ஸ்ரீ திருவாய் மொழி மூன்றாம் பத்தில் –முதல் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

ஸ்ரீ அழகருடைய திவ்விய அவயவங்கட்கும் திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூ கடிதத்வத்தை –
பொருத்தத்தின் மிகுதியைக் கண்டு விஸ்மிதராகிறார்–ஆச்சரியப்படுகிறார்.

முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ !
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச் சோதி ஆடை யொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடிச் சோதி கலந்ததுவோ ! திருமாலே ! கட்டுரையே–3-1-1-

—————————-

ஸ்ரீ அழகருடைய ஸுந்தர்யத்துக்கு- அழகிற்கு-சத்ருசம் – ஒப்பு இல்லாமையாலே
உலகத்தார் செய்யும் துதிகள் அங்குத்தைக்கு-அவத்யமாம் – தாழ்வேயாமித்தனை,’ என்கிறார்.

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா;
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டுரைத்து இவ் உலகுன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!–3-1-2-

——————-

நம் பக்கல் முதல் அடியிடாத லௌகிகரை உலகத்தாரை விடும்;
உலகத்தாருக்கு வ்யவருத்தரே- வேறுபட்டவரான நீர் பேசினாலோ?’ என்ன,
‘என்னாலே தான் பேசப் போமோ?’ என்கிறார்.

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரஞ்சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்பு உரைக்க மாட்டேனே–3-1-3-

—————–

மேற்பாசுரத்தில், தாம் ‘உரைக்க மாட்டேன்’ என்றார்;
இவனுடைய போக்யதாதிசயம் இருந்தபடியால் சிலராலே கிட்டலாயிருந்ததில்லை;
இனி சம்சாரிகள் இழந்து நோவுபட்டுப் போமித்தனையன்றோ என்று
அழகருடைய அழகின் மிகுதி இவரைப் பேசுவிக்கப் பேசுகிறார்.

மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திரு வுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்; மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய்; மா ஞாலம் வருந்தாதே?–3-1-4-

——————————–

மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி.
நான்காம் பாட்டில் நாட்டாருடைய இழவு நடுவே பிரசங்காத் பிரஸ்துதமித்தனை.
‘கோவிந்தா’ பண்புரைக்க மாட்டேனே,’ என்று சொல்லுவான் என்?
நாட்டாருடைய பேரிழவு நிற்க; மயர்வற மதிநலம் அருளப்பெறுகையாலே நீர் வேறுபட்டவரே;
உலகத்தாரில் வேறுபட்ட அளவேயோ! விண்ணுளாரிலும் -வ்யாவருத்தர் இறே -வேறுபட்டவரே;
ஆதலால், நீர் நம்மைப் பேசமாட்டீரோ?’ என்ன,
‘என்னை எல்லாரிலும் வேறு பட்டவனாக்கினாயித்தனை அல்லது உன்னை
ஓர் சாவதி ஆக்கிற்று இலையே- எல்லைக்குட்பட்டவனாக்கினாய் இல்லையே!’ என்கிறார்
(வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதனைக் கடாக்ஷித்து ‘உன்னை ஓர்
எல்லைக்குட்பட்டவனாயில்லையே!’ என்கிறார்.)

வருந்தாத அருந் தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்;
வருங்காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே?–3-1-5-

—————————-

எங்குலக்க ஓதுவன்?’ என்றார்; ‘வேதங்கள் நம்மைப் பேசா நின்றனவே, உமக்குப் பேசத் தட்டு என்?’ என்ன,
‘அவையும் இவ்வளவன்றோ செய்தது?’ என்கிறார்.

ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் வுலகத்து எவ் வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகை யல்லால் பிறிது இல்லை;
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொலி யான் வாழ்த்துவனே!–3-1-6-

————————–

’வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர் என்று சிலர் உளரே?
அவர்கள் நம்மை ஏத்தக் குறை என்?’ என்ன,
‘அதுவும் உனக்கு நிறக் கேடு,’ என்கிறார்.

வாழ்த்துவார் பலராக; நின்னுள்ளே நான் முகனை
‘மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை’என்று முதல் படைத்தாய்;
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே?–3-1-7-

——————————–

கீழ் பாசுரத்தில், ருத்ரன் தொடக்கமானார் ஏத்தமாட்டார்கள் என்றார்;
இப்பாசுரத்தில், ‘அவன் தனக்கும் கூட ஜனகனான பிரமன் ஸ்துதித்தாலும் அதுவும்
உனக்கு அவத்யமாம் ’ என்கிறார் என்பாருமுளர்.
‘அவனையும் கீழ் பாசுரத்திலே அருளிச் செய்தாராய், இப் பாசுரத்தில் உபய பாவனையுமுடைய அப் பிரமனைப் போலன்றிக்
கேவலம் பிரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு பிரஹ்மாவை-உத்ப்ரேஷித்து – கற்பித்து,
அத்தகைய பிரமன் ஏத்தினாலும்-தேவர்க்கு அவத்யமாம் இத்தனை யன்றோ?’ என்கிறார் என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வர்.

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமர ர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாத மலர்ச் சோதி மழுங்காதே?–3-1-8-

———————————–

பேச வொண்ணாதது மேன்மைதானோ? நீர்மையும் பேச்சுக்கு நிலமன்று,’ என்கிறார்.

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?–3-1-9-

—————————

வேதைக சமைதி கம்யனாய் -ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருக்கிற உனக்கு, த்வத் ஸ்ருஷ்டராய -உன்னாலே படைக்கப் பட்டவர்களாய்
உன்னாலே -லப்த ஞானரான -ஞானத்தைப் பெற்றவர்களாயுள்ள-ப்ரஹ்மாதிகள் – பிரமன் முதலான தேவர்கள்,
‘ஸ்ரீ ஈஸ்வரன் ’ என்று அறிந்து ஏத்த இருக்குமது விஸ்மயமோ -ஆச்சரியமோ!’ என்கிறார்.

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே!
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை யாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே!–3-1-10-

—————————-

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழி தானே இது கற்றாரை உஜ்ஜீவிப்பித்து
பின்னர் -சாம்சாரிகமான -சகல துரிதத்தையும் போக்கும்,’ என்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: