சேதனர் எல்லாருக்கும் செய்ய அடுப்பது -அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகையாய் இருக்க –
இதர தேவதைகளை ஆஸ்ரயித்து -சம்சார பந்தம் வர்த்திக்கும் படி பண்ணா நிற்பார்கள் –
இது என்ன படு கொலை –
இவ் வனர்த்தம் என்னால் பொறுக்கப் போகிறது இல்லை -என்றார் கீழ்
அல்லாதார் செய்தபடி செய்கிறார்கள் –
நாம் முந்துற முன்னம் இவ் வனர்த்தத்தைத் தப்பி
இவ் வர்த்தத்தைப் பெற்றோம் என்று உகக்கிறார் இதில்
நாட்டார் கண்டார் காலில் குனிந்து திரியா நிற்க
நமக்கு முந்துற முன்னம் தேவதாந்த்ர ஸ்பர்சம் இன்றிக்கே இருக்கப் பெற்றோமே –
இந்த லாபமே அமையாதோ-என்று
ஸ்வ லாபத்தைப் பேசி இனியர் ஆகிறார் –
அவன் சர்வ பதார்த்தங்களையும் திரு வயிற்றிலே வைத்து நோக்குகிற போது-
நம்மோடு ஓக்க அவன் திரு வயிற்றிலே புக்குப் புறப்பட்டவர்களிலே சிலரை ஆஸ்ரயித்து –
பலத்துக்கு அவர்கள் கை பார்த்து இருக்கையாகிற இப் புன்மை இன்றிக்கே ஒழியப் பெற்ற
இதுவே அமையாதோ -என்று பிரீதராய்-
அல்லாத திவ்ய பிரபந்தங்களை-
அந்தாதி ஆக்கிக் கொண்டு போந்த இவர்
இத்தை அந்தாதி ஆக்க மாட்டாதே
உகப்புக்கு இதுக்கு மேற்பட்ட இல்லாமையால் இவ் வனுபவத்தோடே தலைக் கட்டுகிறார்-
இத்தையும் அந்தாதி யாக அருளிச் செய்த போதிலும்-
திரு விருத்தம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி மூன்றையும் உகப்பின் மிகுதியால்
மண்டல அந்தாதியாக இல்லாமல் தலைக் கட்டுகிறார் என்றவாறு
நளிர் மதிச் சடையானும் என்று தொடங்கி
யாவையும் யுலகமும் யாவரும் அகப்பட வாயிற்று அவன் உண்டது –
தன்னோடு ஓக்கச் சிறை இருந்தவர்களில் சிலரை ஆஸ்ரயித்துப் பெறுவதொரு பலம் உண்டோ
நளிர் மதி சடையனும் நான் முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-
நளிர் மதி சடையனும் -குளிர்ந்த சந்திரனை தலையிலே தரித்துள்ள ருத்ரனும்
நான் முகக் கடவுளும்-நான்கு முகங்களுடைய பிரமனும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா-தளிர் போன்ற அழகிய தேஜஸ்ஸை யுடைய தேவர்கள் அதிபதி இந்திரன் இவர்கள் முதலான
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட-எல்லா விதமான லோகங்களும் எல்லா சேதனர்களும் உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்-பூமியும் ஜலமும் அக்னியும் காற்றும் தேஜஸ்ஸினால் வியாபிக்கப்பட்டுள்ள ஆகாசமும்
மலர் சுடர் பிறவும் -மலர்ந்த கிரணங்களை யுடைய சந்த்ர ஸூரியர்களும் மற்றும் உள்ள வஸ்துக்களும்
சிறிதுடன் மயங்க-ஒரே காலத்தில் வயிற்றில் ஏக தேசத்தில் சேரும்படி
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்-ஒரு வஸ்துவும் வெளிப் படாதபடி எல்லா வற்றையும்
அகப் படக் கரந்து -உள்ளே இருக்கும் வண்ணம் உண்டு வயிற்றிலே மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த -ஓர் ஆலின் இலை மேல் நித்திரை செய்யுமவனாய்
எம் பெரு -என்னுடைய ஸ்வாமியாய் -பெரியவனாய் –
மா மாயனை அல்லது-அளவிட்டு அறிய முடியாதவனாய் ஆச்சர்ய சக்தி யுடைய ஸ்ரீ மந் நாராயணனை ஒழிய
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?– வேறான பெரிய தேவதையை நாம் ஆஸ்ரயணீயராக உடையோமோ
நளிர் மதி சடையனும்
சாதக வேஷம் தோற்ற ஜடையை தரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்-
துர்மானத்தாலே -ஸூக பிரதாநன்-என்று தோற்றும்படி
தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்திரனை ஜடையில் தரித்த ருத்ரனும்
நான் முக கடவுளும்
அவன் தனக்கும் கூட ஜனகனுமாய்
ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக நாலு முகத்தை யுடையனாய் இருக்கிற
சதுர்முகனாகிற தெய்வமும்
இவர்கள் இருவரும் இரண்டு காரியத்துக்கும் கடவராய் அதிகாரிகளாய் இறே இருப்பது –
குசவனையும் -தண்டமாகிற புறமடக்கியும் போலே –
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
போக ப்ரவணன் ஆகையால் அப்சரஸ்ஸுக்களை மெய்க் காட்டிக் கொண்டு வடிவைப் பேணி
தேவர்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இந்திரன் தொடக்கமாக
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
எவ் வகைப்பட்ட லோகங்களையும் –
அவ் வவ லோகங்களில் உண்டான எல்லாச் சேதனரையும் தப்பாமே
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
அவர்கள் எல்லாருக்கும் காரணமாய் இருக்கிற பூத பஞ்சகமும் –
சுடர் இரு விசும்பும் -என்றது
உண்டாம் இடத்திலே
மற்றை நாலுக்கும் முன்னே உண்டாமது ஆகையால்
அழியும் இடத்தில்
அவை அழிந்தாலும் தான் சிறிது காலம் நின்று அழியுமது ஆகையால் வந்த புகரைப் பற்ற
மலர் சுடர் பிறவும்
சந்த்ர ஸூர்யர்களும் -மற்றும் உள்ள மனுஷ்யாதிகளும் இவை யடைய
சிறிதுடன் மயங்க
சிறியதாய்க் கொண்டு உடனே மயங்க
சில பேருக்கு இடைச் சொல்லி உண்பார் பலர் உண்டால் சோறு மட்டமாம் போலே –
ரஷ்யமாய்க் கொண்டு நாநா வாய்ப் புகுகிற பதார்த்தங்கள் அளவுபடும்படியாக வாயிற்று
தன் திரு வயிற்றில் வைக்கிற போது பாரிப்பின் பெருமை –
இவை அடங்க அல்பமாகக் கொண்டு
ஓன்று ஒன்றை விடாதே தன் பக்கலிலே கலச
அன்றிக்கே –
சிறிது உடல் மயங்க -என்று பாடமாய்
ஓர் ஆலந்தளிரின் உள்ளடங்கின வடிவில் கலச
உடன் உடல் என்கிற இடத்தில் -னகர-லகரங்களுக்கு ஒரு விரோதம் இல்லை
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும் அகப் படக்
ஒரு பதார்த்தமும் பிரி கதிர் படாத படி எல்லாவற்றையும்
கரந்து
பிரளயம் வந்தால் முன்புற்றைக் காட்டிலும் திரு வயிற்றை இளைத்துக் காட்டலாம் படி
ஒரு விக்ருதி இன்றிக்கே இருக்கை
ஓர் ஆல் இலை சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது
இப்படி இவற்றை திரு வயிற்றிலே வைத்து தான் முகிழ் விரியாதே பவனாய் இருபத்தொரு ஆலந்தளிரிலே
கண் வளர்ந்த நம்முடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை ஒழிய
பாலன் தந்துருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் -ஆல் அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு –ஸ்ரீ முதல் திருவந்தாதி -69-
பாலன் தந்துருவாய் ஏழுலகுண்டு –
யசோதா ஸ்தநந்தய மத்யந்தம் விமுக்தம்
(மிகவும் அழகியதான யசோதையின் கைக் குழந்தை )-என்னும்படி
முக்தமான வடிவை யுடையவனாய் சகல லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து
ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் —
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றில் அடக்கி ஆலின் மேல் ஓர் இளந்தளிரில் கண் வளர்ந்த
ஈசன் தன்னை —-ஸ்ரீ பெரிய திருமொழி -2-10-1-என்கிறபடியே
முகிழ் விரியாத ஆலந்தளிரிலே-
தரிக்கைக்கு ஒரு யசோதாதிகள் இன்றிக்கே இருக்க
நீ கண் வளர்ந்து அருளினவற்றை மெய் என்று ஆப்தரான ரிஷிகள் எழுதா நின்றார்கள்
கதம் ந்வயம் சிஸூ சேதே லோகே நாசமுபாகதே
சாகாயாம் வட வ்ருஷஸ்ய பல்லவே து ஸூசிஸ் மித –பாரதம் -ஆற –188-94-
(உலகம் எல்லாம் நாசம் அடைந்த பிறகும் ஆல மரக் கிளையில் உள்ள இளம் தளரில்
இனிய புன் முறுவலுடன் கூடிய இக் குழந்தை எப்படிப் படுத்துக்க கொண்டு இருக்கிறது)என்று
ஆயிற்று அவர்கள் எழுதுகிற பாசுரம்
ஆல் அன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
அவ்வால் தான் அன்று மண்ணைக் கரைத்து பொகட்ட ஜகத்திலே உள்ளதோ-
நிராலம்பநமான ஆகாசத்தில் உள்ளதோ –
அன்றிக்கே கார்ய ஆகாரம் குலைந்து கரந்து கிடக்கிற மண்ணிலே உள்ளதோ –
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு–
பருவம் நிரப்புவதற்கு முன்னே ஏழு பிராயத்தில் ஒருபடிப்பட
மலையைத் தரித்துக் கொண்டு நின்ற நீ சொல்லு –
இதுவும் ஓர் ஆச்சர்யம் இறே –
இதுவும் சொல்ல வேணும் -அதுவும் சொல்ல வேணும் -இம் மூன்றும் விஸ்மயமாய் இருப்பன
சில அகடிதங்களாய் இருந்தன
அவன் பின்னை இவர்களுக்குச் சொன்ன உத்தரம் ஏது-என்று ஸ்ரீ பட்டரைக் கேட்க
அவன் தானும் -ஆழ்வார் வந்தால் கேட்கக் கடவோம்-என்று நினைத்து இருந்தான் காணும் -என்ன
பின்னையும் நீ சர்வ ஆதார பூதனாம் அத்தனை போக்கி உன்னை ஒழிய புறம்பே ஒன்றுக்கு ஓன்று
ஆதாரமாக வல்லது ஓன்று உண்டோ –
அன்று அவன் சர்வ ஆதார பூதனாய் இருக்கிறபடியைக் கண்டு இது ஓர் ஆச்சர்யமே என்று விஸ்மிதர் ஆகிறார் -என்று–
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று
இங்கு நம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –
இப்படிப்பட்ட ஆச்சர்ய யோகத்தைச் சொல்லுகிறது –
பெரு மா மாயன் -என்று
அவனை ஒழியப் புறம்பே கால் காணித் தெய்வம் உடையோமோ நாம்
முந்துற ரக்ஷகன் ஆகிறேன் -என்று பச்சை இடுவித்துக் கொண்டு -சில நாள் கழிந்தவாறே வடிவைக் காட்டி –
நான் உன்னைப் போலே சாதகன் காண் -என்று சொல்ல –
அவனை விட்டால் போலே எடுத்துக் கழிக்கைக்குத் தான் ஒரு தேவதை உண்டோ நமக்கு –
மார்க்கண்டேயனை ரக்ஷிக்கிறேன் என்று சொல்லிப் பச்சை இடுவித்துக் கொண்டு
அநந்தரம் ஜடையைக் காட்டி –
நானும் உன்னைப் போலே சாதகன் -ஒரு தலையைப் பற்றிக் காண் இருப்பது -என்னை ஆஸ்ரயியுங்கோள்-என்று
பிறர் சொல்லும் வார்த்தையை மெய் என்று விஸ்வசித்து இருக்கும் படி -பிரமித்தாய் ஆகாதே -பொறு –
உனக்கு ஆஸ்ரயணீய ஸ்த்தலம் காண் -என்று கொடு போய்
சர்வேஸ்வரனைக் காட்டிக் கொடுத்தான் இறே –
கண்டும் தெளிந்து கற்றார் கண்ணற்க்கு ஆளின்றி யாவரோ
வண்டு உன் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி யீசனுடன் கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்குத் தன்னோடும் கொண்டு உடன் சென்று உணர்ந்துமே–திருவாய் -7-5-7- என்றபடி –
ப்ரஹ்மாணம் நீல கண்டஞ்ச யாஸ் ஸாந்யா தேவதாஸ் ஸ்ம்ருதா
பிரதி புத்தாந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –சாந்தி பர்வம் -350-36–
(பிரமனையும் ருத்ரனையும் மற்றும் தேவதையாகச் சொல்லப்படும் யாவரையும் ஞானிகள் சேவிக்க மாட்டார்கள்
ஏன் எனில் அவர்கள் அளிக்கும் பலன் அளவு பட்டது –)என்றபடி
ப்ரஹ்மாவையும் ருத்ரனையும் அல்லாத தேவதைகளையும் அறிவுடையராய் இருப்பார் ஆஸ்ரயியார்கள் –
அதுக்கு அடி என் என்னில் –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தில் இவனுக்கு அபேக்ஷை உண்டானால்
அவர்கள் அது கொடுக்க மாட்டார்களே —
அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வம் இல்லாமையால் –
இனி இவ்வருகே சிலவற்றை இறே கொடுப்பது -அவை அல்பம் இறே –
அவை அவன் இவனுக்குக் கொடுக்கவுமாம் இவன் அவனுக்குக் கொடுக்கவுமாய் இறே இருப்பது –
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிஷித்தாஸ் து பூஜநே
ஞாத்வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யா தேவமேவ ஹி-
(ஸ்கந்தன் ருத்ரன் இந்திரன் முதலான தேவதைகள் பூஜை செய்யும் விஷயத்தில்
ஞானிகளால் விலக்கப் பட்டு இருக்கிறார்கள்
இப்படி அறிந்து இம் மாதிரியாகவே பக்திக் கலப்பைச் செய்யாமல் இருக்கக் கடவன் –)-என்று அன்றோ சாஸ்த்ர விதி
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாத்துவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –ஸ்ரீ நான்முகன் -68-என்னக் கடவது இறே
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் அற்று இருக்க
பர்த்ராந்தர பரிக்ரஹம் பண்ணாது ஒழிகை இறே
இவள் அவனுக்காகை யாகிறது –
பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் –
இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே –
இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே
ஆகவே
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –
Leave a Reply