற்றங்கள் புரிந்த வண்ணமாய் இருப்பவர்கள் இடமும் அருள் உடையளான ஸ்ரீ ரங்க நாச்சியார் அவர்களை காக்குமாறு
தெரிவிக்கும் போது பக்கத்தில் ஸ்ரீ ஆண்டாள் இல்லாது இருந்தால் அவன் அதனுக்கு இசையாது முகத்தை மாற வைத்து
இருப்பான் போலும் -என்று கோத ஸ்துதியில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளி செய்கிறார் –
ஸ்ரீ ரங்க நாச்சியாருக்காவன்றி ஸ்ரீ ஆண்டாளுக்காகவே ஸ்ரீ அரங்கன் காப்பாற்றுகிறான் என்றது ஆயிற்று –
சூடிக் கொடுத்தவள் -எனபது
பாடிக் கொடுத்தவள் என்பதற்கும் உப லஷணம்-
இன்னிசையால் பாடிக் கொடுத்தால் நற்பா மாலை பூ மாலை சூடிக் கொடுத்தாள்-என்னும் பிரசித்தி காண்க –
பூ மாலையை மௌலியில் சூடுகின்றான்-
பா மாலையை தலையில் வைத்து கொண்டாடி இன்ப வெள்ளத்தில் ஆழகின்றான் –
தொல் அருளால் –
உததி பரம வ்யேம் நோர்க்கவிஸ் ம்ர்த்யமாதர்ச ரேஷன ஷமமிதிதி யாபூயஸ் ஸ்ரீ ரங்க தாமனி மோதசே –என்றும் –
அனுக்ரஹா மயீம் வந்தே நித்ய அஞ்ஞான நிக்ரஹாம் -என்றும் சொல்லுகிறபடி
அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –
வாழ்கின்ற –
அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –
ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -ஸ்ரீ அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்கச் செய்தே –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –
வள்ளல்-
இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை
இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –
கால த்ரயேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ –
சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத்ச்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை –
ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்
தொன்மையான அருள்–இயல்பான அருள் என்றபடி
உலகிற்கு தந்தையான ஸ்ரீ அரங்கன் கைப்பிடிததனாலும் –
சாஷாத் ஸ்ரீ பூமிப் பிராட்டி யாதளாலும் உலகிற்கு தாய் ஆகிறாள் ஸ்ரீ ஆண்டாள் –
இனி பிரபன்ன சந்தானத்துக்கு தாயாக ஸ்ரீ ஆண்டாளைக் கொள்வது பற்றியும் சீரிய தாய் ஆகிறாள் ஸ்ரீ ஆண்டாள் –
திரு அருள் இயல்பானது அன்றோ –
பன்னகத்திலே கிடக்கும் பரமனை காதல் ரசம் ததும்பும் தன்னகத்திலே வைத்து பண்படித்திய பெண்மணியான
ஸ்ரீ ஆண்டாளுடைய இயல்பான அருள் ஸ்ரீ எம்பெருமானாருக்கு கிடைத்தது –
அவள் மீது பக்தி அரும்பியது -அவள் பாடல்களில் ஈடுபடல் ஆனார்
ஸ்ரீ கண்ணனாம் ஸ்ரீ அரங்கன் மீது காமம் மீதூர்ந்தது –
அருளியவள் மீதும் –
அருளிச் செயல் மீதும் –
அதில் நுவலப்படும் அரங்கன் மீதும் நிரந்தரமான பக்தி உண்டாயிற்று –
ஸ்ரீ ஆண்டாள் உடைய அருளி செயல்களான திருப்பாவை யினுடையவும்-நாச்சியார் திருமொழி யினுடையவும் –
உண்மை பொருள்கள் அவர் திரு உள்ளத்தில் துளங்கின –
வேதப் பொருள்கள் எல்லாம் அவற்றில் அடங்கி இருப்பதைக் கண்டார்
வேதம் காட்டும் தூய அற நெறி அவைகளிலே துலங்கியது –
நாராயணனே நமக்கேபறை தருவான் – என்னும் தொடக்கத்திலேயே அவருக்குத் துலங்கி விட்டது –
அத் தூய நெறி நாராயணனே –
அந் நெறி நமக்காக ஏற்பட்டது -நான் அந் நெறியிலே நடக்க வேண்டும் –
அந் நெறி பறையிலே-கைங்கர்யம் என்னும் பேற்றிலே – நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் –
அந் நெறியிலே நடப்பதாவது
நாராயணன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி நிற்கை -இதுவே தூய நெறி –
மற்றவைகள் அஹங்கார கலப்புடையவை யாதலின் தூயன அல்ல -இதனையே திருப் பாவை முழுதும் அறிவுறுத்துகிறது –
இங்கனம் முடிவு கட்டி எத்தனை கற்ப கோடி காலம் ஆனாலும் ப்ரபத்தியை தவிர வேறு வழி இல்லை என்று துணிந்து –
பறை தரும் நாராயணன் என்னும் அற நெறியையே பற்றி நின்றார் –
நாச்சியார் திரு மொழியில் கேசவ நம்பியைக் கால் பிடிப்பது என்னும் பேற்றில் உண்டான ஆசை
சாதனம் ஆகாவிடினும் மேலும் மேலும் வளர்ந்து ஆற்றாமையாக முற்றிப் பேற்றினைக் கண்டாக
வேண்டும் என்னும் நிலையை விளைவிக்கும் என்பதனையும் கண்டு கொண்டார் –
நாராயணனைப் பற்றினோர்க்குப் பேறு தப்பாதலின் -மன ஒர்மைவுடன் அதனைப் பெரும் விதத்தினை
நாள் தோறும் நினைத்து -அதனை சாதனமாக கருதாது –
வாழ் நாள் வீண் ஆகாத படி இன்பம் எய்தி –
எப்பொழுது பகவானைக் கண்ணால் காண்பேன் –
எப்பொழுது திருவடிகளைத் தலையால் தாங்குவேன் –
எப்பொழுது என்னை முகப்பே கூவிப் பணி கொள்ளப் போகிறான் -என்று பேற்றினில் ஆசையை வளர்த்துப்
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத ஆற்றாமை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயலின் படி
தான் நின்றதோடு தம்மை அண்டினாரையும் அவ்வாறே நிற்கும்படி செய்தார் ஸ்ரீ எம்பெருமானார் –
உபநிஷத்துக்களில் தெளிவற்ற நிலையில் சொல்லப்படும் பொருள்கள் தெள்ளத் தெளிய திருப்பாவை யாகிய கோதோ உபநிஷத்தில்
சொல்லப் பட்டு இருப்பது கண்டு விசேஷித்து அதனில் மிக்க ஈடுபாடு கொண்டார் –
சந்நியாசிகள் உபநிஷத்தை அனுசந்திக்க வேண்டும் என்னும் முறைக்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் அனுசந்திக்கும் உபநிஷத்தாய் அமைந்தது -திருப்பாவை –
அதனால்-திருப்பாவை ஜீயர் -என்ற பிரசித்தி அவருக்கு ஏற்பட்டது-
நாச்சியார்திருமொழியில் – 9-6 – நூறு தடாவில் வெண்ணெய் சமர்ப்பிபதாக ஸ்ரீ ஆண்டாள் பிரார்த்தனை செய்து கொண்டதை
அவள் சந்தானத்தில் பிறந்த நமக்கு நிறைவேற்றுவது பொறுப்பாகும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ அழகருக்கு
சமர்ப்பித்து நிறைவேற்றி நம் ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாளாலே விசேஷித்து
அபிமானிக்கப் பெற்றதும் இங்கு அறியத் தக்கது –
இவ்விதம் ஸ்ரீ ஆண்டாள் அருளி செயல்களின் ஆழ் பொருள்களை ஆரணத்தின் பொருள்களாகத் தெரிந்து
அவைகளுக்கு ஏற்ப தாமும் ஒழுகி
தம்மை அண்டின பல்லாயிரக் கணக்கில் உள்ள சீடர்களையும் ஒழுகுமாறு செய்து –
கடல் வண்ணன் பூதங்கள் ஆக்கித் தலம் முழுதும் எங்கும் இடம் கொள்ளும்படி செய்து விட்டார் -ஸ்ரீ எம்பெருமானார் –
செய்யவே கலியின் தனி கோல் ஆட்சி சாய்வுறத் தொடங்கியது –
மறைந்த மறை யாட்சி மீண்டும் தலை தூக்கத் தொடங்கியது –
கிருத யுக தர்மம் கிளர்ந்து எழுந்தது –
மறைக்கு அவப் பொருள் கண்ட குத்ருஷ்டிகளும் அது பிரமாணம் ஆகாது என்று ஒதுக்கிய பாஹ்யர்களும்
ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்களாலும் வாதங்களாலும் வெல்லப்பட்டு இருக்கும் இடம் தெரியாதபடி ஓடி ஒளிந்தனர் –
தன்னைக் கை விட்டு தன் கை ஆட்கள் ஓடி ஒளியவே-கலி தானே கெட்டு ஒழிந்தான் –
அல்லா வழிகள் அனைத்தும் மறைந்தன –
மறையின் பண்டைய தூய நெறி புதுமை பெற்றுத் துலங்குகிறது –
அந் நெறியில் தான் நின்று -இனிக்க வருமவை கவர -சோகம் இகந்து –
இமையவரான நித்ய சூரிகளுக்கு நிகராக வாழ்கின்றார் ஸ்ரீ எம்பெருமானார் –
வள்ளல் ஆதலின் தான் பெற்ற வாழ்வை தாரணிக்கு எல்லாம் வழங்கி வாழ்விக்கிறார் என்னும் கருத்துடன்-
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்-என்கிறார் –
ஸ்ரீ ஆண்டாள் தொல் அருளே ஸ்ரீ எம்பெருமானார் வாழ்வுக்கு எல்லாம் அடித்தளமாய் அமைந்தமை பற்றித் –
தொல் அருளால் வாழ்கின்ற -என்றார் –
மா முனி –
இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –
இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
இராமானுசன் என்னும் மா முனி –
மா முனி என்னும் இராமானுசன் என்று மாற்றுக –
ஸ்ரீ இராமானுசனே இந் நூலில் எங்கும் அடை கொளி யாய் இருத்தலில் இங்கும் அங்கனமே கொண்டு
முநி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ எம்பெருமானார் -என்று உரை அருளினார் ஸ்ரீ மணவாள மா முனிகள் –
வேதம் அனைத்துக்கும் வித்து ஆண்டாள் சம்பந்தத்தால் எம்பெருமானார் மா முனி ஆனார் இந்த பாசுரத்தில் —
வர வர முனி பின்பு புனர் அவதாரமாக -வர போவதை பொசிந்து காட்ட –
அரங்கர் –வாழ்கின்ற வள்ளல் மா முநி என்னும் இராமானுசன் கலியே ஆள்கின்ற நாள் வந்து
அளித்தவன் காண்மின் -என்று கூட்டிப் பொருள் கொள்க –
தாழ்வு ஒன்றும் இல்லா மறை
வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –
ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம்
அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை
மறை தாழ்ந்து –
இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் –
கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை சங்கோசிப்பித்து அழித்தபடி –
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பகதாஜன -என்றும் –
அந்தஸ் சக்தாம் -பஹிஸ் சைவம் சபரமேத்யது வைஷ்ணவம் கலவ் கஷ்டா ப்ரவர்த்தந்தே வர்ணாஸ்ரம ஜனாமுனே
கலவ் கார்த்த யுக தர்மம் கர்த்தும் இச்சதி யோ நர ச்வாமித்ரேர் ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்விஷதே கலி -என்றும் சொல்லுகிறபடி –
நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து –
ப்ரத்யஷம் அனுமானம் சப்தம் -என்று பிரமாணங்கள் மூன்று
அவற்றுள் சப்த பிரமாணத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம் –
அது என்றும் உள்ளது -நித்தியமானது -யாராலும் ஆக்கப்படாதது -அபௌருஷேயமானது –
என்றும் உள்ளமையாவது -சொற்களின் அமைப்பு முறை எல்லா காலத்திலும் ஒரு படிப் பட்டு இருக்கை –
உலகும் உயிரும் இல்லாத பிரளய காலத்திலும் -இறைவனுடைய திரு உள்ளத்திலே இச் சொற்களின் அமைப்பு முறை
அப்படியே சம்ஸ்கார ரூபமாய் இருந்து -சிருஷ்டி காலத்தில் அதனை பிரமனுக்கு அவன் வெளி இட்டான் -என்பர் –
யாராலும் ஆக்கப் படாமை யாவது –
ஒருவன் தன் இஷ்டப் படி சொற்களை கோக்கும் வாக்யமாக அமையாது
தானே பொருள் அமைந்த வாக்யமாய் இருத்தல் –
இங்கனம்-என்றும் உள்ளதும்-ஆக்கப் படாததும் -சப்த ரூபமுமான வேதத்துக்கு பிரமாண்யம் இயல்பாய் அமைந்தது –
பிரமாண்யம் ஆவது -உண்மை அறிவுக்கு சாதனமாய் இருத்தல் –
சப்தம் இயல்பினில் உண்மை அறிவை தரும் பிரமாணம் -அது அங்கனம் சில இடங்களில் உண்மை அறிவினை
தராமல் இருப்பது அதன் குற்றம் அன்று –
அதனை உபயோகிப்பார் இடம் உள்ள அறியாமை -கவனம் இன்மை -ஏமாற்றும் எண்ணம் – முதலிய குற்றமே என்பர் ஆன்றோர் –
நைவ சபதே -ஸ்வதோதோஷ ப்ரமாண்ய பரிபந்தின சந்தி கிந்து ஸ்வ தஸ் தஸ்ய பிரமாணத்வ மிதி ஸ்த்திதி
வக்துராசாய தோஷேன கேஷசித் தத போத்யதே – என்று சப்தத்தில்
பிரமாணத்துக்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனின்
பிரமாணம் ஆகும் தன்மையே அதன் இடத்தில் இயல்பாக அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிரமாண தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில்
உள்ள குற்றத்தாலே சில இடங்களிலே வேறு படுகிறது -என்பது ஆளவந்தார் அருளிய ஆகம ப்ராமாண்யம் –
இயல்பினில் பிரமாணமாய் இருத்தல் என்னும் சிறப்புடன் மற்று ஒரு சிறப்பு அம்சமும் வேதத்துக்கு உண்டு-
ப்ரத்யஷம் அனுமானம் என்னும் மற்றைய பிரமாணங்களை விட தனி சிறப்பு வாய்ந்தது அது –
பிரத்யஷமும் -அதாவது -நேரே காணும் காட்சியும் -சில இடங்களில் பிரமாணம் ஆகாது –
பாதிக்கப் படுவதும் உண்டு -விளக்கின் ஜ்வாலையை நேரில் பார்க்கிறோம் -உண்மையில் அது ஒரே ஜ்வாலை அன்று –
ஒரே மாதிரியான பல ஜ்வாலைகள் -ஒன்றன் பின் ஒன்றாக உண்டாகி தொடர்ந்து அங்கே வருகின்றன –
விளக்கு ஏற்றும் போது ஜ்வாலை உண்டாவது போல தொடர்ந்து உண்டாகின்றன –
இறுதியில் அணையும் ஜ்வாலை போன்று தொடர்ந்து ஜ்வாலைகள் அணைகின்றன –
அதனால் தான் ஜ்வாலைகள் பலவாக நமக்கு தோற்ற வில்லை -இங்கனம் கொள்ளா விடில்
விளக்கு ஏற்றி நெடு நேரம் ஆன பிறகு நாம் பார்க்கும் பொழுது திரியும் எண்ணெயும் குறைந்து இருப்பதற்கு காரணம்கூற முடியாது –
திரியின் ஒரு பகுதி எரிந்ததும் அப்பகுதியை பற்றி இருந்த ஜ்வாலை அணைந்து விடுகிறது –
மற்று ஒரு பகுதியில் அதே ஷணத்தில் வேறு ஒரு ஜ்வாலை உண்டாகிறது –
இங்கனம் ஷன நேரத்தில் ஜ்வாலை அணைவதும் எழுவதுமாய் இருப்பது -விரைவு-பற்றி நம் கண்ணுக்கு புலப்படுவது இல்லை –
ஒரே ஜ்வாலை என்று பிரமிக்கிறோம் -இங்கே தீப ஜ்வாலைகள் வேறு பட்டன –
வெவேறு சாமக்ரிகளினால் -திரிப் பகுதி -எண்ணெய-உண்டாகுதலின் என்னும் அனுமானம் ஒரே ஜ்வாலை
என்னும் பிரத்யஷத்தை பாதிப்பதைப் பார்க்கிறோம் –
இவ்வாறே அனுமான பிரமாணம் பிரத்யஷ பிரமாணத்தால் பாதிக்கப் படுகிறது –
நெருப்பு சுடாது அது ஒரு பொருளாய் இருத்தலின் -என்கிற அனுமானம் தொட்டதும் சுடுகிற பிரத்யஷ அனுபவத்தால்
பாதிக்கப் படுவதைப் பார்க்கிறோம் –
வேதம் என்கிற பிரமாணமோ -மற்றை பிரமாணங்கள் ஆன பிரத்யஷத்தினாலோ அனுமானத்தினாலோ
எந்த விதத்திலும் பாதிக்க படுவது இல்லை –
இதனால் பிரமானங்களுக்குள் சிறந்த பிரமாணம் வேதம் என்றது ஆயிற்று –
இங்கே
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7—சுடர் மிகு சுருதி -என்கிற நம் ஆழ்வார் திவ்ய சூக்தியும்-
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரத்தால் கழிக்க ஒண்ணாத ஒளியை உடைத்தாய் இருக்கை -என்கிற
ஈட்டு ஸ்ரீ சூக்தியையும் அனுசந்திக்க தக்கன –
இத்தகைய வேதம் –
யதா பூதவாதிஹி சாஸ்திரம் -உள்ளது உள்ளபடி சொல்லுவது அன்றோ சாஸ்திரம் – என்றபடி உண்மையையே கூறும் –
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –திருச் சந்த விருத்தம் – 72–
வேத நூல் ஓதுகின்றது உண்மை – என்பர்-திரு மழிசை பிரானும் –
இவ்வண்ணம் ப்ராமணயத்தில் எல்லா வகையிலும் ஏற்றம் உற்று இருக்கும் மறைக்கு
ஒரு வகையிலும் தாழ்வு இன்மையின் –தாழ்வு ஓன்று இல்லா மறை –என்கிறார் –
தாழ்வு ஓன்று இல்லா மறையும் தாழ்வு பட்டது பிற் காலத்திலேயே -தாழ்வு படுத்தல் ஆவது
இழிவு படுத்தல்-வேதம் நித்யம் அன்று -அபௌ ருஷேயம் அன்று அது பிரமாணமாக மாட்டாது – என்று இழிவு படுத்தினர் சிலர் –
அவர்களுள் பல கருத்து வேறு பாடுகள் இருப்பினும் வேதம் பிரமாணம் அன்று என்பதில் கருத்து வேறுபாடு இன்றி ஓன்று பட்டனர் அவர்கள்-
அங்கனம் அவர்கள் அனைவரும் ஒதுக்கி -வேதத்துக்கு உள் புகாது புறம்பே நின்று விட்டமையின் –
பாஹ்யர் -புற மதத்தவர் -எனப்படுகின்றனர் –
மற்றும் சிலர் அவர்களைப் போலே ஒதுக்காது -வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டு -உள் புகுந்தாலும் –
அது உணர்த்தும் உண்மை பொருளை காண்கிலாது -தம் தமக்கு தோற்றின வகையில் அவப் பொருளைக் காண்பவர் ஆயினர் –
இவர்கள் வேதத்தின் உள் புக்கும் பார்வை கோளாறினால் பொருளை உள்ளவாறு காணாமையின் –
குத்ருஷ்டிகள்-பார்வைக் கோளாறு உடையவர்கள்- எனப்படுகின்றனர் –
இவ் விரு திறத்தாராலும் வேதம் மாசு படுத்தப் பட்டு ஒளி மங்கி விட்டது –
ஒளி மங்க மங்க இருள் படர்வது போலே அற நெறியை காட்டும் வேத ஒளி குறைய குறைய கலி
புருஷன் உலகு எங்கும் பரவித் தனிக் கோல் செலுத்த முற்பட்டு விட்டான் –
பாஹ்யரும் குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள் -மறை ஆட்சியை மாற்றினர்
அது காட்டும் நேரிய அற நெறியை மறைய செய்தனர் -வெவ்வேறு வழி அல்லா வழிகளைக் காட்டினர் –
உலகம் வழி திகைத்து அலமாந்தது -இதுவே தக்க சமயம் என்று கலி புருஷன்
தலம் முழுவதும் தன் ஆட்சியை பரப்பி நிலை நாட்டிக் கொண்டு விட்டான் -இதனைக் காட்டுகிறது –
மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்-என்னும் சொற்தொடர் –
மழை பெய்து நெல் விளைந்தது என்னும் இடத்து போலே –
தாழ்ந்து ஆள்கின்ற நாள் என்னும் இடத்துத் தாழ்ந்ததனால் ஆள்கின்ற நாள் -என்று பொருள் படுத்தல் காண்க –
கலியே –
ஏகாரம் பிரிநிலை கண் வந்தது -மறை ஆட்சி முழுதும் மறைந்தது -கலி ஆட்சி காலூன்றி நின்றது –
இருளும் ஒளியும் சேர்ந்து இருக்க இயலாது அன்றோ –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –
தீப சங்கோசத்தில் -திமிர வ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல்
செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
தேச காலங்கள் சமீசீநங்களானால் திருத்தி ரஷிக்கலாம்–
அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –
காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
வந்து –
இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே –
ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-
அளித்தவன் காண்மின்
உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து –
ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்று கருத்து –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –
வந்து அளித்தவன் –
உய்யும் வழி புலன் ஆகாது அலமரும் உலகு அனைத்தையும் -நலியா நிற்கும் கலி ஆட்சியினின்றும் விடுவித்து காப்பதற்காக –
எவருடைய வேண்டுகோளும் இன்றி -தாமே அவதரித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் என்றது ஆயிற்று –
அளித்தால் ஆவது –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–என்று–திருவாய்மொழி -5 2-1 – – கலியை கெடுத்து உய்யும் வழியை
புலப்படுத்தும் மறையை தாழ்வுற்ற நிலையிலிருந்து மேம்பட உயர்த்தி அது காட்டும் வீட்டு நெறிக்கண் செலுத்துதல்-
உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – 95 – என்று மேலே இவரே கூறுவதும் காண்க –
பவ பயா பிதப்த ஜன பாகதேய வைபவ பாவிதாவ தரனேனபகவதா பாஷ்யகாரேண-என்று சம்சார பயத்தாலே தவித்துக் கொண்டு
இருக்கும் மக்களின்-பாக்யத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பகவான் ஸ்ரீ பாஷ்ய காரருடைய அவதாரம் -என்னும்
ஸ்ருதப்ரகாசிகை ஸ்ரீ சூக்தி இங்கு நினைத்தற்கு உரியது –
காண்மின் –
இது அனுபவத்திலே கண்ட உண்மை அன்றோ –
நான் உபதேசித்து தெரிந்து கொள்ள வேண்டும்படி யாவோ இருக்கிறது என்கிறார் –
எனவே நீங்கள் ஒவ் ஒருவரும் -எனக்கு என்ன தாழ்வு இனி -என்னும்படி என்னைப் போலே அடியார் அளவும்
பெருகும் வண்ணம் ஸ்ரீ எம்பெருமானார் இடம் ஈடுபடுவதே அடுப்பது என்னும் கருத்தும் தோற்றுகிறது-இது குறிப்பு எச்சம் –
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .