ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -இரண்டாம் பத்து–

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –11-

வாயும் -திருமால் –
அடியார் அனுபவிக்கலாம்படி அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய ஸ்ரீ யபதி யானவன் –
ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்- தம்முடைய துக்கத்தை ஆராய அறியாத வற்றை
செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை த்ருடமாக கடாஷித்து அருளுவார்-

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது-அயர்ப்பிலன்-அலற்றுவன் – தழுவுவன்-வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால் -ஷட் குண சாம்யத்தாலே தாமான தன்மை குலைந்து
ஸ்ரீ பிராட்டியான தன்மையைப் பஜித்து தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு ஸ்ரீ நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய் அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு
நாரை-அன்றில்-கடல்-வாடை-வானம்-மதி-இருள்-கழி-விளக்கு துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
ஸ்ரீ பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை வாயும் திருமாலால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே -அவதாரத்திலே அனுசந்தித்து பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –-அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே-கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்-அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்–இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்தை இதிஹாச புராண பிரக்ரியையாலே-பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————-

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-

இதில் ஸ்ரீ எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ஸ்லேஷிக்க-தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை தலைக் கட்டின அநந்தரம்
கீழ்-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்ஸ்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும்
அனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே-துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே-போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற-ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

—————————————————-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —-14-

இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே மிகவும் தளர்ந்து தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஸ்ரீ எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற
பிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான ஸ்ரீ பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————–

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-

இதில் ஆடியாடியில் -விடாய் தீர அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து-வாட்டமில் புகழ் ஸ்ரீ வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே-
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து-சம்ஸ்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே-அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

—————————————————–

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—16-

இதில்-அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ஸ்லேஷித்த இவர் அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற -ஸ்ரீ வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை-ஸ்ரீ வைகுந்தன் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் –

————————————————

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-

இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

—————-

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு—-18-

இதில் மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி ஸ்ரீ ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள
ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-

———————–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்
முதல்-நடுவு-இறுதி-இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
ஸ்ரீ பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம் எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
ஸ்ரீ தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும் என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

———————-

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-

இதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்-எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று
இவர் த்வரிக்கப் புக்கவாறே-இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக-இங்கேயே-இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து-அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: