உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1-
இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்-சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து-உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-
——————————————————-
வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——2-
இதில் தம்முடைய திரு உள்ளம் போலே-அனுபவத்துக்குத் துணையாய் திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழ் ஸ்ரீ எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்-அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து-
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும் பகவத் குண வை லஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு-பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை-வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-
——————————————————
பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-
இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு பஜிக்கத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை-பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –
———————————————————
அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்—4-
இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தோடு போலியான ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலேயாய் தாம் பிற்பாடர் ஆகையாலே-பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வரான-அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை-கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலேசொல்லச் சொல்லுகிற -அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —
—————————————————-
வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-
ஊடுருவ ஓர்ந்து -தீர்க்கமாக ஆராய்ந்து
இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்-அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்- உம்முடைய பொல்லாமையைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று ஸ்ரீ த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி-தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை-வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை-
———————————————–
பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-
இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்-ஸ்ரீ யபதியான பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்-ஷூத்ர உபகரணான இவனால் பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை -பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –
————————————————
பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு –7-
இதில் ஆஸ்ரயண ரஸ்யதையை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும் ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
——————————————————-
ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-
இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்தஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும் ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத் த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்-நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன் என்கிற -ஓடும் புள்ளில் அர்த்தத்தை-ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-
———————————————-
இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் –9-
ஆற்ற -சாத்மிக்க சாத்மிக்க
இதில் ஸ்ரீ எம்பெருமான் உடைய சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்-தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்-அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம்
எல்லாவற்றையும் இவன் ஒருவனுடனே சர்வ இந்த்ரியங்களாலும் சர்வ காத்ரங்களாலும் பொறுக்கப் பொறுக்க பரிமாறும் –
என்கிற-இவையும் அவை யில் அர்த்தத்தை இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
———————————————————-
பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-
சர்வாங்க சம்ச்லேஷம் பண்ணுகைக்கு ஹேத்வாந்தரம் காணாமல் ‘
நிர்ஹேதுகமாகாதே -என்று நிர்வ்ருத்தர் ஆகிற படியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில்
இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற இந்தப் பேற்றுக்குத் தகுதியாக
இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே
அத்வேஷம் துடங்கி
பரிகணிநை நடுவாக
பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து
வந்து
நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும் ஸ்வபாவன் என்று அவனுடைய நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து
நிர்வ்ருத்தராகிற –பொருமா நீள் படையில் அர்த்தத்தை பெருமாழி சங்குடையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-
———————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply