ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -எட்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

விசித்திரமான காரிய காரணங்களை எல்லாம் விபூதியாக வுடையனாய் இருக்கிற இருப்பை
அநுசந்தித்து, ‘இவை என்ன படிகள்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

——————————-

சந்திரன் சூரியன் முதலான பொருள்கள் முழுதும் தனக்கு விபூதியாக வுடையனாய்
இருக்கிற படியை அருளிச் செய்கிறார்.

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!–7-8-2–

—————————

கிருதயுகம் முதலான யுகங்களையும், அந்த அந்தக் காலங்களில் உண்டான
தேவர் மனிதர் முதலான பொருள்களையும் விபூதியாக வுடையவன்,’ என்கிறார்.

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனை யோர் உகமும் அவை யாய் அவற் றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில் லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-

——————————

உலகத்தில் நித்ய அநித்யமான பொருள்களை விபூதியாக வுடையனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ள தும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங் கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!-7-8-4-

—————————

இத் திருவாய்மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது.
அதாவது, ‘மயர் வற மதி நலம் அருளி, பின்னையும் எனக்குப் பொருந்தாததான சம்சாரத்திலே
என்னை வைத்து ஜீவிப்பித்து -வாழ்வித்துக் கொடு போகிற இவ் வாச்சரியம் இருந்த படியை
எனக்கு அருளிச் செய்ய வேணும்,’ என்கிறார்.

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே–7-8-5-

————————

விஸ்மரணாதி -மறதி தொடக்கமான -விருத்த -மாறுபட்ட பொருள்களை
விபூதியாக உடையனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்-

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்ற ருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னு நீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே–7-8-6-

—————————-

துக்கத்திற்குக் காரணமான-ஹேதுவான – அபிமானம் தொடக்கமான விசித்திரமான பொருள்களை
விபூதியாக வுடையனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்

துயரங்கள் செய்யும் கண்ணா!சுடர் நீள் முடியாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண்டாயங்களே–7-8-7-

———————–

எல்லா உலகங்களையும் படைத்து -அந்தர் பஹிச்ச வியாபித்து -உள்ளும் புறம்பு பரந்து
இப்படி நிர்வகித்து வைத்து அறிய முடியாதவனாய் இருக்கிற இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்.

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங் கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத் தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-

———————-

ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் சப்தாதி விஷயங்களும் -ஐம்புலன்களும்
அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அனுசந்திக்கிறார்

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா!
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே–7-8-9-

—————————–

வேதைக சமதி கம்யனாய் -வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் காரணாமாய்
அதி ஸூக்ஷ்மமா யிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும்
விபூதியாக வுடையவனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறிதென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே–7-8-10-

——————————–

அங்குத்தைக்குத் தகுதியாக ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளிலும்
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார்
என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: