ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –மூன்றாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

எம்பெருமானுடைய எளிமையினை உபதேசிக்கப் புக்கு, அவன் வெண்ணெய் களவு கண்ட சரித்திரத்தில்-
நவநீத ஸுர்ய சாரித்ரத்திலே – அழுந்துகிறார்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-

——————

எத்திறம்’ என்ற ஸ்ரீ ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ?
இவர் மோஹித்துக் கிடக்க,
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப் பெருமாள் நோக்கிக் கொண்டு கிடந்தாற்போன்று,
ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும்-பலிதமான வ்ருக்ஷத்தை – பழங்கள் நிறைந்த மரத்தைப் –
பஷி ஜாதங்கள் -பறவைக் கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்.
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப் பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும்
உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக் கொண்டிருந்த இடத்தைக் காட்ட,
அவ் விடத்தைக் கண்டவாறே சத்ருனோ அனந்தர ஸ்த்தித ( ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் எண்ணும்படி )
என்று மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர்,
சிரேண சம்ஜ்ஞாம் பிரதி லப்ய சைவ விசிந்தயாமாச விசால நேத்ரா ( விசாலமான கண்களையுடைய ஸ்ரீ பிராட்டி
பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’) என்பது போன்று-
அனுபவிதாக்கள் பாக்யத்தாலே – பெரியோர்களுடைய நல் வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து,
‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.
ஆயின், அங்கு அனுபவிக்கும் பெரியோர் உளரோ?’ எனின்,
‘நல்லார் நவில் குருகூர்’ அன்றே? ஆதலால், அங்குள்ள சத்துக்கள் – பெரியோர் அனைவரும் இவரைப் பற்றிப் படுகாடு கிடந்தனர்.
கேட்டதற்குப் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்று கூறி, அதனை விளக்குவதற்கு அதன் தொடர்ச்சியாக
‘மத்துறு கடை வெண்ணெய்’ என்பது முதலாகச் –ப்ரசக்த அனுபிரசக்தமாக -சிலவற்றைக் கூறி,
‘எத் திறம்’ என்று மோஹித்துக் கிடந்தீர், என்றார்கள்,
‘தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.
அதாவது,
பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்;
இப் பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி.
மேல் பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

பெரியவர்களுடைய ஸ்திதி கமந சயநாத் அவஸ்தைகள் எல்லாம் இவ்வாத்மாவுக்கு பகவத் பக்தி வர்த்தகங்களாய்க் கொண்டு
தஞ்சமாய் இருக்கையாலும் காமிநிகளுடைய வியாபாரங்கள் எல்லாம் காமுகருக்கு அவர்கள் இடத்தில் அபிநிவேசத்தாலே
போக்யங்களாய் இருக்குமா போலே இவ் வாழ்வார் பக்கல் தமக்கு உண்டான அபிநிவேசத்தாலே அவருடைய
மோஹ அவஸ்தையும் தமக்கு போக்யமாய் இருக்கையாலும் அதில் தமக்கு உண்டான ஆதார அதிசயம் தோன்றும்படி
அவர் மோஹித்த போது ஞாதாக்கள் எல்லாம் அவரை நோக்கிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் பிரகாரத்தை
அருளிச் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி அதிஷ்டிக்கை அருளிச் செய்கிறார் –
இவர் இப்படி மோஹித்துக் கிடந்த ஆறு மாசமும் எறும்புகள் கடியாதபடி ஞாதாக்கள் நோக்கிக் கொண்டு இருந்த பிரகாரத்தை
ச நிதர்சனமாக அருளிச் செய்யா நின்று கொண்டு அதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –
பழுத்த மரத்தைப் பழத்தில் ஆசையால் பக்ஷிகள் சூழ்ந்து கிடைக்குமா போலே பகவத் ப்ரேமத்தாலே பரிபக்வமான இவர் பக்கல் நின்றும்
நமக்கு ப்ரேமம் உண்டாய் க்ருதார்த்தராக வேணும் என்று இவரை வளைத்துக் கொண்டு கிடந்தார்கள் என்கை —
ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமான அர்த்த விசேஷ அனுஷ்டான விசேஷ ஞான பக்தி வைராக்யாதி சித்த்யர்த்தமாக என்றபடி —
ரக்ஷண புருஷார்த்த லிப்சிஸைகளுக்காக இரண்டு த்ருஷ்டாந்தங்கள் —
ஸ்ரீ குகப்பெருமாள் ஆஸ்ரமத்தின் நின்றும் பெருமாள் புறப்பட்டு எழுந்து அருளினதுக்கும் அங்கு ஸ்ரீ பரதாழ்வான் எழுந்து அருளினதுக்கும்
மத்யே இருபத்திரண்டு நாள் வ்யவதானம் உண்டாய் இருக்கச் செய்தேயும்-
தத் சயன சிஹ்னங்களை அனுபவித்த போதே ஸ்ரீ குகப்பெருமாள் இவ்விடத்தை ரஷித்துக் கொண்டு இருந்தமை சித்தம் என்று கருத்து –

நல்லார் நவில் -ஆச்சார்ய விஷயத்தில் சேஷித்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு ஸ்ரீ ஈஸ்வரனை
தத் சம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார் –
தப்பச் சொன்னோம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் என்று சோபாதிகம் என்று தோன்றும்படி சொன்னோம் என்றபடி –
அழித்து ப்ரதிஜ்ஜை பண்ணுகையாவது -நிருபாதிகத்வம் தோன்றும்படி சொல்லுகை –
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வேஸ்வரனாய் இருக்குமவன் அவதரித்து சேதன கத அப்ரதிஷேதாதிகமும் அபேக்ஷியாதே
அபார காருண்யாதிசயத்தாலே எளிவருகையே ஸ்வ பாவமாக யுடையனாகிற பிரகார ஸஹிதமாக அருளிச் செய்கிறார் இதில் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல வீடாம்
தெளிதரு நிலைமை யது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரு மருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே–1-3-2-

—————–

‘எளியவன்’ என்றார்;
எளிமையை -ச பிரகாரமாக -வகைப்படுத்தி அருளிச் செய்தார்;
இவனுடைய அவதாரத்தின் ரஹஸ்யம் – மறைபொருள் அறிதல் ஒருவர்க்கும் நிலம் அன்று என்கிறார் இப்பாசுரத்தில்

கீழே இரண்டு பட்டாலும் சொன்ன ப்ரமேயத்தை அனுபாஷித்துக் கொண்டு –
மாயையை அறிபவர் யாரே -என்கிற பதத்தைக் கடாக்ஷித்துக் கொண்டு இப் பாட்டுக்கு
சங்கதி அருளிச் செய்கிறார் -வாக்ய த்ரயத்தாலே –
மாயை என்றதை பற்ற அவதார ரஹஸ்யம் என்றது-

அமை வுடை அற நெறி முழுவதும் உயர் வற உயர்ந்து
அமை வுடை முதல் கெடல் ஒடி விடை அற நிலம் அதுவாம்
அமை வுடை அமரரும் யாவையும் யாவருந் தானாம்
அமை வுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?–1-3-3-

————————–

‘தானாம் அமைவுடை நாரணன்’ உடைய அவதாரத்தின் ஸுலப்யம் – எளிமை ஒருவர்க்கும்
அறிய நிலம் அன்றோ? என்னில்,-
ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய் அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபனாய் என்கிறார்.

யஸ்ச ராமம் ந பஸ்யேத்து யஞ்ச ராமோ ந பஸ்யதி -நிந்திதஸ் ச வசேல் லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே-
இப்பாட்டுக்கு சம்வாதம்
ய என்கையாலே ஞானாதிகளையும் யம் என்கையாலே ஞான ஹீனனையும் சொல்லுகிறது –
அறிய நிலம் அன்று அறியவும் நிலம் அன்றோ -என்றபடி –
அறிய நிலம் அன்று என்று அறிகைக்கு ஸூலபனாய் இருக்குமே

யாரும் ஓர் நிலைமையன் என அநி வரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறி வெளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிறபல உடைய எம் பெருமான்
பேரு மோர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே–1-3-4-

——————–

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

——————-

அவதாரத்தில் ஆஸ்ரயியுங்கோள் ‘அவதாரங்களை வணங்குங்கோள் என்று கூறுகின்றீர்;
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார ( ‘‘பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ )என்கிறபடியே,
பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;
அவர்கள் மூவரும் ஒத்த காரியத்தில் அதிகரித்து நின்றார்கள்;
இப்படி நிற்கையாலே, மூவரும் முதல்வரோ? மூவரில் ஒருவன் முதல்வனோ? மூவர்க்கும் அப்பால் ஒருவன் முதல்வனோ?’ என்று
எங்களால் பகுத்து அறியப் போகாமையால் பற்றுவதற்கு அருமையாக இருக்கின்றது;
ஆதலால், நாங்கள் பற்றுவதற்குப் பற்றக் கூடிய பொருளை நிரூபித்துத் தரலாகாதோ?’ என்ன,
‘காண்கிற சரீரமே ஆத்துமா என்னும் நிலை தவிர்ந்து,
சரீரத்திற்கு -வ்யதிரிக்த -வேறுபட்ட ஆன்மா ஒன்று உண்டு என்று அறிதல்தானே அரிது?
வருந்தி அதனை அறிந்தானே யாகிலும், பிரமன் சிவன் முதலியோரைச் சரீரமாகக் கொண்டு
தான் ஆத்துமாவாய் நிற்கிற சர்வேஸ்வரன் நிலையினை அறிதல் முடியாது;
ஆன பின்னர், இவ்வழியே இழிந்து பற்றப் பாருங்கள்,’ என்று,
ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-
ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்கிற பதங்களைக்
கடாக்ஷித்து -சங்கா பூர்வகமாக சங்கதி –
மனப்பட்ட தொன்றை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -இத்யாதியைப் பற்ற
ஆஸ்ரயணீய வஸ்து இத்யாதி –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -என்றதை பற்ற ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றது

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு அரிது உயிர்காள்!
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே–1-3-6-

———————

அப்படியே செய்கிறோம்,’ என்று ஆறியிருந்தார்கள்;
‘ஐயோ! நீங்கள் உங்களுடைய ஆயுளின்-ஸ்தியையும் – நிலையும்,
இழக்கிற விஷயத்தின் நன்மையும் அறியாமையால் அன்றோ ஆறியிருக்கின்றீர்கள்?
நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப் பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளை யுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்து கொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;

‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப் பாசுரத்தில் விசேஷம்-கீழில் பாட்டில் காட்டில் –

நம்முடை நாளே என்றத்தை பிரதானம் ஆக்கிக் கொண்டு- நன்று என நலம் செய்தவனிடை -என்னும் அளவும் கடாக்ஷித்து சங்கதி –
நன்று எழில் நாரணன் -என்றதை பற்ற -நன்மையையும் அறியாமை இறே-என்றது –
நலம் செய்வது என்றதை பற்ற -பக்தியைப் பண்ணப் பாருங்கோள் என்றது
கீழ் யுக்த அர்த்தத்தையே சொல்லிற்று ஆகில் இப் பாட்டு வ்யர்த்தம் அன்றோ என்ன
விசேஷம் காட்டுகிறார் நீங்கள் இத்யாதி –

ஒன்று எனப் பல என அறி வரு வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே–1-3-7-

————-

உடலை விட்டு உயிர் நீங்குவதற்கு ஒரு நாள் முன்னராயினும் இறைவனைப் பற்றும்படி-ஆஸ்ரயிக்கும் படி – கூறுகின்றீர்;
நீண்ட காலமாக நாங்கள் பண்ணி வைத்த பாவங்கள் விலக்காவோ?
இனி, அவனைப் பற்றுவதற்குக் காலந்தான் உண்டோ?’ என்ன,
‘நீங்கள்-ஆஸ்ரயணத்திலே – பற்றுவதற்கு ஒருப் படவே பாவங்கள் அடங்கலும் அழிந்து விடும்;
திருமகள் கேள்வனைப் பற்றுவது ஆகையாலே காலங்கழிந்தது என்று இருக்கவும் வேண்டா;
நீங்கள், ‘தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி, நடக்கும்போது-(பெரிய திருமொழி. 1. 3 : 5.)
அக் அக்கோலோடே சாயவும் அமையும்,’ என்கிறார்.

நம்முடை நாளே -என்று சீக்கிரமாக ஆஸ்ரயிக்கச் சொன்ன இவருடைய வார்த்தையைக் கேட்ட சம்சாரிகள் –
ஸ்ரேயாம் ஸி பஹு விக்நாநி பவந்திமஹதாமபி -என்கிறபடியே நாங்கள் பாப பூயிஷ்டர்கள் ஆகையால்
எங்கள் விரோதிகள் எங்களை ஆஸ்ரயிக்க ஒட்டாது-நாங்கள் வ்ருத்தர்கள் ஆகையால் பூர்ண உபரசனத்துக்கு அசக்தர் –
இத்தனை காலமும் வ்யர்த்தமே போயிற்று இனி அல்ப காலமே இருக்கப் போகிறது ஆகையால் காலம் தான் உண்டோ -என்று சங்கிக்க –
அவர்களுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
ஆஸ்ரயணத்தில் ஒருப்படவே -என்றது வணங்கி என்றதைப் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது -உடனே மாளும்-என்றதை பற்ற –
திருவுடை அடிகள் -என்றதை பற்ற ஸ்ரீ யபதி ஸமாஸ்ரயணம் –
மாளும் ஓர் இடத்திலும் என்றதைக் கடாக்ஷித்து -நீங்கள் தண்டு காலா இத்யாதி -இப்படி தடுமாறி நடப்பதற்கு முன்னே –
தண்டு -அக்கோலோடே சாயாவும் அமையும் -காலால் கொள்ளும் பிரயோஜனத்தை தண்டத்தாலே யாயிற்று கொள்வது –

நாளும் நின்று அடும் நம பழமை அம் கொடு வினை யுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகம் மலம் அறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலங் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–1-3-8-

————————

கீழ் – ஆறு, ஏழாம் பாசுரங்களால் பிரமன் சிவன் இவர்களுடைய -அபரத்வமும் -தலைமை இன்மையினையும்,
சர்வேஸ்வரனுடைய பரத்வமும் அருளிச் செய்தார்:
இப் பாசுரத்தில் அவர்கள் இருவரும் இவனைப் பற்றி-லப்த ஸ்வரூபராய் – ஸ்வரூபத்தை அடைந்தவர்களாய்
இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.
‘ஆயின், பிரமன் முதலியோர்கட்கும் உத்பாதகனாய் காரணனாய் -அவர்களுக்கும் ரக்ஷகனான சர்வேஸ்வரன்,
அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின்,
ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் –
பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், –
ருசி ஜனகன் ஆகைக்காகவும்-
ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’ என்று-
பரித்ராணாம் ஸாதூ நாம் – அவன்தான் அருளிச்செய்து வைத்ததுவே காரணம்.
‘ஆயின் துஷ்க்ருதர் விநாசம் -, பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் யாது பற்றி?’ எனின்,
‘பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் அதனுடைய பலமாய் வருமதுவே,’ என்று அவன் தானே அருளிச் செய்தான்-

இப் பாட்டுக்கு அர்த்த த்வய அனுகுணமாக சங்கதி த்வயமாதல் –
அன்றிக்கே ஏக சங்கதியாய் கீழ் வாக்ய விவரணமாய் அவர்கள் லப்த ஸ்வரூபராய் இருக்கிற படியையும்
அவதாரத்துக்கு ஹேதுவையும் அருளிச் செய்கிறார் என்றுமாம்

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத் துந்தித்
தலத்து எழு திசை முகன் படைத்தநல் உலகமுந் தானும்
புலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே–1-3-9-

————-

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க;
அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை அனுபவிப்போம்,’
என்று பாரிக்கிறார்.

கீழ் எல்லாம் பரோபதேசம் பண்ணிப் போந்தவர்
இங்கே தாம் அனுபவிக்கக் கடவேன் என்று சொல்லுகிறது -அவர்கள் திருந்தாமையாலே –
இதுக்கு ஹேது அவன் பண்ணி வைத்த மயக்கம் என்று அனுசந்தித்து அருளி ஸ்வ அனுபவத்தில் இழிகிறார் என்கிறார் –
அவன் காட்டின வழி என்றது அவதரித்து வடிவழகைக் காட்டின வழி என்றபடி –

துயக்கறு மதியில் நன் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்த நல் அடிப்போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே–1-3-10-

————————–

நிகமத்தில் , இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள்.
முற்பட நித்திய சூரிகள் வரிசையைப் பெற்று,
பின்னை சம்சாரமாகிற அறவைச் சிறை வெட்டிவிடப் பெறுவர்கள் என்கிறார்.

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றதைக் கடாக்ஷித்து சங்கதி –
அறவைச் சிறையாவது -அறவைக்குத் தெய்வம் துணை என்னுமா போலே -அறவை என்று தனியாய் –
அதில் அத்விதீயமான சிறையாய் துக்க ஏக ரூபமான சிறை -என்றபடி -தயநீயமான சிறை என்றுமாம்

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: