ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-பத்தாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யன் ஆனவனை
திரு நீர் மலையிலே கண்டோம்
இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் –
என்கிறார் –

———————-

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே —10-1-2-

சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை ஸ்ரீ திருமலையிலே கண்டோம் –
இனி ஸ்ரீ திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் – என்கிறார் –

———————

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3-

ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று
காணக் கடவோம் என்கிறார் –

————–

துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே —10-1-4-

ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை ஸ்ரீ திருப் பேரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் என்கிறார் –

———————–

சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே —10-1-5-

ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை ஸ்ரீ திரு நறையூரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு மெய்யத்திலே காணக் கடவோம் என்கிறார் –

———————

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே —10-1-6-

பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம்
இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார் –

———————

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே —10-1-7-

ஸ்ரீ கிருஷ்ணனாய் அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு வெக்காவில் காணக் கடவோம் –

———————-

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-

தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம்
இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார் –

——————–

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே —10-1-9-

குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை ஸ்ரீ திருக் கோட்டியூரிலே கண்டு போய்
ஸ்ரீ திரு நாவாயிலே காணக் கடவோம் என்கிறார் –

———————

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே —10-1-10-

இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்சேதம் இல்லை –நச புனராவர்த்ததே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –

——————

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டன இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல்விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-

ராஷசரில் இனி ஆடு போலேக் கூப்பிடக் கடவார் இல்லை -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர் – ஆடு -என்று வெற்றி
இந்த ராஷச ஜாதியிலே வெற்றி சொல்லக் கடவார் இல்லை -என்கிறது என்ன
இதுவே இறே பொருள் என்று அருளிச் செய்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் –
தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்துண்டு – அந்த சப்த அநுகாரம் –
பொங்கத்தம் பொங்கோ –என்கிற இது-

————————–

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2-

ஒப்பாய் இருக்கிற தோள் இரண்டையும் ஒரு திரு அபிஷேகத்தையும் உடையராய் இருக்கிற உம்மைக் கண்டு
அடியாரான நாங்கள் ஒருவர் இருவர் அன்றிக்கே எல்லாரும் ஒக்க வாழ்ந்தோம்
எமக்கு ஜனகன் ஆனவனே –எங்கள் நாதனே –-அஞ்சினோம் என்றாரைக் கொல்லுகை உனக்குப் போருமோ-

——————

தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான்
கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே
பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —-10-2-3-

நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ
இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே
உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –

——————–

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –ஸ்ரீ பிராட்டியை கொடு போங்கோள்-

—————-

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

ராவணன் கையிலே முன்பு தோற்ற ம்ருத்யு வானவன் வந்து ராவணன் தேவர்களை நெருக்கி வரக் கொண்டு
மனுஷ்யர்களை அநாதரித்தான்-அத்தாலே அந்த ம்ருத்யு மானுஷ வேஷத்தை பரிஹரித்து தோன்றி –
அந்த மனிச்சுக்கு ஏகாந்தமான அம்பாலே எங்களை கொல்லுகிற இத்தனை – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ-

——————–

ஓதமாகடலைக் கடந்தேறி யுயர்கொள் மாக்கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடலிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-

அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –
வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் –நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே ஸ்ரீ பிராட்டியை விட்டுக் கொடாதே
இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

———————–

தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை யொழியக் கொலையவனைச்
சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-7-

அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை –
நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் –
குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் –
நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-

—————-

மனம் கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயல் கண்ணினார்கள் இருப்பத்
தனம் கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக வெய்த
அனங்கன் அன்ன திண தோள் எம்மிராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-8-

ஸ்ரீ பிராட்டியை சிறை வைத்த ராவணன் உடைய தப்ப நினைத்த நெஞ்சில் –உறைக்க எய்ய வல்லனாய்
அழகிய வடிவையும் திண்ணிய தோளையும் உடைய ஸ்ரீ பெருமாளுக்கு அஞ்சினோம் –

——————–

புரங்கள் மூன்றுமோர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பில்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெங்கதிரோன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-9-

ஸ்ரீ மகா ராஜர் புருஷகரமாகத் தொழுதோம் – எங்களுக்கு இரங்க வேணும் –
எங்கள் நாயகனே – லோகத்துக்கு அடைய பிரகாசனான ஆதித்யன் மகன் அன்றோ நீர் சர்வ நிர்வாககர் அன்றோ –
நாங்கள் சொல்லச் செய்தே எங்களைக் கொல்லில் உங்களுக்கு அவத்யமாம் – தடம் பொங்கத்தம் பொங்கோ-

——————–

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—10-2-10-

தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே-
இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை –
எல்லாரும் அறியச் சொன்னோம் –

———————–

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-

ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே –
அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு
அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே –
ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் –
பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே –

———————–

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே —10-3-2-

எங்களுக்கு வேறு சிலர் ரஷகர் உண்டு என்று நினைத்து நலிய வேண்டியது இல்லை –

————————-

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3-

நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –
எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –

—————————

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால்
கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே—10-3-4-

தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம் –

———————

வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே —10-3-5-

நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்-
நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே-
எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம் –

——————–

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து
வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா
கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே —10-3-6-

பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் –
பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ –
எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும் –

—————————

மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே —10-3-7-

வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே
ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –
ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும் –

—————————

கவள யானைப் பாய் புரவி தேரோடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே
தவள மாட நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன்
குவளை வண்ணர் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-8-

ஸ்ரீ திரு அயோத்யைக்கு கடவ ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் –ஸ்யாமமான நிறத்தை உடையவர் காண ஆடி கோள்-
ராஜா கூத்துக் காணா நின்றான் என்று உங்களை விடும்படி –

————————–

ஏடு ஒத்து ஏந்தும் நீண் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார் நாங்கள் எய்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை துடரேன்மின்
கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-9-

நாங்கள் உஜ்ஜீவிக்கைக்காக-கச்ச அநுஜா நாமி -என்று விட்டடித்தவர் உடைய
ஆஞ்ஞையை சிரஸா வஹித்துக் கொண்டு போந்தோம் –

———————-

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்றமன்னார் ஆடியுய்ந்த குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே —10-3-10-

ஸ்ரீ மகா ராஜரை நோக்கிச் சொன்ன ஒன்றும் ஒன்றும் -இரண்டு பாசுரங்கள்
வானர முதலிளைக் குறித்து சொன்ன ஐந்து பாசுரங்கள்
பரோபதேச ரூபமான மூன்று பாசுரங்கள் –
இப்பத்தையும் பாடிக் கொண்டாட-உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –
நாவலிட்டு உழி தருகின்றோம் -என்று வேண்டின படி ஆடித் திரியுங்கோள்-

—————–

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற நம்பி – ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே – பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
ஸ்ரீ நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –

——————-

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –
எங்கே புக்கிருந்து உன் பக்கல் நிரபேஷரானார் உடன் – சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –

——————–

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்—10-4-3-

அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா முலை சுரக்கப் பண்ணாமல் மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –

———————–

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய் –

——————–

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே —10-4-5-

இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –
நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-

————————-

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் —10-4-6-

தீமைகள் செய்யா நிற்புதி-கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –
கண்கள் சிவப்பது-மூரி நிமிர்வது-கொட்டாவி கொள்வது -அழுவது -ஆகாதே –

———————

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-

பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும் –

——————–

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் —10-4-8-

தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்–ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது
அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக ஸ்ரீ யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று –

——————-

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே—-10-4-9-

கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –
உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ –

—————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே —10-4-10-

அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –

———————-

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

———————–

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2-

தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –

———————-

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-

பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே ஸ்ரீ தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

——————–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-4-

அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே –

———————

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5-

உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும் –

———————–

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி —10-5-6-

கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் – ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க-வளர்ந்த செருக்கை உடையவனே –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

——————–

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி -10-5-7-

பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –

———————

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

பேய் என்று அவளை புத்தி பண்ணி முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –
உகவாதாரை அழியச் செய்வுதி-உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –

——————-

கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-

பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –

—————

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் –
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

————————

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

உபதேசத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக அற நூல்-வேதம் விஸ்த்ருதமாம் படி பண்ணியவன்
சந்திர சூரியர்களும் பூமியும் திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும் மலைகளும் அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக ஸ்லாக்கியமான மிடற்றை – இவை புகும் அளவும் –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு-அமுது செய்து-ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு-ஒரு பிரதிகிரியை அற்றுப் போக மாட்டாதே -இருக்கிறான் –என்கிறார் முதல் பாசுரத்தில்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன்
-திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

———————-

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2-

அந்த பிரளய காலத்து அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு அமுது செய்தான் –

————————

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3-

ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –

——————-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4-

பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –
ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –

————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே நடத்தினவன் கிடீர் இன்று தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி யுண்கிறான் –

————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

சஹஸ்ர பாஹ் வர்ஜுனனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும் அழகுக்குப் பிடித்த மழுவாலே
துணித்துப் பொகட்டவன் கிடீர் –இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –

————————–

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-

நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

———————-

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-

அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –

————————–

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9-

ஸ்ரீ மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக மராமரங்கள் ஏழையும் எய்து – மலை போலே இருக்கிற வடிவை
உடையளாய் இருக்கச் செய்தேயும் ஸ்ரீ பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –

————————-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –

————————–

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

நான் சொல்லிற்று செய்தல்-தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல் செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன் தமப்பனாரும் அருளிச் செய்திலர் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே – நான் இனிச் செய்வது என் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே -காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –

————————-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

————————

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ —10-7-3-

இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை – வெண்ணெயே அன்றிக்கே –இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில் நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என் என்று அன்றோ அஞ்சுகிறது நான் –

————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

கண்ணி வைப்பாரைப் போலே கடைகிற போதே துடங்கி இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று –
கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணர்கள்-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே தவழா நிற்கும் – நிரபேஷனான இவன்-
இவனாக இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவர்கள் கீழே எங்கனே நான் இவ்வூரில் குடி இருக்கும் படி –

————————

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5-

பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம் பார்த்துக் கொடு திரியும் –
அவர்களோடு சென்று கிட்டி பந்தைப் பறித்தும் பரியட்டங்களைக் கிழித்தும் –பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

————————

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-

தாமரை போலே இருக்கிற அதரமானது வெளுத்து இருக்க –இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –

———————

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

அத்தை அடங்கலும் கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்-அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –

————————-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே—10-7-8-

இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –

———————–

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே —10-7-9-

அத்யந்த சைசவத்தை உடையவன் – இவன் செய்யும் செயல்கள் அடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –
ஸ்ரீ திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச் சாடித் துகளாக்கின பின்பு இவனைப் பொடிய அஞ்சுவன் –

———————

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ —10-7-10-

எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –என் கையில் பலமில்லை -என்னவுமாம் –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –

————————

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11-

தாமரைப் பொய்கையிலே சென்று ஒளிந்து இருந்து – அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –
வேணுமாகில் இங்கனே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்- என்று இருந்தாய் –

——————-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12-

ஸ்ரீ திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி வந்தாய் போலே இருந்தது –

——————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

உபரிதன லோகங்கள் அதிரும்படியான த்வனியை உடைத்தாய் அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –
வ்ருஷபங்களோடு கூட நித்ய வசந்தமான சோலைக்குள்ளே பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள் –

———————

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14-

இத்திரு மொழியை வல்லவர்களுக்கு ஸ்ரீ யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

———————–

காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ -10-8-1-

காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே –
இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி –
இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ –
கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே
கிட்டி வர மாட்டுகிறிலன்-
ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ –
காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது –

———————-

துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ —10-8-2-

பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ –
கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ –

——————–

கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ—10-8-3-

நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார்
அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ –

————————

நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4-

அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ –
பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ –
கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ –

———————–

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ —10-8-5-

மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ –
பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ –

———————-

ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-

வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது –பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ –
இடம் அறிந்து அன்றோ வருவது –

———————–

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-

உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ
உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் –
உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –

——————–

புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-

உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் –
இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் –
மேன்மை உடையார் வரக் கடவதோ –

———————

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-

வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ
நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்-
இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து
அதுக்கு முன்பே காலைப் பிடித்தான்
காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என் –

——————–

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–10-8-10-

அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும்
ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே
இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை –

—————————–

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே -10-9-1-

கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ –
என்று கொண்டு இருக்கிறாயோ –

———————

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே —10-9-2-

ஒருவர் இருவர் அன்றிக்கே ஊராக அனுபவிக்கும் படி குருகுல வாஸம் பண்ணினார்க்கும்
ஆட ஒண்ணாத கூத்துக்களை அன்றோ நாம் உபகரித்தது
ஆனபின்பு நமக்கு இது ஒன்றும் பழி யாகப் புகுகிறதோ -என்று இருக்கிறாயோ –
ஊருக்காக உபகரித்த படி சொல்லிற்று -முன் –இனி ஒருத்திக்காக உபகரித்த படி சொல்லுகிறது-

——————

ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-

பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் –

——————–

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கரதலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-

உன்னுடைய வடிவு அழகை ஒரு கால் காட்டிக் கொண்டு போகிறிலை
பாவன பிரகர்ஷத்தாலே -உருவு வெளிப்பாட்டாய் முன்னே நின்று போகிறிலை-
பரக்கச் சொல்வதால் என்ன கார்யம் உண்டு –
சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே-வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி
உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –

———————-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5-

மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை –
இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் –
பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே
அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும் –

———————–

அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை
செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே —10-9-6-

ஒரு கால் வடிவு அழகைக் காட்டிப் போகிறிலை -என்னுதல்-உருவு வெளிப்பாட்டாலே முன்னே நின்று போகிறிலை -என்னுதல் –
எந்தை பிரானே-தன்னடையே பழுத்து நெகிழ்ந்து விழுகிறத்தை எறி மழுவைக் கொண்டு வியாபாரிக்க வேணுமோ –

———————

ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ
மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா–10-9-7-

இவளுடைய –முன்னே உன்னுடைய வடிவை ஒரு கால் காட்டி போகிறிலை –
தன்னடையே உடைந்து போகிற இத்தை தடியை இட்டுத் தகர்க்க வேணுமோ –

—————-

பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று
பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

இவள் உடைய வைலஷண்யம் ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –
வாயில் பொகட்டின நீர் இழிச்சவும் கொப்பளிக்கவுமாய் இருக்கும்
அவ்வோபாதியாக நினையா நின்றாய் -இவளையும் –

—————————

நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை தானோ
பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே —10-9-9-

இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே-
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –

——————-

வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே —10-9-10-

தான் ஓன்று கண்டு சொல்லுகை அன்றிக்கே-முன்பு உள்ளார் சொன்ன பாசுரத்தை யாயிற்று சொல்லிற்று –
யன் மங்களம் ஸூ பர்ணச்ய வினதாகல்ப யத்புரா அம்ருதம் ப்ரார்த்தயா நஸ- -பரம பக்தி இருந்த படியை சொன்ன படி –
அதுக்கு அநந்தரம் உண்டாம் கைங்கர்ய லஷ்மியைப் பெற்று விஸ்த்ருதமாம் –

——————

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள் தன் கணவன்
மருத்தார் தொல் புகழ் மாதவனை வரத்
திருத்தாய் செம்போத்தே –10-10-1-

திருத்தாய் செம்போத்தே-போத்துத் திருத்துகை யாவது -அநு கூலிக்கை –
என்றும் ஒக்க இவற்றின் உடைய ரஷணமே பண்ணிப் போருகையாலே வந்த குணவத்தா ப்ரதையை உடையவன் –
ஸ்ரீ லஷ்மீ பதி என்கை அன்றிக்கே இது தானே தனக்குப் பேராய் இருக்கை –
ஒரு கால் சொன்னால் ஆதரம் மட்டம் என்று இருக்கிறதாய் கொண்டு இருகால் மாட்டுச் சொல்கிறாள் –

————-

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

சப்த பூர்த்தியை உடைத்தாய்-நித்யமான புகழை உடையவனாய் இருக்கிறவனை –ஸ்ரீ ராமாயணத்துக்கு
பிரதிபாத்யனாய் இருக்குமவனை –ரஷிக்கையால் வந்த புகழை உடையவனை –
ஸ்ரீ பிராட்டிக்காக தன் மார்விலே அம்பேற்ற தீரோதாத்த நாயகனை –வரக் கூவாய் –

——————

கூவாய் பூங்குயிலே
குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே —10-10-3-

விரோதியைப் போக்கிற்றிலனே யாகிலும் விட ஒண்ணாத படி யாயிற்று வடிவு அழகு –
வரக் கூவாய் பூங்குயிலே –

——————-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

ஒரு ஊரில் மன்று பாழ் தீரும்படியாக குடக் கூத்தாடினான் –
ஒரு லோகத்தில் பாழ் தீரும்படியாகவும் ஒரு கூத்தாடினான் ஆயிற்று –
தேன் மாறாத பூ மலரை உடைத்தான திருக் குழலை உடையவனை –
பரம பிரணயிநி ஆனவனை – வரக் கொட்டாய் பல்லிக் குட்டி –

——————–

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5-

ஆயுதம் தானும் மிகையாம்படி யான திண்ணிய தோளை உடையவன் –
வட வேங்கடவனை வரச் –ரஷணத்துக்கு உறுப்பாக முதலடி இட்டுக் கொண்டு நிற்கிறவனை –
சொல்லாய் பைங்கிளியே –

—————-

கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால் –10-10-6-

தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து-
கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் –
என் செய்கேன் -என்கிறாள் –

——————-

காமற்கு என் கடவேன்
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்யக்
காமற்கு என் கடவேன் —10-10-7-

இதர விஷயத்துக்கு இறே அவன் பிரேரகன்-இவ்விஷயத்துக்கு அவன் பிரேரிக்க வேண்டா –
அவன் வடிவு தானே இறே ப்ரேரகம்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்னக் கடவது இறே-

———————–

இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ —10-10-8-

ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப –
தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் –
இங்கே போதுங்கொலோ –

———————

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-

தேவத்வ ஸூசகமான ஸ்ரீ திரு ஆழியையும்-மனுஷ்யத்வைகாந்தமாய் ஸ்ப்ருஹநீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய –
ஸ்ரீ ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –

———————

தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ -10-10-10-

பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது-இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: