ஸ்ரீ அருளிச் செயல்களில்–ஸ்ரீ திருவாய் மொழியில்- காதல் -அன்பு-ஆர்வம் -வேட்கை -அவா-மால் -போன்ற பத பிரயோகங்கள் –

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் –98-

இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற
அனுதய சம்சய விபர்யய விஸ்ம்ருதிகள் அற்று
மலர்மிசை எழுகிற ஞானத்தை
காதல் அன்பு வேட்கை அவா என்னும்
சங்க காம அனுராக ஸ்நேகாத்ய அவஸ்தா
நாமங்களோடே
பரம பக்தி தசை ஆக்குகை –

————————-

திருக்கண்டேன் –பொன் மேனி கண்டேன் –என்று இவர் தமையனார் முன்பு அருளிச் செய்தது போலே
திருவல்லிக்கேணி கண்டேனே -பாசுரம் தோறும் அன்றோ -2-3-பாசுரம் தோறும் அன்றோ
கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலைசயனத்தே –2-5- பாசுரம் தோறும் அன்றோ
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே –2-10-பாசுரம் தோறும் அன்றோ
நறையூரில் கண்டேனே-6-8-பாசுரம் தோறும் அன்றோ
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-பாசுரம் தோறும் அன்றோ
கண்ண புரத்தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-பாசுரம் தோறும் அன்றோ
கண்ணபுரம் நாம் தொழுதுமே -8-6-பாசுரம் தோறும் அன்றோ கலியன் மங்களாசாசனம் –

செஞ்சொல் செந்தமிழ் இன்கவி பரவி அழைக்கும் என்று அன்யோன்யம் கொண்டாடி பேசிற்றே பேசும்
ஏக கண்டர்கள் -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -63-

நான்கு முகம் -தானாக -மகளாக -தாயாராக -தோழியாக -ஆழ்வார்கள் –

செந்நெல் –உமி தவிடு போக்க ஆச்சார்யர் ஞான அனுஷ்டானத்தால் போக்கி சர்வேஸ்வரன் அனுபவம் பண்ணும்படி –
இதனாலே அருளிச் செயல்களில் பல இடங்களில்
வண்டு-ஸ்ரீ பாஷ்யகாரர் போல்வாரை அன்றோ
மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் -நீர் ஆட வாரீர் -நீங்கள் குரவை கூத்தாட வாரீர்

மாதவ -மாசம் வைகாசி -மாதவிப்பந்தல் குயில் திருவாய் மொழி –
குயில் இனங்கள் -வியாக்கியான கர்த்தாக்கள் பூர்வாச்சார்யர்கள்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
கையால் மா ஸூ ச -சரம ஸ்லோகம் /தாமரை -த்வயம் -செந்தாமரை-செம்மை திருமந்திரம் -ஒலிப்ப
சீரார் வளை ஒலிப்ப –தத்வ த்ரயம்
இல் -கோயில்- திரு இல்- தங்கள் திருக்கோயில்

—————————-

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

மாலே- ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் உயர்வு.-இவ்விதமான வைலக்ஷண்யத்தை நினைத்து,
‘நான் அயோக்கியன்’ என்று அகலும்படி பிச்சு ஏறி,-தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை
அறுத்து விழ விடுவாரைப் போன்று,அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

நலம் அருளினான் என்று -அதாவது மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்று
தம்முடைய பக்தி உத்பத்தி காரணம் , கேவல பகவத் கிருபை என்று உபக்ரமித்து ,
என் கொல் என்று -அதாவது – என் கொல் அம்மான் திரு அருள்கள்-10-7-4– என்னும் அளவாக –
ஞான தசையோடு -வர்ண தசையோடு–பிராப்தி தசையோடு -வாசி அற
ஆமூலசூடம்- அருளால் மன்னும் இவர்க்கு -அதாவது மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-என்று
பிடி தோறும் நெய் ஒழிய செல்லாத சுகுமாரரை போலே , நின்ற நிலை தோறும் அவன் அருள் கொண்டே தரிக்க வேண்டும்
ஸ்வபாவர் ஆன இவர்க்கு –அன்புக்கு அடி யானதுவே அடி சேருகைக்கும் சாதனம்-அதாவது
ஆரா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாய்-6-10-2–என்கையாலே ,
நலம் அருளினன் -என்று பக்தி காரணமாக சொன்ன கிருபையே அடி சேருகை யாகிற பிராப்த்திக்கும்
சாதனம் என்ற படி – ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -114-

———

அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே–1-6-6-

நிமிர் சுடர் ஆழி நெடுமால்-இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. -‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது?
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?
தேவர்கள் விரும்பிய பலனைத் தலைக் கட்டிக் கொடுக்கையாலே உண்டான புகர் திரு ஆழியிலே தோற்றும்படி இருத்தலின்,
‘நிமிர் சுடர் ஆழி’ என்கிறார்.
‘வேறு ஒரு பலனேயாகிலும் நம் பக்கல் கொள்ளப் பெற்றோமே!’ என்று கொண்ட பெரு மோகத்தின்
மிகுதி தோன்ற நிற்றலின், ‘நெடுமால்’ என்கிறார்.

———————

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9-4-

உடன் அமர் காதல் மகளிர்-உடனே அமர வேண்டும்படியான காதலையுடைய ஸ்ரீ பிராட்டிமார் –
அகலகில்லேன் இறையும் என்று ஆயிற்று இவர்கள் இருப்பது

————————–

இருளின் திணி வண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே?–2-1-8-

உலகத்துக்குத் தலைவனாகிய தன்னைத் தந்த உபகாரகன்.-அருளின் பெருநசையால் –-‘அத்தகைய உபகாரகன்-
ப்ரணயிநீக்கு காதலிக்கு உதவானோ?’ என்னும் ஆசையாலே.-அருளின் கனத்துக்குத் தக்கபடியே நசையின் கனமும் இருக்குமாதலின்,
‘உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசை’ என்கிறாள்.

———————

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே?–2-1-9-

நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த –‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல்
இருக்கிற ப்ரேம -காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்து வற்றாக உலர்த்த,
மெல்லாவி-தொட்டார் மேல் தோஷமாம்படி காற்றுப் படவும் பொறாதிருக்கின்றதாலின், ‘மெல் ஆவி’ என்கிறாள்.
ஆத்துமாவிற்கு மென்மை, பகவானுடைய குணங்களை அநுபவித்து நைந்திருத்தல்.

————————–

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

வேவ ஆரா வேட்கை நோய் –‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின்
‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள்.-‘ஆயின், உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், அல்லாது நெருப்பைப் போல அன்று;
கேவல அக்நியாகில் அதாஹ்யமாயிருக்கும்;-காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது.
மஹதா ஜ்வலதா நித்யம் அக்னி நே வாக்னி பர்வத ( ‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால்,
எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ )என்றார் வால்மீகி பகவான்,
ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி.

———————-

ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஒர் தேவும் உளதே?–2-2-3-

இவ் வதி மாநுஷச் செயல்களையுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும்.-ஓர் தேவும் உளதே – ஒக்கப் பரிமாறா நிற்க,
‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?-‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ,
இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.

————————–

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவி யுள் கலந்தே–2-3-3-

பால்யாத் பரப்பிருதி ஸூஸ் நிக்த ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும்
நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, -அறிவு நடையாடாத பருவத்திலே -அடிமையிலே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே,-
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான – சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்திய சூரிகளுடைய பரிமாற்றத்திலே யன்றோ-
என்னை அந்வயிப்பித்தது என்னைச் சேர்த்தாய்?
அன்பு செய்வித்து-‘வரில் பொகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, குருஷ்வ -‘என்னை உடன் வருகின்றவனாகச்
செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே -பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார்.

————————-

வாணுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசை யுள் நைகின் றாள்;விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்!உம்மைக்
காண, நீர் இரக்கம் இலீரே–2-4-2-

உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –‘விஷயத்திற்குத் தகுதியாக-அநு ரூபமாய் – அன்றோ ஆசையும் இருப்பது?
உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள்.
‘ஆசை என்னும் கடல்’ என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தா நின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ என்கிறாள்.

——————

அந் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அந் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள;
செந் தாமரைத் தடங்கண்; செங் கனி வாய் செங் கமலம்;
செந் தாமரை அடிகள்; செம் பொன் திரு உடம்பே–2-5-1-

அம் தாமத்து அன்பு செய்து –அழகிய தாமத்திலே செய்யக் கூடிய சினேகத்தை என் பக்கலிலே செய்து.
தாமம் -ஸ்தானம் -இனி, இதனை -மாஞ்சா க்ரோஸந்தி -‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று,இடவாகு பெயராகக் கொண்டு,
‘பரம்பதத்திலுள்ளார் பகலிலே செய்யக்கூடிய சினேகத்தை-என் பக்கலிலே செய்து’ என்று பொருள் கூறலுமாம்.
இதனால், ‘ஒரு விபூதியில் உள்ளார் பக்கலிலே செய்யக் கூடிய சினேகத்தைக் கிடீர் என் ஒருவன் பக்கலிலே செய்தான்’ என்கிறார்;
‘முற்றவும் நின்றனன்’ என்று, முன்னர்த் தாமே அருளிச் செய்தார் அன்றோ?

———————-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –மால் -சர்வாதிகனான சர்வேஸ்வரன்-செய்கின்ற மால் – அவன் ஏறுகிற பிச்சை –
அவன் காட்டும் ஸ்நேஹத்தை-ஆர் காண்பாரே –- ஒருவராலே இவ்வளவு என்று பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –

————————-

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?–3-1-9-

இருந்தவிடத்தேயிருந்து துக்கத்தைப் போக்கவொண்ணாது,’ என்பார்,‘தொழுங் காதற்களிறு’ என்கிறார்.
கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கும் களிறு ஆதலின், ‘காதல் களிறு’ என்கிறார்.
’சதுர்த்தந்தி’ என்னுமாறு போன்று, காதல் இதற்கு நிரூபகமாக இருக்கிறபடி.

———————–

வார் புனல் அ ம்தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே–3-5-8-

ஆர்வம் பெருகக் குனிப்பார் –அபிநிவேசமானது அன்பானது மேன்மேல் எனக் கரை புரண்டு குனிக்குமவர்கள்.

————-

பாலனாய் ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே–4-2-1-

மாலும் –மோஹிக்கும் -மயங்கும்.-மாளுதல் -மயங்குதல் – என்றது,
இது ஒரு யுக்தி -சொல் அளவேயாய் அக வாயில் இன்றிக்கே இருக்கை அன்றிக்கே, உள் அழியா நின்றாள்,’ என்றபடி.
மணி பிரபையிலே -மாணிக்கத்தின் ஒளியிலே அக்னி -நெருப்பு என்னும் புத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேண்டுமோ?

————–

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக் கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்–4-3-9-

காதல் மையல் ஏறினேன் –-என்னுடைய ப்ரேமத்தால் -ஆசையாலே மிக்க கலகத்தை உடையவன் ஆனேன்–

———————–

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளிமணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே–4-4-5-

இன மையல்கள் செய்தார் –இப்படிப் பிச்சுகளைப் பண்ணினார்.
அன்றிக்கே, ‘இப்படிப் பிச்சு ஏற்றிற்று என்று?’ என்னலுமாம்.
‘இவள் எனக்கு அடங்கியிருப்பவளாதல் தவிர்ந்த பின்பு இவற்றிற்கெல்லாம் காலம் உண்டோ?’ என்கிறாள்.
‘என் சொல்லும் என் வசமும் அல்லள்’-திருவாய். 4. 2 : 10- என்றது எப்போது?
இவளை இப்படிப் பிச்சு ஏற்றிற்று எப்போது?’ என்கிறாள் என்றபடி.

————————-

அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்;‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற்பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

மயல் பெருங்காதல் என் பேதைக்கு –மயக்கத்தைச் செய்யக் கூடியதான பெரிய காதலையுடைய என்னுடைய-பாலைக்கு –
இளம் பெண்ணுக்கு,–என் செய்கேன் –இவள் மயங்காதபடி செய்யவோ?-நான் இதனைப் பொறுத்திருக்கவோ?
வல்வினையேனே –இவளை இப்படிக் காணும்படி மஹா பாவத்தைப் பண்ணினேன்!
ஆழ்வான் திருக் கண்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டால் போலே
காணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகிறது

——————

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

இன்று தன் திருவடிகளை-ஆஸ்ரயித்த நமக்கும்.-அன்றிக்கே, நித்ய சம்சாரிகளுக்கும் -பிறந்து இறந்து பிறிவிகளிலே
உழன்று திரிகின்றவர்கட்கும் – இவ்வருகாயிருக்கிற நமக்கும்;
பூவின்மிசை நங்கைக்கும் –நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணையாய் -நிறைந்திருக்கிற-
பெரிய பிராட்டியார்க்கும்–இன்பனை –இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று
அவளிடத்தில் அன்பு-ஸ்நேஹம் -செலுத்தி-யிருப்பது.

————————-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

அடி யார்க்கு இன்பமாரியே –சர்வேஸ்வரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ?
இது, ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.
இன்பத்தை யுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது.
‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை.
‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’-திருவாய்மொழி-7-9- என்றாரே அன்றோ?

வீட்டு இன்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி -75-
இன்ப மாரி என்று ஆழ்வாரையே நாயனார் –

—————–

இடகி லேன் ஒன்று; அட்ட கில்லேன்; ஐம்புலன் வெல்ல கிலேன்;
கடவ னாகிக் காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல் வினையேன் அயர்ப்பாய்த்
தடவு கின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

காதல் கூர –இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக.-வல்வினையேன் எங்குக் காண்பன் –ஸ்நேஹ அனுகூலமாக -அன்பிற்குத் தகுதியாகக்
காணப் பெறாத பாவத்தைச் செய்தவன்-காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்; இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன்,
ஆஸாலேசம் -ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்; என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.

——————————-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-

தழுவி நின்ற காதல் தன்னால் –நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாத படியாய் உடன் வந்தியான அதி மாத்ரமான –
அளவு கடந்த காதலாலே.
தாமரைக் கண்ணன் தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்ர பூதரைச் சொல்லுகிறார்.

——————

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதிநீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே–4-9-9-

வேட்கை எல்லாம் விடுத்து – எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப்படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ? யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்திலையோ?
உன் திருவடியே சுமந்து உழல –புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலேயாய்,
உன் திருவடிகளையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும் படிக்காக.

—————————-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-

வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் –
தம்முடைய அபிநிவேச அதிசயத்தாலே -ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும் இப் பத்தையும் வல்லார்.
சிலர் தாந்தராய் -ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்;
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.

———————

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே–5-1-7-

மெய்ம் மாலாய் ஒழிந்தேன் –யானைக்கு உதவினது தங்களுக்கு உதவி செய்தது என்று இருக்கும் பர சம்ருத்தி யேகப் பிரயோஜநர்
அந்த உபகாரத்திற்குத் தோற்று உபகாரத்தின் நினைவாலே அஞ்சலி செய்து சொல்லும் பாசுரத்தை, அஹ்ருதயமாக –
மனத்தொடு படாமலே சொல்லி அது நெஞ்சிலே ஊற்றிருந்து-பொய்ம் மால் போய் மெய்ம் மாலாய் விழுந்தது.

——————–

மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–5-1-8-

மேவித் தொழும் மாலார் – இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தால் போல,
இரண்டு விபூதியில் -உலகங்களில் உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன்.

————————–

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த –பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது,
ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி ஆத்மாவோடு கட்டுப் பட்டிருக்கின்ற காதல் என்றபடி.
இங்கே ‘கடல் புரைய’ என்றது,
“கடலின் மிகப் பெரிதால்”-(7. 3 : 6.)- என்னா நின்றது;
“அதனில் பெரிய என்னவா”-( 10. 10 : 10) என்று,
ஈஸ்வரன் தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது;
ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட காரியம் இது வாயிற்று.
கைங்கர்யத்திற்கு –பூர்வ க்ஷண வர்த்தியாய் -முன் ஷணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது.
அது உண்டாக வேணுமே அன்றோ அவ்வருகு போம் போது;
அங்கே போன பின்னர் அங்குள்ளாரது ஒரு படியாய் இவரது ஒரு படியாய் இருக்க ஒண்ணாதே.
முதலிலே மயர்வற மதிநலம் அருளினது தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று.
அன்றிக்கே, பெரிய போரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது,
ஊர்ப் பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே, காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல்-( பெரிய திருமடல். 43-44.) என்னுதல்.
நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில்,
(“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் குரோத: அபிஜாயதே”- ஸ்ரீ கீதை. 2 : 62.)
சங்காத் சஞ்சாயத காம -விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது,
அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே,-அதிலே ஓர் அவஸ்தா விசேஷமாம்.
முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேஷம் த்ரவ்யாந்தரம் -வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.

——————————

கடியன் கொடியன் நெடிய மால் உலகங் கொண்ட
அடியன் அறி வரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-3-5-

நெடிய மால்-மால் என்பது பெருமை. நெடிய என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப் பெரியவன் என்றபடி.
இதனால், கை புக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை.

—————————-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6-

பின் நின்ற காதல் நோய் –புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது.
இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.

——————————

கழிய மிக்கதொர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே–5-5-10-

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் –இதர விசஜாதீயமான -எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்;
அன்றிக்கே, நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல்.
ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி மமச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-யுத். 5 : 4.
நாட்டார் அபிமத விஷயத்தை பிரிந்த நாள் ஒரு படியாய் பின்பு ஒரு படியாய்
நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.

—————————-

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே–5-7-2-

உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே பல ஹீனனாய் -வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.
ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்”-பெரிய திருமொழி, 4 : 9 : 3. என்கிறபடியே,
அந்த அபிநிவேசத்தில் -ஆசையிலே வீழ்ந்து கரையேற மாட்டாதே தடுமாறா நின்றேன்.
அங்கு வர மாட்டேன் -அபிநிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் –

——————

துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-

உனக்கு இப்போது உதவாதபடி தூரஸ்தம் -தூரத்திலே யுள்ளவை’ என்னுதல்,
பூத -சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல், உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே –
பிரவணையாதல் – ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ?
அசலிட்டுத் திருத் தொலை வில்லி மங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?

————————————————-

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-

இவள் நெடுமால் என்றே நின்று கூவும் –
தன் பிச்சினைக் காற்கடைக் கொண்டு அவன் பிச்சினைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்

—————–

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–5-6-1-

மாலுக்கு –மின்னிடை மடவார்” என்ற திருவாய் மொழியிலே,
நீ எனக்கு வேண்டா என்ன, நீ எனக்கு வேண்டும் என்று தடுமாறி நின்ற நிலையைக் காட்டியாயிற்று இவளை இப் பாடு படுத்திற்று.
சர்வேஸ்வரனான உத்கர்ஷம்- உயர்வு தோற்ற நின்றானாகில் இப் பாடு படாள் கண்டீர்!

———————–

மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளி காள்! விரைந்தோடி வந்தே–6-8-2-

மெய் அமர் காதல் சொல்லி-
அவன் திரு மேனியிலே நான் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்;
என் னுடம்போடே அவன் அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்.
துக்கத்தால் அதிகமாக இளைத்திருக்கிற அவயங்களால் நன்றாகத் தொடும்படி” என்னக் கடவதன்றோ.
நம் சத்தை கிடக்கக் கிடக்கும் அன்றோ’ என்றாதல்,
குண ஞானத்தாலே தரித்திருக்கிறாள்’ என்றாதல் நினைத்திருக்குமது அல்ல என்று சொல்லுங்கோள்.
மெய் அமர் காதல் –
தம்மைப் போலே பொய்யுமாய் நிலை நில்லாததுமான காதல் அன்று எங்களது என்று சொல்லுங்கோள்’
என்று பிள்ளான் அருளிச் செய்வர்.–சத்தியமான காதல் என்றபடி.
அன்றிக்கே, ஆத்மாவோடே ஒன்று பட்டிருக்கின்ற காதல் என்றுமாம்.
மெய் என்று ஆத்மாவாய், ஆத்மாவோடே பொருந்தின காதல் என்றபடி.
மெய்ம்மையே மிக உணர்ந்து” –திருமாலை, 38-என்கிற இடத்தில், மெய் என்றது, ஆத்மாவை அன்றோ சொல்லிற்று.

———————-

என் பரஞ்சுடரே! என்றுன்னை அலற்றி உன் இணைத் தாமரை கட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து ஏற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ!–7-1-10-

உன் இணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்குமது நிற்க –
ஒன்றுக்கு ஒன்று ஒப்பாய் இருப்பன இரண்டு செவ்விப் பூப் போலே இருக்கிற உன் திருவடிகளில்
போக்யதையை -இனிமையை அனுசந்தித்து -நினைத்து ப்ரேம -அன்பு வசப் பட்டவனாய்
நெகிழ்ந்து நீராய் நிற்கை இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபமாகக் கடவது. ஸ்வரூபம் இதுவாக இருக்க,

————————–

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்; எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;‘கடல் வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்ட வாய் நேமி வலங்கையா!’ என்னும் ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழு நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறத் தென் சிந்தத் தாயே?–7-2-4-

கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்-
சாதன புத்தியால் தொழுதாளாகில் ‘கட்டமே காதல்’ என்னக் கூடா தன்றோ?
விஸ்லேஷத்தில் -பிரிவு நிலையில் நலிவுக்குக் காரணமாகையாலே ப்ரேமம் -அன்பு தண்ணிது என்கிறாள்.

———————

காலம் பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான் நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த நான்மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப் பேரெயிற்கே–7-3-6–

காதல் கடலின் மிகப் பெரிதால் –இந்தக் காதல் அளவு பட்டோ இருக்கிறது?
முதலில் சொன்ன வார்த்தையைக் காணுங்கோள் நீங்கள் நினைக்கிறது.-கடல் புரைய’ திருவாய், 5-3-4.-என்றாளே.
ஒரு காரியப் பட்டாலே விளைந்தது போலே அன்றே உகப்பாலே விளைந்திருப்பது?
ஸ்ரமஹரமான -ஸ்ரமத்தைப் போக்கும் படியான வடிவினைக் கொண்டு முன்னே நின்று
காதலை வளர்க்கின்றவனாகா நின்றான். இக் காதலை ஒரு படியே வளர்க்கிறது அன்றோ?
கடல் புரைய விளைவித்ததும் காரமர் மேனி அன்றோ? திருவாய். 5-3-4

——————-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே–7-3-8-

அலர் தூற்றினார்கள்.-அது முதலாக் கொண்ட என் காதல் –-அதுதானே அடியாகக் கொண்ட என் காதலானது
சதசாகமாக -நூறு கிளைகளாகப் பணைக்கப் புக்கது.-ஊரவர் கவ்வை’- என்றி திருவாய்மொழிப் பாசுரம் 5. 3 : 4
ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளுமிந் நோய்.’-திருக்குறள்.

காதல் உரைக்கில்
தன் காதலைத் தன்னாலும் சொல்ல ஒண்ணாத ஆதலில் ‘காதல் உரைக்கில்’ என்கிறாள்.
யதோவாசோ நிவர்த்தந்தே’ தைத்தீரியம்.எதனின்று வேதங்கள் மீள்கின்றனவோ என்கிற விஷயத்தைச் சொல்லிலும்
இவள் காதல் பேச்சுக்கு நிலம் அன்று.’ என்றபடி
இந்தக் காதலுக்கு விஷயமாக இருக்கிறவனையும் விளாக்குலை கொள்ளவற்றான காதல் அன்றோ?
சுடர் ஞான இன்பம்’திருவாய். 10. 10 : 10.- என்று பகவானுடைய ஆனந்தத்தைச் சொல்லி வைத்து,
அதனில் பெரிய என் அவா’ என்றார் அன்றோ?
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிது –காதல், கடலின் மிகப்பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்;
ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில்,-பெரியவற்றில் பெரியது என்னுமித்தனையல்லது,
ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை.
மண்ணாலே நெருங்கின பூமியும், அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக் கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும்
என்னுமிவை இத்தனைக்கும் அவ் வருகு பட்டிருக்கை.-இப்படிக் காதல் கரை புரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன,
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வான்
இந்தக் காதல் மறு நனையும் படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப் புகுமத்தனை.

——————————–

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி யென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பான் காதல் கலக்கவே—8-3-9-

சர்வ எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்-வடிவு அழகாலே என்னை சேர்த்துக் கொண்ட இது அன்றோ என்னை கலங்கப் பண்ணிற்று
என் காதல் கலக்கவே –என்னுடைய ப்ரேமமாவது -காதலானது நான் அஞ்சும்படி கலக்கப் பண்ண
உன் வடிவு அழகிலும் மேன்மையிலும் கலங்கிச் சொன்ன அத்தனை போக்கி
உன் சௌகுமார்யத்தை எல்லை கண்டு சொன்னேன் –அல்லேன் என்றபடி –
ப்ரேமாந்தனாய் -காதலால் கண் இல்லாதவனான கொண்டு சொன்னேன் அத்தனை போக்கி நெஞ்சு ஒழிந்து சொன்னேன் அல்லேன்-
வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களான பிரமன் சிவன் முதலானோர்கள் பரிவும் உனக்கு ஒத்தது அன்று –
ப்ரேமாந்தனாய் – – என் பரிவும் உனக்கு சத்ருசம் -ஒத்தது அன்று என்றதாயிற்று-

——————————-

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

கண்டதோடு பட்டது அல்லால் –இவனைக் கண்ட போது சிநேகிக்கும் அது ஒழிய -என்னுதல் –
கையிலே பொருள் கண்ட போது அதனை நோக்கி ஸ்நேகிக்குமது ஒழிய -என்னுதல் –
காதல் மற்று யாதும் இல்லை –சந்நிதியில் ஸ்நேஹிக்குமது ஒழிய -கையிலே த்ரவ்யம் -பிரயோஜனம் கண்ட போது
உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும் சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
பிரகாராந்தரத்தில் -காணாத போது -ஏக தேசமும் -மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்
மற்று -என்பது–காணாத போதைக் காட்டுமோ -எனின்-கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -ஸ்நேஹமும் -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
ஸ்நேஹமும்-அன்பும் அதுக்கடியான பந்தமும் -உறவும் இல்லை -என்னுதல் –

————————

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் –உயிரால் பொறுக்க ஒண்ணாதபடி அபிநிவேசம் ஆசை பெருகா நின்றது –
பிள்ளாய் -அணு பரிமாணமான அளவிதான இவ் உயிரின் அளவு அன்று
ஆற்றுப் பெருக்கு போன்று மென்மேலும் என -பெருகா நின்றது -என்பார் –-பெருகும் -என்று நிழல் காலத்தில் அருளுகிறார்
ஆல் –விஷய அதிசய ஸூ சகம் – துக்கத்தின் மிகுதியைக் காட்டுகிறது -என்றது

———————

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

என் கண்ணா என்ன – கீழ் பாசுரத்தில் சொல்லி-இதில் -காட் கரை ஏத்தும்-அவ் ஊரை ஏத்தா அவனை ஏத்தும் –
இவ் விரண்டுக்கும் புறம்பே போகிறது இல்லை –வேட்கை நோய் கூர நினைந்து –அபிநிவேசம் -ஆசை மிகும்படி நினைந்து –
கரைந்து உகும் –சிதிலமாய் -உருக் குலைந்து-ஒரு அவயவி என்று நினைக்க ஒண்ணாத படி உகும் –

——————–

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –-9-7-2-

அமர் காதல் குருகினங்காள் –பரஸ்பரம் -ஒன்றுக்கு ஓன்று பொருந்தின காதலை உடைய குருகு இனங்களே –

——————–

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

தனது அன்பர்க்கு அன்பாகுமே –
தன்னிடத்தில் ஸ்நேஹிகள் -அன்பினை உடையார் பக்கல் தானும் அதி பிரவணனாய் -பேர் அன்பினை உடையவன் ஆம் –
அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாதபடி-அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருத்தலின் அன்பாகும் -என்கிறார்

———————–

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்–தன் திருவடிகளையே உபாயமாக பற்றினார்க்கு
விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல-தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-
இராவணன் இடம் பிராட்டி பெருமாள் பற்றி -சரணம் அடைந்தவர்களுக்கு அன்புடையவர் என்றால் போலே
அவர்கள் உடைய தோஷம் -குற்றங்கள் தோற்றாதபடி வ்யாமுக்தனாய் -அன்புள்ளவனே இருப்பான்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
விபீஷணன் இடத்தில் குற்றமானது இருந்தாலும் இருக்கட்டும் என்பவனே அன்றோ
திருக் கண்ணபுரத்து அன்பன் – ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு -அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம் என்று விரும்பி வசிக்கிற ஊர் –
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே – தன் பக்கல் அநந்ய பிரயோஜனராய் இருப்பார்க்கு தானும் அவர்கள் பக்கல் என்றும் ஒக்க
அநந்ய பிரயோஜனனாய் இருக்கும்
அன்றிக்கே
தன் பக்கல் சிநேக பாவம் உடையாரை-நத்யஜேயம் – விட மாட்டேன் என்று இருக்குமவன் -என்னுதல் –

——————–

தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொரும் புணர்ச்சிக்கு ஆராச்
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

ஆவியின் பரம் அல்ல வேட்கை –அணு அளவிதனா உயிர் பொருளின் அளவன்று காதல் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம் திருவந்தாதி -100-என்றாரே அவரும்
ஆஸ்ரயத்தின் -உயிரின் அளவன்று ஆயிற்றுக் காதல் அபிநிவேசம் -–

—————–

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆளும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வாசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–10-3-8-

கசிகையும்-கசிகை -ஸ்நேகம் /வேட்கையும்-மேன்மேல் உன்னோடு புணர்ந்த புணர்ச்சியால் உண்டான அபிநிவேசமும் -ஆசையும் –
கலவியும் –சம்ச்லேஷமும் -புணர்ச்சியும் –உள் கலந்து நலியும் –
நீ செய்யும் ஸ்நேகமும்-அருகே இருக்கச் செய்தே அகல இருந்தாரைப் போலே மேன் மேலே எனப் பண்ணும் அபிநிவேசமும் ஆசையும்
தலை தடுமாறாக கலப்பதான கலவியும் நீ பெயர நின்றவாறே ஹ்ருதயத்தில் மனத்திலே புகுந்து நலியும் –

————————

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –
பிராட்டி பக்கல் உள்ள ஸ்நேஹ அதிசயத்தாலே -அன்பின் மிகுதியாலே அந்த ஸ்நேஹமே -அன்பே காரணமாக அவளால்
அங்கீ கரிக்கப் பட்ட-அவள் பரிக்ரஹமான – என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று
இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது
திரு மால் என்னை ஆளும் மால் -10-7-6-என்னும்படியே தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –
அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ – என் அன்புக்கு அடி இல்லையோ –

——————————-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

மேலே கூறிய மூன்று தத்துவங்களையும் விளாக்குலை கொண்டு –அவை குளப்படியாம் படி பெரிதான –என்னுடைய அபிநிவேசத்தை -காதலை
அதனிலும் பெரிய உன் அபிநிவேசத்தை -காதலைக் காட்டி வந்து ஸம்ஸ்லேஷித்தாயே -கலந்தாயே –
என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே
அங்கே பரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே மீண்டு புகுந்து-ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து
உச்சியை மோந்து உகந்து அணைத்தால் போலே -ஆயிற்று இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –

———————

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

அவா அறச் சூழ் அரியை –
சர்வ அபேக்ஷித பிரதனனான -விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –
தம்முடைய அபிநிவேசம் -காதல் கெட வந்து கலந்த படியாலே-வேறே ஒரு விசேஷணம் -அடைவு
கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-ஆஸ்ரிதருடைய –
அடியவர்களின் விடாயை தீர ஸம்ஸ்லேஷிக்கை -கலக்கை –

சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-நிர்வஹிப்பதும் –
அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும்அயனை அரனை அவா அற்று–அரியை அலற்றி
வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச் சூழ் அரியை அலற்றி வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் – மற்று ஒரு வகை

கூப்பிட்டு அவனைப் பெற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகர் -எல்லா தடைகளும் நீங்கியவர்
ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த–அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –
பக்தியின் தூண்டுதலாலே பலாத்காரத்தாலே -பிறந்த ஆயிரம்
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –
அன்றிக்கே-அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் -என்னுதல்
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் போரும் உண்டானார்கள்-அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று
அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுகைக்கு அடி இவருடைய பக்தி அபிநிவேசம் -காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –
முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்த தாயிற்று இத் திருவாய்மொழி
இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading