திருப்பங்கள் தரும் திருநாங்கூர் கருட சேவை தரிசனம்-ஸ்ரீ திருக்குடந்தை டாக்ட ர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் –

இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று,
அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணை கொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.

அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும், கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும்,
இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,
வாலாக யஜ்ஞாயஜ்ஞம் எனும் வேதப்பகுதியும், ஆத்மாவாக ஸ்தோமம் எனும் வேதப்பகுதியும் வடிவெடுக்க,
அவ்வாறு உருவான வடிவமே வேதசொரூபியான கருடனின் வடிவம்.

கருட சேவை உற்சவத்தின் போது, இறைவனைத் தனது தோளில் சுமந்தபடி நம்மைத் தேடி வரும் வேத சொரூபியான கருட பகவான்,
நம்மைப் பார்த்து, “நீ வேதங்களின் துணைகொண்டு இறைவனைத் தேடிக் கொண்டிருந்தாயே!
இதோ அந்த இறைவனையே நான் உன்னிடம் அழைத்து வந்துவிட்டேன் பார்!” என்று சொல்லிப் பரமனின் பாதங்களைப் பாமரர்க்கும்
எளிதில் காட்டித் தந்து விடுகிறார்.
கச்யப மகரிஷிக்கும் வினதைக்கும் மகனாக ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி நன்னாளில்
சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார் கருடன்.
பருத்த உடல், பொன்மயமான சிறகுகள், வெண்மையான கழுத்துப் பகுதி,
உருண்டையான கண்கள், நீண்ட மூக்கு, கூரிய நகங்களுடன் கூடியவராய்க் கருடன் திகழ்கிறார்.
‘கரு’ என்றால் சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர். சிறகுகளைக் கொண்டு பறப்பதால் ‘கருடன்’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘க்ரு’ என்பது வேத ஒலிகளைக் குறிக்கும். வேத ஒலிகளின் வடிவாய்த் திகழ்வதாலும் ‘கருடன்’ எனப் பெயர் பெற்றார்.

கருடனின் தாயான வினதை, தனது சகோதரியான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள்.
அதன் விளைவாகக் கத்ருவுக்கும் அவளது பிள்ளைகளான நாகங்களுக்கும் அடிமையாகிச் சிறைப்பட்டிருந்தாள் வினதை.
அவளை விடுவிக்க வேண்டும் என்றால், தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள் கத்ரு.
தேவலோகத்துக்குச் சென்று அமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயான வினதையைச் சிறையிலிருந்து மீட்டார் கருடன்.
தனது தாயைக் கத்ருவும் அவள் ஈன்றெடுத்த பாம்புகளும் சிறை வைத்தபடியால், பாம்புகளைப் பழிவாங்க நினைத்த கருடன்,
பாம்புகளை வீழ்த்தி அவற்றையே தனது திருமேனியில் ஆபரணங்களாக அணிந்தார்.
திருமால் ஒருமுறை கருடனிடம், “நான் உனக்கு ஒரு வரம் தரட்டுமா?” என்று கேட்டார்.
கருடனோ, “திருமாலே! எனக்கு வரம் வேண்டாம்! உமக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால், நான் தருகிறேன்! கேளுங்கள்!” என்றார்.
கருடனின் பிரபாவத்தைக் கண்டு வியந்த திருமால், “நீயே எனக்கு வாகனமாகி விடு!” என்று கருடனிடம் வரம் கேட்டார்.
கருடனும் அதற்கு இசைந்து, திருமாலுக்கு வாகனமானார்.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் சந்நதிக்கு நேராகக் கருடன் சந்நதி இருப்பதைக் காணலாம்.
ஏனெனில், நாம் ஒப்பனை செய்து கொண்டால், கண்ணாடியில் அழகு பார்ப்போம் அல்லவா?
அதுபோல் அலங்காரப் பிரியரான திருமால் அலங்காரம் செய்துகொண்டால் அழகு பார்க்க ஒரு கண்ணாடி வேண்டுமல்லவா?
இறைவனைக் காட்டும் கண்ணாடி வேதம்! கருடன் வேத சொரூபியாகவே இருப்பதால், கருடனையே கண்ணாடியாகக் கொண்டு
திருமால் அழகு பார்க்கிறார். அதனால் தான் பெருமாள் சந்நதிக்கு நேரே, கண்ணாடி போல் கருடன் சந்நதி இருக்கும்.
பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவங்கள் நடைபெறும் போது கருடன் படம் வரைந்த கொடி, கொடிமரத்தில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் கருடனின் பெயரில் ‘கருடாத்ரி’ என்றொரு மலை உள்ளது.

ராம ராவணப் போரில், இந்திரஜித்தின் நாகபாசத்தால் தாக்கப்பட்டு ராமனும் வானர சேனையும் மயங்கிக் கிடந்த வேளையில்,
வானிலிருந்து தோன்றிய கருடன் அந்த நாக பாசங்களை உடைத்து, ராமனும் வானர வீரர்களும் மீண்டும் எழுவதற்கு உதவினார்.
இறைவனை நாம் அழைக்கும் போதெல்லாம், அவனை விரைவில் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வாகனமாகக் கருடன் திகழ்கிறார்.
கருடனை வழிபடுவோர்க்குப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் விலகி, குடும்பத்தில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
இப்படி எண்ணற்ற உருவங்கள் உடையவராகக் கருடன் விளங்குவதால், கருட சேவை உற்சவங்களில் பற்பல உருவங்களோடு
கருடன் வருவதைக் காணலாம்.

தஞ்சையில் நடைபெறும் 24 கருட சேவை,
காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலில் நடைபெறும் 15 கருட சேவை,
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 12 கருட சேவை,
திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் 9 கருட சேவை,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் 5 கருட சேவை உள்ளிட்ட உற்சவங்கள் இதற்குச் சான்றாகும்.
நாச்சியார்கோவிலில் கல் கருடனாகத் திகழும் கருடன், தானே உற்சவராகவும், மூலவராகவும், வாகனமாகவும் திகழ்கிறார்.

இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும், தை அமாவாசைக்கு மறுநாளன்று,
சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார் போன்ற பெரியோர்கள்
இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது.
ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள
திருநாங்கூர் எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன்
அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டபரம சிவன்,
சீர்காழிக்கு அருகிலுள்ள உபய காவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார்.
அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.
சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது, திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு
திருமால் வந்து காட்சி கொடுத்து, பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார்.
அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்களும்,
அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் இருப்பதைக் காணலாம்.

1. திருமணிமாடக்கோயில் (ஸ்ரீநாராயணப் பெருமாள்)
2. திரு அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர்)
3. திருச்செம்பொன்செய்கோயில் (செம்பொன் அரங்கர்)
4. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால்)
5. திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள்)
6. திருவண்புருடோத்தமம் (புருஷோத்தமப் பெருமாள்)
7. திருமணிக்கூடம் (வரதராஜப் பெருமாள்)
8. திருவைகுந்த விண்ணகரம் (வைகுந்தநாதன்)
9. திருத்தேவனார்த் தொகை (மாதவன்)
10. திருப்பார்த்தன்பள்ளி (தாமரையாள்கேள்வன்)
11. திருக்காவளம்பாடி (கோபாலன்)
ஆகியவையே திருநாங்கூரைச் சுற்றியுள்ள பதினொரு திருமால் திருத்தலங்களாகும்.

1. திருநாங்கூர் மதங்கேஸ்வரர்
2. திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர்
3. திருயோகீஸ்வரம் யோகநாதசுவாமி
4. கார்த்தியாயினி இருப்பு (காத்திருப்பு) சுவர்ணபுரீஸ்வரர்
5. திருநாங்கூர் ஜ்வரஹரேஸ்வரர்
6. அல்லிவிளாகம் நாகநாதசுவாமி
7. திருநாங்கூர் நம்புவார்க்கு அன்பர்
8. திருநாங்கூர் கயிலாயநாதர்
9. திருநாங்கூர் சுந்தரேஸ்வரர்
10.பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர்
11.அன்னப்பன்பேட்டை கலிக்காமேஸ்வரர்

எனப் பதினொரு வடிவங்களுடன் திருநாங்கூரைச் சுற்றி சிவபெருமான் காட்சி தருகிறார்.

திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து – இராப்பத்து உற்வசவங்களைப் பன்னிரு ஆழ்வார்களுள்
கடைக்குட்டியான திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார். அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில்
கோவில் கொண்டிருக்கும் பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத்
திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார். அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும்
தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து, ஆழ்வாரிடம் பாடல் பெற்றுச் செல்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே காட்டுவதுதான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.

ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம்.
இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால் நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும்.
இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
திருமங்கையாழ்வாரின் பாதம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.

திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெறுகிறது.
1. தை அமாவாசை அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வாரின் மஞ்சள் குளி உற்சவம்.
2. தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை.
3. அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோவில்களுக்குத் திரும்புதல்
அன்றைய தினம் நள்ளிரவில், தோளுக்கினியானில் மணவாள மாமுனிகள் முதலில் மணிமாடக் கோவிலில் இருந்து வெளியே வருகிறார்.
அவரைத் தொடர்ந்து, அன்னப்பறவை (ஹம்ஸ) வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் வெளியே வந்து,
பெருமாள்களை வரவேற்கத் தயாராக நிற்கிறார்.

1. மணிமாடக் கோவிலின் நாராயணப் பெருமாள்
2. அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்
3. செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர்
4. திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்
5. திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள்
6. திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்
7. திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள்
8. வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்
9. திருத் தேவனார் தொகையின் மாதவப் பெருமாள்
10.திருப்பார்த்தன் பள்ளியின் தாமரையாள் கேள்வன்
11.திருக்காவளம்பாடியின் கோபாலக் கிருஷ்ணன்
ஆகிய பதினொரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில் திருநாங்கூர் மணிமாடக் கோவிலில்
இருந்து புறப்படுகிறார்கள்.பதினொரு பெருமாள்கள் மங்களாசாசனம் பெறும் வரிசை பற்றி
அழகான வடமொழி சுலோகம் ஒன்று உள்ளது:

“நந்தாதீப கடப்ரணர்தக மஹாகாருண்ய ரக்தாம்மக
ஸ்ரீநாராயண புருஷோத்தமதி ஸ்ரீரத்னகூடாதிபாந் |
வைகுண்டேச்வர மாதவௌ ச கமலாநாதம் ச கோபீபதிம்
நௌமி ஏகாதசாந் நாகபுரி அதிபதீந் ஸார்தம் கலித்வம்ஸிநா ||”

இதன்பொருள்:
மணிமாடக் கோவிலின் நாராயணப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர்,
செம்பொன்செய் கோயிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால்,
திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள்,
திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள்,
திருத்தேவனார்தொகையின் மாதவப் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன்,
திருக்காவளம்பாடியின் கோபாலக்கிருஷ்ணன் ஆகிய பதினொரு பெருமாள்களையும் திருமங்கை ஆழ்வாரையும் வணங்குகிறேன்.

மணிமாடக் கோவிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோவில் வாசலில் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பெருமாளாகத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். பதினொரு பெருமாள்களுக்கும் மங்களாசாசனம் ஆனபின்,
கருட வாகனத்தில் வீதி உலா செல்லும் பெருமாள்களைப் பின் தொடர்ந்து, ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் செல்கிறார்.
ஆழ்வாரின் பாடல்களைப் பெற்று அவருக்கு அருள்புரிந்தாற்போல், ஊர்மக்களுக்கும், உற்சவத்தைத் தரிசிக்க வந்த அடியார்களுக்கும்
அருள்புரிய வேண்டும் என்ற எண்ணத்தில், பக்தர்கள் வெள்ளத்துக்கு மத்தியில், பதினொரு பெருமாள்களும் கருட வாகனத்தில்
திருநாங்கூர் மாட வீதிகளைச் சுற்றி மேளவாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் வலம் வருகிறார்கள்.

நாங்கூர் வெள்ளாளத் தெருவையும், வடக்கு வீதியையும் கடக்கும் பெருமாள்கள், கீழ வீதியிலுள்ள
செம்பொன்செய் கோவில் வாசலை அடைகிறார்கள்.
அதன்பின் தெற்கு வீதி வழியாக வந்து மீண்டும் மணிமாடக் கோவிலை அதிகாலையில் அடைகிறார்கள்.
இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதினொரு திவ்ய தேசங்களைத் தரிசித்த
பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு.
11 கருட சேவை உற்சவம் நடைபெற்ற மறுநாள் காலை, மணிமாடக் கோவிலிலிருந்து புறப்பட்டு,
அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு மீண்டும் எழுந்தருள்கிறார்கள்.

காலையில் மணிமாடக் கோவிலில் திருமஞ்சனம் கண்டருளும் திருமங்கையாழ்வார், மாலையில் குமுதவல்லியுடன் புறப்பட்டு,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாளை,
“அண்ணா அடியேன் இடரைக் களையாயே!” என்று மங்களாசாசனம் செய்து,
திருத்தேவனார்தொகை மாதவப் பெருமாளை, “தேதென என்றிசைப் பாடும் திருத்தேவனார்த் தொகையே!” என்று பாடி,
திருவாலியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாளை “திருவாலி அம்மானே!” என்று பாடிவிட்டுத்
தனது இருப்பிடமான திருநகரியை அடைகிறார்.
திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளன் எனப்படும் பெருமாள், கருட வாகனத்தில் வந்து,
ராஜகோபுரத்தின் முன்னே திருமங்கையாழ்வாரையும் குமுதவல்லியையும் எதிர்கொண்டு அழைக்கிறார்.

“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீள்வயல்சூழ் வயலாலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே!”

என்று திருமங்கையாழ்வார் பாடி, வயலாலி மணவாளனோடு திருக்கோவிலுக்குள்ளே எழுந்தருளுவதோடு,
இந்தப் பதினொரு கருட சேவைத் திருவிழா இனிதே நிறைவடைகிறது.
திருநாங்கூர் மணிமாடக் கோவிலில் ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஒன்று கூடி
இறைவனை வணங்கும் ஒப்பற்ற உற்சவமாகிய இந்தப் பதினொரு கருட சேவை விழாவில் பங்கேற்று,
தங்கக் கருட வாகனத்தில் காட்சி அளிக்கும் பதினொரு பெருமாள்களையும், கருடன்களையும்,
அன்ன வாகனத்தில் வரும் திருமங்கையாழ்வார்-குமுதவல்லி நாச்சியாரையும், மணவாள மாமுனிகளையும் கண்ணாரக் கண்டு,
மனதாரத் தொழும் அனைத்து அன்பர்களுக்கும் உடல்நலம், மன அமைதி, நீண்ட ஆயுள், ஆற்றல், பொலிவு ஆகியவை பெருகும்.
நினைத்த நற்செயல்கள் கைகூடும். நோய்கள் அகலும். நற்செல்வம் பெற்றுப் பல்லாண்டு வாழ்வர் என்பதில் ஐயமில்லை.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: