ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -ஸ்லோகங்கள்–39 -54–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் உரை –

அழகருடைய திருமுடியை அனுபவிக்கிறார் —

ஆஜாநஜ ஸ்வகத பந்துர கந்த லுப்த
ப்ராம்யத் விதக்த மது பாளி ஸதேச கேசம்
விசுவாதி ராஜ்ய பரி பர்ஹ கிரீட ராஜம்
ஹை ஸூந்தரஸ்ய பத ஸூந்தரம் உத்தம அங்கம் —39-

ஸூந்தரஸ்ய உத்தம அங்கம் ஸூந்தரம் —-அழகருடைய திரு முடியானது மிக அழகியது
ஹை -பத – இரண்டு அவ்யவங்களாலே
இந்த அழகை உள்ளபடி வருணிக்க முடியாமல் தளருகின்றமை தோற்றும்
திருமுடி எப்படிப்பட்டது -என்ன -சிறந்த கூந்தலையும் உயர்ந்த மகுடத்தையும் உடையது என்று
இரண்டு விசேஷணங்களால் அதன் சிறப்பைப் பேசுகிறார்
ஆஜாநஜ ஸ்வகத பந்துர கந்த லுப்த ப்ராம்யத் விதக்த மது பாளி ஸதேச கேசம்
ஸ்வ கத என்ற இடத்தில் ஸ்வ சப்தத்தால் கேசம் க்ரஹிக்கத் தக்கது -`அதன் விசேஷணங்களைச் சொல்லுவதால் –
இயற்கையான பரிமளத்தில் லோபத்தாலே சுழலம் இடா நின்ற வண்டுகளின் திரள் படிந்த கூந்தலை உடையது திருமுடி என்கை –
ஆஜாநஜ–என்றது ஆரோபிதம் இன்றிக்கே ஜென்ம ஸித்தமான என்றபடி –
சர்வ கந்த -உபநிஷத் பிரசித்தனானவனுடைய கூந்தல் அன்றோ -இயற்கையான நறுமணம் பெற்று இருக்குமாயிற்று –

பந்துர -சம்ருத்தம் என்றபடி -ஸ்வா பாவிகமாக தன்னிடத்தில் உள்ள சம்ருத்தமான நறு மணத்தில் லோபம்
உடையவையாய்க் கொண்டு மேலே சுழலம் இடா நின்ற ரசிக ப்ரமர பங்க்திகள் படியப்பெற்ற
திருக்குழல் கற்றையை யுடையது என்றது ஆயிற்று
ஸதேச கேசம் -மது பா வளிகளோடே சாமானாதி கரண்யமாய் –வண்டுகளும் கேசங்களும் உத்தம அங்கத்தில் உள்ளது என்றும்
மதுபா வளிகளோடே சமானமாய் –களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல்
மிளிர நின்று -நாச்சியார் அருளிச் செய்த படி களி வண்டுகள் படிந்து இருக்கின்றனவோ என்று
சங்கிக்கலாம் படியான கூந்தலை யுடைய உத்தம அங்கம்

விசுவாதி ராஜ்ய பரி பர்ஹ கிரீட ராஜம் –ஸர்வேச்வரத்வ ஸூ சகமாய் இருக்கின்ற திரு அபிஷேகத்தை யுடையது என்கை
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற உபய விபூதி நிர்வாஹகன்
என்று கோள் சொல்லும் திரு அபிஷேகம்
பரி பர்ஹம் -என்று ஸாமக்ரிக்கு பெயர்
ஸூசகம் என்பது தாத்பர்ய சித்தம்

————————

கீழ் ஸ்லோகத்தில் கேசபாச வர்ணனம் விசேஷண மாத்ரம் -அது தன்னையே விசேஷ்யமாக்கி இதில் அனுபவம்
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உட் கொண்ட நீல நன்னூல் தழை கொல்–அன்று மாயன் குழல் -என்று
அந்த அபூத உவமையையும் சஹியாதபடி அன்றோ திருக்குழல் இருப்பது –
மாயன் திருக்குழல் என்றே சொல்லிப் போம் அத்தனை -அதே ரீதியில் இஸ் ஸ்லோகம்

அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத் ஸ்யாத்
தத் சார சாதித ஸூ தந்த்வதி வ்ருத்த வார்த்தம்
ஈஸஸ்ய கேசவகிரே ரலகாலி ஜாலம்
தத் துல்ய குல்ய மது பாட்ய மஹாவநஸ்ய–40-

திமிர நிர்மித மேவ–அந்தம் தமஸ் – யத் ஸ்யாத் -தத் சார சாதித ஸூ தந்த்து அதி வ்ருத்த வார்த்தம் –இருளையே
உபாதானமாகக் கொண்டு நிருமிக்கப்பட்ட ஒரு காடாந்தகாரம் இருக்குமாகில் அதனுடைய சாரத்தைக் கொண்டு செய்யப்பட
நல்ல நூல் தொகுதி தான் அழகருடைய திருக்குழல் என்னப் பார்த்தால்
அதி வ்ருத்த வார்த்தம்-
அதை அதிக்ரமித்த வார்த்தை உடையது –அங்கனே சொல்ல ஒண்ணாதாய் இருக்கும் என்றபடி
அது தான் ஏது என்னில்
அளகாலி ஜாலம் –வண்டு ஒத்து இருந்த குழல் காற்றை
அது யாருடையது என்னில்
தத் துல்ய குல்ய மது பாட்ய-மஹாவநஸ்ய– கேசவகிரே ஈஸஸ்ய–
தத் சப்தமானது அகலஜாலத்தை பராமர்சிக்கக் கடவது
அந்த அகலஜாலத்தோடு துல்ய குல்யமான-ஸமான ஆகாரங்களான வண்டுகள் நிறைந்த சோலைகளை உடைத்தான
திருமலைக்குத் தலைவரான அழகருடையது –

அழகருடைய திருக்குழல் கற்றையானது -ஸூ தந்த்வதி வ்ருத்த வார்த்தம் -என்று முடிப்பது
கேசவகிரே–தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி –பெரிய திருமொழி —
கேசவன் வர்த்திக்கிற படியால் கேசவ கிரி -இதனாலே ஸிம்ஹ கிரி என்று அடிக்கடி அருளிச் செய்வதும் பொருந்தும்
அலகாலி ஜாலம் –ஆளி என்றது ஆவளி என்றபடி -அதுக்கும் மேலே ஜால சப்தம் அடர்த்தியைக் காட்டும்

———————

ஜுஷ்ட அஷ்டமீக ஜ்வல திந்து ஸந்நிபம்
த்ருத ஊர்த்வ புண்ட்ரம் விலஸத் விசேஷகம்
பூம் நா லலாடம் விமலம் விராஜதே
வாநாத்ரி நாதஸ்ய சமுச்ச்ரித ஸ்ரீ யா –41-

சமுச்ச்ரித ஸ்ரீ யா –வாநாத்ரி நாதஸ்ய –லலாடம்–பூம் நா–விராஜதே –ஏறு திருவுடையான் என்னப்பட்ட
அழகருடைய திரு நெற்றியானது அதிசயித்து விளங்கா நின்றது -அந்த நெற்றி எப்படிப்பட்டது என்னில்
ஜுஷ்ட அஷ்டமீக ஜ்வல திந்து ஸந்நிபம் –அஷ்டமீ திதி அன்று விளங்கா நின்ற சந்திரனை ஒத்து இரா நின்றது –
பாதிச் சந்திரன் போலே என்றவாறு
ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம்-32-ஸ்லோகம் அனுசந்தேயாம்
தூப்புல் பிள்ளையும் பரமபத சோபானத்தில் -9-பராப்தி பர்வத்தில் –திருக்குழல் சேர்த்தியாலே ஒரு பாகம் இருளோடே
சேர்ந்த அஷ்டமீ சந்திரனை அநு கரிக்கிற திரு நெற்றியை அனுபவித்து –என்றும் உள்ளதே
த்ருத ஊர்த்வ புண்ட்ரம் –ஊர்த்வ புண்ட்ரம் அணிந்தும் உள்ளதே
விலஸத் விசேஷகம் –கஸ்தூரீ திலகமும் விளங்கப் பெற்றது
விமலம் –ஆக இப்படி திரு நெற்றி விமலமாக விளங்குகின்றது
விமலம் விபுலம் -பாட பேதங்கள்

———————

ஸூ சாருசாப த்வய விப்ரமம் ப்ருவோ
யுகம் ஸூ நேத்ராஹ்வ சஹஸ்ர பத்ரயோ
உபாந்தகம் வா மதுபர வலீ யுகம்
விராஜதே ஸூந்தர பாஹு சம்ஸ்ரயம் -42-

ஸூந்தர பாஹு சம்ஸ்ரயம் -ப்ருவோ யுகம்-விராஜதே-அழகருடைய திருப்புருவம் இரண்டும் விளங்கா நின்றது –
எங்கனே என்னில் –
ஸூ சாருசாப த்வய விப்ரமம் –தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தமிலி–
பரம ஸூந்தரமான இரண்டு விற்களின் விலாசம் போன்ற விலாசத்தை உடையது
இந்த புருவ இணை எங்கனம் உல்லே கிக்கும் படி இரா நின்றது என்ன
ஸூ நேத்ராஹ்வ சஹஸ்ர பத்ரயோ உபாந்தகம் மதுபர வலீ யுகம் -வா-திருக்கண்கள் ஆகிற இரண்டு தாமரை மலர்களின்
சமீபத்தில் வந்து படிந்த வண்டுத்திரளோ இவை என்னலாம் படி இரா நின்றது –
வா -சப்தம் இவார்த்தகம் –
மதுபர வலீ யுகமிவ விராஜதே -என்றதாயிற்று –

———————

அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ –43-

அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே
அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே
க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே
பச்யதாம்-அந்தக்கரணஸ்ய -ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் –
என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே
அநுப்ஜம்–உப்ஜ -ஆர்ஜவே -என்ற தாது பாடம்–ஆர்ஜவம் அற்றது என்றபடி –குடிலமாய் இறே தாமரை மலர் இருப்பது –
ஆக ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே
அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து
நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது
ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே
ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –

—————–

ப்ரச் சோதத் ப்ரேம சார அம்ருத ரஸ சுளக பிரக்ரம ப்ரக்ரியாப்யாம்
வி ஷிப்தா லோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாப்யாம்
விஸ்வோத்பத்தி ப்ரவ்ருத்தி ஸ்திதி லய கரணை காந்த சாந்த க்ரியாப்யாம்
தேவோ லங்கார நாமா வநகிரி நிலயோ வீக்ஷதாம் ஈஷணாப்யாம் –44-

வநகிரி நிலயோ –அலங்கார நாமா –தேவ –வீக்ஷதாம் ஈஷணாப்யாம் -அழகன் அலங்காரன் திருக்கண்களாலே
குளிர நோக்கி அருள வேண்டும் —
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் விழியாவோ –
உன் தாமரைக்கு கண்களால் நோக்காய் –என்று பிரார்த்தனை –
அத்திருக்கண்கள் எப்படிப்பட்டவை என்னில்
ப்ரச் சோதத் ப்ரேம சார அம்ருத ரஸ சுளக பிராக்ரம ப்ரக்ரியாப்யாம் –பெருகு கின்ற அன்பு வெள்ளம் ஆகிற
அமுதப் பெருக்கை உடைய சிறாங்கையோ இவை–என்னலாம் படி
சுளகம் -சிறாங்கை–கண்களின் விசாலத்துக்கு இது உவமை
ஒரோ குடங்கைப் பெரியன கெண்டைக் குலம் –திரு விருத்தம் -11-
பிரேமசார ரசமாகிய அன்பு வெள்ளம் பெருகுகிற என்கிற இத்தால் அன்போடு கடாக்ஷித்து அருளுகின்றமை சொல்லிற்று
பிரக்ரம–பிரகாரம் என்றவாறு -பிரகிரியை என்றாலும் பிரகாரம்
சுலகத்தின் தன்மை போன்ற தன்மையை உடைய திருக்கண்கள் என்றவாறு –
விஷிப்தாலோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாப்யாம் –அலை எறிகின்ற கடாக்ஷ தாரைகளால்
கோபீ ஜனங்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை என்கை –
விஷிப்தங்களான –ஆலோகிதங்கள் ஆகிற அலைகளின் பிரசரணத்தாலே கவரப்பட்ட காந்தா ஜன ஸ்வாந்தங்களை
யுடையவை திருக்கண்கள்
விஷிப்த –விசேஷண ப்ரேரித என்றபடி –ஆலோகிதமாவது -ஆலோகநம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி –என்றபடி திருக்கண்கள் நாக்காலே உள்ளத்தைக் கொள்ளை கொள்பவர் அன்றோ
விஸ்வோத்பத்தி ப்ரவ்ருத்தி ஸ்திதி லய கரணை காந்த சாந்த க்ரியாப்யாம் –சகல சராசரங்களினுடைய உத்பத்தி ப்ரவ்ருத்தி
சம்ரக்ஷண சம்ஹாரங்களைச் செய்வதில் மிகவும் ஊக்கம் உடையவை
நா வேஷஸே யதி ததோ புவந அந்யமுநி நாலம் ப்ரபோ பவிதுமேவ குத ப்ரவ்ருத்தி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -படியே
ஆவேஷண மாத்திரத்தாலே அன்றோ விஸ்வோத்பத்தி ப்ரவ்ருத்தி ஸ்திதி லயங்கள் நடைபெறுகின்றன
ஆக இப்படிப்பட்ட திருக்கண்களாலே அழகர் கடாக்ஷித்து அருள வேணும் –

——————————–

பிரேம அம்ருதவ்க பரிவாஹி மஹாஷி சிந்து
மத்யே பிரபத்த சமுதஞ்சித சேது கல்பா
ருஜ்வீ ஸூ ஸூந்தர புஜஸ்ய விபாதி நாசா
கல்பத்ருமாங்குர நிபா வந சைல பர்த்து–45-

வந சைல பர்த்து–ஸூ ஸூந்தர புஜஸ்ய–
ருஜ்வீ–கல்பத்ருமாங்குர நிபா -நாசா –நேர்மை பொருந்திய கற்பகக் கொடியின் பல்லவம் போன்றதான நாசிகையானது
பிரேம அம்ருதவ்க பரிவாஹி மஹாஷி சிந்து மத்யே பிரபத்த சமுதஞ்சித சேது கல்பா விபாதி –அழகருடைய
திருக்கண்கள் ஆஸ்ரித வாத்சல்ய அதிசயத்தாலே -எப்போதும் அலை பாயா நின்று கொண்டு இருப்பதால் –
அலை எறிகின்ற பெறும் கடலோ இது -என்னலாம் படி இருக்கும்
அத் திருக் கண்களின் இடையே கோல நீள் கொடி மூக்கு அமைந்து இருப்பது கடலிடையே கட்டின
அணை தானோ இது என்னும்படி இரா நின்றது
திருக்கண்களை கடலாக ரூபம் பண்ணினத்துக்கு சேர -பிரேம அம்ருதவ்க பரிவாஹி–என்கிற விசேஷணம் இடப்பட்டது –
ப்ரேமமாகிற அமுத ப்ரவாஹத்தை பெருக்குமே
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு –மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -என்று
அருளிச் செய்ததை அடி ஒற்றி -கல்பத்ருமாங்குர நிபா–என்று அருளிச் செய்த படி –

——————

வ்யாபாஷித அப்யதிகநந்தந பந்ந நர்த்தி
மந்த ஸ்மித அம்ருத பரிஸ்ரவ சம்ஸ்தவாட்யம்
ஆபாதி வித்ரும சமாதரம் ஆஸ்யம் அஸ்ய
தேவஸ்ய ஸூந்தர புஜஸ்ய வநாத்ரி பர்த்து –46-

வநாத்ரி பர்த்து — ஸூந்தர புஜஸ்ய–அஸ்ய தேவஸ்ய
வித்ரும-சமாதரம் ஆஸ்யம் -ஆபாதி–பவளம் போல் கனிவாய் சிவப்ப–என்கிறபடி சிவந்து கனிந்த
திருப்பவள வாயானது விளங்கா நின்றது -எப்படிப் பட்டது என்னில்
வ்யாபாஷித அப்யதிகநந்தந பந்ந நர்த்தி மந்த ஸ்மித அம்ருத பரிஸ்ரவ சம்ஸ்தவாட்யம் –திருப் பவள வாய் திறந்து
பேசுவதில் காட்டிலும் இனிதான புன்முறுவல் பூத்து இருக்கப் பெற்றது என்றவாறு
வ்யாபாஷி தம் –ஆவது வ்யா பாஷாணம் அதாவது –வாய் திறந்து ஓன்று பணிக்கை-
அதில் காட்டிலும் -அப்யதிகநந்தந–மிகவும் ஆனந்த கரமாயும் -கல்யாணாவஹமான ஸம்ருத்தியை
உடையதாவும் இருக்கிறது -மந்த ஸ்மிதம் -புன்னகை —
அதுவாகிற அம்ருத பரிஸ்ரவத்தாலே –அம்ருதப் பெருக்கினாலே -ஆட்யம் -நிறைந்தது
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தால் அர்ச்சா சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்தகாச விலாசமானது திருவாய் திறந்து சொல்லுவதைக் காட்டிலும்
பரமானந்த ஸந்தோஹ சந்தாயகமாய் இருக்குமாய்த்து
அந்த மந்த ஸ்மிதம் அம்ருத ப்ரவாஹம் என்றும் சொல்லலாம் படி இருக்கும்
அது விஞ்சி இருக்கப் பெற்ற திருப் பவளச் செவ்வாய் அனுபவிக்கப் பட்டது

————–

யசோதா அங்குல்ய அக்ர உந்நமித சுபுகாக்ராண முதிதவ்
கபாலவ் அத்யாபி ஹ்ய அநு பரத தத்தர்ஷ கமகவ்
விராஜேதே விஷ்வக் விதத சஹகாரா சவரச
ப்ரமாத்யத் ப்ருங்காட்ய த்ருமவநகிரேஸ் ஸூந்தர ஹரே –47-

விஷ்வக் விதத சஹகாரா சவரச ப்ரமாத்யத் ப்ருங்காட்ய த்ருமவநகிரேஸ் ஸூந்தர ஹரே -கபாலவ்-விராஜேதே —
எங்கும் பரந்த தேன் மா மரங்களின் மதுவைப் பருகி களித்து இரா நின்ற வண்டுகள் நிரம்பிய சோலைகளை உடைய
திருமலையை உறைவிடமாக உடையரான ஸ்ரீ அழகருடைய திருக் கபோலங்கள் மிக விளங்குகின்றன
இவை எங்கனே இரா நின்றன என்னில்
யசோதா அங்குல்ய அக்ர உந்நமித சுபுகாக்ராண முதிதவ் அத்யாபி ஹ்ய அநு பரத தத்தர்ஷ கமகவ் –பண்டு
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ யசோதா பிராட்டி தன்னுடைய விரல் நுனியால் மோவாயைத் தூக்கி முத்தம் இட்டதனாலே
ரோமாஞ்சிதங்களாய் இன்னமும் அந்நிலை மாறாமல் இருப்பனவாம்
முத்தம் இடுவது கபோலத்தில் அன்று ஆகிலும் ஹர்ஷம் தோற்றுவது கபோலத்திலே யாகையாலே
இங்கனம் அருளிச் செய்யக் குறை இல்லையே
ஸ்ரீ அழகருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் ஸ்ரீ கிருஷ்ண தாதாம்ய பாவனை முற்றி அருளிச் செய்ததாம் இது
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணி யரங்கன் என்று அன்றோ
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வாரது அனுபவமும் –

——————-

வ்யாலம்பி குண்டலம் உத்க்ர ஸூவர்ண புஷ்ப
நிஷ் பந்ந கல்பலதிகா யுகளாநுகாரம்
யத் கர்ணா பாச யுகளம் நிகளம் தியாம் ந
சோயம் ஸூ ஸூந்தர புஜோ வநஸைல பூஷா–48-

வ்யாலம்பி குண்டலம் –மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட –என்கிறபடியே
தள தள என்று தொங்குகின்ற கன மகரக் குழைகளை உடைத்தாய்
உத்க்ர ஸூவர்ண புஷ்ப -நிஷ் பந்ந கல்பலதிகா யுகளாநுகாரம் –மிகச் சிறந்த ஸ்வர்ண புஷ்பங்களோடு
விளங்கப்பெற்ற இரண்டு கல்பதைகள் போன்றதாய்
திருச்செவி மாடல்களின் ஸ்தானத்தில் கல்பதையும் —
கன மகரக் குழைகளின் ஸ்தானத்தில் ஸூ வர்ண புஷ்பமும் கொள்ளக் கடவது –
ஆக இப்படிப்பட்டதான
யத் கர்ணா பாச யுகளம் தியாம் ந–நிகளம்-யாவர் ஒரு அழகருடைய திருச்செவி மடல்கள் இரண்டும்
நம்முடைய புத்திக்கு விலங்கு போல் ஆகின்றதோ
விலங்கிடப் பட்டவன் இடம் விட்டுப் பெயர்ந்து வேறு இடம் செல்ல முடியாமல் திகைத்து போலே
தம்முடைய திரு உள்ளம் ஸ்ரீ அழகருடைய கர்ண பாசத்தை விட்டு மற்றொரு அவயவத்தில் ஈடுபட முடியாமல்
திகைத்து இருக்கிறது என்று காட்டியவாறு
சோயம் ஸூ ஸூந்தர புஜோ வநஸைல பூஷா—இத்தகைய கர்ண பாச ஸுவ்ந்தர்யம் வாய்ந்த ஸ்ரீ அழகர்
ஸ்ரீ திருமலைக்கு திவ்ய அலங்காரமாக விளங்குகின்றான் -என்கை –

—————–

களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட –என்றும்
மை வண்ண நறுங்குஞ்சிக் குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட –என்றும்
தனித்தனியே அனுபவித்த அழகுகளைச் சேரப்பிடித்து அனுபவிக்கிறார் இதில்

சதம்ச சம் சஞ்சித குந்த லாந்திகா
வதீர்ண கர்ணா பரணாட்ய கந்தர
ஸூ பந்துர ஸ்கந்த நிபந்தநோ யுவா
ஸூ ஸூந்தரஸ் ஸூந்தரதோர் விஜ்ரும்பத -49–

சதம்ச சம் சஞ்சித குந்த லாந்திகா வதீர்ண கர்ணா பரணாட்ய கந்தர –அழகிய திருத் தோள்களில் வந்து அலையா நின்ற
திருக் குழல்களின் அருகே தொங்குகின்ற கன மகரக் குழை விளங்கா நின்ற திருக்கழுத்தை உடையவராய்
ஸூ பந்துர ஸ்கந்த நிபந்தநோ–ஸ்கந்த நிபந்தநமாவது –திருத் தோள் பட்டைகள் அமைப்பு –
திருக்கழுத்தின் பின்புறம் சந்தி பந்தம் -அது ஸூ பந்துரம் -மிக அழகியதாய் இருக்கின்றது –
இங்கனே இருக்கப் பெற்றவராய்
யுவா ஸூ ஸூந்தரஸ் –இளகிப்பதித்த திரு மேனியை உடையவர் ஆகையால் நித்ய யவ்வனசாலியாய்
அழகர் என்ற திரு நாமம் உடையரான
ஸூந்தரதோர் விஜ்ரும்பத —பெருமாள் ஓங்கி விளங்குகின்றார்

—————

வ்யூட கூட புஜ ஜத்ரும் உல்லஸத் கம்பு கந்தர தரம்
வ்ருஷ ஷண்ட மயூ பூப்ருதஸ் தடே ஸூந்தராயத புஜம் பஜா மஹே –50-

வ்ருஷ ஷண்ட மயூ பூப்ருதஸ் தடே–திருமலை தாழ் வரையில் அடியிலே
ஸூந்தராயத புஜம் பஜா மஹே –பெருமாளை பஜிக்கிறோம் –அவர் தாம் எப்படிப்பட்டவர் என்றால்
வ்யூட கூட புஜ ஜத்ரும் –ஸ்கந்தத்திற்கும் கஜத்திற்கும் சந்தியான இடம் -ஜத்ரு-என்னப் படும் –
அதன் மேல் பாகமானது புஜ ஜத்ரு-எனப்படும் -அது பருத்தும் அவ்யக்தமாயும் இருக்கிறதாயிற்று –
மாமசலத்வாதிசயத்தாலே அவ்யக்தமாய் இருக்கிற படி -இப்படிப்பட்ட புஜ்ஜத்ருவை உடையராய்
கம்பு கந்தர தரம் -சங்கு போன்ற அழகிய திருக்கழுத்தை உடையவராக அழகரை
ரேகா த்ரய விபக்த அங்கமான திருக்கழுத்துக்கு சங்கை உவமை சொல்வது கவி மரபு
ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவத்தில் –க்ரமுக தருணக்ரீவா கம்பு ப்ரலம்ப மலிம் லுசஸ் கண்ட என்று -ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார்
சங்கு போன்ற திருக்கழுத்தை தரிப்பவர் என்றதாயிற்று

—————-

மந்த்ர ப்ரமண விப்ரமோத்படாஸ் ஸூந்தரஸ்ய விலசந்தி பாஹவஸ்
இந்திரா சமபிநந்த பந்த நாச் சந்தநாகரு விலேப பூஷிதா –51-

ஸூந்தர தோளுடையான் என்பதால் இது முதல் நான்கு ஸ்லோகங்களால் திருத் தோள்கள் அனுபவம் –
நான்கு திருத் தோள்களுக்கும் நான்கு ஸ்லோகங்கள் போலும்

ஸூந்தரஸ்ய – பாஹவஸ் -விலஸந்தி–அழகருடைய பாஹுக்கள் அழகு பிழிந்து விளங்குகின்றன —
அவை எப்படிப்பட்டவை என்னில்
மந்த்ர ப்ரமண விப்ரமோத்படாஸ் -மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் —
ஸ்ரீ நாச்சியார் ஸ்ரீ ஸூக்தியைத் திரு உள்ளம் கொண்டு இந்த விசேஷணம் –
அத்தை சுழற்றுகிற விலாச காரியத்தில் உத்ஸாஹம் பொருந்தியவை அழகருடைய பாஹுக்கள் –
அநாயாசமாக மந்த்ர மலையை சுழற்றின என்றபடி
இன்னமும் எப்படிப் பட்டவை என்னில்
இந்திரா சமபி நந்த பந்த நாச் –ஸ்ரீ மஹா லஷ்மியை சந்தோஷப்படுத்தி அதனாலே உகப்புப் பெற்றவை
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் ஆகையால்
சீதக்கடலுள் அமுதாக அவதரித்த ஸ்ரீ மஹா லஷ்மியை ஆரத்தழுவி அவளையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்தவை
இன்னமும் எப்படிப்பட்டவை என்னில்
சாந்த நாகரு விலேப பூஷிதா –ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த
சாந்தணி தோள் சதுரன் –பெரியாழ்வார் அருளிச் செய்த படி
ஸ்ரீ வடமதுரையில் கூனி பூசின சாந்து குறி அழியாமே மல்லரோடே பொருது வெற்றி பெற்ற திருத் தோள்களே
இவை என்று காட்டின படி -ஸூ கந்த சந்தனம் அணிந்து விளங்குபவை

————————

ஜியா கிணாங்க பரிகர்ம தர்மினோ
பாந்தி பாஹவ புஜஸ்ய பாஹவ
பாரிஜாத விடபாயி தர்த்தய
ப்ரார்த்த தார்த்த பரிதாந தீக்ஷிதா –52-

இந்த ஸ்லோகமும் பாஹு வர்ணனம்
ஸூந்தர புஜஸ்ய பாஹவ பாந்தி–பாஹுக்கள் விளங்குகின்றன -அவை தாம் எப்படிப்பட்டவை என்னில்
ஜியா கிணாங்க பரிகர்ம தர்மினோ–மஹா வீரனுடைய பாஹுக்கள் கண்டவாற்றால் தெரிகிறபடி
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்த வா மங்கை –பொய்கையார் பாசுரம் படியே
ஸ்ரீ சார்ங்க வில்லின் நாணித் தழும்பாலே அலங்கரிக்கப் பட்டவை –
விபவ அவதாரங்களில் ஆஸ்ரித விரோதிகளைத் தொலைக்கும் பொருட்டு -செய்த யுத்தங்களில் நேர்ந்த
வில் நாணியின் வடுக்கள் அவதார திசையில் ஸ்ரீ ராம கிருஷ்ணாதி மூர்த்திகளின் திருக்கைகளை அலங்கரித்து இருந்தன —
அவையே அர்ச்சையிலே இவர்களுடைய ப்ரத்யக் த்ருஷ்டிக்கு கோசாரம் ஆகிறபடி
ஸ்ரீ ஆளவந்தார் –சகாசதம் ஜியாகிண கர்க்கஸைஸ் ஸுபைஸ் சதுர்ப்பிராஜாநு விலம்பிர் புஜை–என்று
பர தசையில் அனுசந்தித்தால் அர்ச்சையில் அனுசந்திக்கக் கேட்க வேணுமோ
இன்னமும் எப்படிப் பட்டவை என்னில்
பாரிஜாத விடபாயி தர்த்தய–கற்பகத்தருவின் கிளைகளோ என்னலாம் படி அமைந்த ஸம்ருத்தியை உடையன -மேலும்
ப்ரார்த்த தார்த்த பரிதாந தீக்ஷிதா –கேட்டார் கேட்டது எல்லாம் வழங்குவதில் தீக்ஷை கொண்டவை –
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அன்றோ –

—————–

சாகர அம்பர தமால காநந ஸ்யாமள ருத்தயா உதார பீவரா
சேஷ போக பரி போக பாகிநஸ் தந்நிபா வந கிரீ ஸிதுர் புஜா –53-

சாகர அம்பர தமால காநந ஸ்யாமள ருத்தயா –கடல் போலவும் ஆகாசம் போலவும் –
பச்சிலைப் பொழில் போலவும் பேசலாம் படியான பசுமை வாய்ந்தவை
இவை வெறும் நிறத்துக்கு மாத்ரம் அன்றிக்கே வைஸால்யத்திற்கும் உவமையாம்-
அம்பர தமால காநந ஸ்யாமள -இவற்றின் சாம நிறத்தின் ஸம்ருத்தியை யுடையவை
அழகருடைய திருத்தோள்கள்
உதார பீவரா –இங்கு உதார பதத்தினால் தாத்ருத்வமும் மஹத்வமும் விவஷிதம் –
நீண்டு பருத்தவை என்றவாறு
மேலும்
சேஷ போக பரி போக பாகிநஸ் –திருவந்தாழ்வானுடைய திருமேனியின் மேல் கிடந்து ஆனந்தி அனுபவம் செய்யுமவை
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை செய்யும் போது
தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பித் திருக்கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்தித்து அருளிச் செய்கிறார்
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அநந்த சயன ஆளும் மலை –மாலிருஞ்சோலை யதே –பெரியாழ்வார்
தந்நிபா –போகி போக சய நீயசாயிகள் –என்று கீழே சொல்லிற்று –
அவ்வளவே அன்றிக்கே அந்த திருவானந்தாழ்வானுடைய திருமேனியோடே சாம்யமும் உடையவை இவை என்கிறது இங்கே
ஆக இப்படிப்பட்டவை வந கிரீ ஸிதுர் புஜா

——————————-

அஹம் அஹம் இகா பாஜோ கோவர்த்தந உத்த்ருதி நர்மணி
பிரமதநவித்தா வப்தேர் லப்தே ப்ரபந்ந சமக்ரியா
அபிமத பஹு பாவா காந்தா அபிரம்பண ஸம்ப்ரமே
வந கிரி பதேர் பாஹாச் சும்பந்தி ஸூந்தரதோர் ஹரே –54-

இந்த ஸ்லோகத்துடன் பஹு வர்ணனம் தலைக் கட்டுகிறார் ஆயிற்று
வந கிரி பதேர்–ஸூந்தரதோர் ஹரே –பாஹாச் சும்பந்தி –அழகருடைய திருத்தோள்கள் சால விளங்குகின்றன —
அவை தாம் எப்படிப் பட்டவை என்னில்
கோவர்த்தந உத்த்ருதி நர்மணி அஹம் அஹம் இகா பாஜோ–கோவர்த்தனம் என்னும் மலையைக் கொற்றக் குடையாக
ஏந்தி நிற்கும் லீலா விசேஷத்திலே நான் முன்னே நான் முன்னே என்று முற்கோளி நிற்குமவை —
இத்தால் உத்ஸாஹ அதிசயம் சொன்னபடி –
உத்ஸாகத்தோடு கோவர்த்தன கிரியை குடையாக ஏந்தி நின்றவை என்றபடி -மேலும்
அப்தே பிரமதநவித்தா வப்தேர் ப்ரபந்ந சமக்ரியா –கடல் கடையும் வியாபாரத்தில் முயன்று நின்று
தேவ அசுரர்களுடன் ஓக்கத் தொழில் செய்தவை –
ப்ரபந்தமாவது -முயற்சி –
லப்த பிரபந்தா–முயன்று நின்றவர்கள் -அவர்கள் ஆகிறார்கள் சுரர்களும் அசுரர்களும் –
அவர்கள் இளைத்து நின்ற காலத்தில் இவை தானே கார்யம் செய்து தலைக்கட்டிற்று
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மாசுணம் சுலாய் நெருங்க
நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் –திருச்சந்த —
மேலும்
காந்தா அபிரம்பண ஸம்ப்ரமே அபிமத பஹு பாவா –கடைந்த கடலில் நின்று பிராட்டி தோன்ற
அவளை ஆரத் தழுவுகிற சம்பிரமத்தில் விஸ்வரூபம் எடுக்கக் கோலினவை –
இரண்டாயும் நான்காயும் இருந்து தழுவுகையிலே பர்யாப்தி பிறவாமையாலே பஹு பவந சங்கல்பம் கொண்டபடி –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் அன்றோ

ஆக இப்படிப்பட்டவையாம் அழகருடைய திருத்தோள்கள் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: