ஸ்ரீ திருவாய் மொழி ஐந்தாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -திருவாய் மொழிகளின் சங்கதிகளின்–பிரவேசங்களின் -தொகுப்பு–

ஐந்தாம் பத்து-முதல் திருவாய்மொழி – “கையார் சக்கரம்”-பிரவேசம் –

முதற்பத்தால், ஸ்ரீ பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்;
மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமான ஸ்ரீ பகவத் கைங்கரியம் என்றார்;
நான்காம்பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐச்வர்ய கைவல்யங்கள் என்றார்;
அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்கிறார் இவ்வைந்தாம் பத்தால்.

நண்ணாதார் முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அநுசந்தித்து,
அதற்குப் பரிஹாரமாகப் ‘ஸ்ரீ பகவானுடைய பரத்வ ஞானத்தை உண்டாக்குவோம்’ என்று
ஸ்ரீ பகவானுடைய பரத்வத்தை உபதேசித்தார் கீழில் திருவாய்மொழியிலே;
இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலே-கிட்டம்-உலோகத்துண்டு.-
ஒன்று பொன்னாய் இருக்குமாறு போலே அவர்களிலே ஒருவராக இருக்கிற தாம், அவர்களையும் திருத்தும்படி
தமக்குப் பிறந்த நன்மைக்கு ‘அடி என்?’ என்று பார்த்து,
அதற்குக் காரணம் தம்பக்கல் ஒன்றும் காணாமையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான கிருபையாலே
செய்தானத்தனை என்கிறார் இத் திருவாய்மொழியில். என்றது-

இத் திருவாய்மொழியில் வருகின்ற “விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?”
என்ற பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றி ‘நிர்ஹேதுகமான’ என்கிறார்.

அநாதிகாலம் சம்சரித்து -பிறந்து இறந்து -புத்தி பூர்வம் விரும்புவது சப்தாதி விஷயங்களேயாய் -ஐம்புல இன்பங்களையேயாய்,
தன் பக்கலில் எனக்குள்ளது அஹ்ருதமான யுக்தி — மனத்தொடு படாத வார்த்தைகளேயாயிருக்க,
நான் புத்தி பூர்வம் செய்து போந்த பிராதிகூல்யங்களை மறந்து,
ஞானம் பிறந்த பின்பு ப்ரமாதிகமாக -என்னை அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய்,
என்னை இவ்வளவாக விஷயீ -அங்கீ-கரித்தான்;
பிறரையும் யான் திருத்த வல்லேனாம்படி செய்தான்’ என்று
தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி ஈடுபட்டு அநுபவிக்கிறார் என்றபடி.

நிர்ஹேதுகம்’ என்றால், எல்லார்க்கும் இத் திருவருள் கூட வேண்டுமே யன்றோ?
அங்ஙனம் இல்லை ஆதலின், ஒரு காரணம் பற்றியே கிருபை செய்தான் என்று கொண்டால் என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச் செய்கிறார்‘அநாதி காலம்’ என்று தொடங்கி.
பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் பக்கலில் எனக்குள்ளது மனத்தொடு
படாத வார்த்தைகளேயாயிருக்க’ என்றும்,
அவன் என்னாகி ஒழிந்தான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘நான் புத்தி பூர்வம்’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
ஞானம் பிறந்த பின்பு என்னை அறியாமலே செய்து போந்தவற்றில் அஜ்ஞனாய்” என்றது,
“காப்பாரார்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி-
மெய்யே பெற்றொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தாம் பெற்ற பேற்றின் கனத்தைச் சொல்லி’ என்கிறார்.

ஸ்ரீ பகவானுடைய பரத்வ ஞானத்தைத் தம் நெஞ்சிலே படுத்தினபடியையும்,
அதற்கு உறுப்பாய் இருப்பது ஒரு நன்மை தமக்கு இன்றிக்கே இருந்தபடியையும்,
அநாதி காலம் தாம் விபரீதங்களையே அனுஷ்ட்டித்து – செய்து- போந்தபடியையும்,
புருஷார்த்தத்திற்கு உபாயமாகச் சொல்லுகிறவற்றில் தாம் ஒன்றும் கனாக் கண்டு அறியாதே இருக்கிறபடியையும்,
புருஷார்த்தம் வேணும்’ என்னும் நினைவும் இன்றிக்கே இருந்த படியையும்,
சம்சாரத்திலே தரை காண ஒண்ணாதபடி ஆழ்ந்து நோவு படாநிற்கச் செய்தே ‘நோவு படா நின்றோம்’ என்று
அறிவிக்கவும் மாட்டாதே உணர்த்தி அற்று இருக்கிற படியையும்,
அமுதம் இருக்க விஷத்தை விரும்புவாரைப் போலே ஆராவமுதை விட்டு இனிய அமுதம் என்னும்படி இனிய பொருளாகத்
தோன்றின சப்தாதி விஷயங்களை – ஐம்புல இன்பங்களை விரும்பிப் போந்த படியையும்,
அதற்கு மேலே அவன் பக்கல் இச்சை இன்றிக்கே இருக்க அவனை உகந்தார் சொல்லும் வார்த்தைகளைச்
சொல்லிப் போந்த படிகளையும் நினைத்து, இப்படி
எல்லா வகைகளாலும் தண்ணியேனாய் இருக்கிற என்னை, அவற்றுள் ஒன்றனையும் பாராமல்,
தான் சர்வசேஷி’ என்னுமிடத்தையும்
தன் திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்’ என்னுமிடத்தையும் என் நெஞ்சிலே படுத்தி
என் பக்கலிலே வ்யாமுக்தனாய்- ஆராக் காதலனாய் என்னோடே வந்து கலந்தான் என்று தாம் பெற்ற
பேற்றினைச் சொல்லிப் பேருவகையர்-ஹ்ருஷ்டர் – ஆகிறார்.

இத் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட பொருள்களை விவரிக்கிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி.
கையார் சக்கரத்து”, “அம்மான் ஆழிப்பிரான்” என்ற பாசுரங்களைத் திருவுள்ளம் பற்றிப் ‘பகவானுடைய
பரத்வ ஞானத்தை’ என்று தொடங்கியும்.
பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத் திருவுள்ளம் பற்றி,அதற்கு உறுப்பாய்’ என்று தொடங்கியும்,
புறமே புறமே ஆடி” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அநாதி காலம்’ என்று தொடங்கியும்,
நின் கண் நெருங்க வைத்தே என தாவியை நீக்க கில்லேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘புருஷார்த்தத்திற்கு’ என்று தொடங்கியும்,
நாவாய் போல்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘புருஷார்த்தம் வேணும்’ என்று தொடங்கியும்,
அலை நீர்க் கடலுள் அழுந்தும்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்சாரத்திலே’ என்று தொடங்கியும்,
உள்ளன மற்றுளவா” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அமுதம் இருக்க’ என்று தொடங்கியும்,
போனாய் மா மருது” என்றதனைத் திருவுள்ளம் பற்றி அதற்கு மேலே’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
தான் சர்வ சேஷி’ என்றது, “அம்மான் ஆழிப்பிரான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
“உய்ந்தொழிந்தேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தன் திருவடிகளில்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
அடியேனோடும் ஆனான்” “என்னை முற்றவும் தானானான்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி ‘ஆராக் காதலனாய்’ என்கிறார்.

———————————-

ஐந்தாம் பத்து -இரண்டாம் திருவாய்மொழி – “பொலிக பொலிக”-பிரவேசம் –

ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக ஸ்ரீ நித்ய ஸூரிகள் இங்கே வர,
அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார். இத் திருவாய் மொழியால்” என்று ஸ்ரீ ஆளவந்தார்
அருளிச் செய்தாராக ஸ்ரீ திருமாலை யாண்டான் பணிப்பர்.
அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய் மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -நினைத்து,
அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -எடுத்துப் பேசித்- திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரம பதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்வர்.

(“ஒன்றும் தேவும்” என்ற திருவாய்மொழிக்கும், இத் திருவாய்மொழிக்கும் நேரே பொருள்
இடையேயுள்ள “கையார் சக்கரம்” என்ற திருவாய் மொழி, பிராசங்கிகம்
‘நித்தியசூரிகள் இங்கே வர’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகின்ற “தேவர்கள் தாமும் புகுந்து”,
“நேமிப்பிரான் தமர் போந்தார்” என்னும் பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி.
ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குப் பிராதாந்யம் தோற்றும்.)

தாம் பகவானுடைய பரத்வத்தை உபபாதிக்க – எடுத்துப் பேச, அதனாலே திருந்தின சத்வ குணமுடையார் அடங்கலும்
விஸ்த்ருதராய் -எங்கும் பரந்திருக்கிற படியையும்,
அநவதா நத்தாலும் -குறிக்கோளின்மையாலும் -அஞ்ஞானத்தாலும்-அறிவின்மையாலும் ராஜச ராயும் தாமச ராயுமுள்ளார்- –
சங்குசிதராய் குறைந்தவர்களாயிருக்கிற படியையும், சத்வ குணமுடையார் -பரிக்ரஹித்தது -மேற்கொண்டதாகையாலே
உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிற படியையும்,
அதற்கு விருத்த -மாறுபட்ட தர்மங்கள் -அபிபூதமாய் -மறைந்தவைகளாய்ப் போருகிற படியையும்,
தேச காலங்கள் அதிகாரிகள் அங்கங்கள் என்கிறவற்றுக்கு உண்டான நன்மைகள்
ஸர்வேஷாம் அகில தர்மானாம் உத்தமோ வைஷ்ணவோ விதி ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்வ சரீரவத்–மோக்ஷதர்மம்.–
“ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்” (பகவத். கீ. 7 : 18.)
எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது” என்கிறபடியே,
ஸ்ரீ பகவானுடைய ஸ்பர்சத்தாலே யாயிருக்கிற படியையும்,
அது இல்லையாகில் எல்லா நன்மைகளும் உண்டானாலும் அவை அடையத் தண்ணியனவாயிருக்கிற படியையும் சொல்லி,
தம்மாலே திருந்தின ஸ் ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,- (“தொழுது தொழுது நின்று ஆர்த்தும்” )
திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும், (“தொழுதுய்ம்மினீரே”)
திருந்தாதாரை உபேக்ஷித்தும், (“உய்யும் வகை இல்லை )
இப்படி, கூட்டம் கூட்டமாக நிறைந்திருக்கும் ஸ்ரீ பாகவதர்களைக் கண்டு –
ஸ்ரீ பாகவத ஸம்ருத்திக்கு மங்களாசாசனம் பண்ணுகிறார் –

(கடல்வண்ணன் பூதங்கள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சத்துவ குணமுடையார்’ என்றும்,
மலியப் புகுந்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘எங்கும் பரந்திருக்கிறபடியையும்’ என்றும்,
உள்ளீரேல்” என்றதனை நோக்கிக் ‘குறைந்தவர்களாயிருக்கிறபடியை’ என்றும் அருளிச் செய்கிறார்.
‘சத்வ குணமுடையார் மேற்கொண்டதாகையாலே’ என்றது, “மேவித்தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
பெரிய கிதயுகம்பற்றி” என்றதனைத் திரு வுள்ளம்பற்றி ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிறபடியையும்’ என்கிறார்.
அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும். என்றது. “திரியும் கலியுகம் நீங்கி” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
அன்றி, “சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே” என்றதனைத் திருவுள்ளம் பற்றி எனலுமாம்.
தேச காலங்கள்’ என்றது “மண்மேல், கலியும் கெடும்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
இவை இரண்டும் அதிகாரி அங்கங்களுக்கும் உப லக்ஷணம்.)

———————–

ஐந்தாம் பத்து -மூன்றாம் திருவாய்மொழி – “மாசறு சோதி”-பிரவேசம் –

மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை” என்று,
வடிவழகையும் குணங்களையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்தார்;
இப்படி அநுசந்தித்து, ஸூலபனுமாய் ஆச்சரியமான குணங்களையும் சேஷ்டிதங்களையும் செயல்களையுமுடையவனுமாய்
அவை இல்லையேயாகிலும் விட ஒண்ணாத வடிவழகையுமுடையனான இவனோடு –
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து –மெய்யுறு புணர்ச்சியை விரும்பி -அவனை அணைக்கக் கோலிக் கையை நீட்ட,
அவன் அகப்படாமல் கை கழிந்து நிற்க,
அதனாலே கலங்கி ஒரு ஸ்ரீ பிராட்டி தசையை அடைந்து மடல் எடுக்கையிலே புகுகிறார் இத் திருவாய் மொழியில்.

மடல் எடுக்கையாவது, போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம்.
அநீதி செய்யாதே கொள்ளுங்கோள்’ என்று பிறரைத் திருத்தினவர்,
நீர் செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று பிறர் திருத்தவும் திருந்தாதபடி ஆனார்.
ஸ்ரீ பகவத் விஷயத்தில் ஈடுபடும்படியாகப் பிறரைத் திருத்துகிற இவரை,
பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப் பார்த்தால் திருந்தாரே அன்றோ.

அன்றிக்கே, “ஏறாளும் இறையோனும்’ என்று திருவாய்மொழியில்,
அவனுக்கு உறுப்பு அல்லாத யானும் என்னுடைமையும் வேண்டா என்று அலாபத்தாலே கூப்பிடும் தம்மோடு ஒக்கக்
கூப்பிடுகைக்குத் துணை தேடி உலக ஒழுக்கத்தை நினைத்த இடத்து,
தாம் ஸ்ரீ பகவத் விஷயத்திலே ப்ரவணராய் -ஈடுபாடுடையவராய் இருக்குமாறு போலே
அவர்கள் இதர விஷயங்களிலே ப்ரவணராய் -ஈடுபாடுடையவராய் இருக்கிறபடியைக் கண்டு,
அவர்கள் கேட்டிற்கு நொந்து அவர்களுக்கு ஸ்ரீ பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -எடுத்துக் கூறித் திருத்தி,
இவர்களிலே ஒருவனாக இருக்கிற என்னை, இவர்களையும் திருத்தும்படி ஆக்குவதே ஸ்ரீ சர்வேஸ்வரன்!’ என்று
அவன் தமக்குச் செய்த உபகாரத்தை நினைத்து,
தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் செய்து,
இப்படிப் பிறருடைய நலத்துக்கு -பர ஹிதத்துக்கு -வேண்டுவன எல்லாம் செய்து கை ஒழிந்த பின்பு
பழைய தம் இழவே தலை எடுத்து, ‘வழி அல்லா வழியே யாகிலும் கிட்டுமத்தனை’ என்னும் படியான விடாய் பிறந்து
மடல் எடுக்கையிலே ஒருப்பட்டுப் பேசுகிறார் இத் திருவாய் மொழியில் என்னுதல்.

ஒவ்வொரு விஷயத்திலே ஒவ்வொருவருக்குப் பற்று-சங்கம் – உண்டானால்
அவ்விஷயங்கள் கிடையாவிட்டால் ‘அவற்றை அப்போதே பெறவேணும்’ என்னும்படியான -த்வரை -மனோ வேகம்- பிறந்தால்,
பின்பு அவ் விஷயங்கள் இருந்த இடங்களிலே புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து
புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே,
அத் தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்குமத்தனை’ என்று சாகசத்திலே ஒருப்பட்டு,
தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

அபிமத விஷயத்தைப் பிரிந்து ஆற்ற மாட்டாதார் மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று ஒன்று உண்டு தமிழர் சொல்லிப் போருவது.
அதாவது,துல்யசீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லக்ஷணாம்
ராகவ: அர்கதி வைதேஹீம் தம்சேயம் அசிதேக்ஷணா”- சுந். 16 : 5.- ஒத்த சீலம் வயது ஒழுக்கம் உடையவளை” என்கிறபடியே,
சீலத்தாலும் வயதாலும் குடிப்பிறப்பாலும் வடிவழகாலும் சம்பத் -செல்வத்தாலும் குறைவற்று இருப்பவர்களான இருவர்,
அவர்களில் அறிவு- நிறை- ஓர்ப்புக் கடைப்பிடி’ என்பன போன்று சொல்லுகிற நாயகனுடைய லக்ஷணங்கள் நாயகனும் உடையவனாய்,
நாணம் -மடம்- அச்சம் -பயிர்ப்பு’ என்பன போன்று சொல்லுகிற நாயகியுடைய லக்ஷணங்கள் நாயகியும் உடையவளாய்,
இப்படி இருவரும் குறைவற்று, இவர்கள் தாமும் தக்க யௌவனப் பருவத்தை யுடையவர்களுமாய் இருக்க;
இவர்களைப் புறம்பே கூட்டுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்க,
இவனும் யாதருச்சிகமாக -தெய்வாதீனமாக ‘வேட்டைக்கு’ என்று புறப்பட,
இவளும் ‘பூக் கொய்து விளையாட’ என்று உத்யானத்திற்குப் புறப்பட,
அவ்விடத்திலே தெய்வம் கூட்டுவிக்க இருவர்க்கும் கண் கலவி உண்டாக,
சிலர் காரணமாக வந்த சம்ஸ்லேஷம்- கலவி அல்லாமையாலே பிரிவோடே வியாப்தமாக -முடிவுற்றுப் பிரிய,
குணாதிகர்களாகையாலே இருவர்க்கும் ஆற்றாமை விஞ்சி,
ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை பிறக்க,
இரண்டு தலையையும் அழித்தாகிலும் பெறப் பார்ப்பது.

மடல் ஊர்தல் என்பதுதான், அபிமத விஷயத்தை -தலைவியைப் பிரிந்த ஆற்றாமையாலே
தலைவன் தலைவியை ஒரு படத்திலே எழுதி, வைத்த கண் வாங்காதே அவ் வுருவைப் பார்த்துக் கொண்டு
பனை மடலைக் குதிரையாகக் கொண்டு,
தலைவியைப் பிரிந்த போது தொடங்கிக் கண்ட போக உபகரணங்கள் எல்லாம் நெருப்பினாலே கல்பிக்கப்பட்டதாகத் தோற்ற,
ஊணும் உறக்கமும் இன்றிக்கே,
உடம்பிலே துளி நீரும் ஏறிட்டுக் கொள்ளாதே,
தலை மயிரை விரித்துக்கொண்டு திரியா நின்றால்,
இத் தீயச் செயலைக் கண்ட அரசர் முதலானோர்
கெட்டோம் இவனுக்கு ஒரு பெண்ணினிடத்தில் இத் துணை பாவ பந்தம் -அன்பு இருப்பதே!’ என்று
அவர்கள் அவனை அத் தலைவியோடு கூட்டக் கூடுதல்,
இல்லையாகில், இதுவே காரணமாக இரண்டு தலையிலுள்ள உறவினர்களும் கைவிட,
அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல்,
தோழிமார் கூட்டக் கூடுதல்,
ஆற்றாமை கூட்டக் கூடுதல்,
தலைவியானவள் குணங்களால் சிறந்தவளா யிருப்பாளே யாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல்,
இவை இத்தனையும் இல்லை யாகில்,
முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு ப்ரவ்ருத்தி -தொழில் விசேஷமாயிற்று.

இது தன்னை, கடலன்ன காமத்த ராகிலும் மாதர், மடலூரார் மற்றையார் மேல்” என்று
ஆஸ்ரயத்தின் -உயிரின்- அளவல்லாதபடி ஆற்றாமை கரை புரண்டாலும் ஸ்த்ரீகள் -பெண்கள் மடல் ஊரக் கடவர்கள் அல்லர்;
நாயகன் தன் ஆற்றாமையாலே மடல் எடுக்க உலகின் மேல் வைத்துச் சொல்லுவான்,
(உலகின் மேல் வைத்துச் சொல்லுகையாவது -ஸ்வ அபிப்ராயத்தை அறிவியாமல் ஒருவன் மடலூரப் போகிறான்
என்று அந்யாபதேசேந சொல்லுகை )
பின் ‘நான் வரை பாயப் புகா நின்றேன், மடல் எடுக்கப் புகா நின்றேன்’ என்று தோழிக்கு வந்து அறிவிப்பான்,
அறிவித்த பின்னரும் அவள் கூட்டிற்றிலளாகில் பின்பு அவன் இது செய்யக் கடவன்;
இத்தனை அல்லது, பெண்கள் மடல் எடுக்கக் கடவர்கள் அல்லர் என்று இங்ஙனே ஒரு மரியாதை கட்டினார்கள் தமிழர்கள்;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, ஸ்ரீ பிராட்டி தான் மடல் எடுப்பதாக இரா நின்றது;
தமிழர் ‘பெண்கள் மடல் எடுக்கக் கடவர் அல்லர்’ என்று சொன்ன இது, சேரும் படி என்? என்னில்,
அவர்கள் ஒரு தலையிலே தான் அதனை இசைந்தார்களே, அப்படி இசைகைக்குக் காரணம், ஆற்றாமையே;
அவ்வாற்றாமை இருவர்க்கும் ஒத்த பின்பு ஒருவர்க்கு மாத்திரம் ஒதுக்குவார் யார்?
இதற்கு ஒரு மரியாதை கட்டுகையாவது, ஆசைக்கு ஒரு வரம்பு இட்டார்களாமித்தனை.
அப்போது பின்னை ராஜ -அரசர் ஆணைக்கு நிற்க வேணும், இன்றேல் வேலி யடைத்தால் நிற்க வேணும்;
ஆகையால், அவர்கள் பிரேம ஸ்வபாவம் அன்பின் தன்மையை அறிந்திலர்களாமித்தனை.
வரம்பு அழியவாகிலும் முகம் காட்டி வைத்துக் கொண்டு தரிக்க வேண்டும்படியாய் இருப்பது ஒரு விஷயம் புறம்பு இல்லையே;
இங்ஙனம் இருப்பார் சிலரைக் கல்பித்துக் கொண்டார்கள் இத்தனையே.

இனி, இவர்தாம், “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியில்,
நாம் அவனோடே கலத்தலாகிற இது அவனுக்குத் தாழ்வினை-அவத்யத்தை – விளைவிப்பதாம்,
நம் பேற்றுக்காக அவனோடே கலந்து அவனுக்குத் தாழ்வினை விளைப்பதில் காட்டில்
நாம் அகன்று முடிந்தாகிலும் அவனுக்கு அதிசயத்தைச் செய்ய அமையும் என்று இருக்குமதனோடும் சேராது;
இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில்,
அவனுக்கு உறுப்பு அல்லாத-ஆத்மாத்மீயங்கள் -ஆத்மாவும், ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும்
நசித்துப் போக அமையும் என்று சொன்ன அதனோடும் சேராது;
ஆக, இவர் தம் ஸ்வரூபத்தோடும் சேராது.
வீதராகராய் -ஆசையற்றவர்களாய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று.
ஞானாதிகராய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று.
ஆனால், இது இருந்தபடி என்? என்னில், இவற்றிற்கெல்லாம் பரிஹாரம் -சமாதானம்,
ஸ்ரீ பட்டர் திரு மடல் வியாக்கியானம் அருளிச் செய்கிற போது அருளிச் செய்தருளினார்;
இங்குத்தைக்கும் வேண்டுவன சொல்ல வேணுமே அன்றோ.

ஞானாதிகராய் -ஞானத்தால் மேம்பட்டவர்களாய் இருப்பவர்கள்
ஸ்ரீ ஜனக குலத்தில் பிறந்தவர்களா யுள்ளவர்களுக்கு மேல் இலரே அன்றோ;
அக் குடியிலே பிறந்த ஸ்ரீ பிராட்டியானவள்,
யாநசக்யா புரா த்ருஷ்டும் பூதை: ஆகாசகைரபி தாம் அத்ய சீதாம் பஸ்யந்தி ராஜமார்க்கதா ஜநா:- அயோத். 38. 8.
எந்த ஸ்ரீ பிராட்டி முன்பு ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவைகளான பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ
அந்த ஸ்ரீ பிராட்டியை இப்பொழுது ராஜ வீதியிலுள்ள மக்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள்” என்கிறபடியே,
ஸ்ரீ பெருமாள் காட்டிற்கு எழுந்தருளுகிற காலத்தில்
மன்னன் இராமன் பின் வைதேகி என்றுரைக்கும், அன்ன நடைய அணங்கு நடந்திலளே” என்கிறபடியே,
அவர் பின்னே புறப்பட்டுப் போகையாலே சிஷ்டாசாரம் உண்டாயிருந்தது;
மேலும், மயர்வற மதிநலம் அருளப் பெற்ற இவர் அநுஷ்டிக்கையாலே இதுதானே பிரமாணமாகத் தட்டு இல்லையே அன்றோ.
யத்யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத் ததேவ இதரோஜந: ஸயத் பிரமாணம் குருதே லோக: தத் அநுவர்த்ததே.” ஸ்ரீ கீதை, 3 : 21.-என்றும்
ச யத் பிரமாணம் குருதே –என்றும்-
பெரியவன் எது எதனைச் செய்கிறானோ அது அதனையே மற்ற ஜனங்களும் செய்கிறார்கள்;
அந்தப் பெரியவன் எதைப் பிரமாணமாகச் செய்கிறானோ அதனையே உலகமும் அநுசரிக்கின்றது” என்கிறபடியே,
சத்துக்களுடைய அநுஷ்டானத்தைப் பிரமாணமாகக் கொள்ளக் கடவதன்றோ.
ஆனாலும், காமம் -நிஷேதியா நின்றதே -விலக்கப்பட்டிருக்கிறதே? என்னில்,
அவை நிலை நில்லாமையாலே சிற்றின்பத்தில் காமமேயே யன்றோ விலக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ பகவத் விஷயத்தில் காமத்தை –
ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய : ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய:”-என்பது, பிரு. உப. 6 : 5
தியானம் செய்யத் தக்கவன்” என்கிறபடியே, விதியா நின்றதே அன்றோ.
வேதாந்தங்களிலே விதிக்கப்பட்ட பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது.

வளவேழ் உலகு”என்ற திருவாய்மொழியில், நாம் கிட்டுகை அவனுக்குத் தாழ்வினைத் தருவதாம் என்று அகன்ற இவர்,
அத்தலையை அழித்து முகங் காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற இது இவர் ஸ்வரூபத்தோடு சேருமோ? என்னவும் வேண்டா;
அங்கு அகல நினைத்ததும் அத்தலைக்கு வரும் அவத்யத்தை -தாழ்வினை நீக்குகைக்காக அன்றோ;
தமக்கு ஆற்றாமை கரை புரண்டு இருந்தது,
தன்னை ஆசைப்பட்டார் பெறாமலே முடிய, முகம் காட்டாமலே இருந்தான்’ என்கிற
அவத்யத்தை பரிஹரிக்கைக்கு -தாழ்வினை நீக்குகைக்குச் செய்கிறாராகையாலே இதுவும் இவர் ஸ்வரூபத்தோடே சேரும் –
அங்கு அகன்றது ஞான காரியம்;
இங்கு மேல் விழுகிறது பக்தியின் காரியம்.
இத்தனை கலங்கப் பண்ணிற்றில்லையாகில், அத்தலையில் வைலக்ஷண்யத்துக்கு-நமஸ்காரம் – தாழ்வாம்;
இவர்தாம் இப்படிக் கலங்கிற்றிலராகில் இவருடைய பிரேமத்துக்கு நமஸ்காரம் – தாழ்வாம்.
அவன் அருளியதும் மதி நலமே அன்றோ,
அவை படுத்துகிற பாடே அன்றோ இவை எல்லாம்.
மதியின் காரியம் அது;
பக்தியின் காரியம் இது.
இனித் தான் சித்தோபாயத்தை ஸ்வீகரித்து -மேற்கொண்டு அது பலியாவிட்டால் ஸ்வரூபத்தை
அந்யாதகரிக்கும் -வேறு வகையாகச் செய்யுமித்தனை அன்றோ;
அவன் ஸ்வரூபம் அந்யாதகரித்தால் -வேறுபட்டால் இத்தலை சொல்ல வேண்டாவே அன்றோ.
இத்தலையில் கர்த்தவ்யம் இல்லையாகில்
அவனுக்கு அசக்தி இல்லையாகில்
நடுவில் விளம்பத்துக்குக் காரணம் என்? என்று தோற்றுமே அன்றோ.

இவர் தாம் ‘மடல் எடுக்கக் கடவேன்’ என்று துணிந்த துணிவுக்கு மேற்பட அநுஷ்டிக்க வேண்டுவது
இல்லையே யன்றோ குணாதிக விஷயம் ஆகையாலே.
ஆற்றாமையையும் உண்டாக்கி அம்பும் தொடுக்க வேண்டும்படியான விஷயத்தை அன்றே இவர் பற்றியது.
கடலை ஸ்ரீ பெருமாள் சரணம் புக்க இடத்தில் அக் கடல் தானாக வந்து முகம் காட்டாமையாலே
நாலு மூன்று அம்பை விட, உடம்பிலே பாதி வெந்த பின்பே யன்றோ வந்து முகம் காட்டியது;
இங்கு அது வேண்டாமையாலே,
சாபமாநய சௌமித்ரே சராந் ச ஆசீவிஷோபமாந் சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா.” யுத். 21 : 22.
ஆசீவிஷம்-பாம்பு. சாபமாநய- ஓ லஷ்மணா ! வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு ஒப்பான
பாணங்களைக் கொண்டு வா, சமுத்திரத்தை வற்றச் செய்யப் போகிறேன்,
வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்” என்றதைப் போன்று,
மடல் ஊர்வேன்’ என்று அச்சம் உறுத்தி முகம் காட்டு வித்துக் கொள்ளப் பார்க்கிறார்.
தம்முடைய ஸ்வரூபத்தில் கலக்கம் அனுவர்த்தியா -தொடர்ந்து நிற்கச் செய்தேயும்
அவனுடைய குண ஞானத்தில் கலக்கம் இன்றிக்கே இருக்கிறது காணும் இவர்க்கு.

ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில்,
அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று முடித்துக் கொள்ளப் பார்த்த இடத்தில்,
அது தம் கையது அன்றிக்கே, அவன் உளனாக இது அழியாததாய் இருந்தது;
இனி அத்தலையே பிடித்து -அழிப்போம் என்று -வேர்ப் பற்றோடே அழிக்கப் பார்க்கிறார்;
உண்டாம் போதும் அத் தலையாலே உண்டாய்,
இல்லை யாம் போதும் ஒன்றும் இல்லையாம் படி அன்றோ வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது.
உயிரினாற் குறை இலம்” என்றார் அங்கு;
இங்கு, உயிர்க்கு உயிரினால் குறை இலம் என்கிறார்.
ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
இதில், எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவனுடைமையும் வேண்டா என்கிறார்.
இராவணன் மாயா சிரசைக் காட்டினபோது, இதர ஸ்த்ரீகள் -மற்றைய பெண்கள் அஹ்ருதயமாக -மனத்தோடு படாமலே
அழுமாறு போன்று, தன் ஆற்றாமையாலே கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள்,
இவ்வார்த்தை கேட்ட போதே முடியாதிருப்பான் என்?” என்று ஸ்ரீ பட்டரைச் சிலர் கேட்க,
ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஜ்ஞானங்கள் அல்ல;
அத் தலையில் சத்தையும் அது இல்லாமையும் ஆயிற்று;
அதற்கு அழிவில்லாமையாலே இருந்தாள்’ என்று அருளிச் செய்தார்.

இப்படி அத்தலையை அழித்தாகிலும் முகம் காட்டுவித்துக் கொள்ள வேண்டும்படி
தமக்குப் பிறந்த -தசா விசேஷத்தை -நிலை விசேஷத்தை,
ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு ஸ்ரீ பிராட்டி. ஆற்றாமை மீதூர்ந்திருக்கச் செய்தே
இவள் தரித்திருந்த இருப்பைக் கண்டு, தோழியானவள்,
முன்புத்தை அளவுகள் அன்றிக்கே, இவள் தேறி இருந்தாள்,
அவன் வாராதிருக்க இவளுக்கு இத்தனை தேற்றம் உண்டாம் போது, சாகசங்களிலே துணிந்தாளாக வேணும்’ என்று பார்த்து,
நீ செய்ய நினைக்கிற இது,
உன் தலைமைக்கும் அவன் தலைமைக்கும் உன் மதிப்புக்கும் அவன் மதிப்புக்கும் –
உன் பிறப்புக்கும் உன்னுடைய மர்யாதைகளுக்கும் தகாது கண்டாய்’ என்ன,
என் ஸ்வரூபத்தை அழித்தாகிலும்-அவன் ஸ்வரூபத்தை அழித்தும் – மடல் எடுக்கை தவிரேன்’ என்று துணிந்து
துணிவைத் தோழிக்கு அறிவிக்க; இதனைக் கேட்டு அஞ்சி,
ஸ்ரீ சர்வேஸ்வரன், இருந்த இடத்தில் இருக்க மாட்டாமை வந்து முகம் காட்டித்
தானும் சத்தை பெற்று இவளையும் தரிப்பித்தானாய்த் தலைக் கட்டுகிறது.

இவர் மடலிலே துணிந்தால் கடுக வந்து முகம் காட்டிப் பிழைக்கில் பிழைக்குமித்தனை போக்கி,
இல்லையாகில் சத்தை கிடக்க விரகு இல்லை அன்றோ அவனுக்கு;
பிரஹ்மாஸ்திரத்துக்குத் தப்ப ஒண்ணாதே அன்றோ அவனுக்கு.
இதற்கு முன்னர், ‘அவனாலே பேறு’ என்று போந்தாரே யாகிலும்,
ப்ராப்யமான -அடையத் தக்கதான கைங்கர்யத்துக்கு -பூர்வ காலீனமாய் -முன்பு உள்ளனவாய் இருப்பன
பர பக்தி பர ஞான பரம பக்திகள் என்பன சில உளவே அன்றோ, அவை தவிர ஒண்ணாதே.
இனி, பக்திமானுக்கும் பக்தி உண்டு,
பிரபந்நனுக்கும் பக்தி உண்டு,
ருசியை ஒழியப் பரபத்தி பண்ணக்கூடாதே,
பக்திமானுடைய பக்தி, விதி ரூபமாய் வரும்;
பிரபந்நனுடைய பக்தி, ருசி காரியமாயிருக்கும்.
பக்திமானுக்குச் சாதன ரூபமாயிருக்கும்,
பிரபந்நனுக்குத் தேக யாத்திரைக்கு உறுப்பாக இருக்கும்.
பக்திமானுக்குப் பலத்திலே ஸ்ரத்தை இல்லாத போது அந்தப் பக்தி தவிரலாயிருக்கும்.
பிரபந்நனுக்கு ஸ்வரூபத்தோடு கூடியதாய் -ஸ்வரூப ப்ரயுக்தமாய் – வருமதாகையாலே ஒருகாலும் தவிராததாயிருக்கும்.

(“மலியும் சுடரொளி மூர்த்தி, மாயப்பிரான், கண்ணன் தன்னை” என்ற மூன்று விசேஷணங்களை
“மாசறுசோதி, ஆசறு சீலனை, ஆதி மூர்த்தியை” என்ற பெயர்களாலே எடுத்து அருளிச் செய்த காரணத்தாலே,
கீழ் திருவாய் மொழிக்கும் இத் திருவாய் மொழிக்கும் இயைபு –
இத் திருவாய்மொழியில் வருகின்ற “நாடி, எனை நாளையம்”, “முன் செய்ய மாமை இழந்து,” என்பன போன்ற
பகுதிகளைக் கடாக்ஷித்து “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியிலிருந்து இயைபு –

கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
மடலேறார் மைந்தர்மேல் என்ப – மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
வேட்டமா மேற்கொண்ட போழ்து–என்பது, நச்சினார்க்கினியர்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.” திருக்குறள்.

மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர் கடவுளர் தலைவ ராய்வருங் காலே” பன்னிருபாட்டியல்.
இச்சூத்திரத்தால், கடவுளரைத் தலைவராக வைத்துப் பாடுமிடத்து மகளிரும் மடல் ஏறுவர் என்பது காணலாகும்

வடநெறியே வேண்டுதும் -திருமங்கை ஆழ்வார் –

“யாம் மடல் ஊர்ந்தும்”, “யாம் மடல் இன்றி” என்பனவற்றைத் திருவுள்ளம்பற்றி ‘உன் தலைமைக்கும்’ என்கிறார்.
தலைமை-வைலக்ஷண்யம்,
“ஆதிமூர்த்தி” என்பதனைத் திருவுள்ளம்பற்றி ‘அவன் தலைமைக்கும்’ என்கிறார்.
“என்னை நிறை கொண்டான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘உன் மதிப்புக்கும்’ என்கிறார்.
“குதிரியாய் மடலூர்தும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘உன் பிறப்புக்கும்’ என்கிறார்.
“என்னை நிறைகொண்டான்” என்பதனை நோக்கி ‘உன்னுடைய மர்யாதைகளுக்கும்’ என்கிறார்.
=‘என் ஸ்வரூபத்தை அழித்தாகிலும்’ என்றது, “யாம் மடலூர்ந்தும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
‘தோழிக்கு அறிவிக்க’ என்றது, தோழிக்கு அறிவிக்கும் வியாஜத்தாலே ஈச்வரனுக்கு அறிவிக்க என்றபடி,
“இரைக்கும் கருங்கடல் வண்ணன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி “முகங்காட்டித் தானும் சத்தை பெற்று” என்கிறார்.

இவருடைய பக்தி, சாதன பக்தியன்று; சாத்திய பக்தி என்றபடி.
பரபக்தி-சம்ஸ்லேஷ விஸ்லேக்ஷைக சுகதுக்கத்வம்; சேர்க்கையாலே இன்புறுதலும், பிரிவினாலே துக்கித்தலும்.
பர ஞானம்-ஸ்புட சாக்ஷத்காரம்; மிகத் தெளிந்த ஞானம் என்றபடி.
பரம பக்தி-விஸ்லேஷத்தில் சத்தைக்கு ஹாநி பிறத்தல்; பிரிவிலே முடியும்படியான நிலையை அடைதல்.
இவற்றை முறையே, விஸத விஸததர விஸததமம் என்பார்கள்.
பிரபன்னன் பக்தி ஸ்வயம் பிரயோஜனமாக செய்வதால் –ராக ப்ரப்தமாய் ருசி காரணமாய் -ஒரு காலும் தவிர ஒண்ணாது )

——————————-

ஐந்தாம் பத்து -நான்காம் திருவாய்மொழி – “ஊரெல்லாம்”-பிரவேசம் –

நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்” என்று பெரியதொரு த்வரா- மனோ-வேக ரசமாய் அன்றோ கீழில் சென்றது,
மடல் ஊரப் பெறுகை தான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம்படி பலக் குறைவு -ஹானி அதிகரித்தது;
இனித்தான், மடல் ஊரும் போது -அபிமத விஷயத்தை -தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுத வேணுமே,
அதற்கு நேரம் இல்லாதபடி “ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே,
சூரியனை மறைத்தானாதல், தைய யோகத்தால் -இயல்பாகவே சூரியன் அஸ்தமித்ததால் -மறைந்ததாதல் செய்ய,
அதனால் ராத்திரியாய், அதுதான் மாலை நேரம் அளவு அன்றிக்கே சராசரங்கள் முற்றும் அடங்கிய மத்திய -நடு இரவாய்,
பழி சொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற,
எல்லாரும் ஒரு சேர உறங்குகையாலே ஓர் உசாத் துணையும் இன்றிக்கே,
இவ் வளவிலே, பிரளய ஆபத்திலே உதவும் தன்மையனுமாய்
சர்வ ரக்ஷகனான -எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய்,
வேண் யுத்கர நாதிகளிலே -சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே ஒருப்பட்டவரைப் போன்று

ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி
விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித் சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” –சுந். 28 : 25.
விஷஸ்ய தாதா-
இத்தனை நற் சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

முடிந்து பிழைக்க வேண்டுமளவாய்,
அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்-
இப்படி முடிகை தேட்டமாம் படி இருக்கிற அளவிலே,
நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாக ஸ்ரீ திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தோம்,
உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிரமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று
அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய் மொழி.

கீழ் தம்முடைய அனுபவ அபிநிவேசத்தாலே ஸத்வரராய்க் கொண்டு
ஸ்வரூப அனுரூபமான பிரவ்ருத்தியிலே யாகிலும் அவனைப் பெறுவதாக உத்யோகித்த
இவர் அனுபவ யோக்யமான காலம் ஸந்நிஹிதமாய் இருக்கச் செய்தேயும்
அவன் அஸந்நிஹிதன் ஆகையால் அத்யந்தம் ஆர்த்தராய் ஒரு பிரவ்ருத்தி ஷமர் இல்லாதபடி மிகவும் அவசன்னராய்
விளம்ப அஷமர் ஆகையால்
இவ் வஸ்தையிலே அவன் வந்து ரஷிக்கைக்கு உடலான குணங்களை ஆர்த்தராய் கூப்பிட்ட பிரகாரத்தை
அபிமத நாயகனான ஸ்ரீ ஈஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
இரவு நெடுமைக்கு இரங்கிக் கூப்பிட்ட ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————————–

ஐந்தாம் பத்து -ஐந்தாம் திருவாய்மொழி – “எங்ஙனேயோ”-பிரவேசம் –

மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில்
நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்;
பாரித்தபடியே தலைக் கட்டப் பெறாமையாலே “ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில்
ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு விஷயம் தான் இல்லாதபடி பழி
சொல்லுவாரும் கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்;
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று, ‘சூரியோதயத்திற்குச் ஸூசகமும் கூட
இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்;
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே” என்று, ‘ஒன்றை நினைத்துத் தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள்.

“மாசறுசோதி” என்ற திருவாய்மொழியில், பிராப்யத்தைப் பெற வேண்டும் என்னும் த்வரையாலே –
மனோ வேகத்தாலே உபாய அத்யவசாயம் கலங்கினபடி;
“ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியில், அந்த த்வரையும் மனோ வேகமுங்கூடக் கலங்கினபடி;
இத் திருவாய் மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லா நிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.

இந்தக் குறைகள் எல்லாம் தீரும்படி போதும் விடியப் பெற்று,
அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற இழவு தீர
உகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத் திருவாய் மொழியில். என்றது,
பின்னர், பந்து வர்க்கமும்-உறவினர்கள் அனைவரும் உணர்ந்து,
தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும்,
தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது;
அவ்வழியாலே அவர்கள் தாம் இவ் விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள்-ஸ்மாரகர் – ஆவர்களே அன்றோ.
சூரியனும் உதித்து-பதார்த்த தர்சனமும் -பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலி பாயப் பெற்றது.
இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும்-ஸஹ காரி- துணையாயிற்று என்றபடி.

இப்படி இரவு வியசனம் போம்படி போது விடியப் பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய்,
அவனை அநுபவிக்கப் பெறாமையாலே ஆற்றாமைக்கும் காரணமாய் நோவு பட்டுச் செல்லா நிற்க,
உணர்ந்த உறவினர்கள் அனைவரும், ‘நீ இப்படி இவ் விஷயத்தில்-அதி மாத்ர ப்ரவணை – எல்லை இல்லாத காதலை
யுடையவளாயிருத்தலாகிற இது உனக்குக் குடிப் பழி, உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது,
அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள்,
நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ் விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்;
நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித்
தன்னைக் காட்டக் காண்கையாலே உள்ளபடி கண்டேன்;
ஆகையாலே, ஸ்ரீ நம்பியுடைய வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும் பெருமையிலும் நான்
உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம் படிகளைச் சொல்லா நிற்கச் செய்தே;

ஸ்வ யத்னத்தால் -தம் முயற்சி கொண்டு அறிவார்க்கு அறிய ஒண்ணாத படி பெற்றோமே அன்றோ,
இவ் வஸ்து தான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற போது பெறுகிறோம்,
பிறர் அறியாது ஒழியப் பெற்றோமே யன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக் கட்டுகிறது.

ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும்,
அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு அப்ரீதியும்-பிரீதி இன்மையும்;
அவனை ஸ்மரிக்க-நினைக்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அது தான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
சூரியன் உதித்து-பதார்த்த தர்சனம் – பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அது தான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையுமாய்;
பிரீதியும் -அப்ரீதியும்-பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.

மாசறுசோதி” என்ற திருவாய் மொழியில், பிராப்யத்தைப் பெற வேண்டும் என்னும் மனோ வேகத்தாலே
உபாய அத்யவசாயம் கலங்கினபடி;
ஊரெல்லாம்” என்ற திருவாய் மொழியில், அந்த மனோ வேகமுங்கூடக் கலங்கினபடி;
இத் திருவாய் மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லா நிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.

ஏழையராவி” என்ற திருவாய் மொழியும், ‘உரு வெளிப்பாடு’ சொல்லா நின்றதே,
அதற்கும் இத் திருவாய் மொழிக்கும் வாசி -வேற்றுமை என்? என்னில்,
அதில், “இணைக் கூற்றம் கொலோ” என்றும்,
“உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும் பாதகத் தன்மை உறைத்திருக்கும்;
(அப்ரீதி மட்டுமே அங்கு/அது பொதுவான ஸ்ரீ எம்பெருமான்-இங்கு அர்ச்சை அனுபவம்)
இதில், கீழே உண்டான துக்கம் நிவ்ருத்தி -நீங்குதல் உண்டாம்படி ஸ்மரித்து -நினைத்துத் தரிக்கவும் பெற்று,
அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே வந்த அப்ரீதியும் -பிரீதி இன்மையுமாய்,
இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக இருக்கும்.

ஸ்ரீ ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக் குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி,
இனி மீண்டு திருவபிஷேகம் செய்து கொள்ள அமையும் என்ன,
ஸ்ரீ பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று முடிய நின்ற படியைக் கண்டவாறே,
பவ்ர நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;
ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும்
உண்டே அன்றோ’ என்று உகப்பதும் செய்தார்கள்;
அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’
என்று வெறுப்பதும் செய்தார்களே அன்றோ.

ஸ்ரீ பிராட்டியை ஸ்ரீ திருவடி தொழுதபோது, நமக்குத் பராக்ரமிக்கைக்கு கைம் முதல் உண்டாக்கப் பெற்றோமே –
நாம் இலங்கையை அடைவதற்குரிய ஆற்றல் உண்டாகப் பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும் செய்தான்-
இவள் அவரைப் பிரிந்து இந்த நிலையில்-இவ் விருப்பிலே – இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான்.

ஸ்ரீ பிராட்டி, ஸ்ரீ திருவடி வார்த்தையைக் கேட்டபோது அம்ருதம் விஷ ஸம்ஸ்ருஷ்டம் த்வயா வானர பாஷிதம் -வாநர! உன்னால்
சொல்லப்பட்ட ஸ்ரீ பெருமாள் என்னை அல்லது அறியார், பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும்
விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று,
ஸ்ரீ பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது,
அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ.
அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.

———————————–

ஐந்தாம் பத்து -ஆறாந்திருவாய்மொழி – “கடல்ஞாலம்”-பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியிலே பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக அன்றோ சென்றன;
இரண்டுமாய்க் கலந்து சென்றால் பிரீதியாலே தலை எடுக்கவும் ஆம் அன்றோ,
அது செய்யாதே, பாக்ய ஹானியாலே -புண்ணியத்தின் குறைவால் அப்ரீதியே பிரீதி இன்மை ஒன்றே தலை எடுத்தது;
ஆகையாலே, மேல் உரு வெளிப்பாட்டாலே அவனை ஸ்மரித்து- நினைத்துத் தரித்தது ஒரு நிலையும் போய்,
அலாபத்தால் வரும் துவட்சியே ஆயிற்று;
இப்படித் துவண்ட இவள், பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கப் பார்க்கிறாள் இத்திருவாய் மொழியில்.

ஒவ்வோர் அர்த்தத்தைப்பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க்
ஸ்ரீ கீதோபநிஷத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத் தாயார்,
இது ஏதேனும் மணி மந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயம் கொண்டு,
அத் தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள்.
இனி, அவனைப் பிரிகையாலே வந்த ஆற்றாமையாலே அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று தெளிய மாட்டுகின்றிலள் தன் கலக்கத்தாலே.
இவ்வளவிலே புகுந்து ‘இதுதான் என்?’ என்று வினவப் புகுந்த உறவினவர்களைப் பார்த்துத் திருத் தாயார்,
அவனுடைய -வசன வ்யக்தி சாதர்ம்யத்தாலும் –
வார்த்தைகளைப் பேசுகையால் வந்த ஒற்றுமையாலும்,
ஞான முத்திரை பார்வை முதலியவைகள் இருந்தபடியாலும்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவள் பக்கல் ஆவேசித்தானாக வேணும் என்று சொல்லுகிறாள்,
அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமையாலே.பிரிவாற்றாமை உண்டானால் அநுகரித்துத் தரிக்கக் கடவதன்றோ.

கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண: அஹம் இதி ச அபரா”-ஸ்ரீவிஷ்ணுபுரா-5. 13 : 26, 27.
ஸ்ரீ கிருஷ்ணனை அநுகரித்தார்களே அன்றோ ஸ்ரீ திருவாய்ப் பாடியில் பெண்கள்;
கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: – நான் ஸ்ரீ கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும் படியாக
இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்; கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி ஸ்ரீ கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;”
பிரதிகூலனான காளியன் ஆனால் ஆகாதோ ஸ்ரீ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற பெண்ணின் பொடி படப் பெறில் என்று இருந்தாள்;
ஸ்ரீ கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத் துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய்ப்பட்டாலே.
அவர்கள் ஓர் அவதாரத்திலே அநுபவிக்கையாலே அங்குள்ள செயல்களை அநுகரித்தார்கள்;
இவள் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவள் ஆகையாலே உபய விபூதிகளை யுமுடையவனை அநுகரிக்கிறாள்.
இங்கு, கால், நடை தாராமையாலே அங்குப்போலே சரீரத்தால் செய்யப்படுகின்ற அநுகாரம் அன்று,
வாசிக மாத்திரத்தாலே ஆயிற்று அநுகரிக்கிறது.

ஆக, பிறப்பே பரதந்திர ஜன்மத்திலே பிறந்தவள், பிறப்பே ஸ்வதந்திரனானவன் வார்த்தையும் சொல்லா நின்றாள்,
பெண் தன்மைக்கு எல்லையான இவள், ஸ்ரீ புருஷோத்தமன் சொல்லும் வார்த்தைகளையும் சொல்லா நின்றாள்,
அறிவிற்கு விஷயம் வியவஸ்திதமாக இருக்க, ஸ்ரீ சர்வஜ்ஞன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லா நின்றாள்’
என்று கொண்டு, இவள் செய்கிறபடிகளைத் திருத் தாயார், வினவப் புகுந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

கீழில் திருவாய் மொழியிலே, உரு வெளிப்பாட்டாலே அநுபவித்தது விக்ரஹ வைலக்ஷண்யத்தை அன்றோ,
அந்த விக்ரஹமே அன்றோ ஸூபாஸ்ரயம் பற்றத் தகுந்தது;
தேகாத்ம அபிமானம் முற்றினால் வேறு ஓன்று தோற்றாது போலே பிரகாரியான அவன் அளவும் செல்ல
தன்னை அனுசந்தித்த பாவனா பிரகர்ஷத்தாலே அவன் தானாகவே பேசுகிறாள் –
இதில், அங்ஙனம் பற்றத் தகுந்த விக்ரஹத்துக்கும் உள்ளான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது;
அதனை அன்றோ பாவித்தது. பாவனா பிரகர்ஷத்தாலே -பாவனையின் மிகுதியாலே-
தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”- ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.
தத் பாவ பாவ மாபன் நஸ்ததாவ் பரமாத்மநா பவத்யபேதீ– ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை
அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
“தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”- ப்ருஹதாரண்ய உபநிஷத்-3 : 4.
அஹம் மனுரபாவம் ஸூர்யச்ச -ஸ்ரீ பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த ஸ்ரீ வாமதேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன்,
சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:”- ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.
மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே
எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,
அவனாகப் பாவித்தால் பின்னை அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லலாய் இருக்குமே அன்றோ.
அப்படியே, விபூதி அத்தயாயத்தில் அவன் சொன்னபடிகளைப் பெரும்பாலும் -பிராசுர்யேன அநுகரிக்கிறாள்.
அதர்வ சிரஸ்ஸிலே, ருத்ரன் தன் வைபவத்தைப் பரக்க நின்று பேசினான், தனக்கு அடங்காத ஐஸ்வர்யமாயிருந்தது,
இவன் இப்படிப் பேசுகைக்கு அடி என்? என்று சுருதி தானே சங்கித்து,
ஸோந்தராத் அந்தரம் பிராவிசத்” என்று, ஸ்ரீ பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னான் என்னா நின்றதே அன்றோ.
அந்தப் பாவம் வந்தால் அப்படியே சொல்லலாய் இருக்குமே.

ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமல்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆவேசித்தால் போலே இரா நின்றது’ என்று,
திருத்தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

(ஸ்ரீ திரு மங்கை -ஆழ்வார் -ஒரே -பாசுரம் வட வரை நின்று கண புரம் வந்தது யானே-8-2
தெள்ளியீர் அர்ச்சாவதாரத்தில் அநுகாரம் அங்கு)

———————————–

ஐந்தாம் பத்து -ஏழாம் திருவாய்மொழி – “நோற்ற நோன்பு”-பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தார்;
அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகம் காட்டிற்றிலன்;
இதற்குக் காரணம்-அடி- என்?
தன் பக்கல் ஆஸா லேசம்- ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகம் காட்டிக் காப்பாற்றக் கூடிய
ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
இனி இங்ஙனே யாம் இத்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடி யாயிருப்பதோர்
ஆற்றாமை உண்டாயிருந்தது;
அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
கடற்கரையின் வெளியில் ஸ்ரீ மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும்,
லஷ்மணம் புண்ய லக்ஷணம் யுத். 18:7.-புண்ணியத்தையே லக்ஷணமாக வுடைய ஸ்ரீ இளையபெருமாள்” என்கிற
தம்பியோடும் கூட எழுந்தருளி யிருக்க, ஸ்ரீ விபீஷணாழ்வான்
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” யுத். 17:10.
ராவணோ நாம துர்வ்ருத்த -கெட்ட ஒழுக்கத்தையுடையவன், ராவணன் என்று பிரசித்தி பெற்றவன்,
அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; ஸ்ரீ விபீஷணன் என்று
பிரசித்தி பெற்றவன்” என்று ஸ்வ நிகர்ஷத்தை -தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக் கொண்டு
ஸ்ரீ பெருமாள் திருவடிகளிலே விழுந்தால் போலே,

இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
ஸ்ரீ பிராட்டிமாரோடும் நித்ய பரிகரத்தோடும் கூட ஸ்ரீ சிரீவரமங்கல நகரிலே ஸ்ரீ திரு வனந்தாழ்வான் மேலே
எழுந்தருளி யிருக்கின்ற ஸ்ரீ வானமாமலை திருவடி களிலே,
வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.
இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில்,
அவன் -ரஷ்ய விஷய அபேஷியாய் -காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
ரஷக அபேக்ஷை -காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது;
ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ?

—————————

ஐந்தாம் பத்து -எட்டாம் திருவாய்மொழி – “ஆராவமுதே”-பிரவேசம் –

ஸ்ரீ சிரீவர மங்கல நகரிலே எழுந்தருளி யிருக்கின்ற ஸ்ரீ வானமாமலை திருவடிகளிலே,
வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து-அநந்ய கதிகளாய்- வேறு கதி இல்லாதவராய்க் -கொண்டு சரணம் புக்கார்;
இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகம் காட்டாதிருக்க–
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே,
இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும்
பிரமத்தை -மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;

(ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, கீழ் அருளிச்செய்த மூன்று
யோஜனைகளையும் தவிர, இன்னமும் ஒரு யோஜனை உண்டு என்று தோற்றுகிறது.
அதாவது, எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது.
நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது;
நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது;
ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும்.
இத்தால், இந்த நிலையிலும், ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களுக்கு ஒரு ஹாநி வராதபடி செய்தான்)

தரித்த இது தான் ஸ்ரீ திருக் குடந்தை யளவும் கால் நடை தந்து போகைக்கு உடலாயிற்று.
என் தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டாதொழியவும் அங்கு ஏறப் போக வேண்டுவான் என்? என்னில்,
ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா,
நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே;
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக எழுந்தருளி யிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக் கட்டாமை இல்லை,
இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று வியவஸ்திதமாய் -அறுதி யிடப்பட்டதா யிருக்குமே அன்றோ,
ஆன பின்பு, இங்குச் செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்;
இனித் தான், ஸ்ரீ பரதாழ்வான் ‘ஸ்ரீ பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் -முடி சூட்ட வேண்டும்’ என்று
பாரித்துக் கொண்டு செல்ல. ‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ;
ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததே யாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புகவே நாம் அபேக்ஷிதங்கள் எல்லாம் -விரும்பினவை அனைத்தும் கிட்டும்,
நமக்கு ஒரு குறைகளும் இல்லை’ என்று ஸ்ரீ திருக் குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, ஸ்ரீ பரதாழ்வான் ராஜ்யத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒரு புண்பாடும்,
தாயைக் கொண்டு ராஜ்யத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போக விட்டான்’ என்று
நாட்டார் சீறு பாறு என்றிருப்பார்கள்” என்றத்தாலே வந்ததொரு அச்சத்தை யுமுடையவனாய்க் கொண்டு;
நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
பிராதா -உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் ப்ரசன்னராய் -மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;
அம்பு எய்வார் படை திரட்டிக் கொண்டு போமாறு போல, ஸ்ரீ திரு வயோத்தியிலுள்ளாரில்
வ்ருக்ஷங்கள் -மரங்கள் அகப்பட ஆர்த்தியில் தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே,
நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால் மீளாமை இல்லை என்று பார்த்து –
ஏபிச்ச சசிவை–
இந்த மந்திரி மார்களோடும் கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர்,
பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே, இவன் செல்ல;
ஸ்ரீ பெருமாளும் -ராஜ்ய தந்திரங்களில் குறைவுபடாமல் நடத்தா நின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே
இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டால் போலே;
இவர் அடைந்த இடத்தில் திருக்கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல்,
திருப் பவளத்தைத் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல், அணைத்தல் செய்யக் கண்டிலர்.

மாமக்ரூரே திவஷ்யதி–
அந்த ஸ்ரீ கிருஷ்ணன், என்னை – ஸ்ரீ அக்ரூரனே! என்று அருளிச் செய்வர்” என்றால் போலே
பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே
இனிமையாலும் ஈடுபட்டு, ஸுந்தர்யாதிகளாலும் -அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து,
ஸ்தநந்த்ய பிரஜை -பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறா விட்டால் அலமந்து நோவு படுமாறு போலே,
அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு,
இன்னம் எத்தனைத் திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக் கட்டுகிறார்.

————————————

நாலாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி – “மானேய் நோக்கு”-பிரவேசம் –

ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புக்க விடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே
ஸ்ரீ திரு வல்லவாழ் ஏறப் போக ஒருப்பட்டார்;
ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று,
ஸ்ரீ திரு வல்லவாழிலே முட்டப் போகவும் கூட அரிதாயிற்று;
அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த அவசாதத்தை -துன்பத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்.
மாசறு சோதி” என்ற திருவாய் மொழியில், இவர் தாம் மடல் எடுக்கப் புக்கு,
அவனுக்குத் தாழ்வாம்-அவத்யம் ’ என்று தவிர்ந்தார்-அவனுடைய ரக்ஷகத்வத்துக்குத் தாழ்வாம் என்றபடி.
(ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின் பிரவேசம்-முன்னுரையில்
‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்று அருளிச் செய்தாரே யாகிலும், இங்கு,
‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’ என்று அருளிச் செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகும்.)

இங்கு, ஆற்றாமை தோற்றக் கண்ட ஸ்ரீ திருப்பதிகள் தோறும் புக்குத் திரியா நின்றார்;
இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை.
அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்,
இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்;
அங்கு வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப் பட்டார்
(அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது,அவனுடைய நிருபாதிக ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி
விரோதமாகையாலே, தம்முடைய முயற்சியை விட்டார் என்றபடி.
இங்கு,தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம் இல்லாத போது சத்தை கிடவாமையாலே,
ஸ்ரீ திருப்பதிகள் தோறும் புக்காகிலும் அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க வேண்டுகையாலே தம்முடைய சத்தைச்
சித்திக்கும் பொருட்டு ஸ்ரீ திருப்பதிகள் தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று பரிஹரித்தாராயிற்று.)
(அங்கு, வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது, மாசறு சோதி என் செய்யவாய் மணிக் குன்றத்தை”
என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
‘ஆசைப் பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட மாத்திரமாகையாலே
தத் தஸ்ய சத்ருஸம் பவேத் – அச்செயல் அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.)

பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி அவகாஹித்த -மூழ்கின படியாலே ஆற்றாமை முறுகி, –
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே,அடிமைசெய்ய ஆசைப் படுகிறார்.
கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான்என்”-நாய்ச்சியார் திரு. 13 : 9.
(அடிமை செய்ய ஆசைப் படுகிறார்’ என்றது, “அடி கூடுவது என்று கொலோ” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.)

இனி,இவர் தமக்குக் கலவி-சம்ச்லேஷம் -யாவது, மானச அநுபவம் என்றே யன்றோ
திருவாய் மொழியின் முதற்பத்திலே பிரவேசத்திலே – முன்னுரையிலே-ஸ்ரீ திருமகள் கேள்வன் ஒன்றிலே’ அடியிலே சொல்லிற்று;
இங்ஙனே யிருக்க, ஸ்ரீ திரு வல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகையாவது என்?
(முடியப் போக மாட்டாமல் புறச் சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’)
பந்து வர்க்கம் நிஷேதிக்கையாவது -உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில்,
அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ-மானச அநுபவ அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி
(உறவினர்கள்” என்றது, ஸ்வாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில்,
தம் முயற்சி, அவனையே ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப்பட்டிருத்தல் ஆகிற
ஸ்வரூபத்திற்கு முரண் பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.)

ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி,
தன்னுடைய ஆபீஜாத்யாதிகளையும் – குடிப்பிறப்பு முதலானவற்றையும் பாராமல்-
உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது–
ஸ்ரீ திரு வல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகப் புக, இதனை அறியும் தோழிமார் வந்து
இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்;
அவ்வூரில் திருச் சோலையும்,
அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு புறப்படுகிற தென்றலும்,
அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடா நின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும்,
ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலா ஹலங்களும்,
நகர சம் பிரமங்களும்,
இவையெல்லாம், நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று அழையா நின்றன;
ஆன பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை வேண்டிக் கொண்டு;
ஸ்ரீ திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே என்று
அவர்களுக்குச் சொல்லுகிறாளாயிருக்கிறது.

(இத் திருவாய்மொழியில் வருகின்ற “தேனார் சோலைகள்”, “தென்றல் மணம் கமழும்”, “பாண்குரல் வண்டு”, “பாடு நல் வேத ஒலி”,
“மண்ணும் விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி அவ்வூரில் திருச்சோலையும்”
என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத் தோழிமீர்காள்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி ‘அவர்களை வேண்டிக்கொண்டு’ என்கிறார்.)

இது தான் நான் அநுபவித்தேன்’ என்று ஸ்ரீ சீயர் அருளிச்செய்வர்.
ஸ்ரீ பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு ஒருகால் மேல் நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு பெரிய த்வரையோடே விரைவோடே
மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்துக்கு.-திருநாளுக்கு உதவ வேணும்’ என்று வர,
ஸ்ரீ திருக் கரம்பன் துறை யளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே
காவிரி பெருகிக் கிடக்க; இராத் திருநாள் எழுந்தருளி
இங்குண்டான சம் பிரமங்களெல்லாம் செவிப்படுவது, வந்து புகுரப் பெறாதொழிவதாய்க் கொண்டு
போர நோவு பட்டோம்’ என்று அருளிச் செய்வர்.
ஏகத த்வித த்ரிதர்கள்–பிரஹ்மாவினுடைய மானச புத்திரர்கள்-ரிஷிகள் – சுவேதத் தீபத்தைச் சென்று கிட்டி,
உள்ளுப் புகுகைக்குத் தகுதி யில்லாமையாலே புறம்பே நின்று,
அங்குள்ளார் ஸ்ரீ எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது,
கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து பட்டால் போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.

—————————

ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி – “பிறந்தவாறும்”-பிரவேசம் –

ஸ்ரீ திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று
மநோ ரதித்துக் கொண்டு போக, கால் நடை தாராமல் நடு வழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்;
இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணி யாகிலும் தரிப்போம்” என்று பார்க்க,
அதுதானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க;
எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று குணாநுபவம் பண்ண
வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
(இத்தால் -ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய நிர்வாஹத்தைச் சுருங்க அருளிச் செய்கிறார்.
‘குணாநுபவம் பண்ணியாகிலும்’என்ற இவ் விடத்திலே
“கோவிந்தன் குணம் பாடி —- ஆவி காத்திருப்பேனே” என்னும் ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி அநுசந்தேயம். 8. 3.)

ருஷிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று
ஸ்ரீ ஆழ்வார்களுக்கு ஸ்ரீ பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்;
அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யா நிற்பர்கள்,
இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே ஸ்ரீ பிராட்டியைப் போன்று துடியா நிற்பர்கள்;
அவர்களுக்குத் தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம்,
இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது ஒன்று இல்லை யாகையாலே கிடந்து அலமாப்பார்கள்.
அவன் அடியாலே நம் பேறு’ என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவது-

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவ: ஜலாந்மத்ஸ்யாவிவ உத்ருதௌ:-அயோத்யா 53 : 31.–
ரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் ஸ்ரீ சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று,
நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே,
லாபாலாபங்களில் ஸ்ரீ பிராட்டியையும் தம்மையும் ஏக ப்ரக்ருதியாக -ஒரு தன்மையராகச் சொன்னார்
ஸ்ரீ இளையபெருமாள் இறே .
“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” உத். 40 : 16.
சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று,
ஸ்ரீ திருவடி ஸ்ரீ ராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,
இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லா சேஷ்டிதங்களிலும் – செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.

ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே ஸ்ரீ அவதாரங்களிலே போகிறார்;
ஸ்ரீ விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே.
ஸ்ரீ அவதாரங்களிலே இழந்தார்க்கும் இழவு தீர்க்கிற இடம் ஸ்ரீ அர்ச்சாவதாரமாயிருக்க,
இதனை விட்டு, ‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில்,
ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை, சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும்
சர்வ அபேக்ஷிதங்களையும்-விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய,
குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே,
சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’

இவ்விடத்திலே,“ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, ஸ்ரீ பெருமாளும் இரங்கி ‘மூன்றாம் நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன,
ஸ்ரீ ஆழ்வான் திருமதிளுக்குப் புறம்பானார்’ என்னக் கேட்டு
ஸ்ரீ உடையவர் ஓடிச் சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க உமக்கு ஸ்ரீ பரம பதத்தே போக வேண்டிற்றோ’ என்ன,
அடியேன் சம்சாரத்திலே அடிக் கொதிப்பாலே மறந்தேன்’ என்ன,
ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சில நாள் ஸ்ரீ ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’ என்று திருவாசலளவும் சென்று, ‘
சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக் குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற சரிதம் அநுசந்திக்கத் தகும்-
நான் ஒருவன் தோன்றி ஸ்ரீ பெருமாளை இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி.
அதி நிர்ப்பந்தம் செய்யக்கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.

சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’ என்று,
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”–ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.
அந்த ஸ்ரீ கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே
நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்” என்னும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அண்மைக் காலமாகையாலே.

இவ் வாழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள்,
இதற்குக் காரணம் என்’ என்று ஸ்ரீ பட்டரைக் கேட்க,
ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாள்கள் கழிந்தால் பொறுக்கலாம், அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ;
அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல அன்றிக்கே, சம காலமாகையாலே,
ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பெற்றிலோம், பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே’ என்னும் இழவாலே
வயிறு எரிதலாலே யாயிருக்கும்’ என்று அருளிச் செய்தார்.
இனித் தான், ஸ்ரீ இராம வதாரத்தில், தமப்பன் சம்பரனைக் கொன்றவனாய் ஏகவீரனாய் இருப்பான் ஒருவன்;
பிள்ளைகள் தாம் ஆண் புலிகள், குடி தானே வன்னியம் அறுத்திருப்பதொரு குடி;
இவை எல்லாம் மிகையாம்படி, குணத்தாலே நாடுகளை யெல்லாம் ஒரு மார்வு எழுத்தாக்கிக் கொண்டிருப்பர்கள்,
ஆகையால் எதிரிகள் என்கிற சொல்லும் இல்லை;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சன் சிறைக் கூடத்திலே, வளர்ந்ததும் அவனகத்து அருகே;
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுர மயமாயிருக்கும்;
ரக்ஷகரானவர்கள் ஓர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படியாயிற்று இவன் தன் படிகள் இருப்பன;
அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்;
அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள், அவ்விழாவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள்.
அவர்களிலே ஒருவரான இவர் சொல்லுகிறபடி யன்றோ இது,

‘தெரிந்துணர்வு’ என்ற திருப்பாசுரம்;
தெரிந்துணர் வொன்றின்மையால் தீ வினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம் – கரந்துருவின்
அம்மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழியங் கை
அம்மானை ஏத்தாது அயர்த்து.–பெரிய திருவந்தாதி. 82.

புலையாம் பிறவி பிறந்தென் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திருவரங்கத் தெம்பிரான் நம தன்னை யொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடந்தோறும் புல்லாய்ச்
சிலையாய்க் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.-என்னும் திருப்பாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

மாயா மிருகத்தின் பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளின போது அடி சுட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
தழைகளை முறித்துப் பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு,
பாவியேன்! அன்று உதவி அத் திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேன்,
ஒரு பயனுமின்றியே கழிந்தனவே யன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ.
இப்படியன்றோ கழிந்தனவற்றிற்கு இவர்கள் வயிறு எரியும்படி.
திருநீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே’ என்றும் வயிறு பிடித்தாரன்றோ இவர்.

“தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணியார் மேனியோடு என்மனம் சூழ வருவாரே.”- திருவாய். 8. 3 : 6.

இவர் அவனுடைய அவதாரங்களையும் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி -உலகைப் படைத்தல் முதலான வியாபாரங்களையும்,
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்த” – பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 11.-என்கிறபடியே,
அடியார்களை வாழ்விக்கவும், பகைவர்களை அழியச் செய்யவும் அடியிட்டு அப்படி வளர்ந்தருளின ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தையும்
அநுசந்தித்து மிகவும் சிதிலரான இவர், தரித்து நின்று உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேணும்
என்று அவனைச் சரணம் புகுகிறார்” என்று ஸ்ரீ ஆழ்வான் பணிக்கும்.

அன்றியே, ‘பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலைபெற்று மிகவும் நலிய,
அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி
செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று ஸ்ரீ எம்பார் அருளிச் செய்வர்.

அங்ஙனம் அன்றிக்கே, “ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே
வளர்ந்தருளா நின்றான்’ என்று கேட்டு, ‘அங்கே மநோ ரதித்தபடியே நாம் கலந்து பரிமாறலாம்’ என்று
தெற்குத் திருவாசலாலே சென்று புக,
இப்போது இங்ஙனே வடக்குத் திருவாசலாலே புறப்பட்டுத் தன்னுடைச் சோதியேற எழுந்தருளினான்’ என்று
கேட்டு விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்” என்று ஸ்ரீ பிள்ளான் பணிப்பர் என்று அருளிச் செய்வர்.

நின்று நின்று நினைகின்றேன்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து எழுகின்றது ஸ்ரீ ஆழ்வான் நிர்வாகம்.
ஸ்ரீ எம்பார் நிர்வாகம், “என் கண்கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.
செய்து போன மாயங்களும்” என்றதிலே நோக்கு, ஸ்ரீ பிள்ளான் நிர்வாகம்.

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: