ஸ்ரீ திருவாய் மொழி நாலாம் பத்தில் –முதல் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

சார்வ பௌமராய்ப் போந்த ராஜாக்கள் அந்த ராஜ்ய ஸ்ரீயை இழந்து இரந்து-ஜீவிக்க – உயிர் வாழ வேண்டும்படி –
துர்க்கதர்– வறியர் ஆவார்கள்; ஆன பின்பு,
‘ஸ்ரீ வத்ஸ வக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீ வத்ஸத்தை திரு மார்பிலே யுடையவன், நித்யமான ஸ்ரீயை யுடையவன்’ என்கிறபடியே,
அழியாத செல்வமான ‘ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ.–4-1-1-

———————————

ராஜ்யத்தை இழத்தலே அன்றிக்கே, ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் போக்யைகளாகப் பரிக்ரஹித்த
ஸ்த்ரீகளையும் சத்ருக்கர்களுக்குக் கொடுத்து எளிமைப்படுவர் என்கிறார்.

உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம்மின் சுவை மட வாரைப் பிறர்கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ–4-1-2-

——————————

ராஜாக்கள், தங்கள் காலிலே விழுந்து கிடந்தால்-அநாதரித்து இருக்கும் – அதனை ஒரு பொருளாக நினைத்து
நோக்காத மதிப்பினை யுடையவர்கள், ஒரு சேதநன் என்று நினையாதபடி மதிப்பு அறுவர்கள் என்கிறார்.

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ–4-1-3-

——————————-

ஐஸ்வர்யத்தின் -செல்வத்தின் நிலையாமையும் மதிப்பு அறுகையும் கிடக்கச் செய்தே,
போக்தாக்களுடைய -இன்பத்தை அனுபவிக்கின்றவர்களுடைய நிலையாமையாலும்
அவனைப் பற்றவேண்டும்,’ என்கிறார்

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலிற் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ் வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ–4-1-4-

———————————-

செல்வக் கிடப்போபாதி – நிலையைப் போன்றே-அங்கநா பரிஷ்வங்கமும் –
மகளிருடைய சேர்க்கையும்-அஸ்திரம் நிலை அற்றது,’ என்கிறார்.

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ–4-1-5-

—————————-

வைத்தியர்கள் -மருத்துவர்கள் பிழைத்தாரை எண்ணுமாறு போன்று
முடிந்தவர்களை- இறந்தவர்களை எண்ணுகிறது என்?
ஜீவித்தவர்களும் -வாழ்ந்தவர்களும் சிலர் இலரோ?’ என்ன,
அது இருந்தபடி கேட்கலாகாதோ பின்னை?’ என்கிறார்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ–4-1-6-

——————————-

ஐஸ்வர்யத்துக்கு நீர் சொல்லுகிற தோஷம் குற்றம் உண்டே ஆகிலும்,அன்ன பானாதிகள்
சோறு முதலானவைகட்கு,தாரகமாயும் – தரித்திருப்பதற்குக் காரணமுமாய் –
போக்யமாகவும் -இனியவையுமாய் இருக்கிற ஆகாரம் – தன்மை உண்டே?’ என்ன,
அவையும் நிலை நில்லாதவை ,’ என்கிறார்.

ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ஆதலின்,
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே–4-1-7-

———————————

ராஜ்ய ஸ்ரீ நிலை நில்லாது ஒழிவது, நாட்டாரோடு பொருந்தி வர்த்தியாது – வாழாது ஒழியில் அன்றோ?
அவர்களோடு பொருந்தி வர்த்திக்கவே வாழவே அது நிலை நிற்குமே?’ என்ன,
பொருந்தி வர்த்தித்தாலும் -வாழ்ந்தாலும், ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரியாவிடில்-அடையாவிடில் கிடையாது;
அவனை ஆஸ்ரயித்து – அடைந்து பெற்றாலும், அதன் ஸ்வபாவத்தாலும்- தன்மையாலும் நிலை நில்லாது;
ஆன பின்பு, அவன் தன்னையே பிரயோஜனமாக ஆஸ்ரயியுங்கோள் – அடையுங்கோள்,’ என்கிறார்

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக் கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமின–4-1-8-

—————————-

கீழ் எட்டுப் பாசுரங்களால் ஐஹிக போகம் ‘இவ்வுலக இன்பம்-அஸ்திரம் – நிலை அற்றது,’ என்றார்;
இப் பாசுரத்தில். காயிக கிலேசாத்மகமான–‘உடலை வருத்தும் தன்மையை யுடைய தவத்தைச் செய்து
அந்தத் தவத்தின் பலம் ஸ்வர்க்கமாகக் கொண்டு ஸ்வர்க்கத்தை பிராபிக்கும் -அடையும் போது
ஸ்ரீ பகவானுடைய பிரசாதம் -திரு வருள் வேண்டும்;
அவனுடைய ப்ரஸாதத்தாலே -திருவருளால் ஸ்வர்க்கத்தை அடைந்தாலும்,
அதனுடைய ஸ்வபாவத்தாலே இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.

படி மன்னும் பல் கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ–4-1-9-

—————————-

பூமியில் ஐஸ்வர்யம், சுவர்க்க அனுபவம் இவை நிலை நில்லா,’ என்றார் கீழ்
‘இவை போல் அன்றிக்கே, ஆத்ம அனுபவம் நிலை நின்ற புருஷார்த்தமே அன்றோ?’ என்னில்,
மேலே கூறியவற்றை நோக்கும் போது இதற்கு ஒரு நன்மை உண்டே யாகிலும்,
பகவானுடைய ஆனந்தத்தைப் பார்க்கும்போது இது ஏக தேசம் -மிகச் சிறியதாய் இருக்கையாலே இதுவும் தண்ணிது;
ஆன பின்பு, அவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடா விடில், வீடு அஃதே–4-1-10-

—————————–

நிகமத்தில் இத் திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற
ஷூத்ர – சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, ஸ்ரீ பகவானுடைய கைங்கரியத்தையே -ஏக போக –
புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,’ என்கிறார்.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: