ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –
பெரியாழ்வார் -4–1–6-/-4-7-8-/-4-7–9-/-4–9–4-/-5–4–10-/
நாச்சியார் -1–4-/-9-8-/-12–9-/-12–10-/
பெரிய திருமொழி -6–6–7-/-6–8–7-
நான்முகன் -71-
திருவாய் மொழி -4-6-10-/-5-3–6-/
———————-
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச-
வரண்டு வளைந்து -நரம்பும் எலும்பும் -தோன்றும்படி இருக்கையாலே
பொல்லாதான வடிவை உடைய பேய்ச்சியான அவள் முடியும்படியாக –
புணர் முலை வாய் மடுக்க வல்லானை —
அந்த வடிவை மறைத்து -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி -என்கிறபடியே
யசோதை பிராட்டி யோடு ஒத்த வடிவைக் கொண்டு வருகையாலே
தன்னில் தான் சேர்ந்துள்ள முலையில் -அவள் முலை கொடா விடில்
தரியாதாளாய் கொண்டு -முலைப்பால் உண்-என்று கொடுத்தால் போல் –
தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் கொண்டு பெரிய அபிநிவேசத்தோடே
வாயை மடுத்து உண்ண வல்லவனை –
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி -என்கிறபடியே வருகிற போதே அவள் க்ர்த்ரிமம் எல்லாம்
திரு உள்ளத்திலே ஊன்ற தர்சித்து இருக்க செய்தே -அவள் தாயாகவே இருந்து
முலை கொடுத்தால் போலே -தானும் பிள்ளையாகவே இருந்து முலை உண்டு அவளை முடித்த
சாமர்த்தியத்தை சொல்லுகிறது -வல்லானை-என்று
மா மணி வண்ணனை
விடப்பால் அமுதால் அமுது செய்திட்ட -என்கிறபடியே அவளுடைய விஷப் பாலை
அம்ர்தமாக அமுது செய்து -அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக்
கொடுக்கையாலே -நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான திருமேனியை உடையவனாய் இருந்தவனை
மருவும் இடம் நாடுதிரேல்
திரு உள்ளம் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம் தேடுகிறி கோள் ஆகில்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு- பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –
—————————————————
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4 7-8 –
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து-
கடலை செறுத்து-அணை கட்டி – படை வீடு செய்தது ஆகையாலே -திரை பொரு கடலால்
சூழப் பட்டு இருப்பதாய் -திண்ணியதான மதிளை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ மத் த்வாரகைக்கு ராஜாவானவன்
வண் துவராபதி மன்னன் -இறே
தன் மைத்துனன் மார்க்காய் –
ஸ்ரீ கிருஷ்ண ஆஸ்ரய ஸ்ரீ கிருஷ்ண பலா ஸ்ரீ கிருஷ்ண நாதச்ச பாண்டவா –என்கிறபடியே
தன்னையே தங்களுக்கு ஆஸ்ரயமும் -பலமும் -நாதனும் ஆகப்
பற்றி இருக்கிற -தன் மைத்துனமாரான பாண்டவர்களுக்கு பஷ பாதியாய் நின்று
அரசனை அவிய அரசினை அருளும்-
பொய் சூதிலே அவர்களை தோற்ப்பித்து-அவர்கள் ராஜ்யத்தை தாங்கள் பறித்து கொண்டு
பத்தூர் ஓரூர் கொடுக்க சொன்ன இடத்தில் கொடோம் என்று தாங்களே அடைய
புஜிப்பதாக இருந்த துரியோததா நாதி ராஜாக்கள் விளக்கு பிணம் போலே விழுந்து போகப்
பண்ணி -ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும்
அரி புருடோத்தமன் அமர்வு –
மகத்யாபதி சம்ப்ப்ராப்தே ச்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
ஆபத் தசையிலே ஸ்மரிக்க படுபவனாக -ஸ்ரீ வசிஷ்ட பகவானாலே
திரௌபதிக்கு சொல்லப் பட்டவனாய் –
ஹரிர் ஹராதி பாபானி துஷ்ட சித்ரை ரபி ஸ்மர்த-என்கிறபடியே
ஸ்மரித்த வர்களுடைய சகல பாபங்களையும் போக்கும் அவனான புருஷோத்தமன் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம்
நிரை நிரையாக நெடியன யூபம் –
ஓரோர் ஒழுங்காய் கொண்டு -நெடிதாய் இருந்துள்ள -பசுக்கள் பந்திக்கிற யூபங்கள் ஆனவை
நிரந்தரம் ஒழுக்கு இட்டு-
இடைவிடாமல் நெடுக சென்று இருப்பதாய்
இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை-
இரண்டு கரையும் ஒத்து யாக தூமம் கந்தியா நிற்கிற கங்கையினுடைய கரை மேல்
கண்டம் என்னும் கடி நகரே –
———————————————
வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –
வட திசை மதுரை
வடக்கு திக்கில் மதுரை –
தென் திசை மதுரை உண்டாகையாலே விசேஷிககிறது
சாளக் கிராமம்
புண்ய ஷேத்ரங்களில் பிரதானமாக எண்ணப்படும் ஸ்ரீ சாளக் கிராமம்
வைகுந்தம்-
அப்ராக்ருதமாய் -நித்ய வாசத்தலமான ஸ்ரீ மத் வைகுண்டம்
துவரை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய மணவாளராய் வீற்று இருந்த ஸ்ரீ மத் த்வாரகை
யயோத்தி
அயோத்தி நகர்க்கு அதிபதி -என்கிற படியே ஸ்ரீ ராம அவதார ஸ்தலமாய் அத்யந்த அபிமதமாய் இருந்துள்ள ஸ்ரீ அயோதியை
இடமுடை வதரி
-நர நாராயண ரூபியாய் கொண்டு -திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளி
உகப்புடனே எழுந்து அருளி இருக்கும் ஸ்தலமாய் -இடமுடைத்தாய் இருந்துள்ள ஸ்ரீ பதரி
இடவகயுடைய –
இவற்றை வாசச்தானமாக உடையனான
வெம் புருடோத்தமன் இருக்கை
ஆஸ்ரிதரான நமக்கு இனியனான புருஷோத்தமன் உடைய இருப்பிடம்
தடவரை அதிர தரணி விண்டிடிய –
பகீரதன் தபோ பலத்தாலே இறக்கிக் கொடு போகிறபோது
வந்து இழிகிற வேகத்தைச் சொல்லுகிறது -உயர்ந்த நிலத்தில் நின்றும்
வந்து இழிகிற வேகத்தால் மந்த்ராதிகளான பெரிய மலைகள் சலிக்கும்படி
தரணி வண்டிடிய
பர்வதத்தில் நின்றும் பூமியில் குதிக்கிற அளவிலே பூமி விண்டு இடிந்து விழ
தலை பற்றி கரை மரம் சாடி
வர்ஷங்களுடைய தலை அளவும் செல்லக் கிளம்பி
கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்து
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படி -வேகித்து கொண்டு இழியா நின்ற கங்கை உடைய கரை மேலே
கண்டம் என்னும் கடி நகரே –
———————–
ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன்
வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய-
நரகாசுரன் திரட்டி வைத்த -ராஜ கன்னிகைகளாய் -அவனை நிரசித்த அநந்தரம்
அங்கு நின்றும் கொண்டு வந்து -திருமணம் புணர்ந்து அருளின பதினாறாயிரம் தேவிமார்
ஆனவர்கள் -தங்களுடைய பிரேம அனுகுணமாகவும் -ப்ராப்ய அனுகுணமாகவும் நித்ய பரிசர்யை பண்ண
துவரை என்னும் அதில்-
ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி நிற்க செய்தே -இங்கு உள்ள எல்லாரையும் அங்கு கொடு
போய் வைக்க திரு உள்ளம் பற்றி -ஸ்வ சங்கல்ப்பத்தாலே உண்டாகினது ஆகையாலே
அத்யந்த விலஷணமாய்-ஸ்ரீ மத் த்வாரகை என்று பிரசித்தமான திருப் படை வீட்டிலே
நாயகராகி வீற்று இருந்த மணவாளர்-
அவர்களுக்குத் தனித் தனியே -என்னை ஒழிய அறியார்-என்னும்படி நாயகராய் கொண்டு
தன்னுடைய வ்யாவர்த்தி தோன்ற எழுந்து அருளி இருந்த மணவாளர் ஆனவர் –
மன்னு கோயில் –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள சூத்தரத்தை தரித்து –
தமக்கு
அனந்யார்ஹராய் -அநந்ய போகராய்-இருக்கும் அவர்களோடு கலந்து
அடிமை கொள்ளுகைகாக -அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே -நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –
புது நாள் மலர் கமலம்-
அப்போது அலர்ந்த செவ்வி தாமரைபூ வானது
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுடைய ஸ்பர்ஹநீயமான திரு வயிற்றிலே
பூவை ஒப்பான் -பூவையே போல்வதாக என்றபடி
பொது நாயகம் பாவித்து-
சர்வ நிர்வாஹகத்தை பாவித்து
அதாவது
ஜகத் காரண தயா சர்வ நிர்வாஹகமாய் இருக்கிற இருப்பை -தான் உடையதாகப் பாவித்து -என்கை-
இறுமாந்து –
இந்த நினைவாலே கர்வித்து
பொன் சாய்க்கும்-
மற்று உண்டான தாமரைகளின் உடைய அழகைத் தள்ளி விடா நிற்கும்
புனல் அரங்கமே –
இப்படி இருந்துள்ள ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருந்துள்ள திருவரங்கமே –
———————————————-
பத்தாம் பாட்டு -தட வரை -இத்யாதி -அவதாரிகை –
கீழில் பாட்டிலே உகந்து அருளின நிலங்களோடு ஒக்க தம் திரு மேனியை விரும்பினான் -என்றார் –
இப்பாட்டில் -அவற்றை விட்டு தம்மையே விரும்பின படியை அருளி செய்கிறார் –
தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –
தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே –
பரப்பை உடைத்தான மலையிலே பிரகாசமுமாய் –
தேஜஸ்சாலே விளங்கா நிற்பதுமாய் –
பரிசுத்தமுமான பெரிய கொடி எல்லாருக்கும் காணலாம் இருக்குமா போலே –
பெரிய பர்வத சிகரத்திலே அதி தவளமாய் மிளிருகிற பெரிய கொடி போலே –
மிளிருகை -திகழுகை
சுடர் ஒளியாய் –
நிரவதிக தேஜசாய்
நெஞ்சின் உள்ளே தோன்றும் –
ஹ்ருதய கமலத்துள்ளே தோன்றா நிற்கும்
என் சோதி நம்பீ –
தேஜஸ்சாலே பூரணன் ஆனவனே
சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரகம்
சோதி -குணங்கள்
நம்பீ -குறை வற்று இருக்கிற படி
என் -என்று இவை எல்லாம் தமக்கு பிரகாசித்த படி
தம்முடைய திரு உள்ளத்தே திவ்ய மங்கள விக்ரகத்தோடே பிரகாசித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு திரு மேனியிலே புகர் உண்டாய் -பூர்த்தியும் உண்டான படி –
சிக்கனே சிறிதோர் இடமும் -இத்யாதி
இவர் சரமத்திலே இப்படி அருளி செய்கையாலே -அனுபவித்த ஸ்ரீ கிருஷ்ண விஷயம் உள்ளே பூரித்த படி
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கிற திரு பாற் கடலும் –
சதா பச்யந்தி -படியே நித்ய சூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும் –
ப்ரனயிநிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும் –
இடவகைகள் இகழ்ந்திட்டு-
இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –
அதனில் பெரிய என் அவா -என்று நம் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில்
பிறந்த அபிநிவேசம் எல்லாம் -இப் பெரியாழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்கு பிறந்த படி -இத் திரு மொழி –
தனிக் கடலே –
ஈஸ்வரனுடைய முனியே நான்முகன் -வட தடமும் -இத்யாதி-
—————————————-
சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-
சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-
சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி -கிருஷ்ணனை ஸ்மரித்த வாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –
எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –புராண -பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –மகரத்வஜனை நினைக்கும்படியாய் வந்து விழுந்தது
சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –
துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-
கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –பிணா -என்று பெண் பேர் –
கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது
காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
சவிபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –
காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –
அவரைப் பிராயம் தொடங்கி -அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச -பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி
என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன் வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –
தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-
இந்த முலைகளை தொழுது வைத்தேன் -இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –
ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –
————————————————————————————
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-
சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
-வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –
என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –
அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்
அவன் வார்த்தை சொல்லா நின்றன –
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
இது மெய்யாக வற்றோ –
———————————————————————————————–
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-
இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –
கோவிந்தா கோவிந்தா –
நாராயணாதி நாமங்களும் உண்டு இ றே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இ றே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இ றே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இ றே அவள் நினைவு –
விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –
நாட்டில் தலைப் பழி எய்தி
நாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) -இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது
இது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –
உங்கள் நன்மை இழந்து தலையிடாதே-
அவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே
முகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–
நெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-
பதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வைத்து அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்
———————————————————————————–
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-
மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இ றே
தன்னை உறவுமுறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்
புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்
————————–
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –
பூதனை முடியும்படி
அவளுடைய வடிவுக்கு தக்க
பெரிய முலையை உண்டு
முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான்அடிக் கீழ் எய்த கிற்பீர் –
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
பசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –
மீண்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –
இடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் –
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து
பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –
——————————————————-
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-
கட்டேறு நீள் சோலைக் –
இந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-
காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –
அர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு
விளையாடா நிற்க
அக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை கொண்டு வந்து நிற்க
நீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –
மூட்டி விட்டானை –
துஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்
தான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே
பிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –
மெய்யமர்ந்த பெருமானை –
இன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று
திரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-
மட்டேறு கற்பகத்தை –
பரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள
கல்பக விருஷத்தை –
மாதர்க்காய் –
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்
தாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –
வண்டுவரை நட்டானை –
இந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய
அவனுக்காக எடுத்து விட்டு
அவனை அழித்து
மீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே
இந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர
உங்களுக்கு இது பொராது இறே
உடம்பு வேர்க்கும் இறே
தரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே
தன்னுடைய தேவதத்வத்தையும்
இவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி
ஷேபித்துச் சூடினாள்-
அவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன
அத்தை பிடுங்கிக் கொடு போந்து
ஸ்ரீமத் த்வாரகையிலே நட்டு
பின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று
தான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு முன்பே தன்னைக் குடி இருத்தினவன்
தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று
வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –
நாடி நறையூரில் கண்டேனே –
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக
திரு நறையூரிலே வந்து நின்றவனைக்
காணப் பெற்றேன் –
—————————————————-
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-
ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –
————————————————————————–
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–
பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்
————————-
இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படு மறை வாணனை வண் துவ ராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே–4-6-10-
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த–ஸ்ரீ ராமா. பால. 18 : 27 தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.
முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’-திருவிருத்தம், 60 என்று
நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ் விளமைப் பருவத்திலும் இருந்தது?
இனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க் கூட்டத்தைப் பற்றுமோ?
ஆகையாலே, இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே யன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்?
தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி.
அநந்ய தைவத்வம் – ‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம்-ஆஸ்ரய தேவதை – உண்டு, அது ரஷிக்கிறது -காப்பாற்றுகிறது,’ என்று
நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா -சுந். 28 : 12– என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கை நீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரியபெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன்.
இயம்க்ஷமாச -ராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் ராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும் –
தர்ஜன பர்த்தஸ்னங்களையும் பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன் சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌசஸய்யா – ‘இத் தரைக் கிடை கிடந்ததும்– தவாங்கே சமுபாவிசம் -தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘
அவருடைய மடியில் இருப்பு ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ்தர்மமே – ரக்ஷகத்வம் -காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது, –
ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்க தேஜஸா -ஸ்ரீ ராமா. சுந். 22 : 20– பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே!
எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால் உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று
ராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் – ஏதத் விரதம் மம -சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் – தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –ஆத்மாநம் மானுஷம் மன்யே ‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும்
உண்டே அன்றோ மனிதத் தன்மை? அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் – ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.
அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற்சுடு வேன்!அது தூயவன்
வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.’– என்ற கம்ப நாடர் திருவாக்கு
நும் இச்சை சொல்லி –
உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்
வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ?
இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?
தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ஆதலால், நீங்கள் -விக்ருதர்கள் -இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,
மன்னப்படு மறை வாணனை –
வேதைக சமைதி கம்யனை -நித்யமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே
உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே ‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.
வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.
நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே,
தேர்ப் பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் -ஆஸ்வசிக்க –
பாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.
ஏத்துமின் –
வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள்.
சீர் பரவாது, உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?’-பெரிய திருவந். 52- என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?
ஏத்துதலும் தொழுது ஆடும் –
நீங்கள் க்ருதார்த்தைகளாம் – செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;
அதசோ அபயங்கதோ பவதி ‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே,
ஏத்தின உடனேயே -ப்ரபுத்தையாய் -தெளிவை யுடையவளாய்த் தொழுது ஆடுவாள்.
தொழுது ஆடுமே
உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து –
வியாபார க்ஷமை -ஆடுதற்குத் தக்க ஆற்றலை யுடையவளும் ஆவாள்,’ என்றபடி.
—————————————————————-
கீழ் -அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள்.
இப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் வியவசிதையானபடி -அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் ஜீவியாள் கிடாய் – பிழைக்க மாட்டாள் என்ன,
அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-
அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை பரிஹரிக்க – நீக்க வேண்டுவது,
கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று-தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய்,
இவள் நாயகனுடைய ஸுந்தரியாதிகளில் -அழகு முதலானவைகளில்- ஈடுபட்டவள் ஆனாள்’ என்று
ஊரார் பழி சொல்லுவார்களே என்ன,
ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்?
குணங்களைச் சொல்லில் என்?
“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.
தோழிமீர்-
தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் –
பிரவணையாக்குகை -ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,
தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.
என்னை –
“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய்
இருக்கிற என்னை.
இனி-
உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.
உமக்கு –
இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.
ஆசை இல்லை-
இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.
தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த் தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி யாகிலும் மீட்க வேணும்’ என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன;
அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.
அகப்பட்டேன்-
இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்
இவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,
அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.
“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;
அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை
வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்
ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.
(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்
அருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)
யத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,
பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்
ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.
வண் துவராபதி மன்னன்’
என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”
என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது
என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.
மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.
காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.
வாசுதேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.
ஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,
பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.
ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”- சுந். 33 : 15, 16
சத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,
ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.
வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின
நோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்