ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் மூன்றாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1–பிரவேசம் –

அவ்வோ நிலங்களுக்கு சிறப்பானவற்றை இட்டுச் சொல்ல கடவர்கள் ஆயிற்று கவிகள் ஆனவர்கள் –
அப்படி அன்றிக்கே
யதாபூதவாதிகளான ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்து அருளின நிலங்கள் விஷயமாகச் சொல்லுமவற்றில்
நாம் கண்டு காணாதவை கொள்ளும்படி எங்கனே என்றால்
அவர்கள் உடைய பிரேமத்துக்கு அவதி இல்லாமையைக் கொள்ளும் இத்தனை –
தன் புத்திரன் விரூபமாய் இருக்கச் செய்தேயும் அல்லாதவர்கள் உடைய புத்ராதிகளில் காட்டிலும் ரூபவானாய் தோற்றும் இறே
பிரேமத்தால் – அப்படியே இவர்கள் உகப்புக்கு அவதி இல்லாமையாலும்
சொன்ன ஏற்றம் எல்லாம் பொறுக்கும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயமாக சொல்லுகையாலும்-இப்படி ஆகையில் ஒரு தட்டில்லை –
காரணமான பிரேமத்துக்கு ஒரு அவதி இல்லாமையாலே அதின் கார்யமாய் வருமவை எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லை இறே –
ரஜோ குணபிரசுரனான பல்லவனும் கூட ஸ்ரீ பரமேச்சுவர விண்ணகரிலே ஆஸ்ரயிக்கலாம்படி +சந்நிஹிதனான படியை அனுசந்தித்தார் –

அங்கன் அன்றிக்கே
சத்வ நிஷ்டராய் சர்வ சாஸ்திரம் உசிதமானவர்களை ஸ்ரீ பகவத் சமாராதான புத்த்யா மாறாதே அனுஷ்டிக்கும்
பிராமணர்க்கு உபாஸ்யனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து சந்நிஹிதனாபடியை அனுசந்தித்தார் –

தேவர்களுக்கு அந்தர்யாமி என்கிற புத்தி விசேஷத்தைப் பண்ணி அவ்வோ முகங்களாலே ஆஸ்ரயிக்கை அன்றிக்கே
அவன் தன்னையே ஆஸ்ரயிக்கும் அனுகூலர்களுக்காக-லோகத்துக்கு காதாசிதமாக உண்டாகும் பிரளயத்தை போக்கி நோக்குமா போலேயும்
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு சதா தர்சனம் பண்ணுகைக்கு தன்னைக் கொடுத்து கொண்டு இருக்குமா போலேயும்
அபரிச்சின்னனான தன்னை இவன் இவ்வளவில் உள்ளான் என்று இவர்களுக்கு பரிச்சேதித்து பிரதிபத்தி பண்ணலாம் படி
தனக்கு உள்ளது அடைய இவர்களுக்கு காட்டிக் கொடுத்து கொடு நிற்கிற இடம் ஆகையாலே
அவ்விடத்தை பிராப்யம் என்று புத்தி பண்ணி அத்தை பேசி அனுபவிக்கிறார்.

இத் திரு மொழிக்கு உயிர் பாட்டு –வையம் ஏழும் உண்டு -பாசுரம் என்பர்-
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-அடியவர்க்கு மெய்யனான தெய்வ நாயகன்-

——————

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-பிரவேசம்-

அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன் -என்று ஆஸ்ரிதர்க்கு சுலபனாகைக்கா ஸ்ரீ திருவயிந்திர புரத்திலே
சந்நிஹிதன் ஆனான் என்றார் கீழ் –
அவன் படி இதுவான பின்பு விரோதியான தேஹத்தைக் கழித்து ஸ்ரீ பகவத் பிராப்தி பண்ணி வேண்டி இருப்பார்க்கு
சரீரத்தை ஒறுத்து சாதன அனுஷ்டானம் பண்ண வேண்டா
அவன் உகந்து வர்த்திக்கிற ஸ்ரீ திருச் சித்ர கூடத்தை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
மன்னு மழல நுகர்ந்தும் வண் தடத்தின் உட் கிடந்தும் -பெரிய திரு மடல் -என்கிறபடியே
கோடைக் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராயும்-சீதகாலம் தடாகங்களிலே அகமகர்ஷகம் பண்ணியும்
அதிலே பாசி ஏறக் கிடந்தும்-இப்படி சரீரத்தை ஒறுத்து-அப்பஷராயும் வாய்பஷராயும் சால மூல பலாதிகளை புஜித்தும்
தபஸு பண்ணி கிலேசிக்க வேண்டா
பிரளய ஆபத்துக்களில் அபேஷா நிரபேஷனாய் ரஷிக்கும் ஸ்வ பாவனாய் ராவண ஹிரண்யாதிகள் உடன் நலிவு வந்த காலத்தில்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணி ரஷித்தும் இப்படி சர்வ பிரகாரமாக சர்வ ரஷகனான
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீயபதி ஸ்ரீ திருச் சித்திர கூடத்தில் சந்நிஹிதன் ஆனான்
அத்தேசத்தைச் சென்று சேரவே சகல விரோதிகளும் போய் அவனைப் பெறலாம்
சடக்கென அத தேசத்தில் சென்று சேருங்கோள் என்று பர உபதேசம் பண்ணுகிறார்-

———————–

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-பிரவேசம்

ஸ்ரீ கிருஷ்ண அவதாராதிகளில் இழவு தீர ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து சந்நிஹிதனானான் –
எல்லோரும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

—————–

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே—3-4-1–பிரவேசம் –

நீங்கள் அவனைப் பெறுகைக்கு உறுப்பாக பண்ணும் சாதனா அனுஷ்டானத்தை
அவன் தான் உங்களைப் பெறுகைக்கு உறுப்பாக அவதாராதி முகங்களாலே பண்ணிக் கொடு
இங்கே வந்து நின்றான் -என்றார்
அவன் படி இதுவான பின்பு-அர்த்தித்வம் துடக்கமாக மேல் உள்ளவற்றை எல்லாம் அவன் கையிலே ஏறிட்டு
நீங்கள் அவன் உகந்த ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –
இவன் பரம பக்தி பர்யந்தமாகப் பண்ணினாலும்-அதடைய பிரதிகூல்ய நிவ்ருத்தி மாத்ரத்திலே நிற்கும்படி இறே
பேற்றின் உடைய வைலஷண்யத்தைப் பார்த்தால் இருப்பது –

———————

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1- -பிரவேசம்

எல்லாரும் தம்தாமுக்கு நன்மை வேண்டி இருக்கில் ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கலில் ந்யச்த பரராய் கொண்டு
ஸ்ரீ சீராம விண்ணகரம் ஆஸ்ரயியுங்கோள் -என்றார்
அங்கன் இன்றிக்கே
தம்மளவில் வந்தவாறே ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாகக் கொண்டு அங்கே எழுந்து அருளி நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
தானே ஸ்வயம் பாரித்துக் கொண்டு வந்து இருக்கிறபடியை அனுசந்தித்து –
பரம ப்ராப்யனாய் இருக்கிற நீ என் பக்கல் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்கச் செய்தே –என் ஹிருதயத்தில் வந்து புகுந்தாய் –
எனக்கு உன்னை ஒழிய செல்லாமையைப் பிறப்பித்தாய்
உன் வ்யதிரேகத்திலே நான் பிழையாதபடியை பண்ணினாய் –
இங்கனே இருந்த பின்பு இனித் தான் நீ போகில் நான் பிழையேன்-போகல் ஒட்டேன்
உனக்கு எந்தனை தயநீயர் இல்லை
ஆனபின்பு என்னை நித்ய கைங்கர்யத்தை கொண்டு அருள வேணும் -என்று
பிராப்யனான அவன் திருவடிகளில் கைங்கர்யத்தை அபேஷித்து அப்போதே கிடையாமையாலே
அதில் க்ரம பிராப்தி பற்றாமையால் உண்டான தம்முடைய த்வரையை ஆவிஷ்கரித்தாராய் தலைக் கட்டுகிறார்-

——————————-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-பிரவேசம் –

ஸ்ரீ நஞ்சீயர் உடைய நோவிலே ஸ்ரீ பெற்றி அறியப் புகுந்து இங்கு தமக்கு வேண்டி இருக்கிறது என்-என்று கேட்டு
தூ விரிய மலர் உழுக்கிப் பாட்டு கேட்கவும் ஸ்ரீ பெருமாள் எழுந்து அருள பின்னும் முன்னும் சுற்றும் வந்து
திருவடி தொழவும் வேண்டி இரா நின்றேன் -என்று அருளிச் செய்து அருளினார் –
அப்போதே ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அரையரை அழைத்து விட்டு பாட்டுக் கேட்டு அருளா நிற்க
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4–என்னும் அளவிலே வந்தவாறே
காம சரங்களால் ஏவுண்பதற்கு முன்பே வாராவிட்டால் பட்ட புண் பரிஹரிக்க வாகிலும்-வந்தால் ஆகாதோ
என்று அருளிச் செய்து அருளினார் –

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்றும்
அடியேன் மனத்து இருந்தாய் -என்றும் –
என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன் -என்றும் மானச அனுபவ மாத்ரமாய் நின்றது கீழ் திருமொழியில் –
மானச அனுபவமானது முதிர்ந்து-அது தான் பிரத்யஷ சாமானகாரமாய் என்று இருக்கை அன்றிக்கே –
பிரத்யஷம் என்றே பிரதிபத்தி பண்ணி-அநந்தரம் பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து
அது தான் நினைத்த படி அனுபவிக்கக் கிடையாமையாலே ஆற்றாமை கரை புரண்டு ஒரு ஸ்ரீ பிராட்டி தசையை பிராப்தராய்
அவள் பேச்சாலே ஸ்வ தசையை -பேசுகிறார் –

பொன் நெருப்பிலே இட இட அழுக்கற்று தன்னிறம் பெற்று சுத்தமாம் போலே ஸ்ரீ பகவத் விஷயத்தில் அவஹாகிக்க
அபதோஷாநாம் பின்னை ஸ்ரீ பிராட்டிமார் படி உண்டாக கடவதாயிற்று –
சகல ஆத்மாக்களுக்கும் ஸ்ரீ பிராட்டிமார் தசை பிறந்தபடி தான் என் என்னில்
அனந்யார்ஹ சேஷத்வம் என்று ஓன்று உண்டு –அது இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும்
கலந்த போது பிரீதி பிறக்கையாலும்-பிரிந்த போது ஆற்றாமை பிறக்கையாலும்-தத் ஏக போகத்தாலும்
அவன் நிர்வாஹகனாக-இத்தலை நிர்வாஹ்யம் ஆகையாலும் ஸ்வ யத்னத்தாலே பேறு என்று இருக்கை இன்றிக்கே
அத் தலையாலே பேறு என்று இருக்கையாலும்ஸ்ரீ பிராட்டிமார் படி உண்டாகத் தட்டில்லை –
சர்வதா சாத்ருச்யம் சொல்லுகிற இடங்களில் வந்தால் தாமரை போலே வந்தால் என்னும் அத்தை
தாமரை தான் என்று தாமரை என்றே வ்யவஹரிக்கும் இறே
ந ச சீதாத் யா ஹீநா நசா ஹமபி-என்று ஒக்கச் சொன்னார் இறே ஸ்ரீ இளைய பெருமாள்-

இவ்வோ வழிகளால் ஸ்ரீ பிராட்டிமார் தசையை பிராப்தராய் அடைய தட்டில்லை
நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து-பிரிவாற்றாமை நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி
அவன் வரும் தனையும் பொறுத்து இருக்க மாட்டாமையாலே தூது விடப் பார்த்து அதுக்குத்த பரிகரத்தில்
கால் நடை தந்து போக வல்லார் இல்லாமையாலும்
இனித்தான் சேதன அசேதன விபாகம் அற இரக்க வேண்டும்படியான தசையையும் உடையளாய் இருக்கையாலும்
ஸ்ரீ ராமாவதாரத்துக்கு பின்பு திர்யக்குகள் போன கார்யம் தலைக்காட்டி வரக்கண்ட வாசனையாலும்
கண்ணால் கண்ட பஷிகளை அடைய தூது விட்டு-தூதர்க்கு சொல்லுகிற வார்த்தையாலே தன நெஞ்சு தான்
புண் பட்டு இருக்கிற சமயத்தில்-அவன் தான் சந்நிஹிதனாய்க் கொண்டு வர
அவனுக்கு தன் இழவுகளைச் சொல்லி தலைக் கட்டிற்றாய் செல்லுகிறது-

——————————-

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1- பிரவேசம் –

தூது விட்டு தூதுவருக்கு சொன்ன பாசுரம் நெஞ்சிலே ஊற்று இருந்து அத்தை பாவித்து பாவநா பிரகர்ஷத்தாலே
அவன் தான் முன் நின்றானாகக் கொண்டு அவனுக்கு வார்த்தை சொல்லும்படி பிறந்த தசா விசேஷம்
அவன் திரு உள்ளத்திலே பட்டு – அது பொறுக்க மாட்டாதவன் ஆகையாலே-தானே வந்து முகம் காட்டி -இவளைக் கூட கொண்டு போக –
ஆதி வாஹிகரை வர காட்டிக் கொண்டு போம் சிலரை – ஸ்ரீ பெரிய திருவடியை வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –
நயாமி -என்று தானே கொடு போம் சிலரை –அப்படியே தானே வந்து- அத்தவாளத் தலையாலே மறைத்துக் கொண்டு போக-
அந்தரமாக காத்துக் கொடு போந்த ஸ்ரீ திருத் தாயார் வந்து படுக்கையில் இவளைக் காணாமையாலே
போன அவள் படிகளையும்-தனக்கு அவளை ஒழியச் செல்லாமையும் -எதிர்தலை இப்படி பட வேண்டி இருக்கிற
இவள் உடைய வைலஷண்யத்தையும் தன் இழவையும் சொல்லி கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

அவன் இவளைக் கொடு போகையாவது என் – ஸ்வாபதேசத்தில் ஓடுகிறது என் என்னில் –
மானச அனுபவமாய் இருக்கச் செய்தே பாஹ்ய சம்ச்லேஷம் போலே இருக்கப் பண்ணி கொடுத்த தொரு
வைச்யத்தைச் சொன்னபடி இறே
ஸ்த்திதே மனஸி-நின்றவா நில்லா மனதும் ஓர் இடத்திலே நிற்கப் பெற்று
அபசயாத்மகமான சரீரமும் அங்கே இங்கே சிதிலமாகாதே ஒருபடிப்பட்டு
தாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமிருகை அன்றிக்கே
சாம்யாவஸ்தையை பஜித்து-இப்படி சரீரத்திலே ஒரு லாகவம் பிறந்து சத்வம் உத்ரிக்தமான சமயத்தில்
ஆரேனும் ஒருவன் ஆகவுமாம் தான் கீழ் சம்சாரியாய் நின்ற நிலையையும்
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாக இருப்பதொரு கைம்முதல் தன் பக்கலில் இன்றிக்கே இருக்கிற படியையும்
அவனைப் பற்றியே கழிக்க வேண்டும்படி இருக்கிற படியையும்-இதில் நின்றும் கரை ஏற்றுக்கைக்கு ஈடான சக்தியும் பிராப்தியும்
அவன் பக்கலிலே உண்டாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து-அவன் பக்கலிலே பர ந்யாசத்தைப் பண்ணுவது
பின்னை பேற்றுக்கு இவ்வளவுமேயோ என்னில்-சரீரத்தை பற்றி இருக்குமவற்றுக்கு ஆத்மா சுக துக்கம் அனுபவம் பண்ணுமா போலே
இவற்றுக்கு வருவது தனதாம்படி விசேஷ சரீரனுமாய்-இவன் தன்னை ஒரு கால் அனுசந்தித்தால்
பின்பு இவ்னைப் போலே மறைக்கக்கு அடியான கர்ம நிபந்தனமான கலக்கம் இன்றிக்கே இருக்குமவன்
ஆகையாலே அவ்வளவே அமையும்

இப்படி ஒரு நாள் அனுசந்தித்தவன்
பிரகிருதி வச்யனாய் -பின்பு தன் தேக யாத்ரையிலே அந்ய பரனாய் திரிந்து பின்பு ஸ்ம்ரிக்கைக்கு கூட யோக்யதை இல்லாதபடி
காஷ்டாபாஷா சந்நிபனாய் கிடக்கும் அன்று இவனைப் போல் ஒரு கால் ஸ்மரித்தால் பின்பு விஸ்வமரிக்குமவன்
அன்றிக்கே நான் ஸ்மரித்த படியே இருப்பன்-

மத்பக்தம்
ஸ்மரிக்கைக்கு யோக்யதை இல்லாத வன்று-ஸ்மரித்திலன் என்று விடும் அத்தனை துராராதனையோ அவன் பற்றிற்று –

அஹம் ஸ்மராமி –
ஐஸ்வர்ய காமனுக்கும் -ஆத்மப்ராப்தி காமனுக்கும் -பக்தி காமனுக்கும் அந்திம ஸ்ம்ருதி உண்டு
இவன் முதலிலே துடங்கி சர்வ பர ந்யாசம் பண்ணினவன் ஆகையாலே இவனுக்காக நான் நினைப்பன் –

நயாமி பரமம் கதம் –
இப்படி நினைத்து நானே கை தொடனாய் வந்து கொடு போவேன்
த்வயம் -எம்பெருமானுடைய சர்வ ஸ்வமும் இறே இவை –
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே வர்த்தித்த வைஷ்ணவன் அந்திம சமயத்தில் பட்ட கிலேசத்தைக் கண்டு
ஸ்ரீ பெரிய நம்பிக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் நடந்த சம்வாதத்தை நினைப்பது
மத்பக்தம் என்கிற இடமும்-பக்திமானையே சொல்லிற்று ஆனாலோ பிரபன்னனை சொல்லிற்று ஆனாலோ
என்கைக்கு நியாமகர் யார் என்ன-அவனுக்கு அந்திம ஸ்ம்ருதி விதிக்கிற சாஸ்திரம்-

————————-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1- -பிரவேசம் –

ஸ்ரீ பகவத் விஷயத்தில் தமக்கு பிறந்த பிராவண்ய அதிசயத்தை பார்ஸ்யர் பேச்சாலே அனுபவித்தார் –
அதாகிறது
மாதா பிதாக்களுக்கு ஆகாதே ஸ்ரீ வயலாலி மணவாளனுக்கேயாய் இருக்கிற இருப்பைத் ஸ்ரீ திருத் தாயார் பேச்சாலே
அனுபவித்தாராய் நின்றார் கீழ் –
இப்படி ஸ்ரீ திருவாலியில் புக்கு அனுபவித்த இடத்திலும் ஆற்றாமையில் தமக்கு பிறந்த பிராவண்யம்
உகந்த விஷயத்தை கண்ணாலே கண்டு ஸ்பர்சாதிகளை அபேஷிக்குமா போலே அனுபவிக்கையில் மூட்ட –
அப்போதே பெறாமையாலே திரு உள்ளம் பதற – திரு உள்ளத்தைக் கொண்டாடி அப்பேறு பெறும் தனையும்
இங்கேயே அனுபவிக்கைக்காக அன்றோ
உகந்து அருளின நிலங்கள் -என்று-பிரயோஜனாந்த பரர்களான தேவர்களுக்கும் தாம்தாம் அபிமதங்கள் அபேஷிக்கலாய்
அவ்வோ காலங்களில் இழந்தார் எல்லாருக்கும் எல்லா இழவுகளையும் தீர்க்கைக்காக
ஸ்ரீ திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –
அங்கே சென்று அனுபவி என்று திரு உள்ளத்தை அனுசாசிக்கிறார்-

——————

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-1–பிரவேசம்

அபிமத விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் அவயவங்கள் தோறும் விரும்பி அனுபவிக்குமா போலே –
அங்கு உள்ளது எல்லாம் உத்தேச்யமாய் –
ஆபத் சகனாய் –சர்வத்துக்கும் ரஷகனாய் –இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் ரஷணத்துக்கு பாங்கான தேசம்
என்று விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆகையாலே
அங்குண்டான திர்யக்குகளும் அகப்பட முக்தர் பகவத் அனுபவத்தாலே களிக்குமா போலே
களித்து வர்த்திக்கும் தேசம் ஆனபின்பு நீயும் உத்தேச்யத்தை பிராப்யி என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

—————

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1- -பிரவேசம்-

ஆஸ்ரித விரோதி சீலனாய் – ஆஸ்ரிதர்களுக்கு ஆபத்திலே வந்து உதவும் ஸ்வ பாவனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
தான் ரஷகனாம் இடத்தில் புருஷாகாரமாய் ஸ்ரீ பிராட்டிமாருடன் கூடி வந்து நிற்கிற படியை அனுசந்தித்து –
ஸ்ரீ நித்ய சூரிகள் –இது ஒரு சீல குண ப்ராசுர்யம் இருந்தபடி என் என்று –இதிலே ஈடுபட்டு ஆஸ்ரயிக்கும் படியாக
ஸ்ரீ அரிமேய விண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் –
ஆனபின்பு நீயும் அங்கே சென்று அவனை ஆஸ்ரயித்து உன்னுடைய குறைகள் எல்லா வற்றையும்
தீர்த்துக் கொள்ளப் பாராய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

—————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: