நிகமத்தில் -இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் போக்யமாமா –
இனிய பொருளாயிருக்குமாறு – போலே, ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் –
விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-
இதற்குப் பலம் சொல்ல வேண்டா காணும்;-இதனையே இனிதாகச் சொல்ல அமையும்.
மின்னிடை மடவார்க்கு மதனர் – காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு,
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க-அதிகரிக்க – வல்லவர்கள்.
இங்ஙன் அன்றாகில்,
பல நீ காட்டிப் படுப்பாயோ”-திருவாய். 6. 9 : 9.-,
புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ” -திருவாய். 6. 9 : 8.-என்று சொல்லுகிற இவர்,-பெண்களுக்கு இனியராவர் என்கிறாரன்றே.
ஆதலால், காமினிகளுக்குக் காமுகரைப் போலே அபிமத விஷயத்திற்கு இனியராவர் என்கிறார்.
ஸ்ரீ திருவடியைச் சொல்லப்புக்குத் தாமரையைச் சொல்லா நின்ற தன்றோ. தாவி வையம்கொண்ட தடம் தாமரைகட்கே” (6. 9 : 9.)
ஸர்வதா சத்ருசம் -எல்லாவகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக்கடவது.
அதுபோல’ என்றும், ‘அதுதான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.
————————
நிகமத்தில் இத் திருவாய் மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்கு ஸ்ரீ பகவானுடைய
அநுபவத்தின் வறுமை இல்லை என்கிறார்.
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-
ஆதரத்தோடு சொல்லுவார்க்கு.வறுமை இல்லை; ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை. என்றது,
தூது விட்டு, அவன் வரக் கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் பட வேண்டா என்றபடி.
சோறும் புடைவையும் கிடைக்கும் என்கிறது அன்று; ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை -தாரித்ரயம் -இல்லை என்கிறது.
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”-திருவாய்.6. 7 : 1.- என்று
இருக்கிற இவருடைய வறுமை அன்றோ.
ஆகையாலே, அதிகாரிகட்குத் தகுதியாக அன்றோ உண்ணும் உணவு முதலானவைகளும் இருப்பன.
உண்டியே உடையே உகந்து ஓடும் இம் மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்” –பெருமாள் திருமொழி, 3 : 4.-
என்கிறவர்கள் இவற்றைச் செல்வமாக -ஐஸ்வர்யமாக -நினையார்களே.
சென்று ஒன்றி நின்ற திரு” – நான்முகன் திருவந். 61.-என்கிறபடியே
அவன் தானே வந்து மேல் விழ நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.
அழு கூத்த அப்பன்’ என்கிற இடத்தில்
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்”- பெருமாள் திருமொழி, 7 : 8.– என்கிற
பாசுரத்தை யோஜித்துக் கொள்வது.
———————-
நிகமத்தில் -இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நாள் தோறும்
கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11-
ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குக் காலம் என்னும் தத்வம் – ஒரு பொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.
இதில் கோணை இல்லை – ஒரு மிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரான -சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு,
நித்ய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியை நினைத்து உவகையராம் நிலை யுள்ளது
முக்தர்க்கு ஆகையாலே, இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று
கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்ரீ தரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.- திருக்குறள்-
————————–
நிகமத்தில் -ஸ்ரீ கிருஷ்ணனுடைய சேஷ்டிதங்களை -செயல்களைப் பேசின இப் பத்தும் கற்றார்,
தம்மைப் போன்றே ஸ்ரீ கிருஷ்ண பக்தராவர் என்கிறார்.
நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-
இப் பத்தினையும் அப்யசித்தவர்கள் -கற்றவர்கள் ஸ்ரீ ஆழ்வாரைப் போலே ஆவர்.
இப் பத்தினை யுடைத்தாகையாலே தூய்மையை யுடைத்தான ஆயிரம் என்னுதல்;
அன்றிக்கே, ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே
தூய்மையை யுடைத்தான இப்பத்து என்னுதல்.
துவள் – குற்றம். குற்றம் இல்லாமையாவது, அவதாராந்தரங்களில் -வேறு அவதாரங்களில் போகாமல்
ஸ்ரீ கிருஷ்ணனுடைய விருத்தாந்தத்திலே -செயல்களிலே -கால் தாழ்வர்.
————————-
நிகமத்தில் இத் திருவாய் மொழியின் கருத்தை வியக்தமாக்கா நின்று -விளக்கிக் கூறுவதாய்க் -கொண்டு,
இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான அனுரூபமான -கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-
இதனைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு அடிமை செய்யப் பெறுவர்.
ஸ்ரீ திருமாலுக்கு அடிமை செய்வார்-
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் சேர இருக்க ஸ்ரீ இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே,
விசிஷ்ட வேஷத்தில் சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் –
————————–
நிகமத்தில் இத் திருவாய் மொழியினை வல்லவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற
இன்பத்தினை -போகத்தை புஜிக்க பெறுவர் -அநுபவிப்பார்கள் என்கிறார்.
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-
நீர்மைக்கு எல்லையான ஸ்ரீ திருமலை ஆஸ்ரயணீய -பற்றுதற்குரிய ஸ்தலம்;
மேன்மைக்கு எல்லையான ஸ்ரீ பரம பதம் -அனுபவ அநுபவத்திற்குரிய ஸ்தானம் .
ஒன்றி ஆக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.
—————–
நிகமத்தில் இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு ஸ்ரீ திரு நாடு என்கிறார்.
வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-
கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்து.
அவன் பொருந்தி வாழ்கின்ற ஸ்ரீ திருக் கோளூர்க்கே நெஞ்சை வைத்து.சொல்லுவார்.
ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்யாநுபவம் பண்ணலாம் ஸ்ரீ நிலத்திலே புகப் பெறுவர்.
தனி வழி போகாதே, ஸ்ரீ அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான ஸ்ரீ தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-
———————-
நிகமத்தில் இத் திருவாய்மொழியில் ஸ்ரீ ஆழ்வாருடைய ஆர்த்தியை -துன்பத்தை –
அனுசந்திப்பார் -நினைத்தவர்கள் தாமும் உருகுவர் என்கிறார்.
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே–6-8-11-
இப் பாசுரம் நித்ய மாகையாலே, கேட்டார் தரிக்க மாட்டார்;
உருகுகின்ற அந்தக் கரணராய்- மனத்தை யுடையராய் நீராய் உருகா நிற்பர்.
இதற்குப் பலமாகச் சொல்லப்பட்டது என்? என்னில்,
ஸ்ரீ பகவானுடைய குணங் களிலே ஈடுபட்டவர்கள்-குண வித்தகர் – பாசுரம் கேட்டு அழிகையும்
பேற்றிலே சேர்ந்த தாகையாலே இது தானே பலம் என்கிறது.
———————
நிகமத்தில் இப் பத்தும் கற்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான கிங்கரர் -தொண்டராவர் என்கிறார்.
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-
சர்வ ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விட மாட்டாதவர் களாதலின் உரிய தொண்டர்’ என்கிறார்.
குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” -ஸ்ரீ வசன பூஷணம்,
————————
நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றார், ஸ்ரீ பரம பதத்திலே சென்று தாஸ்யத்தில்
அபி ஷிக்தராய் -அடிமையிலே முடி சூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-
மஹாகம்” என்றும், “பரமா காசம்” என்றும் சொல்லப் படுகிற ஸ்ரீ பரம பதத்திலே வாழப் பெறுவர்கள்.
இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, மேல் வரும் அநுபவம் ஒழியப் ப்ராப்திக்கு -பேற்றுக்கு-
பிரபத்தி – சரணம் புக வேண்டாத தேசத்திலே போய்ப் புகப் பெறுவர்.
இவர் செய்த ப்ரபத்தியே -சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா;
இத் திருப் பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை.
நற் கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப் பத்துங் கற்றார்
பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.
ஸ்ரீ விபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன் செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
இவன் உடையவன்’ என்று எதிர்த் தலைக்குத் தோற்ற இருக்கு மத்தனையே வேண்டுவது.
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply