ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -ஒன்பதாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-பிரவேசம் –

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -என்று பாடின கவி தன்னை
நீரே மதிக்கும் படி கவி பாட வல்லீருமாய் இருந்தீர் –
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -என்கிறபடியே
எங்கும் புக்கு அனுபவிக்க வேணும் எண்ணம் அபிநிவேசம் உண்டாய் இருந்தது –
இங்கு இருக்கும் நாள் தானே-வழு விலா யடிமை செய்ய வேண்டும் -என்று நீர் மநோ ரதித்த படியே
கவி பாடி அடிமை செய்கின்றீர்
பின்பு இத் தேக அவசானத்திலே அவ்வருகே கொடு போய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று நீர் பேசும் பேச்சு தன்னையும் அங்கே கேட்கிறோம்
ஆனபின்பு உமக்கு ஓர் இடத்திலும் ஒரு குறைகளும் இல்லை
நாம் உகந்த நிலங்கள் எங்கும் புக்கு கவி பாடும் -என்று
தான் ஸ்ரீ திருக் கண்ணங்குடியில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க
கண்டு
வெள்ள நீர் வெள்ளத் தணைந்த வரவணை மேல் -என்கிறபடியே
நம்முடைய ரஷணத்திலே உத்யுக்தராய்க் கொண்டு
ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவன் தானே
இங்கே ஸ்ரீதிருக் கண்ணங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அங்கே கவி பாடி அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் –

——————–

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-பிரவேசம் –

மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன் -என்று
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்தார்-கீழ்த் திரு மொழியில் –
இங்கே அவனோடு நினைத்த பரிமாற்றம் எல்லாம் பரிமாறலாம் என்று ஸ்ரீ திரு நாகையிலே போய்ப் புக்கார் –
அங்கு நிற்கிறவனுடைய
பருவத்தையும்
மேன்மையையும்
வடிவு அழகையும்
ஒப்பனையும் -கண்டார் –
அவன் பக்கலிலே கிட்டி எல்லா அடிமை செய்ய வேண்டும் என்னும் ஒரு வார்த்தை அருளச் செய்ய கண்டிலர் –
விஷயம் சந்நிஹிதமாய் இருக்க நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே அவசந்னராய்
அவ்வழகு தான் உருவு வெளிப்பாடாக நலிய
அத்தாலே நலிவு பட்டு
கலந்தவன் பேர நின்ற அநந்தரம்-அவன் அழகு மறக்க ஒண்ணாத படி உருவ வெளிப்பாட்டாலே நலிய
நோவு படா நின்றேன் காண்-என்று தோழிக்கு சொல்லுகிறாள்
ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே தாம் மநோ ரதித்த கைங்கர்யம் பெறாதே இருந்து
நோவு படுகிற படியைச் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

———————————————————————–

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-பிரவேசம் –

ஸ்ரீ நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து அந்த பிரிவோடு அவன் வர அபேஷிதமாய் இருக்க
அவன் வரக் காணாமையாலே ஆற்றாமை கரை புரண்டு நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி –
இனி அவன் தான் மேல் விழுந்து கலக்கக் கடவன் என்று முறை பார்த்து இருந்துண்டது அமையும் –
இனி ஸ்வ லாபத்துக்கு நாமே யாகிலும் பிரவர்த்திப்போம் என்று கொண்டு
தன்னுடைய ஸ்திரீ த்வபிரயுக்தமான நாண் மடம் அச்சம் தொடக்கமான வற்றை பொகட்டு
நம் ஸ்வ ரூபத்தையும் அழித்து
அவன் தனக்கும் ஸ்வ ரூப ஹானியை பண்ணி யாகிலும் முகத்தே விழிப்போம் என்று கொண்டு
அவன் இருந்த இடத்தே ஏறப் போக-ஒருப்பட்ட இத்தை கண்ட தோழி யானவள்
இது உன் தலைமைக்குப் போராது காண்-என்று ஹிதம் சொல்ல
அவளையும் அவளுக்கு முன்னே பிற்காலிக்கிற நெஞ்சையும் பார்த்து
பின்னையும் மீண்டு நின்று அங்கே போக ஒருப்பட்ட படியை நெஞ்சோடும் –
அந்த நெஞ்சு உதவாத போதும் உதவி கார்யம் செய்யும் தோழி யோடுமாக கூட்டுகிறாள் –

இவள் தான் புறப்பட்டு போகை யாகிறது அதி சாஹாசம் இறே
பிராண ரஷணம் ஒரு தலை யானால் மரியாதைகளை பார்த்து இருக்கலாம் படி இராது இறே
ஸ்வ ரூபம் நோக்குகைகாக இங்கேயே இருந்து நோவு படுமதில் காட்டிலும்-அங்கே போவது ஸ்வ ரூப ஹானியே யாகிலும்
பின்னையும் விழுக்காட்டிலே ஸ்வ ரூபத்தோடு சேர்ந்து தலைக் கட்டும்
ஆனபின்பு அங்கே போய் அனுபவிப்போம் என்று அத்யவசிக்கிறாள் –
அவன் இத்தலையில் பருவம் அறிந்திலன் ஆகிலும்-தன் வை லஷண்யம் அறிந்து இருக்குமே –

———————–

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1- பிரவேசம் –

ஸ்ரீ திருப் புல்லாணி ஏறப் போக வேணும் என்று கொண்டு உத்யோகித்து – கால் நடை தாராமல் தளர்ந்து
உண்ணப் புக்கவன் சோற்றிலே தோஷ தர்சனம் பண்ணினால்
எல்லாம் உண்டு சமைந்தோம் -என்னுமா போலே தொடங்கினது எல்லாம் அழகிதாக தலைக் கட்டினோம் என்று
கண்ணால் கண்ட பஷிகளைத் தூது விடுவது
முன்புள்ளார் நோவுபட உதவினபடி சொல்லுவது
பந்துக்கள் ஹித வசனம் கேளாத படியான தசையைச் சொல்லுவதாய் தலைக் கட்டுகிறார் –

————————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1- பிரவேசம் –

அஹம் அஸ்ய அபராத ஆலய –
ஆத்மாவுக்கு ஞாந ஆனந்தாதிகள் நிரூபகமாய் இருக்கை தவிர்ந்து
அபராதங்களை இட்டு நிரூபிக்கும்படி யாயிற்று துருப்பற்றுக் கிடந்த படி –
ஜ்ஞாதாஹம் பகவத் சேஷதைக ரசோஹம்-என்று இறே
ஆகை இறே ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று ஸ்வரூபாபத்தி மோஷமாக சொல்லுகிறது –
இத்தால் இவனுக்கு பிரகிருதி சம்பந்தம் வந்தேறி என்னும் இடம் சொல்லுகிறது
ரத்நாதிகளை சாணையிலே ஏறிட்ட வாறே புகர் பெறா நின்றது-வந்தேறி யாகி இறே அழுக்கு கழிகிறது
அசித் சம்சர்க்கம் அநாதியாய் இருக்கச் செய்தே அந்தவத்தாகாவும் குறை வற்று இருந்தது
அகிஞ்சன –
இப்படி அபராதங்களுக்கு கொள்கலம் ஆகா நின்றேன் என்கிற அனுதாபம் இன்றிக்கே இருக்கை –
அநந்ய கதி –
இப்படி ஒரு கை முதலும் இல்லாத பின்பு
இவன் தய நீயன் என்று இரங்கி கைக் கொள்ளுகைக்கு தேவரை ஒழிய வேறு ஒருவர் இல்லை –
புகு வாசல் அற்ற படி –
த்வமேவ உபாய பூதோ மே பவ –
ஆராய்ந்து பார்த்த இடத்தே நானும் எனக்கு இன்றிக்கே இருந்து
பிறரும் எனக்கு இன்றிக்கே இருந்த பின்பு
நீ ஒருவனே உபாயமாக வேணும் –
இது பிரார்தனா மதி –
இது புருஷார்த்தமாக தலைக் கட்டுகைக்கு இந்த புத்தி விசேஷமே வேண்டுவது
ஆத்மா சத்தையோ பாதி இறே ஸ்வீகாரமும் –

மாம் –
என்னை -ஏகம் என்றால் போலே இருக்கிறது
சரணா கதிரித்யுக்தா –
இது சரணா கதி என்று சொல்லப் பட்டது
சா
அந்த சரணா கதி யானது
தேவேசமின் பிரயுஜ்யதாம்
சரண்யனான சர்வேஸ்வரன் பக்கலிலே இது செய்ய அடுப்பது
ஒரோ வ்யக்திகளிலும் இது தானே ஹனன ஹேதுவாகா நின்றது இறே
நீர்மையாலே ரஷிப்பாரும் உண்டோ-

கீழே சில பஷிகளை தூது விட்டு -நெஞ்சை தூது விட்டு –
அவை மீண்டு வருவதற்கு முன்பே பாதக பதார்த்தங்கள் கையிலே நலிவு பட்டு
தாய்மார் தோழிமார் அடைய ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க
உங்கள் உடைய ஹித வசனம் கேட்டு மீளாத படி நெஞ்சு அவன் பின்னே போயிற்று
அது வரும் அளவும் அவன் சொன்ன வார்த்தையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை என்று துணிந்த இடத்திலும்
அவன் வரக் கண்டிலள்
இவ்விடம் ஒருத்தி உடைய ஆற்றாமையை பரிஹரிக்கைக்காக வந்த இடம் ஆகையால் அங்கு ஆறி இருக்க்கவுமாம் –
இது அங்கன் அன்றிக்கே
நம்முடைய துக்க நிவ்ருதிக்காக வந்து இருக்கிற தேசம் இறே
ஆன பின்பு ஸ்ரீ திருக் குறுங்குடியிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள்-கால் நடை தருவார் -என்கிறாள் –

———————–

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-பிரவேசம் –

கால் நடை தாராதே இருக்கிற என்னை கால்நடை தருவார்-அவன் இருந்த தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் -என்றார் –
திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட ஸ்ரீபேரருளாளர் -என்று
ஸ்ரீ பிராட்டி சந்நிதியும் உண்டாகவும் அனுசந்தித்தார் –
தமக்கு புருஷகாரம் ஆவார் அங்கே உண்டு -என்று அனுசந்தித்தவாறே தமக்கு
கால்நடை தரும் அளவாய் வந்து விழுந்தது –
அத்தாலே –
அங்கு நிற்கிறவன் தான் சால சீலாவானாய்
நாம் தான் வருவது எப்போதோ -என்று -தாம் முற்பாடனாய்-
நம் அவசரம் பார்த்து நிற்பான் ஒருவன் –
அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் போருங்கோள் என்று கூட்டிக் கொண்டு தாமே போகப் பார்க்கிறார் –

—————-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-பிரவேசம் –

வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் -என்று
பர உபதேசத்துக்கு உறுப்பாக இதர விஷயங்களின் தண்மையை அனுசந்தித்தார் –
அது தம் அளவிலேயாயிற்று –
பிறருக்கு உபதேசிக்கைக்கு நாம் தாம் இதில் நின்ற நிலை என்ன என்று தம்மைப் பார்த்தார் –
இன்னமும் சம்சார வாசனை கழிந்தது இல்லை –
இழக்கைக்கு ஹேதுவான சரீர சம்பந்தம் இன்னமும் அனுவர்த்தியா நின்றது –
போக்யமான விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஆன பின்பு நாம் இன்னமும் இதில் நின்றும் அழகிதாக கால் வாங்கினமை போராது-
நாம் இதில் நின்றும் மீண்ட அளவு பார்த்து
நம் பேற்றுக்கு தாம் முற்பாடனாய் கொண்டு
மஹாபலியினுடைய யஞ்ஞா வாடத்திலே தம் உடைமை பெறுவதற்கு அர்தித்வம் எல்லாம் தோற்றி நின்றாப் போலே
ஸ்ரீ திரு வல்ல வாழிலே வந்து நின்றான் ஆயிற்று –
சம்சார வாசனை கழிந்தது இல்லை –
தேஹம் அஸ்திரமாய் இரா நின்றது –
விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஐஸ்வர் யாதிகள் நிலை நில்லாதாய் இரா நின்றன –
இவை இத்தனையும் தப்பி –-அவ்வருகு பட்டால் – பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற விலக்கடிகள் தப்புகை
சாலப் பணி யுண்டாய் இரா நின்றது –
இவை இப்படி தண்ணிய வென்று புத்தி பண்ணி இருந்தாய் ஆகில்
அவன் நித்ய வாஸம் செய்து அருளும் ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லுவதாக
நெஞ்சாலே மருவப் பார் -என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

———————–

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1- பிரவேசம் –

ஸ்ரீ திரு வல்ல வாழைச் சேரப் பாராய் -என்றார் தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
அது தம்முடைய த்வரைக்கு ஈடாக ப்ரவர்த்திதது இல்லை –
சர்வ ரஷகனாய் அர்த்தித்தார் உடைய சர்வ பலங்களையும் கொடுக்க கடவனாய்
சர்வாதிகனாய்
விரோதி நிரசன சீலனாய்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையனாய் –
சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் –
நாம் அங்கே போய் அனுபவிப்போம் –
அதிலே ஒருப்படு-என்று
பிதாவானவன் முந்துற நமஸ்கரித்துக் காட்டி
பின்னை
காட்சியிலே முற்பட்டு
தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

—————————-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-பிரவேசம் —

இவ்விருப்பைத் தவிர்த்து பரம பதத்தைத் தர வேணும் என்று அபேஷித்தார்-
அப்போதே அது பெறாமையாலே -இத்தைத் தவிர்த்து அத்தை தருகைக்காக வந்து நிற்கிற
இங்கே ஆஸ்ரயித்து நாம் அபேஷிதம் பெறாது ஒழிவோமோ என்று அவசந்னராய்
அந்த அவசாத அதிசயத்தாலே தாமான தன்மை அழிந்து
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தராய்
அப்பிராட்டி தான் தம் தசையைத் தான் பேச மாட்டாதே கிடக்க
அவள் படியைப் பேசுகிற திருத் தாயார் தசையை ப்ராப்தராய் –
அவள் தன் மகள் தசையை அனுசந்தித்து
இவள் ஆற்றாமை இருந்த படியால் அவனோடு அணைந்து அல்லது தரிக்க மாட்டாள் போலே போலே இருந்தது –
அணைத்து விட வல்லளே
அன்றிக்கே இங்கனே நோவு படும் இத்தனையோ -என்று
பின்னையும் தானே அவனைக் கிட்டியே விடும் என்று
அறுதி இட்டு தரிக்கிறாளாய் இருக்கிறது –

——————–

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-பிரவேசம் –

சர்வ அபேஷித பிரதானனாய்க் கொண்டு ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற நிலையை அனுசந்தித்தார் -கீழ் –
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுசந்திக்கிறார் –
அவன் பண்டு -பெற்ற தமப்பன் பகையாக ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு உதவி
அவன் விரோதியைப் போக்கி
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளந்த கையோடே நிற்கிற தேசம் என்றும் –
அவன் தானே அநேகம் அவதாரங்களைப் பண்ணி ஆஸ்ரிதர்க்கு உதவினவன் என்றும் நினைத்து
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து-ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிறவனுடைய சௌலப்யத்தை அனுசந்தித்து ப்ரீதராய் அனுபவிக்கிறார் –
ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு -மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னலாம்படி ஹிருதயத்தை விடாதே இருந்து
பிரசாதத்தைப் பண்ணுமவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: