ஸ்ரீ திருவாய் மொழி ஏழாம் பத்தில் -ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளை -உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்து உபகரித்து
நிரதிசய போக்யனாய்-எல்லையற்ற இனியனாய் இருக்கிற உன்னை,
உன்னாலே உபகாரம் கொண்டு உன் சுவடு அறிந்த நான் கிட்டுவது அன்றோ?’ என்கிறார்.

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?-7-6-1-

———————–

அந்ய பரராய் -வேறு விஷயங்களிலே நோக்கு உள்ளவர்களாய்ப்
புறம்பே தாரகம் முதலானவைகளாம் படி இருக்கின்ற வர்களுக்கும் கூட
ஸ்ப்ருஹணீயமாம் படி விரும்பும்படி யாக இருக்கிற திருவடிகளை,
அந்ய பரனாய் -வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாதவனாய்
இதுவே பிரயோஜனமாக இருக்கிற நான் என்று பெறக் கடவேனை?’ என்கிறார்.

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

———————–

பிரமன் சிவன் முதலானவர்களுக்கும் காரணனாய் இருக்கிற நீ,
நிர்ஹேதுகமாக -காரணம் இல்லாமலே வந்து -த்வத் ஏக -நீயே தாரகனாம்படி செய்தருளினாய்;
ஆன பின்னர், நீயே குறையும் செய்தருள வேணும்,’ என்கிறார்.

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடி யாய்!புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான் முகனே!வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-

———————

கீழ் பாசுரத்தில், ‘அவர்கள் ஸ்வரூபம் அவன் அதீனம்’ என்றது;
அந்த ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பன சில மினுக்கங்கள் -உயர்வுகள் உளவே அன்றோ?
அவையும் அவனுக்கு அதீனங்கள் என்கிறது இதில்.

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

————————

எல்லாம் செய்தாலும் ‘சாஸ்திர பலம் பிரயோக்தரி’ அன்றோ?
பலம் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்னம் -முயற்சி செய்ய வேணும் காணும்,’ என்ன,
நீ படைத்த உலகங்களிலே விஷயங்கள் தோறும் அகப்பட்டுக் கிடக்கிற நான்
உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து-அனுஷ்ட்டித்து –
வந்து பெறுகை என்று ஒன்று உண்டோ?’ என்கிறார்.

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

—————–

ஆனாலும், ‘ஏதேனும் ஒரு படி நீரும் சிறிது செய்து வந்து கிட்ட வேண்டாவோ?’ என்ன,
உன்னை வந்து கிட்டும் உபாயம் அறியேன்,’ என்கிறார்.

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ் சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம் பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ் சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே–7-6-6-

—————————–

உத்தேஸ்ய லாபம் அவனாலே யாயிருந்தது.
இத் தலையாலே ப்ரவர்த்திகைக்கு – -முயற்சி செய்வதற்குத் பிராப்தி -தகுதி இல்லாதபடியான
பாரதந்திரியும் உண்டாய் இருந்தது;
அத் தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவு இன்றிக்கே இருந்தது;
இப்படி இருக்கச் செய்தேயும் இழந்து இருக்கக் காண்கையாலே
நான் இழவோடே கிடந்து முடிந்து போமித்தனையே யன்றோ?’ என்கிறார்.

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நாமகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

—————————

மாலி தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தை -பகைவர்கள் கூட்டத்தைக் கொன்றருளின
ஸ்ரீ சர்வேஸ்வரனைக் காண வல்லோமே?’ என்கிறார்.
முதல் இரண்டு பாசுரங்களாலே பிராப்யன் அவனே என்னும் இடம் சொல்லி,
மேல் ஐந்து பாசுரங்களாலே, பிராபகன் அவனே தன்னைப் பெறுகைக்கு என்னும் இடம் சொல்லி.
இப் பாசுரத்தாலும் அடுத்த பாசுரத்தாலும் விரோதி நிரசன சீலதையே -பகைவர்களை அழிக்கின்ற
அவனது தன்மையைச் சொல்லி, பிரதிபந்தகத்தை -தடைகளைப் போக்குவான் அவனே
என்னும் இடத்தைச் சொல்லுகிறார்.

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரி யாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளி யம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங் கொலோ?–7-6-8-

——————————-

ராவணன் முதலியோரை அழித்த ஸ்ரீ தசரதாத் மஜனை -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை,
நெஞ்சே! காண வல்லோமோ?’ என்கிறார்.

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

———————————–

பிராப்யன் அவனே என்னும் இடத்தைச் சொல்லி,
தன்னைப் பெறுவதற்குச் சாதனம் தானே என்னும் இடத்தையும் சொல்லி,
விரோதிகளை அழிப்பானே அவனே என்னும் இடத்தையும் சொல்லி,
இப்படி நம் பேற்றுக்குக் கண்ணழிவு இன்றிக்கே இருந்த பின்பு
அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே–7-6-10-

——————————

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பி
ஸ்ரீ திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,’ என்கிறார்.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: