ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 102-199–திரு நாமங்கள்–

102. வ்ருஷாகபயே நமஹ (Vrushaakapaye namaha)

மகாபாரதத்தில் பதினேழாம் நாள் யுத்தம். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் கடும் போர் நிலவிக் கொண்டிருந்த வேளையில்
கர்ணனின் தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிக் கொண்டது.
“நான் தேர்ச் சக்கரத்தை விடுவிக்கிறேன். அதன் பின் போரைத் தொடருவோம். அதுவரை என்னைத் தாக்காதே அர்ஜுனா!” என்றான் கர்ணன்.

ஆனால் கண்ணபிரான், “அர்ஜுனா! இது தான் சரியான சந்தர்ப்பம். நீ உன் கணைகளைத் தொடுத்து அவனைக் கொல்!” என்றார்.
பாணத்தைப் பிரயோகிக்கத் தயாரானான் அர்ஜுனன்.
அப்போது கர்ணன், “அர்ஜுனா! நில்! இது தர்மமாகுமா? கொஞ்சம் பொறு!” என்றான்.
கண்ணன் கர்ணனைப் பார்த்து, “கர்ணா! உனக்குக் கூட தர்மம் என்ற சொல் இருப்பது தெரியுமா?
தர்மத்தைப் பற்றி நீ இப்போது பேசுகிறாயே! சிறுவயதில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து பீமனுக்கு விஷம் வைத்த போது
நீ கூறும் தர்மம் எங்கே போனது? அரக்கு மாளிகையில் பாண்டவர்களை எரிக்கத் திட்டமிட்ட போது நீ கூறும் தர்மம் எங்கே போனது?
பொய்ச்சூதில் பாண்டவர்களை வீழ்த்தியபோது உன் தர்மம் எங்கே போனது?
அபலைப் பெண்ணான திரௌபதியைச் சபை நடுவே அவமானப்படுத்திய போது இந்தத் தர்மத்தைப் பற்றி நீ பேசினாயா?
இதிலெல்லாம் உனக்குச் சம்பந்தம் இல்லை என்று கூறித் தப்பிக்கப் பார்க்காதே!
துரியோதனன் செய்த ஒவ்வொரு தவறின் போதும் நீயும் உடனிருந்தாய்! பதின்மூன்று வருடங்கள் தண்டனை முடிந்த பிறகும்
பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தைத் தர மறுத்தீர்களே! அப்போது தர்மம் எங்கே போனது?
சிறுவனான அபிமன்யுவைச் சக்கர வியூகத்துக்குள் வைத்துப் பலர் தாக்கிக் கொன்றீர்களே! அப்போதெல்லாம்
தர்மம் என்ற ஒன்று இருப்பது உனக்குத் தெரியவில்லையா?
உனக்குத் தேவையான சூழ்நிலைகளில் மட்டும் தர்மத்தைப் பற்றிப் பேசுவாய், தேவையில்லாத சூழ்நிலைகளில்
தர்மத்துக்கு விரோதமாகச் செயல்படுவாய்! இதுதானே உன் கொள்கை?” என்றான்.

மேலும், “அர்ஜுனா! திரௌபதி என்னும் அபலைப் பெண் அன்று அவமானப்பட்ட போது அவளுக்கு உண்டான வலியையும்,
அபிமன்யு என்ற சிறுவன் அநியாயமாகக் கொல்லப்பட்ட போது அவனுக்கு உண்டான வலியையும் இவன் உணர வேண்டுமென்றால்
இப்போது நிராயுதபாணியாக நிற்கும் போது இவனைத் தாக்க வேண்டும். அதுவே இவனுக்குச் சரியான தண்டனை!” என்றான் கண்ணன்.
அர்ஜுனன் எய்திய பாணம் கர்ணனின் கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவன் மார்பில் பாய்ந்தது. கர்ணன் மாண்டு போனான்.
(கர்ணனின் உயிர் பிரியாமல் அவனது புண்ணியங்கள் காத்ததாகவும், அந்தணர் வடிவில் கண்ணன் வந்து
அந்தப் புண்ணியங்களைத் தானம் வாங்கியதாகவும் பிரசித்தியாகச் சொல்லப்படும் கதை வியாச பாரதத்தில் இல்லை.)

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,
“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
“க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.

அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும்
முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்.
தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது உயர்ந்த தர்மம் தான்.
அதற்காக இரணியனின் பேச்சைக் கேட்டுப் பிரகலாதன் நடந்தானா? நரசிம்மர் என்ற விசேஷ தர்மத்தை அல்லவோ கைக்கொண்டான்!

விபீஷணனும் தன் அண்ணன் ராவணனுக்கு நன்றி பாராட்டுதலாகிய சாமானிய தர்மத்தை விட்டு,
விசேஷ தர்மமான ராமனை வந்து பற்றவில்லையா? தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்பதற்காகக் கைகேயியின்
ஆசைக்குப் பரதன் உடன்பட்டானா? மகனே! சாமானிய தர்மங்களை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் விசேஷ தர்மத்தோடு அதற்கு முரண்பாடு ஏற்படும் சூழ்நிலையில் விசேஷ தர்மத்தையே முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டும்.
அவ்வகையில் கண்ணனே அனைத்து தர்மங்களுக்கு சாரமான விசேஷ தர்மம் என உணர்வாயாக!” என்றார்.

வடமொழியில் ‘வ்ருஷம்’ என்றால் தர்மம் என்று பொருள். ‘வ்ருஷாகபி:’ என்றால் தர்மமே வடிவானவர் என்று பொருள்.
கர்ணனுக்கு சூரியன் உபதேசித்தபடி தர்மமே வடிவானவராகத் திருமால் விளங்குவதால் ‘வ்ருஷாகபி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 102-வது திருநாமம்.
“வ்ருஷாகபயே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், முரண்பாடான சூழ்நிலைகளில் நாம்
சிக்கிக் கொள்ளும் போது சரியான முடிவெடுக்கும் ஆற்றலைத் திருமால் நமக்குத் தந்தருள்வார்.

————-

103. அமேயாத்மநே நமஹ (Ameyaathmane namaha)

பிரகலாதனின் சரித்திரம் வாசகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே!
“நானே கடவுள்” என்று கூறிக் கொண்டிருந்தான் இரணியன் என்னும் அசுரன்.
அவனது மகனான பிரகலாதன், சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான்.
எப்போதும் நாராயண நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.
“நீ நாராயணனை வணங்காதே, என்னைத் தான் வணங்க வேண்டும்! ‘இரண்யாய நமஹ’ என்று சொல்!” என்று
எச்சரித்தான் இரணியன். அதை மறுத்த பிரகலாதனைப் பலமுறை கொல்ல முயன்றான் இரணியன்.

ஆனால், ஒவ்வொரு முறையும் திருமால் பிரகலாதனைக் காத்தார்.
இறுதியாக “உன் நாராயணன் எங்கே இருக்கிறான்?” என இரணியன் கேட்க, “தூணிலும் உளன், துரும்பிலும் உளன்!” எனப்
பிரகலாதன் சொல்ல, இரணியனும் தன் அரண்மனையில் ஒரு தூணை இரணியன் கதையால் தட்டிய போது,
அதைப் பிளந்து கொண்டு நரசிம்மர் தோன்றி இரணியனை வதைத்தார் என்பது பல புராணங்களில் நாம் காணும் பிரகலாத சரித்திரம்.

ஆனால், விஷ்ணு புராணத்தில் மட்டும் பராசர மகரிஷி இந்தச் சரித்திரத்தைச் சற்று வித்தியாசமாக வர்ணித்துள்ளார்:
பிரகலாதனைக் கொல்ல எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியடைந்த இரணியன்,
முடிவாக அவனை ஒரு பாறையோடு சேர்த்துக் கட்டிக் கடலில் வீசத் திட்டமிட்டான்.
திட்டமிட்டபடி மலைக்குன்றின் மேல் பிரகலாதனை நிறுத்திப் பெரிய பாறையுடன் அவனைக் கட்டிவிட்டு,
“அடேய்! முடிவாகக் கேட்கிறேன். ‘இரண்யாய நமஹ’ என்று சொல்வாயா? மாட்டாயா?” என்றான்.
பிரகலாதனோ எப்போதும் போல “நாராயணாய நமஹ” என்றான்.
பாறையோடு சேர்த்து அந்தக் குன்றிலிருந்து கடலை நோக்கி அவனைத் தள்ளினான்.

ஆனால் நரசிம்மர் தனது இரு கரங்களாலும் பிரகலாதனைத் தாங்கிப் பிடித்தார். அவனது கட்டுக்களை எல்லாம் அவிழ்த்தார்.
“குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
“என் தந்தை திருந்தி நல்லவராக மாற வேண்டும்! தினமும் என்னுடன் இணைந்து அவரும் உனக்குப் பூஜை செய்ய வேண்டும்.
அவரும் நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்!” என்றான் பிரகலாதன்.

இந்நிலையில் தந்தையின் பாசம் பிரகலாதனுக்கு முக்கியம் எனக் கருதினார் நரசிம்மர்.
ஆனால் இரணியனைத் திருத்தி அவனை ஒரு பக்தனாக உருவாக்குவது என்பது நடக்காத காரியம்.
அதே சமயம் பிரகலாதன் கேட்ட வரத்தையும் மறுக்க நரசிம்மருக்கு மனம் வரவில்லை. அதனால் நரசிம்மர் ஒரு லீலை செய்தார்.
தானே இரணியனைப் போல வடிவம் எடுத்துக் கொண்டு பிரகலாதனிடம் வந்தார்.
தன்னை இறைவன் என்று காட்டிக் கொள்ளாமல், மனம் மாறிய இரணியனாகவே அவனிடம் காட்டிக் கொண்டார்.
தந்தையின் அன்பை முழுவதுமாக அவன் மேல் பொழிந்தார். தினமும் அவனுடன் இணைந்து திருமாலுக்குப் பூஜை,
நாம சங்கீர்த்தனம் அனைத்தும் செய்து, அவனைப் போலவே பக்தனாக வாழ்ந்து அவனை மகிழ்வித்து வந்தார்.

மற்றொரு புறம், நிஜ இரணியனின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, தூணைப் பிளந்து கொண்டு
நரசிம்மராகத் தோன்றி அந்த இரணியனை வதம் செய்தார்.இவ்வாறு திருமாலே பிரகலாதனை மகிழ்விக்க இரணியனாகவும்,
இரணியனை வதைக்க நரசிம்மராகவும் இரு அவதாரங்கள் எடுத்தார் என்று விஷ்ணு புராணத்தில்
பராசர மகரிஷி மறைமுகமாக வர்ணித்துள்ளார் என அடியேனுடைய குருவான
ஸ்ரீமதுபயவே. Dr. கருணாகரார்ய மஹாதேசிகன் விஷ்ணு புராண காலக்ஷேபத்தில் விளக்கியுள்ளார்.

பிரகலாதனை மகிழ்விக்கும் பொருட்டு நரசிம்மராக மட்டுமல்ல, இரணியனாகக் கூட திருமால் அவதாரம் செய்தார் என்பதை
நோக்குகையில் தன் அடியவர்கள் மேல் அவர் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
இவ்வாறு எல்லையில்லாத கருணையைத் தன் அடியார்கள் மேல் காட்டுவதால் திருமால் ‘அமேயாத்மா’ என்று போற்றப் படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 103-வது திருநாமம்.
“அமேயாத்மநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள் திருமாலின் அளவற்ற கருணைக்குப் பாத்திரமாவார்கள்.

——————

104. ஸர்வ யோக விநிஸ்ருதாய நமஹ (Sarvayogavinisruthaaya namaha)

சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் திருவரங்கத்துக்கு வந்தார்.
வண்டினம் ரீங்கரிக்கும் சோலை, மயிலினம் ஆடும் சோலை, கொண்டல் மீதணவும் சோலை, குயிலினம் கூவும் சோலையான
அரங்கத்தில் பள்ளிகொண்ட அண்டர் கோனான அணி அரங்கனைத் தரிசித்தார்.
அங்கே பராசர பட்டரின் வம்சத்தில் தோன்றிய ஒருவர், விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்ற பெயரில்
பராசர பட்டர் அருளிய விளக்கவுரையை மகாபிரபுவுக்கு வழங்கினார்.
அடியேன் இந்தத் தொடர் முழுவதையும் அந்த விளக்கவுரையின் துணைகொண்டு தான் எழுதுகிறேன் என்பது
இவ்விடத்தில் நன்றியுடன் நினைவுகூறத்தக்கது. அந்த விளக்கங்களைப் படித்து வியந்து போனார் மகாபிரபு.
அந்தப் புத்தகத்தை அரங்கன் தனக்குத் தந்த பரிசாகவே கருதினார்.

பூரி ஜகந்நாதரைப் போலவே திருவரங்கத்திலும் ஒரு ஜகந்நாதர் கோவில் இருப்பதை அறிந்த மகாபிரபு,
ஜகந்நாதரை வழிபட அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஹிமாம்சு என்பவர் ஜகந்நாதப் பெருமாளுக்கு நித்திய பூஜைகளைச் செய்து வந்தார்.
அவருக்கு வடமொழியோ, ஆகமங்களோ எதுவுமே தெரியாது. அவரது தந்தை நிசாகர் தாஸ் என்பவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.
ஜயதேவரின் அஷ்டபதி பாடுவதில் வல்லவர்.

பல வருடங்கள் அதே கோயிலில் ஜகந்நாதப் பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தார்.
அதனால் நிசாகர் தாஸுக்குப் பின் அவரது மகனான ஹிமாம்சுவையே அர்ச்சகராக நியமித்து விட்டார்கள்.
சீடர்கள் புடைசூழ சைதன்ய மகாபிரபு கோயிலுக்கு வந்தபோது, ஹிமாம்சு பக்தியுடன் அவரை வரவேற்றார்.
மகாபிரபுவின் சீடர்கள் ஹிமாம்சுவிடம் பெருமாளுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்படி கூறினார்கள்.
அர்ச்சனையைத் தொடங்கிய ஹிமாம்சு “விச்வாய நமஹ”, “விஷ்ணாய நமஹ” என்றார்.
“நிறுத்துங்கள்!” என்றொரு ஒலி. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் ஹிமாம்சு.

மகாபிரபுவின் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீரங்கதாஸ் எழுப்பிய ஒலி என உணர்ந்தார் ஹிமாம்சு.
ஸ்ரீரங்கதாஸ் வடமொழி இலக்கண இலக்கியங்களில் பெரிய மேதை.
“ஹிமாம்சு! ‘விஷ்ணவே நமஹ’ என்று சொல்வது தான் இலக்கணப் படிச் சரி! ‘விஷ்ணாய நமஹ’ என்பது தவறு.
விபக்தியைச் சரியாகப் பயன்படுத்து!” என்றார். (வடமொழியில் வேற்றுமை உருபுக்கு விபக்தி என்று பெயர்.)

ஹிமாம்சு, “உங்கள் அளவுக்கு நான் இலக்கணம் கற்கவில்லை. என் தந்தை எனக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அதைத் தினமும் சொல்லி வருகிறேன். ஜகந்நாதனும் இதை ஏற்று எனக்கு அருள்புரிந்து கொண்டு தான் இருக்கிறார்!” என்று பணிவுடன் கூறினார்.
ஆனாலும் அங்கிருந்த பல பண்டிதர்கள் இவ்விளக்கத்தை ஏற்கவில்லை. “விபக்தியில் தவறு செய்து விட்டாய்!” என ஹிமாம்சுவை இகழ்ந்தார்கள்.

அப்போது குறுக்கிட்ட மகாபிரபு, “மேதைகள் சரியான விபக்தியுடன் அர்ச்சனை செய்வார்கள். பேதைகள் தவறான விபக்தியுடன்
அர்ச்சனை செய்வார்கள். ஆனால், இறைவனோ அந்த விபக்தியைப் பார்ப்பதில்லை, பக்தியைத் தான் பார்க்கிறான்.
உண்மையான பக்தியோடு செய்யும் அர்ச்சனையில் எத்தனை குற்றங்கள் இருந்தாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான்!” என்றார்.
இதை ஒரு ஸ்லோகமாகவே இயற்றி விட்டார் மகாபிரபு…
“மூர்க்கோ வததி விஷ்ணாய புதோ வததி விஷ்ணவே | உபயோஸ்து பலம் துல்யம் பாவக்ராஹீ ஜநார்தந: ||”

மேலும், “இதை நானாகச் சொல்லவில்லை. திருவரங்கநாதனின் கோயிலில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கப் புத்தகம்
எனக்குக் கிடைத்தது. அதில் 104வது திருநாமமான ‘ஸர்வயோக விநிஸ்ருதஹ’ என்ற திருநாமத்தை விளக்குகையில்
பராசர பட்டரே இக்கருத்தைக் கூறியுள்ளார். அதாவது, சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட நெறிகளைப் பின்பற்றுபவர்கள்
இறைவனின் அருளைப் பெறுகிறார்கள். ஆனால், அந்த விதிகளை அறியாதவர்கள், உண்மையான பக்தியுடன் தங்களால்
இயன்ற முறையில் இறைவனை வழிபட்டாலும் அவர்களுக்கும் இறைவனின் அருள் நிச்சயம் கிட்டும் என்று பட்டர் விளக்கியுள்ளார்!” என்றார் மகாபிரபு.

‘யோகம்’ என்றால் மார்க்கம் என்று பொருள். ‘ஸர்வ யோகம்’ என்றால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத
அனைத்து மார்க்கங்களையும் குறிக்கும்.
அந்த அனைத்து மார்க்கங்களாலும் அடையப் படுவதால் திருமால் ‘ஸர்வயோக விநிஸ்ருதஹ’ என்றழைக்கப்படுகிறார்.

“ஸர்வயோக விநிஸ்ருதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் பூஜைகள்
அனைத்தையும் திருமால் உகந்து ஏற்றுக் கொள்வார்.

———-

105. வஸவே நமஹ (Vasave namaha)

திருவரங்கத்தில் நம்பெருமாள் அரையர் என்ற அரையர் வாழ்ந்து வந்தார்.
அவர் ஆழ்வார்களின் பாசுரங்களை அபிநயம் பிடித்து இசையுடன் பாட வல்லவர்.
அவருக்கு வெற்றிலைப் பாக்கு உபயோகிக்கும் பழக்கம் உண்டு. வெற்றிலைப் பாக்குப் பெட்டிக்குள்ளேயே தான் தினசரி
பூஜை செய்யும் சாளக்கிரமாப் பெருமாளையும் வைத்திருந்தார்.அவருக்கு வயதாக வயதாகப் பார்வை மங்கிக் கொண்டே போனது.
அதனால் கொட்டைப் பாக்குக்கும் சாளக்கிராமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போயிற்று.
தினமும் கொட்டைப் பாக்கு என்று நினைத்துக் கொண்டு சாளக்கிராமத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு விடுவார்.

அப்புறம் அதைக் கடிக்க முடியாமல் வெளியே துப்பியபின், அது சாளக்கிராமம் என உணர்ந்து அதன் பின்
கொட்டைப் பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்.
திருவரங்கத்திலே வாழ்ந்த ஆராவமுதாழ்வான் என்ற பக்தர் ஒருநாள் அரையர் இவ்வாறு செய்வதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்.
அரையரிடம் சென்று, “தாங்கள் இவ்வாறு செய்யலாமா? இது தகுமா? சாளக்கிராமத்தை வெற்றிலைப் பாக்குப் பெட்டியில்
வைக்காமல் வீட்டுப் பூஜை அறையிலாவது வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றார். அரையரோ,
“நான் எங்கு சென்றாலும் இந்தப் பெட்டியுடன் தான் செல்வேன்.
அதனால் இந்தப் பெட்டிக்குள்ளேயே நான் பூஜை செய்யும் சாளக்கிராமத்தை வைத்துக் கொள்வது தான் எனக்கு வசதியாக உள்ளது!” என்றார்.
“சுவாமி! இது பெரும் பாவம். இறைவனின் மேல் நம் எச்சில் படலாமா? அந்த சாளக்கிராமத்தைத் தயவுசெய்து என்னிடம் தந்து விடுங்கள்.
நான் என் வீட்டில் வைத்துப் பூஜை செய்கிறேன்!” என்றார் ஆராவமுதாழ்வான். அரையரும் அவரிடமே வழங்கிவிட்டார்.

பெருமாளை அரையரிடமிருந்து காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தியுடன் அந்தச் சாளக்கிராமத்தை வீட்டுப் பூஜை அறையில் வைத்துச்
சிறப்பான முறையில் பூஜை செய்து, நிறைய பிரசாதங்களும் நிவேதனம் செய்தார் ஆராவமுதாழ்வான்.
திருப்தியுடன் அன்றிரவு உறங்கச் சென்றார். அவரது கனவில் தோன்றிய பெருமாள், “என்னை ஏன் இப்படிச் சிறைபிடித்தாய்?” என்று
அவரைப் பார்த்துக் கேட்டார். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் ஆராவமுதாழ்வான்.
“ஆம்! அந்த அரையரின் வாய் எப்போதும் திருவாய்மொழி பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கிறது.

அத்தகைய வாயின் எச்சிலில் நனைய வேண்டுமென ஆசைப்பட்டு அவரது வெற்றிலைப் பாக்குப் பெட்டிக்குள்
கொட்டைப் பாக்கு போன்ற வடிவத்துடன் சாளக்கிராமமாக நானே போய் அமர்ந்து கொண்டேன்.
தினமும் திருவாய்மொழி ஓதும் அதராம்ருதத்தில் தினமும் திருமஞ்சனம் கண்டருளினேன்.
அதைத் தடுத்து இப்படி உன் வீட்டில் என்னைச் சிறைவைத்து விட்டாயே!” என்றார் பெருமாள்.

திகைத்துப் போன அந்த பக்தர், அடுத்த நாள் காலை சாளக்கிராமத்தை எடுத்துக் கொண்டு அரையரிடம் சென்றார்.
“என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி உங்களிடம் இருந்து பெருமாளைக் காப்பாற்றுவதாக எண்ணி நான் கொண்டு சென்றேன்.
ஆனால், பெருமாள் உங்களிடம் இருக்கவே விரும்புகிறார்!” என்று சொல்லி அவரிடமே சாளக்கிராமத்தை ஒப்படைத்தார்.
இவ்வாறு, தன் அடியார்களிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும், தோஷங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்
அவர்களுடனேயே வசிக்க விரும்புகிறார் திருமால்.
‘வஸு:’ என்றால் வசிப்பவன் என்று பொருள்.
தன் அடியார்களுடன் மிகுந்த ஆசையுடன் வசிப்பதால் திருமால் ‘வஸு:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 105-வது திருநாமம்.“வஸவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும்
அடியார்களுடன் எப்போதும் திருமால் எழுந்தருளியிருப்பார்.

—————-

106. வஸுமநஸே நமஹ (Vasumanase namaha)

பதினாறாயிரத்து எட்டுப் பெண்களை மணம் புரிந்த கண்ணன் துவாரகையில் அரசாட்சி புரிந்து வந்தான்.
“ஒரு மன்னனுக்குத் தன் ராஜ்ஜியத்தின் நிர்வாக ரீதியிலான அலுவல்களைப் பார்க்கவே நேரம் இருக்காதே.
இதில் கண்ணன் எப்படி ராஜ்ஜியத்தையும் கவனித்துக் கொண்டு, பதினாறாயிரத்து எட்டு மனைவிகளையும்
திருப்திப் படுத்த முடியும்?” என்ற ஐயம் நாரதருக்கு எழுந்தது. அதனால் கண்ணனின் தினசரி நடவடிக்கைகள் என்ன
என அறியும் ஆவலுடன் துவாரகையை அடைந்தார் நாரதர்.

விடியற்காலையில் துவாரகையை நாரதர் அடைய, எதிர்பாராத விதமாகக் கண்ணனும் எதிரே வந்தான்.
“என்ன நாரதா! விடியற்காலையிலேயே இந்தப் பக்கம்?” என்று கேட்டான்.
“உன்னுடைய அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்க வந்தேன்!” என்றார் நாரதர்.
“இதென்ன புதுக்கதை! என்னை நீ கண்காணிக்கப் போகிறாயா?” என்று கேட்டான் கண்ணன்.
“ஆம்! நீ எப்படி இத்தனை மனைவிகளைச் சமாளிக்கிறாய் என அறிந்து கொள்ள விரும்பி வந்தேன்!” என்றார் நாரதர்.

“அவ்வளவுதானே!” என்று சொன்ன கண்ணன், தன் அரண்மனை இருக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றான்.
அங்கே வரிசையாக ஒரே மாதிரி அமைப்பு கொண்ட பதினாறாயிரத்து எட்டு மாளிகைகள் இருந்தன.
“நாரதா! நீ இந்த மாளிகை களுக்குள்ளே சென்று பார்த்தால் நான் எப்படி அனைத்தையும் நிர்வகிக்கிறேன் என்று புரியும்!” என்றான் கண்ணன்.

“ஒரு மாளிகையில் ஒரு நிமிடம் செலவிட்டால் கூட, ஒரு நாளில் 1440 மாளிகைகளுக்குத் தான் செல்ல முடியும்.
அதனால் சௌபரி ரிஷியைச் சந்தித்து ஒரே நேரத்தில் ஐம்பது உருவங்கள் எடுத்துக் கொள்ளும் சக்தியை
அவரிடமிருந்து வரமாகப் பெற்று வந்துள்ளேன்!” என்றார் நாரதர்.
“மிக்க மகிழ்ச்சி! உள்ளே சென்று பார்!” என்றான் கண்ணன். ஐம்பது வடிவங்களுடன் ஐம்பது மாளிகைகளுக்குள்ளே நுழைந்தார் நாரதர்.

ஐம்பது மாளிகைகளுள் ஒவ்வொரு மாளிகையிலும் ஒரு கண்ணன் இருப்பதைக் கண்டார்.
ஐம்பது மட்டுமல்ல, பதினாறாயிரத்து எட்டு வடிவம் எடுத்துக்கொண்டு பதினாறாயிரத்து எட்டு மாளிகைகளிலும்
கண்ணன் இருந்து கொண்டு, அத்தனை மனைவிகளையும் திருப்திப் படுத்துகிறான் என்பதை உடனேயே புரிந்து கொண்டார்.
தனது ஐயத்துக்கு விடை கிடைத்த போதும், கண்ணன் அங்கே அன்றாடம் என்ன செய்கிறான் என அறியும் ஆவல் நாரதருக்கு ஏற்பட்டது.

ஒவ்வொரு மாளிகையில் உள்ள கண்ணனின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கினார் நாரதர்.
கண்ணன் காலை நீராடியபின் ஒரு அர்ச்சகரைக் கொண்டு தனது சாளக்கிராமப் பெருமாளுக்குப் பூஜை செய்யச் சொல்வதைக் கண்டார் நாரதர்.
அந்தப் பூஜை முடிந்தபின் கண்ணன் தனியாகச் சென்று ஒரு தங்கப் பேழையை எடுத்து
அதற்குள் உள்ள ஏதோ விக்கிரகத்துக்கு ரகசியமாகப் பூஜை செய்வதைக் கண்டார்.

“கண்ணா! அதென்ன தங்கப் பேழைக்குள் ரகசியமான தெய்வம்? அந்தத் தெய்வத்தை நான் காணலாமா?” என்று கேட்டார் நாரதர்.
“நான் இந்தத் தெய்வத்தை யாரிடமும் காட்டுவதில்லை.
அதனால் தான் இன்னொரு அர்ச்சகரை நியமிக்காமல் நானே பூஜிக்கிறேன்!” என்றான் கண்ணன்.
ஆனாலும், அதைப் பார்த்தே தீர வேண்டுமென நாரதர் சொன்னதால், தங்கப் பேழையைத் திறந்து காட்டினான் கண்ணன்.
அதற்குள் நாரதரின் படமும் கொஞ்சம் மணலும் இருந்தது. “என்ன இது?” என்று கேட்டார் நாரதர்.
“என் பக்தர்கள் தான் எனது செல்வம், என் பக்தர்களைத் தங்கத்தை விட மதிப்பு வாய்ந்தவர்களாக நான் கருதுகிறேன்.

அதனால் தான் பக்தர்களுள் முதன்மையானவனான உனது படத்தையும் உன் காலடி மண்ணையும்
இந்தத் தங்கப் பேழைக்குள் வைத்துப் பராமரிக்கிறேன்!” என்றான் கண்ணன்.
கண்ணன் அடியார்கள் மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி நாரதர் உருகினார்.
வடமொழியில் வஸு என்றால் செல்வம் என்று பொருள். தன் பக்தர்களைத் தங்கத்தை விட உயர்ந்த செல்வமாக
மதிப்பதால் திருமால் ‘வஸுமனா:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 106-வது திருநாமம்.
“வஸுமனஸே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களைப் பொன்போலக் கருதி எம்பெருமான் காத்தருள்வான்.

—————-

107. ஸத்யாய நமஹ (Sathyaaya namaha)

நாராயண ரிஷி திருமாலை நேரில் காணவேண்டும் என்ற ஆசையுடன் திருமலையில் தவம் புரிந்தார்.
அவரது தவத்துக்குத் திருவுள்ளம் உகந்த திருமால் அவருக்குக் காட்சி தந்ததோடு மட்டுமின்றி,
திருமலையிலுள்ள ஏழு மலைகளுள் ஒரு மலைக்கு அந்த ரிஷியின் பெயரைச் சூட்டினார்.
அதனால் தான் ஏழு மலைகளுள் ஒரு மலை ‘நாராயணாத்ரி’ என்று அழைக்கப்படுகிறது.
தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆசைப்பட்டான்.
தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னான். அவரும் சம்மதித்தார்.
ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டார்.

அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் வரவேற்கும்படி ஜடாதாரியிடம் மன்னன் கூறினான்.
அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று வரவேற்றார்.
ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருமலையப்பன் அருளால் இவர் ஏதோ தீய எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார்.
அதனால் யாகத்துக்கு வர மறுத்துவிட்டார். மேலும், இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல் காக்குமாறு மலையப்பனை வேண்டினார்.
நாராயண ரிஷியால் தனது திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக மன்னனிடம் பலவாறு கூறினார்.

“தொண்டைமான் பெரிய மன்னனா? அவன் செய்யும் யாகத்துக்கு நான் வர வேண்டுமா? மன்னன் என் காலில் வந்து விழுந்து
வரவேற்றால் தான் வருவேன்!” என்றெல்லாம் கர்வத்துடன் நாராயண ரிஷி பேசுவதாகக் கூறிய ஜடாதாரி,
“மன்னா! அவருக்கு நீங்கள் தான் சரியான தண்டனை அளித்துத் தாங்கள் யாரென்று காட்டவேண்டும்!” என்றார்.
கோபம் கொண்ட மன்னன், தனது வீரர்களை அனுப்பி நாராயண ரிஷியை இழுத்து வரச் சொன்னான்.
அவர்களும் ரிஷியை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “இந்த நாட்டை ஆளும் மன்னன் நான்!

எனக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
மரியாதையாக இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!” என்றான் மன்னன்.
“இந்த யாகம் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ துர்தேவதையைக் குறித்து ஜடாதாரி யாகம் செய்கிறார்.
நான் இதில் பங்கேற்க மாட்டேன்!” என்றார் ரிஷி. அவரது விளக்கத்தை ஏற்காத தொண்டைமான்,
“இறுதியாகச் சொல்கிறேன். மன்னனின் ஆணைக்கு அடிபணிவீரா? மாட்டீரா?” என்றான்.
“நீ இந்த ஒரு தேசத்துக்குத் தான் மன்னன். என் ஏழுமலையானோ அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன்.
அந்த மன்னாதி மன்னனைத் தவிர வேறு எந்த மன்னனையும் நான் கணிசிக்க மாட்டேன்!” என்றார் ரிஷி.

அவரைச் சிறையிலடைத்தான் தொண்டைமான்.சிரித்துக் கொண்டே, “திருவேங்கடமுடையானின் அடியார்களுக்குச் சிறைச்சாலை
கூட தங்க மாளிகை போல மின்னும். மூங்கில் கழிகள் கூட அவர்களுக்குக் கரும்பு போல் இனிக்கும்!” என்றார் நாராயண ரிஷி.
“அப்படியா? அப்படியானால் உங்கள் அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகனிடம் சொல்லி இந்தச் சிறையைத் தங்கமாக மாற்றச் சொல்லுங்கள்.
மூங்கில் கழிகளைத் தருகிறேன், நீங்கள் அதைக் கரும்பாய்க் கருதிச் சாப்பிடுங்கள்.
இவை இரண்டும் நாளை காலைக்குள் நடக்காவிட்டால், உங்கள் தெய்வத்தை இனி
அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன் என்று அழைக்கக் கூடாது!” என்றான்.

மூங்கில் கழிகளை அவரது சிறைக்குள் கொண்டு வந்து போடச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் அந்தப்புரத்துக்குச் சென்றான்
அன்றிரவு திருமலையப்பன் தனது பக்தனான கஜேந்திரனைச் சிறைச்சாலைக்கு அனுப்பினார்.
கஜேந்திரன் வந்து அனைத்து மூங்கில்களையும் எளிதில் தின்று தீர்த்தார். தன் திருமார்பில் உள்ள மகாலட்சுமியிடம்
அந்தச் சிறைச்சாலையைக் கடாட்சிக்கும்படி கூறினார் மலையப்பன். மகாலட்சுமியின் பார்வை பட்டதும் சிறைச்சாலை பொன்மயமானது.
அடுத்தநாள் காலை வந்து பார்த்த மன்னன், மூங்கில் கழிகள் அனைத்தும் காணாமல் போனதையும்,
சிறைச்சாலை முழுவதும் தங்கமயமாக இருப்பதையும் கண்டு வியந்து திருமலையப்பனின் மேன்மையையும்,
நாராயண ரிஷியின் பக்தியின் பெருமையையும் உணர்ந்தான்.

ஜடாதாரி செய்ய நினைத்த யாகத்தை நிறுத்தினான். அன்று முதல் தொண்டைமான் திருமலையப்பனின் பக்தனாக மாறினான்.
நாராயண ரிஷி போன்ற உண்மையான பக்தர்களுக்கு ‘ஸத்’ என்று பெயர்.
ஸத் ஆன பக்தர்களுக்கு எப்போதும் உதவுபவனாகத் திகழ்வதால் திருமால் ‘ஸத்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 107-வது திருநாமம்.
“ஸத்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் திருமால் காத்தருள்வார்.

—————-

108. ஸமாத்மநே நமஹ (Samaathmane namaha)

ஏகாதசி விரதம் அநுஷ்டிப்பதன் பலன்களைப் பற்றி வியாசர் விளக்க அதைப் பாண்டவர்களும் குந்தியும் கேட்டார்கள்.
எப்போதும் உணவருந்திக் கொண்டே இருப்பவனான பீமனுக்கு விரதம் இருப்பது என்பது கற்பனையிலும் முடியாத காரியம்.
அவனை ஏகாதசி விரதம் அநுஷ்டிக்க வைப்பது எப்படி என்று வியாசரிடம் குந்தி வினவ,
வியாசர், “ஏகாதசியன்று தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பிருப்பது மிகவும் உயர்ந்தது.
அது முடியாதவர்கள் தண்ணீர், பால், மோர் முதலிய நீர் ஆகாரங்களை உட்கொள்ளலாம்.
அதுவும் முடியாதவர்கள், பழங்களை உட்கொள்ளலாம்.
அதுவும் முடியாதவர்கள், அரிசியால் ஆன பொருட்களை முழுவதுமாக ஒதுக்கி விட்டு மற்ற பொருள்களை உப்பில்லாமல் சாப்பிடலாம்.
அதுவும் முடியாதவர்கள், அரிசியை உடைத்துச் செய்யும் கேசரி உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ளலாம்.
ஆனால் முழு அரிசியைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது. நீங்கள் பீமனை இந்த ரீதியில் படிப்படியாக விரதம் இருக்கச் சொல்லுங்கள்.
நாளடைவில் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருக்கப் பழகிக் கொள்வான்!” என்றார்.

அவ்வாறே படிப்படியாக பீமனுக்கு, உடைத்த அரிசியில் தயாரித்த உணவு, பின் அரிசியல்லாத உணவுகள், பின் பழங்கள்,
பின் திரவங்கள் என ஏகாதசி தினங்களில் கொடுத்துப் பழக்கிய குந்தி, இறுதியாகத் தண்ணீர் கூட அருந்தாமல்
நோன்பிருக்கும்படி அவனைப் பழக்கினாள். அவ்வாறு ஒருநாள் ஏகாதசி நோன்பு நோற்ற பீமன்,
அடுத்த நாள் காலை 7 மணிக்குள் துவாதசி திதி முடிவதால், அதற்குள் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய
வேண்டுமென எண்ணி, விடியற்காலையிலேயே எழுந்து நீராடத் தயாரானான். அப்போது அங்கே வந்த கண்ணன்,
“பீமா! நானும் பாரணை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யப் போகிறேன். எனக்குக் கொஞ்சம் வெந்நீர் போட்டுக் கொடு.
நீராடிவிட்டு எனது அநுஷ்டானங்களை முடித்து விட்டுப் பாரணைக்குத் தயாராகிறேன்!” என்றான்.

பீமனும் அடுப்பை மூட்டி வெந்நீர் போடத் தொடங்கினான். அரைமணி நேரம் ஆனது. தண்ணீரைத் தொட்டுப் பார்த்தான் பீமன்.
பனிக்கட்டி போல சில் என்றிருந்தது. “என்ன இது! அரை மணி நேரம் அடுப்பில் வைத்தும் வெந்நீர் சுடவில்லையே!” என்று யோசித்தான் பீமன்.
“என்ன பீமா? வெந்நீர் தயாரா?” என்று கேட்டான் கண்ணன். “கொஞ்சம் பொறு கண்ணா!” என்றான் பீமன்.
மேலும் அரைமணி நேரம் கழித்து, “வெந்நீர் தயாரா?” என்று கேட்டான் கண்ணன்.
பீமன் தொட்டுப் பார்த்தால் அப்போதும் தண்ணீர் சுடவில்லை. மேலும் அரைமணி நேரம் கழித்துப் பார்த்தான். சுடவில்லை.

முந்தையநாள் முழுவதும் ஊன்வாட உயிர்வாட நோன்பிருந்த பீமனுக்கோ பசி வயிற்றைக் கிள்ளுகிறது.
கண்ணனோ “வெந்நீர் தயாரா?” என மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
“தண்ணீர் சுடாமலேயே இருக்கிறதென்றால், ஒருவேளை வெந்நீர்ப் பானைக்குள் பிரகலாதன் ஒளிந்திருக்கிறானோ?” என ஐயம் கொண்டான் பீமன்.
ஏனெனில் பிரகலாதனைத் தீயிலிட்ட போதும் அந்தத் தீ அவனுக்குக் குளிர்ச்சாதனம் போல இருந்ததல்லவா?

பிரகலாதன் உள்ளே அமர்ந்து கொண்டு தண்ணீர் சுடாமல் தடுக்கிறானோ எனச் சந்தேகப்பட்ட பீமன், உள்ளே எட்டிப் பார்க்க,
பானைக்குள் ஒரு தவளை இருப்பதைக் கண்டான். “கண்ணா! உள்ளே ஒரு தவளை இருக்கிறது.
இவ்வளவு நேரம் நான் அதைக் கவனிக்கவே இல்லை!” என்றான் பீமன்.
கண்ணன், “எனக்கு முன்னமே தெரியும். நீ அடுப்பு மூட்டியவுடனேயே அந்தத் தவளை வெப்பம் தாங்க முடியாமல்
“கண்ணா! காப்பாற்று!” என்று என்னை அழைத்து விட்டது. அதனால் நான் வெந்நீர் சுடாத படி அந்தத் தவளையைக் காப்பாற்றினேன்.
பீமா! நீயும் என் பக்தன். தவளையும் என் பக்தன். இருவருக்கும் அருள் புரிய வேண்டியது என் கடமையல்லவா?” என்று சொல்லிக் கொண்டே
பானைக்குள் கையை விட்டு அந்தத் தவளையைத் தீண்டினான்.
அடுத்த நொடி அந்தத் தவளை பானையை விட்டு வெளியே குதித்துக் காட்டுக்குள் சென்றுவிட்டது.
அடுத்த நொடியே வெந்நீர் கொதித்து விட்டது. கண்ணன் நீராடினான். பீமன் தன் அநுஷ்டானங்களை விரைந்து முடித்து விரதத்தைப் பூர்த்தி செய்தான்.
தன் அத்தைமகன் பீமனாக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண தவளையாக இருந்தாலும் சரி, தன் பக்தர்கள் அனைவரையும்
திருமால் சமமாகவே கருதுகிறார் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காகவே கண்ணன் இந்த லீலையைப் புரிந்தான்.
இவ்வாறு பக்தர்களுள் வேறுபாடு பாராமல் அவர்களைச் சமமாகக் கருதுவதால் ‘ஸமாத்மா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 108-வது திருநாமம்.
“ஸமாத்மநே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைவரையும் சமமாகப் பார்க்கும் தன்மையைத் திருமால் அருள்வார்.

——————-

109. ஸம்மிதாய நமஹ (Sammithaaya namaha)

ஆதி சங்கர பகவத் பாதருக்குப் பத்மபாதர் என்றொரு சீடர் இருந்தார். அவர் சிறந்த நரசிம்ம பக்தர்.
நரசிம்மப் பெருமாளை நேரில் காணும் ஆவலுடன் தவம் புரிவதற்காக ஓர் அடர்ந்த காட்டை அடைந்தார்.
எதிரே வந்த ஒரு வேடன் பத்மபாதரைப் பார்த்து, “ஐயா! உங்களைப் பார்த்தால் பெரிய யோகியைப் போலத் தெரிகிறதே!
இந்த ஆபத்தான காட்டில் உங்களுக்கு என்ன வேலை? இங்கே கொடிய மிருகங்கள் பல உள்ளன.
அவற்றால் உங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தயவுசெய்து இந்தக் காட்டுக்குள் செல்லாதீர்கள்!” என்றான்.

நரசிம்மரை நேரில் காணத் தவம் செய்யப் போவதாகச் சொன்னால் அந்த வேடனால் அதைப் புரிந்து கொள்ள முடியாது
என்று கருதிய பத்மபாதர், “அப்பா! நானும் ஒரு மிருகத்தைத் தேடித் தான் இக்காட்டுக்கு வந்துள்ளேன்!” என்று
அவனது மொழியிலேயே மறுமொழி கூறினார். ஆனால் வேடன் விடவில்லை. “என்ன மிருகம் அது?” என்று கேட்டான்.
“அது உனக்குத் தெரியாதப்பா! கழுத்துக்கு மேல் சிங்கம் போலவும், கழுத்துக்குக் கீழே மனிதன் போலவும்
அந்த மிருகம் இருக்கும்!” என்றார் பத்மபாதர்.

“ஐயா! நான் சிறுவயது முதல் இக்காட்டில் தான் இருக்கிறேன். இதன் மூலை முடுக்குகள் அனைத்தும் எனக்குத் தெரியும்.
இக்காட்டில் அப்படி ஒரு மிருகம் இல்லவே இல்லை. நீங்கள் தயவு செய்து திரும்பிச் செல்லுங்கள்!” என்றான் வேடன்.
“இல்லை அப்பா! உனக்குத் தெரியாது. ஆனால் அப்படி ஒரு மிருகம் உள்ளது என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
நீ உன் வேலையைப் பார்!” என்றார் பத்மபாதர்.

“இல்லை! இல்லை! உங்களைப் போன்ற யோகி இந்தக் காட்டுக்குள் நுழைந்து மிருகங்களுக்கு இரையாவதை
நான் அனுமதிக்கவே மாட்டேன். அத்தகைய மிருகம் இருப்பது உண்மையானால், உங்களுக்காக நான்
அந்த மிருகத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு வருகிறேன்!” என்றான் வேடன்.
“இன்று சூரியன் அஸ்தமிப்பதற்குள் அந்த மிருகத்தோடு உங்கள் முன் வந்து நிற்காவிட்டால், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்.

நீங்கள் காட்டுக்கு வெளியே காத்திருங்கள்!” என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் சென்றான்.
காடு முழுவதும் தேடியும் அம்மிருகத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது.
சொன்னபடி உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி, ஒரு பாறையின் உச்சிக்குச் சென்றான் வேடன்.
“நில்!” என்றொரு ஒலி. திரும்பிப் பார்த்தான். அவன் தேடிய மிருகம் அவன் எதிரே நின்று கொண்டிருந்தது.

உடனே அதைக் கயிற்றால் கட்டினான். பத்மபாதரின் இருப்பிடத்துக்கு அழைத்து வந்தான்.
“ஐயா! சொன்னபடி மிருகத்துடன் வந்து விட்டேன் பாருங்கள். கழுத்துக்கு மேல் சிங்கம், கழுத்துக்குக் கீழே மனிதன்!” என்றான் வேடன்.
பத்மபாதரின் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. “எங்கே அப்பா மிருகம்?” என்று கேட்டார்.
“இதோ என் கண்களுக்குத் தெரிகிறதே! உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?” என்றான் வேடன்.

அப்போது நரசிம்மர் அசரீரியாகப் பத்மபாதரிடம், “பத்மபாதா! நீ வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றவன்.
ஆனால் என் மீது முழுமையான நம்பிக்கை உனக்கு இல்லை. இந்த வேடன் எந்த வேதமும் பயிலாதவனாயினும் என் மீது
அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து என்னைத் தேடினான். அத்தகைய நம்பிக்கை உள்ளவர்களுக்கே நான் காட்சி தருவேன்!” என்று கூறினார்.

ஒரு வேடனுக்கு இருக்கும் நம்பிக்கை வேதம் கற்ற தனக்கு இல்லையே என எண்ணி வருந்தினார் பத்மபாதர்.
இந்தச் சரித்திரத்தின் மூலமாகத், திருமால், தன் மேல் திடமான நம்பிக்கை கொண்ட பக்தர்கள்,
மேதா விலாசமில்லாத பாமரர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார்,
அவர்களின் பக்திக்குக் கட்டுப்படுகிறார் என்பது புரிகிறது.
அதனால் அவர் ‘ஸம்மித:’என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 109-வது திருநாமம்.
“ஸம்மிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு எம்பெருமான் தன்னை முழுமையாகக் காட்டியருளுவான்.

——————–

110. ஸமாய நமஹ (Samaaya namaha)

பராசர பட்டர் என்னும் ஆச்சாரியர், மார்கழி மாதம் திருவரங்கத்தில் திருப்பாவையைப் பற்றித் தொடர்ச்சொற்பொழிவு ஆற்றி வந்தார்.
தொடர்ச்சொற்பொழிவின் நிறைவு நாளில் திருப்பாவையின் முப்பது பாசுரங்களைக் கேட்பவர்கள் பெறும் பலன் என்ன
என்பதை விவரிக்கையில், “அன்று ஆண்டாளுக்குத் திருமால் எவ்வாறு அருள்புரிந்தாரோ,
அதைப் போலவே ஆண்டாள் அருளிய இந்த முப்பது பாசுரங்களையும்
தினமும் சொல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அருள்புரிவார்!” என்று கூறினார்.

அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, “சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் சொல்வதை அடியேனால் ஏற்கமுடியவில்லை.
ஆண்டாள் நாச்சியார் சாட்சாத் பூமாதேவியின் அவதாரம். அவளுடைய பக்தி என்பது பெரிய சிகரம் போல.
எங்களுடைய பக்தியெல்லாம் வெறும் கூழாங்கல் போலத்தான். அவ்வாறிருக்க, மிகவுயர்ந்தவளான
ஆண்டாளுக்கு அருள்புரிந்ததைப் போலவே, மிகத்தாழ்ந்தவர்களான எங்களுக்கும் திருமால் அருள் புரிவார்
என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?” என்று கேட்டார்.

அதற்கு விடையளித்த பராசர பட்டர், “கிராமங்களில் பசுக்கன்றுகளை விலைக்கு விற்றுவிட்டு,
கன்றின் தோலுக்குள் வைக்கோலை வைத்து அடைத்து, தோல்போர்த்திய பொம்மைக் கன்றைப் பசுவின் முன்னே நிறுத்துவார்கள்.
அதைத் தன்னுடைய கன்று என நினைத்துப் பசுவும் பால் சுரக்குமல்லவா? அதுபோலத் தான் நாமும் திருப்பாவை என்னும்
தோலைப் போர்த்திக் கொண்டு கன்றுகளாகத் திருமால் முன்னே சென்று நின்றோமானால், திருப்பாவை எனும் தோலைப்
பார்த்தவுடன் திருமாலுக்கு ஆண்டாளின் ஞாபகம் வந்துவிடும்.
அதனால் அவளுக்கு எவ்வாறு அருள்புரிந்தாரோ அதே அருளை நம்மீதும் பொழிவார்! உண்மையான கன்றாயினும்,
தோல்போர்த்திய கன்றாயினும், ஒரே அளவில் தானே பசு பால் சுரக்கிறது? அதுபோலத் தான் இதுவும்!” என்றார்.

மற்றொருவர் கூட்டத்திலிருந்து எழுந்து, “அடியேனுடைய பல்வேறு அலுவல்களுக்கு மத்தியில்
முப்பது பாசுரங்களையும் தினமும் சொல்வது மிகவும் கடினமாயிற்றே! அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு உண்டா?” என்று கேட்டார்.
“அப்படியானால், ‘மார்கழித்திங்கள்’, ‘வையத்து வாழ்வீர்காள்’, ‘ஓங்கி உலகளந்த’ ஆகிய முதல் மூன்று பாசுரங்களையும்,
‘கூடாரை வெல்லும்’, ‘கறவைகள் பின்சென்று’, ‘சிற்றஞ் சிறுகாலே’, ‘வங்கக் கடல்கடைந்த’ ஆகிய இறுதி நான்கு பாசுரங்களையும்
ஆக மொத்தம் ஏழு பாசுரங்களைச் சொன்னால் கூட முழுமையா கத் திருமாலின் அருள்கிட்டும்!” என்றார்.

“அதுவும் முடியாவிட்டால் என்ன செய்வது?” என்று ஒருவர் கேட்டார்.
“சாற்றுமறைப் பாசுரங்கள் எனப்படும் ‘சிற்றஞ் சிறுகாலே’, ‘வங்கக் கடல்கடைந்த’ இந்த இரண்டு நிறைவுப் பாசுரங்களையாவது சொல்லுங்கள்.
பெருமாளின் அருள் பூரணமாகக் கிட்டும்!” என்றார்.
“அதுவும் முடியாவிட்டால்?” என்று கேட்டார் மற்றொருவர். “சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தை
மட்டுமாவது சொல்லுங்கள். எம்பெருமான் உங்களைக் கடாட்சிப்பான்!” என்றார்.

“அதுவும் முடியாவிட்டால்?” என்று தயக்கத்துடன் மற்றொருவர் கேட்க,
“பராசர பட்டர் தினமும் திருப்பாவை சொல்வார் என்று என்னை நினைத்துக் கொள்ளுங்கள்! திருமால் அருள்புரிவார்!” என்றார்.
“அதெப்படி ஒரு பாசுரம் சொல்பவர்க்கும் முப்பது பாசுரம் சொல்பவர்க்கும் ஒரே மாதிரியான அருள் கிட்டும்
நீங்கள் சந்தேகப்பட வாய்ப்புண்டு!” என்ற பராசர பட்டர் மேலும் கூறினார்,
“இரண்டு விஷயங்கள் சொல்கிறேன், கவனமாகக் கேளுங்கள்: தன்னுடைய பக்தர்கள் தன்னிடம் காட்டும் அன்பும் பக்தியும்
சிறிதாகவோ பெரிதாகவோ எப்படி இருந்தாலும், அதைக் கணிசியாமல், பக்தர்கள் அனைவரையுமே திருமால் சமமாகத் தான் கருதுகிறார்.
“ஸமோஹம் ஸர்வபூதேஷு” என்று கீதையில் கண்ணனே தெரிவித்துள்ளான்.
எனவே ஒரு பாசுரம் சொன்னவர்கள், முப்பதும் சொன்னவர்கள் என்று எண்ணிக்கையால் திருமால் அவர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை.
அத்தகைய தாராள குணம் திருமாலுக்கு இருக்கிறது என்பதற்காக, அதை அவனுடைய பலவீனமாக நினைத்து,
முப்பது பாசுரம் சொல்ல முடிந்தவர்களும், சோம்பேறித்தனத்தால் ஒரு பாசுரம் மட்டும் சொல்கிறேன் என்று கூறுவது மிகத்தவறு.
ஒரு பாசுரமும் சொல்லாதவர்களுக்குக் கூட அருள்புரியும் அளவுக்கு அவனிடம் கருணை இருப்பது உண்மைதான்.

அதற்காக இறைவனின் கருணையை நாம் திருடலாமா? நம்மால் இயன்ற அளவு அவனக்குத் தொண்டு செய்யவேண்டுமல்லவா?
எனவே ஒரு பாசுரம் சொன்னாலும் முழுமையாக அருள்புரியும் அளவுக்குக் கருணைக் கடலாக அவன் இருக்கிறான் என்று
அவனது கருணையை நினைத்துக் கொண்டே முப்பது பாசுரங்களும் தினமும் சொல்ல முயலுங்கள்!”
இவ்வாறு பக்தர்கள் தன்னிடம் செலுத்தும் அன்பு, ஆர்வம், ஈடுபாடு இவற்றைக் கொண்டு அவர்களுக்குள் வேறுபாடு பாராமல்
அனைத்து பக்தர்களிடமும் சமமாக அன்பு காட்டுவதால் திருமால் ‘ஸம:’ என்றழைக்கப்படுகிறார் என்று விளக்கினார்.

“ஸமாய நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 110-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வரும்
அன்பர்கள் என்றும் திருமாலின் மனத்துக்கு இனியவர்களாக இருக்கும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.
குறிப்பு: 108-வது திருநாமமான ‘ஸமாத்மா’, திருமால் தன் அடியார்களுக்குள் குலம், கல்வி, ஞானம், செல்வம், செல்வாக்கு
போன்றவற்றைக் கொண்டு வேறுபாடு பார்ப்பதில்லை என்பதைக் காட்டுகிறது.
110-வது திருநாமமான ‘ஸம:’, பக்தியின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதைக் கொண்டு
கூடத் திருமால் பக்தர்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்பதைக் காட்டுகிறது.

—————-

111. அமோகாய நமஹ (Amoghaaya namaha)

விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திரபந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும்,
பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாகக் கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான்.
அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள்.

தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால்,
க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை.
காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான்.
அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராடச் சென்றார்.
அப்போது ஈரமாக இருந்த படிகள் வழுக்கிவிடவே, தவறிப் போய்த் தண்ணீரில் விழுந்தார் முனிவர்.

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என இரு கைகளையும் உயர்த்தி உதவிக்காக வேண்டினார்.
அச்சமயம் அந்த வழியாகச் சென்ற க்ஷத்திரபந்துவுக்கு இந்த முனிவரைக் காக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது.
அதுவரை எந்த நற்செயலும் செய்திராத அந்த இம்சை இளவரசன், அன்று குளத்தில் குதித்தான். முனிவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
மிகவும் களைப்பாக இருப்பதாக முனிவர் சொல்ல, அவர் உண்பதற்குப் பழங்களைப் பறித்து வந்து கொடுத்தான் க்ஷத்திரபந்து.
அவரது கால்களைப் பிடித்து விட்டான். அவனது பணிவிடைகளைக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்த
முனிவர், “யார் நீ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.

எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி தன் முழு வரலாற்றையும் கூறினான்.
“க்ஷத்திரபந்து! கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறேன்.
அது உன் பாபங்கள் அனைத்தையும் போக்கி உன்னைத் தூய்மைப் படுத்தும்!” என்று சொன்ன முனிவர்,
‘கோவிந்தா’ என்ற திருமாலின் திருநாமத்தை அவனுக்கு உபதேசித்தார்.
“நீ எப்போதும் கோவிந்தா… கோவிந்தா… என்று சொல்லிக் கொண்டிரு! உனக்கு நல்லது நடக்கும்!” என்று சொன்னார்.
க்ஷத்திரபந்துவால் நம்ப முடியவில்லை.
“இவ்வளவு பாவங்கள் செய்த எனக்கு வெறும் கோவிந்தா என்று சொல்வதால் எப்படி நன்மை உண்டாகும்?” என்று கேட்டான்.

அப்போது முனிவர், “திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் என்றும் வீண் போவதில்லை.
நாம் சிறிதளவு முயற்சியை அவனை நோக்கி முன்னெடுத்தாலே போதும். மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான்!
நீ கோவிந்த நாமத்தைச் சொல்!” என்றார்.
க்ஷத்திரபந்துவும் மனம் திருந்தியவனாக எப்போதும் கோவிந்த நாமத்தை ஜபம் செய்யத் தொடங்கினான்.
அதன் பயனாக அவனது பாபங்கள் யாவும் மெல்ல மெல்ல தீயினில் தூசாயின.
அடுத்த பிறவியில் பக்தர்கள் நிறைந்த ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றான்.

இறைவனின் திருவடிகளில் சரணாகதி செய்து அவனை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்வதே அனைத்து
வேதங்களின் சாரம் என்பதை அறிந்து கொண்டான்.
சரணாகதி செய்தான். அந்தப் பிறவியின் முடிவிலேயே முக்தியும் அடைந்தான்.
க்ஷத்திரபந்து வைகுந்தத்தை அடைந்த போது, அவனுக்கு முற்பிறவியில் உபதேசம் செய்த அந்த முனிவர் அவனை வரவேற்றார்.
“நான் சொன்னது நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.
“ஆம்! திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் வீண் போகாது என்று தாங்கள் கூறினீர்கள்.
அதை அனுபவத்தில் உணர்ந்து விட்டேன். கோவிந்தா கோவிந்தா என்று அவன் திருநாமங்களை உச்சரித்தேன்.

அது வீண் போகவில்லை. அந்த நாம உச்சாரணம் அடியேனை சரணாகதியில் கொண்டு சேர்த்து விட்டது.
அந்தச் சரணாகதியின் பயனாக எம்பெருமான் அடியேனுக்கு முக்தியும் அளித்து விட்டான்!” என்றான், க்ஷத்திரபந்து.
‘அமோக:’ என்றால் வீண்போகாதது என்று பொருள். திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்தவொரு வழிபாடும் வீண்போகாமல்
பலன் தருவதால், திருமால் ‘அமோக:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 111வது திருநாமம். “அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எடுக்கும்
அனைத்து முயற்சிகளும் வீண்போகாமல் பலனளிக்கும்படி திருமால் திருவருள் புரிவார்.

—————-

112. புண்டரீகாக்ஷாய நமஹ (Pundareekaakshaaya namaha)

திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோவில், கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோவில்,
திருவெள்ளரை ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட முக்கியமான பெருமாள் கோவில்களில்
பாஞ்சராத்ர ஆகமம் எனப்படும் பூஜை முறை பின்பற்றப்படுகிறது.
பாஞ்சராத்ர ஆகமத்தை ஐந்து பிரிவுகளாக ஐவருக்குத் திருமால் உபதேசித்தார்.

முதல் பகுதியை ஆதிசேஷனுக்கும், இரண்டாம் பகுதியைக் கருடாழ்வாருக்கும்,
மூன்றாம் பகுதியைத் திருமாலின் படைத்தளபதியான விஷ்வக்சேனருக்கும், நான்காம் பகுதியை பிரம்ம தேவருக்கும்,
ஐந்தாம் பகுதியைப் பரமசிவனுக்கும் உபதேசித்தார் என்ற வரலாறு அந்த ஆகமத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
பரமசிவனுக்குத் திருமால் உபதேசிக்கையில், “நான் காவிரிக் கரையில் அரங்கனாகத் திருவரங்கத்தில் துயில் கொண்டிருக்கிறேன்.
அந்த அரங்கனின் திருமேனி அங்கங்களாகவே மற்ற க்ஷேத்திரப் பெருமாள்கள் உள்ளார்கள்.

பத்ரிநாத்தில் உள்ள பத்ரி நாராயணன் அரங்கனின் தலை, புஷ்கரத்தில் ஏரி வடிவில் உள்ள பெருமாள் அரங்கனின் நாக்கு,
குருக்ஷேத்திரத்தில் உள்ள பெருமாள் அவரது வாய், அயோத்தியில் உள்ள ராமர் அவரது கழுத்து, திருமலையப்பன் அவரது மார்பு,
பூரி ஜகந்நாதர் அவரது வயிறு, ஆந்திர மாநிலம் ஸ்ரீகூர்மத்திலுள்ள கூர்ம மூர்த்தி அவரது முதுகு, ஸ்ரீமுஷ்ணம் வராகர் அவரது குரல்,
கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள் அவரது அழகு, மதுரை கள்ளழகர் அவரது கைகள், திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் அவரது நடை,
மன்னார்குடி ராஜகோபால சுவாமி அவரது திருக்கண்கள்!” என்று விளக்கினார்.

அந்த விளக்கங்களைக் கேட்ட பரமசிவன், தான் ஒரு சிறப்பான ஆயுதத்தைப் பெற விரும்புவதாகவும்,
அதற்குத் தான் எத்தகைய வழிபாடு செய்ய வேண்டும் என்றும் திருமாலிடம் வினவினார்.
அதற்குத் திருமால், “விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் உள்ள ஆயிரம் திருநாமங்களையும் சொல்லி, ஆயிரம் செண்பகப் பூக்களால்
மன்னார்குடியில் ராஜகோபாலனாக விளங்கும் எனக்கு அர்ச்சனை செய்.
நான் உனக்குச் சிறப்பான ஓர் ஆயுதத்தைத் தருகிறேன்!” என்று கூறினார்.

செண்பக மலர்கள் நிறைந்த செண்பகாரண்ய க்ஷேத்திரமான மன்னார்குடியை அடைந்த பரமசிவன்
“விச்வாய நமஹ, விஷ்ணவே நமஹ…” என்று ஆயிரம் திருநாமங்களைச் சொல்லிச் செண்பகப் பூக்களால்
ராஜகோபாலனுக்கு அர்ச்சனை செய்தார். 999 திருநாமமான “அக்ஷோப்யாய நமஹ” என்று சொல்லி
செண்பக மலரை ராஜகோபாலனின் திருவடியில் சேர்த்தார். அத்துடன் செண்பக மலர்கள் தீர்ந்து விட்டன.
“ஸர்வப்ரஹரணாயுதாய நம:” என்ற 1000-வது திருநாமத்தைச் சொல்லி அர்ச்சிக்க மலர் இல்லை.

என்ன செய்வது என யோசித்த சிவபெருமான், செண்பக மலர் போல இருக்கும் தன் மூக்கையே கிள்ளித்
திருமாலின் திருவடிகளில் சமர்ப்பிக்கப் போனார். ஆனால், ராஜகோபாலன் அவரைத் தடுத்தான்.
“உன் பக்திக்குப் பரிசாக இந்தச் சூலத்தைத் தருகிறேன்!” என்று சூலாயுதத்தைச் சிவனுக்கு அளித்தான்.
அப்போது சிவபெருமான், “ராஜகோபாலா! எனக்கு ஒரு ஐயம்! பூமியில் உனக்கு அர்ச்சனை செய்ய முயன்றால் பல இடையூறுகள் வருகின்றன.
உன் கோயிலுக்கு வர எண்ணினால் அதற்குக் கூட பல தடைகள் ஏற்படுகின்றன.

உன் புகழைப் பாட வேண்டுமென நினைத்தால், தொண்டை கட்டிக் கொள்கிறது.
வைகுந்தத்திலுள்ள ஜீவர்கள் மட்டும் இப்படிப்பட்ட இடையூறுகள் இன்றி, தடைகளின்றி உன்னை அனுபவிக்கிறார்களே! அது எப்படி?” என்று கேட்டார்.
அதற்கு ராஜகோபாலன், “ஒரு அறையில் எத்தனை அழகான பொருட்கள் இருந்தாலும், பார்ப்பவனுக்குக் கண்கள் இருந்தால் தானே
அவற்றைக் காண முடியும்? ஒரு குருடனால் எதையும் பார்க்க முடியாதல்லவா?
அதுபோல வைகுந்தத்தில் எனது திருமேனியையும் குணங்களையும் காணவேண்டுமென்றால், அதற்குத் தெய்வீகமான கண்கள் வேண்டும்.

வைகுந்தத்தில் உள்ளவர்களுக்கு நானே அத்தகைய தெய்வீகப் பார்வையாக இருந்து,
அவர்கள் இடையறாது என் அழகையும் குணங்களையும் அனுபவிக்கும்படி அருளுகிறேன்.
இவ்வுலகில் ஏற்படுவது போன்ற தடைகள் அவர்களுக்கு ஏற்படுவதில்லை!” என்றார்.
வைகுந்த லோகத்துக்குப் ‘புண்டரீகம்’ என்று பெயர். ‘அக்ஷி’ என்றால் கண் என்று பொருள்.
வைகுந்த (புண்டரீக) லோகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் கண்ணாகத் (அக்ஷியாகத்) திருமால் திகழ்ந்து,
அங்குள்ள போக்கியங்களைக் கண்டு அனுபவிக்கச் செய்வதால், ‘புண்டரீகாக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 112-வது திருநாமம். சாந்தோக்ய உபநிஷத்,
“ஸ வா ஏதேன திவ்யேன சக்ஷுஷா மனஸா ஏதான் காமான் பச்யன் ரமதே” என்று இக்கருத்தைத் தெரிவிக்கிறது.
வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் “கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கும்” என்று பாடியுள்ளார்.
கண் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் “புண்டரீகாக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால்,
திருமால் அவர்களது கண்கள் விரைவில் குணமடையும்படி அருள்புரிவார்.

——————–

113. வ்ருஷகர்மணே நமஹ (Vrushakarmane namaha)

திருவரங்கத்தில் ராமாநுஜர் கீதையின் பொருளைத் தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நாமெல்லாம் நன்கு அறிந்த கீதை ஸ்லோகமான “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்,
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்ற ஸ்்லோகம் வந்தது.
அதன் பொருளை விளக்குகையில், “அடியார்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக
எம்பெருமான் அவதரிக்கிறான்!” என்று பொருள் கூறினார்.

ஒரு சீடர் பணிவுடன் எழுந்து, “சுவாமி! நல்லவர்களைக் காத்து, தீயவர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட
இறைவன் அவதரிக்கிறான் என்று தானே இதற்கு எல்லாரும் பொருள் கூறுவார்கள்!” என்று கேட்டார்.
அதற்கு ராமாநுஜர், “அசுரர்களை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு எம்பெருமான் வைகுந்தத்திலிருந்து
கீழே இறங்கி வர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அங்கிருந்தபடியே சக்ராயுதத்தை ஏவினால்,
அதுவே ராவணன், கும்பகர்ணன், கம்சன், சிசுபாலன், இரணியன் என அனைவரின் தலைகளையும் கொய்து விட்டு வந்து விடுமே!

அடியார்களோடு கலந்து பழகுவதற்காகத் தான் இறைவன் அவதரிக்கிறார்.
ஏனெனில், பிரகலாதனோடும், குகனோடும், சபரியோடும், அனுமனோடும், கோபிகைகளோடும் கலந்து பழக வேண்டும் எனில்,
அதை வைகுந்தத்திலிருந்தபடியே செய்ய இயலாதல்லவா? அதனால் தான் பூமிக்கு இறங்கி வருகிறார்.
வரும்போது குறுக்கே வரும் அசுர சக்திகளையும் அப்படியே அழிக்கிறாரே ஒழிய, அது அவரது அவதார நோக்கமல்ல.
அடியார்களைக் காப்பதும் அவர்களுடன் கலந்து பழகுவதுமே அவதாரம் செய்வதற்கான நோக்கம்!” என்றார்.
இதை விளக்க ஒரு உதாரணத்தையும் கூறினார் ராமாநுஜர்.

“ஒரு ஊரில் ஒரு பெரியவர், மக்கள் தண்ணீர் குடிப்பதற்காகவும், தாகமாக உள்ள பசுக்கள் இளைப்பாறுவதற்காகவும்
ஒரு குளம் வெட்டுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.
அதே ஊரை ஒருவன் அந்தக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டால் அதற்குக் குளம் வெட்டியவர் பொறுப்பாக முடியுமா?
அதுபோலத் தன் அடியார்களுக்கு அருள்புரிய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே இறைவன் அவதரிக்கிறான்.
கொழுப்பெடுத்தவர் சிலர் தாமாகப்போய் குளத்தில் விழுவதைப்போல, அடியார்களுக்கு அருள்புரிய பூமிக்கு வந்த இறைவனை
அசுரர்கள் எதிர்த்து எதிரம்பு கோர்த்துத் தாமாகவே விழுந்து மாள்கிறார்கள்.

ஒருவன் தற்கொலை செய்து கொண்டதற்கு எப்படிக் குளம் வெட்டியவர் பொறுப்பாக மாட்டாரோ,
அவ்வாறே அசுரர்கள் மாள்வதற்கும் இறைவன் பொறுப்பல்ல!” என்றார்.
“அப்படியானால் இந்த கீதை ஸ்லேகத்துக்கு எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?” என்று மற்றொரு சீடர் கேட்டார்.
அதற்கு ராமாநுஜர், “இறைவனிடத்தில் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள், அவன் சாஸ்திரங்களில் இட்ட கட்டளைகளை
அப்படியே பின்பற்றுபவர்கள், அவனைத் தவிர இன்னொன்றை நினைக்காதவர்கள், அவனது லீலைகளையே எப்போதும் சிந்தித்திருப்பவர்கள்,
அவனை விட்டுப் பிரிந்தால் தரிக்க முடியாதிருப்பவர்கள் இத்தகைய மெய்யடியார்களே சாதுக்கள்.

‘பரித்ராணாய ஸாதூநாம்’ என்றால் அத்தகைய அடியார்களைக் காப்பதே அவதாரத்துக்கு முக்கிய நோக்கம் என்று பொருள்.
‘விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்றால், அவ்வாறு அடியார்களைக் காக்க வருகையில் குறுக்கே வரும்
தீய நடத்தை கொண்டவர்களை அழித்தல் என்று பொருள்.
‘தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய’ என்றால், இறைவனுக்கு நாம் செய்யும் பூஜையாகிய மிகச் சிறந்த தர்மம் சரிவர நடவாது போனால்,
அதைக் காத்துத் தந்து மீண்டும் நடக்கும்படிச் செய்தல் என்று பொருள்.
‘ஸம்பவாமி யுகே யுகே’ – இக்காரணத்துக்காக யுகங்கள் தோறும் தான் அவதரிப்பதாகக் கண்ணன் அருளிச் செய்கிறான்!” என விளக்கினார்.

அப்போது ராமாநுஜரின் மருமகனான நடாதூர் ஆழ்வான், “சுவாமி! இப்போது ஒரு விஷயம் நன்கு புரிகிறது.
அவதாரங்கள் அனைத்தும் அடியார்களான நமக்காகத்தான்.
நரசிம்மாவதாரம் இரணியனை அழிப்பதற்காக அல்ல, பிரகலாதனைக் காப்பதற்காக.
ராமாவதாரம் ராவணனை அழிப்பதற்காக அல்ல, அனுமனை அணைப்பதற்காக.
கிருஷ்ணாவதாரம் கம்சனைக் கொல்வதற்காக அல்ல, கோபிகைகளைக் கொஞ்சுவதற்காக!” என்றார்.
மேலும், “அவதாரங்கள் மட்டுமல்ல, இறைவன் செய்யக் கூடிய ஒவ்வொரு செயலுமே நம்மை உயர்த்த வேண்டும்,
நம்மை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்யப்படுபவையே.

எம்பெருமான் மிக உயர்ந்தவனாக இருந்தாலும், நம்மையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில்
இத்தகைய பல செயல்களைப் புரிகிறான்!” என்றார் ராமாநுஜர்.
‘வ்ருஷ’ என்றால் நல்வழி அல்லது அறவழி என்று பொருள்.
அடியார்களை நல்வழிப் படுத்தக் கூடிய செயல்களைச் செய்வதால் திருமால் ‘வ்ருஷகர்மா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 113-வது திருநாமம். “வ்ருஷகர்மணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
எப்போதும் அறவழியில் நடக்கும்படி திருமால் அருள்புரிவார்.

114. வ்ருஷாக்ருதயே நமஹ (Vrushaakruthaye namaha)

மதுரைக்கு அருகே இருக்கும் திருமோகூர் என்னும் திவ்யதேசத்தில் காளமேகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
அந்தப் பெருமாள் முன் அகஸ்திய மகரிஷி நடனமாடுவது வழக்கம்.
ஒரு முறை அந்தப் பெருமாளைத் தரிசிப்பதற்காக தேவ லோகத்திலிருந்து தேவேந்திரன் பூமிக்கு வந்தான்.
பெருமாள் முன்னே நடனமாடும் அகஸ்தியரின் முதுகு தான் அவனுக்குத் தெரிந்தது.
ஆனாலும் அவரது குள்ளமான தோற்றத்தைக் கண்டு அகஸ்திய ரிஷி என்று அறிந்தான் இந்திரன்.
அவரது உயரத்தை எண்ணிக் கிண்டல் செய்து சிரித்து விட்டான். சடக்கெனத் திரும்பிப் பார்த்தார் அகஸ்தியர்.

கோபத்துடன், “இந்திரா! என்னால் திரும்பிப் பார்க்க முடியாது என்று நினைத்துத் தானே பின்னால் இருந்தபடி என்னை ஏளனம் செய்தாய்?
இந்தத் தவறுக்குத் தண்டனையாக நீ மயிலாகப் பிறக்க வேண்டும்!” என்றார்.
(பறவைகளுள் மயிலால் முகத்தைத் திருப்பிப் பின்னால் பார்க்க இயலாது என்பதால் அவ்வாறு சபித்தார்.)
தன்னை மன்னித்து விடும் படி இந்திரன் அகஸ்தியரிடம் மன்றாடினான். மனம் இரங்கிய அகஸ்தியர்,
“இந்திரா! கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற இயலாது. எனினும் நீ இவ்வளவு தூரம் மன்றாடுவதால் சாபத்தைக் கொஞ்சம் மாற்றுகிறேன்.

நீ உடனே மயிலாகப் பிறக்க வேண்டாம். பகைவர்களால் உனக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் நீ மயிலாக உருமாறி
உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வாய்!” என்று கூறினார். இந்திரன் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றான்.
சில காலம் கழித்து ராவணனும் அவனது மகனான மேகநாதனும் தேவலோகத்தை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள்.
இந்திரன் தலைமையில் அனைத்துத் தேவர்களும் அவர்களை எதிர்த்துப் போர் புரிந்தும் வெல்ல முடியவில்லை.
அந்தப் போரில் இந்திரனை ஜெயித்ததால் மேகநாதன் ‘இந்திரஜித்’ என்ற பெயரைப் பெற்றான்.

அச்சமயம் அகஸ்தியரின் வாக்கு இந்திரனின் நினைவுக்கு வந்தது. தன் உயிரை ராவணனிடமிருந்தும் இந்திரஜித்திடமிருந்தும்
காப்பாற்றிக் கொள்வதற்காக மயிலாக உருவெடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றான் இந்திரன்.
ஆனாலும், அவர்கள் விடாமல் அவனைத் துரத்தி வந்தார்கள். திருமோகூரில் மயில்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன.
மயில் வடிவில் உள்ள இந்திரன் அந்தக் கூட்டத்துடன் சென்று சேர்ந்து கொண்டான்.
ராவணனும் இந்திரஜித்தும் அவனை அடையாளம் காண முடியாமல் திரும்பச் சென்று விட்டார்கள்.

அப்போது மயில் வடிவில் இருந்த இந்திரன் காளமேகப் பெருமாள் முன்னே நடனமாடினான்.
அதைக் கண்ட மற்ற மயில்களும் பெருமாள் முன்னே தோகையை விரித்து நடனமாடத் தொடங்கின.
அந்த நடனத்தைக் கண்டு மனம் குளிர்ந்த திருமால், இந்திரனுக்குக் காட்சியளித்தார்.
அவனது பழைய வடிவத்தைப் பெறும்படி அருள்புரிந்ததோடு மட்டுமின்றி, தானே பூமியில் ராமனாக அவதரித்து
ராவணனையும் இந்திரஜித்தையும் வதம் செய்வதாக உறுதியளித்தார்.

இந்திரனோடு நடனமாடிய மயில்கள் அனைத்தும் நடராஜரான சிவபெருமானைப் போலச் சிறப்பாக நடனமாடியதால்
இனி அனைத்து மயில்களும் அவரைப் போலவே நீலநிறக் கழுத்தோடு விளங்கட்டும் என்று திருமால் அருள்புரிந்தார்.
காளமேகம் என்றால் கரிய நிறமுள்ள மேகம் என்று பொருள். காளமேகப் பெருமாள் முன்னே அன்று அனைத்து மயில்களும்
இந்திரனோடு சேர்ந்து நடனமாடியதன் தொடர்ச்சியாகத் தான் இன்றும் வானில் கார் மேகங்கள் தோன்றினால்,
ஆனந்தமாக மயில்கள் தோகையை விரித்து ஆடுகின்றன.

கார்மேக வண்ணத்தில் இருக்கும் பெருமாளைத் தரிசிக்கும் போதெல்லாம் அடியார்களான நாமும் அவ்வாறே ஆடிப் பாடி
அவனை வழிபட வேண்டுமென நமக்கு உணர்த்துகின்றன.
வடமொழியில் ‘வ்ருஷ’ என்றால் வர்ஷித்தல், அதாவது பொழிதல் என்று பொருள்.
கருணை மழையைப் பொழியும் கார்மேகம் போன்ற வடிவுடன் திருமால் திகழ்வதால் ‘வ்ருஷாக்ருதி:’ என அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 114-வது திருநாமம்.
“வ்ருஷாக்ருதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மேல் காளமேகப் பெருமாள் கருணை மழையை வர்ஷிப்பார்.

—————–

115. ருத்ராய நமஹ (Rudraaya namaha)

சென்னைக்கு அருகே உள்ள பூவிருந்தவல்லியில் அவதரித்த மகான் திருக்கச்சி நம்பிகள்.
அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தார்.
ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு
அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், “பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன்.
இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று
சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார்.

அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்றார்.
பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார்.
பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!” என்று கேட்டார் பெருமாள்.
நம்பியும் எடுத்து ஊட்டினார்.

அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்தில் பாதி சர்க்கரைப் பொங்கல் காலியாகி இருப்பதையும்,
திருக்கச்சி நம்பியின் கையில் சர்க்கரைப் பொங்கல் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டார்.
“என்ன காரியம் ஐயா செய்தீர்? பெருமாள் உண்ட மிச்சத்தைச் சாப்பிட வேண்டிய நாம் அவருக்கென்று
வைத்த பிரசாதத்தைச் சாப்பிடுவது நியாயமா?” என்று கேட்டார் அர்ச்சகர்.
“சுவாமி! அடியேன் எதையும் சாப்பிடவில்லை. பெருமாள் தான் கேட்டார்! அவருக்கு ஊட்டி விட்டேன்!” என்றார் நம்பி.
“இதென்ன புதுக்கதை! பெருமாள் என்றைக்கு ஐயா சாப்பிட்டிருக்கிறார்? நீர் தின்றுவிட்டு அவர் மேல் பழிபோடாதீர்!” என்றார் அர்ச்சகர்.

செய்தியைக் கேள்வியுற்ற கோயில் அதிகாரிகள் அங்கே விரைந்து வந்தனர். பெருமாளுக்கென்று வைத்திருந்த பிரசாதத்தை
நிவேதனத்துக்கு முன் எடுத்து உண்ட திருக்கச்சி நம்பிகள் இனிமேல் கோயிலுக்குள்ளேயே வரக்கூடாது என்று
தீர்மானம் நிறைவேற்றி அவரை வெளியே அனுப்பினார்கள். வருத்தத்துடன் வீடு திரும்பினார் திருக்கச்சி நம்பிகள்.
இச்செய்தி ஊர் முழுவதும் பரவியதால், மக்கள் அனைவரும் திருக்கச்சி நம்பிகளைப் பலவாறு ஏசத் தொடங்கினார்கள்.
“வரதா! மக்கள் என்னைத் தூற்றுவதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை! ஆனால் இப்படி ஒரு லீலை செய்து
நான் உனக்குச் செய்துவரும் தொண்டை நடக்க விடாமல் செய்துவிட்டாயே!” என்று பெருமாளிடம் மனமுருகி வேண்டினார்.

சில நாட்கள் கடந்தன. திருமலையிலிருந்து சில பக்தர்கள் வரதராஜப் பெருமாளுக்கு 100 கங்காளம் பொங்கலும் 100 கங்காளம்
புளியோதரையும் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு
கோவிலுக்கு வந்து பிரசாதத்தை வரதராஜனுக்குச் சமர்ப்பிக்கையில் பெருமாள் அர்ச்சகரிடம்,
“திருக்கச்சி நம்பிகளை வரச்சொல்லுங்கள்! அவர் வந்தால் தான் நான் நிவேதனம் கண்டருள்வேன்!” என்றார்.
வேறு வழியில்லாமல் பூவிருந்தவல்லியிலிருந்து திருக்கச்சி நம்பிகளைக் காஞ்சிக்கு அழைத்து வந்தார்கள்.

நூறு கங்காளம் பொங்கலும், நூறு கங்காளம் புளியோதரையும் பெருமாளின் முன்னே இருந்தன.
திருக்கச்சி நம்பிகளைக் கண்டதும் வரதராஜப் பெருமாள்,
“இவர் மட்டும் என்னுடன் இங்கே இருப்பார். மற்ற அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள்! நாங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளப் போகிறோம்!” என்றார்.
அனைவரும் விலகிச் சென்றார்கள். கதவு தாளிட்டுக்கொண்டது.

சிறிது நேரம் கழித்து, “இப்போது உள்ளே வாருங்கள்!” என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. கதவைத் திறந்துகொண்டு
பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்றார்கள். பார்த்தால் இருநூறு கங்காளங்களிலிருந்த பிரசாதமும் காணாமல் போயிருந்தது.
அனைத்தையும் உண்ட களைப்பில் வியர்த்துப் போயிருந்த வரதனுக்குத் திருக்கச்சி நம்பிகள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார்.
“இருநூறு கங்காளங்களில் உள்ள உணவை ஒரு மனிதனால் இவ்வளவு சீக்கிரமாகச் சாப்பிட முடியுமா? உண்டவன் நான் தான்!” என்றார் வரதராஜன்.

திருக்கச்சி நம்பிகள் குற்றமற்றவர் என்பதைக் கோயில் அதிகாரிகளும் பொதுமக்களும் உணர்ந்தார்கள்.
“திருக்கச்சி நம்பிகள் எப்போதும் போல் எனக்குச் சாமரம் வீசும் கைங்கரியத்தைத் தொடர்ந்து செய்வார்!” என்று
பெருமாள் திருவாய் மலர்ந்தருளினார்.

தன்மீது ஒருமடங்கு அன்புகாட்டும் அடியவர்களின் மேல் பல்லாயிரம் மடங்கு அன்புகாட்டும் எம்பெருமானின் கருணையை எண்ணி
மனமுருகி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருக்கச்சி நம்பிகள்.
வடமொழியில் “ரோதயதீதி ருத்ர:” அழ வைப்பவனை ருத்ரன் என்று கூறுவார்கள்.
தன் கருணையால் தன் அடியார்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்து அவர்களை அழ வைப்பதால்
திருமால் ‘ருத்ரஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 115-வது திருநாமம்.

“ருத்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தன் அன்பையும் கருணையையும் திருமால்
முழுமையாகக் காட்டி அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி அருளுவார்.

————–

116. பஹுசிரஸே நமஹ.(Bahushirasey namaha)

கர்நாடகத்துக்கு ராமாநுஜர் எழுந்தருளிய காலத்தில் அங்கே வாழ்ந்த அருகதராஜன் என்ற வித்வான்
ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டார். எளிய மக்களுக்கும் வேதத்தின் கருத்துக்களைச் சரியான
முறையில் கொண்டு சேர்த்து அனைவரின் ஆதரவும் பெற்று ராமாநுஜர் விளங்குவதைக் கண்டு அருகதராஜன் பொறாமை கொண்டார்.

ராமாநுஜரை வாதத்துக்கு அழைத்து அவரை வெல்ல வேண்டும் எனத் திட்டமிட்டார்.அருகதராஜனின் சீடன் ஒருவன்,
“குருவே! இந்த ராமாநுஜர் வெறும் சமூக சேவகர் தான். அவருக்கு வடமொழி இலக்கணமோ, நியாய சாஸ்திரமோ,
தர்க்கமோ தெரியாது. அவருடன் முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் போன்ற சீடர்கள் இருக்கிறார்களே!
அவர்கள் தான் இந்த சாஸ்திரங்களை எல்லாம் கற்றவர்கள்.
எனவே அந்தச் சீடர்களை ராமாநுஜரிடமிருந்து அப்புறப் படுத்திவிட்டால் நாம் அவரை எளிதாக வாதம் செய்து வென்றுவிடலாம்!” என்றான்.
அதனால் மேலும் உற்சாகம் அடைந்த அருகதராஜன் ராமாநுஜரை வாதப் போருக்கு அழைக்குமாறு தன் சீடர்களை அனுப்பி வைத்தார்.

தொண்டனூர் ஏரிக்கரையில் எழுந்தருளியிருந்த ராமாநுஜரிடம் வந்த அருகதராஜனின் சீடர்கள் வாதப் போருக்கு அழைப்பு விடுத்தபோது,
“நான் ஒரு துறவி. வேதநெறிக்கு எதிரானவர்களான அருகதராஜன் போன்றவர்களை நான் கண்ணால் கூட பார்க்கலாகாது.
எனவே என் சீடரான நடாதூர் ஆழ்வானை அனுப்பி வைக்கிறேன். அவரோடு வாதம் செய்யட்டும்.
நடாதூர் ஆழ்வான் தோற்றால் நான் தோற்றதாகவே ஒப்புக் கொள்கிறேன்!” என்றார் ராமாநுஜர்.

அவர்கள் நடாதூர் ஆழ்வானை அழைத்துக் கொண்டு அருகதராஜனிடம் வந்தார்கள். அருகதராஜன்,
“ராமாநுஜருக்கு வாதம் செய்யத் தெரியாது என என் சீடன் சொன்னது சரிதான் போலும்.
அதனால் தான் தான் நேராக வாதம் செய்ய வராமல் சீடரை அனுப்புகிறார்!” என்றார்.

அதைக் கேட்டு வெகுண்ட நடாதூர் ஆழ்வான், “எங்கள் குருவான ராமாநுஜரே உங்களுடன் நேரில் வாதம் செய்வதற்கு
நான் ஏற்பாடு செய்கிறேன்!” என்று சொல்லிவிட்டுத் தொண்டனூருக்கு வந்தார். நடந்தவற்றை ராமாநுஜரிடம் தெரிவித்தார்.
ராமாநுஜர், “அப்படியானால் ஒரு திரையைக் கட்டிவிடுங்கள். அதன் ஒருபுறத்தில் நானும் மறுபுறத்தில்
அருகதராஜனும் அமர்ந்து முகம்பார்த்துக் கொள்ளாமல் வாதம் செய்கிறோம்!” என்று கூறினார்.

தனது ஆயிரம் சீடர்களுடன் தொண்டனூருக்கு வந்தார் அருகதராஜன். ராமாநுஜர் தன் சீடர்கள் அனைவரையும் அவ்விடத்திலிருந்து
நகர்ந்து செல்லச் சொன்னார். தாம் மட்டும் திரையின் ஒருபுறம் அமர்ந்தார்.
மற்றொரு புறத்தில் ஆயிரம் சீடர்களோடு அருகதராஜன் அமர்ந்தார்.
“நீங்கள் ஆயிரம் பேரும் என்னுடன் வாதம் செய்யலாம்! நான் தயார்!” என்றார் ராமாநுஜர்.

அருகதராஜனும் அவரது ஆயிரம் சீடர்களும் கணைகளைப் போலத் தொடுத்த கேள்விகளுக்கெல்லாம் சரியாகப் பதிலளித்தார் ராமாநுஜர்.
அதே நேரம், ராமாநுஜர் முன்வைத்த எந்த வாதத்துக்கும் அருகதராஜனாலோ, அவரது ஆயிரம் சீடர்களாலோ சரியான பதிலை அளிக்க முடியவில்லை.
ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பேருடன் இவர் வாதம் செய்கிறார் என அறிய விரும்பிய அருகதராஜனின் சீடன் ஒருவன்,
திரைக்கு அந்தப்புறம் எட்டிப் பார்த்தான். பார்த்தால், அங்கே ராமாநுஜர் இல்லை.
ஆயிரம் தலைகளுடன் ஆதிசேஷன் அமர்ந்து வாதம் செய்துகொண்டிருந்தார். திடுக்கிட்டுப் போய் மயங்கி விழுந்தான்.

ராமாநுஜர் முன்வைத்த வாதங்களைக் கேட்ட அருகதராஜன், அவரது பாண்டித்தியத்தை உணர்ந்து கொண்டார்.
“சுவாமி! நீங்கள் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் சரியானவையே. நீங்கள் சாதாரண மக்களிடம் பேராதரவு பெற்றிருந்ததால்
உங்களுக்குத் தர்க்க, நியாய சாஸ்திரங்கள் தெரியாது எனக் கருதினேன். ஆனால் உங்களைப் போன்ற வேதாந்தி எவருமில்லை
என இப்போது உணர்ந்தேன். என்னை மன்னித்து உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்று பிரார்த்தித்தார்.

மயக்கம் தெளிந்த அருகதராஜனின் சீடன் ராமாநுஜரிடம்,
“சுவாமி! நீங்கள் ஆயிரம் தலைகளோடு ஆதிசேஷனாக அல்லவா அமர்ந்திருந்தீர்கள்?” என்று கேட்டான்.
“அப்படியா? உன் கண்களுக்கு வேண்டுமானால் ஆயிரம் தலைகள் தெரிந்திருக்கலாம்!” என வினயத்துடன் சொன்ன ராமாநுஜர்,
“அப்படித் தெரிந்திருந்தால் அது எண்ணிறந்த தலைகளை உடையவனான எம்பெருமானின் அருள்!” என்றார்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் அருகதராஜன்.

“எம்பெருமானை அளவிலடங்காத தலைகளை உடையவன் ‘பஹுசிரா’ என்று போற்றுகிறார்கள்.
இங்கு தலை என்பது சிந்திக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. அதாவது, எண்ணிறந்த மனிதர்களால் எவ்வளவு சிந்திக்க முடியுமோ
அவை அனைத்தையும் விட அதிகமாகச் சிந்திக்கவல்ல ஆற்றலை உடையவன் எம்பெருமான் என்பதைத் தான்
எண்ணிறந்த தலைகளை உடையவன் என்று உருவகப்படுத்திக் கூறுகிறார்கள்.

அப்பேர்ப்பட்ட எம்பெருமான் ஆயிரம் பேருடன் வாதம் செய்யக்கூடிய சிந்தனையையும் ஆற்றலையும் அடியேனுக்கு வழங்கியதால்,
ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் போல நான் தெரிந்திருக்கிறேன் போலும்!” என்றார்.
ராமாநுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே என்றாலும், அவர் பணிவுடன் இவ்வாறு விடையளித்தார்.

ராமாநுஜர் சொன்னது போல எண்ணிறந்த மனிதர்களின் சிந்திக்கும் திறனைக் காட்டிலும்
அதிகத் திறனைக் கொண்டவராக விளங்கும் திருமால், ‘பஹுசிரா’ என்றழைக்கப்படுகிறார்.
பஹுசிரா என்றால் பல தலைகளை உடையவன் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 116-வது திருநாமம்.
“பஹுசிரஸே நமஹ” என தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நன்றாகச் சிந்திக்கும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

—————-

117. பப்ரவே நமஹ (Babhravey namaha)
ராமாநுஜரின் மறு அவதாரமாகக் கொண்டாடப்படும் மணவாள மாமுனிகள் ஆண்டாள் ரங்கமன்னாரை மங்களாசாஸனம் செய்வதற்காக
ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தம் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்போது அங்கே பிரம்மோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பிரம்மோற்சவத்தின் நான்காம் திருநாளன்று ஆண்டாள் சேஷவாகனத்திலும், ரங்கமன்னார் கோவர்த்தன கிரிதாரியாகவும்
காட்சி தருவது வழக்கம். அந்தக் காட்சியை மாமுனிகளும் அவரது சீடர்களும் கண்குளிரச் சேவித்தார்கள்.

அப்போது அவரது சீடர்களுள் ஒருவரான எறும்பியப்பா, “சுவாமி! பெருமாள் தானே எப்போதும் சேஷ வாகனத்தில் வருவார்.
இங்கு மட்டும் நாச்சியார் சேஷ வாகனத்தில் வருகிறாரே! என்ன காரணம்?” என்று கேட்டார்.
அதற்கு விடையளித்த மணவாள மாமுனிகள், “இந்தப் பூமியை அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள்
ஐராவதன், புண்டரீகன், வாமனன், குமுதன், அஞ்ஜனன், புஷ்பதந்தன், சார்வபௌமன், சுப்ரதீகன் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

பாதாளத்தில் ஆதிசேஷன் வடிவில் விளங்கும் திருமால், அந்த எட்டு யானைகளோடு சேர்த்து பூமியையும் தாங்கி நிலைநிறுத்துகிறார்.
அவ்வாறு ஆதிசேஷன் வடிவில் இருந்துகொண்டு பூமியைத் தான் எப்போதும் தாங்குவதை நமக்கு உணர்த்தவே,
இங்கே பெருமாளே சேஷவாகனமாக வடிவம் எடுத்துக் கொண்டு,
பூமியின் அவதாரமான ஆண்டாளைத் தன்மேல் சுமந்து கொண்டு வருகிறார்!” என்று விடையளித்தார்.

மற்றொரு சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா,
“சுவாமி! ரங்கமன்னார் ஏன் கையில் கோவர்த்தன மலையுடன் காட்சி தருகிறார்?” என்று கேட்டார்.
“இதே தத்துவத்தை விளக்குவதற்காகத் தான்!” என்றார் மாமுனிகள். “அதாவது, கோவர்த்தன மலை என்பது பூமிக்குப் பிரதிநிதி.
பூமிதேவியை எப்போதும் தான் சுமந்து கொண்டே இருப்பதை நமக்கு உணர்த்தவே பூமியின் ஒரு பகுதியான
கோவர்த்தன மலையைச் சுமந்து கொண்டு ரங்கமன்னார் காட்சியளிக்கிறார்!” என்று விளக்கினார்.
திருமழிசைப்பிரானின் ஒரு பாசுரத்தையும் நினைவு கூர்ந்தார் மாமுனிகள்.

“நாகம் ஏந்தும் மேரு வெற்பை நாகம் ஏந்தும் மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே”

நாகமேந்து மேரு வெற்பு நாகம் எனப்படும் சொர்க்க லோகத்தைத் தாங்கும் மேரு மலை.
நாகம் ஏந்தும் மண் நாகம் எனப்படும் எட்டு யானைகளால் (அஷ்ட திக்கஜங்களால்) தாங்கப்படும் பூலோகம்.
நாகம் ஏந்தும் ஆக ஆதிசேஷன் என்னும் நாகத்தால் ஏந்தப்படும் திருமேனியை உடைய திருமால்.
(நாகம் ஏந்தும்) மாகம் நாகம் எனப்படும் சுத்தமான ஆனந்தம் நிறைந்த வைகுந்த லோகம்.
மாகம் ஏந்து வார்புனல் மாகம் எனப்படும் வானத்தால் தாங்கப்படும் ஆகாய கங்கை.
மாகம் ஏந்து மங்குல் வானத்தால் தாங்கப்படும் மேகம்.
ஓர் தீ நம் வயிற்றில் இருந்து நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கச் செய்யும் தீயான வைச்ராவன அக்னி.
வாயு ஐந்து நம் உடலில் சஞ்சரிக்கும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகிய ஐந்து வாயுக்கள்.
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை இவை அனைத்தையும் உண்டாக்கி,
ஆதிசேஷன் வடிவில் இருந்து கொண்டு பாதாளத்திலிருந்தபடி திருமால் தாங்கி வருகிறார் என்றார்.

மேலும், தன்னுடைய முக்கியமான எட்டு சீடர்களை அழைத்து,
“அஷ்ட திக்கஜங்களாகிய எட்டு யானைகள் பூமியைத் தாங்குவது போல,
நீங்கள் எட்டு பேரும் இந்த வைணவ நெறியைத் தாங்கி வளர்க்க வேண்டும்!” என்று கூறி அவர்களை அஷ்டதிக் கஜங்களாக நியமித்தார்.
வானமாமலை ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், கோவில் கந்தாடை அண்ணன், பிரதிவாதி பயங்கரம் அண்ணன்,
எறும்பியப்பா, அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளான் ஆகியோர் தான் அந்த அஷ்டதிக் கஜங்கள்.
இன்றும் அந்த எண்மரின் வழியில் வந்த குருமார்கள் வைணவ நெறியை வளர்த்து வருகிறார்கள்.

தம் சீடர்களுக்கு மாமுனிகள் விளக்கியது போல, பூலோகம், சொர்க்க லோகம், ஆகாயம், வைகுந்தம் என
அனைத்துலகங்களையும் பாதாள லோகத்தில் ஆதிசேஷன் வடிவில் இருந்து கொண்டு திருமால் தாங்குவதால்
‘பப்ருஹு’ (Babhruhu) என்றழைக்கப்படுகிறார்.
‘ப்ரு’ என்றால் தாங்குதல் என்று பொருள். அனைத்துலகங்களையும் தாங்குபவன் ‘பப்ருஹு’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 117-வது திருநாமம்.

சேஷ வாகனத்தில் திகழும் ஆண்டாளையும், கோவர்த்தன மலையைத் தாங்கும் ரங்கமன்னாரையும் தியானித்துக் கொண்டு,
“பப்ரவே நமஹ” (Babhravey namaha) என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனங்களில்
எந்தப் பாரமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்குத் திருமால் அருள்புரிவார்.

—————–

118. விச்வயோநயே நமஹ(Vishwayonaye namaha)

ராவண வதம் முடிந்து புஷ்பக விமானத்தில் சீதையோடும், லக்ஷ்மணனோடும், வானரர்களோடும், விபீஷணனோடும் ஆரோகணித்த
ராமன் அயோத்திக்குச் செல்லும் வழியில் பிரயாகையில் இன்றைய அலகாபாத் உள்ள பரத்வாஜ ஆசிரமத்தில்
விமானத்தை நிறுத்தச் சொன்னான். “நான் வனவாச காலத்தில் பரத்வாஜரின் ஆசிரமத்துக்குச் சென்றபோது
அவர் எனக்கு விருந்தளிக்க விழைந்தார். ஆனால் அப்போது வனவாசம் பூண்டிருந்தபடியால்,
வனவாச காலம் முடிந்தபின் வந்து விருந்து உண்பதாக அவருக்கு வாக்களித்திருந்தேன். அதனால் அனைவரும் வாருங்கள்.
அவரது ஆசிரமத்தில் விருந்து உண்டு அவரை மகிழ்வித்துவிட்டு அயோத்திக்குச் செல்லலாம்!” என்றான் ராமன்.

அவ்வாறே பிரயாகையில் விமானம் நிறுத்தப்பட்டது. வானரர்கள் புடைசூழ சீதாராமர்கள் பரத்வாஜரின் ஆசிரமத்தினுள் நுழைந்தார்கள்.
பரத்வாஜர் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். தன் தவ வலிமையால் தேவதைகளை வரவழைத்து விருந்துக்கான
ஏற்பாடுகளை விரைந்து செய்வித்தார். அப்போது அனுமனை அழைத்த ராமன்,
“அங்கே அயோத்தியில் பரதன் நமது வருகைக்காகக் காத்திருப்பான். நான் வந்து கொண்டே இருக்கிறேன் என்ற செய்தியை
நீ பரதனிடம் போய்ச் சொல்லிவிடு. இங்கே விருந்தை முடித்துக் கொண்டு நான் விரைவில் வருகிறேன்!” என்றான்.

அனுமனும் வானில் பறந்து அயோத்தியை அடைந்து பரதனிடம் ராமனின் வருகையைப் பற்றிய செய்தியைச் சொன்னார்.
சொல்லிவிட்டு மீண்டும் பிரயாகைக்குத் திரும்பினார் அனுமன். அனுமன் அப்படியே அயோத்தியில் தங்கிவிடுவார் எனக் கருதியிருந்த
ராமன் மற்ற வானரர்களோடு விருந்துண்ணப் பந்தியில் அமர்ந்து விட்டான். பாதி பந்தி ஆகிக்கொண்டிருந்த நிலையில்
அனுமன் ஆசிரமத்தினுள்ளே நுழைந்தபடியால், அவர் அமர்வதற்கு இடமில்லை.
“அனுமனே! நீங்கள் அடுத்த பந்தியில் சாப்பிடலாம்!” என்றார் பரத்வாஜர்.

அதற்குள் அனுமனை “இங்கே வா!” என அழைத்த ராமன், தன் எதிரில் அமரச் சொன்னான்.
தான் உண்டு கொண்டிருந்த வாழை இலையின் நடுப்பகுதியைத் தன் கையால் வருடினான். அதில் இடைநரம்பு உண்டானது.
(அதுவரை வாழை இலையின் நடுவில் நரம்பு கிடையாது.) இவ்வாறு வாழை இலையை இரண்டு பகுதிகளாகப் பிரித்த ராமன்,
தான் உண்டுகொண்டிருந்த உணவின் ஒரு பகுதியை எடுத்து இலையின் மற்றொரு பகுதியில் வைத்து அனுமனை உண்ணச் சொன்னான்.

இச்சம்பவம் வால்மீகி ராமாயணத்தில் இல்லாவிட்டாலும், இதைத் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்,
“வாதமாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்துகாதல் ஆதரம் கடலினும் பெருகச்செய்
தகவினுக்கில்லை கைம்மாறென்றுகோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நானென்ற ஒண்பொருளெனக்கும்
ஆதல் வேண்டுமென்று அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!”
என்று பாடியுள்ளார். இப்பாசுரத்தில், “திருவரங்கநாதனே! நீ ராமாவதாரத்தில் அனுமனை வேறு சாதி என்றோ, விலங்கு என்றோ,
குரங்கு என்றோ கூறி நிராகரிக்காமல், அவனிடம் மிகச்சிறந்த அன்பு வைத்து, அவனை அணைத்துக் கொண்டு,
அவன் செய்த உதவிகளுக்குக் கைம்மாறில்லை எனக் கூறி, அவனோடு ஒரே இலையில் விருந்து உண்டாயே!
அவ்வாறே மிகத் தாழ்ந்தவனான அடியேனையும் நீ அணைத்து ஏற்றருள வேண்டும் என வேண்டி
உன் திருவடிகளை வந்தடைந்தேன்!” என்று பிரார்த்திக்கிறார். அவ்வாறே அரங்கனும் ஆழ்வாரை அணைத்து உகந்தான்.

இதிலிருந்து தன்னுடைய அடியார்கள் எக்குலத்தவர்களாக இருந்தாலும், சமுதாயத்தில் எந்த நிலையிலுள்ளவர்களாக இருந்தாலும்,
எத்தகைய இயல்புடையவர்களாக இருந்தாலும் அவர்களிடம் எந்த ஏற்றத்தாழ்வும் பாராமல் தன்னோடு அணைத்துக் கொண்டு
அருள்பவராகத் திருமால் திகழ்கிறார் என்பதை அறிய முடிகிறதல்லவா?

‘விச்வம்’ என்றால் அனைவரையும் என்று பொருள். ‘யோநிஹி’ என்றால் அணைத்துக் கொள்பவன்.
அடியார்கள் அனைவரையும் தன்னுடன் அணைத்துக் கொள்வதால் திருமால் ‘விச்வயோநிஹி’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 118-வது திருநாமம்.
“விச்வயோநயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு எப்போதும் துணையாகத் திருமால்
இருந்து அவர்களைக் காத்தருள்வார்.

—————–

119. சுசிச்ரவஸே நமஹ (Suchishravase namaha)

சுமாலி என்ற வேடுவரின் மகன் ரத்னாகரன். அவன் அம்பெய்யும் கலையில் தலைசிறந்த வீரனாகத் திகழ்ந்தான்.
அவனுக்குத் திருமணமாகி மனைவி மக்கள் எனப் பெரிய குடும்பம் உருவானபின், குடும்பம் நடத்துவதற்குப் போதுமான அளவு
வருமானம் வேடுவத் தொழிலில் கிடைக்காதபடியால், வழிப்பறி கொள்ளைக்காரனாக மாறினான்.
சில சமயங்களில் அவன் வழிப்பறி செய்யும் போது, தங்கள் உடைமைகளை வழங்க மறுக்கும் மக்களைக் கொல்லவும் துணிந்து விட்டான்.

ஒருநாள் ரத்னாகரன் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில் ஒரு துறவி அந்த வழியாக வருவதைக் கண்டான்.
அவர் கையில் வீணை இருப்பதையும் கண்டான். வீணைக்குள் பொற்காசுகளை அந்தத் துறவி ஒளித்து வைத்திருப்பதாகக் கருதிய ரத்னாகரன்,
கத்தியைக் காட்டி அவரை வழிமறித்து அவரது உடைமைகள் அனைத்தையும் தன்னிடம் தந்து விட்டுச் செல்லுமாறு கூறினான்.
ஆனால் அவனையோ அவனது கத்தியையோ பார்த்து அந்தத் துறவி அஞ்சவில்லை.
“இந்த வீணை மட்டும் தான் என்னுடைய உடைமை. வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளப்பா!” என்று கூறினார்.

தனது கத்திக்கு அஞ்சாமல் நின்றபடியால், இவர் சாதாரண துறவியாக இருக்க வாய்ப்பில்லை,
தன்னை கைது செய்வதற்காக மன்னன் அனுப்பிய காவலாளியாக இருக்கக் கூடும் என்று கருதிய ரத்னாகரன்,
அவரைக் கத்தியால் குத்திக் கொல்லப் போனான். அப்போது அவனைத் தடுத்த துறவி, “நீ என்னைக் கொல்! நான் தடுக்கவில்லை.
ஆனால் அதற்குமுன் ஒரு கேள்வி. உன் குடும்பத்தை வாழ்விக்கத் தானே நீ கொள்ளை அடிக்கிறாய்?
நீ கொள்ளை அடித்துக் கொண்டு போய்க் கொடுக்கும் செல்வத்தில் பங்கு கொள்ளும் உனது குடும்பத்தார்,
இதனால் ஏற்படும் பாபத்தில் பங்கு கொள்வார்களா? இதற்கு விடையளித்து விட்டு என்னைக் கொல்!” என்றார்.

“நீ இங்கேயே இரு! நான் வீட்டுக்குப் போய் என் குடும்பத்தாரிடமே இக்கேள்வியைக் கேட்டு அதற்கான விடையோடு வருகிறேன்!” என்று
சொல்லி அவரை அங்கிருந்த மரத்துடன் கட்டிப்போட்டுவிட்டுச் சென்றான் ரத்னாகரன்.
முதலில் தன் பெற்றோரிடம், “நான் இத்தனை நாள் வழிப்பறி செய்து தான் செல்வம் கொண்டு வந்தேன்.
அதில் பங்கு கொண்ட நீங்கள் அதனால் உண்டாகும் பாபத்தில் பங்கு கொள்வீர்களா?” என்று கேட்டான்.
“அதெப்படி? பெற்றோரைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை! நீ அதைச் செய்தாய்.
அதனால் பாபங்களில் எங்களுக்குப் பங்கு கிடையாது. முழுவதும் உன்னையே சேரும்!” என்றார்கள்.

தன் மனைவியிடம் கேட்டபோது, “சாஸ்திரங்கள் கூறுவது என்னவென்றால், கணவன் செய்யும் அனைத்துப் புண்ணியங்களிலும்
மனைவிக்குப் பாதி பங்குண்டு. ஆனால் கணவன் செய்யும் பாபங்களில் மனைவிக்குப் பங்கில்லை.
மனைவி செய்யும் புண்ணியங்களில் கணவனுக்குப் பங்கில்லை. ஆனால் அவள் செய்யும் பாபங்களில் பாதி பங்கு கணவனுக்கு உண்டு!” என்றாள்.
“என் குழந்தைகளாவது என் பாபங்களில் பங்கு கொள்வார்களா?” என ரத்னாகரன் புலம்பிய போது,
அவன் மனைவி, “இல்லை! பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்யும் பாபங்களும் உங்களையே சேருமே ஒழிய,
உங்கள் பாபங்கள் அவர்களை இப்போது பாதிக்காது!” என்றாள்.

வெறுத்துப் போய் துறவியிடம் வந்தான் ரத்னாகரன். அவரது கால்களில் விழுந்து நடந்தவற்றைக் கூறி அழுதான்.
“தாங்கள் யார்?” என்று கேட்டான். “நான் தான் நாரதன்!” என்றார் அந்தத் துறவி. “நான் இத்தனை நாள் பாபங்களே செய்து
பாபியாக வாழ்ந்து விட்டேன். இதிலிருந்து மீள வழி கூறுங்கள்!” என்று வேண்டினான்.
அப்போது அவர், “ராம நாமத்தை நீ ஜபம் செய்! அது உனது அனைத்துப் பாபங்களையும் போக்கும்!” என்றார்.
ஆனால் அவனது வாயில் ராம நாமம் வரவில்லை.

அருகில் இருந்த மரத்தைக் காட்டிய நாரதர், “இதன் பெயர் என்ன?” என்று கேட்டார். “மரா” என்றான்.
“இதை ஜபம் செய்!” என்று சொல்லி விட்டு நாரதர் புறப்பட்டார்.
‘மரா’ ‘மரா’ ‘மரா’ என்று மரத்தை நினைத்தபடி ரத்னாகரன் ஜபம் செய்தான். அவனைச் சுற்றி ஒரு புற்றே உண்டாகிவிட்டது.
அதைக் கவனியாமல் ஜபம் செய்த அவனுக்கு அந்த மரத்தில் ராமன் காட்சியளித்தான்.
பின்னாளில் அவர் வால்மீகி என்ற பெரிய ரிஷியாக உருவாகி நமக்கு ராமாயணத்தை அளித்தார்.

இதைக் கைலாயத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதி, சிவபெருமானிடம், “அவர் ‘மரா’ ‘மரா’ என்று தானே ஜபித்தார்.
எப்படி ராமனுடைய தரிசனம் அவர்க்குக் கிட்டியது?” என்று கேட்டாள்.
அதற்குப் பரமசிவன், “தன்னுடைய அடியார்கள் எத்தகைய வார்த்தைகளைச் சொன்னாலும் அதில் உள்ள மங்களமான
விஷயங்களை மட்டும் கேட்பவராகத் திகழ்கிறார் திருமால்.
இவன் ‘மரா’ ‘மரா’ என்றாலும், அதை ‘ராம’ ‘ராம’ எனச் சொல்வதாக ஏற்று ராமபிரான் அவனுக்குக் காட்சியளித்தார்.
‘சுசி’ என்றால் மங்களகரமான என்று பொருள்.
‘ச்ரவா:’ என்றால் கேட்பவன். அடியார்கள் பேசும் வார்த்தைகளில் உள்ள அமங்களமான அம்சங்களை விலக்கி
மங்களமானவற்றை மட்டும் கேட்டு அவர்களுக்கு அருள்புரிவதால் திருமால் ‘சுசிச்ரவா:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 119-வது திருநாமம்!” என்றார்.

“சுசிச்ரவஸே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, அன்னப்பறவையைப் போல்
சாரமான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளும் உயரிய பண்பைத் திருமால் அருள்வார்.

——————————-

120. அம்ருதாய நமஹ (Amrutaaya namaha)

திருவரங்கத்தில் நம்பிள்ளை என்னும் ஆச்சாரியர், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்களின் பொருளை
விளக்கிக் கொண்டிருந்தார். அதில் ஐந்தாம் பத்தின் எட்டாம் திருவாய்மொழியின் முதல் பாசுரம்,

“ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!”

என்பது. இப்பாசுரத்தின் பொருளை விளக்குகையில், நம்பிள்ளை அங்கு கூடியிருந்தோரைப் பார்த்து,
“இப்பாசுரத்தில் ஆழ்வார் திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆராவமுதே! – திகட்டாத அமுதமே! என்று அழைக்கிறார்.
ஆனால் யாருக்கு ஆராவமுது என்பதைக் குறிப்பிடவே இல்லையே.
‘தேவர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ,
‘அடியவர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ,
‘அமரர்களுக்கு ஆராவமுதே!’ என்றோ சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
‘ஆராவமுதே!’ என்று மட்டும் அழைத்தால் யாருக்கு ஆராவமுது?” என்று கேட்டார்.

அமர்ந்திருந்த அடியவர்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்தித்தனர். சிறிது நேரம் பொறுத்த நம்பிள்ளை,
“வேறு ஒன்றுமில்லை, பிறர்க்கு ஆராவமுதாக இருப்பதோடு மட்டுமில்லாமல், பெருமாள் தனக்கும் ஆராவமுதமாகத் திகழ்வதால்
தான் இன்னார்க்கு ஆராவமுது எனக் குறிப்பிடாமல், வெறுமனே ‘ஆராவமுதே!’ என ஆழ்வார் அழைக்கிறார்!” என்றார்.

இதை மேலும் விளக்கும் விதமாக நம்பிள்ளை அழகான எடுத்துக்காட்டும் கூறினார்.
“கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலில் உற்சவ மூர்த்தியான சார்ங்கபாணிப் பெருமாள், ஆராவமுதாக இருக்கும்
தனது திருமேனி வடிவழகைத் தானே பல கோணங்களிலிருந்து அனுபவிக்க விழைந்தார்.
தன் முன்னழகை அனுபவிப்பதற்காகச் சந்நதிக்கு முன்னே கருடனாக வடிவெடுத்து அவரே அமர்ந்து கொண்டார்.
தனது பக்கவாட்டின் அழகை ரசிப்பதற்காக ஸ்ரீதேவி, பூதேவியாக வடிவெடுத்து இருபுறங்களிலும் அமர்ந்து கொண்டார்.
தனது பின்னழகை அனுபவிக்க அவரே மூலவராக ஆதிசேஷனில் பள்ளி கொண்டார்.
இப்படி அனைத்துத் திசைகளிலிருந்தும் தன்னுடைய அழகைச் சார்ங்கபாணிப் பெருமாள் அனுபவிக்கிறார்.
அவராலும் அனுபவித்து முடிக்க முடியாதபடி ஆராத அமுதாக அவரது அழகு விளங்குகிறது!” என்றார்.

அப்போது ஒரு பக்தர் எழுந்திருந்து, “சார்ங்கபாணி கோயிலில் மூலவர் திருமழிசைப் பிரானுக்காக ஆதிசேஷனில் இருந்து
சற்றே எழுந்தபடி காட்சி தருகிறார் அல்லவா?” என்று கேட்டார்.
அதற்கு விடையளித்த நம்பிள்ளை, “ஆம். அதிலும் ஒரு சுவாரஸ்யம் உள்ளது! உற்சவ மூர்த்தியின் பின்னழகாகிய அமுதைப்
பருகிக் கொண்டிருந்த மூலவருக்கு உற்சவரின் முன்னழகைக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அதற்கு என்ன வழி என யோசித்துக் கொண்டிருந்தார். திருமழிசைப் பிரான் குடந்தைக்கு வந்து பெருமாளைப் பார்த்து,
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு என அழைக்கவே, அவருக்காக எழுந்தது போல எழுந்த மூலவர்,
உற்சவரின் முன்னழகை ரசிக்கும் நோக்குடன் எட்டிப் பார்த்தபடி உத்தான சயனத்தில் எழுந்தருளியுள்ளார்!
தனது அழகாகிய ஆராவமுதத்தில் ஆழ்ந்தபடியால் இன்றும் ஆராவமுதாழ்வான் என்றே அவர் அழைக்கப்படுகிறார்!” என்று கூறினார்.

இக்கருத்தை வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, ஆராவமுதப் பெருமாள் குறித்து எழுதிய ஒரு ஸ்லோகத்தில் கூறியுள்ளார்.
“சேஷே சயாநஸ்தவ ப்ருஷ்டபாகே
த்வமேவ பூயஸ்தநு ரம்யபாவம் |
ஆலோகிதும் ஸாதரம் ஈஷதேவம்
உத்தாநபாவம் தநுஷே முகேந ||”
என்று. இவ்வாறு எம்பெருமானுடைய அழகு பிறரை மட்டுமல்ல, எம்பெருமானையே மயக்கும்படியான ஆராவமுதமாக விளங்குகிறது.
அத்தகைய திகட்டாத அமுதம் போன்ற அழகுடன் விளங்குவதால், திருமால் ‘அம்ருதஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 120-வது திருநாமம்.
“அம்ருதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஒவ்வொரு நாளும்
அமுதம் போலத் தித்திக்கும்படி எம்பெருமான் அருள்புரிவான்.

———————–

121. சாச்வதஸ்ஸ்தாணவே நமஹ (Shaashvathassthaanavey namaha)

கச்யபப் பிரஜாபதிக்கு வினதை, கத்ரு என இரண்டு மனைவிகள். ஒரு பந்தயத்தில் கத்ருவிடம் தோற்ற வினதை,
அதனால் அவளுக்கு அடிமையானாள். அந்த வினதையின் மகனான கருடன், தன்னுடைய தாயை மீட்க
என்ன வழி எனக் கத்ருவிடமும் அவளது பிள்ளைகளான நாகப் பாம்புகளிடமும் கேட்டார்.
“நீ பெரிய பலசாலியாக இருக்கிறாயே! நீ தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடு!
அவ்வாறு நீ தந்தால் உன் தாயை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கிறோம்!” என்று அவர்கள் கூறினார்கள்.

உடனே தேவலோகத்தை நோக்கிப் புறப்பட்டார் கருடன். அமுதத்தை எடுக்கச் சென்ற கருடனை எதிர்த்துத் தேவர்கள்
அனைவரும் போரிட்டார்கள். அவர்கள் அனைவரையும் தனி ஒருவனாக எதிர்கொண்ட கருடன் அந்தக் கடும்போரில் வெற்றி பெற்றார்.
இறுதியாக இந்திரன் கருடனைத் தாக்க வந்தான். அவனையும் வீழ்த்திவிட்டு அமுதத்தை எடுத்துக் கொண்டு திரும்ப வந்தார் கருடன்.

வரும் வழியில் கருடனுக்கு ஒரு சிந்தனை. “அமுதம் அமுதம் என எல்லோரும் கொண்டாடுகிறார்களே!
அதைப் பெறுவதற்கு நாமும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டு யுத்தம் எல்லாம் செய்திருக்கிறோமே!
அதனால் கத்ருவிடம் கொடுப்பதற்கு முன் அந்த அமுதம் எப்படி இருக்கும் என நாம் சுவைத்துப் பார்த்துவிட வேண்டும்!”
என ஆவல் கொண்டார் கருடன்.

அப்போது ஆயர்பாடியை அடைந்தார் கருடன். அங்கே யமுனைக் கரையில் உள்ள கடம்ப மரம் ஒன்றில் அமர்ந்து
அமுதின் சிறு பகுதியை எடுத்துச் சுவைத்தார்.
(அமுதத்தை வியாதி உள்ளவர்கள் உண்டால் இனிக்குமாம். நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்கள் உண்டால் கசக்குமாம்.)
கருடனுக்கு அமுதம் பாகற்காயை விடக் கசப்பாக இருந்தது.
அப்படியே உமிழ்ந்துவிட்டு நேராக அதைக் கத்ருவிடமும் பாம்புகளிடமும் கொடுத்து விட்டுத் தன் தாயை மீட்டார்.

அதன்பின் தன் தாயிடம், “தாயே! உங்களை மீட்பதற்காக அமுதத்தைக் கொண்டு வந்தேன் அல்லவா?
வரும் வழியில் ஒரு மரத்தில் அமர்ந்து அந்த அமுதைச் சுவைத்துப் பார்த்தேன். அது வெறும் கசப்புச்சாறு தான்.
அதில் எந்தச் சுவையும் இல்லை. இந்த கசப்புச்சாற்றுக்காகவா இவ்வளவு சிரமப்பட்டு, தேவர்களுடன் போரிட்டு,
இத்தனை முயற்சிகள் எடுக்க வேண்டும்? நான் மேற்கொண்ட முயற்சிகளோடு ஒப்பிடும் போது இந்த அமுதின் சுவை ஒன்றுமே இல்லை!”
என்று மனம் நொந்து கூறினார் கருடன்.

அப்போது “வைனதேயா!” என்றொரு குரல். திரும்பிப் பார்த்தார் கருடன்.
கருடனின் தந்தையான கச்யபப் பிரஜாபதி அங்கே நின்று கொண்டிருந்தார். “மகனே! போரிட்டு, முயற்சி செய்து பெற்ற அமுதம்
இனிமையாக இல்லை என்று வருந்துகிறாயா? நான் ஓர் அமுதத்தைக் காட்டுகிறேன். அதைப் பெற நீ போரிடவும் வேண்டாம்,
முயற்சி செய்யவும் வேண்டாம். அதை நாவால் சுவைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. கண்களால் பருகினாலே போதும்.
திகட்டாத, ஆராத, அள்ள அள்ளக் குறையாத அமுதமாக இருக்கும்!’ என்றார்.

“அதென்ன அமுதம்?” என்று கேட்டார் கருடன். கச்யபர் கருடனைக் கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாள்
திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார். ஆராவமுதனாக விளங்கும் பெருமாளைக் காட்டி,
இவர் தான் நான் சொன்ன அமுதம் என்றார் கச்யபர். ஆராவமுதனின் எழிலால் ஈர்க்கப்பட்ட கருடன்,
கைகூப்பியபடி கர்ப்பக் கிரகத்தின் எதிரில் அமர்ந்து கொண்டு அந்தப் பெருமாளின் அழகாகிய அமுதைப் பருகத் தொடங்கினார்.
சார்ங்கபாணிப் பெருமாளின் கர்பக் கிரகத்தின் முன்னே ஆராவமுதைப் பருகியபடி ‘ஆதர்ச கருடன்’ என்ற திருநாமத்துடன்
கருடன் எழுந்தருளியுள்ளதை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
இந்தச் சரித்திரத்தை வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, சார்ங்கபாணிப் பெருமாள் குறித்து இயற்றிய ஒரு ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார்.

“ஸ்வர்கே பாதி அம்ருதம் யதர்த்தம் அபவம் யோத்தும் ச யத்னான்வித:
திங் மாம் யத் ரஸனாகதம் விதனுதே கிஞ்சித் ருசிம் சாருஜ: |
நிர்யுத்தம் ச நியத்னம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத் பாதீதி க்ருதாஞ்ஜலி: யதம்ருதம் பக்ஷீச்வர ஸேவதே ||”

தேவ லோகத்து அமுதத்தைப் பெறக் கடும் முயற்சிகள் தேவை. அவ்வாறு முயன்று அதைப் பெற்றுச் சுவைத்தாலும்
அவ்வளவு இனிதாக இருப்பதில்லை. ஆனால் திருமாலாகிய ஆராவமுதமோ பெறுவதற்கும் எளியவர்.
எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத இனிமையுடனும் விளங்குகிறார்.
‘சாச்வதஹ’ என்றால் எப்போதும் என்று பொருள்.
‘ஸ்தாணுஹு’ என்றால் இனிப்பவர் என்று பொருள்.
எப்போதும் அடியவர்களுக்கு அமுதமாக இனிப்பதால் திருமால் ‘சாச்வதஸ்ஸ்தாணுஹு’ என அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 121-வது திருநாமம்.

“சாச்வதஸ்ஸ்தாணவே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் வாழ்க்கை எப்போதும் இனிக்கும்படித்
திருமால் அருள்புரிவார்.

——————–

122. வராரோஹாய நமஹ (Varaarohaaya namaha)

திருவரங்கத்தில் நம்பிள்ளையின் திருவாய்மொழி காலட்சேபம் மிகவும் பிரசித்தியானது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் நம்பிள்ளையின் விளக்கங்களைக் கேட்பதற்காகத் திருவரங்கத்துக்கு
அடியார்கள் வருவது வழக்கம். ஒருசமயம் முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழியின் பொருளை
நம்பிள்ளை விளக்கிக் கொண்டிருந்தார். அதில் ஐந்தாவது பாசுரம்,

“அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே”

என்பது. இதற்கான விளக்கத்தை வெகு சிறப்பாக நம்பிள்ளை அளித்தார்.
“அற்றது பற்றெனில் – உலகியல் விஷயங்களில் உள்ள பற்றுகள் விலகினால்,
உற்றது வீடுயிர் – ஜீவாத்மாவின் உண்மையான சொரூபம் நன்கு பிரகாசிக்கும்.
அனைத்துப் பந்தங்களிலிருந்தும் விடுபட்டு, ஜீவாத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொள்ளும்.
செற்று அது – ஆனால் ஆத்மாநுபவத்தில் உள்ள விருப்பத்தை விடுத்து,
மன்னுறில் – மிக உயர்ந்த லட்சியமான இறைவனின் திருவடிகளை அடைந்து தொண்டு செய்ய நினைத்தால்,
அற்று இறை பற்றே – இதர விஷயங்களில் பற்றற்றவனாக இறைவனைப் பற்றிக் கொள்.

ஜீவாத்மா இறைவனுக்கு சரீரம், இறைவன் ஜீவாத்மாவுக்குள்ளும் ஆத்மாவாக உள்ளான் என உணர்ந்து
அவனைத் தஞ்சமாகப் பற்று.” இவ்வாறு நம்பிள்ளை கூறியவாறே, கூட்டத்திலிருந்து ஒரு பண்டிதர் எழுந்தார்.
“எந்தப் பற்றும் இல்லாத நிலைதானே முக்தி? அப்புறம் ஏன் இறைவன் மேல் பற்றுக் கொண்டு அவனைத் தொழ வேண்டும்?
நாம் இந்த உடல் இல்லை, ஆத்மா என உணர்ந்து கொண்டபின்,
நாம் ஏன் இறைவன் என்ற யாரோ ஒருவனுக்கு உடலாக இருக்க வேண்டும்?
ஜீவாத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டால் போதாதா?” என்று கேட்டார்.

அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “சுவாமி! உங்கள் கூற்று நன்றாகத்தான் இருக்கிறது.
ஆசைகளை விடுத்தவாறே ஆத்மா முக்தியடையும். அதில் சந்தேகமில்லை. அதற்குக் ‘கைவல்யம்’ என்று பெயர்.
தனிமையில் ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்ளும் நிலை அது. ஆனால் அது உயர்ந்த லட்சியமில்லை.
ஏனெனில் அனைத்து ஜீவாத்மாக்களும் இறைவனின் சொத்து. அவனுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவை.
அவ்வாறிருக்க ஒருவன் இறைவனுக்குத் தொண்டு செய்யாமல் தன்னைத் தானே அனுபவித்துக் கொள்வது சரியாகுமா?
ஊதியம் கொடுக்கும் முதலாளிக்காக உழைக்காமல், அவரது அலுவலகத்திலே அமர்ந்து கொண்டு
நமது சொந்த வேலையைச் செய்துகொள்வது போன்ற செயல் அது.

அறிவற்ற பொருட்கள் தொடங்கி அறிவுள்ள ஜீவாத்மாக்கள் வரை அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்று வேதம் கூறுகிறது.
எனவே இந்த உடல் எப்படி ஜீவாத்மாவின் நியமனத்துக்கேற்ப நடக்கிறதோ,
அவ்வாறே ஜீவாத்மா தனக்கு உயிராக இருக்கும் பரமாத்மாவின் நியமனப்படி அவனுடைய ஆனந்தத்துக்காகச் செயல்பட வேண்டும்.
அப்படிப் பார்க்கும்போது, ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்வதை விட இறைவனை அடைந்து தொண்டு செய்வதே
அதன் சொரூபத்துக்கு ஏற்ற செயல்!” என்று கூறினார்.
மேலும், “இந்திர பதவியை விரும்புபவன் இவ்வுலக ராஜ்ஜியத்தில் கண்வைக்க மாட்டான்.
பிரம்மாவின் பதவியைப் பெற விரும்புபவன் இந்திர பதவியைக்கூட விரும்ப மாட்டான்.
ஆத்மானுபவத்தை விரும்புபவன் பிரம்மாவின் பதவியைக் கூட விரும்பமாட்டான்.
அதுபோல அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய இறைவனை அடைய நினைப்பவன் ஆத்மானுபவத்தையும் நாடாமல்
இறைவனின் திருவடிகளிலேயே நோக்குடையவனாக இருக்க வேண்டும் என்பதே
இப்பாசுரம் வலியுறுத்தும் கருத்து!” என விளக்கினார் நம்பிள்ளை.

இவ்வாறு இந்திர பதவி, பிரம்மாவின் பதவி, ஆத்மானுபவம், இவை அனைத்தையும் விட உயர்ந்த லட்சியமாகத்
புருஷார்த்தமாகத் திருமால் திகழ்வதால் ‘வராரோஹ:’ என்றழைக்கப்படுகிறார்.
‘வர’ என்றால் உயர்ந்த என்று பொருள். ‘ஆரோஹ’ என்றால் புருஷார்த்தம்.
‘வராரோஹ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 122-வது திருநாமம்.
“வராரோஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச் சிறந்த பதவி உயர்வுகள்
விரைவில் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

——————

123. மஹாதபஸே நமஹ (Mahaatapasey namaha)

கைலாயத்திலிருந்த மால்யவான், புஷ்பதந்தன் என்ற இரண்டு சிவ கணங்கள், சிவன் தந்த சாபத்தால்
திருவானைக்காவில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்தார்கள் என்றும், சிலந்தியாகப் பிறந்த மால்யவான்
தனது மறுபிறவியில் கோச்செங்கட் சோழ நாயன்மாராகப் பிறந்தான் என்றும்,
கோச்செங்கட் சோழன் எழுபது சிவன் கோயில்கள் கட்டியபின் எழுபத்தொன்றாவதாக நாச்சியார்கோயிலில்
ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மணிமாடக் கோணில் கட்டி அவரைத் தொழுது அவரது அருளால் முக்தியடைந்தான் என்றும்
ஐம்பத்தொன்பதாவது திருநாமமான “லோஹிதாக்ஷாய நமஹ” என்பதன் விளக்கத்தில் கூறியுள்ளோம்.

யானையாகப் பிறந்தானே புஷ்பதந்தன், அவன் கதி என்னவாயிற்று?
யானை வடிவத்தோடே புஷ்பதந்தன் கைலாயத்தை அடைந்தான்.
மால்யவான் ஸ்ரீநிவாசப் பெருமாளைத் தொழுது முக்தியடைந்ததைப் போலத் தானும் முக்தியடைய விரும்புவதாக
அவன் பார்வதி தேவியிடம் கூறினான்.

“அப்படியா? மிக்க மகிழ்ச்சி! நீயும் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசனை வழிபட்டு முக்தியடைவாயாக!” என ஆசீர்வதித்தாள் பார்வதி.
“அங்கே தான் ஒரு சிறிய பிரச்னை!” என்றான் புஷ்பதந்தன். “என்ன?” என்று கேட்டாள் பார்வதி.
“திருவானைக்காவில் சிலந்தியாய் இருந்த மால்யவான் பின்னிய வலைகளை யானையாக இருந்த நான் கலைத்துவிட்டேன் அல்லவா?
அதனால் இப்போது கோச்செங்கட் சோழனாகப் பிறந்த அவன், யானையின் மேலுள்ள அந்தக் கோபத்தின் எதிரொலியாகத்
தான் கட்டிய அனைத்துக் கோயில்களையும் யானை உள்ளே நுழைய முடியாதபடி மணி மாடக் கோவில்களாகக் கட்டிவிட்டான்.
(முதலில் சமதரையாகவும், அதைத் தொடர்ந்து படிக்கட்டுகளும், மீண்டும் சமதரையாகவும்,
பின் படிக்கட்டுகளுமெனக் கட்டப்படும் கட்டிட அமைப்புக்கு மணிமாடம் என்று பெயர்.
அத்தகைய அமைப்பை உடைய கட்டிடங்களுக்குள் செல்ல யானைகள் அஞ்சும் என்பார்கள்.)
அவன் கட்டிய ஸ்ரீநிவாசனின் திருக்கோவிலுக்குள் யானை வடிவில் இருக்கும் நான் எவ்வாறு சென்று
பெருமாளை வழிபடுவேன்?” என்று கேட்டான்.
பரமசிவனிடம் இவ்விஷயத்தைப் பார்வதி கூறினாள். “இதற்கான வழியை நாம் ஸ்ரீநிவாசனிடமே கேட்போம்!” என்றார் பரமசிவன்.
நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்ஜுளவல்லித் தாயாருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள்
தெப்ப உற்சவம் நடைபெறுகையில், அருகிலுள்ள சிவன்கோயிலில் இருந்து சித்தநாதேஸ்வரரும்,
சௌந்தர்ய நாயகி அம்மனும் ரிஷப வாகனத்தில் அங்கே வந்து புஷ்பதந்தனுக்கு அருள்புரியுமாறு பெருமாளிடம் கோரினார்கள்.
(இன்றும் நாச்சியார் கோவில் பெருமாள் கோயிலில் வருடா வருடம் நடைபெறும் தெப்போற்சவத்தின் போது,
சித்தநாதேஸ்வரரும் சௌந்தர்யநாயகியும் ரிஷப வாகனத்தில் குளக்கரைக்கு வருவது வழக்கம்.)

அவர்களிடம் வஞ்ஜுளவல்லித் தாயார், “புஷ்பதந்தனுக்கு என் கணவர் அருள்புரிவதற்கு நான் வேறு வழி வைத்திருக்கிறேன்.
வரும் பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தின் ஆறாம் திருநாள் அன்று வந்து பாருங்கள்! உங்களுக்கே புரியும்!” என்றாள்.
மகிழ்ச்சியுடன் சௌந்தர்ய நாயகியும் சித்தநாதேஸ்வரரும் தங்கள் கோயிலுக்குத் திரும்பினார்கள்.
பங்குனி மாத பிரம்மோற்சவம் வந்தது. புஷ்பதந்தனுக்கு ஸ்ரீநிவாசனும் வஞ்ஜுளவல்லியும் எவ்வாறு அருள்புரியப் போகிறார்கள்
என்பதைக் காணும் ஆவலுடன் பார்வதியும் பரமசிவனும் நாச்சியார் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு
அந்த உற்சவத்தின் ஆறாம் திருநாள் அன்று வந்தார்கள். வஞ்ஜுளவல்லித் தாயாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் அன்று
யானை வாகனத்தில் காட்சியளித்தார்கள்.

அதில் வியப்பு என்னவென்றால், யானையை ஓட்டும் அங்குசத்தைத் தாயார் தன் கையில் ஏந்தி ஓட்டுநராக அமர்ந்திருக்கப்
பெருமாள் தாயாருக்குப் பின்னால் பின்னிருக்கைப் பயணியாக அமர்ந்திருந்தார்.
(இதை நாச்சியார்கோவில் பங்குனி பிரம்மோற்சவத்தில் இன்றும் தரிசிக்கலாம்.)
வஞ்ஜுளவல்லி பார்வதியைப் பார்த்து, “புஷ்பதந்தனுக்கு அருள்புரிந்து விட்டேன் பார்த்தாயா?” என்று கேட்டாள்.
“புரியவில்லையே! எங்கே புஷ்பதந்தன்?” என்று கேட்டாள் பார்வதி. “கீழே வாகனத்தைப் பார்!” என்றாள் வஞ்ஜுளவல்லி.
புஷ்பதந்தனே யானை வாகனமாக இருந்து, பெருமாள்-தாயாரைத் தாங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் பார்வதி.
“இக்கோயிலுக்குள் யானை நுழையத் தயங்குவதால், புஷ்பதந்தனைக் கோயிலின் வெளிப்புறத்திலேயே வாகனமாக அமர்த்தி,
பெருமாளும் தாயாரும் அவனைத்தேடி வந்து அவன் மீது அமர்ந்து அவனுக்கு அருள்புரிந்து விட்டார்கள் பார்த்தாயா?” என்றார் பரமசிவன்.

‘தப:’ என்றால் சிந்தனை என்று பொருள்.
அடியார்களுக்கு எவ்வாறு அருள்புரியலாம் என்பதையே எப்போதும் சிந்தித்து, ஒவ்வொரு அடியவருக்கும்
அருள் புரிவதற்கு ஏற்ற வழியைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, அவ்வழியில் அவர்களுக்கு அருள்புரிந்து,
அவர்களது பிறவிப் பிணியைப் போக்குவதால் ‘மஹாதபஹ’ என்று
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 123-வது திருநாமத்தால் திருமால் போற்றப்படுகிறார்.
“மஹாதபாய நமஹ” என்று சொல்லித் திருமாலைத் தினமும் போற்றும் அன்பர்களுக்கு நன்கு சிந்திக்கும்
ஆற்றலைத் திருமால் அருளுவார்.

——————

124. ஸர்வகாய நமஹ (Sarvagaaya namaha)

அழ்வார்களுள் தலைவராகக் கொண்டாடப் படுபவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரை உயிராகவும், மற்ற ஆழ்வார்களை
அவரது உடல் உறுப்புகளாகவும் சொல்வது வழக்கம். அதைக் கீழ்க்கண்ட அட்டவணையில் காண்போம்.

நம்மாழ்வாரின் உறுப்பு ஆழ்வார்
தலை பூதத்தாழ்வார்
இரு கண்கள் பொய்கையாழ்வார், பேயாழ்வார்
முகம் பெரியாழ்வார்
கழுத்து திருமழிசையாழ்வார்
இரு கைகள் குலசேகராழ்வார்,
திருப்பாணாழ்வார்
மார்பு தொண்டரடிப்பொடியாழ்வார்
வயிறு திருமங்கையாழ்வார்
திருவடிகள் மதுரகவியாழ்வார்

இத்தகைய பெருமை பெற்ற நம்மாழ்வார் நான்கு நூல்கள் தமிழில் இயற்றினார்.
அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இவை ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் ஆகிய
நான்கு வேதங்களுக்குச் சமமானவையாகப் போற்றப்படுகின்றன.
அவற்றுள் பெரிய திருவந்தாதியில் நம்மாழ்வாருக்கும் திருமாலுக்கும் அற்புதமான விவாதம் ஒன்று நடந்தது.

ஆழ்வார் : எம்பெருமானே!
நீ பெரியவனா? அடியேன் பெரியவனா?
திருமால் : இதென்ன கேள்வி? நான்தான் பெரியவன் என்று உமக்குத் தெரியாதா?
ஆழ்வார் : இல்லை! நீ பதில் சொல்! நம்மில் யார் பெரியவர்?
திருமால் : அதான் சொன்னேனே! நான் தான் பெரியவன்!
ஆழ்வார் : எதை வைத்து அவ்வாறு கூறுகிறாய்?
திருமால் : இவ்வுலகம் அனைத்தையும் நான் தானே ஆதாரமாக உள்ளே அமர்ந்துகொண்டு தாங்குகிறேன்! நான் தான் பெரியவன்!
ஆழ்வார் : அனைத்தையும் நீதான் தாங்குகிறாய் என்பதற்கு என்ன ஆதாரம்?
திருமால் : சாந்தோக்ய உபநிஷத் “ஸ ஸேது: வித்ருதி: ஏஷாம் லோகானாம் அஸம்பேதாய” என்று சொல்கிறதே.
பிருகதாரண்யக உபநிஷத் “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசாஸனே கார்கீ ஸூர்யாசந்த்ரமஸௌ வித்ருதௌ திஷ்டத:” என்கிறதே.
இந்த வேத வாக்கியங்கள் பூமி, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தேவலோகம் என அனைத்தையும்
அதிலுள்ள உயிர்களையும் நானே தாங்குகிறேன் எனத் தெளிவாகக் காட்டுகின்றனவே! அதனால் தான் சொல்கிறேன் நான் தான் பெரியவன்!
ஆழ்வார் : இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள். அனைத்துலகையும் உள்ளிருந்து தாங்குவதால் நீ பெரியவன் என்கிறாய்.
ஆனால் உன்னையே என் உள்ளத்தில் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேனே! இப்போது சொல் நீ பெரியவனா? அடியேன் பெரியவனா?
திருமால் : ஆழ்வீர்! நீர் தான் பெரியவர்!
ஆழ்வார் : இல்லை! அடியேன் உன்னை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதுவும் உன்னுடைய அருளால் தானே?
உன்னைத் தாங்கக் கூடிய சக்தியையும் நீ தானே அடியேனுக்கு அருளி யிருக்கிறாய்?
உன்னைத் தாங்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியேனையும் நீ தானே தாங்கிக் கொண்டிருக்கிறாய்.
அதனால் நீ தான் பெரியவன்.
இவ்வுரையாடலை வெண்பா வடிவில் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் பாடுகிறார்:

“புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய் அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்
ஊன்பருகு நேமியாய் உள்ளு.”

இவ்வாறு நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம், உயிர்கள் என அனைத்தினுள்ளும் நுழைந்து அவற்றுக்கு ஆதாரமாக இருந்து
அனைத்தையும் தாங்கி வரும் திருமால் ‘ஸர்வக:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸர்வக:’ என்றால் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 124-வது திருநாமம்.
“ஸர்வகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்தச் சுமையும் ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

———————

125.ஸர்வவிதே நமஹ(sarvavidhe namaha)

குருக்ஷேத்ரப் போர் நிறைவடைந்தபின்னர், போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கான ஈமச் சடங்குகளைத் தரும புத்திரரைக்
கொண்டு செய்வித்து, அதன் பின் தருமபுத்திரருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்துவிட்டுத், தன் தலைநகரான துவாரகையை
நோக்கிக் கண்ணன் தன் தேரில் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் உதங்கர் என்ற முனிவர் கண்ணனைச் சந்தித்தார்.
“கண்ணா! நலமாக இருக்கிறாயா? உன் பங்காளிகளான பாண்டவர்களும் கௌரவர்களும் நலமா?” என்று கேட்டார்.
“உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று சிரித்த கண்ணன், “குருக்ஷேத்ரத்தில் பெரும் போர் நடந்தது.

அந்தப் போரில் பாண்டவர் கௌரவர் இருவர் அணிகளிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுவிட்டது.
இப்போது பாண்டவர்களின் அணியில், பஞ்ச பாண்டவர்களும், அர்ஜுனனின் மருமகளான உத்தரையின் கருவில் வளரும்
குழந்தையும் மட்டுமே மிஞ்சியுள்ளார்கள். கௌரவர்களின் அணியில் கிருபாசாரியாரும் அச்வத்தாமாவுமே மிஞ்சியுள்ளார்கள்!” என்றான்.
“கிருஷ்ணா! நீ தவறு செய்து விட்டாய்! நீ இந்த யுத்தத்தைத் தடுத்திருக்க வேண்டும். பாண்டவர்கள் உனக்கு அத்தை மகன்கள்.
துரியோதனனோ உனக்குச் சம்பந்தி. உனது உறவினர்கள் போரிட்டுக் கொள்வதை நீ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது மாபெரும் தவறு.

உனக்கு என்ன சாபம் கொடுத்தாலும் தகும்!” என்றார் உதங்கர்.
“எனக்குச் சாபம் கொடுத்து உங்கள் தவ வலிமையை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.
நான் வேண்டுமானால் உங்களுக்கு வரம் தருகிறேன்!” என்று கூறிய கண்ணன் தனது விஸ்வரூபத்தை அவருக்குக் காட்டினான்.
விஸ்வரூபத்தைத் தரிசித்துப் பரவசம் அடைந்த உதங்கர், “கண்ணா! எனக்குத் தாகம் ஏற்படும் போதெல்லாம் உடனே
தண்ணீர் கிடைக்கும் என வரம் கொடு!” என்று பிரார்த்தித்தார்.
“அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான்.
“மகாபாரதப் போரை நீ ஏன் தடுக்கவில்லை? அதற்குப் பதில் கூறு!” என்று கேட்டார் உதங்கர்.
“அது போகப் போக உங்களுக்கே புரியும்!” என்று சொல்லி விட்டுக் கண்ணன் துவாரகைக்குச் சென்றான்.

அங்கிருந்து புறப்பட்ட உதங்கர், பாலைவன மார்க்கமாகப் பயணித்தார். தாகம் ஏற்பட்டது.
“கிருஷ்ணா! தாகமாக இருக்கிறது! தண்ணீர் கொடு!” என உரக்கப் பிரார்த்தித்தார்.
அப்போது ஐந்து நாய்களுடன் அங்கே வந்த ஒரு வேடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து அவருக்கு அளித்தான்.
“என்னருகே வராதே! நகர்ந்து செல்!” என்றார் உதங்கர். “நீங்கள் தானே தண்ணீர் வேண்டுமென்று கேட்டீர்கள்.
அதனால் தான் கொண்டு வந்தேன்!” என்றான் வேடன்.
“நான் உன்னிடம் கேட்கவில்லை. கண்ணனிடம் தான் கேட்டேன்!” என்றார் உதங்கர்.
அந்த வேடன் எவ்வளவோ மன்றாடியும், அவன் தந்த தண்ணீரை வாங்க மறுத்துவிட்டார் உதங்கர்.

அவனும் திரும்பிச் சென்றான். “ஏ கிருஷ்ணா! நீ ஒரு பொய்யன் என்பதை நிரூபித்துவிட்டாய்!
எனக்கு நீ அளித்த வரம் என்னவாயிற்று?” என அலறினார் உதங்கர். அப்போது அவர்முன் கண்ணன் தோன்றினான்.
“இந்திரன் அமுதத்தை எடுத்துக் கொண்டு உங்களிடம் வந்தானே. நீங்கள் தானே வேண்டாம் என்று அவனை விரட்டினீர்கள்?” என்று
கேட்டான் கண்ணன். வேடன் வடிவில் வந்தவன் இந்திரன் என அப்போது உணர்ந்தார் உதங்கர்.

“கிருஷ்ணா! இந்திரனே அமுதத்தோடு என்னிடம் வந்தாலும், உன் அருள் இல்லாவிட்டால் எனக்கு அது கிட்டாது எனப் புரிந்து கொண்டேன்.
ஏனெனில் உன் சித்தப்படி தானே அனைத்தும் நடக்கும். கிருஷ்ணா! மகாபாரதப் போரை நீ ஏன் நிறுத்தவில்லை என்பதும்
இப்போது எனக்குப் புரிந்து விட்டது. பூமி பாரத்தைப் போக்க வேண்டுமென முடிவெடுத்து நீ அவதாரம் செய்தாய்.
அந்தப் பணிக்குப் பாண்டவர்களை உனது கருவியாக நீ பயன்படுத்திக் கொண்டாய்.
மகாபாரதப் போரை முன்னின்று நடத்திப் பூமியின் பாரத்தைக் குறைத்து விட்டாய்.
உனது செயலைத் தவறு என்று கூறிய எனக்குச் சரியான பாடமும் புகட்டி விட்டாய்!
நீ நினைத்ததை முடிப்பவன் என இப்போது புரிந்து கொண்டேன்,” என்று கூறினார் உதங்கர்.

உதங்கர் கூறியவாறு தான் நினைத்ததை நினைத்தபடி முடிப்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ஸர்வவித்’ என்றழைக்கப்படுகிறார்.
‘வித்’ என்றால் சாதிப்பவர் என்று பொருள்.
‘ஸர்வவித்’ என்றால் அனைத்தையும் சாதிப்பவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 125-வது திருநாமம்.
“ஸர்வவிதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைக்கும் நல்ல காரியங்கள் அனைத்தும்
இனிதே நிறைவடையும்படித் திருமால் அருள்புரிவார்.

126. பானவே நமஹ (Bhaanavey namaha)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஏன் வெள்ளை மீசையோடு காட்சி தருகிறார்?
சோணிதபுரத்தை ஆண்ட பாணாசுரனின் மகள் உஷா. பாணாசுரனின் அரண்மனைக்கு விருந்தாளிகளாகப்
பரமசிவனும் பார்வதியும் வந்தார்கள். அப்போது பார்வதி உஷாவிடம், “நாளை விடியற்காலை உன் கனவில் ஓர்
ஆணழகன் தோன்றுவான். நீ அவனையே மணம்புரிந்து கொண்டால் உன் வாழ்க்கை நன்றாக அமையும்!” என ஆசீர்வதித்தாள்.

அவ்வாறே உஷாவின் கனவில் ஆணழகன் ஒருவன் தோன்றினான். காலை எழுந்தவுடன் தன் தோழி சித்ரலேகாவிடம்
நடந்தவற்றைக் கூறிய உஷா, “கனவில் வந்த ஆணழகனை எவ்வாறு கண்டுபிடித்து மணம்புரிவது?” என்று கேட்டாள்.
சித்ரலேகா ஓவியக் கலையில் வல்லவள். “உலக மகா அழகர்களின் படங்களை நான் வரிசையாக வரைகிறேன்.
அவர்களுள் உன் கனவில் வந்தவன் யார் என நீ சொல்!” என்று கூறிய சித்ரலேகா, ஒவ்வொரு அழகனாக வரையத் தொடங்கினாள்.

முதலில் மன்மத மன்மதனான கண்ணனின் உருவத்தை வரைந்தாள். “இவர் என் கனவில் வந்தவரை விட மிக மிக அழகாக இருக்கிறார்.
பேசாமல் இவரையே மணந்து கொள்வேன். ஆனால் கனவில் வந்தவரைத் தான் மணக்க வேண்டுமெனப் பார்வதி சொல்லி இருக்கிறாளே.
எனவே அடுத்த அழகனின் உருவத்தை வரை! பார்க்கலாம்!” என்றாள்.
அடுத்தபடியாக, கண்ணனின் மகன் பிரத்யும்னனின் உருவத்தை வரைந்தாள்.
“என் கனவில் வந்தவர் இவரை விடக் கொஞ்சம் அழகு குறைவு!” என்றாள் உஷா.
பிரத்யும்னனின் மகன் அனிருத்தனின் உருவத்தை வரைந்தாள். “இவரே தான் என் கனவில் வந்தவர்!” என்றாள் உஷா.

துவாரகையில் துயின்றுகொண்டிருந்த அனிருத்தனைக் கட்டிலோடு சோணிதபுரத்துக்குக் கொண்டு வந்தாள் சித்ரலேகா.
உஷாவின் அந்தப்புரத்தில் அனிருத்தன், பாணாசுரனுக்குத் தெரியாமலேயே வசித்து வந்தான்.
ஒருநாள் அனிருத்தனை உஷாவின் அந்தப்புரத்தில் பார்த்த பாணாசுரன் அவனைச் சிறைப்பிடித்தான்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற கண்ணன், பெரிய யாதவ சேனையைத் திரட்டி வந்து பாணாசுரனைப் போரில் வீழ்த்தி,
உஷாவையும் அனிருத்தனையும் துவாரகைக்கு அழைத்து
வந்து அவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தான்.

அந்தத் திருமணத்துக்கு வந்திருந்த சித்ரலேகா, ருக்மிணியைப் பார்த்து, “பார்வதியால் நீங்கள் பிழைத்தீர்கள்!” என்றாள்.
“என்ன சொல்கிறாய்?” என்று கேட்டாள் ருக்மிணி. “உஷாவுக்கு ஆணழகர்களின் படங்களை எல்லாம் வரைந்து காட்டினேன்.
அப்போது முதலில் உங்கள் கணவரான கண்ணனின் படத்தை வரைந்த போது, அவர் மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருப்பதாகவும்,
அவரையே தான் மணக்க விரும்புவதாகவும் உஷா கூறினாள். ஏற்கெனவே உங்கள் கணவருக்குப் பதினாறாயிரத்து எட்டு மனைவிகள்.
பதினாறாயிரத்து ஒன்பதாவது மனைவியாக இவள் வந்திருப்பாள். ஆனால் கனவில் வந்தவரையே மணக்க வேண்டுமெனப்
பார்வதி சொன்னதால் தாத்தாவான கண்ணனை விட்டுப் பேரனான அனிருத்தனை மணக்க உஷா முடிவெடுத்தாள்!” என்றாள் சித்ரலேகா.

“இதென்ன? நம் கணவர் பேரன் பேத்திகளை எல்லாம் பெற்ற பின்பும் இன்னும் மாறாத அழகோடும் இளமையோடும் இருக்கிறாரே!
இவரது பேரனை மணக்க வேண்டிய பெண்கள் கூட இவரது அழகில் மயங்குகிறார்களே!” எனச் சிந்தித்த ருக்மிணி,
கண்ணனுக்கு வயதாகி விட்டது என்பதை உலகுக்குக் காட்டவேண்டுமெனத் திட்டமிட்டாள்.
அதனால் கண்ணனின் திருமுகத்தில் வெண்ணெயால் மீசையை வரைந்து விட்டாள்.

அதுதான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் முகத்தில் இருக்கும் வெள்ளை மீசை.
திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதிக்கு அருகே அவரது மகன் பிரத்யும்னன், பேரன் அனிருத்தன் ஆகியோர் இருந்தாலும்,
பார்த்தசாரதிதான் அவர்களை விட இளமையாகத் தெரிகிறார்.
இவர் மற்றவர்களை விட மூத்தவர் என்பதைக் காட்டவே அந்த வெள்ளை மீசை ஏற்பட்டது.

இவ்வாறு எப்போதும் மாறாத அழகோடும் பொலிவோடும் இளமையோடும் இருக்கும் திருமால் ‘பானு:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 126-வது திருநாமம்.
“பானவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உடலும் மனமும் எப்போதும்
இளமையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

——————

127. விஷ்வக்ஸேநாய நமஹ (Vishwaksenaaya namaha)

புண்ட்ரம் என்ற தேசத்தைப் பௌண்ட்ரகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் முகஸ்துதியை விரும்புபவன்.
அதை அறிந்த அவனது மந்திரிகள் தினமும் அவனைக் குறித்து முகஸ்துதி பாடுவார்கள்.
“நீ தான் கடவுள், நீ தான் திருமால், நீ தான் வாசுதேவன்!” என்றெல்லாம் அவர்கள் முகஸ்துதி பாட,
அதை உண்மையென நம்பிய பௌண்ட்ரகன், ‘பௌண்ட்ரக வாசுதேவன்’ எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டான்.
“நான் தான் கடவுள், நானே உண்மையான கிருஷ்ணன்!” என அறிவித்துக் கொண்ட அவன்,
துவாரகையை ஆட்சி செய்து வந்த உண்மையான கண்ணனுக்குச் சவால் விட்டு ஓலையும் அனுப்பினான்.
அவனை எதிர்த்துப் போர்புரிய வந்தான் கண்ணன். அப்போது காசிராஜனும் பௌண்ட்ரக வாசுதேவனுக்குத் துணையாகப் போர் புரிய வந்தான்.

இருவரையும் போரில் வதம் செய்தான் கண்ணன். தனது தந்தை கண்ணனால் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற
காசிராஜனின் மகனான சுதக்ஷிணன், கண்ணனைப் பழி வாங்கத் திட்டமிட்டான். தாந்திரிக முறையில் பெரும் வேள்வி செய்தான்.
அந்த வேள்வித் தீயில் இருந்து ஒரு பெரிய பிசாசை உண்டாக்கி, துவாரகை நகரத்தையே எரித்துச் சாம்பலாக்கும்படி அதற்குக் கட்டளையிட்டான்.

தீயை உமிழ்ந்தபடி துவாரகையை நோக்கி அந்தப் பிசாசு புறப்பட்டுச் சென்றது. திடீரென வெப்பம் அதிகரிப்பதைப் போல
உணர்ந்த துவாரகை மக்கள் அஞ்சினார்கள். பெரும் தீப்பிழம்பு நகரத்தை நோக்கி வெகு தூரத்திலிருந்து வருவதைக் கண்டு திடுக்கிட்டார்கள்.
கண்ணனிடம் இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக அவனது அரண் மனையை நோக்கி எல்லோரும் ஓடினார்கள்.

அப்போது கண்ணன் ருக்மிணியோடு சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தான். குடிமக்கள் அனைவரும் கண்ணனிடம் ஓடி வந்து,
“பெரும் தீப்பிழம்பு ஒன்று நெருப்பைக் கக்கிக் கொண்டு நம் நகரை நோக்கி ஓடி வருகிறது.
தாங்கள் தான் காத்தருள வேண்டும்!” எனப் பிரார்த்தித்தார்கள்.
கண்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு தனது வலக் கரத்திலுள்ள சக்கராயுதத்தைப் பார்த்தான்.
கண்ணனது கட்டளையைப் புரிந்து கொண்டு, அவனது கையிலிருந்து உடனே சக்கரத்தாழ்வார் புறப்பட்டார்.
சுதக்ஷிணன் அனுப்பிய பிசாசைச் சென்று தாக்கினார்.
(பிசாசுகளின் இயல்பு யாதெனில், அவைகளை விட பலம் குறைந்த எதிரிகளின் மேல் அவற்றை ஏவினால் அவ்வெதிரிகளை அழித்துவிடும்.

ஆனால் அவைகளை விட வலிமையான எதிரியின் மேல் ஏவினால், எதிரியை அழிக்காமல் ஏவியவரையே வந்து தாக்கிவிடும்.)
சக்கரத்தாழ்வாரின் பொலிவையும் ஒளியையும் கண்டு அஞ்சிய அந்தப் பிசாசு, காசிக்குத் திரும்பி வந்து தன்னை ஏவிய
சுதக்ஷிணனையே தாக்கி அழித்து விட்டது. ஆனாலும் சக்கரத்தாழ்வார் அத்தோடு விடவில்லை.
தானும் அந்தப் பிசாசைப் பின்தொடர்ந்து சென்று காசி நகரத்தையே ஒட்டுமொத்தமாக எரித்தார்.
அவ்வாறு சக்கரத்தாழ்வார் காசி நகரை எரித்தமைக்கு வேதாந்த தேசிகன் யாதவாப்யுதயத்தில் அழகான ஒரு காரணம் கூறுகிறார்.
அது யாதெனில், காசி சிவபெருமானின் க்ஷேத்திரமல்லவா? சிவபெருமான் சாம்பலைத் தானே விரும்பித்
தன் உடலில் திருநீறாகப் பூசிக் கொள்கிறார்?
“மந்திரமாவது நீறு” என நோய்தீர்க்கும் மருந்தாகவும் அந்தப் புனிதத் திருநீறு போற்றப்படுகிறதே!
காசியில் வசிக்கும் சிவனும் அவரது பக்தர்களும் திருநீறு பூசிக்கொள்ள வசதியாக இருக்கட்டுமே என்று
அவ்வூரையே சாம்பலாக்கி அவர்களுக்குச் சக்கரத்தாழ்வார் பரிசளித்து விட்டாராம்!

இந்தச் சரித்திரத்தில், சக்கரத்தாழ்வார் தாமே ஒரு சேனையைப் போலச் செயல்பட்டு, துவாரகைக்கு வந்த ஆபத்திலிருந்து
ஊரையும் மக்களையும் காத்தார். இவ்வாறு தன் அடியவர்களை அனைத்துத் திசைகளிலிருந்தும் ஏற்படும்
ஆபத்துகளிலிருந்தெல்லாம் காக்கும் விதமாகத் தன் கையில் ஆயுதப்படையோடு விளங்குவதால்
திருமால் ‘விஷ்வக்ஸேந:’ என்றழைக்கப்படுகிறார்.
‘விஷ்வக்’ என்றால் அனைத்துத் திசைகள் என்று பொருள்.
‘ஸேந:’ என்றால் சேனையை உடையவன் என்று பொருள்.
அனைத்துத் திசைகளிலும் சேனையை உடையவராகத் திருமாலை ‘விஷ்வக்ஸேந:’ என்ற 127-வது திருநாமம் நமக்குக் காட்டுகிறது.
“விஷ்வக்ஸேநாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பயணங்களிலும்
திருமால் வழித்துணையாக வந்து எப்போதும் காத்தருள்வார்.

———————–

128. ஜனார்தநாய நமஹ (Janaardhanaaya namaha)

விக்கிரமப் பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து வந்த காலம். விக்கிரமப் பாண்டியன் வேதநெறியில் மாறாப் பற்றுக்
கொண்டவனாக விளங்கியதால், பாண்டிய நாட்டில் வேதம் செழிக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தான்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், கள்ளழகர் கோயிலிலும், கூடலழகர் கோயிலிலும்
வழிபாடுகள் சரியான முறையில் நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

அமுதைப் பொழியும் நிலவைப் பார்த்து மக்கள் ஆனந்தப்படுவது போல, விக்கிரமப் பாண்டியனின் தேஜஸ்ஸைப் பார்த்துக்
குடிமக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் திருடர்களுக்கு நிலவைக் கண்டால் பிடிக்காது; அதற்கு நிலவும் பொறுப்பல்ல.
அவ்வாறே பாண்டி நாட்டில் வாழ்ந்த சில போலித் துறவிகளுக்கு விக்கிரமப் பாண்டியனைப் பிடிக்கவில்லை.
அவர்கள் விக்கிரமப் பாண்டியனைப் பழிவாங்க என்ன வழி எனச் சிந்தித்தார்கள்.

காஞ்சியை ஆண்டு வந்த பல்லவ மன்னனுக்கும் விக்கிரமப் பாண்டியனுக்கும் தீராத பகையுண்டு.
போரில் பாண்டியனை வெல்ல முடியாத பல்லவன், தந்திரம் செய்து அவனை வெல்ல நினைத்தான்.
அதனால் விக்கிரமன் மேல் அதிருப்தியில் இருக்கும் அந்தப் போலித் துறவிகளைக் காஞ்சிக்கு வரவழைத்தான்.
பாண்டியனோடு சேர்த்துப் பாண்டிய நாட்டையே அழிக்கும் விதமாக ஒரு யாகம் செய்யச்சொன்னான். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.

வேப்பெண்ணெயைத் தீயில் ஊற்றி, எட்டிக் குச்சிகளைப் போட்டுக் குரூரமான ஒரு வேள்வியை அந்தத் துறவிகள் காஞ்சியில் செய்தார்கள்.
இரும்பு உலக்கையைத் துதிக்கையில் ஏந்திக் கொண்டு ஒரு பெரிய யானை வேள்வித் தீயிலிருந்து வந்தது.
“போ! பாண்டிய நாட்டை அழித்து விட்டு வா!” என்றார்கள் அந்தத் துறவிகள். அதுவும் காஞ்சியிலிருந்து மதுரையை நோக்கி விரைந்தோடியது.
யானை வருவதைக் கண்டு அஞ்சிய மக்கள் விக்கிரமப் பாண்டியனிடம் வந்து முறையிட்டார்கள்.
யானை, குதிரை, தேர், காலாட் படைகளைத் தயார் நிலையில் வைத்துவிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு
விரைந்த விக்கிரமன், “சிவபெருமானே! நீங்கள் தான் இந்நாட்டைக் காக்க வேண்டும்!” எனப் பிரார்த்தித்தான்.

கருவறையிலிருந்து புறப்பட்டார் சுந்தரேஸ்வரர். மேரு மலையையே வில்லாகப் பிடித்தார். வாசுகி எனும் பாம்பையே அதில் நாணாகக் கட்டினார்.
அந்த யானையை அழிப்பதற்கேற்ற அம்புக்கு எங்கே போவது என யோசித்த சிவபெருமான், கூடலழகர் கோயிலில் உள்ள
திருமாலிடம் வந்து தனக்கு நல்ல அம்பைத் தந்தருளுமாறு கோரினார்.
“நரசிம்ம வடிவில் நானே வந்து உன் வில்லில் கணையாக அமருகிறேன்!” என்றார் திருமால்.

மதுரையின் வட எல்லைக்குச் சென்ற சிவன், தனது வில்லில் நரசிம்மப் பெருமாளையே அம்பாக்கி,
நகரை நெருங்கிக் கொண்டிருந்த யானையின் மேல் எய்தார். அடுத்த நொடியே அந்த யானை அப்படியே உறைந்து
மலையாக உருவெடுத்து விட்டது. அம்பாகப் புறப்பட்டுச் சென்ற நரசிம்மர் அந்த யானைமலைக்குள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.
இன்றும் மதுரையிலுள்ள ஆனைமலையில் நரசிங்கம் என்ற நரசிம்மர் கோயிலில் சிவனுடைய வில்லிலிருந்து அம்பாக வந்து
யானையை அழித்துவிட்டு மலைக்குகையில் அமர்ந்
திருக்கும் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.

இவ்வரலாற்றைத் திருவிளையாடல் புராணத்தின் “யானை எய்த படலத்தில்” பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளார்.
பாண்டி நாட்டுக்குப் பேராபத்து நேர்ந்த போது, அம்பாக வந்து யானையை அழித்து நாட்டைக் காத்தது போல,
அடியவர்களுக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும் உடனே ஓடி வந்து காக்கும் இயல்வோடு
திருமால் விளங்குவதால் ‘ஜனார்தன:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஜனார்தன:’ என்றால் அடியவர்களின் எதிரிகளை அழிப்பவன் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 128-வது திருநாமம்.
“ஜனார்தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வெளி எதிரிகள் மட்டுமின்றி,
உள் எதிரிகளான காமம், கோபம், மோகம், அகங்காரம், மமகாரம், பேராசை உள்ளிட்டவற்றையும் திருமால் அழிப்பார்.

————————————-

129. வேதாய நமஹ (Vedhaaya namaha)

திருமங்கையாழ்வார் வடக்கே பத்ரிநாத் முதல் பல திவ்யதேசத்துப் பெருமாள்களைப் பாடிய படிச் சீர்காழியை வந்தடைந்தார்.
அவரை அவரது சீடர்கள் பல்லக்கில் சுமந்துகொண்டு,
“ஆலிநாடர் வந்தார்! அருள்மாரி வந்தார்! அரட்டமுக்கி வந்தார்! அடையார் சீயம் வந்தார்! கொங்குமலர்க் குழலியர் வேள் வந்தார்!
பரகாலன் வந்தார்! கலியன் வந்தார்! மங்கை மன்னர் வந்தார்! நாலுகவிப் பெருமாள் வந்தார்!” என்றெல்லாம் முழக்கமிட்டார்கள்.

அப்போது சீர்காழியில் உள்ள ஞானசம்பந்தரின் சீடர்கள், “நிறுத்துங்கள்! எங்கள் சம்பந்தர் பெருமான் வாழும் இவ்வூரில்
வேறு ஒருவரை நாலுகவிப் பெருமாள் என அழைப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்!” என்றார்கள்.
“எங்கள் ஆழ்வார் ஆசுகவி, மதுரகவி, விஸ்தாரகவி, சித்ரகவி என நாலுவிதக் கவிகள் பாடவல்லவராதலால்
நாலு கவிப் பெருமாள் என்கிறோம்! அதில் என்ன தவறு?” என்று கேட்டார்கள் ஆழ்வாரின் சீடர்கள்.
“அப்படியானால் எங்கள் தலைவருக்கும் உங்கள் தலைவருக்கும் போட்டி வைத்துப் பார்ப்போம்.
அதில் யார் வெல்கிறார்களோ அவரே நாலுகவிப்பெருமாள்!” என்றார்கள் சம்பந்தரின் சீடர்கள்.
ஆழ்வாரின் சீடர்களும் அதை ஏற்றார்கள்.

எப்போதுமே தலைவர்களுக்குள் சண்டையோ பொறாமையோ இருப்பதில்லை. சீடர்கள் போட்டியை விரும்பியதால் ஆழ்வாரும் சம்பந்தரும்
அதற்கு இசையும்படி ஆயிற்று. ஆனால் மனதளவில் அவர்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்.
குறித்த நாளில் போட்டிக்காகக் குறித்த இடத்துக்குத் திருமங்கை ஆழ்வாரும் சம்பந்தரும் வந்தார்கள்.
அப்போது சம்பந்தர் திருமங்கை ஆழ்வாரைப் பார்த்து, “சீர்காழியின் சிறப்பைச் சித்தரித்து ஒரு செய்யுள் பாடும்!” என்றார்.
திருமங்கை ஆழ்வாரோ, சீர்காழியில் கோவில் கொண்டிருக்கும் உளகளந்த பெருமாளைக் குறித்து ஆசிரிய விருத்தத்தில்,

“ஒருகுறளாய் இருநிலம் மூவடிமண் வேண்டி
உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில்மலி விழா வளமும் சிறக்கும் காழிச்
சீராம விண்ணகரே சேர்மின் நீரே”
எனத் தொடங்கி ஒன்பது பெரிய பாடல்கள் பாடினார்.

“ஒன்றே முக்கால் அடியில் குறள் பாடச் சொன்னால் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடுகிறாரே!” எனச் சிரித்தார்கள்
சம்பந்தரின் சீடர்கள். “இல்லை! அவர் பாடியது சரி!” என்றார் சம்பந்தர்.
“ஒன்றே முக்கால் அடி உயரம் கொண்ட வாமன மூர்த்திக்குக் ‘குறள்’ என்று பெயர்.
‘ஒருகுறள் பாடும் ஒருகுறள்’ என்றால் ‘ஒரு குறளால் பாடப்பட்ட ஒரு குறள்’ என்று பொருள்.
திருக்குறளின் 610-வது குறள் –
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு”.
(உலகளந்த பெருமாள் எப்படி மண்ணுலகம் விண்ணுலகம் அனைத்தையும் அளந்தாரோ அதுபோலச்
சோம்பலில்லாத மன்னவனின் ராஜ்ஜியம் விரிந்து பரந்திருக்கும் என்பது இக்குறளின் பொருள்.)

எனவே வாமன மூர்த்தி இந்த ‘ஒரு குறளால்’ பாடப்பட்ட ‘ஒரு குறள்’ ஆவார்.
சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் உலகளந்தபெருமாளைப் பாடச் சொல்லும் நோக்கில் தான்
“சீர்காழியின் சிறப்பைச் சித்தரித்து ஒரு குறள் பாடும் ஒரு குறள் பாடும்!” என்று நான் கூறினேன்.
அவரும் சரியாகப் பாடிவிட்டார்!” என்றார் சம்பந்தர்.

மேலும், “ஆழ்வீர்! நாலுகவிப் பெருமாள் என்ற பட்டமும் உங்களுக்குப் பொருந்தும்!” என்று சொன்ன சம்பந்தர்
தன்னுடைய வேலைத் திருமங்கை ஆழ்வாருக்குப் பரிசாக அளித்தார்.
இன்றும் திருவாலி திருநகரியில் சம்பந்தர் பரிசளித்த வேலைக் கையில் அணைத்தபடி
திருமங்கை ஆழ்வார் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

திருமங்கையாழ்வாரைப் பாராட்டும் வகையில்,
“கடியுண்ட நெடுவாளை கறாவில் தப்பக்
கயத்துக்குள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட தெங்கின் பழத்தால் காயம்
அலையுண்டு குலைசிதறும் ஆலிநாடா
படியுண்ட பெருமானைப் பறித்துப்பாடிப்
பதம்பெற்ற பெருமாளே கவியேன் பெற்ற
கொடியொன்று நின்பவனிக்கெதிரே சென்று
விட்டாள் உயிரொன்று கொண்டு வந்தாளே”
என்ற பாடலைச் சம்பந்தர் பாடினார். சம்பந்தரைப் பாராட்டும் வகையில்,

“வறுக்கை நுறுங்கண்ணி சிதறிச் செந்தேன் பொங்கி
மறுக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலைதனில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்வு தானே”
என்ற பாடலைத் திருமங்கையாழ்வார் பாடினார். “நான் வேதம் படித்த அந்தணர்கள் குலத்தில் பிறந்தவன்.
ஆனால் நீங்களோ வேளாளர் குலத்தில் பிறந்திருந்தாலும் எப்படி வேதத்தின் சாரத்தை
இவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார் சம்பந்தர்.
அதற்குத் திருமங்கையாழ்வார், “அடியேன் முறைப்படி வேதம் கற்காவிட்டாலும், திருமாலே குருவாக வந்து
வேதத்தின் சாரமான எட்டெழுத்து மந்திரத்தை அடியேனுக்கு உபதேசம் செய்துவிட்டார்!” என விடையளித்தார்.

இவ்வாறு வேதத்தின் ஆழ்பொருளைத் தானே குருவாக வந்து தன் அடியவர்களுக்கு வழங்குவதால்,
திருமால் ‘வேத’ என்றழைக்கப்படுகிறார்.
‘வேத:’ என்றால் வேதப்பொருளை வழங்குபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 129-வது திருநாமம்.
“வேதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறும்படித் திருமால் அருள் புரிவார்.

———————–

130. வேதவிதே நமஹ (Vedhavidhe namaha)

ஆயர்பாடியில் கண்ணன் ஒரு வீட்டில் வெண்ணெய் திருடச் சென்றான். அங்கிருந்த வெண்ணெய்ப் பானைக்கு அருகே
ஒரு மணி இருந்தது. அந்த மணியைப் பார்த்து, “மணியே! நீ இப்போது மணியடித்து ஓசை எழுப்பினால் நான் மாட்டிக்கொள்வேன்.
அதனால் அமைதியாக இருக்க வேண்டும்! சரியா?” என்றான் கண்ணன். “அடியேன்!” என்றது அந்த மணி.
கண்ணன் வெண்ணெயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். உடனே மணி அடித்து விட்டது.
“ஏன் ஒலி எழுப்புகிறாய்?” என மணியிடம் கேட்டான் கண்ணன்.
“நீ பிரசாதம் உண்ணும் போது ஒலி எழுப்ப வேண்டியது என் கடமை அல்லவா?” என்றது மணி.

“முதலில் ‘அடியேன்’, அதாவது ‘அடிக்க மாட்டேன்’ என்று எனக்கு வாக்களித்தாயே!” என்று கேட்டான் கண்ணன்.
“கண்ணா! அடிக்க மாட்டேன் என்ற பொருளில் அடியேன் என்று சொல்லவில்லை.
‘உனது அடியவன் நான்’ என்று குறிப்பதற்காக அடியேன் என்று சொன்னேன்!” என்றது அந்த மணி.
“மணியே! பேச்சாற்றலில் உன்னை அடித்துக்கொள்ள யாருமில்லை. நீ கலியுகத்தில் ஒரு ஆசார்யனாக அவதாரம் செய்து
வேதத்துக்குத் தவறான பொருள் கூறுபவர்களை உன் பேச்சாற்றலைக் கொண்டு வாதம் செய்து வெல்ல வேண்டும்!” என்றான் கண்ணன்.

பின்னாளில் ஆயர்பாடியில் இருந்து திருமலையை அடைந்த அந்த மணி, அங்கே திருவேங்கடமுடையானின்
பூஜைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து அனந்தசூரி, தோத்தாரம்பா தம்பதிகள்
குழந்தை வரம் வேண்டித் திருமலைக்கு வந்தார்கள். அன்றிரவு தோத்தாரம்பா, தான் திருமலையப்பனின் மணியை
விழுங்குவதாகக் கனவு கண்டாள். அடுத்த நாள் காலை திருமலையப்பனின் கருவறையை அர்ச்சகர் திறந்தபோது,
அங்கு மலையப்பனின் மணியைக் காணவில்லை. இது பெரும் சர்ச்சையாகிச் செய்தி ஊரெங்கும் பரவியது.
அப்போது அங்கு வந்த ஜீயர் ஸ்வாமி, “பெருமாளே ஒரு பக்தைக்குத் தன் மணியைப் பரிசளிப்பதாக நான் கனவு கண்டேன்!” என்று கூறினார்.

அடுத்த சில நாட்களில் தோத்தாரம்பா கருவுற்றாள். புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையப்பனின் மணியின்
அம்சமாக ஒரு ஆண் குழந்தையை ஈன்றாள். ‘வேங்கடநாதன்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள்.
இவ்வாறு ஆயர்பாடியில் இருந்த மணி, திருமலையை அடைந்து, பின் காஞ்சியில் வேங்கடநாதனாக அவதரித்தது.
வேங்கடநாதன், தன்னுடைய இருபதாவது வயதுக்குள் அனைத்து வேத சாஸ்திரங்களையும் தன்னுடைய தாய்மாமாவான
அப்புள்ளாரிடம் கற்றுத் தேர்ந்தார். வேதாந்த ஞானத்தில் ஒப்புயர்வற்றவராக அவர் விளங்கியபடியால்,
திருவரங்கநாதனே அவருக்கு ‘வேதாந்தாச்சாரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

அந்த வேதாந்தாச்சாரியார் தான் ‘வேதாந்த தேசிகன்’ என்று நாம் பிரசித்தியாக அழைக்கும் வைணவ மத குரு ஆவார்.
ஆயர்பாடியில் கண்ணன் வழங்கிய உத்தரவின் படி, வேதாந்த தேசிகன் வேத நெறியை நாடெங்கும் பரவச் செய்வதற்கும்,
பாமரர்களும் வேதப் பொருளை அறிவதற்கும் பல முயற்சிகள் மேற்கொண்டார்.
வேதத்துக்குத் தவறான பொருள் கூறுவோரை வாதம் செய்து வென்றார். அந்த வகையில் கிருஷ்ண மிச்ரர் என்றொரு
பண்டிதர் தேசிகனை எதிர்த்து வாதம் செய்ய வந்தார். அவர் தேசிகனிடம், “சுவாமி! நீங்கள் மட்டும் என்னை வாதில்
வென்று விட்டால் நான் என்னுடைய சித்தாந்தத்தையே விட்டுவிட்டு உங்களது சித்தாந்தத்துக்கு வந்து விடுகிறேன்!” என்றார்.

“சரி! வாதத்தைத் தொடங்குவோமா?” என்று கேட்டார், தேசிகன். “சற்றுப் பொறுங்கள் சுவாமி! நான் தோற்றால் உங்கள்
சித்தாந்தத்துக்கு வருவதாகப் பந்தயம் கட்டினேன். நீங்கள் தோற்றால் என்ன செய்வீர்கள் என்று பந்தயம் கட்டவே இல்லையே!” என்று
கேட்டார் கிருஷ்ண மிச்ரர். “நான் தோற்கமாட்டேன்! அதனால் பந்தயம் கட்டவேண்டிய அவசியமில்லை!” என்றார்,
தேசிகன். “அதெப்படி வாதம் தொடங்குமுன்பே தோற்கமாட்டேன் என அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் கிருஷ்ணமிச்ரர்.

“நான் எனது சொந்தக் கருத்தைச் சொல்லி வாதம் செய்தால் தானே வெல்வேனா தோற்பேனா என்ற விசாரம் ஏற்படும்?
கீதையில் கண்ணன் ‘வேதவிதேவ சாஹம்’ என்கிறான். அனைத்து வேதங்களையும் ஐயமில்லாமல் அறிந்தவன் தான் ஒருவனே
என்று கூறியிருக்கிறான் கண்ணபிரான். அந்தக் கண்ணனின் திருவுள்ளத்திலுள்ள கருத்துக்களையும்,
அவற்றைப் பிரதிபலிப்பவரான ராமானுஜரின் திருவுள்ளத்திலுள்ள கருத்துக்களையும் கொண்டு இப்போது அடியேன்
வாதம் செய்யப் போகிறேனே ஒழிய எதுவுமே என் சொந்தக் கருத்தில்லை. எனவே தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை!” என்றார்.
வியந்து போனார் கிருஷ்ண மிச்ரர். அவ்வாறே வாதத்தில் கிருஷ்ண மிச்ரரை வென்று தமது சீடராக்கினார் தேசிகன்.

அனைத்து வேதங்களின் கருத்துக்களையும் ஐயமின்றி அறிந்தவர் திருமால் ஒருவரே.
மனித புத்தியால் வேதக் கருத்துக்களை முழுமையாக அறிய முடியாது.
வேதவேத்யரான திருமாலே, நம்மாழ்வார், ராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் போன்ற மகான்களுக்கு
அந்த வேதங்களின் பொருளை ஐயம் திரிபறத் தானே உணர்த்தி அவர்களைப் பேச வைக்கிறார்.
இவ்வாறு சந்தேகத்திற்கு இடமில்லாமல் வேதங்களின் பொருளை அடியார்களுக்கு உணர்த்துவதால்
திருமால் ‘வேதவித்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 130-வது திருநாமம்.

“வேதவிதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் வாசகர்களுக்கு வாழ்வில் எந்த விஷயத்திலும்
சந்தேகமில்லாமல் தெளிவான ஞானம் பிறக்கும்படித் திருமால் அருள்வார்.

———————

131. அவ்யங்காய நமஹ (Avyangaaya namaha)

சாந்தோக்ய உபநிஷத்தில் ‘வைச்வானர வித்யை’ என்ற பகுதியில் இடம்பெற்றுள்ள சரித்திரம் இது.
பிராசீனசாலர், சத்தியயஜ்ஞர், இந்திரத்யும்னர், ஜனர், புடிலர் ஆகிய ஐந்து முனிவர்கள் ஒன்று கூடி,
“நம்முடைய ஆத்மா என்பது என்ன? இறைவன் யார்?” என்று விவாதம் நடத்தினார்கள்.
எவ்வளவு பேசியும் இவ்விஷயத்தில் தெளிவு ஏற்படாமையால், அருண முனிவரின் புதல்வரான உத்தாலகரை அணுகினார்கள்.
உத்தாலகர், “இவ்விஷயம் அடியேனுக்கு முழுமையாகத் தெரியாது. கேகய தேசத்து அரசரான அச்வபதிதான் ஆத்மா,
இறைவன் இவற்றையெல்லாம் பற்றி நன்கறிந்தவர். வாருங்கள் நாம் அவரை அணுகுவோம்!” என்று சொல்ல,
ஆறு முனிவர்களும் அச்வபதியிடம் சென்றார்கள்.

அப்போது அச்வபதி ஒரு வேள்வி செய்து கொண்டிருந்தார். இந்த ஆறு முனிவர்களையும் வரவேற்ற அச்வபதி,
“இந்த யாகம் செய்விக்கும் அந்தணர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் தட்சிணையை உங்களுக்கும் தருகிறேன்.
நீங்கள் அறுவரும் இருந்து யாகத்தை நடத்தித் தர வேண்டும்!” என வேண்டினார்.
ஆனால், அவர்களோ “எங்களுக்குப் பொன்னோ பொருளோ வேண்டாம். எங்களுக்கு நீங்கள் ஆத்மாவைப் பற்றியும்
இறைவனைப் பற்றியும் உபதேசம் செய்யுங்கள். அதுதான் நாங்கள் விரும்பும் தட்சிணை!” என்றார்கள்.

ஆன்மிகத்தில் அவர்களுக்குள்ள நாட்டத்தைக் கண்டு மகிழ்ந்த அச்வபதி, முதலில் பிராசீனசாலரிடம்,
“நீங்கள் எதைத் தெய்வமாக வணங்குகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் சொர்க்க லோகத்தை வணங்குகிறேன்” என்றார்.
அவ்வாறே ஒவ்வொருவரிடமும் அச்வபதி கேட்க, சத்தியயஜ்ஞர் சூரியனையும், இந்திரத்யும்னர் காற்றையும்,
ஜனர் ஆகாயத்தையும், புடிலர் தண்ணீரையும், உத்தாலகர் பூமியையும் தெய்வமாகக் கருதி வணங்குவதாகக் கூறினர்.

அதைக் கேட்ட அச்வபதி, “நீங்கள் யாருமே இறைவனை முழுமையாக வணங்கவில்லை.
வெறும் சொர்க்க லோகத்தையோ, வெறும் சூரியனையோ, வெறும் ஆகாயத்தையோ இறைவனாக எண்ணி வழிபட்டால்
இம்மைப் பயன்கள் மட்டுமே கிடைக்கும். சொர்க்கலோகத்தைத் தலையாகவும், சூரியனைக் கண்ணாகவும், காற்றை மூச்சாகவும்,
ஆகாயத்தை இடுப்பாகவும், தண்ணீரை வயிறாகவும், பூமியைப் பாதங்களாகவும் கொண்ட முழு வடிவமாக இறைவனை
வணங்கினால் தான் முக்தியடைய முடியும்.

இவ்வாறு ஜீவாத்மாக்களுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கும் இறைவனைத் தியானித்து,
ஜீவாத்மாக்கள் ஒவ்வொருவரும் அவனுக்கு மேன்மை சேர்ப்பதற்காக ஏற்பட்டவர்கள் என்ற ஞானத்தோடு உபாசனை செய்தால்,
தீயிலிட்ட பஞ்சுபோல் நம் பாபங்கள் எரிந்து போகும்!” என்றார். மேலும், பூர்ணமாக இருக்கும் இறைவனைப் பகுதிகளாகப் பிரித்து
உபாசித்தால் பலனும் குறைவாகவே கிட்டும் எனவும், குறையொன்றுமில்லாத இறைவனைப் பகுதிகளுக்கப்பாற்பட்ட
முழுமையானவனாக உபாசித்தால் மட்டுமே முழுமையான பலன் கிட்டும் என்றும் விளக்கினார்.

(உபநிஷத் இவ்வாறு கூறியிருப்பதால்தான், கோயில்களில் இறைவனின் விக்கிரகத்தை வணங்கும்போது,
இது வரையறைக்குட்பட்ட வெறும் விக்கிரகம் என எண்ணி வணங்காமல், வரையறைக்கப்பாற்பட்ட இறைவன்
இந்த வடிவில் வந்து நமக்குக் காட்சியளிக்கிறான் என உணர்ந்து வணங்க வேண்டும் என்று பெரியோர்கள் வலியுறுத்துகிறார்கள்.
விக்கிரகத்தை முழுமையான இறைவன் என உணர்ந்து வழிபட்டால் தான் முழுமையான பலன் கிட்டும்.)

வேதத்துக்கு ஆறு அங்கங்கள் உள்ளன. அவை சிக்ஷை (உச்சரிப்பு விதிகள்), வியாகரணம் (இலக்கண விதிகள்),
நிருக்தம் (அகரமுதலி), சந்தஸ் (பா வகைகள்), ஜோதிடம், கல்பம் (செய்முறைகள்).
இந்த ஆறு அங்கங்களையும் சரீரமாக உடையவனாகவும் இறைவனைத் தியானிக்கும் முறை உள்ளது.
சந்தஸ்ஸைத் திருவடிகளாகவும், நிருக்தியைக் காதுகளாகவும், சிக்ஷையை மூக்காகவும், ஜோதிடத்தைக் கண்களாகவும்,
வியாகரணத்தை வாயாகவும், கல்பத்தைக் கரங்களாகவும் கொண்டவனாகவும் இறைவனைத் தியானிக்கலாம் என்று கூறினார் அச்வபதி.

அனைத்துலகங்களையும், அவ்வாறே வேதத்தின் அனைத்து அங்கங்களையும் தனது அவயவங்களாகக் கொண்டு
குறையில்லாத முழுமையானவராகத் திருமால் விளங்குவதால், ‘அவ்யங்க:’ என்றழைக்கப் படுகிறார்.
வடமொழியில் ‘வ்யங்க:’ என்றால் ஊனம் அல்லது குறைபாடு என்று பொருள்.
‘அவ்யங்க:’ என்றால் குறையில்லாத முழுமையான வடிவைக் கொண்டவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 131-வது திருநாமம்.
“அவ்யங்காய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியவர்களுக்கு வாழ்க்கையில் முழுமையான நன்மைகள்
ஏற்படும் படித் திருமால் அருள்புரிவார்.

————————

132. வேதாங்காய நமஹ (Vedhaangaaya namaha)

ஆயிரம் வருடப் போராட்டத்துக்குப் பின் தன் முயற்சியால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என உணர்ந்தது அந்த யானை.
“ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே! நீ தான் வந்து இந்த முதலையின் பிடியிலிருந்து அடியேனை விடுவிக்க வேண்டும்!”
என உரக்க அழைத்தது. கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் வைகுண்டத்திலிருந்து திருமால் அதிவேகமாகப் புறப்பட்டார்.
கருடன் மேல் ஆரோகணித்தார். சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை என எட்டு கரங்களில்
எட்டு ஆயுதங்கள் ஏந்தியபடி குளக்கரையை நோக்கி விரைந்தார்.

“கருடா! வேகமாகச் செல்! என் பக்தன் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறான். விரைவில் அவனைக் காக்க வேண்டும்!” என்றார்.
கருடனும் முழு வேகத்தில் சென்றார். ஆனாலும் திருமாலுக்குத் திருப்தி இல்லை.
ஒரு நிலையில், கருடனின் தோள்களில் இருந்து இறங்கிய திருமால், கருடனைத் தன் தோளில் வைத்துக் கொண்டு
குளக்கரையை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்.

கருடனைத் தோளில் ஏந்தியபடி குளக்கரையை அடைந்த திருமால், சக்கரத்தால் முதலையைக் கொன்றார், யானையை மீட்டார்.
தான் பறித்த தாமரையைத் திருமாலின் திருவடித் தாமரைகளில் கஜேந்திரன் சமர்ப்பித்தான்.
கஜேந்திரனுக்கு முக்தியளித்து அவனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார் திருமால். வைகுண்டம் சென்ற கஜேந்திரன் திருமாலிடம்,
“எம்பெருமானே! எனக்கொரு சந்தேகம். என்னைக் காக்க வருகையில் நீங்கள் ஏன் கருடனை உங்கள் தோளில் சுமந்து வந்தீர்?
கருடன் உம்மைச் சுமந்து வருவது தானே வழக்கம்?” என்று கேட்டான்.
“அவன் பயணித்த வேகம் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் தான் அவனைத் தோளில் சுமந்து கொண்டு
நான் வேகமாகப் பறந்து வந்துவிட்டேன்!” என்றார் திருமால்.

“என்னைக் காக்க வேண்டியது நீங்கள் தானே? கருடன் இல்லையே! அப்புறம் ஏன் அவரைச் சுமந்து கொண்டு பறந்து வர வேண்டும்?
அவரை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் வந்தால் போதாதா?” என்று கேட்டான் கஜேந்திரன்.
அதற்குத் திருமால், “நீ என்னை அழைக்கும் போது ‘ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே!’ என்று அழைத்தாய் அல்லவா?
எனவே நானே வேதம் போற்றும் முதல்வன் என்பதை உனக்கு நிரூபிப்பதற்காக வேதமே வடிவெடுத்தவரான கருடனைச் சாட்சியாக
உடன் அழைத்து வந்தேன்!” என்றார் திருமால்.
வேதத்தின் பகுதிகளே கருடனின் திருமேனியில் அங்கங்களாக இருக்கும் விதத்தையும் திருமால் விளக்கினார்.

வேதப்பகுதி – கருடனின் அங்கம்
காயத்ரி மந்திரம் – கண்கள்
த்ரிவ்ருத் – தலை
வாமதேவ்யம் – உடல்
ஸ்தோமம் – ஆத்மா
சந்தஸ் – கால்கள்
தீஷ்ண்யம் – நகங்கள்
யஜ்ஞாயஜ்ஞம் – வால்
ப்ருஹத், ரதாந்தரம் – இறக்கைகள்

அப்போது குறுக்கிட்ட கருடன், “கஜேந்திரா! எம்பெருமானின் திருமேனியிலேயே அனைத்து வேத மந்திரங்களும் எப்போதும் உள்ளன.
வேத மந்திரங்களையே அங்கங்களாக உடையவராய் விளங்குவதால் தான் அவர் ‘வேதாங்க:’ எனப் போற்றப்படுகிறார்!” என்றார்.
“ஆனால் உங்களது உடல் உறுப்புகளாக வேத மந்திரங்கள் இருப்பதாகத் திருமால் கூறுகிறாரே!” என்று கேட்டான் கஜேந்திரன்.
அதற்குக் கருடன், “தன்னுடைய பக்தர்களையும் தன்னைப் போலவே ஆக்கி அழகு பார்ப்பவர் நம் பெருமாள்.
அதனால் அவரது தொண்டனான அடியேனுக்கும் வேத மந்திரங்களை உடல் அங்கங்களாகத் தந்து விட்டார்.
அவர் இயற்கையாகவே வேத அங்கங்களைத் தனது அங்கங்களாகக் கொண்டவர்.
அடியேன் அவரது அருளால் அவற்றை அங்கங்களாகப் பெற்றவன்!” என்றார்.

“இப்போது மற்றொரு சந்தேகம் எழுந்து விட்டது!” என்ற கஜேந்திரன், “திருமாலின் திருமேனியிலேயே வேதங்கள் அனைத்தும்
இருக்கின்றன என்றால், அவர் உங்களை ஏன் வேத சொரூபி எனக் கூறிச் சாட்சிக்கு அழைத்து வந்தார்?” என்று கருடனிடம் கேட்டான்.
அதற்குக் கருடன், “கருணைக் கடலான திருமால், கஜேந்திர மோட்சக் காட்சியை அடியேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்
என எண்ணியுள்ளார். அதனால், தாமே என்னைக் குளக்கரைக்குச் சுமந்து கொண்டு வந்து
என் கண் முன்னால் அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார்!” என்று கூறிப் பரவசப்பட்டார்.

கருடன் சொன்னபடி, வேத மந்திரங்களையே தனது அங்கங்களாகக் கொண்டு விளங்குவதால்,
திருமால் ‘வேதாங்கஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 132-வது திருநாமம்.
உலகியல் வாழ்க்கையாகிய குளத்தில், நாம் செய்த முன்வினைகளாகிய முதலைகள் நம்மைப் பிடித்துக் கொண்டு வாட்டுகையில்,
“வேதாங்காய நமஹ” என்ற இத்திருநாமத்தைச் சொன்னால், அந்த முதலைகளிடமிருந்து திருமால் நம்மை விடுவித்தருள்வார்.

—————–

133. வேதவிதே நமஹ (Vedavidhe namaha)

வடுவூரில் சீதை, லட்சுமணன், அனுமனோடு கோதண்டராமர் புன்னகை தவழும் முகத்துடன் எழுந்தருளியுள்ளார்.
அவ்வூரில் வாழ்ந்த ஸ்ரீநிதி சுவாமிகள், தினமும் ராமனின் புன்னகையைக் குறித்து ஒரு ஸ்லோகம் எழுதுவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுப் ‘புன்னகை ராமாயணம்’ என்ற ராமாயணமே உருவாகிவிட்டது.
ஒருநாள் ராமனை அவர் தரிசிக்கையில் ஸ்ரீநிதி சுவாமிகளின் உள்ளத்தில் ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி தோன்றியது.

வனவாச காலத்தில் அத்ரி, சரபங்கர், அகஸ்தியர் உள்ளிட்ட பல முனிவர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று
அவர்களை வணங்கினான் ராமபிரான். அந்த வகையில் சுதீட்சணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தை ஒருநாள் மாலை அடைந்தான் ராமன்.
உடன் லட்சுமணனும் சீதையும் சென்றிருந்தார்கள். அவர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சுதீட்சணர்.
ராமன் அவரிடம், “மகரிஷியே! நீண்ட தூரம் நடந்து வந்த நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம்.
அதனால் சீக்கிரமாக உணவைப் பரிமாறுங்கள்!” என்றான்.

“இப்போது இயலாது ராமா! சற்றுப் பொறுத்திரு!” என்றார் சுதீட்சணர்.ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணன் வெகுண்டெழுந்தான்.
“சுதீட்சணரே! என் அண்ணனையும் அண்ணியையும் விருந்துக்கு அழைத்து விட்டு, அவர்கள் பசி என்று சொல்லும் போது,
தாமதமாகும் என்கிறீர்களே! உங்கள் விருந்தோம்பலின் லட்சணம் இது தானா?” எனப் பலவாறு பேசினான் லட்சுமணன்.
அவனைச் சமாதானப் படுத்திய ராமன், “மகரிஷியே! ஏன் விருந்து இன்னும் தயாராகவில்லையா?” என்று பணிவுடன் கேட்டான்.

அதற்கு சுதீட்சணர், “ராமா! விருந்தெல்லாம் தயார் நிலையில் தான் உள்ளது. ஆனால் இப்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம்.
காயத்திரி மந்திரத்தை ஜபிக்க வேண்டிய காலம். இந்த சந்தியா காலத்தில் உணவு உட்கொள்ளக் கூடாது என்று
சாஸ்திரத்தில் நீ தானே விதித்துள்ளாய். எனவே சந்தியா காலம் போய், இரவுப் பொழுது வந்தபின் விருந்தளிக்கிறேன்!” என்றார்.

“லட்சுமணா! நான் சாஸ்திரத்தில் விதித்த தர்மங்களைத் துளிகூடப் பிறழாமல் இந்த ரிஷி பின்பற்றுகிறாரே!
அந்த விதியை விதித்தவனான நானும் அதைப் பின்பற்ற வேண்டாமா? எனவே பொறுத்திருப்பாம்.
சந்தியாகாலம் போனபின் நாம் உணவருந்தலாம்!” என்று கூறிய ராமன் சுதீட்சணரின் சிரத்தையை எண்ணி
அவரைப் பார்த்துப் புன்னகைத்தான்.
இக்காட்சியை மனத்திரையில் கண்ட ஸ்ரீநிதி சுவாமி,
“வடுவூரில் உறையும் சக்கரவர்த்தித் திருமகனே! அன்று தர்மங்களைச் சரியாகப் பின்பற்றிய சுதீட்சணரைப் பார்த்து
நீ சிந்திய அதே புன்னகையோடு இன்று வடுவூரில் எழுந்தருளியிருக்கிறாயே!
உன்னுடைய இந்தப் புன்னகை எம் போன்றவர்களை தர்மத்தின் பாதையில் வழிநடத்தட்டும்!” என்றொரு ஸ்லோகத்தை இயற்றினார்.

அந்த ஸ்லோகம்:
“ஸ்ரீமன்! ராம! தவாகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ
தத்தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீகாமாத் விலம்பான்விதே |
புக்திம் தாதுமயே ததா ரகுபதே! தர்மாத்மனஸ்தே முகே
யன் மந்தஹாஸம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம் ||”

ராமாவதாரம் போன்ற அவதாரங்களின் வாயிலாக, வேதம் விதிக்கும் தர்மத்தின் நெறியில் தானும் வாழ்ந்து காட்டி,
மக்களையும் அந்நெறியில் வழிநடத்துகிறார் திருமால்.
அதனால் ‘வேதவித்’ – தர்மங்களை வளர்ப்பவர் என்று போற்றப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 133-வது திருநாமம்.
“வேதவிதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தர்மத்தின் பாதையிலிருந்து
தடம் மாறாதபடி திருமால் காத்தருள்வார். (தொடர்ந்து நாமம் சொல்வோம்)

————————

134. கவயே நமஹ (Kavaye namaha)

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு ‘பகவத்குண தர்ப்பணம்’ என்ற அற்புதமான உரையை வழங்கியவர் பராசர பட்டர்.
அவரைப் பெரிய ஞானி என்றும் ரிஷிகளுக்குச் சமமானவர் என்றும் திருவரங்கத்தில் அடியார்கள் கொண்டாடினார்கள்.
ஆனால், திருவரங்கத்தில் வாழ்ந்த ஆலவாயன் என்பவன் பராசர பட்டரின் மேல் பொறாமை கொண்டான்.
“பராசரர் என்பது வியாசரின் தந்தைபெயர். அந்த மகரிஷியின் பெயரைச் சுமக்கும் தகுதியே இல்லாதவர் இவர்
என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!” என்று சவால் விட்டான்.
ஒருநாள் ஆலவயானின் வீட்டுக்குள் நுழைந்த ஒரு பாம்பு, ஒரு பானைக்குள் சென்று உடலைச் சுருட்டிக் கொண்டு விட்டது.
அந்தப் பானையின் வாயை ஒரு துணியால் மூடிய ஆலவாயன் அந்தப் பானையைப் பராசர பட்டரின் வீட்டுக்கு எடுத்து வந்தான்.
பட்டரின் முன் பானை வைத்து விட்டு, “நம் கண்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் காணவல்லவர்கள் தான் ரிஷிகள்.
பராசர ரிஷியின் பெயரைச் சுமக்கும் உங்களால் இந்தப் பானைக்குள் என்ன இருக்கிறது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான் ஆலவாயன்.

பட்டர் சிரித்தபடி, “இதற்குள் குடை இருக்கிறது!” என்றார்.
“என்ன? குடையா? இந்தப் பானைக்குள் குடை இருக்கிறது என்று ஒரு பைத்தியக்காரன் கூடச் சொல்லமாட்டான்.
பராசர ரிஷியின் பெயரைச் சுமப்பதற்கான எந்தத் தகுதியும் உமக்கில்லை!” என்று சொன்ன ஆலவாயன்,
பானையின் வாயைத் திறந்து பாம்பை வெளியே விட்டான். அடைபட்டிருந்த பாம்பு விறுவிறுவென வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டது.
“இது என்ன குடையா?” என்று கேட்டான்.
புன்னகைத்த பராசர பட்டர், “பொய்கையாழ்வாரின் பாடல் உனக்குத் தெரியுமா?
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.
திருமால் எங்கே சென்றாலும் ஆதிசேஷன் அவருக்குக் குடையாக இருக்கிறார். அவர் அமர்ந்தால் ஆசனமாகிறார்.
அவர் நின்றால் பாதுகையாகிறார். சயனித்தால் படுக்கையாகிறார்.

(நாம் டேபிள்மேட்டைப் பலவிதமான முறைகளில் பயன்படுத்துவது போல, ஆதிசேஷனும் பலவிதமான வடிவங்களில்
திருமாலுக்குத் தொண்டு செய்கிறார்) அந்த வகையில் பெருமாளின் குடையாக ஆதிசேஷன் என்னும் பாம்பு இருப்பதால்,
உன் பானைக்குள் குடை இருக்கிறது என்று மறைமுகமாகப் பாம்பைக் குறிப்பிட்டுச் சொன்னேன்!” என்றார் பராசர பட்டர்.
திகைத்துப் போன ஆலவாயன், பட்டருக்குச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
அப்போது பட்டரின் சீடரான நஞ்ஜீயரிடம் மற்ற சீடர்கள், “நம் குரு எப்படி பானைக்குள் பாம்பு உள்ளதைச் சரியாகச் சொன்னார்?” என்று
கேட்டார்கள். அதற்கு நஞ்ஜீயர், “நம் குருவான பராசர பட்டர் சாட்சாத் திருவரங்கநாதனின் அவதாரம் ஆவார்.

அவர் எழுதிய விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையில் இதை அவரே சூசகமாகக் கூறியுள்ளார்
“பூயோ பட்ட பராசர இதி பணிதோ ஸ்ரீரங்கபர்த்து: ஸ்வயம்” என்று.
பரம்பொருளான திருமால் நம் கண்களுக்கு அப்பாற்பட்டவற்றையும் காணவல்லவர் ஆதலால் ‘கவி:’ என்றழைக்கப்படுகிறார்.
உபநிஷத் திருமாலை “அத்ருஷ்டோ த்ரஷ்டா அவனை யாராலும் காண முடியாது, ஆனால் அனைவரையும் அவன் காண்கிறான்” என்கிறது.
அந்தத் திருமாலின் அவதாரமானபடியால், நம் குருநாதரும் பிறரால் காணமுடியாதவற்றைக் காணவல்லவராகத் திகழ்கிறார்!” என்று கூறினார்.
இவ்வாறு நம் பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயத்தைக் காணவல்ல பரம்பொருளான திருமால், ‘கவி:’ எனப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 134வது திருநாமம்.
“கவயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு திவ்வியமான கண் பார்வையைத் திருமால் அருளுவார்.

——————

135. லோகாத்யக்ஷாய நமஹ (Lokaadhyakshaaya namaha)

பூமியைக் கடலுக்குள் ஒளித்து வைத்த ஹிரண்யாட்சனை வதம் செய்து, வராகப் பெருமாள் பூமியை மீட்டார்.
அப்போது பூமிதேவி, “சுவாமி! இந்தக் கடலில் இருந்து என்னைக் காத்தது ஒருபுறம் இருக்கட்டும்.
பிறவிப் பெருங்கடலில் தத்தளிக்கும் நம் குழந்தைகளைக் காக்க வழி சொல்லுங்கள்!” என்று கேட்டாள்.
அதற்கு வராகர், “என் பக்தர்கள் இளமைக் காலத்தில் நல்ல மலர்களைப் பூமாலையாகவும்,
எனது நாமங்களைப் பாமாலையாகவும் தொடுத்து எனக்குச் சமர்ப்பித்தால், முதுமைக் காலத்தில்
அவர்கள் என்னை மறந்தாலும், நான் அவர்களை மறவாமல் காத்துப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்பேன்!” என்றார்.
“நீங்கள் சொன்ன இந்த ரகசியத்தை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகப் பூமியில் நான் அவதரிக்க விரும்புகிறேன்! அனுமதி தாருங்கள்!” என்று
திருமாலிடம் கோரினாள், பூமிதேவி.
அதற்குத் திருமால், “பூமா! சற்றுப் பொறுத்திரு! உனக்கான சரியான தந்தையைத் தேர்ந்தெடுக்கிறேன்.
அதன்பின் அந்த நபருக்கு மகளாக நீ போய்ப் பிறக்கலாம்!” என்றார்.

சில யுகங்கள் கடந்தன. மதுரையை ஆண்ட வல்லபதேவன் எனும் பாண்டியனின் உள்ளத்தில் எழுந்த ஐயத்தைப் பெரியாழ்வார்
அவனது அரசவைக்கு வந்து தீர்த்தார். பெரியாழ்வாரைக் கொண்டாடும் விதமாக மன்னன் ஓர் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தான்.
யானையின் மேல் அவரை அமர வைத்து நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்து வந்தான்.
அச்சமயம் பெரியாழ்வாருக்குக் காட்சியளிப்பதற்காக ஸ்ரீதேவி பூதேவியுடன் கருட வாகனத்தில் அங்கே எழுந்தருளினார் திருமால்.
திருமாலைத் தரிசித்த பெரியாழ்வார், அவரிடம் தனக்கென ஒரு பிரார்த்தனையை முன்வைக்காமல்,
“எம்பெருமானே! உனது திருமேனி அழகெல்லாம் வெளிப்படும்படி நீ இப்படி வெளியே வந்து விட்டாயே!
பொல்லாத இந்த ஊரிலுள்ள யாருடைய கண் எச்சிலாவது உன்மீது பட்டால் நான் என்ன செய்வேன்?
நீயும், உன் வடிவழகும், ஸ்ரீதேவி பூதேவியும், உன் கரங்களிலுள்ள சக்கரமும் பல்லாண்டு பல்லாண்டு நன்றாக இருக்க வேண்டும்!”
எனத் திருமாலை வாழ்த்திப் பாசுரங்களைப் பாடினார்.

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைப்போர்ப் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே”

அப்போது பூமிதேவியிடம் திருமால், “நம்மீது இவருக்குள்ள பொங்கும் பரிவைப் பார்த்தாயா?
இப்படிப்பட்டவருக்குத் தான் நீ மகளாகச் சென்று பிறந்து, நான் உன்னிடம் சொன்ன ரகசியத்தை மக்களுக்கு வெளியிட வேண்டும்!” என்று கூறினார்.
பூமிதேவியும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வாருடைய நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் அவதரித்தாள்.
அவளைக் கண்டெடுத்த பெரியாழ்வார் ‘கோதை’ எனப் பெயர்சூட்டி அவளை வளர்த்து வந்தார்.
அந்தக் கோதை வராகர் தனக்குச் சொன்ன ரகசியத்தைப் பிறருக்கு உபதேசித்ததோடு மட்டும் நிற்கவில்லை.
நமக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து, தானும் இறைவனுக்குப் பூமாலை சூடிக் கொடுத்துப் பாமாலைப் பாடிக் கொடுத்து,
அவனுக்குத் தொண்டு செய்யும் முறையைக் காட்டினாள். அரங்கனே அவளை ‘ஆண்டாள்’ என்று அழைத்தான்.
அவளைக் கடிமணம் புரிந்தான் என்பது நாம் அறிந்த வரலாறு.

பூமிதேவிக்குத் தந்தையாவதற்குச் சரியானவர் பெரியாழ்வார் என்று தேர்ந்தெடுத்து அவருக்கு மகளாகப் பிறக்கும் படி
பூமிதேவியிடம் சொன்னது போல, ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு ஏற்ற நபரைத் தேர்ந்தெடுத்து அவர் மூலம்
அச்செயலை நிறைவேற்றுவதால் திருமால் ‘லோகாத்யக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார்.
‘லோக:’ என்றால் செயலைச் செய்வதற்கான அதிகாரி என்று பொருள்.
தகுதியான அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் திருமால் ‘லோகாத்யக்ஷ:’ எனப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 135வது திருநாமம்.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்.” என்ற குறளும் இங்கே நோக்கத்தக்கது.
“லோகாத்யக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைத்து விஷயங்களையும்
சரியாகத் தேர்வு செய்யும் திறனைத் திருமால் அருளுவார்.

———————-

136. ஸுராத்யக்ஷாய நமஹ (Suraadhyakshaaya namaha)

கேனோபநிஷத்தில் இடம்பெற்றுள்ள சரித்திரம் இது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடும் போர் மூண்டது.
அந்த யுத்தத்தின் முடிவில் தேவர்கள் வெற்றி பெற்றனர். ஒரு யாகம் செய்து தங்கள் வெற்றியைக் கொண்டாட வேண்டுமென்று
தேவர்கள் முடிவெடுத்தார்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். யாகம் நிறைவடைந்த பின், வெற்றி விழா ஒன்றையும் நடத்தினார்கள்.
அந்த விழாவின்போது, போரில் பெற்ற வெற்றிக்கு “நானே காரணம்!” “நானே காரணம்!” என
அக்னி, வாயு, வருணன் போன்ற ஒவ்வொரு தேவரும் பேசினார்கள்.
அப்போது அங்கே ஒரு யட்சன் வந்து தேவர்களைப் பார்த்துச் சிரித்தான். “யார் நீ?” என்று கேட்டான் தேவேந்திரன்.
“அருகில் வா, சொல்கிறேன்!” என்றான் அந்த யட்சன். தான் போகாமல், தனக்குப் பதிலாக அக்னி தேவனை
யட்சனிடம் அனுப்பினான் இந்திரன். “யார் நீ?” என அக்னியைப் பார்த்துக் கேட்டான் யட்சன். “நான் நெருப்புக்கு அதிபதி.

எதை வேண்டுமானாலும் எரிப்பேன்” என்றார் அக்னி தேவன். ஒரு புல்லை அக்னியின் முன் போட்ட யட்சன்,
“இதை உன்னால் எரிக்க முடியுமா?” என்று கேட்டான். “இதோ எரிக்கிறேன்!” என்று சொன்ன அக்னி எவ்வளவோ முயன்றும்,
அவரால் அந்தப் புல்லை எரிக்க முடியவில்லை. அவமானத்துடன் திரும்பினார்.
அடுத்தபடியாக வாயு தேவன் யட்சனிடம் சென்றார். “நீ யார்?” என்று கேட்டான் யட்சன்.
“நான் காற்றுக்கு அதிபதி. எதை வேண்டுமானாலும் ஊதித் தள்ளுவேன்!” என்றார் வாயு.
“இந்தப் புல்லைப் பறக்கச் செய்!” என்றான் யட்சன். வாயு முழுவேகத்தில் வந்த அதன் மேல் மோதிய போதும் புல் அசையவே இல்லை.
அவரும் அவமானத்துடன் திரும்பினார்.
இறுதியாக இந்திரன், “நானே இந்த யட்சனை நேரடியாகச் சந்திக்கிறேன்!” என்று சொல்லி யட்சனை நோக்கிச் சென்றான்.
உடனே யட்சன் மறைந்துவிட்டான். “பார்த்தீர்களா? என்னைக் கண்டு அஞ்சி அந்த யட்சன் ஓடி ஒளிந்து கொண்டான்!” என்று
ஆணவத்துடன் சொன்னான் இந்திரன்.

அப்போது வானில் சிம்ம வாகனத்தில் உமாதேவி தோன்றினாள். “மூடனே!” என்று இந்திரனை அழைத்த அவள்,
“பரம்பொருளான திருமால் தான் யட்சன் வடிவில் வந்தார். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் அந்தர்யாமியாக இருந்து
போர் புரிவதற்கான சக்தியை அளித்தார். உள்ளிருந்து அவர் தந்த சக்தியால் போரில் வென்ற நீங்கள்,
அவரை மறந்து விட்டு, நீங்கள் ஒவ்வொருவருமே வெற்றிக்குக் காரணம் எனக் கருதித் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தீர்கள்.
உங்களது கர்வத்தை அடக்குவதற்காகவே திருமால் யட்சன் வடிவில் வந்தார்.
அவரது அருள் இல்லாவிட்டால், அக்னியால் ஒரு புல்லைக் கூட எரிக்க முடியாது.
வாயுவால் ஒரு புல்லைக் கூட அசைக்க முடியாது என்பதை உணருங்கள்!” என்று கூறினாள்.
“என்னைக் கண்டதும் ஏன் அவர் அஞ்சி ஓடினார்?” என்று கேட்டான் இந்திரன். “அவர் அஞ்சி ஓடவில்லை.

தேவர்களுக்கெல்லாம் நீ தலைவன். உனது தொண்டர்களான மற்ற தேவர்களுக்கு முன் உன்னை அவமானப் படுத்தி விட்டால்
நாளை அவர்கள் உன்னைத் தலைவனாக மதிக்க மாட்டார்கள் அல்லவா?
அந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் அவர் உன்னை அவமானப் படுத்தாமல் விட்டுவிட்டார்!” என்று கூறினாள் உமா.
மேலும், “தேவர்களான உங்களுக்கு சுரர்கள் என்று பெயர். சுரர்களாகிய உங்கள் அனைவருக்கும் தலைவராகத்
திருமால் திகழ்வதால் ‘ஸுராத்யக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார்!” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
தேவர்களுக்கெல்லாம் தலைவனாகத் திருமாலைக் காட்டும் ‘ஸுராத்யக்ஷ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 136வது திருநாமம்.
“ஸுராத்யக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அலுவலகங்களில்
பதவி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவை தாமதமின்றிக் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

———————–

137. தர்மாத்யக்ஷாய நமஹ (Dharmaadhyakshaaya namaha)

மறைந்திருந்து ராமன் எய்த பாணம் வாலியைத் தாக்கியது. சொல்லொக்கும் சுடுசரத்தின் தாக்கத்தால் சுருண்டு விழுந்தான் வாலி.
அதில் ‘ராம’ என்ற நாமத்தைக் கண்டான். ராமனும் மெல்ல வந்து தன் எதிரே நிற்பதைக் கண்டான் வாலி.
ராமனைப் பார்த்து, “நீ இப்படி ஒரு செயலைச் செய்யலாமா? ரகு குலத்துக்கு ஏற்ற செயலா இது?
மறைந்திருந்து என்னைத் தாக்கி விட்டாயே! எவனோ ஒருவன் உன் மனைவியை அபகரித்ததற்கு என்னை ஏன் பலியாக்கினாய்?
உன் மனைவியை மீட்க வேண்டுமென்றால் அதற்கு ஏன் சுக்ரீவனிடம் சென்றாய்?
என்னிடம் வந்திருந்தால் நானே ராவணனை மாய்த்து உன் மனைவியை மீட்டுத் தந்திருப்பேனே!
மனைவியைப் பறிகொடுத்ததால் புத்தி பேதலித்துப் போய் செய்வதறியாது எதையோ செய்து விட்டாய்!” என்றெல்லாம்
பலவாறு பேசினான் வாலி. அப்போது லட்சுமணன் குறுக்கிட்டு வாலிக்குப் பதில் சொன்னான்.
அதைக் கம்பனின் வரிகளைக் கொண்டு அனுபவிப்போம்.

முன்புநின் தம்பி வந்து சரண்புக ‘’முறையிலோயைத் தென்புலத்து உய்ப்பென்’’ என்று
செப்பினன் செருவில் நீயும் அன்பினை உயிருக் காகி ‘’அடைக்கலம் யானும்’’ என்றி
என்பது கருதி அண்ணல்,
மறைந்து நின்றெய்தது என்றான். “வாலி! என் அண்ணன் ஏன் உன்னை மறைந்திருந்து தாக்கினார் தெரியுமா?
முன்பு மாயாவி என்ற அரக்கனோடு நீ போர் புரிகையில் இருவரும் ஒரு குகைக்குள் சென்று விட்டீர்கள்.
நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளிவரவில்லை. பல நாட்கள் கழித்து மாயாவியின் ரத்தம் மட்டும் குகையின் வாயில் வழியே ஓடி வந்தது.
அது உன்னுடைய ரத்தம் என அஞ்சிய சுக்ரீவன், மாயாவி உன்னைக் கொன்று விட்டதாகத் தவறாகப் புரிந்து கொண்டான்.
மாயாவியால் மற்ற வானரர்களுக்கும் ஆபத்து வந்துவிடப் போகிறதே என்றெண்ணி, குகையின் வாயிலை
ஒரு பாறையால் மூடிவிட்டு நாட்டுக்கு வந்தான். உன் மரணத்தை எண்ணி மிகவும் கலங்கினான்.
ஆனால் மற்ற வானரர்கள் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்யத் திட்டமிட்டார்கள். அச்சமயம் குகையிலிருந்து வெளிவந்த நீ,
சுக்ரீவன் உன் பதவியை அபகரிக்க எண்ணுவதாகக் கருதி அவனைக் கொல்லப் போனாய்.
சுக்ரீவன் உன் கால்களில் விழுந்து சரணாகதி செய்தான். அப்போது அவன் செய்த சரணாகதியை நீ ஏற்றாயா?
இல்லை! சரணடைந்த சுக்ரீவனைக் கொல்லப் பார்த்தாய்!

சரணம் என்று சொன்னவனை ஏற்காதவனான உனக்கு என்றுமே அபயம் அளிக்கக்கூடாது என ராமன் முடிவெடுத்தான்.
ஒருவேளை ராமன் உன் முன்னே வந்து நின்றிருந்தால், நீ ராமனிடம் சரணாகதி செய்து பிழைத்துக் கொள்ளப் பார்ப்பாய்.
நீயோ உன்னிடம் சரணாகதி செய்தவனை ஏற்றுக்கொள்ளாதவன். அப்படிப்பட்ட நீ செய்யும் சரணாகதியை,
ராமன் எந்நாளும் ஏற்கமாட்டான்! இறைவன் தன் மீது கருணை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வொரு மனிதனும்,
சக மனிதர்களிடம் தான் கருணையோடு நடந்து கொள்ள வேண்டாமா? சகமனிதனிடம் கருணை காட்டாத ஒருவன்,
இறைவன் தன்மீது கருணை காட்ட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
அதனால் தான் சரணாகதி செய்யும் வாய்ப்பைக் கூட உனக்கு அளிக்காமல் மறைந்திருந்து உன் மேல் பாணத்தை எய்தான்!” என்றான் லட்சுமணன்.

இவ்வாறு மனிதர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும், அந்தச் செயலிலுள்ள தர்மம் அதர்மம் அனைத்தையும் திருமால் நன்கு கவனித்து வருகிறார்.
அந்தந்தச் செயல்களுக்கேற்ற படி அவர்களுக்குப் பலனையும் தருகிறார்.
‘தர்ம:’ என்பது நாம் செய்யக் கூடிய செயல்களைக் குறிக்கிறது.
நமது அனைத்துச் செயல்களையும் கவனித்து வந்து அவற்றுக்கேற்றபடி பலனளிக்கும் திருமால் ‘தர்மாத்யக்ஷ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 137வது திருநாமம்.
“தர்மாத்யக்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள், என்றும் தர்மத்தின் பாதையிலிருந்து
விலகாமல் இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

——————

138. க்ருதாக்ருதயே நமஹ (Kruthaakruthaye namaha)

கோவிந்தசாமி என்பவர் திருப்பதியில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பெரிய மன்னராகி ராஜ போகங்களை அனுபவிக்க
வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருமுறை கிருஷ்ண லீலை சொற்பொழிவு ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார்.
அங்கே சொற்பொழிவாளர் ஐந்து லட்சம் கோபிகைகளோடு கண்ணன் நடனமாடிய ராச லீலையைப் பற்றி விவரித்தார்.
அதை மேலோட்டமாகக் கேட்ட கோவிந்தசாமி, அது ஏதோ காமக் கேளிக்கை எனக் கருதினார்.
இயல்பாகவே உலகியல் இன்பங்களை நோக்கிச் செல்லக் கூடியதான அவரது மனம், அந்த ராச லீலையென்னும்
கேளிக்கையைக் காண வேண்டுமென ஏங்கியது. அந்த ஏக்கம் தவிப்பாக மாறியது.
அவ்வூரில் இருந்த ஒரு ஞானியைச் சந்தித்துத் தனது ஏக்கத்தைப் பற்றித் தெரிவித்தார் கோவிந்தசாமி.
அதற்கு அந்த ஞானி, “ராச லீலை என்பது நீ நினைப்பது போல உடல் ரீதியிலான காமம் அல்ல.
வைகுண்டத்தை அடைந்த ஜீவாத்மாக்கள், அங்கே பரமாத்மாவோடு உறவாடுவதைத் தான் இந்த
ராச லீலை மூலமாகக் கண்ணபிரான் உருவகப் படுத்தி நமக்குக் காட்டியுள்ளான்.

அது ஜீவாத்மா பரமாத்மாவுக்கு இடையே உள்ள பரிமாற்றம். எனவே அதைக் காமக் கேளிக்கையாக எண்ணுவதை விட்டு,
நீ பரமாத்மாவை அடையும் நோக்கில் அவரது திருவடிகளில் சரணாகதி செய்!” என்று உபதேசித்தார்.
ஆனாலும் கோவிந்தசாமி மனம் தளரவில்லை. அது காமக் கேளிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது
அந்த ஞானி சொல்வது போல் ஜீவாத்மாபரமாத்மா இடையிலான பரிமாற்றமாக இருந்தாலும் சரி,
அந்த ராச லீலையைக் கண்டே தீர வேண்டுமென்ற நோக்கில் கடும் தவம் புரிந்தார்.
அவர் முன் தோன்றிய கண்ணன், “குழந்தாய்! கோவிந்தசாமி! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
இறைவன் நம்முன் தோன்றினால், அவரிடம் முக்தியைத் தவிர வேறெதையும் வேண்டல் ஆகாது என்று பெரியோர்கள்
கூறக் கேட்டிருந்தார் கோவிந்தசாமி. சடக்கென்று, “எனக்கு மோட்சம் வேண்டும்!” என்று கேட்டார்.
“அப்படியானால் ராச லீலையைக் காண்பதில் உனக்கு விருப்பமில்லையா?” என்று கேட்டான் கண்ணன்.

“அதிலும் ஆசை தான். ஆனால் முக்தியடைய வேண்டுமென்ற ஆசையும் உன்னைத் தரிசித்தவுடன் வந்து விட்டது!” என்றார் கோவிந்தசாமி.
புன்னகைத்தபடியே, “முதலில் ராச லீலையை முழுவதுமாக உனக்குக் காட்டுகிறேன். அதை நீ கண்டு களித்தபின்
உனக்கு முக்தியும் அளிக்கிறேன்!” என்று சொன்ன கண்ணன்,
பிருந்தாவனத்தில் நடந்த ராசக் கிரீடையை அப்படியே மீண்டும் ஒருமுறை கோவிந்தசாமிக்காக நடத்திக் காட்டினான்.
“இப்போது நான் முக்தி பெறலாமா?” என்று கேட்டார் கோவிந்தசாமி.
அதற்குக் கண்ணன், “உன் மனதில் இன்னும் உலகியல் ஆசைகள் பல உள்ளன. அதனால் நீ அடுத்த பிறவியில்
மன்னர் குலத்தில் பிறந்து சுகபோகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு என் திருவடிகளை வந்தடைவாய்!” என்று
கூறி விட்டு மறைந்தான். இச்சரித்திரத்தைத் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்,

“மாக மாநிலம் முழுவதும் வந்து இறைஞ்சும் மலரடி கண்ட மாமறையாளன் தோகை மாமயில் அன்னவர் இன்பம்
துற்றிலாமையிலத்த இங்கு ஒழித்து போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!” என்று பாடியுள்ளார்.
கோவிந்தசாமியும் மன்னனாய் வாழ்ந்து உலகியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு
அதன்பின் முக்தியும் அடைந்தார் என்பது வரலாறு.
இவ்வாறு தன் அடியார்களுக்கு இகபர சுகங்கள் இரண்டையும் வழங்குபவர் திருமால்.
‘க்ருத:’ என்பது இம்மைக்கான பலன்களைக் குறிக்கும்.
‘அக்ருத:’ என்பது மறுமைக்கான பலன்களைக் குறிக்கும்.
இம்மை மறுமை (க்ருத+அக்ருத=க்ருதாக்ருத:) இரண்டு பலன்களையும் வழங்குவதால் ‘க்ருதாக்ருத:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 138வது திருநாமம்.
“க்ருதாக்ருதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு இம்மை, மறுமை இரண்டுக்குமான
பலன்களையும் குறைவின்றித் திருமால் அருளுவார்.

———-

139. சதுராத்மனே நமஹ (Chathuraathmane namaha)

திருமலை யப்பனைப் பார்த்துக் கருடன், “எம்பெருமானே! இங்கே ஏழு மலைகளுள் ஆதிசேஷன் பெயரில் சேஷாத்ரி என்றொரு மலையும்,
எனது பெயரில் கருடாத்ரி என்றொரு மலையும் உள்ளன. ஆனால் ‘கருடாத்ரிநாதன்’ என்று உன்னை யாரும் அழைப்பதில்லை.
‘சேஷாத்ரிநாதன்’ என்றுதான் எல்லோரும் உன்னை அழைக்கிறார்கள்.
உனது பிரம்மோற்சவத்தில் கூட ஒருமுறை தான் கருட வாகனத்தில் நீ எழுந்தருளுகிறாய்.
சேஷ வாகனத்தில் மட்டும் இரண்டு முறை நீ எழுந்தருளுகிறாய்.
ஆதிசேஷனுக்கு நிகரான ஸ்தானத்தை எனக்கும் நீ வழங்க வேண்டும்!” என்று வேண்டினார்.

“உன் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்!” என்றார் மலையப்பன். “இன்னொரு கோரிக்கையும் உள்ளது!” என்றார் கருடன்.
“அதென்ன?” என்று கேட்டார் மலையப்பன். “ஆதிசேஷனாவது பரவாயில்லை!
ஆதி காலத்திலிருந்து உனக்கு சேஷனாக (தொண்டனாக) இருந்து பணிவிடை செய்கிறார்.
சிறிய திருவடியான அனுமான் ராமாயணத்தில் தானே உன்னோடு வந்து சேர்ந்து கொண்டார்.
அவருக்கென்று எத்தனை தனி சந்நதிகள், அர்ச்சனைகள், மாலைகள், பூஜைகள்?
ஆனால் பெரிய திருவடியான எனக்கெனத் தனியாக ஒரு சந்நதி கூட இல்லையே!” என்றார்.

“இதையும் பரிசீலிக்கிறேன்!” என்றார் திருமால். சிலகாலம் கழிந்தது. வைகுண்டத்தில் திடீரென மகாலட்சுமியைக் காணவில்லை.
கருடனை அழைத்த திருமால், மகாலட்சுமி எங்கு சென்றிருக்கிறாள் என்று தேடச் சென்னார்.
பல இடங்களில் தேடிய கருடன், திருநறையூர் எனப்படும் நாச்சியார்கோயிலில் மேதாவி என்னும் முனிவரின் மகளாக
வஞ்ஜுளவல்லி என்ற பெயருடன் மகாலட்சுமி அவதரித்திருப்பதைக் கண்டறிந்து திருமாலிடம் தெரிவித்தார்.

அவளை மணந்து கொள்ள விரும்பிய திருமால், வாசுதேவன், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், புருஷோத்தமன் என
ஐந்து வடிவங்களை எடுத்துக் கொண்டு நாச்சியார் கோயிலில் உள்ள மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தார்.
மேதாவியிடம், “நாங்கள் ஐவரும் வேதம் கற்கும் பிரம்மச்சாரிகள். எங்களுக்கு இங்கே உணவு கிடைக்குமா?” என்று கேட்டார்.
மேதாவியும் தன் மகள் வஞ்ஜுளவல்லியிடம் வந்தவர்களுக்கு உணவு பரிமாறச் சொன்னார்.
ஐவரும் உண்டபின் கை கழுவுவதற்காக வஞ்ஜுளவல்லி ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தாள்.

முதலில் வந்த வாசுதேவன், கையை அலம்பியவுடன், வஞ்ஜுளவல்லியின் கையைப் பிடித்து இழுத்தார்.
“அப்பா!” என்று அலறினாள் வஞ்ஜுளவல்லி. மேதாவி ரிஷி கோபத்துடன் ஓடிவந்தார்.
அப்போது வாசுதேவன் தனக்கே உரிய அடையாளங்களாக இருக்கும் சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்சஜன்யச் சங்கையும் எடுத்து
மேதாவியிடம் காட்டவே, வந்திருப்பவர் திருமால் என உணர்ந்து அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைத்தார்.

இன்றும் நாச்சியார்கோவிலில் சங்கு சக்கரங்களை எடுத்து அடையாளமாகக் காட்டியபடி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
அதன்பின் கருடனை அழைத்த திருமால், “திருமலையில் நீ என்னென்ன கோரிக்கைகள் வைத்தாயோ அவை அனைத்தையும்
இங்கே நிறைவேற்றி வைக்கிறேன். அனுமனுக்குத் தனியாகச் சந்நதி இருப்பது போல், இவ்வூரில் உனக்கெனத் தனிச் சந்நதி தருகிறேன்.

திருமலையில் கருடாத்ரி என்ற மலை இருந்தும், யாரும் என்னைக் கருடாத்ரிநாதன் என்றழைப்பதில்லை என்று வருந்தினாய் அல்லவா?
அந்தக் குறை தீர, இவ்வூரில் நீ மலை போன்ற கல்கருடனாகக் கல்லால் ஆன திருமேனியுடன் விளங்குவாய்
என்னை விடப் புகழ் பெற்றவனாக இவ்வூரில் நீ விளங்குவாய்!
திருமலையில் இரண்டு முறை சேஷவாகனம் இருப்பது போல, இவ்வூரில் மார்கழியில் ஒருமுறை, பங்குனியில் ஒருமுறை என
வருடத்தில் இரண்டு முறை கருட வாகனத்தில் நான் காட்சி தருவேன்!”என்று கூறினார்.

இன்றும் நாச்சியார்கோயிலில் தனிச்சந்நதியோடு கற்ற கருடன், கற்கின்ற கருடன், கற்க போகின்ற கருடன் என
முக்காலத்திலும் கல்வி பயின்று கல்விவரம் தரும் ‘கல்-கருடனாகக்’ கருடன் காட்சி தருகிறார்.
அவருக்கு அருள்புரியவந்த திருமால் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், சங்கர்ஷணன் என
ஐந்து வடிவங்களுடன் காட்சி தருகிறார்.

இது போல் தன் அடியார்களுக்கு அருள்புரிவதற்காகப் பற்பல வடிவங்கள் எடுக்கிறார் திருமால்.
அந்த வகையில் வைகுண்டத்துக்கு வந்து திருமாலைத் தரிசிக்க முடியாத தேவர்களுக்குக் காட்சியளித்து அருள்புரிவதற்காகத்
திருப்பாற்கடலில் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன் என நான்கு வடிவங்களோடு எழுந்தருளியுள்ளார்.
பாற்கடலில் இத்தகைய நான்கு வடிவங்கள் கொண்டு காட்சி தருவதால் ‘சதுராத்மா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 139-வது திருநாமம்.
“சதுராத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றபடி திருமால் அருள் புரிவார்.

—————-

140. சதுர்வ்யூஹாய நமஹ (Chathurvyoohaaya namaha)

நாச்சியார்கோயிலில் வாசுதேவன், பிரத்யும்னன், அனிருத்தன், ஸங்கர்ஷணன், புருஷோத்தமன் என ஐந்து வடிவங்களுடன்
திருமால் விளங்குவதைப் பற்றி “சதுராத்மனே நமஹ” என்ற திருநாம விளக்கத்தில் அனுபவித்தோம்.
நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குத் தினமும் ஆராதனை செய்யும் வைகானச ஆகம விசாரதர்
ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சார்யார் சுவாமி, அந்த ஐந்து வடிவங்களைப் பற்றி ஆகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட
ஒரு அழகான விளக்கத்தைக் கூறினார். அதை வாசகர்களுடன் பகிர்கிறேன்.
ஜீவாத்மாக்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவர்கள்.

ஆனால் ஐம்புலன்களாகிய ஐந்து திருடர்கள், அந்த ஜீவாத்மாவின் சிந்தனையை இறைவன்பால் செல்ல விடாமல் தடுக்கின்றன.
கண்டு, கேட்டு, உற்று, முகர்ந்து, உண்டு உழலும் சிற்றின்பங்களை அனுபவிக்க வைக்கின்றன.
அதனால், இறைவனைக் காண வேண்டிய கண், உலகிலுள்ள மற்ற பொருட்களைப் பார்க்கின்றது.
அவன் புகழைக் கேட்க வேண்டிய காது, இதர பேச்சுக்களைக் கேட்கின்றது.
அவன் நாமங்களைப் பாட வேண்டிய நா, தேவையற்ற பேச்சுக்களைப் பேசுகிறது.
அவனது துளசி வாசனையை நுகர வேண்டிய மூக்கு, வேறு வாசனைகளை நாடுகிறது.
அவனை அணைக்க வேண்டிய உடல், சாதாரண மாமிச உடலை விரும்புகிறது.

ஆனால் இத்தகைய உலகியல் சுகங்களில் உழலும் ஒருவன், இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டுமென எண்ணினானாகில்,
அவன் மேல் இறைவன் கருணை கொள்கிறார். நம் இதயமாகிய நிலத்தில் பக்தி என்னும் செடியை முளைக்கச் செய்கிறார்.
அந்தச் செடியின் நான்கு இலைகள் போல், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், புருஷோத்தமன் என நான்கு வடிவங்கள்
எடுத்து நம் இதயத்தில் வீற்றிருக்கிறார். அந்தச் செடியின் தண்டாக வாசுதேவனாகிய மூல மூர்த்தி எழுந்தருளுகிறார்.

பக்தியின் முதல் நிலையில், உலகியல் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டே பக்தன் நான்கு இலைகளைப் போல
அவன் இதயத்தில் நான்கு வடிவங்களுடன் உறையும் இறைவனைத் தியானிக்கிறான்.
இரண்டாம் நிலையில், இறைவனின் அருளால் பக்தி முற்றவே, தன் புலன்களை மற்ற விஷயங்களில் செல்லாமல்
கட்டுப்படுத்தி பக்தியில் ஈடுபடுகிறான்.
அவன் புலன்கள் மற்ற விஷயங்களில் ஈடுபடாவிட்டாலும், மனம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை.

மூன்றாம் நிலையில் மனமும் கட்டுப்பாட்டுக்குள் வந்து சலனமற்ற நிலையை அடைகிறது.
மேலும் அன்போடு இறைவனின் நால்வகை வடிவங்களை அந்த பக்தன் தியானிக்கிறான்.
நான்காம் நிலையில், அதுவரை செடியாக இருந்த பக்தி, மரமாக வளர்ந்து முழுமை அடைகிறது.
அவனது இதயம் முழுவதும் இறைவன் ஆக்கிரமித்துக் கொள்கிறான்.
அதன்பின் அவனது புலன்களோ மனமோ மற்ற விஷயங்களின் பால் செல்லாமல், இறைவனிடமே முழுமையாக ஈடுபடுகின்றன.

இவ்வாறு வாசுதேவனாகிய திருமால், பிரத்யும்னன், அநிருத்தன், ஸங்கர்ஷணன், புருஷோத்தமன் என
நான்கு வடிவங்கள் எடுத்துக் கொண்டு பக்தனின் இதயத்தில் குடிகொண்டு, அவனுடைய புலன்களை மற்ற விஷயங்களில் செல்லாமல்
இழுத்துத் தன்பால் ஈடுபடச் செய்கிறார். அதை விளக்கவே நாச்சியார்கோவிலில் ஐந்து வடிவங்களோடு பெருமாள் காட்சி தருகிறார்.

இவ்வாறு பெருமாளின் ஐந்து வடிவங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவத்தை அவர் விளக்கினார்.
யுத்தத்தில் சேனைகளை அமைக்கும் விதத்தை வியூகம் என்று சொல்வார்கள். அதுபோல், நம் புலன்களிலிருந்து
நம்மைக் காப்பதற்காக நான்கு வடிவங்களோடு வியூகம் அமைத்து, நம் புலன்களை வென்று,
நம்மை பக்தியில் முன்னேறச் செய்வதால் ‘சதுர்வ்யூஹ:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 140-வது திருநாமம்.

“சதுர்வ்யூஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை நாற்புறங்களிலிலிருந்தும்
எந்த ஆபத்தும் அண்டாதபடி வியூகம் அமைத்துத் திருமால் காத்தருள்வார்.

——————-

141. சதுர்தம்ஷ்ட்ராய நமஹ (Chathurdhamshtraaya namaha)

முந்தைய யுகத்தில், பாண்டிய நாட்டில் ‘விஷ்ணுபுரம்’ என்ற ஊரில் ‘மல்லிகைப் பல்லழகர்’ என்ற பெயருடன்
திருமால் கோயில் கொண்டிருந்தாராம். அவரது பற்கள் மல்லிகைப்பூ போல் அழகாகவும் மென்மையாகவும் இருந்தமையால் இப்பெயர் உண்டானது.
விஷ்ணுசித்த பட்டர் என்னும் அர்ச்சகர் அந்தப் பெருமாளுக்குப் பேரன்போடு தினசரி பூஜைகளைச் செய்து வந்தார்.
ஊரார் பெருமாளுக்குப் பழங்கள் சமர்ப்பித்தால், அவற்றின் தோலை எல்லாம் நன்றாக உறித்துவிட்டு
உள்ளிருக்கும் பழத்தை மட்டும் நிவேதனம் செய்வார் அந்த அர்ச்சகர்.
“பெருமாள் மல்லிகைப் பூ போல் மென்மையான பற்களை உடையவராக இருப்பதால், கடுமையான பொருட்களை
அவரால் கடிக்க முடியாது!” என்று பக்தியுடன் கூறுவார் அந்த அர்ச்சகர்.
கொட்டைப் பாக்கும் வெற்றிலையும் சமர்ப்பித்தால் கூட, அவற்றை அரைத்துப் பொடியாக்கித் தான் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார்.

அவ்வூரிலுள்ள விவசாயிகள், தை மாதம் அறுவடை ஆனவுடன், கரும்புக் கழிகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதற்காக எடுத்து வந்தார்கள்.
அப்போது ஊரார் சிலர் அவர்களிடம், “நம் ஊர் அர்ச்சகர் கனிகளையே தோலை உறித்தபின் தான் பெருமாளுக்கு நிவேதனம் செய்வார்.
கரும்புகளை நிவேதனம் செய்யவே மாட்டார். இத்தனைக் கரும்புகளை உண்டால் பெருமாளுக்குப் பல் வலிக்கும் என்று கூறுவார்.
உங்களைக் கோயிலுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்!” என்றார்கள்.

ஆனாலும் பெருமாள் மேல் அசைக்க முடியாத பக்தி கொண்ட விவசாயிகள், “நாங்கள் கொடுப்பதைப் பெருமாள் நிச்சயமாக ஏற்பார்!” என்று
சொல்லி விட்டுக் கரும்புகளுடன் கோயிலை நோக்கிச் சென்றார்கள். அப்போது விஷ்ணுசித்த பட்டர் கோயிலில் இல்லை.
திருப்பல் பட்டர் என்ற வேறொரு அர்ச்சகர் இருந்தார். கரும்புக் கழிகளுடன் வந்த விவசாயிகள்,
“சுவாமி! தாங்கள் புதிய அர்ச்சகரா? எப்போதும் இங்கே பூஜை செய்யும் அர்ச்சகர் இன்று வரவில்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்குத் திருப்பல் பட்டர், “அவர் இன்று சங்கராந்தி தர்ப்பணம் செய்வதற்காகச் சென்றுள்ளார்.
அவருக்குப் பதிலாக நான் இன்று பூஜை செய்கிறேன்!” என்றார்.

விவசாயிகள் கொண்டு வந்த அனைத்துக் கரும்புகளையும் வாங்கிப் பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் திருப்பல் பட்டர்.
விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கோயிலை விட்டு வெளியே வரும் வேளையில் விஷ்ணுசித்த பட்டர் கோயிலுக்குள் நுழைந்தார்.
விவசாயிகள் கைகளில் கரும்புக் கழிகளைப் பார்த்து விட்டு, “இவற்றை ஏன் கோயிலுக்குக் கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.
“இந்த வருடம் நாங்கள் அறுவடை செய்த கரும்புகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வந்தோம்.
புதிய அர்ச்சகர் இவற்றைப் பெருமாளுக்கு நிவேதனம் செய்தார். மிக்க மகிழ்ச்சி!” என்றார்கள் விவசாயிகள்.
வியந்து போன விஷ்ணுசித்த பட்டர், “யாரந்தப் புதிய அர்ச்சகர்? நான் கோயிலைப் பூட்டி விட்டுத் தானே தர்ப்பணம் செய்யப் போனேன்?
எனக்குத் தெரியாமல் கோயிலுக்குள் நுழைந்த புதிய அர்ச்சகர் யார்?” என்று கேட்டுக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தார்.

திருப்பல் பட்டரைப் பார்த்து, “யாரப்பா நீ? கோயிலுக்குள் எப்படி நுழைந்தாய்?” என்று கேட்டார் விஷ்ணுசித்த பட்டர்.
திருப்பல் பட்டரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. ஒரு விவசாயி கையிலிருந்த கரும்பைப் பிடுங்கி,
“இந்தக் கரும்பைக் கடித்தால் பெருமாளுக்கு வலிக்காதா?” என்று கேட்டார் விஷ்ணுசித்த பட்டர்.
அப்போது அந்தக் கரும்பில் நான்கு பற்கள் பதிந்திருப்பதை அவர் கண்டார். “சுவாமி! இத்தகைய பக்தர்கள் சமர்ப்பிக்கும்
கரும்பை உண்பதற்காகவே தனது மேல் பல் வரிசையில் நான்கு வலிமையான பற்களைக் கொண்டிருக்கிறாரே பெருமாள்!
அது உங்களுக்குத் தெரியாதா? ராமாயணத்தில் கூட “சதுர்தச ஸம த்வந்த்வ: சதுர்தம்ஷ்ட்ர: சதுர்கதி:” என்று
இப்பற்களைப் பற்றி வால்மீகி கூறியுள்ளாரே!” என்று சொன்ன திருப்பல் பட்டர், கருவறைக்குள் சென்று மறைந்து விட்டார்.

விவசாயிகள் பெருமாள் மேல் கொண்ட பக்தியைத் தனக்கு உணர்த்துவதற்காகப் பெருமாளே திருப்பல் பட்டராக வந்ததையும்,
தான் உண்டதற்கு அடையாளமாகத் தனது நான்கு பற்களையும் ஒவ்வொரு கரும்பிலும் பெருமாள் பதித்திருப்பதையும் உணர்ந்தார் விஷ்ணுசித்த பட்டர்.
இவ்வாறு மெய்யடியார்கள் பக்தியோடு சமர்ப்பிக்கும் கடினமான பொருட்களையும் உண்டு அவர்களை மகிழ்விப்பதற்காகவே
நான்கு சிறப்புப் பற்களோடு விளங்கும் திருமால் ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்றழைக்கப்படுகிறார்.
‘சது:’ என்றால் நான்கு, ‘தம்ஷ்ட்ரம்’ என்றால் பல். ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 141-வது திருநாமம்.
“சதுர்தம்ஷ்ட்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கி
ஆரோக்கியமான, அழகான பற்களோடு விளங்கத் திருமால் அருள்புரிவார்.

——————–

142. சதுர்புஜாய நமஹ (Chathurbhujaaya namaha)

ரிஷ்யமூக மலையிலுள்ள சுக்ரீவனின் உதவியை நாடி, ராமனும் லட்சுமணனும் அம்மலை அடிவாரத்தை அடைந்தார்கள்.
அப்போது மலை உச்சியில் இருந்து அவர்களைக் கண்ட சுக்ரீவன், ஜாம்பவானை அழைத்து,
“அதோ இருவர் வருகிறார்கள் பாருங்களேன்! மரவுரி தரித்திருக்கிறார்கள். ஆனால் துறவிகள் போலத் தெரியவில்லை.
கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியிருக்கிறார்கள். ஆனால் அரசர்களுக்குரிய அணிகலன்களை அணிந்திருக்கவில்லை.
வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இவர்கள் யாராக இருக்கக்கூடும்?” என்று கேட்டான்.
“நம் மந்திரியான அனுமான் தான் பேச்சில் கெட்டிக்காரன்.
அவனை அனுப்பி இவர்கள் யாரென்று அறிந்து வரச் சொல்வோம்!” என்றார் ஜாம்பவான்.
அவ்வாறே சுக்ரீவனும் அனுமானை அனுப்ப, ஒரு துறவி வேடத்தில் ராம லட்சுமணர்கள் முன் சென்றார் அனுமான்.
ராமபிரானைப் பார்த்து ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்-

‘ஆயதாச்ச ஸுவ்ரதாச்ச பாஹவ பரிகோபமா:
ஸர்வாபரணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா:’

இதன் பொருள்- ‘‘இரும்புக் கம்பிகள் போல் வலிமையாக இருக்கும் உங்களது தோள்களில் ஆபரணங்கள் அணிந்தால்
மிகவும் அழகாக இருக்குமே! ஆயினும் ஏன், நீங்கள் ஆபரணங்கள் அணியாமல் வந்திருக்கிறீர்கள்?” என்று ராமனிடம் அனுமன் கேட்கிறார்.
ஆனால் இவ்விடத்தில் வடமொழி இலக்கணப் பிழை ஒன்று உள்ளது! நவ வியாகரண பண்டிதரே வியாகரணப் பிழை செய்வாரா?
வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை மூன்றும் உண்டு. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒருமை, பன்மை மட்டுமே.
இப்போது ராமனின் தோள்களைப் பற்றி வடமொழியில் கூறும் அனுமான் இருமையில் தானே சொல்ல வேண்டும்
அப்படியாயின் இந்த ஸ்லோகம்,

‘ஆயதாச்ச ஸுவ்ரதாச்ச பாஹூ தே பரிகோபமௌ
ஸர்வாபரணபூஷார்ஹௌ கிமர்த்தம் ந விபூஷிதௌ’
என்று இருமையில் இருக்க வேண்டும். ஆனால் ஸ்லோகத்தை,
‘ஆயதாச்ச ஸுவ்ரதாச்ச பாஹவ பரிகோபமா:
ஸர்வாபரணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா:’–என்று பன்மையில் அமைத்து விட்டார் அனுமான்.

ஏன் இப்படிப்பட்ட ஒரு இலக்கணப் பிழையைச் செய்தார்? அவர் பிழை செய்யவில்லை.
அவர் சொன்னது முழுக்க முழுக்கச் சரியே! சாதாரண மனிதர்களுக்கு இரண்டு கைகளையுடைய சாதாரண மனிதனாகக் காட்சி தரும் ராமன்,
உண்மையான பக்தர்களுக்கு மட்டும் நான்கு திருத்தோள்களோடும் சங்கு சக்கரங்களோடும் காட்சியளிப்பான் என வால்மீகி கூறியுள்ளார்.
ராவண வதம் ஆனபின் மண்டோதரி, ராமனைத் துதிக்கையில்,

‘தமஸ: பரமோ தாதா சங்கசக்ரகதாதர:’

என நான்கு திருத்தோள்களோடும் சங்கு, சக்கரங்களோடும் கூடியவனாக ராமனைக் குறிப்பிடுகிறாள்.
அந்த வகையில் அனுமானுக்கும், ராமபிரான் நான்கு திருத்தோள்களோடு காட்சியளித்துள்ளார்.
அதனால் தான் இருமையில் அவரது தோள்களைக் குறிப்பிடாமல் பன்மையில் குறிப்பிட்டு இந்த ஸ்லோகத்தை அமைத்துள்ளார் அனுமான்.
எனவே அனுமானின் ஸ்லோகம் மிகச்சரி.

நான்கு தோள்களோடு கூடியிருப்பதை மஹாபுருஷ லக்ஷணம் என்று சொல்வார்கள்.
தான் ‘மஹாபுருஷன்’ என்பதற்கு அடையாளமாகத் திருமால் நான்கு திருத்தோள்களுடன் விளங்குகிறார்.
மஹாபுருஷன் என்பதன் தமிழாக்கமே பெருமாள் என்பது. மஹா என்றால் பெரிய என்றும் புருஷன் என்றால் ஆள்.
மஹாபுருஷன் (பெரிய ஆள்) என்பதையே பெருமாள் என்கிறோம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகைப் புருஷார்த்தங்களையும் அருளவல்லவர் திருமால் என்பதையும்
அவரது நான்கு திருத்தோள்கள் காட்டுகின்றன. இத்தகைய நான்கு தோள்களுடன் கூடியவராகையால், ‘சதுர்புஜ’ எனப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 142-வது திருநாமம்.
“சதுர்புஜாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்தும்
குறைவின்றிக் கிடைக்கும் படித் திருமால் அருள்புரிவார்.

———————

143. ப்ராஜிஷ்ணவே நமஹ (Bhraajishnave namaha)

1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது.
ஒருபுறம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும், அவற்றுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்
போன்ற நாடுகளும் அணிவகுத்திருந்தன. ஹிட்லர் தலைமையிலான ஜெர்மானியப் படைகளும், ஜப்பானியப் படைகளும்
அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் கடும் நெருக்கடி தந்து கொண்டிருந்தன.
போரில் வெல்வதற்கு அணு ஆயுதத்தைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது அமெரிக்கா.

1941-ம் ஆண்டு, ஓப்பன்ஹைமர் என்ற புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியை அழைத்து,
அணுகுண்டு ஆராய்ச்சி நடத்தச் சொன்னது அமெரிக்க அரசாங்கம். அவரும் தம்முடைய சகாக்களுடன் இணைந்து
நான்கு ஆண்டுகளுக்கும் மேல் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி, 1945-ம் ஆண்டு அணுகுண்டு தயாரிப்பதற்கான வரைவை உருவாக்கினார்.
அந்த வரைவின் அடிப்படையில் ‘லிட்டில் பாய்’, ‘ஃபேட் மேன்’ என்ற இரண்டு அணுகுண்டுகளைக் கொண்டு,
ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களைத் தாக்க அமெரிக்காவும் அதன் சக நாடுகளும் திட்டமிட்டன.

அணு குண்டைப் பிரயோகிப்பதற்கு முன்னதாகச் சோதனை செய்து பார்க்க எண்ணியது அமெரிக்க அரசு.
அலமொகோர்டோ என்னும் பாலைவனப் பகுதி அணுகுண்டு சோதனை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது. பெருத்த ஒலியோடு அணுகுண்டு வெடித்தவாறே,
ஒளிப்பிழம்பு ஒன்று வானில் கிளம்பியது. அதைக் கண்ட ஓப்பன்ஹைமர் கீதையின் ஒரு ஸ்லோகத்தை
மனதில் கொண்டு கீழ்க்கண்ட வார்த்தைகளைச் சொன்னார்.
“If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one.”
ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியன்கள் வானில் வெடித்தால் எத்தகைய ஒளி உண்டாகுமோ, அதை விடப் பிரகாசமாக இருந்தது
கீதையில் கண்ணன் எடுத்த விஸ்வரூபம். இந்த அணுகுண்டு உண்டாக்கிய ஒளிப்பிழம்பு அந்தக் கண்ணனின் விச்வரூபத்தை எனக்கு நினைவூட்டுகிறது.
அவர் குறிப்பிட்ட கீதை ஸ்லோகம் – 11-12 –
“திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா
யதி பா ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மன:”
இத்தகைய ஒளிப்பிழம்பு போன்ற வடிவுடன் திருமால் விளங்குவதைத் தமிழில் நம்மாழ்வார்,

“முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்த்துவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!”–என்று பாடியுள்ளார்.

அணுசக்தி எப்படி ஆக்கம், அழிவு இரண்டுக்கும் பயன்படுகிறதோ அவ்வாறே திருமாலின் திருமேனி ஒளியும் ஒருபுறம்
பக்தர்களுக்கு வழிகாட்டி அருள்புரிகிறது. மற்றொரு புறம் தீயவர்களைச் சுட்டெரிக்கிறது.
தன் திருமேனி ஒளியைக் கொண்டு தன் பக்தர்களுக்கு ஒளிகாட்டி வழிகாட்டுவதால் திருமால் ‘ப்ராஜிஷ்ணு:’ என்றழைக்கப்படுகிறார்.
“திருமாலின் திருமேனி ஒளியைத் தியானிப்போம். அது நம் சிந்தையை நல் வழியில் செலுத்தட்டும்” என்பது தான்
காயத்திரி மந்திரத்தின் பொருளாகும். ‘ப்ராஜிஷ்ணு:’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 143-வது திருநாமம்.
“ப்ராஜிஷ்ணவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

————–

144. போஜனாய நமஹ (Bhojanaaya namaha)

“முருகா! முருகா!” என்று வேகமாக அழைத்தபடி கைலாயத்துக்குள் நுழைந்தார் விஸ்வாமித்ரர்.
“வாருங்கள் மாமுனியே!” என வரவேற்றார் முருகன். “எனக்கொரு சந்தேகம். அதை முதலில் நீ தீர்த்து வை!” என்றார் விஸ்வாமித்ரர்.
“என்ன சந்தேகம்?” என்று கேட்டார் முருகன். “என் கதையை முதலில் உனக்கு நினைவூட்டுகிறேன்!
அதன்பின் சந்தேகத்துக்கு வருகிறேன்!” என்று சொன்ன விஸ்வாமித்ரர், தனது பழைய வரலாற்றை நினைவு கூர்ந்தார்.

முன்னொரு சமயம், ஏதோ சில காரணங்களால் மழை பொழியவில்லை. அதனால் பூமியில் பெரும் வறட்சி ஏற்பட்டு,
ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நிலை உண்டானது. அவ்வறட்சிக் காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக
உண்ண உணவின்றிக், குடிக்கத் தண்ணீரின்றி நான் தவித்தேன். என்னால் பசியையும் தாகத்தையும் அடக்க முடியவில்லை.
உண்பதற்கு ஏதாவது உணவு கிடைக்காதா என ஏங்கத் தொடங்கினேன்.

அப்போது ஒரு மாமிசக் கடையைக் கண்ட நான், அந்தக் கடைக்காரனிடம் மாமிசத்தை வாங்கிச் சாப்பிட்டாவது
பசியைப் போக்கிக் கொள்ளத் தீர்மானித்தேன். ஆனால் பகல் பொழுதில் ஊரார் பார்க்கும் வேளையில் மாமிசக் கடையில் போய் நிற்க
எனது மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் அன்று மாலை போர்வையைப் போர்த்திக் கொண்டு அந்தக் கடைக்குச் சென்று
நாய் மாமிசம் கொஞ்சம் தருமாறு கேட்டேன். ஆனால் கடைக்காரன் என்னை அடையாளம் கண்டுகொண்டான்.
“ஐயோ! முனிவரே! உங்களுக்கு மாமிசத்தைக் கொடுத்தால், எனக்குப் பாபம் ஏற்படும். நான் நரகத்துக்குச் செல்ல நேரிடும்!
நான் தர மாட்டேன்! என்னை மன்னித்து விடுங்கள்!” என்று கதறினான்.

அன்று இரவு அவன் கடையை மூடிவிட்டு உள்ளேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.
மீண்டும் கடைக்குள் நுழைந்து மாமிசத்தை எடுத்து உண்ணப் பார்த்தேன். ஆனால் கடைக்காரன் விழித்துக் கொண்டான்.
என்னைக் கண்டவுடன், “ஏ இந்திரனே! உனக்குக் கருணையே இல்லையா? நீ மழை பொழியாததால் பூமியில் விளைச்சல் இல்லை.
மக்கள் பசி பட்டினியால் வாடுகிறார்கள். மகா முனிவரான விஸ்வாமித்ரர் நாய் மாமிசத்தை உண்ணும் நிலைக்கு வந்துவிட்டார்!
உடனடியாக மழையைக் கொடு!” என்று இந்திரனை நோக்கி உரக்கச் சொன்னார்.

அடுத்த நொடியே மழை பொழியத் தொடங்கி விட்டது. ஊரிலுள்ள ஆறுகள் குளங்கள் குட்டைகள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
அருகிலிருந்த நதிக்குச் சென்று நீரைப் பருகி என் தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன்.
இவ்வரலாற்றை முருகனிடம் சொன்ன விஸ்வாமித்ரர், “முருகா! நான் தமிழகத்துக்குச் சென்றிருந்தேன்.
திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் என்றொரு யோகி வாழ்ந்ததாகவும்,
அவர் ஒரு சொட்டு தண்ணீர் அருந்தாமல், ஒரு வாய் உணவு உண்ணாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள்
புளியமரப் பொந்தில் யோகத்தில் அமர்ந்திருந்ததாகவும் மக்கள் கூறினார்கள்.
என்னால் உணவின்றிப் பன்னிரண்டு வருடங்களைக் கழிக்க முடியவில்லை.
ஆனால் முருகா உனக்கு மிகவும் விருப்பமான பூமியாகிய தமிழகத்தில் நம்மாழ்வார்
என்பவர் முப்பத்திரண்டு ஆண்டுகள் உணவு, தண்ணீர் இன்றி வாழ்ந்தாரே! அது எப்படி?” என்று கேட்டார்.

“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன் எம்பெருமான்”

என்று நம்மாழ்வாரே பாடிய படி, கண்ண பிரானையே தனக்கு உண்ணும் உணவாகவும், தாகம் தீர்க்கும் தண்ணீராகவும்,
மெல்லும் வெற்றிலையாகவும் கொண்டிருந்தபடியால், அவருக்கு வேறு உணவோ, தண்ணீரோ, வெற்றிலையோ தேவைப்படவில்லை!
திருமால் தனது பக்தர்களுக்குத் தானே தாரக, போஷக, போக்யங்களாக இருப்பதால்
அந்த பக்தர்களுக்குத் தனியாக சோறு, தண்ணீர், வெற்றிலை என எதுவும் தேவைப்படுவதில்லை!” என்று விடையளித்தார் முருகன்.

இவ்வாறு தன் மெய்யடியார்களுக்குத் திருமாலே உணவாக இருப்பதால், ‘போஜனம்’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 144-வது திருநாமம்.
“போஜனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால்
தனது அழகையும் குணங்களையும் உணவாகத் தந்து அவர்களை மகிழ்விப்பார்.

—————

145. போக்த்ரே நமஹ (Bhokthre namaha)

திருமலைக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் வருவதற்கு முன், அம்மலையில் ஒரு வேப்ப மரத்தின் வடிவில் பெருமாள் எழுந்தருளியிருந்தார்.
மரத்தின் வடிவிலுள்ள பெருமாளுக்கு அங்கு வாழ்ந்த வேடன் ஒருவன் தினமும் தேனும் தினைமாவும் சமர்ப்பிப்பதை
வழக்கமாகக் கொண்டிருந்தான். பெருமாளுக்குச் சமர்ப்பித்த பின், அவர் அமுது செய்த பிரசாதமாகக் கருதி,
அந்தத் தேனையும் தினைமாவையும் அவன் உட்கொள்வான்.

அவனுக்கு ஒரு மகன் இருந்தான். தன்னைப் போலவே தன் மகனையும் பக்தி உள்ளவனாக வளர்த்தான் அந்த வேடன்.
“நீ பெருமாளுக்கு நிவேதனம் செய்யாமல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது!” என்று சொல்லியே
தன் மகனை வளர்த்தான். ஒருநாள் வேடனும் அவன் மகனும் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகத் திருமலைக்குச் சென்றார்கள்.
வேடன் தனது பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் தினைமாவு மட்டுமே இருந்தது. தேனைக் கொண்டு வர மறந்துவிட்டான்.
“மகனே! இங்கேயே இரு இம்மலையிலுள்ள தேன் கூடுகளுள் ஒன்றில் இருந்து தேன் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு
வேடன் சென்றான். வெகுதூரம் சென்றும் அவனுக்குத் தேன் கிடைக்கவில்லை.

தினைமாவோடு மரத்தடியில் காத்திருந்த சிறுவனுக்கோ பசி தாங்கவில்லை.
“ஏழுமலையானே! இன்று தேன் கிடைக்காததால் தினைமாவை மட்டும் உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!” என்று பெருமாளுக்கு
வெறும் மாவை நிவேதனம் செய்துவிட்டு அந்தச் சிறுவன் அதை உண்ணத் தொடங்கினான்.
ஒரு பிடி மாவை அவன் வாயில் போட்டுக் கொண்டபோது, அங்கே தேனுடன் வேடன் வந்துவிட்டான்.
பெருமாளுக்குச் சமர்ப்பிக்காமலேயே தினைமாவைத் தன்மகன் உட்கொள்வதாக எண்ணிய வேடன்,
சிறுவனின் தலையை வெட்டுவதற்காகத் தன் வாளை உருவினான்.

அப்போது மரத்தைப் பிளந்து கொண்டு அங்கே ஸ்ரீநிவாசப் பெருமாள் தோன்றினார்.
நீலமேகம் போன்ற நிறத்துடனும், கௌஸ்துபம், வைஜயந்தி வனமாலை உள்ளிட்ட அணிகலன்களோடும்,
சங்கு சக்கரங்களைக் கையில் ஏந்தியபடியும் வேடன்முன் நின்ற ஸ்ரீநிவாசன்,
“அந்தச் சிறுவன் பக்தி என்னும் தேன் கலந்த தினைமாவை எனக்குச் சமர்ப்பித்துள்ளான்.
அதை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்!” என்று கூறினார்.
மேலும், “பக்தியோடு இலையோ, பழமோ, புஷ்பமோ, தண்ணீரோ எதைச் சமர்ப்பித்தாலும் நான் அதை ஏற்பேன்.
இவை எதையும் சமர்ப்பிக்க முடியாவிட்டால், என் பக்தன் கண்ணீரை மட்டும் சமர்ப்பித்தாலும் கூட போதும்!
நான் அதை ஏற்று அருள்புரிவேன்!” என்றார்.

இவ்வாறு வேடனுக்கும் அவன் மகனுக்கும் பெருமாள் திருமலையில் அருள்புரிந்த நாள் ஒரு புரட்டாசி மாத சனிக்கிழமை ஆகும்.
இச்சம்பவத்தின் நினைவாகத் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் நம் வீடுகளில் மாவிளக்கு ஏற்றுகிறார்கள்.
அந்த வேடன் சமர்ப்பித்த தினைமாவுக்குப் பதிலாக அரிசிமாவும், தேனுக்குப் பதிலாக வெல்லமும் கலந்து
அதன்மேல் திரியிட்டு விளக்கேற்றுகிறோம்.
“ச்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே” என்று ராமாநுஜர் கூறியபடி, திருமலை என்னும் மலைக்கு மேல்
தீபம் போல் திருமால் விளங்குவதைக் குறிக்கும் விதமாக,
மலைபோல் அரிசி மாவையும் வெல்லத்தையும் வைத்து, அதன்மேல் மாவிளக்கு ஏற்றுகிறோம்.

இவ்வாறு பக்தியுடன் தனது அடியார்கள் சமர்ப்பிக்கும் பண்டங்களை அமுது செய்து அவர்களுக்கு அருள்புரிவதால்,
திருமால் ‘போக்தா’ என்றழைக்கப்படுகிறார்.
‘போக்தா’ என்றால் உண்பவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 145-வது திருநாமம்.
“போக்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியவர்கள் சமர்ப்பிக்கும் அனைத்துப் பொருட்களையும்
திருமால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அருள்புரிவார்.

———————

146. ஸஹிஷ்ணவே நமஹ (Sahishnave namaha)

ராமாநுஜருக்கு முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் என இரண்டு மருமகன்கள் இருந்தார்கள்.
அவர்களுள் நடாதூர் ஆழ்வான் என்பவருடைய பேரன் வரதகுரு.
வரதகுரு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நதியில் தினமும் வேத பாராயணம் செய்து வந்தார்.
ஒருநாள் அவர் வேத பாராயணம் செய்து கொண்டிருக்கையில், அர்ச்சகர் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகப் பால் எடுத்து வந்தார்.
அடுப்பில் இருந்து சுடச்சுடக் கொண்டு வந்ததால், பாலில் இருந்து ஆவி பொங்கி வந்து கொண்டிருந்தது.

அதைக் கண்ட வரதகுரு, “சுவாமி!” என்று அர்ச்சகரை அழைத்து, “அந்தப் பாலை இங்கே தாருங்கள்!” என்றார்.
“இது பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பால்!” என்றார் அர்ச்சகர்.
“அது தெரியும்! இங்கே தாருங்கள்!” எனக் கேட்டு வாங்கினார் வரதகுரு. ஒரு தாய் எப்படிக் குழந்தைக்குப் பாலை
ஆற வைத்துக் கொடுப்பாளோ, அது போல் பாலை ஆற்றி, பொறுக்கக் கூடிய சூட்டுக்கு வந்தபின் அர்ச்சகரிடம் கொடுத்து,
“இப்போது பெருமாளுக்கு இதைச் சமர்ப்பிக்கலாம்!” என்றார்.

“ஏன் பாலை ஆற வைத்தீர்கள்?” என்று கேட்டார் அர்ச்சகர். அதற்கு வரதகுரு, “பெருமாள் எவ்வளவு மென்மையான,
அழகான திருமேனியை உடையவர்? இவ்வளவு சூடான பாலைக் கொடுத்தால் அவரது நாவைச் சுட்டு விடாதா?” என்று கேட்டார்.
“நீங்கள் வேதங்களை நன்கு கற்றவர். எம்பெருமானின் நாவில் இருந்து தான் நெருப்பு தோன்றியது என்கிறது வேதம்.
அவ்வாறிருக்க அவரது நாவை இந்தப் பால் எப்படிச் சுடும்? அவர் பரம்பொருள் அல்லவா?” என்று கேட்டார் அர்ச்சகர்.

“அவனது பெருமைகளை நோக்குகையில், அவனது நாவை இந்தப் பால் சுடாது என உணர முடிகிறது.
எனினும் அவனது வடிவழகையும் மென்மையையும் நோக்குகையில், ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டுவது போன்ற
பாசத்தைத் தான் காட்ட முடிகிறதே ஒழிய, அவனது பெருமைகளும் வலிமையும் நம் நெஞ்சில் நிற்பதில்லை!” என்று சொன்னார் வரதகுரு.
வரதகுரு ஆற்றிக் கொடுத்த பாலைப் பெருமாளிடம் கொண்டு சென்றார் அர்ச்சகர்.
அப்போது “அம்மா!” என்றொரு குரல்! எங்கிருந்து அக்குரல் வந்ததென்று ஆவலுடன் எல்லோரும் பார்த்தார்கள்.
என்ன விந்தை? வரதராஜப் பெருமாளே, வரதகுருவை உரத்த குரலில் “அம்மா!” என்று அழைத்திருக்கிறார்.

வியந்து போன அர்ச்சகர், “இந்த வரதகுருவை நீ ‘அம்மா’ என்று அழைத்தாயா?” எனப் பெருமாளிடம் கேட்டார்.
“அனைத்துலகங்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் நான் இருக்கிறேன். அனைத்துயிர்களிடமும் நான் அன்பு காட்டிய போதும்,
என்மீது யாரும் இத்தகைய தாய்ப்பாசத்தைக் காட்டியதில்லை. ஆனால் அத்தகைய பாசத்தை இந்த வரதகுரு
என்மீது இப்போது காட்டியபடியால், அவரை நான் அம்மா என்றழைத்தேன்!” என்றார் வரதராஜப் பெருமாள்.

அன்று முதல், வரதகுரு என்ற பெயர் மறைந்து ‘நடாதூர் அம்மாள்’ என்றே அனைவரும் அவரை அழைக்கத் தொடங்கினார்கள்.
(அவர் அவதரித்த ஊர் நடாதூர் என்பதால் பெருமாள் தந்த ‘அம்மா’ என்ற பெயரோடு அவர் ஊரை இணைத்து
நடாதூர் அம்மாள் என்று வழங்கப்பட்டார்.)
மறுநாள் அந்த அர்ச்சகர் நடாதூர் அம்மாளிடம், “சுவாமி! எனக்கொரு சந்தேகம். பெருமாள் மேல் அன்பு கொண்டு
நீங்கள் பாலை ஆற வைத்து அவருக்குச் சமர்ப்பித்தீர்கள். ஆனால் இத்தனை நாட்களாக நாங்கள் சூடான பாலைத்தான்
பெருமாளுக்குச் சமர்ப்பித்து வந்தோம். அதனால் பெருமாள் கோபம் கொண்டு எங்களுக்கு ஏதாவது தண்டனை தருவாரா?” என்று கேட்டார்.

அதற்கு நடாதூர் அம்மாள், “நிச்சயம் தண்டிக்க மாட்டார். நாம் தினமும் பூஜையைத் தொடங்குகையில் பதினாறு விதமான
உபசாரங்கள் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு, முடிவில் முப்பத்திரண்டு விதமான அபசாரங்களைத் தான் செய்கிறோம்.
ஆனால் அதையும் பெருமாள் பொறுத்தருள்கிறார். அவ்வாறே சூடான பாலை நீங்கள் சமர்ப்பித்தாலும் அதற்காகப்
பெருமாள் கோபம் கொள்ள மாட்டார். பயப்படாதீர்கள்! தண்ணீருக்கும் சந்திரனுக்கும் எப்படிக் குளிர்ச்சி என்பது இயற்கையாகவே உள்ளதோ,
அது போல பெருமாளுக்கும் பொறுமை எனும் குணம் இயற்கையாகவே உள்ளது!” என்று கூறினார்.

‘ஸஹிஷ்ணு:’ என்றால் பொறுத்துக் கொள்பவர் என்று பொருள்.
தனது பக்தர்கள் அறிந்தோ அறியாமலோ, முன்னும் பின்னுமாகச் செய்யும் பூஜைகளையும், அவற்றிலுள்ள பிழைகளையும்
பொறுத்துக் கொள்வதால் ‘ஸஹிஷ்ணு:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 146-வது திருநாமம்.
“ஸஹிஷ்ணவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்துப்
பிழைகளையும் திருமால் மன்னித்து, அவர்களை நல்வழிப் படுத்துவார்.

———————————

147. ஜகதாதிஜாய நமஹ (Jagadhaadhijaaya namaha)

கண்ணனின் 16,008 மனைவிகளுள் ஜாம்பவதி என்றொருத்தி இருந்தாள். கண்ணனை மணம்புரிந்து நெடுநாட்கள் ஆகியும்
அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. தன் கவலையைக் கண்ணனிடம் அவள் தெரிவித்தாள்.
“நீ கவலைப் படாதே! நான் கைலாயத்துக்குச் சென்று, பரமசிவனைக் குறித்துத் தவம் புரிந்து குழந்தை வரம் பெற்று வருகிறேன்!” என்று
சொன்னான் கண்ணன். கைலாயத்தை அடைந்த கண்ணன் சிவபெருமானைக் குறித்துப் பிள்ளை வரம் வேண்டித் தவம் புரிந்தான்.
கண்ணன் தவம் செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவன் கண்ணன்முன் தோன்றினார்.

“என்னைக் குறித்து நீ ஏன் தவம் செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்குக் கண்ணன், “பிள்ளை வரம் வேண்டித் தவம் புரிகிறேன்.
எனக்கும் ஜாம்பவதிக்கும் குழந்தை பிறந்தால் அதற்கு உன் பெயரையே சூட்டுகிறேன்!” என்றான்.
“இது என்ன லீலை? புருஷோத்தமனான உனக்கு நான் குழந்தை வரம் அருள வேண்டுமா?” என்று கேட்டார் சிவபெருமான்.
கண்ணன் அப்போது பழைய வரலாறு ஒன்றை நினைவுகூர்ந்து, இவ்வாறு சொன்னான்:
பரமசிவனே! முன்பு உலகை நான் படைத்த போது பிரம்மாவைப் படைப்புக் கடவுளாகவும், உன்னை அழிக்கும் கடவுளாகவும் நியமித்தேன்.
பக்தர்கள் கேட்டவுடன் நீ வரம் தருவதால் ‘ஆசுதோஷி’ என்ற பட்டமும் உனக்களித்தேன்.
அப்போது நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாயே நினைவிருக்கிறதா?

“நாராயணா! எனக்கு ‘ஆசுதோஷி – கேட்டதும் வரம் தருபவன்’ என்று பட்டமளித்தால் மட்டும் போதாது.
நான் வரம் தருபவன் என்பதை உலகத்தார் அறியும் வண்ணம் நீ ஒருமுறை என்னிடம் வந்து வரம் கேட்க வேண்டும்!
நீ கேட்கும் வரத்தை நானும் அளிக்க வேண்டும்! அப்போது தான் நான் வரம் தர வல்லவன் என மக்கள் உணர்வார்கள்!” என்று
என்னிடம் நீ வரம் கேட்டாய். “தகுந்த நேரத்தில் உன்னிடம் வந்து வரம் வேண்டுகிறேன்!” என நானும் உறுதியளித்தேன்.

இவ்வரலாற்றைச் சொன்ன கண்ணன், “இப்போது நான் உனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகத்தான் இங்கே
தேவர்கள் மற்றும் முனிவர்கள் முன்னிலையில் உன்னிடம் வரம் கேட்டு நிற்கிறேன்!” என்றான்.
வியந்து போனார் பரமசிவன். “என்ன ஒரு எளிமை! எனக்கு அளித்த வாக்கைக் காப்பதற்காகவும், நான் வரம் தருபவன் என்பதை
உலகுக்கு உணர்த்துவதற்காகவும், உன்னைக் குறைத்துக் கொண்டு என் முன்னே வந்து நிற்கிறாயே என்ற
பரமசிவன், கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொன்னார்:

“க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் ஸர்வதேஹனாம் | ஆவாம் தவாங்கஸத்பூமௌ தஸ்மாத் கேசவநாமவான் ||”

‘க’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். ‘ஈச’ என்பது சிவனாகிய என்னைக் குறிக்கும்.
‘க’, ‘ஈச’ இருவரையும் படைத்தவனான நீ (க + ஈச + வ) ‘கேசவன்’ எனப்படுகிறாய்.
எங்களைப் படைத்ததோடு மட்டுமின்றி, மும்மூர்த்திகளுள் ஆக்கும் பதவியையும், அழிக்கும் பதவியையும் முறையே
பிரம்மாவுக்கும் எனக்கும் அளித்தாய். அதுமட்டுமின்றி, எங்களுக்கு இடையே விஷ்ணு என்னும் காக்கும் தெய்வமாகவும் நீயே அவதரித்தாய்.
இத்தனைப் பெருமைகளை உடையவனான நீ உன் எளிமையை எங்களுக்கு உணர்த்துவதற்காக என் முன் வரம் வேண்டி நிற்கிறாய்!”
என்றெல்லாம் சொல்லிப் பலவாறு கண்ணனைத் துதித்தார் பரமசிவன்.

அதன்பின் கண்ணன் துவாரகைக்குத் திரும்பியவாறே, ஜாம்பவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதற்குப் பரமசிவனின் பெயர்களுள் ஒன்றான ‘சாம்பன்’ என்னும் பெயரைச் சூட்டினான் கண்ணன். இவ்வரலாற்றில் பரமசிவன் குறிப்பிட்டபடி,
உலகைத் தோற்றி, அதற்குப் படைப்புக் கடவுளாகப் பிரம்மாவையும், அழிக்கும் கடவுளாகச் சிவனையும் திருமால் நியமித்தார்.
‘ஜகத்’ என்றால் உலகம். ‘ஆதி’ என்றால் ஆதிகாலம். ‘ஜ’ என்றால் தோன்றியவர்.
‘ஜகத் + ஆதி + ஜ = ஜகதாதிஜ:’ என்றால், உலகின் ஆதிக் காலத்தில், பிரம்மா, சிவன் இருவரையும் படைத்துவிட்டு,
அவர்களுக்கு நடுவே விஷ்ணு என்னும் வடிவத்தில் தோன்றியவர் என்று பொருள்.
‘ஜகதாதிஜ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 147-வது திருநாமம்.
“ஜகதாதிஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல குழந்தைகள் பிறக்கும் படித் திருமால் அருள்புரிவார்.

—————–

148. அநகாய நமஹ (Anaghaaya namaha)

முண்டகோபநிஷத்தில் ஜீவாத்மா – பரமாத்மா பற்றி அழகான உருவகம் ஒன்று வருகிறது:

“த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே |
தயோ அன்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அனச்னன் அன்ய: அபிசாகசீதி ||”

இந்த மந்திரத்தின் பொருள் – ஒரு பிப்பல மரம். அந்த மரத்தின் கிளையில் அழகான சிறகுகளை உடைய இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன.
இரு பறவைகளும் நல்ல நண்பர்கள். அவற்றுள் ஒரு பறவையானது, அந்த மரத்திலுள்ள பழங்களை எல்லாம் ஆசையோடு உண்கிறது.
அவ்வாறு உண்பதால் அப்பறவை இளைத்துக் கொண்டே போகிறது. மற்றொரு பறவையோ அம்மரத்திலுள்ள பழங்களைச் சாப்பிடவில்லை.
அது நன்கு புஷ்டியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.

எப்போதும் பிரம்மம், முக்தி, ஆன்மா என்றே பேசும் உபநிஷத் திடீரென்று மரம் என்றும் பறவை என்றும்
குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல் சொல்கிறதே! என்ன காரணம்? இந்தக் கதை ஓர் உருவகம்.
இதற்குள் பெரிய தத்துவம் இருக்கிறது. உருவகம் குறிப்பிடும் பொருள் பிப்பல மரம் உடல் மரத்திலுள்ள பழங்கள்,
நம் கர்ம வினைகளின் பலன்கள் பழத்தை உண்ணும் பறவை ஜீவாத்மா பழத்தை உண்ணாத பறவை பரமாத்மா
நம் உடலாகிய பிப்பல மரத்தில் ஜீவாத்மா, பரமாத்மா என்னும் இரு பறவைகள் வசிக்கின்றன.
இந்த உடலானது, நமது பாப புண்ணியங்களாகிய முன்வினைகளின் படியாக ஏற்பட்டது.

அதனால் அந்தப் பாப புண்ணியங்களின் பலன்களே இவ்வுடலாகிய மரத்தில் பழுத்த பழங்கள்.
பரமாத்மா இவ்வுடலுக்குள் இருந்தாலும், இந்த சரீரத்தோடு தொடர்புடைய பாப புண்ணியங்களால் தீண்டப்படாமல்
எப்போதும் பரிசுத்தமாகவே உள்ளார். ஆனால் ஜீவாத்மாவோ முன்வினைப் பயன்களாகிய பழங்களை உண்டு கொண்டே இருக்கிறார்.
அதனால் இளைத்து விடுகிறார். இவற்றை உண்ணாத பரமாத்மா எப்போதும் தூய்மையாகவும், புஷ்டியாகவும் இருக்கிறார்.
இதுவே முண்டகோபநிஷத் கூறும் தத்துவம்.
முண்டகோபநிஷத் விளக்கியது போல், வினைப்பயன்கள் உள்ளிட்ட எந்த தோஷங்களாலும் தீண்டப்படாத பரமாத்மாவாகத்
திருமால் திகழ்வதால் ‘அனக:’ என்றழைக்கப்படுகிறார்.
‘அக:’ என்றால் தோஷம் என்று பொருள். ‘அனக:’ என்றால் தோஷங்களற்றவர் என்று பொருள்.

அகோபில நரசிம்மரைப் பாடுகையில், திருமங்கையாழ்வார்,
“அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்” என்று பாடினார்.
அதாவது, “இரணியனின் மார்பைத் தன் நகங்களால் கிழித்து, அந்த ரத்தக் கறையோடு திகழும் புனிதன்” என்று நரசிம்மரைப் போற்றுகிறார்.
பொதுவாக ரத்தக்கறை படிந்தவர்களை அசுத்தமானவர்கள் என்றுதான் சொல்வோம்.
ஆனால் இறைவனோ ரத்தக்கறை படிந்தாலும் புனிதனாகவே விளங்குகிறார். ஏனெனில் ரத்தக் கறையிலுள்ள தோஷங்கள் அவரைப் பாதிப்பதில்லை.
இவ்வாறு தோஷங்களற்றவராகத் திருமாலைக் காட்டும்
‘அனக:’ என்னும் திருநாமம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 148-வது திருநாமமாக விளங்குகின்றது.
“அனகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் மனங்கள் எப்போதும் தூய்மையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

—————-

149. விஜயாய நமஹ (Vijayaaya namaha)

மகாபாரதப் போர் நடந்து கொண்டிருக்கிறது. “பத்தாம் நாள் போரின் முடிவில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் சாய்ந்தார்!” என்னும்
அதிர்ச்சிச் செய்தியைத் திருதராஷ்டிரனிடம் வந்து சொன்னான் சஞ்சயன்.
திடுக்கிட்டுப் போன திருதராஷ்டிரன், “குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் என்ன ஆயிற்று? விவரமாகக் கூறு! என்று கேட்க,
அதுவரை நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிக்கத் தொடங்கினான் சஞ்சயன்.
மனக்கலக்கத்தை அடைந்த திருதராஷ்டிரன், “போரில் யார் வெல்வார்கள் என்று நீ நினைக்கிறாய்?” என்று சஞ்சயனிடம் கேட்டான்.

பாண்டவர்கள் தான் வெல்லப் போகிறார்கள் என்பது சஞ்சயனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
ஆனால் கௌரவர்கள் தோற்பார்கள் என்றோ, பாண்டவர்களே வெல்வார்கள் என்றோ திருதராஷ்டிரனிடம் நேரடியாகச் சொல்லச்
சஞ்சயனுக்கு மனம் வரவில்லை. எனவே குறிப்பால் அதை உணர்த்தும் விதமாக ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான்:

“யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர: |
தத்ர அ: விஜயோ பூதி: த்ருவாநீதி: மதி: மம ||”
(இதுவே கீதையின் நிறைவு ஸ்லோகமாகும்.)

அதாவது, “அறிவுள்ள, அறிவற்ற பொருள்களையும், அவற்றின் இருப்பையும், அனைத்துவிதச் செயல்பாடுகளையும் அடக்கி ஆளும்
யோகேஸ்வரனான கண்ணபிரானும், கையில் வில்லையும் மனத்தில் கண்ணனின் திருவடிகளையும் பிடித்திருக்கும் அர்ஜுனனும்
எங்கே இருக்கிறார்களோ, அங்கே தான் அதிர்ஷ்டம், வெற்றி, செல்வம், நீதி என அனைத்தும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!”
என்று திருதராஷ்டிரனிடம் கூறினான் சஞ்சயன்.

தனது மகன்களான கௌரவர்கள் அழியப் போகிறார்கள் என்றும்,
கண்ணனின் ஆதரவு இருப்பதால் பாண்டவர்களே வெல்லப் போகிறார்கள் என்றும் சஞ்சயனின் கூற்றைக் கொண்டு
உணர்ந்து கொண்டான் திருதராஷ்டிரன். இதிலிருந்து கண்ணன் எந்தப் பக்கம் இருக்கிறானோ,
அங்கே வெற்றி நிச்சயம் என்பது தெரிகிறதல்லவா? இவ்வாறு தன்னைச் சார்ந்த தன் அடியார்களுக்கு
விஜயமாகிய வெற்றியைத் தருவதால், திருமால் ‘விஜய:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 149-வது திருநாமமாகும்.
பாண்டவர்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில், குந்தி தேவி, தனது பிள்ளைகளோடு ப்ருகு முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றிருந்தாள்.
பாண்டவர்கள் ஒவ்வொருவராக ப்ருகு முனிவரை விழுந்து நமஸ்கரித்தார்கள்.
அர்ஜுனன் நமஸ்கரித்த போது, “நீ அறுபதில் நட்சத்திரமாக விளங்குவாய்!” என ஆசீர்வாதம் செய்தார்.

ப்ருகுவின் கூற்று குந்திக்கு அப்போது புரியவில்லை. வியாசரிடம் வந்து இச்செய்தியைச் சொல்லி,
“ப்ருகு சொன்னதற்கு என்ன பொருள்?” என்று வினவினாள்.
அதற்கு வியாசர், “அறுபது என்பது பிரபவ, விபவ… எனத் தொடங்கி வரும் அறுபது வருடங்களைக் குறிக்கும்.
நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு. எனவே ‘அறுபதில் நட்சத்திரம்’ என்றால் அந்த அறுபது வருடங்களுள்
இருபத்தேழாவது வருடமான ‘விஜய’ என்னும் வருடம் என்று பொருள்.
அறுபதுள் நட்சத்திரமாக விளங்குவாய் என்றால் விஜயனாக விளங்குவாய் என்று பொருள்!” என்று விளக்கினார்.

பிருகு முனிவர் ஆசீர்வாதம் செய்ததற்கேற்ப அர்ஜுனனும் விஜயனாக விளங்கினான்.
ஆனால் அவன் ‘விஜயனாக’ இருந்தமைக்குக் காரணம் யாதெனில், ‘விஜயனான’ கண்ணன் எப்போதும் அவனோடு இருந்து
அவன் ‘விஜயம்’ பெறும்படி அனுக்கிரகம் செய்ததே ஆகும்.
நாமும் “விஜயாய நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், திருமால் நமக்கு வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் அருளுவார்.

————

150. ஜேத்ரே நமஹ (Jethrey namaha)

இந்திரனின் சபைக்கு நாரதர் சென்ற போது, நாரதரைச் சீண்டிப் பார்க்கும் நோக்கில்,
“முக்கண்ணனான ருத்திரனுக்கு நிகரான தெய்வமில்லை!” என்றான் இந்திரன்.
அதைக் கேட்ட நாரதர், “திருமாலுக்கு மூன்றாவது கண் இல்லாவிட்டாலும் அவர் அனைத்தையும் அறிந்தவர்!
அவருக்கு யாரும் நிகரில்லை!” என்றார்.
“ருத்திரனே வலிமையானவர்!” என்றான் இந்திரன். “திருமாலே அனைத்திலும் வல்லவர்!” என்றார் நாரதர்.
இப்படியே வாக்குவாதம் முற்றிப்போக, “இந்திரா! நீ ருத்திரனிடம் சென்று திருமாலோடு போர் புரிய அவர் தயாரா என்று கேள்!” என்று கூறினார்.
“ஆஹா! இது நல்ல வாய்ப்பு!” என்று சொன்ன இந்திரன், சடக்கெனத் தேவலோகத்திலிருந்து புறப்பட்டுக் கைலாயத்துக்குச் சென்றான்.

இந்திரனை வரவேற்ற ருத்திரன், “என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். நடந்தவற்றைச் சொன்ன இந்திரன்,
“நீங்கள் திருமாலோடு போர் புரியத் தயாரா?” என்று கேட்டான்.
“நான் எப்போதும் ராம நாமத்தை ஜபம் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்படித் திருமாலை எதிர்த்துப் போர் புரிய முடியும்?
அது முறையல்ல!” என்றார் ருத்திரன். ஆனாலும் இந்திரன் விடவில்லை.
“உங்களை நம்பி நான் நாரதரிடம் வாக்களித்து விட்டேன். தயவு செய்து எனக்காக நீங்கள் போர் புரிய வாருங்கள்!” என மன்றாடினான்.

திருமாலுடன் போர் புரியும் எண்ணம் இல்லாவிட்டாலும், இந்திரனின் வற்புறுத்தலால், “விஸ்வகர்மாவிடம் சொல்லி எனக்காக
ஒரு புதிய வில்லைத் தயாரிக்கச் சொல். அந்த வில்லைக் கொண்டு நான் போர் புரிகிறேன்!” என்றார் ருத்திரன்.
விஸ்வகர்மாவும் தனது மந்திர பலத்தால் பெரும் வில் ஒன்றைத் தயாரித்தார்.
அதை ஒரு வண்டியில் வைத்து முன்னூறு பேர் தள்ளிக்கொண்டு வந்தார்கள்.
அந்தப் பெரிய வில்லை அனாயாசமாக எடுத்து நாண் ஏற்றினார் ருத்திரன்.
“இந்த வில் மிகச்சிறப்பாக உள்ளதே!” என விஸ்வகர்மாவைப் பாராட்டினார்.

“எங்கள் ருத்திரன் போருக்குத் தயாராகிவிட்டார். உங்கள் திருமால் தயாரா?” என்று நாரதரிடம் கேட்டான் இந்திரன்.
நாரதர் திருமாலைத் தேவலோகத்துக்கு அழைத்து வந்தார். அவரிடம், “உங்களுக்கும் ருத்திரனுக்கும் வில் யுத்தம் வைத்துப் பார்த்து,
உங்களில் யார் பெரியவர் என்று அறிய விரும்புகிறேன்!” என்றான் இந்திரன்.
அனாவசியமான இந்தப் போரைத் தவிர்க்க எண்ணிய திருமால், “ருத்திரன் இப்போருக்குச் சம்மதம் தெரிவித்தாரா?” என்று கேட்டார்.
“அவர் வில்லுடன் தயாராக இருக்கிறார்!” என இந்திரன் சொல்லவே வேறு வழியின்றித் திருமாலும் சம்மதித்தார்.

“திருமாலே! நீங்கள் உங்களது வில்லான சார்ங்கத்தை இப்போரில் பயன்படுத்தக் கூடாது.
அதற்குப் பதில் விஸ்வகர்மா ஒரு வில்லைத் தயாரித்துத் தருவார்.
அதையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்!” என்றான் இந்திரன். அதற்கும் சம்மதித்தார் திருமால்.
திருமாலை எதிர்த்துப் போர்புரியும் மனமில்லாமல் ருத்திரனும், ருத்திரனை எதிர்த்துப் போர்புரியும் மனமில்லாமல்
திருமாலும் போர்க்களத்துக்கு வந்தார்கள்.
ருத்திரன் தனது வில்லைத் தூக்கிப் பிடித்து அதில் அம்பைப் பூட்டினார்.
இந்த யுத்தம் எப்படியாவது நடைபெறாமல் நின்றுபோக வேண்டுமென மனதாற எண்ணினார் ருத்திரன்.

விஸ்வகர்மா தந்த வில்லைத் தன் கையில் எடுத்த திருமால், நாணேற்றி, அந்த நாணை இழுத்தார்.
அந்த நாணிலிருந்து எழும்பிய ‘டங்கார’ ஒலியால் ருத்திரன் கையில் இருந்த வில் முறிந்து விட்டது.
“திருமால் வெற்றி பெற்றார்!” எனத் தேவர்கள் தீர்ப்பளித்தார்கள். “நல்ல வேளை! போர் நடைபெறாமல் நின்று போனது!” என
ருத்திரனும் மனம் மகிழ்ந்தார். அந்தப் போரில் ருத்திரன் கையிலிருந்த வில் தான் பின்னாளில் ஜனகனிடம் வந்து சேர்ந்தது.

அந்த வில்லை முறித்து ராமன் சீதையை மணம் புரிந்தான் என்பது வரலாறு.
இவ்வாறு ருத்திரன், பிரம்மா, இந்திரன் போன்ற அனைத்துத் தேவர்களையும் வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவராகத்
திருமால் விளங்குவதால், அவர் ‘ஜேதா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 150-வது திருநாமம்.
‘ஜேதா’ என்றால் அனைவரையும் வெல்பவன் என்று பொருள்.
“ஜேத்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்கள், தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாச் செயல்களிலும்
வெற்றி பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

151. விச்வயோனயே நமஹ (Vishwayonayey namaha)

பதின்மூன்றாம் நூற்றாண்டு. கடலூரை அடுத்து உள்ள திருவஹீந்திரபுரத்தில் வேதாந்த தேசிகன் வாழ்ந்த காலம்.
அவ்வூரில் உள்ள ஒரு வேத பாடசாலையில் தேவநாதன் என்ற சிறுவன் வேதம் கற்று வந்தான்.
அவனது ஆசிரியர்கள் எவ்வளவோ பயிற்சிகள் அளித்தும், தேவநாதனால் சரிவர வேதத்தை உச்சரிக்க முடியவில்லை.
ஒரு நிலையில், “தேவநாதா! பிரம்மா உன்னைப் படைக்கும் போது, உன் தலையெழுத்தைச் சரியாக எழுதவில்லை!
உனக்குக் கல்வி அறிவே உண்டாகாது என்றும் உன் வாயில் வேதமே வராது என்றும் அவர் உன் தலையில் எழுதிவிட்டார் போலும்!
அந்தத் தலையெழுத்தை மாற்றுவது என்பது யாராலும் இயலாத காரியம்.
எனவே இனிமேல் நாங்கள் எவ்வளவு பயிற்சிகள் அளித்தாலும் பயனில்லை!” என்று கூறி அவனைப் பாடசாலையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.

அவன் அழுது கொண்டே திருவஹீந்திரபுரத்திலுள்ள ஔஷதகிரி என்னும் மலைக்குச் சென்றான்.
அந்த மலைக்குமேல் திருமால், குதிரை முகத்துடன் லட்சுமி, ஹயக்ரீவராகக் கோயில் கொண்டுள்ளார்.
அந்த லட்சுமி, ஹயக்ரீவர் சந்நதியின் பிராகாரத்தில் அமர்ந்து கொண்டு தேவநாதன் அழுது கொண்டிருந்தான்.
“என் தலையெழுத்தை மாற்ற வழியே இல்லையா?” எனப் புலம்பினான்.

அப்போது அங்கு வந்த வேதாந்த தேசிகன், “குழந்தாய்! ஏன் அழுகிறாய்?” என்று அவனிடம் கேட்டார்.
நடந்தவற்றையெல்லாம் சொன்னான் தேவநாதன். “இவ்வளவு தானே? பிரம்மா எழுதிய தலையெழுத்தை மாற்ற வழியுள்ளது.
உன்னைப் படைக்கும் போது பிரம்மா தலையெழுத்தைச் சரியாக எழுதவில்லை என்று நீ சொன்னாய் அல்லவா?
பிரம்மாவையே படைத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் திருமால். அவருடைய அருள் இருந்தால்,
பிரம்மா எழுதிய தலையெழுத்தையே மாற்றிவிடலாம்!” என்று அவனிடம் சொன்னார் தேசிகன்.
சிறுவன் முகத்தில் புன்னகை தவழத் தொடங்கியது. லட்சுமி ஹயக்ரீவர் சந்நதிக்கு தேவநாதனை அழைத்துச் சென்றார் தேசிகன்.
“உனக்குக் கல்வி அறிவு உண்டாகவேண்டுமென ஹயக்ரீவரிடம் மனதாறப் பிரார்த்தனை செய்துகொள்!” என்று அவனிடம் கூறினார்.
அவனும் இறைவனிடம் மனமுருகி வேண்டினான்.

ஹயக்ரீவரைப் பார்த்து தேசிகன் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்:

விலுப்த மூர்தன்ய லிபி க்ரமாணாம்
ஸுரேந்த்ர சூடாபத லாலிதானாம் |
த்வதங்க்ரி ராஜீவ ரஜ: கணானாம்
பூயான் ப்ரஸாதோ மயி நாத பூயாத் ||

இதன் பொருள்- யாருடைய பாத தூளியைத் தேவர்களும் தங்கள் தலையில் தாங்க நினைக்கிறார்களோ,
யாருடைய பாத தூளி பிரம்மா எழுதிய தலையெழுத்தையே மாற்ற வல்லதாக இருக்கிறதோ,
அத்தகைய ஹயக்ரீவப் பெருமாளின் பாத தூளி எப்போதும் என் தலையில் இருந்து, பிரம்மா எழுதிய தலையெழுத்தை மாற்றி அருளட்டும்.
அப்போது அர்ச்சகர் சிறுவனின் தலையில் ஹயக்ரீவரின் பாதுகையான சடாரியை வைத்தார்.
“இப்போது நீ பாடசாலைக்குச் செல்!” என்று சொன்னார் தேசிகன். மலையிலிருந்து இறங்கிப் பாடசாலைக்கு அவன் சென்றவாறே,
அவனது குருமார்கள் அவனது முகத்தில் புதுப்பொலிவு தென்படுவதைக் கண்டார்கள்.
அவனைப் பாடசாலையிலிருந்து விரட்டிய அவர்களே மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள்.
மறுநாள் முதல் மிகச் சரியான ஸ்வரத்தோடும் உச்சரிப்போடும் வேதம் சொல்லத் தொடங்கினான் தேவநாதன்.
அவனது ஆற்றலைக் கண்டு அனைவரும் வியந்தார்கள்.

“தலையெழுத்து சரியில்லை”, “தலையெழுத்து சரியில்லை” என எல்லாரும் அச்சிறுவனைப் பற்றிச் சொன்னார்களே!
அந்தத் தலையெழுத்து எப்படி மாறியது? ராமனின் பாதுகையிலுள்ள தூளி பட்டவுடன் எப்படி அகலிகையின் தலையெழுத்து மாறியதோ,
அதுபோல் ஹயக்ரீவரின் பாதுகை எப்போது சிறுவனது தலையில் பட்டதோ, அப்போதே அவனது தலையெழுத்தும் மாறிவிட்டது!

இவ்வாறு படைப்புக் கடவுளான பிரம்மாவையே படைத்தவராகவும், பிரம்மா எழுதிய தலையெழுத்தையே மாற்றவல்லவராகவும்
திருமால் திகழ்வதால் அவர் ‘விஸ்வயோனி:’ என்றழைக்கப்படுகிறார்.
விஸ்வம் என்பது உலகைப் படைத்த பிரம்மாவைக் குறிக்கிறது.
அந்த பிரம்மாவுக்கும் யோனியாகத் (காரணமாக) திருமால் விளங்குவதால்
‘விஸ்வயோனி:’ என்று ஸஹஸ்ரநாமத்தின் 151-வது திருநாமம் அவரைத் துதிக்கிறது.
“விச்வயோனயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் தலையெழுத்தை நல்ல விதத்தில் திருமால் மாற்றியருளுவார்.

——————

152. புநர்வஸவே நமஹ (Punarvasavey namaha)

தாரகன் என்ற அசுரனுக்குத் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என மூன்று மகன்கள் இருந்தார்கள்.
அவர்கள் பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்து, வானில் பறக்கும் மூன்று மாநகரங்களைப் பெற்றார்கள்.
மேலும், தங்கள் மூவருக்கும் சாகா வரம் வேண்டுமென்றும் பிரம்மாவிடம் வேண்டினார்கள்.
ஆனால் சாகா வரம் என்று ஒரு வரமே இல்லையெனக் கூறி பிரம்மா மறுக்கவே, வானில் பறந்து கொண்டிருக்கும் மூன்று நகரங்களும்
ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, ஒரே அம்பினால் மூவரையும் தாக்கினால் மட்டுமே தங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென வரம் பெற்றார்கள்.

அந்த மூன்று அசுரர்களும் தேவர்களையும் முனிவர்களையும் சொல்ல வொண்ணாத துயருக்கு உள்ளாக்கினார்கள்.
அதனால் தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானின் உதவியை நாடினார்கள்.
“சரியான தருணம் வரும்போது அந்த மூன்று அசுரர்களையும் நான் அழிப்பேன்!” என்று சிவபெருமான் அவர்களுக்கு உறுதியளித்தார்.
அந்த மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயம் நெருங்கியது. அப்போது சிவபெருமான் பூமியைத் தனது தேராக்கினார்.
பிரம்மாவைத் தேரோட்டியாக அமர்த்தினார். சூரியனையும் சந்திரனையும் தேர்ச்சக்கரங்களாக ஆக்கினார்.
மேரு மலையை வில்லாக்கினார். வாசுகியெனும் பாம்பை அதில் நாணாகக் கட்டினார்.

அந்த வில்லில் பூட்டுவதற்குரிய சரியான அம்பு அவருக்குத் தேவைப்பட்டது. அந்த அம்பு எப்படி இருக்கவேண்டும் என்றால்,
சேராத பொருள்களையும் சேர்க்க வல்லதாக இருக்க வேண்டும். அப்போது தான் தனித்தனியே பறந்து செல்லும்
இந்த நகரங்களை ஒன்றாகச் சேர்த்து அந்த அம்பால் வீழ்த்த முடியும். அவ்வாறு சேராததைச் சேர்க்கும் அம்புக்கு
எங்கே செல்வது என யோசித்தார் சிவபெருமான். திருமாலுக்குத் தான் சேராதவற்றைச் சேர்க்கும் ஆற்றல் உண்டு.

“நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்குகுடி திருவிண்ணகர்க் கண்டேனே”

என்று எதிர்மறையான பொருள்களையும் திருமால் இணைப்பதாக நம்மாழ்வார் பாடியுள்ளார்.
எனவே திருமாலையே தனது வில்லில் அம்பாக இருக்கும்படிப் பரமசிவன் வேண்டத் திருமாலும் சம்மதித்தார்.
மூன்று நகரங்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்தன. அப்போது மேருவெனும் வில்லில் வாசுகியெனும் நாணோடு இணைத்துத்
திருமாலை அம்பாகப் பூட்டினார் சிவபெருமான். அப்போது சிவபெருமானுக்குள் திருமால் நுழைந்தார்.
அனைத்துலகங்களையும் உயிர்களையும் படைத்த போது, அவற்றின் ஆதாரமாக இருந்து அவற்றைத் தாங்குவதற்காகத்
திருமால் அவற்றுக்குள் நுழைந்தார். அவ்வாறு நுழைந்த திருமால் பிரம்மா, சிவன், இந்திரன் தொடங்கி
அனைத்து உயிர்களுக்குள்ளும் திருமால் உறைகிறார். இது அவரது முதல் நுழைவாகும்.

இப்போது முப்புரங்களை எரித்தலாகிய குறிப்பிட்ட இந்தச் செயலுக்காக இரண்டாவது முறையாக
சிவபெருமானுக்குள் நுழைந்தார் திருமால். அவ்வாறு உள்ளே நுழைந்த திருமால் தந்த வல்லமையால்,
திருமாலையே அம்பாகப் பரமசிவன் எய்திட, அந்த அம்பு முப்புரங்களாகிய அம்மூன்று நகரங்களையும் அழித்தது.
திரிபுர சம்ஹாரம் எனப்படும் இச்சரித்திரத்தைத் திருமங்கையாழ்வார்,

“குழல்நிற வண்ண நின் கூறு கொண்ட
தழல்நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு அது ஆனவனே”

என்று பாடியுள்ளார். ‘வஸு:’ என்றால் உள்ளே நுழைந்து வாசம் செய்பவன் என்று பொருள்.
எல்லா உயிர்களுக்குள்ளும் திருமால் வசிக்கிறார் என்பதை இது குறிக்கிறது.
ஏற்கெனவே அனைத்துயிர்களுக்குள்ளும் தான் இருந்தாலும், திரிபுர சம்ஹாரம் போன்ற குறிப்பிட்ட செயல்களை நிறைவேற்றுவதற்காகப்
பரமசிவன் போன்ற தேவர்களுக்குள் இரண்டாவது முறையாகத் திருமால் நுழைகிறார்.
‘புன:’ என்றால் மீண்டும் என்று பொருள்.
அப்படி மீண்டும் தேவர்களுக்குள் நுழைந்து தான் விரும்பிய செயலைச் சாதிப்பதால் ‘புனர்வஸு:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 152-வது திருநாமமாகும்.
“புனர்வஸவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எதையும் தாங்கும்
உடல்வலிமையையும் மனவலிமையையும் திருமால் தந்தருள்வார்.

—————-

153. உபேந்த்ராய நமஹ (Upendraaya namaha)

(‘உபேந்த்ர:’ என்ற 153-வது திருநாமம் தொடங்கி, ‘நியம:’ என்ற 163-வது திருநாமம் வரையிலுள்ள 11 திருநாமங்கள்
திருமாலின் வாமன அவதாரத்தின் பெருமையை விளக்க வந்தவை)
ஆயர்கள் இந்திரனுக்கு விழா எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது குறுக்கிட்ட கண்ணன்,
“எதற்காக இந்த விழா எடுக்கிறீர்கள்?” என்று கேட்டான். “இந்திரன் தான் நமக்கு மழை தருகிறான்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்விழா அனுசரிக்கப்படுகிறது!” என்றார் நந்தகோபர்.

அதற்குக் கண்ணன், “மழை பொழிய வேண்டியது இந்திரனின் கடமையாயிற்றே! அதற்காக நீங்கள் ஏன் விழா என்ற பெயரில்
கையூட்டு வழங்குகிறீர்கள்?” என்று கேட்டான். ஆயர்கள் பதில் உரைக்க முடியாமல் திகைத்தனர்.
“இவ்வாறு இந்திரனுக்கு விழா எடுப்பதற்குப் பதிலாக கோவர்த்தன மலைக்கு விழா எடுங்கள். அந்த மலை இருப்பதால் தான்
மேகங்கள் இங்கு வந்து மழை பொழிகின்றன. நம் ஆடு, மாடுகள் அந்த மலைக்குத் தான் மேய்ச்சலுக்குச் செல்கின்றன.
சிறுவர்களான நாங்களும் அங்கு சென்று தான் விளையாடுகிறோம். இப்படிப் பலவிதமான நன்மைகள் செய்யும்
அந்த கோவர்த்தன மலைக்குப் படையல் இடுவதே சிறந்ததாகும்!” என்று சொன்னான் கண்ணன்.

கண்ணனின் பேச்சை அப்படியே பின்பற்றி, ஆயர்கள் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்தார்கள்.
கண்ணனே ஒரு பேருருவம் எடுத்துக் கொண்டு, “நான் தான் கோவர்த்தன மலைக்கு அதிபதியான தேவதை!” என்று சொல்லி,
அவர்கள் படையலிட்ட அனைத்துப் பண்டங்களையும் உண்டான். ஆயர்களும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள்.
சிறிது நேரத்தில் மழைத் தூறல் போடவே ஆயர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

“கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்த சிறிது நேரத்திலேயே மழை வருகிறதே!” என மனம் மகிழ்ந்தார்கள்.
ஆனால் போகப் போக அந்தத் தூறல் கல் மழையாக மாறத் தொடங்கியது. தனக்குச் செய்ய வேண்டிய பூஜையைச் செய்யாததால்,
ஆயர்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பொழிந்த கல் மழை அது என அவர்கள் உணரத் தொடங்கினார்கள்.
கண்ணனின் திருவடிகளைச் சரண் புகுந்தார்கள்.

ஆயர்களையும் ஆநிரைகளையும் காக்கும் பொருட்டுக் கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்தான்.
இந்திரன் ஒரு வாரம் கடும் மழையைப் பொழிவித்தான். ஒரு வார காலமும் கண்ணனும் கோவர்த்தனக்கிரியைத் தாங்கிக் கொண்டு
ஆய்ப்பாடியைக் காத்தான். அதற்குமேல் மழை பொழிவிக்க இந்திரனிடம் தண்ணீர் இல்லை. அந்நிலையில் தனது தவறை உணர்ந்தான் இந்திரன்.
“திருமாலின் அவதாரமாகிய கண்ணனிடத்தில் பிழை இழைத்து விட்டோமே!” என்ற அச்சத்தில் காமதேனுவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு
ஆய்ப்பாடிக்கு வந்தான் இந்திரன்.

காமதேனுவைப் பார்த்துக் கண்ணன் முகம் மலர்ந்த அளவில், இந்திரனும் கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். கண்ணனும் இந்திரனை மன்னித்தான். கோவர்த்தன மலையைக் கீழே வைத்தான்.
அப்போது இந்திரன், ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்துத் தந்த கண்ணபிரானைக் கௌரவிக்கும் விதமாகக்
கண்ணனுக்குக் கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
அத்தோடு மட்டுமின்றி, ‘உபேந்திரன்’ என்ற பட்டத்தையும் கண்ணனுக்கு அளித்தான் இந்திரன்.
“ஆஹா! அருமையான பட்டம்!” என்று சொல்லிக் கண்ணனும் ஏற்றான்.

ஆனால் சற்று சிந்தித்த இந்திரன், “கண்ணா! மீண்டும் ஒரு பிழை செய்து விட்டேன்!
‘உபரீந்திரன்’ (உபரி+இந்திரன்) – அதாவது ‘இந்திரர்களுக்கெல்லாம் இந்திரன்’ என்று பட்டமளிக்க நினைத்தேன்.
ஆனால் பதற்றத்தில், ‘உபேந்திரன்’ (உப+இந்திரன்) – ‘இந்திரனின் உதவியாளன்’ என்று உளறி விட்டேனே! என்னை மீண்டும் மன்னித்து விடு!” என்றான்.
அதற்குக் கண்ணன், “தவறில்லை இந்திரா! நான் வாமனனாக உன் தாய் அதிதியின் வயிற்றில் பிறந்தேன் அல்லவா?
அந்த அவதாரத்தில் நீ எனக்கு அண்ணன்.நான் உனக்குத் தம்பி. ‘உப’ என்ற சொல்லுக்குத் தம்பி என்ற பொருளும் உண்டு.
உபேந்திரன் என்றால் இந்திரனின் தம்பியான வாமன மூர்த்தியைக் குறிக்கும்.
நீ அளித்த பட்டம் எனது முன் அவதாரத்தைக் குறிப்பிடுவதாக நான் எடுத்துக் கொள்கிறேன்! நீ வருந்தாதே!” என்றான்.
கண்ணன் கூறியது போல், இந்திரனின் தம்பியான வாமன மூர்த்தியாக அவதரித்தமையால் ‘உபேந்த்ர:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 153-வது திருநாமம்.
“உபேந்த்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எப்போதும் திருமால் பக்கபலமாக இருந்து அருள்புரிவார்.

——————

154. வாமனாய நமஹ (Vaamanaaya namaha)

இந்திரனின் தலைமையில் தேவர்களும், மகாபலி தலைமையில் அசுரர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்தார்கள்.
அந்தப் போரில் இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டு மகாபலி இறந்தான். இறந்து போன மகாபலியின் சடலத்தை அசுரர்கள்
தங்கள் குருவான சுக்கிராச்சாரியாரிடம் கொண்டு சென்றார்கள். சுக்கிராச்சாரியார் தமது மந்திர பலத்தால்
இறந்து போன மகாபலியை மீண்டும் உயிர்த்தெழச் செய்தார். மகாபலிக்காகப் பெரும் வேள்வி செய்தார்
சுக்கிராச்சாரியார். அந்த வேள்வித் தீயில் இருந்து ஆயுதங்களும், தேர்களும், படைகளும் உருவெடுத்து வந்தன.
புதிய உத்வேகத்துடன் ஃபீனிக்ஸ் பறவையைப் போலப் புறப்பட்டு இந்திரனைத் தாக்க வந்தான் மகாபலி.

அவன் வரும் வேகத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், தேவலோகத்தை விட்டு ஓடினார்கள்.
“இனி நானே அனைத்துலகுக்கும் அரசன்!” என்று சொன்ன மகாபலி, இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.
தேவர்களின் தாயான அதிதி தேவி, தன் கணவரான கச்யப முனிவரிடம், “நம் மகன்களான தேவர்கள் எங்கு சென்றார்கள்
என்றே தெரியவில்லையே! அவர்களின் இருப்பிடத்தை எவ்வாறு கண்டறிவது? மேலும், மகாபலியை வீழ்த்தி
தேவலோகத்தைத் தேவர்கள் கைப்பற்றி, இழந்த செல்வத்தை மீண்டும் பெற என்ன வழி?” என்று கேட்டாள்.

“நீ பன்னிரண்டு நாட்களுக்குப் பால் மட்டும் அருந்தி பயோ விரதம் என்ற விரதத்தை அனுஷ்டித்தால்,
அதனால் திருமால் மனமுகந்து உனக்கு அருள்புரிவார்!” என்றார் கச்யபர்.
அதிதி தேவியும் அவ்வாறே பயோ விரதத்தைப் பன்னிரண்டு நாட்கள் அனுஷ்டித்தாள்.
விரதம் பூர்த்தியானதும் திருமால் அவளுக்குக் காட்சியளித்து, “நான் உனக்கு மகனாக அவதரிப்பேன்!” என்று வாக்களித்தார்.

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அதிதியின் மகனாகக் குள்ளமான உருவத்துடன் திருமால் அவதாரம் செய்தார்.
குள்ளமான தோற்றம் கொண்டிருந்தமையால் ‘வாமனர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.
கையில் கமண்டலமும் மார்பில் மாந்தோலும் ஏந்தியபடி மகாபலியின் யாக சாலைக்குச் சென்றார் வாமனர்.
நர்மதா நதிக்கரையில் மகாபலிச் சக்கரவர்த்தி யாகம் செய்து கொண்டிருந்தான். யாசகம் கேட்டு வந்த பிரம்மச்சாரியாக உள்ளே நுழைந்த
வாமனரின் திருமேனி ஒளியைக் கண்டு, அங்கிருந்த அனைவரும் பிரமித்துப் போனார்கள்.
“வாருங்கள்! வாருங்கள்! நீங்கள் வந்தமையால் என் யாகம் வெற்றி அடைந்தது!” எனச் சொல்லி அவரை வரவேற்று
அவருக்கு ஆசனம் அளித்த மகாபலி, அவரது கால்களைக் கழுவிவிட்டான். அவர் கால் கழுவிய தீர்த்தத்தைத் தன் தலைமேல் தெளித்துக் கொண்டான்.

“உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்! நான் தருகிறேன். என்னிடம் தானம் பெற்ற பின் நீங்கள் வேறு யாரிடமும்
தானம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்படக் கூடாது! கேளுங்கள்!” என்றான் மகாபலி.
“எனக்கு என் காலால் மூன்றடி நிலம் மட்டும் போதும்!” என்றார் வாமனர். சிரித்தான் மகாபலி. மார்பைத் தட்டிக் கொண்டு,
“அனைத்துலகங்களுக்கும் சக்கரவர்த்தியான இந்த மகாபலியிடம் வந்து கேவலம் மூன்றடி நிலம் கேட்கிறீர்களே!” என்று ஆணவத்துடன் சொன்னான்.
“முதலில் மூன்றடி நிலம் தாருங்கள்! அப்புறம் பார்க்கலாம்!” என்றார் வாமனர்.

தன் மனைவி விந்தியாவளியை அழைத்தான் மகாபலி. தங்கக் கமண்டலத்தில் அவள் தண்ணீர் எடுத்து வந்தாள்.
தாரை வார்த்துக் கொடுக்கப் போனான் மகாபலி. அப்போது “நில்!” என்று தடுத்தார் அவனது குருவான சுக்கிராச்சாரியார்.
“வந்திருப்பவன் நாராயணன். அதை அறியாமல் நீ அவனுக்குத் தானம் செய்யப் பார்க்கிறாய்.
நீ அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவாய்!” என எச்சரித்தார்.

ஆனால் மகாபலியோ, “பரவாயில்லை! நான் சொன்ன வாக்கை மீற மாட்டேன். இவருக்கு நான் தானம் செய்தால்,
திருமாலுக்கே தானம் செய்தவன் என்ற பெருமை எனக்கு ஏற்படுமல்லவா? அதனால் தானம் கொடுத்தே தீருவேன்!” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தான்.
“நீ எல்லாச் செல்வங்களையும் இழப்பாய்!” என்று சுக்கிராச்சாரியார் சபித்தார்.மகாபலி வாமன மூர்த்திக்குத் தாரை வார்த்துக் கொடுத்தான்.
அவன் தாரை வார்த்துத் தந்த தீர்த்தம் வாமன மூர்த்தியின் கையில் பட்டவாறே, கிடுகிடுவென வளரத் தொடங்கினார் வாமனர்.

குள்ள வாமனராக வந்து, பின் திரிவிக்கிரமனாகப் பேருருவம் கொண்டு உலகை அளந்த விதத்தைப்
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்னும் திவ்வியக்கவி மிக அழகாக வர்ணிக்கிறார்:

“முன்னம் குடைபோல் முடிநாயக மணிபோல்
மன்னும் திலகம்போல் வாள் இரவி – பொன்னகலம்
தங்கு கௌத்துவம் போலும் உந்தித் தடமலர் போல்
அங்கண் உலகளந்தாற்கு ஆம்.”

முதலில் வாமன மூர்த்தியின் தலைக்கு மேல் குடைபோல் தெரிந்ததாம் சூரியன்.
வாமனர் வளர வளர, அவரது கிரீடத்தில் பதித்த மணிபோல் சூரியன் தெரியத் தொடங்கியது.
மேலும் அவர் வளரவே, அவர் நெற்றியிலுள்ள திலகம் போல் இருந்தது சூரியன்.
இன்னும் வளர்ந்திட, அவரது நெஞ்சில் அணிந்திருக்கும் கௌஸ்துப மணிபோல் தெரிந்தது சூரியன்.
இன்னமும் வளர, அவரது நாபிக் கமலம் போல் தெரியத் தொடங்கியது சூரியன்.
இவ்வாறு உலகளந்த பெருமாள் மெல்ல மெல்ல சூரியனைத் தாண்டி வளர்ந்து கொண்டே போனார் என்பதைக் கவி நயத்துடன் தெரிவிக்கிறார்.

ஓரடியால் மண்ணுலகையும், மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்து விட்டு, மூன்றாவது அடியை எங்கே வைப்பதென
மகாபலியிடம் கேட்டார் திருமால். அப்போது மகாபலி, தான் அகங்காரத்தை விட்டதற்கு அடையாளமாகத் தன் தலையிலிருந்து கிரீடத்தை அகற்றி,
“என் தலைமேல் வைத்திடுங்கள்!” என்று உலகளந்த பெருமாள் முன் தலைகுனிந்து நின்றான்.
தன் திருவடியை அவன் தலைமேல் பதித்து அவனைப் பூமிக்குக் கீழே உள்ள சுதல லோகத்துக்கு அனுப்பினார் திருமால்.

திருமால் வாமனாவதாரம் எடுக்கும் முன், கச்யபர் தேவர்களிடம், “வாமன மூர்த்தி இந்திரனின் யாகசாலைக்குச் செல்லும் போது
அங்கே நீங்கள் புல், செடி, கொடி, மரம், விலங்கு, பறவை என ஏதோ ஒரு வடிவில் இருங்கள்!” என அறிவுறுத்தியிருந்தார்.
அவ்வாறே தேவர்களும் பலவிதமான வடிவங்களில் மகாபலியின் யாகசாலையில் ஒளிந்திருந்தார்கள்.
வாமன மூர்த்தியின் திருமேனி ஒளி செடி கொடி வடிவில் இருந்த தேவர்களின் மேல் பட்டவுடனேயே,
அவர்கள் இழந்த செல்வத்தையும், தேவலோக ராஜ்ஜியத்தையும் பெற்றுவிட்டார்கள்.

மகாபலி திருமாலால் தண்டிக்கப்பட்டதாக நாம் நினைக்கிறோம். அதுவும் தவறு. வாமனரின் திருமேனி ஒளி மகாபலி மேல் பட்டதன் விளைவாக,
பூமிக்குக் கீழே உள்ள சுதலம் எனும் லோகத்தில் சிறந்த பதவியைப் பெற்றான் மகாபலி. அவன் ஏழு சிரஞ்ஜீவிகளுள் ஒருவனுமானான்.
அடுத்த கல்பத்தில் இந்திரப் பதவியும் அவனுக்குக் கிட்டும் என்று திருமால் உறுதி அளித்தார்.

‘வாமன:’ என்றால் ‘தன் திருமேனி ஒளியால் அனைவருக்கும் நன்மையை உண்டாக்குபவர்’ என்றும் பொருள்.
“த்ருஷ்ட்யா ஸ்வகாந்த்யா: வாமானி ஸுகானி நயதீதி ய: ஸ வாமன:” என்கிறது வடமொழி நிகண்டு.
(எனினும், ‘வாமன:’ என்ற சொல் உலக வழக்கில் ‘குள்ளமானவர்’ என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது).
தேவர்கள், அசுரர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் நன்மையையே செய்தது வாமன மூர்த்தியின் திருமேனி ஒளி.

தேவர்களும் இழந்த செல்வத்தைப் பெற்றார்கள், மகாபலியும் சுதல லோகத்தில் நற்பதவியையும், சிரஞ்ஜீவியாக வாழும் பேற்றையும் பெற்றான்.
இவ்வாறு அனைவருக்கும் நன்மை செய்யும் திருமேனி ஒளியை உடையவராக விளங்குவதால், திருமால் ‘வாமன:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 154-வது திருநாமம்.
“வாமனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தாங்கள் இழந்த செல்வங்கள் அனைத்தையும்
மீண்டும் பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

———

155. ப்ராம்சவே நமஹ (Praamshave namaha)

‘ப்ராம்சு:’ என்றால் பேருருவம் தரித்து அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவர் என்று பொருள்.
த்ரிவிக்ரமனாக ஓங்கி உலகளந்து பேருருவம் தாங்கி இருப்பதால், திருமால் ‘ப்ராம்சு:’ எனப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 155-வது திருநாமம்.
“ப்ராம்சவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்க்கையில் ஓங்கி உயரும் படித்திருமால் அருள்புரிவார்.

குறிப்பு: வாமனாவதாரம் பற்றி மேலும் பல குறிப்புகளை அடுத்தடுத்த திருநாமங்களின் விளக்கங்களில் காணலாம்.

————–

156. அமோகாய நமஹ (Amoghaaya namaha)

(‘உபேந்த்ர:’ என்ற 153-வது திருநாமம் தொடங்கி, ‘நியம:’ என்ற 163-வது திருநாமம் வரையிலுள்ள 11 திருநாமங்கள்
திருமாலின் வாமன அவதாரத்தின் பெருமையை விளக்க வந்தவை)
தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கநாதனின் மேன்மைகளையும், அவனது திருநாம சங்கீர்த்தனத்தின் வைபவத்தையும்
விளக்கும் விதமாகத் ‘திருமாலை’ என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார்.
“திருமாலையை அறியாதார் திருமாலையே அறியாதார்” என்னும் தொடர் அந்நூலின் பெருமைக்குச் சான்றாகும்.

அந்தத் திருமாலையில் அரங்கனை ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வந்த தொண்டரடிப் பொடியாழ்வார்,
திடீரெனத் தனது குற்றங்களை எல்லாம் எண்ணிப் பார்த்தார். அரங்கனின் பெருமைகளையும் எண்ணிப் பார்த்தார்.

“உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்று இல்லா
கள்ளத்தே நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே”

என்ற பாடலின் வாயிலாக, “அவ்வளவு உயர்ந்தவனான அரங்கனின் அருகே நிற்பதற்குக் கூட நீசனான அடியேனுக்குத் தகுதியில்லை!” என்று கூறி
அரங்கனின் கோயிலை விட்டு விலகிச் செல்ல முயன்றார். அவரைத் தடுத்தான் அரங்கன்.
“ஆழ்வீர்! எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான். “இல்லை! இல்லை! நீ மிகவும் உயர்ந்தவன். அடியேனோ மிக மிகத் தாழ்ந்தவன்.

உன் தொண்டன் என்று வேடமிட்டுக் கொண்டு கள்ளத்தனத்துடன் உன்முன்னே வந்து நின்று உன்னையே ஏமாற்றப் பார்த்து விட்டேன்.
என் குற்றங்களை எல்லாம் எண்ணிப் பார்க்கையில், உனக்கு எதிரே நிற்கும் தகுதி கூட அடியேனுக்கு இல்லை.
நான் செல்கிறேன்!” என்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
அரங்கன், “ஆழ்வீர்! நான் த்ரிவிக்கிரமனாக ஓங்கி உலகை அளந்தேனே! எதற்காக தெரியுமா?” என்று கேட்டான்.
“தேவர்கள் இழந்த ராஜ்ஜியத்தை மகாபலியிடம் இருந்து யாசகமாகப் பெற்று மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நீ உலகளந்தாய்!” என்றார் ஆழ்வார்.

“மகாபலியுடன் போர் புரிந்து அவனை நான் எளிதாக வென்றிருப்பேனே! அல்லது எனது சக்கராயுதத்தைக் கொண்டு
மகாபலியை வதைத்து இந்திரனை அவன் பதவியில் அமர்த்தியிருப்பேனே!
இதற்காக நான் ஏன் உலகத்தை எல்லாம் தாவி அளக்க வேண்டும்?” என்று கேட்டான் அரங்கன்.
“மாயனான உனது மாயங்களை நீயே விளக்கியருள வேண்டும்!” என்று வேண்டினார் ஆழ்வார்.

அதற்கு அரங்கன், “எனது திருவடி ஸ்பரிசத்தால் அனைத்து உயிர்களுக்கும் பக்தி, ஞானம், வைராக்கியம் அனைத்தும் வளரட்டும்
என்ற நோக்கில் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைவரின் தலைகளிலும் எனது திருவடிகளைப் பதிக்க நினைத்தேன்.
அவ்வாறு அனைவர் தலைகளிலும் திருவடி பதிப்பதற்கு மகாபலியையும் தேவர்களையும் வியாஜமாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

அப்போது, நல்லவர்-கெட்டவர், மனிதன்-மிருகம், நாத்திகர்-ஆத்திகர், கற்றவர்-கல்லாதவர், ஏழை-பணக்காரர் என எந்த ஏற்றத் தாழ்வும்
பாராது அனைவரையும் என் திருவடிகளால் தீண்டினேன் அல்லவா? இதிலிருந்தே நான் யாரையும் குற்றம் கூறி விலக்குபவன் அல்ல
என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களையும் விலக்க மாட்டேன். என்னை விட்டுச் செல்லாதீர்கள்!” என்றான்.
அரங்கனின் திருவுள்ளத்தை உணர்ந்த ஆழ்வார், மீண்டும் கோயிலுக்குள் வந்து அவனை வணங்கி,

“தாவியன்று உலகம் எல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே.”

என்ற பாசுரத்தைப் பாடினார்.
‘மோக:’ என்றால் வீண்போவது என்று பொருள்.
‘அமோக:’ என்றால் வீண்போகாதது என்று பொருள். திருமால் செய்யக்கூடிய எந்தச் செயலும் வீண்போவதில்லை.
அவர் மகாபலியிடமிருந்து யாசகம் பெறுவதற்காகவும், தேவர்களுக்கு ராஜ்ஜியத்தைத் தருவதற்காகவும் உலகை அளந்ததாகப்
பொதுவாக எல்லாரும் கருதுவார்கள். ஆனால் அதனுள் அனைத்து ஜீவராசிகளின் தலைகளிலும் கால்பதிக்க வேண்டும் என்ற
ஒரு முக்கியமான நோக்கத்தை வைத்து, அதை நிறைவேற்றிக் கொண்டார்.

இதுபோல், தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குள்ளும் ஒரு உயர்ந்த நோக்கத்தை வைத்து,
அந்நோக்கத்தைச் சரியாக நிறைவேற்றிக் கொள்வதால், திருமால் செய்யும் எந்தச் செயலும் வீண்போவதில்லை.
அதனால் ‘அமோக:’ என்று அவர் அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 156-வது திருநாமம்.
“அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் புரியும் எந்தச் செயலும் வீண்போகாதபடித் திருமால் அருள்புரிவார்.

———————

157. சுசயே நமஹ (Chuchaye namaha)

வேதம் அனைத்துக்கும் வித்தாக விளங்குவது ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை.
முப்பதே பாசுரங்களில் அனைத்து மறைகளின் சாரத்தையும் எளிய இனிய தமிழில் ஆண்டாள் வழங்கினாள். அதனால் தான்,

“பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் – கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.”

என்று சொல்கிறோம். திருமாலின் த்ரிவிக்கிரம அவதாரத்தைத் திருப்பாவையில் மூன்று இடங்களில் பாடியுள்ளாள் ஆண்டாள்.
மூன்றாம் பாசுரத்தில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்றும்,
பதினேழாம் பாசுரத்தில் “அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே” என்றும்,
இருபத்து நான்காம் பாசுரத்தில் “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி” என்றும் பாடியுள்ளாள்.

இவற்றுள் “ஓங்கி உலகளந்த…” பாசுரத்தின் பொருளைத் திருப்பாவை ஜீயரான ராமானுஜர், தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு சீடர் எழுந்து, “சுவாமி! ஒரு ஐயம்! ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று த்ரிவிக்கிரமப் பெருமாளை ஆண்டாள் பாடுகிறாளே!
உண்மையிலேயே அவர் உத்தமரா?” என்று கேட்டார்.
“புருஷோத்தமரான பெருமாளை ‘உத்தமன்’ என்று சொல்வதில் என்ன தவறு?” என்று கேட்டார் ராமானுஜர்.

அந்தச் சீடரோ, “இல்லை சுவாமி! த்ரிவிக்கிரமப் பெருமாள் உண்மையில் ஏமாற்று வேலை தானே செய்தார்.
சிறிய கால்களை மகாபலியிடம் காட்டி மூவடி நிலம் வேண்டுமென யாசித்து விட்டுப் பெரிய கால்களால் மூவுலகங்களையும் அளந்தாரே!
இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைக்காரரைப் போய் ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாளே! இதை எப்படி ஏற்க முடியும்?” என்றார்.

அதற்கு மிக அழகாக விடையளித்தார் ராமானுஜர்: “மனிதர்களில் நான்கு வகைகள் உண்டு-
அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன்.
பிறரை வஞ்சித்து, பிறரைக் கெடுத்து, அதைக் கண்டு மகிழ்ந்து வாழ்பவனுக்கு அதமாதமன் (sadist) என்று பெயர்.
பிறரைப் பற்றிக் கவலைப் படாமல் தான் வாழ்ந்தால் போதும் என்று சுயநலத்துடன் வாழ்பவனுக்கு அதமன் (selfish) என்று பெயர்.
தானும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்குடன் வாழ்பவனுக்கு மத்யமன் (ordinary soul) என்று பெயர்.
தான் கெட்டாலும் பரவாயில்லை, பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதித் தியாகம் செய்பவனுக்கே உத்தமன் (noble soul) என்று பெயர்.

இவ்வாறிருக்க, மகாபலியைத் த்ரிவிக்கிரமன் ஏமாற்றினார் என்று நீ சொல்கிறாயே!
மகாபலியை ஏமாற்றி அவனது சொத்தைத் த்ரிவிக்கிரமன் எடுத்துக் கொண்டாரா? இல்லையே!
அந்தச் சொத்துக்கு உண்மையான சொந்தக்காரனான இந்திரனிடம் தானே அதை மீட்டுக் கொடுத்தார்.
இந்திரன் இழந்த சொத்தைப் பெறவேண்டும் என்பதற்காக ‘வஞ்சகன்’ என்ற பெயரைத் த்ரிவிக்கிரமப் பெருமாள் ஏற்றுக் கொண்டாரே ஒழிய
இதில் பெருமாளுக்குச் சுயலாபம் எதுவுமில்லை. தனக்கு அவப்பெயர் உண்டானாலும் பரவாயில்லை,
தேவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று கருதியதால் தான்
த்ரிவிக்கிரமனை ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாள்!” என ராமானுஜர் விளக்கினார்.

வஞ்சகன் போல் மகாபலியிடம் வந்து, அவனை வஞ்சித்து அவனது சொத்தை அபகரித்தாலும்,
அதைத் திருமால் தனது சுயலாபத்துக்காகச் செய்யாமல், அசுரனிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்டு, அதற்குரியவர்களான தேவர்களிடம்
கொடுக்க வேண்டும் என்ற பொது நல நோக்கிலேயே செய்தார்.
எனவே அச்செயலோடு தொடர்புடைய தோஷங்களாலோ, பாபங்களாலோ தீண்டப்படாமல் உத்தமராகவே – தூயவராகவே விளங்குகிறார்.
‘சுசி:’ என்றால் தூயவர் என்று பொருள்.

எப்போதும் தூயவராக விளங்குவதால் திருமால் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 157-வது திருநாமம்.
“சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், மொழி, மெய் அனைத்தும் தூய்மையாக
இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

————————-

158. ஊர்ஜிதாய நமஹ (Oorjithaaya namaha)

மகாபலி மூவடி நிலம் தருவதாக வாமன மூர்த்திக்கு வாக்களித்தான். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே தீர வேண்டும்
என்ற உறுதியுடன் தன் கமண்டலத்தில் உள்ள நீரைக் கொண்டு தாரை வார்த்துக் கொடுத்தான்.
அவன் தாரை வார்த்த நீர் வாமனரின் கையில் பட்டது தான் தாமதம். கிடுகிடுவென அவர் வளரத் தொடங்கினார்.

“ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து அண்டம்மீது போகி
இருவிசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி
தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கினேனே!”

என்று வாமனர் த்ரிவிக்கிரமனாக வளர்ந்தமையைத் திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
அவ்வாறு நெடிய தோற்றம் கொண்டவராகத் த்ரிவிக்கிரமன் வளர்ந்தவாறே, “என்ன மாயம் இது?” என்றொரு குரல் ஒலித்தது.
அது மகாபலியின் மகனான நமுசியின் குரல். த்ரிவிக்கிரமனைப் பார்த்து, “ ‘மாயன்’, ‘மாயன்’ என்று உன்னை
எல்லோரும் அழைப்பது சரியாகத் தான் இருக்கிறது. மாயம் செய்து எங்களை ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டான் நமுசி.

“நான் யாரையும் ஏமாற்றவில்லையே!” என்றார் த்ரிவிக்கிரமன்.
“இல்லை! என் தந்தையிடம் சிறிய கால்களைக் காட்டி மூவடி நிலம் வேண்டும் என்று நீ யாசித்தாய்.
அந்தச் சிறிய கால்களைக் கருத்தில் கொண்டுதான் என் தந்தையும் மூவடி நிலம் தருவதாக வாக்களித்தார்.
ஆனால் நீயோ திடீரென விஸ்வரூபம் எடுத்துப் பெரிய கால்களைக் கொண்டு அனைத்து உலகங்களையும் அளந்து எங்களை
வஞ்சிக்கப் பார்க்கிறாய். என் தந்தையின் அப்பாவித் தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாயம் செய்யப் பார்க்கிறாய்!”
என்று குற்றம் சாட்டினான் நமுசி.

“நமுசி! நான் எப்போதுமே எங்கும் பரந்து இருப்பவன். உன் தந்தைக்குக் காட்சியளிப்பதற்காக என்னைக் குறுக்கிக் கொண்டு
குள்ள வாமனனாக வந்தேன். இப்போது எனது இயல்பான பேருருவத்துக்கு மாறிவிட்டேன்! அவ்வளவு தான்.
நான் உன் தந்தையை வஞ்சிக்கவில்லை!” என்றார் திரிவிக்கிரமன்.
ஆனால் அதை ஏற்காத நமுசி, “நீ யாசிக்கும் போது எடுத்துக் கொண்ட வாமன வடிவத்துடனேயே மூவடி அளந்து கொள்.
இந்தப் பேருருவத்தோடு அளப்பதை ஏற்க மாட்டேன்!” என்றான்.

அவன் கூற்றை மீறி, உலகைப் பேருருவத்துடன் அளக்கப் போனார் திரிவிக்கிரமன். அவரது திருவடிகளைப் பிடித்து,
“உன்னை அளக்க விட மாட்டேன்!” என்று தடுத்தான் நமுசி. அப்போது திரிவிக்கிரமன் தனது திருவடிகளால் நமுசியை உதைத்து
அவன் ஆகாயத்தில் சுழலும்படிச் செய்துவிட்டார். இச்சம்பவத்தைப் பெரியாழ்வார் பாடியுள்ளார்:

“என்னிது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ! அச்சோ!
வேங்கட வாணனே அச்சோ! அச்சோ!”

இவ்வாறு நமுசி போன்ற அசுர சக்திகளை அனாயாசமாக வீழ்த்தக் கூடிய பலம் பொருந்தியவராகத் திருமால் விளங்குவதால்
‘ஊர்ஜித:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 158-வது திருநாமம்.
“ஊர்ஜிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு உயர்ந்த உடல் வலிமையையும் மனவலிமையையும் திருமால் தந்தருள்வார்.

————-

159. அதீந்த்ராய நமஹ: (Atheendhraaya namaha)

இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், இந்திரனின் தாயான அதிதி தேவியின் வைரத் தோடுகளையும் நரகாசுரன்
அபகரித்துச் சென்றான். அவனை வதம் செய்து தன் உடைமைகளை மீட்டுத் தருமாறு கண்ணனிடம் பிரார்த்தித்தான் இந்திரன்.

சத்யபாமாவை அழைத்துக் கொண்டு கருட வாகனத்தில் நரகாசுரனின் இருப்பிடத்துக்குச் சென்ற கண்ணன்,
நரகாசுரனுடன் போர் புரிந்து அவனை வீழ்த்தினான். நரகாசுரன் சிறை வைத்திருந்த பதினாறாயிரம் அரசிளங்குமரிகளையும்,
அவன் அபகரித்து வைத்திருந்த இந்திரனின் குடையையும், அதிதியின் தோடுகளையும் மீட்டான் கண்ணன்.
(நரகாசுரவதம் பற்றியும், அந்த வதத்துக்கும் தீபாவளிப் பண்டிகைக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும்
வேறொரு திருநாமத்தின் விளக்கத்தில் விரிவாகக் காண உள்ளோம்.)
மீண்டும் சத்யபாமாவோடு கருட வாகனத்தில் ஏறிய கண்ணன், தேவலோகம் சென்று இந்திரனிடம் அவனது குடையையும்
அவனது தாயின் தோடுகளையும் ஒப்படைத்தான். இந்திரன் மனம் மகிழ்ந்து கண்ணனுக்குத் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டான்.

அப்போது, தேவலோகத்திலுள்ள பாரிஜாத மலரைக் கண்ட சத்யபாமா, அதைத்தன் கூந்தலில் சூடிக் கொள்ள எண்ணி,
அம்மலரைப் பறிக்கப் போனாள். ஆனால் இந்திராணி, “சாதாரண மனிதப் பெண்ணுக்குப் பாரிஜாத மலர் கேட்கிறதா?” என்று
கோபத்துடன் சொல்லவே, மனம் நொந்து போனாள். எதுவும் பேசாமல் கண்ணனுடன் துவாரகைக்குத் திரும்பிவிட்டாள் சத்யபாமா.

ஆனால் அவளது மனக்கலகத்தை அறிந்து கொண்ட கண்ணன், கருடனைத் தேவலோகத்துக்கு அனுப்பினான்.
பாரிஜாத மரத்தையே பெயர்த்து எடுத்து வந்து சத்யபாமாவின் அந்தப்புரத்தின் வாசலில் நட்டார் கருடன்.
“ஒரு மலருக்கு ஆசைப்பட்ட எனக்கு மரத்தையே என் கணவர் தந்து விட்டாரே!” என மனம் மகிழ்ந்தாள் சத்யபாமா.

எனினும், பாரிஜாத மரத்தைக் கண்ணன் கொண்டு சென்றதால் கோபம் கொண்டான் இந்திரன். தனக்காக நரகாசுரனை வதைத்து,
அவன் கவர்ந்து சென்ற குடையையும் தோடுகளையும் கண்ணன் மீட்டான் என்ற நன்றி விசுவாசம் இல்லாமல்
கண்ணனையே எதிர்த்துப் போர் புரிய வந்தான்.
கண்ணனும் யாதவ சேனையைத் திரட்டிக் கொண்டு இந்திரனின் சேனையை எதிர்த்துப் போரிட்டான்.
அச்சமயம் தனது வஜ்ராயுதத்தால் கண்ணனைத் தாக்க முற்பட்டான் இந்திரன்.
ஆனால் கண்ணனைத் தாக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டான அடுத்த நொடியே அவனது வலக்கை அசைவற்றுப் போனது.

அதிர்ந்து போன இந்திரன், தன் தவறை உணர்ந்தான். தன் சேனையை மீண்டும் அழைத்துக் கொண்டு தேவலோகம் சேர்ந்தான்.
ஆனாலும் அவனது வலக்கையை அசைக்க இயலவில்லை.
செயலிழந்த தன் கரம் மீண்டும் செயல்வடிவம் பெற என்ன வழி என்று பரமசிவனிடம் கேட்டான் இந்திரன்.
“திருநாங்கூரில் பதினொரு திருத்தலங்களில் திருமால் கோயில் கொண்டுள்ளார்.
அவற்றுள் ‘திருக்காவளம்பாடி’ என்னும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ‘கோபாலகிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் விளங்கும்
திருமாலை வழிபட்டால், உன் செயலிழந்த கை குணமாகும்!” என்றார் பரமசிவன்.

இந்திரனும் திருக்காவளம்பாடிக்கு வந்து திருமாலை வழிபட்டான்.
“நீ எனது தம்பியாக- உபேந்திரனாகப் பிறந்தவன் தானே எனக் கருதி உன்னையே தாக்க முற்பட்டேன்.
அதற்கான சரியான தண்டனையைப் பெற்றுவிட்டேன். நீ இந்திரர்களுக்கெல்லாம் இந்திரன்.
இந்திரர்களைக் காட்டிலும் மேம்பட்ட ‘அதீந்திரன்’ என்று இப்போது உணர்ந்தேன். என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

அவனது பிரார்த்தனையை ஏற்ற கோபால கிருஷ்ணப் பெருமாள், அவனது வலக்கரம் மீண்டும் செயல்படும்படி அருள்புரிந்தார்.
இந்தச் சரித்திரத்தைத் திருமங்கையாழ்வார்,

“ஏவிளங் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய கண்ணனே! களைகண் நீயே!”

என்று பாடியுள்ளார்.
இவ்வாறு, தேவேந்திரனின் தம்பியாக- உபேந்திரனாக அவதரித்தாலும், உண்மையில் தேவேந்திரனுக்கும் மேம்பட்டவராகத்
திருமால் விளங்குவதால் ‘அதீந்த்ர:’ என்றழைக்கப்படுகிறார்.
‘அதி’ என்றால் மேம்பட்ட என்று பொருள்.
‘அதீந்த்ர:’ என்றால் இந்திரனைக் காட்டிலும் மேம்பட்டவர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 159-வது திருநாமம்.
குறிப்பு: கீழே உபேந்த்ர என்ற 153-வது திருநாமம் இந்திரனுக்குத் தம்பியாக அவதரித்த திருமாலின் எளிமையைக் காட்டுகிறது.
அதீந்த்ர என்ற 159-வது திருநாமம் அவ்வாறு உபேந்திரனாக அவதரித்த போதும் அவர் மேன்மை குன்றாமல் இருக்கிறார்
என்று அவரது பெருமையைக் காட்டுகிறது.

“அதீந்த்ராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் உயர்ந்த பதவிகளையும்
பல பெருமைகளையும் அடையும்படித் திருமால் அருள்புரிவார்.

———————

160. ஸங்க்ரஹாய நமஹ: (Sangrahaaya namaha)

காஞ்சிபுரத்திலுள்ள திருவெஃகா என்னும் திருத்தலத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலின் திருக்குளத்தில்
ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஒரு மகான் தோன்றினார்.
பொய்கையில் பிறந்தமையால் ‘பொய்கையாழ்வார்’ என்று பெயர் பெற்றார்.
மகாபலிபுரத்திலுள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று ஒரு மகான் தோன்றினார்.
அவர் பிறக்கும் போதே மகா பக்தராகவும், மகா ஞானியாகவும் விளங்கினார்.
இத்தகைய பெரும் வாழ்வு பெற்றவராக விளங்கியமையால் ‘பூதத்தாழ்வார்’ என்று அழைக்கப்பட்டார்.
இங்கே பூதம் என்றால் சிறப்பாக வாழ்பவர் என்று பொருள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு பொய்கையில் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் ஒரு மகான் தோன்றினார்.
அவர் திருமாலைத் தரிசிக்க வேண்டும் என்ற பேரவாவுடன் பேய் போலச் சுற்றித் திரிந்தமையால் ‘பேயாழ்வார்’ என்று அழைக்கப்பட்டார்.

“ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எத்திசையும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று சிறப்பால்.”

என்று பாடினார் மணவாள மாமுனிகள்.
வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்த இம்மூன்று ஆழ்வார்களும் தற்செயலாகத் திருக்கோவலூருக்கு ஒரே நேரத்தில் வந்தார்கள்.
அப்போது நள்ளிரவு. மழை பொழிந்து கொண்டிருந்தது. ஒதுங்க இடம் தேடிய பொய்கையாழ்வார்,
மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தின் ரேழியில் சென்று சயனித்துக் கொண்டார்.
சற்று நேரத்தில் பூதத்தாழ்வார் வந்து ரேழியின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த பொய்கையாழ்வார்,
அறிமுகம் இல்லாதவராயினும் திருமால் அடியார் என்கிறபடியால் பூதத்தாழ்வாருக்கு ஒதுங்க இடம் கொடுத்தார்.
இருவர் சயனிக்க இடமில்லாமையால், இருவரும் அமர்ந்து கொண்டனர்.
சற்று நேரத்தில் பேயாழ்வாரும் வந்து கதவைத் தட்ட, அவருக்கும் இவர்கள் இடம் கொடுத்தார்கள்.
மூவர் அமர இடமில்லாமையால், மூவரும் நின்றுகொண்டார்கள்.

அப்போது மூவருக்கும் இடையே நான்காவதாக ஒருவர் புகுந்து அவர்களை நெருக்குவது போல் உணர்ந்தார்கள்.
வந்த நான்காம் நபர் யாரென்று பார்க்கும் ஆர்வத்தில்,

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.”

என்று பூமியையே அகலாக்கிக், கடல்நீரை நெய்யாக்கிச், சூரியனை ஒளியாக்கி ஒரு விளக்கேற்றினார் பொய்கையாழ்வார்.

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.”

என்று அன்பையே அகலாக்கி, ஆர்வத்தையே நெய்யாக்கி, சிந்தையையே திரியாக்கி, ஞானத்தை ஒளியாக்கி ஒரு விளக்கேற்றினார் பூதத்தாழ்வார்.
இருவரும் ஏற்றிய தீபங்களின் ஒளியால் வந்திருப்பவர் திருக்கோவலூரில் கோயில் கொண்டிருக்கும் உலகளந்த பெருமாள் என உணர்ந்த பேயாழ்வார்,

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று.”

என்று திருமாலைத் துதித்தார்.
தன் பக்தர்களான இவ்வாழ்வார்கள், பல்வேறு ஊர்களில் இருந்து தன்னைத் தேடி வந்தபடியால், அவர்களை
எதிர்கொண்டு அழைக்கும் விதமாகத் திருமால் அவர்களைத் தேடி வந்து, அவர்கள் இருந்த அந்தச் சிறு அறைக்குள்
அவர்களை அணைத்து உறவாட வந்தார்.அனைத்துலகங்களையும் அளந்தவரான போதும், இன்னும் பற்பல மேன்மைகள் இருப்பினும்,
தன் பக்தர்களுக்காகத் தன்னைக் குறைத்துக் கொண்டு அவர்களைத் தேடி வந்து அவர்களோடு கலக்கும்
இயல்பைக் கொண்டதால், ‘ஸங்க்ரஹ:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 160-வது திருநாமம்.

“ஸங்க்ரஹாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தேடி வந்து அவர்களுக்குத் திருமால் அருள்புரிவார்.
அடுத்து வர இருக்கும் மூன்று திருநாமங்களும் கூடத் திரிவிக்கிரமனின் திருக்குணங்களையே சொல்லப் போகின்றன.

——————–

161. ஸர்காய நமஹ: (Sargaaya namaha)

(‘உபேந்த்ர:’ என்ற 153-வது திருநாமம் தொடங்கி, ‘நியம:’ என்ற 163-வது திருநாமம் வரையிலுள்ள 11 திருநாமங்கள் திருமாலின்
வாமன அவதாரத்தின் பெருமையை விளக்க வந்தவை)
சுதபர் என்ற முனிவரும், அவரது மனைவி பிருச்னியும் திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தார்கள்.
திருமால் அவர்களுக்குக் காட்சியளித்து, “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
“உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்! உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்! உன்னைப் போலவே ஒரு பிள்ளை வேண்டும்!”
என்று மூன்று முறை அவர்கள் கேட்டார்கள்.

திருமால் சிந்தித்தார். “ஒத்தார் மிக்கார் இல்லாதவனான என்னைப் போல் பிள்ளை வேண்டும் என்று கேட்கிறீர்களே!
எனக்கு நிகரானவர் யாருமே இல்லையே! அதனால் என்னைப் போல் பிள்ளை வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி
நானே வந்து உங்களுக்கு மகனாகப் பிறப்பது தான். மேலும், நீங்கள் மூன்று முறை இக்கேள்வியைக் கேட்டபடியால்,
நான் மூன்று முறை உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்!” என்று வரம் அளித்தார்.

சிறிது நாட்களில் பிருச்னி கருவுற்றாள். பத்து மாதங்கள் ஆன அளவில், திருமாலின் அம்சமான ஆண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது.
அக்குழந்தைக்கு நான்கு திருத்தோள்கள் இருந்தன. திருமார்பில் மகாலட்சுமி அமர்ந்திருந்தாள்.
அக்குழந்தைக்குப் ‘பிருச்னிகர்பன்’ என்று அவர்கள் பெயரிட்டார்கள்.
சுதபரும் பிருச்னியும் தங்கள் அடுத்த பிறவியில் கச்யபராகவும் அதிதி தேவியாகவும் பிறந்தார்கள்.
அவர்களுக்கு மகனாக- வாமன மூர்த்தியாகத் திருமால் அதிதியின் கருவில் இருந்து தோன்றினார்.

வாமன மூர்த்தியாக அவதரிக்கும்முன், திருமால் மகாலட்சுமியிடம், “நீ என் மார்பை விட்டுக் கொஞ்சம் விலகி இருக்க வேண்டும்!” என்றார்.
“ஏன்?” என்று கேட்டாள் மகாலட்சுமி. “நான் பிரம்மச்சாரியாக மகாபலியின் யாகசாலைக்குச் சென்று யாசகம் கேட்கவுள்ளேன்.
அதனால் என் மனைவியான நீ மார்பில் அமர்ந்திருந்தால் நான் பிரம்மச்சாரி அல்ல, கிருஹஸ்தன் என்று மகாபலி அறிந்துகொள்வான்!” என்றார்.
“அது உங்கள் கவலை! ஆனால் இந்தத் திருமார்பை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன்!
மேலும் நீங்கள் அடியார்களுக்கு அருள்புரிவதற்காகப் பிறக்கும் போது, நானும் உங்களோடு பிறப்பேன்!” என்றாள் மகாலட்சுமி.

அதனால், வாமன மூர்த்தி அவதரிக்கும் போது திருமார்பில் மகாலட்சுமியோடு தோன்றினாலும், அவளை மறைக்கும் விதமாக
மான் தோலை மார்பில் அணிந்து கொண்டு மகாபலியிடம் சென்றார்.
கச்யபரும் அதிதியும் தங்கள் அடுத்த பிறவியில் வசுதேவராகவும் தேவகியாகவும் பிறந்தார்கள்.
அவர்களுக்கு மகனாகக் கண்ணன் அவதரித்தான். கண்ணன் பிறக்கும் போதே சங்கு சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களோடும்,
நான்கு திருத்தோள்களோடும், திருமார்பில் மகாலட்சுமியோடும், உந்தித் தாமரையோடும் தோன்றினான்.

இவ்வாறு, மூன்று முறை உங்களுக்கு மகனாகப் பிறப்பேன் என்று தான் சொன்ன வாக்கை நிறைவேற்றும் விதமாக,
பிருச்னி-சுதபருக்குப் பிருச்னி கர்ப்பனாகவும்,
அதிதி-கச்யபருக்கு வாமனனாகவும்,
தேவகி-வசுதேவருக்குக் கண்ணனாகவும் மூன்று முறை திருமால் அவதரித்தார்.
அந்த மூன்று அவதாரங்களிலும் மார்பில் மகாலட்சுமியோடு வந்து தோன்றினார்.

“தன்னாலே தன் உருவம் பயந்து தானாய்
தயங்கொலி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன் உருவில் மூர்த்தி மூன்றாய்த்
தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்”

என்று திருமங்கையாழ்வார் பாடியதற்கேற்ப, அடியார்களுக்கு அருள்புரிவதற்காகத், தன்னையே பலவித வடிவங்களில்
படைத்துக் கொண்டு தோன்றி அவர்களுக்குக் காட்சியளிப்பதால் திருமால் ‘ஸர்க:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸர்க:’ என்றால் படைத்தல் என்று பொருள்.
திருமால் தன்னைத் தானே பலவிதமாகப் படைத்துக் கொண்டு அடியார்களுக்கு அருள்புரிவதால் இத்திருநாமம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
‘ஸர்க:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 161-வது திருநாமம்.

“ஸர்காய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் புதிது புதிதான சிந்தனைகளும் அந்தச் சிந்தனைகளைச்
செவ்வனே செயல்படுத்தும் ஆற்றலையும் திருமால் அருள்வார்.

——————-

162. த்ருதாத்மனே நமஹ: (Dhruthaathmane namaha)

ராமாநுஜர் தமது ஆரம்பக் காலத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசர் என்னும் குருவிடம் பாடம் பயின்று வந்தார்.
யாதவப்பிரகாசர் வேதத்துக்குச் சொன்ன தவறான விளக்கங்களை ராமாநுஜரால் ஏற்க முடியவில்லை.
அதனால் சில சமயங்களில் யாதவப்பிரகாசர் கூறும் விளக்கங்களிலுள்ள குற்றங்களை ராமாநுஜர் சுட்டிக்காட்டியதுண்டு.
தனது சீடன் தன்னை விஞ்சிய அறிவாளியாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத யாதவப்பிரகாசர்,
“நீ இனி என்னிடம் பாடம் கற்க வராதே! உன் மனதுக்கு ஏற்றபடி யார் வேதத்தை விளக்குகிறார்களோ அவர்களிடமே செல்!” என்று கூறி
ராமாநுஜரைத் தம் குருகுலத்தில் இருந்து வெளியேற்றினார்.

கனத்த மனத்துடன் இருந்த ராமாநுஜர் ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள தம் இல்லத்துக்குச் செல்லாமல் காஞ்சிபுரம் சென்றார்.
அங்கே ஒரு வீட்டுத் திண்ணையில் அழுதபடி சயனித்துக் கொண்டிருந்தார்.
“முழுமையான அறிவு பெற்றவரோ இல்லையோ, குரு என்ற பெயரில் யாதவப்பிரகாசர் என்றொருவர் எனக்குக் கிடைத்தார்.
ஆனால் அவர் கூறிய தவறான அர்த்தங்களை நான் திருத்தியதால், நான் குருவை அவமதிப்பதாகக் கருதி, அவரும் என்னை வெளியேற்றி விட்டாரே!
குருவருள் இல்லாமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலாதே! இனி நான் குருவைத் தேடி எங்கே செல்வேன்?” என்று புலம்பிக் கொண்டிருந்தார் ராமாநுஜர்.
அச்சமயம் அவ்வழியே சென்ற வழிப்போக்கர் ஒரு ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டே சென்றார்.
அந்த ஸ்லோகத்தைக் கேட்ட அடுத்த நொடியே ராமாநுஜரின் மனக்கலக்கம் தீர்ந்து விட்டது. அந்த சுலோகம் யாதெனில்,

கதா புன: சங்க-ரதாங்க-கல்பக-த்வஜ-அரவிந்த-அங்குச-வஜ்ர-லாஞ்சனம் |
த்ரிவிக்ரம! த்வத் சரண-அரவிந்த-யுகளம் மதீய-மூர்த்தானம் அலங்கரிஷ்யதி?

“உலகளந்த பெருமாளே! இவ்வுலகை அளந்த உன் திருவடிகள் காண்பவர் கண்களை ஈர்க்க வல்லவை, குளிர்ச்சி நிறைந்தவை,
மனத்துக்கு ஆறுதல் தருபவை, தாமரை மலர்போல் மணம் வீசுபவை.
அத்திருவடிகளில் சங்கு, சக்கரம், கற்பகமரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் உள்ளிட்ட முத்திரைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
நீ உலகங்களை அளந்த போது அந்தத் திருவடிகளை அனைத்து உயிர்களின் தலைகளிலும் பதித்தாயே!
அதுபோலவே மீண்டும் உன் திருவடிகளால் என் தலையை நீ எப்போது அலங்கரிக்கப் போகிறாய்?” என்று
திரிவிக்கிரமப் பெருமாளைப் பார்த்துக் கேட்கும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.

இந்த சுலோகம் ராமாநுஜருக்குப் புத்துணர்வைத் தந்தது.
“அன்று கிருத யுகத்தில் உலகளந்த போது, திரிவிக்கிரமப் பெருமாள் அனைத்து ஜீவாத்மாக்களையும் பிறவிப் பெருங்கடலில் இருந்து
மீட்பதற்காகவும், அனைவரையும் உய்வடையச் செய்வதற்காகவும் நம் அனைவர் தலைகளிலும் திருவடிகளைப் பதித்தார்.
அப்போது நானும் புல் பூண்டாகவோ, ஈ எறும்பாகவோ இப்பூமியில் இருந்திருப்பேன்.
என் தலையிலும் திரிவிக்கிரமன் நிச்சயமாகத் தன் திருவடிகளை அப்போது பதித்திருப்பார்.
எனவே அந்தத் திருவடி ஸ்பரிசம் என்றுமே வீண்போகாது. அந்தப் பெருமாளின் அருளால் எனக்கு
நல்ல குரு விரைவில் கிடைத்து விடுவார்!” என்று நம்பிக்கை கொண்டார் ராமாநுஜர்.

அந்த ஸ்லோகத்தைப் பாடிய வழிப்போக்கரிடம் ஓடிச் சென்ற ராமாநுஜர், “இந்த ஸ்லோகத்தை இயற்றியவர் யார்?” என்று கேட்டார்.
“திருவரங்கத்தில் ‘ஆளவந்தார்’ என்று போற்றப்படும் யாமுனாச்சாரியார் எழுந்தருளியுள்ளார்.
அவர் இயற்றிய ‘ஸ்தோத்திர ரத்தினம்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள ஸ்லோகம் இது!” என்றார் வழிப்போக்கர்.
“அந்த ஆளவந்தாரை அடியேன் காண வேண்டும்!” என்று தம் விருப்பத்தை வெளிப்படுத்தினார் ராமாநுஜர்.
வழிப்போக்கரோ, “ஆளவந்தார் உங்களைக் காண விரும்புகிறார். உங்களை அழைத்து வருவதற்காகத் தான் என்னை
இங்கே காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்!” என்று கூறினார்.

மிகச்சிறந்த மகானான ஆளவந்தாரே தனக்குக் குருவாகக் கிடைத்து விட்டார் எனப் பேருவகை அடைந்த ராமாநுஜர்,
திரிவிக்கிரமப் பெருமாளுக்கு நன்றி கூறி விட்டு அந்த வழிப்போக்கருடன் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார்.
(மேற்கொண்டு திருவரங்கத்தில் நடந்த சம்பவங்களை வேறொரு திருநாம விளக்கத்தில் காண்போம்.)
உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் உய்வடைய வேண்டும் என்பதற்காக, உலகை அளக்கும் போது,
அனைவரின் தலையிலும் திருமால் தன் திருவடிகளைப் பதித்தார்.
இத்தகைய செயல்களால், நாம் பிறவிப் பெருங்கடலுள் அழுந்தாமல் நம்மை மீட்டெடுப்பதால், திருமால் ‘த்ருதாத்மா’ என்றழைக்கப்படுகிறார்.
‘த்ருதாத்மா’ என்றால் பிறவிச் சுழலில் நாம் வீழாதபடி நம்மை மீட்பவர் (savior) என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 162-வது திருநாமம்.

“த்ருதாத்மனே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களை அனைத்து விதமான துயரங்களில் இருந்தும்
திருமால் மீட்டருள்வார்.

————————–

163. நியமாய நமஹ: (Niyamaaya namaha)

“யாராலும் என்னை வெல்ல முடியாது!” என்று தனது அரசவையில் ஆணவம் தோற்றச் சொன்னான் மகாபலி.
“எப்படி இவ்வளவு உறுதியோடு சொல்கிறாய்?” என்று கேட்டார், அவனது குருவான சுக்கிராச்சாரியார்.
அதற்கு மகாபலி, “ஆம் குருவே! இவ்வுலகை ஆளும் திருமாலால் கூட என்னை வெல்ல முடியாது!” என்றான்.
“அனைத்தையும் படைத்து, அனைவரையும் இயக்குபவர் திருமால். அவரால் உன்னை வெல்ல முடியாது என்கிறாயே!
இது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டார் சுக்கிராச்சாரியார்.

“குருவே! எனக்கு உங்களின் அருளும் ஆதரவும் எப்போதும் இருக்கிறது. குருவின் அருள் யாருக்கு இருக்கிறதோ,
அவர்களுக்குத் திருமால் தீங்கு செய்ய மாட்டார். மேலும், எனது தாத்தாவான பிரகலாதன் திருமாலுக்கு மிகவும் நெருக்கமானவர்.
எனக்கு ஒரு சிறு தீங்கிழைத்தாலும், பிரகலாதனின் மனம் நோகும் என்பதால் திருமால் எனக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டார்.
அதனால் தான் திருமாலாலும் கூட என்னை வெல்ல முடியாதென்று சொல்கிறேன்!” என்று கர்வத்துடன் சொன்னான் மகாபலி.

“பார்க்கலாம்!” என்றார் சுக்கிராச்சாரியார். சில நாட்கள் கடந்தன. நர்மதா நதிக்கரையில் மகாபலி யாகம் செய்த போது,
அந்த யாகசாலைக்கு வாமன மூர்த்தியாகக் குள்ளமான தோற்றத்துடன் திருமால் வந்தார். மகாபலியிடம் மூவடி மண் யாசகமாகக் கேட்டார்.
“வெறும் மூன்றடி மண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? வீடு கட்ட முடியுமா? விவசாயம் செய்ய முடியுமா?” என்று
ஏளனமாகக் கேட்டான் மகாபலி. வாமனரோ, “முதலில் நான் எனது கால்களால் மூவடி மண்ணை அளக்கிறேன்.
மீதமுள்ள விஷயங்களை அதற்குப் பின் பேசிக்கொள்ளலாம்!” என்றார்.

அதை ஏற்றுக்கொண்டு, மகாபலி தாரை வார்த்துக் கொடுக்க முற்பட்ட போது, சுக்கிராச்சாரியார் அவனைத் தடுத்தார்.
“வந்திருப்பது திருமால். மூவடி மண் என்ற பெயரில் மூவுலகத்தையுமே உன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப் பார்க்கிறார் அவர்.
ஏமாந்து விடாதே!” என்று அறிவுறுத்தினார். ஆனால் அதற்கு மகாபலி செவி மடுக்கவில்லை. “தானம் கொடுத்தே தீருவேன்!” என்றான்.
கோபம் கொண்ட சுக்கிராச்சாரியார், “நீ உன் அனைத்துச் செல்வங்களையும் இழக்கக் கடவது!” என்று சாபம் தந்தார்.

மகாபலி தன் விருப்பப்படி வாமனருக்கு மூவடி மண்ணைத் தாரை வார்த்துத் தந்த அளவிலே, அவர் பேருருவம் தாங்கி ஓரடியால்
மண்ணுலகையும் மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்தார். மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்துப் பூமிக்குக் கீழே
உள்ள சுதல லோகத்தில் அவனைச் சிறை வைத்தார். தேவர்கள் இழந்த ராஜ்ஜியத்தை அவர்களுக்கு மீட்டுத் தந்தார்.

சுதல லோகத்தில் மகாபலிக்குக் காவலாளியாக வாமன மூர்த்தி இருந்து அவனைப் பாதுகாத்து வந்தார்.
அப்போது மகாபலி வாமனரிடம், “சுவாமி! எனக்கொரு ஐயம்! யாராலும் என்னை வீழ்த்த முடியாது என்ற கர்வத்தோடு இருந்தேன்.
உங்களாலும் என்னை வீழ்த்த முடியாது என்று எண்ணினேன். என்னை எப்படி வென்றீர்கள்?” என்று கேட்டான்.

“உன் குருவின் அருள் இருப்பதால் நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன் என நீ எண்ணினாய்.
ஆனால் நானோ, சுக்கிராச்சாரியாரின் மனதுக்குள் புகுந்து, நீ தானம் செய்யும் போது அவர் தடுக்கும்படிச் செய்தேன்.
அவரது கூற்றை மீறி நீ தானம் செய்ததைக் கண்டு வெகுண்டு அவர் உன்னைச் சபித்து விட்டார் அல்லவா?
அப்போதே நீ குருவருளை இழந்து விட்டாய்!” என்றார் வாமனர்.

“மேலும், நான் உன்னை வீழ்த்தினால் உன் தாத்தாவான பிரகலாதனின் மனம் நோகும் என்பதால் நான் உன்னை வீழ்த்த மாட்டேன்
என எண்ணினாய். பிரகலாதனின் மனம் நோகாதிருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்குக் கூட கிடைக்காத ஒரு பாக்கியம்
உனக்குக் கிடைக்கும்படிச் செய்தேன்!” என்றார். “அது என்ன?” என்று கேட்டான் மகாபலி.
“நரசிம்மாவதாரத்தில் என் கரத்தைத் தான் பிரகலாதனின் தலையில் வைத்தேன்.
திரிவிக்கிரம அவதாரத்தில் என் திருவடிகளையே உன் தலையில் வைத்தேன்.
என் கரங்களை விட என் திருவடிகள் பெருமை பெற்றவை அல்லவா?
தனக்குக் கிட்டாத பெரும் பேறு தன் பேரனுக்குக் கிட்டியதை நினைத்துப் பிரகலாதனும் மனம் மகிழ்ந்தான்.
எனவே அவனையும் திருப்திப்படுத்தி விட்டேன். உன்னையும் வீழ்த்தி விட்டேன். இருந்தாலும் வருந்தாதே!
இந்த சுதல லோகத்தில் நான் எப்போதும் உன்னோடு உனக்குக் காவலாளியாக இருப்பேன்!” என்றார் வாமனர்.

இவ்வாறு அனைவரையும் நியமித்து இயக்கும் சக்தியால், யாராலும் வெல்ல முடியாதவர்களாகக் கருதப்படும் மகாபலி
போன்றோர்களையும் திருமால் எளிதில் வெல்வதால், அவர் ‘நியம:’ என்றழைக்கப்படுகிறார்.
‘நியம:’ என்றால் அனைவரையும் கட்டுப்படுத்த வல்லவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 163-வது திருநாமம்.
“நியமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும்
நல்ல முறையில் கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறனைத் திருமால் அருள்வார்.

————————

164. யமாய நமஹ: (Yamaaya namaha)

கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் திருக்குடந்தை தேசிகன் என்னும் மகான் வாழ்ந்து வந்தார்.
அவர் ஒப்பிலியப்பன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளின் அம்சமாகக் கருதப்பட்டார்.
வடநாட்டு யாத்திரை செல்ல விரும்பிய திருக்குடந்தை தேசிகன், தனது மூன்று சீடர்களை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டார்.

முதலில் திருமலையை அடைந்த திருக்குடந்தை தேசிகன், அங்கே திருவேங்கடமுடையானைத் தரிசித்து விட்டு
ஆழ்வார் தீர்த்தம் என்று அழைக்கப்படும் அருவிக்கு அருகே தம் சீடர்களுடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.
“வயது முதிர்வால் எனது உடல் தளர்ந்து விட்டது. இந்நிலையில் நான் எப்படி மேற்கொண்டு
அயோத்தியா, மதுரா, பிருந்தாவனம், பத்ரிநாத் உள்ளிட்ட தலங்களுக்கெல்லாம் செல்வேன்?” என்று
வருத்தத்துடன் தம் சீடர்களிடம் சொன்னார் திருக்குடந்தை தேசிகன்.

அப்போது அங்கே வந்த யாத்திரிகர் ஒருவர், திருக்குடந்தை தேசிகனை வணங்கினார்.
“சுவாமி! அடியேன் நம்மாழ்வாருடைய அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரியில் இருந்து வருகிறேன்.
இங்கே நம்மாழ்வார் பெயரில் ஒரு அருவி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.
அருகிலிருந்த ஆழ்வார் தீர்த்தத்தைக் காட்டிய திருக்குடந்தை தேசிகன், “இது தான் நம்மாழ்வாரின் திருநாமத்தால்
வழங்கப்படும் ஆழ்வார் தீர்த்தம்!” என்று கூறினார்.

மேலும், “நம்மாழ்வார் திருமலையைப் பற்றித் தம் திருவாய்மொழியில் பாடுகையில்,
“ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவி திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே”–என்று பாடினார்.
திருமலையிலுள்ள அருவிகளில் நீர் பாயும் போது எழும்புகின்ற ஒலியானது, திருமலையப்பனுக்குத் தொண்டு செய்ய
வாருங்கள்! வாருங்கள்! என்று அடியார்களை அழைப்பது போல உள்ளது. அத்தகைய திருத்தலமாகிய திருவேங்கடத்தில்
எழுந்தருளியிருக்கும் திருமலையப்பனுக்கு நாம் எல்லா நேரங்களிலும் அனைத்து விதமான கைங்கரியங்களும்
செய்ய வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்து.

இப்பாசுரத்தில் திருமலையிலுள்ள அருவியின் ஒலி, மலையப்பனுக்குத் தொண்டு செய்ய வருமாறு தம்மை அழைப்பது போல்
ஆழ்வார் உணர்ந்தமையால், அந்த அருவியில் அவருக்குள்ள ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு,
ஆழ்வார் தீர்த்தம் என்று அவரது திருநாமத்தை இந்த அருவிக்குப் பெரியோர்கள் சூட்டினார்கள்!” என்றார் திருக்குடந்தை தேசிகன்.
“நம்மாழ்வார் திருமலைக்கு வந்த போது இவ்விடத்தில் தங்கியிருந்தார் என்றும்
அதனால் தான் ஆழ்வார் தீர்த்தம் என்று இது அழைக்கப் படுகிறது என்றும் சிலர் சொல்கிறார்களே!” என்று கேட்டார் யாத்திரிகர்.

திருக்குடந்தை தேசிகன், “அனைவரின் இதயங்களிலும் இறைவன் எழுந்தருளியுள்ளான்.
அவ்வாறு இதயத்தில் உறையும் இறைவனை எப்போதும் அனுபவிக்கும் ஒருவன், மேற்கொண்டு இறைவனைத் தேடிக்
கங்கைக்கோ குருக்ஷேத்ரத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.
இதை விளக்கும் வகையில் ராமாநுஜ நூற்றந்தாதியில் ஒரு பாடல் உள்ளது:

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் எந்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே”

அந்த வகையில், நம்மாழ்வார் உள்ளத்தில் திருமால் குடிகொண்டு இருந்தமையால், அவர் எந்தத் திருத்தலத்துக்கும் செல்லவில்லை.
முப்பத்தேழு திருத்தலங்களைச் சேர்ந்த பெருமாள்கள் புளியமரத்தடியில் அமர்ந்திருந்த நம்மாழ்வாரைத் தேடி வந்து
அவரிடமிருந்து பாசுரம் பெற்றுச் சென்றார்கள். திருமலையப்பனும் ஆழ்வாரைத் தேடி வந்து பாசுரம் வாங்கிக் கொண்டாரே ஒழிய
ஆழ்வார் திருமலைக்கு வரவில்லை!” என்று விடையளித்தார்.

“உங்கள் கேள்விக்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்களே!” என்று சொல்லிச் சிரித்த யாத்திரிகர், திடீரென மறைந்து விட்டார்.
யாத்திரிகர் வடிவில் வந்தவன் மலையப்பன்!
ஆம்! “உடல் தளர்ந்த நிலையில் எப்படி வடநாட்டுக்கு யாத்திரை செல்வது?” என்று திருக்குடந்தை தேசிகன்
கேள்வி கேட்டு வருந்தினாரல்லவா? அவர் வாயாலேயே அதற்கான விடை வந்துவிட்டது.
“இதயத்திலிருக்கும் இறைவனை அனுபவிப்பவர்கள் தனியாக இறைவனைத் தேடி யாத்திரை செல்ல வேண்டியதில்லை!” என்று
திருக்குடந்தை தேசிகன் தம் வாயாலேயே கூறிவிட்டார்.

எனவே வருத்தம் நீங்கிக் கும்பகோணத்துக்குத் திரும்பிய அவர், அங்கே எழுந்தருளியிருக்கும் ஆராவமுதப் பெருமாளுக்குத்
தொண்டு செய்தபடித் தம் வாழ்நாளைக் கழித்தார்.
இவ்வாறு அனைவரின் இதயத்தினுள்ளும் வீற்றிருந்து அனைவரின் மீதும் ஆளுமை செலுத்துவதால்,
திருமால் ‘யம:’ என்றழைக்கப்படுகிறார். ‘யம:’ என்றால் உள்ளிருந்து இயக்குபவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 164-வது திருநாமம்.
“யமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் இதயத்தில் எப்போதும் திருமால் குடி கொண்டிருப்பார்.

——————–

165. வேத்யாய நமஹ: (Vedhyaaya namaha)

அசுர அரசனான நிகும்பனின் மனைவி மகிஷ்மதி. அவள் பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தாள்.
அவளுக்குப் பிரம்மா காட்சியளித்த போது, “எனக்கு இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும்.
அவர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டு மடிந்தால் தான்
அவர்களுக்கு மரணம் ஏற்பட வேண்டுமே ஒழிய வேறு யாராலும் அவர்களுக்கு மரணம் ஏற்படக் கூடாது!” என்று வரம் கேட்டாள்.
பிரம்மாவும் அவ்வரத்தை அளித்தார்.

சிலநாட்களில் அவளுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவரும் தேவ லோகத்துக்குச் சென்று தேவர்களை எதிர்த்துப்
போரிட்டு வீழ்த்தினார்கள். பிரம்மா தந்த வரத்துக்கேற்ப தேவர்கள் யாராலும் அவர்களைக் கொல்ல முடியவில்லை.
அவர்களைக் கொல்ல என்ன வழி எனச் சிந்தித்த பிரம்மா, விஸ்வகர்மாவை அழைத்து ஒரு அழகான தேவமாதைச்
சிற்பமாக வடிக்கச் சொன்னார். அந்தச் சிலைக்கு உயிர் கொடுத்த பிரம்மா, அவளுக்குத் ‘திலோத்தமை’ என்று பெயரிட்டார்.

மகிஷ்மதியின் இரு அசுர மகன்களின் இருப்பிடத்துக்குச் சென்றாள் திலோத்தமை. இருவரும் அவளது அழகில் மயங்கி
அவளை மணம்புரிய விரும்பினார்கள். விளைவு? போட்டி போராட்டமாக மாறியது! சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொண்டு மாண்டு போனார்கள்.
திலோத்தமைக்கு நன்றி கூறிய பிரம்மா, “நீ இனி தேவலோகத்தில் நடனமாடும் தேவமாதாக இருப்பாய்!” என்று சொல்லி அனுப்பினார்.
ஆனால் அவளோ, “எனக்கு அதிலெல்லாம் ஆசையில்லை. திருமாலின் தரிசனம் எனக்குக் கிட்டவேண்டும்!
அதற்கு வழிகாட்டுங்கள்!” என்று கூறினாள்.

“பூமியில் ஸ்ரீ வரமங்கை என்னும் திருத்தலத்தில் நாரதர் தவம் புரிந்து வருகிறார். அவரைச் சந்தித்தால், திருமாலின் தரிசனத்தைப்
பெற அவர் வழிகாட்டுவார்!” என்றார் பிரம்மா. ஸ்ரீ வரமங்கைக்கு வந்து நாரதரைச் சந்தித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்த
திலோத்தமை அவரோடு இணைந்து தானும் திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தாள்.
இவ்வாறு திலோத்தமை தவம் புரிவதைக் கேள்வியுற்ற தேவமாதான ஊர்வசி, தானும் வரமங்கைக்கு வந்து தவம் புரிந்தாள்.

அவர்களுக்குத் திருமால், ஆதிசேஷன் மேல் ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவியோடு வைகுண்டத்தில் அமர்ந்திருப்பது போன்ற
அதே திருக்கோலத்தில் காட்சியளித்தார். வானமாகிய வைகுண்டத்தில் உள்ள மலைபோன்ற தோற்றத்துடன் வந்தமையால்
ஸ்ரீ வானமாமலை என்று அப்பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது.
அதை ஒட்டி அவ்வூரும் ‘ஸ்ரீ வானமாமலை’ என்று அழைக்கப் படுகிறது.
நான்கு ஏரிகளால் சூழப்பட்டுள்ளதால் ‘நாங்குநேரி’ என்றும் வழங்கப்படுகிறது.

திலோத்தமை மற்றும் ஊர்வசியைப் பார்த்து, “சூரியனும் சந்திரனும் உள்ள வரை, நான் இவ்விடத்தில் இருந்து
உங்களுக்குக் காட்சியளிப்பேன்!” என்றார் திருமால். அதற்குச் சாட்சியாக சூரியன், சந்திரன் இருவரையும்
தன் கருவறையில் தனது இருபுறங்களிலும் குடிகொள்ளச் சொன்னார். இன்றும் நாம் வானமாமலைக்குச் சென்று
திருமாலைத் தரிசித்தோமானால், பெருமாளின் இருபுறங்களிலும் திலோத்தமையும் ஊர்வசியும் இருந்துகொண்டு
பெருமாளுக்குச் சாமரம் வீசுவதைக் காணலாம். அவ்வாறே சூரியனும் சந்திரனும் பெருமாளின் இருபுறங்களிலும் இருப்பார்கள்.
ஆனால், நம் கண்களால் அவர்களைக் காண்பது மிகவும் கடினம்.

அடியேனுக்கு மிக நெருங்கிய நண்பரான ஸ்ரீ மதுபயவே. வானமாமலை கிருஷ்ணன் ஸ்வாமியிடம்,
“உங்கள் திவ்ய தேசத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிசேஷன், திலோத்தமை, ஊர்வசி அனைவரையும் நன்கு காண முடிகிறது.
ஆனால் அர்ச்சகர் தீபாராதனை காட்டும் போது கூட சூரிய-சந்திரர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லையே!” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அடியார்களுக்குத் தன் வடிவழகைக் காட்ட வேண்டும் என்ற பேரானந்தத்தில் மிகுந்த ஒளி பொருந்திய திருமேனியுடன்
இவ்வூருக்குப் பெருமாள் வந்தார். அவருடைய ஒளியில் சூரிய சந்திரர்கள் ஒளிமங்கிப் போய்விட்டார்கள்.

சூரிய ஒளிக்கு முன் சாதாரண விளக்குகளின் ஒளிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா?
அதுபோல் தான் இங்கே பெருமாள் முன் சூரிய சந்திரர்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை!” என்றார்.
இவ்வாறு மிகவும் ஒளி பொருந்திய திருமேனியோடு வந்து தன் மேன்மைகளையும் அழகையும் தன் அடியார்களுக்கு
வெளிப்படுத்துவதால், திருமால் ‘வேத்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘வேத்ய:’ என்றால் வெளிப்படுத்துபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 165-வது திருநாமம்.
“வேத்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் தனது பெருமைகளை நன்கு உணர்த்துவார்.

——————–

166. வைத்யாய நமஹ: (Vaidhyaaya namaha)

தட்சனின் யாகத்துக்கு அழையா விருந்தாளியாகச் சென்ற சதிதேவி, அங்கே பலவிதமான அவமரியாதைகளை எதிர்கொண்டாள்.
குறிப்பாகத் தன் கணவரான பரமசிவனைத் தன் தந்தை தட்சன் அவமானப் படுத்தியதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் அங்கேயே அக்னிப் பிரவேசம் செய்தாள். இச்செய்தியைக் கேள்வியுற்ற பரமசிவன், கடும் கோபம் கொண்டார்.
வீர பத்திரன் என்ற தளபதியின் தலைமையில் பெரும் சேனை ஒன்றை அனுப்பினார். அந்தச் சேனை தட்சனின் யாகசாலையையே
அழித்துத் தரைமட்டமாக்கியது. தட்சன் மற்றும் அவனைச் சார்ந்தோர் பலரின் தலைகளை வீரபத்திரன் கொய்தான்.
அங்கிருந்த தேவர்களையும் துன்புறுத்தினான் வீரபத்திரன்.

தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தியது பெரும் பாபச்செயல் அல்லவா? அந்தப் பாபத்தின் பயனாக, வீரபத்திரன்
மனநோய்க்கு ஆளாகித் தன் மன நிம்மதியை முழுவதுமாக இழந்து தவித்தான்.
தன் மனநோய் தீர என்ன வழி என்று பரமசிவனிடம் சென்று கேட்டான்.
பரமசிவன், “நான் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்த போது, எனக்கும் இது போன்ற மனநிலை ஏற்பட்டது.
அப்போது சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூரில் உள்ள ‘ஹ்ருத்தாபநாசினீ’ (மன நோய்களைப் போக்கும் பொய்கை) என்னும்
புனித நீரில் நீராடி, அந்தப் பொய்கைக் கரையில் எழுந்தருளியிருக்கும் ‘வைத்திய வீர ராகவப் பெருமாளைத்’ தரிசித்தேன்.
அந்தப் பெருமாள் அருளால் மீண்டும் மன நிம்மதி பெற்றேன். நீயும் அவ்வாறே செய்தால் உனது மன நோயும் நீங்கும்!” என்றார்.

(இன்றும் திருவள்ளூரில் ஹ்ருத்தாபநாசினீ தீர்த்தக்கரையில் தீர்த்தேஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார்.)
சிவனது அறிவுரைப்படித் திருவள்ளூருக்கு வந்த வீரபத்திரன், தீர்த்தேஸ்வரரை வணங்கி, ஹ்ருத்தாபநாசினீ தீர்த்தத்தில் நீராடி,
அதன்பின் வைத்திய வீர ராகவப் பெருமாளை வணங்கினான். வைத்திய வீர ராகவனின் அருளால் அவனது மனநோய் நீங்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘வடலூர் வள்ளலார்’ எனப்படும் ராமலிங்க அடிகளாருக்கு ஒருமுறை கடும் வயிற்று வலி ஏற்பட்டதாம்.
அவரும் திருவள்ளூருக்கு வந்து, ஹ்ருத்தாபநாசினீ பொய்கையில் நீராடி, தீர்த்தேஸ்வரரை வணங்கினார்.
அதன்பின் கனகவல்லித் தாயாரையும், ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கும் வைத்திய வீர ராகவப் பெருமாளையும் வணங்கினார்.

தனது வயிற்றுவலியைப் போக்கி அருளும்படி வைத்திய வீர ராகவனிடம் பிரார்த்தித்து ஐந்து பாடல்கள் இயற்றினார் வள்ளலார்.
அந்த ஐந்து பாடல்களும் ‘வீர ராகவப் போற்றிப் பஞ்சகம்’ என்ற பெயரில் திருவருட்பாவில் இடம்பெற்றுள்ளன. அதன் ஐந்தாம் பாடலில்,

“அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேரழகா! போற்றி!
பொற்புறு திகிரி சங்கு பொருந்து கைப் புனிதா! போற்றி!
வற்புறு பிணிதீர்த்து என்னை மகிழ்வித்த வரதா! போற்றி!
வெற்புயர் எவ்வுளூர் வாழ் வீர ராகவனே! போற்றி!”

என்று தமது பிணியைப் போக்கியருளிய வைத்திய வீர ராகவனுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
வீர ராகவப் பெருமாள் அருளால் வயிற்று வலி நீங்கப் பெற்ற வள்ளலார், உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படும்
வயிற்றுப் பிணியாகிய பசிப்பிணியைப் போக்க எண்ணினார். வாடிய பயிர்களை மட்டுமின்றி,
வாடிய வயிறுகளைக் கண்ட போதும் அவர் வாடினார். அதனால் வடலூரில் பசியால் வாடும் ஏழைகளுக்கு
உணவு கிடைப்பதற்கு வழிவகை செய்தார். அவர் ஏற்றிய அருட்பெருஞ்சோதி நூற்றைம்பது ஆண்டுகளுக்கும்
மேலாக இன்றும் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அடியார்களின் உடல்நோய், மனநோய் அனைத்தையும் திருமால் போக்குகிறார்.
அது மட்டுமின்றி, பிறவிப்பிணியைப் போக்கும் மருத்துவராகவும் திருமால் திகழ்கிறார்.
“எருத்துக்கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து
அறிவாரும் இல்லை மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா மறுபிறவி தவிரத் திருத்தி
உன் கோவில் கடைபுகப் பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய்!” என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

அலோபதி, நாச்சுரோபதி, ஹோமியோபதி இவை எதனாலும் குணப்படுத்த முடியாத பிறவிப்பிணியை
வேங்கடாசலபதியால் மட்டுமே குணப்படுத்த முடியும்.
அதனால் அவர் ‘வைத்ய:’ (வைத்தியர்=மருத்துவர்) என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 166-வது திருநாமம்.
“வைத்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் அனைத்து நோய்களையும் திருமால் போக்கி அருள்வார்.

————————-

167. ஸதாயோகினே நமஹ: (Sadhaayogine namaha)

“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்!” என்றாள் ஆண்டாள்.
பரம புருஷனாகிய கண்ணனை மணந்து கொள்வதே தனது லட்சியம் எனக்கருதி அவள் வாழ்ந்தாள்.
கண்ணனைத் தன்னிடம் வரவழைப்பதற்காகப் பல முயற்சிகளையும் மேற்கொண்டாள்.
கோபிகைகள் ஆயர்பாடியில் அனுஷ்டித்த காத்யாயினி விரதத்தைத் தானும் அனுஷ்டிக்க விரும்பினாள்.
ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆய்ப்பாடியாகப் பாவித்து, தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து, தனது தோழிகளை எல்லாம்
ஆய்ச்சிகளாகப் பாவித்து, வடபத்ரசாயியின் கோயிலையே நந்தகோபன் திருமாளிகையாகப் பாவித்து,
வடபத்ரசாயியைக் கண்ணனாகப் பாவித்து மார்கழி நோன்பு நோற்றாள். ஆனால் நோன்பு நோற்று முடித்தபின்னும் கண்ணன் வரவில்லை.

அடுத்தபடியாக, தைமாதம் ‘விஷ்ணு காமதேவ விரதம்’ எனப்படும் வழிபாட்டைச் செய்தாள்.
கண்ணனையே மன்மதனாகப் பாவித்து அவனைக் குறித்து நோன்பு இருந்தாள். அதற்கும் கண்ணன் மனமிரங்கவில்லை.
அடுத்து, கூடல் இழைத்தாள் ஆண்டாள். ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு, கண்ணை மூடியபடி அதற்குள் சிறிய வட்டங்களைப்
போட்டுக்கொண்டே வர வேண்டும். சிறிய வட்டங்களின் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருந்தால் நினைத்த காரியம் நடக்கும்.
ஒற்றைப் படையில் வந்தால் நினைத்த காரியம் நடக்காது என்பார்கள்.
கூடல் இழைத்த போது அவளுக்கு இரட்டைப் படை எண் கிடைத்தது. ஆனாலும் கண்ணன் வரவில்லை.

அடுத்து, மேகங்களைக் கண்ணனிடம் தூது அனுப்பினாள். தனது நிலையை அவனிடம் எடுத்துச் சொல்லும்படி அவைகளிடம் சொன்னாள்.
மேகங்கள் தூது மொழிந்தும் கண்ணன் வரவில்லை. குயில் கூவினால் மனத்துக்குப் பிடித்தவர் வீட்டுக்கு வருவார் என்றோர்
ஐதீகம் இருப்பதாக அவளது தோழிகள் கூறினார்கள்.
அதனால் “உலகளந்தான் வரக் கூவாய்!” என்று குயிலைக் கூவச் சொன்னாள். அப்போதும் கண்ணன் வரவில்லை.

இனி என்ன செய்வது என்று தெரியாமல், விரக வேதனையில் துடித்தாள் ஆண்டாள்.
அதைக் கண்ட அவளது தந்தை பெரியாழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் சயனித்திருக்கும் ‘ஸ்ரீ வடபத்ரசாயீ’ எனப்படும்
ஸ்ரீ வடபெருங்கோவிலுடையானிடம் சென்று, “எம்பெருமானே! என் மகளை இப்படித் தவிக்க விட்டுவிட்டு
நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே! இது நியாயமா? நீ இன்னும் உறங்கலாமா? எழுந்து வந்து அவளை மணக்க வேண்டாமா?” என்று
அழுது புலம்பிவிட்டு வீடு திரும்பினார்.

அன்று பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய வடபெருங்கோவிலுடையான், “நான் உறங்குகிறேன் என்று சொல்லி விட்டீர்களே!
நீங்கள் வேதங்களை நன்கு கற்றவர். கடோபநிஷத் என்ன சொல்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
அடுத்த நாள் காலை பெரியாழ்வார் துயிலெழுந்த போது, கனவில் பெருமாள் சொன்ன வார்த்தைகள் அவர் மனதில் நன்கு பதிந்திருந்தன.

“ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண:|”

என்ற கடோபநிஷத் வாக்கியம் அவரது நினைவுக்கு வந்தது. “இறைவன் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான்.
தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்குக் கனவு உள்ளிட்ட அனுபவங்களை எப்போதும் விழித்திருக்கும்
அந்த இறைவன் தருகிறான்!” என்பது இதன் பொருள்.
ஸ்ரீ பெரியாழ்வாரிடம் ஓடி வந்த ஸ்ரீ ஆண்டாள், “நேற்று இரவு நான் கனவு கண்டேன்.
அதில் ஸ்ரீ கண்ணன் வந்து என்னை மணந்து கொண்டான்!” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்ப்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”-என்று தொடங்கிப் பத்துப் பாடல்களால் அக்கனவை ஸ்ரீ ஆண்டாள் வர்ணித்துள்ளாள்.

ஸ்ரீ வடபெருங்கோவிலுடையானிடம் ஓடிச் சென்ற ஸ்ரீ பெரியாழ்வார், “நீ ஏன் இன்னும் உறங்குகிறாய் என்று கேட்டேன்.
ஆனால் நீ எப்போதும் விழித்துக் கொண்டிருந்து தூங்கிக் கொண்டிருக்கும் எங்களை எல்லாம் காக்கிறாய் என இப்போது உணர்ந்தேன்!” என்றார்.
பின்னர் ஸ்ரீ ஆண்டாளை ஸ்ரீ ரங்கமன்னார் மணந்த வரலாறு வாசகர்கள் அறிந்த ஒன்றே.இவ்வாறு எப்போதும் விழித்திருந்து,
உலக வாழ்வாகிய இருளில் உறங்கும் நமக்கு வைத்தியம் செய்வதால் ஸ்ரீ திருமால் ‘ஸதா யோகீ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 167-வது திருநாமம்.
“ஸதாயோகினே நமஹ” என்று தினமும் சொல்லி வருவோரை அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து எழுப்பி,
நல்லறிவைத் திருமால் அருளுவார்.

——————-

168. வீரக்னே நமஹ: (Veeraghne namaha)

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள முக்கூர் என்னும் ஊரில் ராஜகோபாலாச்சாரியார் என்னும் மகான் வாழ்ந்து வந்தார்.
அவர் ஒருமுறை காஞ்சிபுரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தம் நண்பரோடு பேருந்துக்காகக் காத்திருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த வழிப்போக்கர், முக்கூர் ராஜகோபாலாச்சாரியாரை வித்தியாசமாகப் பார்த்தார்.
“ஏன் அப்படிப் பார்க்கிறாய்?” என்று ராஜகோபாலாச்சாரியார் கேட்டார்.
“இல்லை! உங்களது குடுமி, நெற்றியிலுள்ள நாமம், உங்கள் பூணூல், பஞ்சகச்சம் இவற்றை எல்லாம் பார்த்தால்
எனக்குச் சிரிப்பாக வருகிறது!” என்றார் வழிப்போக்கர்.

“இதில் சிரிப்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரியார்.
அதற்குள் அவரது நண்பர், “சுவாமி! இவன் பெரிய நாத்திகன். நம் போன்றவர்களிடம் வம்பு செய்வது தான் இவன் வேலை!
இவனிடம் பேச்சு கொடுக்காதீர்கள்!” என்று கூறினார்.
ஆனால் ராஜகோபாலாச்சாரியார் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. “சொல்லப்பா! சிரிப்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டார்.

வழிப்போக்கர், “நீங்கள் வேதத்தை நம்புகிறீர்களா?” என்று கேட்டார். “நிச்சயமாக நம்புகிறேன்!” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.
“ஒவ்வொரு அந்தணரின் வலக்கையிலும் நெருப்பு இருப்பதாக வேதம் சொல்லியிருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
உங்கள் வலக்கையைக் காட்டுங்கள். அதிலுள்ள நெருப்பைக் கொண்டு என் பீடியை நான் பற்ற வைத்துக் கொள்கிறேன்!
அவ்வாறு நெருப்பு வராவிட்டால் நீங்கள் அந்தணரே இல்லை.
உங்கள் குடுமியையும் பூணூலையும் வெட்டி எறிய வேண்டும்!” என்றார் வழிப்போக்கர்.
“பார்த்தீர்களா! இவனிடம் பேச்சு கொடுத்தால் இப்படித்தான் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்!” என்றார் ராஜகோபாலாச்சாரியாரின் நண்பர்.
ஆனால் இதற்கெல்லாம் ராஜகோபாலாச்சாரியார் அசரவில்லை.
“தீயவர்களுக்கு நெருப்பாகவும், அடியவர்களுக்கு அமுதமாகவும் இருக்கும் அழகிய சிங்கரான நரசிம்மனை மனதில் கொண்ட நான்
யாருக்கும் அஞ்ச மாட்டேன்! நெருப்பு தானே வேண்டும்? நிச்சயமாகத் தருகிறேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது!” என்றார்.

“என்ன சிக்கல்?” என்று கேட்டார் வழிப்போக்கர்.
“இப்போது சூரியன் அஸ்தமிக்கப் போகிறது. நெருப்பை வரவழைக்கும் மந்திரத்தை நான் சொல்லி முடிப்பதற்குள்
சூரியன் அஸ்தமித்து விட்டால் அப்புறம் நெருப்பு வராது.
அதனால் உன் தாயை அழைத்துச் சூரிய அஸ்தமனத்தைக் கொஞ்சம் தாமதப் படுத்தச் சொல்!” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.
“என் தாயால் எப்படிச் சூரிய அஸ்தமனத்தைத் தாமதப்படுத்த முடியும்?” என்று கேட்டார் வழிப்போக்கர்.

“கற்புடைய பெண் தன் கற்பின் மேல் சபதம் செய்தால் சூரிய அஸ்தமனத்தையே மாற்றலாம் என்று மகாபாரதம் சொல்கிறதே.
உன் தாயைக் கூப்பிடு!” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.
“என் தாயின் கற்பைப் பழிக்கிறாயா?” என்று கோபத்துடன் ராஜகோபாலாச்சாரியாரைத் தாக்க வந்தார் வழிப்போக்கர்.
“அக்காலத்தில் வாழ்ந்த பெரும் கற்புக்கரசிகளுடன் உன் தாயை ஒப்பிட்டு, அவளது கற்பைப்பற்றிப் பேசுவது தவறு என்று உனக்குப் புரிகிறதல்லவா?
அதுபோலத் தான் அக்காலத்தில் வாழ்ந்த சான்றோர்களின் தவ வலிமையோடு எங்கள் தவ வலிமையை ஒப்பிட்டு
எங்கள் பூணூலை அறுப்பேன் என்று சொல்வதும் மிகத்தவறு. அந்நாளில் வாழ்ந்த அந்தணர்கள் மிகுந்த தவ வலிமையுடன் இருந்தார்கள்.

அதனால் அவர்களால் தங்கள் கரத்தில் நெருப்பைக் கொண்டு வர முடிந்தது. இன்று வாழும் நாங்களெல்லாம் அவர்களின் நிழலாகத்தான் உள்ளோம்.
இதை உனக்குப் புரிய வைக்கத்தான் நான் இவ்வாறு பேசினேனே ஒழிய உன் தாயை அவமதிக்கும் எண்ணத்தில் நான் சொல்லவில்லை!”
என்று அமைதியாகச் சொன்னார் ராஜகோபாலாச்சாரியார்.
மேலும், “இறைவன் முன் அனைவரும் சமம். ‘அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும் நொந்தவரே முதலாக’ என
அனைவருக்கும் அருள்புரிய இறைவன் காத்திருக்கிறான். அவன் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை.
அந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கு!” என்று அறிவுறுத்தினார். வழிப்போக்கர் அங்கேயே அவரை விழுந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றார்.

அங்கிருந்த மக்கள் எல்லோரும், “உங்களால் இந்த ஆசாமியிடம் இருந்து எங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது!” என்று
ராஜகோபாலாச்சாரியாருக்கு நன்றி சொன்னார்கள்.
“மிகுந்த வலிமையானவர்களையும் வீழ்த்துபவனான நரசிம்மன் தந்த வலிமையால் அவனை நான் வென்றேன்!” என்று
பணிவுடன் கூறினார் ராஜகோபாலாச்சாரியார்.
பின்னாளில் அவர் தான் அஹோபில மடத்தின் 44-வது பீடாதிபதியான முக்கூர் அழகிய சிங்கராக வந்து
திருவரங்க நாதனுக்கு ராஜகோபுரம் கட்டித்தந்தார்.

முக்கூர் அழகிய சிங்கர் கூறியதுபோல், வலிமையானவர்களையும் பெருவீரர்களையும் வீழ்த்துபவராகத்
திருமால் விளங்குவதால் ‘வீரஹா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 168-வது திருநாமம்.
“வீரக்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அனைத்து விதமான
தடைகளையும் எதிர்ப்புகளையும் மீறி வெற்றி காண்பார்கள்.

——————-

169. மாதவாய நமஹ: (Maadhavaaya namaha)

அக்கினிமுகர் என்ற முனிவருக்குக் கோபிலர், கோப்ரளயர் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள்.
கண்ணனின் லீலைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர்களுக்குக் கண்ணனை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.
அதனால், தென் தமிழகத்தில் வாழ்ந்த அவர்கள் இருவரும், கண்ணன் ஆட்சி புரிந்து வந்த துவாரகையை நோக்கி யாத்திரை மேற்கொண்டார்கள்.

துவாரகைக்குச் செல்லும் வழியில் காவிரியின் கிளை ஆறான பாமணியின் கரையிலுள்ள செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில்
நாரதரை அவர்கள் சந்தித்தார்கள். “வாருங்கள் முனிவர்களே! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று
கோபில – கோப்ரளயர்களைப் பார்த்துக் கேட்டார் நாரதர்.
“நாங்கள் கண்ணனுடைய சேஷ்டிதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவனை நேரில் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அதனால் கண்ணனைத் தரிசிக்கத் துவாரகையை நோக்கி யாத்திரை சென்று கொண்டிருக்கிறோம்!” என்றார்கள்.

“என்ன? கண்ணனைத் தரிசிக்கப் போகிறீர்களா? அவன் தனது அவதாரத்தையே நிறைவு செய்து கொண்டு வைகுண்டம் சென்று விட்டான்.
துவாரகை நகரமே இப்போது கடலில் மூழ்கி விட்டது!” என்றார் நாரதர்.
இத்துயரச் செய்தியைக் கோபில-கோப்ரளயர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“துர்பாக்கியசாலிகளான எங்களுக்குக் கிருஷ்ண லீலைகளைத் தரிசிக்கும் பாக்கியம் இனி கிடைக்கவே கிடைக்காதா?” என்று அழுது புலம்பினார்கள்.

“வருந்தாதீர்கள்!” என்று சொல்லி அவர்களைத் தேற்றிய நாரதர், அவர்களுக்குப் பன்னிரெண்டு எழுத்துக்களை உடைய
வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார்.
“இந்த மந்திரத்தைச் சொல்லி இந்தச் செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் நீங்கள் தவம் புரிந்தால் கண்ணன் உங்களைத் தேடி வந்து
உங்களுக்குக் காட்சியளிப்பான்!” என்று கூறினார் நாரதர்.
நாரதர் சொன்னபடி செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் இரு முனிவர்களும் பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு
கடுந்தவம் புரிய, அவர்களின் தவத்துக்குத் திருவுள்ளம் உகந்த திருமால்,
கிருஷ்ணாவதாரத்தில் தான் செய்த முப்பத்தொன்று லீலைகளை அவர்களுக்கு அங்கே காட்டியருளினார்.
முப்பத்திரண்டாவது லீலையாக, ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக, ருக்மிணி சத்யபாமாவோடும், பசுங்கன்றுகளோடும் அவர்களுக்குக் காட்சியளித்தான்.

அந்தச் செண்பகாரண்ய க்ஷேத்ரம் தான் இன்று மன்னார்குடி என்று அழைக்கப்படும் திருத்தலமாகும்.
அங்குள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சந்நதியின் பிராகாரத்தில் கண்ணன் கோபில-கோப்ரளயர்களுக்குக் காட்டிய
முப்பத்திரண்டு லீலைகளையும் சித்திரங்களாக வடித்திருப்பார்கள்.
முனிவர்களைப் பார்த்து, “முனிவர்களே நான் உங்களுக்கு இங்கே காட்டியது வெறும் லீலைகள் அல்ல.
இவை முப்பத்திரண்டும் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகள் ஆகும்.
இவைகளுள் ஒன்றைப் பின்பற்றி என்னைத் தியானிப்பவன் முக்தி அடைவான்!” என்று கூறினார்.
இவ்வாறு முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகளை விளக்கியபடியால், ‘ஸ்ரீ வித்யா ராஜகோபாலன்’ என்று அப்பெருமாள் அழைக்கப்படுகிறார்.

மன்னார்குடியில் கோயில் கொண்ட அதே ராஜகோபாலன், கும்பகோணம் கடைவீதியிலும்
ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக எழுந்தருளியிருந்து அருட்பாலிக்கிறார்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நடாதூர் அம்மாள் என்னும் மகான், கும்பகோணம் ராஜகோபால ஸ்வாமியை வணங்கி,
அப்பெருமாளின் அருளால் முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகளிலும் சிறந்த பாண்டித்யம் பெற்றார்.
பிரம்ம சூத்திரங்களில் உள்ள பிரம்ம வித்யைகளுக்கு நடாதூர் அம்மாள் அருளிய விளக்கங்களை ‘ச்ருதப்ரகாசிகை’ என்னும் நூலில் காணலாம்.
இன்றும் குடந்தை ராஜகோபால ஸ்வாமி கோயிலில், பெருமாளுக்கு அருகே
பிரம்ம வித்யைகளை விளக்கியவரான நடாதூர் அம்மாளும் விக்கிரக வடிவில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மா’ என்றால் இறைவனை அடையும் வழியாக இருக்கும் பிரம்ம வித்யை என்று பொருள்.
‘தவ:’ என்றால் தலைவன் என்று பொருள்.
கோபிலர், கோப்ரளயர், நடாதூர் அம்மாள் போன்றோருக்குப் பிரம்ம வித்யைகளை உபதேசித்தவராகவும்,
அனைத்து பிரம்ம வித்யைகளுக்கும் தலைவராகவும் திருமால் விளங்குவதால், ‘மாதவ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 169-வது திருநாமம்.
(73-வது திருநாமமான ‘மாதவ:’ என்பதற்கு மகாலட்சுமியின் கேள்வன் என்று பொருள்.
இங்கே ‘மாதவ:’ என்பதற்குப் பிரம்ம வித்யைகளின் தலைவன் என்று பொருள்.)

“மாதவாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் மாணவர்கள் கல்வியிலும், இணைப் பாடங்களிலும்,
கூடுதல் பாடங்களிலும் (co-curricular activities & extra-curricular activities) சிறந்து விளங்குவார்கள்.

—————-

170. மதவே நமஹ: (Madhave namaha)

பாற்கடலிலிருந்து வெளிவந்த மகாலட்சுமி, அங்கு நின்றுகொண்டிருந்த திருமாலைக் கண்டாள்;
தேன் போலத் தித்திக்கும் அவரது வடிவழகில் மயங்கினாள். எனினும், அவள் உள்ளத்திலுள்ள அன்பை அவளது நாணம்
மறைத்துவிட்டபடியால், தன் அன்பைத் திருமாலிடம் நேரில் அவளால் வெளிப்படுத்த இயலவில்லை.
நாணம் தலைதூக்கிய நிலையில் பாற்கடலில் இருந்து விரைந்தோடினாள்.

திருவாரூரை அடுத்துள்ள திருக்கண்ணமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்தாள். அக்காலத்தில் அவ்விடம் ‘லட்சுமிவனம்’ என்றழைக்கப்பட்டது.
நாணத்தால் திருமாலை விட்டு அவள் விலகி ஓடி வந்தாலும், அவளது மனக்கண்களில் திருமாலின் தோற்றம் நன்கு பதிந்திருந்தது.
அங்கேயே தியானத்தில் அமர்ந்துகொண்டு தேனெனத் தித்திக்கும் திருமாலின் அழகைத் தன் மனக்கண்களால் பருகிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட முனிவர்கள் சிலர், பிருகு முனிவரிடம்,
“மகாலட்சுமியால் இதே போல் எத்தனை நாட்கள் திருமாலைத் தியானிக்க முடியும்?” என்று கேட்டார்கள்.
அதற்குப் பிருகு, “சாந்தோக்ய உபநிஷத்தில் மது வித்யை என்றொரு பகுதி உள்ளது.
அதில், ஒளிமிக்கதான வைகுண்ட லோகம் சூரியனாக உருவகப் படுத்தப்படுகிறது.
சாதாரண சூரியனுக்கு உதயம், அஸ்தமனம் இரண்டும் உண்டு.
ஆனால் வைகுண்டத்திலோ எப்போதும் பகல் தானே ஒழிய உதயம், அஸ்தமனம் இரண்டுமே இல்லை.
அந்த வைகுண்டமாகிய சூரியனுக்குள்ளே திருமால் தேனாகத் திகழ்கிறார்.
தேனாகத் தித்திக்கும் திருமாலின் அழகை அங்குள்ள நித்யசூரிகளும் முக்தாத்மாக்களும் இடைவிடாது பருகிக் கொண்டே இருக்கிறார்கள்.
எவ்வளவு பருகினாலும், போதும் என்ற திருப்தி ஏற்படாத படி திகட்டாத அமுதமாக அவரது அழகு விளங்குகின்றது என்று உபநிஷத் விளக்குகிறது.
திருமாலைக் குறித்துச் செய்யும் தியானம் தேன் போல இனிப்பதால், இந்த வித்யைக்கு ‘மது வித்யை’ என்று பெயர்.
(மது என்றால் வடமொழியில் தேன் என்று பொருள்.)
எனவே திகட்டாத அமுதாகிய திருமாலின் அழகில் ஈடுபட்டிருக்கும் மகாலட்சுமிக்கு இந்த தியானத்தில் அலுப்பே ஏற்படாது.
அதனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தியானிப்பாள்!” என்றார்.

மற்ற முனிவர்கள், “தியானிப்பது இருக்கட்டும். இவள் தான் வெட்கத்தால் விலகிச் செல்கிறாள் என்றால்,
திருமாலாவது இவளைத் தேடி வந்து மணந்து கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார்கள்.
“இவளது தியானம் முதிர்ச்சி அடையும் நிலையில் திருமாலே இவளைத் தேடி வருவார்!” என்றார் பிருகு.
சில காலம் கடந்தது. திருமாலின் தளபதியான விஷ்வக்சேனர் மகாலட்சுமியிடம் ஒரு ஓலையைக் கொண்டு வந்து தந்தார்.
அதில், “நான் உனக்காக இங்குள்ள தர்ச புஷ்கரிணியின் மேற்குக் கரையில் காத்திருக்கிறேன்!” என்று திருமால் எழுதியிருந்தார்.

அந்த வார்த்தைகளைப் படித்த அளவில், அவளது காதல் நாணத்தை வென்று விட்டது.
தன் மனம் கவர்ந்த நாயகனைக் காணும் ஆர்வத்துடன் குளத்தின் மேற்குக் கரையை அடைந்தாள் மகாலட்சுமி.
அங்கே தேவர்களும் முனிவர்களும் புடைசூழத் திருமால் நின்று கொண்டிருந்தார். முனிவர்கள் நான்கு வேதங்களை நான்கு தூண்களாக்கி
ஒரு மண்டபத்தை அங்கே அமைத்தார்கள். அம்மண்டபத்தில் திருமால் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
அதனால் ‘அபிஷேகவல்லி’ என்று மகாலட்சுமி பெயர் பெற்றாள். திருமாலை அங்கேயே திருக்கல்யாணம் செய்து கொண்டாள்.
கடல் போன்ற அன்போடு மகாலட்சுமியைத் தேடி வந்தமையால், அவ்வூரில் திருமாலுக்குப் ‘பெரும்புறக்கடல்’ என்ற பெயர் ஏற்பட்டது.

பெரும்புறக்கடலாகிய திருமாலுடன், அபிஷேகவல்லியாகிய திருமகள் இணைந்திருக்கும் காட்சியைக் கண்ட
தேவர்களும் முனிவர்களும் தேனாக இனிக்கும் இந்தச் சேர்த்தி அழகை எப்போதும் பருக வேண்டுமென விரும்பினார்கள்.
அதனால் தாங்களே தேனைப் பருகும் தேனீக்களாக வடிவெடுத்து, திருக்கண்ணமங்கையில் அபிஷேகவல்லித் தாயார் சந்நதியின் எதிரே
குடிகொண்டு, திருமாலுடன் திருமகள் இணைந்திருக்கும் அழகாகிய தேனைத் தினமும் பருகுகிறார்கள்.
(திருக்கண்ணமங்கை தாயார் சந்நதியில் இன்றும் அந்தத் தேன் கூட்டை நாம் காணலாம்.)

இவ்வாறு தன் அடியார்களுக்குத் தேனாகத் தித்திப்பதால், திருமால் ‘மது:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 170-வது திருநாமம்.
“மதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எல்லா நாட்களும் தேனெனத் தித்திக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

———————

171. அதீந்த்ரியாய நமஹ: (Atheendhriyaaya namaha)

ஒருவனுக்கு மிகவும் தாகமாக இருந்ததாம். அதனால் தனது நண்பனிடம் சென்று, “தாகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் வேண்டும்!” என்றான்.
அதற்கு அவன் நண்பன், “தண்ணீர் தானே! அதற்கென்ன பஞ்சம்? நேராக ஆகாய கங்கைக்குச் சென்று,
வேண்டும் அளவு தண்ணீரைப் பருகிக் கொள்!” என்றான்.
“அவசரத்துக்குத் தண்ணீர் கேட்டால் ஆகாய கங்கைக்கு வழிகாட்டுகிறாயா?” என்று சொல்லி விட்டு, இரண்டாவது நண்பனிடம் சென்றான்.

இரண்டாவது நண்பன், “நீ பாற்கடலுக்குச் சென்றால் பாலையே அள்ளிப் பருகலாம்!” என்றான்.
“பசிஃபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்டவற்றை வரைபடைத்தைக் கொண்டாவது தேடலாம்.
பாற்கடலை எங்கு போய் தேடுவேன்?” என்று சொல்லி விட்டு, மூன்றாவது நண்பனிடம் சென்றான்.

மூன்றாவது நண்பன், “அருகிலுள்ள காட்டாற்றுக்குச் சென்றால் தண்ணீர் கிடைக்கும்!” என்றான்.
இவனோ, “எனக்குத் தாகம் இருக்கையில், காட்டாற்றில் தண்ணீர் இருக்குமா என்று சொல்ல முடியாது.
அதில் தண்ணீர் வரும் போது எனக்குத் தாகம் ஏற்படுமா என்றும் சொல்ல முடியாது!” என்று சொல்லி விட்டு நான்காவது நண்பனிடம் சென்றான்.

நான்காவது நண்பன், “புதிதாக ஒரு ஆழ்குழாய் போட்டு நிலத்தடி நீரை எடுத்து அருந்திக்கொள்!” என்றான்.
“இது அவசரத்துக்கு ஆகும் காரியமா? எத்தனை அடி தோண்டினாலும் தான் இந்நாட்களில் தண்ணீர் வருவதில்லையே!” என்று
புலம்பி விட்டு ஐந்தாம் நண்பனிடம் சென்றான்.

ஐந்தாவது நண்பன், “குடம் குடமாகத் தண்ணீர் பிடித்து வைத்துள்ளேன். வேண்டும் அளவு எடுத்து பருகிக்கொள்!” என்றான்.
மகிழ்ச்சியுடன் இவனும் பருகினான். தாகம் தீர்ந்தது.

மாபெரும் வைணவ குருவான பிள்ளை லோகாசாரியார் இக்கதையைத் தனது சீடர்களுக்குச் சொன்னார்.
“இதற்குள் ஒரு ஆழ்ந்த கருத்து இருக்கிறது!” என்றார். “என்ன கருத்து?” என ஆவலுடன் சீடர்கள் கேட்டார்கள்.
பிள்ளை லோகாசாரியார் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்தார்:

இறைவனைக் காண விரும்பும் பக்தன் தான் இக்கதையில் வரும் தாகம் கொண்ட மனிதன்.
இறைவனைக் காண வேண்டுமென்று தாகத்துடன் இருக்கும் அவனிடம்,
“வைகுண்டத்தில் போய் பெருமாளைத் தரிசனம் செய்துகொள்!” என்று சொல்வது “ஆகாயகங்கைக்குப் போய்த் தண்ணீர் பருகு!” என்று
சொல்வதற்குச் சமம். ஏனெனில், ஆகாயகங்கை எப்படி நம் புலன்களுக்கு அப்பாற்பட்டதோ,
அதுபோலத் தான் வைகுண்டமும் அங்குள்ள பெருமாளும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

“பாற்கடலுக்குப் போய் பெருமாளைத் தரிசனம் செய்துகொள்!” என்று சொல்வது “பாற்கடலுக்குச் சென்று பாலை அருந்து!” என்று
சொல்வது போன்றதாகும். தேவர்களால் தான் பாற்கடலுக்குச் செல்ல இயலும்.
“வராகன், ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் எடுக்கும் போது பெருமாளைத் தரிசித்துக் கொள்!” என்று சொல்வது
“காட்டாற்றிலுள்ள நீரை நாடிச் செல்!” என்பது போல. ஏனெனில் நாம் விரும்பும் போது அவர் அவதரிக்க மாட்டார்.
அவர் அவதரிக்கும் காலத்தில் நாம் அவரைக் காண விரும்புவோமா என்ற உத்திரவாதமும் இல்லை.

“உனக்குள்ளேயே அந்தர்யாமியாகப் பெருமாள் இருக்கிறார். அவரைத் தரிசனம் செய்து கொள்!” என்று சொல்வது,
ஆழ்குழாய் மூலம் நீர் எடுக்கச் சொல்வது போல மிகவும் சிரமமான காரியம்.
கோயில்களிலும் வீடுகளிலும் விக்கிரக வடிவில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் பெருமாளைத் தரிசித்துக் கொள் என்று சொன்னால்,
அது குடங்களில் பிடித்து வைத்திருக்கும் நீரைப் பருகச் சொல்வது போல் மிக எளிதான காரியம்.

இவ்வாறு கதைக்குள் உள்ள தத்துவத்தை விளக்கிய பிள்ளை லோகாசாரியார்,
“வைகுண்டத்தில் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவராகத் திருமால் எழுந்தருளியிருந்தாலும், நம் மேல் கருணை கொண்டு
விக்கிரக வடிவில் நம் புலன்களால் அனுபவிக்கும்படி நம்முன் தோன்றுகிறார்.
அந்த அர்ச்சாவதார நிலையிலுள்ள இறைவனை வணங்கினால் உய்வடையலாம்!” என்று கூறினார்.

அர்ச்சாவதாரத்தில் நம் புலன்களால் அனுபவிக்கும்படி நம்முன் தோன்றும் திருமால், வைகுண்டத்தில் நம் புலன்களுக்கெல்லாம்
அப்பாற்பட்டவராக விளங்குகிறார். வேதங்களைக் கொண்டு மட்டுமே அவரை அறிய முடியுமே ஒழிய,
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய எந்தப் புலன்களாலும் வைகுண்டநாதனை அறிய இயலாது.
எனவே வைகுண்டத்திலுள்ள திருமால் ‘அதீந்த்ரிய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘இந்த்ரிய:’ என்றால் புலன்கள். ‘அதீந்த்ரிய:’ என்றால் அவற்றுக்கு அப்பாற்பட்டவர்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 171-வது திருநாமம்.

“அதீந்த்ரியாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் புலன்கள், சரியான கட்டுப்பாட்டுடன் இயங்கும்படித் திருமால் அருள்புரிவார்.
(‘அதீந்த்ரிய:’ என்ற 171-வது திருநாமம் தொடங்கி, ‘அமேயாத்மா’ என்ற 181-வது திருநாமம் வரையிலான 11 திருநாமங்கள்
வைகுண்டநாதனின் திருக்கல்யாண குணங்களை விளக்கவந்தவை.)

——————

172. மஹாமாயாய நமஹ: (Mahaamaayaaya namaha)

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாய்சுருட்டுவது போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான்.
திருமால் பன்றி முகத்தோடு வராகராக அவதாரம் செய்து இரண்யாட்சனை வதம் செய்து பூமியை மீட்டார்.
இரண்யாட்சனை இழந்த அவனது மனைவிகளும் மக்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அங்கே இரண்யாட்சனின் அண்ணனான
இரணியன் வந்தான். “வருந்தாதீர்கள்! உடல் என்பது அழியக் கூடியது. ஆத்மா தான் எப்போதும் அழியாமல் இருக்கக்கூடியது.
பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பதும் இருக்கத்தானே செய்யும்?
பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் என்பது உலக நியதி! அந்த வகையில் என் தம்பிக்கும் மரணம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக வருந்தாதீர்கள்! அழாதீர்கள்!” என்றெல்லாம் ஆறுதல் மொழிகள் சொன்னான்.

இதைக் கேட்ட இரண்யாட்சனின் குடும்பத்தினர், “ஏய் இரணியா! உன் அண்ணன் இறந்ததில் உனக்கு வருத்தமே இல்லையா?
நீ அழாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் துக்கத்திலிருக்கும் எங்களிடம் வந்து சம்பந்தமில்லாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கிறாயே!
இது நியாயமா?” என்று கேட்டார்கள். “எனக்கு வருத்தமில்லை என்று யார் சொன்னது?
எனது துக்கத்தை எல்லாம் மனத்துக்குள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்! ஆனால் அழுது என்ன பயன்?
இரண்யாட்சனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்க வேண்டாமா?” என்று கேட்டான் இரணியன்.

“அதற்கு என்ன செய்யப்போகிறாய்?” என்று மற்றவர்கள் கேட்க, “என் தம்பியைக் கொன்ற அந்தத் திருமாலை
எனது வாளால் குத்திக் கொன்று அந்தத் திருமாலின் ரத்தத்தால் என் தம்பிக்குத் தர்ப்பணம் செய்வேன்!” என்று சபதம் செய்தான் இரணியன்.
திருமாலைத் தேடிக் காரிய வைகுண்டத்துக்குச் சென்றான். அங்கே சென்று பார்த்தால், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி உள்ளிட்ட நாச்சிமார்கள் இருந்தார்கள்.
கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யசூரிகள் இருந்தார்கள். ஆதிசேஷன் படுக்கையும் இருந்தது.
ஆனால் அந்த ஆதிசேஷன் மேல் திருமாலைக் காணவில்லை.

“எங்கே போனான் அந்த நாராயணன்? அவன் எங்கு சென்றாலும் நான் அவனை விட மாட்டேன். எனது வாளுக்கு அவனை இரையாக்குவேன்!
அவன் ரத்தத்தால் என் தம்பிக்குத் தர்ப்பணம் செய்வேன்!” என்றெல்லாம் கூச்சலிட்டான்.
வைகுண்டத்திலிருந்தோர், “இரணியா! நீ வருவதைக் கேள்வியுற்ற திருமால், உன்னைக் கண்டு அஞ்சி எங்கேயோ ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்.
அவர் எங்கே ஒளிந்து கொண்டார் என்று எங்களுக்குத் தெரியாது!” என்று கூறினார்கள்.

“பதினான்கு உலகங்களுள் அவன் எங்கு இருந்தாலும் நான் கண்டறிவேன்!” என்று சொல்லிவிட்டு அனைத்துலகங்களிலும் தேடினான் இரணியன்.
ஆனால் திருமாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான் இரணியன்.
(அதன்பின் இரணியனுக்குப் பிரகலாதன் மகனாகப் பிறந்ததும், திருமால் நரசிம்மராக வந்து இரணியனை வதைத்ததும் வாசகர்கள் அறிந்த செய்தியே.)

இரணியவதம் ஆனபின், பிரகலாதன் திருமாலிடம், “என் தந்தை உன்னை அனைத்து உலகங்களிலும் தேடியதாகவும்,
எங்கு தேடியும் உன்னைக் காணமுடியவில்லை என்றும் சொன்னார். நீ எங்கே ஒளிந்து கொண்டாய்?” என்று கேட்டான்.
“உன் தந்தையின் இதயத்துக்குள் ஒளிந்து கொண்டேன். அங்கே அவன் தேட மாட்டான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்!” என்றார் திருமால்.

“என் தந்தையைக் கண்டு அஞ்சி ஒளிந்து கொண்டாயா?” என்று கேட்டான் பிரகலாதன்.
“இல்லை! அப்போதே அவன் முன் தோன்றி அவனைக் கொன்றிருந்தால், பக்தப் பிரகலாதனான உனது பெருமை
உலகுக்குத் தெரியாமலே போயிருக்கும். அதனால் தான் நீ தூணிலும் உளன், துரும்பிலும் உளன் என்று சொல்லும் வரை காத்திருந்து,
அதன்பின் தூணைப் பிளந்து வெளி வந்து இரணியனைக் கொன்றேன்!” என்றார்.

இவ்வாறு, அடியார்களுக்குத் தன் வடிவத்தை நன்கு காட்டினாலும், அசுரர்களுக்குத் தன்னைக் காட்டாமல் மாயங்கள் செய்து
தன்னை மறைத்துக் கொள்வதால் ‘மஹாமாய:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
“மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்” என்று ஆழ்வார் பாடுகிறார்.
‘மஹாமாய:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 172-வது திருநாமம்.
இதில் ‘மாய:’ என்பது திருமாலின் சக்தியைக் குறிக்கிறது.
இந்த ‘மாய:’ என்ற சொல்லுக்குப் பொய் என்றோ மாயை என்றோ அர்த்தமில்லை.
“மஹாமாயாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் பக்தர்கள், அனைத்து விதமான மயக்கங்களிலிருந்தும் வெளிவரும்படித் திருமால் அருள்புரிவார்.

————–

173. மஹோத்ஸாஹாய நமஹ: (Mahothsaahaaya namaha)

வேதாந்த தேசிகனிடம் ஒரு பண்டிதர், “இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா?” என்று கேட்டார்.
“இறைவனுக்கு எப்போதுமே அழகான உருவம் உண்டு. உலகம் படைக்கப்படுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி,
இறைவன் அழகான திருமேனியோடு விளங்குகிறார்!” என்றார் தேசிகன்.
“எதை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் பண்டிதர்.
“முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.
உலகைப் படைக்கும் போது கார் மேகம் போன்ற வண்ணத்துடன் இறைவன் இருந்தான் என்பது இப்பாடலின் பொருள்.
உருவம் இருந்தால் தானே வண்ணம் இருக்க முடியும்? உருவமே இல்லாத ஒருவனுக்கு வண்ணம் எப்படி இருக்கும்?
எனவே உலகின் படைப்புக்கு முன்பிருந்தே, அநாதி காலமாக, கார்முகில் போன்ற நிறம் கொண்ட அழகிய உருவத்தோடு
தான் இறைவன் விளங்குகிறார்!” என்றார் தேசிகன்.

“இறைவனுடைய கார்முகில் வண்ணத்தின் பின்னணி என்ன?” என்று கேட்டார் பண்டிதர்.
அதற்கு தேசிகன், “மையார் கருங்கண்ணியான மகாலட்சுமியின் திருக்கண்களின் பார்வை எப்போதும் திருமாலின் திருமேனியில்
பட்டபடியால், அக்கண்களின் கறுப்பு நிறம் அவரது திருமேனியில் படிந்து விட்டது.
அதுமட்டுமின்றி, அவரது நாபியிலுள்ள தாமரை மலரை மொய்க்கும் வண்டுகளின் கருமை நிறம் திருமால் திருமேனியில் பட்டு,
அது மேலும் கருமையானது. அது மட்டுமா? தோளிணை மேலும், நன் மார்பின் மேலும், சுடர்முடி மேலும், தாளிணை மேலும்
திருமால் அணிந்திருக்கும் துளசி மாலையின் பசுமை திருமாலின் கறுப்பு நிறத்தை மேலும் வளர்த்து விட்டது.
கறுப்பு நிறம் கொண்ட யமுனை நதியின் கரையில் கிருஷ்ணாவதாரத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தபடியால்,
யமுனையின் கருமை திருமால் திருமேனியில் படிந்து, அது மேலும் கறுப்பாகி விட்டது.

இவைகள் ஒருபுறமிருக்க, உலகைப் படைக்க முற்பட்ட போது, திருமால் ஆனந்தத்தால் கருமை நிறத்தை அடைந்தார்!” என்றார் தேசிகன்.
“அது என்ன? ஆனந்தத்தால் கருமை நிறம் பெற்றாரா?” என்று கேட்டார் பண்டிதர்.
“ஆம் உலகம் படைக்கப்படுவதற்கு முன், உயிர்களாகிய நாம் அனைவரும் அறிவற்றவர்களாக, ஜடப் பொருட்களுக்குச் சமமானவர்களாகச்
சிந்தையும் கரணங்களும் சிதைந்து கிடந்தோம். நாம் அந்நிலையிலேயே இருந்திருந்தால், இறைவனை அடைவதற்காகக்
கர்ம யோகமோ, ஞான யோகமோ, பக்தி யோகமோ, சரணாகதியோ எதையுமே நம்மால் செய்ய இயலாதல்லவா?
அதனால், நம்மேல் கருணை கொண்ட இறைவன், உலகைப் படைத்து நமக்கு உடலையும், அறிவையும், சாஸ்திரங்களையும்,
ஆசார்யர்களையும் வழங்கினார். அனைத்தையும் நமக்குத் தந்து விட்டு, இனி இந்த ஜீவாத்மாக்கள் இந்த உடல், அறிவு
உள்ளிட்டவற்றை நல்ல வழியில் பயன்படுத்தி, கர்ம, ஞான, பக்தி யோகங்களையோ அல்லது சரணாகதியையோ செய்து
நம்மை வந்து அடையப் போகிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தார் இறைவன்.

மிகவும் மகிழ்ச்சி அடைந்தால் உடல் கறுத்துப் போய்விடும் என்று சொல்வார்கள்.
ஏற்கெனவே கருங்கண்ணியான லட்சுமியின் பார்வையாலும், உந்தித் தாமரையை மொய்க்கும் வண்டுகளாலும்,
துளசி மாலையின் பசுமையாலும், யமுனையின் பிரதிபலிப்பாலும் கருமையாக இருந்த திருமாலின் திருமேனி உலகைப் படைத்த
உற்சாகத்தாலும் மகிழ்ச்சியாலும் மேலும் கருமையானது. இவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஆழ்வார்,
‘முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே!’ என்று பாடினார்.
ஆண்டாளும், ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய்க்கறுத்து’ என்று பாடினாள்.
இவ்வாறு நாம் நற்கதி அடையவேண்டும் என்ற உற்சாகத்துடன் உலகைப் படைத்து, அந்த உற்சாகத்தால் மேலும்
கருமையடைந்த திருமாலின் கறுப்புநிறம் நம்மைக் காக்கட்டும்!” என்று கூறினார் தேசிகன்.

இக்கருத்தை ஒரு ஸ்லோக வடிவில், தேசிகன் “தத்வ முக்தா கலாபம்” என்னும் நூலில் கூறுகிறார்:

“லக்ஷ்மீ நேத்ரோத்பல ஸ்ரீஸதத பரிசயாத் ஏஷ ஸம்வர்தமான:
நாபீ நாலீக ரிங்கன் மதுகர படலீ தத்த ஹஸ்தாவலம்ப: |
அஸ்மாகம் ஸம்பதோகாத் அவிரல துளஸீ தாம ஸஞ்ஜாத பூமா
காளிந்தீ காந்தி ஹாரீ கலயது வபுஷ: காலி மா கைடபாரே: ||”

இவ்வாறு நாம் அனைவரும் நற்கதி அடையவேண்டும் என்ற எண்ணத்தில் பெரும் உற்சாகத்தோடு உலகைப் படைத்தபடியால்,
திருமால் ‘மஹோத்ஸாஹ:’ (மஹா + உத்ஸாஹ: = மஹோத்ஸாஹ:) என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 173-வது திருநாமம்.
‘உத்ஸாஹ:’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கமே ‘உற்சாகம்’.
“மஹோத்ஸாஹாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்கள் கடமைகளைச் சிறப்பாகச்
செய்வதற்குரிய உற்சாகத்தைத் திருமால் அருள்வார்.

———————

174. மஹாபலாய நமஹ: (Mahaabalaaya namaha)

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.
அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம்.
அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்.
ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். “நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.
“ஆஹா! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்!” என்று
கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.
இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது!
அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!” என்றார். “அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன்.
“நேரம் வரும் போது சொல்கிறேன்!” என்றார் வியாசர். பல ஆண்டுகள் கழிந்தன.
மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்.
“அர்ஜுனா! நான் எனது அவதாரத்தை முடித்துக்கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்.
அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு
இந்திர ப்ரஸ்தத்துக்குச் சென்றுவிடு!” என்று கூறினான் கண்ணன்.

கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன், தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான்.
வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்.
அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை.
பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்தமுடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய
அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.
அதுவும் சாதாரணத் திருடர்களிடம்!

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன்.
அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். “அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான
காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது!” என்று கூறினார் வியாசர்.
“கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார்.
ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது! இதுவரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி
அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது.
என்னால் அதைத் தூக்க முடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.

அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை
இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான்.
அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால்,
இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்.
மேலும், “சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா?
கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கி விட்டாய். ஆனால் கண்ணனின் அருள்பெறாத கர்ணனால்
இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும்
இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்!” என்றார் வியாசர்.
இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது.
இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்” (பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.
இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 174-வது திருநாமம்.
“மஹாபலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச் சிறந்த உடல் வலிமையையும் மனவலிமையையும் திருமால் அருளுவார்.

——————

175. மஹாபுத்தயே நமஹ: (Mahaabuddhaye namaha)

யக்ஞமூர்த்தி என்ற பண்டிதர், வேத வாக்கியங்கள் தொடர்பாகச் சம்பிரதாய ரீதியில், ராமாநுஜரோடு வாதப்போர் புரிய வந்தார்.
“ராமாநுஜரே! நான் மட்டும் உங்களிடம் தோற்றுவிட்டால், என் சம்பிரதாயத்தை விட்டுவிட்டு, உங்கள் சம்பிரதாயத்துக்கு வந்து விடுகிறேன்.
உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன். என்னோடு வாதம் செய்ய நீங்கள் தயாரா?” என்று கேட்டார்.
“தயார்!” என்றார் ராமாநுஜர். வாதம் தொடங்கியது. பாரதப் போர் போல் அந்த வாதப் போர் பதினேழு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
“இறைவனும் ஜீவாத்மாவும் ஒன்று” என்ற ரீதியில் யக்ஞமூர்த்தியும்,
“இறைவன் வேறு, ஜீவாத்மா வேறு” என்ற ரீதியில் ராமாநுஜரும், பற்பல வேத வாக்கியங்களை மேற்கோள் காட்டி வாதிட்டார்கள்.

பதினேழாம் நாள் வாதத்தில், சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள “ஏகம் ஏவ அத்விதீயம்” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டினார் யக்ஞமூர்த்தி.
“இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனுக்கு இரண்டாவதே இல்லை என்று இவ்வாக்கியம் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறதே.
அவ்வாறிருக்க இறைவனைக் காட்டிலும் வேறுபட்டதாக ஜீவாத்மா எவ்வாறு இருக்க முடியும்?
அதனால் தான் சொல்கிறேன் இறைவனும் ஜீவாத்மாவும் ஒன்றே!” என்றார் யக்ஞமூர்த்தி.
அதற்கு விடையளிக்க முடியாமல் திகைத்தார் ராமாநுஜர். அதற்குள், மாலை நேரம் வந்தமையால், “நாளை விவாதத்தை தொடர்வோம்!” என்று
சொல்லி விட்டுத் தம் மாலை அநுஷ்டானங்களுக்குச் சென்றார் ராமாநுஜர்.
வெற்றிச் செருக்கு பொங்கும் முகத்துடன் யக்ஞமூர்த்தி சபையிலிருந்து வெளியேறினார்.
கனத்த மனத்துடன் தமது மடத்திலிருக்கும் வரதராஜப் பெருமாளிடம் வந்தார் ராமாநுஜர்.

“எம்பெருமானே! நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார் போன்ற ஓராண் வழி ஆசார்யர்கள் மூலமாக நீ தந்த
இந்தச் சம்பிரதாயத்தை நீயே அழிக்கலாம் எனத் திட்டமிட்டு விட்டாயோ? இவ்வளவு உயர்ந்த சம்பிரதாயம் என் குற்றத்தால் தோற்கலாமா?
நீ என்ன லீலை செய்யத் திட்டமிட்டுள்ளாய்?” என்று பெருமாளிடம் புலம்பிவிட்டு இரவு உணவு உட்கொள்ளாமல் உறங்கச் சென்றார்.
அன்று இரவு ராமாநுஜர் கனவில் தோன்றிய வரதராஜப் பெருமாள், “ஆளவந்தாருடைய ‘ஸித்தி த்ரயம்’ உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
அடுத்த நாள் காலை விழித்தெழுந்த ராமாநுஜர், ஸித்தி த்ரயத்திலுள்ள கருத்துக்களைச் சிந்தித்துப் பார்த்தார்.
“ஏகம் ஏவ அத்விதீயம் – இறைவன் ஒருவனே இருக்கிறான், இரண்டாவது இல்லை என்றால்
இரண்டாவது பொருளே இல்லை என்றோ, ஜீவாத்மாக்களே இல்லை என்றோ பொருளல்ல. இறைவன் ஒப்பற்ற ஒருவனாக இருக்கிறான்.
அந்த ஒப்பில்லா அப்பனைப் போல இரண்டாவது நபர் யாரும் இல்லை என்று தான் பொருள்” என்று
ஆளவந்தார் கூறிய விளக்கம் ராமாநுஜரின் நினைவுக்கு வந்தது.

பெருமாளுக்கு நன்றி தெரிவித்து விட்டுப் புதுப்பொலிவோடும் கம்பீரத்தோடும் சபைக்கு வந்தார் ராமாநுஜர்.
அவர் வந்த தோரணையைப் பார்த்தவுடனேயே அஞ்சிய யக்ஞமூர்த்தி, நேராக ராமாநுஜரின் திருவடிகளில் வந்து விழுந்தார்.
“என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன்!” என்றார்.
“இன்னும் ஏகம் ஏவ அத்விதீயம் என்ற வாக்கியதுக்கு நான் விளக்கமே அளிக்கவில்லையே!” என்றார் ராமாநுஜர்.
“இல்லை! உங்கள் முகத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்.
இன்று முதல் உங்கள் சீடனாகிறேன். உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார் யக்ஞமூர்த்தி.

“இன்று இந்த வாதத்தில் நான் வென்றேன் என்றால், எனது புத்தியால் நான் வெல்லவில்லை.
இதற்கான புத்தியை அடியேனுக்குத் தந்தவர் வரதராஜப் பெருமாள். அதனால் அந்த வரதராஜப் பெருமாளின் திருநாமமான
அருளாளப் பெருமாள் என்பதையும் உங்கள் பெயரோடு இணைத்துக் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்!” என்றார் ராமாநுஜர்.
அதன்படி, வரதராஜரின் திருநாமமாகிய ‘அருளாளப் பெருமாள்’, ராமாநுஜரின் திருநாமமாகிய ‘எம்பெருமானார்’ இரண்டும் இணைக்கப்பட்டு,
‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அவருக்குத் திருநாமம் உண்டானது.

இவ்வாறு ராமாநுஜர் போன்ற மாபெரும் குருமார்களுக்கும் வாதம் செய்வதற்குத் தேவையான அறிவைத் தரக்கூடிய
ஞானநிதியாகத் திருமால் திகழ்வதால், ‘மஹாபுத்தி:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 175-வது திருநாமம்.
“மஹாபுத்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி நன்கு வளரும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

176. மஹாவீர்யாய நமஹ: (Mahaaveeryaaya namaha)

(‘அதீந்த்ரிய:’ என்ற 171-வது திருநாமம் தொடங்கி, ‘அமேயாத்மா’ என்ற 181-வது திருநாமம் வரையிலான 11 திருநாமங்கள்
வைகுண்டநாதனின் திருக்கல்யாண குணங்களை விளக்க வந்தவை.)
‘திருமந்திரம்’ என்று போற்றப்படும் எட்டெழுத்து மந்திரத்தை உலகுக்கு உபதேசிக்க எண்ணினார் திருமால்.
அதனால், நாராயண ரிஷி என்னும் குருவாகவும், நர ரிஷி என்ற சீடராகவும் இரு அவதாரங்களைத் திருமால் ஒரே நேரத்தில் எடுத்தார்.
பத்ரிநாத்தில் நரனுக்கு நாராயணன் திருமந்திரத்தை உபதேசித்தார்.
உலகில் குருவும் சீடரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருவரும் வாழ்ந்து காட்டினார்கள்.

ஒருமுறை பத்ரிநாத்துக்குச் சென்ற இந்திரன், அங்கே தவம் செய்து கொண்டிருந்த நர-நாராயண ரிஷிகளைக் கண்டான்.
அவர்களைத் திருமாலின் அவதாரம் என்று உணராத இந்திரன், “யாரோ இரண்டு ரிஷிகள் கடுந்தவம் புரிகிறார்களே!
இவர்கள் பெரும் தவ வலிமையைச் சம்பாதித்து, அதனால் நமது இந்திரப் பதவியை வந்து பிடித்து விட்டால் என்ன செய்வது?” என அஞ்சினான்.
அதனால் மன்மதனை அழைத்த இந்திரன், “அங்கே இரண்டு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள் பார்!
அவர்களின் தவத்தை உடனடியாகக் கலைத்துவிடு!” என்றான்.
“முதலில் குருவின் தவத்தைக் கலைக்கிறேன். பிறகு சீடனைப் பார்த்துக் கொள்ளலாம்!” என்று சொன்ன மன்மதன்,
அரம்பை, மேனகை உள்ளிட்ட தேவமாதுகளை நாராயண ரிஷியின் முன் நடனமாட வைத்தான்.
அப்படியே தென்றல் காற்றும், அதில் மல்லிகைப்பூ மணமும் வீசும்படிச் செய்தான். தனது கரும்பு வில்லில் இருந்து கணைகளை
நாராயண ரிஷியின் மேல் தொடுத்தான். ஆனால் இவை எதுவுமே நாராயண ரிஷியைப் பாதிக்கவில்லை.
அவர் தொடர்ந்து தவத்தில் ஈடுபட்ட வண்ணமிருந்தார்.

இதைக் கண்ட மன்மதனும் தேவமாதுகளும் அஞ்சினார்கள். “இவர் சாதாரண மனிதர் அல்லர் போலும்!
இந்திரனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இவரிடம் விளையாடி விட்டோமே! பரமசிவன் நம்மை எரித்துச் சாம்பல் ஆக்கியது போல்,
இவரும் எரித்து விடுவாரோ!” என மன்மதன் அஞ்சினான்.
ஆனால் புன்னகையுடன் மன்மதனைத் தன் அருகே அழைத்த நாராயண ரிஷி, “இந்திரப் பதவியை அடைவது என் நோக்கமல்ல.
உலகில் குருவும் சீடனும் வாழ வேண்டிய முறையை விளக்குவதற்காக, ஸர்வேச்வரனான நானே இங்கே குருவாகவும் சீடனாகவும் அவதரித்துத்
தவம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால், இந்திரனின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவனிடம் போய்ச் சொல்!” என்று கூறினார்.

நாராயண ரிஷி தமது தொடையைத் தம் கைகளால் தட்டினார். அவரது தொடையில் இருந்து ஒரு தேவமாது தோன்றினாள்.
வடமொழியில் ‘ஊரு’ என்றால் தொடை என்று பொருள். ஊருவிலிருந்து தோன்றியமையால் அவள் ‘ஊர்வசி’ என்று பெயர் பெற்றாள்.
அவளது அழகைக் கண்டதும் மன்மதனும் அவனது நண்பர்களும் மயங்கிவிட்டார்கள்.
“உன்னை மயக்க எண்ணி நாங்கள் வந்தோம். ஆனால் நீ உருவாக்கிய பெண்ணைக் கண்டு நாங்கள் மயங்கி விட்டோமே!
வேட்டையாட வந்தவனே வேட்டையாடப் பட்ட கதை போல் ஆகி விட்டதே!” என்று வெட்கத்துடன் சொன்னான் மன்மதன்.
“இந்தப் பெண்ணை இந்திர லோகத்துக்கு அழைத்துச் செல். இவள் இனி அங்கேயே வசிப்பாள்!” என்று நாராயண ரிஷி சொல்ல,
மன்மதனும் ஊர்வசியை இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்றான்.

பத்ரிநாத்தில் இருந்து இந்திர லோகம் செல்லும் வழியில் கைலாசத்தில் பரமசிவனைச் சந்தித்தான் மன்மதன்.
மன்மதனைப் பார்த்துச் சிரித்தபடி, “நாராயண ரிஷியிடம் உன் கணைகள் தோற்று விட்டனவா?” என்று கேட்டார்
பரமசிவன். “ஆம்!” என்று வெட்கத்துடன் சொன்னான் மன்மதன்.
“நான் தவம் புரியும் போதும் நீ என் தவத்தைக் கலைக்கப் பார்த்தாய். நான் காமத்தை வென்றாலும், கோபத்துக்கு வசப்பட்டு விட்டேன்.
கோபத்தில் உன்னை எரித்தேன். ஆனால் நாராயண ரிஷி, காமம் கோபம் உள்ளிட்ட எதற்கும் ஆளாகாமல்
உன்னை வென்று விட்டார் பார்த்தாயா?” என்றார் பரமசிவன்.
“ஆம்! அவர் எந்த மாறுதலுக்கும் உள்ளாகாமல் தவம் செய்து கொண்டே என்னையும் வென்று விட்டார்!” என்றான் மன்மதன்.

மாறுதலுக்கு உள்ளாகாமல், ஒரே மாதிரியான தன்மையோடு இருக்கும் பண்புக்கு ‘வீர்யம்’ என்று பெயர்.
திருமால் எப்போதும் மாறாது இருப்பதால் ‘மஹாவீர்ய:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 176-வது திருநாமம்.
“மஹாவீர்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மாறாத நற்குணங்களைத் திருமால் அருள்வார்.

——————-

177. மஹாசக்தயே நமஹ: (Mahaashakthaye namaha)

பத்ரிநாத்தில் வியாசர், ஜைமினி, காசக்ருத்ஸ்னர், பாதரி, ஆச்மரத்யர் உள்ளிட்ட முனிவர்கள் அமர்ந்து
“இறைவனை அறிவது எப்படி?” என்பது குறித்து விவாதித்து வந்தார்கள்.
அப்போது வியாசர், “வேதங்களின் சித்தாந்தம் எதுவோ, அதுதான் இறைவனைப் பற்றி நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கொள்கையாகும்!
வேதத்தைத் தவிர வேறு எந்த வழியாலும் இறைவனை அறிய இயலாது!” என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜைமினி, “எந்த ஒரு பொருளுக்கும் காரணப் பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி.
ஒரு பானை இருந்தால், அதைச் செய்த ஒரு குயவர் இருக்க வேண்டுமல்லவா?
அந்த அடிப்படையில், இந்த உலகத்திற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அது தான் இறைவன் என்று ஊகம் செய்ய இயலுமே!
இவ்வாறு ஊகத்தினாலேயே எளிமையாக இறைவனை அறிய வழி இருக்கையில், ஏன் வேதத்தைக் கொண்டு மட்டுமே
இறைவனை அறிய முடியும் என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு வியாசர், “இறைவனுடைய இருப்பை இவ்வாறு ஊகத்தினாலே ஸ்தாபிப்பதில் பல இடர்ப்பாடுகள் இருக்கின்றன.

நீங்கள் சொன்ன உதாரணத்தில், பானையைச் செய்த குயவருக்குத் துணி நெய்வதிலோ அல்லது வேறு சில துறைகளிலோ
கல்வி அறிவோ திறமையோ இருப்பதில்லை. ஆகவே, இந்த உதாரணத்தை இறைவனோடு பொருத்திப் பார்த்தால்,
இறைவனும் குயவரைப் போல ஏதேனும் ஒரு துறையிலோ அல்லது சில துறைகளிலோ வல்லவர் என்ற நிலை கிடைக்கலாமே தவிர
எல்லாம் அறிந்த இறைவனை இந்த ஊகத்தின் மூலம் நிருபிக்க இயலாது!” என்றார்.
மேலும், “வீடுகள், அரண்மனைகள், மாட மாளிகைகள் போன்ற கட்டிடங்கள் கொத்தனார், ஆசாரி, மின்னியல் வல்லுனர்,
குழாய்ச் செப்பனிடுபவர் உள்ளிட்ட பலரால் சேர்ந்து படைக்கப் பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இவ்வுதாரணத்தை இறைவனோடு பொருத்தினால், பல கடவுள்கள் இணைந்து கூட்டணியாக உலகைப் படைத்திருக்கலாம் என்று
சொல்ல வேண்டி வரலாம், ஒரே இறைவன் உலகைப் படைத்தார் என்பதை நிரூபிக்க இயலாது.
அது மட்டுமின்றி, பானைக்கு மூலப்பொருள் களிமண், படைப்பாளி குயவர்.
ஆனால் உலகத்துக்குப் படைப்பாளியும் இறைவனே, மூலப்பொருளும் இறைவனே.
படைப்பவரே காரணப் பொருளாகவும் இருந்து, காரியப் பொருளாகவும் மாறுவதை எந்த உதாரணத்தாலும் விளக்க இயலாது.
அதனால் தான், வேதம் ஒன்றினாலேயே இறைவனை உணர முடியும்! தர்க்கமோ வாதமோ செய்து இறைவனின் இருப்பை நிரூபிக்க இயலாது!”
என்று வியாச பகவான் கூறினார்.

(மறைந்த காவியக் கவிஞர் வாலி அவர்கள், “God is a fact; can be approved, cannot be proved” என்று சொன்னதும்
இதனோடு இணைத்து நோக்கத்தக்கது.)
அப்போது பாதரி முனிவர், “சிலர் தர்க்கம் செய்து இறைவன் இல்லை என்று வாதிடுகிறீர்களே…” என்று கேட்க,
“எப்படி இறைவன் இருக்கிறான் என்பதைத் தர்க்கத்தினாலே ஸ்தாபிக்க முடியாதோ, அவ்வாறே இறைவன் இல்லை என்பதையும்
தர்க்கத்தினாலே ஸ்தாபிக்க முடியாது. ஏனென்றால், இறைவன் இல்லை என்று சொல்லும்போது,
‘எங்கே இல்லை?’ ‘எப்போது இல்லை?’ என்று சில கேள்விகள் எழும். ‘நான் பார்த்த எந்த இடத்திலும் இறைவன் இல்லை’ என்று சொன்னால்,
‘நான் பார்க்காத இடங்களில் எல்லாம் இறைவன் இருக்கிறார்’ என்று தான் அதற்குப் பொருள்.

‘இப்பொழுது இறைவன் இல்லை’ என்று சொன்னால், ‘நேற்று இறைவன் இருந்தார்’, ‘வருங்காலத்தில் இறைவன் இருப்பார்’ என்று பொருள்படும்.
‘பேனா இல்லை’ என்று ஒருவன் சொன்னால், ‘அவனிடம் பேனா இல்லை’ என்று தான் பொருளே ஒழிய,
‘உலகில் பேனாவே இல்லை’ என்று பொருளாகாது அல்லவா? அவ்வாறே ‘இறைவன் இல்லை’ என்று சொன்னாலும்,
‘உலகில் இறைவன் இல்லை’ என்று பொருள் இல்லை. ‘இறைவனை அறியும் பக்குவம் சொல்பவனுக்கு இல்லை’ என்றே பொருள்.
எனவே ‘இறைவன் இல்லை’ என்று சொல்லும் வார்த்தைகளுக்குள்ளும் ‘இறைவன் உள்ளார்’ என்ற வார்த்தை மறைந்திருக்கிறது!” என்றார் வியாசர்.

இக்கருத்துக்களைத் தொகுத்து பிரம்ம சூத்திரத்தின் மூன்றாம் சூத்திரமான “சாஸ்த்ர யோநித்வாத்” என்ற சூத்திரத்தில் வியாசர் கூறுகிறார்.
பிரம்ம சூத்திரத்தில் வியாசர் விளக்கியது போல், உலகுக்குத் திருமாலே படைப்பாளியாகவும், அவரே காரணப் பொருளாகவும் உள்ளார்.
நாம் ஒரு பொருளைத் தயாரிக்க வேறு பொருட்களின் உதவியை நாடுகிறோம்.
ஆனால் திருமாலோ வேறு யாருடைய உதவியையும் நாடாமல், தன்னிலிருந்து தானே உலகைப் படைக்கிறார்.
அத்தகைய பெரும் சக்தி பொருந்தியவராக விளங்குவதால், திருமால் ‘மஹாசக்தி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 177-வது திருநாமம்.
“மஹாசக்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களை ஆற்றல் மிக்கவர்களாகத் திருமால் ஆக்கி அருள்வார்.

——————-

178. மஹாத்யுதயே நமஹ: (Mahaadhyuthaye namaha)

காஞ்சிபுரத்தில் பிரம்மதேவர் பெரும் வேள்வி ஒன்றைச் செய்தார். வைதீக தர்மத்தில் எந்த ஒரு வேள்வி செய்தாலும்,
மனைவி உடன் இல்லாமல் செய்யக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது.
அதனால் யாகம் செய்யும் போது, பிரம்மாவுடன் சரஸ்வதி இல்லை.
(“நதிகளுள் எந்த நதி சிறந்தது? கங்கையா? யமுனையா? சரஸ்வதியா?” என்று தேவர்களோடும் முனிவர்களோடும் விவாதித்துக் கொண்டிருந்த
பிரம்மா, “சரஸ்வதி தேவியின் அம்சமான சரஸ்வதி நதியை விட, திருமாலின் பாதத்திலிருந்து தோன்றிய கங்கை தான் புனிதமானது!” என்று தீர்ப்பளித்தார்.
தன்னைவிடக் கங்கை புனிதமானவள் என்ற பிரம்மாவின் தீர்ப்பால் வருத்தமடைந்த சரஸ்வதி, பிரம்மாவை விட்டுப் பிரிந்து சென்று,
சரஸ்வதி நதிக்கரையில் தவம் புரிந்து வந்தாள்.)
அதற்கு மாற்று ஏற்பாடாகத் தனது மற்ற இரண்டு மனைவிகளான சாவித்ரி, காயத்ரி என்ற இருவருடன் இணைந்து யாகம் செய்தார்.
பிரம்மாவின் யாகத்தைத் தடுக்க நினைத்த அசுரர்கள், சரஸ்வதி தேவியிடம் சென்று, “உங்களை விட்டுவிட்டு சாவித்ரியோடும் காயத்ரியோடும்
பிரம்மா யாகம் செய்கிறார். நீங்கள் அதைத் தடுக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள்.
ஏற்கெனவே பிரம்மாவின் மேல் கோபத்திலிருந்த சரஸ்வதி தேவி, மேலும் கோபம் கொண்டாள்.
தனது சக்தியால் சந்திரன், சூரியன் இருவரின் ஒளியும் காஞ்சிபுரத்தில் விழாதபடி செய்தாள்.

அதனால் காஞ்சி நகரையே இருள் சூழ்ந்தது. வேள்வித் தீயைத் தவிர வேறு எதையும் பிரம்மாவால் காணமுடியவில்லை.
அந்த வேள்வித் தீயைக் கூட மறைத்து விட வேண்டும் என்று நினைத்தாள் சரஸ்வதி. அதற்காக ‘மகானலன்’ என்ற அசுரனை உருவாக்கினாள்.
அவன் வேள்வித் தீயைச் சூழ்ந்து கொண்டு அதன் ஒளி மங்கிப் போகும்படிச் செய்தான்.
என்ன செய்வதென்று தெரியாமல் இருட்டில் தத்தளித்த பிரம்மா, திருமாலை வேண்டினார்.
அப்போது அங்கே திடீரென ஒரு விளக்கு தெரிந்தது. அந்த விளக்கின் ஒளி அங்கிருந்த இருளை எல்லாம் ஓட்டி விட்டது.
அந்த விளக்கொளி பட்ட மாத்திரத்தில் மகானலன் என்ற அந்த அசுரன் எரிந்து சாம்பலானான். அந்த விளக்கை உற்று நோக்கினார் பிரம்மா.
விளக்காக வந்தவர் திருமால் என்பதை உணர்ந்து கொண்டார்.
திருமாலுக்கு நன்றி தெரிவித்து விட்டுத் தன் யாகத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
இவ்வாறு பிரம்மாவின் யாகத்தைக் காத்த திருமால், இன்றும் காஞ்சியில் ‘திருத்தண்கா’ எனப்படும் திவ்யதேசத்தில்
தீபப்பிரகாசர் எனப்படும் விளக்கொளிப் பெருமாளாகக் கோயில் கொண்டுள்ளார்.

விஸ்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள் பலர் பின்னாளில் அந்தத் திருத்தண்காவுக்கு குடிபெயர்ந்தார்கள்.
யாகங்களில் பயன்படுத்தப்படுகின்ற ‘தூப்புல்’ எனப்படும் தூய தர்ப்பைப் புல்லுக்கு ‘விஸ்வாமித்ரம்’ என்று பெயருண்டு.
அதனால் விஸ்வாமித்ரர் குலத்தில் பிறந்தவர்கள் ‘தூப்புல் குலத்தார்’ என்று அழைக்கப்பட்டார்கள்.
தூப்புல் குலத்தார் அதிக எண்ணிக்கையால் வாழ்ந்தபடியால், திருத்தண்கா திவ்ய தேசமும் ‘தூப்புல்’ என்று பெயர் பெற்றது.
திருமலையில் குன்றின்மேல் இட்ட விளக்காக விளங்கும் திருமலையப்பன், விளக்கொளிப் பெருமாள் குடிகொண்டிருக்கும்
தூப்புல் திருத்தலத்தில், விஸ்வாமித்ர குலத்தில், வேதாந்த தேசிகனாக அவதாரம் செய்தார்.
வேதாந்தங்கள் கூறும் அரிய கருத்துக்களை எல்லாம் தம்முடைய விளக்க உரைகளாலும், எளிய ஸ்லோகங்களாலும்,
தமிழ் நூல்களாலும் விளக்கி, வேதாந்தத்துக்கே ஒரு விளக்காக வேதாந்த தேசிகன் திகழ்ந்தார்.
தூப்புலில் தோன்றிய விளக்கொளிப் பெருமாள் பிரம்மாவின் யாகத்துக்கு இடையூறு செய்த புற இருட்டைப் போக்கினார்.

அதே தூப்புலில் திருமலையப்பன் தேசிகனாக அவதரித்து, வேதாந்தத்தை விளக்கும் விளக்காய் விளங்கி,
அறியாமை என்னும் அக இருட்டைப் போக்கினார்.
இவ்வாறு இருளைப் போக்கும் ஒளிபடைத்தவராகத் திருமால் விளங்குவதால், ‘மஹாத்யுதி:’ என்றழைக்கப்படுகிறார்.
‘த்யுதி:’ என்றால் ஒளி என்று பொருள்.
‘மஹாத்யுதி:’ என்றால் மிகுந்த ஒளிபடைத்தவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 178-வது திருநாமம்.
“மஹாத்யுதயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்படித் திருமால் அருள்புரிவார்.

——————

179. அநிர்தேச்யவபுஷே நமஹ: (Anirdheshyavapushe namaha)

“ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு” என்ற ரீதியில், ஆழ்வார்கள் ஞான நிலையில் பாடும் போது
ஆண் தன்மையிலும், எம்பெருமானிடத்தில் காதல் முற்றிய நிலையில் பாடும் போது பெண் தன்மையிலும் (நாயகி பாவத்திலும்)
பாசுரங்கள் பாடுவார்கள். அந்த வகையில், பெண் தன்மையை ஏறிட்டுக் கொண்ட நம்மாழ்வார்,
திருமாலிடம் ஊடல் கொண்டாள். நாயகி நாயகன்மீது கோபித்துக் கொண்டு, “இனி நீ என்னுடன் பேசாதே, பழகாதே!” என்று
கூறுவதற்கு ஊடல் என்று பெயர். அதை இலக்கியங்களில் ‘பிரணய கலகம்’ என்று சொல்வார்கள். அவ்வாறு ஊடல் கொண்ட நம்மாழ்வார்,

“மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அதுகொண்டு செய்வதென்என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ”

என்று பாடி, இனிமேல் உன்னோடு சேர மாட்டேன் என்று திருமாலைப் பார்த்துச் சொல்லிவிட்டார்.
இப்படிப் பிரிந்து சென்ற ஆழ்வாரைத் துரத்திச் சென்ற திருமால், திருவிண்ணகர் என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில்
ஆழ்வாருக்குத் தனது அழகையும் மேன்மைகளையும் குணங்களையும் காட்டி, “என்னுடன் சேருங்கள்!” என்று ஆழ்வாரை அழைத்தார்.
அவ்வாறு தன்னைத் தேடி வந்து ஆதரித்த ஒப்பிலியப்பனின் குணங்களை அனுபவித்த நம்மாழ்வார்,
தனக்கு அனைத்து வித உறவுகளாகவும் ஒப்பிலியப்பன் ஒருவனே இருப்பதாகப் பாடினார் நம்மாழ்வார்:

“என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள்சூழ்த் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே”

“உடலுக்குப் பிறப்பைத் தரும் சாதாரணத் தந்தையைப் போல் அல்லாது, ஆத்மாவுக்கு ஞானமென்னும் பிறப்பைத் தரும் தந்தையாகவும்,
செவிலித்தாய் ஒரு குழந்தையை வளர்ப்பது போல், அடியேனுடைய பக்தியை வளர்த்துத் தந்த செவிலித்தாயாகவும்,
தன் துன்பங்களைப் பொருட்படுத்தாமல், தன் குழந்தையின் நலனைப் பேணும் பாசம் மிக்கத் தாயாகவும்,
பொன், மணி, முத்து இவைகளைப் போல் விலைமதிக்கமுடியாத பொருளாகவும், திருவிண்ணகரில் விளங்கும் ஒப்பிலியப்பன்,
நான் விலகிச் சென்றாலும் என்னைத் தேடி வந்து அருள்புரிந்தவன்.

ஒரு மனிதரால் ஒரே நேரத்தில் இன்னொருவருக்குத் தந்தையாகவும், வளர்ப்புத் தாயாகவும், பெற்ற தாயாகவும்,
பொன்னாகவும், மணியாகவும், முத்தாகவும் இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.
ஆனால் திருமால் ஒரே நேரத்தில் எனக்கு அனைத்துமாக இருக்கிறார்.
அதனால் அவர் தன்னொப்பாரில் அப்பன். அவருக்கு நிகர் யாருமில்லை!” என்பது இப்பாடலின் கருத்து.
ஒரே நேரத்தில் எப்படி திருமாலால் நம்மாழ்வாருக்கு அனைத்து விதமான உறவுகளாகவும் இருக்க முடிகிறது என்றால்,
மனிதர்களின் உடல் என்பது ஐம்பூதங்களால் ஆனது.

அதனால் அது கால, தேச, வர்த்தமானங்களுக்கு உட்பட்டதாகும். ஆனால் திருமாலின் திருமேனியோ ஐம்பூதங்களால் ஆனதல்ல.
ஞானம், பலம், வீர்யம், சக்தி, ஐச்வர்யம், தேஜஸ் உள்ளிட்ட ஆறு குணங்களால் ஆனது.
கால, தேச, வர்த்தமானங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்டதால் திருமாலின் திருமேனி
ஒப்பில்லாததாகவும், வர்ணனைக்கு அப்பாற்பட்டதாகவும் விளங்குகிறது.
எனவே அந்த ஒப்பில்லா அப்பன் ஒரே நேரத்தில் தனது ஞானம், பலம், வீர்யம், சக்தி, ஐச்வர்யம், தேஜஸ் அனைத்தையும்
நம்மாழ்வாருக்குக் காட்டி, அவருக்குத் தந்தையாக, பெற்ற தாயாக, வளர்ப்புத் தாயாக, பொன்னாக, மணியாக, முத்தாக ஒரே நேரத்தில் விளங்குகிறார்.

‘அநிர்தேச்ய’ என்றால் வர்ணிக்க முடியாத என்று பொருள்.
‘வபு:’ என்றால் உடல் என்று பொருள்.
வர்ணிக்க முடியாத ஒப்பற்ற தன்மையோடு கூடிய திருமேனியைக் கொண்டமையால் திருமால் ‘அநிர்தேச்யவபு:’ என்றழைக்கப்படுகிறார்
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 179-வது திருநாமம்.
“அநிர்தேச்யவபுஷே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் திருமால் அருள்வார்.

——————

180. ஸ்ரீமதே நமஹ: (Shreemathe namaha)

சோழநாட்டில் வாழ்ந்த ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் வறுமையால் மிகவும் வாடினார்.
அதனால், சோழன் இளஞ்சேட்சென்னியின் அரசவைக்குச் சென்று, வடக்கிலுள்ள வடுக மன்னர்களையும்,
தெற்கிலுள்ள பரத மன்னர்களையும் அவன் வீழ்த்திய வரலாற்றைப் பாராட்டி ஒரு பாடல் பாடினார். அதுவே புறநானூற்றின் 378-வது பாடல்:

“தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய,
தொடை அமை கண்ணி, திருந்துவேல்
தடக் கை,
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நல்தார் கள்ளின் சோழன் கோயில்,
புதுப்பிறை அன்ன சுதைசேய் மாடத்து,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட…”

இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த சோழன், புலவருக்கு ஏராளமான தங்கக் காசுகளையும் தங்க நகைகளையும் பரிசாகத் தந்தான்.
அவற்றையெல்லாம் ஒரு மாட்டுவண்டியில் தன் வீட்டுக்குக் கொண்டு வந்தார்.
அதைக் கண்ட அவரது மனைவி, எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்தாள். நகைகளையே அதுவரையில் கண்டிராத அந்தப் பெண்,
அப்போதே அனைத்தையும் அணிந்து கொள்ள விரும்பினாள். நகைகளை அணிந்து கொள்ளத் தெரியாத அவள்,
தோடுகளை மூக்கிலும், கொலுசுகளைத் தோள்களிலும், வளையல்களைக் காதுகளிலும், ஆரங்களை இடுப்பிலும் அணிந்திருந்தாள்.
அதைக் கண்டு அவ்வூர்ப் பெண்கள் அவளைக் கேலி செய்தார்கள்.

“அன்று அரக்கனாகிய ராவணன் சீதையை அபகரித்துச் சென்ற போது, சீதை தனது நகைகளை எல்லாம்
ஒரு துணியில் கட்டிக் கீழே வீசி எறிந்தாள். கிஷ்கிந்தையில் இருந்த குரங்குகள் அந்த மூட்டையைக் கண்டெடுத்தன.
அதிலுள்ள நகைகளைக் கண்டு வியந்த அந்தக் குரங்குகள், சீதையின் தோடுகளைத் தங்கள் மூக்கிலும்,
அவளது கொலுசுகளைத் தங்கள் தோள்களிலும், வளையல்களைக் காதுகளிலும், ஆரங்களை இடுப்பிலும் அணிந்து கொண்டன.
அந்தக் குரங்குகள் செய்துகொண்ட அலங்காரம் போலுள்ளது இப்போது உன் கோலம்!” என்று புலவரின் மனைவியைப் பார்த்து
எல்லோரும் சொன்னார்களாம். இக்கருத்தைப் பாடலின் இரண்டாம் பகுதியில் புலவர் தெரிவிக்கிறார்:

“… எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே அது கண்டு,
இலம்பாடுழந்த என் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக்குநரும்,
செவித்தொடர் மரபின விரல் செறிக்குநரும்,
அரைக்கமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந்தெறல் இராமனுடன் புணர்சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.”

இதிலிருந்து, சாதாரண மனிதர்களான நாம் ஆபரணங்களைச் சரியான விதத்தில் அணிந்தால் தான் நன்றாக இருக்குமே ஒழிய,
தாறுமாறாக அணிந்து கொண்டால் நன்றாக இருக்காது என்பது புரிகிறது.
ஆனால் திருமாலுக்கோ அவர் ஆபரணங்களை எப்படி அணிந்து கொண்டாலும் அது அழகாகத் தான் உள்ளது.
மன்னார்குடியில் ராஜகோபாலன் வெண்ணெய்த் தாழி அலங்காரத்தின் போது, ராக்கொடியை இடுப்பில் அணிந்து கொள்வார்.
ராக்கொடி என்பது தலையில் அணிய வேண்டிய ஆபரணம் என்றாலும், ராஜகோபாலன் இடுப்பில் அணிந்தாலும் அது அழகாகத்தான் இருக்கும்.
கஜேந்திரனைக் காக்க ஓடி வந்த போதும், அவசரத்தில் ஆபரணங்களைத் தவறான முறையில் அணிந்து வந்தார் திருமால்.
ஆனால் அதுவும் அவருக்கு அழகாகத்தான் இருந்தது.

“பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்”

என்ற பாசுரத்தில் பெரியாழ்வார், மாடு மேய்த்து விட்டுப் புழுதி படிந்த முகத்தோடு கண்ணன் வருகையில்,
அவன் முகத்திலுள்ள மண் துகள்கள் கூட அவனது முகத்துக்கு ஆபரணமாக, அழகாக இருப்பதாகப் பாடுகிறார்.
எந்த ஆபரணத்தை எந்த முறையில் அணிந்தாலும், அது திருமாலுக்கு அழகாகத்தான் இருக்கிறது.

‘ஸ்ரீ:’ என்பதற்கு ஆபரணங்கள் என்றொரு பொருளுண்டு.
ஆபரணங்களோடு அழகாக விளங்கும் திருமால் ‘ஸ்ரீமான்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 180-வது திருநாமம்.

“ஸ்ரீமதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தனித்தன்மையும் ஆளுமைத் திறனும் வளரும்படித் திருமால் அருள்புரிவார்.
(‘ஸ்ரீமான்’ என்ற திருநாமம் ஸஹஸ் ரநாமத்தில் மூன்று இடங்களில் வருகிறது.
22-வது திருநாமமாக வரும் ஸ்ரீமானுக்கு அழகு நிறைந்தவன் என்று பொருள்,
180-வது திருநாமமான ஹமானுக்கு ஆபரணச் சேர்த்தி நிறைந்தவன் என்பது பொருள்.
மேலும், 222-வது திருநாமமாகவும் ஹமான் வரவுள்ளது.)

————–

181. அமேயாத்மனே நமஹ: Ameyaathmane namaha)

(‘அதீந்த்ரிய:’ என்ற 171-வது திருநாமம் தொடங்கி, ‘அமேயாத்மா’ என்ற 181-வது திருநாமம் வரையிலான 11 திருநாமங்கள்
வைகுண்டநாதனின் திருக்கல்யாண குணங்களை விளக்கவந்தவை.)
திருவரங்கநாதனைத் தரிசித்த பராசர பட்டர், “அன்று ராமாவதாரத்தில் சமுத்திர ராஜனிடம் சரணாகதி செய்து,
திருப்புல்லாணியில் கடலை நோக்கி நீ கம்பீரமாகச் சயனித்திருந்தாய். ‘கருணையங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி’ என்பதற்கேற்ப,
ஒரு கடல் மற்றொரு கடலை நோக்கிச் சயனித்திருந்தாற்போல் அமைந்திருந்தது அக்காட்சியின் அழகு.
அக்காட்சியைக் காலத்தால் பிற்பட்டவர்களான நாங்களும் காணும் வண்ணம் கடல் போன்ற காம்பீர்யத்தோடு
இன்று நீ திருவரங்கத்தில் சயனித்திருக்கிறாய் போலும்!” என்று கூறினார்.

“திடீரென என்னைக் கடலோடு ஒப்பிடுகிறீர்களே!” என்று கேட்டான் திருவரங்கநாதன்.
“ஆம்! நீ கடலுக்குச் சமமானவன் அல்லவா? அதனால் தானே ஆழ்வார்கள் உன்னைக்
‘கடல்வண்ணன்’ (கடல் போன்றவன்) என்று பாடினார்கள்?” என்றார் பட்டர்.
“எதை வைத்து நான் கடல் போன்றவன் என்கிறீர்கள்?” என்று கேட்டான் திருவரங்கநாதன்.
அதற்குப் பராசர பட்டர், “எல்லாவற்றுக்கும் முன்னே தோன்றிய நீர் என்பதால் கடலுக்கு ‘முன்னீர்’ என்று பெயர்.
நீ அனைவருக்கும் முன்னே தோன்றியவனாதலால் ‘முன்னவன்’ என்றும் ‘முனைவன்’ என்றும் போற்றப்படுகிறாய்.

சிறிய மீன் முதல் பெரிய திமிங்கலம் வரை பலவித உயிர்களும் கடலைச் சார்ந்தே வாழ்கின்றன.
அது போல், சிறிய ஈ எறும்புகள் முதல் தேவர்கள் வரை அனைவரும் உன்னைச் சார்ந்தே இருக்கிறார்கள்.
கடல் தேவர்களுக்கு அமுதைத் தந்தது. நீயே உன் பக்தர்களுக்கு உன் அழகாகிய ஆராவமுதைத் தருகிறாய்.
கடலுக்கு அளவில்லை. அதுபோல உனது காம்பீர்யத்துக்கும் அளவில்லை.
மேகம் மழை பொழிந்து தான் கடலுக்குப் புதிதாகத் தண்ணீர் வரவேண்டும் என்ற அவசியமில்லை.
அதுபோல, நாங்கள் வஸ்திரங்களோ மாலைகளோ சமர்ப்பித்துத் தான் உனக்குப் புதிதாகப் பெருமை ஏற்பட வேண்டும் என்றில்லை.

இந்திரனுக்கு அஞ்சிய மைநாக மலைக்குக் கடல் தான் புகலிடமாக இருந்தது.
அதுபோல, பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழியறியாது அஞ்சும் எமக்கெல்லாம் ‘அஞ்சேல்’ என்று
புகலிடம் அளிப்பவனாக நீ இருக்கிறாய்.
கடல்நீரை நேராகப் பருகினால் உப்புக் கரிக்கும். அதுவே மேகத்தின் வாயிலாக மழையாக வரும்போது இனிக்கும்.
அவ்வாறே உன்னையும் நேரடியாக அநுபவிப்பதை விட, ஆசார்யன் என்னும் மேகத்தின் மூலம் அநுபவித்தால் தான்
முழுமையான இனிமை கிடைக்கும்.

கடல் மதியைக் (சந்திரனைக்) கண்டால் மகிழ்ச்சியில் பொங்கும். நீ மதியுடைய ஞானிகளைக் கண்டால் மகிழ்ச்சியில் பொங்குகிறாய்.
கடலை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பே ஏற்படாது. அதுபோல நீயும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாக இருக்கிறாய். கடலைப் பல பேர் கடப்பார்கள்.
ஆனால் அவர்களுக்குக் கடலின் ஆழம் தெரியாது. அதுபோல் உன்னையும் பலர் துதிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் யாருக்குமே உன் பெருமையின் எல்லை தெரியாது.

நல்ல கப்பல் கிடைத்தால் கடலை எளிதில் கடக்கலாம். அதுபோல பக்தி என்னும் கப்பலைக் கொண்டு உன்னையே எளிதில் கடந்துவிடலாம்.
கடலில் அலையோசை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அதுபோல நீயும் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (என்னை நம்பு; காப்பாற்றுகிறேன்!) என முழங்கிக் கொண்டே இருக்கிறாய்.
கடல் ஒருநாளும் வற்றாது. உனது கருணையும் என்றுமே வற்றாது. அதனால்தான் வால்மீகி, கம்பர், ஆழ்வார்கள், ஆசார்யர்கள்
எல்லோரும் உன்னைக் கடலோடு ஒப்பிட்டுள்ளார்கள்!” என்று கூறினார் பராசர பட்டர். அதைக் கேட்டு ரசித்தான் திருவரங்கநாதன்.

கடல் போன்ற காம்பீர்யத்துடன் திருமால் விளங்குவதால், ‘அமேயாத்மா’ என்றழைக்கப்படுகிறார்.
‘அமேய’ என்றால் கடல் போல் அளவில்லாத என்று பொருள்.
அளவில்லாத காம்பீர்யத்தை உடைய திருமால் ‘அமேயாத்மா’ என்று போற்றப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 181-வது திருநாமம்.
“அமேயாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல கம்பீரமான தோற்றத்தைத் திருமால் அருள்வார்.
(அமேயாத்மா என்னும் திருநாமம் ஸஹஸ்ரநாமத்தில் 2 முறை வருகிறது.
103-வது திருநாமமான அமேயாத்மாவுக்குக் கடல் போன்ற அளவில்லாத கருணை உடையவன் என்று பொருள்.
181-வது திருநாமமான அமேயாத்மா என்பதற்குக் காம்பீர்யத்தில் கடல் போல் அளவில்லாதவனாக இருப்பவன் என்று பொருள்.
எனவே 103-வது திருநாமம் காருண்யத்தையும், 181வது திருநாமம் காம்பீர்யத்தையும் காட்டுகின்றன.)

———

182. மஹாத்ரித்ருதே நமஹ (Mahaadhridhruthe namaha) (கூர்மாவதாரம்)

திருமாலின் அறிவுரைப்படி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையத் திட்டமிட்டார்கள்.
அதைக் கடைவதற்குரிய சரியான மத்தைத் தேடி அவர்கள் அலைந்த போது, மந்தர மலையை மத்தாகப் பயன்படுத்தலாம்
எனத் திருமால் ஆலோசனை வழங்கினார். அதன்படி, சில தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையின் அடிவாரத்துக்குச் சென்று,
அதைப் பெயர்த்து எடுத்தார்கள். அதன்பின் அம்மலையைத் தங்கள் முதுகில் சுமந்தபடி
அந்தத் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை நோக்கி நடந்து வந்தார்கள்.

ஆனால் அவர்களால் அம்மலையின் பாரத்தைத் தாங்க முடியவில்லை. வரும் வழியிலேயே மலையுடன் கீழே விழுந்து மாண்டார்கள்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற மற்ற தேவர்களும் அசுரர்களும் திருமாலின் உதவியை நாடினார்கள்.
திருமால் கருட வாகனத்தில் சென்று, மந்தர மலையை எடுத்துக் கருடனின் முதுகில் வைத்து, தானும் கருடன் மேல்
அமர்ந்தபடி மலையைப் பாற்கடலுக்குக் கொண்டு வந்தார். அதன்பின் அம்மலையில் வாசுகி எனும் பாம்பைக்
கயிறாகச் சுற்றிப் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்கினார்கள்.
ஆனால் மந்தர மலை நேராக நில்லாமல், பாற்கடலுக்குள் அழுந்திக் கொண்டே போனது. அதைத் தூக்கி நிறுத்தத்
தேவர்களும் அசுரர்களும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் பயனில்லை.
அதனால் மந்தர மலையை நிலைநிறுத்துமாறு தேவர்கள் திருமாலிடம் பிரார்த்தித்தார்கள்.

அப்போது திருமால் ஆமை வடிவம் ஏற்றுப் பாற்கடலுக்குள் சென்று, மந்தர மலையைத் தம் முதுகில் தாங்கி நிலை நிறுத்தினார்.
ஆமையாகத் திருமால் எடுத்த இந்த அவதாரத்தைக் ‘கூர்மாவதாரம்’ என்று சொல்கிறோம்.
வடமொழியில் ‘கூர்மம்’ என்றால் ஆமை என்று பொருள்.
இந்தக் கூர்மாவதாரத்தைத் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் துதி செய்யும் வேதாந்த தேசிகன்,

“அவ்யாஸு: புவன த்ரயீம் அநிப்ருதம் கண்டூரணை: அத்ரிணா
நித்ராணஸ்ய பரஸ்ய கூர்ம வபுஷோ நிச்வாஸ வாதோ: மய: |
யத் விக்ஷேபண ஸம்ஸ்க்ருத உததி பய: ப்ரேங்கோல பர்யங்கிகா
நித்ய ஆரோஹண நிவ்ருதோ விஹரதே தேவ: ஸஹைவ ச்ரியா ||”

என்று பாடுகிறார். இதன் பொருள்:
பாற்கடலைக் கடைகையில், திருமாலின் முதுகின்மேல் இருந்த மந்தர மலையாகிய மத்து முன்னும் பின்னும் அசைந்தது.
அந்த மலையின் அசைவு கூர்ம மூர்த்தியின் முதுகுக்கு மசக்குதல் (massage செய்வது) போல் இதமாக இருந்தது.
அவ்வாறு அவரது முதுகை மந்தர மலை வருடியதால், அந்த ஆனந்தத்தில் கூர்ம மூர்த்தி அப்படியே உறங்கிவிட்டார்.
அவர் உறங்கும் போது எழுப்பிய குறட்டை ஒலி, பாற்கடலில் அலைகளை உண்டாக்கியது. அந்த ஒலி நம் அனைவரையும் காக்கட்டும்.

கூர்ம பீடத்தில் அமர்ந்தபடி உலகுக்கு மிகச் சிறந்த தர்மங்களைத் திருமால் உபதேசித்தார்.
அந்த தர்மங்களின் தொகுப்பே ‘கூர்ம புராணம்’ என்ற புராணமாக உருவெடுத்தது.
இந்தக் கூர்மாவதாரத்தை மத் பாகவதத்தில் விளக்கும் சுகப்ரம்மம்,

“ததார ப்ருஷ்டேன ச லக்ஷயோஜன ப்ரஸ்தாரிணா த்வீப இவாபரோ மஹான்”

என்றார். அதாவது, “கூர்ம மூர்த்தியே ஒரு மலைபோல் விளங்கினார். அவர் தமது முதுகில் மந்தரம் என்ற
மலையைச் சுமந்ததைக் காண்கையில், ஒரு மலையே மற்றொரு மலையைச் சுமப்பது போல் இருந்தது” என்கிறார்.
‘அத்ரி’ என்றால் மலை என்று பொருள்.
‘மஹாத்ரி’ என்றால் பெரிய மலை. ‘த்ருத்’ என்றால் தாங்குபவர்.
மலைபோன்ற வடிவம் கொண்ட கூர்ம மூர்த்தியாய் அவதரித்து, பெரும் மலையான மந்தர மலையைத் தன் முதுகில்
தாங்கியபடியால், திருமால் ‘மஹாத்ரித்ருத்’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 182-வது திருநாமம்.
“மஹாத்ரித்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பாரமில்லாத நிம்மதியான
வாழ்வு அமையும்படித் திருமால் அருள்புரிவார்.

————————

183. மஹேஷ்வாஸாய நமஹ (Maheshvaasaaya namaha)

கோயில் நகரமான கும்பகோணம் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று.
திருவரங்கத்தை 11 ஆழ்வார்களும், திருவேங்கடத்தை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
அடுத்தபடியாக, கும்பகோணத்தை 7 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
எனவே மங்களாசாசனம் செய்த ஆழ்வார்களின் எண்ணிக்கைப்படி கும்பகோணம் 3-வது திவ்யதேசமாகக் கொண்டாடப்படுகிறது.
கும்பகோணத்தில் கோமளவல்லித் தாயாரின் கேள்வனாக சார்ங்கபாணிப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
அவர் கையில் ‘சார்ங்கம்’ என்ற வில்லை ஏந்தியுள்ள படியால், ‘சார்ங்கபாணி’ என்று பேற்றப்படுகிறார்.
அந்த சார்ங்கவில்லின் அம்சமாகத் தோன்றியவர் திருமங்கையாழ்வார்.
அதனால் இயற்கையாகவே திருமங்கையாழ்வாருக்கு சார்ங்கபாணிப் பெருமாள் மீது தனி ஈடுபாடுண்டு.
தாம் இயற்றிய ஆறு பிரபந்தங்களிலும் சார்ங்கபாணிப் பெருமாளை அவர் துதித்துள்ளார்.

திருமங்கையாழ்வாரின் மறு அவதாரமாகத் தோன்றியவர் ஆசுகவி ஸ்ரீநிதி சுவாமிகள்.
இவர் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வடமொழிக் கவிஞராக விளங்கியவர்.
திருமங்கையாழ்வாரைப் போலவே ஸ்ரீநிதி சுவாமிகளும் கார்த்திகை மாதம் கார்த்திகை நாளில் அவதரித்தார்.
திருமங்கையாழ்வார் தமிழில் நாலுகவிப் பெருமாளாக விளங்கியது போல், ஸ்ரீநிதி சுவாமிகள் வடமொழியில்
ஆசுகவி ஸார்வபௌமராக விளங்கினார். இதுபோன்ற பல ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு.

அந்த வகையில், திருமங்கையாழ்வாரைப் போலவே கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கபாணிப் பெருமாளிடம் விசேஷ ஈடுபாடு கொண்ட
ஸ்ரீ நிதி சுவாமிகள், சார்ங்கபாணிப் பெருமாளைக் குறித்து அம்ருத சார்தூலம்,
அபர்யாப்தாம்ருத விம்சதி உள்ளிட்ட பல துதிகள் இயற்றினார்.
ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு பக்தர் அவரிடம் வந்து,
“சுவாமி! இவ்வூரில் சார்ங்கபாணிப் பெருமாள் கையில் சார்ங்க வில் ஏந்தி இருக்கிறார்.
ஆனால் அந்த வில்லில் பூட்டுவதற்கான பாணங்கள் எதுவுமே அவரிடம் இல்லையே!
இந்தப் பெருமாளிடம் வில் மட்டும் தான் உண்டா? அம்புகள் கிடையாதா?” என்று கேட்டார்.

புன்னகைத்த ஸ்ரீநிதி சுவாமிகள், “அவரிடத்தில் பாணங்கள் உண்டு!” என்றார்.
“நம் கண்களுக்கு அது தெரியவில்லையே!” என்றார் பக்தர்.
“பாணங்களை ஒரு இலக்கை நோக்கிப் பெருமாள் எய்திருக்கிறார்.
அதனால் அவை இப்போது பெருமாளின் கைகளில் இல்லை!” என்றார் ஸ்ரீநிதி சுவாமிகள்.
“அது என்ன இலக்கு?” என்று கேட்டார் பக்தர். “நம் பாபங்கள் தான் இலக்கு.
நம் பாபங்களை எல்லாம் போக்கி நமக்கு நற்கதியை அருள விழையும் சார்ங்கபாணிப் பெருமாள்,
தன் சார்ங்க வில்லில் பாணங்களைப் பூட்டி நம் பாபங்கள் மீது எய்கிறார். நம் பாபங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால்,
அவர் ஏவிய அம்புகள் இன்னும் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை.
நம் அனைவரின் பாபங்களையும் அழித்தபின் அம்புகள் அனைத்தும் சார்ங்கபாணியின் கைக்குத் திரும்பிவரும்.
இக்கருத்தை வேதாந்த தேசிகன் தயா சதகத்தில்,

“கருணே துரிதேஷு மாமகேஷு ப்ரதிகாராந்தர துர்ஜயேஷு கிந்ந: |
கவசாயிதயா த்வயைவ சார்ங்கீ விஜயஸ்தானம் உபாச்ரிதோ வ்ருஷாத்ரிம் ||”

என்ற ஸ்லோகத்தில் தெரிவித்துள்ளார்!” என்று விடையளித்தார் ஸ்ரீநிதி சுவாமிகள்.
மேலும், “பொதுவாக நாம் ஒருவர் மீது எய்கிற அம்பு அவருக்குத் தீங்கு தான் செய்யும்.
ஆனால் திருமால் நம் மேல் எய்கிற அம்பு, நம் பாபங்களைப் போக்கி நமக்கு நன்மை செய்கிறது.
இதுவே மற்றவர்களின் அம்புக்கும் திருமாலின் அம்புக்கும் உள்ள வித்தியாசம்!
ஸ்ரீ ராமாயணத்தில் சமுத்திர ராஜன் மேல் ஏவுவதற்காக ராமன் அம்பைப் பூட்டினான்.
ஆனால் முடிவில், அந்த அம்பு சமுத்திர ராஜனை ஒன்றும் செய்யவில்லை.
அவனது எதிரிகளை அழித்து அவனுக்கு நன்மையையே செய்தது!” என்றார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

‘இஷு’ என்றால் அம்பு என்று பொருள்.
‘மஹேஷு’ (மஹா+இஷு) என்றால் மிகச் சிறந்த அம்பு என்று பொருள்.
நம் பாபங்களைப் போக்கி நம் அனைவருக்கும் மங்களங்களை அள்ளிச் சொரியும் மிகச்சிறந்த அம்புகளை உடையவராகத்
திருமால் விளங்குவதால், ‘மஹேஷ்வாஸஹ’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 183-வது திருநாமம்.
“மஹேஷ்வாஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்கள் மேல், சார்ங்கபாணிப் பெருமாள்
தன் அன்பு மழையை அம்பு மழையெனப் பொழிவார்.

——————–

184. மஹீபர்த்ரே நமஹ (Maheebharthre namaha)

கருடனுக்கு ருத்ரா, சுகீர்த்தி என இரண்டு மனைவிகள். அவர்களுள் ருத்ரா ஒருநாள் கருடனிடம்,
“உங்கள் அலகு இவ்வளவு கூர்மையாக உள்ளதே! இந்தக் கூரிய அலகு இருப்பதால்,
உங்கள் அருகில் வருவதற்கே பயமாக இருக்கிறது!” என்று சொன்னாள்.
“சுவாமி! உங்கள் அலகு இவ்வளவு கூர்மையாக இருப்பதற்கு என்ன காரணம்?” என்று கருடனிடம் கேட்டாள் சுகீர்த்தி.
“எந்த ஒரு பொருளும் நன்றாகச் சாணை பிடித்தால் தான் கூர்மையாக இருக்கும்.
ஒரு விவசாயி எப்படி அறுவடைக்குச் செல்லும் முன் தனது அரிவாளைப் பாறையில் தேய்த்துச் சாணை பிடிப்பாரோ,
அது போல் நான் எனது அலகை ஒரு சரியான உரைகல்லில் தேய்த்துச் சாணை பிடிக்கிறேன்!” என்றார் கருடன்.
“அது என்ன உரைகல்?” என்று கேட்டாள் ருத்ரா.

“அன்று மந்தர மலையைத் தன் முதுகில் சுமப்பதற்காகத் திருமால் கூர்மாவதாரம் எடுத்தார்.
பாற்கடலைக் கடைந்து முடித்தபின், மந்தர மலையைத் தம் முதுகில் இருந்து இறக்கி வைத்த கூர்ம மூர்த்தி,
அதன்பின் பூமியைத் தமது முதுகில் சுமக்கத் தொடங்கினார். இன்றும் பாதாள லோகத்தில் பூமியைத் தாங்கிய வண்ணம்
கூர்ம மூர்த்தி எழுந்தருளியுள்ளார். நான் அவ்வப்போது பாதாளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து அவருடன்
உரையாடிக் கொண்டிருப்பேன். அவ்வாறு உரையாடும் போது, ஆமை வடிவிலுள்ள அவருடைய ஓட்டில்
என் அலகைத் தேய்த்துச் சாணை பிடிப்பேன்! அதனால் தான் எனது அலகு மகாபாரதத்தில் துரோணர் பயன்படுத்திய
கத்தி போல் கூர்மையாக உள்ளது!” என்றார் கருடன்.
“நீங்கள் இப்படி அவர் முதுகில் உங்கள் அலகைத் தேய்த்தால் அவருக்கு வலிக்காதா?” என்று கேட்டாள் ருத்ரா.

“இல்லை! நான் என் அலகைக் கூர்மையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முதுகில் அதைத் தேய்க்கவில்லை.
அவர் முதுகை இதமாக வருடி விடுவதற்காகத் தான் என் மூக்கை அவரது முதுகில் தேய்ப்பேன்.
ஆனால் திருமாலுக்குச் செய்யும் கைங்கர்யத்தின் ஏற்றம் யாதெனில், நாம் அவரிடம் எதையுமே பிரார்த்திக்காமல்
அவருக்குத் தொண்டு செய்து கொண்டே இருந்தால், நமக்கு எது தேவை என்பதைத் திருமாலை ஆராய்ந்து,
அவை அனைத்தையும் நமக்கு அவரே அருளி விடுவார்.
எனவே நான் கேட்காமலேயே எனது அலகினை அவரது ஓடு கூர்மையாக்கி விடுகிறது!” என்றார் கருடன்.

இந்த விஷயத்தை வேதாந்த தேசிகன் கருடனைக் குறித்துத் தாம் இயற்றிய ஐம்பது ஸ்லோகங்களின்
தொகுப்பான கருட பஞ்சாசத்தின் 31-வது ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார்:

“ப்ரத்யக்ராகீர்ண தத்தத் பணிமணி நிகரே சங்குலாகோடி வக்ரம்
துண்டாக்ரம் ஸங்க்ஷுவான: குலகிரி கடினே கர்ப்பரே கூர்மபர்த்து: |
பாதாள க்ஷேத்ர பக்வத்விரஸன ப்ருதனா சாலி விச்சேத சாலி
சைலீம் நஸ்ஸப்த சைலீ லகிமதரஸப: ஸௌது ஸாத்வீம் ஸுபர்ண: ||”

“ஆதிசேஷன் தானே பாதாளத்திலிருந்தபடி உலகைத் தாங்குகிறார்.
கூர்ம மூர்த்தி தாங்குகிறார் என்று சொல்கிறீர்களே!” என்று கேட்டாள் சுகீர்த்தி.
“ஆதிசேஷன் பூமியைப் பாதாளத்தில் இருந்து தாங்குவது உண்மை தான்.
ஆனால் அந்த ஆதிசேஷனுக்குக் கீழே இருந்து கொண்டு, ஆதிசேஷனோடு சேர்த்து உலகையும் தாங்குபவர்
கூர்ம மூர்த்தி தான். அதனால் தான் இன்றும் கோயில்களில் சேஷ வாகனத்தின் கீழே
ஆமை வடிவில் கூர்ம மூர்த்தி இருப்பதைக் காணலாம்!” என்றார் கருடன்.

“அந்தக் கூர்ம மூர்த்தியை நாங்களும் தரிசிக்க விரும்புகிறோம்!” என்றார்கள் ருத்ராவும் சுகீர்த்தியும்.
“வாருங்கள்!” என்று அவர்களையும் பாதாளத்துக்கு அழைத்துச் சென்றார் கருடன்.
‘மஹீ’ என்றால் பூமி என்று பொருள்.
பூமியைத் தாங்கும் கூர்ம மூர்த்தி ‘மஹீபர்த்தா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 184-வது திருநாமம்.
“மஹீபர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் அறிவாற்றல், கருடனின் அலகைப் போல்
கூர்மையாகும் படித் திருமால் அருள்புரிவார்.

————

185. ஸ்ரீநிவாஸாய நமஹ (Shreenivaasaaya namaha)

பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து மின்னல் போலத் தோன்றினாள் மகாலட்சுமி. தாமரையில் அமர்ந்திருந்த அவள்,
தனது இரு கரங்களிலும் தாமரைகளை ஏந்தியிருந்தாள். முனிவர்கள் வேத மந்திரங்களாலும்,
கந்தர்வர்கள் இன்னிசையாலும் அவளைத் துதித்தார்கள்.
திக்கஜங்கள் தங்கப் பானைகளால் அவள் மேல் பன்னீர் சொரிந்தன.
இந்திரன் அவளுக்குச் சிம்மாசனமும், கடலரசன் பட்டு வஸ்திரமும், வருண பகவான் மாலைகளும், விஸ்வகர்மா நகைகளும் அளித்தார்கள்.
இவளே அனைத்து உலகுக்கும் அரசி என்று சொன்ன தேவர்களும் ரிஷிகளும் அவளுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
அங்கேயே தனது சுயம்வரத்தை நடத்த விரும்பினாள் மகாலட்சுமி. தேவர்களும் முனிவர்களும் ஆவலுடன் வரிசையில் நின்றார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடம் அனைத்து நற்பண்புகளும் இருப்பதாகவும், மகாலட்சுமி தன்னையே தேர்ந்தெடுப்பாள் என்றும் கருதினார்கள்.

முதலில் துர்வாச முனிவர் நின்று கொண்டிருந்தார். அவர் பெரிய தபஸ்வியாயினும் கோபம் மிகுந்தவர். அதனால் அவரை நிராகரித்தாள் மகாலட்சுமி.
அடுத்து நின்ற சுக்ராச்சார்யார் மகா ஞானி. ஆனால் புலனடக்கம் இல்லாதவர்.
அடுத்து நின்ற சந்திரனோ, அளவில்லாத ஆசை உடையவர்.
கார்த்தவீர்யார்ஜுனன் பெரும் வீரன். ஆனால் நிலையில்லாத செல்வங்களை நிலையென எண்ணி வாழ்பவன்.
சனத்குமாரர் போன்றோர் எப்போதும் தவத்தில் ஈடுபட்டிருப்பதால், மனைவியைக் கவனிக்க மாட்டார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தேவர்களையும் முனிவர்களையும் நிராகரித்து வந்து மகாலட்சுமி,
இறுதியாகத் திருமாலின் முன்னே வந்து நின்றாள்.

அவரிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பரிபூர்ணமாக நிறைந்திருப்பதைக் கண்டாள் மகாலட்சுமி.
திருமால், “திருமகளே வருக!” என்று மகாலட்சுமியைப் பார்த்துச் சொன்னார்.
“வருக” என்ற அந்த ஒரு வார்த்தையில் அவளது இதயத்தையே திருமால் கடைந்து விட்டார்.
திருமாலின் அழகாலும், நற்பண்புகளாலும், இளமையாலும், கருணையாலும், “வருக!” என்ற வார்த்தையாலும்
ஈர்க்கப்பட்ட மகாலட்சுமி அவருக்கு மாலையிட்டாள். மாலையிட்டதோடு மட்டுமின்றி, அவரது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“டோலா தே வனமாலயா” – அது வரை திருமாலின் மார்புக்கு ஆபரணமாக இருந்த வனமாலை அன்று முதல்
மகாலட்சுமிக்கு ஊஞ்சலாக மாறிவிட்டது என்று ஸ்ரீகுணரத்ன கோசத்தில் பராசர பட்டர் தெரிவிக்கிறார்.

மகாலட்சுமிக்கும் திருமாலுக்கும் திருக்கல்யாணம் நடந்த பின், தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது.
அப்போது அதிலிருந்து அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியபடி தன்வந்திரி பகவான் தோன்றினார்.
அமுதம் வருவதைக் கண்ட தேவர்கள் திருமாலிடம், “இந்த அமுதம் அசுரர்களின் கையில் கிடைக்காதபடி நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும்.
அசுரர்கள் அமுதத்தை உண்டு விட்டால் அவர்களும் நீண்ட ஆயுள் பெற்று விடுவார்கள்!” என்று பிரார்த்தித்தார்கள்.
அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, அசுரர்களை மயக்கும் பொருட்டு மோகினி என்னும் பெண்ணாக அவதரிக்கத் திட்டமிட்டார் திருமால்.
அப்போது தன் திருமார்பில் இருந்த மகாலட்சுமியிடம், “நீ இந்த மார்பிலிருந்து சற்றே விலகி இரு.
நான் மோகினி வேடமணிந்து அசுரர்களை ஏமாற்றி விட்டு வருகிறேன்.

மோகினி அவதாரத்தில் நீ என் மார்பில் இருப்பது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது!” என்றார் திருமால்.
ஆனால் மகாலட்சுமியோ, “ஒரு நொடி கூட இந்த மார்பை விட்டு நான் அகலமாட்டேன். நீங்கள் பெண் வேடமிட்டாலும், ஆண் வேடமிட்டாலும்
இந்த மார்பை விட்டு நான் நீங்க மாட்டேன்!” என்றாள்.
அதனால் திருமால் மார்பிலுள்ள மகாலட்சுமியை மேலாடையால் மறைத்துக் கொண்டு மோகினி அவதாரம் எடுத்தார்.
ஏன் திருமாலின் திருமார்பை விட்டு அகல மறுத்தாள் மகாலட்சுமி? ஏனெனில், திருமாலை நாடி பக்தர்கள் வரும்போது,
திருமார்பில் உள்ள மகாலட்சுமி அந்த பக்தர்களுக்கு அருள்புரியும்படித் திருமாலிடம் பரிந்துரைக்கிறாள்.
அவளது பரிந்துரை இல்லாவிட்டால் பக்தர்களால் திருமாலின் அருளைப் பெற முடியாமல் போய்விடும்.
எனவே பக்தர்களுக்குத் திருமாலின் அருளைப் பெற்றுத் தருவதற்காக
“அகலகில்லேன் இறையும்” என்று அவன் திருமார்பில் திருமகள் உறைகிறாள்.

இன்றும் பெருமாள் கோயில்களில், பெருமாள் மோகினி வேடம் அணிந்து கொள்ளும் போது கூட,
திருமார்பில் மகாலட்சுமி விட்டுப்பிரியாமல் இருப்பதைக் காணலாம். மகாலட்சுமிக்கு ‘ஸ்ரீ:’ என்று பெயர்.
அந்த ஸ்ரீ எப்போதும் திருமாலின் திருமார்பில் வசிப்பதால் திருமால் ‘ஸ்ரீநிவாஸ:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம்.
“ஸ்ரீநிவாஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களுக்கு எல்லாச் செல்வங்களும் நிறையும்.

———————

186. ஸதாம் கதயே நமஹ (Sathaam gathaye namaha)

வனவாசத்தில் இருக்கும் பாண்டவர்களின் குடிலுக்குச் சென்று விருந்து அருந்தச் சொல்லி,
துர்வாச முனிவரை அனுப்பி வைத்தான் துரியோதனன்.
அவரும் தமது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் பாண்டவர்களின் குடிலுக்கு வந்தார்.
அவர்களை வரவேற்ற தர்மபுத்திரர், திரௌபதியிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.
ஆனால் வீட்டில் எந்த உணவுப் பண்டங்களும் இல்லை என்பது தர்மபுத்திரருக்குத் தெரியாது.
“நீராடி விட்டு விருந்துக்கு வருகிறோம்! விருந்தைத் தயார் செய்யுங்கள்!” என்று சொல்லி விட்டுத்
துர்வாசரும் அவரது சீடர்களும் அருகிலுள்ள குளத்துக்குச் சென்றார்கள். திரௌபதிக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை.
கோபக்காரரான துர்வாச முனிவர் நம்மைச் சபித்து விடுவாரோ என அஞ்சிய அவள், கண்ணனை மனதாற தியானித்தாள்.

அடுத்த நொடியே அவள் முன்னே வந்து நின்றான் கண்ணன்.
“திரௌபதி! எனக்கு மிகவும் பசிக்கிறது உணவு இருக்கிறதா?” என்று கேட்டான். “வந்தவர்களுக்கு விருந்தளிக்கவே ஒன்றுமில்லை.
நீயும் பசி என்றால் நான் எங்கே செல்வே?” என்று கேட்டாள் திரௌபதி.
“அட்சய பாத்திரம் வைத்திருக்கிறாயே! அதில் தான் உணவு வற்றாமல் இருக்குமே!” என்று கேட்டான் கண்ணன்.
“தினமும் நான் சாப்பிடும் வரை அட்சய பாத்திரத்தில் உணவு இருக்கும். நான் சாப்பிட்ட பின் அதில் உள்ள உணவு தீர்ந்து விடும்.
நானும் அதைக் கழுவி வைத்துவிடுவேன். இன்று மதியமே அதைக் கழுவி வைத்து விட்டேன்.
இனி நாளை தான் அதைப் பயன்படுத்த முடியும்!” என்றாள் திரௌபதி.“அட்சய பாத்திரத்தைக் காட்டு!” என்றான் கண்ணன்.
திரௌபதி எடுத்துக் காட்டினாள். அதன் விளிம்பில் ஓர் அகத்திக் கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது.
“ஆஹா! இது போதுமே எனக்கு!” என்று சொல்லியபடி அதை உட்கொண்டான் கண்ணன்.
கண்ணனின் பசி அடங்கியது. கண்ணபெருமானுக்கே வயிறு நிரம்பி விட்டதால், உலகிலுள்ள அனைத்து உயிர்களின் வயிறுகளும் நிரம்பின.

துர்வாசருக்கும் அவரது சீடர்களுக்கும் பசி ஆறிவிட்டது. அதனால் குளத்தில் நீராடியபின் விருந்துக்கு வராமல் அவர்கள் அப்படியே ஓடி விட்டார்கள்.
வரவிருந்த பேராபத்தாகிய துர்வாசரின் சாபத்திலிருந்து பாண்டவர்களை இவ்வாறு காப்பாற்றினான் கண்ணன்.
அவன் உட்கொண்ட அகத்திக்கீரை கண்ணனின் வயிற்றினுள் சென்றபின், “கண்ணா! உனது லீலையில் அடியேனையும்
ஒரு கருவியாகப் பயன்படுத்தியமைக்கு நன்றி!” என்றது. “அடியார்களைக் காகும் பணியில் எனக்கு உதவியாக இருந்த உனக்கு
நான் தான் நன்றி சொல்ல வேண்டும்!” என்று சொன்ன கண்ணன்,
“இனி எனது பக்தர்கள் விரதம் இருந்தால், அந்த விரதத்தை நிறைவு செய்கையில் அகத்திக் கீரையை உட்கொண்டு
நிறைவு செய்வார்கள்!” என வரமும் அளித்தான்.

ஆனால் அத்துடன் திருப்தி அடையாத அகத்திக் கீரை, “எனக்கு முக்தி வேண்டும்!” என்று கேட்டது.
“முக்தி என்பதை நான் நேரடியாகத் தர மாட்டேன். ஒரு நல்ல குருவின் மூலம் என்னிடம் வந்தால் தான் முக்தி கிட்டும்!” என்றான் கண்ணன்.
“நடப்பது யாவும் உனது லீலைகளே! நான் உன் கையில் கருவி தானே? அந்தக் குருவையும் நீ தானே காட்டியருள வேண்டும்!” என்றது அகத்திக் கீரை.
“நிச்சயம் காட்டுகிறேன்!” என்றான் கண்ணன்.சில நூற்றாண்டுகள் கடந்தன.
கண்ணனின் அருளால் வேதாந்த தேசிகனின் இல்லத்தில் அந்த அகத்திக் கீரை செடி முளைத்தது.
வேதாந்த தேசிகன், ஏகாதசி போன்ற விரதம் முடிக்கும் நாட்களில் அதன் இலைகளை உட்கொண்டு வந்தார்.
ஒருநாள் அந்த அகத்திக் கீரை செடி வாடி இருப்பதைக் கண்ட தேசிகன், அதற்கு முக்தியளிக்க வேண்டுமென்று பிரார்த்தித்துத்
திருமாலிடம் சரணாகதி செய்தார். நல்ல குருவின் பரிந்துரை கிட்டிவிட்டதால், அகத்திக் கீரைக்குத் திருமால் முக்தியும் அளித்தார்.

அந்த அகத்திக் கீரை, தனக்கு எது நன்மையோ அதைத் திருமாலே செய்வார் என்ற உறுதியோடு,
உலகில் நடப்பது அனைத்தையும் திருமாலின் லீலையாகவே எண்ணி வாழ்ந்தது.
இறுதியில் அதற்கு நல்ல குருவையும் திருமாலே காட்டிக் கொடுத்து, அவர் மூலம் முக்தியும் பெறும்படிச் செய்தார்.
இவ்வாறு இறைவனே கதி என்று வாழும் அடியவர்களுக்கு ‘ஸத்’ என்று பெயர்.
அந்த ஸத் ஆகிய அடியார்களுக்குக் கதியாக இருப்பதால், திருமால் ‘ஸதாம் கதி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 186-வது திருநாமம்.
“ஸதாம் கதயே நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்குத் தேவையான அனைத்து நலன்களையும் திருமால் அருள்வார்.

———————

187. அநிருத்தாய நமஹ (Aniruddhaaya namaha)

தமது குருவான கோவிந்த பகவத்பாதரின் ஆணைப்படி, உபநிஷத்துக்களுக்கு விரிவுரை எழுத நினைத்தார் ஆதி சங்கரர்.
தமது சீடர் ஒருவரை அழைத்துத் தமது நூலகத்தில் இருந்து உபநிஷத் ஓலைச் சுவடிகளை எடுத்து வரச் சொன்னார்.
சீடரும் எடுத்து வந்து சங்கரரிடம் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தார் சங்கரர். அது உபநிஷத் ஓலைச் சுவடி அல்ல,
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடி.மீண்டும் சீடனை அழைத்து, “உபநிஷத் ஓலைச்சுவடியைக் கேட்டால்,
விஷ்ணு ஸஹஸ்ரநாமச் சுவடியைக் கொண்டு வந்து விட்டாயே! உபநிஷத்துக்களுக்குத் தான் விளக்கவுரை எழுதப் போகிறேன்.
அதனால் அந்த ஓலைச் சுவடியைக் கொண்டு வா!” என்று கூறினார் சங்கரர்.மீண்டும் நூலகத்துக்குச் சென்ற சீடன்,
நன்றாகத் தேடி, உபநிஷத் ஓலைச் சுவடியைக் கொண்டு வந்து தந்தான். சங்கரர் பிரித்துப் பார்த்தால்,
அது விஷ்ணு ஸஹஸ்ரநாம ஓலைச் சுவடியாகவே இருந்தது.
“உனக்கு நான் சொல்வது புரியவில்லையா உபநிஷத்தைக் கொண்டு வரச் சொன்னால்
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கொண்டு வருகிறாயே!” என்று
சீடனிடம் சொன்ன சங்கரர், இனி சீடனை நம்பிப் பயனில்லை என்று தாமே நூலகத்துகுச் சென்றார்.

நூலகத்தில் நன்றாகத் தேடி உபநிஷத் ஓலைச் சுவடியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அமர்ந்தார் சங்கரர்.
பிரித்துப் பார்த்தால், அது விஷ்ணு ஸஹஸ்ர நாமமாக இருந்தது. “நாம் எத்தனை தடவை உபநிஷத்தைத் தேடி எடுத்தாலும்,
அது விஷ்ணு ஸஹஸ்ரநாமச் சுவடியாகவே வருகிறதென்றால், உபநிஷத்துக்களுக்கு விளக்கவுரை எழுதும் முன்
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு முதலில் நாம் விளக்கவுரை எழுதவேண்டும் என்று திருமால் கருதுகிறார் போலும்.
அவர் ஒன்றை முடிவு செய்து விட்டால், அதை யாரால் மாற்ற முடியும்? எனவே திருமாலின் விருப்பப்படி
ஸஹஸ்ரநாமத்துக்கே முதலில் விளக்கம் எழுதுவோம்!” என்று கருதிய சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு
அழகான விளக்கவுரையை முதலில் எழுதிவிட்டுப் பின் உபநிஷத்துக்களுக்கு விளக்கவுரை எழுதினார்.

இதைக்கண்ட ஸ்ரீரங்கநாயகி, திருவரங்க நாதனிடம், “சிவபெருமான் சங்கரராகப் பிறந்து உங்களது ஆயிரம் திருநாமங்களுக்குச்
சிறப்பான விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே! இது சரியா?” என்று கேட்டாள்.
“நான் இப்போது என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார் திருவரங்க நாதன். “நீங்கள் இப்படி வெறுமனே சயனித்திருக்காமல்,
உங்களது ஆயிரம் நாமங்களுக்கு நீங்களும் ஓர் உரை எழுத வேண்டாமா?” என்று கேட்டாள் ஸ்ரீரங்கநாயகி.
“நான் ஏற்கெனவே ஸஹஸ்ரநாமத்துக்கு விரிவுரை எழுத வேண்டும் என முடிவெடுத்து விட்டேன்.
அதற்கு முன் சங்கரரை ஓர் உரை எழுத வைக்க வேண்டும் என்பதற்காகவே அவரது கையில் உபநிஷத் ஓலைச் சுவடிக்குப் பதிலாக
ஸஹஸ்ரநாம ஓலைச்சுவடி கிடைக்கும்படிச் செய்தேன். பொறுத்திருந்து பார்! நானும் ஒரு விளக்கவுரை எழுதுவேன்!” என்றார் திருவரங்கநாதன்.

சில காலம் கழிந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருவரங்கநாதனே, கூரத்தாழ்வானின் மகனான பராசர பட்டராக அவதரித்தார்.
‘பகவத் குண தர்ப்பணம்’ என்ற மிக உயர்ந்த விளக்கவுரையை எழுதி ஸஹஸ்ரநாமத்தின் பொருளை விளக்கினார் பராசர பட்டர்.
அந்நூலை ஸ்ரீரங்கநாயகித் தாயாரிடம் சமர்ப்பித்தார்.அதைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாயகி, திருவரங்கநாதனைப் பார்த்து,
“சுவாமி! நீங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது. உம்முடைய ஆயிரம் நாமங்களுக்கு
இரண்டு சிறப்பான விளக்கவுரைகள் வர வேண்டுமென நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள்.
அதற்காக, சங்கரர் கையில் ஸஹஸ்ரநாமச் சுவடி கிடைக்கும்படிச் செய்து அவர் மூலம் ஓர் உரை உருவாகும்படிச் செய்தீர்கள்.
மற்றோர் விளக்கவுரையை நீங்களே பராசர பட்டராக அவதரித்து வழங்கிவிட்டீர்கள்!” என்றாள்.

இவ்வாறு யாராலும் தடுக்க முடியாதவராக இருந்து கொண்டு, தான் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுபவராகத்
திருமால் விளங்குவதால், அவர் ‘அநிருத்த:’ என்றழைக்கப்படுகிறார்.
‘அநிருத்த:’ என்றால் யாராலும் தடுக்க முடியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 187-வது திருநாமம்.
“அநிருத்தாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களும்
தடையின்றி நிறைவடையத் திருமால் அருள்புரிவார்.

———————

188. ஸுரானந்தாய நமஹ (Suraanandhaaya namaha)

(188-வது திருநாமமான ஸுரானந்த என்பதிலிருந்து 194-வது திருநாமமான ஸுபர்ண வரையிலான 7 திருநாமங்கள்,
அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றிய ஹம்ஸாவதாரத்தின் பெருமைகளைச் சொல்கின்றன.)
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு முனிவர்களும் பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர்கள்.
இவர்கள் நால்வரும் குள்ளமான தோற்றத்துடன் இருப்பார்கள். மிகச்சிறந்த ஞானிகளாக விளங்கினார்கள்.
அந்த நால்வரும் ஒருமுறை தங்கள் தந்தையான பிரம்மாவிடம் சென்று, “பக்தியோகத்தைப் பற்றி நாங்கள் அறிய விரும்புகிறோம்!” என்று கூறினார்கள்.

“பக்தியோகத்தைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டார் பிரம்மா.
“மனிதனின் மனம் ஏன் உலகியல் சிற்றின்பங்களையே நாடுகிறது? பேரின்பமாகிய இறையனுபவத்தில் ஏன் மக்களுக்கு
நாட்டம் வருவதில்லை? முக்தி அடைய விரும்புபவன் இந்தச் சிற்றின்பங்களில் உள்ள ஆசையை அறுப்பதற்கு என்ன வழி?”
என்று கேட்டார்கள் முனிவர்கள்.“மகன்களே! நீங்கள் கேட்ட கேள்வி சரி தான்.
ஆனால் இதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை!” என்றார் பிரம்மா.“தந்தையே! என்ன சொல்கிறீர்கள்?
தாங்கள் திருமாலின் உந்தித் தாமரையில் இருந்து நேராகத் தோன்றியவர். உலகை எல்லாம் படைப்பவர்.
உங்களுக்கே விடை தெரியாதா? மகன்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டியது தந்தையின் கமையல்லவா?” என்று கேட்டார்கள் முனிவர்கள்.

“என்ன செய்வது? என் மனதையே என்னால் அடக்க முடியவில்லை. அப்படியிருக்க மனதை அடக்க என்ன வழி
என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்?” என்றார் பிரம்மா.
“அப்படியாயின், எங்கள் கேள்விக்கு யார் தான் பதிலளிப்பார்?” என்று கேட்டார்கள் முனிவர்கள்.
“அனைத்துலகுக்கும் தந்தையாக விளங்கும் திருமால் ஒருவரால் தான் இதற்கு விடையளிக்க முடியும்.
ஞானம் தரும் குருவும், பசியில் உணவளிப்பவரும், ஆபத்தில் காப்பவரும் தந்தைக்குச் சமம் என்பார்கள்.
இப்போது என் தந்தையாகிய திருமாலே வந்து, அடியேனுக்கு ஞானமும் தந்து, நம் அறிவுப் பசியையும் போக்கி,
ஆபத்திலிருந்தும் காக்க வேண்டும்!” என்று சொன்ன பிரம்மா, திருமாலிடம் மனதாற பிரார்த்தனை செய்தார்.
அப்போது திருமாலே அன்னப் பறவை வடிவில் அவர்களுக்குக் காட்சி அளித்தார்.
வடமொழியில் ‘ஹம்ஸம்’ என்றால் அன்னப்பறவை என்று பொருள்.
அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றியதால் இந்த அவதாரம் ‘ஹம்ஸாவதாரம்’ என்று போற்றப்படுகிறது.

முனிவர்களுக்கு எழுந்த ஐயத்தை அன்னத்தின் வடிவிலுள்ள திருமாலிடம் விண்ணப்பித்தார் பிரம்மா.
அதற்குத் திருமால், “மனதை அடக்க வேண்டுமென்றால், முதலில் நாம் இந்த உடல் அல்ல,
அதற்குள் இருக்கும் ஜீவாத்மா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாமே உடல் என்று தவறாக எண்ணுவதால் தான்
உடலைச் சார்ந்த பொருட்களின் மேல் நமக்குப் பற்று உண்டாகிறது. மேலும், ஜீவாத்மாவின் உண்மையான சொரூபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜீவாத்மா சுதந்திரமானவன் அல்ல, இறைவனுக்கே ஆட்பட்டவன், இறைவனை விட்டுத் தனித்திருக்க முடியாதவன் என்பதை உணர வேண்டும்.
இறைவனைத் தவிர பிற விஷயங்களில் நாட்டம் கொள்வது ஜீவாத்மாவின் சொரூபத்துக்கு ஏற்றதல்ல என்பதையும் உணர வேண்டும்.
இந்த ஞானத்தை மெல்ல மெல்ல வளர்த்தோமாகில், நமது மனம் சிற்றின்பங்களில் நாட்டம் கொள்ளாமல், இறைவன் பால் பக்தி
செலுத்தத் தொடங்கும்!” என்று கூறினார்.

மேலும், “இந்த எண்ணத்துடன் பக்தியோகம் செய்து, இடைவிடாமல் என்னையே தியானிப்பவன் என்னை வந்தடைவான்!” என்றும் கூறினார் திருமால்.
இவ்வாறு திருமால் கூறிய விளக்கங்களைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்தார்கள்.
“நீ முந்தைய யுகத்தில் உபதேசித்த இந்தக் கருத்துக்களை எல்லாம் நாங்கள் மறந்து, துன்பக் கடலில் வாடி வந்தோம்.
இப்போது மீண்டும் இவற்றை எமக்கு உபதேசம் செய்து, நாங்கள் இழந்த ஞானத்தை மீட்டுத் தந்து விட்டாய்!” என்று சொல்லித்
தேவர்களும் முனிவர்களும் திருமாலுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.
திருமங்கையாழ்வாரும் “அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமுறையை வெளிப்படுத்த அம்மான்” என்று பாடினார்.
தேவர்களுக்கு ‘ஸுர:’ என்று பெயர். அன்னப்பறவை வடிவில் வந்து வேதத்தின் சாரத்தை விளக்கித்
தேவர்களுக்கு ஆனந்தம் தந்தமையால், ‘ஸுரானந்த:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 188-வது திருநாமம்.
“ஸுரானந்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இழந்தவை அனைத்தும்
விரைவில் திரும்பக் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

———————————–

189. கோவிந்தாய நமஹ (Govindhaaya namaha)

திருமால் திரிவிக்கிரமனாக ஓங்கி உலகளந்தபோது, அவரது திருவடிக்குத் தன் கமண்டலத்திலுள்ள நீரால் பிரம்மா அபிஷேகம் செய்தார்.
அச்சமயம் திருமாலின் திருவடிச் சிலம்பில் பட்டுத் தெறித்த தீர்த்தம், சிலம்பாறு என்ற பெயருடன்
திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர் மலையில் இறங்கியது.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்ல பட்ச துவாதசியில் கள்ளழகர் சிலம்பாற்றில் நீராடுவது வழக்கம்.
அந்த வைபவத்தைக் காண அகஸ்திய முனிவரும் அவரது சீடர்களும் அழகர்மலைக்குச் சென்றார்கள்.
அங்கே கூடியிருந்த பக்தர்கள் எல்லோரும் ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று கோஷமிட்டார்கள்.
இதைக் கவனித்த அகஸ்தியரின் சீடர்கள், “குருவே! கோவிந்தன் என்றால் மாடு மேய்ப்பவன் என்று தானே பொருள்?
இங்கே கள்ளழகரைப் பார்த்து ஏன் ‘கோவிந்தா! கோவிந்தா!’ என மக்கள் கோஷமிடுகிறார்கள்?” என்று கேட்டனர்.

அந்தச் சீடர்களுள் ஒருவர், “மாடு மேய்க்கும் கண்ணனாகத் திருமால் தானே அவதரித்தார்?
அதைக் கருத்தில் கொண்டு ‘கோவிந்தா!’ என்று பக்தர்கள் கோஷமிடுகிறார்கள்!” என்றார்.
அகஸ்தியரோ, “அதுவும் சரி தான். ஆனால் இங்கே அழகரைப் பார்த்துக் கோவிந்தா என்றழைப்பதற்கு
வேறு இரண்டு காரணங்கள் உள்ளன!” என்றார். “அவை என்ன?” என்று ஆவலுடன் கேட்டார்கள் சீடர்கள்.
அதற்கு அகஸ்தியர், “முன்னொரு சமயம், பக்தியோகம் குறித்து சனகாதி முனிவர்கள் பிரம்மாவிடம் கேள்வி எழுப்ப,
அதற்கு விடையறியாத பிரம்ம தேவர், திருமாலின் உதவியை நாடினார். அப்போது அன்னப்பறவை வடிவத்துடன் அவதரித்த திருமால்,
பக்தியோகத்தின் நுணுக்கங்களை அவருக்கு விளக்கினார். பிரம்ம தேவரும் சனகாதி முனிவர்களும் மட்டுமின்றி,
அனைத்துத் தேவர்களும் முனிவர்களும் அன்னத்தின் வடிவிலுள்ள திருமாலின் உபதேசங்களைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

‘கோ’ என்றால் தண்ணீர் என்று பொருள். தண்ணீரில் வசிப்பவருக்கு ‘கோவிந்தா’ என்று பெயர்.
தண்ணீரில் சஞ்சரிக்கக்கூடிய அன்னப் பறவையாக அவதரித்தபடியால், திருமாலுக்கு ‘கோவிந்த:’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
அது போலவே, இங்கே அழகர் மலையில், சிலம்பாற்றில் திருமஞ்சனம் கண்டருளி, சிலம்பாற்றின் தண்ணீரிலே சஞ்சரிப்பதால்,
அழகரை ‘கோவிந்தா! கோவிந்தா!’ (தண்ணீரில் சஞ்சரிப்பவனே!) என்று மக்கள் அழைக்கிறார்கள்!” என்று விடையளித்தார்.

“மற்றொரு காரணம் என்ன?” என்று சீடர்கள் கேட்டார்கள்.
“அன்று அன்னமாக வந்து வேதத்தின் சாரத்தை உபதேசித்த திருமாலை, தேவர்களும் முனிவர்களும் துதித்தார்கள்.
அவ்வாறு தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்பட்ட திருமாலை, இன்று குறவர் குலப் பெண்கள் குறிஞ்சிப் பண் பாடி
இந்த அழகர் மலையில் துதி செய்கிறார்கள். தேவர்களும் முனிவர்களும் செய்த துதியை எவ்வளவு மகிழ்ச்சியோடு
திருமால் ஏற்று அருள் புரிந்தாரோ, அதே மகிழ்ச்சியோடு குறமாதர்களின் குறிஞ்சிப்பண்ணையும் ஏற்று
அவர்களுக்கும் அருள்புரிகிறார். இக்கருத்தைப் பெரியாழ்வார்,

“மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக்காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குறமாதர்கள் பண் குறிஞ்சிப்
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே”

என்று பாடியுள்ளார். ‘கோ’ என்றால் துதி என்று பொருள். பக்தியுடன் தன்னை யார் துதி செய்தாலும்,
அதை மகிழ்ச்சியுடன் ஏற்று அருள்புரிபவராக அழகர் திகழ்வதால், அவரைப் பக்தர்கள் ‘கோவிந்தா! கோவிந்தா!’
(துதிகளை ஏற்று அருள்பவனே!) என்று மகிழ்ச்சியுடன் அழைக்கிறார்கள்!” என்றார் அகஸ்தியர்.
தண்ணீரில் சஞ்சரிப்பதாலும், ஏற்றத்தாழ்வு பாராது அனைவரின் துதிகளையும் ஏற்றுக் கொள்வதாலும்,
ஹம்ஸாவதாரம் செய்த திருமால் ‘கோவிந்த:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 189-வது திருநாமம்.
“கோவிந்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுத் திருமால்
தன் திருவருளை வழங்குவார்.

——————–

190. கோவிதாம் பதயே நமஹ (Govidhaam pathaye namaha)

வருடா வருடம் கார்த்திகை தீபத்தன்று, திருவரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு எதிரே சொக்கப்பனை எரிக்கப்படுவது வழக்கம்.
அச்சமயம் உற்சவரான நம்பெருமாளும் அங்கே எழுந்தருள்வார்.
அவ்வாறு கார்த்திகை தீபத் திருவிழா திருவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில்,
திருமங்கையாழ்வார் நம்பெருமாளைப் போற்றி ‘திருநெடுந்தாண்டகம்’ எனப்படும் முப்பது பாசுரங்களைப் பாடினார்.
அவற்றைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள், “உங்கள் பாடல்கள் அனைத்தும் அமுதம் போல் தித்திக்கின்றன.

உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று திருமங்கையாழ்வாரிடம் கேட்டார்.
“மார்கழி மாதம் தோறும் அத்யயன உற்சவத்தில், பகல் பொழுதில் நீ வடமொழி வேத பாராயணத்தைக் கேட்பது,
அந்த அத்யயன உற்சவத்தின் இரவுப் பொழுதில் நீ தமிழ் வேதமாகிய திருவாய்மொழியைக் கேட்க வேண்டும்.
அப்போது தான் தமிழ் வேதங்களை மக்கள் மறக்காமல் இருப்பார்கள்!” என்று வேண்டினார் திருமங்கையாழ்வார்.
அதற்கு நம்பெருமாளும் இசையவே, பெருமாளின் பல்லக்கை வாங்கிக் கொண்டு திருவரங்கத்தில் உள்ள வைணவர்களையும்
அழைத்துக் கொண்டு நம்மாழ்வாரின் ஊரான ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார் திருமங்கையாழ்வார்.
அங்குள்ள நம்மாழ்வாரின் விக்கிரகத்தைப் பெருமாளின் பல்லக்கில் எழுந்தருளச் செய்து திருவரங்கத்துக்கு வந்தார்.
வைகுண்ட ஏகாதசி நாள் தொடங்கிப் பத்து நாட்களுக்கு ராப் பத்து உற்சவம் நடந்தது. அதில் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி ஓதப்பட்டது.
பெருமாளும் அதைக் கேட்டு மகிழ்ந்தார். இவ்வாறு திருமங்கையாழ்வார் தொடங்கி வைத்த அத்யயன உற்சவம்
காலப்போக்கில் நின்றுபோனது. அதனால் மக்கள் ஆழ்வார் பாசுரங்களை மறந்து விட்டார்கள்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

பல நூற்றாண்டுகளுக்குப் பின், கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கப்பாணி கோயிலுக்கு வந்த நாதமுனிகள்,
அங்கே “ஆராவமுதே!” எனத் தொடங்கும் திருவாய்மொழிப் பாசுரம் இசைக்கப்படுவதைக் கேட்டார்.
அதன் இனிமையால் ஈர்க்கப்பட்ட அவருக்கு, ஆழ்வார்களின் அனைத்துப் பாசுரங்களையும் கண்டெடுக்க வேண்டுமென்ற
ஆவல் உண்டானது. அதனால் நம்மாழ்வாரின் ஊரான ஆழ்வார் திருநகரிக்குச் சென்று தவம் புரிந்து,
நம்மாழ்வாரையே நேரில் தரிசித்து, நாலாயிரம் பாசுரங்களையும் மீட்டு வந்தார் நாதமுனிகள்.

பிரபஞ்சத்தை மீட்ட நாதமுனிகள், முதலில் திருவரங்கத்துக்கு வந்து, அன்று திருமங்கையாழ்வார் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட
அத்யயன உற்சவத்தை மேலும் விரிவு படுத்தி நடத்தினார். மார்கழி மாதத்தில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி,
பகல் பத்து, ராப்பத்து என இருபது நாட்களுக்குப் பெருமாள் ஆழ்வார் பாசுரங்களைத் திருச்செவி சாத்தும்படிச் செய்தார்.
திருவரங்கத்தில் அத்யயன உற்சவத்தை நடத்திவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்த நாதமுனிகள்,
சார்ங்கபாணிப் பெருமாளுக்குத் தம் நன்றியைத் தெரிவித்தார்.
“அன்று வடமொழி வேதத்தின் பொருளை மறந்து தேவர்களும் முனிவர்களும் தவித்தபோது,
நீ அன்னமாக அவதரித்து, வடமொழி வேதத்தின் சாரத்தை அவர்களுக்கு வழங்கினாய்.
அதுபோல், தமிழ் வேதங்களாகிய ஆழ்வார் பாசுரங்களை நாங்கள் இழந்து தவித்த போது,
உன் சந்நதியில் ‘ஆராவமுதே’ பாசுரத்தை ஒலிக்கச் செய்து, அதன் வாயிலாக முழுமையாகத் தமிழ் வேதத்தையே
நீ மீட்டுத் தந்து விட்டாய். வேதம் வல்லார்கள் அனைவருக்கும் நீயே தலைவன்!” என்று
சார்ங்கபாணிப் பெருமாளைப் போற்றினார் நாதமுனிகள்.

‘கோ’ என்றால் வேதம் என்று பொருள். ‘கோவித்’ என்றால் வேதம் வல்லவர்கள்.
வடமொழி மறை, தமிழ் மறை என அனைத்து வேதங்களையும் நமக்கு வழங்கி, அவை மறைந்து போகும் காலங்களிலும்
அவற்றை மீட்டுத் தந்து, வேதம் வல்லார்களுக்கெல்லாம் தலைவராகத் திருமால் விளங்குவதால்,
‘கோவிதாம் பதி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 190-வது திருநாமம்.
“கோவிதாம் பதயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வடமொழி மறை,
தென்மொழி மறை இவற்றின் சாரத்தை உணரும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

———————

191. மரீசயே நமஹ (Mareechaye namaha)

(188-வது திருநாமமான ‘ஸுரானந்த:’ என்பதிலிருந்து 194-வது திருநாமமான ‘ஸுபர்ண:’ வரையிலான 7 திருநாமங்கள்,
அன்னப்பறவை வடிவில் திருமால் தோன்றிய ஹம்ஸாவதாரத்தின் பெருமைகளைச் சொல்கின்றன.)
காவிரிக் கரையிலுள்ள காடந்தேத்தி என்னும் ஊரில் ஜானகி – ரகுநாதன் என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுக்கு 1829-ம் வருடம் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு வரத வேதாந்தாச்சார்யார் என்று பெயர் சூட்டினார்கள்.

வரத வேதாந்தாச்சார்யார் இளம் வயதிலேயே வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுத் தேர்ந்தார்.
எட்டெழுத்து மந்திரத்தையும், காயத்திரி மந்திரத்தையும் ஹயக்ரீவ மந்திரத்தையும் இடைவிடாது ஜபம் செய்து சித்தி பெற்றார்.
தமது அறுபதாவது வயது வரை திருமலையில் தங்கி இருந்து திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு செய்து வந்தார் வரத வேதாந்தாச்சார்யார்.
அதன்பின் கும்பகோணத்துக்குக் குடிபெயர்ந்தார். கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கும் கோமளவல்லித் தாயாரிடமும்
சார்ங்கப்பாணிப் பெருமாளிடமும் மிகுந்த பக்தியுடன் அவர் விளங்கினார்.

பல நூல்களையும் கவிதைகளையும் அவர் இயற்றினார். இந்நிலையில், வயது முதிர்ச்சியின் காரணமாக அவரது பார்வை
மங்கிக் கொண்டே போனது. ஒரு நிலையில், முழுமையாகத் தமது பார்வையை இழக்கும் நிலைக்குச் சென்று விட்டார்.
எத்தனையோ சிகிச்சைகள் செய்தும் அவரது கண்கள் குணமாவதாகத் தெரியவில்லை.
கோமளவல்லித் தாயார் சந்நதிக்குச் சென்ற அவர், “கல்வி கரையில என்பார்கள்! இன்னும் பல நூல்களைப் படிக்க வேண்டும்,
இன்னும் பல நூல்களைப் படைக்க வேண்டும் என்றெல்லாம் நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்.
ஆனால் எனது பார்வை மங்கிக் கொண்டே போகிறதே! நான் குருடனாகி விட்டால், இனி என்னால்
முன்னோர்களின் நூல்களையும் படிக்க முடியாது, புதிய நூல்களையும் எழுத முடியாது!
என் பார்வையைப் பறித்துக் கொள்வதற்குப் பதில் நீ என் உயிரையே பறித்துக்கொள்ளலாமே!” என்று புலம்பினார்.

“ஜய துக்தாப்தி தனயே! ஜய சார்ங்கதர ப்ரியே!
ஜய காருண்ய ஸுரபே! ஜய லாவண்ய வாரிதே!”

எனத் தொடங்கும் ‘கோமளா தண்டகம்’ என்ற துதியை இயற்றி, அதைக் கோமளவல்லித் தாயார் முன் விண்ணப்பித்தார்.
அன்று இரவு அவரது கனவில் காட்சியளித்த கோமளவல்லித் தாயார், “நாளை பெரிய திருமஞ்சனத்தின் போது,
நானும் பெருமாளும் கவசம் களைந்த நிலையில் சேர்த்தியில் காட்சி தருவோம். அப்போது எங்களை வந்து தரிசனம் செய்!” என்று கூறினாள்.
அவ்வாறே அடுத்த நாள் மாலை கோயிலுக்குச் சென்ற வரத வேதாந்தாச்சார்யார்,
பெரிய திருமஞ்சனத்துக்காகக் கவசம் களையப்பட்ட நிலையில், சேர்த்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் – தாயாரைத் தரிசித்தார்.
அவர்களின் திருமேனி ஒளியைத் தரிசித்த மாத்திரத்தில் வரத வேதாந்தாச்சார்யாரின் பார்வை பிரகாசமடையத் தொடங்கியது.
அடுத்த சில நாட்களில் மீண்டும் தமது பழைய பார்வையைப் பெற்றார். அதன்பின் பல நூல்களைத் தொடர்ந்து இயற்றி வந்தார்.

தமது 76-வது வயதில் சந்நியாசம் மேற்கொண்ட வரத வேதாந்தாச்சார்யார், காடந்தேதி ஆண்டவன் என்ற பெயருடன்
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் பீடாதிபதியாகத் திகழ்ந்தார்.
அவரை மிகச்சிறந்த சந்நியாசி என்றும் பரமஹம்ஸர் என்றும் அடியார்கள் போற்றினார்கள்.
அவர் யாத்திரையாகக் கும்பகோணத்துக்கு வந்தபோது, கோமளவல்லித் தாயாரைத் தரிசித்தார்.
அப்போது தாயாரிடம், “அன்று நீ சொன்னபடி உன்னையும் உன் கேள்வனான சாரங்கபாணியையும் கவசம் களைந்த நிலையில் தரிசித்தேன்.

உங்களது திருமேனி ஒளி, எனது புறக்கண்ணைத் திறந்ததோடு மட்டுமின்றி, அகக்கண்ணாகிய ஞானக் கண்ணையும் திறந்து விட்டது!
அதனால் தான் பெரியாண்டவன் போன்ற மகான்கள் அலங்கரித்த பீடத்தில் இன்று நான் அமரும் பேறு கிட்டியது!
அன்று ஹம்ஸமாக (அன்னமாக) அவதரித்த பெருமாள், இன்று என்னைப் பரமஹம்ஸராக ஆக்கி விட்டார்!” என்று நன்றி தெரிவித்தார்.
ஹம்ஸமாக அவதரித்த திருமாலின் திருமேனி ஒளி, அடியார்களின் புறக்கண்களை மட்டுமின்றி அகக்கண்களையும் திறந்து,
அவர்களைப் பரமஹம்ஸ நிலைக்கு உயர்த்துகிறது.
‘மரீசி:’ என்றால் ஒளி தருபவர் என்று பொருள்.
புறக்கண், அகக்கண் இரண்டுக்கும் ஒளிதருவதால் ஹம்ஸாவதாரம் செய்த திருமால் ‘மரீசி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 191-வது திருநாமம்.
“மரீசயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல கண் பார்வையைத் திருமால் அருள்வார்.

——————-

192. தமனாய நமஹ (Dhamanaaya namaha)

பாற்கடலைக் கடைகையில் முதலில் ஆலஹால விஷம் உண்டானது. அந்த விஷத்தின் வாடை பட்ட அளவிலே
சில தேவர்களும், அசுரர்களும் மயங்கி விழுந்தார்கள். வேறு சில தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதைக் கண்ட மற்ற தேவர்கள், திருமாலிடம் வந்து ஆலஹால விஷத்திலிருந்து தங்களைக் காக்கும் படி வேண்டினார்கள்.
“இந்த விஷத்தின் பிடியில் இருந்து பரமசிவன் உங்களைக் காப்பார். அவரது உதவியை நாடுங்கள்!” என்றார் திருமால்.
தேவர்கள் அனைவரும் கைலாசத்துக்குச் சென்று சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு பிரார்த்தித்தார்கள்.

அவர்களைக் காக்கும் பொருட்டு, ஆலஹால விஷத்தைப் பருகினார் பரமசிவன்.
ஆனால் அந்த விஷத்தின் வீரியம் சிவனைத்தாக்கத் தொடங்கியது. அவரது உடல் வெப்பமயமானது.
அதைச் சமாளிக்க வழி தெரியாமல் தவித்தார். அப்போது சில சிவ கணங்கள் அவரிடம்,
“முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்கிறார்கள் அல்லவா? அது போல் விஷத்தை விஷத்தால் தான் முறிக்க வேண்டும்!” என்றார்கள்.
அவர்களிடம் “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் பரமசிவன்.
“ஆம்! உங்கள் கழுத்துக்கு ஆபரணமாகப் பாம்பை அணிந்திருக்கிறீர்களே! அப்பாம்பை விட்டு உங்களைக் கடிக்கச் சொல்லுங்கள்.
பாம்பு விஷம் உங்கள் உடலில் ஏறியவாறே, ஆலஹால விஷத்தின் வீரியத்தை அது முறித்து விடும்!” என்று சொன்னார்கள் சிவகணங்கள்.

அவர்களின் அறிவுரைப்படித் தன் கழுத்திலுள்ள பாம்பிடம் தன்னைக் கடிக்கும்படிக் கட்டளையிட்டார் பரமசிவன்.
பாம்பும் அவ்வாறே செய்தது. ஆனால் ஆலஹால விஷத்தின் வீரியம் குறையவில்லை.
மாறாக, பாம்பின் விஷமும் ஆலஹால விஷத்தோடு இணைந்து வேதனையை அதிகமாக்கி விட்டது.
மேலும் துன்பப்பட்டார் பரமசிவன். இதற்கென்ன தீர்வு என்று புரியாமல் பாற்கடலின் கரை ஓரமாக ஓடினார் பரமசிவன்.
அப்போது அங்கே தேவர்கள் அமுதத்தைச் சேகரித்து வைத்திருந்த ஒரு குடத்தைக் கண்டார்.
அந்தக் குடத்தினுள் தேவாமிர்தம் இருந்தது. அது மட்டுமின்றி, அக்குடத்தின் மூக்கில் மற்றொரு அமுதமும் இருப்பதை உணர்ந்தார் பரமசிவன்.
தேவாமிர்தம் அளவுக்கு அதிகமாக உண்டால் திகட்டும். ஆனால் குட மூக்கில் இருந்த அமுதமோ அள்ள அள்ளக் குறையாத,
அருந்த அருந்தத் திகட்டாத ஆராத அமுதமாக இருந்தது.

(இங்கே குடமூக்கு என்பது கும்பகோண க்ஷேத்திரத்தைக் குறிக்கிறது. கும்பம் என்றால் குடம், கோணம் என்றால் மூக்கு.
கும்பகோணம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கமே குடமூக்கு. அந்தக் குடமூக்கில் உள்ள அமுதம் யாதெனில்,
கும்பகோணத்தில் ஆராவமுதன் என்ற திருநாமத்தோடு திகழும் சார்ங்கபாணிப் பெருமாள்.)
குடத்தைக் கையில் எடுத்த பரமசிவன், குடமூக்கில் உள்ள ஆராவமுதைப் பருகினார். வாயால் பருகவில்லை, கண்களால் பருகினார்.
(ஆராவமுதப் பெருமாளின் அழகு தான் அந்த ஆராவமுதம். அது கண்களால் பருக வேண்டிய அமுதம் அல்லவா?
ஆராவமுதனைத் தரிசித்து அவனது அழகை ரசித்தார் என்பது தாத்பர்யம்.)
அந்த ஆராவமுதைப் பருகிய அளவிலே, விஷத்தினால் உண்டான வேதனை தீர்ந்தது.

கும்பத்தில் உள்ள அமுதைப் பருகியபடியால், ‘கும்பேஸ்வரர்’ என்று பெயர் பெற்ற சிவபெருமான்,
கும்பகோணத்தில் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் கோயிலின் பின்புறத்தில், திருமாலின் பின்னழகாகிய அமுதைப் பருகிய படி
இன்றும் கோயில் கொண்டுள்ளார். இவ்வாறு ஆலஹால விஷத்தால் சிவனுக்கு ஏற்பட்ட வெப்பத்தைத்
தன் அழகாகிய அமுதால் திருமால் தணித்த வரலாற்றை வில்லூர் ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் ஒரு சுலோகத்தில் பாடியுள்ளார்:

பீத்வா ஹந்த விஷம் பயோதி குஹராத் ஜாதம் புராரி: புரா
நாகை: ஆபரணை: ச ஸம்வ்ருத: தனு: தப்தோ நிதாந்தம் தத: |
பர்யாப்த்யா விதுரம் பிபன் இஹ த்ருசா கும்பஸ்ய கோணே அம்ருதம்
கும்பம் ஸ்வீயமிதீய ஸம்ப்ரகதயன் கும்பேச்வர: வர்ததே ||

இவ்வாறு வெப்பத்தைத் தணிப்பவராக ஸ்ரீ சார்ங்கபாணி திகழ்வதால், திருமங்கையாழ்வாரும்
“தண்குடந்தைக் கிடந்த மால்” என்று பாடினார். இங்கே ‘தண்’ என்ற அடைமொழி திருமாலின் குளிர்விக்கும் தன்மையைச் சொல்கிறது.
அவ்வாறே தேவர்களும் முனிவர்களும் அறியாமை என்னும் வெப்பத்தால் தவித்தபோது, ஸ்ரீ ஹம்ஸாவதாரம் எடுத்தார் திருமால்.
அந்த அன்னத்தின் திருமேனி ஒளி, அவர்களின் அறியாமை என்னும் வெப்பத்தைப் போக்கி அவர்களைக் குளிர்வித்தது.
இப்படி வெப்பத்தைத் தணித்துக் குளிர்விக்கும் இயல்புடையவராகத் திருமால் திகழ்வதால்,
‘தமன:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 192-வது திருநாமம்.
“தமனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எப்போதும் வாழ்வில் குளிர்ந்த
மனத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழத் திருமால் அருள்புரிவார்.

—————–

193. ஹம்ஸாய நமஹ (Hamsaaya namaha)

இரண்டு நண்பர்கள் ஓர் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். அங்கே ஓர் அன்னப் பறவை மிகவும் வருத்தத்தோடு அமர்ந்திருந்தது.
அதைக் கண்ட அவ்விரண்டு நண்பர்களுக்கும் இடையே ஓர் உரையாடல் நடைபெற்றது.
முதல் நண்பர்: பொதுவாக அன்னப் பறவை தாமரையிலுள்ள தேனை நன்கு பருகிவிட்டு, பெண்களைப் போலவே ஆனந்தமாக
நடைபழகிக் கொண்டிருக்கும். ஆனால் இங்கே ஓர் அன்னப் பறவை அவ்வாறு செய்யாமல் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறதே!
என்ன காரணமாக இருக்கும்?
இரண்டாம் நண்பர்: அன்னப் பறவை தனது சக்தியை இழந்து விட்டது! அதனால் தான் சோர்ந்து போய்விட்டது!
முதல் நண்பர்: என்ன சக்தி?இரண்டாம் நண்பர்: அது தான் பிரம்மா அன்னத்துக்கு வரமாக அளித்த சக்தி.
அன்னப் பறவை பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாகனமாக இருப்பதால், பிரம்மா அன்னத்தின் நாவுக்கு ஒரு சக்தியை அளித்தார்.
பால், தண்ணீர் இரண்டையும் கலந்து வைத்தால், அன்னம் தண்ணீரை விலக்கி விட்டுப் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும்!
அந்தச் சக்தியை இப்போது அன்னம் இழந்துவிட்டது!முதல் நண்பர்: பிரம்மா தந்த வரம் பொய்த்து விட்டதா? ஏன் பொய்த்தது?
இரண்டாம் நண்பர்: ஹம்ஸம் தன் சக்தியை இழந்தமைக்கு ராமாநுஜர் என்ற பரமஹம்ஸர் தான் காரணம்!
ராமாநுஜர் பூமியில் அவதாரம் செய்து, வேதத்தின் சரியான பொருளை அனைத்து மக்களுக்கும் காட்டிக் கொடுத்தாரல்லவா?
அதனால் ராமாநுஜரின் புகழ் உலகெல்லாம் பரவியது. புகழின் நிறம் வெண்மை.
ராமாநுஜரின் புகழின் வெண்மை அனைத்திடங்களிலும் பரவியதால், உலகமே வெளுத்து விட்டது.
அவ்வாறே தண்ணீரும் பால் போல் வெளுத்து விட்டது.
இப்போது தண்ணீர், பால் இரண்டுமே வெளுத்திருப்பதால், தண்ணீர் எது, பால் எது எனப் பிரிக்க முடியாமல்,
தனது சக்தியை இழந்து அன்னப் பறவை வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறது. இத்தகைய ராமாநுஜரின் புகழ் என்றும் ஓங்கி வளரட்டும்!
இந்த உரையாடலை ஒரு பாடலின் வடிவில் வேதாந்த தேசிகன் அமிருதாஸ்வாதினீயில் பாடியுள்ளார்

“அலர்ந்த அம்புயத்து இருந்து தேன் அருந்தி இன்னகல்
அல்குலார் அசைந்து அடைந்த நடைகொளாதது அனம் எனோ?”
“நலம் தவிர்ந்ததால்!” “அது என் கொல்?” “நாவின் வீறு இழந்ததால்!”
“நா வணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்தது என்?”
“சலம் தவிர்ந்து வாது செய்து சாடி மூண்ட மிண்டரைச்
சரிவிலேன் எனக்கனைத்து உரைத்த ஏதிராசர் தம்
வலம் தரும் கை நாயனார் வளைக்கிசைந்த கீர்த்தியால்
வாரி பால் அதாமதென்று மாசில் வாழி வாழியே!”

ஹம்ஸப் பறவை சாரமில்லாத தண்ணீரை விலக்கி விட்டுச் சாரமான பாலை மட்டும் எடுத்துக் கொள்வது போல,
சிறந்த சந்யாசிகள் சாரமில்லாத உலக விஷயங்களை விடுத்துச் சாரமான இறைவனையே தங்கள் நெஞ்சில் கொள்வதால்
பரம ஹம்ஸர்கள் என்று போற்றப்படுகிறார்கள். அத்தகைய பண்பால் அன்னப் பறவையை ராமாநுஜர் வென்று விட்டார் என்பதையே
தேசிகன் கவிநயத்துடன் இப்பாடலில் குறிப்பால் உணர்த்துகிறார்.
இப்படிப்பட்ட பரமஹம்ஸ சந்யாசியான ராமாநுஜர் முதன்முதலில் திருவரங்கத்துக்கு வந்த போது, “வாரும் பரமஹம்ஸரே!”, என்று
அவரை வரவேற்றார் திருவரங்கநாதன். மேலும், “நான் அன்னமாக அவதாரம் செய்த ‘ஹம்ஸன்’.
நீங்களோ என்னையே மிஞ்சிய ‘பரமஹம்ஸர்’!” என்றார் திருமால்.

ராமாநுஜரோ, “இல்லை இல்லை! அடியேனைப் பரமஹம்ஸனாக ஆக்கியவனே நீயல்லவோ?
‘ஹம்ஸ:’ என்றால் அன்னம் என்று மட்டும் பொருளில்லை, தேவையில்லாத பந்தங்களை வெட்டி விடுபவர் என்றும் பொருளுண்டு.
எனது தேவையில்லாத பந்தங்களை வெட்டிவிட்டு என்னை உன் திருவடிகளில் சேர்த்துக் கொண்ட நீதான் உண்மையான ஹம்ஸன்.
ஹம்ஸனும் நீயே! பரமஹம்ஸனும் நீயே!” என்றார்.
‘ஹந்தா ஸங்கஸ்ய ஹம்ஸ:’ என்கிறது வடமொழி நிகண்டு.
அடியார்களுக்கு இருக்கும் தேவையில்லாத பந்தங்களை விலக்கித் தன் திருவடிகளில் அவர்களை இணைத்துக் கொள்வதால்
திருமால் ‘ஹம்ஸ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 193-வது திருநாமம்.
“ஹம்ஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு இருக்கும் தேவையற்ற தளைகளைத் திருமால் விலக்கி,
தூய பக்தியை வளர்த்தருள்வார்.

—————

194. ஸுபர்ணாய நமஹ (Suparnaayanamaha)

கருடனின் தாயான வினதையை, அவளது தமக்கையான கத்ரு சிறை வைத்திருந்தாள். வினதையை விடுவிக்க வேண்டுமென்றால்,
தேவ லோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வந்து தரவேண்டும் என்று கத்ருவும் அவளது பிள்ளைகளும் நிபந்தனை விதித்தார்கள்.
தேவாமுதத்தைக் கொண்டு வந்து தன் தாயை மீட்பதற்காக, தேவலோகத்தை நோக்கி வேகமாகப் பறந்தார் கருடன்.
கருடன் அமிர்த கலசம் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட தேவர்கள், அவருடன் போர் புரிய வந்தார்கள்.
வரிசையாக ஆயிரம் தேவர்கள் கருடனை வழிமறித்து நின்று கொண்டார்கள்.

அவர்களுள் அக்னி பகவான், கருடன் மேல் தீயை உமிழ்ந்தார். அது நெருப்புச் சுவராக உருவானது.
“இந்த வெப்பம் மிக்க நெருப்புச் சுவரை முடிந்தால் தாண்டிப் பார்!” என்றார் அக்னி. கருடன் தனது சிறகுகளை வேகமாக அசைத்தார்.
அதிலிருந்து கிளம்பிய காற்று அந்த நெருப்பை முழுமையாக அணைத்து விட்டது. அக்னி பகவான் செய்வதறியாமல் திகைத்துப்போனார்.
கருடனின் சிறகுகள் எழுப்பிய காற்று, புழுதியைக் கிளப்பவே, அது தேவர்களின் பார்வையை மறைத்து விட்டது.
போர் புரிய முடியாமல் தேவர்கள் திணறினார்கள். வாயு பகவான் அந்தக் காற்றை அப்படியே விழுங்கினார்.

மீண்டும் போர் தொடர்ந்தது.பேருருவம் எடுத்த கருடன், நூற்றுக் கணக்கான தேவர்களைத் தமது அலகால்
கொத்திக் கொத்தித் தூக்கி வீசி ஏறிந்தார். அத்தனை தேவர்களையும் வீழ்த்தி விட்டு அமுதம் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
அப்போது பெரும் நெருப்பு அவரைத் தடுத்தது. அந்தத் தீயின் வெப்பம் கருடனின் உடலில் மிகுந்த வலியை உண்டாக்கியது.
பூமிக்குப் பறந்து வந்த கருடன், பல நதிகளிலிருந்து நீரை மொண்டு சென்று அத்தீயை அணைத்தார்.

அடுத்தபடியாக, இரண்டு பெரிய இரும்புச் சக்கரங்கள் சுற்றிக் கொண்டிருந்தன. அவற்றிலுள்ள கூர்மையான பற்கள்
அதன் வழியாகச் செல்பவரின் உடலைத் துளைத்துவிடும். அதைக் கண்டு அஞ்சாத கருடன், சிறிய வடிவம் எடுத்துக்கொண்டு
சக்கரங்களுக்கு இடையே சென்று உள்ளே நுழைந்தார்.அங்கே காவலுக்கு இரண்டு பாம்புகள் இருந்தன.
அவற்றைத் தனது அலகால் கொத்திப் பொடிப் பொடி ஆக்கினார். அமிர்த கலசத்தைக் கையில் எடுத்துக் கொண்டதும்
பேருருவம் கொண்டார் கருடன். இரும்புச் சக்கரங்கள் மேல் மோதி அவற்றைத் தூள் தூளாக்கி விட்டு வெளியே வந்தார்.
தன் தாயை மீட்கும் ஆவலுடன் கத்ருவின் இருப்பிடத்தை நோக்கிப் பறந்த கருடனைத் தேவேந்திரன் தடுத்தான்.

“எங்கள் தேவலோகத்துக்கே வந்து அமுதத்தைத் திருடிக் கொண்டு அவ்வளவு எளிதில் தப்பிச் சென்று விடுவாயா?” என்று சொன்ன இந்திரன்,
தனது வஜ்ராயுதத்தால் கருடனைத் தாக்கினான். அப்போது தனது இரண்டு இறகுகளை மட்டும் உதிர்த்து விட்டுக் கருடன் பறந்து சென்றார்.
செல்லும் போது, “இந்திரா! உனது வஜ்ராயுதத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் இந்த வஜ்ராயுதம் ததீசி என்னும் முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
அந்த முனிவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு இறகுகளை மட்டும் உதிர்த்தேன்!” என்று சொல்லி விட்டுச் சென்றார் கருடன்.

ததீசி முனிவரின் மேல் கருடன் வைத்திருந்த மரியாதையைக் கண்ட மற்ற முனிவர்கள், ‘ஸுபர்ணன்’ என்று கருடனைப் போற்றினார்கள்.
ஸுபர்ணன் என்றால் அழகிய இறகுகளை உடையவன் என்று பொருள். அருகிலிருந்த சில முனிவர்கள்,
“ஸுந்தர பர்ணன் அல்லது சோபன பர்ணன் என்றாலும் அழகிய இறகுகளை உடையவன் என்று தானே பொருள்?
ஸுபர்ணன் என்று தான் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அம்முனிவர்கள், “திருமால் அன்னமாக அவதரித்த போது, தனது சிறகொலியாலேயே வேதப் பொருளை நமக்கு விளக்கினார்.
அதனால் அவருக்கு ஸுபர்ணன் என்ற திருநாமம் ஏற்பட்டது.
ஸுபர்ணனாகிய ஹம்ஸாவதாரப் பெருமாளின் அருளால் தான் வேத சொரூபியாகவும், பற்பல சக்திகள் பொருந்தியவராகவும் கருடன் திகழ்கிறார்.
எனவே அவரது பெயரையிட்டுக் கருடனை அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்!” என்றார்கள்.
‘பர்ண:’ என்றால் இறகு என்று பொருள். ‘ஸுபர்ண:’ என்றால் அழகிய இறகுகளை உடையவர் என்று பொருள்.
வேத ஒலிகளைத் தன்னகத்தே உடைய அழகிய இறகுகளைக் கொண்டமையால், ஹம்ஸாவதாரத்தில்
திருமால் ‘ஸுபர்ண:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 194-வது திருநாமம்.
“ஸுபர்ணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வேதத்தின் உட்பொருளைத் திருமால் உணர்த்தி அருள்வார்.

————————-

195. புஜகோத்தமாய நமஹ (Bhujagothamaaya namaha)

(195-வது திருநாமமான ‘புஜகோத்தம:’ முதல், 199-வது திருநாமமான ‘ப்ரஜாபதி:’ வரையுள்ள 5 திருநாமங்கள்
ஆதிசேஷன் மேல் திருமால் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலமான ‘பத்மநாப’ ரூபத்தை விளக்கவந்தவை.)
பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மேல் சயனித்திருந்தார். அப்போது மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் திருமாலை
எதிர்த்துப் போர் புரிவதற்காக வந்தார்கள். ஆனால் உறங்கிக் கொண்டிருந்த திருமால் அவர்களை வருவதைக் கவனிக்கவில்லை.
எனினும் திருமாலின் படுக்கையாய்த் திகழும் ஆதிசேஷன், அந்த அசுரர்கள் வருவதைக் கண்டார்.
திருமாலை எழுப்பி, அசுரர்களின் வரவைச் சொல்லி எச்சரிக்க நினைத்தார். ஆனாலும் திருமாலின் தூக்கத்துக்கு இடையூறு செய்ய
அவருக்கு மனம் வரவில்லை. என்ன செய்வது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அதற்குள், மதுவும் கைடபனும் திருமாலை நெருங்கி விட்டார்கள். எனவே ஆதிசேஷன் தன் வாயிலிருந்து நெருப்பை உமிழ்ந்து
மதுவையும் கைடபனையும் எரித்து விட்டார். இருவரும் கருகிச் சாம்பலானார்கள்.இருவரையும் எரித்தபின் ஆதிதேஷன் சிந்தித்துப் பார்த்தார்.
“திருமால் நமக்குத் தலைவர். நாம் அவருக்குத் தொண்டன். அவ்வாறிருக்க, தலைவரின் அனுமதியில்லாமல் தொண்டன் ஒரு செயலைச் செய்யலாமா?
திருமாலின் உத்தரவைப் பெற்றுக் கொண்டல்லவா இந்த இரு அசுரர்களையும் நாம் கொன்றிருக்க வேண்டும்?” என்று கருதினார்.
தனது செயலை எண்ணி வருந்திய ஆதிசேஷன் வெட்கத்தால் தலை குனிந்தார்.

சிறிது நேரம் கழித்துக் கண் விழித்த திருமால், தலைகுனிந்திருக்கும் ஆதிசேஷனைப் பார்த்து,
“உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிகிறதே! என்ன ஆயிற்று?” என்று கேட்டார். ஆதிசேஷன் நடந்தவற்றைத் திருமாலிடம் விளக்கினார்.
“உங்களது தொண்டனான அடியேன், உங்களிடம் அனுமதி பெறாமலேயே இங்கு வந்த இரண்டு அசுரர்களை எரித்தது தவறல்லவா?
நீங்கள் அவர்களுக்கு ஒரு தண்டனையை விதித்தால், அதை நான் நிறைவேற்றலாம்.
ஆனால் நானே தண்டனையைத் தீர்மானிக்கக் கூடாதல்லவா?” என்று பணிவுடன் கூறினார்.

“நீ செய்ததில் எந்தத் தவறும் இல்லை! நான் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அனைத்து உயிர்களும் எனக்குத் தொண்டர்கள்.
தலைவனுக்கு மேன்மை சேர்ப்பதும், தலைவனுக்கு ஆபத்து வருகையில் காப்பதும் தானே ஒரு தொண்டனின் கடமை?
அதைத் தான் நீ செய்திருக்கிறாய்! எனவே நீ எனக்குத் தொண்டு செய்ததை எண்ணி மகிழ வேண்டுமே தவிர வருந்தக்கூடாது!” என்று
திருமால் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்து, திருமால் முன் தலையைச் சாய்த்து வணங்கினார் ஆதிசேஷன்.

இன்றும் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமெய்யம் (திருமயம்) திவ்ய தேசத்தில் இக்காட்சியைக் காணலாம்.
ஆதிசேஷன், தன் மேல் சயனித்திருக்கும் சத்தியமூர்த்திப் பெருமாளை நோக்கித் தனது தலைகளைத் தாழ்த்திக் கொண்டு பணிவுடன் விளங்குவார்.
வடமொழியில் சேஷன் என்றால் தலைவனுக்கு மேன்மை சேர்ப்பதற்காகவே வாழும் தொண்டன் என்று பொருள்.
அத்தகைய தொண்டராக ஆதிசேஷன் எப்போதும் விளங்குவதால் தான் அவர் ஆதி “சேஷன்” என்று அழைக்கப்படுகிறார்.

“சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்நின்றால் மரவடியாம் நீள்கடலுள் –
என்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்அணையாம் திருமாற்கு அரவு”என்ற பாசுரத்துக்கேற்ப
அனைத்து விதமான தொண்டுகளையும் ஆதிசேஷன் திருமாலுக்குச் செய்கிறார்.
‘புஜக:’ என்றால் பாம்பு என்று பொருள். ‘உத்தம:’ என்றால் தலைவர் என்று பொருள்.
ஆதிசேஷனாகிய புஜகனுக்குத் தலைவராக விளங்கி, அவர் மேலே எப்போதும் சயனித்திருப்பதால்,
திருமால் ‘புஜகோத்தம:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 195-வது திருநாமம்.
ஆதிசேஷன் அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் பிரதிநிதி. ஆதிசேஷனைப் போல் ஒவ்வொரு ஜீவாத்மாவும் திருமாலுக்கு
சேஷபூதர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
“புஜகோத்தமாய நமஹ” என்று தினமும் நாம் சொல்லி வந்தால், திருமாலுக்கும் நமக்கும் உள்ள சேஷ-சேஷி உறவை
நன்கு உணரும்படித் திருமால் அருள்புரிவார்.(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

———–

196. ஹிரண்யநாபாய நமஹ-(Hiranyanaabhaaya namaha)

(195-வது திருநாமமான ‘புஜகோத்தம:’ என்பதிலிருந்து 199-வது திருநாமமான ‘ப்ரஜாபதி:’ வரையிலான 5 திருநாமங்கள்,
திருமால் ஆதிசேஷனில் சயனத்திருக்கும் வடிவமாகிய பத்மநாப ரூபத்தின் பெருமைகளைச் சொல்கின்றன.)
மார்க்கண்டேய முனிவர் திருமாலைக் காண விரும்பிப் பல யுகங்களாகத் தவம் புரிந்தார்.
அவரது தவத்தைக் கலைக்க மன்மதன் எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. அத்தகைய திடமான தவத்தை மேற்கொண்ட
மார்க்கண்டேயருக்கு நர-நாராயணர் வடிவில் காட்சியளித்த திருமால், “மார்க்கண்டேயா! உன் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

“உன்னைத் தரிசனம் செய்ததே யான் பெற்ற பெரும் பேறு! இதற்கு மேல் வேறு எந்த வரத்தையும் நான் விரும்பவில்லை.
எனினும் நீயாக வரம் தர விரும்பி முன்வருவதால், ஒரு வரம் கேட்கிறேன்!” என்று சொன்ன மார்க்கண்டேயர்,
“உன்னை எல்லோரும் காக்கும் தெய்வம் என்று போற்றுகிறார்களே! உன் காக்கும் சக்தி எத்தகையது,
நீ எப்படி உயிர்களைக் காக்கிறாய் என்பதை அடியேனுக்கு நீ காட்டியருள வேண்டும்!” என்று வேண்டினார்.
“காலம் வரும் போது காட்டுகிறேன்!” என்று சொல்லி விட்டுத் திருமால் மறைந்தார்.

பல யுகங்கள் கடந்தன. திடீரென ஒரு நாள் ஊழிக் காலத்து வெள்ளம் வந்து உலகையே சூழ்ந்து கொண்டது.
அந்த வெள்ளத்தில் சிக்கி மார்க்கண்டேயர் தத்தளித்தார்.
அப்போது ஓர் ஆல மர இலை அந்த வெள்ளத்தில் மிதந்து வருவதைக் கண்டார் மார்க்கண்டேயர்.
அந்த இலையில் ஒரு சிறுவன் சயனித்திருந்தான். அவன் தனது கைகளால் தனது வலக்கால் கட்டை விரலை எடுத்துத்
தன் வாயில் வைத்தபடி மார்க்கண்டேயரைப் பார்த்துச் சிரித்தான். அச்சிறுவனின் மூச்சுக்காற்று மார்க்கண்டேயரை வேகமாக இழுக்க,
அவர் அந்தச் சிறுவனுக்குள் சென்று விட்டார். சிறுவனுக்குள் சென்ற அவர், ஏழு தீவுகள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் என அனைத்து
உலகுகளும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் இருப்பதைக் கண்டார்.
சிறுவன் மூச்சை வெளியே விட்ட போது மார்க்கண்டேயர் வெளியே வந்து விழுந்தார்.
“யார் இந்த மாயச் சிறுவன்?” என்று சிந்தித்தபடி அவனை உற்று நோக்கினார் மார்க்கண்டேயர்.

“காலம் வரும் போது என் காக்கும் திறனை உனக்குக் காட்டுகிறேன்!” என்று சொன்ன திருமால் தான் இப்போது
ஆலிலைக் கண்ணனாகத் தனக்குத் தரிசனம் தந்துள்ளார் என உணர்ந்து, “அனைத்து உலகுகளையும் ஆள்பவனான உனது
சக்தியெனும் சமுத்திரத்தில் ஒரு துளியைக் கண்டதற்கே நான் மலைத்துப் போய்விட்டேன்!” என்று சொல்லி வியந்து
திருமாலைத் துதித்தார் மார்க்கண்டேயர். மேலும், “காக்கும் சக்தியைக் காட்டுவதாகச் சொல்லிவிட்டு நீ
உனது அழிக்கும் சக்தியை அல்லவோ காட்டிக் கொண்டிருக்கிறாய்! காணும் இடமெல்லாம் வெறும் ஊழிக் கடலாகவே உள்ளதே.
உலகை எல்லாம் நீ அழித்து விட்டாயா?” என்று கண்ணனிடம் கேட்டார் மார்க்கண்டேயர்.

அதற்குக் கண்ணன், “மார்க்கண்டேயரே! இப்போது நான் செய்த செயல் சம்ஹாரம் அல்ல. ஊழிக் கடலில் இருந்து அனைத்து
உயிர்களையும் காக்கும் எண்ணத்தில் அனைத்து உலகுகளையும் உயிர்களையும் உண்டேன். இந்திரன், யமன், பிரம்மா உட்பட
அனைவருமே இப்போது என் வயிற்றினுள்தான் இருக்கிறார்கள். ஊழிக் காலம் முடியும் வரை அவர்களை எனது வயிற்றுக்குள்
வைத்துக் காப்பேன். மீண்டும் படைப்புக் காலம் வருகையில், எனது உந்தியில் இருந்து ஒரு தாமரை தோன்றும்.
அதில் பிரம்மாவை முதலில் படைப்பேன். அதன் பின், என் வயிற்றுக்குள் நான் வைத்துப் பாதுகாக்கும் உயிர்கள்
ஒவ்வொருவருக்கும் பிரம்மாவின் மூலம் மீண்டும் பிறவி தருவேன். இவ்வாறு சிருஷ்டி-சம்ஹாரம் இரண்டுமே
சுழற்சி முறையில் தொடரும்!” என்று கூறினான்.

இதை நம்மாழ்வார்,

“காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த இந்திரன் திசைமுகன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே” – என்று பாடியுள்ளார்.

‘ஹிரண்ய’ என்றால் அழகிய என்று பொருள். அழகிய இவ்வுலகையும் இதில் வாழும் உயிர்களையும் ஊழிக் காலத்தில்
உள்ளே வைத்துக் காத்து, படைப்புக் காலத்தில் வெளியே தோற்றுவிக்கும் அழகிய நாபியை உடையவராகத்
திருமால் விளங்குவதால், ‘ஹிரண்யநாப:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 196-வது திருநாமம்.
“ஹிரண்யநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மார்க்கண்டேயரைப் போன்ற
இளமையையும் நீண்ட ஆயுளையும் திருமால் அருள்வார்.

————————

197. ஸுதபஸே நமஹ (Suthapase namaha)

ராமாநுஜர் திருவரங்கத்தில் வாழ்ந்த காலம். காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, “இவர் தான் நம் பெருமாள்” என்று சொன்னார்கள்.
அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள்.
தங்களுடைய விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும்
என்று கருதினார்கள் அச்சிறுவர்கள். அதனால், ஒருவன் அர்ச்சகரைப் போலவும், ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும்,
சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும், சிலர் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலவும்
பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள். அச்சிறுவர்களுள் ஒருவன், கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும்
ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான்.

கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்!” என்று ராமாநுஜரை முதல் மரியாதை
பெற்றுக் கொள்வதற்காக அழைப்பது வழக்கம். அதுபோல், இங்கேயும் அர்ச்சகர் வேடமணிந்திருந்த சிறுவன்,
ராமாநுஜர் வேடத்திலிருந்த சிறுவனைப் பார்த்து, “ஜீயரே வாரும்!” என்று அழைத்தான்.
ஆனால் தற்செயலாக அங்கே வந்த ராமாநுஜர், “ஜீயரே வாரும்!” என்ற குரலைக் கேட்டு, “அடியேன் தாசன்!” என்று
சொல்லிக் கொண்டு ஓடி வந்தார். “பகவத் பிரசாதம்!” என்று சொல்லி மண் உருண்டையை அந்தச் சிறுவன் ராமாநுஜரிடம் தந்தான்.
“யாம் பெறும் சம்மானம்!” என்று சொல்லிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மண் உருண்டைப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார் ராமாநுஜர்.
ராமாநுஜரின் சீடர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்துப் போனார்கள். “என்ன சுவாமி இது? மண் உருண்டையைப் போய்ப் பிரசாதம்
என்று சொல்லி வாங்கிக் கொள்கிறீர்களே!” என்று ராமாநுஜரிடம் கேட்டார்கள். “மண் உருண்டை என்று சொல்லாதீர்கள்.
இது பெருமாள் அமுது செய்த பிரசாதம்.
பெருமாளின் வாய்க்குச் செல்வதற்கு முன்னால் வாழைப் பழம், மாதுளம்பழம், திராட்சைப்பழம் எனப் பிரித்துச் சொல்லலாம்.
ஆனால் எப்போது அவரிடம் சென்று திரும்பி வந்து விட்டதோ, அதன்பிறகு அனைத்துமே பிரசாதம்தான். அதில் வேறுபாடில்லை.
இந்த மண் உருண்டையும் பிரசாதமே!” என்றார் ராமாநுஜர். சீடர்களோ, “சுவாமி! முதலில் அங்கு இருப்பவர் பெருமாளே இல்லை.
விளையாட்டுக் குழந்தைகள் ஒரு கல்லை வைத்து அதற்கு நிவேதனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்துக்கா நிவேதனம் செய்தார்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு ராமாநுஜர், “சீடர்களே! உங்களுக்குக் கீதை தெரியாதா?
“யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்” (என் பக்தர்கள் எந்த வடிவில் என்னை வழிபடுகிறார்களோ,
அந்த வடிவில் நான் வந்து அவர்களுக்கு அருள்புரிவேன்) என்று கண்ணன் கூறியுள்ளானே! நம் பொய்கையாழ்வார்,

“தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமர் உகந்தது எப்பேர் மற்றப்பேர் – தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியான் ஆம்”

என்று பாடியுள்ளாரே! அடியார்கள் எந்த வடிவில் பெருமாளை வழிபட விரும்புகிறார்களோ, அந்த வடிவில் அவர்களுக்கு
அவர் காட்சி தருகிறார் என்பதைக் கண்ணனும் ஆழ்வார்களும் இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கும் போது,
இந்தச் சிறுவர்கள் தங்கள் பிஞ்சு மனதில் பக்தியோடும், இந்தக் கல்லில் பெருமாள் உள்ளார் என்ற நம்பிக்கையோடும் பூஜை செய்கையில்,
அந்தக் கல்லில் பெருமாள் இருப்பாரா மாட்டாரா?” என்று சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.
“நிச்சயம் இருப்பார்!” என்று கூறினார்கள் சீடர்கள்.

“அப்படியானால் நீங்களும் சென்று பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சொன்னார் ராமாநுஜர்.
‘தபஸ்’ என்றால் சிந்தனை என்று பொருள். “தப ஆலோசனே” என்கிறது வடமொழி நிகண்டு.
அடியார்கள் தம் மனதில் சிந்திக்கும் வடிவம் எதுவோ, அச்சிந்தனையிலுள்ள வடிவையே தன் வடிவாகக் கொண்டு
திருமால் விளங்குவதால், ‘ஸுதபா:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 197-வது திருநாமம்.
“ஸுதபஸே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பிய நற்பலன்களை அவர்கள் விரும்பிய படி திருமால் அருள்வார்.

———————

198. பத்மநாபாய நமஹ (Padmanaabhaaya namaha)

திவாகரர் என்ற முனிவர் தினமும் திருமாலுக்குப் பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவர் முன்னே ஓர் அழகான சிறுவன் வந்து நின்றான்.
அவனைக் கண்ட அடுத்த நிமிடமே அவனது அழகில் மயங்கினார் திவாகர முனிவர். அந்தச் சிறுவன் யார் என்று கூட விசாரிக்காமல்,
“கண்ணா! எப்போதும் என்னோடேயே நீ இருப்பாயா?” என்று கேட்டார். அந்தச் சிறுவனோ, “நான் உங்களோடு வசிக்க வேண்டுமெனில்,
நான் என்ன செய்தாலும் நீங்கள் என் மீது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்!
நீங்கள் கோபப்பட்டால் அடுத்த நொடியே உங்களை விட்டுச் சென்று விடுவேன்!” என்று சொன்னான்.

திவாகர முனிவரும் சம்மதித்தார். சிறுவன் அன்று முதல் முனிவரின் ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினான்.
முனிவருக்கு அன்றாடம் பல தொல்லைகள் கொடுத்து வந்தான் சிறுவன். முனிவர் மீது ஏறி விளையாடுவதும்,
பூஜைக்குரிய பாத்திரங்களை நாசம் செய்வதும் சிறுவனின் தினசரி நடவடிக்கைகளாக இருந்தன.
ஆனால் முனிவர் அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்தார். ஒருநாள் முனிவர் பூஜை செய்யும் சாளக்கிராமத்தை எடுத்துத்
தன் வாயில் போட்டுக் கொண்டான் சிறுவன். அதைக் கண்டு வெகுண்ட முனிவர், “இனியும் உன் விஷமங்களை என்னால்
சகித்துக் கொள்ள முடியாது!” என்று சொல்லிச் சிறுவனைப் பிடித்துக் கீழே தள்ளினார்.
“நம் ஒப்பந்தத்தை நீங்கள் மீறியதால், இனி உங்களோடு நான் இருக்க மாட்டேன். என்னை நீங்கள் காண விரும்பினால்
அனந்தன் காட்டுக்கு வாருங்கள்!” என்று சொல்லி விட்டு மறைந்தான்.

இத்தனை நாட்கள் தன்னுடன் சிறுவன் வடிவில் இருந்தவன் மாயக் கண்ணன் என்பதை அப்போது தான் உணர்ந்தார் திவாகர முனிவர்.
உணவு உண்ணாமல், உறக்கமில்லாமல், கண்ணன் சொன்ன அனந்தன் காடு இருக்கும் இடத்தைத் தேடிப் பல நாட்கள் அலைந்தார்.
எத்தனையோ பேரிடம் விசாரித்தும் அனந்தன் காடு இருக்கும் இடத்தை அவரால் அறிய முடியவில்லை.
களைத்துப் போய் ஒரு மர நிழலில் அமர்ந்தார். அருகிலிருந்த குடிசையில் கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கணவன் மனைவியைப் பார்த்து, “நீ இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் உன்னை
அனந்தன் காட்டில் கொண்டு போய் விட்டு விடுவேன்!” என்று கூறினான். அதைக் கேட்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய முனிவர்,
அவனிடம் சென்று அனந்தன் காடு இருக்கும் இடத்தை விசாரித்தார். அவனும் வழி சொன்னான்.

கல்லும் முள்ளும் நிறைந்த அக்காட்டுப் பாதையில் கண்ணனைக் காணும் ஆவலுடன் பயணிக்கலானார் திவாகர முனிவர்.
இறுதியாக அனந்தன் காட்டை அடைந்தார். அங்கே கண்ணனையும் தரிசித்தார். ஆனால் முனிவரைக் கண்டவுடன் கண்ணன் ஓடத் தொடங்கினான்.
திவாகரரும் அவனைத் துரத்திச் சென்றார். ஓர் இலுப்பை மரத்துக்குள் சென்று கண்ணன் மறைந்தான். அந்த மரம் முறிந்து கீழே விழுந்தது.
அந்த மரம் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட திருமாலின் வடிவமாக மாறியது. எட்டு மைல் தூரம் நீண்ட திருமேனியோடு திருமால் காட்சியளித்தார்.
கேரளாவில் உள்ள திருவல்லம் எனும் ஊரில் அவரது தலையையும், திருவனந்தபுரத்தில் அவரது உடலையும்,
திருப்பாதபுரம் எனும் ஊரில் அவரது திருவடிகளையும் தரிசித்தார் முனிவர்.

“இத்தகைய பெரிய உருவத்துடன் இருக்கும் உன்னை அடியேனால் முழுமையாகத் தரிசிக்க முடியவில்லை.
எனக்காக உனது திருமேனியின் அளவைக் குறைத்துக் கொள்ள முடியுமா?” என்று வேண்டிய திவாகரர், தனது கையிலுள்ள
தண்டத்தைக் கீழே போட்டு, “இதன் நீளத்தில் மூன்று மடங்குக்கு மிகாமல் நீ வடிவம் எடுத்துக் கொள்ள வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார்.
திருமாலும் தனது வடிவைக் குறைத்துக் கொண்டு அவரது தண்டத்தின் மூன்று மடங்கு நீளத்துக்குட்பட்ட வடிவத்தோடு
திருவனந்தபுரத்தில் திவாகர முனிவருக்குக் காட்சியளித்தார்.

“முன்பு மூன்று வெவ்வேறு இடங்களுக்குச் சென்று எனது உடலின் மூன்று பகுதிகளைத் தரிசித்தீர்கள். அதை நினைவூட்டும் விதமாக,
இங்கே திருவனந்தபுரத்தில் மூன்று வாசல்கள் வழியாக என் உடலின் மூன்று பகுதிகளைத் தரிசிக்கலாம்!” என்று கூறினார் திருமால்.
அவரது உந்தியில் இருந்து பெரிய தாமரை மலர்ந்து வருவதைக் கண்டார் முனிவர். அத்தாமரையில் எட்டு இதழ்கள் இருந்தன.
அவற்றுள் ஒரு இதழ் பொன் நிறத்தில் இருந்தது. அதுதான் மேரு மலை என முனிவர் உணர்ந்து கொண்டார்.
‘பத்மம்’ என்றால் தாமரை என்று பொருள். தனது நாபியில் பத்மத்தைக் கொண்டவராகத் திருவனந்தபுரத்தில் திருமால் தரிசனம் தருவதால்,
அவருக்கு ‘பத்மநாப:’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 198-வது திருநாமம்.
“பத்மநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அனந்தபத்மநாப ஸ்வாமியின்
பரிபூர்ணமான அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

——————–

199. ப்ரஜாபதயே நமஹ (Prajaapathaye namaha)

திருமால் மோகினி அவதாரம் எடுத்த செய்தியைக் கேள்வியுற்ற பரமசிவன், பார்வதியை அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலுக்குச் சென்றார்.
அங்கே திருமாலிடம், “பாற்கடலில் இருந்து வந்த அமுதம் அசுரர்களுக்குக் கிட்டாமல், தேவர்களுக்குக் கிட்டும் பொருட்டு,
அசுரர்களை மயக்கும் மோகினியாக நீங்கள் பெண் வேடம் பூண்டதைக் கேள்வியுற்றேன். ஆனால் ஆலஹால விஷத்தை அருந்திவிட்டு
இளைப்பாறிக் கொண்டிருந்தமையால், என்னால் அப்போது வந்து உங்களது மோகினி அவதாரத்தைத் தரிசிக்க முடியவில்லை.
இப்போது எனக்காக இரண்டாவது முறையாக மோகினி அவதாரம் எடுக்க முடியுமா?” என்று கேட்டார் பரமசிவன்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றத் திருமால் மோகினியாகப் பரமசிவனுக்குக் காட்சியளித்தார்.
மோகினியைத் தரிசித்த மாத்திரத்தில் பரமசிவன் மோகினி மேல் காதல் கொண்டார். அப்போது பரமசிவனின் வீர்யம் கசிந்து அதிலிருந்து
ஐயப்பன் தோன்றினார். இந்தச் சம்பவத்திற்குப் பின் பரமசிவன் சிந்தித்துப் பார்த்தார்.
“திருமால் தான் புருஷோத்தமன் என்று போற்றப்படுபவர். மற்ற அனைத்து ஜீவாத்மாக்களும் பெண்களுக்குச் சமமானவர்களே.
இவ்வாறு இருக்க, புருஷோத்தமரான திருமாலைப் போய் நமக்கு நாயகியாக எண்ணி விட்டோமே.
இது பெரும் தவறாயிற்றே!” என்று அவர் உள்ளத்தில் தோன்றியது.

தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க எண்ணிய பரமசிவன், தமிழக-கேரள எல்லையிலுள்ள திருவட்டாறு என்னும் திவ்ய தேசத்துக்குச் சென்று,
அங்கு ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் ஆதிகேசவப் பெருமாளிடம் மன்னிப்பு கோரினார்.
‘க’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். ‘ஈச’ என்பது சிவனாகிய என்னைக் குறிக்கும்.
க, ஈச இருவருக்கும் தலைவனானபடியால், நீங்கள் ‘கேசவன்’ என்று அழைக்கப்படுகிறீர்கள்.
அத்தகைய கேசவனான உங்களை எனது நாயகியாக எண்ணியது தவறு!” என்றும் கூறினார்.

அதற்குத் திருமால், “இதில் எந்தத் தவறுமில்லை. என் பக்தர்கள் விரும்பும் போதெல்லாம் அவர்கள் விரும்பும் வடிவங்களை
நான் எடுத்துக் கொள்வேன். நீங்கள் என்னைப் பெண்வடிவில் காண விழைந்தபடியால் பெண்ணாகக் காட்சி தந்தேன்!” என்று கூறினார்.
(இன்றும் திருவட்டாறு திவ்ய தேசத்தில் ஆதிகேசவப் பெருமாளுக்கு அருகில் சிவபெருமான் இருப்பதைக் காணலாம்!)
மேலும், “அனந்தன் காட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் வருத்தம் அனைத்தும் தீரும்!” என்றார் திருமால்.

பரமசிவனும் அனந்தன் காடு என்றழைக்கப் படும் திருவனந்தபுரத்துக்குச் சென்றார். உலகைப் படைக்கும் பிரம்மாவைப் படைத்தவன்
தானே என்பதைத் தெளிவாக விளக்கும் விதமாகத் தனது உந்தித் தாமரையில் பிரம்மாவுடன் திகழும்
அனந்த பத்மநாப ஸ்வாமியைத் தரிசித்தார் பரமசிவன். பரமசிவனை அருகில் அழைத்து அவர் தலையில் கை வைத்து
ஆறுதல் கூறினார் திருமால். அதனால் சிவனின் வருத்தம் தீர்ந்தது.

இச்சம்பவத்தை நம்மாழ்வார்,

“அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர் அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே”

என்று பாடியுள்ளார். குமரன் என்பது முருகன், ஐயப்பன் இருவரையுமே குறிக்கும். ஐயப்பனின் தந்தையான சிவனின்
வருத்தத்தை போக்கிய கோவிந்தன் என்று பத்மநாபஸ்வாமியை மங்களாசாசனம் செய்கிறார் ஆழ்வார்.
இன்றும் அனந்தபத்மநாபஸ்வாமி தனது வலது திருக்கரத்தால் சிவலிங்கத்தை ஆதூரத்துடன் அரவணைப்பதைத் திருவனந்தபுரத்தில் காணலாம்.
இவ்வாறு பிரம்மா, சிவன், இந்திரன் போன்றோருக்கு முதல்வராக, அவர்கள் மனம் தளரும் சமயங்களில் அவர்களை
அரவணைக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதால் ‘ப்ரஜாபதி:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ப்ரஜா’ என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும். புல், பூண்டு, ஈ, எறும்பு தொடங்கி பிரம்மா வரையிலான
அனைத்துப் பிரஜைகளுக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதால் ‘ப்ரஜாபதி:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 199-வது திருநாமம்.
“ப்ரஜாபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தலைமைப் பண்புகள் நன்கு வளரும்படித்
திருமால் அருள்புரிவார்.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: