ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -திருவாய் மொழிகளின் சங்கதிகளின்–பிரவேசங்களின் -தொகுப்பு–

பத்தாம் பத்து -முதல் திருவாய் மொழி -தாள தாமரை -பிரவேசம் –

முதல் பத்தால் -ஸ்ரீ பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமான ஸ்ரீ பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்த பட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட பொருள்களிலும்
நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் ஸ்ரீ நாராயணன் – எல்லா ஆற்றலோடும் கூடினவன் உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்

ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு
ஸ்ரீ திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி கதியையும் காட்டி
இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -9-8-4- என்றார்
மரணம் ஆனால் -9-10-5-என்று அறுதி இட்டுக் கொடுத்தான் இறைவன் –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்
அது பெற்றதாய் மேலே நடக்கலாம் படியாய் இருக்கும் அன்றோ கார்யம் –
ஆகையாலே கால அவதி- பெறக் கூடிய கார்யத்தைப் பெற்றாராய் போக்கிலே ஒருப்பட்டார்
போமிடத்தில் முகம் பழகின தேஹத்தையும் விட்டு-பலகாலம் பழகின பந்துக்களையும் விட்டு
தனியேயாய்ச் செல்ல வேண்டியதாலும் போகிற இடம் தாம் கண்டு அறியாத நிலம் ஆதலானும்
அதுவும் நெடும் கை நீட்டு ஆதலானும் வழியிலே பிரதிபந்தகங்கள் -தடைகள் பலவாய் இருத்தலானும் –
அதாவது
அவித்யா -அறிவின்மை /கர்மம் /வாசனை / ருசி என்பன போன்று சொல்லுகிறவற்றைத் தெரிவித்த படி
இவற்றை அடையப் போக்க வேண்டுமாதாலானும் வழிக்கு துணையாக கொண்டு போம் போது
ஸ்ரீ சர்வேஸ்வரனையே பற்ற வேண்டும்

அஃது ஏன்
இவன் தானே தனக்கு துணை ஆனாலோ -எனின்
இன்று அளவும் வர பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிவதற்கு
காரியம் பார்த்து போந்தவன் அன்றோ இவன் –
இச் சரீரத்தோடு இருக்கிற நாளிலே ஹித சிந்தை -நலத்தைச் செய்ய நினைத்தானே யாகிலும் -அதாவது
சரணாகதி செய்ய -நினைத்தானே யாகிலும் –
இவனுடைய பூர்வ விருத்தத்தை -முன் நிலையைப் பார்த்தால் இவன் தான் தனக்கு துணையாக மாட்டானே –
வழியிலே கொடு போம் இடத்தில் இவனுக்கு வரும் தடைகளை அறிகைக்கு சர்வஞ்ஞனாக வேண்டும்
அறிந்தால் அவற்றைக் கொடு போகைக்கு-சர்வசக்தன் ஆக வேண்டும்
யா சர்வஞ்ஞ சர்வவித்- முண்டக உபநிஷத்
எவன் யாவற்றையும் பொதுப்பட அறிந்தவன் -தனித் தனி அறிந்தவன் -என்பன போன்ற பிரமாணங்களால்
ஸ்ரீ சர்வேஸ்வரனே சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -என்னா நின்றதே அன்றோ –

எல்லாம் வல்லவனாய் இருந்தானே யாகிலும் -பிராப்தம் -சம்பந்தம் உள்ளவனாய்
இராத போது பயன் இல்லையே
மாதா பிதா பிராதா நிவாச சரணம் ஸூ க்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் –
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் பாதுகாப்பவனும் ஸ்நேஹிதனும் பேறும்
ஆகிய இவை எல்லாம் ஸ்ரீ மன் நாராயணன் ஆகவே இருக்கிறான் -என்பன போன்றவைகளால்
அவனே எல்லா வித உறவினனாக சொல்லா நின்றது இறே
எம்மானும் எம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததின் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற -பெரிய திருமொழி -7-2-3-என்கிறபடியே
ராகாந்தராய் -ஆசையாலே அறிவற்றவர்களாய் குழந்தையைப் பெற்று-யவ்வன –
இளமைக்கு விரோதி -என்று பொகட்டு போமவர்கள்
இவன் தான் பழகிப் போந்த முகத்தாலே -அம்மே -என்ற போதாக
பெண் குரலாலே -ஏன் -என்றும்
அப்பா -என்ற போதாக ஆண் குரலிலே ஏன் என்றும்
இப்படி முகம் கொடுத்துக் கொண்டு போகக் கடவனாய் இருக்குமவன் அன்றோ -அவன் –

சரீரமானது கட்டுக் குலைந்து ஸ்ரீ பரம பதத்திலே போய்ப் புகும் அளவும் செல்ல நடுவிலே உண்டாகும்
தடைகளை போக்கிக் கொடு போகைக்கு ஈடான விரகு அறியுமவனாக வேண்டும்
விரோதிகளை இரு துண்டமாக இட்டுக் கொடு போக வல்ல ஆற்றல் உடையவனாக வேண்டும்
அசுரரைத் தகர்க்கும் துணிக்கும் வல்லரட்டன் –
தான் தனக்கு தஞ்சம் அல்லாத அன்று இவன் தனக்கு தஞ்சம் என்று
தன்னை இவன் கையில் காட்டிக் கொடுக்கும்படி ஆப்தனாக -நம்பத் தகுந்தவனாக வேண்டும்

ஸ்ரீ சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -என்கிறபடியே தானே பிரமாணங்களால் பிரசித்தம் ஆக்கப் பட்டவன்
தஞ்சமாகிய தந்தை தாயோடுதானுமாய் -திருவாய்மொழி -9-6-2-என்று இவர் தாமே தஞ்சம் என்றாரே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று -தயாவான் -பேர் அருளினன் என்னும் இடம் தாமே கைக் கொண்டார்
இனி சேஷியாய் இருக்கையாலே தானே ப்ராப்தனாய் -சம்பந்தம் உள்ளவனாய் இருக்குமன்றோ –

ஆக –
நம் விரோதிகளைப் போக்கி ஸ்ரீ பரம பத்து அளவும் கொண்டு போய்
வழி நடத்துவான் ஸ்ரீ காளமேகம் -என்று அத்யாவசித்து -அறுதி இட்டு
அரு நிலங்களிலே -செல்லுதற்கு அரிய – வழிப்போவார்
அகப்படை -என்று அந்தரங்கமான சேனை -என்று
மிடுக்கராய் இருப்பாரைக் கூட்டிக் கொண்டு தம் கைப் பொருளை அவர்கள் கையிலே கொடுத்து
அமர்ந்த நிலத்திலே சென்றவாறே வாங்கிக் கொள்ளுவாரைப் போலே-சரீர விஸ்லேஷ சமயத்திலே –
உடலை விட்டு உயிர் பிரிகின்ற காலத்திலேயே
ஸ்ரீ காள மேகத்தின் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தை -ஆத்மாவை அடைக்கலம் செய்து
ஸ்ரீ பரம பதத்திலே புக்கால் பின்னர் நமக்கு ஆக்கிக் கொள்ளக் கடவோம் -என்று
வழித் துணையாகப் பற்றுகிறார்-

இஸ் ஸ்வ பாவங்கள் -இந்தத் தன்மைகள் ஒன்றுமே இல்லை யாகிலும்
அவன் முன்னே போக பின்னே போகா நின்றால்
தோளும் நான்குடைச் சுரி குழல் –
அவனுடைய வடிவு அழகினை அனுபவித்துக் கொண்டு
போமதுவே பிரயோஜனமாக போரும்படி ஆயிற்று இருப்பது –

திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –என்றும்
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே – என்கிறபடியே எதிரிகள் கூசிப் போம்படி
மதிப்பனாய் -பெருமிதம் உடையவனாய் இருப்பான் ஒருவனைப் பற்ற வேண்டும் அன்றோ –
ஸ்வ புருஷம் அபி வீஷ்யே பாசஹச்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மதுசூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்ய ந்ருனாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-17-13-
யமன் கையில் பாசத்தை தரித்த தன் வேலையாளைப் பார்த்து
பகவானை அடைந்தவர்களை விட்டு விடுங்கோள் நான் எனையோர்க்கே தலைவன்
ஸ்ரீ விஷ்ணு பக்தர்களுக்கு தலைவன் அல்லன் என்று அவர்கள் உடைய காதிலே சொன்னான்
என்கிறபடியே அவனும் சொல்லி வைத்தான் அன்றோ –

—————————-

பத்தாம் பத்து -இரண்டாம் திருவாய் மொழி -கெடும் இடர் -பிரவேசம் —

ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-ஸ்ரீ பெரிய திரு மொழியிலே
பல ஸ்ரீ திருப்பதிகளையும் அருளிச் செய்த -இதற்கு கருத்து என் – என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க –
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போகும் பெண் பிள்ளைகள் பந்துக்கள் இருந்த இடம் எங்கும் கண்டு
வினவப் போமாறு போலே-ப்ராப்ய பூமி – அடையத் தக்க ஸ்ரீ பரம பதம் அணித்தானவாறே
ஸ்ரீ திருப்பதிகள் தோறும் புகுகிறார் -என்று அருளிச் செய்தார் –

பண்டை நாளாலே தொடங்கி இவரும்-ஸ்ரீ திருப்பதிகள் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே புகுவது
ஸ்ரீ திரு காட் கரையிலே புகுவது
ஸ்ரீ திரு மூழிக் களத்திலே புகுவது
ஸ்ரீ திரு நாவாயிலே புகுவது
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே புகுவது
ஸ்ரீ திரு மோகூரிலே புகுவது
ஸ்ரீ திரு வநந்த புரத்திலே புகுவதாகிறார் –

அடையத் தக்க ஸ்ரீ பரமபதம் ஏறப் போவதாக ஒருப்பட்டு நடுவிலே உண்டான தடைகளைப் போக்கி
வழி கொடு போய் விடுகைக்கு ஸ்ரீ காள மேகத்தை துணையாகப் பற்றினாராய் நின்றார் மேல் –
அவ்வளவு தான் நமக்கு போக வேண்டுமோ
இங்கே-நமக்கு – உள்ள ஸ்ரீ திரு வநந்த புரமே அடையத் தக்க ஸ்ரீ பரம பதமாக இருக்க
என்று ஸ்ரீ திரு வநந்த புரத்தை ஸ்ரீ பரம பதமாக அறுதி இட்டார் -ப்ராப்யமாக அத்யவசித்தார் -–
அங்கனம் அறுதி இட்டு-அந் நகரமாகிற இது தான்
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் ஆகையாலே
அவன் விரும்பி வசிக்க வேண்டும்படி நிரதிசய போக்யமாய் -எல்லை இல்லாத இனியதுமாய் -தேசம் செய்து –
அவன் வந்து வசிக்கையாலே சம்சார துக்கமும் தட்டாத இடமுமாய் -தீரும் வினை நோய்கள் எல்லாம் தீரும் –
இச் சரீர சம்பந்தம் அற்று அவ்வருகு போனால் செய்யும் அடிமையை
ருசி பிறந்த போதே இங்கேயே செய்யலாம் படியாய் -கடைத் தலை சீய்க்கப் பெற்றால் –
இனித்தான் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் -10-2-6-என்கிறபடியே
ஸ்ரீ நித்ய ஸூரிகளும் வந்து அடிமை செய்யும் நகரம் ஆகையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று
ஆசைப் பட்டபடி அவர்களோடு கூடவுமாய்
அவ்வருகு போக வேண்டினாரே ஆகிலும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-என்கிறபடியே
அவர்களோடு போகவுமாய் இருக்கும் அன்றோ –

ஸ்ரீ உகந்து அருளின நிலங்களில் நிலை இது தான் –
முதலிலே ஸ்ரீ பகவான் இடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய் –
ருசி பிறந்தால் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்
மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ அவர்களுக்கு அந்த விதமாகவே
நான் அருள் செய்கிறேன் -என்கிறபடியே
ஸூலபனாய் இருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையால் –
உபாயத்துக்கு உரிய தன்மைகளும் நிறைந்ததாய்-பூர்ணமாய்-ப்ராப்ய பூமியில்
ஸ்ரீ பரம பதத்துக்கு கொடு போம் இடத்தில் ஸ்ரீ ஆதி வாஹிக கணத்தில் முதல்வனான தானே
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்
உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான் -என்கிறபடியே
பிரதிபந்தகங்களை -வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கிக் கொடு போகைக்கும்
முற்பாடானாகைக்கும் உடலாய் –சம்சார பந்தம் அற்று –
பிறப்பு இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால் செய்யும் அடிமையை-விரோதி –
இவ் உடலோடு கிடக்கச் செய்தேயும்-காதாசித்கமாக –
யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்கும் அன்றோ
ஆகையால் -கூடும் என்க –

ஆக –
ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் –
ருசி பிறந்தவாறே உபாயம் ஆகைக்கும் உடலாய் –
ஞானத்தையும் பக்தியையும் வளர்க்கக் கூடியதுமாய் –
விரோதியும் கிடக்கச் செய்தே -இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே
ஸ்ரீ திருவனந்த புரமே -அடையத் தக்க -பரம ப்ராப்யம் -மேலான ஸ்ரீ பரமபதம் -என்று
அறுதி இட்ட படியே -நடமினோ நமர்கள் உள்ளீர்-
நம்மோடு சம்பந்தம் உடையவர்கள் -அனுகூல ஜனங்கள் அடைய -எல்லாரும்
அங்கே போய் திரளுங்கோள் -என்கிறார்

இதுதான்
அல்லாத -மற்ற ஸ்ரீ திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வாதோ
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -7-10-9-
என்பது போன்றவைகளும் உண்டே -என்னில்
எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும் ஒவ்வோர் இடங்களிலே ஒவ்வொரு வகையான
நினைவின் விசேஷங்கள்-அனுசந்தானங்கள் – ஓடினால் -அவற்றுக்குச் சேர வார்த்தை சொல்லும் இத்தனை இறே

———————

பத்தாம் பத்து -மூன்றாம் திருவாய் மொழி -வேய் மரு தோள் -பிரவேசம் –

ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்குப் பாரித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலே –
அதி சங்கை -ஐயப்பட வேண்டும்படியாய் வந்து விழுந்தது –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் தாமுமாய் அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்–திருவிருத்தம் -95–என்னுமவர் ஆகையாலே –
பாரித்த படியே அந்நகரிலே போய் புக்கு அடிமை செய்யப் பெற்றிலர் –

அந்நகரிலே அப்போதே சென்று சேரப் பெறாமையாலும்
பாரித்த படி அடிமை செய்யப் பெறாமையாலும்
பல காலம் பிரிந்து போன வாசனையாலும்
அநாதியாய் -தொன்று தொட்டு வருகின்ற அசித் சம்சர்க்கத்தை – -சரீரத்தின் சேர்க்கையை
அனுசந்தித்து -நினைந்து அஞ்சின அச்சத்தாலும்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைந்து அஞ்சின படியாலும் -அதாவது –
சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்தும்
ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்பு கிடக்க மறுத்து மீண்டு போரும்படியும் அன்றோ
ஸ்வா தந்த்ர்யம் இருப்பது -அதனாலும்
இனி
ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே வந்து அங்கீ கரிக்கைக்கு ஈடான பக்தி தமக்கு இல்லை என்று இருக்கையாலும்
இன்னம் ப்ரக்ருதியில் -இவ் உலகில் வைக்கில் செய்வது என் -என்னும்
அச்சத்தாலே அவசன்னராய் -துன்புற்றவராய்
தமக்குப் பிறந்த தசா விசேஷத்தை -நிலை வேறுபாட்டினை
ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

அச்சம் நீங்குதற்கு உடலான இவை தாமே அன்றோ இப்போது
இவர்க்கு அச்சத்துக்கு காரணங்கள் ஆகின்றன –
இப்போதே அந்நகரிலே சென்று சேரப் பெற்றிலோம் -என்று இருக்க வேண்டா –
அவனை நினைந்தால் காலாழும் நெஞ்சழியும் -பெரிய திருவந்தாதி -34-என்கிறபடியே
பத்தியினால் பரவசப் பட்ட காரணத்தால் இப்போது அடி இட மாட்டாதே ஒழிகிறார் ஆகையாலே
அடிமை செய்யப் பெற்றிலோம் என்று அஞ்ச வேண்டா –
புகழும் நல் ஒருவன்-என்கிற ஸ்ரீ திருவாய் மொழியின் படியே
இருந்த இடத்தே இருந்து எதேனுமாக சொன்னவற்றையே
தனக்கு அடிமையாகக் கொள்ளும் தன்மையன் ஆகையாலே
இன்று நினைத்தவற்றையும் செய்தவற்றையும் எல்லாம் தனக்கு அடிமையாக நினைத்து இருக்குமவன் அன்றோ அவன் –
இனித் தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணியன் என்று வர நின்ற பிரகலாதன் அன்றோ
முடிவில் வந்து எதிர் இட்டான்

ஆக-பிராந்தனுக்கு – மயக்கம் கொண்டவனுக்கு பிறந்த தெளிவு போலே-அசித் ஸம்ஸ்ருஷ்டனுக்கு –
இச் சரீரத்தோடு சேர்ந்து இருக்கிறவனுக்கு பிறக்கும் ஞானத்தினை நம்ப ஒண்ணாது என்றே அன்றோ
இவர் தாம் ப்ரக்ருதி சம்பந்தத்தை -இச் சரீர சம்பந்தத்தை நினைந்து
தேறேல் என்னை -2-9-10-என்று அஞ்சிற்றும் –
அங்கண் அஞ்ச வேண்டா –
முடியானே -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே கூறப் பட்ட உறுப்புகளை உடையவர் ஆகையாலே
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை நினைத்து அஞ்ச வேண்டா
எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கிறேன் நீ துக்கப் படாதே -என்கிறபடியே –
பாபங்களைத் துண்டித்துக் கொண்டு போகைக்கும் உடலாய் இருக்கையாலே ..
பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா -பிரபத்தியை உபாயமாக பற்றினவர் ஆகையாலே –
இனி –
ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
இதனை ஸ்மரியாதபடியான -நினையாதபடியான சாஷாத் காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது –

ப்ரத்யக்ஷமும் நேரே கண் கூடாக காண்கிற காட்சியும் அகிஞ்சித்கரமாய் -பயன் இல்லாததாய்
கூட இருக்கச் செய்தே பிரிந்தான் -என்று மயங்கும்படி
பிரிவால் வந்த வாசனை மேற்கொள்ளுகிறது அன்றோ
யோக்யதை -தகுதி கிடந்து படுத்துகிற பாடே அன்றோ
மயர்வற மதிநலம் அருளினன் – என்கிறபடியே
ஸ்ரீ பகவானுடைய பிரசாத லப்தமாய் -திருவருளால் கிடைத்ததாய்
பரபக்தி ரூபமாய்
ருசி கார்யமாய்
இருக்கிற இருட்சி இருக்கிறபடி அன்றோ இது –
இனி ஸ்ரீ ஈஸ்வரனுக்கு கால் நடையாடாதது ஒரு தேசத்தில்
இவரை வைத்து பரிஹரிக்கலாம் -அதனைப் போக்கலாம் அத்தனை –

கலந்து பல நாள் பிரிந்து போந்தாள் ஒரு ஸ்ரீ பிராட்டியாய்-அவ் வாசனையாலே
ஸ்ரீ கிருஷ்ணன் கூடி இருக்கச் செய்தேயும் -நீ கண்ணா -என்கிறாள் இங்கே –
இவன் பண்டு பிரிந்து போந்த ப்ரபாத -விடியில் காலமும் வந்து அக்காலத்துக்கு அடைத்த
காற்றுக்கள் அடிக்கையாலும் -வாடை தூவ –
குயில்கள் கூவுகையாலும்
மயில்கள் ஆலிக்கையாலும்
காடு எங்கும் ஒக்க கன்றுகளும் பசுக்களும் பரக்கையாலும்
இக் காலத்தில் அவன் போகை தவிரான்
பசுக்களை ஒரு தலையாக காப்பாற்றுமவன் ஆகையாலே அவற்றை விட்டு நம்மோடு இருப்பான் ஒருவன் அல்லன் –
ஆன பின்பு அவன் போனான் -என்று
கூட இருக்கச் செய்தேயும் அவன் பிரிவினை நிச்சயித்து

இன்னுயிர் சேவல்
மல்லிகை கமழ் தென்றல்
தொடக்கமான ஸ்ரீ திருவாய் மொழிகளில்
அவன் அசந்நிதியில் -முன்னம் இல்லாமையால் பட்ட துக்கம் முழுதினையும் அவன் கண் முகப்பே படுகிறாள்
எல்லா வற்றையும் செய்து -சர்வ சக்தனான -முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
அவனாலும் போக்க ஒண்ணாதபடி ஆயிற்று இவ் வாபத்து
அதாவது
போனானாய் வருகிறவன் அல்லன்
போக நினைத்தானாய் தவிருகிறவன் -அல்லனே -என்றபடி –

இப்படி நோவு பட்டு
நீ பசு மேய்க்கப் போதலை நிச்சயமாக தவிராய்
நீ போதல் எனக்கு அநபிமதம் -விருப்பம் இல்லாத கார்யம் ஆகையாலே உன் செலவினை-உன்னுடைய போக்கை –
விலக்க வேண்டும் என்று நினையா நின்றேன்
இதற்கு நா நீர் வருகிறது இல்லை-அதற்கு பரிஹாரமாக -மாற்றாக
உன் கையை என் தலையிலே வைக்க வேண்டும் –
அணி மிகு தாமரைக் கையை –
நீபசு மேய்க்கப் போகாது ஒழிய வேண்டும்
வீவ நின் பசு நிரைமேய்க்கப் போக்கு –
ச பிரமாதமான -தீங்கினை விளைக்கக் கூடிய காட்டில் நீ பசு மேய்க்கப் போனால் அங்குள்ள
அசுரர் ராக்ஷஸர்கள் முதலியோர்களால் என் வருகிறதோ –
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் – என்று அஞ்சா நின்றேன் – என்கிறாள் –

இனி
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் சூக்ருத் கதி நாராயணா -சுபால உபநிஷத் -என்கிறபடியே
அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப்போன்று –
இத்தலைக்கும் சம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ –

யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச
பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68-
ஸ்ரீ கௌசல்யார் ஸ்ரீ சக்ரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய
இவர்களைப் போன்று இருந்தாரே -என்கிறபடியே –
ஆன பின்பு-நீ செல்லில் போகில் -நான் உளளாக மாட்டேன் -என்று இப்படி நோவுபட
அவனும் இவை முழுதினையும் அனுசந்தித்து -நினைந்து -நான் போகிறேன் அல்லேன் -என்று
தன் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்தி தரிப்பிக்க
தரிப்பததாய் -செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு – தலைக் கட்டுகிறது -இத் திருவாய் மொழியில்

இதனால்
ஸ்ரீ திரு மந்த்ரத்தில் கூறிய – தாதார்த்யத்தின் அடிமைத் தன்மையின் எல்லை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -அவனுக்கே உறுப்பாக பயன் கொடுக்கை -தானே அடிமைத் தனத்தின் எல்லை
எம்மா வீடு -ஸ்ரீ திருவாய் மொழியில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று நிஷ்கர்ஷித்தது -அறுதி இட்டது ஓன்று உண்டே அன்றோ –
அதனை அழிக்கிறதாயிற்று இங்கு –
என்னைக் கொள்ள வேண்டும் என்றே அன்றோ அங்குச் சொல்லிற்று
என்னோடு கலக்கவுமாம்
வேறு சிலரோடு கலக்கவுமாம் –
அங்குத்தைக்கு குறை தீரும் அத்தனை வேண்டுவது என்கிறது இங்கு
அது தனில் எனக்கு என்ற இடம் புருஷார்த்தம் ஆகைக்கு சொன்ன இத்தனை அன்றோ –
அது அசித் வ்யாவ்ருத்திக்காக -அறிவில்லா பொருளின் வேறுபாட்டுக்கு உடலாம் இத்தனை
இவன் தான் எனக்கு என்னாத அன்று புருஷார்த்தம் ஆகாது
அவன் தான் விரும்பி ப்ரவர்த்திப்பதுவும் -கார்யத்தை செய்யவும் தொடங்கான்

———————

பத்தாம் பத்து -நான்காம் திருவாய் மொழி -சார்வே -பிரவேசம் –

தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே -அதி சங்கையாலே -இருந்த ஐயத்தாலே பிரிந்தார் படும் வியஸனத்தை –
துன்பத்தினைப் பட்டு – அதனாலே அவசன்னரானவரை -மயக்கம் உற்றவரை –
உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று அவன் தெளியச் செய்ய-செங்கனி வாய் -அதனாலே
தரித்து மிகவும் ப்ரீதர் ஆனார் கீழ் –

முதல் திருவாய் மொழியிலே தத்வ பரம் பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி யற்றது –
இனி அந்த பொருள் தானே ப்ராப்யமாய் -அடையக் கூடியதாய் இருக்கும் அன்றோ –
அந்த ப்ராப்ய வேஷம் -அடையைக் கூடியதான அந்த பரம் பொருளின் தன்மையையும்-
பிராப்தி – அடைவதன் பலமான கைங்கர்யத்தையும்
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் -என்றும்
அருளிச் செய்தார் -கெடும் இடராய வெல்லாம் -என்ற திருவாய் மொழியிலே –
அப் ப்ராப்யம் -அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கை புகுரப் பெறாமையாலும்
நெடு நாள் படப் பிரிந்து போந்த வாசனையாலும்-வெருவி இவர் அவசன்னராக -துன்பம் உற்றவராக
இவருக்கு பிரசாங்கிகமாக பிறந்த துன்பத்தினை நினைத்து
அவனும் ஆஸ்வசிப்பிக்க –தெளிவிக்க தெளிந்தவராய் நின்றார் வேய் மரு தோளிணை-என்ற திருவாய் மொழியிலே-

ஆக முதல் திருவாய் மொழியிலே தத்வ -பரம் பொருள் விஷயமாக சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி
அவ் வஸ்து -அப்பறம் பொருள் தானே ப்ராப்யமாய் -அடையக் கூடிய பேறாக இருக்கையாலே
அப் பேற்றினைப் பெறுதற்கு உபாயமான பக்தி யோகத்தை வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலே சொல்லி
அந்த பக்தி மான்களுக்கு அவன் ஸூலபனாய் இருக்கும் தன்மையை பத்துடை அடியவர்க்கு -என்கிற திருவாய் மொழியாலே சொல்லி

ஆக
வீடுமுன் முற்றத்திலும் பத்துடை அடியவரிலும் சொன்ன பத்தியானது -ஸ்வ சாத்யத்தோடே -அதன் பலத்தோடு
பொருந்தின படியைச் சொல்லி -தாமோதரன் தாள்கள் தவ நெறிக்குச் சார்வே –
அத் திரு வாய் மொழிகளிலே பத்தியை வர்த்தகமாக்க -வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை பரமர்சியா நின்று –
ஆதரித்துக் கொண்டு -உரலினோடு இணைந்து இருந்து -என்றதனை தாமோதரன் என்றும்
புயல் கரு நிறத்தனன் -என்றதனை -கார் மேக வண்ணன் என்றும்
அடியவர்க்கு எளியவன் -எளிவரும் இயல்வினன் -என்றதனை சார்வே -என்றும்
பிறர்களுக்கு அறிய வித்தகன் -என்றதனை -காண்டற்கு அருமையனே -என்றும்
அமைவுடை முதல் கெடல் -என்றதனை -பெருமையனே வானத்து இமையோர்க்கும் -என்றும்
மலர் மகள் உறையும் -என்றதனை -திரு மெய் உறைகின்ற -என்றும்
தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக
முதல் திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியோடு -அருளினன் -தலைக் கட்டுகிறார் இதில் –
பண்டே பரமன் பனித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம் -என்று-

இவ் விரண்டு கோடியும் இவருக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்து இருப்பது பிரபத்தியே யாம்
முதல் திருவாய் மொழியில் பிரபத்தியைக் காட்ட -ஸூசகமான -சொல் உண்டோ என்னில்-
அருளினன் -என்றாரே அன்றோ –அதுவும் அவனது இன்னருளே -9-7-6- என்றபடி –
இனித் தான் இவருடைய பக்தி வேதாந்தங்களில் கூறப் படுகிற -விஹிதமான -பக்தி அன்று
வேதாங்களில் கூறப் படும் பக்தியாகக் கொள்ளும் இடத்து அப சூத்ர அதிகரண நியாயத்துக்கு விரோதம் உண்டாகும்
அது தான் இவ் வாழ்வார் உடைய பிரபாவத்தொடு கூடாதோ என்னில் –
அது இவரோடு உக்திகளோடே -பாசுரங்களோடு விரோதிக்கும் -முரண்படும்

அருளினன் -என்று இப்புடைகளில் அன்றோ இவருடைய பாசுரங்கள்
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி- ஆத்ம சித்தி
கர்ம ஞானங்கள் இரண்டாலும் சம்ஸ்க்ருத -தூய்மை செய்யப் பட்ட-அந்தக்கரணம் –
மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் -என்கிறபடியே
ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட மனத்தினை உடையவனுக்கு பிறக்குமது அன்றோ பக்தி யாகிறது –
அந்த ஞான கர்மங்களிடத்து -ஸ்த்தானே பகவத் ப்ரசாதமாய் -ஸ்ரீ இறைவனுடைய திருவருள் நிற்க
அதற்குப் பின் உண்டான-அநந்தரமான – பரபக்தி தொடங்கி பிறந்ததே இருக்கும் இவருக்கு –

இனித் தான் இவர் வழியே போய் இவருடைய பேறே- பேறாக நினைத்து இருந்த ஸ்ரீ பாஷ்ய காரரும் பிரபத்தியைப் பண்ணி
பின்னர் பக்தி தொடங்கி வேண்டிக் கொண்டார் அன்றோ –
அவன் உபாயம் ஆனாலும் இவனுக்கு ருசி உண்டாய் ப்ராப்ய சித்தி -பேற்றினைப் பெற வேண்டுமே
இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே –
ப்ராப்யம் -பெறுகிற பேறு இன்னது என்று நிஷ்கர்ஷித்து -அறுதி இட்டு- அந்த பேற்றிலே ருசி கண் அழிவு அற
உடையவனுக்கு அன்றோ ப்ராபகன் -அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது –
ஆகையால் இவருடைய பக்தி பிரபத்திகள் விகல்பிக்கலாம் -மாறாடலாம் படி அன்றோ இருப்பன –

ஆக
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலும்
பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியிலும் பிறருக்கு உபதேசித்த பக்தி
தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி –
இது தான் ஸ்வ சாத்யத்தோடே -பலத்தோடு சேர்ந்த படியைச் சொல்லி முடிக்கிறார் இதில் –

நன்று -பிறருக்கு உபதேசித்த இந்த பக்தி யானது பலத்தோடு சேர்ந்து இருப்பது-
பிராப்தி –ஸ்ரீ இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ -என்னில் –சாஷாத் கார ரூபமான அனுசந்தானம் –
கண்கூடாகக் காண்பது போன்று தோற்றாமல்-கண் கூடாக காண்பதாகவே தோற்றுகிற
மனத்தின் அனுபவம் அமையும் அன்றோ இப்போது –
ஸோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா-
ஸ்ரீ சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும் என்றபடியே
குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால்
குண விசிஷ்டமான -அக் குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்குகிறானே அன்றோ
ஆக உபாசன -வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்க தட்டு இல்லை -என்க-

ஆனால் கீழில் எல்லாம் -இந்த ப்ராப்ய அனுசந்தானமே – கண் கூடாக காணுதலைப் போன்று
மனத்தினால் கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ –
கண்ணனை நான் கண்டேனே
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து-
சொல்லிக் கொண்டு போந்தது -என்னில்
அவற்றைப் பற்றி பிறந்தன சில ரச விசேஷங்களை சொன்ன இத்தனையேயாம்
அவ்விடங்களில் உபக்ரமித்த – தொடங்கின பொருளை உபசம்ஹரிக்கை -முடிக்கை என்பதும் ஓன்று உண்டே
அதனைச் சொல்லுகிறது இங்கே
முனியே -அணித்தாகையாலே மானஸ அனுபவம் பூரணமாக இருக்குமே –

மேலே அருளியவை ஸ்ரீ எம்பெருமானார் நிர்வாகம் –

இங்கன் அன்றிக்கே -நீ பசு மேய்க்கப் போக வேண்டா -என்கிறாள்
ஆகில் தவிர்ந்தேன் -என்றான் –
இவனைப் போன்ற ஸூலபன் இலன் காண் -இவன் பக்தியினால் அடையத் தக்கவன் என்னும் இடம்
நிச்சிதம் -உறுதி -என்கிறாள் என்று ஒரு உருவிலே பணிப்பர் ஸ்ரீ பிள்ளான் –

இனி ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம் ஒன்றும் அருளுகிறார் அடுத்து –
முதல் திருவாய் மொழியிலே ப்ராப்யத்தை -பெறக் கூடிய பேற்றினை அருளிச் செய்தார்
அந்த ப்ராப்யத்துக்கு பிராபகமாக -பேற்றினை அடைவதற்கு வேதாந்தங்களில் பக்தி என்றும் பிரபத்தி என்றும்
இரண்டு வழிகள் விதிக்கப் பட்டன –
அவை இரண்டிலும் பக்தி முதல் மூன்று வருணத்தவர்களே செய்யத் தக்கது
பிரபத்தி சர்வாதிகாரம் -எல்லாராலும் செய்யத் தக்கது
அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதாய்-தாம் தம் திரு உள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக் கொண்ட பிரபத்தியை
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியிலே அருளிச் செய்தார்
முதல் மூன்று வர்ணத்தவர் உடைய பக்தியை -பத்துடை அடியவர்க்கு -திருவாய் மொழியில் அருளிச் செய்தார்

ஆக இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்த பக்தி பிரபத்திகள் தம் பலத்தோடு
பொருந்தின படியை அருளிச் செய்கிறார் –
சார்வே தவ நெறி –
கண்ணன் கழலிணை –
என்னும் இரண்டு திருவாய் மொழிகளாலும் –

அவற்றுள் சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியில்
பிரபத்தி அதற்கு உரிய பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்று –
தவம் -என்னும் சொல்லால் பிரபத்தியைச் சொல்லுகிறது –
தஸ்மாத் ந்யாசம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -தைத்ரிய உபநிஷத்
தவங்களில் மிக்க தவமாக சொல்லிடறே அன்றோ பிரபத்தியை –
பண்டே பரமன் பணித்த பணி வகையே
கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் –
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச -என்ற
அர்த்தத்தை அருளிச் செய்தார்

இனி ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமலை ஆண்டான் பணிப்பது -ஆவது –
பிரபத்தி விஷயமாக ஆயிற்று -வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழி –
ஸ்ரீ பாஷ்ய காரரும் அப்படியே பிரபத்தி விஷயமாக அருளிக் கொடு போந்து
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்த பின்பு
ரஹஸ்ய உபாயத்தை வெளி இட ஒண்ணாது என்று
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியையும் பக்தி விஷயமாக அருளிச் செய்தார்

ஆக
முதல் திருவாய் மொழியில் சொன்ன ப்ராப்ய -பரம்பொருளின் ஸ்வரூபத்தையும்
ப்ராப்ய பலமான -அதனைக் காண்பதற்கு பலமான கைங்கர்யத்தையும்
கெடும் இடராய -என்கிற திருவாய் மொழியிலே
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்றும் –
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் -என்றும் அருளிச் செய்து –
உன் தன் திரு உள்ளமிடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-என்று
அக் கைங்கர்யத்திலே களை பறித்து
அதாவது
த்வய மகா மந்த்ரத்தில் உத்தர -பின் வாக்கியத்தில் -நம -அர்த்தம் அருளிச் செய்து –
கெடும் இடராய -என்னும் திருவாய் மொழியாலும்
வேய் மரு தோளிணை -என்னும் திருவாய் மொழியாலும்
முதல் திருவாய் மொழியில் சொன்ன பொருளை நிகமித்து -முடித்து-
சார்வே தவ நெறி -என்ற திருவாய் மொழியாலும்
கண்ணன் கழலிணை -என்கிற திருவாய் மொழியாலும்
வீடுமுன் முற்றவும் -என்ற திருவாய் மொழியாலும்
பத்துடை அடியவர் -என்ற திருவாய் மொழியாலும்
சொன்ன -பக்தி -பிரபத்திகள் –
அதன் அதன் பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்கிறார் என்பது-

—————–

பத்தாம் பத்து -ஐந்தாம் திருவாய் மொழி -கண்ணன் கழலினை -பிரவேசம் –

பக்தியானது ஸ்வ சாத்யத்தோடே -தனது பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்தார் கீழ் –
அத் துணை க்ரமம் -முறையைப் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீ ஈஸ்வரன் தன்னைக் கொடு போகையிலே-த்வரிக்கிற
விரைகிற படியைக் கண்டு -என்றது -மரணமானால் -என்றது
அவனுக்கு நெடு -பல நாள்களாய் அத்தனையும் பொறுக்க மாட்டாமல் அவன் கொடு போகையில்
த்வரிக்க -விரைகிற படியைக் கண்டு -என்றபடி-அத்தை அனுசந்தித்து –
நமக்கு போக்கு தவிராத பின்பு-இனி இவர்களுக்கு
பக்திமான்கள் உடைய செயல்கள் இருக்கிற படியையும் அறிய வேண்டுவது ஓன்று ஆகையாலே
அதனை உபதேசிப்போம் என்று பார்த்தார்
இவர் தாம் ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே பேர் அருள் உடையவர் காணும் –

இது தான் ஓன்று இவர்களுக்கு குறை கிடந்தது ஆகிறது என் -என்று
அது இருக்கும்படியை உபதேசிப்போம் என்று பார்த்து பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக த்வரிக்கிற -விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் பிரதிபதிக்கு விஷயம் -அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்
பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு

அந்த பக்திக்கு – -ஆலம்பமான -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு அனுசந்திக்கப்படும் -நினைக்க தகும் மந்த்ரம் -ஸ்ரீ நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய அர்த்த அனுசந்தானமே -பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ் வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக் கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –
இப்படிப் பற்றுவார்க்கு ஆஸ்ரயிப்பார்க்கு -அவன் -மேயான் வேங்கடம் – ஸூலபன் என்றும் –
ஸ்ரீ மாதவன் -ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஸூவாராதன் -ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –
ஸ்ரீ மாதவன் என்று என்று -இவனை இடுவித்து ஆஸ்ரயிப்பித்து -பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -ஆஸ்ரயிக்கும் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு
சொன்ன முறைகள் -சம்பத்தி -வேண்டா-ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள் என்றும்
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்
இப் புடைகளிலே சொல்லி

நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று உபதேசித்து
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-
வீடு முன் முற்றவும் -ஸ்ரீ திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு ஸூ பாஸ்ரயமான- பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-

———————–

பத்தாம் பத்து -ஆறாம் திருவாய் மொழி – அருள் பெறுவார் -பிரவேசம் –

பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவும் வர –
ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்ரீ ஆழ்வார் பின்தொடர்ந்த படி சொல்லிற்று –
இது தொடங்கி ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ சர்வேஸ்வரன் பின் தொடருகிற படியைச் சொல்கிறது –

கண்ணன் கழலிணையில் -இப்படி பக்தியின் ஸ்வரூபத்தை -தன்மையை உபதேசித்து கை ஒழிந்த அநந்தரம் –
பின் தன் பக்கலிலே இவர்க்கு விடாய் பெருகிற படியைக் கண்டு
இவர்க்கு முன்பே விடாய்த்து ஸ்ரீ திரு வாட்டாற்றிலே தங்கு வேட்டையாக வந்து நிற்கிறவன் ஆகையாலே
இவரைக் கொண்டு போகையிலே அவன் விரைவு மிக்கவன் ஆனான் –
இவர் விடாயின் அளவு அன்றே அவனுடைய விடாயின் அளவு –

சிரஞ்சீ வதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம்அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-30-
ஒரு ஷணமும் நான் உயிர் தரித்து இருக்க மாட்டேன் -என்னும் ஏற்றம் உண்டே அன்றோ அவன் விடாய்க்கு
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -9-6-10-

ஸ்ரீ ஆழ்வாரும் நாமுமாய் அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து அது செய்யும் இடத்தில்
அனுபவத்துக்கு ஒரு விச்சேதம் -பிரிவு வாராதபடி ஏகாந்தமாய் -தன்னந்தனியே இருப்பது
ஒரு ஸ்ரீ தேச விசேஷத்திலே கொடு போய் வைத்து அனுபவிக்க வேண்டும் -என்று பாரித்து
அங்கனம் செய்யும் இடத்தில்
இவருக்கு பர தந்த்ரனாய் இவர் நியமித்தபடி -ஏவுகிறபடி செய்தோமாக வேண்டும் என்று
இவர் அனுமதி ஒழியச் செய்த மாட்டாதவனாய் நின்றான்
ஸ்ரீ சர்வேஸ்வரனை தாம் நியமிக்க -ஏவ மாட்டாரே தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே
இப்படி தம் பக்கலிலே அபிநிவேச அதிசயத்தை -மிக்க காதலைச் செய்கிறவனுடைய மேன்மையையும்
அப்படி மேன்மையை உடையவன் தம் பக்கல் பாரதந்த்ர்யனாய் தாழ நிற்கிற படியையும் நினைந்து
இதற்கு உசாத் துணையாக
சம்சாரிகளை -இவ் உலக மக்களை பார்த்த இடத்து
அவர்கள் சப்தாதி விஷயங்களில் அந்ய பரராய் -ஐம்புல இன்பங்களுக்கு வசப் பட்டவர்களாய்
அவற்றோடு பணி போந்து இருந்தார்கள்
அவனைப் பார்த்த இடத்தில் அபிநிவேச அதிசயத்தை -மிக்க காதலை உடையவனாய்
முன்னடி தோற்றாதே இருக்கிறவன்
ஆகையாலே அவன் இதற்கு ஆளாக மாட்டு இற்றிலன்
இனி அவன் திரு அருளுக்கு இலக்கான தாமும் தம்மோடு உடன் கேடான நெஞ்சமேயாய் இருந்தது –
அந் நெஞ்சினைக் குறித்து
அவனுடைய மேன்மை இருந்த படியும்
அப்படி மேன்மை உடையவன் நம் பக்கல் தாழ நின்ற நிலையும்
நாம் பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியும் எல்லாம் கண்டாயே
நம் கார்யம் விழுந்தபடி கண்டாயே -என்று இதனை தம் திரு உள்ளத்தோடு கூட்டி இனியர் ஆகிறார் –

இதற்கு முன்பெல்லாம்
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகிறான் சர்வ நியாந்தாவாய் -எல்லாரையும் ஏவுகின்றவனாய்ச்
ஸ்வ தந்த்ரனாய் இருப்பான் ஒருவன் என்று இருந்தார்
இப்போது அங்கன் அன்று –
ஆஸ்ரித -அடியார்கட்கு பரதந்த்ரப்பட்டு இருப்பதுவே அவனுடைய ஸ்வரூபம் -தன்மை என்கிறார்

முன்பு எல்லாம் தம்மாலே பாரதந்த்ர்யத்தை இழந்தார்
இப்போது அவனாலே பார தந்த்ர்யத்தை இழக்கிறார்
அதுதான் -இருந்தும் வியந்து -என்ற திருவாய் மொழியில் சொல்லிற்று இல்லையே -என்னில்
அதைக் காட்டிலும் இதற்கு வாசி உண்டு –
அடியார் தம் அடியனேன் -என்று ஹேதுவோடே -காரணத்தோடு சொல்லுகிறார்-
சரம தசையில் தாம் நிற்பத்தால் வந்த விளைவு இது என்கிறார் –
நெடுமாற்கு அடிமை -பாடியதன் பயன் பெற்றார் –என்றவாறு –

———————-

பத்தாம் பத்து -ஏழாம் திருவாய் மொழி -செஞ்சொல் -பிரவேசம் –

விதி வகையே -என்கிறபடியே அவன் தம்மிடத்தில் பரதந்த்ரனாய் நிற்கிறபடியை அருளிச் செய்தார் –
அவ்வழியாலே
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே -என்றும்
தலை மேலே தாள் இணைகள் -என்றும் –
அவன் தன் திரு மேனியோடு புகுந்து கலந்த படியை அருளிச் செய்தார் –
தம்மோடு வந்து கலந்த இடத்தில் தம்மிடத்தில் பரதந்த்ரனாய்-திரு மேனியை விட மாட்டாதே
அவன் செய்கிற அபிநிவேசத்தை -காதல் பெருக்கினை கண்டார் –
கண்டவர் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று நாம் அடியிலே வேண்டிக் கொள்ளச் செய்தேயும்
இங்கு நம்மை வைத்தது ஒரு கார்ய புத்த்யா -கார்யத்துக்காக என்று இருந்தோம்
அதாவது இப் பிரபந்தம் தலைக் கட்டு வித்துக் கொள்ளுகை -என்றபடி
அது அவ்வளவில் அன்றிக்கே நம் உடம்பினை விரும்பி விட மாட்டாமையாலேயாய் இருந்தது –
இவன் வெற்று உடம்பனாய் இருந்தான்
கவி பாடுவித்துக் கொள்ளுகை ஒரு வ்யாஜ மாத்ரம்-ஆனு ஷங்கிக பலமாய் வந்தது இத்தனை –
அது பிரதானம் அன்று-இதுவே இவனுக்கு நினைவு -என்று நினைந்தார் –

நினைந்தவர் -இவ் உடம்பினை விரும்புகிறது நம் இடத்தில் ஆதரத்தால் -காதலால் அன்றோ –
இப்படி நம்மை விரும்பின இவ்வளவிலே நம்முடைய அபேக்ஷிதம் -விருப்பத்தை முடித்துக் கொள்வோம் என்று பார்த்து –
தேவரீர் திரு உள்ளத்தில் ஓடுகிறது என் -என்றார் –
நான் உடம்பனாயே வேறு ஓன்று அறியாமல் படுகிற பாடு அன்றோ -மற்று உண்டோ -என்றான் –
அங்கண் ஒண்ணாது -தேவர் -இச் சரீரத்தில் செய்து அருளும் விருப்பத்தை தவிர வேண்டும் –
மங்க ஒட்டு உன் மா மாயை -என்று விண்ணப்பம் செய்தார் –
இவர் விலக்கினது-அவருடைய அபிநிவேசம் -காதல் பெருகுவதற்கு உடலாயிற்று –
ஒரு மா நொடியும் பிரியான் –
தந்தாமைக் கொண்டு அருமைப் படுத்துவார்கள் அன்றோ மேல் விழுகைக்காக-அது போலே ஆயிற்று-

இப்படி இவன் இவ் உடம்பிலே செய்கிற ஆதரத்தினைக் கண்டு
இவனுடைய அபிநிவேசம் -காதல் பெருக்கு இருந்தபடியைக் காணில்
இவ் உடம்போடு நம்மைக் கொடு போக நினைத்து இருக்கிறான் போலே இருக்கிறது
அப்படிச் செய்யும் போது இஸ் சம்சாரம் -இவ் உலக வாழ்க்கை நமக்கு என்றும் உள்ளதாய் விடும்
இங்கே இருந்து இதற்கு ஒரு முடிவு கண்ட தாமத்தை இழந்தோம் ஆவோம் இத்தனை
இதனைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்தார்-

பார்த்தவர் –
மங்க ஓட்டே -என்றும்
மங்க ஒட்டு உன் மா மாயம் -என்றும்
பொங்கு ஐம்புலனும் -பாசுரம்
மும் முறை விரும்புவதும் மும் முறையும் தவிரச் சொல்லுகையும் அறியலாம்
தேவரீர் இச் சரீரத்தை விரும்புகைக்கு அடி-என்னிடத்தில் செலுத்தும் அபிநிவேசம் -காதல் பெருக்கே அன்றோ
நான் இதனை விரும்பவில்லை-எனக்கு இது அநபிமதம் –
தேவரீரும் இவ் உடம்பில் செய்கிற விருப்பத்தினைத் தவிர வேண்டும் -என்ன
நீர் உம்முடைய உத்தேசியத்தை -விருப்பத்தை விடாதவாறு-நம் உத்தேசியத்தை -விருப்பத்தை விடுவதாமோ -என்றான்
அம் தண் திருமால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் -பாசுரம் கொண்டு பிரவேசம்

இவன் இப்படி விரும்புகிறது – இவ் உடம்பின் தோஷ தர்சனம் -இழிவுகளை காணாமையால் அன்றோ –
இவனுக்கு இவ் உடம்பின் தோஷ தர்சனம் பண்ணுவிப்போம் -தாழ்வுகளைக் காட்டுவோம் என்று பார்த்து
இவ் உடம்பாகிறது -உபசயாத்மகமாய் -பருத்தல் சிறுத்தல் வளர்தல் குறைதல்களை உடையதாய் –
ஹேயமாய் விடத் தக்கதாய் இருப்பது ஓன்று –
விரும்பப் படும் ஆத்மாவைப் போன்று ஏக ரூபமாய் -ஒரே தன்மையதாய்-விலக்ஷணமாய் –
வேறு பட்ட சிறப்பினை உடையதாய் இருப்பது ஓன்று அன்று
இதனை உபேக்ஷித்து -வெறுத்து அருள வேண்டும் -என்றார்
அவ்வார்தைகளே இவன் மென்மேலும் விரும்புவதற்கு காரணங்கள் ஆயின –
அபிமத விஷயத்தில் -மனைவினது அழுக்கை உகப்பாரைப் போலே எல்லா காலத்திலும் இவன்
விட மாட்டாதவனாய் இருந்தான் –

இவனை கால் கட்டியாகிலும் ‘இக் கால் கட்டினை அவிழ்த்துக் கொள்வோம் என்று பார்த்து
இதில் செய்கிற விருப்பத்தினை தேவரீர தவிர வேண்டும் என்று சரணம் புக்கார் –
பிரார்தனா மதி சரணாகதி –
இவர் சொன்னபடியே செய்ய இழிந்தவன் ஆகையாலே
தனக்கு இவ் உடம்பிலே மென் மேலும் விருப்பம் செல்லச் செய்தேயும்
இவர் இதனை விரும்பாத பின்பு உபேஷா விஷயமான பின்பு -நாமும் இதனை வருந்தியாவது
உபேக்ஷிப்போம்- வெறுப்போம் -என்று பார்த்தான் –-இவர் இடத்து அவன் காட்டும் பாரதந்த்ர்யத்தாலே
இவ் உடம்பு ஒழிய அவன் கொடு போவனாய் இருந்தான் -மான் ஆங்கார மனம் கெட –

ஆக
இப்படியாலே -அருள் பெறுவார் -ஸ்ரீ திருவாய் மொழியிலே தொடங்கின பாரதந்த்ர்யத்தை நிகமித்து முடித்து
சர்வ நியாந்தாவாய் -எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாய்-
சர்வாதிகனான – எல்லா பொருள்களுக்கும் தலைவனான -ஸ்ரீ சர்வேஸ்வரன்
தனக்கு இவ் உடம்பில் அபேக்ஷையும் -விருப்பம் செல்லா நிற்கச் செய்தே
நாம் -இதனைத் தவிர வேண்டும் -என்னத் தவிருவதே –
என்ன ஒரு சீல குணம் இருக்கும்படியே –
இவ் விஷயத்தில் ஒருவரும் இழியாதீர்கள் இழிந்து நான் பட்டதுவே அமையும்
என்று ப்ரீதி பிரகர்ஷத்தாலே -மிகுந்த பிரீதியாலே
உயிர் காத்து ஆட்செய்மின் -என்று – பிறருக்கு சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————–

பத்தாம் பத்து -எட்டாம் திருவாய் மொழி திருமால் இரும் சோலை -பிரவேசம் –

அருள் பெறுவார் -என்கிற ஸ்ரீ திருவாய் மொழியிலே
தம்மைக் குறித்து ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உண்டான பாரதந்த்ர்யத்தைப் பேசினார் –
அந்த பார தந்த்ர்யத்தை முடிய நடத்தினபடி சொன்னார் செஞ்சொல் கவிகாள் -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே –
நீர் சொன்னபடி செய்யக் கடவோம் -என்று தலை துலுக்கினான் அன்றோ –
இவரைத் திரு மேனியோடு கொடு போவதாக தேங்கின தேக்கம் அன்றோ நடுவே உள்ள பாசுரங்கள் –
அது ஒழியக் கொடு போவதாக அற்ற அன்றே பதறத் தொடங்கினான்
சிலரை ஸ்ரீ ஆதி வாஹிக கர்த்தாக்களை வரவிட்டுக் கொடு போம்
சிலரை ஸ்ரீ பெரிய திருவடியை வரக் காட்டி கொடு போம் –
செழும் பறவை தான் ஏறித் திரிவான் -என்று ஸ்ரீ திருவடி திருத் தோளிலே ஏறி வந்து இறே இவரை விஷயீ கரித்தது –
அத் திருவடி திருத் தோளிலே வந்து தானே கொடு போகத் தக்கவர் அன்றோ -இவர்

அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி -என்னுடைய அடியவனை இறுதிக் காலத்திலேயே
நானே நினைக்கிறேன் -கொண்டு போகிறேன் -என்கிறபடியே
கள்வன் கொல் -பெரிய திருமொழி -8-7-1-என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் ஸ்ரீ பிராட்டியை
ஆள் இட்டுக் கொண்டு போகும் அன்றே அன்றோ இவரையும் ஆள் இட்டுக் கொடு போவது-

நானிலம் வாய்க் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
நானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்
தேன் இளம் சோலை அப்பாலது எப் பாலைக்கும் சேமத்ததே -ஸ்ரீ திரு விருத்தம் -26-

முன்னம் ஏழ் புரவியார் இரவிகாய் வெயிலினால்
முத்தரும் பியகிலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னமோர் காவதம் போது மேல்
அகலும் இப் பாலை அப்பால் அரைக் காவதம்
என்னை யான் உடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மதுகரப்
பூ விரித் துறையும் அக் காவிரித் துறையுமே -ஸ்ரீ திருவரங்க கலம்பகம்-50-

சம்சாரமாகிற -இவ் உலக வாழ்க்கையாகிற பாலை நிலத்தைக் கழித்துப் போந்தோம்
நச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே புகுந்தோம்
என்று தானே சொல்லித் தேற்றிக் கொண்டே அன்றோ போவது –

ஆக
அத்திருவடி திருத் தோளிலே வந்து இவரை கொடு போவதாகப் பார்த்தான்
இப்படி தம்மை அவ்வருகே கொடு போகையிலே பதருகிறபடியை அருளிச் செய்தார்
இவன் இப்படி நம் பக்கலிலே பதருகைக்கு அடி என் என்று பார்த்தார்
தம்பக்கல் ஒன்றும் கண்டிலர் -என்றது –
முதலிலே தம் பக்கலிலே அத் வேஷத்தையும் -வெருப்பின்மையும் பிறப்பித்து
அது அடியாக விசேஷமான கடாக்ஷத்தை -திரு வருளைச் செய்து –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்-
அமலங்களாக விழிக்கும்-
மருவித் தொழும் மனமே தந்தாய்-
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-
விண்டே ஒழிந்தன வினையாயின வெல்லாம்-
நின் அலால் இலேன் காண்-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-
தம் பக்கலிலே இச்சையும் பிறப்பித்து
தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து

அசஹ்ய அபச்சாரத்திலே மிக்கராய்
அசஹ்ய அபசாரம் ஆவது -நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்
அசஹமானனாய் இருக்கையும் ஆச்சார்ய அபச்சாரமும்
தத் பக்த அபச்சாரமும் -ஸ்ரீ வசன பூஷணம் -3-305-
இவர் தம்முடைய அபசாரங்கள் அனைத்தையும் பொறுத்து
விஷயங்களில் -ஐம்புல இன்பங்களில் -ப்ரவணராய் -ஆசை உடையவராய் போந்த தம்மை
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று தாமே சொல்லும்படி செய்து
தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து
தானே வந்து அவ்வருகு கொடு போவனாக த்வரிக்கிற -விரைகிறபடியை அனுசந்தித்து -நினைத்து –

இன்று இப்படி நம்மை விரும்புகிற இவன் -இன்று என்னைப் பொருளாக்கி –
அநாதி பல காலமாக நம்மை விட்டு ஆறி இருந்த படி எங்கனே
இன்று நம்மை ஆதரிக்கைக்கு விரும்புகைக்கு காரணம் என் -என்று பார்த்தார் –
தம் பக்கல் ஒரு காரணத்தையும் கண்டிலர்
இப் பேறு தாம் அடியாக வந்தது ஓன்று அல்லாமையாலே
தம் பக்கல் ஒரு வாசி கண்டிலர்
முன்புத்தையில் காட்டிலும் இப்போது தமக்கு ஒரு ஏற்றம்
உண்டாக நினைத்து இருக்குமவர் அன்றே –

முன்பே தொடங்கி பல காலம் இவரைப்பெற வேண்டும் என்று இருக்கிறவன்
இப்போது இவர்க்கு ஒன்றனைச் செய்தானாக நினைத்து இரானே-

இனி -ஸ்ரீ சர்வஞ்ஞன் ஆகிலும்
இதற்கு ஒரு போக்கு சொல்லுமாகில் அவனைக் கேட்போம் -என்று பார்த்து
இன்று இப்படி இவனைத் தலையாலே தாங்கும் சிரஸா வஹிக்கிற -தேவரீர்
முன்பு அநாதி பல காலம் இதனைக் கை விட்டு இருப்பான் என்-
இப்போது இதனை விரும்புவான் என் -என்று கேட்டார்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –
உம பக்கல் உண்டான அத்வேஷம் -வெறுப்பின்மை அடியாகச் செய்தோம் என்ன -மாட்டானே
தான் அறிய அதுவும் தன்னாலே வந்தது ஆகையாலும்
அது தான் பேற்றுக்கு ஈடான சாதனமாகப் பொறாமையாலும்
இனி ரக்ஷகனானவனுக்கு -பாதுகாக்கின்றவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தை -பாது காக்கப் படும் பொருள்களை
பல காலம் விட்டு இருந்த இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லையே
பிற்பாடன் ஆனதற்கு லஜ்ஜிக்குமது -நாணம் உறுவதற்கு மேற்பட –
ஆகையால் சொல்லலாவது ஒரு மாற்றம் காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தறையைக் கீறினான் –
ஊர்தல் உற்றேன் -ஒன்பதாவது பாசுரத்துக்கு ஸ்ரீ இறைவன் பதில் இல்லை
அடுத்து உற்றேன் உகந்து பணி செய்ய -தானே சமாதனம் அடைகிறார்

அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்லழீ முகத்தனன் தலையன்
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆய் அன்ன மெய்யன் –ஸ்ரீ கம்பர் –

முதலிலே
உலகத்தை படைத்தல் முதலானவைகளைச் செய்து
தன் பக்கலில் இச்சையைப் பிறப்பிக்கைக்கு வழி இட்டு வைத்தான் –
அவ் வழியாலே இச்சையைப் பிறப்பித்தான் –
தன்னிடத்திலே உபாயத் தன்மையை பாவத்தை -எறட்டுக் கொண்டு
பொய் நின்ற ஞானம் தொடங்கி
இவ்வளவாகத் தன் பக்கலிலே வர நிறுத்தினான் –
பர பக்தி தொடங்கி பரம பக்தி முடிய உள்ள தசா விசேஷங்களைப் பிறப்பித்தான் –
இதனை முன்பே செய்யா விட்டது என் -என்ன –
இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே
செயல் அற்றவனாய் நிற்கிறான் இத்தனை என்று பார்த்து-

இப்படி
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
அவன் தம் பக்கல் செய்த விஷயீ அங்கீ காரத்தையும் –
அதற்கு அடியான அவனுடைய கிருபை முதலான குணங்களையும் நினைந்து
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-
இது நிர்ஹேதுகமாக -ஒரு காரணம் இல்லாமலே
இன்று என்னைப் பொருள் ஆக்கி –
விஷயீ கரிக்கும்- அங்கீ கரிக்கும்- அங்கீ காரம் இருக்கும் படியே -என்று
அதிலே ஆழம் கால் பட்டு -விஸ்மிதராய் ஆச்சர்யத்தை உடையராய்
அமுதம் உண்டு களித்தேனே –
உவகை மீதூர்ந்தவராக ஹ்ருஷ்டராய் -களிக்கிறார்-

———————-

பத்தாம் பத்து -ஒன்பதாம் திருவாய்ந மொழி -சூழ் விசும்பு -பிரவேசம் –

பரம -மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –தத் பிரகாரங்களை –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே
ஸ்ரீ பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று மநோ ரதிக்கிற -எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஸ்ரீ ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-விசதமாக –
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும் -நெறியையும்
சரீரம் விஸ்லேஷம் -பிரியும் போது வரும் கிலேசம் -துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
மார்க்கஸ்தரான புருஷர்கள் -போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் ஸத்காரங்களையும் -உபசாரங்களையும்
அந் நெறியாலே மார்க்கத்தாலே -சென்று புகக் கூடிய ஸ்ரீ பரமபதத்தையும்
ஸ்ரீ நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்
ஸ்ரீ பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்
ஸ்ரீ நித்ய ஸூரிகள் சேவிக்க ஸ்ரீ பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான ஸ்ரீ நித்ய ஸூரிகள் நடுவே தாம் நிர்ப்பரராய் -பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –

தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்
பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஸ்ரீ ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கைக்காக –

——————–

பத்தாம் பத்து -பத்தாம் திருவாய் மொழி முனியானே -பிரவேசம் –

ஸ்ரீ பரமபதத்திலே புக்கு
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
நிரதிசய -எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-ஞான அனுசந்தானமேயாய் –
பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு யோக்யம் –புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –
அதற்கு மேலே
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற சம்சாரத்தில் -இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்
இருக்கிற படியையும் கண்டார் –

கண்டு -மேருவின் உச்சியில் நிர்த்துக்கனாய் -துக்கம் இல்லாதவனாய்
ஸூ கோத்தரனாய் -மேலான ஸூகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்
துக்க பஹுளமாய் –பல பல துக்கங்களை உடையதாய்–துஸ் தரமாய் –தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே
விழுந்து நோவு படுமாறு போலே அவசன்னர்- துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு சாதனத்தை உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு அனுஷ்டிக்குமவனுக்கும் ஒழுகுமவனுக்கும் –
மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-சர்வ ரக்ஷகனாய் –
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்
இருக்கும் படியையும் அனுசந்தித்து நினைந்து
அஷணத்தில் பெறாமையாலே
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று
மிகவும் அவசன்னராய் -துக்கம் கொண்டவர் ஆனார்

அங்கனம் துக்கம் கொண்டவர் -மாதா பிதாக்கள் சந்நிதி உண்டாய் இருக்க –
தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்
நோவு படுகிற ஸ்தந்ந்தய பிரஜை சிறு குழவியானது ஆர்த்தியின் துன்பத்தின் மிகுதியாலே
தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே
வள வேழ் உலகின் -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்
தம் ஸ்வரூபத்தை -தன்மையை நினைக்க ஷமர்- ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் வாயில் இட்டு நீட்டுகையும் -மூலமும் அறிவிக்கவும் இயலாதவராய்
அவனே எதிரே நின்று ஸ்ரீ பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான
ஆற்றாமை யோடு நிர்க்ருண்யருடைய
இரக்கம் இல்லாதவர் உடைய ஹ்ருதயங்களும் -மனங்களும் இரங்கும்படியாக
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி ரக்ஷித்து அல்லது ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே ஆர்த்த த்வனியோடே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ஸ்ரீ ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் பரம தயாளு -அருள் கடல் ஆகையாலே
இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
ஸ்ரீ கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
ஸ்ரீ பிராட்டிமாரோடே ஸ்ரீ பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்த விரும்பியபடியே பூர்ணமாக எல்லாவற்றாலும்
நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய ப்ரக்ருதி -சரீர சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி ஸம்ஸ்லேஷித்து -கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் ஸ்ரீ சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப் பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று சாதுக்களின் உடைய ஸூஹ்ருத- புண்ணியத்தின் பலம்
பிரமேய பிராமண பிரமாதா வைலஷண்யத்தையும் இவர் அவதார வைலஷண்யத்தையும் அருளிச் செய்கிறார் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: