ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியான -தொகுப்பு–

இத்திருவாய் மொழியில் அந்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

கர விசும்பு எரி வளி நீர்நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே–1-1-11-

இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன.
இனி, ‘இச்செய் அடைய நெல்’ என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று,
‘இவை பத்தும் வீடு’ என்றது, வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக,
ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே தமக்குப் பரத்வ ஞானம் பிறந்தபடியையும்,
அந்த ஞானத்துக்குப் பலம் மோக்ஷம் என்னுமிடத்தையும்,
இப் பதிகத்தில் ஏதேனும் ஒரு படி அந்வயம் உடையார்க்குப் பலம் தம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச் செய்தார்-

————–

முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் –

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-

ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்து, சேதனர்க்கு ஹிதமாவது – நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை;
அன்றிக்கே ,
சேதனர்க்கு-ஹித தமமாய் – மிக்க நன்மையை அளிக்க வல்லது ஒன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது எனலுமாம்.
ஒர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர் -அநுஸந்தி -என்றவாறு
உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால்,
‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் –
கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

————-

நிகமத்தில் , இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள்.
முற்பட ஸ்ரீ நித்திய சூரிகள் வரிசையைப் பெற்று,
பின்னை சம்சாரமாகிற அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

இவற்றைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ நித்திய சூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த்
தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப் பெறுவர்கள்.
‘ஆயின், ‘பிறவி அற்று அமரரோடு உயர்விற்சென்று’ என்ன வேண்டாவோ?’ எனின்,
இப் பத்தைக் கற்ற போதே இவனை ஸ்ரீ நித்திய சூரிகளில் ஒருவனாக நினைப்பன்;
பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை.
அதாவது, சிறையிலே இராஜ குமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று,
ஸ்ரீ நித்திய சூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி.
‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது;
அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று,
இவனும் விதிப்படியே செல்ல வேண்டும்.

இனி, ‘அமரரோடு உயர்விற்சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே,’ என்பதற்கு,
ஸ்ரீ ஆதி வாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் -நீங்கப் பெறுவர்,’ என்று கூறலுமாம்.
த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீ கீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

——————-

நிகமத்தில் – இத்திருவாய்மொழியில் சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம்
கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,’ என்கிறார்.

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-

பால் குடிக்க நோய் தீருமாறு போன்று, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம்.
அதாவது, ஸ்வயம் பிரயோஜனமாக -‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால்,
சம்சாரத்தில்-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று –
விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.

———————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –
இறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –
இவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

கடலிலே முத்துப் பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே
பொருந்தி இருக்கிற இத் திருவாய்மொழியை வல்லார்க்கு.
‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, ஸ்ரீ இறைவன்-சம்ஸ்லேஷ உன்முகன் ஆனவாறே –
வந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

————————-

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர் -அப்யஸிக்க வல்லார்கள் –
சம்சாரத்தில் வந்து பிறவார்,’ என்கிறார்.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-

ஆயிரத்திலும் இந்தப் பத்தையும் கற்க வல்லார் பிறவார்.
பிறக்கை சுட்டி அன்றே
மாத்ரு சம்ரக்ஷணம் அழகிது ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று,
ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணம் எளிது – ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்க வேண்டுகிறது –
இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம்-நிரபேஷமாக- இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப்
ஸ்ரீ பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள்
ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்-

———————–

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி தானே இதனைக் கற்றவர்களுடைய -பிராப்தி பிரதிபந்தகங்களை –
பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை உன்மீலிதமாக்கும்- வேரோடு அழித்து விடும், என்கிறார்-

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஓடு விக்குமே–1-7-11-

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப் பத்தையும் கற்க வல்லவர்களுக்குச் செல்வமும் கைவல்யமும் -புருஷார்த்தம் –
உறுதிப்பொருள் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப் போம்.
உடைந்து ஓடுவிக்கும்–இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல்,
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி)
தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும் என்பார்,
‘உடைந்த ஓடுவிக்கும், என்கின்றார் எனலுமாம்.

——————

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழி, எல்லாத் திருவாய்மொழிகளிலும் அவனுடைய
ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ என்கிறார்.

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே–1-8-11-

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு ஓர்ந்து அருளிச் செய்யப் பட்டவை.
அதாவது, சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி
அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை என்பதாம்.
இனி, ‘இவை ஓர்தல்’ என்பதற்கு, சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.

———————–

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–

எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொருமே-
தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே
செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்
ஸ்ரீ எம்பிரான் என்றது –இப்படி சாத்மிக்க சாத்மிக்கவும் -இலவு மறக்கவும் அனுபவிப்பித்த உபகாரகன் என்றபடி
ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது -சேருகையாய் -சேரும் என்றபடி –
உச்சியுள்ளே பெரும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –

————————-

நிகமத்தில் , ‘இப் பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத
புருஷார்த்தமான ஸ்ரீ பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார்-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே–1-10-11-

அபிப்பிராயத்தோடு கற்பாராகில். தணிவு – முயற்சி அற்று இருத்தல்;
அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் என்றபடி.
‘ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே,
ஞானமாகில் பகவத் விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக் கற்க,
இதற்குப் பலமாகத் தொண்டினை இது தானே தரும்.
இனி, இதற்குக் கல்வி தானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: