ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -திருவாய் மொழிகளின் சங்கதிகளின்–பிரவேசங்களின் -தொகுப்பு–

இரண்டாம் பத்து–முதல் திருவாய்மொழி – ‘வாயுந்திரை யுகளும்-பிரவேசம் –  
 
முதற்பத்தால் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –சுடர் அடி தொழுது எழு என் மனனே ;
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களைகள் அறுக்கிறார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே .
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்-பயிலும் சுடர் ஒளி
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்-ஒரு நாயகம் இத்யாதி
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்-களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்-அகலகில்லேன் இறையும்–மிதுனத்தில் சரண்-
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்-நண்ணிலா வகையே நலிவான் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்-
உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்– ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்-சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

கீழில் திருவாய்மொழியில் ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று அவனுடைய
ஸுலப்யத்தையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச் செய்தார்.
மேல் விழப் பண்ணுகைக்கு இம் மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம்.
இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம் மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின்,
அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே?
ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்தது –
நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்த
ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு ஸ்ரீ பிராட்டி, ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு,
அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கரை புரண்டிருக்கும்.
‘அதற்குக் காரணம் என்னை?’ எனில், 
‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே
‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்;
இது அவ்வாறு அன்றி, ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே
வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும்.
அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ உகந்தருளின நிலங்கள்?
மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று:
இத் திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவு படுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவு படுகிறார்.
மேலும், அனுபவிக்கிற இவ் வாழ்வாருடைய தன்மையாலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்;
‘யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை ‘பத்துடையடியவர்’ என்ற அத் திருவாய்மொழிக்கு முன்பு
இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே;
‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத் திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே
இத் திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன்  பயிலப் பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்,
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும்,
மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும்,
தமஸ்ஸாகில் -இருளாகில்-பதார்த்த தர்சனம் – பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும்,
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும்,
இங்ஙனம் இவற்றிற்கு-நியத ஸ்வபாவம் – இத் தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல்,
இவை யெல்லாம் தம்மைப் போன்று -பகவத் விஸ்லேஷத்தில் -இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம்-அநு சோகிக்கிறார்-

இத் திருவாய்மொழியில், இளைய பெருமாளைக் காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது.
‘யாங்ஙனம்?’ என்னில், ‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்;
இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமை யற,
ஸ்ரீ பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்
துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு 
ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று,
இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து,
‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.  

‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில்,
அபி வ்ருஷ பரிம்லானா (‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும்
ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப் பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ )என்றும், 
உப தப்தோதகா நதியா பல்வலா நி சராம்சி ச (ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று
கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள
மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளை யுடையன ஆயின்,’ என்றும்- )–ஸ்ரீ ராமாயணத்தில் பேசப்படுவது போன்று,
சேதன அசேதன விபாகம் அற – எல்லாப் பொருள்களையும் நோவு படுத்தக் கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீ ராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி,-
சீதே ம்ருதஸ்தே ஸ்வசுர–பித்ரா ஹீநோ அஸி லஷ்மண ( முழுமதியினைப் போன்ற திரு முகத்தை யுடைய ஸ்ரீ பிராட்டி யருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ )என்றும்,
கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு-

—————————

இரண்டாம் பத்து -இரண்டாந்திருவாய்மொழி‘திண்ணன் வீடு’-பிரவேசம்

கீழ் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,
‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்து போமித்தனை என்று இருந்தார்.
பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்;
‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே,
இதர – மற்றைப் பொருள்களினுடைய பேறு இழவுகளில் அளவு அல்லாத-விஷய வை லக்ஷண்யம் –
இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது;
அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதப்படியாய்,
கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி.

‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாகையாலே -எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது;
இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது.
‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், ஸ்ரீ சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின்,
‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின்,
எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும்.
ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக-அத்விதீயமான – இடத்திற்கு ஏற்பத் தோன்றிய -பரத்வத்தை
இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.இத்திருவாய்மொழியில்.

இனி, ‘கீழ் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்;
அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை –
இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பணிப்பர் ஸ்ரீ திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

‘ஆயின், முதல் திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின்,
‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்;
ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன்,
இனி, பகவத் விஷயத்தில் கூறியது -புநர் யுக்தி தோஷம் -கூறல் என்ற குற்றமும் ஆகாது.
‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக் காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்;
ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி
ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்.
‘ஆயின் ‘ஷணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின்,
பயிலா நிற்கச் செய்தே ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்;
‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும்.
ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்பியம் ஆகிறது?

ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு;
1-முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், ஸ்வாநுபவமாய் இருக்கும்;
இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும்.
2-அங்கு அன்வய – விதி முகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்;
இங்கு அன்வய -விதிமுகம்-வ்யதிரேக – மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார்.
3-அங்கு, சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார்.
4-அங்கு, பரத்வத்திலே பரத்வம் -முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் பரத்வம் -முதன்மை

——————————————————-

இரண்டாம் பத்து -மூன்றாந்திருவாய்மொழி -‘ஊனில் வாழ்’பிரவேசம்

‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து-
ஸம்ஸ்லேஷித்த சம்ச்லேஷத்தை – கலந்த கலவியினை அருளிச் செய்கிறார். இத் திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின்,
ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய -ஈஸ்வரத்வம் -அம் முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்.

ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;
அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவு பட்டு இருக்கும்;
எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்ததாகலின் அவ் வின்பம் கனத்திருந்தது.
மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது;
‘இத்தகைய பேற்றுக்கு உசாத் துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,
அவன் தன்னோடு ஒக்கப் பிராப்யருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணா நிற்பாருமாய்,
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய சூரிகள் திரளிலே சென்று புக்கு –
போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும்
அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக்கட்டுகிறார்.

‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று,
பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய சூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார்;
ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் -காற்றையும் கழியையும் கட்டி அழுதார்
இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு-அறிவு நைசர்க்கிகமான- இயற்கை அறிவையுடைய ஸ்ரீ நித்திய சூரிகளைத் தேடுகிறார்.
ஸ்ரீ இறைவன் ஸ்ரீ ஆழ்வாரோடு கலந்த கலவி,
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கலவியைப் போன்று இருந்தது.

ராமஸ்து – ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச் சொல்லுகிறது.
‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார்,
தேவ சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது:
இப்படிப் போந்த இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’-என்னும்படி வேறுபட்டார்.
சீதயா ஸார்த்தம் – பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும் பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார்.
விஜஹார – இப்படிப் பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர்.
பஹூந் ருதூந் -‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த
போக உபகரணங்களைக் கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக.
மனஸ்வீ -சம்ஸ்லேஷத்தில் ஸ்ரீ பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார்.
தத் கத:-தஸ்யாம் கத: – ஜாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி.
தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே
அப் பெரியவன் இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’ என்று கிடக்கு மாயிற்று.
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

——————————————–

இரண்டாம் பத்து நாலாம் திருவாய்மொழி ஆடியாடி பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் –
அது தன்னை ஸ்ரீ பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே
நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய்
தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு ஸ்ரீ பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-
ஸ்திதி கமன சயநாதிகளிலே ஒரு நியதி இன்றியிலே அரதியாய் –
விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்

ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி -ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர்
உம்மை ஆசைப்பட்ட இவள் நோவு படப் பார்த்து இருப்பதே -என்று
எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று
கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்

காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க ஆசைப்பட்டு
கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே-அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்

நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -ஸ்ரீ திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே

நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-
பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் –
எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது –
அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
ஸ்ரீ பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே ஸ்ரீ பாகவத விச்லேஷம் தான் தெரிவது

ஸ்ரீ பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற ஸ்ரீ பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே –
மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
ஸ்ரீ பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை ஸ்ரீ பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
ஸ்ரீ பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் ஸ்ரீ பகவத் விச்லேஷம் தெரிய வரும் –
அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –

கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக் குறையாலே –
கூட நிற்கிற ஸ்ரீ இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே ஸ்ரீ பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன ஸ்ரீ இளைய பெருமாளோடும் ஸ்ரீ பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

————————————————————-

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி அந்தாமத்தன்பு’-பிரவேசம்

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ஸ்ரீ கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது;
முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப் போன்றது ஒன்றாம்,
கீழ் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஸ்ரீ ஆழ்வார்க்குப் பிறந்த வ்யஸனம் -துக்கம்;
அது எல்லாம் ஆறும்படியாக,
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் ஸ்ரீ சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’
என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே,
பெரிய த்வரையோடே – மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் -அக்ரமமாக -முறைபிறழத் தரித்துக் கொண்டு,
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு,
ஸ்ரீ யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி,
க்ராஹம் சக்ரேனை மாதவ ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே,
பிரஜையின் – குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று,
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் தானுமாக, இரண்டுக்கும் நலிவு வாராமல் திரு ஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின
திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து
அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே,

இவ்வாழ்வாரும் ’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட-ஆர்த்த நாதம் – துக்க ஒலியானது செவிப்பட,
‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று,
பிற்பட்டதனால் உண்டாகும் -லஜ்ஜா பயங்களினால் -நாணத்தாலும் பயத்தாலும்-விஹ்வலனாய் கலங்கினவனாய்,
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும்
வந்து ஸம்ஸ்லேஷித்து – கலந்து- அத்தாலே ஹ்ருஷ்டானாய் -மகிழ்ந்தவனாய்,
தான் -க்ருதக்ருத்யனாய் -செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய்
இருக்கிற இருப்பை அனுபவித்து, -அவ்வனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகரஷத்தாலே –
அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.

——————————————————————-

இரண்டாம் பத்து ஆறாந்திருவாய்மொழி -‘வைகுந்தா’பிரவேசம்

‘ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் ஆர்த்தி -உண்டான துன்பம் தீர வந்து-ஸம்ஸ்லேஷித்த- கலந்த-படியை
‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
அச் சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியில்.
‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி.
இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத்
தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்;
இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது,
சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்.
இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே?
‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.

(உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.)

உபய விபுதிகளை யுடையவனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாக உடையவனாய்,-சர்வ பிரகார பரிபூர்ணனான – எல்லா வகையாலும் நிறைந்தவனான தான்,
தன் படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே ஸம்ஸ்லேஷித்து கலந்து,-அச் சம்ச்லேஷம் தான் – அக் கலவிதான் –
தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
அநாதி காலம் -பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த வஸ்துவை பொருளை ஒருபடியாக பிராபிக்கப் பெற்றோமே அடைந்தோமே!’
இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று அதி சங்கை பண்ணி -ஐயங்கொண்டு,
அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் -அதி சங்கையைப் பரிஹரித்து -ஐயத்தை நீக்கி,
அவனை உளன் ஆக்குகிறார்.
வைதேஹி ரமஸ கச்சித் சித்ரகூடே மயா ஸஹ ‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடு கூட
இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றால் போலே ஆயிற்று இதில் ரசமும் -சுவையும்;
‘மைதிலி, உன்னை அறிந்தாயே- நம்மை அறிந்தாயே,- கலக்கிற தேசம் அறிந்தாயே! என்றார் இறே பெருமாள் –

———————————————————-

இரண்டாம் பத்து -ஏழாந்திருவாய்மொழி -‘கேசவன்தமர்’-பிரவேசம் –

‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் ‘வாடி வாடும்’ என்கையாலே, ஒரு நீர்ச்சாவியாய் வாடினபடி சொல்லிற்று;
அந்த நீர்ச்சாவியானது தீரக் காரார் கருமுகில் கலந்து மழை பெய்தபடி சொல்லிற்று ‘அந்தாமத்தன்பு’ என்ற திருவாய்மொழியில்;
அப்படி மழை பெய்த படியாலே, ‘ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்’ என்று
வெள்ளம் இட்டுப் பெருகினபடி சொல்லிற்று ‘வைகுந்தா மணிவண்ணனே’ என்ற திருவாய்மொழியில்;
‘எமர் கீழ் மேல் எழுபிறப்பும் மா சதிர் இது பெற்று’ என்கையாலே, அவ் வெள்ளம்
இருகரையும் புரண்டபடி சொல்லுகிறது ‘கேசவன் தமர்’ என்னும் இத்திருவாய்மொழியில்.

இனி, இவர் ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் பட்ட துன்பம் தீர வந்து கலந்தபடி சொல்லிற்று
‘அந்தாமத்தன்பு’ என்ற திருவாய்மொழியில்;
அக்கலவியால் பிறந்த பிரீதி அவனது ஆனபடி சொல்லிற்று ‘வைகுந்தா மணிவண்ணனே’ என்ற திருவாய்மொழியில்;
அந்தப் பிரீதிதான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே, தம்மோடு-பரம்பரையா- தொடர்ந்து வருகின்ற சம்பந்தம் உடையாரளவும்
வெள்ளம் இட்டுப் பெருகினபடியைச் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில் என்று கூறலுமாம்.

ஸ்ரீ சர்வேஸ்வரன், ஸ்ரீ ஆழ்வாரோடே வந்து கலந்த கலவியால் பிறந்த பிரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே,
தம்மோடு பரம்பரையாகச் சம்பந்தமுடையார் அளவும் பெருகினபடியைக் கண்டு,
‘இது இறைவன் என் பக்கல் செய்த பக்ஷபாத மிகுதி அன்றோ?’ என்று இனியராய்,
தம்மை அங்கீகரிக்கைக்கு ஈடான குணங்கள்-சேஷ்டிதாதிகள் – செயல்கள் முதலியவற்றை அநுசந்தித்து,
அவற்றிற்கு வாசகமான பன்னிரண்டு திருப்பெயர்களாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்.

ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரிப்பான் என்?’ எனின்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒருவனை அங்கீகரித்தால், அது பின்னை அவன் அளவிலே நில்லாதே அன்றோ?

மரணாந்தாநி வைராணி
‘இருடிகள் குடியிருப்பை அழித்தான்; ஸ்ரீ மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே
ஸ்ரீ ஜடாயு மஹாராஜரை நலிந்தான். இவை எல்லாம் செய்யமாட்டானே இவன் இனி;
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –
இவன் ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண்’
என்று இருந்தோம்;-அது அந் நாளில் பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம்;
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்கார –
இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
வேண்டுவன செய்யப் பாரும்;
மமாப்யேஷா யதா தவ–
நீர் இறாய்தது இருந்தீராகில், குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனை அன்றோ?
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் கட்ட நில்லீர்’ என்றார் ஸ்ரீ பெருமாள்.
இங்கு ஸ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது.

ஸ்ரீ மகாராஜர்க்குப் பகைவன்’ என்று வாலியைக் கொன்ற பின்னர், ஸ்ரீ மகாராஜர் கண்ண நீர் பொறுக்கமாட்டாமல்
சஞ்ஜாத பாஷ்ப
‘விடப்பட்ட கண்ணநீரை உடையவர் ஆனார்’ என்கிறபடியே, தாமும் கண்ண நீர் விழ விட்டார்.

தர்மே மநச்ச தே பத்ர —
‘மங்கள குணமுள்ள ஸ்ரீ மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப் போகிறது;
உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப் போகிறது;
உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது!’ என்கிறபடியே,
ஸ்ரீ மாலாகாரர் பக்கல் அங்கீகாரம் அவன் சந்தானத்தளவும் சென்றது.

ஸ்ரீ கண்டாகர்ணன் பக்கல் பண்ணின அங்கீகாரம் அவன் தம்பி அளவும் சென்று,
‘நீ அவனுக்கு நல்லையாகில் ‘அவன் முன்னாகப் போ’ என்று அருளிச் செய்தான்.
ஆக, இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.

ஸ்ரீ எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ் ரீவைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பராம்.
ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத் துவாதச நாமங்கள்?
நெடுமாற்கு அடிமை, ஸ்ரீ ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், v எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும்.
அவற்றுள், ஸ்ரீ எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய்மொழி.

மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இரு வகையில் இயைபு அருளிச்செய்கிறார்.
நீர்ச்சாவி – நீர் இல்லாத பயிர்.
‘அல்லாவியுள் கலந்த, காரார் கருமுகில் போல் என் அம்மான்’ என்றதனை நோக்கிக்
‘காரார் கருமுகில் கலந்து மழை பெய்தபடி சொல்லிற்று’ என்கிறார்.
‘மாறி மாறிப் பல பிறப்பும்’ என்ற பாசுரத்தை நோக்கி
‘ஈறிலின்பத் திருவெள்ளம். யான் மூழ்கினன் என்று வெள்ளமிட்டுப் பெருகினபடி சொல்லிற்று’ என்றார்.
‘இரு கரையும்’ என்றது, கீழ் எழு பிறப்பும் ஒரு கரை; மேல் எழுபிறப்பும் ஒரு கரை.

குண சேஷ்டித வாசக நாமாந்தரங்கள் இருக்க, திருத் துவாதச நாமங்களாலே அனுபவிப்பதற்கு பாவம்,
‘எம்பார் இத்திருவாய்மொழி’ என்று தொடங்கும் வாக்கியம்.
துவாதசம் – பன்னிரண்டு. சம்பந்தி சம்பந்திகள் அளவும் அங்கீகரிக்கைக்கு ரசோக்தி,

‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய’ என்று தொடங்கும் வாக்கியம்.
‘நெடுமாற்கடிமை’ என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை.
இந்தப் பிரேமம் ஸ்ரீ ஆழ்வார்க்குச் சொரூபத்தோடு கூடியது;ஸ்ரீ எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.

———————————————

இரண்டாம் பத்து -எட்டாம் திருவாய்மொழி-அணைவதரவணை’–பிரவேசம்

ஸ்ரீ சர்வேஸ்வரன் தம் பக்கல் செய்த வியாமோகம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே,
தம்மோடு சம்பந்தம் உடையாரளவிலும் வெள்ளம் இட்டபடியைச் சொன்னார் கீழ் திருவாய்மொழியில்;
‘நம்முடைய சம்பந்தமே ஹேதுவாக இவன் இப்படி அங்கீகரிப்பவனான பின்பு
சம்சாரிகளுக்கும் நம்மோடு ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு -திருவருளுக்கு விஷயமாக்குவோம்’ என்று,
அவர்களுக்கு மோக்ஷப் பரதத்துவத்தை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.
இத்திருவாய்மொழி ‘ஈஸ்வரத்துவம் சொல்லுகிறது,’ என்று நிர்வஹிப்பாரும் உண்டு.
ஆனால், மோக்ஷப் பரத்தத்துவம் சொல்லுகிறது என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.
இவைதாம், ஒன்றை ஒன்று விட்டு இரா;
ஸ்ரீ ஈஸ்வரன் ஆவான் மோக்ஷத்தைக் கொடுப்பவனே யாவன்;
மோக்ஷத்தைக் கொடுப்பவன் ஆம் போது ஸ்ரீ ஈஸ்வரன் ஆக வேண்டும்.

இத்திருவாய்மொழியில் எவ்விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்?’ என்னில்,
ஆழ்வார்க்கு முதல் முன்னம் ஸ்ரீ சர்வேஸ்வரன்
அத்வேஷத்தைப் பிறப்பித்து
ஆபிமுக்கியத்தைப் பிறப்பித்து
ருசியை உண்டாக்கி,
இவர் விடிலும் தான் விடாமல் விரும்பி,
( என்றது, ‘யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன்’ என்ற பாசுரத்தை நோக்கி.)
இதுதான் இவர்தம் அளவிலே அன்றி இவர்தம்மோடு சம்பந்தமுடையார் அளவும் இப்படிப் பெருகிக்
கரை புரளும்படி செய்கிற தன்மையை அநுசந்தித்து,
(முடியாதது என் எனக்கேல்’,‘கேசவன் தமர்’, ‘கோவிந்தன்’ என்னும் பாசுரங்களைத் திருவுள்ளத்தே கொண்டு)
ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்மை இதுவான பின்பு நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி செய்வோம்’ என்று,
சம்சாரிகளை அடையப் பார்த்து, அவர்களுக்கு ‘மோஷத்தைக் கொடுப்பவன்’என்னுமிடத்தை அருளிச் செய்கிறார்.

(அத்வேஷத்தைப் பிறப்பித்து’ என்றது,
‘யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்’ என்றும்,
‘இசைவித்து என்னை’ என்றும் வருகின்ற பாசுரப் பகுதிகளை நோக்கி.
‘ஆபிமுக்கியத்தைப் பிறப்பித்து’ என்றது,-‘மயர்வற மதிநல மருளினன்’ என்றதனை.
அன்றியே, இவ்விரண்டையும்
‘என்னைத் தீமனம்கொடுத்தாய்’, ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்பனவற்றை-என்றுமாம்
‘ருசியையுண்டாக்கி’ என்றது, ‘ அடிமைக்கண் அன்பு செய்வித்து’,
‘நின்னலால் இலேன்காண்’ என்பனவற்றை நோக்கி.)

இவர், தாம் பெற்றதாய்ப் பிறர்க்கு உபதேசிக்கிற பேறு தான்
ஸ்ரீ பிராட்டி, ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வான் இவர்களைப் பரிகரமாக உடையதாய்,
எத்தனையேனும்-அளவுடையாருக்கும் – ஞானமுடையார்க்கும் ஸ்வ யத்னத்தால் தன் முயற்சியால்-பிராபிக்க அடைவதற்கு அரியதாய்,
அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறக்கூடியதாய்,
சம்சாரத்தில் இன்பங்கள் போலே-அஸ்திரமாய் நிலையற்றதாய் இருக்கை அன்றிக்கே -நித்தியமாய், –
அவிசதமாய் -விளக்கம் இன்றி இருத்தலன்றி-அத்யந்தம் ஸ்புடமாய் – மிக்க ஒளியோடு கூடியதாய்,
துக்க மிஸ்ரமாய் -துக்கங்கலந்ததாய் இருத்தல் அன்றிச் சுகத்திற்கே ஓர் இருப்பிடமாய்-ஸூக ஏகைகதானமாய் –
மங்களமாய், உத்தமமாய், அபரிச்சின்னமாய் -அளவுக்குட்படாததாய்
இப்படி இருக்கிற முக்தப் பிராப்ய போகத்தைத் தமக்கும் தம் சம்பந்தம் உடையார்க்கும்
அவன் கொடுப்பானாகப் பாரிக்கிறபடியைக் கண்டு,
‘சம்சாரிகளையும் ஈத்ருஸ போகிகளாம் படி – இப்படிப்பட்ட இன்பத்தினை உடையவர்களாகச் செய்ய வேண்டும்’ என்று பார்த்து,
அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய,
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையினின்றும் குலையாமல்,
ஸ்ரீ மாலியவான் தொடக்கமானார் இராவணனுக்குச் சொன்ன ஹிதம் போலே அவர்கள் இதனை விரும்பாதிருக்க,
‘நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடே துவக்குண்கிற இதற்குப் பிரயோஜனம் என்?’ என்று,
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராவார் போலே மகிழ்ச்சியை யுடையவர்கள் ஆமாறு போன்று,
‘நாம் முந்துற முன்னம் இவர்களைப் போன்று ஆகாது ஒழியப் பெற்றோம் அன்றோ?’ என்று
ஸ்வ -தம் லாபத்தை அநுசந்தித்து இனியராகிறார்.

‘பனி நின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும் படி பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லோரும் நன்று என்னத்
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ யாகில்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு என் செய்வாரே?’- என்றார் ஸ்ரீ கம்பநாட்டாழ்வார்.

———————————————-

இரண்டாம் பத்து -ஒன்பதாம் திருவாய்மொழி-எம் மா வீடு’-பிரவேசம் –

கீழ் திருவாய் மொழியிலே, ‘நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்’ என்று இவர் தாமும் அருளிச்செய்து,
ஸ்ரீ சர்வேஸ்வரனும் இவர்க்கும் இவர் உறவினர்கட்கும் பரமபதம் கொடுப்பானாகப் பாரிக்க,
அதனைக் கண்டு, ‘தேவரீர் எனக்குப் பரமபதம் தந்தருளப் பார்த்ததாகில் இங்ஙனே தரப் பார்ப்பது;
அதாவது, ‘உமக்காக மோக்ஷம் கொடுக்கிறோம் கொள்ளும்’ என்று
எனக்காகத் தருகை அன்றி, ‘நமக்காகக் கொள்ளும்’ என்று தேவரீருக்கே ஆகும்படியாகத் தரவேண்டும்,’ என்று
தாம் நினைத்திருந்தபடியை அவன் திருமுன்னர்ப் பிரார்த்திக்கிறார்.
‘ஆயின், இதனை இத்தனை நாள் அறுதியிடாது ஒழிவான் என்?’ என்னில்,
அவன் மேலும் மேலும் குணங்களை அனுபவிப்பிக்கையாலே – அதற்குக் காலம் போந்தது இத்தனை அல்லது,
இதனை அறுதியிடுவதற்குக் காலம் பெற்றிலர்.
‘ஆயின், இப்பொழுதும் குணானுபவமே அன்றோ பண்ணுகிறது?’ என்னில்,
ஆம், அப்படியே; இறைவன் தம் பக்கல் மேலும் மேலும் செய்கிற விருப்பத்தைக் கண்டு,
‘இவனுக்கு இந்தக் காதற்பெருக்கு-வ்யாமோஹம் – முடியத் தொடர்ந்து செல்லுவது ஒன்றாய் இருந்தது;
நாம் இவனை மீட்டாகிலும்
நம்முடைய பேற்றினை அறுதி இடுவோம்’ என்று பார்த்து,
‘நீ இங்ஙனே நில்’ என்று அவனை நிறுத்தி வைத்துப் ப்ராப்ய நிஷ்கர்ஷம் -பேற்றினை அறுதியிடுகிறார்.

ஸ்ரீ எம்பார், இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால், இருந்தவர்களை ‘யார்?’ என்று கேட்டுக்
கதவுகளையும் அடைப்பித்து, மிக இரகசியமாக அருளிச் செய்வர்.

நன்று; பெறத் தகுந்த பேறு என்பது இப்படி அன்றோ இருப்பது? இவர் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில்,
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ்வாத்துமாவுக்குத் தலைவனாய், -சேஷியாய் -இவனும் அடியவனாய், சேஷபூதனாய் –
அவனுடைய உபாய பாவமும் நித்தியமாக இருக்கச் செய்தே அன்றோ இவனுக்கு இன்று ஸ்வீகாரம் வேண்டுகிறது?
அப்படியே, அவன் ஸ்வதந்தரன் ஆகையாலே, நினைத்தபோது நினைத்தபடி கொள்வான் ஒருவன் ஆகையாலே,
பேற்றினைப் பெறும் சமயத்தில் அனுபவம் இருக்கும்படியையும் -நிஷ்கர்ஷித்து- அறுதியிட்டுப் பெறவேண்டும் என்க.

உத்தரார்த்தத்திலும் -பின் வாக்கியத்திலும் இவ்வர்த்தத்தைச் சொல்லா நின்றதே என்க
‘துவயந்தன்னில் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில்,
பூர்வார்த்தத்தில் -முன் வாக்கியத்தால் சொன்ன சாதனம், -சர்வ பலப்ரதம் -எல்லாப்பலன்களையும் கொடுக்கக் கூடியது ஆகையாலே,
வேறு பலன்களை விரும்பி அடைக்கலம் புகுவார்க்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் அன்றோ ஸ்ரீ சர்வேஸ்வரன்?
ஆதலால், அறுதி இடுகிறது என்க

நன்று; இத்திருவாய்மொழியில் அறுதியிடும் பேறு என்?’ என்னில்,
‘முத்தனாய்த் தனக்கு மேல் ஒன்று இல்லாததான சுகானுபவத்தைப் பண்ணவுமாம்;
ஆத்மப்பிராப்தியைப் பெறவுமாம்; ஆத்ம விநாசமே ஆகவுமாம்; நரக அனுபவம் பண்ணவுமாம்;
இவற்றில், எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை; உனக்காக வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம்;
எனக்காக வருமன்று இவை இத்தனையும் வேண்டா;
ஆன பின்னர், தேவர்க்கு உறுப்பாமிதுவே எனக்கு வடிவாம்படி பண்ணியருள வேண்டும்’ என்று,
ஸ்வ ப்ராப்யத்தை -தம்முடைய பேற்றினை -நிஷ்கர்ஷிக்கிறார் -அறுதியிடுகிறார்.

இப்படிப்பட்ட செயல்தான் உலகத்தில் நடைபெறுவது ஒன்று அன்று;
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல்;
ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரதாழ்வான், ஸ்ரீ இளையபெருமாள் இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யுமித்தனை.

கைகேயி ‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான் அன்றோ?
‘விலலாப சபா மத்யே – ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக் கொள்ளை கொள்வதே-அபஹரிப்பதே -!
தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமா க்ரந்திதும் ப்ருசம் -( திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’ )என்கிறபடியே,
இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்?
ஜகர்ஹேச – சந்தியாவந்தனத்திற்குப் பிற்பாடரைச் சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான்.
புரோஹிதம் – அழகியதாக இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய்.
சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே – சபையின் மத்தியிலே புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்;
நியமாதி க்ரமம் ரஹஸி போதயேத் (‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின் அதனை அவனிடத்தில்
ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ ) என்கிற நிலையையும் பார்த்திலன்.
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய – ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ?
அப்படியாயின், ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ?
தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; ஸ்ரீ சக்கரவர்த்தி துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது;
நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’ என்று பார்த்தாய் இத்தனை போக்கி,
இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை.
கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: – அவர் போகட்டுப் போன ராஜ்யத்தை அபகரித்து, அவரைப் பிரிந்த
அந்த ஷணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.

ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் ஸ்ரீ இளையபெருமாள்;
அன்வயத்திலேயே -‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப்
பிரித்து-வ்யதிரேகித்து -நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார்.
‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்?
உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், ‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார்.
அனுசரம் -பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார் –
‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச் செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத் தக்கவனாம்படி-யோக்யனாம்படி – இருக்கை அன்றோ?
உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே;
சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார்.
இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி.

(பெருமாள் ‘நில்’ என்ன, ஸ்ரீ இளையபெருமாள், குருஷ்வ மாம் அநுசரம் – நான் பின் தொடர்ந்து
வருவேனாகச் செய்ய வேண்டும்’ என்று சொன்னார் என்றபடி.
ஒருவன் ஒரு தொழிலைச் செய்தால், அத்தொழிலால் உண்டாகும் பயன் தன்னைச் சார்வதாக இருந்தால், அத்தொழிலை உணர்த்துகின்ற
சொல்லின் உறுப்பை ‘ஆத்மநே பதம்’ என்றும், பயன் பிறன் ஒருவனைச் சார்வதாக இருந்தால் அத்தொழிலை உணர்த்தும் சொல்லின்
உறுப்பைப் ‘பரஸ்மை பதம்’ என்றும், கூறுப. அங்குக் ‘குரு’ என்பது பரஸ்மை பதம்;’ ‘குருஷ்வ’ என்பது ஆத்மநே பதம்.
ஆத்மநே பதமான ‘குருஷ்வ’ என்றதனை நோக்கி, ‘யாருடைய பிரயோஜனத்துக்காக யார் தான் இருக்கிறார்?
உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்று அருளிச் செய்கிறார்.
‘சேதனன் அடிமை செய்வதால் உளதாய பயன் இறைவனுக்கு’
‘உனக்கேநா மாட்செய்வோம்; மற்றைநம் காமங்கள் மாற்று’
‘குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே கிருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’
‘சேஷபூதனான என்னைப் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்-
என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;
தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச் செய்து அத்தால் வந்த
கைங்கர்ய பலத்தை அடைந்தவனாகப் போகிறேன்’ என்பதாம். )

மேலும், ‘நீரும் நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ண சாலையைச் சமையும்’ என்ன,
‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே ஸ்ரீ பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார்.
‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்;
இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்;
லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர்.
ஸம்யதாஞ்ஜலி: – நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே,
தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி.
ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே.
காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை.
இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் ருஷி .
மேலும், ‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்றார் ஸ்ரீ இளையபெருமாள்.

(‘பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேசே கிரியதாமிதி மாம் வத.’
‘ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும் நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்;
தேவரீரே மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும். )

(’நீருள எனின் உள் மீனும் நீலமும்; பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின் நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின் உளேம்? அருளுவாய்’ என்றான். (கம்ப. நகர் நீங். 157))

இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.

‘இதுதான் ஒருவர் அபேக்ஷிக்குமதுவும் – விரும்புவதும் அன்று;
அபேக்ஷிப்பார் -விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று;
அவ்வழி புல் எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க,
‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ புருஷார்த்தமாவது?
இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப,
அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.

—————————————————————–

இரண்டாம் பத்து -பத்தாந்திருவாய்மொழி – ‘கிளரொளி’-பிரவேசம் –

கீழ் ‘எம் மா வீடு’ என்னும் திருவாய்மொழியிலே நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்தைப் பெறுகைக்குத்
ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கிறார் ’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராக ஸ்ரீ திருமலையாண்டான் பணிப்பர்.
ஸ்ரீ எம்பெருமானார், ‘அங்ஙனம் அன்று; இவர் மேல் திருவாய்மொழியிலே பாட்டுகள் தோறும்
‘ஒல்லை’, ‘ஒல்லை’ என்றும்,
‘காலக் கழிவு செய்யேல்’ என்றும் த்வரிக்கப் புக்கவாறே,
‘நமக்கும் அறிவித்து, நாமும் இவர் காரியம் செய்வதாக அறுதியிட்டால், அதனைக் கொண்டு-
சரீர சமனந்தரம் சரீரத்தின் முடிவில் பேறு தப்பாது’ என்று அறுதியிட்டு வாளா இருக்கலாய் இருக்க,
இவர் இப்படி த்வரிக்கிறது இச்சரீரத்தோடே இவரை நாம் அடிமை கொள்ள வேண்டும் என்று போலே இருந்தது;
இனி இவர்க்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான இடம் ஏதோ’ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கிப் பார்த்து வரச் செய்தே ‘இவ்விடம் சால ஏகாந்தத் தலமாய் இருந்தது’ என்று
ஸ்ரீ திருமலையிலே சந்நிதி பண்ணியருளி, ‘நாம் உமக்கு முகந்தருகைக்காக வந்து நின்றோம்;
நீர் இங்கே வந்து நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறி அனுபவியும்’ என்று
தெற்கு ஸ்ரீ திருமலையிலே நிற்கின்ற நிலையைக் காட்டிக்கொடுக்க,
இவரும் அதனை அநுசந்தித்துப் பகவான் பிராப்யனானால் அவன் வாழும் தேசமும் பிராப்யமாகக் கூடியதாதலின்,
ஸ்ரீ திருமலையோடு,
அதனோடு சேர்ந்த அயன்மலையோடு
புறமலையோடு,
ஸ்ரீ திருப்பதியோடு,
போம் வழியோடு,
‘போகக்கடவோம்’ என்று துணியும் துணிவோடு
வேற்றுமை அறப் பிராப்யாந்தர்க்கதமாய் அனுபவித்து இனியர் ஆகிறார்’ என்று அருளிச் செய்வார்.

—————————–————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: