ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ மந்த்ர ரத்னம் -ஸ்ரீ த்வயம் -பூர்வ வாக்ய – நாராயண பதார்த்தம் —

ஆக -மதுப்பாலே –புருஷகாரத்துக்கு உப யுக்தமான உபய சம்பந்தத்தையும் உடையளாய் இருக்கிற இவள்
செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள்
திரு இருந்த மார்பில் சிரீதரன்–என்கிறபடியே
ஆஸ்ரயணீய வஸ்துவோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் இருக்கையாலே அந்த சம்ஸ்லேஷத்தில் வர்த்திக்கிற அனுபவம்
தஜ் ஜெனிதமான ஹர்ஷம்
தத் பரா காஷ்டையான ப்ரத்யுபகார சாபேஷதை
இவற்றால் வருகிற ரக்ஷணமும் நித்யம் ஆகையால் ஆஸ்ரயண உன் முகனான சேதனர்க்கு
தம் தாமுடைய ஜென்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷமாதல் –
அவனுடைய ஸ்வா தந்தர்ய நிபந்தனமான பீதியாதல் இன்றிக்கே
சர்வ காலமும் ஆஸ்ரயிக்கலாம் என்றிட்டு
சர்வ கால ஸமாஸ்ரயணீயத்வத்தையும்
ஆஸ்ரயணீயத்தினுடைய சர்வாதிகாரத்வத்தையும் சொல்லுகிறது –

ஆக
ஸ்ரீ மத் சப்தம் புருஷகாரத்தையும்
புருஷகாரத்தினுடைய நித்ய சம்யோகத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

———————

அநந்தரம்–நாராயண -பதம் –
சேதனர் பண்ணின பூர்வ அபராத தர்சனத்தாலே அபி பூதமாய்
ஸ்ரீ சப்த வாஸ்யையாய்க் கொண்டு புருஷகார பூதையான பிராட்டியாலே பிரகாசிதமாய்-
பின்பு அவள் தான் ஒரு குறை சொல்லிலும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வாஸீதே ச லஷ்மணாம் -என்றும்
கிங்கார்யம் சீதயா மம -என்று அவள் தன்னையும் உபேக்ஷித்துக் கைக்கொள்ளும் படியான
வாத்சல்யாதி குண விசேஷங்களைச் சொல்லுகிறது

இவள் ஜகத்துக்கு மாதா வாகையாலும் ஸ்த்ரீத்வத்தால் வந்த மார்த்தவத்தை யுடையவள் ஆகையாலும்-
சாபராத சேதனரை அங்கீ கரித்து ரஷிக்கையிலே அதி நிர்பந்தம் உடையாள் ஆகையாலும்
இவர்கள் அளவிலே அவள் குறை சொல்லுகை –பெற்ற தாய் நஞ்சு இடுகையோபாதி கூடாது இறே –
ஆகிலும் இவள் இவர்களுடைய அபராத அதிசயத்தையும் அவனுடைய தண்ட தரத்வாதிகளையும்
க்ரோத மாஹாரயத்தீவ்ரம் -என்றும்
கோபஸ்ய வசமே யிவான்-என்றும் கோபம் இட்ட வழக்காய் இருக்கும் சீற்றத்தையும் கண்டவள் ஆகையால்
நாம் காட்டிக் கொடுத்த பின்பும் இவர்கள் பக்கல் இவனுடைய நினைவு ஏது
நம்முடைய அபேக்ஷைக்காக அனுமதி பண்ணின அளவேயோ
அன்றிக்கே தன் நினைவாலும் ரக்ஷணத்தில் அதிக்ருதனோ-என்று இவனை சோதிக்கைக்காக
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்-என்கிறபடியே இவள் குறை சொல்லக் கூடும்

அவ்வளவிலும் -என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் –என்று
நீ சொல்லுகிற குற்றம் அவர்கள் செய்யார்கள்-
செய்தார்கள் ஆகில் நமக்குத் பொல்லாதோ -நாம் பிரார்த்தித்தே போம் அத்தனை -அது உண்டாயிற்றாகில்
நமக்கு குணாதிக்யமும் ஸ்வரூப சித்தியும் உண்டாக்குகிறார்களாம் அத்தனை -என்று இவன் நிஷேதித்தாலும்
அதனுடைய த்ரு டீகரண அர்த்தமாக நான் இப்போது கண்டேன் என்று ச சாஷிமாகச் சொன்னாலும்
அதுக்கு என் -முன்பு போலே நாஸ்திகனாய் நம்மை இல்லை செய்து செய்கிறார்கள் அன்றே
நம்முடைய நிக்ரஹத்துக்கு விஷய விபாகம் பண்ணித் தருகைக்கு நீயும் அதன்படி போகைக்கு நானும் உண்டு என்று அன்றோ செய்கிறது –
உன் கார்யமான சேர்த்தியை நீ உண்டாக்குமது ஒழியப் பிரிக்கை உனக்குப் பணி அன்று என்று அவளோடு மறுதலைத்து
ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு ரஷிக்கைக்கு ஹேதுவாய் அவளாலே உத்பவிப்பிக்கப்பட்ட வாத்சல்யயாதி குணங்களைச் சொல்லுகிறது

இப்படி ஸ்வரூப கதமுமாய் ஸ்வா தந்தர்ய அபிபூதமான இந்த குணங்களை உத்பவிக்கிறாள் இவள் ஆகையால்
இவை உபாய ஸ்வீகார ரூப ஆஸ்ரயணத்துக்கு பிரதி சம்பந்தியான ஈஸ்வரன் பக்கல் பூர்வம் அநுத் பூதங்களாய் –
தாத் காலிகமாக உத்பன்னங்கள் ஆகிறது ஆகையாலும்
உத்பாவகை இவள் ஆகையாலும்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு அசாதாரண ஆகாரமாய் அநாதி அவித்யா அபி பூதமாய் கிடக்கிற பக்தி யோகத்தை பிரகாசிப்பிக்கிற
கர்மாதிகளுக்கு அங்கத்துவம் உண்டாகிறாப் போலேயும்
அபஹதபாப் மத்வாதி குணங்களை பிரகாசிப்பிக்கிற ஈஸ்வரனுக்கு உபாயத்வம் உண்டாக்கிறாப் போலேயும்
இவளுக்கும் இவ் உபாயத்தினுடைய சித்தத்வ நிரபேஷத்வ பஞ்சகங்களான சாத்யத்வ சா பேஷத்வங்களுக்கு
ஹேது பூதங்களான அங்கத்வ சஹகாரித்வங்கள் ஆதல்
பிரதான உபாயத்வம் ஆதல் உண்டாமே என்னில் ஆகாது -எங்கனே என்னில்

உபாயத்வமாவது -தத் ஸ்வீ கர்த்தாவான சேதனனுக்கு அனுரூபமான அநிஷ்டத்தினுடைய நிவ்ருத்தியும்
அனுரூபமாய் அபேக்ஷிதமான இஷ்ட பிராப்தியும் பண்ணுகையாலே
தத் ஞானத்துக்கும் தந் நிவ்ருத்தி பண்ணுகைக்கும் –
அது செய்யும் இடத்தில் அஹேதுகமாகச் செய்கைக்கும்-
அது தன் காரியமாகச் செய்கைக்கும் -அபேக்ஷிதங்களான ஞான சக்தி பூர்த்தி பிராப்தி களாகையாலும்
கார்யாந்தர உபயுக்தங்கள் ஆனவற்றை உபாய உப யுக்தங்கள் ஆக்குகைக்கு அபேக்ஷிதம் கிருபை ஆகையாலும் –
உபாயத்வம் உள்ளது தத் விசிஷ்டனுக்கு-
அவை தான் ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்களில் அதிக்ருதங்களாய்க் கொண்டு சர்வகாலமும் பிரகாசித்துக் கொண்டு
போருகையாலே அவற்றுக்கு உத்பாவக அபேக்ஷை இல்லை
ஆகையால் இவளுக்கு இவ்வுபாயத்தினுடைய சித்தத்வ நிரபேஷத்வ பஞ்சகங்களான
உபாய அங்கத்வ ஸஹ காரித்வங்கள் உண்டாகாது
உத்பாவக அபேக்ஷை உள்ளது ஆஸ்ரயண உபயோகியான வாத்சல்யாதிகளுக்கு
ஆகை இறே சரண்ய அபி மதமான விதி வாக்கியத்தில் த்ருதீய சபதம பதங்களில்
வாத்சல்யாதிகளையும் ஞான சக்த்யாதிகளையும் விபஜித்து அனுசந்தித்தது

ஆனாலும் புருஷகார பூதையான இவளால் பிரகாசிதமான குண த்வாரா ஆஸ்ரயித்தால் அல்லது
உபாய ஸ்வீ காரம் பண்ண ஒண்ணாமையாலே தத் த்வாரா அங்கத்வம் வருமே என்னில்
இவள் புருஷீ கரித்தாலும் கார்யகரனான ஈஸ்வரனுடைய கிருபா அபாவத்தில் அது கார்யகரம் ஆகாமையாலே
அங்கத்துவம் வரும் என்ன ஒண்ணாது

ஆனால் புருஷகார நைர்ரத்தக்ய பிரசங்கம் உண்டாகாதோ என்னில் -சேதனனுடைய
என் பிழையே நினைந்து அருளி -என்கிற ஸ்வ அபராத பய நிபந்தனமாகவும்
ஆஸ்ரயணீயனான ஈஸ்வரனுக்கு இவளைப் பற்ற உண்டான –
அணி மா மலர் மங்கையோடு அன்பளவி-என்கிற பிரணயித்வ பாரதந்தர்ய நிபந்தன நித்ய இச்சாதீன மாகவும்
வருகிறது ஆகையால் நைர்ரத்தக்யம் பிரசங்கியாது –

ஆக
இந் நாராயண பதத்தில் புருஷகார பூதையான பிராட்டியாலே உத்பூதங்களான
வாத்சல்ய -ஸ்வாமித்வ -ஸுசீல்ய -ஸுலப்யங்களைச் சொல்லுகிறது –
ஸமஸ்த கல்யாண குணாத்ம கோசவ்
ஈறில வண் புகழ் நாரணன்
தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதா
விஸ்வம் நாராயணம்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் –இத்யாதிகளாலே
ஸமஸ்த ரூப குண விபூதிகளுக்கும் ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கு வாசகமாய் இருக்கிற நாராயண பதம்
ரூப விபூதிகளையும் குணாந்தரங்களையும் ஒழிய வாத்சல்யாதி மாத்ரங்களுக்கு வாசகமானபடி எங்கனே என்னில்

நார பதம் ரூப குண விபூதிகளுக்கு வாசகமாய் –
அயன பதம் -தத் ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு வாசகமாய் –
ஆக நாராயண பதம் குண விக்ரஹ விபூதி விஸிஷ்ட வஸ்துவை சொல்லிற்றே யாகிலும் –
இது ஸ்ரீ மத்-பத அநந்தரம் யுக்தமாகையாலே -உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிகிற ஈஸ்வரன்
ஸ்வ அபராத பயத்தால் ஆஸ்ரயிக்க கூசின சேதனன் தத் பய நிவ்ருத்தி உபயோகி புருஷகார சம்பந்த பூர்வகமாக
ஆஸ்ரயிக்கிற பிரகரணம் ஆகையால்
ப்ரபத்யே -என்று வஷ்யமாணமான ஆஸ்ரயத்துக்கு உபயுக்தமான குண பிரகாச மாத்ரமாகையாலும் –
குணாந்தரங்கள் ஆஸ்ரயித்த சேதனனுக்கு ரக்ஷண அதிசங்கை உண்டானால்
தந் நிவ்ருத்தி பூர்வக விஸ்வாச அர்த்தமாக அநுஸந்திக்குமவை ஆகையாலும்
பரமாச்சார்யரான நம்மாழ்வாரும் -அலர்மேல் மங்கை உறை மார்பா -என்று புருஷகாரத்தை முன்னிட்டு –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ஆஸ்ரயிக்கிற தசையில்
நிகரில் புகழாய் -என்று வாத்சல்யத்தையும்
உலகம் மூன்றுடையாய் -என்று ஸ்வாமித்வத்தையும்
என்னை ஆள்வானே -என்று ஸுசீல்யத்தையும்
திரு வேங்கடத்தானே -என்று ஸுலப்யத்தையும் -அருளிச் செய்கையாலும்
இந் நாராயண பதம் -காமாநய பலீ வர்ததஞ்ச-என்று பசுக்களைக் கொண்டு வா என்ற இடத்தில் –
கோ சப்தத்துக்கு உள்ளே பலீ வர்த்தமும் அந்தர் பூதமாய் இருக்க பலீ வர்த்த சப்தத்துக்குப் புநர் யுக்தி உண்டாம் என்று
சங்கித்து காமாநய என்கிற இடத்தில் கோ சப்தம் பலீ வர்த்த வியதிரிக்த கோ மாத்திரத்துக்கே வாசகம் என்று
கோ சப்தத்தை சங்கோசித்தால் போலேயும்
ப்ராஹ்மணமாநய–என்கிற சாமான்ய சப்தம் -ஸ்ருத சீல குல ஸம்பன்னம் ப்ராஹ்மணமாநய-என்கிற
விசேஷ சப்த சந்நிதியில் சங்குசிதமாம் போலேயும்
பிரகரண பலத்தால் வாத்சல்யாதிகளுக்கு வாசகமாகக் கடவது –

ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கு -ஆஸ்ரயணீயத்வ–சரண்யத்வ – ப்ராப்யத்வங்கள் -ஆகிற ஆகார த்ரயங்களும் உண்டாம் போலே
ஆஸ்ரயிகளான குண விசேஷங்களுக்கும் ஆகார த்ரயம் உண்டாகக் கடவது இறே
ஆகையால் வாத்சல்யாதிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய்
ஞானாதிகள் சரண்யத்வத்துக்கு உறுப்பாய்
ஸுந்தர்யாதிகள் ப்ராப்யத்துக்கு உறுப்பாய் இருக்கும்

அதில் வாத்சல்யமாவது
வத்சம்லாதீதி -என்கிற வ்யுத்பத்தியின் படியே அத்யஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவுக்கு உண்டான ஆதரம்-அதாவது
சுவடு பட்ட புல்லைக் காற்கடைக் கொள்ளும் தசையிலும் -தன் பக்கலிலே ஜென்மமே ஹேதுவாக
அதனுடைய தோஷத்தை போக்யமாக அங்கீ கரித்து தன்னுடைய ஷீரத்தாலே தரிப்பித்துத் தன்னை நினைக்கும்படி பண்ணி
முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் கொண்டு ரஷிக்கும்படியான ஸ்வ பாவ விசேஷம்

ஈஸ்வரனும் தன்னை ஆஸ்ரயித்த சேதனர் விஷயத்தில் இருள் தரும் மா ஞாலமாய் இருக்கிற சம்சாரத்தில்
பகவத் ஸ்வரூபதிரோதா நகரீம் ஸ்வ விஷயாயாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம்–இத்யாதிகளில் படியே
பகவத் ஸ்வரூபாதிகளை மறைத்துத் தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பிக்கிற சரீரத்தோடு சம்பந்தித்து
இருக்கிற சேதனரைக் குற்றம் காண்கை யாகிறது நம்முடைய தோஷம் அன்றோ
துன்பமும் இன்பமுமாகிய –இத்யாதிப்படியே சம்சார ஹேதுவான புண்ய பாப ரூப கர்மங்கள் என்ன –
கர்ம ஆர்ஜன பூமி என்ன -பல பூமி என்ன -கர்த்தாவான சேதனன் என்ன -இத்தனையும் நாம் இட்ட வழக்காய் இருக்க –
அத்தை நிவர்த்திப்பியாதே
நீ தந்த வாக்கை
சுமடு தந்தாய் -என்னும்படி சரீரத்தைக் கொடுத்து

அயர்ப்பாய் தேற்றமாய்
பல சமய மதி கொடுத்தாய்
உள்ளம் பேதம் செய்திட்டு –என்னும்படி மதி விப்ரமங்களைப் பண்ணுவித்து

தானங்காரமாய்ப் புக்கு
கருமமும் கரும பலனுமாகிய நாரணன்
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்றும் செய்கைப் பயன் உண்பேனும் யானே என்றும் –சத்தா கர்த்த்ருத்வ பலித்வாதிகள்
ஸ்வ அதீனமாய் இருக்கும் வஸ்து அநாதி அவித்யா சம்பந்தத்தால் எளிவரவு பட விட்டு இருக்கிறது
எல்லாம் நம்மால் வந்தது அன்றோ என்று

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை
வன் சேற்று அள்ளல் பொய் நிலத்து அழுந்தார்
பிறந்தும் செற்றும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத் தீர்ந்து தன் பாழ் மனம் வைக்கத் திருத்தி என்கிறபடியே —
தன் பேறாகப் போக்கி

உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
என்னை முற்றப் பருகினான்
என்னை முற்றும் உயிர் உண்டு –என்கிறபடியே போக்யமாக ஸ்வீ கரித்து

பாலே போல் சீரில் பழுத்து ஒழித்தேன்
தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வேனோ
சீர் பரவாதுண்ண வாய் தான் உறுமோ –என்னும்படி தன்னுடைய கல்யாண குணங்களால் தரிப்பித்து

தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும்
தாயை நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து
கறவா மட நாகு தன் கன்று உள்ளினால் போலே மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நின்று குமுறும் -என்கிறபடியே விடில் நா கொட்டும்படி நிரந்தரம் நினைக்கப் பண்ணி

தோஷ யத்யபி -நத்யஜேயம் -என்று ஆஸ்ரயனுக்கு ஒரு காலும் தோஷம் இல்லை –
கண்டாலும் நமக்கு உபாதேயம் -நாம் விடோம் என்பது

சர்வ பூதேப்யோ அபயம் தாதாமி-என்று
த்வாந்து திக்குல பாம்சனம் -என்பாரோடு ரக்ஷண அதி சங்கை பண்ணி சிதகுரைப்பாரோடு நம் பக்கல் பரிவாலே –
வத்யதாம் -என்பாரோடு நிருபாதிக ஸ்வா தந்தர்யத்தாலே -ஹந்யாம்-ஷிபாமி -ந ஷமாமி -என்பாரோடு வாசியற
ஒருவராலும் ஒரு பயம் வராதபடி அபய ப்ரதானம் பண்ணக் கடவேன் என்பதாய்

கிம் கார்யம் சீதயா மம -என்று நித்ய அநபாயினியான பிராட்டியை ஒரு தலையாகவும் விட்டு

அனந்தன் பாலும் கருடன் பாலும் மைது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் –
என்கிறபடியே ஸூ ரிகள் பக்கலிலும் சத்தா மாத்திரை ஹேதுவான சந்நிஹிதமாய்

வடதமும் வைகுந்தமும் மதில் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு -என்று உகந்து அருளின திவ்ய தேசங்களையும் உபேக்ஷித்து

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
ஆனைக்கு அன்று அருளை ஈந்த
சிவனும் பிரமனும் காணாதருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த -என்று உபாஸகரானாரும் லஜ்ஜிக்கும் படி
அவர்களை உதாசீனித்தும் ரஷிக்கைக்கு ஹேதுவாய்

விதி தஸ் சஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல–என்று சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய்
யதி வா ராவணஸ் ஸ்வயம் –என்று ராவணன் தான் வரிலும் கைக் கொள்ளக் கடவோம் என்னும்படியான ஸ்வ பாவ விசேஷம்
இந்த தோஷ நிவ்ருத்தி -உபாயாந்தர பாவியான -பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
-என்கிற பாப விமோசன வியாபாரத்தோடே விராதியாதோ என்னில்-
இங்குச் சொல்கிறது ஆஸ்ரயண விரோதி மாத்ரமாகையாலும்
பாப விமோசன ஹேதுவான குண அனுசந்தான பூர்வக ஆத்ம சமர்ப்பன அனுசந்தானம் ஆகையாலும்
தாது ஸித்தமான ரக்ஷகத்வம் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களுக்கு உபயுக்தமோபாதி
பாப நிவ்ருத்தி உபயோகியாகையாலே விரோதியாது –

அநந்தரம் -ஸ்வாமித்வம் ஆவது
இழவு பேறு தன்னைத்தான் படி -பகவத் பிராப்தி சேதனனுக்கு அன்று -சேதன பிராப்தி பகவத் விஷயத்துக்கு -என்னும்படியாய்
ஸ்வத்ம மாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணிஸ் த்வம்-உபயோ ரேஷ சம்பந்த்தோ நேதரோபிமதோ மம -என்று
ஈஸ்வரனோடு உண்டான பந்த விசேஷங்கள் எல்லாவற்றிலும் பிரதானமாய்
யஸ்யாஸ்மி
பகவத ஏவாஹமஸ்மி –என்கிறபடியே சத்தா ஸித்தமாய்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ பாவம் -என்னும்படி ஸ்வஸ் ஸித்தமாய்
கீழ்ச் சொன்ன வாத்சல்யத்துக்கு நிதானமாய் இருபத்தொரு பந்த விசேஷம்
இது அடியாக இறே சத்தா ரக்ஷணம் தொடங்கி கைங்கர்ய பர்யந்தமாக இவனை ஈஸ்வரன் அங்கீ கரித்தது –

கர்க்ஷகனானவன் தனக்குப் போக்யமான அபிமத விஷயங்களை விட்டுப் பயிர்த்தலையிலே
குடில் கட்டிக் கொண்டு கிடக்குமா போலே த்ரிபாத் விபூதியில்
ஸ்ரீ யா சார்த்த மாஸே–பக்தைர் பாகவதஸ் ஸஹ
கைங்கர்ய நித்ய நிரதைர்ப் பவதேக போகை
அயர்வரும் அமரர்கள் அதிபதி –என்கிறபடியே நிரதிசயமான போகம் நடவா நிற்கச் செய்தேயும்

ச ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே அவ்வனுபவம் உண்டது உருக்காட்டாதே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்–என்னும்படி அவற்றையும் உபேக்ஷித்து
விமுகனான திசையிலும் பிரஜையின் முதுகைக் கட்டிக்க கொண்டு கிடக்கும் தாயைப் போலே
த்வம் மே -என்றால் -அஹம் மே -என்னும் திசையிலும் இரா மடமூட்டுவரைப் போலேயும்
யமாத்மா ந வேத
ஸஹைவசநதம் ந விஜா நந்தி
கரந்து எங்கும் பரந்துளன்
ஒழி வற நிறைந்து நின்ற
எங்கணும் நிறைந்த எந்தாய்
அறியா வகையால் அருவாகி நிற்கும் –என்கிறபடியே தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
உள்ளே நின்று சத்தியை நோக்கி

ஸேபநஸம் ஸீ ஸூஹ்ருத்
ஸ்ரேயோயாத்யதி கேசவ
என் சிந்தித்தாய் -என்கிற தன் ஸூஹ்ர்த்த அதிசயத்தாலே
மாதவன் என்றதே கொண்டு
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன -என்கிற வ்யாவ்ருத்தி மாத்ரத்தையும் -அன்யார்த்தமாய் –
புத்தி பூர்வம் இன்றிக்கே இருப்பதாய் -பகவத் அங்கீ கார ஹேதுவாக விகிதம் இன்றியிலே இருக்குமதாய்-
ரத்னத்துக்கு கரிஷம் போலே பல வி சத்ருசமாய் இருக்கிற யாத்ருச்சிகாதி ஸூஹ்ருத விசேஷங்களை உண்டாக்கி
பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன் -என்று அவற்றை ஸ்வ அங்கீ காரத்துக்கு ஹேதுவாக்கி இதுவே ஹேதுவாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –என்கிற ஆபி முக்யத்தையும் உண்டாக்கி
தன்பால் ஆதரம் பெருக வைத்த -என்கிற ஸ்வ ப்ராப்தி ருசியை உண்டாக்கி
அந்த ருசி அனுகுணமான புருஷார்த்தத்தையும்
தத் அனுரூபமான சாதனத்தையும் -தத் ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை யதாவத் ஸ்ரவணம் பண்ணுகைக்காக
யதா ஞானவானான ஆச்சார்யருடைய ஸமாஸ்ரயணத்தை உண்டாக்கி -அவனாலே உபதிஷ்டமாய்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்–இத்யாதிகளில் சொல்லுகிற அர்த்த பஞ்சகத்தையும்
உய்யும் வகை உணர்ந்தேன்
நின்ற ஒன்றை உணர்ந்தேன்
மெய்ம்மையை மிக உணர்ந்து
அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வின் உள்ளே இருத்தினேன்
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் ஆமவை நன்கு அறிந்தனன்–என்னும்படி யாதாவாக அறியும் படி பண்ணி –
இவ்வர்த்த பஞ்சக ஞானத்துக்குப் பலம் உபாய உபேயங்களை யாதாவாக அறிந்து துணிந்து த்வரிக்கையாய்
மற்ற மூன்று அர்த்தமும் -பல பிரார்த்தனைக்கும் -சாதன வியவசாயத்துக்கும் -ஆஸ்ரயமான ஸ்வரூபம்
அநந்யார்ஹ சேஷமாய் -அநந்ய சரணமாய் -அநந்ய போக்யமாய் இருக்கும் என்று அறிகைக்கும்
இப்பிரார்த்தனா வியவசாயங்களுக்கு பிரதி சம்பந்தியான ஸ்வரூபம்
நிருபாதிக ரக்ஷகமுமாய் நிரதிசய ஆனந்த யுக்தமாயும் இருக்கும் என்று அறிகைக்கும்
இவற்றுக்கு விரோதி ஸ்வ ரக்ஷண அர்த்த வியாபாரமும் ஸ்வ சாரஸ்யமும் என்று அறிகைக்காகவுமுமாகையாலே
தத் பலமான ப்ராப்ய ருசியை
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்–என்றும்
உனபாதம் சேர்வது அடியேன் என்னாளே
அடியேன் அடி சேர் வண்ணம் அருளாய் -என்று பிரார்த்திக்கும் படி பண்ணின தத் விஷய சித்த சாதன நிஷ்டையை

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –என்று துணியும்படி பண்ணி அந்த சாதன அன்வய பலம்
விஷயாந்தர ப்ராவண்ய நிவ்ருத்தி ஆகையால் -அத்தை
இன்னம் கெடுப்பாயோ
பல நீ காட்டிப் படுப்பாயோ
குல முதலடும் தீ வினைக் கொடு வன் குழியினுள் வீழ்க்கும் ஐவரை வலமுதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய்
முன்னை மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து–என்கிறபடியே கண்ட காட்சியில் முடியும்படியான விஷயத்திலே மூட்டப் புகுகிறாயோ
இத்தைப் பக்க வேரோடு போக்க வல்லனாம்படி பண்ணி அருள வேணும் என்று பிரார்த்திக்கும் படி பண்ணி

இதர விஷய ப்ராவண்ய நிவ்ருத்திக்குப் பலம்
பரமாத்மநி யோரக்தோ விரக்தோ பரமாத்மநி
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதார் அத்தோள்–என்கிறபடியே
ஸ்வ விஷய ப்ராவண்யம் ஆகையால்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
கழிய மிக்கதோர் காதல்
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் –என்கிறபடியே தன் பக்கலிலே ப்ராவண்யத்தை உண்டாக்கி -அதுவே கருவியாக
கண்டதோடு பட்டது அல்லாம் காதல் மற்று யாதும் இல்லை
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் -என்னும்படி தேஹ சம்பந்திகளோடே உறவை அறுத்து

தேஷாம் அபி நமோ நம
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தன் அடியான்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –என்கிறபடியே ஸ்வ சம்பந்திகளோடே உறவை உண்டாக்கி
தெரிவரிய அளவில்லாச் சிற்று இன்பம் ஒழிந்தேன் -என்னும்படி ஆத்ம பிராப்தி மோக்ஷத்திலே அருசியைப் பிறப்பித்து
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்று அநந்ய பிரஜோனனன் ஆக்கி
அர்ச்சிராதி மார்க்க கமனத்தையும் ஆதி வாஹிக ஸத்காரத்தையும்
சதம் மாலா ஹஸ்தா -இத்யாதிகளில் சொல்லுகிறபடி திவ்ய அப்சரஸ் ஸத்காரத்தையும் உண்டாக்கி
பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே–என்கிற ஸ்வ ஸ்வரூப பிரகாசத்தைப் பிறப்பித்து

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான்
கண்ணுள் நின்று ஆகலான்
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணும் –என்கிற பரபக்தியையும்
சூழ் விசும்பு அணி முகிலில் சொல்லுகிற பர ஞானத்தையும்
அதனில் பெரிய என் அவா
முடிந்த அவா -என்கிற பரம பக்தியையும் உண்டாக்கி
இவற்றால் பண்ணும் பகவத் அனுபவத்தையும்
அவ்வனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கைக்கொள்ளுக்கைக்கு ஹேதுவாய் இருபத்தொரு ஸ்வ பாவ விசேஷம்

அநந்தரம் ஸுசீல்யமாவது
மஹதோ மந்தைஸ் ஸஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வ பாவத்வம் -என்கிறபடியே
பெரியோன் சிறியனோடே கலவா நின்றால்-தன் பெருமை இருவர் நெஞ்சிலும் படாதபடி புரையறக் கலக்கை–அதாவது
ஆனந்தோ ப்ரஹ்ம
ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான்
உணர் முழு நலம்
எல்லையில் அந்நலம்
உயர்வற உயர் நலம் உடையவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் -என்கிற நிரதிசய ஆனந்தமான ஸ்வரூப ஸ்வ பாவங்களையும்
தேஜஸாம் ராசி மூர்ஜிதம்
பஞ்ச சக்தி மயம் வபு
மணியுருவில் பூதம் ஐந்தாய் –என்கிறபடியே அப்ராக்ருத பூத பஞ்சகத்தையும் உபாதானமாக உடைத்தாகையாலே
நிரவதிக தேஜோ ரூபமாய்
பூர்ண ஷாட் குண்ய விக்ரஹம் -என்கிறபடியே ஸ்வரூப குணமான ஞான சக்த்யாதிகளுக்கு பிரகாசகமாய்
இச்சா க்ருஹாதீபி மதோருதேஹ –என்று இச்சா க்ருஹீதமாய் அத ஏவ ஸ்வரூப குணங்களில் காட்டிலும்
அபிமதமாய் இருக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தையும் அனுபவித்து

பிரசாந்த ஆனந்தாத்ம அனுபவஜ மஹாநந்த மஹிம -ப்ரசக்தஸ் தை மித்யா நுக்ருத விதாங்கார்ண வதசம்–என்கிறபடியே –
நிஸ் தரங்க ஜலதி போலே
அவாக்ய அநாதர -என்கிற பெரிய மேன்மையை உடையவனாய்
வானோர் தனித் தலைவன்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான் –என்ற நித்ய விபூதி யோகத்தால்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான்
நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் –என்கிற லீலா விபூதி யோகத்தால் உண்டான
நிரங்குச ஐஸ்வர்யத்தை உடையனாய் இருக்கிற ஈஸ்வரன் உடைய
நதத் சமஸ் சாப் யதிகஸ் சத்ருச்யதே
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித்
நத்வத் சமோஸ்த் யப்பதிக குதோந்ய
இனனிலன் மிகுநரையிலன் –என்கிற சமாப்யதிக ரஹிதமான வைபவத்தையும் அனுசந்தித்து
நாகணை மிசை நம்பிரான்
செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்றார் ஆஸ்ரயணத்துக்கு அஞ்ச வேண்டாதபடி

வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை –சொல்லுவேன் பாவியேன் -என்று அகன்ற ஆழ்வாரை ஒழியத்
தனக்குச் செல்லாதபடியைக் காட்டிச் சேர விட்டால் போலேயும்
அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -என்று அஞ்சின இவர்க்கு
அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோன்றினார் என்னுமா போலேயும் எல்லோரோடும் ஓக்க மேல் விழுந்து
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே ச கேதி-என்னுமா போலே தன் சிறுமையும் அவன் பெருமையும் நெஞ்சில் படாதபடி ஒரு நீராகக் கலக்கையும்
இப்படிக்கு கலவா நின்றால்
ஆத்மாநம் மானுஷம் மநயே ராமம் தசாரதாத்மஜம்
அஹம் வோ பாந்தவ ஜாத –என்று தானும் சஜாதீயனாகக் பொருந்துகையும்

ஸுலப்யமாவது
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்சை நைநம்
ந மாம்ச சஷூர் அபிவீஷதே தம்
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் கானான் -என்று அதிசயித ஞானரானவர்களுக்கும் அசஷூர் விஷயமான
தன் வடிவை சஷூர் விஷயமாக்குகை
இந்த ஸுலப்ய பூர்த்தி உள்ளது அர்ச்சாவதாரத்தில் இ றே

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா–என்கிற பரத்வம் தேச விப்ரகர்ஷத்தாலே சர்வராலும் ஆஸ்ரயிக்க ஒண்ணாது
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
குறைவில் தடம் கடல் கோள் அரவேறித் தன் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளிம் மணி வண்ணன்
பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
பாற்கடல் பையத் துயின்ற பரமன் –என்கிற வ்யூஹம் சனகாதிகளுக்கும்
ஆபத்து உண்டான போது ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயமாமது ஒழிய சர்வ அபாஸ்ரயம் ஆக மாட்டாது –
அஜாய மாநோ பஹுதா விஜாயதே
பஹுநி மே வ்யதீதாநி ஜன்மாநீ
பிறப்பில் பல் பிறவிப் பெருமான்
ஜன்மம் பல பல செய்து
துயரில் மலியும் மனுஷர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
நாட்டில் பிறந்து –என்கிற வைபவம் தத் காலீந புருஷர்களுக்கே யாகையால் பிற்பாடார்க்கு ஆஸ்ரயிக்க ஒண்ணாது
அந்தப்பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா
சாஸ்தா விஷ்ணோர் அசேஷஸ்ய
சாஸ்தா சராசரஸ்ய ஏக
ஓர் உயிரேயோ வுலகங்கட்க்கு எல்லாம் –என்கிற அந்தர்யாமித்வம் அசஷூர் விஷயம் ஆகையால் ஆஸ்ரயிக்க ஒண்ணாது

தேச கால விப்ரகர்ஷாதிகள் வருகிற குறைகள் ஒன்றும் இன்றிக்கே
அர்ச்சாவதாரஸ் ஸர்வேஷாம் பாந்தவோ பக்த வத்ஸல
சிந்தயேச்ச ஜெகன் நாதம் ஸ்வாமி நம் பரமார்த்தத
அசக்தம ஸ்வதந்த்ரஞ்ச ரக்ஷயஞ்ச அபி ஜனார்த்தனம் –என்று சர்வவித பந்துத்வத்தாலும் பூர்ணனாய் -சர்வ சேஷியாய் –
ஸ்வதஸ் நிருபாதிக ஸ்வாமியாய் -இருக்கச் செய்தேயும்
அசக்தனுமாய் பரதந்த்ரனுமாய் ரஷ்ய பூதனுமாய்
ததிச்சயா மஹா தேஜா புங்க்தேவை பக்த வத்ஸல –ஸ்நாநம் பாநம் ததா யாத்ராம் குரு தேவை ஜகாத் பதி
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி –என்று ஆஸ்ரித அதீனமான
போஜன சயநாதிகளையும் -ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளையும் உடையனாய்
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தனாய்
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீர் –என்று பிற்பாடாருக்கும் ஆஸ்ரயணீயனாம் படி
இம்மட உலகர் காண எழுந்து அருளி இருக்கிற அர்ச்சாவதாரத்திலே இறே ஸுலப்ய பூர்த்தி உள்ளது

மாம் -என்று சேனா தூளி தூ சரிதமான திருக் குழலும் கையும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸுலப்யம்
பரத்வம் என்னும்படி இருக்கும் இந் நாராயண பதத்தில் ஸுலப்யம் -அதுக்கு அடி
மய்யா சக்த மநா பார்த்தா -என்றும்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்றும் –
தாழ்ந்த தனஞ்சயர்க்காகி -என்றும் சொல்லுகிறபடியே தன் பக்கலிலே நெஞ்சு பற்றித் தன்னை ரக்ஷகனான பற்றின அர்ஜுனன்
ஒருவனையும் பற்ற ஸூலபனான அளவாகையாலே –
அது காதா சித்கமாகையாலும் -இது நாராயண பதத்தில் சொல்லுகிற குடல் துவக்கு அடியாக வந்தது ஆகையால்
சர்வ விஷயமாய் அத ஏவ சர்வ காலீனமாய் இருக்கையாலும் இந்த ஸுலப்யம் சர்வாதிசாயியாய் இருக்கும்

ஆக ஏவம் ரூபமான வாத்சல்யத்தி குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம் –
ஸ்வ தோஷ தர்சனம் ஆதல் -அவனுடைய வப்ராப்தி யாதல் -உத்துங்கத்வம் ஆதல் -துர்லபத்வம் ஆதல் உண்டானால்
ஆஸ்ரயணம் கூடாமையால் -அவற்றை நிராகரித்து -அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஏகாந்தமான புருஷகார பூதையான
பிராட்டியால் உத்பூதங்களாய் –
பின்னை அவள் தன்னாலும் ஒழிக்க ஒண்ணாத படியான
வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்யங்களை இந் நாராயண பாதத்தால் சொல்லிற்று ஆயிற்று

இந் நாராயண பதம் வாத்சல்யாதிகள் நாலையும் சொல்லிற்றே யாகிலும்
ப்ரபத்யே என்று ஆஸ்ரயண பிரகரணம் ஆகையால் ஆஸ்ரயணத்துக்கு
அத்யந்த உப யோகியான ஸுலப்யத்தில் பிரதானமாகக் கடவது –

ஏவம் ரூபமான ஆஸ்ரயணீய குற்றங்கள் பற்றாசாக ஆஸ்ரயிக்கிறது-
நிரதிசய துக்க பாஜன-சம்சார துக்க நிவ்ருத்தி பூர்வகமாக -நிரதிசய அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண
மோக்ஷ லாபத்துக்கு ஆகையால் தத் உபயோகியான இஷ்ட அநிஷ்டங்களை அறிகைக்கும்-
தத் பிராப்தி பரிஹாரங்களைப் பண்ணுகைக்கும்
செய்யும் இடத்தில் நிரபேஷமாகச் செய்கைக்கும்
அபராத ஞானாதிகளுக்கு அநு குணங்களான இக் குண விசேஷங்களை ரக்ஷண அநு குணமாக்கைக்கும் அநு குணமாய் –
பாப விமோசகன் பக்கல் பிரித்து அநு சந்தேயமாய் இருக்கிற
ஞான -சக்தி -பிராப்தி -பூர்த்தி -கிருபைகளும் ரக்ஷண அதிசங்கை கழிந்து
விஸ்வசிக்கைக்கு உறுப்பாக இவ்விடத்தில் அநுசந்தேயங்கள்-

ஞானமாவது –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண
சதா ஸ்வத-அஜடம் ஸ்வாத்ம சம்போதி நித்யம் சர்வா வகாஹநம் -ஞானம் நாம குணம் ப்ராஹு-என்றபடியே
ஸ்வயம் பிரகாசமாய் -தன்னையும் ஆஸ்ரயத்தையும் நன்றாக அறிவிக்குமதாய்-
ஸ்வ வ்யதிரிக்த விஷயங்களை யுகபத் ஏவ சாஷாத் கரிக்கை

இத்தால் இவனுக்கு நிவர்த்த்யமான அநிஷ்டத்தையும்-ப்ராப்தவ்யமான இஷ்டத்தையும் அறியும் என்கிறதாகையாலே
தனக்கு ஹித அஹிதங்கள் தான் அறியாமல் வந்த இழவை நிவர்த்திப்பிக்கிறது

சக்தியாவது
ஜகத் ப்ரக்ருதி பாவோ யஸ் சா சக்தி பரிகீர்த்திதா -என்றும்
கார்யே நந்தே ஸ்வ தனுமுகதஸ் தவாமுபாதாநமாஹு -என்கிற ஜகத் உபஹார சக்தி யாதல்
வடதளஸாயித்வ சாந்தீபிநீ புத்ர வைதிக புத்ர ஆத்யாநயநம் சக்தியாதல் தொடக்கமான அகடிதகடநா சாமர்த்தியம் ஆதல்
தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம்
பரந்த அண்டம் இது எனக் கரந்து பரந்துளன் -என்கிற பரி சாமாப்ய வர்த்தித்வம் ஆதல்
அநாதி அசித் சம்பந்த அபி பூதனாய்க் கொண்டு சம்சாரத்திலே வேர் பற்றிப் போந்த இவ்வாத்மாவை
என்னை இசைவித்து
என் இசைவினை –என்கிறபடியே சம்சாரத்தின் நின்றும் கால் வாங்கி அல்லது நிற்க ஒண்ணாத படி பண்ணி
நித்ய விபூதியில் கொண்டு போய் வைக்கை –

இத்தால் உத்பாதகத்வ-ஆபத் ஸகத்வ-அபிமத பிரதத்வ -ஸமஸ்த வஸ்து ஆதாரத்வத்துக்கும்
மேம் பொருள்
சார்ந்த இரு வல் வினை –என்கிறபடியே எள்ளில் எண்ணெய் போலவும் -அரணியில் அக்னி போலவும் விடுவிக்க ஒண்ணாதபடி
பொருந்திக் கிடக்கிற அவித்யாதிகளை நிவர்த்திப்பித்து அப்ராக்ருதமான தேசத்தை கொடுக்கைக்கும் ஹேதுவான
சக்தியைச் சொல்லுகையாலே ஸ்வ அசக்தி நிபந்தனமாக பலம் இழக்க வேண்டா என்கிறது-

பூர்த்தி யாவது
அவாப்த ஸமஸ்த காமத்வம்-அதாவது
அபூர்வமான காம்யங்கள் உண்டாக வேணும் என்று கோலினால் அவை கர்த்தாந்த்ர சாத்யமாதல் -காலாந்தர சாத்யமாதல்
யத்ன விசேஷ சாத்யமாதல் இன்றிக்கே சங்கல்பாத் பூர்வமேவ சித்திக்கை –

இத்தால் ஆஸ்ரித அபிமத பல பிராப்தியை சஹகாரி நிரபேஷமாகச் சடக்கெனப் பண்ணிக் கொடுக்கைக்கு ஹேதுவான
பூர்த்தியைச் சொல்லுகையாலே தன்னுடைய அபூர்த்தி அடியாக பலம் இல்லை என்று அஞ்ச வேண்டா என்கிறது

பிராப்தி ஆவது
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத -என்று ஸமஸ்த பதார்த்த அநு பந்தி -சகல அதிசயங்களுக்கும்-தான் பலியாய் இருக்கை–

இத்தால் ஆஸ்ரித சேதன மோக்ஷ பிராப்தி ரூப பலத்திலே ப்ரீதியும் தன்னது என்று சொல்லுகையாலே
சபலத்வ புத்தியால் பல லாபம் இல்லை என்று அஞ்ச வேண்டாம் –

கீழே வாத்சல்யாதி பிரகரணத்தில் சொன்ன ஸ்வாமித்வத்துக்கும் -இந்த சேஷித்வத்துக்கும் வாசி என் என்னில்
அங்கு வஸ்து சத்தை முதலாக கைங்கர்ய பிரதான பர்யந்தமாகத் தானே செய்கைக்கு ஹேதுவான
ஸ்வத்வ அபிமான ஆஸ்ரய ரூப ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று –
இங்கு எல்லா தசைகளிலும் உண்டான ரஸ விசேஷங்களுக்கும் தானே பலியாகையால் உண்டான
பிராப்தியைச் சொல்லுகிறது –

கிருபை யாவது
கிருபாஹி நாம -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அஸஹிஷ்ணுதா
தயா பர வ்யஸன ஹரா
தயான் யேஷாம் துக்கா ப்ரஸஹனம் –என்கிறபடியே பர துக்கம் ஸஹியாமல் தந் நிராகரண இச்சை பிறக்கை-அதாவது
கிருபயா பர்ய பாலயத்
ப்ரணத இதி தயாளு –என்கிறபடியே
அநந்யாஹி மயா சீதா
ரஸ சீதாத் வயா ஹீநா –என்கையாலே ஸ்வரூப அந்தர் கதையுமாய்
விஷ்ணு பத்நீ
விஷ்ணோஸ் ஸ்ரீ -என்கையாலே த்ரவ்யாந்தரையுமாய்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்று அபிமத விஷயமுமாய் இருக்கிற பிராட்டி விஷயத்தில் அபசாரம் ஆகையால்
பகவத அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசார ரூபமான த்ரிவித அபசாரமும் பண்ணின காகா விஷயமாக
அவ்வபசாரங்கள் எல்லாம் ஒன்றும் பாராமல் தன் கிருபாதிசயத்தாலே
அந்த காகத்தையும் கூட ரஷிக்கும்படி இருபத்தொரு ஆகாரம் இறே

இத்தால் அபசாராதிகளும் பாராமல் ரஷிக்கைக்கு ஹேதுவான கிருபா வைபவத்தைச் சொல்லுகையாலே
ஸ்வ அபராதம் அடியாக பல ஹானி இல்லை என்கிறது –

ஆக
ஆஸ்ரித கார்ய உபயோகியாய் ஆஸ்ரயித்த சேதனருடைய அஞ்ஞான அசக்தி அபூர்த்தி அபிராப்தி ச அபராதத்வ நிபந்தன
பல ஹானி ரூப பயத்துக்கு நிவர்த்தகமான
ஞான சக்தி பூர்த்தி பிராப்தி கிருபா ரூப குணங்களைச் சொல்லுகிறது
த்வத் ஞான சக்தி கருணா ஸூ சதீஷூநேஹ பாபம் பராக்ரமம் இதும் அர்ஹதி மாமகீ நம -என்று
இவ்வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார் –

இந்த வாத்சல்யாதியான குண விசேஷங்கள் இந்த நாராயண சப்தத்துக்கு அர்த்தமாக
மாதா பிதா பிராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண –இத்யாதிகளால் சொல்லப்பட்டது -எங்கனே என்னில்
மாத்ருத்வத்தாலே வாத்சல்யத்தையும்
பித்ருத்வத்தாலே ஸ்வாமித்வத்தையும்
ப்ராத்ருவத்தாலே ஸுசீல்யத்தையும்
நிவாஸ சப்த யுக்த நித்ய சாந்நித்யத்தாலே ஸுலப்யத்தையும்
சரண சப்த யுக்தமான உபாயத்தாலே தத் உபயோகியான ஞானாதிகளையும்
ஸூஹ்ருத் வேந கிருபா கார்ய ஹித சிந்தா முகேன காருணிக்கத்வத்தையும்
கதித்வத்தாலே -தத் குண விசேஷ விசிஷ்டனுடைய ப்ராப்யத்வத்தையும் சொல்லிற்று –

ஆக நாராயண பதத்தாலே
நார சப்தேந ஜீவாநாம் ஸமூஹ ப்ரோசயதேபுதை–என்று
ப்ராப்தாக்களான பிரத்யகாத்மாக்களைச் சொல்லி
அயந சப்தத்தால் -அவ்வாத்மாக்களுக்கு உபாய பூதன் என்னும் அர்த்தத்தைச் சொல்லி
அவனை உபாயத்வேந ஆஸ்ரயிக்கைக்கும் –
உபாய கார்யமான அநிஷ்ட நிவ்ருத்தியாதிகளைப் பண்ணுகைக்கும் உறுப்பான குண விசேஷங்களைச் சொல்லிற்று ஆயிற்று –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: