ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -பத்தாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-பிரவேசம் –

தன்னை உகந்தாருக்கு தான் ஆஸ்ரயநீயனாய் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சுலபன் ஆனபடியை அனுசந்தித்து
தமக்கு நித்ய கைங்கர்யம் பண்ண வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமையாலும் –
அவன் தன்னை உகந்தாரை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய கைங்கர்யத்தைப் பண்ணுவித்துக் கொள்ளும்
நிருபாதிக பந்துவாகையாலும்
ஸ்ரீ திருப்பதிகளை அனுபவித்த ஆழ்வார்
ஸ்ரீ பரம பதத்துக்கும் போக்கு அணித்து என்று அத்யவசித்து –
நாவோடையான பெண் பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போம் போது ஜன்ம பூமியில் உள்ள
உறவுமுறையார் உள்ளிடம் எங்கும் புக்கு முகம் காட்டுமா போலே குணாநுபவம் ஸ்ரீ பரம பத்துக்கும் ஒக்குமே
ஆகையாலே சில ஸ்ரீ திருப் பதிகளிலே புக்கு -இங்கே புக்கோம்
இனி இன்ன ஸ்ரீ திருப் பதியிலே புக வேணும் என்று இப்படியே
உகந்து அருளின தேசங்கள் எங்கும் முகம் காட்டப் பார்க்கிறார் –

———————–

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-பிரவேசம் –

ஸ்ரீ திருப்பதிகளை அனுபவித்தார் கீழ் –
அது தலைக் கட்டி அவதாரங்களிலே போந்து அனுபவிக்கிறார் –
இதிலே -தமக்கு அபிமதமான -ஸ்ரீ ராம விஜயத்தை எதிரிகள் மேல் எழுத்திட்ட பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –
அங்குத்தை விஜயம் தமக்கு இஷ்டம் ஆகையாலே-அந்த விஜயத்துக்கு இலக்காய்த்-தோற்ற ராஷசர் தசை பிறந்து-
ஸ்ரீ பிராட்டிமார் தசை பிறந்து பேசுமா போலே தாமான தன்மை தோற்றாதே-தோற்ற ராஷசர் பாசுரத்தாலே
ஸ்ரீ ராம விஜயத்தை பேசி அனுபவிக்கிறார் –

—————————

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-பிரவேசம் –

குணாலைக் கூத்துப் போலே தோற்றார் தோல்விக்கு ஈடாக-குழமணி தூரக் கூத்து என்று ஒரு கூத்து உண்டு ஆடுவது –
அத்தை ராஷசர் செய்த படி பேசி அவர்கள் பாசுரத்தாலே ஸ்ரீ பகவத் விஷயத்தை அனுபவிக்கிறார் –

——————–

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-பிரவேசம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு இறே-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –
த்வேஷத்துக்கு எல்லையானார்க்கும் இசைய வேண்டும்படி இருக்கிற
ஸ்ரீ ராமாவதாரத்தில் விஜயத்துக்கு தோற்றவர்கள் பாசுரத்தாலே அனுபவித்தார் கீழ் –
ராகத்துக்கு எல்லையான யசோதைப் பிராட்டி பாசுரத்தாலே ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கிறார் இதில் –

—————————

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-பிரவேசம் –

முலையில் வாசி அறிந்து உண்ணும் பிள்ளைப் பருவத்தை அனுபவித்து இனியரனார் -கீழ்
அதுக்கு அநந்தரம் லீலையிலே இழிந்து சப்பாணி கொட்டும் பருவத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –

————————-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1- பிரவேசம் –

சப்பாணி கொட்டி விளையாடும் பருவத்தை அனுபவித்தார் கீழ் –
அதுக்கு அனந்தரமாக வெண்ணெயும் தயிரையும் களவு கண்டு அமுது செய்த படியை –
பரிவுடைய ஸ்ரீ யசோதை பிராட்டி பாசுரத்தாலே அனுபவிக்க வென்று –
வார்த்தை மறந்து –
தாம் அதிலே ஈடுபட்டு
அவனுடைய – ஸ்ரீ சர்வேஸ்வரத்தையும்-
பராபிபவன சாமர்த்யத்தையும்
வேண்டப்பாட்டையும் –
சர்வ பிரகாரத்தால் உண்டான உத்கர்ஷத்தையும் –-அடைய அனுபவித்து –
அப்படிப்பட்ட மேன்மை உடையவன் -இன்று
இங்கனே -ஓர் அபலையாலே
கட்டுண்டு –
அடியுண்டு –
நோவு படுவதே -என்று
இவன் சௌலப்யத்தை அனுசந்தித்து – இனியராகிறார் –

——————-

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1- பிரவேசம் –

வெண்ணெய் களவு காணும் பருவத்தைத் தப்பி –
வெண்ணெயும் பெண்களையும் களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்தித்து
யசோதைப் பிராட்டி யானவள் விளைவது அறியாமையாலே
இது எவ்வளவாய் புகுகிறதோ -என்று அஞ்சி இருக்க இவனாலே நோவு பட்டு
ஊரில் உள்ளார் அடங்கலும் அது போயிற்று இது போயிற்று -என்று இங்கனே முறைப்பட
அவளும் -அவர்களுமாக பரிமாறின அப் பெரிய குழாங்களை தாம் அனுபவிக்கிறார் –
ஒருத்தியைப் பார்த்து வார்த்தை சொல்கிறார் இதில் –

———————-

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ -10-8-1-பிரவேசம் –

பெண்களையும் வெண்ணெயும் ஒக்க களவு காணுமது தவிர்ந்து –அவர்களும் கை புகுந்து –
நினைத்த படியே சம்ஸ்லேஷமும் பிரவ்ருத்தமாய் நின்றது –கீழ் –
இனி – இது பிரசித்தமாம் படியானவாறே அகல நின்றான் –
இவர்களுக்கு பிரணய ரோஷம் தலை எடுத்து சம்ஸ்லேஷத்தின் உடைய மத்யந்த்தினமாய் –
அறமுருடு கொளுத்தி இருக்க –
அவனும் வருந்தி-காலைக் கையைப் பிடித்து-சம்ஸ்லேஷித்த படியை பேசுகிறதாய் -இருக்கிறது –

——————–

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே -10-9-1-பிரவேசம் –

ஊடல் கூடல் உணர்தல் -என்கிறபடியே
முன்பு விஸ்லேஷமாய்
அநந்தரம் சம்ஸ்லேஷமாய்
அது தான் விஸ்லேஷாந்தமாய் நின்றது –
ஆற்றாமை கரை புரண்டு
அவன் வருமளவும் கண்டு ஆறி இருக்க ஒண்ணாத் படி-ஆசை மிகுத்து
இவர் க்ரம பிராப்தி பற்றாத படியாய் இருக்கிற இவள் தசையை அனுசந்திக்கிற ஸ்ரீ திருத் தாயார்
இவள் ஆபத்துக்கு இரை இடுவதோ
அவனை அழைப்பிப்பதோ
ஊரார் சொல்லுகிற பழியை பரிஹரிப்பதோ -என்று பார்த்து
இனி அவிருத்தமாகப் போகலாம் வழி என்ன -என்று நினைத்து –
மிடுக்கன் அல்லனோ
நினைத்த கார்யங்கள் செய்து தலைக் கட்டுமவன் அல்லனோ
குணவான் அல்லனோ
வடிவு அழகால் துவக்க வல்லவன் அன்றோ என்று நினைத்து இருக்கிறாயோ -என்று
லோகத்தில் ஆற்றாமை உடையார் எல்லாரும் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை
இவளுடைய வ்யசனத்துக்கு நிதர்சனமாகச் சொல்லி இவள் இப்பாடு பட நீ ஆறி இருப்பாயோ என்று
இவள் தசையை அனுசந்தித்த ஸ்ரீ திருத் தாயார் பாசுரமாய் இருக்கிறது –

———————————-

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1- பிரவேசம் –

திருத் தாயார் ஓர் அளவிலே கூப்பிட்டு கை வாங்கினாளாய் நின்றது கீழ்த் திரு மொழியில் – இதில்
இப்பிராட்டி தான் தன்னுடைய ஆற்றாமையாலே அவனை என்னோடு சேர்க்க வேணும் என்று
கண்ணால் கண்ட பஷிகளின் காலிலே விழுகிறாள் –
இனி இவை தான் ஸூசகமாகை அன்றிக்கே
காரகமாகவும் வற்று என்று இருக்கிறாள் காணும் – வரவுக்கு சகுனங்களையும் பார்க்கிறாள் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: