ஸ்ரீ திருவாய் மொழி மூன்றாம் பத்தில் –ஒன்பதாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஷூத்ர விஷயங்களைக் கவி பாடுகை உங்களுக்கு ஹிதம் அல்ல என்று உபதேசிக்கையில் ப்ரவ்ருத்தரானவர்
அவர்களுக்கு ருசி பிறக்கைக்காக, ‘நான் இருக்கிறபடி கண்டிகோளே என்று
தம்முடைய மதத்தை அருளிச் செய்கிறார்.

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

———————————-

சத்யமுமாய் -என்றும் உள்ளதுமாய் -சமக்ரமுமான- நிறைந்திருப்பதுமான -ஐஸ்வர்யத்தை -செல்வத்தை யுடையவனாய்,
ஸ்வரூப ரூப குணங்களால் பூர்ணனுமாய் -நிறைந்தவனுமாய்,ப்ராப்தனுமான – அடையத் தக்கவனுமான ஸ்ரீ சர்வேஸ்வரனை விட்டு,
ஒரு சொல் சொல்லுகைக்கும் பாத்தம் -விஷயம் இல்லாத ஐஸ்வர்யமுமாய் செல்வமுமாய்,
அது தானும் நிரூபித்தால் நிலை நில்லாமையாலே–அஸத்யமுமாய் – பொய்மையுமாம்
அது தனக்குப் பற்றுக்கோடும்-ஆஸ்ரயமும் – தேடிப் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கிற
ஷூத்ரரை-புல்லரைக் கவிபாடி என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடிஎன்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

———————————–

விலக்ஷணனாய் உபகாரகனாய் இருக்குமவனை ஒழிய, ஷூத்ர மனிதரைக்
கவி பாடுவதனால் என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழி தோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான் கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

———————————-

கவி பாடினார்க்குத் தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுக்குமவனைக் கவி பாடுமது ஒழிய,
குறைந்த ஆயுளை யுடைய புல்லரைக் கவி பாடிப் பெறுவது என்?’ என்கிறார்.

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்!
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே–3-9-4-

—————————————–

உபகாரகரும் அன்றிக்கே, கவி பாடுகிறவர்களுக்கு அவத்யமாம் படி ஹேயருமாய்- இழிந்தவர்களுமாய்
இருக்கின்றவர்களைக் கவி பாடாதே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
சர்வ அபேக்ஷித பிரதானனுமான ஸ்ரீ சர்வேஸ்வரனைக் கவி பாட வாருங்கள்,’ என்கிறார்.

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

—————————————

ஜீவனத்தின் பொருட்டு மனிதர்களைக் கவி பாடுகிறோம்’ என்ன,
‘புல்லரைக் கவி பாடி வாழ்வதிலும் உடம்பு நோவப் பணி செய்து வாழ்தல் நன்று,’ என்கிறார்.

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம் மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திரு மாலுக்குச் சேருமே–3-9-6-

———————————-

வழி பறிக்கும் நிலத்தில் தன் கைப் பொருள் கொண்டு தப்பினவன் மகிழுமாறு போன்று,
இவர்களைப் போல அன்றிக்கே ஸ்ரீ பகவானை ஒழிய வேறு சிலரைக் கவி பாடுகைக்கு
நான் ஆற்றலன் அன்றிக்கே ஒழியப் பெற்றேன்,’ என்று பிரீதர் ஆகிறார்.

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

———————————

நான் பிறரைக் கவி பாடுவேன் என்னிலும், என் வாயானது அவனை ஒழியப் பாடாது,’ என்கிறார்.

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப் போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன்,
மாய மனிசரை என் சொல வல்லேன் என் வாய் கொண்டே?–3-9-8-

——————————-

பரம உதாரனானவன் என் கவிக்குத் தன்னை விஷயமாக்கி வைத்த பின்பு,
இதர ஸ்தோத்ரத்துக்கு அதிகாரி அல்லேன்,’ என்கிறார்.

வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீ ர்வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே–3-9-9-

——————————–

ஸ்ரீ சர்வேஸ்வரன் கவியான எனக்கு-இதர ஸ்தோத்ர கரணம் – பிறரைத் துதிக்கும் உறுப்பு-
அனுரூபம் – ஏற்றது- அன்று,’ என்கிறார்.

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ் வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

———————————

நிகமத்தில் ‘இத்திருவாய்மொழியின் இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு
பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ என்கிறார்.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: