ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி எனும் அத்யயன உற்சவம் —— (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி எனும் அத்யயன உற்சவம்-(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)

இதற்கு ஏன் “அத்யயன உற்சவம்“ என்று பெயர் வந்தது..?

“அத்யயனம்“ என்றால் சொல்லுதல் என்று பொருள்..! “அனத்யயனம்“ என்றால் சொல்லாமலிருத்தல்..!
பாஞ்சராத்ர ஆகமம், பல உற்சவங்களை, அததற்குரிய காலத்தில் செய்யச் சொல்கின்றது..!
ஆகமம், தனுர் மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தொடங்கி வேதங்கள் ஓதி பகவானை வழிபடச் சொல்கின்றது.
இவ்விதம் செய்யப்படும் இந்த உற்சவத்திற்கு “மோக்ஷோத்ஸவம்“ என்று பெயர்.
அதில் மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று ஆரம்பித்து, பத்து நாட்கள், “வேத அத்யயனம்“ செய்யச் சொல்கின்றது..!
ஆகமத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பான உறசவம் இது..!
இது போன்று சயனத்திற்கு ஏன் ஊடல் குறித்துக் கூட ஒரு உற்சவத்தினைப் பரிந்துரைக்கின்றது..!
இந்த ஊடல் உற்சவம்தான் பங்குனி மாத பிருமமோற்சவத்தில் மட்டையடி உற்சவமாக நடைபெறுகின்றது..!
மார்கழி (தனுர்) மாதம் மிகச் சிறப்பு வாய்ந்தது. உத்ராயண புண்ய காலம் என்பது தேவர்களுக்கு ஒரு பகற் பொழுது..!
தேவர்களின் பகற் பொழுதின் விடியற்காலம் என்பது மார்கழி மாதம் ஆகும்..!
பகவான் கண்ணன் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி“ என்று சொல்கின்றான்..!

வைகுந்த வாசல் – வடக்குப்புறம் அமைந்திருப்பது ஏன்..?

“உத்ரம்“ என்ற வடமொழி சொல் வடக்குத் திக்கைக் குறிக்கும்.
இந்த “உத்ரம்“ என்ற பதத்திற்கு “ஸ்ரேஷ்டம்” (உன்னதமானது) என்ற பொருளுண்டு.
“உத்தராயண புண்ய காலம்” உன்னதமான காலம் என்றழைக்கப்படுகின்றது.
மிக உன்னதமான இந்த வடக்குத் திக்கு மோக்ஷ வாசலான வைகுந்தவாசல் அமையக் காரணமாயிற்று.

வைகுந்த வாசல் – சிறப்பு..!

( வைகுண்ட ஏகாதசி -பரமபத வாசல் –
பிரமன் ஸ்ருஷ்ட்டி -மது கைடபர் -மிருதுவானவனுக்கு மது -அவனுக்கு கடினம் கைடபர் -இருவரும் -வேதம் அபகரித்து —
ஹயக்ரீவர் அவதாரம் -பல வருஷம் சண்டை -மின்னல் பார்த்து
ஐ மின்னல் துர்க்கா தேவி -தேவி பாகவத புராணம் கதை -பீஜா மந்த்ரம் -நாங்கள் சங்கல்பம் செய்தால் தான் மரணம் -வரம் பெற்றார்கள்
அஹங்கரித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்றும் கேட்டார்கள் –
சாக சங்கல்பம் செய்யும் வரம் கேட்கச் சொல்லி அவர்களும்-கேட்டு -அழிக்க –
அவர்களுக்கும் மோஷம்-வடக்கு வாசல் வழியாக மார்கழி சுக்ல பஷ ஏகாதசி கூட்டிப் போனார்கள் –
கும்பகோணம் -ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை பாஞ்சராத்ர ஆகமம் -ஸ்ரீ கேள்வி பெருமாள் பதில் -அதிலும் இந்த வரலாறு
கும்பகோணம் ஸ்ரீ வைகுண்டம் ஆகவே தனியாக வைகுண்ட வாசல் இல்லை
பதினோரு இந்திரியங்கள் பாபம் பிராயச்சித்தம் ஏகாதசி –
மார்கழி உகந்த மாதம் -அதில் இது வருவதால் ஸ்ரேஷ்டம்- )

வேதத்தினை அபகரித்துச் சென்ற மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை திருமால் அழித்தார்.
திருமாலின் கையினால் மோஷம் பெற்ற அவர்கள் வைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டினர்.
திருமாலின் கருணையினால், அவர்கள் சுக்லபக்ஷ ஏகாதசி யன்று வைகுந்த விண்ணகரத்தின் வடக்கு வாயிலின்
மூலமாக மோக் ஷலோகம் சென்றனர். அப்போது அவர்கள், மார்கழி சுக்ல ஏகாதசி யன்று, திருக் கோயில்களிலுள்ள
சுவர்க்க வாசல் வழியே எழுந்தருளும் பெருமாளைத் தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோக்ஷம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க,
பெருமாளும் இசைந்து ஆசி வழங்கினார். அதன் படியே இந்த வாசலானது முக்தி தரும் வாசலாயிற்று..

எப்போது திருவாய்மொழித் திருநாளாக மாறியது..?

இந்த வேத அதயயன உற்சவமானது, திருமங்கையாழ்வார் காலம் வரையில் வேதத்திற்கு ஏற்பட்ட உற்சவமாகத் தான் நடந்து வந்தது..!
திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரின் திருவாய்மொழி உற்சவமாக, சுக்லபட்ச ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள்,
இந்த உற்சவத்தினை அரங்கனருளுால் மாற்றியமைத்தார்..!,
திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து ஒரு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைத் தினத்தன்று,
அரங்கனிடத்து விசேஷமாக பிரார்த்திக்கின்றார் திருமங்கை மன்னன்…!

அரங்கனிடத்துத் திருமங்கையாழ்வார் யாசித்தது மூன்று வரங்கள் தாம்..!

1) புத்த விஹாரங்களில் உள்ள தங்கத்தினை ஸ்ரீரங்கம் விமானத்திற்காகக் கொள்ளை யடித்தப்போது நிறைய
புத்த பிட்சுக்களும் புத்த மதத்தினரும் பலியானர். இவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்கவேண்டும் என்று யாசித்தார்..!

2) திருமங்கைமன்னன் படித்துறையில் (இது வடதிருக் காவேரி கொள்ளிடம் அருகேயுள்ளது..)
பிரேத சம்ஸ்காரம் ஆனவர்களுக்கு வைகுண்ட பிராப்தி வேண்டும் என்றார்..!

3)ஆழ்வார்கள் அருளிச்செயலுக்கு ஏற்றம் தரும் வகையிலும், நம்மாழ்வாரின் மோட்ச வைபவம் சிறப்பாக நடைந்தேற வேண்டியும்,
அத்யயன உற்சவத்திற்கு அரங்கன் அனுமதியளிக்க வேண்டும் எனவும் வேண்டினார்.

ஆழ்வார் வேண்டி அரங்கன் என்ன மறுக்கவா போகிறார்…?

மனப்பூர்வமாக சம்மதித்தார் அரங்கன்..!

ஆழ்வார்களுக்கு ஏற்றம் தரும் “அத்யயன உற்சவம்“ ஆரம்பமானது..!

தமிழ் மறை உற்சவமாக மாற்றி யமைத்தார்..! அதனுடன் கூட வேதம் ஓதுதலும் நடந்து வருகின்றது..!

நாதமுனிகள் காலத்தில் எப்படி நடந்தது..? உற்சவங்கள் எப்படி மாற்றப்பட்டன..,?

வெகுகாலம் வரை ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஸ்ரீரங்கம் கோயில் பரிஜனங்களோடு, வேத பாராயணம், திவ்ய பிரபந்தத்தோடு,
நம்மாழ்வார் எழுந்தருளுவார்..! அந்த சமயம், சில முக்ய கைங்கர்ய பரர்களைத் தவிர, யாருமில்லாததால்,
வேத பாராயணம் போன்ற கைங்கர்யங்கள் நடைபெறவியலாததால், கைசிக ஏகாதசி தொடங்கி,
நம்மாழ்வார் இங்கு எழுந்தருளும் காலம் வரை “அனத்யயன” காலம் ஆனது..!
இந்த ஸம்பிரதாயங்களை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இம்மாதிரி பல நிகழ்வுகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தில் நடைமுறையிலிருந்து வருகின்றது..!

நாதமுனிகள் காலத்தில், நாதமுனிகள் இவ்வைபவத்தினை, பகல் பத்து, இராப்பத்து, என இரண்டாக பிரித்து,
பகல் பத்தில் நம்மாழ்வார் தவிர்த்த இதர ஆழ்வார்களின் பாசுரங்களை “திருமொழித் திருநாளா”கவும்,
இராப்பத்தினை “திருவாய்மொழி”த் திருநாளாகவும், தம் மருமகன்களான மேல அகத்தாழ்வார்,
கீழை அகத்தவார்களுக்கு இயல், இசை, நாடகமாக, திவ்யபிரபந்தங்களுக்கு மெருகூட்டி, திறம்பட போதித்து
அரையர் ஸேவைக்கு ஆதாரமானார்..!
அன்றுந்தொட்டு இன்று வரை இவ்வைபவம் சிறப்புற, வேதம் தமிழ் செய்த மாறனுக்கு பொலிவு தரும் வைபவமாக
“நம்மாழ்வார் மோட்ச“த்துடன் இனிதே தொடர்ந்து நடந்து வருகின்றது..!

எம்பெருமானாரின் விடாய் தீர்த்த உற்சவம்….!

தாம் ஜீவித்திருக்கும் வரை, தமது தீராத ஒர் ஆசையினை, எ்ம்பெருமானாருக்கு, அவருக்குப் பின் வந்த தரிசன ப்ரவர்த்தகர்கள்,
அவரது அர்ச்சா திருமேனியுடன் இருககும் போது பூர்த்தி செய்துள்ளார்கள்..! ஆம்..! திருக்கச்சி நம்பிக்கு பிரஸாதம் அமுது செய்தபின்,
எம்பெருமானார், அவரது சேஷத்தினை பிரஸாதம் கண்டுருளுவார்..!
ஜீவிதத்துடன் இருந்தபோது உள்ள உள்ளக்கிடக்கையினை, ஏக்கத்தினை, அவர் அர்ச்சா திருமேனியுடனிருக்கும் போது தீர்த்து வைத்துள்ளார்கள்..!

வேறு சில விசேஷங்கள்..!

இந்த உற்சவத்தின் போது நம்பெருமாளே ஒரு பக்தன் எவ்விதம் மோக்ஷ உலகம் செல்கிறான் என்பதனை காண்பிக்கின்றார்..!

இந்த ஆத்மா முக்தி பெறும் போது, வைகுண்டத்தில் “விரஜா நதி” எனும் நதிக்கரையினை அடைகின்றது.
விரஜா நதியினில் அந்த ஆத்மா திவ்யமான ஒளி பொருந்திய தேஜோ மயமாகின்றது.
தேவர்கள் எதிர் கொண்டழைத்து வைகுந்தம் அழைத்துச் செல்கின்றனர்..!

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மூல ஸ்தானத்தினை விட்டு புறப்படுகையில் போர்வை சாற்றிக் கொண்டு கிளம்புவார்.
மூன்றாம் பிராகாரத்தில் அமைந்துள்ள “விரஜா நதி“க்கு ஒப்பான “விரஜாநதி” மண்டபத்தினை அடைந்தபோது,
அங்கு வேதகோஷங்கள் நடைபெறும். இது தேவர்கள், அந்த முக்திபெற்ற ஆத்மாவினை எதிர்கொண்டழைப்பதற்கு ஒப்பாகும்.
சற்று தள்ள வைகுந்த வாசல் முன்பு, அரங்கன் தம் போர்வையினைக் களைந்து, ஒளி பொருந்திய திருவாபரணங்களை,
தம் மேல் சாற்றிக் கொண்டு தேஜோ மயமாய், மிக்கக் காந்தியுடன் சேவை சாதித்தருளுவார்.
இது விரஜா நதியில் தீர்த்தமாடிய அந்த ஆத்மா தேஜோமயமாய் விளங்குவதற்கு ஒப்பாகும்…!

இவ்விதம் அரங்கன் பெருங்கருணையுடன், தாமே ஒரு சேதனனாகயிருப்பது, தம் பக்தன் எப்படி மோக்ஷம் பெறுகின்றான்
என்பதனை தாமே நிகழ்த்திக் காட்டுகின்றார்.

நாச்சியார் திருக்கோலம், நம்பெருமாளின் வேடுபறி, நம்பெருமாள் கைத்தல சேவை, நம்மாழ்வார் கைத்தல சேவை,
நம்மாழ்வார் மோக்ஷம் ஆகிய உற்சவங்கள் அவசியம் கண்டு, உள்வாங்கி, நாம் உணர்ந்து, உய்ய வேண்டிய ஒரு அற்புத உற்சவம்,
இந்த அத்யயன உற்சவம்..!

இவ்வைபவத்தில் அரங்கனுக்கு, ஆழ்வார் மீதும் அவர்கள் பாடிய தீந்தமிழ் பாசுர்ங்கள் மீதும் கொண்ட பாசம் அபரிமிதமானது..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவம்தான் நெடிய உற்சவம்..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவ காலத்தில், அரங்கன் தம்மை அலங்கரித்துக் கொள்வதிலும்,
ஆழ்வார் பின்னே அலைந்து திரிவதிலும் அதிக நாட்டமுடையவனாக உள்ளான்..!
இந்த உற்சவத்தில் அவனது தேஜஸ், காந்தி, கீர்த்தி, தயை மிக மிக அதிகம்..!

சூரிய குல வம்ச அரசர்கள் (கட்வாங்கன், இஷ்வாகு, தசரதன், ராமன்) போன்றவர்களும்,
சந்திர குல வம்ச அரசர்கள் (சந்தனு) போன்றவர்களும் வணங்கி உய்வடைந்தனர்..!
இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சூரியனுக்குரிய நவரத்னமாகிய ரத்னாங்கியை நம்பெருமாள் அணிந்தும்,
சந்திரனுக்குரிய நவரத்னமாகிய, நல்முத்த்ங்கியைப் பெரிய பெருமாள் அணிந்தும்,
எளியவராகிய நாமும் உய்யும் வண்ணம், வைகுண்ட ஏகாதசியன்று சேவை சாதித்தருளுகின்றார்..!

எல்லா பெரிய ரக்ஷா பந்தன உற்சவத்தின் போதும், ஏழாம் திருநாள் தாயார் ஸந்நிதி எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளிச் செல்வார்..!
ஆனால் இந்த இருபது நாள் உற்சவத்தில் ஒரு நாள் கூட தாயார் ஸந்நிதி பக்கம் திரும்பமாட்டார்..!
ஆழ்வார்களையும், அரையர் கொண்டாட்டத்தினையும் ரசிப்பதில், அவன் அதில் லயித்து கிடப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு..!

இந்த மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்றுதான், தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது.
இன்றுதான் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம் செய்த நாள் – கீதா ஜெயந்தி.

வைகுந்த ஏகாதசி நிர்ணயம் செய்வது எப்படி?

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் ஏகாதசி விரதத்தினைப் பற்றி பல புராணங்கள்,
சாஸ்திரங்களிலிருந்து தமது “ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்“ என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.
அவரது திருவடிகளை மனதினால் வணங்கி, வைகுண்ட ஏகாதசி சம்பந்தமான சில செய்திகளைக் காண்போம்.

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் கேசவனை ஆராதித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
பிரும்மஹத்தி தோஷம் கூட விலகும் – பாத்ம புராணம்-

இப்போது ஏகாதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல ஏற்படுகின்றன. இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..!

கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே.
பஞ்சகவ்யம் பவித்ரமாயினும் நாய் முகர்ந்தால் அசுத்தமே.
அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும்.
தசமி கலந்த ஏகாதசி அஸூர ப்ரீதி – ப்ருஹன் நாராயணீயம் –

தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது. – பாத்ம புராணம்-

தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளை விளைவிக்கும் – ப்ரம்ம வைவர்த்தம்-
உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியினை விட்டு விட வேண்டும் -கருட புராணம்-

ஆக எக்காரணம் கொண்டும் ஏகாதசியன்று தசமி திதி கலக்கக்கூடாது.
சூர்யோதயத்திற்கு முன்பு வரும் பிரும்ஹமுகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது.
(சூர்யோதயம் முன்பு நான்கு நாழிகைகள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) பிரும்ஹமுகூர்த்தக் காலம்).

தாஸன் – முரளீ பட்டர்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: