ஸ்ரீ ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்ட ர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

திருமாலின் ஐந்து நிலைகள்: அடியார்களுக்கு அருள்புரிவதற்காக ஐந்து விதமான நிலைகளில் திருமால் காட்சி தருகிறார். அவை,

1. பரநிலை – வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்குத் தரிசனம் தந்தருளும் பரவாசுதேவன்.
2. வியூஹ நிலை – தேவர்களின் குறைகேட்டு அவர்களுக்கு அருள்புரிவதற்குத் தயாராகப் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள்.
3. விபவ நிலை – மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்.
4. அந்தர்யாமி நிலை – அனைத்து உயிர்களுக்குள்ளும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் இறைவன்.
5. அர்ச்சை நிலை – கோயில்களிலும் நம் இல்லங்களிலும் நமக்கு அருள்புரிவதற்காக விக்கிரக வடிவில் காட்சி தரும் இறைவன்.

அர்ச்சை நிலையின் சிறப்பு

இந்த ஐந்து நிலைகளுள் அர்ச்சை என்ற நிலை கடைசியாகச் சொல்லப்பட்டிருந்தாலும், மற்ற நான்கு நிலைகளைக் காட்டிலும்
அர்ச்சையே மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. எல்லையில்லாத கருணை நிறைந்தவராகவும், எளிமையின் எல்லை நிலமாகவும்
அர்ச்சை நிலையில் இருக்கும் இறைவனை நாத்திகர், ஆத்திகர், நல்லவர், தீயவர், மனிதர், மிருகம் என அனைவரும்
காணலாம், வணங்கலாம், வணங்கி அருள் பெறலாம்.
அர்ச்சை நிலையின் வகைகள் இந்த அர்ச்சை நிலையைப் பிரதிஷ்டை செய்பவர்களைப் பொருத்து நான்கு விதமாகப் பிரிக்கிறார்கள்:

1. ஸ்வயம் வியக்தம் – இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால்,
அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.
ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள்.
ஸ்ரீ நாங்குநேரி, ஸ்ரீ திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ திருவேங்கடம், ஸ்ரீ புஷ்கரம், ஸ்ரீ நைமிசாரண்யம், ஸ்ரீ பத்ரிநாத், ஸ்ரீ முக்திநாத் ஆகிய
எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும்.

2. தைவிகம் – பிரம்மா, இந்திரன், சூரியன் போன்ற தேவர்கள் இறைவனை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தால்,
அதை தைவிகப் பிரதிஷ்டை என்று சொல்வார்கள். தைவிகம் என்றால் தேவர்களால் செய்யப்பட்டது என்று பொருள்.
உதாரணமாக, ஸ்ரீ காஞ்சீபுரத்தில் பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ அத்தி வரதர்,
குடந்தையில் சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் உள்ளிட்டோர் தைவிகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.

3. ஆர்ஷம் – முனிவர்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களை ஆர்ஷம் என்று சொல்கிறோம்.
ஸ்ரீ மார்க்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயில்,
ஸ்ரீ கோபில கோப்பிரளய ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் உள்ளிட்டவை
ஆர்ஷம் என்ற பிரிவின் கீழ் வரும்.

4. மானுஷம் – அரசர்கள், பக்தர்கள் உள்ளிட்ட மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருத்தலங்கள் மானுஷம் என்றழைக்கப்படும்.
கீழத் திருப்பதியில் ஸ்ரீ ராமாநுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்,
ஸ்ரீ பஞ்ச பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கேரளாவில் உள்ள ஸ்ரீ திருவித்துவக்கோடு உள்ளிட்டவை இந்தப் பிரிவில் அடங்கும்.

இந்த நான்கு விதமான திருத்தலங்களிலும் இறைவன் முழு சக்தியுடனும் முழு சாந்நித்தியத்துடனும் திகழ்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
எனினும், இறைவன் தானே விக்கிரக வடிவில் ஆவிர்ப்பவித்த இடங்கள் என்பதால், இவற்றுள் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
தனிச்சிறப்பு பெற்றவையாகக் கொண்டாடப் படுகின்றன.

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

என்னும் எட்டு திருத்தலங்களும் நாராயண மந்திரமாகிய எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள எட்டு எழுத்துகளையும் குறிப்பதாகவும்
பெரியோர்கள் கூறுகிறார்கள். அந்த எட்டு திருத்தலங்களின் பெருமைகளை இக் கட்டுரையில் காண்போம்.

ஸ்ரீ திருவரங்கம்
“ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!”-என்று ஸ்ரீ திருவரங்கம் கோவிலின் பெருமைகளைப் பட்டியலிடுகிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

1. ஆராத அருளமுதம் பொதிந்த கோவில் எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத அமுதம் போன்றவனும்,
கருணை நிறைந்தவனுமான திருவரங்கநாதன் கோவில் கொண்டிருக்கும் திருத்தலம் திருவரங்கமாகும்.
அத்தகைய அரங்கனின் கருணை உள்ளிட்ட குணங்களிலும், அமுதம் போன்ற அழகிலும் ஆழ்வார்கள் மிகவும் ஆழ்ந்திருந்தார்கள்.
ஸ்ரீ மதுரகவிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆழ்வார்களாலும் பாடப்பட்ட ஒரே திருத்தலம் திருவரங்கமே ஆகும்.
தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துகளுக்கு இணையாக 247 பாசுரங்களால் இப்பெருமாளை ஆழ்வார்கள் துதித்துள்ளார்கள்.

ஸ்ரீ ஆண்டாளும், ஸ்ரீ திருப்பாணாழ்வாரும் ஸ்ரீ அரங்கனின் திருவடிகளிலேயே கலந்து நித்திய கைங்கரியத்தைப் பெற்றார்கள்.
ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் ஸ்ரீ வைகுண்டத்தையும் விரும்பாமல், ஸ்ரீ திருவரங்கத்திலேயே இருந்து கொண்டு
ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து வருகிறார்.
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அரங்கனுக்காக மதில் சுவர் எழுப்பித் தொண்டு செய்தார்.

2. அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில் தாமரையில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால்,
அயோத்தியை ஆண்டு வந்த இக்ஷ்வாகு மன்னருக்குப் பரிசாக வழங்கப்பட்ட கோவிலாகும் ஸ்ரீ திருவரங்கம்.
ஸ்ரீ திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, அதிலிருந்து ஸ்ரீரங்க விமானம் தோன்றியது. அந்த விமானத்தை ஸ்ரீ கருடன் ஏந்தி வர,
ஸ்ரீ ஆதிசேஷன் விமானத்தின் மேல் குடை பிடிக்க, ஸ்ரீ விஷ்வக்சேனர் கையில் பிரம்புடன் வழியில் உள்ளோரை விலக்க,
சூரியனும் சந்திரனும் சாமரம் வீச, நாரதரும் தும்புருவும் கானம் இசைக்க, தேவர்கள் பூமாரி பொழிய,
வெளிவந்த அவ்விமானத்தின் உள்ளே தேவி பூதேவியோடு துயில் கொண்ட நிலையில் ஸ்ரீமந்நாராயணன் பிரம்மாவுக்குக் காட்சி தந்தார்.

இந்த துயில் கொண்ட திருக்கோலம் திருமால் சுயமாக ஆவிர்ப்பவித்த திருக்கோலமாகும்.
ஸ்ரீமந்நாராயணன் என்று பெயர்பெற்ற இந்தப் பள்ளிகொண்ட பெருமாளைத் தனது சத்திய லோகத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தார் பிரம்மா.
பல யுகங்கள் கழித்து, பூமியை ஆண்டு வந்த இக்ஷ்வாகு மன்னர் சத்திய லோகத்துக்கு வந்த போது,
அந்தப் பள்ளிகொண்ட பெருமாளைத் தரிசித்துப் பரவசம் அடைந்தார். அவரைத் தனது தலைநகரான அயோத்திக்கு அழைத்துச் செல்ல
விரும்புவதாகவும் பிரம்மாவிடம் பிரார்த்தித்தார். இக்ஷ்வாகுவின் பிரார்த்தனையை பிரம்மாவும் ஏற்றதால், அந்தப் பெருமாளை
ஸ்ரீ அயோத்தியில் பிரதிஷ்டை செய்தார் இக்ஷ்வாகு. ஜகந்நாதன் என்ற பெயரோடு அங்கிருந்தபடி ஸ்ரீ அயோத்தியின்
மன்னர்களுக்கும் குடிமக்களுக்கும் அந்தப் பெருமாள் அருட்பாலித்து வந்தார். அவர் தான் பின்னாளில் திருவரங்கத்தை அடைந்தார்.

3. தோலாத தனிவீரன் தொழுத கோவில் தோலாத தனிவீரன் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமனால் பூஜிக்கப்பட்ட கோவிலாகும் ஸ்ரீ திருவரங்கம்.
இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய மன்னர்கள் வழி வழியாக அயோத்தியில் திகழ்ந்த இப்பெருமாளுக்கு தினசரி பூஜைகளைச் செய்து வந்தார்.
அந்த வகையில், இறைவனே அந்த இக்ஷ்வாகு குலத்தில் ஸ்ரீ ராமனாக அவதரித்த போது, அவனும் இப்பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தான்.
ஸ்ரீ திருவரங்கத்தில் தான் கம்பர் தாம் இயற்றிய ஸ்ரீ ராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ பெருமாளாலே ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ பெருமாள் என்பதால், ஸ்ரீ பெரிய பெருமாள் என்ற பெயர் இந்தப் பெருமாளுக்கு உண்டானது.
அதனாலேயே, இந்தப் பெரிய பெருமாளோடு தொடர்புடைய அனைத்துக்கும் பெரிய என்ற அடைமொழி ஏற்பட்டுவிட்டது.
ஊர் – பேரரங்கம், கோவில் – பெரிய கோவில், தாயார் – பெரிய பிராட்டியார், நிவேதனம் – பெரிய அவசரம்,
வாத்தியம் – பெரிய மேளம், பட்சணங்கள் – பெரிய திருப்பணியாரங்கள்.
இரவில் மற்ற திவ்யதேசத்துப் பெருமாள்கள் அனைவரும் சயனிப்பதற்குத் திருவரங்கநாதனின் கருவறைக்கு வருவதாகவும்,
காலையில் மீண்டும் தத்தம் திவ்ய தேசங்களுக்குச் சென்று விடுவதாகவும் ஓர் ஐதீகம் உண்டு.

4. துணையான வீடணற்குத் துணையாம் கோவில் ராமனுக்குத் துணைநின்ற விபீஷணனுக்குத் துணையாக நின்று காப்பது திருவரங்கம் கோவிலாகும்.
ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் நிறைவடைந்தபின், விபீஷணனுக்குப் பரிசாக, ஸ்ரீரங்கவிமானத்தையும் அதில்
துயில்கொள்ளும் பெருமாளையும் ஸ்ரீ ராமன் அளித்தான். அந்தப் பெருமாளைத் தன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளச் செய்து
இலங்கை நோக்கி விபீஷணன் சென்ற போது, வழியில் காவிரிக் கரையில் உள்ள திருவரங்கத்தைக் கண்டான்.

“வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம்”
என்று புகழப்படும் அந்த அழகிய ஊரில் பெருமாளுக்குப் பிரம்மோற்சவத்தைக் கொண்டாடவும் விரும்பினான் ஸ்ரீ விபீஷணன்.

அதனால் தற்காலிகமாகப் பெருமாளை அங்கே பிரதிஷ்டை செய்து பிரம்மோற்சவத்தை நடத்தினான் விபீஷணன். ஆனால், பெருமாளோ திருவரங்கத்திலேயே நிரந்தரமாகக் குடிகொண்டிருக்க விரும்பினார். அதனால் இலங்கைக்கு வரமறுத்து, திருவரங்கத்திலேயே துயில்கொண்டு விட்டார். எனினும், விபீஷணனுக்கு அருள்புரிவதற்காக அவன் இருக்கும் தென்திசையை நோக்கிப் பள்ளிகொண்டார் அரங்கன். தினந்தோறும் இரவில் விபீஷணன் திருவரங்கத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டுவிட்டுச் செல்வதாக ஐதீகம் உண்டு.

5. சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில் பெறுவதற்கு அரிய பலன்களையும் தரவல்லது திருவரங்கம் கோவிலாகும்.
ஸ்ரீ ராமாநுஜர் வாழ்ந்த காலத்தில், பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதன் திருவடிகளில்
ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி செய்து, தமது அடியார்கள் அனைவருக்கும் முக்தி அருள வேண்டும் என்று பிரார்த்திக்க,
அதை ஸ்ரீ அரங்கனும் ஏற்று அருள்புரிந்தான். ஸ்ரீ ராமாநுஜரின் நெறியில் வந்த ஸ்ரீ வேதாந்த தேசிகன், அரங்கனின் திருவருளால்,
அரங்கனின் பாதுகைகளைக் குறித்து ‘பாதுகா ஸஹஸ்ரம்’ எனப்படும் 1008 ஸ்லோகங்களை ஒரே இரவில் பாடி,
கவிதார்க்கிக சிம்மம் என்னும் பட்டம் பெற்றார். ஸ்ரீ ராமாநுஜரின் மறு அவதாரமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு சிஷ்யனாக இருந்து,
ஓராண்டு காலம் திருவாய்மொழி விளக்கவுரையை அவரிடமிருந்து கேட்டு மகிழ்ந்தான் ஸ்ரீ அரங்கன்.
தனது ஆதிசேஷ சிம்மாசனத்தையே ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்குப் பரிசாக அளித்தான் அரங்கன்.

6. செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில் வேதங்கள் அனைத்துக்கும் பிரணவமாகிய ஓம்காரமே முதல் எழுத்தாகும்.
அந்த ஓம்கார வடிவில் திருவரங்கத்தின் விமானம் இருப்பதால், ‘பிரணவாகார விமானம்’ என்று ஸ்ரீ ரங்க விமானம் அழைக்கப்படுகிறது.
அந்த வேதங்களால் போற்றப்படும் விழுப்பொருளான திருமால், அந்த ஓம்கார விமானத்தின் கீழே துயில்கொள்கிறார்.

7. தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோவில் ஸ்ரீ திருவரங்கம் எனத்திகழும் ஸ்ரீ கோவில் தானே
இக் கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்கள் ஏழு உலகங்களை குறிப்பதாகச் சொல்வார்கள்:

1. வெளி மாடங்கள் சூழ்ந்த சுற்று – பூலோகம்
2. திரிவிக்கிரம சோழன் சுற்று – புவர்லோகம்
3. கிளிச்சோழன் சுற்று – சுவர்லோகம்
4. திருமங்கை மன்னன் சுற்று – மஹர்லோகம்
5. குலசேகரன் சுற்று – ஜனோலோகம்
6. ராஜ மகேந்திர சோழன் சுற்று – தபோலோகம்
7. கருவறையைச் சுற்றி உள்ள தருமவர்ம சோழன் சுற்று – சத்யலோகம்.

எனவே, ஏழு உலகங்களும் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோவிலுக்குள் அடக்கம் என்பார்கள்.
ஸ்ரீ வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதிக்கு நிகராகக் காவிரியும், வைகுண்ட லோகத்தைப் போல ஸ்ரீ அரங்கனின் திருக்கோவிலும்,
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள பெருமாளுக்கு இணையாகத் திருவரங்கநாதனும் திகழ்வதால், திருவரங்கம் ‘பூலோக வைகுண்டம்’ என்றழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த திருவரங்கத் திருத்தலம் அனைத்துப் பாபங்களையும் – தீராத வினைகளையும் – தீர்க்க வல்லது.
ஸ்ரீ திருவரங்கநாதனைக் குறித்து ஸ்ரீ ரங்கநாதாஷ்டகம் பாடிய ஆதி சங்கரர்,
“இதம் ஹி ரங்கம் த்யஜதாம் இஹ அங்கம் புனர்ந சாங்கம் யதி சாங்கமேதி
பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம் யானே விஹங்கம் சயனே புஜங்கம்” என்று பாடினார்.
அதாவது, “அனைத்துப் பாபங்களையும் போக்கவல்ல திருவரங்கத்தில் ஒருவன் உயிர் நீத்தால், அவன் மீண்டும் பிறக்க மாட்டான்.
அப்படிப் பிறக்க நேர்ந்தால், முக்தாத்மாவாக ஸ்ரீ வைகுண்டத்தில் தான் பிறப்பான்!” என்பது இதன் கருத்தாகும்.

திருவேங்கடம்
“கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு!
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு!
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு!
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு!
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு!
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே!”-என்று திருவேங்கடமலையைப் போற்றுகிறார் வேதாந்த தேசிகன்.

1. கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு
“குறையொன்றும் இல்லை! மறைமூர்த்தி கண்ணா!” என்று கிருஷ்ணனை நாம் புகழ்கிறோம். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யசோதைக்கு
மட்டும் ஒரு குறை இருந்ததாம். ஸ்ரீ கண்ணனை வளர்த்து, அவனது ஆச்சரியமான பால லீலைகளைக் கண்டு களிக்கும் பேறு பெற்ற யசோதை,
ஸ்ரீ கண்ணனுக்குத் தான் ஏற்பாடு செய்து ஒரு கல்யாணத்தை நடத்திப் பார்க்க இயலவில்லையே என வருந்தினாளாம்.
ஸ்ரீ கண்ணன் பதினாறாயிரத்து எட்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும், அந்த அனைத்துத் திருமணங்களையும்
ஸ்ரீ ஆயர்பாடியை விட்டுச் சென்ற பின்னரே செய்து கொண்டார்.

எந்த திருமணத்தையும் யசோதை ஏற்பாடு செய்து நடத்தவில்லை, அவளால் வந்து காணவும் இயலவில்லை, அவளுக்கு அழைப்பிதழ் கூட வரவில்லை.
இதை எண்ணி வருந்திய யசோதையிடம் ஸ்ரீ கண்ணன், “கலியுகத்தில் நான் எடுக்க உள்ள அடுத்த அவதாரத்தில் இக்குறையைப் போக்குகிறேன்!” என்றான்.
அதனால் தான், கலியுகத்தில் ஸ்ரீ திருமலையில் ஸ்ரீநிவாசனாக இறைவன் அவதரித்த போது, அங்கே ஸ்ரீ வகுளமாலிகையாக வந்து பிறக்கும்படி
யசோதைக்கு அவன் அருள்புரிந்தான். அந்த ஸ்ரீ வகுளமாலிகையே ஸ்ரீ பத்மாவதிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும் கல்யாண ஏற்பாடுகளைச் செய்வித்து,
திருமணத்தை நடத்தித் தனது கண்ணாறக் கண்டு களித்தாள்.

இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யசோதைக்கு ஏற்பட்ட குறையை நிவர்த்தி செய்து, குறையொன்றும் இல்லாத கோவிந்தனாக –
ஸ்ரீ கண்ணனின் மறுவடிவமாக – மலையப்பன் நமக்குக் காட்சி தருகிறார்.
ஸ்ரீ கண்ணனான அந்த மலையப்பனின் திருவடி இணைகளை நமக்குக் காட்டித் தருகிற மலையாகத்திருவேங்கட மலை திகழ்கிறது.

2. கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு
“பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!”என்று பாடினார் ஸ்ரீ நம்மாழ்வார்.
ஸ்ரீ திருவேங்கடமுடையானைத் தரிசிக்கிறோமோ இல்லையோ, ஸ்ரீ திருவேங்கட மலையைத் தரிசித்தாலே போதும்,
நமது பாபங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
‘கடம்’ என்றால் பாபங்கள் என்று பொருள். ‘வேம்’ என்றால் போக்குவது.
பாபங்களைப் போக்கும் மலையாதலால், ‘வேங்கடம்’ என்று இம்மலை அழைக்கப் படுகிறது.

3. திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு
பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீ ரங்கத்தைச் சொல்வது போல்,‘கலியுக வைகுண்டம்’ என்று ஸ்ரீ திருமலையைச் சொல்வார்கள்.
கலியுகத்தில் பிறவிப் பிணியில் துன்புறும் மக்களைக் கடைத்தேற்ற என்ன வழி என்று ஸ்ரீ வைகுண்டத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தாராம் ஸ்ரீ திருமால்.
அப்போது, ஸ்ரீ லட்சுமி தேவி, “நீங்கள் இங்கிருந்தபடிச் சிந்திப்பதால் ஒரு பயனும் இல்லை! நீங்கள் பூமியில் போய் ஸ்ரீ கோயில் கொண்டு
காட்சி தந்தால் தான் அடியார்கள் உங்களை வந்து சரணடைந்து உய்ய முடியும்! எனவே பூமியில் முதலில் குதியுங்கள்!” என்றாளாம்.

ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நேராகப் பூமியில் குதிப்பதற்குப் பதிலாக, முதலில் ஒரு மலையில் குதித்து விட்டு,
அதன்பின் பூமியில் இறங்க நினைத்த திருமால், வைகுண்டத்திலிருந்து நேராகத் திருவேங்கட மலையில் குதித்தார்.
அங்கிருந்து தான் மற்ற திருக்கோயில்களுக்கு எழுந்தருளினாராம். எனவே மற்ற திருத்தலங்களுக்கும் முன்னோடியாக,
கலியுகத்தில் நாம் கண்ணால் காணக் கூடிய வைகுண்டமாக – மோக்ஷ லோகமாக – திருவேங்கட மாமலை விளங்குகிறது.

4. தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு சுவாமி
ஸ்ரீ புஷ்கரிணி, பாபநாச தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாய கங்கை, பாண்டவ தீர்த்தம், குமார தாரா எனப்
பற்பல புண்ணியப் பொய்கைகள் ஸ்ரீ திருமலையில் மலிந்துள்ளன. அவற்றில் நீராடுவோர் அனைத்துப் பாபங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள்.

5. புண்ணியத்தின் புகல் இது என்னப் புகழும் வெற்பு
புண்ணியத்தின் மொத்த வடிவமாகவும், பாபங்களிலிருந்து விடுபட விரும்புவோர்க்கு ஒரே புகலிடமாகவும் விளங்கும்
ஸ்ரீ திருவேங்கடமுடையான் திகழும் மலை திருவேங்கட மலையாகும். ஸ்ரீ கீதையில் ஸ்ரீ கண்ணன் சொன்ன,
“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:” என்ற ஸ்ரீ சரம ஸ்லோகத்தின்
வடிவமாகவே திருமலையப்பன் காட்சி தருகிறார். “மற்ற மார்க்கங்களைக் கொண்டு என்னை அடையலாம் என்ற எண்ணத்தை விட்டு,
என்னையே வழியாகப் புரிந்து கொண்டு என் திருவடிகளைப் பற்றிக்கொள்! நான் உன்னை அனைத்துப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்!
சோகப்படாதே!” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்தாகும்.
ஸ்ரீ திருவேங்கட முடையான் தன் வலது திருக்கரத்தைத் தன் திருவடி நோக்கிக் காட்டுகிறார்.

அதாவது, “பிற மார்க்கங்களைக் கொண்டு என்னை அடையலாம் என்ற எண்ணத்தை விட்டு, என் திருவடிகளை வந்து பிடித்துக் கொள்!” என்று
அந்த வலது திருக்கரத்தாலே சரம ஸ்லோகத்தின் முதல் பாதியை விளக்குகிறார். இடது திருக்கரத்தைத் தன் தொடையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதன் மூலம், “அவ்வாறு நீ என்னைச் சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலையே தொடை அளவாக வற்றச் செய்துவிடுவேன்! சோகப் படாதே!” என்று
ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் இரண்டாம் பாகத்தில் அளித்த உறுதியை நமக்குத் தெளிவாக்குகிறார்.
எனவே ஸ்ரீ கீதையின் சரம ஸ்லோகமே ஒரு வடிவம் தாங்கி வந்திருப்பது போல் அமைந்துள்ளது மலையப்பனின் தோற்றம்.

“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பெருமாள்” என்று திருவேங்கடமுடையானை அழைப்பார்கள்.
தலைகனத்தை விட்டு இறைவனிடம் சரணாகதி செய்வதையே ‘மொட்டைத் தலை’ என்று இங்கே குறிப்பிடுகிறார்கள்.
அவ்வாறு தலைகனம் அற்றவர்களாக (மொட்டைத் தலையோடு) திருவேங்கடமுடையானிடம் சரணாகதி செய்பவர்களுக்குப் பிறவிக் கடலையே
முழங்கால் அளவாக வற்ற வைக்கிறார் அப்பெருமாள்.
எனவே தான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பெருமாள் என்று அவரைச் சொல்கிறோம்.

6. பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
முக்தி பெற்று வைகுண்டத்தை அடையும் ஜீவாத்மா எத்தகைய மகிழ்ச்சியைப் பெறுவாரோ, அதே மகிழ்ச்சியை ஏழு மலை ஏறி வந்து
தன்னைத் தரிசிக்கும் அனைத்து அடியார்களுக்கும் இவ்வுலகிலேயே வழங்குகிறார் திருமலையப்பன்.
அதனால் தான் ஸ்ரீ குலசேகர ஆழ்வார், “செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின் கோவிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!” என்ற பாடலில்,
ஸ்ரீ திருமலையில் பெருமாள் சந்நதிக்கு எதிரே படியாக இருக்கும் பேறு தமக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
ஸ்ரீ வைகுண்டம் அடைந்து பெறும் மகிழ்ச்சியை விட திருமலையில் படியாய் இருப்பது தமக்குப் பெருமகிழ்ச்சி என்று இதன் வாயிலாகத் தெரிவிக்கிறார்.

7. விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
மண்ணவர்கள் ஏறி வந்து தரிசிக்கவும், விண்ணவர்கள் இறங்கி வந்து தரிசிக்கவும் வசதியாக, இருவருக்கும் நடுவே மலைக்கு மேல்
மலையப்ப சுவாமி எழுந்தருளியிருந்து அருட்பாலித்து வருகிறார். திருமலையில் ஸ்ரீநிவாசனாக அவதாரம் செய்த ஸ்ரீ பெருமாள்,
ஆகாச ராஜனின் மகளாகத் தோன்றிய பத்மாவதியை மணந்து கொள்வதற்காக குபேரனிடம் இருந்து பெருந்தொகையைக்
கடனாகப் பெற்றார் என்பதை நாம் அறிவோம். அதனால் தான் ஸ்ரீநிவாசனுக்கும் ஸ்ரீ பத்மாவதிக்கும் நடைபெற்ற
திருமணத்தைப் பத்மாவதி கல்யாணம் என்று சொல்லாமல்‘ஸ்ரீநிவாச கல்யாணம்’ என்கிறோம்.

(பொதுவாகப் பெண் வீட்டார் செலவு செய்து கல்யாணம் செய்வதால், ஸ்ரீ லட்சுமி கல்யாணம், ஸ்ரீ ருக்மிணி கல்யாணம்,
ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீ சீதா கல்யாணம், ஸ்ரீ பார்வதி கல்யாணம், ஸ்ரீ வள்ளித் திருமணம் என்று மணமகளின் பெயரை இட்டுச் சொல்கிறோம்.
ஆனால் இங்கே மணமகனே கடன் வாங்கிச் செலவு செய்து கல்யாணத்த நடத்திக் கொண்டதால், மணமகனின் பெயரை இட்டு ஸ்ரீநிவாச கல்யாணம் என்று
அழைக்கும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.)
திருமாலை விட ஸ்ரீ மகாலட்சுமிக்கு அடியார்கள் மேலே கருணை அதிகம். அதனால் தான் தனது அடியார்கள் தன்னைத் தரிசிக்க
ஏழு மலை ஏறி வந்து சிரமப்பட வேண்டாம் என்று கருதிய ஸ்ரீ பத்மாவதித் தாயார், மலைக்குக் கீழேயே கோயில் கொண்டு நமக்கு அருட்பாலித்து வருகிறாள்.
அவளை முதலில் தரிசித்து விட்டு அவளுடைய பரிந்துரையோடு மலையப்பனிடம் செல்வோர்களின் அனைத்துக் கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படும் என்பது பெரியோர்களின் வாக்கு.

8. வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே
திருமலையில் உள்ள ஏழு மலைகள் என்ன? அடியார்கள் மேல் திருமலையப்பன் கொண்ட கருணை என்னும் கருப்பஞ்சாறு
திட வடிவம் பெற்று ஏழு மலைகளாக மாறி விட்டது என்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
இந்த ஸ்ரீ வேங்கட மலையை ‘வேத மலை’ என்றும் அவர் அழைக்கிறார்.
ஏனெனில், ரிக் வேதத்தில் உள்ள ஒரு மந்திரம் இந்தத் திருமலையின் பெருமையைப் பேசுகிறது.

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”
என்ற மந்திரம், “மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில்
தவிப்பவனாகவோ, சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே! அலர்மேல் மங்கைத் தாயாரைத்
திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக! பக்தர்களோடு இணைந்து
கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால், அவர் உன்னைக் காப்பார்!
திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

—————

ஸ்ரீ முஷ்ணம்
1. பெயர்க்காரணம்
‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை
எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.
இந்தத் திருத் தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

2. தல வரலாறு
ஹிரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த போது, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இந்த க்ஷேத்திரத்தில்
பன்றி வடிவில் வராகனாகத் தோன்றினார் திருமால். ஹிரண்யாட்சனைத் தாக்கி அவர் கீழே தள்ளிய போது, ஸ்ரீ வராகனின் திருமேனியில் இருந்து
சிந்திய வியர்வை இங்குள்ள நித்ய புஷ்கரிணி என்னும் பொய்கையாக உருவானது. ஸ்ரீ பூமிதேவியை மீட்டபின், மேற்கு நோக்கிய திருமேனியோடும்,
தெற்கு நோக்கிய முகத்தோடும், இரண்டு திருக்கரங்களையும் இடுப்பில் வைத்தபடி, ஸ்ரீ தேவி பூதேவியோடு இங்கே காட்சி தருகிறார் ஸ்ரீ பூவராகப் பெருமாள்.
இவரது திருமேனியில் அனைத்து யாக யக்ஞங்களும் இருப்பதால், யக்ஞவராக மூர்த்தி என்று இவர் அழைக்கப்படுகிறார்.

3. கோயிலின் சிறப்பம்சங்கள்
பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது.
மாசி மக உற்சவத்தின் போது, இக்கோயிலின் உற்சவர் சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை என்ற கிராமத்துக்கு எழுந்தருள்வார்.
அவ்வூரில் உள்ள தர்காவின் வாசலுக்குப் பெருமாள் எழுந்தருளும் போது, அங்குள்ள இஸ்லாமியப் பெரியவர்கள் பெருமாளுக்கு
அரிசி, பூ, பழம் சமர்ப்பித்து மரியாதை செய்வார்கள்.
ஹிரண்யாட்சனிடமிருந்து பூமியை மீட்பதற்காகச் சுயம்புவாக இங்கே திருமால் தோன்றியபடியால், ஸ்ரீ முஷ்ண க்ஷேத்திரம்
எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

—————

ஸ்ரீ நாங்குநேரி
1. பெயர்க்காரணம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த க்ஷேத்திரத்தில் உள்ள ஒரு குளம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளதால்,
இவ்வூர் நான்கு ஏரி என்றழைக்கப்பட்டது. அந்தப் பெயர் மருவி ‘நாங்குநேரி’ என்று மாறியதாகச் சொல்வார்கள்.
அல்லது, அந்த நான்கு ஏரிகளின் கூரிய முனைகள் சந்திக்கும் மையப் பகுதி ஆதலால், நான்கு கூர் ஏரி என்று இவ்வூர் அழைக்கப்பட்டு,
காலப்போக்கில் ஸ்ரீ ‘நாங்குநேரி’ என்று ஆனதாகவும் சொல்வார்கள்.

2. பெருமாளின் திருக்கோலம்
ஸ்ரீ வைகுண்டத்தில் எப்படித் திருமால் காட்சி தருகிறாரோ, அதுபோன்ற தோற்றத்துடன், அமர்ந்த திருக்கோலத்தில்,
ஸ்ரீ ஆதிசேஷன் குடையாய் இருக்க, இருபுறமும் ஸ்ரீ தேவியும், ஸ்ரீ பூதேவியும் வீற்றிருக்க, ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீச,
இவ்வூரில் சுயமாகவே ஆவிர்ப்பவித்த ஸ்ரீ பெருமாள், சூரியன், சந்திரன், பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர் ஆகியோருக்கு இங்கே காட்சி தந்தார்.
வானளவு ஓங்கிய மலை போன்ற தோற்றத்துடன் இங்கே திருமால் திகழ்வதால், அவருக்கு ஸ்ரீ ‘வானமாமலை’ என்ற பெயர் ஏற்பட்டது.
அந்தப் பெருமாளின் பெயரை இட்டே ஸ்ரீ வானமாமலை என்ற பெயராலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இங்கே ஸ்ரீ வரமங்கைத் தாயார் என்ற பெயரோடு மகாலட்சுமி அவதாரம் செய்தபடியால், ஸ்ரீவரமங்கல நகர் என்றும்இவ்வூருக்குப் பெயருண்டு.

3. எண்ணெய் அபிஷேகம்
இவ்வாறு சுயமாக இங்கே ஆவிர்ப்பவித்த பெருமாள், இடைக்காலத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடந்தார்.
சில காலம் கழித்து, திருக்குருகூரை ஆண்டு வந்த காரிமன்னரும் உடையநங்கையும், பிள்ளை வரம் வேண்டித் திருக்குறுங்குடி பெருமாளை வணங்கினார்கள்.
அவர்களின் கனவில் தோன்றிய திருக்குறுங்குடி பெருமாள், “உங்களுக்கு எப்படிப்பட்ட பிள்ளை வேண்டும்?” என்று கேட்டார்.
“உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்!” என்றார்கள் காரியும் உடைய நங்கையும்.
“என்னைப் போல் இன்னொருவன் இல்லை! அதனால் நானே வந்து உங்களுக்கு மகனாகப் பிறக்கிறேன்!” என்று சொன்ன திருக்குறுங்குடி பெருமாள்,
“இங்கிருந்து கிழக்கே சென்றால், நான்கு ஏரிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் எறும்புகள் சாரை சாரையாகச் செல்லும்.
அந்த எறும்புப் புற்றுக்கு மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான். அந்த இடத்தைத் தோண்டினால் நான் தென்படுவேன்!
உங்களுக்கு அனுக்கிரகமும் புரிவேன்!” என்றும் கூறினார்.
அவ்வாறே காரி மன்னரும் அவ்விடத்தைக் கண்டறிந்து தோண்டுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
நிலத்தை அகழ்ந்த போது, கடப்பாறையானது பெருமாளின் விக்கிரகத்தின் நெற்றியில் பட்டு ரத்தம் கசியத் தொடங்கிற்று.
அதனால் பெருமாளின் தலையில் எண்ணெயை வைத்து ரத்தம் வழிவதைத் தடுத்தார்கள். அதன்பின் நிலத்தில் இருந்து வெளிவந்த
ஸ்ரீ வானமாமலை பெருமாளை நாங்குநேரியில் மீண்டும் பிரதிஷ்டை செய்தார்கள்.
அந்தப் பெருமாளின் அருளால் தான் காரிக்கும் உடையநங்கைக்கும்
மகனாக நம்மாழ்வார் அவதரித்தார்.
பூமியை அகழ்கையில் பெருமாளின் நெற்றியில் ரத்தம் வந்த போது எண்ணெய் தேய்த்து அதைத் தடுத்தார்கள் அல்லவா?
அதன் நினைவாக இன்றும் வானமாமலையில் பெருமாளுக்குத் தினந்தோறும் எண்ணெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் உள்ளது.
அவ்வாறு அபிஷேகம் செய்த எண்ணெயை இங்குள்ள நாழிக் கிணற்றில் சேமித்து வைப்பார்கள்.
அந்த எண்ணெயை உண்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

4.ஸ்ரீ ஆழ்வார் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடி இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

————-

ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம்

இறைவன் சுயமாக ஆவிர்ப்பவித்த திருத்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீ முக்திநாத் நேபாளத்தில் உள்ள ஸ்ரீ சாளக்கிராமம் எனப்படும்
ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, 8 ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களுள் ஒன்று.
அடியார்களுக்கு அருள் புரிவதற்காக ஸ்ரீ சாளக்கிராமக் கற்களின் வடிவிலே ஸ்ரீ திருமால் காட்சி அளிக்கத் திருவுள்ளம் கொண்டார்.
அதனால் இத் திருத்தலத்தில் ஓடும் கண்டகி நதியில் மலிந்து கிடக்கும் ஸ்ரீ சாளக்கிராமக் கற்களாக அவரே வடிவம் கொண்டார்.
அத்தகைய ஸ்ரீ சாளக்கிராம ரூபத்தில் இந்தத் திருக்கோயிலில் திருமாலே சுயமாகத் தோன்றியதாகத் தல வரலாறு சொல்கிறது.
இங்கு வந்து திருமாலை வணங்குவோர் அனைவருக்கும் திருமால் முக்தியை அருள்வதால், ஸ்ரீ முக்திநாத் என்று இத்தலம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ குலசேகர ஆழ்வார், ஸ்ரீ பெரியாழ்வார்,ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிய மூவரும் இப் பெருமாளைத் தங்கள் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

————-

ஸ்ரீ புஷ்கரம்
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீருக்கு அருகில் உள்ள ஸ்ரீ புஷ்கரம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வராகப் பெருமாளும்
சுயமாகத் தோன்றிய மூர்த்தி ஆவார். ஸ்ரீ முஷ்ணத்தைப் போலவே, ஹிரண்யாட்சனிடம் இருந்து பூமியை மீட்டுப் பழைய நிலையில்
பூமியை நிலைநிறுத்திய பின், இங்கே வந்து ஸ்ரீ வராகப் பெருமாள் கோவில் கொண்டதாகத் தலவரலாறு.
(ஒரே மாதிரியான சம்பவங்கள் இப்படி இரண்டு திருத்தலங்களின் வரலாற்றில் குறிப்பிடப் பட்டிருந்தால், வெவ்வேறு யுகங்களில்
அந்தந்த ஊர்களில் அதே வரலாற்றை இறைவன் நிகழ்த்தி இருப்பார் என்று புரிந்து கொள்ள வேண்டும் எனப் பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.)
ஸ்ரீ பரமபுருஷன் என்ற பெயரோடு வராகனும், ஸ்ரீ புண்டரீகவல்லி என்ற பெயரோடு ஸ்ரீ பூமி தேவியும் இங்கே நமக்கு அருட்பாலிக்கிறார்கள்.

———————

ஸ்ரீ பத்ரிநாத்
அலகனந்தா நதிக்கரையில், பூமியில் இருந்து சுமார் 10000 அடி உயரத்தில் இமய மலைப்பகுதியில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.
ஸ்ரீ அஷ்டாக்ஷரம் எனப்படும் எட்டெழுத்து மந்திரத்தை உலகில் பிரச்சாரம் செய்ய நினைத்த திருமால், தானே நாராயணன் என்னும் குருவாகவும்,
நரன் என்னும் சீடனாகவும் இங்கே சுயமாகத் தோன்றினார். நாராயணன் நரனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தார்.
பத்மாசனத்தில் யோகம் செய்யும் திருக்கோலத்தில் இன்றும் திருமால் நமக்கு இங்கே காட்சி தருகிறார்.
திருமால் கடுங்குளிருக்கு மத்தியில் இங்கே தவம் புரிந்த போது, ஸ்ரீ லட்சுமி தேவி இலந்தை மரமாக வந்து திருமாலைச் சூழ்ந்து குளிரில் இருந்து காத்தாள்.
இலந்தை மரத்துக்கு ‘பதரி’ என்று பெயர். பதரி மரமாக இங்கே லட்சுமி தேவி தோன்றியதால், ‘பதரிகாசிரமம்’ என்று இத்தலம் பெயர்பெற்றது.
இத்திருத் தலத்தை ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

———-

ஸ்ரீ நைமிசாரண்யம்
உத்திரப் பிரதேசத்தில் லக்னோவுக்கு வடக்கே உள்ளது இந்தத் திருத்தலம்.
இது எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களுள் ஒன்று, 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, 9 தபோ வனங்களுள் ஒன்று.
ஆதி காலத்தில் தவம் புரிய விரும்பிய முனிவர்கள், தாங்கள் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறுமாறு பிரம்மாவிடம் வேண்டினார்கள்.
ஒரு தர்ப்பைப் புல்லை வளையமாக வளைத்து உருட்டிய பிரம்மா, “இது எங்கே போய் நிற்கிறதோ, அங்கே தவம் புரியுங்கள்!” என்று கூறினார்.
அந்தப் புல் வளையம் இந்தத் திருத்தலத்தில் வந்து நின்றது. ‘நேமி’ என்றால் வளையம் என்று பொருள்.
நேமி நின்ற இடமாதலால், ‘நைமிசாரண்யம்’ என்று இவ்வூர் பெயர் பெற்றது. இங்கே தவம் புரிந்த முனிவர்களுக்குத்
திருமால் நேரில் வந்து காட்சி அளித்தார். இங்குதான் பதினெட்டு புராணங்களும் சூத பௌராணிகரால் உபதேசம் செய்யப்பட்டன.
இன்றும் இங்கே காட்டின் வடிவிலேயே திருமால் திகழ்கிறார். இப்பெருமானிடம் சரணாகதி செய்து பத்து பாடல்கள் பாடினார் திருமங்கை ஆழ்வார்.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: