ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ சார சாரம் -திருமந்திர அதிகாரம்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

முக்தனுக்கு அநிஷ்ட பிரசங்கமும் பிராப்தி பிரசங்கமும் இன்றிக்கே இருக்க
ஸ்ரீ சர்வேஸ்வரனும் நித்ய நிர நிஷ்டனாய் -அவாப்த ஸமஸ்த காமனுமாய் இருக்க
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே-என்ன வேண்டிற்று என் என்னில் –
இவை ஸ்ருதிகளில் சொன்ன சாம காநாதிகளைப் போலே ஸ்வச் சந்த-பர வ்ருத்தி விசேஷம் –
இப்படி இங்கும் அங்கும் திருமால் இன்றி இல்லாமை கண்டவன் ஸ்ரீ த்வய நிஷ்டன் –

ஸ்ரீ ரெங்கத்தில் அருளிச் செய்யப்பட்டது

ப்ரணதிம் வேங்கடே சஸ்ய பதயோ விததீமஹி
யதுக்தயோ யதீந்த்ர யுக்தி ரஹஸ்யா நாம் ரஸாயநம் –

—————–

திருமந்த்ராதிகாரம் -என்னும் முதல் அதிகாரம் –

ரஹஸ்ய த்ரயத்தின் உபஜீவ்யத்வம்–ரஹஸ்ய த்ரய க்ரமம் -திரு அஷ்டக்ஷ அக்ஷரத்தின் உத்கர்ஷம் –
அக்ஷர விபாகம் -ப்ரணவார்த்தம் -அகாரார்த்தம் -லுப்த சதுர்த்யர்த்தம் -ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் –
உகார்த்தம் -மகாரார்த்தம் -உகாரார்த்த யோஜநாந்த்ரம் -நமஸ் சப்தார்த்தம் -சத் தூலாதி யோஜனைகள்-
ஸூஷ்ம யோஜநா ப்ராதான்யம் -நமஸ் சப்த வாக்யார்த்தம் -பாகவத சேஷத்வ ப்ரதிபாதனம் –
திரு மந்திரத்தின் உயிர் நிலை -உபாய ப்ரதிபாதனம் -நமஸ்ஸூ உபாய பரம் என்றதின் தாத்பர்யம் –
நாராயண சப்தார்த்தம் -சர்வ வியாபகத்வம் -சதுர்த்தீ விபக்த்யர்த்தம்-மங்களா சாஸநா வத்யகதை-வாக்யார்த்த நிரூபணம் –

மூலம் கிளை என ஓன்று இரண்டான மொழி இரண்டும்
மேல் ஓன்று இலை என நின்ற அவ்வித்தகன் தன்னுரையும்
காலம் கழிவதன் முன்னம் கருத்துறக் கண்டிடவே
ஞாலம் புகழும் நம் தேசிகர் தாம் நம்மை வைத்தனரே

ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஓருவர்க்கு உரியேனோ -என்கிறபடியே
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனாய் வந்து அநாதி கர்ம ப்ரவாஹத்தா ரஹஸ்ய த்ரயத்தின்
உப ஜீவ்யத்வத்தாலே அடிமை செய்யப் பெறாதே நின்ற ஷேத்ரஞ்ஞன் அவசர பிரதீக்ஷையான பகவத் கிருபையாலே புரிந்து
சதாச்சார்ய முகத்தால் பெற்ற ரஹஸ்ய த்ரயமாகிற சம்சார பேஷஜத்தை உபஜீவிக்கும் படி சொல்லுகிறோம் –

ஸ்வரூபம் தெளிந்தவனுக்கு அல்லது ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தில் அபிருசியும் –
தத் உபாய பரிக்ரஹமும் உண்டாகாமையாலே ஸ்வரூப வைஸத்ய ஹேதுவான திருமந்திரம் முற்பட அனுசந்தேயம் –
இதில் பிரதம பதத்திலே -சேஷியுமாய் -சரண்யமுமாய் தோற்றின பரத்வத்தை பத்நீ விக்ரஹ விசேஷங்களாலே
விசிஷ்டமாக வெளியிடுகையாலும்
மத்யம பதத்தில் சப்த அர்த்த ஸ்வ பாவங்களால் ஸம்ஷிப்தமாகத் தோற்றின உபாய விசேஷத்தை அனுஷ்டான முகத்தால்
காட்டுகையாலும் -மந்திரமாய் அஷட் கர்ணமாக உபதேசிக்க வேண்டின சேர்த்தியாலும்
திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து என்கிற கிரமத்தாலும்-அநவரதம் த்வயம் அனுசந்தேயம்
இவை இரண்டிலும் தோற்றின உபாயத்தை அதிகாரி விசேஷத்தையும் -இது துஷ்கர அங்க நிரபேஷமுமாய்-
ஸ்வ தந்திரமமுமான நிலையையும் -விரோதி நிவ்ருத்த அம்சத்தையும் வெளியிட்டு -அகிஞ்சனனைப் பர சமர்ப்பணத்திலே
மூட்டித் தளும்பாதபடி தேற்றுகையாலும் சரம ஸ்லோகம் அநந்தரம் அனுசந்தேயம்

இவற்றில் ஸ்ரீ மத் அஷ்டாக்ஷரம் ஆகிற மஹா மந்த்ரம் பல உபநிஷத்துக்களிலும் உப ப்ருமஹணங்களிலும் ப்ரஸித்தமாய்
த்ரயோ வேதா -ஷட் அங்காநி -இத்யாதிகளில் படியே -ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எல்லாவற்றிலும் உள்ள
சாரதமங்களைப் பொதிந்து கொண்டு இருப்பதாய்
யத் அஷ்டாக்ஷர சம்சித்த -இத்யாதிகளில் படியே சர்வ அநிஷ்ட நிவர்த்தந ஷமமாய்
ஐஹி லௌகிகம் ஐஸ்வர்யம் –இத்யாதிகளில் படியே சர்வ புருஷார்த்தங்களுக்கும் ஸாதனமாய்
ஸக்ருத் அஷ்டாக்ஷரம் ஜப்த்வா-இத்யாதிகளில் படியே ஜெப அர்த்த ஞானாதி முகத்தால் கர்ம யோகாதிகளுக்கு
எல்லாவற்றுக்கும் உபகாரமாய்
ந ஸ்வர பிரணவ அங்காநி -என்றும் -வைதிகம் தாந்த்ரிகம் சைவ -இத்யாதிகளில் படியே
தாம்தாம் அதிகார அனுகுணமாக சர்வ வர்ணங்களுக்கும் உப ஜீவ்யமாய்
சேதன அசேதன சர்வம் -இத்யாதிகளில் படியே சேஷ சேஷி சர்வ தத்வ கண்ட கண்டோக்திமத்தாய்
கிம் தத்ர பஹுபி மந்த்ரை -என்றும் -ஏக அஷ்டாக்ஷர ஏவாயம் அலமாத்ம வி ஸூத்தாய -என்கிறபடியே
சர்வ மந்த்ர நைரபேஷ்யகரமாய் -அலம்-போதுமானது என்றவாறு –
ஸர்வத்ர அஷ்டாக்ஷரோ மந்த்ர மூர்த்தி மந்த்ரோ யதா பவேத் -என்கிறபடியே சர்வ பகவந் மூர்த்திகளுக்கும் சாதாரணமாய்
ந மந்த்ர அஷ்டாஷராத் பர –என்று இதற்கு மேற்பட்ட மந்த்ரம் இல்லை
மந்த்ராணாம் பரமோ மந்த்ர -இத்யாதிப்படியே சர்வ வியாபக மந்திரங்களிலும் பிரதானமாக இருக்கையாலே –
சர்வ ஆச்சார்யர்களும் இத்தையே ஆதரிப்பார்கள்

ஆழ்வார்களும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள்
எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் -என்று இம் மூல மந்த்ரத்தையே பரம புருஷார்த்த மூலமாக அருளிச் செய்தார்கள்
அனுகூல பிரதிகூல சாதாரண ஜென்மம் போல் அன்றிக்கே –
பிறந்த பின் மறந்திலேன் -என்கிற ஸ்ரேஷ்ட ஜென்மம் ஆச்சார்யர் உபதேசித்த திரு மந்த்ரம் அடியாக வருகிறது

இதில் பாதங்களை ஒரு அக்ஷரம் என்றும் -இரண்டு அக்ஷரங்கள் என்றும் -ஐந்து அக்ஷரங்கள் என்றும் சுருதிகள் வகுத்தன –
இது -நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய -என்றும் –
நல்வகையால் நமோ நாராயணா -என்றும் சொல்லுகிறபடியே பிரணவ ரஹிதமான போதும் அஷ்டாக்ஷரமாம் படி
தத்ர உத்தராயணஸ்ய ஆதி என்கிற நாரதீய வசனத்தாலே சித்தம்
இது -நமோ நாராயணேத் யுக்த்வா ஸ்வபாக புநராகமத் -ஸ்ரீ கைசிக மஹாத்ம்யம் -நமோ நாராயணா என்று சொல்லி
நம்பாடுவான் திரும்பவும் வந்தான்

நாமம் சொல்லில் நமோ நாராயணமே –இத்யாதிகளில் படியே பிரணவ சதுர்த்திகளை ஒழிந்தால் சர்வாதிகாரமாம் –
இதில் பிரதம பதத்தை–மூலமாகிய ஒற்றை எழுத்தை ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்தார்
ஆத்யந்து தர்யக்ஷரம் ப்ரஹ்ம -என்றும் -மூன்று எழுத்ததனை -என்றும் இத்யாதிகளில் படியே
அநந்த சாகங்களான வேதங்களுக்கும் இம்மந்திரம் தனக்கும் மூலமாய் –
இது அறிந்தவனை வேத வித்து என்னும்படி சர்வ சார ஸங்க்ரஹமாய் இருக்கும்
ஏக பதமான இதில் அக்ஷர த்ரயம் நிர்வசன பலத்தால் தனித்தனியே பதமாய் மூன்றும் கூட ஒரு வாக்கியம் ஆகிறது –
இந் நியாயம் நமஸ்ஸிலும் வரும்

அகாரார்த்தம்
இதில் பிரதம அக்ஷரம் ரூடியாலே விஷ்ணு வாசகம் என்னும் இடம் ஸ்ருதி ஸ்ம்ருதி நிகண்டுக்களாலும் பிரயோகங்களாலும் சித்தம் –
இது சப்த அர்த்த ஸ்வ பாவங்களால் சர்வ சங்க ராஹகம்-
வேதாந்தங்களில் படியே இங்கு முற்பட பரதத்வ லக்ஷணமான காரணத்வம் அறிய வேண்டும் –
காரணமே சரண்யம் என்று ஸ்ருதி சித்தம் ஆகையால் சரண்யதைக்கு மிகவும் உபயுக்தமான ரக்ஷகத்வமும் அறிய வேண்டும் –
ஆஸ்ரிதருடைய பேறு தன் பேறாக ரஷிக்கும் என்று அறிகைக்காக சேஷித்வமும் அறியவேண்டும் –
ஆகையால் ஸ்ரீ யபதியினுடைய -சர்வ காரணத்வமும் -சர்வ ரக்ஷகத்வமும் -சர்வ சேஷித்வமும் ஆகிற
பிரதான அர்த்தங்கள் இங்கே பிரதான ப்ரதிபாத்யங்கள் –
இவற்றால் -ஒன்றும் தேவும் -இத்யாதிகளில் படியே திரிமூர்த்தி சாம்யாதிகளும் கழியும்
சர்வ வாஸ்ய மூலமான சர்வேஸ்வரன் சர்வ வாசக மூலமான இவ்வஷரத்துக்கு வாச்யன் என்று
ஸமஸ்த சப்த மூலத்வாத்–இத்யாதி புராண வசனத்தாலும் வேதார்த்த ஸங்க்ரஹத்திலும் ப்ரதிபாதித்தபடியே
இது சர்வ காரண பூதனைக் காட்டுகிறது

அவ ரஷனே -என்கிற தாதுவிலே -வ்யுத்பன்னமாய் ரக்ஷகனாகவும் சொல்லுகிறது
இந்த ரக்ஷணம் சங்கோசம் இல்லாமையால் சர்வ விஷயம்
இது ரக்ஷணீயருடைய ஸ்வரூபாதிகளிலும் -நித்ய முக்தர் பக்கலிலும் நிருபாதிகம்
மோக்ஷ ப்ரதானாதிகளில் வைஷம்ய நைர்க்ருண்ய சர்வ முக்தி பிரசங்காதிகள் வாராமைக்காக
ஸ்வ தந்த்ர ஸ்வாமி சோதிதங்களான வியாஜங்களை முன்னிட்டு இருக்கும் ரக்ஷகத்வம்
ரக்ஷகத்வம் -விரோதியைப் பற்ற -விரோதித்வம் புருஷார்த்தத்தைப் பற்ற –
இவை மூன்றும் பத த்ரயத்திலே அடைவே கண்டு கொள்வது –

லுப்த சதுர்த்த்யர்த்தம்
இவ்வக்ஷரத்திலே-தாதார்த்ய சதுர்த்தி ஏறி லோபித்துக் கிடக்கிறது -என்னும் இடம் பிரணவத்தைக் கொண்டு
ஆத்ம சமர்ப்பணத்தை விதிக்கிற ஸ்ருதி யாதிகளில் ஒவ்சித்யத்தாலே சித்தம்
தாதர்த்யமாவது -சேஷத்வம் -அதாவது தனக்கு உபகாரத்தை பிரதானமாகப் பற்ற அன்றிக்கே பர உபகார அர்ஹமாகை
த்வம் மே என்று ஸ்வாமி தொடர -அஹம் மே என்று திமிரப் பண்ணும் அஹங்காரத்தாலே அசத் கல்பனாவானை
சேஷத்வ ஞானம் உஜ்ஜீவிப்பிக்கிறதையாலே அதன் பிரதான்யம் தோற்ற சம்பந்தித்தினுடைய விதி நிஷேதத்துக்கு
பொதுவான தர்மி நிர்த்தேசத்துக்கு முன்னே இச் சேஷத்வம் பிரகாசித்தம் ஆயிற்று –

இதுக்கு பிரதி சம்பந்தியான ரக்ஷகனுடைய சேஷித்வம் பலிதம்
கால அவச்சேதம் இல்லாமையால் இதுக்கு அயோக வியவச்சேதம் சித்தம் –
இத்தாலே சரீரீ சரீர பாவமும் பலிதம்
இங்கு பிரகிருதி ப்ரத்யயங்களாலே தோற்றின ரக்ஷகத்வ சேஷித்வங்களுக்கு
அஞ்ஞான துக்க பஹுளையான லீலா விபூதியிலும்
ப்ரகாசாதி பஹுளையான நித்ய விபூதியிலும் பிராசுர்யேன உபயோகம்
காரண பூதன் ரக்ஷகன் ஆகையால் பிதாவினுடைய ரக்ஷகத்வம் போலே இது விஸ்வசனீய தமமாகும்
சேஷீ ரக்ஷகன் ஆகையால் பிரியனான பதி வைத்யனாமாம் போல் ஹ்ருத்ய தமமுமாம்

இக் காரணத்வாதிகளுக்கு உப யுக்தங்களாய் பிராமண சித்தங்களான ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வாதிகளும்
ஸ்ரீ லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேச-என்றும் அஸ்யா மம ச சேஷம் ஹி -என்றும் இத்யாதிகளில் படியே
ஸ்ரீ த்வயத்தில் போலே சர்வ ரக்ஷண தீஷிதனான சர்வ சேஷியினுடைய
ஸஹ தர்ம சாரிணீ சம்பந்தமும் இங்கே அனுசந்தேயம் –

உகாரார்த்தம்-
மத்யம அக்ஷரம் ஸ்ருதிகளில் பிரயோக விசேஷ பிரசித்தியாலே அவதாரண அர்த்தமாக
கீழ்ச் சொன்ன தாதர்த்யத்தை அந்ய யோக வியவச்சேதத்தாலே நியமிக்கிறது –
அகார வாஸ்யனான ஸ்ரீ யபதிக்கே நிருபாதிக சேஷம் என்றதாயிற்று
இத்தால் ஜீவர்களைப் பற்ற நிருபாதிக சேஷத்வம் கழிகையாலே தேவதாந்த்ர பரித்யாகமும் பலிக்கும்
இது ததீய பர்யந்தம் என்னும் இடம் –
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று காட்டப்பட்டது
இப்படிப்பட்ட அநந்யார்ஹ சேஷத்வம் -தாச பூத சரணாகதோஸ்மி -என்றும்
தவாஸ்மி தாச இதி வக்தாரம் மாம் தாரய-என்கிறபடியே
பத த்ரயத்திலே தோற்றுகிற ஸ்வரூப பிரதிபத்தியிலும் -உபாய பரிக்ரஹத்திலும் -புருஷார்த்த பிரார்த்தனையிலும்
அனுசந்தேயம் என்னும் இடத்தை
குல தொல்லடியேன் –புகல் ஓன்று இல்லா அடியேன் -ஆரா அன்பில் அடியேன் -என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் –

மகார்த்தம்
த்ருதீய அக்ஷரம் கீழ்ச் சொன்ன சேஷத்வத்தினுடைய ஆஸ்ரயத்தைக் காட்டுகிறது –
இத்தை -மந ஞாநே -மநு அவ போதநே–என்கிற தாதுக்களிலே நிஷ்பன்னமான பதம் என்றும்
சாந்தச பிரகிரியையாலே அஸ்மத் சப்தத்தில் லுப்தா சேஷமாய் நிற்கிறது என்றும் யோஜிப்பார்கள்
இது ஜீவ வாசகம் என்னும் இடம் ஆத்ம சமர்ப்பண விதி வாக்யத்தாலே
சமர்ப்பணீயனான ஆத்மாவுக்கு பிரகாசமாக பரிசேஷ சித்தமாகையாலும்
அகாரம் முதலாய் மகாரம் அறுதியான வர்ணங்களை பஞ்சக விம்சக தத்துவங்களுக்கு வாசகங்களாகத்
தத்வ சாகர ஸம்ஹிதாதிகளிலே சொல்லுகையாலும்
மகாரம் ஜீவபூதம் து -என்றும் -ஆத்மா சது மகாரோயம் பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித -என்றும் விசேஷிக்கையாலும் சித்தம் –

இப்படிகளாலும் இது ஞான ஸ்வரூபனாய் -ஞான குணகனாய்-இரண்டு ஆகாரத்தாலும் அனுகூல ஸ்வ பாவனாய் –
ஸ்வயம் பிரகாசனாய் -ப்ரத்யக்காய் -தேஹாதி விலக்ஷணனாய் -குண த்ரய ரஹிதனாய் -அணுவாய் –
நிருபாதிக சர்வ சேஷியில் காட்டில் அத்யந்த பின்னனுமான ஜீவனைச் சொல்லுகிறது –
இவ்வஷரம்-ஜாதி ஏக வசனமாய் த்ரிவித ஆத்மாக்களும் சொல்லுகிறது ஆகவுமாம்
அகாரார்த்தாயைவ ஸ்வமஹமத மஹ்யம் ந இத்யாதிகளில் படியே விசேஷித்துத் தன்னையே காட்டுகிறது ஆகவுமாம் -இப்படி
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம்-என்றும்
ஸ்வத்வ மாத்மநி சஞ்சாதம் -என்றும்
தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -என்றும்
தாஸத்வாத் வாஸூ தேவஸ்ய -என்றும் இத்யாதிகளில் படியே தன்னை ஸ்ரீ யபதிக்கு அநந்யார்ஹ சேஷ பூதன் என்று அறியவே
தன்னுடைய குண விக்ரஹாதிகளிலும் இச் சேஷத்வம் கைமுதிக நியாயத்தால் சித்திக்கிறது -இது உப லக்ஷணம் ஆகவுமாம்
இங்கே -அகாரார்த்தோ விஷ்ணு -என்கிற ஸ்லோகத்தைப் படிப்பது –

உகாரார்த்த யோஜனாந்தரம்
கட ஸ்ருதியில் சொன்ன யோஜனாந்தரத்தில் மத்யம அக்ஷரம் ஸ்ரீ லஷ்மீ வாசகமாய்ப் பூர்வ அக்ஷரத்தோடு சமஸ்தமாகிறது –
அப்போது அவதாரணம் அர்த்த சித்தம் -ஒரு சப்தத்துக்கு வ்யுத்பத்தி பேதத்தால் அர்த்த பேதம் சொல்லுகை ஸ்ருதியாதிகளிலே பிரசித்தம்
அக்ரத ப்ரயயவ் ராம -ஆரண்ய -11-11-என்கிற ஸ்லோகத்தில் பூர்வர்கள் வார்த்தையை இங்கே அனுசந்திப்பது
மம நாத -ஸ்தோத்ர ரத்னம் -53-என்கிற ஸ்லோகத்திலும் இதில் அக்ஷரார்த்த வாக்யார்த்தங்கள் நிற்கிற நிலையைக் கண்டு கொள்வது

காரணமும் காவலனுமாகி என்றும் கமலையுடன் பிரியாத நாதனான
நாரணனுக்கு அடியேன் நான் அடிமை பூண்ட நல்லடியார்க்கு அல்லால் மற்று ஒருவர்க்கு அல்லேன்
ஆரணங்கள் கொண்டு அகமும் புறமும் கண்டால் அறிவாகி அறிவதுமாய் அறு நான்கு அன்றிச்
சீரணிந்த சுடர் போலத் திகழ்ந்து நின்றேன் சிலை விசயன் தேர் அனையச் சிறு வேதத்தே

அகாரார்த்தம் -காரணத்வம் -ரக்ஷகத்வம் -சேஷத்வம் -ஸ்ரீ யபதித்தவம் -நான்கு அர்த்தங்களும்
சதுர்த்தி அர்த்தமான -தாஸ்யத்வமும் பாகவத சேஷத்வமும்
மத்யம பதார்த்தமான ததீயபர்யந்த தேவதாந்த்ர வர்ஜனமும்
மகாரார்த்தமான -ஞான ஸ்வரூபத்வமும்-ஞாத்ருத்வமும் —ஆக ஒன்பது அர்த்தங்களும் இப்பாட்டில் கூறப்பட்டுள்ளன

————————

நமஸ் -சப்தார்த்தம்
வாக்யங்களுக்கு அவதாரணத்திலே தாத்பர்யம் கொள்ள உசிதம் ஆகையால் ப்ரணவத்தில் அவதாரணத்தோடே
துவக்கி மத்யம பதம் உதிக்கிறது –
நம இத்யேவ வாதிந-
நம இத்யேவ யோ ப்ரூயாத் -என்று விசேஷித்து ஆதரணீயமான இப்பதத்துக்கு ஸ்தூலம் -ஸூஷ்மம் -பரம் -என்று
அர்த்த பேதங்கள் ஸ்ரீ பகவத் ஸாஸ்த்ர -நிருத்தங்களிலே– சொல்லப்பட்டன-
இவற்றில் ஸூஷ்ம யோஜனை விரோதி ஞானத்துக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனைக்கும் பரதந்த்ர ஸ்வரூப நிஷ்கர்ஷத்துக்கும் –
பாகவத சேஷத்வ பிரதிபத்திக்கும் -உபாய விசேஷ ஸித்திக்கும் -உபயுக்தமாகையாலே
இத்தை விசேஷித்து ஆச்சார்யர்கள் அனுசந்திப்பார்கள்

நம சப்த வாக்யார்த்தம்
இந் நமஸ் -ந என்றும் ம என்றும் இரண்டு பதமாய் -ஒரு வாக்யமாகிறது –
கீழ் மேல் உள்ள விரோதிகள் பரிஹரணீயன்கள் என்று தோற்றுகைக்காக நிஷேத்யத்துக்கு முன்னே ஷேத வாசியான சப்தம் கிடக்கிறது
ம -என்கிற இது கீழ்ச் சொன்ன பிரகாரங்களாலே ஜீவ வாசியான அக்ஷரத்திலே ஷ்ஷட்யேக வசனமாய் -எனக்கு -என்கிறது –
இவ்வபிமானம் இத்தை முதலாகக் கொண்டு வரும் விரோதி வர்க்கங்கள் எல்லா வற்றுக்கும் உப லக்ஷணம்
விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனைக்காக இவ்விருது ஞானமும் அத்யந்த உபயுக்தம்-இங்கே த்ருதீய அக்ஷரத்தை அனுஷங்கித்து அந்வயிப்பது
அஹம் மே என்று அநாதியாக பிரமிப்பித்தவன் இப்போது ஆத்மாபி சாயம் ந மம-என்கிறான்
இத்தை அத மஹ்யம் ந -என்றார்கள் -சம்பந்த சாமான்ய சஷ்ட்டி இங்கு தாதர்த்யத்தை விவஷிக்கிறது என்று தாத்பர்யம் –
தன்னைப் பற்றத் தனக்கு நிஷேத்யமான தாதர்த்யம் ஆகார பேதத்தாலே வருகையால் ஆத்மாஸ்ரய தோஷம் இல்லை
தான் தனக்குப் பண்ணிக் கொள்ளும் அதிசயமும் பரார்த்தம் என்று அனுசந்திக்கைக்காக இங்கு தான் தனக்கு சேஷம் அல்லன் என்கிறது –
தான் தனக்கு உரியன் அல்லன் ஆனால் தனக்கு வேறு ஒன்றையும் பற்ற நிருபாதிக சேஷித்வம் இல்லையாம் –
இது தன்னையே இங்குச் சொல்லிற்று ஆகவுமாம் –
அப்போது கிஞ்சித் என்று ஒரு பதத்தை அத்யாஹாரித்து-ந மம கிஞ்சித் -என்று ஒரு வாக்யமுமாம் –
இது தன்னாலே தன்னையையும் தன் உடைமையையும் சேரத் தன்னோடு துவக்கு அறுக்கிறான் ஆகவுமாம்

இத்தால் -யானே என் தனதே என்று இருந்தேன் -என்கிற சம்சார மூலங்கள் சேதிக்கப் படுகின்றன
கீழ் சாமான்யேந அந்ய சேஷித்வம் கழிந்து இருக்க கோபலீ வர்த்த நியாயத்தாலே இங்கு விவஷிக்கிறது –
ஸ்த்ரீ கரண அர்த்தமாகவுமாம் –
இவ்வர்த்தங்களை கீழே ஸித்தமாக்கி–என் நான் செய்கேன் -இத்யாதிகளில் படியே
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தியை இங்கே அனுசந்திக்கவுமாம் –
லோக த்ருஷ்ட தாசாதிகளில் படி அன்றிக்கே ஜீவர்களுடைய கர்த்ருத்வம் ஸ்வார்த்தமாக ஸ்வ தந்த்ர ஸ்வாமி கொடுத்ததாய் –
அவன் இட்ட வழக்காய் இருக்கையாலே கீழ்ச் சொன்ன பர சேஷத்வத்தோடே கூட பராயத்த கர்த்ருத்வம் இங்கே அனுசந்தேயம் ஆயிற்று –
காரணத்வம் தத்வத்ரய சாதாரணம்
கர்த்ருத்வம் ஜீவ ஈஸ்வர சாதாரணம்
இதில் பராதீன கர்த்ருத்வம் த்ரிவித சேதன சாதாரணம்
ஸ்வாதீந கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கே அசாதாரணம்
இப்படி இருக்க அநாதி கர்ம வசத்தாலும் -ப்ரவ்ருத்தி சாஸ்திரங்களில் ஆபாத ப்ரதீதியாலும் பிறந்த
நிரபேஷ கர்த்ருத்வ அபிமானத்தை விடுகையே இங்கு நிவ்ருத்த ஸாஸ்த்ர நிஷ்டை –

பாகவத சேஷத்வ ப்ரதிபாதனம் –ஸ்ரீ திருமந்திரத்தின் உயிர் நிலை –
இப்படி ததேக சேஷ பூதமாகவும் ததேக நியாம்யமாகவும்-பத த்வயத்தாலே சிஷிதமானால்
யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்யதே
ஈஸ்வரேண ஜகத் சர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே -என்று அபியுக்தர் சொன்னபடியே
ஸ்வ தந்த்ர ஸ்வாமி விநியோகத்தாலே பாகவத சேஷத்வம் பிராப்தம் ஆகிறது –
ஈஸ்வரன் ஸ்வா தந்தர்யத்தாலே இஷ்ட விநியோகத்துக்கு சக்தன் -ஸ்வாமித்வத்தாலே ப்ராப்தன்

ஞாநீ த்வாத்மைவ மே மதம் -என்னும் இவனுக்கு ஸ்வ அதிசயத்தைக் காட்டிலும்
ஸ்வ ஆஸ்ரித அதிசயம் அபிமதம் ஆகையால் தச் சேஷத்வம் ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று –
மேல் சதுர்த்தியில் ப்ரார்த்த நீயமான கைங்கர்யமும் ததீய பர்யந்தம் -ஒருவன் தானே வேறு ஒருவருக்கு அதிசயத்தை
விளைகிற வேஷத்தாலே சேஷமாய் -அவர்களால் வரும் அதிசயத்துக்கு ஆஸ்ரயமான வேஷத்தாலே சேஷியுமாகை விருத்தம் இல்லாமையால்
பிரபவோ பகவத் பக்தா மா த்ருஸாம் சததம் த்விஜ -என்றும்
உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிற அனுசந்தானம் சர்வ பாகவதருக்கும் சமாநம்
இப் பிரதிபத்தி ஒத்து இருந்தாலும் ப்ரவ்ருத்தி சிஷ்ய ஆசார்யாதிகளுக்குப் போலே
ஸ்வ தந்த்ர ஆஜ்ஜையாலே வியவஸ்திதையாய் இருக்கும்
இங்கே அடியார் என்கிறது -பகவச் சேஷத்வ ஞானவான்களான பிரதிபுத்தரையும் -நித்யரையும் -முத்தரையும் –
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கையாலே இதுவே
ஸ்ரீ திருமந்திரத்தின் உயிர் நிலை

உபாய ப்ரதிபாதனம் –
இப்படி ஸ்வ தந்த்ர ஸ்வாமி இட்ட வழக்கான தனக்கு அவன் நடத்தின நல் வழியாலே அவனை பிரசன்னனாக்கிப்
புருஷார்த்தம் பெற வேண்டுகையாலே யதாதிகாரம் ஸ்ரீ த்வயத்திலும் ஸ்ரீ சரம ஸ்லோகத்திலும் சொன்ன
வசீகரணம் இங்கே அர்த்த சித்தம்
சரணம் பிரதி தேவா நாம் ப்ராப்த காலம் அமந்யத–என்கிற இடத்தில் தமயந்தீ நமஸ்ஸை பிரயோகித்தாள்-என்கையாலும்
கச்சத்வம் ஏநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா–என்று உபதேசிக்க –
நமஸ் சக்ருர் ஜனார்த்தநம் -என்று பாண்டவர்கள் நமஸ்ஸைப் பண்ணினார்கள் என்கையாலும்
மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரத்திலே நமஸ்ஸூ ஆத்ம நிவேதந பரம் என்கையாலும்
ஸாத்ய உபாய விசேஷ பரமான யோஜநா விசேஷத்தாலும்
அபியுக்தரும் -நமஸ் சப்த ப்ரதானார்த்த ஸ்வாஹா சப்த இவ இஷ்யதே -சமர்ப்பித்தல் என்னும் அர்த்தம்
ஓத்துக் கொள்ளப்பட்டது -என்கையாலும்
இந்த நமஸ் சப்தம் தானே தன் துவக்கற சங்க பரந்யாஸத்தைக் காட்டுகிறது ஆகவுமாம் –

நமஸ் ஸூ உபாய பரம் என்பதின் தாத்பர்யம்
தாச இதி ப்ரபந்ந இதி ச–ஸ்ரீ சதுஸ் ஸ்லோஹி -2- என்கிற அடைவே ப்ரணவத்திலே சம்பந்த ஞானமும் –
நமஸ்ஸிலே உபாயமுமாகச் சொன்னவர்கள் தாமே சம்பந்த ஞானமே உபாயம் என்கிற இது
இதன் பிரதான விவஷையாலே யாம் அத்தனை
இதுக்கு ப்ராதான்யம் -ஆத்ம அபிமான அனுகுண புருஷார்த்த வியவஸ்தையாலே ஐஸ்வர்யாதிகளை அருவருப்பித்து
ஸ்வரூப அனுரூபமான பரம புருஷார்த்தத்திலே ருசியையும் த்வரையையும் விளைப்பித்துத்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்யும்படி பண்ணுகை

யான் எனது என்பது ஓன்று இல்லை என் செய்வது அவனை அல்லால்
ஆனது அறிந்திடும் தன் அடியார்க்கு என்னை ஆட்படுத்தித்
தான் என்னை நல்கி நடத்துகின்றன தன் அருள் வழியே
நான் உன்னை வீடு செய்வேன் என்ற நம் திரு நாரணனே

இப்பாட்டில் நமஸ் சப்த அர்த்தமாக
ஸ்வ ஸ்வாமித்வ நிவ்ருத்தி -ஸ்வகீய ஸ்வாமித்வ நிவ்ருத்தி-ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி –
பாகவத சேஷத்வம் -சரணாகதி -ஆகிய ஐந்தும் சொல்லப்பட்டன

————-

நாராயண -சப்தார்த்தம்
இப்படி நமஸ்ஸிலே தோற்றின வசீகரணத்துக்கு இலக்காய் -ரக்ஷகனாய் நிற்கிற -சேஷியின் படியை நேத்ருத்வாதி முகத்தாலும்
வசீகர்த்தாவாய் ரக்ஷணீயனாய் நிற்கிற சேஷபூதன் படியை நியாம்யத்வாதி முகத்தாலும் வெளியிடுகிறது நாராயண சப்தம்
நரன் பக்கலிலே பிறந்தவை நாரங்கள் என்றும் -இவன் நேதாவாய் கதியாய் இருக்கிறான் என்றும்
இவற்றை வாசஸ்தானமாக யுடையவன் என்றும் சொல்லுகையாலே
பிரதம அக்ஷரத்தில் தோற்றின காரணத்வ ரக்ஷகத்வ சேஷித்வங்களும் இங்கே விசதமாகின்றன
இஸ் ஸங்க்ரஹ விவரணங்களிலே சேஷ சேஷிகளுடைய நிரூபணம்
ராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –ஸூந்தர -28-10-என்கிற க்ரமத்திலே நிற்கிறது
இந் நாராயண சப்தம் தத் புருஷனாயும் பஹு வ்ரீஹியாயும்-இரண்டு படி சமஸ்தமாய் இருக்கும்
இதன் அர்த்தத்தை ஆழ்வார்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் என்றும்
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்றும் அருளிச் செய்தார்
நான் உன்னை அன்றி இலேன் இத்யாதிகளையும் இங்கே அனுசந்திப்பது –
ஆபோவை நரஸூநவ
நாராஜ் ஜாதாநி தத்தவாநி
நர சம்பந்தி நோ நாரா -நரஸ் ச புருஷோத்தம
ஜஹ்னுர் நாராயண நர -இத்யாதிகளில் படியே நர சப்தத்தாலும் நாராயணன் தன்னையே சொல்லுகிறது இது
நயத் யகில விஞ்ஞானம் நாஸயத் யகிலம் தம
நரிஷ்பதி ச ஸர்வத்ர -என்று வ்யாக்யாதம் ஆயிற்று

ந்ரூநயே-என்கிற தாதுவிலே -அச் ப்ரத்யயமாய் -நர -என்று பதமாம்-
ரீங் ஷயே என்கிற தாதுவிலே ர் ப்ரத்யயமாய் -ர என்று பதமாய் -நக நைகாதி சப்தங்களில் போலே
நஞ்சோடு சமஸ்தமாய் -நர என்கிறதாகவுமாம்
நேதா -என்றால் -தேஷாம் சதத யுக்தாநாம் -இத்யாதிகளில் படியே ஞான பிரதாதிகளைப் பண்ணும் என்கிறது
ஷயிஷ்ணு அல்லன்-என்றால் ஸ்வரூப விகாரத்தை யாதல் ஸ்வ பாவ விகாரத்தை யாதல் உடைத்தான
வஸ்த்வந்தரங்களிலே வேறுபட்டவன் என்றதாம்
சங்கல்ப ப்ரீத்யாதி ஸ்வ பாவ விகாரங்கள் ஸ்ருதி சித்தங்களாய் குண ரூபங்களும் ஆகையால் விகாராதி நிஷேதம் அந்ய விஷயம்
பிரபஞ்ச ரூப பரிணாமம் பாலனானவன் யுவாவான கணக்கிலே ஸ்வரூபத்திலே தட்டாது
நர ஸூ நுக்களான அப்புக்கள் நாரங்கள் என்றால் போலே சொன்னது வஸ்துவந்தரங்களையும் உப லஷிக்கிறது
நர சம்பந்தி நாரம்-என்கிற வ்யுத்பத்தியில் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் முதலாக சர்வமும் சாப்தம்-

நாரோ நராணாம் ஸங்காத
நாரஸ்தவிதி சர்வ பும்ஸாம் சமூக -இத்யாதிகளை உப லக்ஷண பரங்கள் –
இவ்விடத்தில் நர சப்தம் ஜீவ வாசியாய் இவன் க்ஷயிஷ்ணு அல்லன் என்கிறது –
இத்தால் முன்பு தேகாதி விலக்ஷணனாக சோதிதனான இவனுக்கு
சரீர உத்பத்தி யாதிகளும் ஞான சங்கோசாதிகளுமே உள்ளன
ஸ்வரூபத்தில் நாமாந்தர பஜன அர்ஹ அவஸ்தைகள் இல்லை என்றதாயிற்று
நராணாம் ஸங்காத-என்கிற இடத்தில் நர சப்தத்தால் சேதன அசேதனங்கள் இரண்டையும் சொல்லவுமாம்
அப்போது விகாரியான அசேதனத்தில் ஸ்வபரூப நித்யதையும் -விகார அம்சத்தில் பிரவாஹ நித்யதையும் சொல்லிற்றாம்
இவ்விடத்தில் சமூக அர்த்தத்தில் அண் ப்ரத்யயமாய் -அந்த சமூகங்கள் தான் பலவாகையாலே
நிவஹா நராணாம் நித்யா நாம் அயனம் இதி நாராயண பதம் -என்றார்கள்
நாரங்களுக்கு -அயனம் -என்னும் போது
அயன சப்தத்துக்கு -கதிரா லம்பனம் தஸ்ய -என்று வியாக்யானம் பண்ணுகையாலே
இதில் கரண வ்யுத்பத்தியாலே உபாயத்வமும் –
கர்மணி வ்யுத்பத்தியாலே உபேயத்வமும்
அதிகரண வ்யுத்பத்தியாலே ஆதாரத்வமும் சித்திக்கிறது
இவ் உபாயத்வ உபேயத்வங்கள் சேதனனைக் குறித்தவனாய் –
தாரகத்வம் பிராமண அநு சாரத்தாலே சேதன அசேதனங்கள் இரண்டையும் பற்ற வாகிறது

சர்வ வியாபகத்வம்
நாரங்களை அயனமாக உடையவன் என்ற போது அயன சப்தம்
வாசஸ்தானத்தை யாதல் வ்யாப்யத்தை யாதல் சொல்லுகையாலே நிரதிசய ஸூஷ்மதையாலே
சர்வத்திலும் உள்ளும் புறமும் ஒழி வற நிறைந்து நிற்கிற நிலை தோற்றும் –
இவ்விடத்தில் அவன் இல்லாத பிரதேசம் இல்லை என்கையில் தாத்பர்யம் –
இது நியமனத்தோடே கூடின வ்யாப்தி யாகையாலே ஆகாசத்திலும் ராஜாவிலும் காட்டில்
வ்யாவ்ருத்தி தோற்றுகையாலே சர்வ சரீரகத்வமும் பலிக்கும்
இங்கே அவன் ஒருவனுக்கே சர்வ ஆதரத்வாதிகள் தோற்றுகையாலும்
விகாரியான அசித்திக்கும் நிர்விகாரமான ஜீவனுக்கும் பிரிவு தோற்றுகையாலும் தத்வ த்ரய விவேகம் பிறக்கிறது

கறந்த பாலுள் நெய்யே போல் -என்கிற விவேக க்ரமத்தைச் சொல்லுகிற
ப்ரஹ்ம பிந்து வாக்யத்தையும் இங்கே அனுசந்திப்பது
ஸ்வேதாஸ்வதராதிகளில் சொன்னபடியே ஜீவ ஈஸ்வரர்களுடைய சேதனத்வமும் -ஸ்வாபாவிகமான பேதமும் –
ஜீவர்களுடைய அந்யோந்ய பேதமும் -சர்வருக்கு ஈஸ்வரன் ஒருவனே சகல அபிமத ஹேதுவானபடியையும் –
உபாய பூதன் தானே ப்ராப்யபூதனான படியும் -இதுக்குச் சேர்ந்த உபய லிங்கத்வமும் –
உபய விபூதி யோகமும் -சர்வவித்த பந்துத்வமும் -இத்திரு நாமத்தில் ஸம்ஷிப்தங்கள்

நர -சப்தத்தில் சோதன வாக்யார்த்தமும் -நாரா சப்தத்தில் காரண வாக்யார்த்தமும்-
அயன சப்தத்தில் உபாசன வாக்யார்த்தமும் சங்க்ருஹீதம்
ஈஸ்வரனுக்கு பிரதம அக்ஷரத்தில் ரக்ஷகத்வாதிகளும்-நர சப்தத்தில் நித்யத்வாதிகளும்-
அயன சப்தத்தில் ஆதாரத்வாதிகளும் தோற்றுகையாலே-இவை மூன்றுக்கும் பிரயோஜன பேதம் உண்டு
இப்படி த்ருதீய அக்ஷராதிகளிலே ஜீவனுக்குச் சேதனத்தவ நித்யத்வ வியாப்யத்வாதிகள் தோற்றுகையாலே
இவையும் ச ப்ரயோஜனங்கள்

யாதாம் இவை அனைத்தும் படைத்து ஏந்தும் இறைவனுமாய்க்
கோதாம் குணங்களுடன் குறுகாத குணத்தனுமாய்
மாதா பிதா என்ன மன்னுருவாய்க் கதி என்ன நின்றான்
போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியனே

—————-

சதுர்த்தீ விபக்தி யர்த்தம்

இந்த நாராயண சப்தத்தில் சதுர்த்தியும் ஸ்வரூப பர யோஜனையில் தாதர்த்தயத்தையே காட்டுகிறது –
சமர்ப்பண பரமானால் ஸம்ப்ரதான ப்ரதர்ஸி நீ -என்று அஹிர்புத்ன்யன் வியாக்யானம் பண்ணினான்
பலபரமானால் நித்தியமான தாத்யர்த்தம் ப்ரார்த்த நீயம் இல்லாமையாலும்
இது தன்னை பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தி சொல்லுகையாலும் தாதார்த்யத்தை முன்னிட்டுத் தத் அனுகுணமாக
ப்ரார்த்த நீயமான யதாபிமத கைங்கர்யத்தை இங்கே காட்டுகிறது –
இங்கே பிரதான ப்ராப்யன் பரமாத்மா -நித்ய சம்பத்ந்தனுக்கு இப்போது பிராப்தியாவது பரிபூர்ண அனுபவம்
இதன் பரிவாஹமாய்க் கொண்டு கைங்கர்யம் ப்ராப்யம் ஆயிற்று
ப்ராப்தாவும் -அபி பாகேந த்ருஷ்டத்வாத்-4-4-4–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திரத்தின் படியே
பரம ப்ராப்ய விசேஷணமாய்க் கொண்டு ப்ராப்யம் ஆகிறான்

இங்கு கேவல ஆத்மாபிராப்தியில் சொன்ன ஸ்யவந தர்மத்வம் வாராது
மன்னுறில்–திருவாய் -1-2-5-இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது
முக்தனுக்குச் சொன்ன பரம சாம்ய போக மாத்திரத்திலே என்று ஸூத்ராதி சித்தம் –
பிராமாணிகனுக்கு இதுவே சாயுஜ்ய சப்தார்த்தம்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் இருத்தும் அப்பன் -3-7-7-என்று ஆழ்வார் அருளிச் செய்தார்
இப்படி முக்தனுக்கு பரமாத்ம லக்ஷணங்கள் ஒன்றும் வாராமையாலே -சேக்ஷத்வாதிகள் நிலை நிற்கையாலே –
கைங்கர்யம் உபபன்னம்-இதன் பிரார்த்தனைக்கு இங்கே உசிதமான கிரியா பதம் அத்யாஹாரம் –

ஆவிஸ் ஸ்யு மம ஸஹஜ கைங்கர்ய விதய-ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி -3-என்றார்கள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம் -என்றதாயிற்று
கீழில் பதங்களில் நிருபாதிக நித்ய சேஷமாகத் தன்னைத் தெளிந்தவன் ஆகையால் ஸ்வாமியான நீ
என்னைப் பரி ஸூத்தனாக்கி அடிமை கொள்ள வேண்டும் என்கிறதுவும் சேஷி பிரயோஜனத்தை அபேக்ஷித்த படி –
ப்ரஹர்ஷயிஷ்யாமி –ஸ்தோத்ர ரத்னம் -46-
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே -என்கிறபடியே சேதனன் ஆகையால் ஸ்வ பிரயோஜனத்தில் துவக்கற
சேஷி ப்ரயோஜனத்தில் புத்தி பூர்வ ப்ரவ்ருத்தி கூடாது –
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே-என்கிறபடியே பிரதானமான சேஷி பிரயோஜனத்தை ஒழிய
ஸ்வ ப்ரயோஜனத்தை அபேக்ஷிக்கவும் கூடாது -ஆகையால் குணவத் ஸ்வாமியினுடைய ப்ரவ்ருத்தி போலே
நிபுண தாசனுடைய ப்ரவ்ருத்தியும் இருவர் பிரயோஜனத்தையும் விடாதே நிற்கும் ஸ்வாமி உகப்புக்கு சேஷமாகத்
தனக்கு வரும் பிரயோஜனம் பதி சந்நிதியில் பதி விரத அலங்காரம் போலே மிகவும் உசிதம் –
இது இங்கு இவனுக்கு உத்தர கிருத்யத்தில் கைங்கர்ய ரஸத்திலும் துல்யம்

மங்களா சாசன ஆவஸ்ய கதை
முக்தனுக்கு அநிஷ்ட பிரசங்கமும் பிராந்தி பிரசாங்கமும் இன்றிக்கே
ஈஸ்வரனும் நித்ய நிர நிஷ்டனாய் அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்க -சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்ன
வேண்டிற்று என் என்னில் -இது அநிஷ்ட நிவ்ருத்திகளை பிரயோஜனமாகக் கொண்டதால் –
அஞ்ஞானத்தைக் காரணமாகக் கொண்டதால் வருமதன்று –
இவனுக்கு ஸ்ருதிகளில் சொன்ன சாம காமனாதிகளைப் போலே இது ஒரு ஸ்வச் சந்த ப்ரவ்ருத்தி விசேஷம் –
அஸ்த்தாந ஸ்நேஹ ரஷா பிரணயிகள் என்று நித்ய ஸூரிகளைச் சொன்னதும்
அஸ்த்தாந பய சங்கை உண்டாமவர்களுக்கு உள்ள பரிவுடையவர்கள் என்றபடி –
இங்கு உள்ளவர்களுக்கு பய சங்கை யுண்டாமவது பக்தி விசேஷம் அடியாக வருகையால் குணமாம் –
அர்ச்சா அவதாராதிகளில் பிராணிகளுடைய கர்ம அனுரூபமாக ப்ராதுர் பாவமும் உபேக்ஷையும் நடக்கிறது ஆகையால்
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண்யஸ் ச இத்யாதிகளில் படியே மங்களா சாசனமும் சபலம் –
அப்போது நிபுணராய் இருப்பார் -ரக்ஷது த்வாம் -இத்யாதிகளில் படியே
அவன் தன்னையே கொண்டு மங்களா ஸாஸனம் பண்ணுவார்கள் -இப்படி எங்கும் கண்டு கொள்வது

இரு விலங்கு கழித்து இடராம் உடலம் தன்னில்
இலங்கு நடு நாடியினால் எம்மை வாங்கி
ஒரு விலங்கி நெறி யல்லா வழியால் மன்னும்
உயர் வானில் ஏற்றி உயிர் நிலையும் தந்து
பெரு விலங்காம் அருள் தன்னால் தன்னடிக்கீழ்
பிரியாத அமரருடன் பிணைத்துத் தன்னார்
உரு விலங்கும் இசைவிக்கும் உம்பர் போகம்
உகந்து தரும் திருமாலை உக்காந்தோம் நாமே

ஒரு விலங்கி நெறி யல்லா வழியால்-பிரதிபந்தகங்கள் இல்லாத அர்ச்சிராதி கதி
பெரு விலங்காம் அருள் தன்னால் தன்னடிக்கீழ் -கிருபையை விலங்கு என்றது பிணை கொடுக்கிலும்
திரும்பி வரமுடியாமல் உள்ள இருப்பைக் காட்டும்

——————-

வாக்யார்த்த நிரூபணம்
இப்படி பிரதம அக்ஷராதிகளிலே ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபமும்
த்ருதீய அக்ஷராதிகளிலே ப்ராப்தாவின் ஸ்வரூபமும்
மத்யம பதத்தில் விரோதியும் உபாயமும் -சதுர்த்தியில் பலமும்
யதா சம்பவம் பதங்களிலே சம்பந்தமும் ப்ரகாசிதம் ஆயிற்று
இதில் வாக்ய யோஜனை இருக்கும்படி –
அகார வாஸ்யனான நாராயணனுக்கே நான் அநந்யார்ஹ சேஷ பூதன் -எனக்கு உரியேன் அல்லேன்-என்று
சிலர் திருமந்திரம் முழுக்க ஸ்வரூப பரம் என்பர்கள்
பிரவணம் ஸ்வரூப பரமாய் -நமஸ்ஸிலே அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனையாய் –
மேல் இஷ்ட பிராப்தி பிரார்த்தனை என்றும் சொல்லுவார்கள் –
இரண்டு பதமும் ஸ்வரூப பரமாய் மேல் புருஷார்த்த பிரார்த்தனா பரம் என்கிற யோஜனை
அகாரார்த்தாயை வ –ஸ்ரீ அஷ்ட ஸ்லோகி -3-என்கிற ஸ்லோகத்திலே சொல்லப்பட்டது-

மற்றும் பல யோஜனைகளும் உண்டு –
சர்வ ப்ரஹ்ம வித்யா நிஷ்டருக்கும் உபஜீவ்யமான சாரீரிக சாஸ்திரத்தில் நிரூபித்த கட்டளையில்
பத த்ரயமும் தத்வ ஹித புருஷார்த்தங்களை அடைவே காட்டுகிறது என்னும் யோஜனைக்கு
அபேக்ஷிதார்த்த பவ்கல்ஷ்யம் உண்டு –
த்வயத்திலும் இதுவே அடைவு -இப்பத த்ரயம் தெளிந்தவன் –
அநந்யார்ஹ சேஷ பூதனாய் -அநந்ய உபாயனாய் -அநந்ய பிரயோஜனனாய் -நித்யாதிகளில் சொல்லுகிற
பரமைகாந்தியாம் –

இப்பதங்களிலே ஸோபாந க்ரமத்தாலே ஜீவனுக்கு சத்த அநு பந்திகளான –
ஆதேயத்வ -விதேயத்வ -சேஷத்வங்கள் -சித்திக்கையாலே
யானே நீ -இத்யாதிகளிலே சாமாநாதி கரண்யம் -சரீராத்ம பாவ நிபந்தனம் -என்று சித்தித்தது –
இத்தாலே குத்ருஷ்ட்டி மதங்களும் கழிந்தன
இதில் பிரதம பதத்தில் த்ருதீய அஷரத்தாலே தேஹாதிகளிலும் -தத் அநு பந்திகளிலும் வரும் அஹங்கார மமகாரங்களையும்
பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தியாலே தான் தனக்கு உரியனாகி வரும் அஹங்கார மமகாரங்களையும்
மத்யம அக்ஷரத்தில் அவதாரணத்தாலே நான் வேறு ஒருவனுக்கு நிருபாதிக சேஷம் என்றும்
எனக்கு ஒரு சேஷி உண்டு என்றும் -வரும் அஹங்கார மமகாரங்களையும்
மத்யம பதத்தில் நிஷேத விசேஷங்களாலே ஸ்வ ரக்ஷண வியாபாராதிகளைப் பற்ற நிரபேஷ ஸ்வதந்த்ரன் என்றும்
நிருபாதிக சேஷி என்றும் -வரும் அஹங்கார மமகாரங்களையும்
இந் நிஷேத சாமர்த்தியம் தன்னால் நாராயண சப்தத்தில் சதுர்த்தியின் கருத்தான கைங்கர்ய அனுபவத்தில்
பலாந்தர அனுபவ நியாயத்தாலே வரும் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வ ஸ்வாரத்த கர்த்ருத்வ போக்த்ருத்வ
ப்ரம ரூபங்களான அஹங்கார மமகாரங்களையும்
சாப்தமாகவும் ஆர்த்தமாகவும் அடி யறுத்து நிற்கிறான்

இம்மந்திர நிஷ்டன் ரக்ஷகாந்தர அந் வேஷணம் -தேவதாந்த்ராதி ஸ்பர்சம் -கேவல தேஹார்த்த வியாபாரம் -ஷேத்ராதி சங்கம் –
நிரபேஷ கர்த்ருத்வ அபிமானம் -பாகவத அபராதம் -ஆத்ம நாஸாதி பயம் -ப்ரயோஜனாந்தர ருசி -முதலான
அநர்த்த ஹேதுக்களில் ஆழங்கால் படான்
பஹு ஸ்ருதனே யாகிலும் இத் தெளிவு இல்லாதவன் விகலன்
அல்ப ஸ்ருதனே யாகிலும் சதாச்சார்ய பிரசாதத்தாலே இத் தெளிவு பிறந்தவன் சம் பூர்ணன்
இவனை பிரஞ்ஞா பிரசாதம் ஆருஹ்ய –சாந்தி பர்வம் -150-11-என்று பிரசம்சிக்கிறது

உறவை இசைந்து இறையில்லா ஒருவருக்கு என்றும்
ஒண் சுடராய் ஓர் எழுத்தில் ஓங்கி நின்றோம்
துறவறமும் தூ மதியும் துயரம் தீர்வும்
துய்யவர்கட்க்கு ஆனமையும் இரண்டில் உற்றோம்
அற முயலும் அனைத்துறவாய் அனைத்தும் ஏந்தும்
அம்புயத்தாள் கணவனை நாம் அணுகப் பெற்றோம்
பிறவி அறுத்து அடி சூடி அடிமை எல்லாம்
பிரியாத அமரருடன் பெற்றோம் நாமே

திருமந்திர அதிகாரம் முற்றிற்று

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: