ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஏழாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஸ்ரீ திருவாய் மொழி பாடுவிக்க என்ற ஒரு வ்யாஜத்தாலே புகுந்து
நம் இடத்திலே அவன் பண்ணின வ்யாமோஹத்தை -செய்த காதல் பெருக்கினைக் கண்டு
அவனுக்கு அடிமை செய்வார் அவனுடைய சீலம் முதலான குணங்களிலே அகப்படாதீர்கள் என்கிறார்-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-

—————————

தம்மோடு கலந்த பின்பு அவனுக்கு பிறந்த ஸம்ருத்தியை -நிறைவினைக் கண்டு இனியர் ஆகிறார்-

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2-

———————–

அவனுக்கு தம் பக்கல் உண்டான அபிநிவேசத்தினுடைய -காதல் எல்லை கடந்து இருத்தலை அருளிச் செய்கிறார்

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

————————–

தம்முடைய திருமேனியைக் காட்டிலும் தம்மோடு கலந்து பழகுவதற்கு தக்க நிலம் என்று
ஸ்ரீ திருமலையில் அவன் வைத்து இருக்கும் வ்யாமோஹத்தை -காதல் பெருக்கினை -அருளிச் செய்கிறார்

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

———————————

அவன் தம்மோடு கலந்து தம் திரு வாயாலே ஸ்ரீ திருவாய் மொழி கேட்ட ப்ரீதி உள் அடங்காமல் ஆனந்தித்து -மகிழ்ந்து
ஆளத்தி –இசைக்கு பூர்வாங்கமான ஆலாபம்–வையா நின்றான் -என்கிறார் –
அன்றிக்கே
நன்கு என் உடலம் கை விடான் -என்னும் அளவு அன்றிக்கே என் யுக்தி -வார்த்தை அளவிலே களியா நின்றான் –
என்கிறார் என்னவுமாம் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

——————–

ஸ்ரீ யபதியானவன் -ஸ்ரீ திருமகள் கேள்வன் ஆனவன் திருமலையிலே நின்று அருளி
என்னை ஆளுகையிலே-வ்யாமுக்தன் -பெரும் காதலன் ஆனான் – என்கிறார் –

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

—————–

தம்முடைய இஸ் ஸம்ருத்திக்கு -இச் செல்வ நிறைவுக்கு எல்லாம் அடி ஸ்ரீ திருமலை ஆன பின்பு-இது தேசம் தான் –
இம் மலையே தான் நாம் அடையத் தக்க பேறு-ப்ராப்யம் – என்று ஸ்ரீ திரு மலையைக் கொண்டாடுகிறார்-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

———————

ஸ்ரீ திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும் பண்ணும் அபிநிவேசத்தை – செலுத்தும் ஆசையை
என் அவயவங்களில் பண்ணி -உறுப்புக்களிலே செலுத்தி ஒரு க்ஷண நேரமும் பிரிகின்றிலன் –
இவன் படி இருந்தபடி என் –என்கிறார்-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

———————–

நமக்கு இந்த சம்பத்து செல்வம் எல்லாம் ஸ்ரீ திருமலையாலே வந்தது ஆயிற்று – ஆதலால்
ஸ்ரீ திருமலையைக் கை விடாதே கொள் –என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

—————–

இப்படி இவர் நிர்ப்பந்திகச் செய்தேயும் ஆனைக்குப்பு –சதுரங்கம் –இடுவாரைப் போலே கேளாது இருந்தான் –
அதற்கு அடி -சாந்து பூசுவார் பரணியை உடைத்தோ பூசுவது –இது என் சொன்னீர் ஆனீர் -என்ன
திரியவும் மங்க ஒட்டு –என்கிறார்

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

———————–

நிகமத்தில்
மஹான் அஹங்காரம் இவை முதலானவற்றின் விஷயமான இத் திருவாய் மொழி
ஸ்ரீ திரு மால் இரும் சோலை மலையிலே சொல்லிற்று -என்கிறார்

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: