வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே –வேங்கடம் மேவி மாண் குறளான
வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-
தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு–மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க
ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு
நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே-என்கிறார் முதல் பாசுரத்தில் –
தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற
நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு
அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –
அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே
ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய்
இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில் –
பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன
விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் –
அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே –அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய
வ்ருத்தியிலே அன்வயித்தாயோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –
ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –
அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு வரையாதே ரஷகன் ஆனவனுக்கு
அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் –
ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –
நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும்
பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –
————————
காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்—வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-
அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச –
இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில் –
திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –-அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே –
இது புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று-
பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம்
என்று சாய்ந்தான் ஆயிற்று –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில் –
திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய்ஸ்ரீ வைகுண்டத்தில்
இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று –
சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட
வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று
கண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும்
ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறான் என்று ஸநகாதிகள்
ஏத்தும் படியாய் இருக்கிறவன் இங்கே சாய்ந்தான் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-
திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி
நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-
இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –
எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில் –
நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் – குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –
அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி
மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி
அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் –
அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில்
அவர்கள் ஆளுமது பரம பதம் —என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
———————–
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை–
திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-
விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
என்கிறார் முதல் பாசுரத்தில்
வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும் சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –
ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களாலே எப்போதும் ஒக்க இனியனானவனை –
தன்னையே ஆஸ்ரயிக்கும் படி ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை –
ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –
ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
அந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –அப்படியே
சந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –
ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –
எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது-
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
இலக்குமனோடு மைதிலியும் தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி-
கண்டு அனுபவித்தார்களோடு –கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
வாயில் ஓர் ஆயிர நாமம் –-அவன் அப்போது சொல்லிற்று-நால் இரண்டாகிலும்
பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –
நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்–ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம் -ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .
————————
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு
உறையுமிடமாவது நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-
ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்-ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே நடந்தான் –
இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை-
என்கிறார் முதல் பாசுரத்தில்
முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி –அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில்
வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான்
வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து
திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்-அன்றிக்கே
பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே-
அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய
ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்
ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி –
நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய்-அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது
சேஷித்வமாய்-ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே
ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் –
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய
வார்த்தையாலே –முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் –
இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு
நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே
என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் –
அவ்வரியத்தையும் செய்யும்-இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் – அதுக்கு மேலே
பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் –
அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்–என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
——————–
பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணை —-கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-
சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை
கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை –
இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே
நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார் முதல் பாசுரத்தில்
எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை – காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே
நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –
எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை
அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை – ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-
அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை காணப் பெற்றேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே காணப் பெற்றேன்
என்கிறார் – ஆறாம் பாசுரத்தில்
அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும்
காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் –
சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே
விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –
இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன்
படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று
உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை –
அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் –
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் –அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் -என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
—————-
நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்-
கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது
அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று –
நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –
இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –
இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-
கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற
அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் –என்கிறார் முதல் பாசுரத்தில்
முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை
கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –
அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –
அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து
கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்
குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் –
நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே
தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு
என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது -என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்-
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
———————-
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-
முதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி
பிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-
திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –
குவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –
அவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும்
போருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –
அவள் மார்வை ஆசைப்பட்டாள்
இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள்
அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –
அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –
ஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே-என்கிறார் முதல் பாசுரத்தில்
பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை
உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே
அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று –
இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
நை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ நீ இங்கே வந்து இருக்கிறது
ஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்
உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்-
நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-
அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும்
இவளுடைய-வை வர்ண்யமும்-அத்யாவச்யமும்-செல்லாமையும்-வடிவு அழகும் பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தையில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ
யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில்
நீர் நினைத்து இருக்கிறது என்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
தாய் கைவிடுதல் தான் கை விடுதல்-செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர் -உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார்
அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்
தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார் கூப்பிடுவதாக வேண்டாதபடி
பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
—————————
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-
ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே
இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே
நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –
ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய்
வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் முதல் பாசுரத்தில் –
வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது –
சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது –
இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான்
பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்- இரண்டாம் பாசுரத்தில் –
யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய
கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை –
கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல
உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-
அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து
அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது
முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே
அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார் நாலாம் பாசுரத்தில் –
கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா
உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில் –
பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம்
இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்-ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார்
சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய்
நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்
இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா
உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-ஏழாம் பாசுரத்தில் –
வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-
சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் –
உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –எட்டாம் பாசுரத்தில்-
இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே
ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்
அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்
ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன்
அன்றோ நான் என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்
உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
——————————–
சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-
தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும்
விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை
பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –
பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது-
அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் –
ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார் முதல் பாசுரத்தில்-
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு-இவன் சத்ரு வதம் பண்ணினதோடு
வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்-
தான் இல்லை யானாலும் தன்னுடைய வீர ஸ்ரீ நிற்கும்படி வாழ்ந்த பல்லவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் –
கட மா களி யானை வல்லான் -என்றும்
ஆடல் மா வலவன் -என்றும்
மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்-
சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி
முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்
நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் –
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார் ஆறாம் பாசுரத்தில்-
மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்
முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு
அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஏழாம் பாசுரத்தில்-
சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு
நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் –
அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-
நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி .
நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம்
கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக
தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார்
பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –
உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
அதாகிறது
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே-
———————–
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-
ஆபத் சகன் -என்கிறது –
திரு வயிற்றிலே எடுத்து வைத்து பிரளயத்துக்கு அஞ்சவும் அறியாதே ஓர் ஆலின் இலை மேல்
அது தன்னிலும் ஒரு பவனான இளம் தளிரிலே யோக நித்தரை கொண்டு அருளின
ஆதார ஆதேய பாவம் தன் புத்த்ய அதீநமாம் படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை
ஸ்ரீ திருக் கோவலூரிலே நான் காணப் பெற்றேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்-
அவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும்
ஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே
அவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற
அத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்-
கையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி –
ஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து
திருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-மூன்றாம் பாசுரத்தில்-
ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும்
சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்
ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய
கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-என்கிறார் நாலாம் பாசுரத்தில்-
ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்-
ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் –
சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து
இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்-
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே
அவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள்
கருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே
அவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே-
விஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல்
பிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று
இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
வில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை
அவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்-
ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய்
வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்-
ஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி-
தனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று –
அதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி –
நாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று
தன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை –
அருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும்
பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து
அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-
என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
——————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply