ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-ஒன்பதாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-

ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று
இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற –
ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே –

———————————————————————–

கவளமாக தத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-2-

ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற –
சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே
துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன் –

——————-

வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-

எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –

—————-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி யொளிவளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் –
பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –

——————-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப்பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-5-

பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –

——————–

மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-6-

மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன் –

————————–

வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை யார் கோனைப்
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே—9-1-7-

இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே
வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் –
மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று –

——————–

அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட வதற்குப்
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரை கொணர்ந்துந்தி வயல்தொரும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-8-

சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை
ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு
அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ
திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன் –

———————–

பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-9-

விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன் –

—————-

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10-

ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை –
ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார் –

—————————-

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-

மர்மங்களிலே கடாஷியா நின்றார் பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –
நீ பின்னை செய்தது என் என்ன –இப்பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று அஞ்சுகின்றேன் –
அவன் பார்வையும் அவள் பார்வையும் ஆனதாகிறது – அப்போதை அழகு இருந்த படி காண் –

————————

தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-2-

ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் –
ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே –
இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை –

——————-

வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-3-

ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான –
ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார்
கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –
ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ-

————————-

வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிது மிளையர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா—9-2-4-

இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது –
தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் –
இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது –
உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ

———————-

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழி யம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழி யொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-5-

இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது –
பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் –
இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது –

——————

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-

கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் –
வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது –

————————

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலே யும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-7-

வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட
மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம்
என் சொன்னோம் ஆனோம் –

————————-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-8-

என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் –
ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ –

—————–

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர் ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா —-9-2-9-

திரு முகத்திலே விழித்த வாறே-ஆபத் சகர் என்று தோற்றும்படி இரா நின்றார் –

——————–

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –ஸ்ரீ திரு நாகையிலே தன் அழகாலே
விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –
தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்-உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள்
எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்-பல ஸ்ருதி ஒன்றும்
இத்தை அப்யசிக்க வல்லார்கள் இங்கும் கோலின பலங்களும் பெற்று இது தன்னின் பலமான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாய் இனியராகப் பெறுவார்கள் –

———————-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-

ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது
பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே
அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ
நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று –
இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க
ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும்
அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க
நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே
அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் –

———————–

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —-9-3-2-

அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை-
அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது –
அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே –
பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை –

—————————–

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே மறக்க ஒண்ணாது -என்கிறது –

—————————

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —-9-3-4-

அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே –
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –
பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –

————————

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே —9-3-5-

கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது –
மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது
உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை
நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை –

———————–

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே —9-3-6-

அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –
வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் –
மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன்
மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் –
எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன் –

—————-

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே —-9-3-7-

அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –
அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே

————————

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே —9-3-8-

நிர பேஷரான இவர் ஓர் அபலை இறே -என்று பாராதே
நமக்கு ஸ்நேஹிப்பாரைப் போலே சலத்தைப் பண்ணினார் ஆயிற்று –

———————

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே —-9-3-9-

செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம்
புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –

———————-

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் –
ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –
அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே
இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர
அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார் –

———————

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1-

பிரிந்த நிலத்தில் இருக்க ஒண்ணாது ஒழிவது
போகத் தொடங்கின தேசத்திலே போய்ப் புக ஒண்ணாது ஒழிவது
நம் தசை இருந்த படி -என் -என்கிறாள் –

—————–

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

நோவு படுகை நமக்கே ஸ்வ பாவமாய் விட்டது என்று ஒரு வார்த்தை சொல்லி பின்பு பேசாதே இருக்கும் பிரகிருதி அன்றே –
தான் இருக்கிற இடத்தே வர்த்திக்கிற சில பஷிகளை தூது விடுகிறாளாயிற்று
சுலபன் அல்லாதவனை ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ
அது தான் பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே என் தசையை அறிவுயுங்கள் -என்கிறாள் –

———————

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே–9-4-3-

கீழே என்னுடைய உடம்பில் நோவை அறிவியுங்கோள் என்றாள்
இங்கு என்னுடைய சிந்தா வ்யதையை அறிவியுங்கோள் -என்கிறாள் –

———————

பரிய விரணியதாக மணி யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே —9-4-4-

ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த
வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –

———————–

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே —-9-4-5-

இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே அவன் வார்த்தை கேட்டாய் இறே-
நாங்கள் சொன்னதுவே மெய்யாய்-அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே –
இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன
அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள் –

——————–

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே —9-4-6-

நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்-நலிவார் பெருத்திரா நின்றது
அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்-இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள் –

———————-

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே —9-4-7-

சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும்
தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் –
அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே –
வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று
இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று –

——————–

தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே —9-4-8-

பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட
நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண் –

———————

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே —-9-4-9-

ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன்
அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –
சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே
நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே-

————————

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே —9-4-10-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து
அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்

————————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1-

ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு பெறாதே இருக்கிற நமக்கு நாட்டுப் பகையாக விட்டதே-

—————–

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-

நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள்
இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள் –

—————–

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான
ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –

—————–

கரு மணி பூண்டு வெண்ணாகணைந்து காரி இமில் ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்—9-5-4-

அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –
அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே
ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது –

———————

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-

முன்பு சொன்னவை போல் அன்றிக்கே தனித் தனியே இவை முடித்து விடுமா போலே இரா நின்றது –
தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி -என்னச் செய்தே பின்னையும் ஜீவித்து இருந்தோம் இறே –
இவை நம்மை வைப்பன வன்றிக்கே இரா நின்றன –

——————-

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் –
கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –

————————

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-

பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று –
வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று –
இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார்
அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள் –

——————–

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்—9-5-8-

பந்துக்களை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை இறே –
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்கலாம் படி அன்று -இங்கு ஓடுகிற தசை
இனி அங்கே போய்ப் புக்காலும் அவன் தன்னாலே பேறாம் படி எனக்கு பிரயோஜனம் உள்ளது –
அதில் அவன் கருத்து அறிந்த படியையும் அறிந்து கார்யம் செய்யப் பாருங்கோள் –
உனக்கு க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க ஒண்ணாமைக்கு இப்போது வந்தது என -என்ன –

————————–

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-9-

கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே –

—————————

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —9-5-10-

அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் –
இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே –

————————-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே —9-6-1-

ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன்
அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –
ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார் –

———————

துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே—-9-6-2-

ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே
ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன்
எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி என்கிறார் –
கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம் –

———————-

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே -9-6-3-

மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து
முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

———————

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே -9-6-4-

தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும்
தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே –

——————–

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே–9-6-5-

பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் –
முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு –

———————–

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே —9-6-6-

சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள்
அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –

———————

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே —9-6-7-

ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து
அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்-

—————-

நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8-

நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன்
இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள் –

———————-

நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-

செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –

————————

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே —9-6-10-

உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை
அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்

———————

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்- சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய் கார்ய மத்யே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லும்படியாக
நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

——————-

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-2-

பாண்டவர்களுக்காக பண்டு தன்னை தாழ விட்டு தூது போன மேன்மையை உடையவர் –
நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை —

———————-

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

மகா பலியுடைய யாகத்திலே சென்று தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையவர் –தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

——————-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு ஸ்ரீ பரமபதத்திலே இருக்கிறவர்
அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையிலே வர்த்திக்கிறவர் –
தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் – வர்த்திக்கிற –ஸ்ரீ திரு வல்ல வாழை –
அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி –

——————-

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கை மேலங்கை வாய் வைத்து அவள் நாளையுண்ட
மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-5-

நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே அழகிய கையையும் வாயையும் வைத்து
அவளுடைய ஆயுஸையும் முடித்த -மைந்தனார்
விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –

———————

உருவினார் பிறவி சேரூன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய்செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும்
மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-6-

ப்ராஹ்மண லஷணங்களால் குறைவற்று இருக்கிற-நாலு வகைப் பட்ட வேதம்-பஞ்சாக்னிகள் பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள் ஆறு இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –

———————-

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற
மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7-

நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய்
அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் –
மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை –

————————-

மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-8-

பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும்
ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் –
வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது –

—————-

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-

கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே
பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள்
தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் –
இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது

———————-

மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10-

இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய்
தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே
நிரதிசய ஆநந்த யுக்தராவார் –

————————–

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-

பிராப்த விஷயத்தை வணங்கிலும் வணங்குகிறாய் தவிரிலும் தவிருகிராய் –
இதர விஷயங்களை முந்துற முன்னம் விட்டுக் கொடு நிற்கப் பாராய் -என்கிறார் –

————————

இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-2-

ஸ்ரீ நித்ய சூரிகளும் அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு
ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய ப்ரதானர் வர்த்திக்கிற தேசம் –

————————–

பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-3-

அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன் பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம் –

——————–

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4-

ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று
அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று விரும்பி -வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –

—————-

வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5-

சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த
ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம் –

—————-

விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-6-

ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி – அங்கு நின்றும் போந்து அவதரித்து
விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி
கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்ரீ சுவாமி வர்த்திக்கிற தேசம் –

—————–

தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7-

ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்

————————-

புதமிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில்
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8-

ஸ்ரீ திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –அங்கு நின்றும் போந்து – அவதரித்து
பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய
மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் –

—————————

புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9-

என் குல நாதனாய் அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர்
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம் –

——————–

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே –9-8-10-

ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள்
இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார் –

——————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ –

———————

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2-

மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள
திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ –

————————————————-

உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-

ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை –
அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ –

————————

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே —9-9-4-

சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் –
நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ –

—————————-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-

ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் –
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய
இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –

——————–

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –
அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ –

————————-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -9-9-7-

விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று –
தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே –
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை –
அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற
இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ-

————————

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே —9-9-8-

ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி
தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –
தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ –

——————–

வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே —9-9-9-

ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து
கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை –
அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும்
முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய
ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள்
அவனைக் கிட்டிவிட வல்லளேயோ –

———————-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே–9-9-10-

பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை –

———————

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-

தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –
கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த –
அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன் –

———————–

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2-

நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக பிராட்டிமாரோடே கூட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

———————

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

அவ்வோ யுகங்கள் தோறும் ஆஸ்ரயிப்பார் உகந்த திரு நிறத்தை தானும் உகந்து கொண்டு
பிரளய ஆபத்துக்களிலும் உதவும் ஸ்வ பாவனானவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் – என்கிறார்

—————–

ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே —9-10-4-

ஸ்ரீ பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும் திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

————————

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே –9-10-5-

பண்டு பூமியை அளந்து கொண்டவன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

——————

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே —9-10-6-

ராவணன் மிடுக்கை அழித்த ஸ்ரீ தசராத்மாஜன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்றாயும் விளாவாயும் வந்த அசூரர்களால் வரும் நலிவைப் போக்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பண்ணின
மகா அபதானத்தை உடையவன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————————-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே—9-10-8-

குருந்து தொடக்கமான விரோதி வர்க்கத்தைப் போக்கின ஸ்ரீ கிருஷ்ணன் -இப்போது
ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————–

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே —9-10-9-

தான் தன்னை சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கைக்கு ஈடான பக்தியை உடையராய் -ப்ரஹ்மாவோடு சமாநரான-
ப்ராஹ்மணருக்கு ஆஸ்ரயநீயனாய் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –

—————–

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே —9-10-10-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார் –

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: