சங்க கால இலக்கியங்களில் ஸ்ரீ வைஷ்ணவம் / ஆய கலைகள் 64–

மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்

தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன.
அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற
நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.

இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும்,
வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள்.
பிற்கால இலக்கியங்களில் எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான்
இங்கே மாயோன் என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும்.
அப்படியே பிற்கால இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும்
அவன் சிவனின் மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும்
சேயோன் என்பது முருகனே என்ற பொருளும் பொருந்தும்.
வேந்தன் என்றால் இந்திரன் தானா? இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற
பொதுப் பொருளைக் கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும்
பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும்.
வருணன் என்பவன் வடமொழி வேதம் சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு.
வடமொழி வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான்.
இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம் நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். . .

புறத்திணையியலில் ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி
விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்

மாயோனின் நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும் புகழைப் பாடுவதைப் போல்
தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை.
மாயோனின் சிறப்பையும் பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை.
சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும் புகழையும்
மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டு விடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும் தாவா விழுப்புகழ் என்றும்
மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறது என்பது விளங்கும்.

—–

இப்போது கலித்தொகை கூறும் ராமாயண கதை காண்போம்.

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: —-கலித்தொகை 38:1-8

புலவர் கபிலர் யானை தன் கொம்புகள் வேன்கை மரத்தில் குத்தியதை பின் எடுக்க முடியாமல் தவித்ததை –
இமயமலையை வில்லாக வளைத்து (முப்புரம் எரித்த) சடையுடைய சிவபெருமான் தன் மனைவி உமையோடு அமர்ந்து
இருந்தபோது 10 தலை கொண்ட இராவணன் இமயமலை கீழ் கையிட்டு தூக்கிட முயல
சிவன் அழுத்த அல்லல் உற்றாதற்கு உவமையாக தந்துள்ளார்.

தமிழ் மக்களிடம் இராமாயணம் மிகுதியாக பரவி உள்ளதைக் காட்டும்.

———–

மணிமேகலையில் இராமாயணம்:

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில்
ஸ்ரீ ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

‘நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் –(உலக அறவி புக்க காதை, 10-20)

காயசண்டிகை கூறினாள் – “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து,
அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள்
எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம்
என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.
இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன – ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து
அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில்,
“ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான
தர்க்கமாகவே இராம காதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்த மதம் சார்ந்த புலவரால் என்றால்
அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!

“மீட்சி என்பது “இராமன் வென்றான்” என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது “நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்” எனக் கூறல்”–(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.

——–

திருமாலை
பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனை என்று
இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது ஆழ்வார்கள் திருமாலைப் பெருமையுடன் குறிப்பிடுவதற்கு ஒப்பாக விளங்குவதைக் காணலாம்.
திருமாலை இப்பேருலகின் வடிவமாகக் காணும் ஆழ்வார்களின் தத்துவநிலைக்கு ஒப்பாகவும்
அடிகளாரின் காப்பிய அடிகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

முற்ற உலகெலாம் நீயே யாகி
மூன்றெழுத் தாய முதல்வ னேயோ

—————-

ஐந்து மூர்த்தங்களை திருமால் தன்னுடன் உள்ளடக்கியவர்.
சங்கருஷணன், பிரத்யும்நன், அநிருத்தன் மற்றும் வாசுதேவன் என்பவை அவை.
பரிபாடல் அழகு தமிழில் இதனை நமக்கு தருகின்றது:
செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! – (பரி.3:81-82)
சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த உடம்பினை உடைய பிரத்யும்நனே!
பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன் பொருளாகும்.

காவிரிப்பூம்பட்டினத்து காரிக் கண்ணனார் கண்ணனையும் பலதேவனையும் இரு பெருந் தெய்வம் என பாடுகின்றார்:

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறம்:58:14-16

பிறப்பித்தோர் இல்லாத கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக
வந்தருளும் தயாபரனாவான். இதனை பரிபாடல் விளக்குகிறது:

புவ்வத் தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்-பரி.15:49-52-

ஆக ரொம்ப ரொம்ப காலத்தை குறைவாக மதிப்பிட்டாலும் கூட கிமு 500 க்கு சற்றும் குறையாத காலம் முதல்
பரிபாடலின் ஏழாம் நூற்றாண்டு ஊடாக இன்று வரையிலுமாக கிருஷ்ணனை முழுமுதல் கடவுளாக வணங்கும்
பாரம்பரிய தொடர்ச்சியினைக் காணமுடியும்.

————

கம்பராமாயணம் பாயிரப் பாடல் இன்னும் ஒருபடி மேலே சென்று உலகில் எந்த இடத்தின் மொழியானாலும்
அதில் ஸ்ரீ ராமகாதையைக் கேட்பவர்கள் அமரர் ஆவார்கள் என்று கூறுகிறது –

வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே

(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)

——————–

ஆ முக்த்யா மால்யதா -தெலுங்கு பிரபந்தம் -ஆண்டாளைப் பற்றி
ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

—————

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:—(ரிக்வேதம் 10.85.40)

“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர்.
பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”

பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது
என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு.
“மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது
இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட
இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.
முதலில் இந்த மந்திரத்தின் தாத்பர்யம் என்ன? பிறந்தது முதல் தேவர்களின் ஆசிர்வாதத்தாலும், அனுக்ரஹத்தாலும்
வளர்ந்த பெண்ணை, அவர்கள் ஆசியுடன் மனிதன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக் கொள்வது என்பது.

எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர்.
அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள்.
“சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது,
கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம்.
அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு.
இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன். ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை.
கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.
தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும்
திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்க வேண்டும்?
ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது.
திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன

………………

ஆய கலைகள் அறுபத்து நான்கின் பட்டியல் விளக்கம் …..

1. அக்ஷரா விலக்கணம் எழுத்திலக்கணம்
2. இலிகிதம் எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. ஜோதிடம் கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உறுப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிதுமொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் தாள இயல்
27. அத்திரப் பரிட்சை வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம் ஓட்டுகை
38. வித்து வேடனம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் மதன கலை
40. மோகனம் மயக்குக் கலை
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தருவ வாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் மகிழுறுத்தம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்–வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது–வான்புகுதல்)
53. அதிரிசியம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்–அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: