ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-இரண்டாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு காரகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க
ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –
அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே

————————–

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற
நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு
அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-

————————–

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே –
அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே
ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –
தந லுப்தன் ஒரு காசு விழுந்த இடத்தில் கை எல்லாம் புழுதியாக தேடும் இறே

———————

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய்
இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-

————————–

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-5-

பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன
விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் –
அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே – அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய
வ்ருத்தியிலே அன்வயித்தாயோ

—————-

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –
அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-

——————-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-

ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –

———————

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொறி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு-இன வாயர் தலைவன் -என்னக் கடவது இறே
இன்று அடிமைத் தொழில் பூண்டாயே-வரையாதே ரஷகன் ஆனவனுக்கு அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-

——————

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-9-

பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் –
ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –
நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-

——————

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும்
பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்-

———————-

காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர்
நாசமாக நம்ப வல்ல நம்பெருமான்
வேயினன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று
ஏச நின்ற வெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-1-

பையலுடைய ஊரானது -ஸ்மசாந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி
அப்படி செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான வீர ஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –
ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமையை உடையனாய் –அவர்கள் உடைய வெண்ணெயைக் களவு கண்டு
அமுது செய்து அவர்கள் அத்தைச் சொல்லி ஏசும்படி நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –
அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச –
இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-

————————-

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2-

திரியட்டும் ஸ்ரீ ராமாவதாரம் அனுவர்த்தித்த படி –
ஸ்ரீ பட்டரோ பாதியும் போருமாயிற்று இவருக்கு அவ் வவதாரத்தில் பஷ பாதம் –
ஸ்ரீ சிறியாத்தான் -ஸ்ரீ பட்டர் -ராமாவாதாரத்தில் பஷ பதித்து இருப்பவர் என்று அருளிச் செய்யும் வார்த்தையை கேட்கைக்காக –
ஸ்ரீ பெருமாளுக்கு எல்லா ஏற்றமும் உண்டாகிலும்
ஆஸ்ரித அர்த்தமாக கழுத்திலே ஓலை கட்டித் தூது போன இவ்வேற்றம் இல்லையே -என்ன
-அவர் போகாமை அல்ல -பிறப்பில் குற்றமே -காணும் -என்று அருளிச் செய்தார் –
இஷ்வாகு வம்ச்யர் கழுத்திலே ஓலை கட்டித் தூது போக விடுவாரைக் கிடையாதே –
அவ் வவதாரத்திலே ஸ்ரீ திருவடி அங்கே போவது இங்கே வருவதாய்க் கொண்டு வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு
நாமும் இப்படி ஆஸ்ரிதர்க்காக தூது போக பெற்றிலோம் -என்று செவி சீ பாய்ந்தது – அதுக்காக விறே பின்னை வந்து அவதரித்து
ஆஸ்ரிதர்க்காக தூது போயிற்று –
ஷத்ரியன் என்று நிஸ்சயிக்கில் தூது போக விடுவார் இல்லை என்று அத்தை மறைத்து இறே -வளர்ந்தது
அபிஷித்த ஷத்ரிய வம்சத்தில் பிறக்கில் தூது போக விடுவாரைக் கிடையாதே —
அவன் வந்து -சாய்ந்தான்-என்கிறார்-

————————

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-

ஏச நின்ற -என்றது அனுவர்த்திக்கிறது-உதித அநுதித ஹோம நிந்தை போலே இருப்பது ஓன்று இறே –
இது-புக்க புக்க துறை தோறும் பகவத் விஷயத்தில் கால் தாழ வல்லர் -ஆயிற்று-
பூமியிலே ஏவிக் கார்யம் கொள்ளுவாரைப் பெற்றது-இனி இவ்விடம் விட்டுப் போவோம் அல்லோம்
என்று சாய்ந்தான் ஆயிற்று –

———————-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-4-

திரியவும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே பின்னாட்டிற்று –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸ்ரீ வைகுண்டத்தில்
இருந்த இருப்பிலும் இங்கே வந்து அவதரித்து தான் தாழ நின்ற பின்பு ஆயிற்று –பூரணன் ஆயிற்று –
சர்வ வித பந்துவானவனை காணலாவது ஸ்ரீ பரம பதத்திலே என்று அவ்விடத்துக்கு போக பொதி சோறு கட்ட
வேண்டாதே பந்து க்ருத்யம் பண்ணலாம் படி ஸ்ரீ திரு வெவ் வுள்ளிலே வந்து சாய்ந்தான் ஆயிற்று –

——————-

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டாலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே—2-2-5-

பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று
கண் வளர்ந்து அருளுகிறான்-எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –

———————–

சோத்த நம்பி யென்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி ஆகிலும் தேவர்கெல்லாம்
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர் தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-6-

அசாதாராண திவ்ய விக்ரஹ யுக்தனாய் –
இதர விஸஜாதியனாய் இருக்கச் செய்தேயும்
ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய் நின்று ஸ்ருஷ்ட்யாதிகளை
நடத்துகிறான் என்று ஸநகாதிகள் ஏத்தும் படியாய் இருக்கிறவன்
இங்கே சாய்ந்தான் -என்றபடி

———————

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7-

திரு மேனியில் ஏக தேசத்தில் இருக்கிற ருத்ரன் விஸ்த்ருதமான திருவடிகளை தலையாலே சுமக்கும்படி
நிற்கிறவன் –எங்களுக்கு ஜநகனுமாய்-ஸ்வாமி யுமானவன்-

———————

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே—–2-2-8-

இப்படி தான் அத்விதீயனாய் இருந்தானே யாகிலும் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு இனியவன் –
எனக்கு ஜநகனுமாய் ஸ்வாமியுமானவன் –-எவ்வுள் கிடந்தானே

———————-

பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாயமைந்த
இந்த்ரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-9-

நித்ய சம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய் -அது தான் பொறாமை சிவந்து ஸூகுமாரமான விரலை உடையவள் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் –குளிர்ந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையவள் –
அப்பூ நெரிஞ்சி முள்ளாய் அடிக் கொதித்து வந்து அகலகில்லேன் -என்று இருக்கும்படி
மார்வு படைத்தவன் –எவ்வுள் கிடந்தானே-

———————-

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-

இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி
அவை ப்ரேரிக்க பாடின மாலை-இது கற்றார் அண்டத்தை ஆளுகை நிச்சயம் –
அவனைப் பற்றியும் இத்தைப் பெறுமத்தனையோ – என்று விரக்தர் ஆனார்கள் ஆகில் அவர்கள் ஆளுமது பரம பதம் —

—————————-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-

விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் -போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் -செய்யுமவனானவனை –திரு வல்லிக்கேணியிலே
காணப் பெற்றேன் என்கிறார்-

—————

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே–2-3-2-

வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்-அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பண்ணுமவன் –
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய் உள்ளவனை –அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை அடிமை கொண்ட -உபகாரகனை –
ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

————————

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –ஸ்ரீ திரு வல்லிக்கேணிக் கண்டேனே –என்கிறார் –

——————-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

அந்த மழையின் அளவு அல்லாத பெரிய மலையாலே மழையைத் தடுத்து –
அப்படியே
சந்த துக்க வர்ஷிணி -என்கிற என்னுடைய சம்சாரம் ஆகிற வர்ஷத்தை பரிகரிக்க வந்தவன்..

———————-

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

ஸ்ரீ யபதியாய் இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன்
ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –
எனக்கு ஸ்வாமியாய் –என் குலத்துக்கு நாதன் ஆனவன் -திருவல்லிக்கேணிக் கண்டேனே-

——————–

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும் தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை –
சொல்லுகிறது-த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

—————-

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
இலக்குமனோடு மைதிலியும் -தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தி-
கண்டு அனுபவித்தார்களோடு – கேட்டார் வாய் கேட்டாரோடு வாசியற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை திருவல்லிக்கேணிக் கண்டேனே—

———————-

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-

வாயில் ஓர் ஆயிர நாமம் – அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும் பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –
நால் இரண்டு -ஸ்ரீ திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்-ஸ்ரீ நாராயண -ஸ்ரீ ஹரி என்றுமாம்-ஸ்ரீ விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே ஸ்ரீ நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை வெளி இட்டான் –

—————-

மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம் போம்படியாக ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படியாக ஸ்ரீ திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

——————

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –நித்ய அனுபவம் பண்ணலாம் படியான ஸ்ரீ நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

—————–

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

ஸ்ரீ திரு நறையூரிலே நின்றான்-ஸ்ரீ திருவாலியிலே இருந்தான்- ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்தான்-ஸ்ரீ திருக் கோவலூரிலே -நடந்தான் –
இடம் மா மலையாவது நீர் மலையே –மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை வாஸ ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து சந்நிஹிதனான தேசம் ஸ்ரீ திரு நீர் மலை-

—————–

காண்டா வனமென்பதோர் காடு அமரர்க்கரையனது கண்டவன் நிற்க முனே
மூண்டாரழலுண்ண முநிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணனவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய்
நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

முன்பு பூ பாரத்தைப் போக்கி நிர்வஹித்துப் -போந்தவன் –சீறி யருளி ––அவனுடைய பிரதிஞ்ஞா காலத்தில்
வந்து உதவிற்றிலன் ஆகில் குணங்கள் சாவாதியாம் போலே சர்வாதிகனான தான்
வாமன வேஷத்தைப் பரிகிரஹித்து நிற்கச் செய்தே மஹா பலி பக்கலிலே சென்று இரந்து
திருக் கையிலே நீர் விழுந்தவாறே ஆகாசவகாசம் இடம் அடையும்படி வளர்ந்து அளந்து கொண்டவனுக்கு வாஸ ஸ்தானம்-

——————-

அல மன்னு மடல் சுரி சங்க மெடுத்து அடலாழியி னாலணி யாருருவில்
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாளடுவாளமரில்
பல மன்னர் படச் சுடராழி யினைப் பகலோன் மறையப் பணி கொண்டணிசேர்
நிலா மன்னனுமாயுலகாண்டவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-3-

நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு-ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்
அன்றிக்கே பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-

———————–

தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-4-

தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே-
அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய
ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்-

———————

மாலுங்கடலார மலைக் குவடிட்டணை கட்டி வரம்புருவ மதி சேர்
கோல மதிளாய விலங்கை கெடப் படை தொட்டொரு கால மரி லதிர
காலமிது வென்றயன் வாளி யினால் கதிர் நீண்முடி பத்தும் அறுத்தமரும்
நீல முகில் வண்ணம் எமக்கிறைவர்க்கிடம் மா மலையாவது நீர் மலையே—-2-4-5-

ராவண வதம் பண்ணின அநந்தரம் திருமேனியில் பிறந்த பௌஷ் கல்யம் இருக்கிறபடி –
நீலமானது அமர்ந்து இருக்கிற முகில் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அவ் வடிவு அழகாலே என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –

———————–

பாராருலகும் பனி மால் வரையும் கடலும் சுடருமிவை யுண்டும் எனக்
காரா தென் நின்றவன் எம்பெருமான் அலை நீருலகுக்கரசாகிய அப்
பேரானை முனிந்த முனிக் கரையன் பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்
நீரார் பேரான் நெடு மாலவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே –2-4-6-

ரஷ்யம் அளவுபட்டு ரஷகத்வமே விஞ்சி இருக்கிறவன் –இப்படி தான் சர்வ ரஷகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன் –நீரார் பேரான் –நீர் -என்று நீர்மையாய் அத்தால் ஸ்வாபாவமாய் -அதாகிறது
சேஷித்வமாய் ஆக ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தவஸ்துவும் தனக்கு பிரகாரமாய் தான் ப்ரகாரியாய் இருக்கையாலே
ஸ்ரீ நாராயணன் என்னும் திரு நாமத்தை உடையவன் –சர்வாதிகனான எம்பெருமானுக்கு ஸ்ரீ நீர் வண்ணன் என்று திரு நாமம் –

———————–

புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகராயின பாழ்பட நாமம் எறிந்தது வன்றியும் வென்றி கொள் வாள்அவுணன்
பகராத வனாயிர நாமம் அடிப்பணி யாதவனைப் பணியால் அமரில்
நிகராய வன்னெஞ்சு இடந்தானவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –2-4-7-

நான் எதிரி என்று தோற்றினவனுடைய மார்வை இரண்டு கூறாம்படி பிளந்து பொகட்டவனுக்கு-ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் உடைய
வார்த்தையாலே முன்பு அவன் பண்ணின பராதி கூல்யத்தை எல்லாம் பொறுக்க வேணும் என்ன பொறுத்துப் போந்தான் –
இனி இவன் இருக்கில் இவனுக்கு அநர்த்தம் என்னும் அளவில் பின்னை அழியச் செய்து விட்டான் ஆயிற்று

—————–

பிச்சச்சிறு பீலி பிடித்துலகில் பிணந்தின் மடவாரவர் போல் அங்ஙனே
அச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத் தணி மா மலர் தூய்
நச்சிந மனாரடையாமை நமக்கருள் செய்யென வுள் குழைந்தார்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கிடம் மா மலையாவது நீர் மலையே -2-4-8-

எங்கள் பக்கலிலே அருளைப் பண்ண வேணும் என்று நெஞ்சு நெகிழ்ந்து ப்ரேமயுக்தராய் கொண்டு
நாள் தோறும் அனுசந்திக்குமவர்கள்-நிச்சம் அருள் செய்யும் அவர்க்கு –மா மலையாவது நீர் மலையே

————–

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9-

திருவடிகளில் விழுந்து ஆஸ்ரயிப்பார் உடைய பாபங்களை வாசனையோடே நசிப்பிக்கும் –
அவ்வரியத்தையும் செய்யும்-துர் வ்யாதிரி வந ஸ் யதி-என்கிறபடியே –
இப்படி இருக்கையாலே அதுவே நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஸ்தானம் –

—————————-

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-

ஆஸ்ரயண காலத்திலேயே கர்மங்கள் அடைய விட்டோடிப் போம் –
அதுக்கு மேலே பிராப்தியும் வேண்டி இருக்கில் அதுவும் அவர்க்கு சுலபமாம் –
அன்றிக்கே-பூமிக்கு எல்லாம் தாங்களே நிர்வாஹகராய் சந்தரனைப் போலே இருக்கிற
வெண் கொற்றக் குடைக் கீழே இருந்து ஐஸ்வர்யத்தை அனுபவித்து பின்னையும் திருவடிகளிலே கூடப் பெறுவர்

———————-

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-

சர்வ வித ரஷணம் பண்ணுமவன் -சர்வருக்கும் ஸ்ப்ருஹணீ யமாய் –தானே தாரகனுமாய்-பிரபல பிரதிபந்தகங்களை
கேசி வாயைக் கிழித்தாற் போலே அநாசேயேந போக்க வல்லவனை-என்னை அனன்யார்ஹன் ஆக்கினவனை
இடர் பட்டு வரவும் பிற் பாடாகை அன்றிக்கே –இவன் இடர் பட்ட மடுவின் கரையிலே வந்து உதவினாப் போலே
நான் நோவு படுகிற சம்சாரத்திலே -சம காலத்திலேயே –காணப் பெற்றேன் என்கிறார்

—————-

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்
பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-

எனக்கு ஜனகனாய் எனக்கு சென்று ஆஸ்ரயிக்கலாம் படி சீலவானாய் உள்ளவனை –காட்டுத் தீயில் வர்ஷித்தாற் போலே
நோவு படுகிற சம்சாரத்திலே காணப் பெற்றேனே-

———————

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-

ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய
ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-

——————

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-

ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக இருந்த செயலாலே லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –
எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-
தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை –
அவனை ரஷகன் என்று அறியப் பெற்றேன் –எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-

—————————

பாய்ந்தானைத் திரி சகடம் பாரி வீழப்
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப
மேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று
அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-

நிலவறையிலே பிரவேசிப்பித்து நலிய வேணும் என்று –பதிபடை கிடந்த மல்லர் முடிந்து போம் படி சீறினவனை-
அந்த க்ருத்ரிமத்தைத் தப்பி என்னை எழுதிக் கொண்டவனை-காணப் பெற்றேன் என்கிறார் –

—————————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –
உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே
காணப் பெற்றேன் -என்கிறார் –

———————-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-

அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
செவ்வியாருக்கு தான் செவ்வியனாய் பரிமாறும்படியும் துஷ்டர்க்குத் தானும் அப்படி இருக்கும் படியும்
காண வேணும் என்று தட்டித் திரிகிற நான் பசித்தவன் ஜீவிக்கப் பெற்ரார் போலே காணப் பெற்றேன் –
சாஸ்தரங்களிலே கேட்டு-ஒரு தேச விசேஷத்தால் சென்றால் காண இருக்கை அன்றிக்கே
விடாய்த்த இந்நிலத்திலே காணப் பெற்றேன்-

——————

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

சர்வேஸ்வரன் ஆகிறான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன்னோடு ஒத்த வரிசையை கொடுப்பன் ஒருவன் என்று
கொண்டு அவனுடைய நீர்மையை சொல்லுகைகாக –அல்லாதார்க்கு உத்கர்ஷத்தை சொல்லா நிற்கும் பிரமாணங்கள்
அவர்கள் தாங்களும் புழுக் குறித்த எழுத்துமா போலே –சிலவற்றைத் தோற்றச் செய்யும் –
அவற்றைக் கண்டு இவர்கள் பக்கலிலேயும் குவால் உண்டு -என்று நாட்டார் பிரமிக்கைக்கு உடலாய் இருக்கும் –
ஆக பிரமாண கதி இருந்தபடியாலும்-சேதனர் மந்த மதிகளாய் இருந்தபடியாலும்
இவற்றின் தாத்பர்யம் அறியாதே-சம்சார சாகரம் -என்று சொல்லுகிற கடலிலே புக்குப் போம் இத்தனை இறே –
அவற்றை அனுசந்தித்துச் சொன்ன இவ் வாழ்வார்கள் ஈரச் சொல் இன்றாகில் – என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார்-
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் பரிய இருக்கிறவன் இங்கே வந்து சாய்ந்து அருளுவதே –
இது என்ன நீர்மை -என்று எப்போதும் எண்ணப் படுமவன்
படபாமுகாக்னி நிறைந்தால் போலே காண வேணும் என்று
உறாவிப் பட்டினி விட்ட கண்களின் உடைய உறாவுதல் தீர காணப் பெற்றேன் –
விலஷண சரீரத்தைப் பரிக்ரகித்து-ஒரு தேச விசேஷத்தே போய் காண்கை யாகிறது
ஆரேனும் பசிக்க ஆரேனும் ஜீவித்தாப் போலே இருப்பது ஓன்று இறே
காண வேணும் என்று உறாவின கண்களோடு காணப் பெற்றேன்-

————————–

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான வழியைக் கண்டு வைத்தவனை –
அப்பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே இக் கண்ணாலே காணப் பெற்றேன் –

—————–

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை
பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை தல சயனத்துத்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான்
வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10-

சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –ப்ராக்தமான கர்மங்களை தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் – அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம்

———————-

நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-

பிரயோஜனாந்த பரராய் –தன்னை உகவாது இருப்பாருக்கும் கூட அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற இந்நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை ஒரு வஸ்துவாக நினைத்து இரோம் என்கிறார்-
கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது
அஸ்தாநே பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்-மஹா மதிகள் என்று –
நித்ய சூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –
இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –
இது செய்யாதே இருப்பாரை – அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-
கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –எண்ணப் பெற்றிலோம் என்ற
அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே-அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .

———————

பார்வண்ண மட மங்கை பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே–2-6-2-

முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள் என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில் பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை
கீழ்ப் பாட்டில் அங்கு நமக்கு எண்ணுகைக்கும் எண்ணாமைக்கும் பிராப்தி இல்லை –-இதுக்கு எல்லாம் கடவார் அவர்கள் என்கிறார் –
அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள வுரியார் –

————————–

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் –
அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –

———————-

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-

அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து
கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே-
குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-

——————-

பிச்சச் சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நச்சித் தொழுவாரை நச்சென்றன்நன்னெஞ்சே–2-6-5-

குத்ருஷ்டிகள் சொல்லுகிறவற்றை ஆஸ்ரயித்து வர்த்தியாதே –ஆஸ்ரிதர்க்காக திரு வெக்காவில் படுக்கை மாறிக் கிடந்தவனை –
ஓர் ஆஸ்ரிதனுக்காக தரை கிடக்கிற தேசம் –அவன் தனக்கு பரம ப்ராப்யமாக கொண்டு வந்து நிற்கிற தேசத்தை –
கர்த்தவ்யம் என்று தொழா நிற்கச் செய்தே புறம்பே-நெஞ்சு அந்ய பரமாய் இருக்கை அன்றிக்கே
ஆசையின் கார்யம் தொழ வேண்டும் என்று தோற்றும்படி இருக்கை –
திரு கடல் மல்லையைத் தொழுகிறவர்கள் உடைய அவ்வேற்றம் எல்லாம் நமக்கு உடலாக அவர்களை ஸ்நேஹி-என்கிறார்-

———————

புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கைம்மா களிற்றினமும்
நலம் கொள் நவ மணிக் குவையும் சுமந்து எங்கும் நான்றொசிந்து
கலங்களி யங்கும் மல்லைக் கடல் மல்லைத் தல சயனம்
வலங்கொள் மனத்தாரவரை வலங்கொள் என் மட நெஞ்சே–2-6-6-

ஸ்ரீ திருக்கடல் மல்லையிலே சுழிக்கும் நெஞ்சு உடையவர்களை மட நெஞ்சே––வலம் கொள் –
நமக்கு அவர்கள் நின்ற நிலை போராதுஅவர்கள் பக்கல் அநுவர்த்தநத்திலே அந்வயிக்க வேணும் –

——————–

பஞ்சிச் சிறு கூழை உருவாகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவனூர் கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழு வாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே-2-6-7-

அந்த ஸ்ரீ திருக்கடல் மல்லையையும் அங்கு கிடக்கிற ஸ்ரீ நாயனாரையும் தேடி இராதே
தொழுவார்கள் உத்தேச்யராய் தொழு
என் தூய் நெஞ்சே –ததீய சேஷத்தளவிலே நிற்கும்படியான சுத்தியை யுடையை யிறே நீ –

———————

செழு நீர் மலர்க்கமலம் திரை யுந்து வன் பகட்டால்
உழு நீர் வயலுழ வருழப்பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல் மல்லைத் தல சயனம்
தொழு நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே –2-6-8-

ஸ்ரீ திருக் கடல் மல்லையைத் தொழுகை காதா சித்கமாகை தவிர்ந்து ஸ்வபாவம் ஆம்படியான நெஞ்சை யுடையாரை –
அவர்களுக்கு ஊரைத் தொழுகை யாத்ரையானவோபாதி அவர்கள் தங்களை தொழுகை கிடாய் நெஞ்சே உனக்கு யாத்ரை –
பாகவத சேஷத்வம் நன்று என்று உபதேசிக்கலாம் படி இறே உன் சுத்தி இருக்கிறது –

—————————-

பிணங்களடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்களி யங்கும் மல்லைக் கடல் தல சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9-

இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை –
அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்-

———————-

கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-

ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-

——————

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-

முதலிலே ஸ்ரீ பாற் கடலாய் அது தன்னை கோதாக்கி-அம்ருதமாய் –அவ் வம்ருதம் தானே கோதாம்படி
பிறந்தவள் ஆயிற்று –வடிவு அழகாலும் பருவத்தாலும்-பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-
திருமுகம் என்று சமுதாய சோபை இறே அவளுக்கு சொல்லுகிறது –
குவளை யங்கண்ணி –என்று அவயவ சோபையால் உண்டான ஏற்றம் சொல்லுகிறது இவளுக்கு –
அவன் தன்னில் காட்டில் –அஸி தேஷணை-என்று அவள் கண்ணுக்கு உண்டான ஏற்றதோ பாதியும்
போருமாயிற்று அவளில் காட்டில் இவள் கண்ணுக்கு உண்டான ஏற்றம் –
அவள் மார்வை ஆசைப்பட்டாள்
இவள் திருவடிகளை ஆசைப்பட்டாள்
அவன் வாசி அறிந்தார் அவன் மார்வை ஆசைப் படுவார்கள் –
அவளோடு கூடினவன் வாசி அறிந்தார் அவன் திருவடிகளை பற்றும் இத்தனை இறே –
ஸ்ரீ கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே கை கழியப் போனாரும் பிழைக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையிலே
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே
பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை

—————————

துளம்படு முறுவல் தோழியார்க் கருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம்படு குவளைக் கண்ணினை எழுதாள் கோல நன் மலர் குழற்கு அணியாள்
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழியாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-

உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே
அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று –
இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –

———————–

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கணியிலும் தழலாம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே -2-7-3-

நை வார்த்தைர் ந ச பூஷணை -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது
ஸ்ரீ ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது

——————————

ஊழியில் பெரிதால் நாழிகை யென்னும் ஒண் சுடர் துயின்றதால் யென்னும்
ஆழி யும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிதாம்
தோழியோ வென்னும் துணை முலை யரக்கும் சொல்லுமின் என் செய்கேன் யென்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-

ஏழை-கிடையாதது தூர நின்றால் கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை –உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்

—————————–

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

——————–

தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயிலங்கை
வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயத்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

உதவாதவன் உதவாது ஒழிகை அன்றிக்கே உதவும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
நம் தசை இதுவாய் இருக்க உதவாது ஒழிவதே –என்று மோஹிக்கும்-
நம் தசையை உடையாள் ஒருத்திக்கு உதவினவன் அன்றோ
என்று அந்த அண்ணிமையை அனுசந்தித்து இனியளாய்-
அணித்தாக உதவினவன் நமக்கு வாராது ஒழிவதே -என்று மயங்கும்
இவளுடைய வை வர்ண்யமும் அத்யாவச்யமும் செல்லாமையும் வடிவு அழகும் பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே ஸ்ரீ திருவிடவெந்தை யில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற ஸ்ரீ திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-

———————

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கன்பு ஒன்றிலளால்
வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –

————————

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

நம் தசை இருந்த படியாலே ஸ்ரீ திரு நீர் மலையிலே போய் புக்கே விடுவோம் போலே இருந்ததீ
யென்று விலக்க நினைக்கிற தாயாரோடு தோழிமாருக்கு சொல்லுமா போலே சொல்லா நின்றாள் –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில்
நீர் நினைத்து இருக்கிறது என்-

————————–

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-

தாய் கைவிடுதல் தான் கை விடுதல் செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி

————————

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-

அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார்
அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள்-தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார்
கூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –

————————

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-

ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே
இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-
அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –
ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –
உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் –

——————

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-

வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது –
சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது –
இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார்
பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்-

——————-

செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-3-

யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய
கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை –
கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல
உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-

—————————–

மஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை
அஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-

அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து
அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது
முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே
அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார்-

————————–

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-

கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா
உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார்

————————–

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்
பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-

ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார்
பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம்
இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்
சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய்
நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-

————————–

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-

இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா
உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-

——————————

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-

வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன-
சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் –
உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –

—————————-

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே
ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன்
அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன்
ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன்
அன்றோ நான் என்கிறார்-

————————

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10-

உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே
நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார்-

——————

சொல்லு வன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-

தாம்தாம் கர்மத்தாலே கிலேசப்படுகிற பிராணிகளை தீம்பிலே கை வளர்ந்த பிரஜையை காலிலும் கழுத்திலும்
விலங்கிட்டு வைக்கும் பித்ராதிகளைப் போலே இவற்றுக்கு ஹித ரூபமாக உபசம்ஹாரத்தை
பண்ணும் ருத்ரனுக்கு அந்தர்யாமியாயும் ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணியும் –
பிரஜாபதிக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்துப் போருகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம் ஆகிறது-
அவன் ஆஸ்ரயிக்கிற ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்-நல்ல நீர் நலம் சூழ்ந்து அழகியதாய் இருக்கிற ஸ்ரீ கச்சியில் –
ஸ்ரீ திருக்கடல் மலை யாயிற்று படை வீடு-என்கிறார்-

———————

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு
இவன் சத்ரு வதம் பண்ணினதோடு
வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்-

———————

உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மா வுருவாய்க் கடலுள்
வரந்தரு மா மணி வண்ணனிடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல் நெடு வாயிலுகச் செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே-2-9-3-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் –
கட மா களி யானை வல்லான் -என்றும்
ஆடல் மா வலவன் -என்றும்
மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –

———————–

அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரோடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரியச் செருவில் முனிந்து
பண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே-2-9-4-

சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி
முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்

————-

தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5-

நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது –
பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-

———————

திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேற் படை முன் உயர்த்த
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே–2-9-6-

ஹிரண்யன் உடலுக்கு வளையாத திரு உகிரை ஆயுதமாக உடைய நரசிம்ஹமாய் –
பெரு மிடுக்கனான ஹிரண்யன் உடைய மார்வை யுத்தத்திலே புண் படும்படி -போழ்ந்த புனிதன் இடம் –
பண்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுவர விண்ணகரம் அதுவே என்கிறார்-

————-

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கரு ஊர் வெருவ
பல்படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-7-

மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்
முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு
அளந்தவனுக்கு இடந்தான் ஸ்ரீ பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்-

—————

குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை
யடைத்தவன் எந்தை பிரானது இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென் மெலியில் வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த
படைத்திறல் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-8-

சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு
நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் –
அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார்

——————

பிறை யுடை வாணுதல் பின்னை திறத்து ஒரு கால் செருவில் உருமின்
மறை யுடை மால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் தான் தடம் சோந்து அழகாய கச்சி
கறை யுடை வாள் மற மன்னர் கெடக் கடல் போல் முழங்கும் குரல் கடுவாய்
பறை யடைப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே—2-9-9-

நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி .
நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம்
கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக
தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-

——————–

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10-

பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார்
பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –
உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார்

ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும்
அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
அதாகிறது
சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது –
அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே-

———————

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-

ஆபத் சகன் -என்கிறது –

———————-

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்
சந்தணி மென்முலை மலராள் தரணி மங்கை தாமிருவர் அடி வருடும் தன்மையானை
வந்தனை செய்து இசை ஏழ் ஆறங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10–2-

அவனை ஆஸ்ரயித்து நான்மறைகளைக் கொண்டு-ஆத்மேத்யேஸ்து க்ருஹணீயாத் -என்றும்
ஆத்மேதிதிது பகச்சந்தி க்ராஹயந்திச -என்கிறபடியே
அவனை பிரகாரியாகவும் தங்களை பிரகாரமாகவும் காலங்கள் தோறும் ஒருப்படிப்பட அனுசந்திதுச் சொல்லுகிற
அத ப்ராஹ்மியான ஸ்ரீ லஷ்மி மாறாமே செல்லுமாயிற்று -ஸ்ரீ பகவத் உபாசன ரூப சம்பத்-

————–

கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம்மே வரத்தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3-

கையிலே திரு ஆழியையும் விட அறியாதே-ஆகாச அவகாசத்தை இடம் அடைத்துக் கொண்டு தோற்றி –
ஏவர வெளியடைய-அதினுடைய புண் ஆறும்படியாக திருக் கையாலே ஸ்பரசித்து
திருப் பரியட்டத் தலையாலே ஒற்றிப் பண்ணின சிசிரோ உபசாரங்களை நினைக்கிறது-

—————–

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால் கண்ண நீர் அரும்பி -அது தான் கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும்
சேஷ பூதருக்கு நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்
ஆயனே கரும்பு-மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய
கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று-

—————

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எய்ற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும் மண்டபம் ஒண் தொளி யனைத்தும் வாரமோத
சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-

ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்-
ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் –
சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து
இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று-

———————

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை
வெறியார்ந்த மலர்மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் தனக்கு தாரகமாய் அது பெறாத போது அவன் முடியும் அளவாய் இருக்குமா போலே
அவன் வியாபாரம் தங்களுக்கு பிராணகரமாய் இருக்கும்படியாலே அத்தை தேடா நிற்பார்கள் இறே இவர்கள்
கருங்களிறே போலே-தன்னை உணராதே நின்ற நிலை-பிரதிகூலரான துர்யோநாதிகள் கட்டின கட்டாகில் இறே
அவிழ்த்துக் கொண்டு போக வல்லது-அனுகூலர் கட்டினால் அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இறே-
விஸ்மய நீயமான கலையை வாகனமாக உடையளாய் எட்டுத் தோளை உடைய துர்க்கை அவள் ஆயிற்று அவ் ஊருக்குக் காவல்
பிறந்த அன்று காட்டிக் கொடுத்துப் போனோம் -என்னும் அவ் இழவு தீர அவள் ஊர்ந்து நோக்குகிற தேசம் ஆயிற்று
இதுக்கு முன்பு இங்கனே இருப்பதொரு லாபம் வ்யுத்புத்தி பண்ணி அறியாத நான் ஸூ ரஷிதமான தேசத்திலே காணப் பெற்றேன்-

——————

இருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி இனவிடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும்சகடம் இற உதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை
கருங்கமுகு பசும்பாளை வெண் முத்து ஈன்று காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

வில் விழவு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு அழைத்து க்ருத்ர்மத்தாலே நலிய அழைத்த கம்சனை
அவன் நினைவு அவன் தன்னோடே போக்கி அவனுக்கு மிருத்யு ஆனவனை-

——————

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை
போரேறொன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-8-

இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்-
ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய்
வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-

———————

தூவடிவின்பார்மகள் பூ மங்கையோடு சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போலே நின்று கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு வுருவமானான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-9-

ஒரு கல்பக தரு பணைத்து பூத்தாப் போலே ஆயிற்று ஸ்ரீ பிராட்டிமார் உடன் திவ்ய ஆயுதத்தை தரித்தால் இருக்கும் படி-
தனிக் கற்பகம் அன்றிக்கே சோலை செய்து இருப்பதொரு கல்பகம் போலே நின்று –
அதாகிறது-சர்வ அபேஷித ப்ரதனாய் இருக்கும் படி –
நாங்கள் எங்கள் உடைய ரஷணத்துக்கு கடவோம் அல்லோம் நீயே கடவாய் -என்று
தன் கை பார்த்து இருக்கும் அவர்கள் பக்கலிலே மிக்க பிரசாதத்தைப் பண்ணும்படியை மநோ ரதிக்குமவனை –
அருள் பண்ணா விட்டால் தான் விடலாமோ – இவன் வடிவைக் கண்டால் –

———————–

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

இப்பத்தையும் அப்யசிக்க வல்லவர்கள் –ஐஸ்வர்யாத்துக்காகவும் ஆத்ம பிராப்திக்காகவும்
பகவத் பிராப்திக்காகவும் லோகத்தில் உள்ளார் திரண்டு ஆஸ்ரயிக்க-
ஆஸ்ரயித்த போதே ஆஸ்ரயித்தார் அபேஷிதத்தை கொடுக்கைக்காக எங்கும் புக்கு வியாபித்து
அந்யைரத்ருஷ்டனாய்-நம்மை ஆஸ்ரயிப்பாரோ என்று அவசர பிரதீஷனாய் நிற்கிறவனைக் காணப் பெறுவார்-

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: