ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-ஆறாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

அர்த்தித்து நின்று பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே அண்டங்கள் உடன் கூட பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே
நான் இதர விஷயங்களில் பிரவணனாய் உன் பக்கலிலே வைமுக்ய்யம் பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும்
இவ்வளவும் வர என் சத்தை அழியாமல் நோக்கிக் கொண்டு போந்தவனே –
அநாதி காலம் சத்தையை நோக்கி கொடு போந்ததின் பலம் நீயே பெற வேண்டி இருந்தாய் ஆகில்
என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –
இன்னும் இவனுக்கு சம்சார வாசனை கழிந்தது இல்லை என்று இருக்க வேண்டா
எனக்கு லோக யாத்ரையில் ருசி இல்லாமையைத் திரு வுள்ளம் பற்ற வேண்டும் –

————————

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-2-

ஒரு கால் சொன்னத்தை ஒன்பதின் கால் சொல்லுகிறார் -பகவத் விஷய ருசியையும்
தம்முடைய இந்த சம்சார அருசியை ஸ்திரம் என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தே படுத்துகைக்காக –

————————

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

அம்புக்கு கூர்மையாய் போய்ப் புக்கு பிரதி பஷத்தை அழியச் செய்து
அந்த விஷய அபதானத்தை அவன் செய்தான் -என்று விருது ஊதித் திரியும்படி பண்ணிணவனே –
ஓர் அபதானம் பண்ணினேன் என்று விருது ஊதித் திரியும்படி பண்ண வேண்டா
ஸ்வரூப விரோதியைக் கழித்து ஸ்வரூப அனுரூபமான பேற்றை பண்ணித் தர வேணும் –

————————

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-4-

என் பக்கல் அகடிதகடங்களை கடிப்பிக்க வேண்டா -உன்னைக் காண்பதொரு வகை அருள வமையும் –
என் தலையால் வரும் அம்சத்தில் கண் அழிவு இல்லை –

——————–

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-5-

வாச்யங்களுக்கு எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி சொல்லிற்று
வாசக ஜாதத்துக்கு எல்லாம் பிரதானமாய் இருக்கிற அகார சப்த வாச்யன் ஆனவனே –

—————-

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-6-

நீ ஜகதாரரானாய் சர்வாதிகனாய் இருப்புதி என்று பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான் சாஷாத் கரிக்கும் படி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி
யருளிவுதி யாகில் –
நானும் மெய்யே இத்தை அருவருத்தேன் –

————–

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே—-6-1-7-

பிரணவம் பர ஸ்வரூபத்தை ஒன்றையும் சொல்லுகிறதோ-ஆத்மவஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லுகிறதோ -என்றால்
இரண்டையும் சொல்லா நின்றது இறே
ஆத்மா நம் யுஞ்ஜீத -என்றும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும்
பிராமணருக்கு தனமான வேதத்தில் இன்னிசை உண்டு ஸ்வர ரூபமான பிரவணம் –
அத்தால் பிரதிபாத்யனாய் உள்ளவனே –

——————–

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே—6-1-8-

வைத்த வளையமும் நீயுமாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னுடைய இதர விஷயத்தில் பிராவண்யத்தை தவிர்த்த
சுத்தியை உடையவனே –உன்னை ஒழிந்த விஷயங்களில் ருசியை போக்கின நீயே
நான் கண்ணாலே காணலாம் படி என் பக்கலிலே கிருபையை பண்ணுவுதியாகில்

———————–

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

தேவர்களுக்கு எல்லாம் பிரதானராய் அதிகாரி புருஷர்களாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை
சரீரதயா சேஷமாக உடையவனே –
எனக்கு இங்கனே இருப்பதொரு அதிகாரத்தைத் தந்து கால்கட்டாம் அது எனக்கு வேண்டா
அவர்கள் அதிகாரங்களில் எனக்கு ருசி இல்லை –

————————

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே—-6-1-10-

நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான இவற்றை அப்யசிக்க வல்லார்கள்
இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து-அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார்

————————-

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1-

நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்-அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று
நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித் ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே இங்கே வந்து நின்றது –

———————

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-2-

திரு மார்பா –உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து ஸ்வீகரிப்பிக்கும் ஸ்ரீ பிராட்டி அன்றோ அருகே இருக்கிறாள் –
அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும் விடேன் என்னும் நீயும்-உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு
ஸ்வீகரிப்பிக்கும் அவளும் இருவரும் இங்கே சந்நிதி பண்ணுகையாலே தேவர் திருவடிகளுக்கு தகுதியானேன் –
கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க அவ்விடத்தை விட்டு ஸ்ரீ பிராட்டியோடு கூட
எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் – நான் எய்த்துக் கொடு நின்றேன் –
எய்த்தாருக்கும் எய்த்தாரை எடுக்க வந்து நிற்கிறவர்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லையோ –

———————

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-

விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து –
இன்னும் வரத்தும் போக்கும் உண்டு என்று தோற்றாதபடி ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து –
அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம் இங்கே சந்நிஹிதம் ஆய்த்து –

———————-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-

ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –
இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே
என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே-அது இப்போது வாரா உதவிற்று
இவருக்கு இப்புத்தி விசேஷத்தை பண்ணுவித்து ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து
அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து ஸ்ரீ திரு விண்ணகர்
அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே-

—————–

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-5-

ஐஸ்வர்யம் பிரத்யஷம் நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம் என்ன ஒண்ணாத படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது –
கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை

———————

கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6-

மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய இலங்கையை அழியச் செய்த –
அந்த வில் கொண்டு வியாபாரிக்க அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன
அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து அங்கனே போனாயோ-போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது –

——————-

வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக்கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-

என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால் தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும்
நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்-நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய்
ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே
இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே -சீறாமை போராது
இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்-
விச்வச நீயனான நீ சந்நிஹிதனாய் இருக்க பயாவஹமான பதார்த்தங்களுக்கு அடிமை செய்து திரிய வேணுமோ –

———————

தீவாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8-

மூவா வானவர்–அகர்ம வச்யராக்கி அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து
அவ்வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்-
பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க-ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாய்ற்று –
என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து சந்நிஹிதனாய் இருக்க
நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ

——————

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர்தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-

ஸ்ரீ பிராட்டிமாரும் ஸ்ரீ நித்ய சூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார் –

————————

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10-

இப்பத்தும் வல்லார் –அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே-தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார் –

—————-

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே–6-3-1-

துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன்
துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை
என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை
நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-ஸ்ரீ திரு விண்ணகரானே –
உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை –

————————

துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே -6-3-2-

ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே
அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம் ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன்
பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் –
இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்-ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே –
நீயே வந்து புகுகிற இடத்தில்-நான் விலக்கிற்றிலேன்-என்ற படி-அநந்ய கதியை விடில் நிர்க்க்ருணன் ஆம்
பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி யன்றிக்கே ஒழியும்ஆக-ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம் –

————————

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே —6-3-3-

தப்ப ஒண்ணாததைத் தப்பி திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன்
என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார் –

————————

சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே —6-3-4-

நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலே
திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் –
உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே -என்கிறார்
ஸ்ரீ சர்வாதிகனான உன்னைக் கிட்டி என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான பாபங்களை அடியைப் போக்கினேன் –
ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக
கடல் கரை வெளியிலே எடுத்துவிட்டு நின்றால் போலே
சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு நோவு படுகிற எனக்கு புகலாகஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து
சந்நிஹிதன் ஆகையாலே-அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன் –

——————

மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே–6-3-5-

பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப்
போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் -என்கிறார் –

———————–

மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே—6-3-6-

இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –-நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் –
இவ்வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –
தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயநீயனாக நினைத்து இரேன் –
இப்படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய ஸ்ரீ பர தத்வமும் அறியேன் –

————————-

வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே —6-3-7-

நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்-இதர தேவதைகளை வாயாலே பேசேன் –-அவ்வளவே அன்றிக்கே
நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன்
ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விச்வசியேன் –
சர்வாதிகனாய் இருக்கிற நீ ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய்
நீயே ஆஸ்ரயநீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன் –

————————-

முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-

சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து
அவதானத்தைப் பண்ணி-அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு
புநராவ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ

———————-

சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே-6-3-9-

ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை-
எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்-
நம்பீ-ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ தேவரீர் உடைய பூர்த்தி –
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று
அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ –

———————–

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-

ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில்
கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா
அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம் –

——————-

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-

இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது –
அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன்
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம்
ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார்

——————

கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-2-

அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம் –

—————–

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-

எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி அவன் வந்து நித்ய வாஸம்
பண்ணுகிற தேசத்தை நாம் போய் ஆஸ்ரயிப்போம் –

———————–

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே —6-4-4-

சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி விச்வச நீயனானவன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை நாம் ஆஸ்ரயிப்போம் –

—————-

விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே—6-4-5-

அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே
அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து
ஆக-இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே உத்தேச்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான
நன்மையை உடைய தேசத்தை நாம் ஆஸ்ரயிப்போம் –

——————-

மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-

சகல தாபமும் ஆறும்படியான ஜல சம்ருத்தியை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரை நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் –
பொருந்தாத ராவணனை அழியச் செய்து ஸ்ரீ விபீஷணனுக்கு புகலாய் நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைப் போலே
நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற
ஸ்ரீ திரு நறையூரிலே போய்ப் புகுவோம் –

———————–

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7-

வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே
ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம் –

————————

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேளுங்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8-

நித்ய உத்சவமும் வைதிக சமாராதானமும் என்றும் மாறாத ஊர் –
ஸ்ரீ பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல இப் பிரக்ருதியோடே
அத்தோடு போலியான ஸ்ரீ திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம் –

————————–

கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9-

ஸ்ரீ பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய ஸ்ரீ திரு நறையூரை
அவள் பரிகர பூதரான நாம் போய் ஆஸ்ரயிப்போம்

——————–

பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10-

ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக இத்தை மறவாதே அப்யசிக்க வல்லவர்கள்
என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான நித்ய சூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் –
என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே –

——————–

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம் உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே –6-5-1-

அவர்கள் புஜிக்கப் பெற்றது தன் பேறு என்னும் இடம் வடிவில் புகரிலே தோற்ற இருக்கிறவன் –
அம்ருதத்தை புஜிக்கிற இவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்காக கையிலே
திவ்ய ஆயதங்களை தரித்துக் கொண்டு இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

———————–

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-

அழகுக்கு சேர்ந்தால் போலே ஒளியை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற திரு உகிராலே இரண்டு கூறாம் படி கீண்டு பொகட்டு-
ஆஸ்ரிதனுக்கு பிரதிஞ சம காலத்திலேயே உதவினான் என்கிற சுத்தியை உடையவன் வர்த்திக்கிற தேசம் –
ஆளிட்டு அந்தி தொழுகை அன்றிக்கே தானே கை தொட்டுப் போக்கின சுத்தியை உடையவன் –

———————

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்தஸ்ரீ தசரதாத்மஜன் வர்த்திக்கிற ஊர் –

——————-

உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

பரிமளம் மிக்கு இருந்துள்ள திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக
ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் –

——————

விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே–6-5-5-

மிருது ஸ்வ பாவமான தோள் அழகை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக மருதுகளை வேரோடு பறிந்து
விழும்படி சாய்த்த சர்வ ரஷகன் வர்த்திக்கிற தேசம் –

——————–

பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே —-6-5-6-

தான் மாதுலனாய் கண்ணநீரை விழ விட்டு துக்கம் கொண்டாடுவானாக
மலை முறிந்து விழுமா போலே-அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம் –

———————–

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி
நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே —6-5-7-

ஸ்ரீ சாந்தீபநீ அவனுடைய புத்ரனைக் கடல் கொள்ள அவனை மீட்டுக் கொடுத்தவன் வர்த்திக்கிற தேசம் –
இழந்தார்கள் இழவுகள் தீர்க்குமவன் வர்த்திக்கிற தேசம் –

———————-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த விமலனூர்
கொள்ளைக் கொழு மீன் உண் குருகோடிப் பெடையொடும்
நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே —6-5-8-

சேநா சமூஹமானது முடிந்து போம்படியாகவும்-ஜயத்ரதன் தலை அறுப்புண்ணும் படியாகவும்
ஆஸ்ரிதன் உடைய பிரதிஞ சம காலத்திலேயே வந்து உதவின ஓரத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –

———————–

பாரையூரும் பாரந்தீரப் பார்த்தன் தன
தேரையூரும் தேவதேவன் சேருமூர்
தாரையூரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரையூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9-

தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்கிற தன் மேன்மை கிடக்கச் செய்தே
ஆஸ்ரிதனுக்காக தாழ நின்று சாரத்தியம் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –

———————

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே–6-5-10-

செப்புமவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் –இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே
இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-

————————–

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-

செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்-அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன்
இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன் வாசி அற உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு
அவ் ஊரில் உள்ளதாகையாலே –

————————-

கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

அவனுடைய விலாச சேஷ்டிதங்கள் உடன் காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே வாசி அற
இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே –

————————-

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும் தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல் மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-

அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு வாசி அற -இவருக்கு
உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

————————-

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-4-

அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு –

——————-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-5-

அவன் பூமியை அடைய அளந்து கொண்டத்தோடு இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு
வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு அவனை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே –

———————–

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-6-

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு வாசி அற
உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே –

———————

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7-

பெரிய ஆண் பிள்ளை யானவன் அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

———————–

முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8-

ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு
வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் –
இப்பாட்டில் –ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது –

————————-

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —-6-6-9-

உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்
ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற ஸ்ரீ சநகாதிகள் யேத்துகையால் வந்த பெருமையை உடையவன் –
அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும் துறையாகும் படியாய் இருக்கிற ஆயிரம் திரு நாமங்களை உடையவன் –
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர்
நறையூர் மணி மாடம் சேர்மின்களே –

————————-

செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10-

புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார்
யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் –
ஸ்ரீ பரம பதத்திலே போய் பதியினில் பாங்கினில் -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் எதிரே வந்து
தந்தாம் இருப்பிடங்களிலே கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து
ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள் –

————————

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே–6-7-1-

நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற
ஸ்ரீ நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் –

———————–

முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட தாரார் தோளான் வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே–6-7-2-

இருபத்தொரு படி கால் ஷத்ரிய வம்சத்தை அறுத்துத் தூவும்படி அத்விதீயமான வாயை உடைய மழுவை
ஆயுதமாக நிர்வஹித்து –ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்

—————————–

தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து
துள்ளா வருமான் வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட
நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே–6-7-3-

அவ்வம்பு கையிலே இருக்கச் செய்தே ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்-
சாமத்துக்குச் செல்லாத இடத்தில் யாய்த்து பேதத்தில் இழிவது –

——————

ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால்
விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான் மென்மலர் மேல்
கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே —6-7-4-

நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று திரு உள்ளம் துணுக் என்று
அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –

———————-

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்ல்டர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே–6-7-5-

புருஷ புத்தயா அதீனம் ஆகையாலே நிர்த் தோஷமாய் இருக்கிற ஸ்ருதிகளை பத நியமங்களோடே அதிகரித்து –
கேவல அத்யயனம் பண்ணுகை அன்றிக்கே அதனுடைய அனுஷ்டானம் அளவும் போருமவர்கள்
அது தான் காதாசித்கமாய் இருக்கை அன்றிக்கே அது தான் யாத்ரையாய் இருக்குமவர்கள் –
அது தன்னை ஒரு பலத்துக்காக அனுஷ்டிக்கை அன்றிக்கே அநந்ய பிரயோஜனராய் அனுஷ்டிக்கும்படியான
வை லஷண்யத்தை உடையவர்கள் –வாழும் நறையூர் நின்ற நம்பியே

————————

வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—6-7-6-

பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க
அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக போந்த அலவன் ஆனது தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள
போது அஸ்தமிக்கையாலே உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி –
அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற
போது விடிந்த வாறே வந்தது –இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது
இத்தைக் கண்டு ராத்திரி தங்கின படியாலும் உடம்பிலே சுவடு இருந்த படியாலும்
இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது
இத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த அநந்தரம் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன
என் செய்வோம் கேள்வி இல்லாத படி பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர் –

————————-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர்கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே –6-7-7-

இவையே யாத்ரை யாம்படி கை வந்து இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தேசம்
தங்களை நோக்குகைக்காக தங்கள் உடைய வித்யா வ்ருத்தங்களால்
அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –

———————–

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8-

வீரக் கழலை உடைய ராஜாக்கள் முழுக்காயாக அவியும்படி ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்தான் ஆய்த்து –

——————

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே–6-7-9-

சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து
மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால் தான் உகந்தான் ஆய்த்து –

———————

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

லோகத்திலே ஆராய்ந்து சொல்லிமவர்கள் உடைய அருகே-பாபங்கள் ஆனவை கிட்டாது –
பாபங்கள் வரப் போக்க வேணும் என்று அர்த்திக்கும் படி இருக்கை அன்றிக்கே
இவ்விடம் நமக்கு இருப்பிடம் அன்று என்று பிராக்தமான பாபங்கள் தானே விட்டுப் போம்
சம்சாரத்தில் நெடுநாள் இருந்து ஐஹிக போகங்களையும் புஜித்து பின்னை ஸ்ரீ பரம பதத்தே போய்
ஸ்ரீ நித்ய சூரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

———————-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-

தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான திரு மலையிலே வந்து நிற்கிறவனை –
தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து-
அவன் நாடித் திரிகிற போது வைமுக்க்யம் பண்ணி இறாய்த்து திரிந்த நான்
ஸ்ரீ நறையூரில் –அறுகாத பயணம் போய் ஸ்ரீ பரம பதத்தில் காண்கை அன்றிக்கே
விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –
என்கிறார் முதல் பாசுரத்தில்

——————

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே—6-8-2-

தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும் ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும்
என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக ஸ்ரீ பிராட்டி யோடும் கூட ஸ்ரீ திரு வாலியிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை
தேவர்களோடு லௌகிகரொடு என்னோடு வாசி அற அபேஷிதம் செய்யும்படி யான ஸ்ரீ சர்வேஸ்வரனை –பிராப்தி உடையவனை –

——————-

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3-

ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து –
ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும் இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பட்டர்-
ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க என்னுடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-
அந்த ஸ்ரீ திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி அடுத்து அணித்தாக ஸ்ரீ திரு நறையூரிலே-காணப் பெற்றேன் –

———————-

ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-

ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை
நாள் தோறும் ஸ்ரீ நித்ய சூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக உடையனாய்க் கொண்டு இங்கே காணப் பெற்றேன் –

————————

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

வருகிற ஸ்ரீ விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று ஸ்ரீ மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க
அவனைக் கை கொள்ளுகை தவிரோம் – என்று ஸ்ரீ பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன
வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் என்று அவன் பக்கலிலே விசேஷித்து
சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி ஸ்ரீ நறையூரிலே காணப் பெற்றேன் –

——————–

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6-

தன்னை அணுகினவருக்கு தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி விச்வச நீயன் ஆனவன் -–
சம்சாரத்தில் இருக்கச் செய்தே அவனை விச்வசித்து பற்றப் பெற்றேன் –

——————

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
ஸ்ரீ பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –

———————-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

ஸ்ரீ அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை – ஆசை உடையேனாய்க் கிட்டி – அவ்வாசைக்கு அனுரூபமாக
ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

——————–

பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே–6-8-9-

அழகிய திருத் தோள்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் – ஸ்ரீ ஆழ்வார்களை ஒழியவே
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து திருத் தோள்கள் அழகு இருக்கும் படி –
ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்குமா போலே
நமக்கு ஸ்வாமி ஆனவனை-நமக்காக வந்து நிற்கிற ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

———————–

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பூர்ணனை –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ்த் தொடை வல்லவர்கள்
ஸ்ரீ பரம பதத்தில் அங்கு உள்ள ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள்
வைகுந்தன் தமர் எமர் -என்று இறே அவர்கள் சொல்லுவது –அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள் –

——————–

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே —6-9-1-

அருமந்தான் ஒரு மதிப்பன் இப்படி எளிவரவு படுவதே -என்று திரு உள்ளம் புண்பட்டு
அவனுடைய சாபத்தை போக்கினான் ஆயத்து –
அதுக்கடி என் என்னில்-திருவாளன் – தத்ர நாராயண ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீயபதி யாகையாலே
அவனுடைய -இணை யடியே யடை நெஞ்சே —அபிமானிகளும் ஆபன்னர் ஆன அன்று
பற்றும் திருவடிகளை நெஞ்சே நீ பற்றப் பார் –

———————

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய்
முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக –
எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய –

———————

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-

ஸ்ரீ நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –பூமிப் பரப்போடு கூட தயிரையும் வெண்ணெயும் அமுது
செய்தவனுடைய திருவடிகளை அடை நெஞ்சே–

———————-

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே—6-9-4-

மன்றில் பரப்படைய பாழ் தீரும்படி குடக் கூத்தாடி- இந்த்ரன் வர்ஷிப்பிக்க மலையை எடுத்து
வர்ஷத்தை பரிக்ரஹித்த -மலையாலே மலையை எடுத்தால் போலே திரண்ட தோளை உடையவன் –

———————

அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான் இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே அடை நெஞ்சே—6-9-5-

லோகங்கள் ஏழையும் வயிற்றிலே வைத்து பிரளயம் தேடி வந்தால் இங்கு உண்டோ என்று பண்டையிலும்
இளைத்துக் காட்டும் திரு வயிற்றை உடையவன் –தன்னைப் பற்றினாரை உள்ளே இட்டு
தன்னை பிரளயத்துக்கு இலக்காக்கி நோக்குமவன் திருவடிகளிலே அடையப் பார் –

——————

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6-

நாம் சென்று திருவடிகளைக் கிட்டினால் அவன் நம்முடைய தோஷங்களை கணக்கிடுவான் ஆகில்
ந கச்சின் ந அபராத்யதி -என்று அத்தைப் பொறுப்பிக்கும் ஸ்ரீ பிராட்டியை உகந்து
எப்போதும் திரு மார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறவன் உடைய ஸூ குமாரமான திருவடிகளை அடை-
மதுப்பில் அர்த்தத்தை சொல்லுகிறது –

———————

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும் திரு நறையூர்
கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7-

உபகார சீலனான கிருஷ்ணன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய விபூதி நாயகன் என்னும் இடம் தோற்ற
வைத்த வளையத்தை உடையவன் திருவடிகளை அடை நெஞ்சே-

———————

குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும் பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8-

மலை போலே தர்ச நீயமான திரு மணி மாடக் கோயிலின் உள்ள அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நிலையார நின்றான் ஆய்த்து-
நிற்கிற போதை அழகைக் கண்டு-இவன் இருத்தல் சாய்ந்து அருளுதல் செய்து இவ் வழகை இழக்க வரில் செய்வது என்-என்று
துணுக் துணுக் என்ன வேண்டும்படியாய் இருக்கும் –
மலையை ஒக்க ஒக்கத்தை உடையதாய் அழகை உடைய மணி மாடங்கள் மிக உடைய ஸ்ரீ திருநறையூரில் மன்னி நிலையார நின்றான் –

———————-

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே —6-9-9-

லோகத்துக்கு ஆஸ்ரயணீயராய் இருப்பாருக்கும் ஆஸ்ரயணீயனாய் இருக்கையாலே
ஸ்ரீ சர்வாதிகன் –அவன் திருவடிகளையே ஆஸ்ரயிக்கப் பார் –

——————

திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே –6-9-10-

இப்பாடல் பத்தும் வல்லார் –போக பூமிகளில் பிரதானமான ஸ்ரீ பரம பதத்திலே போய்
ஸ்ரீ நித்ய சூரிகள் உடன் ஒரு கோவையாய் அவனை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1-

சத்ருக்கள் இட்ட அரண் அழியும்படியாக குரூரமான ராஷசர் திரண்ட இலங்கையை அழியச் செய்து
அத்தால் வந்த வீர ஸ்ரீ யால் குறைவற்றவன் –
பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த அத்புத கர்மத்தால் குறைவற்றவன் –
கண் வளர்ந்து அருளுகிற போதை அழகாலே பூரணன் ஆனவன் –-
சம்சாரிகளாய் குறைவே நிரூபகமாம் படி இருக்கிற நம்முடைய குறைவு தீர்க்கைக்கு அடியான பௌஷ்கல்யத்தை உடையைவன் –
அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே –

———————

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பிரளயங்கதை யான பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்
லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம் –

———————

பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-

யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும் களவு கண்டு அமுது செய்யப் புக்கால்
அவள் கண்டு பிடித்து கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே-
அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால் வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து –

———————

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே —6-10-4-

தமையன் பக்கல் த்வேஷம் மிக்கு இருக்குமா போலே யாய்த்து இவன் பக்கல் ராகம் மிக்கு இருக்கும் படி –
முதலிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் பரிவை இவன் ஒருவன் பக்கலிலும் பண்ணினவன் உடைய நாமம் சொல்லில் –
நமோ நாராயணமே –வாத்சல்யத்துக்கும் வாசகம் இறே –

——————-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே–6-10-5-

பண்டு மிருத்யு ராஷசரைக் கிட்ட அஞ்சி யாய்த்து இருப்பது –
இப்போது பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே பொருந்தி புஜியா நிற்கும் ஆய்த்து –
இதுவே ஸ்வ பாவமாம் படி பண்ணினவன்உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –

—————–

கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-

இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன் –
இனி இது கண்டால் எல்லார்க்கும் சொலத் தட்டில்லை இறே
என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள் –
நமோ நாராயணமே –நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள-
ஸ்ரீ ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை –
உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் – தேவோ நாம சஹஸ்ரவான் –-பல பசு உடையவன் -என்னுமா போலே
ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து-இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு-காரண வாக்யங்களோடு– இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே –
இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் –

———————–

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

காரண பூதனனவன் பேர் சொல்லுகை ப்ராப்தம் இறே
பிராப்தம் செய்யப் பார்த்ததிலி கோள் ஆகில் இனியது தான் வேணுமே –
பகவத் விஷயத்தில் கைங்கர்ய ருசி உடையார் எல்லாருக்கும் சொன்னேன்-இது செய்யாதார் கேளாதாராம் இத்தனை –
நமோ நாராயணமே —சஹஸ்ர அஷரீ மாலா-மந்த்ரமாய் இருக்கிறதும் அல்ல –

——————-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை சிரமத்தாலே நோவு படாத படியாக ரஷித்தான் –
தான் அறிந்த ஆபத்தும் விலக்காமையும் இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு
ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே

———————

பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9-

குறைவற்றாரோடு-குறை வற்றாராக பிரமித்து இருப்பரோடு-குறைவாளரோடு வாசி அற
எல்லாருக்கும் ஒக்க நிர்வாஹகனாய் இருக்கை –
நீங்கள் அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபம் தீரும்படி சொல்லப் பாரும் கோள்-
ஸ்ரீ எண்ணாயிரத்து திரு வாய்க் குலத்து ஆழ்வான் -ஸ்ரீ நஞ்சீயரை
பிரபத்தி யாகிறது புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கும்-பரிஹாரம் ஆகவற்றோ –-பிராமாதிகத்துக்கேயோ -என்ன
அதன் உடைய ப்ரபாவ்வத்தைப் பார்த்தால் புத்தி பூர்வகத்துக்கும் பரிஹாரமாகவற்று
ஜ்ஞானம் நடையாடும் இடத்தில் அனுதாபம் இன்றிக்கே இராது இறே-ஆகையால் இவன் பக்கல் ப்ராமாதிகம் அல்லாது கூடாது
பூர்வாகத்தைப் போக்குகிற இது-புத்தி பூர்வத்துக்கு பரிஹாரம் ஆகாது என்ன ஒண்ணாதே
அதில் புத்தி பூர்வம் ஒழிய இல்லாமையாலே –வினையைப் பண்ணுவதானாலும் சொல்ல வடுப்பது இது –

————————-

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10-

இதிலே பொருந்தி இத்தை சொல்ல வல்லவர்கள் உடைய பாபம் இவர்கள் பக்கலில் நில்லாது –
இவர்களை விட்டுப் போய் பின்னையும் தான் நிற்கை அன்றிக்கே நசிக்கும் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கைக்கு முதல் இல்லை –

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: